Showing posts with label யாழ்ப்பாணம். Show all posts
Showing posts with label யாழ்ப்பாணம். Show all posts

Sunday, February 3, 2019

காணி நிலம் வேண்டும்!

உலகளாவியரீதியிலே பண்டைக்காலந்தொட்டு நடந்த போர் வரலாறுகளிலெல்லாம் நிலத்துக்கு பெரு முக்கியத்துவம் உள்ளது. தமிழர் வாழ்வியலும் காணியும் பின்னிப்பிணைந்ததெனலாம்.  காணியின் அறிமுகம் சோழர் காலத்தில் ஆரம்பிக்கிறது. காணியென்பது உரிமையின் மறு பொருளாக க் கருதப்பட்டாலும் 1/80 என்ற அலகை அடிப்படையாக க் கொண்ட முறையாக க் குறிப்பிடப்படுகிறது.
தமிழர் வரலாற்றிலே இற்றைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சோழ மன்னன்  இராஜ ராஜ சோழனுடைய காலத்தில் தான் முதன் முதல் நிலங்கள் அளவை செய்யப்பட்டன. எல்லைகள் வகைக் குறிக்கப்பட்டன. ஒவ்வொருவருக்கும் உரித்தான நிலங்கள் கணக்கிடப்பட்டன. நிலங்கள் மீதான  விளைச்சலின் அடிப்படையில் அவை தரம்பிரிக்கப்பட்டன.  நில அளவையில் வேலி, மா, காணி, முந்திரி போன்ற சொற்பதங்கள் மிக முக்கியமானவை.
ஈழ தேசமும் ஜன நாதமங்கலம் எனவும் மும்முடிச் சோழ புரம் எனவும்  நெடுங்காலம் சோழர் ஆட்சியின் கீழ் இருந்தமையாலோ என்னவோ  எம்மவர்  வாழ்வியலிலும் காணிக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகிறது.
 நுகர்வை அடிப்படையாகக் கொண்ட இன்றைய உலகிலே  காணி எனப்படுவது நிலமாகக் கருதப்படுவதுடன் மிகவும் பிரதானமானதோர் பொருளாதார வளமாகப் பார்க்கப்படுகிறது.  ஏனெனில் காணி மீதான உரிமையை அடிப்படையாக க் கொண்டே ஏனைய பொருளாதார, உற்பத்தித்திறன் சார் வளங்கள் மீதான அதிகாரம் பிரயோகிக்க ப்படுகிறது. நகர்ப்புறமோ கிராமப்புறமோ அவ்வதிகாரம் தொடர்பில் ஒத்த போக்கே காணப்படுகிறது.   நிலமின்றி மேற்கொள்ளப்படும் விவசாயம் நடைபெற்றாலும் கூட அதிகரித்துவரும் உலக சனத்தொகையின் உணவுத் தேவையை ஓரளவேனும் பூர்த்தி செய்யக் கூடியதாக இருக்கின்றதென்றால் நிலமன்றி வேறேதும் துணை புரியாது. நிதி வளங்களைப் பெற்றுக்கொள்வதற்கான பிடியாக மட்டுமன்றி  திருமணங்களின் போதும் காணியின் செல்வாக்கு மிக அதிகமாகவே காணப்படுகிறது.
அடிப்படையில் வறுமையை ஒழிக்க வேண்டுமாயின், உணவுப்பாதுகாப்பை உறுதி செய்யவேண்டுமாயின்,  நிலையான அபிவிருத்தியை  அடைய வேண்டுமாயின் நிலம், அதன் மீதான உரிமை, அதிகாரம் ஆகியன  அத்தியாவசியமானவையாக மாறி விடுகின்றன. அதனால் தான் கற்றுக்கொண்ட பாடங்கள், மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையிலும் கூட நிலம், அதன் மீதான உரிமை, அதிகாரம் ஆகியவற்றுக்கும்  அவற்றின் மீது பெண்களின் பங்குக்கும் அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டிருந்தது.  இலங்கையைப் பொறுத்த வரையிலே ஏறத்தாழ 80 சதவீதத்துக்கும்  அதிகமான காணிகள் மீதான உரிமையை அரசே வைத்திருக்கிறது. ஆயினும் அவற்றுள் பெரும்பாலானவை  பல்வேறு தேவைகளுக்காக பொது மக்களுக்கும் நிறுவனங்களுக்கும் அமைப்புகளுக்கும்  நிபந்தனைகளின் பிரித்தளிக்கப்பட்டிருக்கின்றன. யாழ்ப்பாணம் போன்று பிரித்தானியரின் நிர்வாக மையமாகச் செயற்பட்ட மாவட்டங்களில் தனியார் காணிகள் அதிக சதவீதத்திலும் அரச  காணிகள்  குறைவான சதவீதத்திலும் காணப்படுகின்றன. 
காணி உரிமை, அதிகாரம் போன்றவை இலங்கையைப் பொறுத்தவரையிலே ஆண்வழி சமூக க் கட்டமைப்பை அடிப்படையாக க் கொண்டவையாகவும் பெண்களைப் பின்னிறுத்தியவையாகவுமே காணப்படுகின்றன. 1970 களில் உருவாக்கப்பட்ட காணிச் சீர்திருத்தங்களின் பின்னரும் கூட அதிகளவு நில புலங்களை வைத்திருந்த பலர் வடக்கு கிழக்கு பகுதிகளை விட்டு புலம் பெயர்ந்து விட்டனர். இந் நிலையில்  அரச காணியாகிலும் சரி தனியார் காணியாகிலும் சரி காணி மீதான உரிமை, அதிகாரம் தொடர்பில் சிக்கலான நிலைமைகள் உருவாகியமை தவிர்க்கமுடியாததாகி விட்டது.  நாட்டில் நிலவிய அசாத்தியமான சூழ் நிலை காரணமாக பிரித்தளிக்கப்பட்ட அரச காணிகளை அபிவிருத்தி செய்ய முடியாது கைவிட்டுச் சென்றோர் மிகப்பலர்.  இந் நிலைமைக்கு தனியார் காணிகளும் விதி விலக்காக அமையவில்லை.
கைவிட்ட நிலையில் காணப்பட்ட காணிகள் பல காலத்துக்குக் காலம் பல்வேறு தரப்பினராலும் அத்து மீறிப் பிடிக்கப்பட்டு ஆட்சி செய்யப்பட்டு வருகின்ற  நிலைமையும்  தவிர்க்க முடியாததாகிவிட்டது என்றே கூற வேண்டும். யுத்தமும் சுனாமி அனர்த்தமும் பல உரித்தாவணங்களும் கோவைகளும் அழிந்து போகவும் கைவிடப்படவும் காரணமாகி விட்டன. 1970 களின் பின்னர் காணி அத்து மீறல்கள் அளவை செய்யப்பட்டு வரைபடங்கள் இற்றைவரைப்படுத்தப்படவில்லை. கடந்த 3 தசாப்தகாலங்களுள் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திகளும் பகிர்ந்தளிப்புகளும் கூட வரை படங்களில் இற்றை வரைப்படுத்தப்படாத நிலைமையே காணப்படுகிறது.
அசாத்திய சூழ் நிலைகளால் கைவிடப்பட்ட காணிகளை 3 தசாப்த காலம் கடந்து , ஆவணங்களை இழந்து உரிமை கோரும் போது அவை வேறு தேவைகளுக்காக பாவிக்கப்பட்டிருக்கின்றமையையும்  அவற்றின் நிலப்பயன்பாடு மாறி இருக்கின்றமையையும் அதன் காரணமாக அவை பல்வேறு பட்ட திணைக்களங்களின் அதிகார எல்லைக்குள் ஆட்பட்டிருக்கின்றமையையும் அவதானித்தபோது வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள காணிகளின் உரித்து, அவற்றின் மீதான அதிகாரம்  தொடர்பில் தொடர்ந்தும் தெளிவற்ற நிலைமைகள் காணப்படுகின்றமையை அவதானிக்க முடிகிறது.  அத்துடன் ஆறு, குள ஒதுக்கீடுகளும் பாதை ஒதுக்கீடுகளும்  அத்துமீறி ஆக்கிரமிக்கப்பட்டு நிலையான குடியிருப்புகளாக மாற்றப்பட்ட நிலையில் அவற்றை ஒழுங்குபடுத்துதல்  தொடர்பான சட்டச் சிக்கல்கள் தொடர்ந்தும் நீடித்த வண்ணமேயுள்ளன.
யுத்த சூழலில் உள் நாட்டில் இடம்பெயர்ந்து மீளக்குடியமராதவர்களும் புலம் பெயர்ந்தவர்களுள் பெரும்பாலானோரும் தமக்கான காணி உரிமையை வட கிழக்கு மாகாணத்தில் கொண்டிருக்கின்ற அதேவேளை மீளக்குடியமர்வின் பின்னர் தற்போது குடியமர்ந்திருக்கும் பல புதிய, உப குடும்பங்களுடைய காணி உரிமை தொடர்பில் இன்னும் சிக்கலான நிலைமையே காணப்படுகிறது.
அரச காணிகளுக்கு வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரங்கள் கைமாற்றப்பட இயலாதவையாக இருந்த போதும் விற்பனை உடன்படிக்கை மூலம் கைமாற்றுபவர்கள் இன்னும் வாழ்ந்த வண்ணமே இருக்கின்றனர். மூன்று தசாப்த கால அசாதாரண சூழ் நிலைகளின் போது உருவாகிய இப்பழக்கத்தை எந்தவொரு தரப்பினரும் கைவிடுவதாக இல்லை. காணிகளை பிரிக்கப்படஇயலாத விஸ்தீரணங்களுக்கும் குறைவாகப் பிரிவிடை செய்து விற்பனை உடன்படிக்கைகள்  மூலம் கைமாற்றுபவர்களும் திருந்தாத நிலையே தோன்றியுள்ளது.  இவை யாவுமே அரச நிர்வாக இயந்திரங்களின்  எல்லைகளுக்கப்பால் தினந்தோறும் நிகழ்ந்தவண்ணமேயுள்ளன.  
ஏறத்தாழ ஐந்தாறு தசாப்தங்களுக்கு முன்னரே  அப்போது காணப்பட்ட அரச காணிகளுக்கு வெளிப்படுத்துகை உறுதிகளை எழுதி கைமாற்றும் முறைமைக்கு பழக்கப்பட்ட எம்மவர்கள் அதைத் தற்காலத்திலும் தொடர்கின்றமை  பல முரண்பாடுகளைத் தோற்றுவித்துள்ளது. மத்திய வகுப்பினருக்கென வழங்கப்பட்ட காணிகளும் கூட நிபந்தனைகளை மீறி பிரிவிடை செய்யப்பட்டும் உரிமை கோரப்படாமலும் பல்வேறு தரப்பினரால் அத்துமீறிப்பிடிக்கப்பட்டும் சிக்கலானதோர் நிலையில் காணப்படுகின்றன.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு வின் சிபாரிசுக்கமைய காணி ஆணையாளரால் வெளியிடப்பட்ட சுற்று நிருபங்களின் அடிப்படையிலே அத்து மீறிப்பிடிக்கப்பட்ட அரச காணிகளுக்கும் ஆவணங்கள் தொலைந்த, ஏலவே பகிர்ந்தளிக்கப்பட்ட அரச காணிகளுக்கும் உரித்தாவணங்கள் வழங்கப்பட்டு பல்லாயிரக்கணக்காணோரின் காணி உரிமை உறுதி செய்யப்பட்டமையை ஒரு போதும் மறுக்க முடியாது.
மூன்று தசாப்த கால அசாத்திய சூழல் காரணமாக எந்தவித திட்டமிடலுமின்றி திடீரென பெரு நகரங்களாக வளர்ச்சியடைந்த பிரதேசங்கள் பலவும் வடகிழக்கிலே காணப்படுகின்றன. நகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அரச காணிகள் நீண்ட கால க்குத்தகையில் வழங்கப்பட வேண்டியவை. ஆயினும் இப்புதிய நகரங்களுள் அவை இன்னும் முற்றாக ஒழுங்கமைக்கப்பட்டு குத்தகை அறவிடப்பட்டு வருகின்ற நிலைமை அரிதாகவே காணப்படுகிறது. ஆயினும் அக்காணிகளை மேட்டு நிலமாகப் பயன்படுத்த அனுமதி பெற்ற தனி நபர்கள்  பெருந்தொகை பணத்தை பெற்று அவற்றை வர்த்தக நிறுவனங்களுக்கு குத்தகைக்கு வழங்குகின்றமையையும்   அரசினால் வழங்கப்படும் குத்தகை உடன்படிக்கைகளை கை மாற்றூகின்றமையையும் கூட பரவலாக அவதானிக்க முடிகின்றது. சம்பந்தப்பட்ட திணைக்களங்களில் காணப்படும் வளப்பற்றாக்குறை காரணமாக இத்தகைய செயற்பாடுகள் அவற்றின் கைகளை மீறியவைகளாகவே இருக்கின்றன.
அரச காணிகள் தொடர்பிலான  நிலைமை இவ்வண்ணமிருக்க கடந்த கால அசாதாரண சூழ் நிலையால் அத்து மீறிப்பிடிக்கப்பட்ட தனியார் காணிகள் மீதான வழக்குகள் அரை தசாப்தத்துக்கும் மேலாக  நீதி மன்றுகளில் நடைபெற்று வருகின்றன.  காணிக்கான உண்மை உரித்தாவணங்களுடன் உரிமையாளரும் எந்தவித ஆவணங்களின்றி அத்துமீறிப்பிடித்தவர்களும் அரை தசாப்தங்களுக்கு வழக்காடுகின்றமை சிலவேளைகளில் யதார்த்தத்துக்கும் தர்க்கத்துக்கும் அப்பால் பட்டவைகளாகவே காணப்படுகின்றன. மாவட்டப் பதிவகங்களிலிலிருந்த காணி உரித்தாவணப்பதிவேடுகள் அழிவடைந்தமையால்  2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் பதிவு செய்த தனியார் உறுதிகள் சத்தியக்கடதாசியுடன் மீளவும் பதிவு செய்யப்படுகின்றன. இவை பற்றிய விழிப்புணர்வு  கற்றவரிடமும் மற்றோரிடமும் குறைவாகவே காணப்படுகின்றன.
யாழ்ப்பாணத்திலே 80 சதவீதமான காணிகள் தனியார் காணிகளாதலால் தனியார் உறுதிகளைக் கைமாற்றிப் பழக்கப்பட்டோர் வட மாகாணத்தின் ஏனைய பகுதிகளில் உள்ள அரச காணிகளையும் தனியார் காணிகள் என கல்வியறிவு வேறுபாடின்றி அனைவரும் நம்பி ஏமாறும் பல  நிகழ்வுகள் அன்றாடம் இடம்பெற்றவண்ணமே உள்ளன. 
குறித்த காணியொன்று தனியார் காணியா? அரச காணியா என்பதை அக்காணி அமைந்துள்ள பிரிவுக்குரிய பிரதேச செயலகத்தில் காணப்படும் நில அளவை வரைபடங்களை அடிப்படையாக க் கொண்டு அறிய முடியும். இலையேல் நில அளவைத் திணைக்களத்திலுள்ள இற்றைவரைப்படுத்தப்பட்ட நில அளவை வரைபடங்களைக் கொண்டும் அறிய இயலும். காணி தொடர்பிலான நிர்வாக இயந்திரங்களில் மூன்று தசாப்தகாலமாக ஏற்பட்ட இடைவெளியை பூர்த்தி செய்து  சம காலச் செயற்பாடுகளை முன்னெடுக்க இன்னும் சில தசாப்தங்களாகும் எனலாம்.
இவை இப்படி இருக்க பெண்களின் காணி உரிமை பற்றி எவரும் பெரிதளவில் கருத்தில் எடுத்துக்கொள்வதில்லை. அடிப்படையில் நிலம் மீது பெண்ணுக்கு உரிமையோ அல்லது அதிகாரமோ காணப்படும் பட்சத்தில் பல அபிவிருத்தி இலக்குகளை இலகுவாக எட்டமுடியும் என ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.பெண்களுக்கு காணிமீதான அதிகாரமும் உரிமையும் காணப்படும் போது  பொருளாதார ரீதியிலான சந்தர்ப்பங்கள் அதிகரிக்கும். ஆண்களுடன் ஒப்பிடுகையில் நிலப் பாவனை தொடர்பாக பெண்கள் மேற்கொள்ளும் தீர்மானங்கள் வினைத்திறனானவையாக இருக்கும். அக்காணியிலிருக்கும் இயற்கை வளங்கள் நிலைத்திருக்க க் கூடிய வகையிலே பாவனையிலிருக்கும். ஆண்களுக்குக் கிடைப்பனவான பௌதிக வளங்கள் பெண்களுக்கும் கிடைக்கப்பெற்று அவர்கள் விவசாயத்தில் ஈடுபட்டால் விளைச்சல் 20-30 சதவீத த் தால் அதிகரிக்கும்.  உணவுப் பாதுகாப்பு தானாகவே அதிகரிக்கும்  என்றெல்லாம் ஆய்வுகள் நிரூபித்திருக்கின்றன. ஆயினும் காணி மீதான உரிமை, அதிகாரத்தை பெண்களுக்கும் சமமாக வழங்க நாம் தயாராக இருக்கிறோமா என்பது பணப்பரிசுக்குரிய
கேள்வியாகவே இன்றும் இருக்கிறது.

