Sunday, November 28, 2010

ஆபத்தைத் தரும் ஆஸ்பத்திரிக் கழிவுகள்


தெய்வம் வந்து தாங்கிடாத
பொழுதுகளில்
மனிதனை உயிர்ப்பிக்கும்
விஞ்ஞான வளாகம்!

பணம் போட்டு
நலம் காக்கும்
பொதுச் சேவை வியாபாரம்!

என மருத்துவமனையை வரிக்கிறது இணையத்தில் வெளியாகியிருந்த கவிதையொன்று. பூவும் தலையுமாய் நாணயம் கொண்டிருக்கும் இருபக்கங்கள் போல, இந்த மருத்துவமனைக்கும் இருபக்கங்கள் உண்டு. அவற்றுள் ஒன்றைப்பற்றியே இக்கவிதை குறிப்பிடுகிறது. மற்றைய பக்கமானது இம்மருத்துவமனையிலிருந்து வெளியேறும் கழிவுகளுடன் தொடர்புடையதாகும்.
இன்று நகரமயமாக்கலுடன் சேர்ந்து வீதிக்கு வீதி சிறியதும் பெரியதுமாகப் பல மருத்துவமனைகள் முளைத்துக் கொண்டிருக்கின்றன.
பணமிருந்தால் எவருக்கும் எளிதில் கிடைக்கக்கூடிய வகையிலே வளர்ந்து வரும் துறையாக மருத்துவத்துறை மாறிவருகிறது.
இலங்கையிலே அரச வைத்தியசாலைகளிலே மருத்துவ சேவை இலவசமானதாகும். ஆயினும் நகரமயப்படுத்தப்பட்ட பகுதிகளிலே அரச மருத்துவ சேவை நிலையங்களை விடத் தனியார் மருத்துவ சேவை நிலையங்கள் அதிகமாகக் காணப்படுவதை எவராலும் மறுக்க முடியாது.
நாடொன்றில் உள்ள மருத்துவ சேவைகளின் வளர்ச்சி அந்நாட்டின் அபிவிருத்தி அளவு கோல்களில் தாக்கம் செலுத்தும் பிரதான காரணிகளுள் ஒன்றாகக் காணப்படுகிறது.
நோய்த்தொற்றைத் தடுப்பதற்கான வழிமுறைகளும் உடனடி மருத்துவ சேவைகளும் நல்ல கழிவகற்றல் வசதிகளும் பிரஜை ஒருவரின் சராசரி ஆயுட்காலத்தை அதிகரிக்கின்றன. அதேசமயம் நாட்டின் சிசு மரண வீதத்தைக் குறைக்கின்றன.
நாடொன்றின் அபிவிருத்திச் செயற்பாடுகள் அதிகரிக்க, சுற்றுச்சூழலுக்கு வெளியேற்றப்படும் கழிவுகளும் அதிகரிக்கின்றன.
வீட்டுக்கழிவுகள், அவற்றைக் கண்ட இடங்களில் கொட்டுவதால் ஏற்படும் சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் சீர் கேடுகளைப் பற்றி நாம் அறிவோம். பலவற்றை அன்றாடம் நேரிலும் கண்டிருப்போம்.
ஆனால் வீதிக்கு வீதி முளைத்திருக்கும் மருத்துவ சேவை நிலையங்களாலும் கழிவுகள் வெளியேற்றப்படுகின்றன. அக்கழிவுகளுக்கு என்ன நடக்கும்? அவை எப்படி வெளியேற்றப்படுகின்றன? என்பது பற்றிய சிந்தனை கூட எமக்கு வந்திருக்காது.
ஆனால் வீட்டுக்கழிவுகளுடன் ஒப்பிடும் போது மருத்துவமனைகள் உள்ளிட்ட சுகாதாரத்துறை அமைப்புக்களினால் வெளியேற்றப்படும் கழிவுகளில் ஒரு பகுதி நச்சுத்தன்மையானது. மிகவும் ஆபத்தானது. நோய்த்தொற்றை ஏற்படுத்தவல்லது. சவச்சாலைக் கழிவுகளும் இக்கழிவுகளுக்குள் அடங்கி விடுகின்றன.
உலகளாவிய ரீதியிலே வருடாந்தம் பல மில்லியன் தொன்கள் அளவிலான சுகாதாரத்துறைக்கழிவுகள் வெளியேற்றப்படுகின்றன. அவற்றுள் ஏறத்தாழ 10 - 25 சதவீதமானவை மிகவும் ஆபத்தானவையாகக் கருதப்படுகின்றன.
ஆரம்ப காலங்களிலே பல மருத்துவ உபகரணங்கள் தொற்று நீக்கப்பட்டு மீள மீள உபயோகிக்கப்பட்டு வந்தன.
ஆயினும், எச்.ஐ.வி. ஹெப்படைடிஸ் - கி போன்ற சில வைரஸ் தொற்றுக்கள் வேகமாகப் பரவின. இதையடுத்து ஒரு தடவை பாவிக்கப்பட்டபின் வீசப்படும் மருத்துவ உபகரணங்களின் பாவனையும் அதிகரித்தது. விளைவு வெளியேற்றப்படும் சுகாதாரத்துறைக் கழிவுகளைப் பலமடங்குகளாக அதிகரித்தன.
ஆனால், பல அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளிலே அவை பாதுகாப்பான முறையிலே அகற்றப்படுவதில்லை. ஏனெனில் அவ்வாறு அகற்றுவதற்கான செலவு மிக அதிகமாகும். அத்துடன் அந்நாடுகளால் ஈடுசெய்யப்பட முடியாதது என்பதும் குறிப்பிடத்தக்கது.
எமது நாட்டின் சுகாதார அமைச்சு சுகாதாரத் துறைக் கழிவுகளுக்கான பொதுவான வகைப்படுத்தல் முறைமையொன்றை 2006 ஆம் ஆண்டிலே வகுத்தது. ஒவ்வொரு வகைக்கும் ஒவ்வொரு நிறக்குறியீடும் வழங்கப்பட்டது. சகல அரச சுகாதாரத்துறை அமைப்புக்களும் அம்முறைமையைப் பின்பற்றுமாறு பணிக்கப்பட்டன.
அந்த முறைமையின் படி தொற்றுள்ள கழிவுகள், கூர்மையான கழிவுகள், சாதாரண கழிவுகள், உயிரியல் ரீதியாக பிரிகையடையக் கூடிய கழிவுகள், கண்ணாடிக்கழிவுகள், கடதாசிக் கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள் என சுகாதாரத்துறைக் கழிவுகள் வகைப்படுத்தப்படுகின்றன.
இந்த வகைப்படுத்தலின் அடிப்படையிலேயே இலங்கையின் மருத்துவமனைக் கழிவுகள் தரம்பிரிக்கப்படுகின்றன. பக்aரியா, வைரஸ், பங்கசு மற்றும் ஏனைய உயிர்க் கூறுகளின் தொற்று இருக்கலாமெனக் கருதப்படும் கழிவுகள் யாவுமே தொற்றுள்ள கழிவுகளாகக் கருதப்படுகின்றன. சத்திரசிகிச்சைகளின் போது வெளியேற்றப்படும் இழையக் கழிவுகள், உடற்பாகங்கள் மற்றும் உடற் திராவகங்களுடன் தொடுகையில் இருக்கும் உபகரணங்கள், பொருட்கள், குழாய்கள், போன்றன யாவுமே தொற்றுள்ள கழிவுகளாகும்.
இவை மஞ்சள் நிறத்தினால் வகை குறிக்கப்படு கின்றன.
கூரிய / கூர்மையான கழிவுகள் எனப்படுபவை உடற்திராவகங் களுடன் தொடுகை ஏற்பட்டதால் மாசுபட்ட கூரிய ஊசிகள் மற்றும் உபகரணங் களைக் குறிக்கின்றன. இத்தகைய கழிவுகள் சிவப்புக்கோடுகளுடன் சேர்ந்த மஞ்சள் நிறத்தினால் வகைக் குறிக்கப்படுகின்றன.
மாசுகளற்ற சாதாரண அல்லது வீட்டுக் கழிவுகளையொத்த சுகாதாரத்துறைக்கழிவுகள் சாதாரண கழிவுகளாகும். இவை கறுப்பு நிறத்தினால் வகைக்குறிக்கப்படுகின்றன. உயிரியல் ரீதியாகப் பிரிகையடையக் கூடிய அல்லது உக்கக்கூடிய கழிவுகளில் தோட்ட, சமையலறை, மற்றும் உணவுக் கழிவுகளும் அடங்குகின்றன. இவை பச்சை நிறத்தால் வகைக் குறிக்கப்படுகின்றன.
பழுதடையாத அல்லது மாசுபட்டிருக்காத குடிநீர்ப் போத்தல்கள் மற்றும் தண்ணீர்ப் போத்தல்கள் கண்ணாடிக்கழிவுகளுக்குள் அடங்குகின்றன. இவை சிவப்பு நிறத்தால் வகைக் குறிக்கப்படுகின்றன.
கடதாசிகள், அட்டைகள் மற்றும் ஏனைய அலுவலக ஆவணங்கள் யாவுமே கடதாசிக் கழிவுகளுக்குள் அடக்கப்படுகின்றன. இவை நீல நிறத்தினால் வகைக்குறிக்கப்படுகின்றன.
அதேபோல, மாசுக்கள் மற்றும் தொற்றுக்களற்ற பிளாஸ்டிக் போத்தல்கள், ஊசியற்ற சேலைன் போத்தல்கள், பிளாஸ்டிக் பைகள் யாவுமே பிளாஸ்டிக் கழிவுகளுக்குள் அடங்குகின்றன. இவை செம்மஞ்சள் நிறத்தினால் வகைக்குறிக்கப்படுகின்றன.
இலங்கையின் சகல அரச வைத்தியசாலைகளும் இந்த நிறவகைக் குறிப்பு முறைமையைப் பின்பற்றி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆயினும் அக்கழிவுகளை அப்புறப்படுத்துவதிலே பல நடைமுறைச் சிக்கல்கள் காணப்படத்தான் செய்கின்றன.
சில வைத்தியசாலைகளிலே கழிவுகளைச் சேகரிக்கும் முறைமைகள் பாதுகாப்பற்றவையாகக் காணப்படுகின்றன. சில சமயங்களிலே தொற்றுள்ள கழிவுகளும், சாதாரண கழிவுகளும் கூட ஒன்றாகக் கலக்கப்படுகின்றன.
பல வைத்தியசாலைகளில் கழிவுகள் சேகரிக்கப்படும் பகுதி பிரதான கட்டடங்களுக்கு அண்மையில் அமைக்கப்படுவதில்லை. ஆயினும் அப்பகுதிக்கு அண்மையில் இருக்கும் வேறு கட்டடங்கள் கருத்தில் கொள்ளப்படுவதில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
கொள்கலன்களில் உள்ள கழிவுகளை மனிதர்களே சேகரிக்கும் இடத்துக்கு கொண்டு செல்கிறார்கள். இந்த நிலைமைதான் இலங்கையின் பல வைத்தியசாலைகளில் காணப்படுகிறது.
கழிவுகளின் உருவாக்கத்தின் போது கையாள்வதற்கு பெரும்பாலான ஊழியர்கள் கையுறைகளைப் பயன்படுத்துகின்றனர். அவர்களுடன் ஒப்பிடும் போது கழிவுகளை அப்புறப்படுத்தும் ஊழியர்கள் மத்தியில் கையுறையின் பயன்பாடு மிகவும் குறைவாகவே உள்ளது. அதனால் அப்புறப்படுத்தும் ஊழியர்கள் கூரான கழிவுகளால் காயப்படுகிறார்கள். அதேசமயம் பல்வேறு தொற்றுக்களுக்கும் உள்ளாக்கப்படுகிறார்கள்.
உண்மையில் சேகரிக்கப்பட்ட பின் இக்கழிவுகள் பொருத்தமான முறையிலே பரிகரிக்கப்பட வேண்டும். அதன் பின்னரே அப்புறப்படுத்தப்பட வேண்டும். ஆனால் பல இடங்களில் அவை பரிகரிக்கப்படாமலே அப்புறப்படுத்தப்படுகின்றன. நகர சபைக் கழிவுகளுடன் சேர்க்கப்பட்டு வெளியே கொட்டப்படுகின்றன. சில சந்தர்ப்பங்களில் பரிகரிக்கப்படாமல் நிலத்திலே புதைக்கப்படுகின்றன.
ஆரம்பகாலங்களில் இத்தகைய செயற்பாடுகளின் பின்விளைவுகள் வெளிப்படவில்லை. ஆனால் அவை வெளிப்பட்ட போதுதான் நிலைமை கையை மீறிச் சென்று கொண்டிருப்பதும் புரியத் தொடங்கியது. இதற்காக எவரையும் குறை கூறிப் பயனில்லை. பின் பற்றும் நடைமுறைகளைத் தெளிவாக அக்கறையுடன் செயற்படுத்தினால் எந்தப் பிரச்சினையையும் எளிதில் வெல்ல முடியும் என்பது மட்டுமே நிதர்சனம்.
இப்பிரச்சினை தொடர்பான விழிப்புணர்வு பல சுகாதாரத்துறை ஊழியர்களிடையே காணப்படத்தான் செய்கிறது. சுகாதார அமைச்சு, சுற்றுச்சூழல் அதிகார சபை போன்றன மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றன. சர்வதேச நிதி நிறுவனங்களின் நிதி உதவியும் எமக்கு கிடைக்காமலில்லை.
பெரும்பாலான சுகாதாரத்துறை அமைப்புக்கள் அரச துறையைச் சேர்ந்தவை. அத்துடன் தனியார் தறையினருடன் கைகோர்த்து சுகாதாரத்துறைக் கழிவுகள் தொடர்பான பிரச்சினைகளைக் கையாள அரசும் ஆர்வமாக இருக்கிறது.
இவையெல்லாம் சுகாதாரத்துறைக் கழிவுகள் தொடர்பாக இலங்கையில் காணப்படும் சாதகமான விடயங்களாகும்.
ஆயினும் சுகாதாரத்துறை ஊழியர்கள் மத்தியிலே கழிவுகளைக் கையாள்வதற் கான பயிற்சிகள் போதியளவு காணப்படு வதில்லை. அத்துடன் கழிவுகளின் பாதுகாப்பான அப்புறப்படுத்தல் முறைமைகள் பல வரையறுக்கப் பட்டனவாகவே காணப்படு கின்றன. தனியார் மருத்துவ மனைகள் அரச மருத்துவமனை களுடன் இணைந்து செயற்படும் வழிமுறைகள் சாதகமான போக்கைக் கொண்டிருக்க வில்லை. அத்துடன் கழிவுகளைச் சேகரித்து அப்புறப்படுத்தும் செயற்பாடுகள் ஒழுங்காகக் கண்காணிக்கப்படுவதுமில்லை.
இத்தகைய பின்னடைவுகள் எல்லாம் சேர்ந்து சுகாதாரத்துறைக்கழிவுகளால் ஏற்படும் சீர்கேடுகளை விஸ்வரூபம் எடுக்கச் செய்துவிட்டன.
நச்சுத்தன்மையான கழிவுகளின் முகாமைத்துவம் பற்றிய விடயங்களை தேசிய சுற்றுச்சூழல் சட்டத்தின் 47 ஆவது சரத்தும் அதன் திருத்தங்களும் குறிப்பிடுகின்றன. சுகாதாரத்துறைக் கழிவுகளும் நச்சுத்தன்மையான கழிவுகளாகவே கருதப்படுகின்றன. அதனடிப்படையிலே சுகாதாரத்துறைக் கழிவுகளைக் கையாள்வதற்கான விரிவான நடைமுறைக்கோவையும் தயாரிக்கப்படுகிறது.
இத்தகைய தோர் நிலையில் தான் மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபை சுகாதாரத்துறைக் கழிவுகளை அப்புறப்படுத்தும் செயற்திட்டமொன்றை ஆரம்பிக்க விருப்பதாக கலாநிதி ஹேரத் அண்மையில் தெரிவித்திருந்தார்.
சுற்றுச்சூழல் அமைச்சும் சுகாதார அமைச்சும் இணைந்து தேசிய ரீதியிலான செயற்றிட்டமொன்றை அமைப்பது பற்றிக் கலந்துரையாடி வருகின்றன.
இது இலங்கையின் சுகாதாரத்துறையை புதியதோர் பரிணாமத்துக்கு இட்டுச் செல்லும் என்பதில் எதுவித ஐயமும் இல்லை.

