Tuesday, March 30, 2010

விமானங்களின் புகையால் பூமியின் வெப்பநிலை குறையுமா?


வானம் எங்கும் பரிதியின் சோதி!
மலைகள் மீதும் பரிதியின் சோதி!
தானை நீர்க்கடல் மீதிலும் ஆங்கே
தரைகள் மீது தருக்களின்மீதும்
கானகத்திலும் பற்பல ஆற்றின்
கரைகள் மீதும் பரிதியின் சோதி!

என்றான் புரட்சிக் கவிஞன் பாரதி. சூரியனானது சங்ககாலம் தொட்டு, இலக்கியங்களிலும் நடைமுறை வாழ்விலும் சக்தியின் முதலாக, வடிவமாகப் போற்றப்பட்டு வருகிறது. சூரிய ஒளி கிடைக்கப்பெறும் நேரமே இரவையும் பகலையும் தீர்மானிக்கிறது.

மத்திய கோட்டுப் பிரதேசங்களில் இரவும் பகலும் சம நேரங்களாகக் காணப்படும். முனைவுப் பகுதிகளிலோ சமகாலங்களாகக் காணப்படும்.

அதாவது மத்திய கோட்டு வலயத்திலே ஒரு நாளில் ஏறத்தாழ 12 மணித்தியாலங்கள் இரவாகவும், 12 மணித்தியாலங்கள் பகலாகவும் காணப்படும். மாறாக முனைவுப் பிரதேசங்களிலோ தொடர்ந்து ஆறு மாதங்கள் இரவாகவும் அடுத்த ஆறு மாதங்கள் பகலாகவும் காணப்படும். அதேபோல, முனைவுப் பிரதேசங்கள் பனிப் பிரதேசங்களாகவும் மத்திய கோட்டுப் பிரதேசங்கள் வெப்ப வலயங்களாகவும் இருப்பதிலும் சூரியனின் வெப்பக் கதிர்ப்பே பெரும்பங்காற்றுகிறது.

கடந்த நூற்றாண்டின் நடுப் பகுதியில், ‘பூமிக்குக் கிடைக்கும் சூரிய ஒளி, மற்றும் வெப்பத்தின் அளவை அவதானித்தால் என்ன?’ என்றொரு கேள்வி விஞ்ஞானிகள் மத்தியில் எழுந்தது. அதனடிப்படையில் தரவுகள் பதியப்பட்டன. 1950 களிலிருந்து பதியப்பட்டிருந்த அந்த நீண்டகாலத் தரவுகளின் அடிப்படையில் கடந்த நூற்றாண்டின் தசாப்தங்களுடன் பூமிக்குக் கிடைக்கும் சூரிய ஒளியினளவு மாறிவந்த போக்கு அறியப்பட்டது.

இன்று எமக்குக் கிடைக்கும்சூரிய ஒளியினளவானது, கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் குறைவாகவிருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். அத்துடன் சூரிய ஒளியுடன் தொடர்புடைய ஏனைய தரவுகள் இவ்வாறு ஆய்வு செய்யப்பட்டன.

புவி மேற்பரப்பை வந்தடையும் சூரிய சக்தியினளவு ஏதோ ஒரு காரணத்தால் குறைந்து வந்த தென்பது கண்டறியப்பட்டது. பூகோளம் வெப்பமயமாதலானது எதிர்பார்த்ததைவிடப் பாரதூரமான விளைவுகளை உருவாக்கப் போவதை மறைமுகமாகச் சுட்டும் சமிக்ஞையாகவும் விஞ்ஞானிகள் இதனைக் கருதுகின்றனர்.

1980 களின் நடுப் பகுதியிலே, சுவிஸ் சம்மேளன தொழில்நுட்ப நிறுவகத்தின் புவியியல் ஆய்வாளரான அட்சுமு ஒகுமுரா என்பவராவார். கடந்த 3 தசாப்த காலங்களுக்குள் புவியை வந்தடையும் சூரியக் கதிர்ப்பினளவு 10 சதவீதத்தால் குறைந்துள்ளமையை அவதானித்தார். அவரது அவதானம் பூகோளம் வெப்பமடைதல் எனும் கருத்துடன் முரண்பட்டது.

பூமியின் வருடாந்த சராசரி வெப்பநிலையில் 1970 களின் பின்னர், சடுதியான அதிகரிப்பொன்று உணரப்பட்டமையே பூகோளம் வெப்பமடைதல் எனும் தோற்றப்பாடு தொடர்பான எண்ணக்கருக்களுக்கு வித்திட்டது. இத்தகையதோர் நிலையில், புவியின் மேற்பரப்பை வந்தடையும் சூரியக் கதிர்ப்பினளவு குறைவடைகிறது என்றால், புவியின் வருடாந்த சராசரி வெப்பநிலை குறைவடைய வேண்டுமல்லவா? இதுவே விஞ்ஞானிகளினதும் வினாவாக இருந்தது.

இந்தக் காலகட்டத்தில் தான் அட்சமு ஒகுமுரா என்ற விஞ்ஞானி தனது ஆய்வு முடிவுகளை விஞ்ஞானச் சஞ்சிகையில் வெளியிட்டார். அதைத் தொடர்ந்து பலரும் சூரியக் கதிர்ப்பினளவ தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு, தமது முடிவுகளை வெளியிட்டனர்.

1980களில் இஸ்ரேல் மற்றும் நெதர்லாந்து நாடுகளில் தனித்தனியாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளும் சூரிய ஒளியின் அளவு தசாப்தங்களுடன் குறைவடைந்துள்ள அதேநேரம், காலநிலையோ உஷ்ணம் அதிகரித்துள்ள காலநிலையாக மாற்றமடைந்தமையும் அறியப்பட்டது. இவ்வாறு நிலமேற் பரப்பை வந்தடையும் சூரியக் கதிர்ப்பின் அளவு குறைவடைந்து செல்வதை ‘பூகோளம் மங்கலடைதல்’ (மிlobal னீiசீசீing) என விஞ்ஞானிகள் அழைக்கின்றனர்.


மங்கலடையும் சதவீதம், ஒரு தசாப்தத்திற்கு 2 – 3 சதவீதமாகக் காணப்படும். இவ்வாறு மங்கலடையும் வீதம், பூமியின் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரிக் காணப்படுவதில்லை. வளிமண்டலத்தில் ஏற்படும் மாற்றங்களே இத்தகைய தோற்றப்பாட்டிற்கான காரணமெனக் குறிப்பிடப்படுகிறது.

வளிமண்டலம், பல படைகளைக் கொண்டது. அதன் மேற்படையை வந்தடையும் சூரியக் கதிர்ப்பு, காலத்துடன் பெரிய அளவில் மாற்றமடையவில்லை எனக் குறிப்பிடப் படுகிறது. அதேபோல் கடந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட வருடங்களுக்கான தரவுகளின் அடிப்படையில் நீரின் ஆவியாதல் வீதமும் ஆராயப்பட்டது.
பூகோளம் வெப்பமடைதல் காரணமாக நீரின் ஆவியாதல் வீதம் காலத்துடன் அதிகரிக்குமென எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மாறாக, ஆவியாதல் வீதம், சில தசாப்தங்களுக்குக் குறைவடைந்து சென்றமையை அவதானிக்க முடிந்தது.

சீனாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளிலும் இதே போக்கை அவதானிக்க முடிந்தது. நிலத்தை வந்தடையும் சூரியக் கதிர்ப்பின் அளவு குறைவடைந்தமையே இப்போக்குக்குப் பின்னணியிலிருக்கும் காரணம் என ஊகிக்கப்பட்டது. சூரிய ஒளி மங்கல டைந்து வருவதற்குரிய வலுவான ஆதாரமாக, இந்த ஆவியாதல் வீதத்தின் போக்கு கருதப்படுகிறது.

இவ்வாறு புவி மங்கலடைவதற்குப் பல காரணங்கள் குறிப்பிடப்படுகின்றன. 2001 செப்டம்பர் 11 ஆம் திகதி நடந்த அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதலையடுத்து 3 நாட்களுக்கு, அமெரிக்க வான்பரப்பினூடான விமானப் போக்குவரத்துக்கள் யாவும் தடைசெய்யப்பட்டிருந்தன. அந்நிலைமை விஞ்ஞானிகளுக்குச் சாதகமாய் அமைந்தது. அவர்கள் அந்த மூன்று நாட்களுக்குமான சூழலின் சராசரி வெப்பநிலையைப் பதிவு செய்தனர். அவ் வெப்பநிலையானது சாதாரண நாளொன்றின் சராசரி வெப்பநிலையை விடச் சற்று அதிகமாகக் காணப்பட்டது.

இதற்கான காரணம் என்னவென்று ஆராய்கையில், விமானப் போக்குவரத்து தடைசெய்யப்பட்டமையால் வழமையாக வளிமண்டலத்துக்கு வெளிவிடப்படும் விமானப் புகைகள் எவையும் வெளிவிடப்படாமையே காரணமெனக் கண்டறியப்பட்டது. விமானங்களின் புகை வளி மண்டலத்தில் படலமாகக் காணப்படுவதால், பூமியை வந்தடையும் சூரியக் கதிர்ப்பின் செறிவு குறைவடைகிறது.

அதேபோல, டீசல் போன்ற சுவட்டு எரிபொருட்களின் குறைதகனமும், மரங்கள் மற்றும் விறகுகளின் தகனமும் வளிமண்டலத்திலே, காபனீரொட்சைட்டுடன் கரிய காபன் துணிக்கைகளையும் கந்தகக் கூறுகளையும் வெளிவிடுகின்றன. இவ்வாறு வெளிவிடப்படும் மாசுக்களால் வளிமண்டலம் மாசடைவதே, பூகோளம் மங்குவதற்கான அடிப்படைக் காரணமாகக் கருதப்படுகிறது. இவை வளியை மாசுபடுத்துவதோடு மட்டுமின்றி மழை வீழ்ச்சியின் போக்கையும் பாதிப்பதாகவே ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

கரிய காபன் துணிக்கைகளானவை நிலமேற்பரப்பிலே உள்ள வளியை மாசடையச் செய்வதில் சிறிதளவிலான பங்களிப்பையே செய்கின்றன. ஆனால், நிலத்திலிருந்து ஏறத்தாழ 2 கி.மீ. உயரத்திலே வளிமண்டலத்தை வெப்பமாக்குவதில் பெரும்பங்காற்றுகின்றன. அதேபோல, சூரியக்கதிர்ப்பை உறிஞ்சி, சமுத்திர மேற்பரப்பை மங்கலடையச் செய்கின்றன.

கரும் பொருட்கள் வெப்பக் கதிர்ப்பை உறிஞ்சும் தன்மையன. கரிய காபன் துணிக்கைகளும் அவ்வாறானவையே. அவை, சூரிய வெப்பத்தைத் தம்மகத்தே உறிஞ்சி வைத்திருப்பதால் வளிமண்டல வெப்பநிலையை உயர்த்துகின்றன. இவற்றால் பனிப் பாறைகள் உருகும். அதேபோல இக்கரிய காபன் துணிக்கைகள், பனிப் போர்வைகளில் படிகின்றன. இதனால் சாதாரணமாக வெப்பத்தை உறிஞ்சாத வெண்பனிப் போர்வைகள், மாசுற்று வெப்பத்தை உறிஞ்ச ஆரம்பிக்கும். புவிவெப்பமடைதலும், பனி உருகுதலும் மாறி மாறி நிகழும்.

அதேபோல வளிமண்டலத்திலே வெளிவிடப்படும் விமானப்புகைத் துகள்கள் காரணமாக, பகல் நேர வெப்பநிலை குறைந்து காணப்பட்டதுடன் இரவு நேர வெப்பநிலை சாதாரண நிலைமையைவிட அதிகரித்தும் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எரிமலைகள் வெடிப்பதால் உருவாகும் தூசு துணிக்கைகள் நிலத்தை வந்தடையும் சூரியக் கதிர்ப்பின் அளவைக் குறைப்பதால் எரிமலைகள் வெடிக்கும் காலங்களில், அவை சார்ந்த பகுதிகளின் வெப்பநில¨யும் முன்னரை விடச் சற்றுக் குறைவாகக் காணப்படுகிறது. ஆனால் எவ்வளவு பெரிய எரிமலை வெடிப்பு நிகழ்ந்தாலும் உருவாகும் தூசுப் படலங்கள் குறுகிய காலத்துக்கு மட்டுமே வளிமண்டலத்தில் காணப்படும்.

உயிரின் நிலைப்புக்கான அடிப்படைக் காரணிகளுள் நீரும் ஒன்றாகும். நீரியல் வட்டத்தை இயக்கும் சக்தி முதலாகச் சூரியன் கருதப்படுகிறது. பூகோளம் மங்குதல் காரணமாக நிலத்தை வந்தடையும் சூரியக் கதிர்ப்பின் அளவு குறைவடையும். அதன் காரணமாக, சூரிய வெப்பத்தால் நிலத்திலிருந்து ஆவியாகும் நீரினளவு குறைவடைய மழை வீழ்ச்சி பாதிக்கப்படும்.

