Showing posts with label வாழ்வியல். Show all posts
Showing posts with label வாழ்வியல். Show all posts

Saturday, January 17, 2015

ஆவுரஞ்சிக் கற்கள் காலத்தின் தேவையோ?


எங்கள் வீட்டு விருந்தாளி இவள்......
வவுனியா நகரின் மத்தியிலே மரங்கள் சூழ்ந்ததோர் வட்ட வீதி.. ஆங்கோர் முறிந்த மின்சார இணைப்புத் தூண். . . வீதியில்  ஒய்யார நடைபோடும் மாடுகள்.. தூணைக் கடக்கும் போதெல்லாம் உரசும் அவற்றின் ஈர்ப்பு...

இது நான் அன்றாடம் காணும் காட்சிகளில் ஒன்று... எதேச்சையாய் ஒரு நாள்  அவதானித்தேன். பொறி தட்டவில்லை. சில நாட்களின் பின்னர்  ஆவுரஞ்சிக் கல் எதேச்சையாய்  நினைவுக்கு வந்தது. புத்தி ஒப்பீடு செய்தது. யதார்த்தம் புரிந்தது.

யாழ்ப்பாணக் கலாசாரமானது தர்ம சிந்தையைப் பிரதிபலிப்பது என்று எங்கோ கேட்ட ஞாபகம். கால ஓட்டத்திலே, இடப்பெயர்வுகளுடன் கூடிய உலகமயமாதலின் தாக்கத்திலே யாழ்ப்பாணம் இழந்து விட்டவைகளுள் இது மிக முக்கியமானது என்றும் சில வேளைகளில் எண்ணத்தோன்றும்.

இற்றைக்கு சில தசாப்தங்களுக்கு முன்னர்  யாழ் மண்ணின் அன்றாட வாழ்வியலிலே பல சிறப்பம்சங்கள் அங்கம் வகித்திருந்தன. இன்றைய நவீனத்தை உட்புகுத்தி கூறினால் அச்சிறப்பம்சங்களை அன்றைய உட்கட்டமைப்பு வசதிகள் என்று கூடக் கூற முடியும்.
 நவாலி வெளி கடந்து வட்டுக்கோட்டை செல்லும் பாதை அருகே இன்னமும் இருக்கும் துரவு, ஆவுரஞ்சிக்கல், கோவிலின் மறுபுரத்தே சுமை தாங்கிக்கல்

இன்றைய சனத்தொகைப்பெருக்கம் அன்று இருக்கவில்லை. சனத்தொகைச் செறிவு குறைவாக இருந்தது. வயல்வெளிகளும் பொட்டல்வெளிகளும் நிறைந்திருந்தன. ஆங்காங்கு துரவுகள் , சுமைதாங்கிக் கற்கள், ஆவுரஞ்சிக் கற்கள், தெரு மூடி மடங்கள், தண்ணீர்த்தொட்டிகள் என உட்கட்டுமானங்கள் காணப்பட்டன. இவை யாழ்ப்பாணக் கலாசாரத்துக்கென தனித்துவமானவை என்று கூறினாலும் மறுப்பதற்கில்லை. இவற்றைத்தான் யாழ்ப்பாணத்து வீதி தர்மம் என விளிக்கிறார் செங்கை ஆழியான்.

போக்குவரத்து என்றாலே மாட்டுவண்டிகளையும் சொந்தக் கால்களையும்  மட்டுமே நம்பியதாக எம்மவர்களுள் பெரும்பாலானோர் வாழ்ந்த காலம் ஒன்று இருந்தது.  அந் நிலையில் நெடுந்தூரம் பயணிப்பவர்கள் இடையிலே இளைப்பாறுவதற்கு தெரு மூடி மடங்கள் பயன்பட்டன. தமது சுமையை இறக்கி வைத்து களைப்பாறி மீண்டும் எடுத்துச் செல்வதற்கு ஏதுவாக சுமை தாங்கிக் கற்கள் அமைக்கப்பட்டன. 
சுமை தாங்கிக் கல்

எம்மவர் பண்பு கால் நடைகளைக் கூட விலக்கி வைக்கவில்லை. அவற்றிற்கும் தம் பண்பாட்டில் சம வகி பாகத்தை வழங்கியிருந்தனர்.  அதற்கு துரவுகளையும் தண்ணீர்த்தொட்டிகளையும் ஆவுரஞ்சிக் கற்களையும் சிறந்த உதாரணமாகக் கொள்ளலாம்.

ஆவுரஞ்சிக்கற்களானவை கால்நடைகளுக்கு ஏற்படும் திணைவு எனும் ஒரு வகைக் கடியினை நீக்கும் முகமாக உருவாக்கப்பட்டவை எனப் பெரியவர்கள் சொல்லி அறிந்திருக்கிறே. அக்கற்கள் ஒரு மாடு உரசக் கூடியளவு உயரத்திலே சொரசொரப்பான மேற்பரப்பையுடையனவாக அமைக்கப்பட்டிருக்கும். இந்த ஆவுரஞ்சிக் கற்களால் எவருக்கும் இடைஞ்சல் இருந்திருக்கும் என நான் என்  சொந்த அனுபவத்தில் உணரவில்லை.

ஆனாலும் இன்றைய காலத்தில் ஆவுரஞ்சிக் கற்களைக் காண்பது வெகு அரிதாகி விட்டது.  நாம் இன்று பயணிக்கும் பாதையானது நவீனம், அபிவிருத்தி, உலகமயமாதல் என புதுப் புது கோணங்களில் நீண்டு செல்கிறது.  அந்த கால ஓட்டத்தில்  இந்த உட்கட்டுமானங்களை எல்லாம் நாம் மறக்கடித்து விட்டோம். அதன் விளைவாக அவை  பாழடைந்து உருக்குலைந்து போயின. பல இருந்த இடமே தெரியாமல் போய்விட்டது.

