Wednesday, October 31, 2018

நிலைத்து நிற்கும் அபிவிருத்தி: சந்ததிகளுக்கிடையிலான சமத்துவத்தை நோக்கி…..


“மப்பன்றிக் காலமழை காணா மண்ணிலே
சப்பாத்தி முள்ளும் சரியாய் விளையாது ஏர்
ஏறாது காளை இழுக்காது எனினும் அந்தப்
பாறை பிளந்து பயன்விளைவிப்பான் என்னூரான்
ஆழத்து நீருக்ககழ்வான் அவன் நாற்று
வாழத்தன் ஆவி வழங்குவான் ஆதலால்
பொங்கி வளர்ந்து பொலிந்தது பார் நன்னெல்லு..”

என்று பாடியிருக்கிறார் ஈழத்து மகாகவி உருத்திரமூர்த்தி. கிடைத்த வளங்களின் உச்சப்பயனைப்பெறும் ஈழத்து விவசாயியை மிக அழகாக வர்ணிக்கிறது இப்பாடல். 
இந்து சமுத்திரத்தின் முத்து என இலங்கையை வர்ணித்தமை எத்துணை பொருத்தமானது என்பதை இலங்கைக்கு வரும் ஒவ்வொரு சுற்றுலாப்பயணிகளும் உணர்வர். அத்தனை வளங்களை அருஞ்செல்வமாகக் கொண்டது இலங்கை மண். இலங்கைக்குள்ளே பிரதேசத்துக்கு பிரதேசம் வளங்கள் வேறுபட்டாலும் கிடைத்த வளங்களின் உச்சப்பயனைப்பெற்றுக்கொள்ளவேண்டும் என்பதில் எம் முன்னோர் மிக  உறுதியாக இருந்தனர். அதன் மூலம் தம் வாழ்வாதாரத்தையும் உயர்த்த முயன்றனர் என்பது கண்கூடு. அன்று அவர்கள் வேறு எதனைப்பற்றியும் யோசிக்கவில்லை. ஏனெனில் அன்றைய சனத்தொகையின் தேவைகளைப் பூர்த்திசெய்யத் தேவையான வளங்கள் மிகையாகவே காணப்பட்டன. ஆதலால்  நிறைந்து காணப்பட்ட அவ்வளங்கள் அருகி வருவதைக்கூட அவர்கள் உணரவில்லை. காலம் கடந்து சென்றது.  வருங்கால சந்ததியனருக்கென  சொத்துகளை சேகரிக்கத் தெரிந்த சமூகத்துக்கு வளங்களை பக்குவமாகப் பயன்படுத்தி சேமித்து வைக்கத் தெரிந்திருக்கவில்லை. இயற்கைவளமானது அள்ள அள்ளக் குறையாதது எனவும் அது எமக்கு இலவசமாகக் கிடைப்பது எனவும் தான் எம் முன்னோர் எண்ணியிருந்தனர். இன்றும் கூட எம்மில் பலர் அங்ஙனம் தான் எண்ணியபடியுள்ளோம்.

 இது அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் எனப்படும் சகல நாடுகளிலும் பொதுவாக் காணப்படும் நிலைமையொன்றாகும். உலகளாவிய சனத்தொகை காலத்துடன் வேகமாகப் பெருகியது. இன்னும் சில நாடுகளில் பெருகி வருகிறது. அதைப்பற்றி பிறிதொரு தடவை விரிவாக ஆராய்வோம். மனிதனின் தேவைகளும் காலத்துடன் வேகமாக அதிகரித்தன. ஆதலால் மனிதனும் முன்னரைப்போலவே வளங்களின் உச்சப்பயனைப்பெற முனைந்தபடி இருந்தான். பூமியின் தாங்கும் கொள்ளவை மாற்ற முயற்சி செய்தபடியே இருக்கிறான். அவனது அதீத அகழ்வினால் சில வளங்கள் மீளவும் புதுப்பிக்கமுடியாத எல்லைகளை அடைந்தன. சூழல் மாசடைந்தது. அது மிகவும் சிக்கலான புதிய பிரச்சினையாக உருவெடுத்தது.  சூழல் பிரச்சினையில் தொடங்கி சமூகப்பிரச்சினைகளும் பொருளாதாரப்பிரச்சினையாகளும் ஒன்றன் பின் ஒன்றாக எழத்தொடங்கின. அவற்றினால் சூழல் மேலும் மாசு படத்தொடங்கியது.   நாடொன்றின் அபிவிருத்தியின் நிலைத்து நிற்கும் தன்மையை கேள்விக்குள்ளாக்கின.    அபிவிருத்தியென்பது பொருளாதார வளர்ச்சி மட்டுமல்ல என்பதை உலகமே உணர்ந்து கொண்டது.