Friday, November 26, 2010

'விக்கி லீக்ஸ்':இரகசியங்கள் அம்பலமாகின்றன!

‘விக்கி லீக்ஸ்’ என்ற சொற் பதத்தினால் இன்று பல வல்லரசுகள் அதிர்ந்து போயிருக்கின்றன. அமெரிக்க இராணுவத்தின் பாவனைக்காகக் கண்டுபிடிக்கப்பட்டு பின் பொதுப் பாவனைக்குரியதாக மாற்றப்பட்ட இணையம் இன்று அமெரிக்காவையே கலங்கடித்திருக்கிறது.
தகவலை அறிவதற்கான சுதந்திரத்துக்கு வழிகோலும் ஊடகக் கருவியாக பலர் இத்தளத்தைச் சித்தரித்திருக்கிறார்கள்.
‘விக்கி லீக்ஸ்’ எனப்படுவது அடிப்படையில் ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனமாகும். முக்கியமான செய்திகளையும் தகவல்களையும் சாதாரண பொது மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்கும் நோக்கிலேயே இவ்விணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய ரீதியிலே தன்னார்வத் தொண்டர்களாகப் பணி புரியும் ஊடகவியலளர்களின் வலையமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அவ்வலையமைப்பினூடு பெறப்படும் செய்திகளும் தகவல்களும் இணையத்தளம் மூலம் பொது மக்களைச் சென்றடைகின்றன.
இங்கு முக்கியமான விடயம் யாதெனில், அத்தகவல்களும் செய்திகளும் உண்மையான ஆதாரத்துடன் அல்லது மூல ஆவணத்துடன் வெளியிடப்படுகின்றன. ‘விக்கி லீக்ஸ்’ இணையத்தளத்திலே செய்தியை அறியும் நபரொருவர் ஆதாரத்தையும் பார்வையிட முடிகிறது.
கடந்த 2007 ஆம் ஆண்டு உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்ட இவ்விணையத்தளம் நவீன தொழில் நுட்பங்களுடன் இசைவடைந்து மிக வேகமாக வளர்ந்து வருகிறது.
பேச்சுச் சுதந்திரத்தை உறுதி செய்யும் அதேவேளை ஊடகங்களிற்கான சுதந்திரத்தையும் உறுதிசெய்து புதியதோர் வரலாறு படைப்பதை இலக்காகக் கொண்டே இவ்விணையத்தளம் உருவாக்கப்பட்டது.
இந்த இலக்கானது, சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்தை அடிப்படையாகக் கொண்டு நிர்ணயிக்கப்பட்டதாகும். குறிப்பாக அப்பிரகடனத்தின் 19வது உறுப்புரிமையில் குறிப்பிடப்படும் ‘கருத்துக்களை வெளியிடுவதற்கான சுதந்திரத்தை’ இது அடிப்படையாகக் கொண்டது.
உண்மையில் ‘விக்கி லீக்ஸ்’ இணையத்தளமானது இணையத்தின் உயர் பாதுகாப்புத் தொழில் நுட்பத்துடன் ஊடகவியல் மற்றும் ஒழுக்கக் கொள்கைகளையும் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஊடகத்துறையைப் பொறுத்தவரையிலே, புலனாய்வு என்பது பிரதான இடத்தை வகிக்கிறது. ‘ஊடகவியலாளனின் ஆயுதம் பேனா’ எனப் பலர் குறிப்பிடுவதன் பின்னணியில் புலனாய்வும் அமைந்திருப்பதை எவராலும் மறுக்க முடியாது. இதற்கு ‘விக்கி லீக்ஸ்’ இணையத்தளம் விதிவிலக்கல்ல.
இவ்விணையத்தளத்திலே, தெரியாத நபர்களால் கிடைக்கப்பெறும் தகவல்களும் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.
அவ்வாறு தகவல்களை வழங்கும் மூலங்களைப் பாதுகாக்கும் கடப்பாடும் ‘விக்கி லீக்ஸ்’ இணையத்தளத்துக்கு உண்டு. ஆதலால் தான் ‘விutting- லீனீgலீ விryptographiணீ யிnஜீorசீation’ என்ற உயர் பாதுகாப்புத் தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.
இதனால் இவ்விணையத்தளத்திற்குச் செய்தியை வழங்கும் மூலங்கள் பாதுகாக்கப்படுகின்றன. இவ்விணையத்தளத்திற்கு அத்தகைய தகவலொன்று கிடைத்ததும் வலையமைப்பிலே இணைக்கப்பட்டிருக்கும் ஊடகவியலாளர்கள் தொழிற்படத் தொடங்குவர்.
அவர்கள் அத்தகவலை ஆராய்ந்து, அதன் உண்மைத்தன்மையை உறுதி செய்வர். பின் அத்தகவல் தொடர்பாக, அத்தகவலின் முக்கியத்துவத்தைச் சமுதாயத்துக்கு உணர்த்தும் வகையிலே செய்திக் குறிப்பொன்றை எழுதுவர். பின்னர் அச்செய்திக் குறிப்பையும் அதன் உண்மை ஆதாரத்தையும் இணைத்து ‘விக்கி லீக்ஸ்’ இணையத்தளத்திலே வெளியிடுவர்.
இத்தகைய செயற்பாடானது, குறித்த செய்தியை வாசகர்கள் ஆதாரத்துடன் அலசி ஆராய வழிவகுக்கின்றது.
கட்டற்ற கலைக்களஞ்சியமான ‘விக்கி பீடியா’ இணையத்தளத்தைப் பற்றி நாம் யாரும் அறிவோம். அவ்விணையத்தளத்திலே தகவல்கள் வெளியிடப்படும் வடிவமைப்பை ஒத்த முறைமையையே ‘விக்கி லீக்ஸ்’ இணையத்தளமும் பின்பற்றுகிறது.
இந்த ஒரு ஒற்றுமையைத்தவிர ‘விக்கிபீடியா’ இணையத்தளத்துக்கும் ‘விக்கி லீக்ஸ்’ இணையத் தளத்துக்கும் வேறு எந்தத் தொடர்பும் இல்லை. ‘விக்கி பீடியா’ இணையத்தளத்தைப் பொறுத்த வரையிலே எவரும் அதன் தகவல்களை/ மூல ஆவணங்களை மாற்றியமைக்க முடியும். ஆனால் ‘விக்கி லீக்ஸ்’ இணையத்தளத்திலே அவ்வாறு செய்ய முடியாது.
‘விக்கி லீக்ஸ்’ இணையத்தளத்திலே வெளியிடப்படும் செய்திகள் தணிக்கை செய்யப்படுவதில்லை. ஆனால் சில வேளைகளில் அச்செய்திப்பதிவுகள் நீக்கப்படும். அல்லது அப்பாவி மக்களின் வாழ்வைக் காப்பாற்றும் நோக்கிலே அவை காலந் தாழ்த்தப்பட்டு பதிவிலடப்படும்.
ஒரு ஊடக நிறுவனமான ‘விக்கி லீக்ஸ்’ ஐ சட்டச் சிக்கலிலிருந்து காப்பாற்றுவதற்காக பல திறமை வாய்ந்த சட்டத்தரணிகளும் ‘விக்கி லீக்ஸ்’ வலையமைப்பிலே இணைலீ;திருக்கிறார்கள்.
தகவல்களைப் பிரசுரித்தலானது உண்மைகள் ஒளிவு மறைவின்றி வெளியிடப்படுவதை மேம்படுதுகிறது. அத்தகைய தன்மைதான் ஒரு வளமான சமுதாயம் உருவாக வழிவகுக்கிறது. இதற்கு ஊடகங்களின் பங்கு மிகவும் முக்கியமானதாகும். இத்தகையதோர் செயற் பாட்டையே ‘விக்கி லீக்ஸ்’ இணையத்தளமும் மேற்கொள்கிறது.
இவ்விணையத் தளத்தின் நிறுவுனர் ஜுலியன் போல் அஸாஞ் என்பவராவார். அவரே பிரதம ஆசிரியராகவும் செயற்படுகிறார். இவரைப் பத்திரிகைகள் பல ‘புதிர் மனிதன்’ என்று விபரிக்கின்றன.
ஏனெனில் இவர் நாடு நாடாகச் சுற்றிக் கொண்டிருப்பார். தனது தொடர்பு முகவரிகள், இலக்கங்களை அடிக்கடி மாற்றிக் கொண்டிருப்பார். இந்த இணையத்தளத்துக்காக நிரந்தரமாக ஊழியஞ் செய்பவர்கள் மிகச் சிலரே. ஏனையவர்கள் பகுதி நேர ஊழியர்களாகவே வேலை செய்கின்றனர்.
இவ் விணையத்தளத்தின் ஊழியர்கள் ஒருவரையொருவர் அறிந்திருக்கமாட்டார்கள் என்னும் விடயம் மிகவும் சுவாரசியமானது. அவர்களை எல்லாம் இணைக்கும் பாலமாக இருப்பவர் ஜுலியன் அஸாஞ் மட்டுமே.
உலகெங்கிலும் இருந்து பலர் விக்கி லீக்ஸ் இணையத்தளத்துக்கு தகவல்களை வழங்கி வருகிறார்கள். ஆனால் தகவல்களை வழங்குபவர்கள் பற்றிய குறிப்புகள் ஜுலியன் அஸாஞ்க்குக் கூடத் தெரிந்திருக்காது.
கணனித்துறையின் வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைபவை கணனி மொழிகள் மற்றும் சங்கேத மொழிகளின் பிரயோகமும் அல்கோரிதம் எனப்படும் செய்கை வழி முறைகளுமேயாகும்.
இந்த சங்கேத மொழியின் அடிப்படையிலேயே தொழிற்படுகிறது. சங்கேத மொழிகளை எழுதி அவற்றை அவிப்ழ்பதில் வல்லுநர்கள் பலர் இவ்விணையத்தளத்துடன் இணைந்து தொழிற்படுகிறார்கள்.
ஒருவிடயத்தை ஆராய்ந்து அறிவதற்கு தகவல்கள் தேவை. ஆனால் மனித உயிர் மனித உரிமைகள், பொருளாதாரம் ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளும் போது தகவல்கள் மிகவும் பெறுமதியானவையாகவே தெரிகின்றன. ஏனெனில் அந்தத் தகவல்களுக்காகக் கொடுக்கப்படும் விலை எதனாலும் ஈடுசெய்யப்பட முடியாததாகும்.
ஊடகவியலுக்கு ஒரு புதிய பரிமாணத்தை அளிக்கும் வகையிலே ‘விக்கி லீக்ஸ்’ இணையத்தளம் செயற்பட்டு வருகிறது. அவ்விணையத்தளத்திலே வெளியிடப்படும் தகவல்களும் செய்திகளும் ஏனைய ஊடகங்களுக்கு தரவு மூலங்களாகப் பயன்படுகின்றன.
இவ்விணையத்தளத்துக்கு ஒருவர் தகவல் ஒன்றை வழங்கப் போகிறார் எனின், அதைப் பாதுகாப்பாக வழங்கப் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் இணையத்தளத்திலேயே குறிப்பிடப்படுகின்றன. அவற்றின் அடிப்படையில் தகவல்களை வழங்க முடியும். தகவலை வழங்கியவரின் அடையாளம் ஆரம்பத்திலேயே மறைக்கப்படுவதால் மூலம் ஒருபோதும் அடையாளம் காட்டடப்பட மாட்டாது.
அரசாங்கங்கள், வர்த்தகம், பேச்சுச் சுதந்திரம் மற்றும் ஊடக சுதந்திரம் மட்டுப்படுத்தப்படல், ராஜதந்திரம், உளவு பார்த்தல், புலனாய்வு, யுத்தங்கள், கொலைகள், தடுப்புக்காவல்கள் போன்றன தொடர்பான பல விடயங்கள் ‘விக்கி லீக்ஸ்’ தளத்திலே வெளியிடப் பட்டிருக்கின்றன.
அவற்றுள் சூழலியல் காலநிலை, இயற்கை, விஞ்ஞானம், ஊழல், நிதி மற்றும் வரிகள், தணிக்கை கைத்தொழில் நுட்பம், துஷ்பிரயோகங்கள் போன்றன பற்றிய தகவல்களும் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன. இவை யாவும் ஏதோ ஒரு காரணத்துக்காக வெளி உலகுக்குத் தெரியாமல் மறைக்கப்பட்டவையாகும்.
அமெரிக்க- ஈராக்கிய யுத்தத்திலே ஃபளுஜா சிறைச்சாலை முக்கிய இடத்தை வகித்ததை நாம் அறிவோம். அச்சிறைச்சாலையின் நிலை பற்றிய ஐக்கிய அமெரிக்காவின் விளக்க அறிக்கை எப்படியோ ‘விக்கி லீக்ஸ்’ இணையத்தளத்தில் வெளியாகியி ருந்தது. அதே போல 2007 ஆம் ஆண்டு ஈராக்கில் இருந்த அமெரிக்க இராணுவத் தள பாடங்கள் பற்றிய முழு விபர மும் கூட வெளியாகியிருந்தது.
2008 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் கிழக்கு திமோர் போராளிகளின் தலைவர் கொல்லப்பட்ட சம்பவத்தின் சாட்சி ஆவணங்கள் கூட இவ்விணையத் தளத்திற்குக் கிடைத்திருக்கின்றன.
இத்தகைய ஆவணங்கள் எல்லாம் அந்தந்த நாடுகளின் உயர் மட்டங்களிலே மிகவும் இரகசியமாகப் பேணப்படுபவையாகும். இவையெல்லாம் எப்படி ‘விக்கி லீக்ஸ்’ இணையத்தளத்திற்குக் கிடைத்தன என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.
ஊடகங்களிலே வெளியாகும். சில தகவல்களும் ஆதாரங்களும் பின்னர் ஏதோ ஒரு காரணத்துக்காகத் தணிக்கை செய்யப்படுகின்றன. இணை யத்தில் வெளியாகும் அத்தகைய தகவல்கள் இத்தணிக்கையின் பின் நீக்கப்படுகின்றன.
அவ்வாறு நீக்கப்பட்ட பலவற்றை ‘விக்கி லீக்ஸ்’ இணையத்தளம் சேமித்து வைத்திருக்கிறது.
2008 ஆம் ஆண்டு அமெரிக்க புலனாய்வுத்துறையினர் ‘விக்கி லீக்ஸ்’ இணையத்தளத்தை முற்றாகச் செயலிழக்கச் செய்ய எண்ணினர். இதற்காக 32 பக்க புலனாய்வு அறிக்கை ஒன்றைத் தயாரித்தனர். ஆனால் அந்த அறிக்கையும் ‘விக்கி லீக்ஸ்’ இணையத்தளத்திடம் சிக்கிவிட்டிருந்தது.
இப்படி எண்ணற்ற இராணுவ, அரச இரகசியங்கள் ‘விக்கி லீக்ஸ்’ இணையத்தளத்திலே ஆதாரங்களுடன் கசிந்து கொண்டிருக்கின்றன.
காலநிலை மற்றும் விஞ்ஞானம் தொடர்பான ஆய்வுகளின் உண்மை முடிவுகள் ஒருபோதும் உடனடியாக வெளியிடப்படுவதில்லை. இதற்கு அம்முடிவுகளின் நிச்சயமற்ற தன்மையும் ஒரு காரணமாக அமைந்துவிடுகிறது.
ஆனால் அந்த ஆய்வுகளுக்காகச் சேகரிக்கப்பட்ட தரவுகளிலிருந்து முடிவுகளை வெளியிடும் அறிக்கைகள், மாதிரிகள் எனச் சகல விடயங்களும் ‘விக்கி லீக்ஸ்’ இணையத்தளத்துக்குக் கிடைத்திருக்கின்றன.
எவருமே எதிர்பார்த்திருக்காத பற்பல விடயங்களை ‘விக்கி லீக்ஸ்’ எவ்வித தணிக்கைகளும் இன்றி வெளியிடுகிறது.
கடந்த கால வரலாற்றை நிகழ்காலத்திலே திசைதிருப்பி சிறந்த எதிர்காலத்துக்கு வழிவகுக்கும் நோக்கிலேயே இத்தகவல்கள் வெளியிடப்படுகின்றன என்பதே ‘விக்கி லீக்ஸின்’ வாதமாக இருக்கிறது.
ஊழலற்ற திறந்த அரசாங்கம் ஒன்று அமைவதற்கு ‘விக்கி லீக்ஸ்’ காரணமாக இருக்கிறது. என்றும் விமர்சிப்பவர்கள் இருக்கிறார்கள்.
‘விக்கி லீக்ஸ்’ இணையத்தளத்திலே வெளியிடப்படும் ஆவணங்களைச் சான்றுகளாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க முடியுமா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. ஆனால் பாதிக்கப்பட்டவர்களுககு நியாயமான தீர்வொன்று கிடைப்பதற்கு அந்த ஆவணங்களும் துணையாக அமையும் என்பதில் எதுவித ஐயமுமில்லை.
இன்று இணைய வசதி மூலை முடுக்குகளிலெல்லாம் பரவிவிட்டது. இணையத்தினூடு கோப்புகள் பல தாராளமாகப் பரிமாற்றப்படுகின்றன; பகிரப்படுகின்றன. அனுப்புநரிடமிருந்து பெறுநரைச் சென்றடையும் வரை அக்கோப்புகளுக்கு என்ன நடக்கிறது என்பது பற்றி எவரும் சிந்திப்பதில்லை. அதற்கு ஒரு காரணம் அத்தொழில் நுட்பம் கறுப்புப்பெட்டித் தொழில்நுட்பம் ஆகும். மற்றையது கோப்புப் பரிமாற்றத்துக்கு எடுக்கும் நேரம் மிகவும் குறுகியது ஆகும்.
ஆனால் அந்தக் குறுகிய நேரத்துக்குள் நாம் பரிமாறும் மின் ஆவணங்கள் துரிதமாகப் பிரதி செய்யப்படக் கூடியவை. இப்பிரதி பண்ணாலானது, எமக்குத் தெரியாமலே நடைபெற்று அந்த ஆவணங்கள் வேறு எவருக்காவது விற்கப்பட்டுவிடும். அல்லது அவற்றின் உள்ளடக்கம் கசியவிடப்படும்.
மிகவும் இரகசியமான மின் ஆவணங்களில் உள்ள விடயங்களைக்கூட மிகவும் எளிதிலே கசிய விடமுடியும்.
ணிiணீrosoஜீt worனீ, tலீxt paனீ மற்றும் ஜிளிபி கோப்புக்களாகப் பரிமாற்றப்படும் தகவல்கள் மிக இலகுவாகப் பிரதி செய்யப்படக் கூடியவை.
இந்தச் செயற்பாடானது தற்போது பல சர்ச்சைகளைக் உருவாக்கியுள்ளது. இதைத் தடுக்கும் வழியிலே தகவல் பாதுகாப்புத் தொழில்நுட்பங்களும் சங்கேத மொழி முறைமைகளும் இருக்கத்தான் செய்கின்றன. ஆயினும் அத்தகவலின் பாதுகாவலர்களாலேயே வெளியிடப்படும் போது எந்தத் தொழில்நுட்பமும் பயனற்றுப் போய்விடுகிறது.
‘விக்கி லீக்ஸ்’ இணையத்தளம் பிரபலமடைந்து வருவதானது. தகவல் பாதுகாப்புத் தொழில் நுட்பத்தையும் இன்னொரு புதிய பரிணாமத்துக்குக் கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘விக்கி லீக்ஸ்’ இணையத்தில் தகவல்கள் கசிவதைத்தடுக்க பல புதிய நுட்பங்கள் ஆராயப்பட்டு வருகின்றன.
மொத்தத்தில் ‘விக்கி லீக்ஸ்’, இணையத் தொழில் நுட்பத்தின் புதியதோர் பரிமாணத்துக்கு வித்திட்டது மட்டுமன்றி புதிய ஊடகக் கலாசாரத்துக்கும் வழிசமைத்துக் கொடுத்திருக்கிறது. இவை உலகை எங்கே கொண்டு சென்று விடப்போகின்றன என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Thursday, November 18, 2010