இச்சந்தர்ப்பத்திலே யாழ். பல்கலைக்கழக வரலாற்றுத்துறையினர் மேற்கொண்டிருக்கும் முயற்சி பாராட்டப்பட வேண்டியது. பல்கலைக் கழக முன்றலின் ஒரு பகுதியிலே எங்கோ பெயர்த்தெடுத்து வந்த தண்ணீர்த்தொட்டியும் ஆவுரஞ்சிக் கல்லும் சுமை தாங்கிக் கல்லும் உரிய விளக்கங்களுடன் வைக்கப்பட்டிருக்கின்றன. சந்ததிகள் கடந்தாலும் எம் பண்பாட்டை நினைவூட்ட அவை மட்டுமே எஞ்சி நிற்கப் போகின்றன.
யாழ். பல்கலைக்கழக வளாகத்தில்.....

என்ன என்று அறியாமலே அழிக்கப்பட்ட உட்கட்டுமானங்கள் ஏராளம் எனலாம். தமக்குத் தெரிந்தவற்றை தம் அடுத்த சந்ததியினருக்கு முழுவதுமாகக் கடத்தாமல் விட்டமை எம்மவர் செய்த மிகப்பெரிய வரலாற்றுத் தவறென்பதில் ஐயமேதுமில்லை. அவர்கள் கடந்து வந்த அவலங்கள் அதற்கு இடம் கொடுக்கவில்லை என்பது யதார்த்தமான உண்மையாகும். 

  நான் சிறு பராயத்தைக் கழித்த வீட்டிலே இருந்த மாட்டுக் கொட்டில் சீமெந்தால் ஆனது.  மாடு உண்ண வைக்கோல் போடுவதற்கு ஏதுவாகவும்  மாடு தண்ணீர் குடிப்பதற்கு ஏதுவாகவும் சீமெந்தினாலேயே கட்டுகள் அமைக்கப்பட்டிருந்தன. மாட்டைக் கட்டுவதற்கு ஏதுவாக தூண்கள் அமைக்கப்பட்டிருந்தன. 

இற்றைக்கு இரு தசாப்தங்களுக்கு முன்னர் கிளிநொச்சியின் திருவையாற்றிலே வில்சன் வீதியோரம் இருந்த ஒவ்வொரு வீட்டிலும் படலையோடு மாட்டுப்பட்டி இருக்கும். மாடுகளை மேய்ப்பவர்கள் காலையிலே வீடு வீடாகச் சென்று மாடுகள் எல்லாவற்றையும் மேய்ச்சலுக்கு ஓட்டி செல்வர். மாலையிலே மீண்டும் உரிய வீடுகளுக்குக் கொண்டு போய்ச் சேர்ப்பர்.  நீர்ப்பாசன ஊழியரான இராமலிங்கம் என்பவர்வீதியிலே செல்வோரின் தாகம் தீர்க்கவென குடி நீர்ப்பானை வைத்து பேணுவார் . மாட்டுப்பட்டிகளையோ மேய்ப்பவர்களையோ இப்போது காண்பது வெகு அரிதாகி விட்டது. அன்றிருந்த செழிப்பு அற்றுப் போய் சோபையிழந்து காட்சியளிக்கிறது வில்சன் வீதி. அந்த நினைவுகள் இன்னும் பசுமையாய் நிழலாடுகின்றன.
சேமமடு, வவுனியா

ஏறத்தாழ இரு தசாப்த காலங்களுள் எத்தனை மாற்றங்களை நாம் சந்தித்து விட்டோம்? மாடுகளும் அதற்கு விதி விலக்கல்லவே!  இன்று மாட்டுப்பட்டிகளைக் காண்பது வெகு அரிதாகி விட்டது. மழையிலும் வெயிலிலும் மரங்களுக்குக் கீழேயும் வீதியின் இரு மருங்கிலும் ஒதுங்கும் மாடுகள் தான் அதிகம் எனலாம்.

இரவுகளில் கூட தம் பட்டிக்குச் செல்லாமல் வீதி ஓரங்களிலேயே தஞ்சம் புகும் மாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஒரு மாட்டைக் காணவில்லை என்றால் கூட  துடித்துப் போகும்  உரிமையாளர்கள் மிக அரிதாகி விட்டனர் என்பதன்றி அதற்கு வேறெந்த அடிப்படைக் காரணமும் இருக்க முடியாது.

ஆவுரஞ்சிக் கல்லுக்காகவே அந்த வீதிக்கு வரும் மாடுகளை நான் கண்டிருக்கிறேன். வாசல் கதவு எப்போ திறக்கும்? எமக்கு யார் தண்ணீர் தருவார்கள் என ஏக்கமாய்ப் பார்க்கும் மாடுகளையும் கண்டிருக்கிறேன். தண்ணீர் குடித்து முடிந்ததும் நன்றிப் பெருக்கோடு விலகும் மாடுகளைக் காண்பதில் கிடைக்கும் திருப்தி எதிலும் கிடைப்பதில்லை என்பதையும் நான் உணர்ந்திருக்கிறேன். இந்த மாடுகளுக்கெல்லாம் கதைக்கத்தெரிந்தால் என்னெல்லாம் சொல்லும் என்று நான் கற்பனை பண்ணிப்பார்ப்பதுமுண்டு.  அக்கற்பனையில் மனிதன் கூனிக்குறுகித் தான் நின்றிருக்கிறான்.

சனத்தொகை அதிகரிக்க, நிலங்கள் துண்டாடப்பட ஒவ்வொரு பிரதேசத்துக்குமாக மேய்ச்சல் நிலங்களை ஒதுக்க வேண்டிய தேவை இக்காலத்தில் ஏற்பட்டுள்ளது. வன ஓதுக்கெடுகளை விடுவித்து மேய்ச்சல் நிலமாக்குங்கள் எனக் கோரும் பண்ணையாளர்களை அடிக்கடிக் காண முடிகிறது.

மாடுகளைப் பராமரிப்பதிலும் அவற்றின் தேவைப்பாடுகளைக் கருத்தில் கொள்வதில் இன்றைய சந்ததி  அலட்சியம் காட்டுகிறது. மாறாக மாடுகளால் கிடைக்கும் பயனின் உச்ச அளவைப் பெற்றுக்கொள்ள அதீத ஆர்வம் காட்டுகிறது.   பணத்தை மையமாகக் கொண்ட ஆறறிவு ஜீவன் களால் பாதிக்கப்பட்டவை இந்த வாயில்லா ஜீவன் கள் என்பது கண் கூடு.