Monday, January 7, 2019

சாணேற முழம் சறுக்கியதோ?


அண்மையில் உலகளாவிய ரீதியில் வெளியிடப்பட்ட சுட்டி ஒன்று தொடர்பில் இலங்கை இரண்டாம் இடத்தைப் பெற்றிருந்தது. அச்சுட்டி வேறெதுவுமல்ல. ‘ஜேர்மன் வொச்’ என்ற அமைப்பினால் வெளியிடப்பட்ட 2019 ஆம் ஆண்டுக்கான  நீண்டகால கால நிலை அபாயச்சுட்டியேயாகும்.  1998 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரையான 20 வருட காலப்பகுதியில் வெள்ளம், வரட்சி, புயல் போன்ற வானிலை சார் பேரிடர்களால் ஏற்பட்ட இழப்புகளின் பாதிப்பின் அடிப்படையில் இச்சுட்டி கணிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் போலந்து நாட்டில் நடைபெற்ற கால நிலை உச்சி மா நாட்டிலே வெளியிடப்பட்ட உலகளாவிய கால நிலை அபாயச்சுட்டி 2019 என்ற அறிக்கையில் இத்தகவல் வெளியிடப்பட்டிருக்கிறது.

2018 ஆம் ஆண்டுக்குரிய அறிக்கையில் இச்சுட்டி தொடர்பில் நான்காம் இட த்தை வகித்த இலங்கை 2019 ஆம் ஆண்டுக்குரிய அறிக்கையில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியிருக்கிறது. இது ஒரு முன்னேற்றத்துக்கான அறிகுறியன்று. இலங்கையின் பாதிக்கப்படும் தன்மை அதிகரித்துச் செல்வதற்கான அபாய அறிகுறியேயாகும். கால நிலைக்கும்.

அதிகூடிய வெப்பமும் எதிர்பாரா மழை வீழ்ச்சியும் அதனால் ஏற்படும் வெள்ளப்பெருக்கும் மண்சரிவும் என இலங்கை தொடர்ந்து பேரழிவுகளைச் சந்தித்து வருகிறது. இந் நிலைமை தவிர்க்கமுடியாததாகி விட்டமையையும் உணர முடிகிறது.

கால நிலை மாற்றத்தை மனிதன் கையாளத்தவறும் ஒவ்வொரு கணமும் குறிப்பாக சிறுதீவுகளாக க் காணப்படும் நாடுகளின் பாதிக்கப்படும் தன்மை அதிகரித்த வண்ணமே செல்கிறது.  உலகளாவிய சராசரி வெப்ப நிலை அதிகரிக்க அதிகரிக்க இந்த மோசமான நிலைமைகள் உருவாகும் நிகழ்தகவும் அதிகரித்துச் செல்வதாக எதிர்வு கூறப்படுகிறது. ஆயினும் சில வானிலை நிகழ்வுகளுக்கும் கால நிலை மாற்றத்துக்குமான தொடர்புகளை இன்னும் விஞ் ஞான ரீதியாக உறுதி செய்ய முடியவில்லை. புவிக்கோளத்தின் வெப்ப நிலை அதிகரிக்க அதிகரிக்க சில வானிலை நிகழ்வுகளின் மீடிறனும் செறிவும் அவற்றினால் ஏற்படும் பாதிப்பும் அதிகரித்த வண்ணம் செல்கின்றமையை மட்டும் விஞ்ஞானத்தால்அவதானிக்க முடிகிறது.

அது மட்டுமன்றி ஒரு தனிப்பட்ட வானிலை நிகழ்விலே கால நிலை மாற்றத்தின் தாக்கத்தைக் கண்டறிதலானது மிகவும் சிக்கலானதாகும். வேறுபட்ட பிராந்தியங்களில் நிலைமைகள் மாறுபட்டுக் காணப்படுகின்றன. அவை தொடர்பான நீண்டகாலத்தரவுகள் மட்டுப்படுத்தப்பட்டவையாக க் காணப்படுகின்றன. கடந்த சிலகாலமாக  திடீரெனெ நிகழும் அதி தீவிர வானிலை  நிகழ்வுகள் தொடர்பான ஆய்வுகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுவருவதும் உண்மையே. 

கால நிலை மாதிரிகளை உருவாக்கிப் பரீட்சித்து இத்தகைய அதீதமான வானிலை நிகழ்வுகளை எதிர்வு கூறுவதும் அவை   இடம்பெற்ற பின்னர் அவற்றுடன் ஒப்பிட்டு கால நிலை மாதிரிகளை மேலும் செம்மைப்படுத்துவதும் உலகளாவிய ரீதியிலே நடைபெற்ற வண்ணம் உள்ளன.  நீங்கள் தொலைக்காட்சிகளில் பார்க்கும் வானிலை அறிக்கைகள், அவற்றின் விவரணம் கூட இத்தகைய கால நிலை மாதிரிகள் எதிர்வு கூறுபவற்றை அடிப்படையாக க் கொண்டே தயாரிக்கப்படுகின்றன.  இத்தகைய கால நிலை மாதிரிகள் மூலம் புவி வெப்பமயமாதலினால் வானிலையில் ஏற்படும் மாற்றங்கள் பற்றியும் ஆராயப்பட்டு வருகின்றன. உதாரணமாக உயர் வெப்ப நிலை நீர்ச் சக்கரத்தை மேலும் செறிவுற்றதாக மாற்ற வல்லது. ஆதலினால் அதிகளவிலான ஆவியாதல் நடை பெற்று அதீத வரட்சியும் அவ்வாவியாதலுக்கேற்ற அதீத வீழ்படிவினால் பெரு வெள்ளங்களும் ஏற்படுகின்றமை சகஜமாகி விட்டது.வளி மண்டலத்தின் ஈரப்பதன் அதிகரித்துக் காணப்படுவதையும் பல சந்தர்ப்பங்களில் உணர முடிகிறது.  இலங்கையில் நாம் அதிகளவில் கேள்விப்படும் சொற்களாக மாறிவிட்ட வெள்ள நிவாரணத்தையும் வரட்சி நிவாரணத்தையும் இக்கணத்தில் எண்ணிப்பார்க்க முடிகிறது. 

