Sunday, July 24, 2011

நிலக்கரியின் முன்னே மதிப்பிழந்த தொல்லியல் சின்னம் மனா குகை

(அச்சு ஊடகத்தில் பிரசுரிக்கப்படவில்லை)
இன்று இந்தியாவின் மகாராஷ்ட்டிர மா நிலம் அதன் தலை நகர் மும்பையால் பிரபலம் பெற்றிருக்கிறது. ஆனால் ஒரு காலத்தில் பௌத்த சமயத்துக்கு புகலிடம் வழங்கியமையால் புகழ் பெற்றிருந்தது. வட இந்தியாவிலே (இன்றைய நேபாள பகுதி) தோன்றி இன்றைய பீகார் மா நிலத்தில் நிலை கொண்டிருந்த பௌத்தத்துக்கு மகாராஷ்டிர மா நிலமும் புகலிடம் வழங்கியது.

மகாராஷ்டிர மாநிலத்தின் பின் தங்கிய பகுதிகள் பௌத்த துறவிகளின் வாழ்வியல் பாங்குக்கு வசதியாக அமைந்திருந்தன. அவர்கள் அங்கேயே தங்கத் தலைப்பட்டனர். குகைகளிலே வாழ்ந்தார்கள். குகைகளைக் குடைந்து பௌத்த கோயில்களை அமைத்தார்கள். உலக மரபுரிமைச்சின்னங்களாகப் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கும் அஜந்தா , எல்லோரா குகைகளும் மகாராஷ்டிரா மா நிலத்திலேயே அமைந்திருக்கின்றன.

அத்தகைய பல குகைகளை அம்மா நிலத்திலே காணமுடியும். அவற்றிலே பௌத்த துறவிகள் வசித்து வந்த குகைகளுள் ஒரு தொகுதியாகக் கருதப்படுவது மனா குகைகளாகும். 2000 வருடங்கள் பழைமையான அக்குகைகள் நான்குமனிதர்களின் அலட்சியப்போக்கால் இடிந்து விழுந்துள்ளன. அதை அலட்சியப்போக்கு என்பதா? இல்லை இயற்கை வளம் மீது மனிதன் கொண்ட பேராசை என்பதா?

மகாராஷ்டிர மாநிலம் நிலக்கரிப்படிவுகளுக்குப் பெயர் போனது. அங்கே பாரியளவிலான நிலக்கரிப்படிவுகள் உள்ளன. தேசிய, சர்வதேச கம்பனிகள் ஒப்பந்தத்தின் மூலம் அவற்றின் உரிமத்தைப் பெற்று நிலக்கரி அகழ்வை மேற்கொள்கின்றன. இயற்கை தந்த வளத்துக்கான உரிமத்தை முனைப்புடன் பெற்று அகழ்வை மேற்கொள்ளும் அந்த நிறுவனங்கள் இந்த புராதன நினைவுச்சின்னங்களைப் பற்றிக் கவனத்தில் கொள்வதில்லை. இது தான் சந்திரபூர் மனா குகைகள் விடயத்திலும் நடந்திருக்கிறது.

ஓபென் காஸ்ட் மைன்ஸ் ஒஃப் வெஸ்டேர்ன் கோல் ஃபீல்ட்ஸ் (WCL)நிறுவனத்தின் தொடர் நிலக்கரி அகழ்கு நடவடிக்கைகளால் அக்குகைகள் இடிந்து விழுந்திருக்கின்றன. அவை இடிந்து விழுந்து சில நாட்களின் பின்னரே அச்சம்பவம் தொடர்பாக மக்கள் அறியத்தலைப்பட்டிருக்கின்றனர். அந்த குகைகள் இருக்கும் பகுதியுடன் கூடிய பெரிய நிலப்பகுதி WCL க்கு ஒதுக்கப்பட்டது.

2009 இலே சந்திரபூர் மாவட்ட கலெக்டராகவிருந்த பிரதீப் கல்பூர் என்பவர் WCL நிறுவனத்துக்கு கடிதமொன்றை அனுப்பியிருந்தார். அதாவது மனா குகைகள் இருக்கும் பகுதியிலே நிலக்கரி அகழ்வுகள் மேற்கொள்வதை உடனடியாக நிறுத்துமாறு அக்கடிதத்தில் அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால் அக்கடிதத்தை WCL நிறுவனம் சட்டை செய்ததாகத் தெரியவில்லை. வெடிபொருட்கள் மூலம் நிலக்கரி அகழ்வுகளை மேற்கொள்ளும் தன் பணியை தொடர்ந்தும் முனைப்புடன் செய்து வந்தது.

அக்குகைகள் இருக்கும் பகுதியில் ஒரு அனுமார் கோயிலும் இருந்தது. விஷ்வ ஹிந்து பரிஷத், பஜாரங் தால் போன்ற கட்சி/அமைப்புகளின் தலைவர்கள் மேற்கொண்ட பெரு முயற்சியால் கடந்த மார்ச் மாதமளவில் அக்கோயில் இடம்பெயர்க்கப்பட்டது. ஆயினும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த மனா குகைகள் மட்டும் புறக்கணிக்கப்பட்டன. கி.மு முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த குகைகளை பௌத்த துறவிகள் தியானம் செய்வதற்குப் பயன்படுத்தியதாக வரலாற்றுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்போது தான் குகைகள் அழிக்கப்பட்ட விடயம் அதிகார மட்டங்களுக்குத் தெரியப்படுத்தப்படுகிறது. இக்குகைகள் பாதுகாக்கப்பட வேண்டிய மரபுரிமைச்சின்னங்களின் பட்டியலில் உள்ளடக்கப்படவில்லை. ஆயினும் WCL நிறுவனத்துக்கு அக்குகைகளை அழிக்கும் அனுமதி அளிக்கப்பட்டிருக்கவில்லை என்கிறது தொல்லியல் திணைக்களம்.

அந்த நிறுவனம் அக்குகைகளை மீளமைக்க வேண்டும் அல்லது கொந்தளிக்கும் நிலையில் இருக்கும் பௌத்த மக்களின் மன உணர்வுகளை மதிக்கும் வகையிலே நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது தான் பொதுவான அபிப்பிராயமாக இருக்கிறது.

இக்குகைகள் அமைந்திருக்கும் நிலப்பகுதியின் கீழே 1.5 இலட்சம் மெற்றிக் தொன் நிலக்கரிப்படிவுகள் காணப்படுவதாக ஆய்ந்தறியப்பட்டமையே இக்குகைகள் அழிக்கப்படுவதற்கான காரணமாகும். WCL நிறுவனத்தைப் பொறுத்தவரையிலே அந்த 1.5 இலட்சம் மெற்றிக் தொன் நிலக்கரியின் பெறுமதியின் முன்னே 2000 ஆண்டுகள் பழைமையான குகைகள் மதிப்பிழந்து போயின போலும்.

நிலக்கரி என்பது தகனத்துக்குட்படுத்தப்படக்கூடிய கறுப்பு அல்லது கறுப்பு கலந்த செம்மண் நிறப் அடையற்பாறையாகும். இப்பாறைகள் நிலக்கரிப்படுக்கைகள் எனப்படும் படிவுகளாகக் காணப்படும். நிலக்கரியில் காணப்படும் பிரதான மூலகம் காபனாகும். அத்துடன் ஐதரசன் பெருமளவும் கந்தகம் , ஒட்சிசன், நைதரசன் போன்ற மூலகங்கள் சிறிதளவும் காணப்படுகின்றன.

உலகின் பிரதான சுவட்டு எரிபொருள் மூலம் இந்த நிலக்கரிப்படிவாகும். இப்படிவை அகழ்ந்து பாவனைக்குகந்த வகையிலே நிலக்கரியை மாற்றியமைத்து பல உற்பத்திக்கைத்தொழில்களில் சக்தி மூலமாகப் பயன்படுத்துகிறார்கள்.

நீர்ப்பரப்புக்குக் கீழே படியும் தாவரப் பகுதிகளே காலப்போக்கில் (பல நூற்றாண்டுகளின் பின்)நிலக்கரிப் படிவுகளாக மாறுகின்றன. கிரேக்க தேசத்தில் கி.மு நான்காம் நூற்றாண்டளாவிலேயே நிலக்கரியின் பாவனை அறியப்பட்டிருக்கிறது. நிலத்துக்குக் கீழே இருந்தும் அகழ முடியும் அதேவேளை நில மேற்பரப்பிலிருந்தும் பெற முடியும். எப்படிப் பெறுதல் என்பது நிலக்கரிப் படிவுகளின் தன்மைகளில் தங்கியிருக்கும். நிலக்கரியானது தற்போது எரிபொருளாக, வாயுவாக்கத்தின் மூலம் காபனோரொட்சைட்டு, ஐதரசன் வாயுக்கலவைகளைப் பெற, திரவமாக்கல் மூலம் காசொலைன், டீசல் போன்ற எரிபொருட்களைப் பெற, மற்றும் வேறுபல கலாசார, கைத்தொழில் தேவைகளுக்காக எனப் பல வழிகளிலே பயன்படுகிறது.

உலக சந்தை/ சர்வதேச வர்த்தகத்தைப் பொறுத்தவரையிலே ஒரு பிரதான பண்டமாகக் காணப்படுவதும் இந்த நிலக்கரியேயாகும். ஆயினும், நிலக்கரிப் பாவனையால் எதிர்மறையான பல விளைவுகள் ஏற்படுகின்றன. சுற்றுச்சூழலும் மக்களின் சுகாதாரமும் பெருமளவில் பாதிக்கப்படுகின்றன.

நிலக்கரி அகழ்வு என்பது ஒலிமாசைத் தோற்றுவிக்கும் செயற்பாடாகும். அல்லும் பகலும் மேற்கொள்ளப்படும் நிலக்கரி அகழ்வின்போது கேட்கும் சத்தம் மிகவும் அதிகமாக இருக்கும். இதனால் அயற்சூழலில் சமூகத்தவர் பெருமளவில் பாதிக்கப்படுவர். அவர்களின் வாழ்க்கைத்தரம் குறைவடையும் வாய்ப்பும் ஏற்படும். அத்துடன் அந்நிலை பல தசாப்தங்களுக்குத் தொடர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கல்ல.

காட்டுயிர்கள் அழிவடைந்து செல்ல நிலக்கரி அகழ்வு ஒரு காரணமாய் அமைந்துவிடும். ஏனெனில் அச்செயற்பாடு தொடரும் போது அப்பகுதியின் இயற்கைச் சூழல், தாவரங்களின் பரம்பல் போன்றன அழிக்கப்படும். அல்லது சீர்குலைக்கப்படும். அதனால் சூழல் தொகுதியின் சம நிலை பாதிக்கப்பட, காட்டுயிர்கள் அழியும் நிலையை அல்லது அந் நிலைக்கான அச்சுறுத்தலை எதிர் நோக்கும்.

நிலக்கரி அகழ்வால் தாவரங்களின் வாழ்வு மட்டுமன்றி மண் வளமும் பாதிப்புறும். மிகவும் வளமிக்கதாகக் கருதப்படுவது மேல் மண் இழக்கப்படும். புழுதிப்புயல், மண்ணரிப்பின் தாக்கம் அதிகமாக இருக்கும்.