காலம் ஒன்றும் கடந்து போய்விடவில்லை. நாம் ஒவ்வொருவரும் சிந்தித்து செயற்பட்டால் எஞ்சியிருக்கும் பாரம்பரிய உட்கட்டுமா னங்களை  அழிவிலிருந்து மீட்க முடியும். அதே வேளை சுய நலத்தை மட்டுமே கொள்ளாமல் வாயில்லா ஜீவன் களையும் கருத்தில் கொண்டு வீதிக்கொரு ஆவுரஞ்சிக்  கல்லையும் தண்ணீர்த்தொட்டியையுமாவது அமைக்க முயற்சி எடுக்கலாம்.

நாம் வாழும் சூழல் தொகுதி வாழ்வுக்கு ஏற்றதாக இருக்க வேண்டுமாயினும் அங்கு சம நிலை இருக்க வேண்டும். எல்லா உயிர்களின் தேவைகளும் பூர்த்தி செய்யப்பட வேண்டும். அன்றேல் 'தன் வினை தன்னைச்சுடும்' என்ற முது மொழி  நிதர்சனமாவது கண்கூடு.

Wednesday, November 12, 2014

எதிர்கால இலங்கையில் தொலைக்காட்சியுடன் நாம்

(முதலாவது உலக தொலைக்காட்சி தினத்தை முன்னிட்டு இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனமும் கலாசார அமைச்சும் இணைந்து நடாத்திய அகில இலங்கை ரீதியிலான கட்டுரைப்போட்டியில் திறந்த பிரிவில் மூன்றாம் பரிசு பெற்ற கட்டுரை..)