நீரியல் வட்டத்தின் சமநிலை குழப்பப்படும். காலநிலையின் போக்கில் பாரிய மாற்றங்கள் கூட ஏற்படலாமெனக் கருதப்படுகிறது. பூகோளம் வெப்பமடைதலுக்கும் பூகோளம் மங்குதலுக்குமிடையிலான சமநிலை குலைக்கப்பட, ஈரப்பதனுடைய ஆனால் மழை குறைவான சூழலொன்று உருவாகும்.

பூகோளம் மங்கலடைதலும் பூகோளம் வெப்பமடைதலும் ஏதோ ஒரு வகையில் தொடர்புடையனவாகக் கருதப்படுகின்றன. பூகோளம் மங்கலடைதல் என்ற விளைவு சில காலங்களாக, பூகோளம் வெப்பமடைதல் என்ற விளைவை மறைத்தபடி இருந்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். காலநிலை மாற்றம் தொடர்பான எதிர்வுகூறுல்கள் மேற்கொள்ளப்பட்ட காலங்களிலே, பூகோளம் மங்கலடைதல் தொடர்பான கருத்துக்கள் தோற்றம் பெறவில்லை.

ஆனால் பூகோளம் மங்கலடைதல் என்ற நிகழ்வு நடைபெற்றமை தான் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தைக் குறைத்துக் காட்டிவிட்டதோ என ஆய்வாளர்கள் சிந்திக்கின்றனர். அப்படியாயின், எதிர்காலத்தில் காலநிலை மாற்றத்தின் தாக்கம், எதிர்வுகூறப்பட்டதைவிட அதிகமாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல சூரிய ஒளி நேரடியாகப் புவியை வந்தடையும் போது, நில மேற்பரப்பிலுள்ள நீர் அதிகளவில் ஆவியாகி வளியிலுள்ள மாசுக்களுடன் இணையும். நீராவியே பிரதானமான பச்சை இல்ல வாயுவாகும். அதேசமயம், ஆவியாதலினாலும் மழையாலும் பூகோளம் மங்குதல் பாதிக்கப்படும். மழையானது வளியின் மாசுத் துணிக்கைகளை துடைத்தகற்றிவிடும். மண்ணிற முகில்கள், இந்தப் பூகோளம் மங்குதல் எனும் தோற்றப்பாட்டிற்கமைய பூகோளம் வெப்பமயமாதலின் 50 சதவீத விளைவுகளை மறைத்துவிட்டதாக வளிமண்டல இரசாயனவியலாளர் வீரபத்திரன் இராமநாதன் தெரிவித்திருந்தார்.

அவரது ஆய்வானது, தெற்கு மற்றும் கிழக்காசிய வலயங்களை அடிப்படையாகக் கொண்டது. 1980 களில், பூகோளம் வெப்பமடைதலை, வளிமண்டலத்திற்கு சல்பேற்றுகளை வெளியேற்றுவதன் முலம் குறைக்கலாமெனக் கருதினர். ஆனால் வளிமண்டலத்தில் வெளியேற்றப்படும் சல்பேற்றுக்கள் அமில மழைக்குக் காரணமாகின்றன. கரிய காபன் துணிக்கைகள் சுகாதாரப் பிரச்சினைகளையும் உருவாக்க வல்லவை.

ஒவ்வொரு தசாப்தத்திலும் உருகும் துருவப் பனியின் அளவு கணிக்கப்பட்டு வரைபுபடுத்தப்பட்டது. அவ்வரைபின் போக்கு, 60 களில் குறைவடைந்து பின்னரான காலப் பகுதிகளில் சடுதியான அதிகரிப்பைக் காட்டியது. இந்நிலைமை, பூகோளம் மங்கலடைதல் தொடர்பான கருத்துக்களை மேலும் வலுவூட்டியது.

60 களிலும், 70 களிலும் துணிக்கைப் பதார்த்தங்களால் ஏற்படுத்தப்பட்ட வளி மாசு, பூகோளம் வெப்பமடைதலுக்கு எதிராக காலநிலையைத் தொழிற்பட வைத்தது. பூகோளம் மங்கலடைதல் எனப்படும் தோற்றப்பாட்டை உருவாக்கி பூகோளம் வெப்பமடைதலை மறைத்தது. அதிகரிக்கும் பச்சையில்ல வாயுக்கள், புவியின் வெப்பத்தை அதிகரிக்க, அதிகரிக்கும் துணிக்கை மாசுக்கள் புவிமேற்பரப்பை வந்தடையும் சூரியக் கதிர்களைக் குறைத்து, புவியின் வெப்பத்தைக் குறைத்தன. ஒன்றுக்கொன்று எதிரான விளைவுகளைத் தரக்கூடிய மாசுக்கள் ஒருங்கே காணப்பட்டமையால் வெப்பமாதலின் விளைவுகள் குறைக்கப்பட்டன.


இதன் காரணமாக, கைத்தொழில் மயமாக்கப்பட்ட பல நாடுகள், தாம் வெளியேற்றும் துணிக்கைப் பதார்த்தங்களைக் குறைக்க அல்லது சுத்திகரித்து வெளியேற்றத் தொடங்கின. 1991 களின் பின்னர், வளி மாசடைதலைக் குறைக்கும் முயற்சிகள் தீவிரமடைந்தன. இவற்றினால், 1990கள் வரை மங்கலடைந்து வந்த புவியின் போக்கு 1990 களின் பின்னர் எதிராகத் திரும் பியது.

மங்கலடைந்து வந்த புவி, வளி மாசுக்கள் குறைக்கப்பட்டதால், மீண்டும் பிரகாசமடைந்து வருவதாக விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.

அபிவிருத்தியடைந்த நாடுகள், வளிமாசடைதலைக் கட்டுப்படுத்த மேற்கொண்ட நடவடிக்கைகளின் பயனாக பூகோளம் மங்கலடைதல் குறைக்கப்படுகிறது. கடந்த சாப்தத்திலே, பூகோளம் மங்கலடையும் போக்கு 4 சதவீதத்தால் குறைவடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. 1970 களிலும் 1980 களிலும் பல்லாயிரம் உயிர்களைப் பலிகொண்ட ஆபிரிக்காவின் சகாரா வரட்சி கூட, பூகோளம் மங்கலடைவதால் ஏற்பட்டிருக்கலாமெனவே கருதப்படுகிறது.

தற்போது, எமது நடவடிக்கைகள் சூழலை வெப்பமாக்கும் மாசுக்களை அதிகளவில் வெளிவிடும் அதேவேளை, சூழலைக் குளிர்மைப்படுத்தும் மாசுக்கள் வெளிவிடப்படுவதைக் குறைக்கின்றன.

இதனால், புவி வெப்பமடையும் வீதம், புவியின் வெப்பநிலை குறைவடையும் வீதத்தைவிட அதிகமாகக் காணப்படும்.

இத்தகையதோர் நிலையில் எம்மால் செய்யக்கூடியது, பூகோளம் வெப்பமடையும் வீதத்தைக் குறைப்பதேயாகும். அதனை நாம் இரு வழிகளில் மேற்கொள்ளலாம். ஒன்றில் பச்சையில்ல வாயுக்களின் வெளியேற்றத்தைக் குறைக்கலாம். அல்லது, பச்சை இல்ல வாயுக்களை உறிஞ்சக்கூடிய மரங்களை நாட்டி வனப் பகுதிகளைப் புதிதாக உருவாக்கலாம். அவற்றைக் கிராமத்தில் தான் உருவாக்க வேண்டுமென்ற கட்டாயம் எதுவுமே இல்லை. அந்த வனப் பகுதிகள் நகர வனங்களாகக் கூட இருக்க முடியும்.

எம்மால் இயன்றவரை முயன்று, நாம் யாவருமிணைந்து பூகோளம் வெப்பமடையும் சந்தர்ப்பங்களைத் தவிர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டாலன்றி உருவாகப் போகும் விளைவுகளை வேறு எந்தவகையிலும் தடுக்க முடியாது.

Sunday, March 28, 2010

மனிதனும் மாறி வரும் காலநிலையும்

"மனிதன் தன்னை இயற்கையில் இருந்து வேறு படுத்திப் பார்ப்பதை நிறுத்த வேண்டும்"நாகரிக உலகில் மனிதன் அடியெடுத்து வைத்த காலத்திலிருந்து மனிதனுக்கும் இயற்கைக்குமிடையிலான உறவு விரிசலடைய ஆரம்பித்தது. இந்த விரிசல் கைத்தொழில் புரட்சியுடன் துரிதமாக அதிகரித்தது. அதன் விளைவைத்தான் இன்று ‘காலநிலை மாற்றம்’ எனும் பெயரில் முழு உலகுமே அனுபவிக்கின்றது.

இயற்கையும் மனிதனும் தன் தன் வழியில் சுயாதீனமாக இயங்கத் தொடங்கிவிட்டது இதற்குக் காரணமாக இருக்கலாம். இதனால் ஏற்படும், ஏற்படப் போகும் இழப்பு இரு தரப்பினருக்கும் பொதுவானது. ஒன்றை ஒன்று சார்ந்த வாழ்வியல் முறைமையே எப்போதும் வரவேற்கப்படுகிறது. அதே சமயம் அதுவே நியதியெனவும் கருதப்படுகிறது.

தன்னலமிக்க மனிதனின் ஊனக் கண்ணுக்கு நியதிகள் தெரிவதில்லை. பொருளாதாரமும் வாழ்க்கைத்தரமுமே அடிப்படைத் தேவைகளாக மாறிவிட்ட இயற்கையை மதிக்காத நவீன உலகினுள் அடியெடுத்து வைத்தவனுக்கு இயற்கை கொடுத்த தண்டனை தான் ‘காலநிலை மாற்றம்’ என்பர்.

சூழல் பிரச்சினையாகிய காலநிலை மாற்றத்தின் விளைவுகளாகக் கருதப்படக் கூடிய வகையிலே நாம் அன்றாடம் பல விடயங்களை அவதானிக்கின்றோம். ஆனால் அவை பற்றி ஆழச் சிந்தித்து, அவற்றின் பின்னணி தொடர்பாக ஆராய முற்படுவதில்லை. அவசர உலகுடன் உழல்கையில் நேரமும் அதற்கு இடங்கொடுப்பதில்லை.

அண்மையில் கொழும்பில் பூமியின் வெப்பநிலை உயர்தல் தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல் ஒன்றை கொழும்பு பிரிட்டிஷ் கவுன்சில் ஏற்பாடு செய்திருந்தது. அதன் முக்கிய வளவாளராக, பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் விஞ்ஞான நிகழ்ச்சித் தொகுப்பாளரான கலாநிதி போல் ரோஸ் கலந்துகொண்டிருந்தார். அவருடன் இலங்கையின் ஆய்வாளர்களும் வளவாளர்களாக இணைந்திருந்தனர். பிரதம விருந்தினராக விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சர் திஸ்ஸ விதாரண அழைக்கப்பட்டிருந்தார். ஊடகவியலாளர்கள், விரிவுரையாளர்கள், மாணவர்கள் உட்படப் பலதரப்பட்ட விஞ்ஞான மற்றும் சுற்றுச் சூழல் ஆர்வலர்களும் கலந்து கொண்டனர். ஆர்வலர்களின் சந்தேகங்களை வளவாளர்கள் தீர்த்து வைத்தனர். அத்துடன் ஆர்வலர்களும் வளவாளர்களும் தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்கு இக் கலந்துரையாடல் ஒரு களமாக அமைந்திருந்தது.

அசாத்தியமான பருவநிலை மாற்றங்கள் போன்ற பல்வேறு விடயங்களை இலங்கையிலும் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. அத்தகைய சந்தர்ப்பங்கள் தொடர்பாக ஆர்வலர்கள் தமது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.

ஒரு குறித்த பருவ காலத்தில் மட்டுமே பரவும் நோயாகக் காணப்பட்ட டெங்கு, இன்று வருடத்தின் பல மாதங்களுக்கு நீடிப்பதற்கும் கூடப் பருவகால மழையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களே காரணமெனக் கருதப்படுகின்றன. மழை, பருவம் மாறிப் பெய்ய ஆரம்பித்துள்ளதை விவசாயிகள் மட்டுமன்றி சாதாரண பொதுமக்களும் உணர்ந்துள்ளனர்.