நிலக்கரி அகழ்வு, தயார் படுத்தல் நடவடிக்கைகளின் போது பல மில்லியன் கலன்கள் நச்சுத்தன்மையான அரைத்திண்ம கழிவு உருவாகும். நிலக்கரி அகழப்படும் மலைகளுக்கு இடையில் அக்கழிவுகளுக்காக பாரிய தேக்கங்கள் அமைக்கப்படும். அந்த தேக்கங்கள் செயலிழக்கும் போது அக்கழிவுகள் பெருக்கெடுக்கும். அது பாரிய சுற்றுச்சூழல் அழிவைத் தோற்றுவிக்கும். கடந்த காலங்களிலே இத்தகைய பல சந்தர்ப்பங்கள் ஏற்பட்டிருக்கின்றன.
நிலக்கரி அகழ்வு, தயார்படுத்தல் நடவடிக்கைகளின் போது கிடைக்கும் அமிலத்தன்மையான கழுவு நீர் தனித் தேக்கங்களில் சேமிக்கப்படுகிறது. அது நிலத்தில் உட்புகுந்து நன்னீர் ஊற்றுக்களுடன் கலக்கும் சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன. இதனால் உள்ளூரிலே நீர் வி நியோகம் பாதிக்கப்ப்படும். அயற் சூழலிலிருக்கும் நீர் நிலைகளின் pH சம நிலை பாதிப்படையும்.

நிலக்கரி தகனமடையக்கூடியது. ஆதலால் நிலக்கரி அகழ்வு மேற்கொள்ளப்படும் பகுதிகளில் பாரிய தீ விபத்துகள் ஏற்படும் அபாயம் மிக அதிகமாகும். ஒரு நிலக்கரிப் படுக்கையில் தீ ஏற்பட்டால் அது சில வருடங்களுக்கோ அல்லது சில தசாப்தங்களுக்கோ கூட நீடிக்கலாம், அத்துடன் அவ்வாறு தீப்பற்றி எரியும் போது நைதரசன் சேர்வை வாயுக்கள் வளிமண்டலத்துக்கு வெளிவிடப்படும்.

நிலக்கரி மட்டுமன்றி, அதன் கழிவுகளும் மிகுந்த நச்சுத்தன்மையானவை. அவை பார . உலோகங்களான பாதரசம், ஈயம், ஆசனிக் போன்றவற்றைக் கொண்டிருக்கும்,. இவை தாவர, விலங்குயிர்களுக்கும் நச்சுத்தன்மையானவை.
நிலக்கரி அகழ்வு மேற்கொள்ளப்படும் பகுதிகளில் அமில மழை ஏற்படுவதற்கான அபாயம் மிகவும் அதிகமாகவே காணப்படுகிறது. நீரின் ஆவியாதல், ஒடுங்குதல் செயற்பாடுகளில் அமிலக்கழிவின் தாக்கம் காணப்படும். விளைவு அமில மழையாகும்.

நிலக்கரியில் யுரேனியம் , ரேடியம் போன்ற கதிர்த்தொழிற்பாட்டு மூலகங்கள் மிகவும் சிறிய அளவிலே காணப்படுகின்றன. அவை கதிர்த்தொழிற்பாட்டுக் கழிவுகள் உருவாகக் காரணமாகிவிடும். சுகாதர சீர்கேடுகளும் உருவாகும்.

இன்று நாம் எதிர் நோக்கும் பிரதான சுற்றுச் சூழல் பிரச்சினைகளில் ஒன்று கால நிலை மாற்றமாகும். நிலக்கரி அகழ்வும் கால நிலை மாற்றத்தைத் தோற்றுவிக்கும் காரணியாகவே இருக்கிறது. நிலக்கரி அகழ்வு நடவடிக்கைகளால் மெதேன் வாயு பெருமளவில் வெளியேற்றப்படுகிறது. ஒசோன் படலத்தை அரிப்படையச்செய்யும் பச்சையில்ல வாயுக்களுள் மெதேனும் ஒன்றாகும். தொழிற்சாலைகளில் சக்தி மூலமாக நிலக்கரியைப் பயன்படுத்தும் போது காபனீரொட்சைட்டு வெளிவிடப்படுகிறது. புவி வெப்பமாவதற்கு பங்களிப்பைச்செலுத்தும் பிரதான வாயு காபனீரொட்சைட்டு என்பதும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் நிலக்கரி அகழ்வின் போது உருவாகும் கழிவுகளால், புற்று நோய், சுவாசப் பிரச்சினைகளும் ஏற்படத்தான் செய்கின்றன.

உலகளாவிய ரீதியிலே நிலக்கரி அகழ்வுகள் மேற்கொள்ளப்படும் பல பிரதேசங்கள் தொன்மை வாய்ந்தவையாக இருக்கின்றன. ஆதலால் அப்பகுதிகளில் காணப்படும் தொல்லியல், மரபுரிமைச்சின்னங்கள் பாரிய அச்சுறுத்தலை எதிர் நோக்கியிருக்கின்றன. அத்தகைய பல சின்னங்கள் ஒருவருக்கும் தெரியாமலே அழிந்தும் போயிருக்கின்றன. இது தான் மனா குகைகளுக்கு நேர்ந்த கதியாகவும் இருக்கிறது.

பல நூற்றாண்டுகாலமாகப் படிந்த நிலக்கரியை ஒரு சில நாட்களிலேயே அகழ்ந்து பணமாக்கிக் கொள்ள முயலும் பேராசை பிடித்த மனிதர்கள் எதற்காக தொல்லியல் சின்னங்களைப் பற்றி கவலைப்படப்போகிறார்கள்? என்றே எண்ணத்தோன்றுகிறது.


Tuesday, July 19, 2011

ஓர் ஊடக சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சி?