வரப்புயர வன்னி உயரும்!


‘வரப்புயர நீர் உயரும்
நீர் உயர நெல் உயரும்
நெல் உயரக் குடி உயரும்
குடி உயரக் கோல் உயரும்’

என்று அரசன் ஒருவனை ஒளவையார் வாழ்த்திப் பாடியதை நாம் அறிவோம். ‘வரப்புயர’ என்ற ஒற்றை வார்த்தையால் மன்னனை வாழ்த்திப் பாடிய ஒளவையின் மதிநுட்பம் வார்த்தைகளால் விபரிக்கப்பட முடியாதது.
விவசாய நிலத்தின் வரப்பை உயர்த்தினால், வயலில் நீர் அதிகளவு தங்கியிருக்கும். அப்போது நெல் விளைச்சல் உயரும். நெல் விளைச்சல் நன்றாக அமைந்தால் தான் மக்களின் வாழ்வு மகிழ்ச்சியாக இருக்கும். மக்களின் வறுமை ஒழியும். அப்போதுதான் அரசு சிறக்கும். ஒரு அரசின் பெருமை, வரப்பு உயர்வதை ஆதாரமாகக் கொண்டே அமைந்து விடுகிறது என்பதை ஒளவையார் எளிமையாக விளக்குகிறார்.

வரப்பு உயர்ந்து அரசு சிறப்பதற்கு அடிப்படையாக அமைபவை ஆறுகளும் குளங்களுமே யாகும். அவற்றை உருவாக்குதல், உருவாக்கிய வற்றை காலத்துக்குக் காலம் புனர்நிர்மாணம் செய்து பாது காத்தல் ஒரு தேசத்துக்கு மிகவும் முக்கிய மானவை.
இலங்கை யைப் பொறுத்த வரையிலே கிளிநொச்சியை வடக்கின் நெற் களஞ்சியம் என்பர். கிளிநொச்சியின் வரப்புயர்வதில் பெருந் துணை புரிபவை இரணைமடு, கல்மடு, அக்கராயன், புதுமுறிப்பு போன்ற பாரிய நீர்ப்பாசனக் குளங்களும் ஏனைய பல நடுத்தர மற்றும் சிறிய ரகக் குளங்களுமாகும்.

கடந்த 3 தசாப்த காலமாக நீடித்து வந்த யுத்தத்தினால் இக் குளங்களும் பாதிக்கப் பட்டனவென் பதை எவராலும் மறுக்க முடியாது. போதிய பராமரிப் பின்றியும் வேறுபல காரணங்களாலும் அவற்றின் கட்டமைப்புகள் குலைந்து போயிருந்தன.
உடைப்பெடுத்த கல்மடு
குளத்தின் வெவ்வேறு கோணங்கள்


இத்தகைய தோர் நிலையில் அக்கொடூர யுத்தமும் முடிவுக்கு வந்தது. மீள் குடியேற்றங்கள் ஆரம்பிக்கப்பட்டு முடிவடையும் தறுவாயில் இருக்கின்றன. கிடைக்கும் வளங்களை கொண்டு அபிவிருத்தித் திட்டங்களும் புனர் நிர்மாண வேலைகளும் துரித கதியிலே மேற்கொள்ளப்படுகின்றன.
வடக்கு மாகாண சபைக்கான நிதி ஒதுக்கீட்டின் கீழ் 38 மில்லியன் ரூபா நிதி உதவியுடன் இரணைமடுக் குளத்தின் நீர்ப்பாசனத் திட்டமும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் 169 மில்லியன் ரூபா நிதி உதவியுடன் கல்மடுக் குளமும் புனரமைப்புச் செய்யப்படுவதற்கான திட்டங்கள் கட்டங்கட்டமாக ஆரம்பிக்கப்பட்டுவிட்டன. அவற்றின் சில கட்டங்கள் பூர்த்தி செய்யப்பட்டும்விட்டன.
அவ்வாறு பூர்த்தி செய்யப்பட்டவற்றுள் இரணைமடு நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் அமையும் திருவையாறு நீர்ப்பாசனத் திட்டமும்,  ஒன்றாகும்.

இரணைமடு நீர்ப்பாசனத் திட்டம் 1902 ஆம் ஆண்டிலிருந்து கட்டம் கட்டமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அக்குளத்தின் இடது கரையினால் நீரைப் பெறும் 3ம் வாய்க்காலின் நீர்க்கட்டுப்படுத்திகளும் விழுத்திகளும் பராமரிப்பின்றி சேதமடைந்து காணப்பட்டன.
3ம் வாய்க்கால் எனப்படுவது, வட்டக்கச்சியின் கோவிந்தன் கடைச் சந்தியிலிருந்து பூநகரியின் ஊரியான் வரை மிக நீண்ட தூரத்துக்கு இரணைமடு நீரைக் காவிச் செல்லும் வாய்க்கால் ஆகும்.
அதன் நீர்க்கட்டுப் படுத்திகளும் விழுத்திகளும் ஏறத்தாழ 38மில்லியன் ரூபா மதிப்பீட்டில் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டன.
மிகவும் குறுகிய காலத்துக்குள் செவ்வனே முடிக்கப்பட்ட இவ்வபிவிருத்திப் பணி கிளிநொச்சி வாழ் மக்களின் வாழ்வை மேம்படுத்த வழிவகுக்கும் என்பதில் எதுவித ஐயமுமில்லை.

கல்மடுக் குளமானது கிளிநொச்சியி லிருந்து 18 km கிழக்காக அமைந்திருக்கிறது. 1951 – 1953 காலப் பகுதியிலே மீள்கட்டமைக்கப்பட்டது.
இக்குளத்தின் வான் கதவுகளூடு நீர் பாய்வது கிளிநொச்சி மாவட்டத்துக்காக இருக்கின்ற போதிலும் நீரேந்து பரப்பு முல்லைத்தீவு மாவட்டத்திலேயே அமைந்திருக்கிறது. 2003ஆம் ஆண்டளவிலே நிகொட் திட்டத்தின் கீழ் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் இக்குளம் புனர்நிர்மாணம் செய்யப்பட்டது.கடந்த காலங்களின் கொடூர யுத்தம் இக்குளத்தையும் விட்டு வைக்கவில்லை.
நீரியல் ரீதியான அல்லது கட்டமைப்பு ரீதியான செயலிழப்புக்கள் எவையுமின்றி இக்குளம் உடைப்பெடுத்த விடயம் நாம் யாவரும் அறிந்ததே.வான் கதவுகளை உள்ளடக்கிய அணையின் ஒரு பகுதி உடைக்கப்பட்டது.
நீர்த் தேக்கத்தில் தேக்கி வைக்கப்பட்டிருந்த நீர் முழுவதும் வெளியில் பாய்ந்தபோது மண்ணையும் அள்ளிச் சென்றது. அதனால் ஏறத்தாழ 10 சீ ஆழமான பள்ளம் உருவாகியது.
மீளக் குடியமர்ந்த மக்களின் வாழ்வாதாரத்தைக் கருதும் போது நீர்ப்பாசனத் திட்டங்கள் செவ்வனே அமைய வேண்டியது அவசியமாகியது.


கல்மடுக்குளத்தின் புனர்நிர்மாணம் -
மீள்நிரப்பப்படும் மண் அணை

இத்தகையதோர் நிலையில் கட்டமைப்பு முற்றாகச் சிதைக்கப்பட்ட கல்மடுக் குளத்தின் தேவையும் உணரப்பட்டது.பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நிதியுதவியுடன் 169 மில்லியன் ரூபா நிதி மதிப்பீட்டில் என்ரெப் திட்டத்தின் கீழ் கடந்த ஒகஸ்ட் மாதம் புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. புதிய வான் கதவுகள் கட்டப்படும் அதேவேளை புனர்நிர்மாணப் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

தற்போது 40 சதவீதப் பணிகள் பூர்த்தியாக்கப்பட்ட நிலையில் அடுத்த வருட இறுதிக்குள் இத் திட்டம் பூரணப்படுத்தப்படுமெனத் தெரிவிக்கப்படுகிறது.புவியீர்ப்பினாலான நீர்ப்பாசனத்தின் கீழ் முன்றாம் வாய்க்காலினால் 7500 ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலம் தற்போது பயன்பெறத் தொடங்கிவிட்டது.

கல்மடுக் குளத்தின் புனர்நிர்மாணப் பணிகள் பூர்த்தி செய்யப்படும் போது ஏறத்தாழ 1350 ஹெக்ரயர் விவசாய நிலம் வளம் பெறும் என்பதில் எதுவித ஐயப்பாடுமில்லை.கிளிநொச்சி விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்ட பிரதேசமாகும். இரணைமடு மற்றும் கல்மடு ஆகிய குளங்கள் மட்டுமன்றி ஏனைய பெரிய, நடுத்தர மற்றும் சிறியளவிலான குளங்களும் புனரமைக்கப்பட்டு வருகின்றன.

இத்திட்டங்களின் வெற்றியில் தான் கிளிநொச்சி மண்ணின் உச்ச வளப் பாவனையும் தங்கியிருக் கிறது. சிறந்ததோர் எதிர்காலத்தை நோக்கிய கிளிநொச்சியின் பாதையில் இந்த நீர்ப்பாசனத் திட்டங்களின் அபிவிருத்தியும் ஒரு மைல் கல்லே!

Friday, November 12, 2010

நம்பிக்கையையே மூலதனமாகக் கொண்டு வியாபாரத்தை ஆரம்பித்திருக்கிறோம்!

 
வாடிக்கையாளர்: கதலி வாழைப்பழம் என்ன விலை?
வியாபாரி: கிலோ 80 ரூபா ஐயா, தம்புள்ள வாழைப்பழம்; நல்ல பழம்.
வாடிக்கையாளர்: தேங்காய் என்ன விலை?
வியாபாரி: இது ஒன்று 36 ரூபா இது 38 ரூபா. சிலாபத்து தேங்காய் நல்லது; வாங்கிப் பாருங்கோ.

இது கொழும்பு போன்ற நகரமொன்றில் நடந்த உரையாடலல்ல. தற்போதைய காலங்களில் கிளிநொச்சிச் சந்தையிலே வாடிக்கையாளர்களுக்கும் வியாபாரிகளுக்கும் இடையில் பொதுவாக நடைபெறும் உரையாடலின் ஒரு சிறு பகுதியாகும்.
அடிப்படை விவசாய உற்பத்திகளைப் பொறுத்தவரையிலே தன்னிறைவு கண்ட பிரதேசமாக கிளிநொச்சி விளங்கி வந்ததை எவராலும் மறுக்க முடியாது.