அத்துடன் அண்மையில் வெளிநாட்டவரொருவர் பேருவளை கடற்பரப்பில் மூழ்கிய செய்தியும் காலநிலை மாற்றத்தின் அறிவிப்பாகவே தென்பட்டதாக பல வருடங்களாகச் சுழியோடிவரும் ஆழ்கடல் பொறியியலாளர் ஒருவர் தெரிவித்தார். பொதுவாக தை, மாசி மாதங்களில் இலங்கையின் தென் பகுதிக் கடற் பரப்பில் சுழியோடுவதற்குகந்த சூழ்நிலை நிலவி வருவது குறிப்பிடத்தக்கது. ஆனால் இன்று அத்தகைய சூழ்நிலை மாறிவருவதையே அந்த வெளிநாட்டவரின் மரணச் செய்தி புலப்படுத்துவதாக அப்பொறியியலாளர் குறிப்பிட்டிருந்தார்.

கடந்த 3 வருடங்களுக்கு முன்னர் யுனெஸ்கோ அமைப்பினால் விஞ்ஞானத்துறை அமைச்சர்களுக்கான கூட்டமொன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. அக்கூட்டத்திலே காலநிலை மாற்றத்துக்கு உலக மனிதர்களின் மனப்பாங்கு பங்களிக்கிறதா என ஆராயப்பட்டது. ஆனால் கடந்த வருடம் ஒழுங்கு செய்யப்பட்ட அத்தகைய கூட்டத்தில் உலக மனிதர்களின் மனப்பாங்கு, காலநிலை மாற்றத்தை தோற்றுவிப்பதில் தனது பங்களிப்பை செய்கிறது என்பதை சந்தேகத்துக்கு அப்பாற்பட்ட வகையில் அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.

தன்னைப் பற்றி மட்டுமே கருத்தில் கொள்ளும் மனித மனப்பாங்குகள் மாற்றம் பெற்றாலன்றி வேறெந்த வகையிலும் காலநிலை மாற்றத்தை வினைத்திறன் மிக்க வகையில் கட்டுப்படுத்த முடியாதென ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

காலநிலை மாற்றத்தின் முக்கியத்துவத்தை உலகின் மூலை முடுக்குகளில் உள்ளவர்கள் வரை யாவரும் உணர வேண்டும். அதற்கு வெகுசனத் தொடர்பூடகங்கள் முன்னிலையில் நின்று செயற்பட வேண்டும்.

அபிவிருத்தியடைந்த நாடுகளிலே வசிக்கும் பலருக்கு காலநிலை மாற்றம் பற்றியோ அதனை ஏற்படுத்தும் காரணிகள், அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றியோ அறியும் ஆர்வம் மிக மிகக் குறைவு.

ஆனால் அபிவிருத்தியடைந்த நாடுகளே, தமது காபன் வெளியேற்றத்தின் மூலம் காலநிலை மாற்றத்துக்கு அதிக பங்களிப்பைச் செலுத்துகின்றன. மாறாக அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள், காலநிலை மாற்றத்துக்கு மிகக் குறைந்தளவிலான பங்களிப்பை வழங்கியுள்ள போதும் அதிகளவிலான பாதிப்பை எதிர்நோக்கும் நாடுகளாகவும் காணப்படுகின்றன. காலநிலை மாற்றத்தின் விளைவுகளால் மாலைதீவுகள் போன்ற சிறிய நாடுகள் அழிந்து போகும் அபாயத்திலுள்ளன. இலங்கை போன்ற நாடுகளின் கரையோரப் பகுதிகளும் அழிந்து போய்விடும் நிலையிலேயே காணப்படுகின்றன. அத்தகையதொரு நிலைமை ஏற்பட்டால் இலங்கையின் தலைநகர் கூட மத்திய பகுதிக்கு -கியோட்டோ உடன்பாடானது (றிiyoto ஜிrotoணீol) உலக நாடுகள் பச்சையில்ல வாயுக்களின் வெளியேற்றத்தை வருடாந்தம் 5.2 சதவீதத்தால் குறைக்க வேண்டுமென வலியுறுத்தியது. அத்துடன் ஒவ்வொரு நாடுகளும் அவ்வுடன்பாட்டில் கைச்சாத்திட வேண்டியதும் கட்டாயமாகியது. அதிகளவில் பச்சையில்ல வாயுக்களை வெளிவிடும் முக்கிய நாடுகளில் ஒன்றான அமெரிக்கா, இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட மறுத்துவிட்டது.

அதேபோல, கடந்த ஆண்டு பலரும் எதிர்பார்த்திருந்த காலநிலை மாற்றம் தொடர்பான கோப்பன்ஹேகன் மாநாட்டிலே காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளத் தேவையான எந்தவொரு உறுதியான முடிவுகளும் எட்டப்படவில்லை யென்பது வருந்தத்தக்க விடயமாகும். உலகமே அரசியல் மயப்படுத்தப்பட்ட நிலையில் காலநிலை மாற்றமும் அரசியல் மயப்படுத்தப்பட்டு விட்டதோ என்றே எண்ணத் தோன்றுகிறது.

பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் விஞ்ஞான நிகழ்ச்சித் தொகுப்பாளரான கலாநிதி போல் ரோஸ், அண்டார்டிகா பிரதேசத்தில் காலநிலை மாற்றம் தொடர்பாக ஆய்வு செய்து கொண்டிருக்கும் விஞ்ஞானிகளுடன் இணைந்து பல வருடங்களாகப் பணிபுரிந்து வந்திருக்கிறார்.

காலநிலை மாற்றம் தொடர்பான கோப்பன்ஹேகன் மாநாட்டில் கலந்துகொள்வோர், அண்டார்டிக்காவில் ஆய்வு செய்யும் விஞ்ஞானிகளுடன் காலநிலை மாற்றம் தொடர்பாகக் கலந்துரையாடக் கூடிய வகையில் செய்மதித் தொழில்நுட்பத்துடன் கூடிய வசதிகள் செய்யப்பட்டிருந்தன.

இது போன்ற பனிப் பிரதேசங்களில் செய்மதித் தொழில் நுட்பத்தால் நேரடித் தொடர்பாடல் வசதிகளை மேற்கொள்வதொன்றும் இலகுவான காரியமல்ல. பல சிரமங்களுக்கு மத்தியில் ஒளிப்பட உதவியுடன் நேரடியாகக் கதைத்தல் போன்ற பல வசதிகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. விஞ்ஞானிகளும் மாநாட்டிலிருந்து வரும் அழைப்புகளை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். மாநாட்டில் பங்குபற்றியோர் மட்டுமன்றி முழு உலகுமே அமெரிக்க அதிபர் ஒபாமா என்ன பேசுவார் என எதிர்பார்த்திருந்தது. எனினும் காலநிலை மாற்றத்தை ஆய்வுசெய்த விஞ்ஞானிகளுடன் கதைத்து நிலைமையை ஆராய வேண்டுமென்ற எண்ணம் எவருக்கும் தோன்றவில்லை. அழைப்புக்களை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த விஞ்ஞானிகளுக்கு ஏமாற்றம் மட்டுமே எஞ்சியது. தொடர்பாடல் வசதிகளைப் பெறுவதற்காக அவர்கள் எடுத்த முயற்சிகளும் பட்ட சிரமங்களும் விழலுக்கிறைத்த நீராயின.

இது நாம் ஒவ்வொருவரும் வருந்த வேண்டியதோர் விடயமாகும். நடந்தவை நடந்தவைகளாகவே இருக்க, இனியாவது நாம் எமது மனப்பாங்குகளை மாற்ற முயல வேண்டும். இல்லையேல், காலநிலை மாற்றத்தால் உருவாகப் போகும் புதுப்புது விளைவுகள் தவிர்க்க முடியாதனவாகிவிடும்.

காலநிலை மாற்றம் எனப்படுவது எங்கோ நடக்கும் விடயமல்ல. மனித நடமாட்டமுள்ள கண்டங்களின் செயற்பாடுகளால் மனித நடமாட்டமற்ற துருவப் பகுதிகளிலுள்ள பனி உருகுகிறது. துருவப் பகுதிப் பனிப் பாறைகளே உலகின் காலநிலையைப் பேணும் பிரதான காரணிகளாகையால், அவை உருக, பூமியின் காலநிலையும் மாறத் தொடங்குகிறது.

காலநிலை என்பது, நீண்டகால அடிப்படையில் அவதானிக்கப்படும் விடயம் என்பது மட்டுமன்றி இயற்கையுடன் தொடர்புடைய விடயமுமாகும். காலநிலையின் அடிப்படையிலேதான் மனித நாகரிங்கள் வளர்ச்சியுற்று மனிதன் தனது இருப்பை உறுதி செய்துகொண்டுள்ளான். ஆயினும், காலநிலையின் அடிப்படை பற்றி ஆழச் சிந்திக்கத் தவறியதால் கைத்தொழிலாக்கம், நவீன மயமாக்கம், தொழில் நுட்ப அபிவிருத்தி, இலத்திரனியல் அபிவிருத்தியென ஒன்றுக்கு மேற்பட்ட பல பரிமாணங்களில் அபரிமித வளர்ச்சி கண்டான்.

இந்நிலையில் தான் ‘ஓசோன் படை அரிப்படைதலும் பச்சையில்ல வாயுக்களின் அதிகரிப்பும் கண்டு பிடிக்கப்பட்டது. அபரிமித வளர்ச்சியின் வேகம் குறைந்தது. சூழலுக்குத் தீங்கை விளைவிக்காத வகையிலான பசுமை உற்பத்திகளின் தேவை அதிகரித்தது. இந்நிலையில் 2002 ஆம் ஆண்டு அந்தாட்டிக்கா பகுதியிலுள்ள பெரிய பனிப்பாறையொன்று, பனிப்படையிலிருந்து பிரிந்து விலகியது.

செய்மதித் தொழில்நுட்பத்தால் இந்நிகழ்வை உணர்ந்த ஆய்வாளர்கள், விமானங்களில் சென்று, பனிப்பாறை விலகுவதைப் பல கோணங்களில் ஒளிப்படம் மற்றும் புகைப்படம் எடுத்து ஆராய்ந்தனர்.

இந்நிலையில் தான் உலகம் காலநிலை மாற்றத்தை ஒரு பெரிய பிரச்சினையாகக் கருதத் தொடங்கியது. பல்வேறு மட்டங்களிலும் காலநிலை மாற்றம் தொடர்பான ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டன.

தொடர்ந்து ஆறு மாதங்கள் பகலாகவும் அடுத்த ஆறு மாதங்கள் இரவாகவும் காணப்படும் துருவப் பகுதிகளிலே வருடக் கணக்காகக் கூடாரமிட்டு, காலநிலை மாற்றம் தொடர்பான ஆய்வுகளைப் பல நாடுகளும் மேற்கொண்டு வருகின்றன. மனித சஞ்சாரமற்ற இந்தத் துருவப் பகுதிகளில் பல நாடுகள் தமக்கான உரிமையை நிலைநாட்டி ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன.

எமது அண்மை நாடான இந்தியா கூட அண்டார்டிகாவில் தக்ஷின கங்கோத்ரி எனும் பெயரிலே ஆய்வு நிலையமொன்றை அமைத்து ஆய்வுகளை நடத்தி வருகிறது.

துருவப் பகுதிகள், பனிப் பிரதேசங்களாக இருக்கின்ற போதிலும், ஈரப்பற்றற்றவை உலர்ந்த வளிமண்டலத்தையுடையவை. அப்பிரதேசங்களிலே தங்கி ஆய்வினை மேற்கொள்வதற்கு அது தொடர்பான ஆர்வமும் விருப்புமுடையவர்களால் மட்டுமே முடியும்.

விஞ்ஞான ஆய்வு என்பது குறுகிய காலத்திற்குள்ளே நிகழ்த்தப்பட்டு முடிவுகளை வெளிவிடத்தக்க ஆய்வல்ல. ஆய்வுக்காலம், ஆய்வைப் பொறுத்து மாறுபடும். சில ஆய்வுகள் பல வருடங்களுக்கு நீடிக்கலாம். விஞ்ஞானம் எனும் பெருங்கடலிலே, இதுவரை கண்டுபிடிக்கப்பட்டவை ஒரு கைப்பிடியளவானவை மட்டுமே. ஆகையால் விஞ்ஞான ஆய்வுகள் விடப்பட்ட இடத்திலிருந்து தொடரப்பட வேண்டியவை. விஞ்ஞான ஆய்வுகளின் முடிவுகள் நிரந்தரமானவையல்ல. காலத்துடன் அம்முடிவுகளும் புதுப்புதுக் கோணங்களில் பரிணமிக்கும். அவ்வாறு பரிணமிக்க முடியாத முடிவுகள் வழக்கொழிந்து போகும். இதுவே விஞ்ஞானத்தின் அற்புதம்.