ஆறடியிலும் குறைந்த உயரம்....கிடுகால் மேய்ந்த கூரை... களிமண்ணும் சாணமும் கலந்து மெழுகிய தரை.. செங்கற்கள் அடுக்கிய சுவர்.. சமையலறைப்பகுதியில் ஒரு சில பாத்திரங்கள்... ஆங்காங்கே கொடிகளில் இடம் பிடித்திருக்கும் உடு புடைவைகள்.... கட்டொன்றில் நிலை கொண்டிருக்கும்  நேர்த்திரை தொலைக்காட்சி......விதைவைத் தாய்.. மகள்... மண் விளையாட்டே தஞ்சமான இரு பேரக்குழந்தைகள்... வீட்டை விட உயரத்தில் செய்மதித் தொலைக்காட்சிக்கான சமிக்ஞை வாங்கி...
இந்த விவரணம் கண்காணாத தேசத்துக் காட்சியை மனக்கண்ணில் உருவாக்குவதற்காக சித்தரிக்கப்பட்டதல்ல. இதுவே  நிகழ்கால இலங்கையின் யதார்த்தம். இலங்கையில் தொலைக்காட்சி  காலடி எடுத்து வைத்து ஆக 3 தசாப்தங்கள் மட்டுமே கடந்து விட்டிருக்கின்றன. அன்று ஊருக்கொன்றாய் எட்டிப் பார்த்த தொலைக்காட்சிகள் இன்று வீட்டுக்கு இரண்டிலும் அதிகமென நிலைகொண்டிருக்கின்றன.
ஆசியாவின் ஆச்சரியமாக மாறுதல் தொடர்பில் வீறு நடை போட்டுக்கொண்டிருக்கும் எம் நாட்டில் மின்சார இணைப்பு கிடைக்காத கிராமங்களிலும் கூட ஓர் ஆடம்பரக் குறிகாட்டியாக இருப்பதில் தொலைக்காட்சிகளே முன்னணி வகிக்கின்றன.|
இக்கட்டுரையிலே வட மாகாணத்தை அடிப்படையாகக் கொண்டு இன்றைய இலங்கையின் யதார்த்தத்தை வெளிப்படுத்துதல் சிறப்பாக இருக்கும் என நான் எண்ணுவதில் தவறேதும் இல்லை என நம்புகிறேன்.
பிச்சை புகினும் தென்னிந்திய சின்னத்திரைத் தொடர்களைப் பார்த்தால் தான் அன்றைய நாள் மன நிறைவுடன் கழியும் என நம்பும் குடும்பங்கள் சடுதியாக அதிகரித்து வருகின்றன. முன்னொரு காலத்திலே கூட்டு வாழ்வை அடிப்படையாகக் கொண்டிருந்த வாழ்வியல் இன்று சின்னத்திரையில் தங்கிய தனிமை வாழ்வியலை அணுகும் நிலைக்கு வந்து விட்டது.  அன்று நாம் கொண்டிருந்த கூட்டு வாழ்வியலானது ஒன்றாய் கூடி உணவருந்துதல் தொட்டு முடிவெடுத்தல் வரை சகலதையும் உள்ளடக்கியதாக இருந்தது. அவ்வாழ்வியலிலே துயர்கள் பகிரப்பட்டன. உணர்வுகள் மதிக்கப்பட்டன. இன்பம் துளிர் விட்டு கிளை பரப்பியிருந்தது. குடும்பக்கட்டமைப்பு பேணப்பட்டது. சமூகப்பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டது.
இன்றோ நிலைமை தலை கீழாய் மாறிவிட்டது. என்று செய்மதித் தொலைக்காட்சி கூட்டு வாழ்வியலினுள் ஊடுருவத்தொடங்கியதோ அன்றே ஒட்டகத்துக்கு இடங்கொடுத்த கதையாக அந்த வாழ்வியல் தொலைந்து போகத்தொடங்கியது.
முதலாளித்துவப் பொருளாதாரம் வலுப்பெறும் இந்த நவீன உலகிலே அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளே நுகர்வுக் கலாசாரத்துக்கு வெகுவாக ஈர்க்கப்படுவன என்பதில் எதுவித ஐயமுமில்லை. இலங்கையும் அந் நிலைமைக்கு விதிவிலக்கல்லவே!
சனத்தொகை பெருகத்தொடங்கி விட்டது. தேவைகள் அதிகரிக்கத் தொடங்கிவிட்டன. வளங்கள் அருகத்தொடங்கி விட்டன. மனித வாழ்வு போட்டி மிக்கதாகவே மாறிவிட்டது. தனிநபர் மையச் சிந்தனைகள் பெருகத்தொடங்கி விட்டன. அவையே மனித வாழ்வின் குறிக்கோள்களாகவும் மாறிவிட்டன. ஒரு காலத்தில் எம்மவர் மத்தியில் வலுவாக வேரூன்றியிருந்த சக மனிதர் பற்றிய அக்கறை, அன்பு, ஆதரவு, இரக்கம், மதிப்பு , மரியாதை என யாவுமே செல்லாக்காசாகி விட்டன.
வட இலங்கையிலே சமூக நிலைமை இப்படியிருக்க, உள்ளூர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பவர்கள் விரல் விட்டு எண்ணக்கூடியவர்கள் மட்டுமே. பெரும்பாலானவர்களுடைய தொலைகாட்சிகளிலே உள்ளூர் அலை வரிசையை பார்க்கும் வசதி கூட இருக்காது.       நாளைய நாட்டின் தூண்கள் என எப்போதுமே வர்ணிக்கப்படும் இளஞ்சமுதாயத்துக்கு இந்த உள்ளூர் அலைவரிசைகள் மீது எதுவித நாட்டமும் இல்லை என்று கூறினாலும் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை.
 புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக்கொண்டது போல, தென்னிந்திய தொலைக்காட்சிகளைப் பின்பற்றத்தொடங்கிய உள்ளூர் அலை வரிசைகள் தம் சுயத்தை இழந்து கொண்டிருக்கின்றன. அடிப்படையில் அவர்கள் பாசாங்கு செய்ய முயலும் இந்திய-ஆங்கிலத் தமிழ் மொழி நடையானது எம் கொஞ்சு தமிழ் மொழியின் அழகிய நடையைத் தொலைந்து போகச் செய்துவிட்டது.
இன்றும் கூட தூய தமிழை ஒரளவேனும் வழக்கொழியச் செய்யாமல் அடுத்த சந்ததிக்கு கடத்திச் செல்லும் பணியை அரச ஊடக நிறுவனங்கள் மட்டுமே செய்கின்றன எனலாம். ஆனாலும் மக்கள் மனங்களை வெல்வது தொடர்பில் தென்னிந்திய அலைவரிசைகளோடு இலங்கையின் உள்ளூர் அலை வரிசைகளால் போட்டி போட முடியவில்லை. இதே நிலைமை எதிர்காலத்திலும் தொடருமானால் உள்ளூர் அலைவரிசைகள் இருந்த இடம் தெரியாமல் போய்விடும் சாத்தியக் கூறுகளே அதிகம் எனலாம்.
தொழில்னுட்ப ரீதியாக நோக்கினால், இந்த உள்ளூர் அலைவரிசைகள் செய்மதித் தொழில் நுட்பத்தால் உள்வாங்கப்படல் அவசியமாகிறது. அத்துடன் இலங்கையில் உள்ள மூலை முடுக்குகளை எல்லாம் ஊடுருவக் கூடிய வகையிலே அவற்றின் வீச்சு விரிவாக்கப்படலும் அவசியமாகிறது. இணையத்தொழில் நுட்பத்தை பாவிக்கத் தொடங்குவதன் மூலம் நிகழ்ச்சிகளை இணையம் மூலமும் ஒளிபரப்பலாம்.
நிகழ்ச்சிகளைப் பொறுத்தவரையிலே, காலத்தின் தேவை கருதிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மொழி நடையோ அல்லது கலாசாரமோ மாற்றப்படாத வகையில் நவீன போக்குடன் இணைத்து வழங்க முயற்சி செய்யலாம். 1990 களின் ஆரம்ப காலங்களில் அரச தொலைக் காட்சி ஒளிபரப்பிய பல தரமான நிகழ்ச்சிகள் இன்று மருந்துக்குக் கூட கிடைப்பதில்லை.
எம்மவர் வாழ்வியலாகட்டும்; இன்று அவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளாகட்டும்; அவர் தம் வரலாறாகட்டும்; தொலைத்துக்கொண்டிருக்கும் பண்பாடாகட்டும்; சமயமாகட்டும், மொழி, இலக்கியங்களாகட்டும்; கலைப்படைப்புகளாகட்டும்; வேற்றுமையில் ஒற்றுமை காணும் பல்லின கலாசாரமாகட்டும்; அவற்றை எல்லாம் நவீனம் கலந்து வெளிப்படுத்துதல் இளைஞர்களையும் ஈர்க்கத்தொடங்கும்.
இலங்கையின் பாரிய சொத்தாகக் கருதப்படும் இயற்கை வளங்களையும் உயிர்ப்பல்வகைமையையும் பேணக்கூடிய வழியிலான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் எதிர்கால நோக்கில் மிக மிக அவசியமானவை.
சுற்றுலாத்துறையில் அதிகமுதலீடுகளை மேற்கொண்டு வெளி நாட்டுப் பயணிகளைக் கவரும் முயற்சிகளில் ஈடுபடும் நாம் உள்ளூர்வாசிகளை எப்படிக் கவர்வது என்பது தொடர்பில் அதிக அக்கறை காட்டுவதில்லை. அந்த மாபெரும் பணியை முன்னெடுக்கவேண்டியது தொலைக்காட்சியேயன்றி வேறெதுவுமல்ல.

இவற்றையெல்லாம்  நவீனம் கலந்து செவ்வனே நடைமுறைப்படுத்தினால் மட்டுமே தொலைக்காட்சிகளால் சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதில் பங்களிக்க முடியும்.