அப்பிரதேசத்தின் மீள்குடியேற்றப் பணிகள் ஏறத்தாழ பூரணப்படுத்தப்பட்டுவிட்ட நிலையை எட்டிவிட்டன. மக்களுடைய வாழ்வியலும் சகஜ நிலைமைக்குத் திரும்பத் தொடங்விட்டது.
அவர்களது வாழ்வியலிலே சந்தை என்பது ஒரு பிரதானமான அங்கமாகும். அம்மக்களின் வாழ்வாதாரம் விவசாயத்தை மட்டுமன்றி மீன்பிடித்தொழில், ஏனைய சிறு உற்பத்திக் கைத்தொழில்கள் மற்றும் சிறு வர்த்தகங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது.
கிளிநொச்சி மக்கள், தமது உற்பத்திப் பொருட்களைச் சந்தைப்படுத்தி வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் ஒரு மையமாகவும் தமது அடிப்படை நுகர்வுத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஒரு மத்திய நிலையமாகவுமே சந்தையைக் கருதுகின்றனர்.
இச்சந்தை காலத்துக்குக் காலம் இடம்மாற்றப்பட்டு, தற்போது அம்பாள் குளத்திலே அமைக்கப்பட்டிருக்கிறது.
எதிர்காலத்திலே, அச்சந்தையை ஒரு பொருளாதார மத்திய நிலையமாக மாற்றும் திட்டங்களும் காணப்படுகின்றன. இத்தகையதோர் நிலையிலே இச்சந்தை கிளி நகரிலிருந்து தூரத்திலே அமைந்துள்ளது என்ற கருத்து பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் மத்தியில் நிலவி வருகிறது. ஆயினும் கிளிநொச்சி பொதுச் சந்தை ஒரு பொருளாதார மத்திய நிலையமாக மாற்றப்படுவதை யாவரும் ஒருமித்து வரவேற்கின்றனர்.


‘மலைநாட்டு மரக்கறிகளும் தாராளம்’

 அவ்வியாபாரிகள் தமது வியாபாரத்தின் தற்போதைய நிலை பற்றி எம்முடன் பகிர்ந்துகொண்டனர். மரக்கறி விற்பனை செய்வோரில் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில், ‘உள்ளூரில் இருந்து மட்டுமன்றி வெளியூரிலிருந்தும் இங்கு மரக்கறிகள் வருகின்றன. கிளிநொச்சிப் பிரதேசத்தின் 100 சதவீதமான உற்பத்தியை எதிர்வரும் சித்திரை மாதமளவில் எதிர்பார்க்கலாம்.
சந்தை மாறியதால், வருமானக் குறைவொன்று இருப்பதை மறுக்கமுடியாது. ஏனெனில் சந்தையின் அமைவிடம் பிரதான வீதியிலிருந்து சற்றுத் தூரமாக இருக்கிறது. ஆதலால் அது இன்னும் பிரபலமடையவில்லை. ஆயினும், எதிர்காலத்தில் சந்தை பிரபல்யமடையத் தொடங்க, இக்குறை தீர்க்கப்பட்டுவிடும் என்றே நம்புகிறேன்.
தெற்கில் விளைவிக்கப்படும் கரட் போன்ற விவசாய விளைபொருட்கள் நெடுங்காலத்துக்குப் பிறகு இப்போதுதான் கிளிநொச்சி சந்தைக்கு வரத் தொடங்கியிருக்கின்றன. தம்புள்ள பொருளாதார வர்த்தக மையத்தில் இருந்து பல விளைபொருட்கள் இங்கு கொண்டுவரப்படுகின்றன.
சமகால வருமானம் என்று கருதும்போது, எமது குடும்பத்தின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற நாளாந்தம் ரூ 500-1000/= போதுமானது. அது வியாபாரத்தால் கிடைக்கிறது. ஆயினும் விற்பனையைக் கருத்தில் கொண்டால், கொள்வனவில் அரைக்கரைவாசியே விற்பனையாகிறது.

சிறிதளவிலான விளை பொருட்களே உள்ளூரில் இருந்து வருகின்றன. குறிப்பாக நெடுங்கேணி, திருவையாறு, முழங்காவில் போன்ற பிரதேசங்களில் இருந்து சின்ன வெங்காயம், பம்பாய் வெங்காயம், கத்தரிக்காய் போன்றன கிடைக்கப்பெறுகின்றன என்றார்.

கிளிநொச்சி மீன்கறியின் சுவைக்கு எந்த ஊர் மீன்கறியும் ஈடாகாது என்பர் அதைச் சுவைத்தவர்கள், கிளிநொச்சிச் சந்தையிலே விற்கப்படுவன பதப்படுத்தப்படாத உடன் கடலுணவுகள் என்பது பொதுவான அபிப்பிராயம். முன்னைய காலங்களில் பதப்படுத்தல் வசதிகளுக்கிருந்த பற்றாக்குறைகூட இதற்குக் காரணமாக இருக்கலாம். அத்துடன் கடலுணவு செறிந்துள்ள கடற்பகுதிகளை கிளிநொச்சியின் அயற் பிரதேசங்கள் கொண்டிருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆனால் மாறாக, இப்போது குளிரூட்டப்பட்ட கடலுணவுகளும் கிளிநொச்சிச் சந்தையில் கிடைக்கின்றன. பெருநகர மயமாக்கப்பட்ட பகுதிகளின் சந்தைகளைப் போலல்லாமல் இங்கு குளிரூட்டப்பட்ட மீனும், உடன் மீனும் தனித்தனியாகவே விற்கப்படுகின்றன.

‘விரும்பிய மீனை வாங்கி
செல்ல இப்போது அதிக வாய்ப்பு’மீன் வியாபாரி ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில்,
'நாச்சிக்குடா, வலைப்பாடு, யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களில் இருந்து உடன் கடலுணவு கிடைக்கப்பெறுகிறது. வவுனியாவில் இருந்து குளிரூட்டப்பட்ட கடலுணவு பெறப்படுகிறது.
மீனைப்பொறுத்த வரையிலே நாங்கள் விற்கும் அதியுயர் விலை கிலோவுக்கு 400 ரூபா மட்டுமே என்றார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், மீன் பிடிக்கப்படுவது குறைவாக இருக்கும் போது விலை உயர்வாக இருக்கிறது. ஆனால் விரதநாட்களில் மிக மலிவாகக் கிடைக்கும்.

பழைய சந்தையின் அமைவிடமோ என்னவோ, முன்னைய காலங்களில் மீன் சந்தை பிற்பகல் 3.00 மணி வரை நீடித்திருந்தது. ஆனால் தற்போது மதியம் 12.00 மணிக்கு மேல் நீடிப்பதே மிகவும் அரிதாக இருக்கிறது.
அத்துடன், தூர இடத்து மக்கள் அரைக் கிலோ மீனுக்காக 100 ரூபா செலவழித்து வரமாட்டார்கள் என்றார். இன்னொரு மீன் வியாபாரி தெரிவிக்கையில், ‘பதப்படுத்தப்பட்ட/குளிரூட்டப்பட்ட கடலுணவு சந்தையில் கிடைப்பது நல்லவிடயமே. அதனால் மக்கள் தமக்கு விரும்பிய கடலுணவைத் தெரிவு செய்து வாங்க முடிகிறது’ என்றார்.
தற்போது இவர்கள் தற்காலிகக் கொட்டகைகளிலேயே மீன்களை விற்றுவருகின்றனர். எதிர்காலத்தில் நிரந்தரக் கட்டடத் தொகுதிகளை அமைத்து விலைமனுக்களைக் கோர வேண்டி ஏற்பட்டால் தமக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்பதே இவர்களது கோரிக்கையாக இருக்கிறது.
‘முன்னைய காலங்களிலே, சுகாதாரப் பரிசோதகர் வந்து நச்சுத்தன்மையுடைய இரசாயனப்பதார்த்தம் இடப்பட்டு கடலுணவு பதப்படுத்தப்பட்டுள்ளதா? எனப் பரிசோதிப்பதுண்டு. சில வேளைகளில் அப்படிப்பட்ட கடலுணவைப் பறித்து கொட்டியும் இருக்கிறார்கள்.
தற்போதைய நிலையில், அத்தகைய பரிசோதகர்களின் தேவை அவசியமாகிறது’ எனச் சிலர் இரகசியமாகக் கூறியதையும் இங்கு குறிப்பிட வேண்டியிருக்கிறது.


கிளிநொச்சி, தென்னை வளம் நிறைந்த மாவட்டம். அந்நிலைமாறி தெற்கில் இருந்து தேங்காய்கள் கொண்டுவரப்பட்டு சந்தையில் விற்பனை செய்யப்படுவதைக்காண முடிந்தது.

8-10 ரூபாவில் இருந்த தேங்காயொன்றின் விலை ஒருமாத இடைவெளியில் 30-35 ரூபாவுக்கு மாறிவிட்டிருந்தது. முன்னர், உள்ளூர்த் தேங்காய்கள் விற்பனைக்கு வந்தன. ஆயினும் உற்பத்தியைச் சந்தைக்கு தொடர்ச்சியாக விநியோகிக்க முடியாத நிலையிலேயே தோட்டங்கள் காணப்பட்டன.
கடந்த கால இடப்பெயர்வுகளால் தென்னந் தோட்டங்கள் பராமரிக்கப்பட முடியாதனவாயின. விளைவு தேங்காய் விநியோகம் சீரற்றுப்போனது.
தேங்காய் உற்பத்தியில் அடுத்த
வருடம் உச்சத்தை எட்டி விடுவோம்’


தற்போது மக்கள் மீளக்குடியமர்ந்து, தமது பழைய வாழ்வியலுக்குத் திரும்புகின்றனர். ஆதலால் எதிர்வரும் காலங்களில் உள்ளூர்த் தேங்காய்கள் சந்தையில் கிடைக்கக் கூடியதாக இருக்கும் என்பது கண்கூடு.’ 10 ரூபா விற்கும் போது தேங்காய்கள் இங்கு கொள்வனவு செய்யப்பட்டு புத்தளம் கொண்டு செல்லப்பட்டன. நல்ல இலாபமும் கிடைத்தது.
இப்போது மரங்களில் காய்களில்லை. அத்துடன் உள்ளூர் கொப்பராத் தேங்காய்களுக்கு கிராக்கி அதிகம். ஆதலால் தேங்காய்களாக விற்காமல் கொப்பரா ஆக்கி விற்கிறார்கள்.
கடைசியில் நாங்கள் சிலாபத்திலிருந்து தேங்காயை வாங்குகிறோம். அதனால் பெரிய இலாபம் கிடைப்பது கடினமாகவே இருக்கிறது’ என்றார் தேங்காய் வியாபாரி ஒருவர்.

கிளிநொச்சி பொதுச் சந்தையிலே பழவகைகளின் விலையும் எதிர்பார்த்ததை விடச்சற்று அதிகமாகவே இருந்தது. வெளியூர்ப் பயணிகளுக்காக, அதிக இலாபமீட்டும் நோக்கில் விற்கிறார்களோ என்ற எண்ணத்துடன் வினவிய போது தான் உண்மை புலப்பட்டது. பழக்கடைகளிலே விற்கப்படும் பழங்களில் பெரும்பாலானவை உள்ளூர் உற்பத்திகளல்ல. ‘அவையாவுமே, தம்புள்ள பொருளாதார வர்த்தக மையத்தில் இருந்து கொண்டுவரப்படுபவை’ என்றார் பழ வியாபாரி ஒருவர்.‘வேறு பிரதேச வாழைப்பழம்
சித்திரைக்கு பின்னர் அவசியப்படாது’
 ‘கொய்யாப்பழத்தையும் மாம்பழத்தையும் தவிர ஏனைய பழங்கள் தம்புள்ளவிலிருந்து கொண்டுவரப்படுகின்றன. ஆதலால் எமக்கு பெரியளவில் இலாபம் கிடைப்பதில்லை. நீங்கள் எதிர்வரும் சித்திரை மாதத்துக்குப் பிறகு வந்தால் பழங்கள் மலிவாகக் கிடைக்கும் என்றார் அந்த வியாபாரி.

‘சித்திரைக்குப் பிறகு தான் உள்ளூர் உற்பத்திகள் வரத்தொடங்கும் அப்போது தான் எமக்கும் அதிக இலாபம் கிடைக்கும்’ என்றார் இன்னொரு பழவியாபாரி.
மினுவங்கொடையைச் சேர்ந்த சிங்களச் சகோதரர் ஒருவரும் பழங்கள் விற்றுக்கொண்டிருந்ததைக் காணமுடிந்தது.
‘நம்பிக்கையை மூலதனமாக வைத்து இங்கு நாங்கள் வியாபாரத்தை ஆரம்பித்திருக்கிறோம்; எந்த ஒரு அபிவிருத்தியும் ஏட்டளவிலேயே நின்றுவிடாது செயற்படுத்தப்படவேண்டும் என்பதே எமது விருப்பம்’ என்றார் அலுமினியப் பாத்திரங்களை விற்பனை செய்யும் வியாபாரியொருவர்.
‘இருபது வருடங்களுக்கு பின்னர்
கிளிநொச்சியில் கால் பதித்திருக்கிறேன்’
‘1990 களில் இடம்பெயர்ந்து மட்டக்களப்பில் வசித்து, தற்போது தான் மீளக்குடியமர்ந்துள்ளேன்’ என்றார் புடவை வியாபாரி அலியார். சந்தைக்கான போக்குவரத்து வீதிகள் அபிவிருத்தி செய்யப்பட்டு பொருளாதாரம் விரிவுபடுத்தப்பட்டால் தமது பொருளாதாரநிலை மேலும் உயரும் என்பதே அவரது அபிப்பிராயமாக இருக்கிறது.

பனம்பொருள் உற்பத்திப் பொருட்களையும் மண்சட்டி பானைகளையும் சந்தையில் ஓரளவு தாராளமாகப் பெறக்கூடியதாக இருக்கிறது. குடிசைக் கைத்தொழிலாக உள்ளூரிலேயே உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் விற்கப்படுகின்றன. சிலர் தாமே உற்பத்தி செய்து விற்கிறார்கள். சிலர் உற்பத்தியாளரிடம் கொள்வனவு செய்து விற்கிறார்கள்.