இத்தகையதோர் நிலையை விஞ்ஞானம் கொண்டுள்ளதாதல் தான் பல விஞ்ஞான ஆய்வுகளின் முடிவுகள் கடதாசிகளுக்குள்ளும் புத்தகங்களுக்குள்ளும் முடங்கிப்போய்விடுகின்றன. விஞ்ஞானச் சங்கேத மொழியை விளங்கக் கூடிய சமூகத்தவரைச் சில ஆய்வுகள் சென்றடைகின்றன. மிகச் சில மட்டுமே சாதாரண பாமரன் வரை சகலரையும் சென்றடைகின்றன. இன்றைய காலகட்டதில் காலநிலை மாற்றமானது உலகளாவிய ரீதியிலான பிரச்சினையாக உருவெடுத்துள் ளது. அது மட்டுமன்றி இனிவரும் காலங்களில் ஒவ்வொரு தனி மனிதனதும் வாழ்க்கைப் பிரச்சினை யாகக் காலநிலை மாற்றம் மாறிவிடும் என்று எதிர்வு கூறக்கூடிய அளவுக்கு அது விஸ்வரூபம் எடுத்துள்ளது.

உலகின் பொருளாதார சமூக நிலைமைகளில் பெருஞ் செல்வாக்கு செலுத்தும் காரணியாகவும் இக்காலநிலை மாற்றம் தி!றிவருகிறது.

அண்மைக் காலங்களில் பரவலாகப் பேசப்பட்டு வந்த உலகளாவிய நிதி நெருக்கடியை விட அதிகளவிலான நிதி நெருக்கடியைக் காடழிப்பு தோற்றுவித்துள்ளது. ஆனால் அதை எவரும் உணர்வதில்லை.

இயற்கை வளங்கள் மனிதத் தலையீடு இன்றி இயற்கையாகவே கிடைக்கப் பெறுவதால் அவை இலவசமானவை என்று நாம் கருதுகின்றோம். ஆகையால் அவற்றின் பண ரீதியான பெறுமதி பூச்சியமாகவே கருதப்படுகிறது. இயற்கை வளங்களுக்கான பண ரீதியான பெறுமதியைக் கணிக்க எத்தனிக்கும் போதே எவ்வளவு பெரியளவிலான நிதி அநியாயமாக விரயம் செய்யப்பட்டுள்ளது என்ற உண்மை விளங்கும். இன்று முழு உலகுமே வர்த்தகமயப்பட்டமை தான், இயற்கை வளங்களின் பெறுமதியையும் பண ரீதியாக அளவிட வழிகோலியது. இயற்கை வளங்களால் நேரடியாகவும் மறைமுகமாகவும் கிடைக்கும் பயன்களை அடிப்படையாகக் கொண்டே இப்பெறுமதி கணிக்கப்படுகிறது. அழிக்கப்பட்ட வளங்களை மீள உருவாக்க முயல்கையிலேயே, அவ்வளங்களின் உண்மைப் பெறுமதி விளங்குமென அனுபவசாலிகள் கூறுவர். இந்நிலை தான், சூழல் பொருளியல் எனும் புதியதோர் துறை தோன்றுவதற்கும் வழி வகுத்தது.

இலங்கையின் கடற்பரப்பு ஆழங் குறைந்ததாகையால், கடல் வாழ் உயிரினங்களின் வளம் இங்கு ஏராளம் இலங்கை பவளப் பாறைகளுக்கும் பெயர்போனது. கடந்த இரண்டு தசாப்த காலங்களுக்குள் இந்த அழகிய பவளப் பாறைகள் அழியும் நிலைக்குத் தள்ளப்பட்டன.

அதற்கு பவளப் பாறைகளின் தொடர் அகழ்வும், 2004 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஆழிப் பேரலை அனர்த்தமுமே காரணிகளாகக் குறிப்பிடப்படுகின்றன.

இதையடுத்து, இயற்கை வளங்களை மீள உருவாக்குவதில் ஆர்வமுடைய அரச சார்பற்ற நிறுவனமொன்று பவளப் பாறைகளை ஒத்த சீமெந்துப் பாறைகளை கடலுக்கடியில் அமைத்து கடல் வாழ் உயிரினங்கள் வாழ்வதற்குகந்த சூழலை ஏற்படுத்தியது. அப்படியிருந்தும் இயற்கையான பவளப் பாறைகளில் பெருகுமளவிற்கு செயற்கை பாறையில் கடல் வாழ உயிரினங்கள் உடனடியாகப் பெருகவில்லை. அத்துடன் இத்திட்டத்திற்கான முதலீட்டுச் செலவும் பராமரிப்புச் செலவும் மிகமிக அதிகமாகும். அச்செலவுகளை உணர்கையிலேயே அழிந்த பாறைகளின் பெறுமதி விளங்குவதாக அந்தத் திட்டத்தில் பணிபுரிவோர் தெரிவித்திருந்தனர்.

அபிவிருத்தியடைந்த நாடுகளைப் பொறுத்தவரை யிலே, அவை பண வசதி படைத்தவை. எந்த ஒரு அனர்த்தத்தை எதிர்கொண்டாலும், அதிலிருந்து இலகுவாக மீளக்கூடியவை. ஆனால் இலங்கை போன்ற அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் அவ்வாறானவை யல்ல. 5 வருடங்களுக்கு முன் இலங்கையைத் தாக்கிய ஆழிப் பேரலை அனர்த்தத்தின் தாக்கத்திலிருந்து இன்னும் நாம் முற்றாக மீளவில்லை. இத்தகைய நிலை அபிவிருத்தியடைந்த நாடுகளில் காணப்படுவதில்லை. விரைவிலேயே அவை தம்மை சுதாரித்துக்கொள்ளும்.

எம் ஒவ்வொருவரினதும் மனப்பூர்வமான, ஒன்றிணைந்த பங்களிப்பின் மூலமே இத்தகைய நிலைமைகளை எதிர்கொள்ளலாம். சிறந்த வினைத்திறன் மிக்க அனர்த்த முகாமைத்துவக் கட்டமைப்புக்களை பொதுமக்களின் பங்களிப்புடன் தான் உருவாக்க முடியும்.

சூழலைப் பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு சமூகத்தின் ஒவ்வொரு மட்டத்திலும் உருவாக்கப்பட வேண்டும். அதை வலியுறுத்தும் வகையிலே தேசிய ரீதியிலான கொள்கைகளும் சட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். எமது அன்றாடச் செயற்பாடுகளிலே மாற்றத்தைக் கொண்டு வருவதன் மூலமே, பல்வேறு வகைகளில் எமது பங்களிப்பைச் செலுத்திச் சூழலைப் பாதுகாக்க முடியும்.

ஆடம்பரமான வாழ்க்கை முறைமைகளைத் தவிர்த்து எளிமையாக வாழப் பழகவேண்டும். எந்த ஒரு பொருளையும் பாவனையைக் குறைத்தல், மீள்பாவனை செய்தல், மீள் சுழற்சி செய்தல் ஆகிய தத்துவங்களுக்கமைய பாவிக்க வேண்டும். சிறிய பொலித்தீன் துண்டாயினும், குப்பைகளைக் கண்டபடி வீசியெறியாது. அவற்றிற்குரிய இடத்திலே போடவேண்டும். வீடுகளில் தேவையற்ற மின்சக்திப் பாவனையைக் குறைக்க வேண்டும். தேவையற்ற வாகனப் பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டும். இத்தகைய சிறிய செயற்பாடுகளை நாம் ஒவ்வொருவரும் கைக்கொள்ள முயற்சித்தாலே, காலநிலை மாற்றம் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும்.

இவை யாவற்றிற்குமப்பால், சகல வெகுசனத் தொடர்பூடகங்களும் காலநிலை மாற்றம் தொடர்பாகவும் சூழல் பாதுகாப்பு தொடர்பாகவும் பொதுமக்களுக்கு அறிவூட்ட ஒன்றிணைய வேண்டுமென்பதே காலத்தின் தேவையாகும்.

Monday, March 22, 2010

தூய நீரைச் சேகரிக்க உதவும் முப்பரிமாண நனோ துணிக்கைகள்


நீரைத் தூய்தாக்கும் தொழில் நுட்பத்தின் விளைத் திறனை முப்பரிமாண நனோ துணிக்கைகளின் பிரயோகம் அதிகரிக்கின் றது எனக் குறிப்பிடப்படுகிறது. நீரைச் சுத்திகரிக் கும் மென் படையில் நனோ துணிக்கைகளைச் சேர்க்கும் போது அதன் வினைத் திறன் இரு மடங்காவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதே முறை மூலம் உவர் நீரையும் நன்னீராக்கலாம். ஆனால் இம்முறைக்கு சக்தி அதிகம் தேவையா தலால் பணச் செலவும் அதிகமாக இருக்கும். அலுமினோ சிலிக்கேற்று கனியத்திலிருந்து பெறப்படும் நனோ துணிக்கைகள் ஏறத்தாழ 20nm. விட்டத்தையுடையவை. அவை மென் படையுடன் சேர்ந்து மென்படையின் இயல்பு களை மாற்றின.

அதனால் மென் படைகள் ஐதரசன் நாட்ட இயல்புடையனவாகவும் மாற் றப்பட்டன. இதனால் நீர் இலகுவாக வடிகட் டப்பட்டது. நனோ H2O என்ற நிறுவனத்தின் கீழ், கலிபோர்னியப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சூழல் பொறியியலாளரான எரிக்ஹோக் என்பவரே இப்புதிய முறைமையைக் கண்டுபிடித்தவராவார்.

2005 ஆம் ஆண்டளவில் ஆய்வு மட்டத்தில் மட்டுமே இருந்த இந்த விடயத்தை 4 ஆண்டுகளின் பின்னர் வர்த்தக மயப்படுத்தும்படி 15 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலிடப்பட்டது.

உற்பத்தியை அதிகரித்து இவ்வருடம் இந்தத் தொழில் நுட்பத்தைச் சந்தைப்படுத்தும் திட்டத்தையும் நனோசி2லி நிறுவனம் கொண்டுள்ளது. பொதுவாக, ஐதரசன் நாட்ட இயல்புடைய பதார்த்தங்கள் மாசுக்களை வடிக்கும் தன்மை குறைவானவையாகக் காணப்படும். இக் குறைபாட்டைத் தவிர்ப்பதற்காக இந் நிறுவனம் ஐதரசன் நாட்ட இயல்புடைய பதார்த்தத்தை உருவாக்காமல் கலப்புப் பதார்த்தமொன்றை உருவாக்கியுள்ளது.

அத்துடன் இந்நிறுவனம் உருவாக்கியிருக்கும் நனோ துணிக்கைகள் முப்பரிமாணக் கட்டமைப்பை உடையவை. இந்தப் புதிய முறைமையை, சாதாரண உற்பத்திச் செயன் முறையுடன் இணைத்துச் செயற்படலாமெனவும் குறிப்பிடப்படுகிறது.

பாலைவனப் பிரதேசத்திலும் நீரை பெறக் கூடிய தொழில்நுட்பம்


வறண்ட உலர் வலயங்களைப் பொறு த்த வரையிலே, தூய நீரைப் பெறு தல் சற்றுக் கடினமானது. இத்தகைய தொரு நிலையில் நீர்மூலக் கூறுகளைக் கவர்ந்து பின்னர் அவற்றை விலக்கித் தள்ளக் கூடிய பல் பகுதியமொன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இது நேர், மறை ஏற்றங்களையுடைய படைக ளையும் சிலிக்கா நனோத்துணிக்கைகளையும் கொண்டிருக்கும். இயற்கையாகவே ஐதரசன் நாட்டமுடைய பல் பகுதியங்கள் இணைக்கப் பட்டிருப்பதால் இப் பதார்த்தம் ஐதரசன் நாட்ட இயல்பைக் கொண்டிருக்கும். ஆதலால் நீர் மூலக் கூற்றை உறிஞ்சும்.

இப் பதார்த்தத்தின் கட்டமைப்பில் காணப்ப டும் மெழுகுத் தன்மையான சிலிக்கா படை, நீர் மூலக் கூறுகளை நீர்க்கோளங்களாக்கி, பதார்த்தத் தின் மேற் பரப்பில் உருளச் செய்யும். அவ்வாறு திரளும் நீரைச் சேகரிக்க முடியும். தூய நீருக்காக அல்லலுறும் சில நாடுகள் பெரியளவிலான பொலி புரொப்பிலீன் நார் வலைகளைப் பயன்படுத்தி வளிமண்டலத்தின் நீராவி மூலக் கூறுகளைச் சிறைப்படுத்தி நீரைப் பெறுகின்றன.

இம் முறையை விட, தற்போது கண்டுபிடிக்க ப்பட்டுள்ள இந்த புதிய முறையானது 10 மடங்கு வினைத்திறன் கூடியது. இப் புதிய பதார்த்தத்தா லான கூரைகளைப் பாவிது பாலைவனப் பிரதே சத்திலும் நீரைப் பெற முடியும்.

இந்தத் தொழில் நுட்பத்தின் இரசாயனம், ஐதரசன் நாட்டப் பகுதி யிலே பக்aரியாக் கொல்லியாகத் தொழிற்பட்டு தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிர்களை அழிக்கிறது. நீர் சேர்ந்த 4 நிமிடங்களுக்குள் பக்aரியா அழிந்து விட குடிப்பதற்குகந்த பாதுகாப்பான நீர் கிடைக்கும்.