உனது கைத்தடியைச் சுழற்ற உனக்கு முழு உரிமை உள்ளது. ஆனால் அந்த உரிமை அடுத்தவரின் மூக்கு நுனி வரை மட்டுமே என்ற ஒரு சொல் வழக்கு ஆங்கிலத்தில் உண்டு. வீதியில் நடந்தபடி ஒருவர் சுழற்றிய கைத்தடி அருகே சென்றவரின் மூக்கு நுனியைப் பதம் பார்த்து விட்டது. பாதிக்கப்பட்டவர் நீதிமன்றத்தில் கைத்தடியைச் சுற்றியவர் மீது வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணைக்கு வந்தது. ‘எனது கைத்தடியை நான் சுழற்ற எனக்கு உரிமையில்லையா? என்று சுழற்றியவர் நீதிமன்றத்தில் வாதிட்டார். அதற்கு நீதிபதி அளித்த தீர்ப்பு தான் இப்படி ஒரு சொல் வழக்கு உருவான கதை. இப்படித்தான் சுதந்திரம் வரையறுக்கப்படுகிறது.
இது யாவருக்கும் பொருந்தும். அப்படி இருக்கையில் பத்திரிகைகள் ஒன்றும் விதிவிலக்கல்லவே. ஊடகம் என்பதற்காக சமூக பொறுப்புணர்வின்றி யாவற்றையுமே வெளியிட வேண்டும் என்று ஒரு நாளும் கருத முடியாது. இது ஒட்டுக்கேட்டலுக்கும் பொருந்தும்.
ஒட்டுக்கேட்டல் என்பது இப்போது சகஜமாகிவிட்டது. ஆசியாவிலேயே மிகவும் மோசமான ஊழல் என வர்ணிக்கப்படும் தென்னிந்தியாவின் 2 ஜி அலைக்கற்றை மோசடி அம்பலமானதற்குக் கூட, சில தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்பட்டமையே பிரதான காரணமாகும்.
ஒரு நாட்டின் பாதுகாப்பு, பொதுமக்களின் நன்மை என்ற காரணங்களைக் கருதும் போது இந்த ஒற்றுக் கேட்டல்களை நியாயப்படுத்தலாம். அவற்றைத் தவிர ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது. அத்துடன் தனி நபர்களின் சுதந்திரத்தில், அந்தரங்கத்தில் தலையிட வழிவகுக்கும் ஒற்றுக்கேட்டல்களை இம்மியளவேனும் நியாயப்படுத்த முடியாது.
இந்த ஒட்டுக்கேட்டல் செயற்பாடு தான் 165 ஆண்டுகளாக வெளிவந்த பத்திரிகையொன்றுக்கு மூடுவிழாவையும் நடத்தியிருக்கிறது. இப்போது இந்த ஒற்றுக்கேட்டல் செயற்பாடு எத்துணை பாரதூரமானது என்று புரிகிறதா? பிரித்தானியாவின் பாரம்பரிய பத்திரிகையான ‘த நியூஸ் ஒஃப் தெ வேர்ல்ட்’ கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது கடைசி இதழை வெளியிட்டு அச்சு ஊடகத் துறையிலிருந்து பிரியாவிடை பெற்றது.
இன்றைய இலத்திரனியல், தகவல் தொழில் நுட்ப காலத்திலே 168 வருடங்களுக்கு முன்னர் (01.10.1843) ஆரம்பிக்கப்பட்ட பத்திரிகையொன்று நிலைத்து நிற்பதென்பது இலகுவான காரியமல்ல. அதை ‘த நியூஸ் ஒஃப் தெ வேர்ல்ட்’ சாதித்துக் காட்டியது. பொதுவாக பத்திரிகையொன்று அச்சு ஊடகத் துறையிலிருந்து வெளியேறுகிறதெனின், டிஜிட்டல் உலகிலே எதிர் நீச்சல் போட முடியாமல் பணத்தை இழந்துபோவதே அதற்குரிய பிரதான காரணமாக இருக்கும். ஆனால் மிகவும் பிரபலமான, அதிக இலாபத்தில் நடத்தப்பட்ட ‘த நியூஸ் ஒஃப் தெ வேர்ல்ட்’ பத்திரிகையைப் பொறுத்த வரையில் விதி வேறுவிதமாக விளையாடியது.
உரிமையாளரைக் காப்பாற்ற வேண்டும். அவரது சாம்ராஜ்யத்தின் ஏனய பிரிவுகளுக்கு எந்த வித பங்கம் ஏற்பட்டுவிடக் கூடாது என்ற காரணங்களுக்காகத் தன்னை மாய்த்துக் கொண்டது. ‘த நியூஸ் ஒஃப் தெ வேர்ல்ட்’ இந்தப் பத்திரிகையை நெள (NOW)  என்று சுருக்கமாக அழைப்பர்.
நெள வின் கடைசி வெளியீடும் அது தனது வாசகர்களுக்குக் கூறியிருந்த செய்தியும் மனதை உருக்கும் விதமாக அமைந்திருந்தது. ‘நன்றி சென்று வருகிறோம்’ (THANK YOU & GOOD BYE) என்ற கருத்தை வெளிப்படுத்தும் வகையிலே அதன் முதல் பக்கம் வடிவமைக்கப்பட்டிருந்தது.
உள்ளே ‘நாங்கள் உயர்ந்த தரத்தைப் பேணி வந்திருக்கிறோம். ஆனால் 2006 இலிருந்து கடந்த சில ஆண்டுகளாக எமக்காகப் பணி புரிந்தோர் அல்லது எமது பெயரால் தொழிற்பட்டவர்கள் அந்த தரத்தைப் பேணவில்லை என்பதை நாம் மிகுந்த வருத்தத்துடன் அறியப்பெற்றோம். இதுவரை காலமும் பேணி வரப்பட்ட எம் பத்திரிகையின் தரம் வீழ்ச்சியடைந்தமைக்காக நாம் வெட்கப்படுகிறோம். நாம் சென்று கொண்டிருந்த பாதையிலிருந்து விலகி விட்டோம் தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்பட்டிருக்கின்றன. அதற்காக பத்திரிகையின் சார்பில் மன்னிப்புக் கோருகிறோம் என மிகவும் உருக்கமாக நீண்டு சென்றது ஆசிரியத் தலையங்கம்.
தொலைபேசி ஒட்டுக் கேட்புகள், அவற்றிற்காக அரச அதிகாரிகளுக்கும் பொலிசாருக்கும் கொடுத்த இலஞ்சங்கள் என இப்பத்திரிகையின் ஊடகவியலாளர்கள் மீது பெருங் குற்றங்கள் சுமத்தப்பட்டிருக்கின்றன.
தொழில் நுட்ப வளர்ச்சிகள் மிகவும் மந்த கதியில் இருந்த ஒரு காலகட்டத்திலே (1843) பத்திரிகையொன்றை ஆரம்பித்து நடத்துவதென்பது எவ்வளவு சிரமமான காரியம் தெரியுமா? ஆனால் அந்த மூலகர்த்தாக்கள் மனம் தளரவில்லை. தாம் கண்ட தடைக் கற்களையெல்லாம் படிக்கற்களாக்கி எண்ணற்ற மணி நேரங்களைச் செலவழித்து பிரித்தானிய அச்சு ஊடகத்துறையில் வலுவாகக் கால் ஊன்றினர்கள். அந்தக் காலத்துப் பத்திரிகைகள் மேல்வர்க்கத்தவரான பணக்காரரை மட்டுமே இலக்காகக் கொண்டு ஆச்சிடப்பட்டன. ஆனால் நெள பத்திரிகையோ உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்துக்காக ஆரம்பிக்கப்பட்டது. அக்காலத்தில் மிகவும் மலிவான பத்திரிகையாகவும் காணப்பட்டது.
காலப் போக்கில் புலனாய்வு அறிக்கையிடல் என்ற உன்னத பாரம்பரியத்தைக் கொண்ட பத்திரிகையாகப் பரிணமித்தது. இது ஒரு வாராந்தப் பத்திரிகையாகும். ஆரம்பகாலத்தில் ஒவ்வொரு வாரமும் ஏறத்தாழ 12,000 பிரதிகள் வரை விற்பனையாகின. காலப்போக்கில் 1912 அளவிலே அதன் விற்பனை 2 மில்லியன் பிரதிகளாகி 1939 இல் 4 மில்லியன் பிரதிகளாகியது. 1950 களில் உலகிலேயே அதிகளவு விற்பனையாகும் பத்திரிகை (9 மில்லியன் பிரதிகள்) என்ற சாதனையையும் நிலை நாட்டியது.
1969 இலே அவுஸ்திரேலியரான மேர்டொக் இப்பத்திரிகைக்கு விலை பேசினார். முடிவில் உரிமையாளருமானார். பாலியல் குற்றச்சாட்டுக்கள், விளையாட்டு, குற்றவியல் போன்ற விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக இப்பத்திரிகை மாற்றப்பட்டது. குறிப்பாக 2006 களின் பின் பல பிரபலங்களின் அந்தரங்கங்கள் இப்பத்திரிகையின் முன் பக்கத் தலையங்கமாயின. அட்டைப் படங்களாயின. அவற்றில் பெரும்பாலானவை சர்ச்சைகளுக்குள்ளாயின.
அதேவேளை இப்பத்திரிகையால் மேற்கொள்ளப்பட்ட புலனாய்வுகளுக்காக விருதுகள் பலவும் கிடைக்கப் பெற்றிருக்கின்றன. ஆனால் பிற்காலத்தில் தொழில் நுட்பங்கள் கண்ட அபரிமித வளர்ச்சி பத்திரிகை கொண்டிருந்த பாரம்பரியமிக்க புலனாய்வு அறிக்கையிடலின் போக்கை மாற்றியது.
ஊடகவியலாளர் சிலர் பொலிசாருக்கு இலஞ்சம் கொடுத்து பிரபலங்களினதும் முக்கிய நபர்களினதும் தொலைபேசி உரையாடல்களை ஒற்றுக்கேட்டனர். பொலிசார் வழங்கிய சேவைக்காக அவர்களுக்கு வழங்கப்பட்ட இலஞ்சத் தொகை ஒரு இலட்சம் ஸ்ரேலிங் பவுண்டுகளை வரை சென்றது. பலர் முறையீடு செய்தனர். பிரச்சினை பெரிதாகியது.
நெள பத்திரிகையின் தலைவரான மேர்டொக் ஒன்றும் சாதாரணமானவரல்ல ஊடக சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தி என அழைக்கப்படுபவர். பிரித்தானியாவில் இயங்கும் நியூஸ் கோப்பரேஷனின் தலைவர். அந்த நிறுவனத்தின் கீழ் உள்ள வலையமைப்பில் பல பிரபல ஊடக நிறுவனங்கள் காணப்படுகின்றன. இந்தக் குழுமத்திலே லண்டனின் டைம்ஸ் பத்திரிகை, த சண் பத்திரிகை, ஸ்கை தொலைக்காட்சி நிறுவனம் போன்றவையும் காணப்படுகின்றன.
அவுஸ்திரேலியாவைத் தொடர்ந்து பிரித்தானியா, அமெரிக்கா, ஆசியா என இவரது வலை விரிந்துள்ளது. அமெரிக்காவின் பிரபலமான பொக்ஸ் பிரோட்காஸ்டிங் கம்பெனி, சென் ஆன்டோனியா எக்ஸ்பிரஸ் நியூஸ்’ ‘ஸ்டார்’, ‘சூப்பர் மார்க்கெட்’, ‘நியூயோர்க் போஸ்ட்’, ‘வால் ஸ்டிரீட் ஜேர்னல்’ மற்றும் அவுஸ்திரேலியாவின் 146 பத்திரிகைகள் என இவரது வலை விரிகிறது.
கடந்த 1993 ஆம் ஆண்டில் ‘ஸ்டார் தொலைக்காட்சியை வாங்கினார். இதன் மூலம் ஆசிய நாடுகளில் காலடி எடுத்து வைத்தார். ஆசியா முழுவதும் ஸ்டார் தொலைக்காட்சி மூலம் ஆதிக்கம் செலுத்திய மேர்டோக்கால், சீனாவில் பெரியளவில் காலடி பதிக்க முடியவில்லை. காரணம் சீன அரசு பல கட்டுப்பாடுகளை விதித்தமையேயாகும்.
நெள பத்திரிகை மீதான ஒற்றுக்கேட்புக் குற்றச்சாட்டுக்கள் அதிகரித்துச் செல்லத் தொடங்கின சர்ச்சைகள் நாடாளுமன்றம் வரை தொடர்ந்தன. பலர் கைது செய்யப்படும் அபாய நிலை தோன்றியது. அந்த நேரம் தலைமை ஒரு அதிரடி முடிவை எடுத்தது. அத்துணை பாரம்பரியமிக்க பத்திரிகையை மூடிவிடத் தீர்மானித்து கடைசி வெளியிடு கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியானது. அதன் தலையங்கமே பார்ப்போர் மனதை உருக்கும் வகையில் அச்சிடப்பட்டிருந்தது. கடைசிப் பதிப்புடன் கடந்த காலங்களில் வெளியாகிய முக்கியமான கட்டுரைகளை உள்ளடக்கிய 48 பக்க இணைப்பிதழும் சேர்த்து வெளியிடப்பட்டது. வழக்கத்தை விடவும் கூடுதலான பிரதிகளை முகவர்கள் கோரியிருந்தனர். கடைசி இதழின் விற்பனை வழக்கத்தை விட அதிகமாகவே இருந்த. அந்த விற்பனையால் கிடைக்கும் இலாபம் மூன்று சமூக சேவை அமைப்புகளுக்கிடையே பகிர்ந்தளிக்கப்படும் என கடைசிப் பதிப்பிலே உறுதியும் அளிக்கப்பட்டிருந்தது.
கடைசிப் பதிப்பை அச்சிட்ட பின்னர் அப்பத்திரிகைக்காக வேலை செய்த 200 ஊடகவியலாளர்களும் ஒருவரையொருவர் ஆரத்தழுவிக் கொண்டனர். இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். கனத்த மனதுடன் விடை பெற்றனர்.
பத்திரிகையின் மூடு விழாவையடுத்து தொலைபேசி ஒட்டுக்கேட்புக் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய ஊடகவியலாளர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களின் ஏழாவது நபராக ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக ஸ்கொட்லந்து யார்ட் கவால்துறை அறிவித்திருக்கிறது. கைதுசெய்யப்பட்ட நபர் 60 வயதானவர் என்றும் தற்போது அவர் காவல்துறை நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்றும் லண்டன் காவல்துறையினர் தெரிவித்தனர்.
அந்த நபரின் பெயரை வெளியிட காவல்துறையினர் முதலில் மறுத்துவிட்டனர். பின்னர் அந்த நபர் நியூஸ் ஒப் த வேர்ல்ட் பத்திரிகையின் நிறைவேற்று ஆசிரியர் நீல் வாலிஸ் என்று தெரிவிக்கப்பட்டது. 2003 ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்ட ஆசிரியர் அன்டி கூல்ஸன் என்ற ஆசிரியரின் கீழ் பணியாற்றி வந்தார் என்றும் 2007 இல் நிறைவேற்று ஆசிரியராக நியமிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அன்டிகூல்ஸன் ஏற்கெனவே கைதுசெய்யப்பட்டு விட்டார். இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமரூன், இதில் பல காலமாக அலட்சியப்படுத்தப்பட்டு வந்த ஒரு பரந்துபட்ட பிரச்சினை இருப்பதைத் தான் புரிந்து கொண்டிருப்பதாகக் கருத்து வெளியிட்டுள்ளார். தான் இதில் ஒரு பிரச்சினை இருக்கிறது என்பதை புரிந்து கொண்டது மட்டுமல்லாமல், அது குறித்து இரண்டு விசாரணைகளை அறிவிப்பதன் மூலம், தான் நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகவும் கமரூன் கூறினார். ஆனால், அன்டி கூல்சனை தனது மக்கள் தொடர்பு இயக்குநராக நியமிக்க எடுத்த முடிவுக்கு வருத்தம் தெரிவிப்பதைத் தவிர்த்தார் கமரூன்.
மேர்டொக்கின் ஊடாக சாம்ராஜ்யத்துடன் எல்லா அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்களும் நெருங்கிய தொடர்புகளை வைத்திருந்தாலும், இந்த விவகாரத்தில் ஒரு நல்ல சந்தர்ப்பம் தனக்கு வாய்த்திருப்பதாகவே தற்போதைய எதிர்க்கட்சியான, தொழிற்கட்சியின் தலைவர் எட் மிலிபாண்ட் நினைக்கிறார். இந்த விவகாரத்தை பிரதமர் சரியாகப் புரிந்துகொள்ளவேயில்லை. என்று கூறும் மிலிபாண்ட் இந்த விவகாரத்தின் விளைவாக ஒரு பெரும் மாற்றம் விளைந்திருக்கிறது என்கிறார்.
நியூஸ் கோப்பரேஷன் நிறுவனத்தின் தாய் நிறுவனம் அமெரிக்காவைச் சேர்ந்தது. ஆதலால் இந்த விசாரணைக் களத்தில் அமெரிக்காவும் இறங்கிவிட்டது. அமெரிக்காவில் கடந்த 2001 ஆம் ஆண்டு செப்டெம்பர் 11 ஆம் திகதி நியூயோர்க் நகரில் உள்ள இரட்டை கோபுரம், அல்கைதா பயங்கரவாத அமைப்பினரால் தகர்க்கப்பட்டது. இது தொடர்பான அமெரிக்காவின் பலவேறு கட்ட விசாரணைகளை, நியூஸ் கார்ப்ரேசன் எனும் செய்தி நிறுவனம் ஒட்டு கேட்டதாக அமெரிக்க அமுலாக்கத் துறையினர் புகார் தெரிவித்ததைத் தொடர்ந்தே அமெரிக்காவும் விசாரணையை முடுக்கியுள்ளது. பிரபலங்கள் மட்டுமல்லாமல், மிகவும் வருத்தத்திலிருந்த, மிகவும் பலவீனமான நிலையில் இருந்த சாதாரண பொதுமக்களின் தொலைபேசிகளும் ஒட்டுக் கேட்கப்பட்டன என்ற உண்மை தெரிய வந்த கடந்த வாரத்தில், இந்த விவகாரத்தில் பரபரப்பான திருப்பங்கள் ஏற்பட்டன. ஆனால் இந்த கதை இன்னும் முடிந்துவிடவில்லை. தொடர் கதையாக நீண்டு செல்கிறது. பொலிஸ் விசாரணைகள் மிகவும் உச்ச கட்டத்தில் இருப்பதையே இந்த சமீபத்திய கைதுகள் காட்டுகின்றன. நீண்ட இரண்டு விசாரணைகள் நடக்க இருக்கின்றன. மக்கள் நலனுக்கு முக்கியத்துவம் வழங்கும் பிரித்தானியாவில் தன் திடீர் முடிவால் 200 தொழிலாளர்களின் வேலைவாய்ப்பைப் பறித்துள்ளார். மேர்டொக் இது எவ்வளவு பெரிய பிரச்சினையாக உருவெடுக்கும் என்பதை எதிர்வுகூற முடியவில்லை. அதேவேளை பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் வெளிவந்து கொண்டிருந்த நெள பத்திரிகையின் இடத்தை தெ சண் பத்திரிகை நிரப்பும் என நம்பப்படுகிறது. மேர்டோக்கின் ஊடக சாம்ராஜ்யத்தின் எதிர்காலம் குறித்து ஏராளமான விவாதங்கள் நடக்கின்றன. விளைவுகள் அந்த ஊடக சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சிக்கு வித்திடப் போகின்றனவா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
தமக்குக் கிடைத்த சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்த முயலும் ஊடகங்களுக்கு நெள பத்திரிகையின் கதை ஒரு சிறந்த படிப்பினையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