மீளக்குடியமரும் போது கிடைத்த சிறுதொகைப் பணத்தை மூலதனமாக வைத்தே வியாபாரத்தை ஆரம்பித்திருப்பதாகப் பெண்ணொருவர் தெரிவித்தார்.
சில வேளைகளில் வியாபார, பொருளாதார நெருக்கடிகளும் தொழில்வாய்ப்புப் பிரச்சினைகளும் இவ்வியாபாரிகள் மத்தியில் தவிர்க்கமுடியாததாகவே இருக்கிறது.
ஆயினும் இன, மத, மொழிவேற்றுமையின்றி தளராத நம்பிக்கையுடன் வியாபாரத்தை ஆரம்பித்திருக்கும் இவர்கள் சாம்பலில் இருந்து மீண்டெழும் பீனிக்ஸ் பறவைகளாகவே தெரிந்தனர்.கிளிநொச்சி பொதுச்சந்தை, நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் அமைக்கப்பட்டு அபிவிருத்தி செய்யப்படுகிறது.
நிரந்தர கட்டடங்களை அமைத்து சந்தையை விஸ்தரித்து மேம்படுத்தும் திட்டவரைவுகள் தயாரிக்கப்படுகின்றன.
1977களில் தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்தை ஒத்த தராதரத்தில் கிளிநொச்சிச் சந்தையும் இருந்ததைப் பலர் அறிந்திருப்பர். அக்காலகட்டத்தில் வாரத்தின் சில நாட்கள் அல்லங்காடியாகவும் சில நாட்கள் பகலங்காடியாகவும் தொழிற்பட்டு வந்தது.
கடந்த மூன்று தசாப்த காலமாகத் தொடர்ந்து தற்போது முடிவுக்கு வந்துவிட்ட யுத்தத்தால் சந்தையும் பெருமளவில் பாதிக்கப்பட்டது.அதனால் கிளிநொச்சிச் சந்தையின் அபிவிருத்தியை பூச்சியமட்டத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டிருக்கிறது.
நிதி ஒதுக்கீடுகளும் திட்டவரைவுகளும் பூர்த்திசெய்யப்பட்டவுடன் 2-3 வருட காலத்துக்குள் அபிவிருத்தியடைந்த பொதுச்சந்தையாக இது உருவாகும் என்பதில் எதுவித ஐயமுமில்லை.
இவ்வபிவிருத்தித் திட்டங்களுக்கிடையே உள்ளூர் உற்பத்திகளால் சந்தையை நிறைக்கப்போகும் புத்தாண்டை வியாபாரிகள் மட்டுமன்றி நுகர்வோரும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

Wednesday, November 10, 2010

கண்ணாடிக் கொள்கலன்கள் பாவனைக்கு பாதுகாப்பானவை

ஒரு காலகட்டத்திலே, கண்ணாடிப்பொருட்களின் பாவனை மிக வும் அதிகமாக இருந்தது. ஆனால் அவை இலகுவில் உடைந்து விடக்கூடியவை. இந்த இயல்பு காரணமாக அவற்றை நீண்ட காலத்துக்கு உபயோகப்படுத்துவதில் ஒரு நிச்சயமற்ற தன்மையும் காணப்பட்டது. விளைவாக நீண்டகாலம் பாவிக்கக் கூடிய, பாரம் குறைந்த பிளாஸ்டிக் பொருட்களை நோக்கி, தேவைகளின் சந்தை நகர்ந்தது. கண்ணாடிப் பொருட்களின் பொதுவான பாவ னையும் தேவையும் அருகியது.

பிளாஸ்டிக் பொருட்களின் பரவ லான பாவனையைத் தொடர்ந்து சில காலங்களில் சூழல் மாசடைதல் பிரச்சினை தலைதூக்கியது.

பின்னர்தான், கண்ணாடிப் பொருட்களின் அருமை உணரப் பட்டது. கண்ணாடிப்பொருட்கள் அவற்றின் உபயோகம் முடிந்த பின்னர் மீள்சுழற்சி செய்யப்படக் கூடியவை. இம்மீள் சுழற்சி மிகவும் எளிமையானது. மட்டுமின்றி எமக்கு நன்மை பயக்கக் கூடியதுமாகும்.
சுற்றுச் சூழலைப் பொறுத்த வரையிலே, கண்ணாடிப் பொருட் களை வீணே குப்பைகளில் எறிந்து விடாமல் மீள் சுழற்சி செய்வது சாலச்சிறந்தது எனலாம். கண்ணாடிப் போத்தலொன்றை குப்பையிலே எறிந்தால், அது உக்கி மண்ணோடு மண்ணாக பல மில்லியன் ஆண்டுகள் கூட ஆகலாம். ஆனால் மாறாக, நீங்கள் குப்பையில் எறிந்த கண்ணாடிப் போத்தல் 30 நாட்களுக்குள் புதிய வடிவைப்பெற்று கடை அலுமாரியை அலங்கரிக்கும்.

கண்ணாடியாலான பொருட்களை 100 சதவீதம் மீள் சுழற்சி செய்யலாம். பொதுவாக மீள் சுழற்சி செய்யப்படும் போது பதார்த்தங்கள் மீள மீள மீள் சுழற்சி செய்யப்பட முடியாதவை. மாறாக, கண்ணாடிப் பொருட்களோ, எத்தனை தடவைகள் மீள் சுழற்சி செய்யப்பட்டாலும் தமது தரத்தையோ தூய்மைத்தன்மையையோ இழப்பதில்லை.
கண்ணாடிப் பொருட்களின் மீள் சுழற்சியானது வினைத்திறன் மிக்கது எனக் கூறப்படுகிறது.

இம்மீள் சுழற்சியால் பெறப்படும் கண்ணாடியே கண்ணாடித் தயாரிப்பின் பிரதான மூலப்பொருட்கள் ஆகும். அத்துடன் 80 சதவீதமான மீள் சுழற்சிக்கண்ணாடிகள் மீண்டும் புதிய கண்ணாடிக் கொள்கலன்களாக மாறிவிடுவதைக் கண்ணாடி மீள் சுழற்சி செய்யும் துறையினர் உறுதி செய்கின்றனர்.
கண்ணாடி, மீள் சுழற்சி செய் யப்படுவதால் இயற்கை வளங்கள் பேணப்படுகின்றன. கண்ணாடித் தயாரிப்புக்கான மூலப்பொருட்கள் இயற்கை வளங்களிலிருந்தே பெறப்படுகின்றன. மீள் சுழற்சி செய்யப்படும் ஒவ்வொரு தொன் கண்ணாடிப் பொருட்களும் ஏறத்தாழ ஒரு தொன்னிலும் அதிகமான மூலப்பொருட்களை மீதப்படுத் துகின்றன. இம்மூலப்பொருட்களுள் 600 கிலோ கிராம் மணல், 205 கிலோ கிராம் சோடாத்தூள், மற்றும் 180 கிலோ கிராம் சுண்ணாம்புக்கல் ஆகியனவும் அடங்குகின்றன.
இன்றைய உலகிலே, சக்தித் தேவையானது துரித கதியிலே அதி கரித்து வருகிறது. ஆதலால் சக்தி வளங்களைப் பேணுவதும் சக்திப் பாவனையைச் சிக்கனமாக்கி சக்தியைச் சேமிப்பதும் அவசியமாகிவிட்டன. கண்ணாடிப் பொருட்களை மீள் சுழற்சி செய்தல் சக்தியைச் சேமிக்கும் செயற்பாடாகக் கருதப்படுகிறது.
புதிய கண்ணாடியை உற்பத்தி செய்தலானது மணலையும் ஏனைய பதார்த்தங்களையும் ஏறத்தாழ 2600 பாகை பரனைற் வரை வெப்ப மாக்குவதன் மூலமே பெறப்படுகிறது. அதற்கு பாரியளவிலான சக்தி தேவைப்படுகிறது. அச்சக்தியைப் பெறுதலானது சுற்றுச்சூழல் மாசையும் தோற்றுவிக்கிறது.
கண்ணாடியை தூளாக நொருக் குதலே கண்ணாடி மீள் சுழற்சியின் முதற்படியாகும். அத்தூளிலிருந்து கண்ணாடியாலான முடிவுப்பொருளை உருவாக்கும் போது இயற்கை மூலப்பொருட்களிலிருந்து அதே முடிவுப்பொருளை உருவாக்கும் போது தேவைப்படும் சக்தியின் 60% மட்டுமே தேவைப்படுகிறது. ஏனெனில் இத்தூளானது மிகவும் குறைந்தளவிலான வெப்ப நிலையி லேயே உருகும் தன்மையுடையது.
கண்ணாடி, இயற்கை மூலப் பொருட்களிலிருந்து தயாரிக்கப் படுவதாகும். ஆதலால், கண்ணாடிக் கொள்கலன்களுக்கும் அவற்றினுள் பேணப்படும் பதார்த்தங்களுக்கும் இடையிலான இரசாயனத் தாக்கம் புறக்கணிக்கத்தக்களவிலேயே நடைபெறுகிறது. இவ்வியல்பு காரணமாக, கண்ணாடிக் கொள் கலன்களை மீளப்பாவித்தலானது ஆரோக்கியமானதும் பாதுகாப் பானதுமாகுமெனக் கருதப்படுகிறது.

மீள் சுழற்சி செய்யப்படும் கண்ணாடிப் பொருட்கள் கண்ணாடி தயாரிப்பின் மூலப்பொருளாக மட்டும் பயன்படுவதில்லை. அலங்கரிக்கப்பட்ட நில ஓடுகளின் உற்பத்தியிலும் நிலவடிவமைப்பிலும் கடலரிப்பினால் பாதிக்கப்பட்ட கரையை மீளக் கட்டமைப்பதிலும் துணை புரிகின்றன.
மீள் சுழற்சி செய்தல் சுலபமானது எனக் கருதப்படும் பதார்த்தங்களுள் கண்ணாடி முக்கிய இடத்தைப் பெறுவதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இலகுவானது, மலிவானது எனக்கருதி நாம் கொள்வனவு செய்யும் பிளாஸ்டிக் பொருட்களின் பாவனை முடிந்தபின்னர் மறை முகமாக நாம் கொடுக்கும் விலை மிகப்பெரியது. இதை உணர்ந்த பலர் கண்ணாடிப் பொருட்களின் இயன்றவரையான பாவனைக்குத் திரும்பிவிட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிளாஸ்டிக் குடிநீர்ப் போத்தல்களின் பாவனை உச்சகட்டமாகிய காலம் மாறி, இன்று பலர் கண்ணாடிப் போத்தல்களைப் பாவிப்பவர்களாக மாறியிருப்பதை அலுவலகங்களிலே கண்டிருப்பீர்கள். இத்தகைய மாற்றங்களே வரவேற்கத்தக்கவை!

Friday, November 5, 2010

பேராதனைப் பூங்கா:காதலர்களுக்கு மட்டுமல்ல!

இயற்கை  அழகு தவழும் மத்திய மலைநாட்டிற்கு மணி மகுடம் சூடுபவை பூங்காக்கள். அவற்றிலும் சிறப்பு இடத்தைப் பெறுபவை தாவரவியல் பூங்காக்கள். பூங்காக்கள் என்றதுமே பலரது மனக்கண்ணில் கற்களாலான வாங்குகளில் அமர்ந்திருக்கும் காதலர்கள் தான் தெரிவர்.
ஆனால் இந்த நினைவுகளுக்கெல்லாம் அப்பால் ஒரு நாட்டின் இயற்கை வளத்தைப் பேணுவதிலும் ஏனைய பொழுதுபோக்கு மற்றும் சுற்றுலாத்தேவைகளைப் பூர்த்தி செய்வதிலும் இப்பூங்காக்கள் ஆற்றும் சேவை அளப்பரியது.அத்தகையதோர் பூங்காவாகத்தான் பேராதனைப் பூங்காவும் பார்க்கப்படுகிறது. இன்று தேசிய தாவரவியல் பூங்காவாகப் பரிணமித்திருக்கும் பேராதனைப் பூங்கா பல நூற்றாண்டுகளுக்கான வரலாற்றைத் தன்னுடன் காவி வந்திருக்கிறது.

பிரித்தானியரின் காலனித்துவ ஆட்சிக் காலத்திலே றோயல் தாவரவியல் பூங்கா (Royal Botanical Gardens) என அழைக்கப்பட்டது. அந்தத் தனித்துவமான பெயரே அதன் முக்கியத்துவத்தை எடுத்தியம்பும்.
இப்பூங்காவின் வரலாறு கி.பி. 14 ஆம் நூற்றாண்டிலிருந்து ஆரம்பிப்பதாகத் தெரியவருகிறது. மூன்றாம் விக்கிரமபாகு கி.பி. 1371 இல் தனது அரச மாளிகையை பேராதனையில் மகாவலி கங்கைக் கரையிலே அமைந்ததாகக் கூறப்படும் காலம் இப்பூங்காவின் தோற்றத்துக்குரிய காலமாகக் கருதப்படுகிறது.

பின்னர் கண்டி இராச்சியத்தை ஆண்ட மன்னர்களின் முடிக்குரிய பூங்காவாக ராஜாதி ராஜசிங்கனின் காலம் (1780 – 1798) வரை இப்பூங்கா காணப்பட்டது.
இரண்டாம் இராஜசிங்கனின் காலத்திலே போர்த்துக் கேயருக்கும் மன்னனுக்கும் இடையே நடைபெற்ற கன்னொருவ போர் மிகவும் பிரசித்தி பெற்றது. இப்போர் நடந்தது, பேராதனைப் பூங்காவின் வடக்குப் பிரதேசத்திலே மகாவலி கங்கைக்கு அக்கரையிலாகும். காலங்காலமாக மன்னர்களின் பராமரிப்பிலே இப்பூங்கா இருந்ததாகவும் வரலாறு உறுதி செய்கிறது.1815 இலே, கண்டிய இராசதானி ஆங்கிலேயரால் கைப்பற்றப்பட்டு ஐந்து ஆண்டுகளின் பின்னர் இப்பூங்கா ஆங்கிலேயரின் ஆளுமைக்குட்பட்டது.

இன்றும் றோயல் தாவரவியல் பூங்கா என உத்தியோகபூர்வமாக அழைக்கப்படும் பிரித்தானியாவின் கியூ தோட்டத்தைப் பற்றி அறிந்திருப்பீர்கள். அது 1761 ஆம் ஆண்டளவிலே வேல்ஸ் இளவரசியால் 9 ஏக்கர் பரப்பளவிலே ஆரம்பிக்கப்பட்டு இன்று 288 ஏக்கர் பரப்பளவுக்கு விஸ்தரிக்கப்பட்டுள்ளது. இத்தோட்டம் உலகளாவிய ரீதியிலே பிரபலமடைந்திருப்பதன் பின்னணியில் பல காரணிகள் அமைந்திருக்கின்றன.
பொழுது போக்குக்குரிய பூங்காவாக மட்டுமன்றி, பல அரிய தாவரங்களை ஆவணப்படுத்துவதுடன் அவற்றைப் பேணிவரும் பூங்காவாகவும் கியூ பூங்கா காணப்படுகின்றது.உலகின் பல பாகங்களிலும் உள்ள தாவர இனங்களை ஒன்றாக கியூ தாவரவியல் பூங்காவில் காண முடியும். அவை மட்டுமன்றி வன ஜீவாரசிகளையும் கூட இங்கு காண முடியும். இப்பூங்கா மிகவும் சிறந்த முறையிலே பராமரிக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. கியூதாவரவியல் பூங்காவிலுள்ள தேசிய தாவரத் தொகுப்புக் கூடம் மிகவும் பழைமையானது.

அத்துடன் உலகில் உள்ள தாவரங்களின் அடையாளங் காணக்கூடிய பாகங்களை மிகவும் சிறப்பான முறையிலே ஆவணப்படுத்தியும் வருகிறது. இக்கூடத்தில் வைக்கப்பட்டிருக்கும் ஆவணத் தொகுப்பு உலகின் நான்காவது பெரிய தாவர ஆவணத் தொகுப்பு ஆகும்.
இலங்கையில் பிரித்தானியரது ஆட்சி வேரூன்றியிருந்த கால கட்டத்திலே, கியூபூங்காவின் பணிப்பாளர் நாயகமாக இருப்பவரே பேராதனைப் பூங்காவின் பணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டார்.

ஆதலால் கியூ பூங்காவை ஒத்த வடிவிலானதாக பேராதனைப் பூங்காவும் பரிணமித்தது. வெளிநாடுகளிலிருந்து பெறுமதிமிக்க பலதாவர இனங்கள் இப்பூங்காவுக்குக் கொண்டு வரப்பட்டன. பூங்காவின் தரம் மேம்படுத்தப்பட்டது. பூங்கா சர்வதேச ரீதியிலே புகழ்பெறத் தொடங்கியது.
அந்த வகையிலேயே தான் பேராதனை பூங்கா வளாகத்தினுள்ளேயே அமைந்திருக்கும் தேசிய தாவரத் தொகுப்புக் கூடமும் முக்கியத்துவம் பெறுகிறது. தாவரத் தொகுப்புக் கூடம் என்ற சொல்லைக் கேள்விப்பட்டவர்கள் சில பேர் மட்டுமே! இலங்கையிலே அத்தகையதொரு கூடம் அமைந்திருக்கிறது என்பதைப் பலர் அறிந்திருக்க மாட்டார்கள்.

