Wednesday, September 28, 2011

யாழ்ப்பாண வாழ்வியல் கண்காட்சி - 2

27/09/11 அன்று  யாழ். தினகரனில் பிரசுரமானவை!Tuesday, September 27, 2011

யாழ்ப்பாண வாழ்வியல் கண்காட்சி - 1

26-09-2011 அன்று யாழ். தினகரனில் பிரசுரமாகியது!

Monday, September 26, 2011

இயற்கையின் முன் யாவரும் சமமே!

 து ஒரு ஞாயிறு மாலைப்பொழுது. விடுமுறை தினமாகையால் பலர் வீடுகளிலேயே இருந்தனர். சிலர் பொழுதைப் போக்குவதற்காக திரையரங்குகளுக்கும் ஏனைய இடங்களுக்கும் சென்றிருந்தனர்.அப்படித்தான் கௌரவும் வீட்டில் ஆறுதலாக இருந்து தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தான். அப் போது யாரோ பின்னால் இருந்து கதிரையைப் பலமாக உலுக்குவது போன்ற உணர்வு கௌரவுக்கு ஏற்பட்டது. பின்னால் திரும்பிப் பார்த்தான். எவருமே இருக்கவில்லை. தொலைக்காட்சியில் லயித்திருந்த கௌரவ் அதிலிருந்து விடுபட்டு வெளியே பார்த்தான். முழுக் கிராமமுமே வீதிகளுக்கு இறங்கியிருந்தது. அல்லோலகல்லோலப் பட்டது. கதறியழும் மக்களையும் இறைவனைப் பிரார்த்திக்கும் மக்களையும் கௌரவ் கண்டான். கௌரவும் தன் குடும்பத்தாருடன் வீதிக்கு வந்தான். கௌரவுக்கு அருகிலே ஒரு கட்டடம் இடிந்து விழுந்தது. கீழே விழுந்த கற்கள் அவனது கையை உரசிக்கொண்டு விழுந்தன. தன் அலைபேசியினூடு நண்பர்களைத் தொடர்பு கொள்ள முயன்றான். வலையமைப்பு செயலிழந்திருந்தது.
 நடந்து முடிந்தது ஒரு அசாதாரண நில நடுக்கம் என்பதை உணர்ந்தான் கௌரவ். அமைதியாகச் சிந்திக்கத் தொடங்கினான். இயற்கையின் சக்தி சிறிதாக வெளிப்பட்டமையானது மனிதர்களை எப்படிக் கலங்கடிக்கச் செய்துள்ளது என்ற சிந்தனை தான் அவனுள் ஓடிக்கொண்டிருந்தது.