இவை யாவுமே வானிலை நிகழ்வுகள் நடை பெறும் நிகழ்தகவுகளை தினம் தினம் மாற்றிய வண்ணமே செல்கின்றன . 2016 ஆம் ஆண்டு  நிகழ்ந்த அதீத வானிலை நிகழ்வுகளை கால நிலை மாற்றத்தின் பார்வையில் அவதானித்து புதிய அறிக்கையொன்று அண்மையில் வெளியிடப்பட்டிருக்கிறது. கால நிலை மாற்றம் என்பது மனிதனது செயற்பாடுகளின் விளைவே என்பதில் எதுவித ஐயமுமில்லை. ஆக இந்த அதீத வானிலை நிகழ்வுகளுக்கும் மனிதனே காரணியாகிறான்.  அதீத வானிலை நிகழ்வுகளின் உருவாக்கம் கால நிலை மாற்றமன்றி சாத்தியமற்றது என்கிறது அவ்வறிக்கை.

உலகளாவிய கால நிலை அபாயச் சுட்டி அறிக்கை 2019 இன் அடிப்படையில், அதீத மழை வீழ்ச்சியென்பது தவிர்க்க முடியாததோர் நிகழ்வு என்பது தெள்ளத்தெளிவாகிறது. தென்னாசிய, தென் கிழக்காசிய, ஆபிரிக்க நாடுகளிலிருந்து பெறப்பட்ட வானிலைத் தரவுகளின் அடிப்படையில் எதிர்பாராத அதீத மழை வீழ்ச்சியும் அதனால் ஏற்படும் வெள்ளம், சரிவும் உயிரிழப்புகளும் பொருட்சேதங்களும் தெளிவாக அறிக்கையிடப்பட்டிருக்கின்றன. இங் ஙனம் தனித்தனி அதீத மழை வீழ்ச்சியின் நிகழ்வு தொடர்ந்தும் அதிகரித்த வண்ணம் காணப்படும் எனத் தெளிவாக எதிர்வு கூறப்படுகிறது.

ஏனைய இயற்கை அனர்த்தங்களினால் ஏற்படும் பாதிப்புகளுடன் ஒப்பிடுகையில் ஆறுகள் பெருக்கெடுக்கின்றமையால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கையும் ஏற்படும் பல பில்லியன் டொலர் சொத்தழிவும் வருடாந்தம் அதிகரித்த வண்ணமே காணப்படுகின்றன.   

எத்தகைய மனித நடவடிக்கைகளால் ஏற்படும் கால நிலை மாற்றம் இத்தகைய அதீத வானிலை நிகழ்வுகளை உருவாக்குகிறது என்பதை அறியமுடியாதளவு இந் நிலைமை கற்பதற்குச் சிக்கலானது.

கடந்த வாரத்திலிருந்து பெய்துவரும் கடும் மழை காரணமாக பாதிப்புக்குள்ளாகி வரும் வன்னி நிலப்பரப்பும் இத்தகையதோர் தோற்றப்பாட்டுக்கான உதாரணமாகும். திடீர் பேரனர்த்தங்களின் போது மக்கள் பாதிக்கப்படுகின்றமையில் பல காரணிகள் தாக்கம்  செலுத்துகின்றன. போதுமான தயார்படுத்தலின்மை தொட்டு வறுமை போன்ற பாதிக்கப்படும் தன்மை, கால நிலை மாற்றத்தைக் கருத்தில் கொள்ளாத அபிவிருத்திச் செயற்பாடுகள் என அக்காரணிகள் இரு வெவ்வேறு அந்தங்கள் வரை வேறுபடுகின்றன. இயற்கையும் இரங்காத நிலையில் சாணேற முழம் சறுக்கிய கதையாக வன்னி மண் தொடர்ந்து அழிவுகளைப் பார்த்த வண்ணமே உள்ளது. 

தொடர்ந்து பெய்த செறிவான மழையாலும் வான் பாய்ந்த குளங்களாலும் கதிர் வந்த பருவத்தில் காணப்பட்ட  நூற்றுக்கணக்கான ஏக்கர்கள் விஸ்தீரணமான வயற்கானிகளை மூடி வெள்ளம் பாய்ந்தது. தொடர்மழைக்கு முன்னரே வளிமண்டலத்தின் ஈரப்பதன் அதிகரித்தமையால் உருவாகிய நோய்களுக்கும் பீடைகளுக்குமாக 3 சதவீத மாதாந்த வட்டிக்கு கிருமி நாசினிகளைக் கொள்வனவு செய்து பிரயோகித்த விவசாயிகளையும் காண முடிந்தது. வட பகுதியிலே அதிகளவில் காணப்படுகின்றன என விமர்சிக்கப்பட்ட குறு நிதி நிறுவனங்களையும் தாண்டி இக்கிருமி நாசினி வியாபாரங்களும் கடன் விற்பனை மூலம் விவசாயிகளைச் சுரண்டும்   உத்தியைப் பயன்படுத்துகின்றமையைக் கண்கூடாகக் காண முடிந்தது. தனியார் வங்கிகள் ஒன்றும் சளைத்தவை அல்லவே. 1.5 சத வீத மாத வட்டி எனும் கவர்ச்சிகர விளம்பரத்துடன் விவசாயிகளைத் தேர்வு செய்து விவசாயக் கடன் எனும் பெயரில் வர்த்தக க் கடனை அவர்கள் பெற்றுகொள்ள ஆவன செய்கின்றமையும் கூடக் காண முடிந்தது. அரசினால் அறிமுகப்படுத்தப்பட்ட ‘ என்டர்பிறைஸ் லங்கா’ இலகு கடன் கொடுப்பனவுகள் பற்றி விவசாயிகளுக்குத் தெளிவு படுத்தி அவற்றை ஊக்குவிக்கும் சூழல் வன்னியின் விவசாயி- வங்கி உறவிலே காணப்படாத நிலைமையையும் உணர முடிந்தது. நடந்து முடிந்த அரசியல் குழப்பங்களும் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்ட தாமதங்களும் இத் தனியார் வங்கிகளின் நியாயப்படுத்தல்களாகின.  10 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பில் விவசாயம் செய்யும் பெரு விவசாயிகள் ஆக க் குறைந்த மாதாந்த வட்டியாகிய 3 சதவீத வட்டியில கடனைப் பெற்றும் கடன் கொள்வனவை மேற்கொண்டும்  நகைகளை அடகு வைத்தும் தமது உழைப்புடன் சேர்த்து வயலிலே மேற்கொண்ட இலட்ச ரூபா பெறுமதியான முதலீடு ஒற்றை வெள்ளத்துடன் அடித்துச் செல்லப்பட்டு விட்டது. 

ஒவ்வொரு போகத்தின் போதும் காப்புறுதி செய்தல்  எனப்படுவது தேவையற்றதோர் செலவு என்ற கருத்தையே வன்னிப்பெரு நிலப்பரப்பின்  பெரும்பாலான பெரு விவசாயிகள்  அனேகர் கொண்டிருக்கின்றனர்.  இம்முறை பாரிய இழப்புகளைச் ச்சந்தித்திருக்கும் பெரு விவசாயிகளுள் பெரும்பாலானோர் தாம் விதைத்த நிலங்களுள் 10 ஏக்கர் தவிர்ந்த ஏனைய வீஸ்தீரணத்துக்கு காப்புறுதி செய்யாமல் விட்ட நிலைமையே காணப்படுகிறது. அதிகபட்சமாக 10 ஏக்கர் வயலுக்கு குறைந்த வட்டியுடனான விவசாயக்கடன்  அரசினால் வழங்கப்படுவதால் அதற்கு காப்புறுதி செய்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

கால நிலை மாற்றத்தாலும் அதீத வானிலை நிகழ்வுகளாலும் பெரும் அச்சுறுத்தலுக்குள்ளாகியிருக்கும் இலங்கையிலே காப்புறுதியின் அவசியம் பற்றிய தெளிவு விவசாயிகள் மத்தியில் ஏற்படுத்தப்பட வேண்டும். அதேவேளை  இலங்கையின் விவசாயக் காப்புறுதிக்கான சேத மதிப்பீடு தொடர்பில் காணப்படும் சிக்கலான, நீண்ட நேரமெடுக்கும்  முறைமைகள் இலகு படுத்தப்பட வேண்டும். அண்மையில் இலங்கை காப்புறுதிக்கூட்டுத்தாபனத்தின் விளம்பரம் ஒன்றை வவுனியா  நகரின் மையப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த இலத்திரனியல் திரையிலே காணக்கிடைத்தது. ‘ட்ரோன்’  எனப்படும் சிறு வலவன் ஏவா வான ஊர்திகளைக்கொண்டு பெறப்படும் வான் புகைப்படங்களைக் கொண்டும்  அகச்சிவப்பு படங்களைக்கொண்டும் சேத விபரம், அவற்றின் விஸ்தீரணம், அகலாங்கு, நெட்டாங்கு ஆள்கூறுகள் ஆகியவற்றைத் தெளிவாகக் கணித்து விவசாயக் காப்புறுதி வழங்கும் முறைமை இலங்கையிலும்  அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றமையை அவ்விளம்பரத்தினூடாக அறிய முடிந்தது.

உலகளாவிய ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் இலங்கையின் நிலையைக் கருத்தில் கொண்டு நோக்கும் போது பசளை மானியத்தை விட கட்டாயக் காப்புறுதி தொடர்பில் அதிக கரிசனை செலுத்த வேண்டிய காலம் கனிந்து விட்டதெனலாம். இதில் அரசின் தலையீடு நிச்சயமாக அவசியமாகிறது. பெரு வெள்ளத்தால்  ஏற்படும் சேதங்களுக்கான இழப்பீடுகளை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட பிரதேசத்தை மீள பழைய நிலைமைக்குக் கொண்டு வரும் பாரிய பொறுப்பு அரசையே சார்ந்ததாகி விடும். அச்செலவுடன் ஒப்பிடுகையில் கட்டாயக் காப்புறுதிக்காக அரசினால் மேற்கொள்ளப்படும் பங்களிப்பு குறைவானதாகவும் இலாபகரமானதாகவும் இருக்கும். அல்லாவிடில் திடீர் அனர்த்தங்களால் ஏற்படும் இழப்புகளும் மொத்த உள் நாட்டு உற்பத்தி, சமூகச் சுட்டிகளில் ஏற்படும் மாற்றமும் ஈடு செய்ய முடியாதனவாகிவிடுவன.

முன்னைய தசாப்தங்களைப் போலல்லாது வானிலையை ஒரளவு துல்லியமாக எதிர்வு கூறும் கால நிலை மாதிரிகள் புழக்கத்தில் வந்து விட்டன. விவசாயத்தை அடிப்படையாக க் கொண்ட பல நாடுகள் அம்மாதிரிகளை அடிப்படையாக க் கொண்டு விவசாயிகளின் பயிர் நாட்காட்டித் தரவுகளையும் இணைத்து வழிகாட்டும் செயலிகளை உருவாக்கி விவசாயிகளின் பயன்பாட்டுக்கென இலவசமாக வெளியிட்டிருக்கின் றன. 

ஆனால் வன்னியிலே இவ்வானிலை எதிர்வுகூறலில் நம்பிக்கை வைத்து, அதனைக் கருத்தில் கொண்டு தொழிற்படும் விவசாய சமூகத்தைக் காண்பது அரிதாகவே இருக்கிறது.வயல் நிலத்தின் மீது  இலட்சக் கணக்கிலான முதலீட்டை மேற்கொள்ள முன்னர் சிந்தித்துச் செயற்பட இவ்வெதிர்வுகூறல்கள் நிச்சயமாக விவசாயிக்கு உதவும் என்பதில் எதுவித ஐயமுமில்லை.  கால நிலை மாதிரிகளை ஒட்டி, விவசாயிகளுக்குப் பயன்படும் வகையிலான செயலிகள் பல அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.  தகவல் தொழில்  நுட்ப விழிப்புணர்வை யாழ் மண்ணின் இளையோர் மத்தியில் பரப்பி வரும் ‘சுடர்’, ‘ஊக்கி’ போன்ற செயற்பாட்டு அமைப்புகள் இத்தகைய சமூகப் பொறுப்புள்ள செயற்பாடுகளில் இளையோரை ஈடுபடுத்த முன் வர வேண்டும்.