உலகிலே கண்டுபிடிக்கப்பட்ட பற்பல தாவர இனங்கள், குடும்பங்கள், பிரிவுகள் காணப்படுகின்றன. இன்னும் கண்டுபிடிக்கப்படாதன அல்லது இனங் காணப்படாதன பலவும் காணப்படுகின்றன.
எதிர்காலத்தை நோக்காகக் கொண்ட ஆய்வுகளுக்காக அவற்றைப் பேணி ஆவணப்படுத்துவது அவசியமல்லவா? அந்த ஆவணப்படுத்துதலின் மையங்களாகச் செயற்படுபவைதான் இந்த தாவரத் தொகுப்புக் கூடங்கள். தாவரமொன்றை அடையாளப்படுத்தத் தேவையான பாகங்களும் அத்தாவரம் பற்றிய அடையாளங்களும் ஒன்றாக ஆவணப்படுத்தப்பட்டு கோப்புகளாக ஒழுங்கொன்றிலே பேணப்பட்டிருக்கும்.
பேராதனை பூங்கா வளாகத்தினுள்ளேயே பிரித்தானியர் கால வடிவமைப்பை ஒத்த வெள்ளை நிற மாளிகையையும் காணலாம். அது முன்னொரு காலத்தில் தாவரவியல் பூங்காவின் பணிப்பாளர் நாயகத்தின் மாளிகையாகக் காணப்பட்டது.

வாசல் கதவிலே ‘அனுமதி பெற்று உட்பிரவேசிக்கவும்’ என்ற அறிவித்தல் பலகையையும் காண முடியும். அதுதான் இலங்கையின் தேசிய தாவரத் தொகுப்புக்கூடம்.
பிரித்தானியர் காலத்துக்கட்டடங்கள் தமக்கேயுரித்தான பிரமாண்ட பாணியிலே வடிவமைக்கப்பட்டிருக்கும். அவற்றின் அருகில் செல்லும் போதே, நாமும் காலனித்துவ ஆட்சிக் காலத்திலேயே வாழ்கின்றோமோ என்ற உணர்வு ஏற்படுவதை எவராலும் மறுக்க முடியாது. கதவைத் திறந்து எம்மை உள்ளே அழைத்துச் சென்றார் தேசிய தாவரவியல் பூங்கா திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி டி. எஸ். ஏ. விஜயசுந்தர.
அவரிடம் ஆழ்ந்த அறிவுடன் எளிமையும் சேர்ந்தே குடிகொண்டிருந்தது. தேசிய தாவரத் தொகுப்புக் கூடம் பற்றிய விளக்கங்களை மிகவும் தெளிவாக கூறினார் கலாநிதி டி. எஸ். விஜயசுந்தர.
கட்டடத்தின் உள்ளக வடிவமைப்பும் மரவேலைப்பாடுகளும் பிரமிக்க வைத்தன. உள்ளே நுழைந்ததும் உணரக் கூடியதாக இருந்த பழைய மரவாசனை, பழைமைமிக்க மாளிகைக்குள் இருக்கும் வித்தியாசமான உணர்வைத் தந்தது. கீழ் மண்டபத்திலே உள்ள அலுமாரிகளில் தாவரவியலுடன் தொடர்புடைய பல அரிய நூல்கள், அவற்றின் முதற்பிரதிகள் வைக்கப்பட்டிருக்கின்றன. வாசிக்க வருபவர்களுக்கு வசதியாக நூலகத்தை ஒத்த அமைப்பு காணப்படுகிறது. மேல்மாடியிலே ஆவணப்படுத்தப்பட்ட தாவரப் பாகங்களின் தொகுப்புகள் கோவையாக்கப்பட்டு அலுமாரிகளிலே சீராக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
கியூதோட்டத்திலே இருக்கும் தாவரத் தொகுப்புக்கூடத்தின் உள்ளக வடிவமைப்பை ஒத்ததாகவே இந்தக் கூடமும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
இலங்கையில் இருக்கும் தாவரங்களுள் ஏறத்தாழ 148,000க்கும் அதிகமான தாவரக் குடும்பங்கள் இக்கூடத்திலே ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
கியூ தாவரத் தொகுப்புக் கூடத்திலேயே பயன்படுத்தப்படும் ஹச்சிசன் வகைப்படுத்தலே இங்கும் பயன்படுத்தப்படுகிறது. முதலில் இனம், குடும்பம் ரீதியாக வகைப்படுத்தப்படும் தாவரங்கள் பின்னர் அவற்றின் ஆங்கில முதலெழுத்துக்களின் அடிப்படையிலும் வகைப்படுத்தப்பட்டிருக்கும். இம்முறைமையை கியூ முறைமை எனவும் குறிப்பிடுவர்.

இவ்வாறு ஆவணங்கள் வகைப்படுத்தப்பட்ட பின்னர் அலுமாரிகளுள் அடுக்கப்பட்டு பேணப்படும். அவற்றின் கோப்பு இலக்கம் குறித்த அலுமாரியின் கதவிலே எழுதப்பட்டிருக்கும். ஒரு இலக்கத்துக்குரிய தாவரத்தின் ஆவணத்தைத் தேடும்போது, அதனுடன் கூடவே அத்தாவரக் குடும்பத்தை ஒத்த தாவரக் குடும்பங்களின் ஆவணங்களையும் பெற முடியும்.
தாவரமொன்றை அடையாளப்படுத்துவதற்கேற்ற வகையிலே அத்தாவரமோ அல்லது தாவரப்பாகமோ பெறப்பட்டு காயவைத்துப் பேணப்படும். பின்னர் பொருத்தமான கடதாசியில் ஒட்டப்பட்டு அத்தாவரம் தொடர்பான விடயங்களும் அக்கடதாசியிலே எழுதப்படும். அதன் பின்னர் அவ்விபரங்கள் கோப்புகளாகப்பட்டு பாதுகாப்பான முறையிலே பேணப்படும். உயிரியல் ரீதியிலான கோணங்களில் (holo type, electro type) அவை பேணப்படுவதும்குறிப்பிடத்தக்கது.

இந்த ஆவணங்களை தாவரங்களின் பிறப்புச் சான்றிதழ்களாக கூடக் கருத முடியும். சில ஆவணங்கள் ஏறத்தாழ 160 – 170 ஆண்டுகள் பழைமையானவை.
உலக தாவரவியல் துறையின் முன்னோடிகளாகக் கருதப்படும் சில ஆய்வாளர்கள் தமது கைப்பட எழுதி ஆவணப்படுத்திய ஆவணங்களும் இந்தத் தாவரத் தொகுப்புக் கூடத்தில் காணப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.பூச்சிகள் அரிப்பதிலிருந்து இந்த ஆவணங்களைப் பாதுகாப்பதற்காக அவை தேக்கு மரத்தாலான அலுமாரிகளில் பேணப்படுகின்றன. முன்னைய காலங்களிலே இந்த ஆவணங்களின் மீது இரசகுளோரைட் பூசப்பட்டு அவை பேணப்பட்டன. ஆனால் இரசகுளோரைட் பதங்கமாகும் இயல்புடையது. ஆதலால் வளி மண்டலத்திலே பரவிவிடுகிறது.

இது நச்சுத் தன்மையுடையதாகையால் சுகாதாரப் பிரச்சினைகள் உணரப்பட்டன. விளைவாக உலகளாவிய ரீதியிலே இரசகுளோரைட் தடை செய்யப்பட்டது. தற்போது ஐதாக நெய்யப்பட்டிருக்கும் துணியிலே சுற்றப்பட்ட நெப்தலின் உருண்டைகள் பயன்படுத்தப்படுகின்றன. அத்துடன் இந்த ஆவணக் கோப்புகள் கிரமமாக குளிர்சாதனப் பெட்டியிலேயே (defreezer) 48 மணி நேரங்கள் வைக்கப்பட்டு பின் வெளியே எடுக்கப்படுகின்றன.

நீங்கள் புதிதாக ஒரு தாவரத்தைக் கண்டறிந்து விட்டதாக வைத்துக் கொள்வோம். அது இலங்கைக்குப் புதியதா? அல்லது விஞ்ஞானத்துக்கே புதியதா என்பதை இந்த தாவரத் தொகுப்புக் கூடங்களின் துணையுடன் அறிய முடியும். அதாவது இக்கூடத்தில் இருக்கும் மாதிரிகளுடன் அத்தாவரம் பொருந்தாவிடில், கியூ தாவரத் தொகுப்புக்கூடத்துக்கு அனுப்பப்படும். அங்கும் பொருந்தாவிடில் விஞ்ஞானத்துக்கே அத்தாவரம் புதியது என முடிவு செய்யப்படும்.
அதேபோல இந்த ஆவணத்தொகுப்புகளை அடிப்படையாகக் கொண்டு தாவரங்களின் சிவப்புப் பட்டியலைத் தயாரிக்க முடியும். அதே அடிப்படையில் இலங்கைக்கே உரித்தான தாவரங்களின் சிவப்புப் பட்டியல் தற்போது தயாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த ஆவணங்களின் உதவியால் காலத்துடன் தாவரங்களின் பிரதேச ரீதியிலான பரம்பலையும் ஆராய முடியும்.
உலகளாவிய ரீதியிலே காணப்படும் தாவரத் தொகுப்புக் கூடங்கள் தமக்கிடையிலான ஆவணப் பரிமாற்றங்களிலும் ஈடுபடுகின்றன. பல சமயங்களில் அவை வெற்றிகரமாக அமைவதில்லை என கலாநிதி டி. எஸ். ஏ. விஜயசுந்தர தெரிவித்திருந்தார்.
இன்றைய நவீன யுகத்திலே தகவல்கள் யாவுமே மின்மயப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வழியிலே, தாவரத் தொகுப்புக் கூடத்தின் ஆவணங்களும் மின்மயப்படுத்தப்பட்டு வருகின்றன. மின்மயப்படுத்தப்பட்ட ஆவணங்கள் பரிமாற்றத்துக்கும் சேமிப்புக்கும் மிக இலகுவானவை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

இலங்கையைப் பொறுத்த வரையிலே, தாவரங்களின் சரியான தாவரவியல் பெயர்களை உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் அரச நிறுவனம் இத்தேசிய தாவரத் தொகுப்புக் கூடமாகும். தாவரங்களைத் தேடிக்கண்டுபிடித்து அவற்றை இனங்கண்டு, அவற்றின் மாதிரி உருக்களைத் தயாரித்து ஆவணப்படுத்தும் செயற்பாட்டை இக்கூடம் மேற்கொண்டு வருகிறது.
விஞ்ஞான ரீதியான வகைப்படுத்தலுடன் தொடர்புடைய ஆராய்ச்சிகளை மேற்கொள்கின்ற உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்களுக்கு தேசிய தாவரத் தொகுப்புக் கூடம் வசதிகளை வழங்குவதோடு தாவரங்கள் தொடர்பில் சட்ட முறையான சிக்கல்கள் தோன்றுகின்றவிடத்து தாவர இறக்குமதி மற்றும் ஏற்றுமதியின் போது தொற்றுநோய்த் தடை காப்பு நிறுவனத்திற்கும் இலங்கை சுங்கத் திணைக்களத்திற்கும் சேவையை வழங்கி வருகின்றது.

இலங்கைக்கான இந்த தாவரத் தொகுப்புக் கூடத்தை 2016 ஆம் ஆண்டுக்குள் தென் ஆசியாவின் தாவரத் தொகுப்புக்கூடமாக மாற்றுவதே மஹிந்த சிந்தனையின் பத்தாண்டு (2006 – 2016) திட்டமாகும். அது மட்டுமன்றி இலங்கையின் இயற்கைத் தாவர வலயங்கள் தொடர்பில் பல அபிவிருத்தித் திட்டங்களும் காணப்படுகின்றன.
பேராதனைப் பூங்கா, கல்லாலான வாங்குகளையும் இந்த தாவரத் தொகுப்புக் கூடத்தையும் மட்டும் கொண்டிருக்கவில்லை. அங்கேயே திணைக்களத்தின் கல்வி நிலையம் காணப்படுகிறது. பல கற்கை நெறிகள் நடாத்தப்படுகின்றன. இலங்கையின் பெரிய அந்தூரியம் பண்ணை, இழைய வளர்ப்பு ஆராய்ச்சி நிலையம் போன்ற பல கட்டமைப்புக்களை இப்பூங்கா தன்னகத்தே கொண்டுள்ளது.
பேராதனை பூங்காவில் இருக்கும் ஒவ்வொரு மரத்தின் பின்னணியிலும் ஒரு சுவாரசியமான வரலாறு, கதை இருக்கும். ஒவ்வொரு மரமும் அங்கு நாட்டப்பட்டதற்கு ஒரு காரணம் இருக்கும். அங்கு காணப்படும் நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்த மற்றும் பிரமாண்டமான, விதவிதமான, விசித்திரமான மரங்கள் இயற்கையின் படைப்பை வியக்க வைக்கும்.
அங்குவரும் இளைஞர்களின் நடத்தைகள் கெளரவமாக இருக்க வேண்டும். பூங்காவின் பாரம்பரியம் பேணப்பட வேண்டும் என்ற கொள்கையை வலியுறுத்திய அறிவித்தல் பலகைகளை பூங்கா முழுவதும் பரவலாக காண முடியும்.
பச்சைப்பசேலென்ற புல் வெளிகளிலே பொலித்தீன் குப்பைகளை வீசிச் செல்லும் சுயநலவாதிகளும் அறிவித்தல் பலகையைச் சற்றேனும் மதிக்காத இளைய தலைமுறையினர் சிலரும் பேராதனை பூங்காவின் யதார்த்தங்களாகவே தெரிந்தனர்.
பேராதனைப் பூங்காவின் ஒவ்வொரு அங்கத்தையும் ஆழச் சிந்தித்து அனுபவித்து இரசிப்பதில் கிடைக்கும் பேரின்பம் வார்த்தைகளால் விபரிக்க முடியாதது. அவ்வண்ணம் அனுபவித்தவர்களால் மட்டுமே உணரக்கூடியது.
இயற்கையின் அழகை வியாபிக்கச் செய்து எமை வியப்பில் ஆழ்த்தும் பேராதனைப் பூங்கா ஒரு தேசிய சொத்து எனலாம். அதை நன்றே பாதுகாத்து மேலும் வளப்படுத்தி எமது எதிர்கால சந்ததியினரிடம் ஒப்படைக்க வேண்டியது எம் ஒவ்வொருவரினதும் கடமையாகும்.

கிளிநொச்சி மண்ணை மேலும் வளமாக்க தயாராகிறது இரணைமடுக் குளம்


வெளிநாட்டு உதவிகள் எதுவுமேயின்றி மூன்றாம் வாய்க்கால் நீர்ப்பாசனத் திட்டம்


வீதியின் இருமருங்கிலும் பச்சைப் பசேலென்று வயல் வெளிகள்... வருடத்தின் பெரும் பகுதியில் நீர் சலசலத்துக்கொண்டிருக்கும் வாய்க்கால்கள்... இவை கிளி நொச்சிக்கேயுரித்தான தனி அடை யாளங்கள்.

கிளிநொச்சி என்றால் தனிக்காடு என்று இருந்த நிலையை மாற்றி ஒரு விவசாயப் பிரதேசமாக அது மாற்றப்பட்டதன் பின்னணியில் இரணைமடு நீர்ப்பாசனத் திட்டம் அமைந்திருப்பதை எவராலும் மறுக்கமுடியாது. ஏறத்தாழ 1902 ஆம் ஆண்டிலிருந்து இத்திட்டம் பல படிகளாக நடைமுறைப்படுத் தப்பட்டது.

இரணைமடுக் குளத்தின் மூலம் ஏறத்தாழ 8445 ஹெக்டயர் நிலப்பரப்புக்கு புவியீர்ப் பினாலான நீர்ப்பாசனத்தை மேற்கொள்ள முடியும்.