சாரதாஞ்சலி கர்ணன்

Sunday, October 16, 2011

கண்ணை குளமாக்கிய மண்ணின் வாழ்வியல்! - 2

இடம்பெயர்வு என்றதுமே, உயிர், பொருள் சேதங்கள், துன்ப துயரங்கள் தான் மனக் கண்ணில் தெரிகின்றன. ஆனால் அவற்றிற்குமப்பால், பல சந்ததிகளுக்குத் தொடரக்கூடிய பாரிய இழப்பை இடப்பெயர்வுகள் ஏற்படுத்தியிருக்கின்றன என்பதை யாழ்ப்பாண வாழ்வியல் கண்காட்சி புடம் போட்டுக் காட்டியது.
ஆனைக்கோட்டையானது உலகளாவிய ரீதியிலே வரலாற்றுப் பிரசித்தி வாய்ந்த இடமாகும். இதுவே யாழ்ப்பாணத்தில் கண்டு பிடிக்கப்பட்ட முதலாவது பூர்வீகக் குடியிருப்பு மையம் என அறியப்படுகிறது. ஆனைக்கோட்டை அகழ்வாராய்ச்சியிலும் பெருங்கற்காலப் பண்பாட்டுச்சின்னங்கள் கண்டு பிடிக்கப்பட்டன.
தென்னிந்தியாவிலே நாகரிக எழுச்சி பற்றிய ஆய்வுகளுக்குத் தொடக்கப் புள்ளியாக இருப்பது பெருங்கற்காலப் பண்பாடாகும். தொல்லியல் ரீதியிலான பல்வேறு முடிவுகளைப்பெறுவதற்கு ஈரெழுத்துப் பொறித்த ஆனைக்கோட்டை சாசன முத்திரை உறுதுணையாக அமைந்திருந்தது. இதில் பொறிக்கப்பட்டுள்ள எழுத்துகளை பல்வேறு பரிமாணங்களில் விளங்கும் முயற்சிகளில் ஆய்வாளர்கள் இன்றும் ஈடுபட்டுள்ளனர். 2000 ஆண்டுகளுக்கு முன்னரே யாழ்ப்பாணத்தில் குறு நில அரசு இருந்தமைக்கான சான்றாக இம்முத்திரையைப் பார்க்கிறார் பேராசிரியர் இந்திரபாலா.
சுடுமண் கிணறு என்பது நீரைப் பெறுவதற்கு பண்டைத் தமிழ் மக்கள் கையாண்ட தொழில்நுட்பமாகும். யாழ்ப்பாணம் ஜீவநதிகளற்ற பிரதேசம். அத்துடன் நிரந்தர நீருள்ள பகுதிகளிலேயே குடியிருப்புகள் உருவாகின. ஆதலால் சிறிய தொழில்நுட்பத்துடன் இலகுவாக நீரைப் பெறும் வகையிலே மணற்பாங்கான இடங்களில் பண்டை யாழ் மக்கள் குடியிருப்புகளை ஏற்படுத்தினர்.
மணற் பாங்கான இடத்தில் ஒரு சிறிய குழியை ஏற்படுத்தி, நீரைப் பெற்றனர். இயற்கைக் காரணிகளால் அக்குழிகள் அழிந்து போகாமல் இருக்க, சுட்ட மண்ணைப் பயன்படுத்தினர். இதுவே சுடுமண் கிணறு எனப்பட்டது. யாழ்ப்பாண அரசன் சிங்கை ஆரியனின் கொட்டகம சாசனம், வல்லிபுரம் தங்கத் தட்டு போன்ற பல சாசனங்கள் படியெழுதப்பட்ட பலகைகளும் கூட காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
இப்படி யாழ். குடாநாட்டின் ஆதிக் குடியிருப்புகள் பற்றிய சான்றுகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்த கண்காட்சி அரங்கு - 2 ஐக் கடந்து சென்றால் வருவது ஒரு ஒடுக்கமான சிறிய அறை. அது தான் கண்காட்சி அரங்கு – 3, அறை முழுவதும் புகைப்படங்கள். ஒரு குழந்தை பிறப்பதிலிருந்து வயோதிபனாய் இறப்பது வரை யாழ்ப்பாண வாழ்வியலில் பின்பற்றப்படும் சடங்குகள், சம்பிரதாயங்கள் பற்றிய புகைப்படத் தொகுப்பு அரங்கை அலங்கரித்தது. கறுப்பு வெள்ளைப் புகைப்படங்களிலிருந்து வர்ணப் புகைப்படங்கள் வரை காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
ஒவ்வொரு சடங்குகளுக்கும் தனியான பாரம்பரியங்கள் இருக்கும். அச்சடங்குகளின் போது அவற்றிற்கே உரித்தான, சிறப்பான பொருட்கள் பாவிக்கப்படும். இன்று அந்த பாவனைப் பொருட்கள் அருகி வருவதால் இந்த சடங்குகளும் மெல்ல மெல்ல மறைந்து கொண்டிருப்பதாக வருத்தப்பட்டார் பேராசிரியர் புஷ்பரட்ணம். அவரது வருத்தத்தில் நியாயமில்லாமல் இல்லை.
கொத்து, சத்தகம், தாம்பாளம், கிடாரம் போன்ற எத்தனையோ பொருட்கள் இன்று அருகிப்போய்விட்டன. அத்துடன் நவ நாகரிக உலகின் அவசரப் போக்குடன் நாமும் இசையத் தொடங்கி விட்டோம். அது இப்பொருட்களின் அவசியத்தையும் இல்லாதொழித்து விட்டது. ஏதாவது முக்கிய சம்பிரதாயங்கள் என்றால் கூட, வீட்டிலிருக்கும் முதியவர்களைத் தான் நாடுகிறோம். சடங்குகளுடன் தொடர்புடைய முறைகளைச் சொல்லித் தர எமக்கு அவர்கள் தேவைப்படுகிறார்கள்.
மொட்டை போடும் சடங்கு
ஆனால் சடங்கு முடிந்ததும், அவற்றை அப்படியே மறந்து விடுகிறோம். அந்த முறைகள், பாரம்பரியங்கள் எல்லாம் எதிர்காலச் சந்ததிக்குக் கடத்தப்பட வேண்டும் என்ற எண்ணப்பாடு எம் மத்தியில் மிக அரிதாகவே காணப்படுகிறது. சத்தகம் இல்லாமல் போலியாய் சத்தகம் செய்தும் கொத்து இல்லாமல் நெஸ்டமோல்ட் பேணிக்கு தங்க நிறத்தில் காகிதம் சுற்றியும் சடங்குகள் செய்தவர்கள் கூட எம்மத்தியில் இருக்கிறார்கள்.
ஆரத்தி எடுத்தல்
இதுதான் எம்மவர் நிலைமை. இப்படியெல்லாம் சடங்குகள், சம்பிரதாயங்கள் இருக்கின்றனவா என இக்கண்காட்சியில் இளஞ் சந்ததி மூக்கில் விரல் வைத்து அதிசயித்தது. மூன்றாவது அரங்கிலே காட்சிப்படுத்தப்பட்டிருந்த புகைப்படங்கள் அத்துணை பெறுமதி வாய்ந்தவையாக இருந்தன.
அடுத்ததாக அமைக்கப்பட்டிருந்த அரங்கு இந்து நாகரிகத் துறைக்குரியது. உள்ளே தெய்வ உருவச் சிலைகள் காணப்பட்டமையால், அனைவரும் தம் பாதணிகளை வாசலிலே கழற்றிய பின்னர் தான் உட்சென்றார்கள். சம கால வழிபாட்டுச் சின்னங்கள், சிலைகள், சிற்பங்கள், மாணவர்களின் கைகளால் வடிவமைக்கப்பட்ட மாதிரித் தேர் போன்றனவும் அன்றாடப் பாவனையில் காணப்பட்ட சில பொருட்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
பல ஆலயங்களிலே காலத்துக்குக் காலம் பல புனருத்தாரண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அவற்றிலே புதிய தேர் கட்டுதலும் ஒன்று.
அவ்வாறு புதிய தேர் கட்டப்படும் போது பழைய தேரிலுள்ள சிற்பங்கள் பிரிக்கப்படும். அத்தகைய பல மரச் சிற்பங்கள் அங்கே வரிசையாகக் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
அவற்றை எல்லாம் ஒருமித்து தேரிலே பார்ப்பதை விட, ஒவ்வொன்றையும் தனித்தனியாகப் பார்க்கும் போது ஏற்படும் உணர்வு வித்தியாசமானது. ஒவ்வொரு சிற்பமும் செதுக்கப்பட்டிருக்கும் நுட்பம், எம்மவர் கலை நயத்தை எண்ணி வியக்க வைக்கும். அவை மிகவும் பழைமையான பறாளை விநாயகர் ஆலயம் போன்ற சில ஆலயங்களிலிருந்து பெறப்பட்டவையாகும்.