  இந்தியாவின் வட கிழக்கு மா நிலமான சிக்கிமிலே உள்ள சில்குரி பகுதியில் தான் கௌரவ் வசிக்கிறான். கடந்த ஞாயிறன்று (18-09-2011) மாலை அப்பகுதியில் மையங்கொண்ட 6.8 ரிச்டர் அளவிலான நில நடுக்கம் பெரும் சேதத்தை ஏற்படுத்தியிருந்தது. சிக்கிம் மட்டுமன்றி டில்லி, உத்தரப்பிரதேசம், பீகார், அஸ்ஸாம், மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், அஸ்ஸாம், மேகாலயா, திரிபுரா ஆகிய மா நிலங்களிலும் பங்களாதேஷ், நேபாளம், திபெத் ஆகிய பகுதிகளிலும் அந்த நில நடுக்கத்தின் பாதிப்பு உணரப்பட்டது. 100க்கும் மேற்பட்டோர் பலியாயினர். பலரைக் காணவில்லை. பலருக்கு என்ன ந்டந்தது என்றே தெரியவில்லை. நில நடுக்கம் ஏற்பட்ட போது பஸ்சில் பயணித்துக்கொண்டிருந்தவர்களும் , மீட்புப் பணிக்காக பஸ்சில் பயணித்துக்கொண்டிருந்த 50 வீரர்களும் என்ன ஆனார்கள் என்று எவருக்குமே தெரியவில்லை.
 நிலநடுக்கம் ஏற்பட்டு சிறிது நேரத்தில் பின்னதிர்வுகளும் தொடர்ந்ததால் மக்கள் பீதியடைந்தனர். பலர் உடனடியாகத் தம் வீடுகளுக்குத் திரும்ப மறுத்து வீதிகளிலேயே தஞ்சம் கோரினர். சிக்கிம், நேபாளப் பகுதிகளிலேயே பலத்த சேதம் ஏற்பட்டது. சிக்கிம் மா நிலத்தின் மகன் பகுதியிலேயே நில நடுக்கம் மையம் கொண்டிருந்தது. மங்கன் மற்றும் அதைச் சூழ உள்ள பகுதிகள் யாவும் பெரியளவில் பாதிக்கப்பட்டன. வடக்கு சிக்கிம் பகுதிக்கான பிரதான பெருந்தெரு மங்கனிலிருந்தே ஆரம்பிக்கிறது. மங்கன் பகுதி பலத்த பாதிப்பை ஏற்படுத்தியதால் வடக்கு சிக்கிமுடனான நிலவழித் தொடர்பு முற்றாகத் துண்டிக்கப்பட்டதுதென் சிக்கிம்பகுதியிலும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் மேற்கு வங்காளம் உள்ளிட்ட அயல் மா நிலங்களும் நேபாளம், திபெத்தும் சேதங்களை எதிர் நோக்கியுள்ளன. ஆயினும் சிக்கிம் மாநிலம் தான் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது .
 இயற்கை தன் உத்வேகத்தை நில நடுக்கத்தால் மட்டும் வெளிப்படுத்தவில்லை. நில நடுக்கத்தையடுத்து பல பகுதிகளில் ஏற்பட்ட தொடர் மழையும் நிலச்சரிவும் மீட்புப் பணிகளில் தாமதத்தை ஏற்படுத்தின. சிக்கிமில் மட்டும் 14 இடங்களில் பாரிய நிலஸ்சரிவுகள் ஏற்பட்டிருந்தன. ஏலவே சேதமடைந்திருந்த வீதிகள் மேலும் பாதிக்கப்பட்டன. பல பகுதிகளுக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
சிக்கிம் - இமாலய மலைப்பகுதியில் ஒடுக்கமான மலைப்பாதைகள் அதிகம் காணப்படுகின்றன. தொடர் மழையினால் ஏற்பட்ட நிலச்சரிவுகள் மீட்புப் பணியாளர்களைத் தாமதப்படுத்தின. கால நிலை காரணமாக மீட்புப் பணிகளில் உலங்கு வானூர்திகளைக் கூட முழுமையாக ஈடுபடுத்த முடியவில்லை. பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டது. தொலை தொடர்பு துண்டிக்கப்பட்டது.
 தொலைதொடர்பு இணைப்புகளைச் சீராக்குவதும் மக்களுக்குத் தேவையான உணவை வி நியோகிப்பதும் பெரும் சவாலாக இருப்பதாக மீட்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் லெப்டினன்ட் ஜெனெரல் பிக்ரம் சிங் தெரிவித்திருந்தார். நிலைமையைச் சீராக்க ஆகக் குறைந்தது 20 நாட்களாவது ஆகும் என்பது அவரது கருத்து.
 நில வழிப் போக்குவரத்து தடைப்பட்ட பகுதிகளுக்கு உலங்கு வானூர்திகள் மூலம் உணவுப்பொதிகள் வீசப்பட்டன. உலங்கு வானூர்தியில், வானிலிருந்து அவதானித்த இராணுவத்தினர் வடக்கு சிக்கிமிலே 5 கிராமங்கள் முற்றாக அழிந்து விட்டிருப்பதகத் தெரிவித்துள்ளனர். அத்துடன் அப்பகுதியிலுள்ள ஒன்பது கிராமங்கள் மட்டும் இன்னும் துண்டிக்கப்பட்ட நிலையிலேயே இருக்கின்றன. நிவாரண முகாம்களில் 6,000 பேர் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்குத் தேவையான உதவிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
 சேத விபரங்களும் உயிர்ப்பலி விபரங்களும் பூரணமா வெளியிடப்படவில்லை. ஆனால் கிடைத்த தரவுகளின் அடிப்படையிலே பூகம்பத்தால் சேதமடைந்த இந்திய வீதிகளையும் பாலங்களையும் புனரமைக்க/மீள் நிர்மாணிக்க மட்டும் 400 கோடி ரூபா தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அப்படியாயின் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகளைச் சீர் செய்து பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பழைய நிலைக்குக் கொண்டுவர எத்தனை 100 கோடிகள் தேவைப்படும் என்பதைக் கற்பனை பண்ணிப்பார்க்கவே முடியவில்லை.