இரணைமடுக் குளத்துக்கு நீர் வழங்கும் ஒரேமூலம், கனகராயன் ஆற்றுப்படுக்கையா கும். இத்திடடம் கிளிநொச்சி மாவட்டத்தின் 40% விவசாய நீர்ப்பாசனத் தேவைகளுக்குப் போதுமானதாக இருக்கிறது. விவசாயத்தின் பிரதான பயிராக நெல் இருக்கின்ற போதும், உழுந்து, பயறு, கெளபி, மற்றும் மரக்கறி வகைகளும் பயிரிடப்படுகின்றன.

கடந்த மூன்று தசாப்த காலமாக இடம்பெற்ற கொடிய யுத்தம் கிளிநொச்சி மக்களின் இடம்பெயர் வுக்குக் கார ணமாகியது. அது மட்டுமன்றி, வேறு பிரதேச மக்கள் கிளிநொச்சிக்கு இடம் பெயரவும் வழிவகுத்தது. இத்தகைய தோர் நிலையில்லாத நிலைமையால் நீர்ப்பாசனத் திட்டங்களை ஒழுங்காக மதிப்பிட்டு கட்டுமாணங்களைப் பராமரிக்க முடியவில்லை. விளைவு, கட்டுமா னங்கள் சிதைவடைந்தன. அச்சிதைவுகள் மேலும் பல சிதை வுகளை உருவாக்கின. வாய்க்கால்கள் புதர்கள் மண்டித் தூர்ந்து போயின. அக்காலத்தில் இயலுமாக இருந்த பராமரிப்பு மட்டுமே மேற்கொள் ளப்பட்டது.

அதுமட்டுமன்றி கடந்த காலங்களில் வேறு பல பிரச்சினைகளும் காணப்பட்டன. விவசாயத்துக்குத் தேவையான விதை நெல், உரம், இரசாயனப் பதார்த்தங்கள் போன்றன போதியளவு கிடைக்கவில்லை. களஞ்சிய வசதிகள், சந்தைப்படுத்தல் தொடர்பான அறிவு மற்றும் மேம்படுத்தப்பட்ட விவசாய நடைமுறைகள், நீர் முகாமைத்துவ நடைமுறைகள் போன்றன பற்றிய தெளிவின்மை ஆகியனவும் காண ப்பட்டன.

அத்துடன் எந்த ஒரு ஆக்கபூர்வமான நடவடிக்கையையும் நடைமுறைப் படுத்துவதில் பல சிக்கல்கள் காணப்பட்டன.

இவை நீர்ப்பாசனத் திட்டங்களிலே பாரிய ஆதிக்கத்தைச் செலுத்தின. இதற்கு இரணைமடுத் திட்டம் ஒன்றும் விதிவிலக்கல்ல.

இப்பிரச்சினைகளுக்காக நீர்ப்பாசனத் திட்டம் முற்றாகக் குலைந்து போகக் கூடாது என்பதில் நீர்ப்பாசனத் திணைக்களமும் உறுதியாக இருந்தது. ஆகையால் இரணைமடுக் குளத்தின் நீர்வரத்து அதிகமாக இருக்கும் போது குளத்தின் முழு விநியோக மட்டத்தை விடக் குறைவான மட்டத்துக்கு நீர் வரத்து மட்டுப் படுத்தப்பட்டது.

குளக்கட்டு சேதப்படாத வண்ணம் வான் கதவுகள் திறந்து மூடப்பட்டன. அப்படி இருந்த போதும் சில இடங்களில் குளக்கட்டு அரிப்படைந்து சேதமடைந்ததைத் தவிர்க்க முடியாது போனது.

குளத்தின் இடது, வலது கரைகளிலே காணப்பட்ட துருசுகள் பூரணமாக மூடப்படமுடியாதனவாயின. அவசரக் கதவுகளும் அவற்றுடன் இணைந்த தொகுதிகளும் பழுது பார்க்க வேண்டிய நிலையில் இருந்தன.
வாய்க்கால்கள் அரிப்படைந்தன. களைகளாலும் புதர்களாலும் மூட ப்பட்டன. வாய்க்கால்களின் இடை யிடையே அமைந்திருக்கும் மதகுக் கதவுகளும் சேதமடைந்தே காண ப்பட்டன. வாய்க்கால்களையொட்டிக் காணப்பட்ட வீதிகளும் சேதமடைந்தே காணப்பட்டன.

இத்தகையதோர் நிலையில், யுத்தம் முடிவடைந்து மீள் குடியேற்ற நடவடிக்கைகளும் அபிவிருத்தித் திட்டங்களும் ஆரம்பிக்கப்பட்டன. அவை இன்று ஒரு குறிப்பிடத்தகு நிலையை அடைந்திருப்பதை எவராலும் மறுக்கமுடியாது.
கிளிநொச்சி வாழ் மக்களில் பெரும்பாலானோர் விவசாயத்தையே தமது வாழ்வாதாரமாகக் கொண் டவர்கள். ஆதலால் அவர்கள் விவாசாயத்தை முன்னெடுப்பதற்கு நீர்ப்பாசனத் திட்டங்கள் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் எனப்பல தரப்பினராலும் உணரப்பட்டது.

அதனடிப்படையில் இரணைமடு நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் அமையும் திருவையாறு நீர்ப்பாசனத் திட்டம் தெரிவு செய்யப்பட்டது. இரணை மடுக் குளத்தின் இடது கரையினால் வளம் பெறும் 3ம் வாய்க்காலின் நீர் கட்டுப்படுத்திகள் மற்றும் விழுத்திகளின் கட்டுமானப் பணிகள் ஆரம்பிக் கப்பட்டன. எந்தவித வெளிநாட்டு நிதி உதவியுமின்றி வடக்கு மாகாண சபைக்கான நிதி ஒதுக்கீட்டிலிருந்து கிளிநொச்சி நீர்ப்பாசனத் திணை க்களத்துக்கு வழங்கப்பட்ட நிதி இக்கட்டுமானப் பணிகளுக்குப் பயன்படுத்தப்பட்டது.

மூன்றாம் வாய்க்காலானது திருவையாறு வட்டக்கச்சிப் பகுதியில் கோவிந்தன் கடைச்சந்தியில் இருந்து பூநகரியின் ஊரியான் வரையான பகுதி வரை செல்கிறது. அப்பகுதிகளில் இருக்கும் விவசாய நிலங்கள் 3ம் வாய்க்காலால் வளம் பெருகின்றன.
ஏறத்தாழ 38 மில்லியன் ரூபா மதிப்பீட்டில் கடந்த ஏப்ரல் மாதம் துரிதகதியிலே கட்டுமானப் பணிகளும் திருத்த வேலைகளும் ஆரம்பிக்கப்பட் டன. 3ம் வாய்க்காலுக்கான நீர் வரத்து முற்றாக நிறுத்தப்பட்டது. சிறு போகம் முடிந்து பெரும் போகம் தொடங்குவதற்கு இடைப்பட்ட காலம் தெரிவு செய்யப்பட்டமைக்கும் அதுவே காரணமாகும். பெரும்போக விதைப்புக்கு நீர்ப்பாசனம் அவசிய மில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது-

தற்போது பெரும்போக விதைப்பும் முடிவடைந்த நிலையில் 3ம் வாய்க்காலில் மேற்கொள் ளப்பட்ட கட்டுமானப் பணி களும் முடிவடைந்துவிட்டன. இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் இரணைமடு நீர்ப்பாசனத் திட்டத்தின் உற்பத்தித் திறனை அதிகரித்தல் ஆகும். நீரின் முகாமைத்துவம் அதனுள் அடங்கிவிடுகிறது. அத்துடன் நீண்டகால நோக் கிலே இத்திட்டம் விவசாய அபிவிருத்தி சந்தைப்படுத்தல் வசதிகள், நன்னீர் மீன்வளர்ப்பு அபிவிருத்தி போன்றவற்றையும் உள்ளடக்குகிறது.

நீர்ப்பாசனக் கட்டமைப் புகளைப் புனரமைத்தல், அவற்றை இயக்குதல் மற்றும் பராமரித்தல் செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்தல், இத்திட்டம் அமைந்திருக்கும் பகுதியின் அபிவிருத்தி வேலைகள் மற்றும் சிறு வீதி அபிவிருத்தி, நீர் விநியோகம் போன்ற விடயங்களும் இத்திட்டத்தினுள் அடங்குகின்றன.
முற்றாகப் பூரணப்படுத்தப்பட்ட 3ம் வாய்க்காலின் நீர்க்கட்டுப்படுத்திகள் நான்கும் நீர் விழுத்திகள் மூன்றும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவினால் நாளை அங்கு ரார்ப்பணம் செய்து வைக்கப்பட விருக்கின்றன.
இத்தகவல்களை கிளிநொச்சிப் பிராந்திய நீர்ப்பாசனப் பணிப்பாளர் சுதாகரன் எம்முடன் பகிர்ந்து கொண்டார். சுமார் 7500 ஏக்கர் சாகுபடிக்காக, விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு மிகவும் குறுகிய கால எல்லைக்குள் இத்திட்டம் பூரணப் படுத்தப்பட்டிருக்கிறது. அதன் பின்ன ணியில் தொழிற்பட்ட அனைவரும் பாராட்டப்பட வேண்டியவர்களே!

இத்திட்டத்தின் பின்னரான பராமரிப்பு வேலைகள் காலத்துக்குக் காலம் கிரமமாக நடைபெற வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு நடைபெற்றால், இத்திட்டத்தால் வளம் பெறும் விவசாயப் பிரதேசங்க ளின் பயிர்ச்செறிவு மேலும் அதிகரிக்கும் என்பதில் எதுவித ஐயமுமில்லை.

தீபாவளி:மனிதம் நிறைந்த திருநாள்

தீபாவளி என்றதும் பொதுவாகவே நினைவுக்கு வருபவை இனிப்புப் பலகாரங்களும் புத்தாடையுமேயாகும். மணமாகிய தம்பதியர் முதலாவதாகக் கொண்டாடும் தீபாவளியான தலைத்தீபாவளி பற்றியும் நாம் அறிவோம்.
தீபங்களை வரிசையாக வைத்துக் கொண்டாடும் பண்டிகையே தீபாவளி என்பர். ஐப்பசி மாதத்து அமாவாசையன்று இத்திருநாள் கொண்டாடப்படும்.
தமிழர்களைப் பொறுத்த வரையிலே, அதுவும் இலங்கையிலே தீபங்களை ஏற்றித் தீபாவளி கொண்டாடும் வழக்கம் பொதுவாக இல்லை என்றே கூற முடியும். ஆயினும் கார்த்திகை மாதப் பெளர்ணமியாக கார்த்திகை விளக்கீட்டை தீபங்களேற்றி கொண்டாடும் வழக்கம் தமிழர்களிடையே காலங்காலமாக நிலவி வருகிறது. இதையே நக்கீரர் பாடிய அகநானூற்றுப் பாடல் ஒன்றும் கூறுகிறது.
தீபாவளித் திருநாளிலே தீபங்களை வரிசையாக ஏற்றிக்கொண்டாடும் வழக்கம் வட நாட்டுக்குரியது. அத்துடன் தீபாவளி இந்துக்களுக்கு மட்டுமே உரித்தான திருநாளல்ல. சீக்கியர்களும் சமணர்களும் கூட வேறுபட்ட காரணங்களுக்காக இத்திருநாளைக் கொண்டாடுகின்றனர்.
கிருஷ்ண பரமாத்மா, நரகாசுரன் என்ற அசுரனை வதம் செய்தபோது அவ்வசுரன், தான் இறந்த தினத்தை அனைவரும் கொண்டாட வேண்டும் என வரங்கேட்டதாகக் கூறுவர். அவன் கேட்ட வரத்தை கிருஷ்ண பரமாத்மா அருளியதால், தீபாவளி கொண்டாடப்படுகிறது என்பர்.இராமயணத்திலே, ஸ்ரீராமர் இராவணனை அழித்து, தன் வனவாசத்தை முடித்த பின் சீதை மற்றும் இலக்குமணனுடன் அயோத்தி திரும்பினார். அந்நாளை அயோத்தி மக்கள் விளக்கேற்றிக் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்த நாளே, தீபாவளியாகக் கொண்டாடப்படு கிறது என்றும் கூறுவர். கந்தபுராணத்தின் படி, சக்தி இருந்த 21 நாள் கேதாரவிரதம் முடிவுற்றதும் இத்தீபாவளி தினத்திலேயேயாகும். அவ்விரதம் முடிவடைந்த பின்னரே சிவன் சக்தியை தன்னில் ஒரு பாதியாக ஏற்று ‘அர்த்தநாரீஸ்வரர்’ என்ற உருவமெடுத்தார் என்று கூறப்படுகிறது. சீக்கியர்களின் புனிதத் தலமாகக் கருதப்படுவது அமிர்ததரஸில் அமைந்துள்ள பொற்கோயில் ஆகும். இக்கோயிலின் கட்டுமாணப்பணிகள் 1577 ஆம் ஆண்டின் தீபாவளி தினத்திலேயே ஆரம்பிக்கப் பட்டன. ஆதலால் தீபாவளித்திருநாளை சீக்கியர்களும் கொண்டாடத்தலைப்பட்டனர்.
சமணர்களின் மகாவீர் பரிநிர்வாணம் அடைந்த தினத்தை நினைவு கூர்ந்து இத்தினத்தை சமணர்களும் கொண்டாடுகின்றனர்.இலங்கை, இந்தியா, கயானா, மொரீஷியஸ், மலேசியா, நேபாளம், சிங்கப்பூர், பர்மா, பிஜி போன்றநாடுகளிலே தீபாவளித் திருநாள் ஒரு விடுமுறை நாளாகும். இந்துக்களைப் பொறுத்தவரையிலே தீபாவளியின் பின்னணியில் இருப்பது நரகாசுரவதம் என்ற புராணக் கதையாகும்.
தன் மரணத்தைத் துக்கநாளாகக் கொண்டாடாமல் அஞ்ஞானம், அறியாமை, அகங்காரம் ஆகியன அழிந்ததற்கு அடையாளமாக அனைவரும் கொண்டாடவேண்டும் என்பதே நரகாசுரன் கேட்ட வரமாகும். அவ்வரத்தினுள் ஆழ்ந்த பல கருத்துக்கள் பொதிந்திருக்கின்றன.