(தொடரும்)

Sunday, October 2, 2011

கண்ணைக் குளமாக்கிய மண்ணின் வாழ்வியல் -1

 யாழ். பல்கலைக்கழக வரலாற்றுத் துறையின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண வாழ்வியல் கண்காட்சி..
கேட்டதுமே ஒரு வித குற்ற உணர்வு எம்மை  உறுத்துவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது.  எமக்கே உரித்தான வாழ்வியலைப் பற்றி எமக்குக் கூற ஒரு கண்காட்சி.. அதை   யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின்  வரலாற்றுத் துறை ஏற்பாடு செய்திருந்தது என்பது இக்கண்காட்சிக்கான அங்கீகாரத்தை வழங்கியிருந்தது.   இந்தக் கண்காட்சியால் ஏற்பட்டிருக்கும் சகல சாதகமான மாற்றங்களுக்குமான பெருமைகூட வரலாற்றுத் துறையையே சாரும்.

எமது நிலையை எண்ணி நாம் நாண வேண்டிய தருணம் இது; இனியும் தூங்கிக் கொண்டிருக்காமல்,  விழித்தெழ வேண்டிய தருணம்   என்று  சொல்லாமல் சொல்லிய பெருமையும்  இந்தக் கண்காட்சியையே சாரும்.
ஏறத்தாழ 15-20 வருடங்களுக்கு முன்னர் பாவனையிலிருந்த பொருட்கள் எல்லாம் இன்று அரிய பொருட்களாகி விட்டன என்பதைக் கூட  இந்தக் கண்காட்சியைப்  பார்த்த பின்னரே  பலரால் உணர முடிந்தது.   அதாவது , இது வரை காலமும் நாம் எத்தகைய இருளிலே மூழ்கியிருந்திருக்கிறோம் என்பது தெரிகிறதல்லவா?

கடந்த 24 ஆம் திகதி தொடங்கிய இக் கண்காட்சி கடந்த 27 ஆம் திகதி நிறைவு பெற்றது. யாழ்.பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் வசந்தி அரியரட்ணம், பேராசிரியர்  சி. பத் ம நாதன், பேராசிரியர்  ப. புஷ்பரட்ணம் போன்றோரின் ஆதரவு, வழி காட்டல்களுடன்  இனிதே ஒழுங்கு செய்யப் பட்டிருந்தது. கண்காட்சி நடந்து கொண்டிருக்கும் அதே வேளை ஆய்வரங்குகளும் நடைபெற்றுக்கொண்டிருந்தன.

பல்கலைக்கழக நூதன சாலையில் இருந்த பொருட்களுடன்,  நிறுவனங்கள், ஆலயம் போன்ற பொது அமைப்புகள்,  பொது மக்களிடம் சேகரிக்கப் பட்ட பொருட்களும்,   மாணவர்களால் தயாரிக்கப் பட்ட மாதிரி உருக்களும் காட்சிப் படுத்தப்பட்டிருந்தன. யாழ்ப்பாண வாழ்வியலின் அம்சங்கள் சில புகைப் படங்கள் வாயிலாகவும்  காட்டப்பட்டிருந்தன.

இறை வழிபாடு, கிராமிய நடனங்களுடனான வரவேற்பு என ஆரம்பமாகிய கண்காட்சி தொடர்ந்து நான்கு நாட்களுக்கு நடைபெறும் எனத் தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் ஆர்வலர்களின் ஒருமித்த வேண்டுகோளுக்கமைய ஐந்தாவது நாளாகவும் நடைபெற்று கடந்த புதன் கிழமையுடன் நிறைவு பெற்றது.
ஆரம்ப விழாவின் பிரதம அதிதியாக தொல்லியல் திணைக்களப் பணிப்பாளர் கலா நிதி செனரத் திச நாயக்க கலந்து கொண்டார். சிறப்பு அதிதியாக யாழ். பல்கலைக் கழக துணை வேந்தர் வசந்தி அரியரட்ணமும், கௌரவ அதிதிகளாக யாழ். மாநகர மேயர் யோகேஸ்வரி பற்குணராசா, பேராசிரியர் சி. பத்ம நாதன் ஆகியோரும் கலந்து கொண்டனர். அதிதிகளின் உரையைத் தொடர்ந்து பேராசிரியர் சி. பத்மநாதன் எழுதிய யாழ்ப்பாண  இராச்சியம் -ஒரு சுருக்கவரலாறு என்ற நூலும் உத்தியோக பூர்வமாக வெளியிட்டு வைக்கப்பட்டது.