 இதே வேளை சிக்கிம் மாநிலத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், நிவாரணம் மற்றும் மறுவாழ்வுப் பணிகளை மேற்கொள்ள, மத்திய அரசு 50 கோடி ரூபாவை வழங்கும் என, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறியிருக்கிறார். அயல் மா நிலங்களும் சிக்கிம் மா நிலத்துக்கு நிதி உதவிகளை வழங்கியுள்ளன. ஆயினும் உடண்டியாக மீண்டு வருதல் என்பது சிக்கிம் மா நிலத்தைப் பொறுத்தவரையிலே இலகுவானதாக இருக்கும் என்பதை ஏற்பது சற்றுக் கடினமான விடயம். அத்துடன் மத்திய, மா நில அரசுகளின் அனர்த்த முகாமைத்துவச் செயற்பாடுகளை செவ்வனே மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் இந்த நில நடுக்கம் உணர்த்தியிருக்கிறது.
'நான் இந்தியன் 'என்ற உணர்வு இந்தியர்களிடையே மிகுந்து காணப்படுகிறது என்பதை எவருமே மறுக்க மாட்டார்கள். மாறுபட்ட கால நிலைகளையும் கலாசார பரிமாணங்களையும் ஒருங்கே கொண்டமைந்த ஜன நாயக நாடு இந்தியா. மொழியடிப்படையிலே 28 மா நிலங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. அவற்றுள் இந்தியாவின் வடகிழக்கு மா நிலங்கள் சற்று மாறுபட்டவை . இந்தியன் என்ற அடையாளத்தை விட தமது மா நிலத்தின் பெயரால் அடையாளப்படுத்துவதையே அப்பிராந்திய மக்கள் விரும்புகின்றனர். கேட்பதற்கு விசித்திரமாக இருக்கிறது அல்லவா? வட கிழக்கு இந்திய மக்கள் பெரும்பாலும் தம்மை இந்தியர் என்று உணர்வதில்லை. அவர்களது உருவமைப்பிலே நேபாள/சீன சாயல் இருக்கும். அது கூட அவர்களது உணர்வுகளில் பிரதிபலிக்கக் கூடும்.
 வட கிழக்கு மா நிலங்கள் இயற்கை அழகு மிகுந்தவை. அவற்றின் பொருளாதாரத்திலே சுற்றுலாத்துறை , விவசாயத்துக்கு முக்கியத்துவம் காணப்படுகிறது. ஆனாலும் அரசியல் ரீதியாக ஸ்திரமற்ற நிலையிலேயே இப்பகுதி காணப்படுறது. தாம் தனி நாட்டவர் என்ற உணர்வு இம்மக்களுக்கு ஏற்பட்டதால் தனி நாடு கேட்டுப் போராடும் பல அமைப்புகள் இம் மா நிலங்களிலே காணப்படுகின்றன. இவை இந்தியாவின் எல்லையோர மா நிலங்களாதலால் இங்கு மத்திய அரசின் பாதுகாப்புக் கெடுபிடிகள் மிக அதிகம். ஏழு சகோதரிகள் என அழைக்கப்படும் மணிப்பூர், அசாம், அருணாச்சல பிரதேசம்,மேகாலயா, மிசோரம், நாகலாந்து, திரிபுரா ஆகியவை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. சிக்கிம் மா நிலம் அவற்றிலிருந்து சற்று விலகி இருந்தாலும் சமூக பொருளாதார நிலமைகளைப் பொறுத்தளவிலே அம் மா நிலமும் விதிவிலக்கல்ல.
இந்த மா நிலங்களை, வறுமையின் கீழ் மட்டத்திலே இருக்கின்ற , அபிவிருத்தி காணாத, முரண்பாடுகள் மிகுந்த, அரசியல் தலைமைத்துவத்தில் நம்பிக்கையற்றிருக்கும் பிராந்தியமாக உலக வங்கி வகைப்படுத்தியிருக்கிறது.
 அத்தகையதோர் நிலையிலே ஏற்பட்டிருக்கும் நில நடுக்கமும் அதனால் ஏற்பட்டிருக்கும் சேதங்களும் இப்பிராந்தியத்தின் நிலைமையை மேலும் மோசமடையச் செய்யப் போகின்றன என்பது திண்ணம். மாநில, மத்திய பெருந்தெருக்கள் சேதமடைந்து போக்கு வரத்துக் கட்டமைப்பு பாதிக்கப்பட்டு விட்டது. சுற்றுலா மையங்கள் பல சேதமடைந்து போயுள்ளன. தொலை தொடர்பு பாதிக்கப்பட்டுள்ளது.
 இந்த அனர்த்தத்திலே வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் சிக்கியிருந்தனர். அவர்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படாத நிலைமையானது சுற்றுலாத்துறையை மேலும் பாதிக்கும் என நம்பப் படுகிறது. சுற்றுலாத்துறை பாதிக்கப்பட்டால், இப்பிராந்தியம் பொருளாதார ரீதியிலே பாரிய பின்னடைவை எதிர் நோக்கும். இது உள்ளூர் கிளர்ச்சிகள், கலவரங்கள் ஏற்படவும் வழிவகுக்கும். இப்பிராந்தியத்தில் ஏற்படும் ஸ்திரமற்ற நிலைமை மொத்த இந்தியாவின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தலாக அமையக் கூடும்.
வடக்கு சிக்கிமில் மையம் கொண்ட நில நடுக்கத்தை , கடந்த 20 வருடங்களிலே அப்பகுதியில் நிகழ்ந்த பலமான நில நடுக்கம் என ஆய்வாளர்கள் விபரிக்கின்றனர். நெருப்பு வளையம் எனக் கூறப்படும் பூகம்ப வலயத்திலே இப்பகுதி காணப்படுவதால், இங்கு நில நடுக்கம் ஒரு புதிய விடயமல்ல. ஆனால், கடந்த வாரம் நிகழ்ந்தது வழக்கத்துக்கு மாறானது என்பது மக்களின் கருத்து. அதை ஆய்வாளர்களும் ஆமோதிக்கின்றனர்.
சிக்கிம் பகுதி திபெத்திய நிலத்தட்டுக்களிலே அமைந்துள்ளது. ஆதலால் அங்கு நில நடுக்கமென்பது ஒரு சகஜமான நிகழ்வாகும்ஆனால் இம்முறை அதன் பருமன் ரிச்டர் அளவிலே 6.8 ஆக இருந்தமை வழக்கத்துக்கு மாறானதாகக் கருதப்படுகிறது. இமாலயப் பகுதியில் ஏற்படும் எதிர் நிலை மாறங்களை இந்த நில நடுக்கம் குறிப்புணர்த்துவதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இமாலயப் பகுதியில் நிகழ்ந்த மிகப்பெரிய நில நடுக்கமாக இதனைக் கருத முடியும்.