அரச இயந்திரங்களும் தம் அபிவிருத்திச் செயற்பாடுகளை மேற்கொள்ளும் போது கால நிலை மாற்றத்தையும் அதீத வானிலை நிகழ்வுகளையும் கருத்தில் கொண்டு அவற்றுக்குத் தாக்குப்பிடிக்க க் கூடிய வகையிலே அவற்றை மேற்கொள்ளவேண்டும். மேலிருந்து கீழான கட்டளை நடைமுறைகளாலும்  மட்டுப்படுத்தப்பட்ட  நிதி ஒதுக்கீடுகளாலும் இற்றைவரைப்படுத்தப்படாத திறன் விருத்தியாலும் அபிவிருத்திச் செயற்றிட்டங்களை செவ்வனே நடைமுறைப்படுத்துவதில் பல சிக்கல்களை எதிர் நோக்கலாம். அரச தொழில் என்பது சவால்கள் நிறைந்ததே. களத்தின் நிலைமையை உயர் மட்டத்துக்கு  எடுத்துச் சொல்லி தேவைக்கேற்ற அபிவிருத்தி செயற்றிட்டத்தை மேற்கொள்வதென்பது ஒவ்வொரு அரச ஊழியனதும் பொறுப்பாகும். இன்றேல் யாவருக்குமான அபிவிருத்தி என்பதும் , நிலைத்து நிற்கும் அபிவிருத்தி என்பதும் வெறும் வாய்ச்சொற்களாக காற்றிலே பறந்துவிடுவன. 

வீடு தொட்டு வீதி வரை சகல கட்டுமானங்களும்  காலநிலை மாற்றத்தையும் அதீத  வானிலை நிகழ்வுகளையும் தாக்குப் பிடிக்கும் வண்ணம் அமைக்கப்பட வேண்டும்.  கட்டுமான வேலைகளில் ஈடுபடும் சகலதரப்பினரும் இத்தகைய தாங்குதிறன் மிகு கட்டுமானம் தொடர்பில் அறிவூட்டப்பட வேண்டும்.

யாழ்ப்பாண நகரையும் அதை அண்டிய பகுதிகளிலும்  காலனித்துவ காலத்தில் அமைக்கப்பட்ட மழை  நீர் வடிகால்களின் அகலம், ஆழத்துடன் தற்காலத்தில் அமைக்கப்படும் அத்தகைய வடிகால்களின் அகலத்தையும் ஆழத்தையும் ஒப்பிட்டு நோக்கினால் தீர்க்கதரிசனம் மிகு அபிவிருத்தியின் தேவையையும் நிலையையும் உங்களால் உணர முடியும்.  

வடக்கின் நெற்களஞ்சியம் என வர்ணிக்கப்படும் வன்னிப்பெரு நிலப்பரப்பின் இன்றைய   நிலை எம் மத்தியில்  சிக்கலான பல வினாக்களுக்கான விடைகளைத் தேடும் பாரிய பொறுப்பை முன் வைத்திருக்கிறது. சமூகத்தின் அனைத்து கட்டமைப்புகளும் ஒன்றாக இணைந்து இயங்கினால் மாத்திரமே அவ்விடைகளுக்கான தேடல்களை எம்மால் ஆரம்பிக்க முடியும்!

கால நிலை மாற்றம் விதித்த சாபத்திலிருந்து இவ்வழகிய தீவை மீட்கும் பாரிய பொறுப்பு எம் ஒவ்வொருவர் கையிலுமே தங்கியுள்ளது. மக்களுடைய வரிப்பணத்திலேயே நாம் உயர் கல்வி வரை இலவசமாகக் கற்கிறோம்.  ஓரிரு வருடங்களேனும் நாம் கற்ற கல்வியை எம் தாய் நாட்டிலேயே பிரயோகித்தால் எதற்கும் சளைக்காத உறுதியான தேசமாக இலங்கையும் மாறும் என்பதில் எதுவித ஐயமுமில்லை.

Thursday, March 5, 2015

மரத்திலிருந்து விழுந்தவனை மாடேறி மிதித்த கதை




~~யாழைக் கொணர்ந்திங்கு மீட்டிய தால், ஒரு 
யாசகன் மன்ன னிடம் இருந்தோர் பாழைப் பரிசு பெற்றான்!" 
னக் கூறிடும் பண்டைப் பழங்கதை கேட்டதுண்டு 
பாழைப் பரிசு பெற்றாலும், அப்பாலையைப் 
பச்சைப்படுத்திப், பயன் விளைத்து,
வாழத் தொடர்ந்து முயன்றத நால், 
இன்றுவையத் துயர்ந்தது யாழ்ப்பாணம்! "
என யாழ் மண்ணின் மகிமையை எளிமையாய் விளக்குகிறது மகாகவி உருத்திரமூர்த்தியின் கண்மணியாள் காதை.தனக்கென தனித்துவமான கலாசார பாரம்பரியங்களைக் கொண் டிருக்கும் யாழ் மண்ணின் நீர்வளமும் 
நிலவளமும் தனித்துவமானவை என்பதில் ஐயமேதுமில்லை.தற்காலத்தில் இன மத பேதமின்றி நாடுகளையும் கடந்து தமிழர் வாழும் தேசம் எங்கிலும் பேசப்படும் விடயங்களுள் யாழ் மண்ணின் நீர்வளம் மிக முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கிறது.

விவசாயத்தை நம்பியிருக்கும் யாழ் மண்ணின் நீர்வளம் இரசாயனங்களின் அதீத பாவனையாலும் சீரற்ற கழிவு முகாமைத்துவத்தாலும் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது. காலத்துக் குக்குக் காலம் ஊடகங்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் அதனை வெளிப்படுத்தி வருகின்றமையை அவதானிக்க முடிகிறது. ஆனால் நீர்வளம் பாதிக்கப்பட்டு வருகின்றமை தொடர்பில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எவற்றையேனும் யாராவது எடுத்திருக் கின்றார்களா என்பது தொடர்பில் அறிய முடியவில்லை.

இந்நிலையிலேயே யாழ் மண்ணின் நிலக்கீழ் நீருடன் எண்ணெய்க் கழிவுகள் கலப்பது தொடர்பிலே பல்வேறுபட்ட கருத்துகளும் செய்திக ளும் வெளியாகி வருகின்றன. சுன்னா கம் பகுதியை அண்டிய கிணறுகளின் நீர் பாவனைக்கு உகந்ததல்லாமல் போயுள்ளதாகவும் மிகவும் குறுகிய காலத்துக்குள் இந் நிலைமை ஏறத்தாழ 9 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு பரவியுள்ளதாகவும் அண்மை யில் பிரபல தனியார் ஊடகமொன்று செய்தி வெளியிட்டிருந்தது.

2008 ஆம் ஆண்டளவிலே சுன்னாகம் தெற்கு விவசாயிகள் சம்மேளனம், அப்போதைய யாழ். மாவட்ட செயலாளருக்கு பிரதேச நிலத்தடி நீர் மாசடைந்து வருவதாக முறைப்பாடு தெரிவித்திருக்கிறது. மாவட்ட செயலாளரும் உடன் அறிக்கை சமர்ப் பிக்குமாறு மின்சாரசபைக்கு பணிப் புரை அனுப்பியிருக்கிறார்.

சுன்னாகம் பகுதியின் நிலத்தடி நீர் மாசடைந்து வருவது ஏறத்தாழ 7 ஆண்டுகளுக்கு முன்னரே வெளித் தெரியத் தொடங்கியிருக்கிறது என்பத ற்கு அக்கடிதங்கள் சான்று பகர் கின்றன. ஆனால் கடந்த ஒரு வருட காலத்துக்குள் நிலத்தடி நீர் மிக வேகமாக பாதிப்படைந்து வருவதை பலராலும் உணர முடிந்திருக்கிறது.

இலங்கை மின்சார சபையின் மின் உற்பத்தி/விநியோக கட்டடம் சுன்னா கம் பகுதியிலே அமைந்திருக்கிறது. இலங்கை மின்சார சபையோடு இணைந்து செயற்படும் நிறுவனமாக 'ழேசவாநசn Pழறநசள' என்ற நிறுவனம் இருக்கிறது. தற்போது அனைவரது பார்வையும் இந்த நிறுவனத்தின் மீதே திரும்பியுள்ளது என்று சொன்னா லும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

யாழ். நிலக்கீழ் நீரிலே எண்ணெய் மாசு என்று எங்கெல்லாம் பேசப்படு கிறதோ அங்கெல்லாம் அனைவரது சுட்டு விரல்களும் இந்த நொதேர்ன் பவர் நிறுவனத்தை நோக்கியே நீளுகின்றன.
இவை பற்றியெல்லாம் ஆராய முன்னர், யாழ். மண்ணின் நிலக்கீழ் நீர் வளம் பரம்பியிருக்கும் விதம் பற்றி அறிய வேண்டியது அவசியமாகிறது.

யாழ் மண்ணின் நிலக்கீழ் நீர்வள மானது சுன்னாகம், வடமராட்சி கிழக்கு, சாவகச்சேரி, ஊர்காவற்றுறை என நாங்கு வலயங்களாகப் பிரிந்து காணப்படுகிறது. சுன்னாகம் வலயத் துக்குரிய நிலக்கீழ் நீரின் கொள் ளளவே ஏனைய வலயங்களுக் குரியனவற்றிலும் அதிகமானதாக இருக்கிறது.
யாழ்ப்பாண மக்கள் தமக்கான தனித்துவத்தை நிலை நிறுத்த ஆரம் பித்த காலத்திலிருந்தே நிலக்கீழ் நீரினை செவ்வனே திட்டமிட்டு பயன் படுத்தி வந்தனர். இயற்கையான ஆறு கள் எவையும் இல்லாத நிலையில் மழையையும் அதனால் செறிவூட் டப்படும் நிலக்கீழ் நீரையும் மட்டுமே நம்பி எம் மக்கள் ஒரு தன்னிறைவுப் பொருளாதாரத்தை நிறுவியிருந்தனர் என்பது ஆச்சரியப்படவேண்டிய விடயம்.

'சாத்திரம் புதியவை
கண்டவர் எடுத்த
சூத்திரம் பொருத்தினர் கிணற்றில்,
பார்த்தவர் மகிழ்ந்து பல
புகழ்ந் திடவே!
மாடிரண் டே சுற்றிச் சுற்றி வர,
மக்களின் முன் அவர்
கண்ணெதிரே,
பாடு படாமல் இருக்கையிலே
பாதாளம் சென்று நன் நீர் எடுத்தே,
ஓடிச் சுழன்று திரும்பினவாம்;
வாய்க்காலில் ஒவ்வொன்றாய்
ஊற்றினவாம் -
~~வேடிக்கை தான் அந்த வாளி!"
என்றே
மெச்சினர் கண்டவர் யாவருமே.''