கண்காட்சி அரங்கங்களின் நுழைவாயிலை பாரம்பரிய சொக்கட்டான் மணவறை அலங்கரித்தது. மாவிலை, தோரணங்கள், தானியக் கோலம், மண் விளக்குகள்  போன்றனவும் அலங்கரிக்கத் தவறவில்லை.
கண்காட்சியை ஏற்பாடு செய்யத்தொடங்கிய போதே  பல் கலைக் கழகத்தின் வரலாற்றுத்துறையினர் குறிப்பாக மாணவர்களும் விரிவுரையாளர்களும் சிறு குழுக்களாகப் பிரிந்து தொலை தூர இடங்களுக்கெல்லாம் வீடு வீடாகச் சென்றனர்.  இக் கண்காட்சி பற்றித் தெளிவு படுத்தி, ஒவ்வொருவரிடமும் இருக்கும் அரிய பொருட்களைச் சேகரித்தனர். பத்திரிகைகளிலே விளம்பரங்களும் பிரசுரிக்கப் பட்டன. அவற்றைப் பார்த்த மக்கள் பலர் தாமாகவே முன் வந்து அத்தகைய அரிய பொருட்களை வழங்கியிருந்தார்கள். சிலர் தமது முகவரியைக் குறிப்பிட்டு தகவல்  அனுப்பியிருந்தார்கள். அத்தகையோரிடம் வரலாற்றுத் துறையினர் நேரடியாகச் சென்று பொருட்களைப் பெற்றுக் கொண்டனர். சிலர், பல்கலைக்கழகத்துக்காகவே அப்பொருட்களை வழங்கியிருந்தார்கள்.  சிலர் கண்காட்சி முடிந்த பின் மீளக் கையளிக்க வேண்டுமென இரவலாக வழங்கியிருந்தார்கள். இக்கண்காட்சிக்கு மக்கள் வழங்கிய ஒத்துழைப்பையும் எம் மக்களிடம் இருந்த , இருக்கின்ற அரும்பெருஞ்சொத்துக்களின் பெறுமதியையும்  எம் யாழ்ப்பாண வாழ்வியல் எத்துணை செழிப்பானதாக இருந்தது என்பதையும் இக் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் எடுத்தியம்பின.

அதே வேளை வரலாற்றுப் பெறுமதியுடைய பொருட்களைத்  தம்மிடம் ஒப்படைக்க  சிலர் தயங்குவதாக பேராசிரியர் புஷ்பரட்ணம் குறிப்பிட்டிருந்தார். " பல வீடுகளில் செப்பேடுகள் இருப்பதாக அறிகிறோம். முன்னோர்கள் கோயில்களுக்குத் தானமாக வழங்கிய  நிலங்கள் தொடர்பான குறிப்புகள் அவற்றில் காணப்படுவதாக அறிய முடிகிறது. அவற்றை எல்லாம் எம்மிடம் ஒப்படைத்தால் நிலங்கள் மீது தாம் கொண்டிருக்கும் உரிமை பறி போய்விடுமோ என மக்கள் அஞ்சுகிறார்கள். என்கிறார் பேராசிரியர் புஷ்பரட்ணம்.
இக்கண்காட்சி யாழ். பல்கலைக்கழக கலைப்பீட வளாகத்தினுள்  ஏற்பாடு செய்யப்பட்டது. அப்பகுதி 12 அரங்குகளாகப் பிரிக்கப்பட்டு எம்மவரின் வாழ்வியல் கோலங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. யாழ்ப்பாண வாழ்வியலிலே  சமயத்துக்கு மிக முக்கியமான இடம் இருக்கிறது. அதன் பாங்கை வடிவமைத்த பங்கு சமயத்துக்கே அதிகம் உண்டு. யாழ். குடா நாட்டில்  அடையாளம் காணப்பட்ட புராதன இந்து , பௌத்த, இஸ்லாம், கிறிஸ்தவ  வழிபாட்டிடங்களின் புகைப்படங்களும்  அப்பகுதிகளில் கிடைத்த தொல்பொருட்சின்னங்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. அண்மையில் சாவகச்சேரிப் பகுதியிலே கண்டெடுக்கப்பட்ட இந்துத் தெய்வங்களின் உருவச்சிலைகள் கண்ணாடிப் பேழைக்குள் வைக்கப்பட்டிருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இந்து ஆலய வழிபாடுகளில் பயன்படுத்தும் பொருட்களின் தொகுதி வியக்க வைத்தது. ஒவ்வொரு பொருளிலும் காணப்படும் வகைப்பாடுகள்  வாய் பிளக்க வைத்தன.  விளக்குகளாகட்டும்.. செம்புகளாகட்டும். கமண்டலங்களாகட்டும்.. ஆரத்திகளாகட்டும்.. ஒவ்வொன்றிலும் எத்தனை  எத்தனை வகைகள்..? அத்தனையும்  நுண்ணிய உலோக வேலைப்பாடுகளுடன் கூடியவை..