மனிதப் பிறவி கிடைத்ததற்கரிய பிறவி. மனிதனுள் அளப்பரிய ஆற்றல்களும் சக்தியும் பொதிந்து கிடக்கின்றன. ஆயினும் அவன் தன் பிறப்பின் பயனை மறந்து, தன்னால் தயாரிக்கப்பட்ட பொருட்களில் தானே மயங்கி, அழிந்து போகிறான்.
மனிதப் பிறவிக்கேயுரித்தான உயரிய குணங்களாகிய பகுத்தறிவும் விவேகமும் அவனது அகங்காரத்துக்குள் தொலைந்து போகின்றன. இந்த அகங்காரத்தை ஒடுக்கி, பகுத்தறிவோடு அடக்கத்தையும் விவேகத்தையும் ஒளிரச் செய்வதே இத்தீபாவளியின் பயனாகும்.
பாமரனைப் பண்புள்ளவனாகவும் பண்புள்ளவனை தெய்வமாகவும் மாற்றும் வல்லமை படைத்தவை எம் இந்து சமயத் தத்துவங்கள், நாம் தெய்வமாக வேண்டியதில்லை. ஆனால் பண்புள்ளவர்களாகவாவது மாறலாமே?தீபாவளியும் அதைத்தான் சுட்டுகிறது. எமது உள்ளத்திலே நரகாசுரனை ஒத்த தீய குணங்கள் இருந்தால், அவற்றையெல்லாம் விட்டொழித்தோ அல்லது அவற்றை அழிக்க உதவுமாறோ கிருஷ்ண பரமாத்மாவைப் பிரார்த்திக்க வேண்டுமென தீபாவளி வலியுறுத்துகிறது. நாம் இப்பூவுலகிலே எதற்காகப் பிறந்தோம்? தற்போது என்ன செய்துகொண்டிருக்கிறோம்? உண்மையில் நாம் என்ன செய்யவேண்டும் என ஒரு கணம் கண்ணைமூடி ஆழச் சிந்தித்தாலே போதும். நாம் எந்த நிலையில் இருக்கிறோம் என்ற உண்மை தெளிவாகத் தெரிந்துவிடும். அதுவே இத்தீபாவளித் திருநாளில் நாம் செய்யவேண்டியதாகும். இந்தியாவைப் பொறுத்த வரையிலே, ஒவ்வொரு மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் ஒவ்வொருவிதமாக தமக்கே உரித்தான பாணியில் தீபாவளியைக் கொண்டாடுவர். தென் மாநிலங்களைப் பொறுத்தவரையிலே, தீபாவளி அன்று அனைவரும் அதிகாலையில் எழுவர். இல்லத்தின் மூத்த உறுப்பினர் ஒவ்வொருவர் காலிலும் நலங்கு மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த கலவை இட்டு மகிழ்வர். பின் எண்ணெய் ஸ்நானம், கங்கா ஸ்நானம் செய்வர், நல்லெண்ணெயில் ஓமம் மற்றும் மிளகு போட்டுக் காய்ச்சுவது சிலரது வழக்கம். மக்கள் புத்தாடை உடுத்தியும் பட்டாசுகள் வெடித்தும் மகிழ்வர்.பொதுவாக தீபாவளி அன்று பாரம்பரிய உடைகளை அணியவே பெரும்பாலான தென்னிந்திய மக்கள் விரும்புகின்றனர். அன்று அநேகர் புடவையும் (குறிப்பாக பட்டுப்புடவை) ஆண்கள் வேட்டியும் உடுப்பர். தீபாவளி அன்று ஒவ்வொரு இல்லத்திலும் மங்கள இசையான நாதசுவரம் ஒலிக்கும். அன்று நிறைய இனிப்புக்கள் செய்து ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வர். பரிசுகள் தந்து மகிழ்வர். பெரியோரை வணங்கி வாழ்த்துபெறுவர்.
தீபாவளியன்று நீராடுவதை புனித நீராடல் என்று சொல்வதற்கு காரணம், அன்றைய தினம், அதிகாலையில் எல்லா இடங்களிலும், தண்ணீரில் கங்கையும், லட்சுமியும் அரப்பில் சரஸ்வதியும் குங்குமத்தில் கெளரியும், பூமாதேவியும், மஹா விஷ்ணுவும் வசிப்பதாகக் கருதப்படுவதேயாகும். அந்த நீராடலைத்தான் ‘கங்கா ஸ்நானம் ஆயிற்றா?’ என்று ஒருவருக்கொருவர் விசாரிப்பர். அன்றைய தினம் நதிகள் ஏரிகள், குளங்கள், கிணறுகளிலும் நீர்நிலைகளும் ‘கங்கா தேவி’ வியாபித்து இருப்பதாகக் கருதுவது ஐதீகம். அடிப்படையில் இந்துப் பண்டிகையாய் இருந்தாலும், சாதிமத வேறுபாடின்றி அனைவரும் ஒற்றுமையாய் கொண்டாடுவர்.

மேற்கு வங்காளம் போன்ற கிழக்கு மாநிலங்களிலே தீபாவளி வித்தியாசமாகக் கொண்டாடப்படுகிறது. மஹாளய அமாவாசையன்று தொடங்கி, ‘துர்க்கா பூஜை’ கொண்டாடும் வங்காள மக்கள், பூஜைக்கான கோலாகலப் பூரிப்பை ஒரு மாதம் கொள்கின்றனர். மஹாளய அமாவாசைக்கு அடுத்த அமாவாசையே தீபாவளி. இச்சமயம் காளி பூஜை கொண்டாடப்படுகிறது.
சதுர்த்தசி இரவில் பதினான்கு தீபங்கள் ஏற்றப்படுகின்றன. இவை வாழ்க்கையில் மனதில் ஏற்படக்கூடிய இருளைப் போக்கும் என நம்புகிறார்கள். இரவு பத்து மணியிலிருந்து காலை நான்கு மணி வரை நான்கு முறை பூஜை செய்வார்கள். மாலையில் இலட்சுமி பூஜை நடைபெறும். காளியின் திருவுருவச் சிலை வங்காளத்தின் ஒவ்வொரு பகுதியிலும் பந்தல் அலங்காரத்துடன் காணப்படும். மறுநாள் ‘பாயிபுட்கோ’ என்ற பெயரில் இவர்களும் அவர்களின் சகோதரர்கள் நலன் வேண்டி, சகோதரனுக்கு சந்தன பொட்டு இட்டு, புதிய ஆடை, பரிசுகள் கொடுத்து இனிப்பு வழங்கி மகிழ்கின்றனர்.

மகாராஷ்டிரம் போன்ற மேற்கு மாநிலங்களிலே, தீபாவளிப் பண்டிகையை மூன்று நாட்களுக்கு கொண்டாடுகின்றனர். திரயோதசி, சதுர்த்தசி, அமாவாசை ஆகிய மூன்று நாட்களிலும் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. முதல் நாளான திரயோதசி அன்று எண்ணெய் ஸ்நானம் செய்து, மஞ்சள் தேய்த்து நீராடுகின்றனர். மாலையில் அனைத்து தெய்வங்களுக்கும் பூஜை செய்கிறார்கள். இனிப்பு வகைகள் செய்து கடவுளுக்கு நிவேதனம் செய்கின்றனர். ஒரு வாரத்துக்கு முன்பிருந்தே தீபாவளிப் பூஜைக்கு தயார் செய்கின்றனர். வீட்டை சுத்தம் செய்து அனைத்து பாத்திரங்களையும் கழுவி, விதவிதமான இனிப்புகளை தயாரித்து, புது துணிமணிகளை வாங்கி பண்டிகை கொண்டாட முற்படுகின்றனர். சதுர்த்தசியன்று மாலை ‘தன்பூஜா’ எனப்படும் இலட்சுமி பூஜை நடத்துகின்றனர். இதில் குடும்பத்தில் உள்ள அனைவரும் பெரியவர் பூஜை செய்ய, வீட்டின் பெண்மணிகள் மராட்டிய பாணியில் புடைவை அணிந்து மூக்கில் ‘நாத்’ என்ற வளையம் அணிந்து, மஞ்சள் பூசி, குங்குமம் இட்டு மங்களகரமாக காட்சியளிக்கின்றனர். இனிப்பு வகைகளில் குறிப்பாக பால், பாயசம், பாசந்தி, பூரன், போளி ஆகியவை செய்வார்கள். இந்நாளை நரக சதுர்த்தசி என்று அனைவரும் அழைப்பதால் இம்மாநிலத்தினர் தென்னாட்டு மக்களைப் போல் நரகனை வதம் செய்த நாளென்று கருதுகின்றனர் என்று புரிந்துகொள்ளலாம். அமாவாசையன்று அதிகாலையில் எழுந்து நீராடி பூஜை செய்து, நிவேதனம் செய்கின்றனர். அந்த இனிப்புகளை அக்கம் பக்கத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் கொடுக்கின்றனர். மூன்று நாட்களும் மண் அகல்களில் விளக்குகளை ஏற்றிவீட்டை ஒளி மயமாக்குகின்றனர்.

உத்திரபிரதேசம் போன்ற வட மாநிலங்களிலே தீபாவளி இன்னொரு விதமாகக் கொண்டாடப்படுகிறது.
இந்து மதக் கடவுள்களாக வணங்கப்படும் ஸ்ரீராமர், ஸ்ரீகிருஷ்ணர் ஆகியோர் பிறந்த பூமி இம் மாநிலங்களில் உள்ளது. இங்குள்ள மக்கள் எல்லாப் பண்டிகைகளையும் மிகச் சிரத்தையுடன், மிக விமரிசையாகக் கொண்டாடுவதற்குப் பெயர் பெற்றவர்கள். உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் தீபாவளியை ஸ்ரீராமர் ராவணனை வதம் செய்து வெற்றிவாகை சூடித் திரும்பிய நாளாகக் கருதுகின்றனர். அதனால் இந்த மாநிலத்தில் பல இடங்களில் தீபாவளிக்கு முன்னர் நவராத்திரி சமயத்தில் ராம்-லீலா என்ற நாடக வடிவக் கூத்துநடைபெறும். மேலும் தீபங்கள் ஏற்றி ஒளி தரும் நாளாக இவர்கள் இந்நாளைக் கருதுவதால் தீபஒளியே தீபாவளி என்கின்றனர். தீபாவளி அன்று காலை அலுவலகங்களில் லக்ஷ்மி பூஜை நடத்தி இனிப்பு, பரிசுகள் ஆகியவற்றை பணியாளர்களுக்கு அளிக்கின்றனர். மதியம் வித வித உணவு வகைகள் சமைத்து குடும்பத்திலுள்ளோர் சேர்ந்து உண்டு மகிழ்கின்றனர். தீபாவளியன்று மாலை வீட்டில் விநாயகர், லக்ஷ்மி ஆகியோரின் படத்தை வைத்து பஜனைகள் பாடி, ஆரத்தி எடுத்து பூஜிக்கின்றனர். பிறகு மிக மிக விமரிசையாக வாணம், பட்டாசு, மத்தாப்பு, வகைகளை கொளுத்திக் கொண்டாடுகிறார்கள். மேலும் தீபாவளியன்று ஒருவருக்கொருவர் பரிசளிப்பது மிக முக்கியமான ஒன்று. அதனால் தீபாவளி சமயம் நகர் முழுவதும், எங்கும் பரிசுப் பொருட்கள் மலிவாகவும், ஏராளமாகவும் கிடைக்கின்றன. தீபாவளியன்றைக்கு மறுநாள் ‘பையாதூஜ்’ என்ற பூஜை நடத்த சகோதரிகள் சகோதரன் வீட்டிற்குச் சென்று ஆரத்தி எடுத்து, சகோதரனின் நலனிற்காக பிரார்த்திக்கின்றனர். அவர்களின் அன்பு மழையில் நனைந்து சகோதரன் சகோதரிக்கு பரிசு தருகிறார்.
தீபாவளியன்றும் பரிசு, மறுநாளும் சகோதரரிடமிருந்து பரிசு என ஒரே பரிசு மழை பொழியும் பண்டிகைதான் இவர்களுக்கு தீபாவளி.

இலங்கையிலே இத்துணை விமரிசையாகத் தீபாவளி கொண்டாடப்படுவதில்லை ஒவ்வொரு தேசத்தவரும் தமது கலாசாரம், பண்பாட்டிற்கு ஏற்ற வகையிலே தீபாவளியைக் கொண்டாடுகின்றபோதும் தீபாவளி உணர்த்தும் தத்துவம் ஒன்றாகவே இருக்கிறது. அதன் ஆழ்ந்த அர்த்தத்தை உணர்ந்து வாழ்பவர்களாக நாம் மாறவேண்டும்.

தீபாவளிக்காலங்களில் தொலைக்காட்சிச் சேவைகளும் கூட களைகட்டி விடுகின்றன. தம்முன்னே 24 மணிநேரமும் நேயர்களைக் கட்டிப்போடுவதில் அவை முனைப்புடன் செயற்படத் தொடங்கிவிடும்.
தீபாவளியென்றால் புத்தாடை, இனிப்புப் பலகாரங்கள், விடுமுறை என்ற காலம் போய் புதிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் நடிகர்களின் பேட்டிகளுமே நினைவுக்கு வரும் காலம் வந்துவிட்டது.
இந்த நினைவுகளுக்கெல்லாம் அப்பால் இத்திருநாளில் நாம் செய்ய வேண்டியவை நிறையவே இருக்கின்றன. நாம் உறவினர்களுடன் பகிரும் பலகாரங்களை, இல்லாதவர்களுடனும் பகிரலாம். எம்மைக் கொஞ்சமும் எதிர்பாராத ஏழை வீட்டுக் கதவைத் தட்டி பலகாரத்தைப் பகிர்ந்து கொள்ளலாமே?

இன்றைய அவசரயுகம் உறவுகளைத் தூர அழைத்துச் சென்றுவிட்டது. இத்திருநாள் எம் உறவுகளைப் பலப்படுத்தும் திருநாளாக அமையட்டுமே? நண்பர்களுடனோ அல்லது உறவுகளுடனோ மனத்தாங்கல் ஏற்பட்டிருந்தால் இன்றைய தினத்தில் அவர்களுடன் இணைந்து, விடுபட்ட உறவை மீட்க முயற்சிக்கலாமே?
தொலைக் காட்சியிலேயே மூழ்கியிருக்காமல் நாம் குடும்பத்தினருடன் உறவாடி மகிழலாம். அப்போதுதான் நாம் இதுவரை காலமும் எதை இழந்துவிட்டிருந்தோம் என்பது தெளிவாகப் புரியும்.

யாவரிடமும் அன்பு செலுத்தி மனிதம் நிறைந்த திருநாளாக இத்தீபாவளித் திருநாளை எம்மால் மாற்றியமைக்க முடியும். எத்தனையோ உறவுகள் பல இன்னல்களுக்கு மத்தியிலும் தமது வாழ்வை முன்னெடுத்துச் செல்ல முயன்று கொண்டிருக்கிறார்கள்.
உடுக்க உடையில்லாததால் தற்கொலை முயற்சியை மேற்கொண்ட சிறுமியரும் இருக்கிறார்கள். கல்விச் செலவுக்கு மாதாந்தம் 1000 ரூபா பணம் கிடைக்காததால் கல்வியை நோக்கிய தமது எதிர்காலத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தவர்கள் இருக்கிறார்கள். குடும்பப் பொறுப்பைக் கருத்தில் கொண்டு தமது பல்கலைக்கழக அனுமதியைக் கூட ஏற்று பல்கலைக்கழகம் செல்ல முடியாதவர்களும் இருக்கிறார்கள். இவர்களெல்லாம் உலகின் ஏதோ ஒரு மூலையில், ஏதோ ஒரு காலத்தில் வாழ்ந்தவர்கள்; வாழ்பவர்கள் அல்ல. இவர்கள் சமகாலத்திலே எமது நாட்டிலேயே வாழும் உறவுகள் அவர்கள் சம வயதினராகவோ, ஏன் வயதிற் சிறியவர்களாகவோ இருக்கலாம்.

உலகம் எங்கோ முன்னேறிச் சென்றுவிட்டது என்ற உண்மை கூடத் தெரியாமல் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கே சிரமப்படும் நிலையில் இருக்கிறார்கள்.ஆனால் நாமோ, அவர்களைப் பற்றி சிறிதளவேனும் சிந்திப்பது கூட இல்லை. எம் உறவுகள் இப்படியெல்லாம் இருக்கிறார்கள் என்ற உண்மை கூட பலருக்குத் தெரிவதில்லை.

இன்றைய தீபாவளித் திருநாளிலே அத்தகைய உறவுகளின் வாழ்விலே குடிகொண்டிருக்கும் இருளை அகற்ற திடசங்கற்பம் பூணுவோம்! எம்மால் இயன்ற வழியிலே அவர்களின் வாழ்வையும் ஒளியூட்டுவோம்! இதுதான் இந்தத் தீபாவளித்திருநாள் எமக்கு விடுத்திருக்கும் அறைகூவலாகும்.

நாம் ஒன்றிணைந்தால், எம்மால் சாதிக்க முடியாதது எதுவுமே இல்லை. முயன்றுதான் பார்ப்போமே?