Tuesday, July 12, 2011

தங்கம்....வெள்ளி....வைடூரியம்.... நிஜ உலகில் கண்ட மாயலோகம்

 
இந்தியாவிலே இறைவனுக்குச் சொந்தமான நிலம் எனப்போற்றப்படுவது கேரள மா நிலம். அதை சேர நாடு என்று பாடுகிறார் பாரதியார். புராதன சேர மன்னர் வம்சத்தின் வழியிலே வந்தவர்கள் ஆட்சிசெய்த இராசதானியை வேணாடு என்பர். இந்த சிறிய வேணாடு இராசதானியே பிற்காலத்தில் த்ருவாங்கூர் சமஸ்தானமாகப் பரிணமித்தது என்கிறது வரலாறு. அப்படிப் பரிணமித்தது மட்டுமன்றி அது காலங்காலமாக நிலைத்தும் நின்றது.
திருவாங்கூர் சமஸ்தானத்து மன்னர்கள் விஷ்ணுவாகிய ஸ்ரீபத்ம நாபன் மீது எல்லை கடந்த பக்தி கொண்டவர்கள். ஸ்ரீ பத் ம நாபனே தமது சமஸ்தானத்தின் அரசன் எனவும் தம்மை ஸ்ரீ பத்ம நாபனின் சேவகர்கள் எனவும் வரித்தனர். ஆதலால் தம்மை ஸ்ரீ பத்ம நாப தாசர்களாகக்  கருதியே ஆட்சி புரிந்தும் வந்தனர்.  அதனால் தான் திருவாங்கூர் சமஸ்தானத்தின் தலை நகராக இருந்த கற்குளமும் பத்ம நாப புரம் எனப் பெயர் மாற்றஞ்செய்யப்பட்டது. திருவனந்தபுரத்திலே அவர்களது குலதெய்வமான ஸ்ரீ பத்ம நாபனுக்கு கோயில் அமைத்தும் வழிபட்டனர்.
மன்னர்களாயினும் திருவாங்கூர் சமஸ்தான அரசர்களின் எளிமையை அவர்களது அரண்மனை எடுத்தியம்பும். அரண்மனை என்றவுடனே மனக்கண்ணில் விரியும் மாட மாளிகைகளையும் கூட கோபுரங்களையும் அங்கே காண முடியாது. அரண்மனை என்பது ஆடம்பரமல்ல என்பதை கேரளத்துக்கே உரித்தான பாணியில் சொல்கிறது பத்ம நாபபுரம் அரண்மனை.

அரண்மனை எளிமையாக இருக்கிறது என்பதற்காக, திருவாங்கூர் சமஸ்தானத்தின் செல்வத்தைக் குறைத்து மதிப்பிட முடியாது. அதைத்தான் ஸ்ரீபத்ம நாபன் கோயிலின் பாதாள அறைக்குள் இருந்து கண்டெடுக்கப்பட்ட ஒரு இலட்சம் கோடி இந்திய ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியுடைய புதையலும் சொல்லாமல் சொல்கிறது. இந்தியாவில் அரச குடும்பங்களின் பராமரிப்பில் இருந்த கோவில் செல்வங்கள் அந் நியரால் கொள்ளையடிக்கப்பட்டதும், பல்வேறு வழிகளில் அக்குடும்பங்களால் செலவழிக்கப்பட்டதும் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், கடந்த 200 ஆண்டுகளுக்கும் மேலாகப் பூட்டி வைக்கப்பட்டுள்ள இந்த அறைகளில் இருந்து ஒரு குண்டுமணி அளவுகூட காணாமல் போகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இதற்கு, பத்மநாப சுவாமி மீது அரச குடும்பம் கொண்டுள்ள ஆழ்ந்த பக்தி தான் காரணம் என, மக்கள் கருதுகின்றனர்.கி.பி., 13ம் நூற்றாண்டில், மாலிக்கபூர் படையெடுப்பு நடந்த போது, பாண்டிய மன்னராக இருந்த வீரபாண்டியன் வலுவற்று தோல்வி அடைந்ததால், கோயில்களில் இரகசிய அறைகள் ஏற்படுத்தி பாதுகாப்பை அதிகப்படுத்தியதாக வரலாறு கூறுகிறது.