நீரைப் பரிகரிக்க உதவும் சூரிய ஒளி


சுத்தமான குடிநீரைப்பெறுதலே, அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் மிக முக்கியமான பிரச்சினையாகக் காணப்படுகிறது. ஆனால் சிறந்த நீர்பரிகரிப்புத்திட்டங்களையு டைய நகரங்களால் மட்டும் பாதுகாப்பான தூய நீரைச் சிறந்த வழிமுறைகளில் வழங்க முடிகிறது.

நீரைப் பரிகரித்தலொன்றும் இலகுவான காரியமல்ல. அத்துடன் அதற்கான செலவும் மிக அதிகமாகும். இத்தகையதோர் நிலையில் சர்வதேச ஆய்வுக்குழு ஒன்று ஒளி ஊக்கி மூலம் நீரைச் சுத்திகரிக்கும் முறையைக் கண்டுபிடித்துள்ளது. சூரிய ஒளியையோ அல்லது செயற்கை ஒளி யையோ பயன்படுத்தி வினைத்திறன் மிக்க வகையில் நீரின் தொற்றை நீக்க முடியு மென இந்த ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இம்முறையிலே, ஒளி மூலம் தொழிற்படும் நிலைக்கு மாற்றப்பட்ட ஊக்கியானது, இருண்ட சூழலிலும் கூட நீரைத் தொற்று நீக்கப்பயன்படுகிறது.

நைதரசனானது டைட்டேனியம் ஒட்சைட்டுடன் மாசுபடுத்தப்பட்டது அம்மேற்பரப்பில், பலேடியம் நனோ துணிக்கைகளின் துணையுடன் தொடர்ந்து 24 மணிநேரங்களுக்கு சக்தியில் எந்தவித மாற்றமுமின்றி நீரைத்தொற்று நீக்க முடியும். பல ஆண்டுகளுக்கு முன்னரே உயர் செறிவடைய புற ஊதா ஒளிமூலம் நீரிலுள்ள பக்டீரியாக்களை கொல்லும் தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டு விட்டது. தற்போது ஆய்வாளர்கள் இந்தத் தொழில்நுட்பத்தின் வினைத்திறனை அதிகரிப்பதில் முனைந்து வருகின்றனர். புற ஊதா ஒளியினால் தொழிற்படச் செய்யப்படும், ஒளி ஊக்கி இரசாயனச் சேர்வைகளை உருவாக்கி, அவற்றின் மூலம் நீரை மாசுபடுத்தும் நண்ணுயிர்களைக் காபனீரொட்சைட்டாகவும் நீராகவும் பிரிகையடையச் செய்வதே இந்த ஆய்வின் நோக்கமாகும்.

தற்போது புற ஊதா ஒளியைத் தவிர்த்தது கட்புல ஒளியைப்பயன்படுத்தியே ஒளி ஊக்கியயைத் தொழிற்படச் செய்யும் முறைமை கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

400 nm இலிருந்து 550 nm வரையான அலை நீள எல்லைக்குள் உள்ள கட்புல நிறமாலையே இந்தப் புதிய ஆய்வின் அடிப்படையாகும். நைதரசனுடன் மாசுபடுத்தப்பட்ட பொதுப் பதார்த்தமொன்று கட்புல ஒளியை உறிஞ்சச் செய்யப்பட்டது. நைதரசனுடன் மாசுபடுத்தப்பட்ட இந்த டைட்டேனியம் ஒட்சைட் பதார்த்தத்தின் வினைத்திறனை அதிகரிக்கும் பொருட்டே பலேடியம் நனோ துனிக்கைகள் அம்மேற்பரப்பில் சேர்க்கப்பட்டன.

பாரம்பரிய ஒளி ஊக்கிப்பதார்த்தங்களிலிரு ந்து புதியதோர் முறைக்கு மாறுவது கூட நல்லதோர் எதிர்காலத்தைச் சுட்டுவதாகவே தெரிகிறது. சூரிய நிறமாலையானது 5 சதவீதமளவு புற ஊதாப் பகுதியையும் 46 சதவீதமளவு கட்புலப்பகுதியையும் உடையது. ஆகையால் சூரிய சக்தியைப் பயன்படுத்தி மேலும் வினைத்திறன் மிக்க முறையாக இந்த முறை மாற்றப் படலாம். மனிதக்கழிவுகள் கலக்கும் நீரில் செறிவாகக் காணப்படுவது ஈகோலி எனப்படும் பக்ரீரியா ஆகும்.

ஈகோலி செறிவு மிக அதிகமாகவுள்ள நீரை இந்தப் புதிய முறை மூலம் வெவ்வேறு நேரங்களுக்கு ஆய்வாளர்கள் பரிகரித்தனர். ஒரு மணித்தியாலத்தின் பின்னர் பக்டீரியாவின் செறிவை அளந்தபோது, அது 10 மில்லியன் கலங்கள்/லீற்றர் இலிருந்து 1 கலம்/10,000 லீற்றர் எனும் அளவுக்கு குறைந்து காணப்பட்டது.

நாம் இழைத்த துரோகங்களுக்கு நாமே பரிகாரம் தேடும் நிலைமை!


"நாம் மீண்டும் ஆதி மனி தர்களாக வேண்டும். அறிவியல் முற்றாக மறக்கப்பட வேண்டும். மனிதன் மீண்டும் தீர்க்கதரிசன அறிவைப்பெற வேண்டும். இயற்கையின் மொழி நம் மொழியாக வேண்டும். இதற்கு அறிவோ விவாதமோ தேவையில்லை. அறிக்கையும் தேவை யில்லை. முழுமையாகச் செயற்படும் மனம் மட்டுமே தேவை. அப்போது மலர்ச்சி ஏற்படும். அந்த மர்ச்சியையே நான் மறுமலர்ச்சியென்பேன்" என்ற ஒஷோவின் வரிகளை இணையத்தில் வாசிக்கக் கிடைத்தது. அந்தக் கூற்றின் அர்த்தம் இன்றைய நாளிற்கு மிகவும் அவசியமானது.

இயற்கை வளங்களுக்கொல்லாம் முதன்மையானதும் அடிப்படையானதுமாகக் காணப்படுவது நீர்வளமாகும். அதுமட்டுமன்றி உயிர்களின் தோற்றத்துக்கும் நிலைப்புக்கும் கூட நீர் இன்றிய மையாததென விஞ்ஞானம் கூறுகிறது. இன்று விஞ்ஞானம் கண்டுபிடித்ததை அன்றே உணர்ந்தமையினாலோ என்னவோ,

"நீர் இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும் வான் இன்று அமையாது ஒழுக்கு"

என வள்ளுவப் பெருந்தகை குறிப் பிட்டிருந்தார்.

ஐதரசனும் ஒட்சிசனும் இணைந்து நீர் உருவானமைதான் உயிரினங்களின் தோற்றத்துக்கும் அவற்றின் பரிணாம வளர்ச்சிக்கும் வித்திட்டதாக, பெரு வெடிப்புக்கொள்கையுடன் பார்வினின் கூர்ப்புக்கொள்கையும் தெரிவிக்கிறது. அவற்றினடிப்படையிலேயே வேற்றுக் கிரகங்களில் தண்ணீர் இருக்கிறதா?

அல்லது தண்ணீர் இருந்ததற்கான சான்றுகள் இருக்கின்றனவா என ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

ஆற்றங்கரைகளை அண்டியே பண்டைய நாகரிகங்கள் தோற்றம் பெற்றன என்று வரலாறு கூறுகிறது. யூபிரடீஸ்- தைகிறிஸ் நதிகளை அண்டிய மொசப்பத்திதேமிய நாகரிகமும், நைல் நதியை அண்டிய எகிப்து நாகரிகமும், இந்து நதியை அண்டிய மொகெஞ்சதாரோ-ஹரப்பா நாகரிகமும் வரலாறு கூறும் ஆதி நாகரிகங்களுட் சிலவாகும்.

மனித சமுதாயம் கண்ட மாபெரும் முன்னேற்றத்தின் ஆணிவேராக இருப்பதும் நீரேயாகும். மனிதனின் பிறப்பில் தொடங்கி, அவன் இறக்கும் வரை அவனுடன் இணைபிரியாமல் காணப்படுவதும் இந்த நீர்தான் என்றால் மிகையாகாது.

"வரப்புயர நீர் உயரும்,

நீர் உயர நெல் உயரும்

நெல் உயர குடி உயரும்

குடி உயர கோன் உயர்வான்" என அவ்வையார் பாடியிருந்தார். இக்கவி நாட்டின் செழிப்புக்கு நீரின் இன்றிய மையாமை பற்றி மிக அழகாகச் சொல்கிறது. நீர் மனிதனுக்குப் பயன்படும் வழிகளைத் தொகுத்தால், எஞ்சும் விரித்தால் பெருகும்.

பூமியிலே 70 சதவீதத்துக்கும் அதிகமான பரப்பு நீர்ப்பரப்பாகும். அந்த நீர்ப்பரப்பிலே 97% சதவீதமான பகுதி உவர் நீர்ப்பகுதியாகிய ஆறுகளாகவும் சமுத்திரங்களாகவும் காணப்படுகின்றன. 2.4 சதவீதமான பகுதி பனிப்பாறைகளாலாகிய துருவப்பகுதியாகும். ஆக 0.6 சதவீதமான பகுதி மட்டுமே நன்னீரைப் பெறக்கூடிய ஆறுகளும், வாவிகளுமாகும்.

இந்த 0.6 சதவீதமான நன்னீர்ப்பரப்பு மட்டுமே, இன்றுவரை பூமியில் வாழும் உயிரினங்களின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் அடிப்படைக்காரணியாகக் காணப்படுகிறது.

19 ஆம் நூற்றாண்டு, தொழில்நுட்பத் துறைகளும் கைத்தொழிற்றுறைகளும் அபிவிருத்திகாணத் தொடங்கிய காலகட் டமாகக் கருதப்படுகிறது. அந்த அபிவி ருத்திதான் இன்று எம் கண்ணெதிரே தெரி யும் வளமான வாழ்வுக்கும் சூழல் மாசு மற்றும் காலநிலை மாற்றத்துக்கும் காரணமாகியது. காலத்துடன் அதிகரித்த மனிதத்தேவைகள் நன்னீர்ப்பற்றாக்குறையைத் தோற்றுவித்தன.

தூய்மையான நீரின்றித் தினமும் 6000 குழந்தைகள் இறக்கின்றன. அதேபோல ஆண்டுதோறும் 250 மில்லியன் மக்கள் நீரினால் ஏற்படும் தொற்றுக்காரணமாக இறக்கின்றனர். நாம் பயன்படுத்தும் நீரினைவு எவ்வளவு அதிகரிக்கிறதோ, அதற்கமைய நீர் மாசடையும் அளவும் அதிகரிக்கும். நீர்மாசடைதல் தவிர்க்க முடியாதது எனக் கருதினால், கழிவு நீரைச் சுத்திகரித்து வெளியேற்றுவது அவசியமாக வேண்டும். கழிவு நீரைச் சுத்திகரித்து, குடிப்பதற்குக் கூடப் பயன்படுத்தும் நாடுகளும் காணப்படுகின்றன.இன்றைய காலகட்டத்தில் நீரின் மதிப் பையும் மகத்துவத்தையும் நாம் உண ராவிட்டால், நாளை கஷ்டப்படப்போவது எமது எதிர்கால சந்ததியேயாகும். நன்னீர்ப்பற்றாக்குறையால் ஏற்படப் போகும் விபரீதங்களை இன்றைய உலகு நன்கு உணர்ந்துவைத்துள்ளது. அதனால்தான் ஐக்கிய நாடுகள் சபை, மார்ச் மாதம் 22 ஆம் திகதியை உலக நீர் தினமாகப் பிரகடனப்படுத்தியது.

1992 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்தப் பிரகடனத்தின் அடிப்படையில் 1993 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படுகிறது. பொதுமக்களிடையே அருகிவரும், நீர் வளம் தொடர்பான விழிப்புணர்வையூட்டும் நோக்குடனேயே இத்தினம் பிரகடனப் படுத்தப்பட்டது.

ஒவ்வொருவருடமும் ஒவ்வொரு செய்தியைக் காவிவரும் இந்த உலக நீர் தினம், இவ்வருடம் "ஆரோக்கிய ரி!zதீl8!யி தூய நீர்" எனும் செய்தியைக் காவிவந்திருக்கின்றது.

உலக நீர் தினத்தை அனுஷ்டிப்பதோடு மட்டும் நின்றுவிடாது அது காவிவரும் செய்தியை உணர்ந்து செயற்பட விளையவேண்டும். இவ்வளவு காலமும் நீடித்த நீர்வளம் இன்னும் பல யுகங்களுக்கு நீடிக்க வேண்டும் என்ற உணர்வை வெளிப்படுத்துவதாக எமது செயற்பாடுகள் அமைய வேண்டும். அன்றேல், எமது எதிர்காலச் சந்ததியாலேயே தூற்றப்படும் முன்னோர்களாக நாம் மாறிவிடும் காலம் வெகுதொலைவில் இல்லை.