 நில நடுக்கத்தின் பின்னர் நடுக்க மையத்துக்கு தென் கிழக்காக ஏற்பட்ட பின்னதிர்வுகள் கூட அப்பிராந்தியத்துக்குப் புதியவனவாகும். அவை 'இனிமேல் கவனமாக இருக்க வேண்டும்' என மக்களை எச்சரிப்பனவாகவே கருதப்படுகின்றன. ஏனெனில் தற்போது பிரதான நில நடுக்கம் மையம் கொண்ட பகுதி சனத்தொகை அடர்த்தி குறைந்த பகுதியாகும். ஆனால், அம் மையத்தின் தென் கிழக்கு பகுதி சனத்தொகை அடர்த்தி கூடியது. பின்னதிர்வுகள் தென் கிழக்குத் திசையிலே ஏற்பட்டமையால் இனி வரும் காலங்களில் அப்பகுதியில் நில நடுக்கம் உருவாகலாம் என அச்சம் தெரிவிக்கப்படுகிறது. அப்படி நடந்தால், இப்போது ஏற்பட்ட சேதங்களைப் போல் பல மடங்கு சேதங்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகும்.

உண்மையில் சிக்கிம் நில நடுக்கமானது இமாலயப்பகுதியில் பாரிய நில நடுக்கங்கள் ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகளை அதிகரித்துள்ளது என்றே கூற வேண்டும். சிக்கிம் நில நடுக்கம் நடந்த காலப்பகுதியில் பசுபிக் நெருப்பு வளையத்திலே அடுத்தடுத்து சில நில நடுக்கங்கள் நிகழ்ந்திருக்கின்றன. ஆனால் அவை ஒன்றன் மீது ஒன்று தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