இந்த ஸ்ரீ பத்ம நாபசுவாமி கோயில் திருவனந்த புரம் கோட்டைக்குள் அமைந்திருக்கிறது. இது வைணவர்கள் போற்றும் 108 திவ்ய தேசங்களுள் ஒன்றாகும். அதே வேளை கேரளாவில் புகழ்பெற்ற ஏழு பரசுராம க்ஷேத்திரங்களிலும் ஒன்றாகும். இக்கோயிலின் வரலாறு கி.பி 8 ஆம் நூற்றாண்டிலிருந்து ஆரம்பிக்கிறது. இருப்பினும் சரித்திரச் சான்றுகள் என, கி.பி., 1375க்கு, பிறகு தான் உள்ளது. ஐதீகங்களின்படி, கோவிலில் உள்ள அனந்தசயனத்தில் காட்சி அளிக்கும் பத்மநாப சுவாமி மூலவரை, திவாகரமுனி என்பவர் பிரதிஷ்டை செய்ததாக ஒரு தகவலும், வில்வமங்கல சுவாமி தான் மூலவரை பிரதிஷ்டை செய்ததாக மற்றொரு தகவலும் தெரிவிக்கிறது.
இது தவிர, 10ம் நூற்றாண்டில் இப்பகுதியை ஆண்ட மன்னர்கள் தான் இக்கோவிலை எழுப்பியதாக தகவல்கள் உள்ளன. இக்கோயில்கள் குறித்து பல்வேறு தகவல்கள், "மதிலகம் ஆவணங்கள்' என்ற பதிவேடுகளில் தான் நிறைய உள்ளன. இதில், கோயில் நிர்வாகம், உற்சவங்கள், சட்டத் திட்டங்கள், உரிமை கோரும் விவாதங்கள், சடங்குகள், ஆராட்டு, பள்ளி வேட்டை, கொள்ளை, கோயிலுக்கு கிடைக்கப் பெற்ற பரிசுகள் என, பல தகவல்களும் அடங்கியுள்ளன. தவறு செய்தவர்களிடம் இருந்து அபராதமாகவும், வெளியே இருந்து சுவாமிக்கு தானமாக கிடைக்கப் பெற்ற அதிகளவு தங்க நகைகள், யானைகள் என பலவும் அக்காலம் தொட்டே கிடைக்கத் தொடங்கியுள்ளது எனவும் சான்றுகள் மூலம் தெரிய வந்துள்ளது.
இக்கோயிலில் இருந்து கொள்ளை போன பல பொருட்கள் மீண்டும் கிடைத்துள்ளன. இக்கோயிலின் சொத்துகளை, பிள்ளைமார் என அழைக்கப்பட்ட ஒரு பிரிவினர் தான் நிர்வகித்து வந்துள்ளனர். கோயில் நிர்வாகத்தை, சபா என்ற அமைப்பு கவனித்து வந்தது. இதில் இவ்விரு பிரிவினரும், கோயிலுக்கு உரிமையாளரான மன்னரும் தனித்தனியே பிரிந்து கலகத்தில் ஈடுபட்டனர்.இவ்வரிய வாய்ப்பை அங்கு வியாபாரத்திற்காக வந்திறங்கிய ஐரோப்பாவைச் சேர்ந்தவர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டனர்.
அப்போது, கொச்சியை தலைமையிடமாகக் கொண்டு ஒல்லாந்தர் ஆட்சி செய்து வந்தனர். இந்நிலையில் தான் அதிவீரனும், சிறந்த புத்திசாலியுமான மார்த்தாண்ட வர்மா, 1729ம் ஆண்டு திருவிதாங்கூர் பகுதியில் ஆட்சி பொறுப்பேற்றார்.
எதிரிகளை வீழ்த்தி, கோவில் நிர்வாகத்தில் இருந்து வந்த கலகங்களை அடக்கி ஒடுக்கினார். இதையடுத்து, போரிட வந்த ஒல்லாந்தர்களை குளச்சல் போர் மூலம் மார்த்தாண்ட வர்மா விரட்டினார். வேணாடு என்ற சிறிய பகுதியை கொச்சி வரை விரிவாக்கவும் செய்து, திருவிதாங்கூர் என்ற பெரிய நாட்டை உருவாக்கினார். தான் போர் மூலம் மீட்டெடுத்த பகுதிகளை, பத்மநாப சுவாமிக்கு அர்ப்பணம் செய்தார்.
அந்நிகழ்ச்சி, "திருப்படி தானம்' என்ற சடங்காக அன்று முதல் கோயிலில் தொடங்கியது. 1880 - 1885ம் ஆண்டுகளில் திருவிதாங்கூர் பகுதியில் கடும் பஞ்சம் தலைதூக்கியபோது, மன்னராக இருந்த விசாகம் திருநாள் மகாராஜா, கோவிலில் இருந்து சில பொருட்களை எடுத்து விற்றுவிட்டதாக பலர் கூறி வந்தாலும், அது குறித்த எந்தவொரு ஆதாரமும் இல்லை. இக்கோவிலில் பூமிக்கடியில் உள்ள ஆறு அறைகளில் தான் தற்போது கணக்கெடுக்கும் பணிகள் நடந்து வருகின்றன. 
 தற்போது காணப்படும் கோபுரமும் ஆலயமும் மன்னர் மார்த்தாண்டவர்மாவால் (1729-1758) கட்டப்பட்டவை.
மன்னர் மார்த்தாண்டவர்மாவின் காலத்தை திருவாங்கூர் சமஸ்தானத்தின் பொற்காலம் என்பர். அவர் திருவாங்கூர் சமஸ்தான மன்னர்களுள் இராஜதந்திர ரீதியாகவும் பலம் வாய்ந்தவராகக் கருதப்பட்டார். தம் சமஸ்தான மன்னர்களை ஸ்ரீ பத்மநாபதாசர்களாகப் பிரகடனப்படுத்தியவரும் அவரே. அதன் பின்னர்தான் திருவாங்கூர் சமஸ்தானமே ஸ்ரீ பத்ம நாபனின் உடைமை என்ற கொள்கை வலுப்பெற்றது எனலாம்.
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கூட திருவாங்கூர் சமஸ்தான மன்னர்கள் அவர்களுடன் அனுசரித்து வாழத் தலைப்பட்டனர். ஆங்கிலேயர் கேட்ட வரிகளையும், கப்பங்களையும் தயக்கமின்றிக்  கொடுத்தனர். ஆதலால் தான் அவர்களது சசெல்வம் அந் நிய ஆட்சியாளர்களால் கொள்ளையடிக்கப்படவில்லையோ என்றும் எண்ணத்தோன்றுகிறது.
ஆங்கிலேயர் ஆட்சிக்காலம் வரை நிலைத்திருந்த சமஸ்தானங்கள் சுதந்திரத்தின் பின் இந்திய அரசுடன் இணைக்கப்பட்டன. அதற்கு திருவாங்கூர் சமஸ்தானமும் விதிவிலக்கல்ல. சமஸ்தானம் எப்போது அரசுக்குச் சொந்தமானதோ அப்போதே அதன் அறியப்படாத உடைமைகளும் அரசுக்குச்சொந்தமானவையாகின்றன என்கிறது சட்டம்.
ஸ்ரீ பத்ம னாப சுவாமி கோயிலைப் பொறுத்த வரையிலே திருவாங்கூர்  சமஸ்தானத்தின் அரசபரம்பரையினரே காலங்காலமாக சேவை புரிந்து வருகின்றனர். பிற்காலத்தில் அறக்கட்டளையை நிறுவி நிர்வகித்தும் வருகின்றனர்.  இக்கோயிலிலே ஆறு பாதாள அறைகள் இருக்கின்றன. அவை பல நூற்றாண்டுகளாகத் திறக்கப்படவில்லை. அந்த இரகசிய அறைகளைத் திறக்கக் கோரி உச்ச நீதி மன்றிலே பொது நல வழக்க்ன்று தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றுஅந்த இரகசிய அறைகளைத் திறப்பதற்கு குழுவொன்றை நியமித்தது.அக்குழுவில் முன்னாள் நீதிபதியொருவர்  உட்பட ஏழு பேர் அடங்கியிருக்கின்றனர். அவர்களுள் இருவர் அரச குடும்பத்தைச் சேர்ந்தவராவார்.  உச்ச நீதிமன்றம் குழுவை நியமித்ததோடு மட்டும் நின்று விடவில்லை.மா நில அரசு கோயிலை எடுத்துக்கொள்ளவும் தடை விதித்தது.
உச்ச  நீதிமன்றத்தின் ஆணைப்படி கடந்த ஜூன் மாதம் 27 ஆம் திகதி பாதாள அறைகளைத் திறகும் பை ஆரம்பமாகியது. பூட்டிக்கிடந்த  ஆறு பாதாள அறைகளில் ஐந்து அறைகள் திறக்கப்பட்டன. அவற்றிலே சேமிக்கப்பட்டிருந்த பொக்கிஷங்களைக் கணக்கெடுக்கும் பணியும்  நடந்தது. அறையைத் திறந்த குழு ஆச்சரியமடைந்தது. தேக்கு மரத்திலான பெட்டிகள் பல காணப்பட்டன. அவற்றைத் திறந்த போது  நாணயங்கள், நகைகள், ஆபரணங்கள், கற்கள் பதித்த கிரீடங்கள், தாம்பாளங்கள், விளக்குகள், வழிபாட்டுப் பொருட்கள், பல்வேறு பாரம்பரிய, கலை நயம் மிக்க பொருட்கள் என தங்கம் ஜொலித்தது.  அங்கே தங்கத்திலான பொருட்கள் மட்டும் காணாப்படவில்லை. வி லைமதிப்பில்லாத வைர வைடூரியக் கற்கள், அவை பதிக்கப்பட்ட பொருட்கள், வெள்ளியாலான பொருட்கள், கற்கள் பதிக்கப்பட்ட தங்கத்திலான சுவாமி சிலைகள் ஆகியனவும் கண்டெடுக்கப்பட்டன.
அவை யாவுமே திருவாங்கூர் சமஸ்தானத்தால் கோயிலுக்கு வழங்கப்பட்டவையாகும். வேற்று நில மன்னர்களால் திருவாங்கூர் மன்னர்களுக்கு வழங்கப்பட்ட பரிசுப்பொருட்களும் அவற்றில் அடங்குகின்றன.
நான்கடி உயரமுள்ள, தங்கத்தால் ஆன விஷ்ணு சிலை மற்றும் பல்வேறு சிலைகள், 18 அடி நீள தங்க மாலை என, காலத்தால் மதிப்பிட முடியாத பழமையான பொருட்கள் இந்த அறைகளில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன.அதே நேரம், திருவிதாங்கூர் மன்னர் ஆட்சியில் இருந்த போது, அப்போதைய விஜயநகரப் பேரரசுடன் கொண்டிருந்த வர்த்தகத் தொடர்பால், விஜயநகர காலத்து நாணயங்களும் இந்த அறைகளில் கிடைத்துள்ளன. நீண்ட காலமாக மன்னர்கள், மக்களுக்கு விதிக்கும் அபராதம் இக்கோயிலில் தங்க ஆபரணங்களாகச் சேர்க்கப்படுவது வழக்கம். கோவில் பொருளை எவரும் திருட முற்பட்டதில்லை என்பதும் இங்கேயுள்ள தனிச்சிறப்பாகும். அளவு, நிறை ஆகியவற்றை பதிவு செய்து எண்கள் போடப்பட்டு பதிவு செய்யப்பட்ட கோயில் பொருட்களின் பலவற்றிலும் மேல்பகுதியில் மலையாள எழுத்துகளும், வட்டெழுத்து போன்று தோன்றுகின்ற எழுத்துகளும் செதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இது கோயில் பொருட்கள் பண்டைகாலத்திலேயே இதுபோன்று பதிவேடுகளில் பதிவு செய்திருக்கப்பட வேண்டும் என்பதையே காட்டுவதாக கூறப்படுகிறது. பின்னர் அந்த பதிவேடுகள் தொலைந்து போயிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
அக்குழுவில் இருந்த முன்னாள் நீதிபதிகளுள் ஒருவர் ஊடகங்களுக்குக் கருத்துத்தெரிவிக்கையில், பாதாள அறைகளைத் திறந்து பொக்கிஷங்களைப் பார்வையிட்டபோது தனக்கு ஒரு மாய லோகத்தினுள் நிற்பது போன்ற உணர்வு ஏற்பட்டதாகக் கூறியிருந்தார்.
இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட புதையலின் மதிப்பு ஒரு இலட்சம் கோடி ரூபாவையும் தாண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது. சொத்துக்கணக்கு அறிக்கையைக் கையளிக்குமாறு இக்குழுக்கு  உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஐந்து அறைகளைத் திறந்து கணக்கெடுப்பபை மேற்கொண்ட குழுவால் ஆறாவது அறையை மட்டும் திறக்கவே முடியவில்லை. அந்த அறையைத் திறப்பது தொடர்பான முடிவை உச்ச நீதிமன்றம் எதிர்வரும் 14 ஆம் திகதி எடுக்கும் அனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் இந்தக் கணக்கெடுப்புகளைக் காணொளியில் பதியுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் அதை அரச குடும்பத்தினர் விரும்பவில்லை. ஆறாவது அறையும் திறக்கப்பட்டு அதற்குள்ளிருக்கும் பொக்கிஷங்களும் கணக்கெடுக்கப்பட்டால் தான் சொத்துக்களின் உண்மை விபரம் வெளிவருமெனலாம்.