என்று அதை மீண்டும் உறுதி செய்கிறது மகாகவி உருத்திர மூர்த்தியின் கண்மணியாள் காதை.
மிகப்பெரிய கொள்ளளவையுடைய சுன்னாகம் நிலக்கீழ் நீர் அப்பிரதேச மக்களின் அடிப்படைத் தேவைகளை மட்டுமன்றி விவசாயத் தேவை களையும் பூர்த்தி செய்து வந்தது. பெருந்தோட்டங்களுக்கும் வளமான செம்மண்ணுக்கும் பெயர்பெற்ற இப் பூமியிலே தான் மக்களின் மின்சாரத் தேவையைப் பு+ர்த்தி செய்வதற்கான வலு நிலையங்களும் அமைக்கப் பட்டன.
நாட்டிலே சில தசாப்தங்களாகத் தொடர்ந்த யுத்த சூழ்நிலை காரண மாக நீர் மின்னைப் பயன்படுத்தும் வாய்ப்பு யாழ்ப்பாணத்துக்கு கிடைக் கவில்லை. ஆதலால் எண்ணெயின் துணையுடன் மின் பிறப்பாக்கிகள் இயக்கப்பட்டே யாழ். மண்ணின் அடிப்படை மின்சாரத்தேவை பூர்த்தி செய்யப்பட்டது. காலத்துடன் தேவைகள் அதிகரிக்க ஒன்றுக்கு மேற்பட்ட மின் பிறப்பாக்கிகள் இணை க்கப்பட்டு மின்சாரம் வழங்கப்பட்டது.
இலங்கை மின்சார சபையினாலேயே இம்முயற்சி முன்னெடுக்கப்பட்டது. அந்த வகையிலே 2000 ஆம் ஆண் டின் பின்னர் இலங்கை மின்சார சபையுடன் இணைந்து 'nothern power' நிறுவனமும் யாழ். மண்ணுக் கான மின்சார விநியோகத்தில் பங்கெடுத்தது.

சுன்னாகத்தில் அமைந்திருக்கும் வலு நிலையத்திலே வௌ;வேறு சந்ததிகளைச் சேர்ந்த மின் பிறப்பாக் கிகள் பாவனையில் இருந்திருக்கி ன்றன. முதலாவது சந்ததியைச் சேர்ந்த மின்பிறப்பாக்கிகளின் பாவனை தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் தசாப்தங்களாக நிகழ்ந்த அவற்றின் பாவனையின் போது கழிவு எண்ணெய் வெறுமனே நிலத்தில் கலக்க விடப்பட்டதாக இலங்கை பொறியியலாளர் நிறுவக ஆய்விலே அறிக்கையிடப்பட்டு அண்மையில் யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த கலந்துரையாடல் ஒன்றிலே முன்னளிக்கப்பட்டிருந்தது.

தற்போதும் பாவனையில் இருக்கும் இரண்டாவது சந்ததியைச் சேர்ந்த, பிறப்பாக்கிகள் தொடர்பில் எந்தவொரு நம்பிக்கைத் தன்மையும் இல்லாதிருப்ப தாகவே அந்த முன்னளிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இங்கு தான் 'Northern power' நிறுவனத்தினுடைய வகிபாகம் முன்னிலை பெறுகிறது. ஏனெனில் இந் நிறுவனத்தி னால் பாவிக்கப்படுபவை இத்தகைய இரண்டாவது சந்ததிக்குரிய இயந்திர ங்களேயாகும்.
பல ஊடக அறிக்கைகளிலே தமது நிறுவனத்தின் கழிவு எண்ணெயைத் தாம் விற்றுப் பணமாக்குவதாகவும் சுற்றுச் சூழல் விதிமுறைகளுக்கமையவே தாம் தொழிற்படுவதாகவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்தி ருக்கிறார்கள். அக்கருத்துகளின் உண்மைத் தன்மையை வெளிப்படைத் தன்மையுடன் மேற்கொள்ளப்படும் ஆய்வுகளால் மட்டுமே உறுதி செய்ய முடியும்.

'உத்துறு ஜனினி' என்ற பெயரிலே மிக அண்மையில் இலங்கை அரசுக்குச் சொந்தமான மின் பிறப்பாக்கி/ வலு நிலையம் ஒன்று சுன்னாகத்திலே 2013 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது. இந்த நவீன அமைப்பு சுற்றுச் சூழல் விதிமுறைக ளுக்கமைய கழிவுகளை வெளியேற்று வதாக அதே முன்னளிக்கை உறுதி செய்கிறது.
அப்பகுதியில் குடி நீர் விநியோக த்தை மேற்கொள்ளும் தேசிய நீர் வடிகாலமைப்புச் சபை கூட, தனது நீர் மூலம் மாசடைந்திருப்பதைக் கண்டறி ந்து நீர் விநியோகத்தை நிறுத்தியி ருக்கிறது.
காலத்துக்குக் காலம் எடுக்கப்பட்ட செய்மதிப் படங்கள் அண்மையில் இணையத்திலே வெளியாகியிருக்கி ன்றன. ஆரம்பத்தில் எண்ணெய்க்கழிவுகள் நிலத்திலே வெளியேற்றப்பட்டிருந்தமையும் பிற்காலத்தில் அவை மூடப்பட்டு அப்பகுதியில் கட்டட வேலைகள் நடைபெற்று முடிந்தமை யையும் அப்படங்களில் தௌ;ளத் தெளிவாகப் காண முடிகிறது.

எம் மக்கள் கடந்து வந்திருக்கும் காலங்களில் தம் குறைகளை வெளிப்படுத்த முடியாமலிருந்த காரணங்களினாலோ என்னவோ இப்பிரச்சினை பாரிய அளவில் வெளித்தெரியாமல் காணப் பட்டது. கண் கெட்ட பிறகு தான் சூரிய நமஸ்காரமோ என்று வருந் தத்தகு வகையிலே தற்போது தான் வெளித்தெரியத் தொடங்கியிருக்கிறது. அவ்வாறு வெளித்தெரியும் வேகத்தை விஞ்சும் வகையிலே எண்ணெய் மாசு நிலக்கீழ் நீருடன் கலந்து வருகிறது.

நிலக்கீழ் நீரானது நிலத்துக்குக் கீழே ஒரு ஊற்றுப்போல் காணப்படும். அந் நீரிலே மாசு கலக்கத்தொடங்கி னால் அந்த ஊற்று செல்லும் இட மெல்லாம் இம்மாசு மிக வேகமாகப் பரவத் தொடங்கும். வலி வடக்கை அண்டிய பகுதிகளில் பாவனைக்கு உதவாத காரணத்தால் கிணறுகள் கைவிடப்பட்டு வருகின்றமைக்கு இதுவே காரணமாகும்.

வலி வடக்கையும் தாண்டி சுன்னா கத்திலிருந்து 10-11 கிலோமீற்றர் தூரத்திலுள்ள கிணறுகளிலிலும் இதே பிரச்சினை காணப்படுவதாக முக நூல் நண்பர்களின் விமர்சனங்கள் தெரிவிக்கின்றன.
நிலைமை இப்படியே தொடர்ந்து கொண்டிருக்கும் பட்சத்தில் அதனை எவ்வாறு கையாளப்போகிறோம் என் பது தொடர்பில் ஒரு திட்டத்தை விரை வாகத் தயாரிக்க வேண்டிய பாரிய பொறுப்பு சம்பந்தப்பட்ட அதிகாரத் தரப்புக்கு இருக்கிறது. அந்த அதி காரத்தரப்பிலே மாகாண , மத்திய நிர்வாக அலகுகள் உள்ளடங்குகின் றன. மாவட்ட செயலகம், உரிய பிரதேச செயலகங்கள், உரிய உள்ளூராட்சி சபைகள், பிராந்திய சுகாதாரசேவைகள் திணைக்களம், தேசிய நீர் வடிகாலமைப்பு சபை, மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபை , உரிய மாகாண அமைச்சுகள், உரிய மத்திய வரிசை அமைச்சுகள், எல்லா வற்றுக்கும் மேலாக இலங்கை மின்சார சபை என யாவுமே பொறுப்பு க்கூற வேண்டிய நிறுவனங்களாகும்.

எண்ணெய்க் கழிவு நீருடன் கலப்பதால் நேரடியாகவும், மறைமுக மாகவும் பல எதிர் விளைவுகள் உருவாகப் போகின்றன என்பது கண்கூடு. பொதுவாக என்ன நடக்கும் என்பது பற்றியும் நாம் அறிந்திருத்தல் தகும்.
பாதிக்கப்பட்ட கிணறுகளின் நீரை ஆய்வு செய்ததில் ஏறத்தாழ 10 சதவீதமான கிணறுகளில் அனுமதிக ;கப்பட்ட அளவுக்கும் அதிகமாக ஈயம் இருப்பதையும் 12 சதவீதமான கிணறுகளில் அனுமதிக்கப்பட்ட அளவு க்கும் அதிகமாக குரோமியம் நீரில் கலந்திருப்பதாக தேசிய நீர் வடிகாலமைப்பு சபையின் ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.
அதே வேளை ஏறத்தாழ 73 சதவீதமான கிணறுகளில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கும் அதிக மாக கிறீஸ், எண்ணெய் ஆகியன கலந்திருப்பதாகவும் அவ்வாய்வு முடிவிலே அறிவிக்கப்பட்டிருக்கிறது.
சுன்னாகம் பகுதி விவசாயத்துக்கு மட்டுமன்றி இரசாயனங்களின் மிகை யான பாவனைக்கும் பெயர் போன பகுதியாகும். அதன் காரணமாக இங்குள்ள கிணறுகளில் அனுமதிக்கப் பட்ட அளவுக்கும் அதிகமான நைத்தி ரேற்றின் செறிவும் அவதானிக்கப்பட்டுள்ளது.

குடிநீரிலே நைத்திரேற்றின் செறிவு அதிகரிப்பதால் நீலக்குழந்தைகள் பிறப்பது அதிகரிக்கும். 6 மாதத்துக் குட்பட்ட குழந்தைகள், முதியோர், கர்ப்பிணித்தாய்மார் போன்ற தரப்பி னரை இந் நிலைமை வெகுவாகப் பாதிக்கும்.
எண்ணெய் கலந்திருக்கும் நீரை குடிப்பதற்குப் பயன்படுத்த முடியாது. அதேவேளை விவசாயத்துக்குப் பயன் படுத்தினால் விவசாய முயற்சி வெற்றியளிக்கும் சாத்தியக் கூறுகள் குறைவடையும். அதே வேளை நிலமும் மாசடயத் தொடங்கும். நீரிலே உள்ள நன்மை பயக்கும் உயிரிகள் இறக்க நேரிடும் . மிக நீண்டகால அடிப்படையில் நோய்கள் பல ஏற்படும் சாத்தியக் கூறுகள் அதி கம் காணப்படும். நிலக்கீழ் நீரிலே எண்ணெய்க்கழிவுகள் கலக்க நேரிட்டால் அவை ஏறத்தாழ 250 வருடங்களுக்கு நிலைத்திருக்கும் என செஸ்டர் டி ரெயில் என்பவர் தனது நூலிலே குறிப்பிடுகிறார்.

ஈயம் என்பது உயிரியல் ரீதியாக மனித குலத்துக்கு எந்தவொரு நன் மையும் பயக்காத உலோகமாகும். அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமான ஈயத்தை நாம் உள்ளெ டுத்தல் மிக ஆபத்தானது. மனித உடலிலே நரம்புத்தொகுதி, இனப் பெருக்கத்தொகுதி உட்பட பல்வேறு தொகுதிகளில் செயற்பாடுகளை ஈயம் பாதிக்கும். எலும்புகளிலே ஈயம் படிந்து சேமிக்கப்படும். கர்ப்பத்திலிருக்கும் குழந்தைகளினதும் சிறார்களின தும் மூளை வளர்ச்சியில் பின்னடை வைத் தோற்றுவிக்கும்.சிறார்கள் மத்தியில் மெல்லக் கற்றல், மன நிலை பாதிப்பு, பழக்க வழக்கப் பிரச்சினைகள் போன்ற குணப்படுத்த அரிதான குறைபாடு களை ஏற்படுத்தும்.

அதிகமான குரோமியத்தை (அயன்/ உலோகம்) உள்ளெடுத்தால் சுவாசப் பாதையில் புற்று நோய் உருவாகும் வாய்ப்பு மிக அதிகம் என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரித்திருக்கிறது.நிலக்கீழ் நீரின் மாசின் எதிர்விளைவுகள் இப்படி இருக்க, அம்மாசை அகற் றுவதற்கும் பலதரப்பட்ட நடைமுறைகள் உலகளா விய ரீதியிலே பயன்பாட் டில் இருக்கின்றன. அவற் றில் பல மிக எளிதான நடைமுறைகளாகும்.