கண்ணாடிப் பேழைகளுக்குள் வைக்கப்பட்டிருக்கும்  தெய்வ உருவச் சிலைகள் புத்தம் புதிதாய்த் தெரிந்தன. ஆனால் அவற்றின் வரலாறோ  நூற்றாண்டு காலத் தொன்மையை  எடுத்தியம்புகிறது.  இவையெல்லாம் எமக்கே  உரித்தானவை என எண்ணும் போதே மெய் சிலிர்த்து விடுகிறது.
இப்படியே இரண்டாவது அரங்கிற்குச் சென்றால் அங்குள்ள காட்சிப் பொருட்களின் தொன்மை  ஏலவே நாம் கொண்டிருந்த பிரமிப்பை அதிகரிக்கச் செய்தது. 
" எம்மவருக்கு பல்லாயிரக்கணக்கான ஆண்டு கால வரலாறு உண்டு. அதைத் தொலைத்து விடாதே "  என்று அவை ஒவ்வொன்றும் காதுக்குள் கூறுவது போல்  இருந்தது.  கி.மு 3 ஆம் நூற்றாண்டு தொட்டு 20 ஆம் நூற்றாண்டுவரை காலத்துக்குக் காலம் பாவனையிலிருந்த நாணயங்கள் , ஓடுகள் , போன்றவை கால அடிப்படையில் காட்சிப் படுத்தப்பட்டிருந்தன. அத்துடன்  ஈரெழுத்து பொறிக்கப்பட்ட ஆனைக் கோட்டை சாசன முத்திரை, சுடு மண் கிணறு , பல்வேறு சாசனங்கள் போன்றவை பிரதி பண்ணப்பட்டு வைக்கப்பட்டிருந்தன.  அத்துடன் பண்டைத் தமிழர் வாழ்வியலுடன் பிணைந்திருந்த சுடுமண் கிணற்றின் மாதிரி, ஆதிகால  நாணயங்களின் மாதிரி ஆகியனவும் கூட பிரதி பண்ணப்பட்டு வைக்கப்பட்டிருந்தன.

 புராதன காலத்திலிருந்து இன்றுவரை எம் வாழ்வியலிலே பாவனையில் இருக்கும்  குறியீடுகள் தொடர்பாகவும் விளக்கப்படம் அமைக்கப் பட்டிருந்தமை குறிப்பிடப் பட வேண்டியது.  எம்மை அறியாமல் இன்றும் நாம் பாவித்து வரும் குறியீடுகள் புராதன காலத்திலிருந்தே அறியப்பட்டவை என்பது ஆச்சரியப்படவேண்டிய, ஆனால் அனைவரும் அறிந்திருக்க வேண்டிய உண்மையாகும்.

 இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த  பழங்கால நாணயங்களானவை  சங்க காலத்திலிருந்து பிற்காலம்  வரை வெவ்வேறு கால கட்டங்களுக்குரித்தானவையாகும். தமிழக நாணயங்கள்,   சேது நாணயங்கள்,அனுராதபுர கால, பொலநறுவைக் கால,  சாவகன் கால, யாழ்ப்பாண அரசு கால, ஐரோப்பியர்கால நாணயங்களும் உள்ளடங்குகின்றன.  ஆதி கால நாணயங்கள் சிலவற்றின் மாதிரிகளும் செய்து வைக்கப்பட்டிருந்தன.

கல்லாயுதங்கள் தொட்டு மண் ஓடுகள்,மட்பாண்டப்  பகுதிகள், சீன மட்பாண்டங்கள் , பெருங்கற்கால ஓடுகள், கண்ணாடி ஓடுகள் வரை பல்வேறு கால கட்டங்களைச் சேர்ந்த தொல் பொருட்கள், அவற்றின் சிதைந்த பாகங்கள் போன்றன காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. அவை பூநகரி, இரணைமடு, மாந்தை, கந்தரோடை, சாட்டி, நெடுந்தீவு போன்ற இடங்களிலிருந்து பெறப்பட்டவையாகும்.

ஆனைக்கோட்டையானது  உலகளாவிய ரீதியிலே வரலாற்றுப் பிரசித்தி வாய்ந்த இடமாகும். இதுவே யாழ்ப்பாணத்தில் கண்டு பிடிக்கப்பட்ட முதலாவது பூர்வீகக் குடியிருப்பு மையம் என அறியப்படுகிறது.  ஆனைக்கோட்டை  அகழ்வாராய்ச்சியிலும் பெருங்கற்காலப் பண்பாட்டுச் சின்னங்கள் கண்டு பிடிக்கப்பட்டன.  தென்னிந் தியாவிலே  நாகரிக எழுச்சி பற்றிய ஆய்வுகளுக்குத் தொடக்கப் புள்ளியாக இருப்பது பெருங்கற்காலப் பண்பாடாகும்.   தொல்லியல் ரீதியிலான பல்வேறு முடிவுகளைப் பெறுவதற்கு ஈரெழுத்துப் பொறித்த ஆனைக் கோட்டை சாசன முத்திரை உறுதுணையாக அமைந்திருந்தது. இதில் பொறிக்கப் பட்டுள்ள எழுத்துகளை பல்வேறு பரிமாணங்களில் விளக்கும் முயற்சிகளில் ஆய்வாளர்கள் இன்றும் ஈடுபட்டுள்ளனர். 2000 ஆண்டுகளுக்கு முன்னரே யாழ்ப்பாணத்தில் குறு நில அரசு இருந்தமைக்கான சான்றாக இம்முத்திரையைப் பார்க்கிறார் பேராசிரியர் இந்திரபாலா.

சுடுமண் கிணறு என்பது  நீரைப் பெறுவதற்கு பண்டைத் தமிழ் மக்கள் கையாண்ட தொழில்நுட்பமாகும்.  யாழ்ப்பாணம் ஜீவநதிகளற்ற பிரதேசம்.   அத்துடன் நிரந்தர நீருள்ள பகுதிகளிலேயே  குடியிருப்புகள் உருவாகின. ஆதலால் சிறிய தொழில் நுட்பத்துடன் இலகுவாக நீரைப் பெறும் வகையிலே மணற்பாங்கான இடங்களில் பண்டை யாழ் மக்கள் குடியிருப்புகளை ஏற்படுத்தினர்.  மணற்பாங்கான இடத்தில் ஒரு சிறிய குழியை ஏற்படுத்தி, நீரைப் பெற்றனர். இயற்கைக் காரணிகளால் அக்குழிகள் அழிந்து போகாமல் இருக்க , சுட்ட மண்ணைப் பயன் படுத்தினர். இதுவே  சுடுமண் கிணறு எனப் பட்டது.

யாழ்ப்பாண அரசன் சிங்கை ஆரியனின் கொட்டகம சாசனம், வல்லிபுரம் தங்கத் தட்டு போன்ற பல சாசனங்கள் படியெழுதப்பட்ட பலகைகளும் கூட  காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

தொடரும்