இவ்வளவு காலமும் நிலத்துக்காகவும் அதிகாரத்துக்காகவும் போராடிய மனித இனம், இனிமேல் போரிடுமாயின் அது நீருக்காகவே இருக்கும் எனக் குறிப்பிடப்படுகிறது. நீருக்காக மூன்றாம் உலக மகாயுத்தமொன்று உருவாகலாமென விஞ்ஞானிகள் எதிர்வு கூறுகின்றனர்.

இயற்கை வளங்கள் அருகிவரும் நிலைமை, அவை இலவசமாகக் கிடைத்தவை என்ற எண்ணத்தை விலக்கி அவற்றை நுகர்வுப் பண்டங்களாகக் கருதும் புதியதோர் பரிமாணத்தை உருவாக்கியிருக்கிறது. நீரின் பெறுமதி மதிப்பிடப்படுகிறது. பல்வேறு பாவனைகளுக்குமான நீரின் தரம் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.

ஒரு சில தசாப்தங்களுக்குள்ளேயே திசை மாறிய நீர்வளத்தின் போக்கு, அதன் எதிர்காலத்தை எதிர்வு கூறவோ அல்லது கற்பனை செய்யவோ முடியாத அளவிற்கு மாற்றியிருக்கிறது. இந்நிலைக்குப் பதில் சொல்ல வேண்டிய கடப்பாடுடையவர்கள் நாங்களே!

நாம், பிள்ளையைக் கிள்ளிய குற்றத்திற்காக தொட்டிலையும் ஆட்டவேண்டிய கடப்பாட்டை உடையவர்களாகிறோம்.

நடந்தவை நடந்தவையாகவே இருக்க, நாம் சுத்தமான நீரைப் பெறுவதற்கான வழிமுறைகளைக் கையாள வேண்டும். அத்துடன் நீரை வீணடிக்கும், மாசுபடுத்தும் செயற்பாடுகளை இயன்றவரை குறைக்கவோ அல்லது முற்றாக நிறுத்தவோ வேண்டும்.

சுத்தமான நீரைப் பெறுதலானது நீரை மாசடையாமல் தடுத்தல், மாசடைந்த நீரைச் சுத்திகரித்துப் பயன்படுத்துதல் எனவும் வகைப் படுத்தப்படும்.

விவசாய, தொழிற்சாலை அல்லது கைத்தொழில் மற்றும் வீட்டுக் கழிவுகளை இயன்றவரை சுத்திகரித்து வெளியேற்ற வேண்டும். மீள உபயோகிக்கக் கூடிய வற்றையும் மீள் சுழற்சி செய்யக்கூடிய வற்றையும் வேறாக்கி உபயோகிக்கலாம். சுத்திகரிக்காமல், கழிவுகளை நேரடியாக நீர் நிலைகள், நிலம், வளிமண்டலம் ஆகியவற்றுள் வெளியேற்றுதல் தடுக்கப்பட வேண்டும்.

நீர்நிலைகளுள் வெளியேற்றப்படும் கழிவுகள், நீர்நிலைகளை மாசுபடுத்துகின்றன. மனிதன் உட்பட நீர்நிலைகளைப் பயன்படுத்தும் உயிரினங்களின் சுகவாழ்வு பாதிக்கப்படுகிறது.

நிலங்களில் கொட்டப்படும் கழிவுகள் மீது மழைபெய்யும் போது கரையக்கூடிய மாசுக்கள் கரைந்து நிலத்தினுள் வடிந் தோடுவதால் நிலக்கீழ் நீரும் நிலச்சாய்வின் வழியே வழிந்தோடி நீர்நிலைகளை அடைவதால் நீர்நிலைகளும் மாசடைகின்றன. நிலத்தில் கொட்டப்பட்ட கழிவுகள் போன்றே வளிமண்டலத்தில் வெளியேற் றப்படும் வாயுக்கழிவுகளும் செயற்படு கின்றன.

இவ்வாறு மாசடையும் நீரைச் சுத்திகரித்து அதன் தரத்திற்கமைய, பல்வேறு தேவைகளுக்குப் பயன்படுத்த முடியும். வீட்டுக்கழிவு நீரைச் சுத்திகரித்து விவசா யத்துக்குப் பயன்படுத்தலாம். நீரை மாசு படுத்தாத வகையிலான விவசாயி, வர்த் தக நடைமுறைகளைக் கையாள வேண்டும்.

எந்த ஒரு கழிவும் சுத்திகரிக்கப்பட்டு இனி சூழலுக்குத் தீங்கை விளைவிக்காது எனக் கருதும் பட்சத்தில் மட்டுமே வெளியேற்றப்பட வேண்டும்.

இற்றைக்கு மூன்று தசாப்தங்களுக்கு முன்னர், இலங்கையில் அடைக்கப்பட்ட போத்தல்களில் குடிநீர் காசுக்கு விற்கப்படுமென எவருமே நினைத்திருக்க வில்லை. ஆனால் இன்று அது ஒரு சர்வசாதாரணமான விடயமாகச் சகலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டது.

தற்போது சில நாடுகள் கழிவு நீரைச் சத்திகரித்து குடிநீராகப் பயன்படுத்துக்கின்றன. சிங்கப்பூர் போன்ற நாடுகளும் அத்தகைய நாடுகளுள் அடங்குகின்றன.

சிங்கப்பூருக்கான தண்ணீர் விநியோகம் பெரும் செலவில் நடைபெறுகிறது. கருத்துக்கணிப்பொன்றில் கழிவு நீரைச் சுத்திகரித்து உபயோகப்படுத்துவதற்கு பெரும்பாலான சிங்கப்பூர் மக்கள் ஒப்புதல் அளித்திருந்தனர். அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சலிஸ் நகரிலே சுத்தி கரிக்கப்பட்ட கழிவுநீர் தான் பொதுத் தேவைகளுக்குப் பயன்படுகிறது. இஸ்ரேல் தனது விவசாயத்தேவைகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீரைப் பயன்படுத்தி வருகிறது.

இலங்கையைப் பொறுத்தவரையிலே இன்னும் அத்தகையதோர் தேவை ஏற்படவில்லை. ஆனால் இன்று இருக்கும் நிலை தொடந்தால், நாமும் கழிவு நீரைச் சுத்திகரித்துப் பயன்படுத்த வேண்டிய காலம் இன்னும் 3 தசாப்தங்களுக்குள் ஏற்பட்டுவிடுமென நம்பப்படுகிறது.

இலங்கையின் 14 மாவட்டங்களில் வசிப்போரில் 33 சதவீதமான மக்கள் அடிப்படை நீர்வசதியற்றவர்கள் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கொழும்பு மாநகர சபை மட்டும் தான் கழிவுநீருக்கான பொது வடிகால் வலையமைப்பையுடைய மாநகர சபையாகும். நகர மயமாக்கலும் மக்களின் நகரங்கள் நோக்கிய இடப்பெயர்வும் வேகமாக அதிகரித்து வரும் எங்கள் நாட்டில், கழிவு நீர் வடிகால் வலையமைப்புகளின் தேவையும் நீர்ச்சுத்திகரிப்பு, பரிகரிப்பு நிலையங்களின் தேவையும் காணப்படுவது மறுக்கமுடியாதது.

வவுனியாவிலே, வைத்தியசாலை, நகரக் குடியிருப்புக்கள் ஆகியவற்றின் கழிவுகள் நீர்ப்பரிகரிப்பு நிலையமின்மையால் நேரடியாக வவுனியாக் குளத்தினுள் வெளியேற்றப்படுகின்றன. விவசாய நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு கட்டப்பட்ட வவுனியாக்குளம் இன்று மாசடைந்து காணப்படுகிறது. வவுனி யாக்குளம் போல இன்னும் பல குளங் கள் மாசடைந்து காணப்படலாம். அவை பற்றி நாம் அறியாமல் இருக்கலாம். இனியும் உறங்கிக்கிடக்காது, இது எங்கள் வளம் என்ற உணர்வுடன் நாம் தான் விழிப்படைய வேண்டும்.

அண்மையில் யாழ்ப்பாணத்தின் தென்மராட்சிப் பகுதியில் சடுதியாக அதிகரித்த சனத்தொகையைக் கருத்தில் கொண்டு அங்கே நீர்ப்பரிகரிப்புத் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. நிலக் கீழ் நீர்வளத்தை பெருமளவில் நம்பியிருக்கும் யாழ்ப்பாணத் தில் நிலக்கீழ் நீரினளவு குறைவடைந்து வருவதும் அவதானிக்கப்படுகிறது. இத்தகையதோர் நிலைமை இலங்கையின் கிழக்குப் பகுதிகளிலும் காணப்படும். நிலக்கீழ் நீரை அதிகமானளவில் பெற்றுக்கொள்வதால் நீரிலுள்ள பார உலோகங்களின் செறிவு அதிகரிக்க, 'மக்கள் பல்வேறு சுகாதாரப் பிரச்சினை களுடன் குடிநீர்ப் பிரச்சினையையும் எதிர்நோக்குகிறார்கள்.

நிலக்கீழ் நீர்வளத்தை அதிகரிப்பது தான் இத்தகைய பிரச்சினைகளை முறியடிக்கக்கூடிய எளிய வழியாகும். அவ்வாறு அதிகரிப்பதாயின், மழையினால் பெறப்படும் நீர் வீணே வழிந்தோடிக் கடலிலே கலப்பது தடுக்கப்பட்டு, நிலத்தினுள் வடிந்தோடக் கூடிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். பொருத்தமான மரங்களை வளர்ப்பதுடன் சிறியளவிலான பல நீர்த்தேக்கங்களை உருவாக்கி நீரைச் சிறைப்படுத்த வேண்டும். இதற்கு நவீன முறையிலான பல செயற் பாடுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அத்திட்டங்கள் செலவுமிக்கனவாகை யால் எம்மைப் போன்ற அபிவி ருத்தியடைந்துவரும் நாடுகளால் அவற்றை மேற்கொள்வதென்பது சற்றுக் கடினமான விடயமேயாகும்.

சூழலை மாசுபடுத்தும் நீர்க்கழி வுகளை வெளியேற்றும் தொழிற் சாலைகள், பிரத்தியேகமான நீர்ப்பரிகரிப்பு நிலையங்களையும் அமைத்து கழிவு நீரைச் சுத்திகரித்து வெளியேற்ற வேண்டுமென மத்திய சுற்றாடல் அதிகார சபை வலியு றுத்துகிறது. 'பிலிசறு' எனும் திடக் கழிவு முகாமைத்துவத்திட்டம் கூட இதற்குச் சிறந்த உதாரணமாகும்.

கிranனீix நிறுவனத்தின் தொழிற் சாலை ஒன்று தனது கழிவுநீரைச் சுத்திகரித்துத்தானே மீளப்பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. எமது நாட்டின் தொழிற்சாலைகள் யாவுமே அத்தகைய கொள்கைகளுடன் அமைக்கப்பட்டால் எம் நன்னீர் வளத்தின் ஆயுள் இன்னும் பல தசாப்தங்களுக்கு நீடிக்கப்படும்.

சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி லாவகமாய்த்தப்பிக்கும் மனிதர்களும் இருக்கிறார்கள் என்ற உண்மை மறுக்கப்பட முடியாதது. ஆனால் அவ்வாறு தப்பிப்பதன் விளைவு மீண்டும் தம்மையே தாக்குமென்ற சிந்தனை அவர்களுக்கு வருவதில்லை.

அத்துடன் நாம் நீரை வீண்விரயம் செய் வதை இயன்றவரை தவிர்க்க வேண்டும். நாம் சமைக்கும் உணவில் ஏறத்தாழ 30 சதவீத உணவு விரயம் செய்யப்படுகிறது. அவ்வுணவின் பின்னால் இருக்கும் நீரினளவு உலகளாவிய ரீதியில் 40 டிரில் லியன் எனக்கணக்கிடப்பட்டுள்ளது.

ஒருகிலோ நெல் பெறப்படுவதற்கு 2400 லீற்றர் நீர் தேவைப்படுகிறது. இவ்வாறு நாம் நகரும் ஒவ்வொரு உணவுப் பொருட்களும் பல லீற்றர் நீரைப் பெற்றமையால் உருவாக்கப்பட்டவையே. உணவை விரயமாக்காமலிருப்பதானது உணவுப் பாதுகாப்பை அதிகரிப்பதுடன் நீர் விரயத்தைத் தவிர்த்து நீர்வளத்தைப் பேணும் ஒரு சிறந்த நடவடிக்கையாகும்.

இது தவிர, எமது அன்றாட செயற் பாடுகளின் போதும் நீரைச் சிக்கனமான முறையில் பயன்படுத்தப் பழக வேண்டும்.