இவ்வளவு காலமும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கோயிலாக மட்டுமே பார்க்கப்பட்டு வந்த திருவனந்தபுரம் ஸ்ரீ பத்ம நாப சுவாமி கோயில் தற்போது இந்தியாவின் பணக்காரக் கோயில்களில் ஒன்றாக மாறியிருக்கிறது. இவையெல்லாம் இப்படியிருக்க, கோயிலினுள் கண்டெடுக்கப்பட்டிருக்கும் இப்பெரும் பொக்கிஷத்தை யார் பொறுப்பெடுப்பது, எதற்குப் பயன்படுத்துவது எனப் பல்வேறு சர்ச்சைகள் தோன்றியுள்ளனர். அவை ஒருபுறமென்றால் மறு புறமோ கோயிலைச் சுற்றி பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
கோயிலைச் சுற்றி 500 மீற்றர் சுற்றுவட்டத்தை சிறப்பு பாதுகாப்பு மண்டலமாகப் பிரகடனப்படுத்த பொலிஸ் தரப்பில் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதேவேளை கோயிலின் அயற்சூழலில் நிலத்தைத் தோண்டுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒரு இலட்சம் கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களைப் பல்வேறு அபிவிருத்தித் தேவைகளுக்குப் பயன்படுத்தலாம் என்கின்றனர் ஒரு சாரார். இவை யாவும் கோயிலிலேயே பாதுகாக்கப்பட வேண்டும் என்கின்றனர் ஆன்மீக வாதிகள். இந்தச்செல்வங்கள் இந்திய அரசின் கருவூலத்திலே சேர்க்கப்பட வேண்டும் எங்கின்றனர் மற்றொரு தரப்பினர். ஆலயத்துக்குள்ளேயே அருங்காட்சியகமொன்றை உருவாக்கி அவற்றை அங்கேயே வைத்துப் பாதுகாக்கவேண்டும் என்கின்றனர் தொல்லியல் துறையினர்.
இந்த கோயிலிலே கண்டெடுக்கப்பட்டிருக்கும் புதையல் மக்களின் சொத்தாகும். ஆதலால் அது மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். மத்திய அரசும் அரச குடும்பமும் இணைந்து இந்த சொத்தை எப்படி அபிவிருத்தித்தேவைகளுக்குப் பயன்படுத்தலாம் எனக் கலந்தாலோசிக்க வேண்டும் என்கிறார் அரசியல்வாதி சி.திவாகரன்.
இந்த சொத்துக்கள் யாவும் அருங்காட்சியகத்தில் வைத்துப் பேணப்படவேண்டும் என ஒரு பக்தர்கள் தரப்பும் கோயிலுக்கே உரியவையாதலால் கோயிலிலேயே வைத்துப் பேணப்பட வேண்டுமென மற்றைய தரப்பும் வாதிடுகிறது.
அரசியல் உலகிலே தம்மைப் பாதுகாத்த்துக்கொள்ளும் அடிப்படை நோக்கத்தில் இருக்கும் அரசியல் வாதிகளோ இந்த சொத்துக்கள் யாவும் கோயிலிலேயே இருக்கவேண்டுமெனவும் மத்திய, மா நில அரசுகள் கோயிலுக்கு போதிய பாதுகாப்பை வழங்க வேண்டுமெனவும் கோருகின்றனர்.
அன்றைய திருவாங்கூர் சமஸ்தானம் ஏற்றுமதியில் பிரசித்தி பெற்றிருந்தது.இந்த புதையல் எல்லாம் வெறுமனே வாசனை திரவியங்களை ஏற்றுமதி செய்ததால் கிடைத்த செல்வம் மட்டுமல்ல. மக்கள் மன்னருக்கு அளித்த வரியுடன் மன்னருக்கு பல்வேறு தரப்பினரும் வழங்கிய பரிசுப்பொருட்களையும் உள்ளடக்குகின்றன.
ஆதலால் அவை உள்ளூர்ச் சந்தையிலே விற்கப்படவேண்டும். அவ்வாறு விற்கப்பட்டுப் பெறப்படும் நிதி கேரள மக்களின் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக நல மேம்பாட்டிற்குப் பயன்பட அவெண்டும் எங்கின்றனர் சில சமூக ஆர்வலர்கள்.
“இந்த பொக்கிஷங்கள் யாவுமே பல நூற்றாண்டுகாலம் பழைமையானவை. அவற்றை ஆய்வு செய்தால் பல வரலாற்றுத் தகவல்கள் கிடைக்கும். ஆதலால் மற்றவர்கள் கூறுவதுபோல் அவற்றை அழித்து அபிவிருத்தித் தேவைகளுக்குப் பயன்படுத்துவதென்பது சிந்திக்க அவெண்டிய விடயம்” என்கின்றனர் வரலாற்றாய்வாளர்கள்.
இந்த பொக்கிஷங்களை சமூக , சமய நலத் தேவைகளுக்குப் பயன்படுத்துவதில் தமக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என திருவாங்கூர் அரச வம்சத்தினரில் தலைமைப் பொறுப்பை வகிக்கும் வேணுகோபால் என்ற சட்டத்தரணி தெரிவித்திருக்கிறார்.
இந்த சொத்துக்கள் யாவும் கோயிலுக்கு மட்டுமே சொந்தமானவை என அறிக்கை வெளியிட்டிருக்கிறார் கேரள முதலமைச்சர் உம்மன் சாண்டி
இந்தியாவிலே புராதன கோயில் சொத்தைப் பொதுமக்கள் சொத்தாக்குவது சட்ட ரீதியாகத் தடைசெய்யப்பட்டுள்ளதென்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த ஒரு இலட்சம் கோடி ரூபா புதையல் செய்தியால் இன்னும் பல கோயில்களில் இருக்கும் திறக்கப்படாத அறைகள் எல்லாம் திரக்கப்படும் என்பது நிதர்சனம். தற்போதே மதுரை திருமலை நாயக்கர் மகால், ஸ்ரீ ரங்கம் கோயில் ஆகியவற்றிலும் புதையல்கள் இருக்கலாமமென ஊடகங்கள் ஊகங்களை வெளியிட்டிருக்கின்றன.சிதம்பரம் நடராஜர் கோயிலின் சொத்துக்களை கொள்ளையடிக்க நவாப் வரப்போகிறான் என எண்ணி பொக்கிஷங்கள் பலவற்றை திருவாரூர்க் கோயிலேலே பேணியிருக்கிறார்கள் என்றும் நம்பப்படுகிரது. ஆதலால் இங்கும் பொக்கிஷங்கள் இருக்கலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
ஸ்ரீ பத்ம நாபன் கோயிலில் கண்டெடுக்கப்பட்டிருக்கும் புதையலைக் கண்டு முழு உலகுமே பிரமித்துப் போய் நிற்கின்றது. வெளி நாட்டு ஊடகங்கள் கோயிலை நோக்கிப் படையெடுத்தபடி இருக்கின்றன. வறுமைக் கோட்டுக்குக் கீழ இருப்போரை அதிகளவில் கொண்டிருக்கும் வளர்முக நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அப்படிப்பட்ட ஒரு நாட்டிலே உள்ள கோயிலில் ஒரு இலட்சம் கோடி பணம் என்பது வரலாறு தெரியாத பலருக்கும் ஆச்சரியமாகத் தான் இருக்கும்.
தென்னிந்தியாவின் வரலாறு மிகவும் புராதனமானது. அது மட்டுமன்றி புராதன கால நாகரிகங்கள் கண்டிருந்த வளர்ச்சி வார்த்தைகளால் விபரிக்க முடியாதது. முப்பெரு மன்னர்களான சேர சோழ பாண்டியர்களின் ஆட்சியின்  கீழ்  இருந்த தேசம் அது. சோழ ஆட்சி உச்சத்திலிருந்த போது, கிழக்குலகின் பெரும்பான்மை  நாடுகள் அதன் வசம் இருந்தன. தமது பெயர் காலங்காலமாக நிலைக்க வேண்டுமாயின் கோயிற்திருப்பணிகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்பது தென்னக மன்னர்கள் கொண்டிருந்த போக்காக அமைந்தது. விளைவு தென்னிந்தியா முழுவதும் கோயில்களால் நிறைந்தது.மன்னர்கள் தமது காலத்துக்கே உரித்தான முறையில், பல சந்ததிகளுக்கும் நீடித்து நிலைக்கக் கூடியவாறு கோயில்களைக் கட்டினர். அக்கோயில்களுக்காக பாதாள அறைகளிலே பொக்கிஷங்களையும் சேமித்து வைத்தனர். ஆனால் காலப்போக்கில் தென்னிந்தியாவில் தொடர்ந்த அந் நிய ஆக்கிரமிப்புக்களின் விளைவால் அவை கொள்ளையடித்துச் செல்லப்பட்டன. மக்களோ தமக்கே உரித்தான அரும்பெரும் சொத்துக்களைப் பாதுகாக்க முடியாதவர்களாக அறியாமை இருளி லே மூழ்கிக் கிடந்தனர்.
அந்தப் பேரரசுகளுடன் ஒப்பிடும் போது திருவாங்கூர் சமஸ்தானம் என்பது மிகவும் சிறியது எனலாம். அச்சிறிய சமஸ்தானம் கோயிலுக்காக வழங்கிய பொக்கிஷங்களின் பெறுமதியே ஒரு இலட்சம் கோடி ரூபாவைத் தாண்டுகிறது என்றால் பேரரசுகள் தென்னிந்தியக் கோயில்களுக்கு வழங்கியிருந்த பொக்கிஷங்களின் அளவைக் கற்பனை பண்ணியாவது பார்க்க முடிகிறதா?
அத்தனை பொக்கிஷங்களையும் அளவு கணக்கின்றிக் கொள்ளையடித்துச் சென்ற மேற்குலகு இன்று இந்தியாவையே ஆளுகிறது. இதுதான் காலம் கற்றுக்கொடுத்திருக்கும் பாடமோ என்றும் எண்ணத்தோன்றுகிறது.
இந்த பொக்கிஷங்கள் காலங்காலமாகப் பேணப்படவேண்டியவை. அவ்வாறு பேணப்பட்டமையால் தான் இன்றைய உலகு அவை பற்றித் தெரிந்திருக்கிறது. அவற்றை நாம் அழித்து முடித்துவிட்டால் நாளைய சந்ததிக்கு அவை கிடைக்காமலே போய்விடும். இப்படியெல்லாம் இருந்தன என ஏடுகளிலே மட்டும் வாசிக்கும் துர்ப்பாக்கிய நிலைக்கு எம் எதிர்கால சந்ததி தள்ளப்படும். இத்தகைய பொக்கிஷங்கள் யாவுமே நிலையான வைப்பை ஒத்தவை. ஆதலால் அவை அப்படியே பாதுகாக்கப்பட்டு எதிர்கால சந்ததியின் கையில் ஒப்படைக்கப்பட வேண்டும் என்பதே காலத்தின் தேவை. ஆயினும் அந்த முடிவை மேற்கொள்ளும் அதிகாரம் உச்ச நீதி மன்றின் கைகளிலேயே விடப்பட்டிருக்கிறது.