புவிக்கோளத்தில் நில நடுக்கத்தை ஏற்படுத்தும் பிரதான நிலத்தட்டுக்களான இந்திய - யுரேசிய நிலத்தட்டுக்களின் எல்லையிலேயே இந்த சிக்கிம் நில நடுக்கம் மையம் கொண்டிருந்தது. இந்திய நிலத்தட்டு யுரேசிய நிலத்தட்டுடன் வருடாந்தம் 46 மில்லி மீற்றர் என்ற வீதத்திலே வடக்கு-வட கிழக்காக சேர்கிறது. இது பல மில்லியன் ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றமை தான், உலகின் மிக உயர்ந்த மலைத்தொடர்களுள் ஒன்றாக இமாலய மலைத்தொடர் இருப்பதற்கும் எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்துக்கும் கூடக் காரணமாகும்.
 
 கடந்த 35 வருட காலப் பகுதிக்குள், இந்த சிக்கிம் நில நடுக்கம் மையம் கொண்ட பகுதியிலிருந்து 61 மைல் சுற்று வட்டத்துக்குள் 5 ரிச்டரிலும் அதிகளவிலான பருமன் கொண்ட நில நடுக்கங்கள் பல நிகழ்ந்துள்ளன.

  இவையெல்லாம் மனித சமுதாயத்துக்கு இயற்கை விடுத்திருக்கும் பொதுவான எச்சரிகைகளாகவே தெரிகின்றன. எங்கோ, எவரோ விளைவை உணர்ந்து செய்வதற்கு வேறொங்கோ ஒன்றும் அறியாத அப்பாவிகள் பலியாகிறார்கள் என்பது வெளிப்படை உண்மை.
 ஆனால்  இயற்கையைப் பொறுத்தவரையிலே மனிதர்கள் யாவரும் சமனானவர்களே. தனது சம நிலை குலைக்கப்படும் போது இயற்கை சீற்றம் கொள்கிறது. அதைத் தாங்க முடியாது நலிந்தவனாக மனிதன் இருக்கிறான். இயற்கையைச் சீண்டிப் பார்த்து, அது சீற்றம் கொண்டதன் பின்னரான விளைவுகளை எதிர் நோக்கத் தன்னைத் தயார் படுத்துகிறான். அது அவசியம் தான். ஆனால், இயற்கையின் சம நிலையைக் குழப்பக்கூடாது என்பதை என்று மனிதன் தன் நடவடிக்கைகளில் வெளிப்படுத்துகிறானோ, அன்று தான் இயற்கை அமைதியடையும். இல்லாவிடில், அது கொள்ளும் சீற்றத்தை, மனிதர்களாக நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்!

 நில நடுக்கத்தால் சேதமடைந்த முக்கிய இடங்கள்

  • நேபாளத்திலுள்ள பிரித்தானிய தூதரகம்
  • சிக்கிம் மணிப்பால் பல்கலைக்கழகத்தின் தொழில் நுட்ப நிறுவக விடுதிக் கட்டடம்
  • வங்கக் கவி ரவீந்திர நாத் தாகூரின் இல்லம்
  • சிக்கிமிலுள்ள 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பௌத்த மடாலயங்கள்
  • சிக்கிமிலுள்ள புராதன பௌத்த தூபி