இலங்கையின் கரையேரப் பிரதேசங்க ளின் நன்னீர் வளம், ஐந்து வருடங்களுக்கு முன்னர் நிகழ்ந்த ஆழிப்பேரலை அன ர்த்தத்தால் பெருமளவில் பாதிக்கப்பட்டது. வீட்டுக் கிணறுகள், குளங்கள், தண்ணீர்த் தாங்கிகள், மழைநீர்த்தாங்கிகள், குழாய்க்கிணற்று வசதிகள் ஆகிய நன்னீர் மூலங்கள் பாதிக்கப்பட்டன. கரையோர நீர் நிலைகள் ஒட்சிசன் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டதுடன் அவற்றின் உவர்த்தன்மையும் அதிகரித்து அவை மாசடைந்து காணப்பட்டன.

இத்தகைய பிரச்சினைகளிலிருந்து இப்பிரதேசங்களை மீளக்கட்டியெழுப்ப, பல்வேறுபட்ட திட்டங்கள் நடை முறைப்படுத்தப்பட்டு மக்களுக்கு தூய நீரை வழங்கும் ஏற்பாடுகள் செய்ய ப்பட்டுள்ளன. இவை பற்றியெல்லாம் நாம் அறிய முனையவேண்டும்.

நீர் வளத்தைப் பாதுகாப்பதற்கு இன்றைய நாள் வழங்கியிருக்கின்ற சந்தர்ப்பத்தை முதலடியாகக் கொண்டு நாம் விழிப்படைவதோடு மட்டும் நின்றுவிடாது எம்மைச் சார்ந்தோரையும் விழிப்புணர்வு கொள்ளச் செய்து ஆரோக்கியமான எதிர்காலத்துக்கு வழிசமைப்போமாக.

Tuesday, March 16, 2010

பூகம்ப ஆபத்து வலயங்களையும் தாண்டி தாக்குகிறது நிலநடுக்கம்

“நெஞ்சுயர்த்தி வாழ்ந்தவொரு
குடிவாழ்க்கை இடி விழுந்து
எல்லாமிழந்து இருக்கிறது சூனியமாய்
நாளையிது மீண்டும்
அழகொளிர நிமிர்ந்திடுமா?”

என்று இயற்கை அனர்த்தத்தால் சிதையுண்ட நகரைப் பார்த்து வருத்தத்துடன் கேட்டிருந்தான் கவிஞனொருவன்.

மனிதனுக்கு அமைதி என்றொரு முகமிருந்தால், சீற்றம் என்றொரு முகமும் இருக்குமென்றே கூறுவர். அகம்-புறம், நன்மை-தீமை, உண்டு-இல்லை என எந்தவொரு விடயத்தையும் ஒன்றுக்கொன்று முரணான இரண்டு கோணங்களில் நோக்கமுடியும். அக்கோணங்களுக்குள் அடக்கவும் முடியும்.

1,0 என்ற ஒன்றுக் கொன்று முரணான இரு இலக் கங்களினடிப்படையிலேயே கணனித் தொழில்நுட்பம் இன்று வரை புதிய பல பரிமாணங்களைக் கண்டிருக்கிறது. இயற்கையும் அத்தகையதே.

இளந்தென்றலாய் வீசும் இயற்கைதான் கொடிய புயலையும் வீசச்செய்கிறது. அமைதியாய்ச் சென்று கடலோடு கலக்கும் ஆறுகள் தான் சிலசமயங்களில் காட்டாறுகளாய் மாறி உயிர்களைக் காவுகொள்கின்றன. நுரையாய் நிலத்தைத் தழுவும் கடலலைதான் ஆழிப்பேரலை அனர்த்தமாய்த் தன் கோரமுகத்தைக் காட்டி நின்றது.

நாம் கொத்தி, பாரத்தை ஏற்றி எத்தனை துன்பம் செய்தாலும் பொறுமையாய்த் தாங்கிக் கொள்ளும் பூமாதேவிதான், சில சமயங்களில் புவி நடுக்கமாய், எரிமலை வெடிப்பாய்ச் சீற்றம் கொள்கிறாள்.

புவிக்கோளத்தின் வெளிப்பகுதியே நாம் காணும் நிலப்பரப்புக்களும் நீர்ப்பரப்புக்களுமாகும். புவிக்கோளம், தன்னுள்ளே பல படைகளைக் கொண்டது. வெளிப்பகுதி புவியோடு எனப்படும். அதற்கு அடுத்த படைகள் முறையே மேல் மென் மூடி, கீழ் மென்மூடி, அகணி ஆகியனவாகும்.

புவியோட்டையும் மேல்மென் மூடியையும் சேர்த்து கற்கோளம் என்பர். இந்த கற்கோளமே தனித்தனியாக அசையக்கூடிய புவித்தட்டுக்களைக் கொண்டது. இப்புவித்தட்டுக்களே கண்டங்கள் உருவாகக் காரணமாகின்றன.

வட அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் அரீனா முனையிலிருந்து இம்பீரியல் பள்ளத்தாக்குவரை ஏறத்தாழ 1000 கி.மீ நீளமுடைய வெடிப்பொன்று புவி மீது காணப்படுகிறது.

இது புவியின் நிலத்தட்டு எல்லைகளுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. அவ்வெடிப்பின் ஒருபக்கத்தில் வட அமெரிக்க நிலத்தட்டும் மற்றைய பக்கத்தில் பசுபிக் நிலத்தட்டும் காணப்படுகின்றன. இவ்வெல்லையை சான் அன்றியாஸ் குறையென அழைப்பர். இந்த இரு நிலத்தட்டுக்களும் ஒரு வருடத்துக்கு 2.5 செ.மீ. அளவில் வழுக்கியும் உராய்ந்தும் செல்வதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இத்தகைய நிலத்தட்டுக்கள் புவியின் கற்கோளப்பகுதியில் காணப்படுகின்றன. அத்துடன் அவை தாமாகவே அசையும் வல்லமை மிக்கவை. அவற்றின் அசைவே நிலநடுக்கங்களுக்கான அடிப்படையாகும்.

தட்டுக்களின் அசைவு குறைமேற்பரப்புக்களையும் தோற்றுவிக்கும். இந்தக் குறைதட்டுக்கள் தமது எல்லைப் பகுதிகளில் ஒழுங்கற்றதாகக் காணப் படுவதுடன் ஒன்றுடனொன்று வழுக்கியும் உராய்ந்தும் செல்லும் தன்மையுடையனவாகக் காணப்படுகின்றன.


இத்தட்டுக்களுக் கிடையிலான சார்பியக்கம், அவற்றிற் கிடையிலான தகைப்பை அதிகரிக்கும். இது பெரியளவிலான விகார சக்தியை குறைமேற்பரப்புக்களில் உருவாக்கும்.

தட்டுக்களுக்கிடையே ஏற்படும் உராய்வினாலான வெப்பம் பாறைகளில் வெடிப்பை ஏற்படுத்தும். இவ்வெடிப்பு பூமியதிர்ச்சிக்கு வழிவகுக்கும். பெரும்பாலான பூமி அதிர்வுகள் இந்த குறை மேற் பரப்புக்களாலேயே தோற்றுவிக்கப்படும். பல பூமியதிர்வுகள், தட்டுக்களின் எல்லைக்கு அப்பாலேயே நிகழும். அவற்றினால் உருவாக்கப்படும் விகாரம் கு¨றேமேற் பரப்புக்களில் ஒழுங்கற்ற தன்மையை உருவாக்கும்.

இவ்வொழுங்கற்ற தன்மையே அழிவுகளுக்குக் காரணமாகும். எரிமலைப் பிரதேசங்களில் பூமியதிர்ச்சி அடிக்கடி நிகழும். இவ்வாறு நிகழ்வதற்கு புவித்தட்டுக்களின் குறைமேற்பரப்பும் எரிமலையின் மக்மாக் குழம்பின் அசைவும் காரணமாகின்றன. எரிமலை வெடிக்கப்போவத ற்கான ஆரம்ப சமிக்ஞையாக அப்பகுதிகளில் ஏற்படும் பூமியதிர்ச்சியைக் கருதலாம்.

பூமிக்கு அடியிலிருக்கும் இந்த நிலத்தட்டுக்களின் மோதுகையாலோ அல்லது அசைவினாலோ உருவாக்கப்பட்ட அதிர்வலைகள் புவிமேற்பரப்பில் பரவும் போது நிலநடுக்கமாக உணரப்படுகின்றன. நிலமேற்பரப்பில் மட்டும் தான் அவை உணரப்பட வேண்டுமென்ற கட்டாயமில்லை.

சமுத்திர மேற்பரப்புகளிலும் கூட அவை உணரப்படலாம். அவ்வாறு சமுத்திர மேற்பரப்பில் உணரப்பட்ட கடலடி நில நடுக்கத்தின் விளைவே 2004 இல் நாம் கண்ட ஆழிப்பேரலை அனர்த்தமாகும்.

உலக வரைபடத்திலே நெருப்பு வலயங்கள் எனும் நிலநடுக்கப் பிரதேசங்களாகச் சில பகுதிகள் குறிக்கப்பட்டுள்ளன.

தென்னமெரிக்க முனையின் மேற்குக் கரையோரத்தில் தொடங்கி, சிலி, பெரு ஆகிய நாடுகளை உள்ளடக்கிப் பின் மத்திய அமெரிக்கா, வட அமெரிக்காவின் மேற்குப் பகுதியைக் கடந்து கொஸ்தாரிக்கா, நிகராகுவா, மெக்சிக்கோ, கலிபோர்னியா, வாஷிங்டன் மாநிலங்கள் வழியாக அலஸ்காவைத் தொட்டு ஜப்பான், சீனா, வட இந்தியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளைத் தாண்டி மத்திய ஆசியாவிலே ஈரானையும் உள்ளடக்கி பின் மத்திய தரைக்கடல் நாடுகளுடன் முடிவடைகிறது. ஆனால் இவ்வலயத்தில் இல்லாத நாடுகளிலும் கூடப் புவிநடுக்கம் ஏற்படலாமென்பது நிதர்சனமான உண்மையாகும்.

நிலநடுக்கம், புவியின் குறிப்பிட்ட பகுதியில் தான் நடக்க வேண்டுமென்ற எந்தவொரு நிர்ப்பந்தமுமில்லை. அவை எங்கு வேண்டுமானாலும் நிகழலாம். சிறியளவிலான நில அதிர்வுகள் அடிக்கடி நடப்பவையல்ல. ஏறத்தாழ 100 வருடங்களுக்கொரு முறையே பெரியளவிலான நிலநடுக்கங்கள் ஏற்படும் சாத்தியக் கூறுகள் காணப்படுவதாக, ஆய்வுகள் தெரிவித்திருந்தன.

நில அதிர்வுகள் / நடுக்கங்களின் தன்மையை அளவிடுவதற்கு ‘ரிச்டர்’ எனும் அளவிடை பயன்படுகிறது. அளப்பதற்கு புவிநடுக்கமானி அல்லது நிலநடுக்கப் பதிகருவி எனப்படும் கருவி பயன்படுகிறது. இக்கருவியை சார்ள்ஸ் ரிச்டர் என்பவர் கண்டுபிடித்தமையினால் நில நடுக்க அளவிடை ‘ரிச்டர்’ எனும் பெயர் கொண்டு அழைக்கப்படுகிறது.

ஆரம்பத்தில் மேக்கலி எனும் அளவுத்திட்டம் பயன்படுத்தப்பட்டது. இது மக்களிடமிருந்து பெறப்படும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டதேயன்றி ரிச்டர் அளவிடையைப் போன்று விஞ்ஞானபூர்வமானதல்ல. தற்போது திருப்பப் பருமனை அடிப்படையாகக் கொண்ட அளவிடையாக (Moment Magnitude Scale) புதிய அளவிடையொன்று பயன்படுத்தப்படுகிறது.

நடுத்தரப் பருமனுடைய பூகம்பங்களைப் பொறுத்தவரையில் ரிச்டர் அளவிடையும் இந்தப் புதிய அளவிடையும் ஒரேவிதமானவை. ஆனால் பெரிய பருமனுடைய பூகம்பங்களில் அவ்விரு அளவிடைகளும் வேறுபடும்.

எனினும் ரிச்டர் அளவிடையே புழக்கத்தில் உள்ளது. நிலநடுக்கத்தின் ரிச்டர் அளவு 7 அல்லது அதற்கு மேற்பட்டதாயின் ஆபத்தான விளைவுகளை, பரந்தளவிலான பிரதேசங்களில் ஏற்படுத்துமெனவும் ரிச்டர் அளவு 3 அல்லது அதற்குக் குறைவாயின் நிலநடுக்கத்தை உணரமுடியாது எனவும் 3 க்கும் 7 க்கும் இடைப்பட்டளவிலான பருமனுடைய நிலநடுக்கங்கள் சிறியளவிலான பாதிப்புக்களை ஏற்படுத்தும்.