ஒரு இலட்சம் கோடிக்குள்  இ வையும் அடக்கம்
 • ·          1000 கிலோ கிராம் நிறையுடைய தங்க நாணயங்கள். அவற்றுள் சில நெப்போலிய மன்னனின் காலத்தவை
 • ·          ஒரு சாக்கு நிறைய வைரக் கற்கள்
 • ·          ஒரு தொன்னுக்கும் அதிகமான  நெல் மணிகளை ஒத்த தங்கம்
 • ·          வைர, வைடூரிய, ரூபி கற்கள் பதித்த அரிய விஷ்ணு சிலை. அதில் நேபாளத்திலிருந்து கொண்டுவரப்பட்ட சாளக்கிராமக் கற்களும் பதிக்கப்பட்டிருக்கின்றன
 • ·          18 அடிகள் உயரமான 35 கிலோ கிராம் நிறையுடைய ஆபரணம்
 • ·          தங்கக் கயிறுகள்
 • ·          கிழக்கிந்தியக் கம்பனியின் காலத்து நாணயங்கள்
 • ·          தங்கப் பாத்திரங்கள்
 • ·          சாக்கு மூடைகளில் கட்டப்பட்டிருக்கும் ஆபரணங்கள், கிரீடங்கள்
 • ·          மரகதமும் ரூபியும் பதிக்கப்பட்ட இரண்டு தங்கச் சிரட்டைகள்
 
ஒரு இலட்சம் கோடி இந்திய ரூபா என்பது
 • ·          290 சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளை அமைத்து நிர்வகிக்க உதவும்
 • ·          டில்லி, பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய 3 மா நிலங்களின் வரவுசெலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டுக்குச் சமனானது
 • ·          இந்திய ரயில்வே துறையின் வருடாந்த மொத்த வருவாயை விட அதிகமானது
 • ·          நேரு விளையாட்டரங்கை ஒத்த 400 விளையாட்டரங்குகளை அமைக்க உதவும்
 • ·          இந்தியாவிலே  14,000 கிலோ மீற்றர்  நீளமான தேசிய பெருந்தெருக்களை அமைக்க உதவும்
 • ·          கேரள மா நிலத்தின் மீது சுமத்தப்பட்டிருக்கும் கடனின் மூன்றரை மடங்காகும்
Wednesday, July 6, 2011

கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்!அது 2009 ஆம் ஆண்டு. 6 இத்தாலிய புவி விஞ்ஞானிகள் மீது பெருங்குற்றம் ஒன்று சுமத்தப்பட்டது. அதாவது அவர்களுக்கு லாகுயில்லா(L'Aquila) பகுதியில் நடந்த நில நடுக்கத்தை எதிர்வு கூறமுடியாமல் போய் விட்டதாம். அதுவே அந்தக் குற்றச்சாட்டு.

அவர்களுடன், அரச அதிகாரி ஒருவரையும் சேர்த்து 7 பேர் மீதும் மனிதரைக் கொலை செய்த குர்றத்துக்காக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.உண்மையில் பூமியதிர்ச்சியை எதிர்வு கூற முடியாது. விஞ்ஞானிகள் செய்வது என்னவென்றால்,

தமக்கு கிடைக்கும் தரவுகளின் அடிப்படையில் பூமியதிர்ச்சி நிகழ்வதற்கான சாத்தியப்பாடுகளை ( நிகழ்தகவை) கணிப்பார்கள். அவர்களுக்குக் கிடைக்கும் தரவுகளின் உண்மைத் தன்மையைப்பொறுத்து அவர்களது கணிப்பும் துல்லியமாக இருக்கும். அந்த நிகழ்தகவு மாறுபடலாம். ஆதலால் துல்லியமான உண்மைத்தன்மையான தரவுகளே அவசியமாகும்.

2009 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இத்தாலியில் ஏற்பட்ட லாகுயில்லா பூமியதிர்ச்சியால், 309 பேர் கொல்லப்பட்டனர். பூமியதிர்ச்சி ஏற்படப்போவதை எதிர்வுகூறாத விஞ்ஞானிகளும் ஒரு அரச அதிகாரியும் கொலைக்குற்றம் சாட்டப்பட்டனர்.

இத்தாலியானது புவித்தட்டுக்களின் எல்லைப்பகுதியிலே அமைந்திருக்கிறது. காலங்காலமாக இத்தாலிக்கும் பூமியதிர்ச்சிக்கும் இருக்கும் தொடர்பை அந் நாட்டின் வரலாறு சொல்லும். இத்தாலி மட்டுமல்ல.. சிலியாகட்டும். ஜப்பானாகட்டும். அந்த நாடுகள் எல்லாமே, பூமியதிர்ச்சி அபாயம் உள்ள வலயத்திலேயே அமைந்திருக்கின்றன. பூமியதிர்ச்சியால் அந் நாட்டு மக்கள் பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருக்கிறார்கள். அப்படி இருக்கும் பகுதிகள்/நாடுகளுக்கு மாறாக வேறு சில பகுதிகள் வலயங்கள் இருக்கின்றன.

சில இடங்களில் கண்டத்தட்டுக்கள் ஒன்றுக்குள் ஒன்று கொழுவுப்பட்டுக் காணப்படும். அவ்வாறு இருந்தால் பூமியதிர்ச்சி அபாயம் இல்லை என்று அர்த்தமில்லை. சில நூற்றாண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பாரிய பூமியதிர்ச்சிக்கான ஆயத்தங்கள் தூங்கு நிலையில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன என்றே அர்த்தப்படும். கனடாவி, மேற்குக் கடற்கரைப்பகுதி இதற்கு மிகச்சிறந்த உதாரணமாகும். அங்கே வட அமெரிக்கக் கண்டத்தட்டும் பசுபிக் சமுத்திரத் தட்டும் ஒன்றுடனொன்று கொழுவுப்பட்டுக் காணப்படுகின்றன.

2008/2009 காலப்பகுதியிலே இத்தாலியில் அப்ருசோ பகுதியில் தொடர்ந்து சிறிய நில நடுக்கங்கள் ஏற்பட்டன. பெரிய நில நடுக்கங்கள் ஏற்படலாமோ என்ற அச்சம் நிலவியது. 2009 மார்ச் 31 ஆம் திகதி அபாயக் குழுவினர் கூடி ஆராய்ந்தனர். அக்குழுவிலே இந்த கொலைக்குற்றம் சாட்டப்பட்ட 7 பேரும் இருந்தனர். கூட்டத்தின் முடிவில் விஞ்ஞானிகள் தமது முடிவை அறிவித்தனர். தொடர்ந்து ஏற்பட்ட சிறிய நில நடுக்கங்கள் அதிகரித்துள்ள நிலையில் ஒரு பெரிய நில நடுக்கம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றனவா இல்லையா என்பது பற்றிக் கண்டறிவதற்கு எந்த ஒரு வி ஞ்ஞான அடிப்படையும் இல்லை என்பதே விஞ்ஞானிகளின் முடிவாக இருந்தது. அவர்களுடன் கூட இருந்த அரச அதிகாரி, உடனடியாகவே பத்திரிகையாளர் மா நாட்டைக் கூட்டினார். அவர் பத்திரிகையாளர்களிடம் கூறியதோ வேறு விதமாக இருந்தது. "நில நடுக்க அபாயம் இல்லை என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இது எமக்கு சாதகமானதே" என்றார் பேர்னடோ என்றஅந்த அதிகாரி.

பாமர மக்களைப் பொறுத்தவரையிலே விஞ்ஞானிகள் குழுவாகட்டும் அரச அதிகாரியாகட்டும். இரு தரப்பினது கூற்றுமே ஒரு மாதிரியாக இருக்கலாம். ஆனால் விஞ்ஞானிகளைப் பொறுத்தவரையில் நிலைமை அப்படியல்ல. விஞ்ஞானிகள் சொன்னது பெரும் பூமியதிர்ச்சி நிகழுமா? நிகழாதா? என்று கூறுவதற்குத் தம்மிடம் எந்த ஒரு ஆதாரங்களும் இல்லை என்பதாகும். ஆனால் பொது மக்களுக்கு வழங்கப்பட்ட செய்தியோ பூமியதிர்ச்சி அபாயம் அதிகரிக்கவில்லை என்பதாகும். சற்று சிந்தித்துப் பாருங்கள்..இங்கு யாரை குற்றம் சொல்வது?

விஞ்ஞானம் 100 சதவீதம் உண்மையானது என்று எவராலும் அறுதியிட்டுக் கூற முடியாது. விஞ்ஞான முடிவுகள் பல கருதுகோள்களின் அடிப்படையிலும் நிகழ்தகவுகளின் அடிப்படையிலுமே மேற்கொள்ளப்படுகின்றன. அப்படி இருக்கையில் இயற்கையாய் நடக்கும் ஒரு நிகழ்வை விஞ்ஞானத்தால் ஒருபோதும் முழுமையாக எதிர்வு கூற முடியாது. மாறாக அந்த நிகழ்வு நடப்பதற்கான சாத்தியப்பாடுகளை ஆராய முடியும். அதுவும் பூமியதிர்ச்சியை ஒருபோதும் அறுதியிட்டுக் கூறமுடியாது.

இத்தாலியில் நடந்த அந்த சம்பவத்தின் அடிப்படையே தொடர்பாடல் எனலாம். ஏனெனில் விஞ்ஞானிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையில் இருக்கும் தொடர்பாடல் இடைவெளி என்பது மிகவும் பெரியது. அங்கே அரச அதிகாரி விஞ்ஞானிகளின் கருத்தை ஊடகங்களுக்குச் சொல்வதற்கு முயற்சி செய்தார். ஆனால் அவர் கருத்தை மாற்றிவிட்டார் என்றே தெரிகிறது. பல சந்தர்ப்பங்களில் விஞ்ஞானிகளின் கருத்துக்களை பொதுமக்களுக்குத் தெரிவிக்கும் தரப்பினர் விஞ்ஞானிகளாக இருக்க மாட்டார்கள். அத்தரப்பினருள் ஊடகவியலாளர்களும் அடங்குவர். அப்படியிருக்கையில் பல தடைவைகள் அறிக்கையிடுபவரால் விஞ்ஞானம் பிழையாக விளங்கப்பட்டு விடும்.

இங்கு விஞ்ஞானிகளையோ ஊடகங்கள்/அறிக்கையிடுபவர்களையோ மட்டும் குற்றஞ்சாட்ட முடியாது. பொதுமக்களில் ஒரு பகுதியினருக்கு அடிப்படை விஞ்ஞானத்தை விளங்கிக்கொள்ளும் பக்குவம் இருக்காது. ஆதலால் விஞ்ஞானத் தகவல்களைப் புரிந்து கொள்ளும் ஆற்றலும் குறைவாகவே காணப்படும். விஞ்ஞானிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்துக்கொண்டே செல்வதற்கு இது தான் காரணமாகிறது. ஆதலால் தான் விஞ்ஞானிகளுக்கும் பொது மக்களுக்கும் இடையில் ஊடகவியலாளர்களோ மக்கள் நல உத்தியோகத்தர்களோ நிற்க வேண்டிய தேவை ஏற்படுகிறது.

அத்துடன் ஊடகவியலாளர்களுக்கு இருக்கும் பெரிய பிரச்சினை, விஞ்ஞானிகள் கூறுவதை இலகுபடுத்தி யாவருக்கும் விளங்கக் கூடிய வகையிலே அறிக்கையிடுவதாகும். அப்படி அறிக்கையிட முயலும் போது பல வேளைகளில் விஞ்ஞானிகள் கூறும் கருத்தின் துல்லியத்தன்மை இழக்கப்பட்டு விடும். சில வேளைகளில் வேண்டுமென்றோ அல்லது தவறுதலாவோ அது நடைபெற்றுவிடும். இது தான் இத்தாலியிலும் நடந்தது.