கதிர்த்தொழிற்பாட்டு காபனைப் பயன்படுத்தி சேதனப் பகுதியை உறிஞ் சச் செய்து வடிகட்டல், மென்சவ்வு முறைமை, புவியீர்ப்பின் கீழ் வேறாக் கல், புற ஊதா கதிர்களின் மூலமான வடிகட்டல், நுண் வடிகட்டல், பக் டீரியா, பங்கசு, தாவரங்கள் மூலம் எண்ணெய் மாசை நீக்கல் போன்ற பல்வேறுபட்ட முறைமைகள் உலகளா விய ரீதியிலே பின்பற்றப்படுகின்றன.

நிலக்கீழ் நீர் மாசடைந்து வருகிறது என்பது தற்போது வெளிப்படையாகத் தெரிய வந்துள்ளது.
அம்மாசைக் கட்டுப்படுத்த வேண் டிய, இல்லாமல் செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதையும் எம்மால் உணர முடிகிறது. ஆகவே நாம் தாமதிக்காமல் முதலில் செய்ய வேண்டியது மாசின் மூலத்தை கண்டு பிடித்தல் ஆகும்.
அதற்கு போதிய தொழில் நுட்ப வசதிகள் இலங்கையில் இல்லாத காரணத்தால் ஆய்வுகளை மேற் கொள்ள கடந்த வாரம் இலங்கை வந்திருந்த நோர்வே நாட்டுக் குழுவி னரிடம் உரிய உபகரணங்களை வழங்கியுதவுமாறு கைத்தொழில் தொழில் நுட்ப நிறுவகம் கோரியிருந் தது.

இம்மாசாதல் தொடர்பிலும் அத னைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் தொடர்பிலும் வெளிப்படையான தொடர் ஆய்வுகள் அவசியமாகின்றன. அவற்றை வழி நடத்துவதில் யாழ். பல்கலைக் கழகத்துக்கும் வட மாகாண சபைக்கும் பாரிய பொறுப்பி ருக்கிறது.இம்மாசாதல் தொடர்பில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு கிடைக்க வேண்டும். எங்கும் எதிலும் வெளிப் படைத் தன்மை பேணப்பட வேண்டும். தற்போது கிடைத்திருக்கும் சுதந்திர சூழலை ஊடகங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தமது விற்பனைக் காகவும் அரசியல் சுய நல நோக்கங்களுக்காகவும் பொதுமக்களைப் பாவிப்பதை நிறுத்தி தமது பிரசுரங்களின் உண்மைத் தன்மையை உறுதி செய்ய வேண்டும்.

இன்றைய நிலையில் இப்பாதிப்புகள் குறித்து நோக்குகையில் நாம் இரு ண்ட எதிர்காலத்தை நோக்கிப் பயணி த்துக் கொண்டிருக்கிறோம் என்பது மட்டுமே தெளிவாகிறது. இனி வரும் நூற்றாண்டுகளில் பிறக்கப்போகும் எம் குழந்தைகளுக்கான புதை குழியை இப்போதே தோண்டி வைத்து விட்டோமோ என்று கூட எண்ணத் தோன்றுகிறது. நாம் இனியும் விழித்தெழா விட்டால் எம்மைத் தூற்றுவதற்குக் கூட வளமான எதிர்காலச் சந்ததியொன்று இருக்குமா என்பது கேள்விக்குறியே!

Sunday, November 13, 2011

கண்ணைக் குளமாக்கிய மண்ணின் வாழ்வியல் -06

நவீன நாடகங்களின் மூலவேர் கூத்து

இன்று திரைப்படங்களிலும் மிக அரிதாக திருவிழாக்களிலுமே நாம் கிராமியக் கலை வடிவங்களைக் காண்கிறோம். ஆனால் ஒரு காலத்திலே அவை அன்றாட வாழ்வியலுடன் பிணைந்திருந்தன. இந்த கிராமியக் கலைகள் கிராமங்களிலே ஓய்வு நேரங்களில் பயிலப்பட்டு வந்தவை. அவை சந்ததி சந்ததியாகக் கடத்தப்பட்டும் வந்தன. இந்தக் கலைகள் கிராமிய வாழ்வின் கலை இலக்கிய வெளிப்பாடாக மட்டும் இருக்கவில்லை. மக்களுக்கு உடற்பயிற்சியை அளித்தன. பொழுது போக்காகவும் அறிவூட்டுவனவாகவும் கூட இருந்தன. மக்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் கருவிகளாகவும் கூட விளங்கின.
ஆனால், உலக மயமாக்கல் அந்த கிராமியக் கலைகள் மீதான மக்களின் நாட்டத்தை குறைத்துக் கொண்டே செல்கின்றது. இதே நிலைமை தொடர்ந்தால், காலப்போக்கிலே அவை அழிந்து போய்விடும் என்பதில் எதுவித ஐயமும் இல்லை. ஒரு தேசத்தின் தனித்துவம் கிராமத்தில் இருக்கும் என்பர் எம்மவர்.
கிராமிய கலை வடிவங்களை ஆராய்ந்தால் அந்த உண்மை புலப்படும், யாழ். மண்ணிலே ஐரோப்பியர் கால் பதிக்க முன்னர், அம் மண்ணின் சமூகக் கட்டமைப்பு தன்னிறைவான கிராமியப் பொருளாதாரப் பண்புகளையும் சாதியத்தின் அடிப்படையில் உருவான தொழிற்பிரிப்புகளையும் கொண்டிருந்தது. அதே அடிப்படையில் தான் கலைப் பாரம்பரியங்களும் நிலை பெற்றிருந்தனவென பேராசிரியர் சபா ஜெயராஜா கூறுகிறார். தவில் போன்ற சில கலை வடிவங்கள் செல்வந்தர்களின் அரவணைப்பிலே வளர்ந்தன.
அதேவேளை கரகாட்டம், காவடியாட்டம் போன்ற கலைகள் சுயாதீன கலைஞர்களின் பராமரிப்பிலே வளர்ந்தன. இவை குடும்பங்களில் பரம்பரை பரம்பரையாகக் கடத்தப்பட்டு ஆற்றுகை செய்யப்பட்டன. யாழ். மண்ணின் பரந்து பட்ட வாழ்க்கை முறைமைக்கும் பன்முகப்படுத்தப்பட்ட பண்பாட்டுக் கோலங்களுக்கும் வலிமையான சான்றாக இருப்பவை இந்த கலை வடிவங்கள் என்பதை நாம் ஒரு போதும் மறுக்க முடியாது.
வட பகுதியெங்கிலும் பரவலாக வழக்கிலிருந்து இந்தக் கலை வடிவங்களை இன்று அங்கொன்றும் இங்கொன்றுமாய் வெகு அரிதாகத்தான் காண முடிகிறது. அதை எவராலும் மறுக்க முடியாது. இந்த கண்காட்சியிலே கிராமியக் கலை வடிவங்களுக்கு தனிக் கூடமே ஒதுக்கப்பட்டிருந்தது.
அந்த அரிய கலைகளுடன் தொடர்புபட்ட பல விடயங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. அவை யாழ். வாழ்வியலின் கலை பண்பாட்டு அம்சங்களைப் பிரதி பலித்தன. கோயில்களிலே இறைவனைக் காவும் வாகனங்களும், பொய்க்கால் குதிரைகளும் கூட காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. திருமணச் சடங்கு போன்ற நிகழ்ச்சிகளிலே பந்தல் போடும் போது பயன்படுத்தப்படும் கலையம்சங்கள், மான் கொம்புகள், கிராமியக் கலையுடன் தொடர்புடைய இசைக் கருவிகள், அலங்காரப் பொருட்கள், உபகரணங்கள், சிறப்பு அணிகலன்கள், கடைகளில் வைக்கப்படும் காசுப்பெட்டிகள், பெட்டகங்கள், சிதிலமடைந்த இறை வாகனங்கள், போன்றனவும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
பொய்க்கால் குதிரையாட்டமானது இணுவில், அளவெட்டி, சித்தன்கேணி போன்ற பகுதிகளில் வெகு பிரபலமாக இருந்தது. யாழ்ப்பாணத்தை ஐரோப்பியர் ஆட்சி செய்த காலத்திலே மாட்டு வண்டிகளும் குதிரை வண்டிகளும் பயன்பாட்டில் இருந்தன. குதிரையானது அந்தஸ்தின் சின்னமாகக் கருதப்பட்டது.
அரசாங்கத்தில் உயர் பதவி வகித்தவர்கள் குதிரை வண்டிகளிலே பயணித்தனர். இதன் விரிவாக்கமே திருவிழாக்களில் நடத்தப்படும் குதிரையாட்டம் ஆகும். அவ்வாறு நடாத்துதல் உயர் அந்தஸ்தை அளிப்பதாகக் கருதப்பட்டது. ஆடுவதற்குப் பயன்படுத்தப்பட்ட குதிரைகள் மென்மையான மரங்களைக் குடைந்து தயாரிக்கப்பட்டன.
முன்னர் வீடுகளிலே அலங்காரப் பொருட்களாக மான் கொம்புகள் வைக்கப்பட்டிருந்தன. அத்துடன் அவற்றை வைத்திருந்தால் செல்வம் கொழிக்கும் என்ற நம்பிக்கையும் ஆரம்ப கால மக்களிடத்தே காணப்பட்டது. மாடுகளின் முகங்களைப் போன்ற உருவமைப்புகளை வீட்டு வாசலில் வைப்பதும் கூட வழக்கமாக இருந்தது.
காத்தவராயன் கூத்து, சங்கிலியன் நாடகம் போன்ற பல கலைகளிலே பயன்படுத்தப்படும் வாள்களும் கூட அங்கு வைக்கப்பட்டிருந்தன. காவடி, கரகாட்டம் போன்ற கலைகள் எம் இந்து சமயப் பண்பாட்டின் முக்கிய அம்சங்களாகக் காணப்படுகின்றன. அத்தகைய கரகங்கள், காவடிகளையும் கூட அங்கு காண முடிந்தது. கரகத்தை காவடியுடன் இணைத்துக் கரகக் காவடி என்றொரு நடன வடிவம் யாழ்ப்பாணத்தில் இருந்ததாக த. சண்முக சுந்தரம் குறிப்பிடுகிறார்.
கிராமியக் கலைகளிலே பயன்படுத்தப்பட்ட முடிகளும் கோயில்களில் சிறப்பு நிகழ்வுகள், பொம்மலாட்டங்களின் போது பயன்படுத்தப்படும் முக மூடிகளும் கூட காணப்பட்டன. யாழ்ப்பாணம் என்ற பெயர் உருவாகக் காரணம், பாணன் யாழ் வாசித்தமை என்று கூறுவர். அந்த யாழ் என்ற இசைக்கருவியை கண்களால் கண்டவர்கள் வெகுசிலர் என்று தான் கூற வேண்டும். யாழின் பரிணாமமே வீணை என்றும் கூறுவர். அந்த யாழின் மாதிரியும் மரத்தால் செய்து வைக்கப்பட்டிருந்தது.
அத்துடன், பாவனைக்குகந்ததல்லாத ஹார்மோனியப் பெட்டிகளும் வைக்கப்பட்டிருந்தன. வீட்டு யன்னல்களை அலங்கரித்த மர வேலைப்பாடுகளின் சிதிலங்களும் கூட காணப்பட்டன.
எம்மவர் சடங்கு சம்பிரதாயங்களிலே பூ மாலைக்கு மிக முக்கிய இடம் வழங்கப்பட்டிருந்தது. ஒரு குழந்தை பிறப்பதிலிருந்து அது முதிர்வடைந்து இறப்பது வரை ஒவ்வொரு தேவைக்கும் ஒவ்வொரு வகைப் பூமாலை பயன்பட்டது. கொண்டை மாலை, மொட்டு மாலை, சரம், கதம்பச் சரம், கழுத்து மாலை, கரவாரம் என எத்தனை வகைகள் தெரியுமா? அவை எல்லாம் இன்று காணாமலே போய் விட்டன என்று தான் கூறவேண்டும.
அதைவிட அவை, தத்ரூபமாக வடிவமைக்கப்பட்ட பிளாஸ்டிக் மாலைகளால் பிரதி செய்யப்பட்டு விட்டன என்று கூறுதல் தகும். இங்கு வருந்த வேண்டிய விடயம் யாதெனில் கொழும்பு போன்ற கட்டடங்கள் நிறைந்த நகரப் பகுதிகளை விட யாழ்ப்பாணம், வவுனியா போன்ற பிரதேசங்களில் இந்த பிளாஸ்டிக் துணி பூமாலைகளின் பாவனை அதிகமாக இருப்பதைக் காண முடிகிறது. அதை உணர்ந்திருப்பவர்கள் வெகு சிலரே. ஆக இந்த வாழ்வியல் அம்சங்கள் தொலைந்து போவதற்கான பிரதான காரணம் எம் அலட்சியமே எனலாம். கிராமியக் கலை வடிவங்கள் எனப்படுபவை ஆதி மனிதனுக்கு ஏற்பட்ட உணர்வுகளின் வெளிப்பாடாக உருவான வை.
அந்த வெளிப்பாடு பல்வேறு விதமாகப் பரிணமித்தமை யைத் தான் இக் கலை வடிவங்களாகக் காண்கிறோம். இன்று நாம் நவீனம் என்று பற்றி நிற்கும் கலை வடிவங்களு க்கு மூலமாக இருந்தவை இந்த கிராமியக் கலைகளே! இன்றைய நாடகங்கள் அன்றைய கூத்தின்படி முறை வளர்ச்சியால் உருவானவை. இந்த அரிய கலை வடிவங் களைக் கவனிக்காது விடுதல் என்பது பிள்ளைகள் தம் பெற்றோரை அலட்சியப்படுத்துவதற்குச் சமனானது.
இந்தக் கலை வடிவங்கள் அற்றுப் போய்விடக்கூடாது என்பதனாலோ என்னவோ, யாழ்ப்பாண வாழ்வியல் கண்காட்சியின் ஆரம்ப நாள் நிகழ்விலே அதிதிகளை வரவேற்கும் போது கூட அவை வெளிப்படுத்த ப்பட்டன. இந்தக் கலை வடிவங்கள் ஊக்குவிக்கப்படாமல், அலட்சியப்படுத்தப்படுவதால், கலைஞர்களும் பெரும் பாதிப்புக்குள்ளாகிறார்கள். இந்த கலைகளையே தொழிலாகக் கொண்டு வாழ்ந்தவர்களின் வாழ்க்கை இன்று கேள்விக்குறியாகி விட்டது.
அதேவேளை இந்தக் கலைகளைப் பயின்று அதை அடுத்த சந்ததிக்குக் கொண்டு போகத் தயாராக இருக்கும் இளஞ்சந்ததியர் வெகு சிலரே பணத்தை மட்டுமே மதிக்கும் உலகில் அதிக வருமானம் ஈட்டும் தொழில்கள் மீதான நாட்டம் தவிர்க்க முடியாததல்லவா? அவர்களையும் பிழை சொல்ல முடியாது. எத்தனையோ பிரபலமான கூத்துக் கலைஞர்களை எல்லாம் எம் மண் உருவாக்கியிருக்கிறது. அதை அறிய வேண்டும் என்றால் கூட நூலகத்துக்குச் சென்று புத்தகங்களைத் தான் வாசிக்க வேண்டும்.
இதுவே இன்றைய யதார்த்தம். அந்த கலைஞர்கள் உருவாக வேண்டும்; அவர்களுடன் சேர்ந்து இந்தக் கலை வடிவங்களும் வாழ வேண்டும் என்றால், நாம் அக்கலைகளை மதித்து ஊக்குவிக்க வேண்டும். வீண் நியாயங்க ளைச் சொல்லி காலத்தை வீணடிப்ப தென்பது தேவையற்ற ஒரு விடயம், என்று தான் கூற வேண்டும். (தொடரும்)