ரிச்டர் அளவுகள் மடக்கைப் பெறுமதியிலானவை. 7 ரிச்டர் அளவானது. 6 ரிச்டர் அளவை விட 31.6 மடங்கு (10 3/2 மடங்கு) பெரியது. அதேசமயம் 5 ரிச்டர் அளவைப்போல் கிட்டத்தட்ட 1000 மடங்கு (998.56 மடங்கு) பெரியது. 2004 ஆம் ஆண்டு நிகழ்ந்த ஆழிப்பேரலை அனர்த்தத்திற்குக் காரணமாகிய நிலநடுக்கம் அண்மையில் சிலியில் நடந்த நிலநடுக்கத்துடன் ஒப்பிடுகையில் கிட்டத்தட்ட 1000 மடங்கு பெரியது எனலாம்.

நிலநடுக்கத்தால் உருவாக்கப்படும் நில அதிர்வலைகள் (Seismic waves) நெட்டாங்கு அலைகளாகவோ, அவற்றிற்கு எதிர்மாறான குறுக்கலைகளாகவோ இருக்கலாம். இவ்வலைகளின் வேகம் 3km/s இலிருந்து 13km/s வரை மாறுபடும். அத்துடன் இவ்வேகமானது அவ்வலைகள் பயணிக்கும் ஊடகத்தின் அடர்த்தியிலும் மீள்தன்மையிலும் தங்கியிருக்கும்.


Seismometer எனப்படும் நிலநடுக்கமானியால் நிலநடுக்கத்தின் பருமனையும், அது அம்மானியிலிருந்து எவ்வளவு தூரத்தில் நிகழ்ந்துள்ளது என்பதையும் அறியமுடியும். நிலநடுக்கமானியிலிருந்து பெறப்படும் தரவுகளினடிப்படையிலேயே வரைபுகள் வரையப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்படு கின்றன.

அத்தகையதொரு ஆய்வே, புவியின் மையப்பகுதியின் அமைவை மிகச்சரியாக அறிந்து கொள்ளவும் உதவியது. பெனோகுட்டன்பேர்க் என்பவரே புவியின் மையப்பகுதியின் அமைவிடத்தை 1913 ஆம் ஆண்டு கண்டறிந்தார்.

கி.மு. 5 ஆம் நூற்றாண்டளவிலேயே நிலநடுக்கம் தொடர்பான எண்ணக்கரு, கிரேக்க தத்துவஞானிகளால் விதைக்கப்பட்டு விட்டது. நிலநடுக்கங்களானவை காலங்காலமாக நிகழும் செயற்பாடுகள் என வரலாறு கூறுகிறது. இத்தாலியின் பழம் பெரும் நகராகிய பொம்பேய் நிலநடுக்கத்திற்குப் பெயர் போனது. நிலநடுக்கங்களால் சிதைந்த அந்நகரின் இடிபாடுகளை இன்றும் காணமுடியும்.

நிலநடுக்கங்களால் உருவாகும் ஆழிப்பேரலைகளுடன், கடற்கோள் அனர்த்தங்களும் புவித்தட்டுக்களின் நகர்வுமே இன்றும் நாம் காணும் கண்டங்களாகும். மறைந்துபோன குமரிக்கண்டமும் கடல் கொள்ளை கொண்ட பூம்புகார் நகரும் கூட நிலநடுக்கங்களுக்குச் சான்று பகரும் வரலாற்று ஆதாரங்களாகும்.

பல கோடி ஆண்டுகளுக்கு முன்னர் ஆசியாவும் ஐரோப்பாவும் இணைந்து யுரேசியா எனும் பெயருடைய கண்டமாக இருந்தனவெனவும் ஒரு பெரும் பூகம்பத்தால் ஆசியா, ஐரோப்பா என தனித்தனிக் கண்டங்களாகப் பிரிந்தனவெனவும் கூறப்படுகிறது. ஆயினும் தெளிவான ஆதாரங்கள் எவையும் கண்டறியப்படவில்லை.

1755 ஆம் ஆண்டு அத்திலாந்திக் சமுத்திரத்தில் கடலடி நிலநடுக்கமொன்று ஏற்பட்டது. அதனால் உரு¡கிய ஆழிப்பேரலைகளால் போர்த்துக்கல்லின் தலைநகராகிய லிஸ்பன் பெரியளவில் பாதிக்கப்பட்டது. லிஸ்பன் துறைமுகம் பழம் பெருமை வாய்ந்தது. அத்துடன் செல்வந்தப் பகுதியாகவும் விளங்கியது. லிஸ்பனில் மாத்திரம் 30,000 பேர் ஆழிப்பேரலையின் கோரப்பசிக்கு காவுகொடுக்கப்பட்டனர். அன்று வீழ்ந்த லிஸ்பன் நகரால் இன்றும் கூட, பழைய நிலைமைக்கு மீளமுடியவில்லை.

1989 இல் சென்பிரான்சிஸ்கோ நகரை உலுக்கிய பூகம்பத்தை எவரும் இலகுவில் மறந்திருக்கமாட்டார்கள்.

இந்த நிலநடுக்கங்களால் ஏற்படுத்தப்படும் விளைவுகள் வரையறுக்கப்பட்டவையல்ல. அவற்றின் முக்கிய விளைவான நில மேற்பரப்பின் அதிர்வு காரணமாக கட்டடங்கள் போன்ற உறுதியான கட்ட மைப்புக்கள் பெரியளவில் பாதிக்கப்படு கின்றன. சிறியளவிலான நிலநடுக்கங்கள் கூடப் பாரிய சேதங்களைத் தோற்றுவிக் கலாமெனத் தெரிவிக்கப்படுகிறது.

நில அதிர்வுகளுடன் கூடிய எரிமலை வெடிப்பு மண்சரிவைத் தோற்றுவிக்கும். நில அதிர்வுகளால் நிலத்துக்குக் கீழாகச் செல்லும் எரிவாயு மற்றும் மின்னிணை ப்புக்கள் சேதமுற்று, தீ பரவலாம். அவ் வாறு தீ பரவும் போது அதைக் கட்டுப்படுத்துவது சற்றுக் கடினமானது.

1906 இல் சென்பிரான்சிஸ்கோவில் நடந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதத்தைவிட மேற்குறிப்பிட்டவாறு பரவிய தீயினால் ஏற்பட்ட சேதம் மிக அதிகமாகும்.

மண் திரவமயப்படலானது பூகம்பத்தால் ஏற்படும் பாராதூரமான விளைவாகக் கருதப்படுகிறது. நில அதிர்வினால் மண் போன்ற நீர் நிரம்பிய துணிக்கைப் பதார்த்த்ஙகள் தமது வலிமையை இழந்து திண்ம நிலையிலிருந்து திரவ நிலைக்கு மாறும். இவ்வாறு மண் துணிக்கைகள் மாறுவதால் கட்டடங்கள், பாலங்கள் போன்ற உறுதியான நிர்மாணங்கள், திரவமயமாக்கப்பட்ட படிவுகளிலே மிதந்து தாமே இடிந்து தரைமட்டமாகிவிடுகின்றன.அத்துடன் பூமியதிர்ச்சியால் பாதிக்கப்படும் அணைக்கட்டுக்கள் சிதைவடைவதால் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் மிகவும் அதிகமானதாகக் காணப்படும்.

இவை யாவற்றிற்குமப்பால் பூமியதிர்ச்சியா னது மனித உயிருக்கும் வாழ்வுக்கும் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஏற்படுத்தும் பாதிப்புக்கள் அளவிடப்பட முடியாதன.

ஒரே தரத்திலேயே பல்லாயிரக்கணக்கான உயிர்களைப் பலியெடுக்கும் இயற்கை அனர்த்தமாகப் பூமியதிர்ச்சி கருதப்படுகிறது. இவை தவிரப் பல நோய்கள் பரவுவதற்கும், அடிப்படை வசதிகளின் பற்றாக்குறை, சொத்துக்களின் இழப்பு, உட்கட்டமைப்பு வசதிகளின் அழிவு போன்ற பல பிரச்சினைகளால் மனிதனின் வாழ்வியல் பாதிக்கப்படுவதற்கு ஏதுவாகிறது.

அண்மையில் இலட்சக்கணக்கான உயிர்களைப் பலிகொண்ட ஹெயிட்டி பூகம்பத்தால் அந்த நாடே உருக்குலைந்து போனதை வெகுசனத்தொடர்பு ஊடகங்களால் காணக்கூடியதாக இருந்தது.

சில பகுதிகளில் ஏற்படும் நிலநடுக் கங்களுக்கு வல்லரசுகளின் நாசகார ஆயுதப் பரிசோதனைகள் காரணமாக அமைவதாக ஊகங்களும் தெரிவிக்கப்படுகின்றன. எனினும் அவ்வூகங்கள் எவையுமே உத்தியோகபூர்வமாக நிரூபிக்கப்படவில்லை.

வருடாந்தம் நிகழும் பூகம்பங்களின் எண்ணிக்கை கடந்த சில வருடங்களாக அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதனால் நடக்கும் பூகம்பங்களையும், அவற்றினால் ஏற்படும் சேதங்களையும் உடனுக்குடன் அறியத்தரும் வகையில் கூகிள் மப்ஸ் எனும் இணையத்தளம் இன்னொரு இணையத்தளத்துடன் இணைந்து செயற்படுகிறது. அவ்விணை யத்தளமானது வரைபடங்கள், நடுக்கத்தின் பருமனுடன், தேவையான அடிப்படைத் தகவல்களை உடனுக்குடன் தொகுத்து வழங்குகிறது.http://லீarthquakலீs.taஜீoni.nலீt எனும் முகவரியூடாக அவ்விணையத்தளத்தைப் பார்வையிட முடியும்.ஹெய்ட்டியின் பூகம்பம் மக்கள் மனதிலே ஏற்படுத்திய அதிர்வலைகள் ஓய்வதற்குள்ளேயே சிலி அருகே பசுபிக் பெருங்கடலில் பயங்கர நிலநடுக்கமொன்று ஏற்பட்டது.

சிலி, பெரு, ஈக்வடார் போன்ற நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. 8.8 ரிச்டர் அளவான இந்த நிலநடுக்கத்தால் ஏராளமான கட்டங்கள் இடிந்து விழுந்தன. பலர் உயிரிழந்தனர். கடலுக்கடியில் 59 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் சிலி நாட்டின் சகல நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டிருந்தன.

நடக்கும் பூமியதிர்ச்சிகளையும், அவற்றினால் ஏற்படும் அழிவுகளையும் ஆழ நோக்குகையில், தன்னை விஞ்சியவர் எவருமில்லை என்று வாழும் மனிதனுக்கு, மனித வாழ்வின் நிலையாமையை உணர்த்தும் இயற்கையின் செயற்பாடுகள் தான் இவையோ என்றும் எண்ணத்தோன்றுகிறது.

விஞ்ஞானத்தாலும் அதன் பயனால் உருவாக்கப்பட்ட அறி கருவிகளாலும் நிலநடுக்கங்களின் வருகையை எதிர்பார்த்து அறிவிக்க முடியுமே தவிர அவற்றைத் தடுக்க முடியாது. நிலநடுக்கம் இன்னும் மனித அறிவுக்கு அப்பாற்பட்ட, புதிராகவே காணப்படுகிறது.

எம்மால் செய்யக்கூடியது, ஏற்படும் சேதங்களைக் குறைத்தலும் இனியும் சேதங்கள் ஏற்படாமல் தவிர்த்தலுமேயாகும். பூகம்ப வலயத்தினுள் இருக்கும் ஜப்பான் ஏனைய நாடுகளுக்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறது.

ஜப்பானியர்களின் எளிமையான வாழ்க்கை முறையும், பூகம்பங்களையும் ஆழிப் பேரலையையும் எதிர்கொள்ளக்கூடிய வகையிலான கட்டட அமைப்புக்களும் ஏனைய நிர்மாணப்பணிகளும் தான் எத்தனை பேரழிவு நிகழ்ந்தாலும் ஜப்பான் மீள எழுவதற்குக் காரணமாகின்றன.

ஒவ்வொரு நாடும் தனது அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது அவை இயற்கையைப் பாதிக்காத வகையிலும் இயற்கை அனர்த்தங்களை எதிர்கொள்ளக்கூடிய வகையிலும் காணப்படுகின்றன என்பதை உறுதி செய்யவேண்டும். அத்துடன் அனர்த்த முகாமைத்துவத்திற்கான வலுவான கட்டமைப்புக்களையும் உருவாக்கி வைத்திருக்க வேண்டும்.

இயற்கையின் சீற்றம் எதிர்வு கூறப்பட முடியாதது. ஆறாவது அறிவாய்ப் பகுத்தறிவைப் பெற்று பரிணாம வளர்ச்சி கண்ட மனிதன் பொறுப்புணர்வுடன் நடந்தால் இயற்கையும் சீற்றம் கொள்ளாது அமைதி காக்குமென்பது நிதர்சனம்!