அதற்காகத்தான் இயற்கை அனர்த்தங்கள் குறித்து தவறாக அறிக்கையிடுவது தண்டனைக்குரிய குற்றமென இலங்கையிலும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஒரு இயற்கை அனர்த்தம் ஏற்படுவதற்கான அபாயம் தொடர்பாக விஞ்ஞானிகள் கொண்டிருக்கும் அறிவு பற்றி பொதுமக்களுக்கு தெளிவான முறையில் எடுத்துக்கூறப்படுவதில்லை

அதே நேரம் இயற்கை அனர்த்தங்கள் தொடர்பான உள்ளார்ந்த அறிவைப் பெற்றுக்கொள்ளும் தேவையும் பொதுமக்கள் மத்தியில் அதிகளவில் காணப்படுவதில்லை எனலாம். இயற்கை அனர்த்தங்கள் தொடர்பிலான அபாயமும் அத்தகைய நிலை ஒன்று ஏற்பட்டால் எடுத்துக்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகளும் பற்றி பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டிருக்க வேண்டும். அதற்கு இயற்கை அனர்த்தங்களின் அடிப்படை அவசியமாகிறது.

மக்கள் மத்தியில் தேவையில்லாத பீதியை ஏற்படுத்த எவருமே முனைவதில்லை. ஏனெனில் அது தேசிய, பிராந்திய ரீதியில் பல விடயங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும். ஓ நாய் ஒ நாய் என்று பொய்க்குக் கத்தி கடைசியில் உண்மையிலேயே ஒ நாய் வந்த போது எவரும் உதவிக்குச் செல்லாத இடையனின் கதையை அறிந்திருப்போம். அந்த ஈசாப்பின் கதை சொல்லும் நீதி இயற்கை அனர்த்தங்களுக்கும் பொருத்தமாகவிருக்கும்.

விஞ்ஞானத்தகவல்களை பொதுமக்களுக்கு சரியான முறையிலே வழங்குவதில் பல சவால்களை எதிர் நோக்க வேண்டியிருப்பது உண்மை தான். இத்தாலியில் அத்தகைய தகவல் வழங்கியவருக்குத் தண்டனை கொடுத்தமை என்பது எவ்வளவு தூரம் நியாயமான செயல் என்பது தெரியவில்லை. அது அந்த சவால்களுக்கான தீர்வாக அமையாது. அதே வேளை தகவல் வழங்குபவர்கள் எதிர் நோக்கும் சவால்களை அதிகப்படுத்தும்.

இத்தாலியில் நடந்த சம்பவத்தைப் பொறுத்தவரையிலே பொதுமக்களுக்குச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கிலே தகவலை வழங்கியவர் ஒரு விஞ் ஞானியல்ல. இந்த சம்பவம் ஒரு பெரும் பாடத்தை எமக்கு உணர்த்துகிறது. அந்த விஞ்ஞானிகளுள் பேச்சாளராகத் தொழிற்பட்டவர் அந்தத் தகவலை ஊடகவியலாளர்களுக்குச் சொல்லியிருக்கலாம்.

அதே வேளை அச் சம்பவத்துக்காக 6 விஞ் ஞானிகள் மீது சுமத்தப்பட்டிருக்கும் கொலைக் குற்றமானது, ஒரு எதிர்மறையான விளைவைத் தோற்றுவித்திருக்கிறது. விஞ் ஞானிகள் பொது மக்கள் தரப்பிலே தமது ஆய்வு முடிவுகளை வெளியிடுவதற்கோ அல்லது தகவல்களைத் தெரிவிப்பதற்கோ அஞ்சுவார்கள். விருப்பப்பட மாட்டார்கள்.

பொதுமக்களுக்குப் பயன்படாத விஞ் ஞான ஆய்வுகளின் பயன் தான் என்ன? இப்படி எத்தனை வருட உழைப்புகள் வீணடிக்கப்பட்டிருக்கின்றன தெரியுமா?

விஞ்ஞான ஆய்வுகள் என்பவை ஒரு சில நாட்களுடனோ ஒரு சில மாதங் களுடனோ முடிந்து விடுபவை அல்ல. பல வருடங்களாக, ஏன் சில தசாப் தங்களாகக்கூட ஒரே ஆய்வுகள் நடந்தபடி இருக்கின்றன. அவற்றுள் எத்தனையோ விஞ்ஞானிகளின் இரவு பகல் பாராத உழைப்பும் நேரமும் அடங்கியிருக்கின்றன. இத்தகைய ஆய்வுகள் முடிவடைந்து அவற்றின் முடிவுகள் அங்கீகரிக்கப்பட்டுப்பின் விஞ்ஞான சஞ்சிகைகளில் வெளியிடப்பட மிகவும் நீண்ட காலம் எடுக்கும். அத்துடன் விஞ்ஞான சஞ்சிகைகள் ஒரு குறிப்பிட்ட படித்தவர்க்கத்தினரை மட்டுமே சென்றடைகின்றன.
இதனால் மிகவும் முக்கியமான, யாவராலும் அறியப்பட வேண்டிய பல விடயங்கள் சாதாரண பொதுமக்களைச் சென்றடைவதில்லை. அதற்கு பலரும் பலவிதமான நியாயப் பாடுகளை முன்வைக்கின்றனர். விஞ் ஞானமெனப்படுவது யாவருக்கும் பொதுவான விடயமாகக் கருதப்பட்டாலும் விஞ்ஞான மொழியைத் தெரிந்தவர்களால் மட்டுமே அதனைத் தெளிவாகப் புரிந்து கொள்ளக்கூடியதான ஒரு நிலையே இன்று காணப்படுகிறது.

விஞ்ஞானத்தால் கண்டுபிடிக்கப்படும், எதிர் கூறப்படும் விடயங்களின் பயனாளிகள் சாதாரண பொதுமக்களேயாகையால், விஞ்ஞானம் கூறும் விடயங்கள் எளிமைப்படுத்தப்பட்டு தொடர்பாடல் ஊடகங்கள் மூலம் பொதுமக்களைச் சென்றடைய வேண்டும். இதையே தொடர்பாடல் விஞ்ஞானம் என்பர்.

இயற்கை அனர்த்தம் தொடர்பிலான அறிவு கிடைக்கப்பெறுமானால் அதன் முக்கிய பயனாளிகள் பொது மக்களே. ஏனெனில் இயற்கை அனர்த்தம் ஒன்று ஏற்பட்டால் முதலில் மட்டுமன்றி நேரடியாகவும் பாதிக்கப் படப்போவது அவர்கள் தான்.

ஆனால் அந்த முக்கிய பங்காளிகளை விஞ்ஞான ஆய்வுகள் சென்றடைவதற்கு வெகுசனத் தொடர்பு ஊடகங்களின் அர்ப்பணிப்பும் ஆர்வமும் மிக முக்கியமானது.சிக்கலான விடயங்களை பாமரருக்கும் விளங்கக்கூடிய வகையிலே வெளிப்படுத்தும் திறன் எல்லா விஞ்ஞா னிகளிடமும் காணப்படாது. அதேசமயம் சில சிறந்த ஊடகவியலா ளர்களால் கூட விஞ்ஞானம் தொடர்பான விடயங்களைத் தமது ஊடகங்களில் தெளிவாக வெளிப்படுத்த முடியாமல் போகும். இந்நிலையில் தான், சிக்கலான விடயங்களையும் தெளிவாக விளக்கக்கூடிய விஞ்ஞான ஆர்வலர்களின் தேவை அவசியமாகிறது.

பெரியளவிலான பொருட் செலவுடன் பல வருடங்களாகத் தொடர்ந்து மேற் கொள்ளப்பட்ட பல விஞ்ஞான ஆய்வுகள் கூட விஞ்ஞான சஞ்சிகைகளில் வெளி யிடப்பட்ட பின்னர் பெட்டிகளுக்குள்ளும் நூலகங்களிலும் முடங்கிப்போவது இன்று நாம் கண்கூடாகப் பார்க்கின்ற விடயமாகும். இத்தகைய ஆய்வுகள் பொதுமக்களைச் சென்றடைவதிலும் பல நடைமுறைச் சிக்கல்கள் காணப் படுகின்றன என்பதையும் மறுக்க முடியாது.
அதேபோல விஞ்ஞான ஆய்வுகளை பொதுமக்களுக்கு வெளிப்படுத்துகையில், அறிவைப் பெறும் ஒவ்வொருவரும் தமது நிலைகளுக்கமைய ஒவ்வொருவிதமாக விளங்கிக் கொள்வர். அவர்கள் தவறாக விளங்கிக்கொள்ளும் பட்சத்தில் பாரதூரமான எதிர்விளைவு ஏற்படுவதைத் தவிர்க்க முடியாமல் போகும். அத்துடன் அவர்கள் மத்தியில் அவ்விடயம் தொடர்பான குழப்பம் ஏற்பட வழிவகுக்கும்.பொதுமக்களுடனான தொடர்பாடல் விஞ் ஞானிகளின் முக்கிய பொறுப்பாகவும் கருதப்படுகிறது. அதே வேளை உள்ளதை உள்ளபடியே வெளிப்படுத்தும் கடப்பாடு ஊடகங்களுக்கும் இருக்கிறது. ஆனால் இன்னும் அந்த இரு தரப்பினருமே இரு அந்தங்களின் எல்லையில் இருப்பதாகவே தோன்றுகிறது. ஒரு விடயத்தை அவசரமாக/உடனடியாக வழங்க வேண்டுமென நினைக்கும் வெகுசனத் தொடர்பு ஊடகங்கள் பல அந்த விடயத்தின் துல்லியத்தன்மையைப் பற்றிச் சிந்திக்கத்தவறி விடுகின்றன.

இன்று வாதத்திற்கெடுக்கப்படும் ‘தேங்காயெண் ணைய், உடல் நலத்துக்கு உகந்ததா? ‘தீங்கு விளைவிப்பதா?’ எனும் சந்தேகத்தை உதாரணமாகக் கூறலாம். இத்தகைய சந்தேகங்களுக்கான முடிவுகள் ஆய்வுகளின டிப்படையிலேயே பெறப்படுகின்றன. இன்று உண்மையெனக் கூறப்படும் விடயமொன்று நாளை பொய்யென நிருபிக்கப்படலாம்.


விஞ்ஞானம் அத்த கையது. அதன் எல்லைகள் வரையறுக் கப்படவில்லை. எனவும் வளவாளர்கள் தெரிவித்தனர். இந்த உண்மையை உணரும் பக்குவம் பாமரர் மத்தியில் ஊட்டப்பட வேண்டும். அதற்கு விஞ்ஞானிகளுடன் கைகோர்த்து நிற்க வேண்டியது வெகுசனத் தொடர்பு ஊடகங்களின் பிரதான கடமையாகும்.