Saturday, October 29, 2011

கண்ணைக் குளமாக்கிய மண்ணின் வாழ்வியல்-4

யாழ்ப்பாணத்து மண்ணுடன் பனை பின்னிப் பிணைந்தது!

அந்தக் கண்காட்சி அரங்கைக் கடந்த போது, பொறிமுறை உபகரணங்கள் வைக்கப்பட்டிருந்த ஆறாவது அரங்குக்குச் செல்ல முடிந்தது. இன்றைய இளஞ்சந்ததி கண்டறியாத பொறிமுறை உபகரணங்கள் பல வைக்கப்பட்டிருந்தன. கடந்த ஒன்றரை நூற்றாண்டு காலத்திலே யாழ்ப்பாணத்தில் புழக்கத்தில் இருந்த பொறிமுறை உபகரணங்களான வானொலிப் பெட்டி, கிராமபோன், கையால் இயக்கும் சிறிய தையல் இயந்திரம் போன்ற பல அவற்றுள் அடங்கும். அவற்றைக் கண்டவுடன் மூத்த சந்ததியர் தம் பழைய நினைவுகளை மீட்கத் தொடங்கி
யிருந்தமையையும், தம்மோடு வந்திருந்த இளஞ்சந்ததியினருக்கு, அந்தக் காலத்து நினைவுகளை விளக்கியதையும் காணாக்கூடியதாக இருந்தது. அவற்றைப் பற்றிய விளக்கங்களை வழிகாட்டியாய் நின்றிருந்த
மாணவர்கள் அளித்திருந்தால் அந்த அரங்கில் கிடைத்த அனுபவம் மேலும் சிறப்பாக அமைந்திருக்கும்.

யாழ்ப்பாண வாழ்வியலுடன் பனை வளம் பின்னிப் பிணைந்தது. தெற்கிலிருந்து பயணிக்கும் போது யாழ்ப்பாணத்தை அண்மிக்கிறோம் என்பதன் அடையாளமாக
அந்தப் பனை மரங்கள் இருந்தன. இன்றும் வழி நெடுகிலும் தலையிழந்து காட்சி தருகின்றன. கடந்த காலத்தின் கொடூர யுத்தம் அவற்றை அப்படி மாற்றியிருக்கிறது. பனையைக் கற்பக தரு என்பர். கட்டும் வீட்டிலிருந்து படுக்கும் பாய் வரை பனை எம் நடை முறை வாழ்வுடன் இயைந்ததாய் இருந்தது. ஆனால் நவீனம் அந்த வாழ்வியலைக் கைவிட வைத்து விட்டது எனலாம். அதனால் இன்றைய இளஞ்சந்ததியினருக்கு பனையின் அருமை தெரியவில்லை. அதைத் தெரிந்துகொள்ளவும் அவர்கள் ஆர்வப்பட்டதாகத் தெரியவில்லை. இந்தக் கண்காட்சி நிச்சயம் அவர்கள் மத்தியில் நிச்சயம் ஒரு விழிப்புணர்வைத் தோற்றுவித்திருக்கும் என நம்பலாம்.
யாழ் குடாநாட்டு பழங்குடி மக்கள் பனை ஓலைகளால் வேயப்பட்ட வீடுகளிலேயே வாழ்ந்தார்கள். அது தவிர புதிதாக வீடு கட்டுவதற்கும் பனை மரங்களில் இருந்து பெறப்பட்ட மரக்குற்றிகள், சிலாகைகள், வளைவுகள் என்பவற்றை அவர்கள் பயன்படுத்தினார்கள். பனை மரம் மூலம் பெறப்பட்ட பொருட்களின் இருந்து கட்டப்பட்ட வீடுகள் வெயில் காலத்தில் குளிர்ச்சியையும் மழைகாலத்தில் இதமான வெப்பத்தையும் கொடுத்தது. இதனால் வருடம் முழுவதும் சிறந்த சுவாத்தியத்துடன் அவர்கள் ஆரோக்கியமாகவும் மனநிறைவோடும் வாழ்ந்தார்கள்.
பாய், சுளகு, கொட்டைப் பெட்டி , பெட்டி, மூடு பெட்டி, கடகம், உறி, திருகணை , கூடை, பட்டை, பிளா, குடுவை , தட்டுவம், தொப்பி, நீத்துப்பெட்டி என வைக்கப்பட்டிருந்த எண்ணற்ற பனை உற்பத்திப்பொருட்கள் பிரமிக்க வைத்தன. எம் வாழ்வியல் எவ்வளவு தூரம் இயற்கையுடன் பின்னிப் பிணைந்திருந்தது என்பதற்கு அவை ஒவ்வொன்றும் சான்று பகர்ந்தன.
மின்சாரத்தைக் காணாத காலம் அது. குளிர்சாதனப்பெட்டிகள் இல்லை. ஆனால் இரவு ஓலைப்பெட்டியில் போட்டு மூடி வைத்த பிட்டு, காலையிலும் அப்போது தான் புதிதாக அவித்தது போல் இருப்பதன் இரகசியம் தான் என்ன? அது தான் பனை சொல்லும் வாழ்வு.
பனை ஒலைகளால் பொருட்களைப் பின்னுவதென்பது ஒரு அழகான கலை. ஒவ்வொரு பொருளைப் பின்னுவதற்கும் ஒவ்வொரு நுட்பம் இருக்கும். அவை எல்லாம் இன்று காணாமல் போய்க்கொண்டிருக்கின்றன என்பது தான் கசப்பான உண்மை. மூத்த சந்ததிக்குத்தான் அந்த நுட்பங்கள் தெரிந்திருக்கிறது. இடையிலே ஒரு பெரிய சந்ததி இடைவெளியை யுத்தம் ஏற்படுத்தி விட்டது. இளஞ்சந்ததி சற்று ஆர்வமாகத்தான் இருக்கிறது. இங்கு சந்ததி இடைவெளிகள் நிரப்பப்படுவதும் அவசியமாகிறது. அதே வேளை மூத்த சந்ததி மறைய முதல் , மூன்றாவது சந்ததிக்காவது அந்தக் கலை நுட்பங்கள் கடத்தப்பட வேண்டும். அவை எல்லாம் எமது கைகளில் தான் இருக்கின்றன. பாடசாலைக் காலங்களில் வடலிக் குருத்தோலைகளில் செய்யக் கற்றுக்கொண்ட கைப்பணிகள் எல்லாம் மனக்கண்ணில் ஒருகணம் வந்து போயின. இடப்பெயர்வுகளுக்குமப்பால் நவீனம் நோக்கிய எமது பயணமானது, எம் பாரம்பரிய வாழ்வியலிலிருந்து எம்மை எவ்வளவு தூரம் தனிமைப் படுத்தி விட்டது உணர முடிந்தது.
ஏறத்தாழ 15 வருடங்களுக்கு முன்பு, வடக்கிலே மின்சாரமில்லை. தொலைக்காட்சி , கணினி முதலாய நவீன பொழுது போக்குகள் இல்லை. வீட்டிலிருக்கும் முதியவர்கள் பாடசாலை விடுமுறை நாட்களிலே, இந்த அருங்கலைகளை சிறார்களுக்கும் கற்றுத்தருவார்கள். அதை விட ஓய்வு நேரங்களில் பனையோலைப் பொருட்களைப் பின்னுவதே அவர்களது வேலையாக இருக்கும். தாம் தயாரித்த பொருட்களை வீட்டுத்தேவைகளுக்கு மட்டுமன்றி, அயலவர்களுக்கும் கூட அன்பளிப்பாகத் தருவார்கள். எங்காவது பயணம் போகும் போதும் கொண்டு சென்று கொடுப்பார்கள். அவற்றைப் பெற்றுக்கொண்டவர்கள் " இது ஊரிலிருந்து ஆச்சி/அப்பு கொண்டுவந்தது"என்று பெருமையாகக் கூறுவதை நாம் கண்டிருப்போம். அந்த அழகிய வாழ்வு இன்று எங்கே போய் விட்டது?
இங்கு வருத்தத்துக்குரிய விடயம் யாதெனில், இக்காலத்தில் இந்தப் பொருட்களையெல்லாம் பிளாஸ்டிக், கறையில் உருக்குப் பொருட்கள் பிரதியீடு செய்து விட்டன. நீண்டகாலப் பாவனையையும் இலகு தன்மையையும் கருத்தில் கொண்டு நாம் பனம்பொருட்களைக் கைவிட்டு விட்டோம்.
ஆனால் அந்த நீண்ட காலத்துக்கு நிலைக்கும் என எண்ணும் பிளாஸ்டிக் பாவனைப் பொருட்களால் எவ்வளவு தூரம் எம் சுற்றுச்சூழல் மாசடைகிறது என்பது பற்றி நாம் சிந்திப்பதில்லை. அவற்றால் எத்தனை கொடிய விளைவுகள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன? ஏற்படப்போகின்றன என்பது பற்றியும் கவலைப்படுவதில்லை. நாம் கொண்டிருக்கும் இத்தகைய அலட்சியப்போக்கானது, எம் எதிர்காலச் சந்ததிக்கு ஒரு சுகாதாரமற்ற சூழலைத் தான் விட்டுவைக்கும். இது எமது உலகின் நிலை. ஏனெனில் யுத்தம் எம்மை ஒரு குறுகிய வட்டத்திற்குள் முடக்கி விட்டது.
யுத்தம் நிலவிய கடின சூழலில் அந்த நிலைமை தவிர்க்க முடியாததாகவும் இருந்தது. வெளி உலகில் என்ன நடக்கிறது என அறியும் ஆர்வம் எம்மக்களிடம் காணப்படவில்லை. ஏனெனில் தத்தமது பாடுகளைப் பார்ப்பதே அவர்களுக்குக் கடினமாக இருந்தது. ஆனால் யுத்தம் ஓய்ந்த இன்றைய சூழலில், நிலைமே வேறுபக்கமாகத் திரும்பியது. ஒரு காலம், தேடலுக்காகவே தன்னை அர்ப்பணித்த சமூகம், இன்று பணத்தின் காலடியில் விழுந்து கிடக்கிறதோ எனவும் எண்ணத்தோன்றும். பணத்துக்கு அத்துணை மரியாதை. இப்போதும் தேடல் காணாமல் போய் விட்டது. வெளியுலகத்தைப் பார்க்கும் ஆர்வம் அதிகரிக்கவில்லை. பணமிருந்தால் எதையும் சாதிக்கலாம் என்ற கொள்கை வேகமாகப் பரவி வருகிறது எனலாம்.

Friday, October 28, 2011

சீன வெடி இல்லாத தீபாவளி!

தீபாவளி மூன்று தசாப்தங்களுக்கு முந்திய காலம் வரை அது ஒரு மகிழ்ச்சியான பண்டிகை. ஊரே இணைந்து கொண்டாடிய பண்டிகை. உள் நாட்டு யுத்தம் என்று வெடித்ததோ, அன்றோடு எம் பண்டிகைகளும்தம் தனித்துவத்தை இழக்கத்தொடங்கின என்று தான் கூற வேண்டும். அமைந்தியாய் இருந்த வாழ்வியல்பின்னர் இடப்பெயர்வு எப்போ என எதிர்பார்த்து, எப்போதும் தயாராக இருக்கும் வாழ்வியலாய்ப் பரிணமித்தது.  அக்காலப்பகுதிகளிலே ஜனித்த குழந்தைகள் தான் இன்றைய இளஞ்சந்ததியர். நாளை புதியதொரு சந்ததியை வழி நடத்தப் போகிறவர்கள். அவர்கள் உலகை அறியத்தொடங்கியிருந்த காலம் மிகவும் கொடியது என்றுதான் கூற வேண்டும். காலம் காலமாக சம்பிரதாய பூர்வமாகக் கொண்டாடப்பட்டு வந்த பண்டிகைகள் எல்லாம் அக்காலத்தில் செயலிழந்து போயின. ஆதலினால் எம்பண்டிகைகள் காவி வந்த தார்ப்பரியங்களும் மெல்ல மெல்ல மறைந்து போயின. ஆனால் பண்டிகைகள் மட்டும் நிலைத்திருந்து புதிய பல தார்ப்பரியங்கள் முளை விட வழிவகுத்து விட்டன என்றே கூற வேண்டும்.

இன்று இருந்த இடம் என்னவென்றே தெரியாமல் மறைந்துபோய்க்கொண்டிருக்கும் தார்ப்பரியங்களை எம் மூத்தவர்களிடமிருந்து நாம் அறிந்து கொள்ள வேண்டும். இல்லையெனில் எம்மால் அவற்றை அடுத்த சந்ததிக்கு க் கடத்த முடியாமல் போய்விடும். 80 களுக்கு முற்பட்ட காலங்களிலே தீபாவளி எப்படி களை கட்டியிருந்தது என்று பேராசிரியர் சிவச்சந்திரன் யாழ். தினகரனுடன் பகிர்ந்து கொண்டார்.
   இலங்கையிலே இந்தியாவைப்போல வெகு கோலாகலமாக தீபாவளிப்பண்டிகை கொண்டாடப் படுவதில்லை. தீபாவளியை ஒட்டிய முரண்பாட்டுக் கொள்கைகளை திராவிட முன்னேற்றக் கழகம் கொண்டிருந்தது. அதனால் தீபாவளியை ஒரு ஆரியப் பண்டிகையாகவும் ஆரியனாகிய கிருஷ்ண பரமாத்மா, திராவிடனாகிய நரகாசுரனை வதம் செய்த திருநாளாகையால் திராவிடர்களாகிய தமிழர்கள் தீபாவளியைக் கொண்டாடுவதென்பது ஆரோக்கியமானதல்ல என்ற கொள்கையொன்று தமிழ் நாட்டில் எழுந்தது. எது எப்படி இருந்தாலும், எவ்வளவு கடன் தான் இருந்தாலும் தீபாவளியை விமரிசையாகக் கொண்டாட தமிழக மக்கள் பின்னிற்பதில்லை. இது இந்தியாவின் நிலைமை.

 ஆனால் இலங்கையிலோ நிலைமை சற்று மாறுபட்டது. தீபாவளியென்றால் கோயில்களை நோக்கிப் படையெடுத்து, சன நெரிசலில் மிதந்து அர்ச்சனை செய்து வீடும் திரும்பும் இன்றைய சம்பிரதாயம் அன்று காணப்படவில்லை. அது புதிதாக முளைத்தது என்று தான் கூற வேண்டும். முன்னர் தீபாவளி என்றால் கிராமங்கள் களை கட்டிப் போய் இருக்கும். மக்கள் நிச்சயம் ஆட்டிறைச்சி பங்கு போடுவார்கள். கள்ளின் பாவனை சற்றுத்தாராளமாகவே இருக்கும்.

  விடுமுறை தினமாகையால் வெளியூரில் இருப்பவர்கள் எல்லாம் தம் கிராமங்களுக்குச் செல்வார்கள். அதிலும் மணமாகி, கணவன் வீட்டுக்குச் சென்ற பெண்கள் குடும்பத்துடன் தாய்வீடு வருவர். விருந்தும் புத்தாடையும் இல்லாத தீபாவளி கொண்டாடப்பட்டதே இல்லை எனலாம். விருந்துகளில் இறைச்சிக்கு அதிக முக்கியத்துவம் இருந்தமையால், கோயில்களுக்குச் சென்று வழிபடும் வழக்கம் குறைவாகவே இருந்தது.
  சீனவெடிக்கு பெரும் முக்கியத்துவம் இருந்தது. வெடியின் மூலம் சீனா. முன்னைய காலங்களிலே சீனாவிலிருந்து வெடி பெறப்பட்டமையால் சீன வெடி என்ற பெயர் நிலைத்து விட்டது. தீபாவளிப் பண்டிகையின் போது வெடி கொழுத்தும் வழக்கம் யுத்தம் தொடங்கிய பின்னர் தான் அற்றுப்போனதெனலாம்
  தலைத்தீபாவளி கொண்டாடும் வழக்கமும் எம்மவரிடத்தே இருக்கிறது. ஆனால் தமிழகத்தைப்போல இங்கு சீர் செய்து பிரமாண்டமாக எவரும் கொண்டாடுவதில்லை. ஆனாலும் புதுமணத்தம்பதியரின் மனம் மகிழ அவர்களுக்கு புத்தாடை, பரிசுப்பொருட்களை வழங்குவார்கள்.

   முக்கியமாக, அனைவரும் ஒன்று கூடும் திரு நாளாக இந்த தீபாவளி இருக்கும். கிராமங்களிலே விளையாட்டுப்போட்டிகள் நடக்கும். எப்பொழுதும் களைகட்டும் நிகழ்ச்சியாக இருந்த தினகரன் மாட்டுச் சவாரி கூட நடந்தேறியிருக்கிறது. கூத்துகள், நாடகங்கள் கூட அரங்கேறும்.
 மொத்தத்தில் அன்றைய சமூக நல்லிணக்கத்துக்கு , கிராமிய ஒற்றுமைக்கு வழிகோலும் பண்டிகையாக தீபாவளியும் அமைந்திருந்தது எனலாம்.
யுத்தம் துடைத்தெறிந்திருந்த இந்த இனிய நினைவுகளை மீட்பதிலும் கூட ஒரு தனி சுகம் இருக்கத்தான் செய்கிறது. யுத்த காலத்தில், வெடிகள் தடை செய்யப்பட்டிருந்தன. பல வேளைகளில் கொண்டிருக்கும் பதற்ற மன நிலையில் தீபாவளிப்பண்டிகை மறக்கப்பட்ட சந்தர்ப்பங்களும் இருக்கத்தான் செய்கின்றன.

  இன்று சமாதானம் தலை தூக்கி விட்டது. ஆனால், எம்மவர் போக்கு எதிர்த்திசையிலே பயணிக்கிறதோ என்ற அச்சமும் சேர்ந்தே நிலவுகிறது. நாம் கைக்கொண்டு வந்த தார்ப்பரியங்கள் மறக்கடிக்கப்பட்டமையால், அர்த்தமே இல்லாத புதிய தார்ப்பரியங்கள் முளைக்கத் தொடங்கி விட்டன. அத்துடன் கூடவே தொலைக்காட்சிக் கலாசாரம் தொடர்கிறது . விசேட தினங்களிலே குடும்பத்திலுள்ள சகலரையும் வீட்டுக்குள்ளே முடக்கி வைப்பதில் அலை வரிசைகள் போட்டி போடுகின்றன. அப்போது, தீபாவளி மட்டும் என்னவிதி விலக்கா? ஒரு குறுகிய கற்பனை எல்லைக்குள் மனிதனை முடக்கும் தொலைக்காட்சி என்ற அரக்கனையாவது இன்று தவிர்த்துப் பார்ப்போமே?

நடந்து முடிந்த இந்த யுத்தம் எத்தனையோ பேரை ஒரு கணப்பொழுதில் ஆதரவற்றோர் ஆக்கியிருக்கிறது. இன்றைய நன்னாளில் அவர்களில் எவருக்காவது உதவ முயலாலாமே?முடியாது! சாத்தியமே இல்லை என்கிறீர்களா? மனம் இருந்தால், நிச்சயம் இடமும் இருக்கும். நாம் நினைத்தால் எதையும் சாதிக்கலாம். இன்றே எழுவோம்! களத்தில் இறங்குவோம்!