உலகமயமாதல் மேலும் மேலும் விரிவடைந்து எய்தவன் ஓரிடத்திலும்  அம்பை நோகின்றவன் இன்னோரிடத்திலுமாக காரண காரியங்கள் உலகளாவிய ரீதியில் பரந்து தாக்கம் செலுத்தத் தொடங்கின. எதிர்கால சந்ததியினரை நோக்கிய சிந்தனையின்றிச் செயற்பட்ட மனிதனின் நடவடிக்கைகளும் அவனது நுகர்வுக் கலாசாரமும்  உலகளாவிய ரீதியிலே பல பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியனவாக மாறின. மேற்குலக நாடுகளால் தரப்படுத்தப்பட்ட அபிவிருத்தி பற்றிய கண்ணோட்டமும் முதலாளித்துவ சுரண்டல்களும்  நாடுகளுக்கிடையே, பிராந்தியங்களுக்கிடையேயான வருமான ஏற்றத்தாழ்வு இடைவெளிகளை உருவாக்கியமையை பல பொருளாதார ஆய்வாளர்கள் உணர்ந்து கொண்டனர்.  அபிவிருத்தியென்பது வெறுமனே பொருளாதார வளர்ச்சியை மட்டும் அடிப்படியாக் கொண்டதல்ல. சமூக அபிவிருத்தி , ஒரு தனிமனிதனுக்கான சுதந்திரம் , அவனுக்கான சமூக சந்தர்ப்பங்கள், சுதந்திரங்கள் யாவுமே அபிவிருத்தியின் புதிய பரிமாணங்கள் என ஆய்வாளர்களால் நியாயப்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்த நிலைமையில் தான் மனித அபிவிருத்தியை அடிப்படையாகக் கொண்டு 2000 ஆம் ஆண்டு உலக நாடுகள் இணைந்து அபிவிருத்தி சார்ந்த எட்டு இலக்குகளை  2015 ஆம் ஆண்டளவிலே அடைவது என தீர்மானித்தன.  ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தால் வகுக்கப்பட்ட அவ்விலக்குகள் மிலேனியம் அபிவிருத்தி இலக்குகள் என அறியப்பட்டன.  மனித வளம், மனித உரிமைகள், உட்கட்டமைப்பு ஆகிய விடயங்களை அடிப்படையாகக் கொண்டனவாக அவ்விலக்குகள் விளங்கின. 2015 ஆம் ஆண்டு அடையப்படவேண்டிய அவ்விலக்குகளைத் துணையாகக் கொண்டு உலக நாடுகள் தமது அபிவிருத்தித் திட்டங்களை முன்னகர்த்தின. சில நாடுகள் வெற்றியும் கண்டன. பெரும்பாலான நாடுகள் ஓரளவான முன்னேற்றத்தையும் கண்டிருந்தன.  இலங்கை உட்பட சில நாடுகள் ஒரு சில இலக்குகளில் மாத்திரம் மிகவும் சிறப்பான அடைவுகளை எட்டியிருந்தன.  
மிலேனியம் அபிவிருத்தி இலக்குகளிலே ஒவ்வொரு துறை சார் இலக்குகளும் தனித்தனியாக வகுக்கப்பட்டிருந்தன. அவற்றுக்கிடையே இடைத்தொடர்புகள் காணப்பட்டபோதும் அவை காட்டிகளினால் வெளிப்படுத்தப்பட்டிருக்கவில்லை. அவை அபிவிருத்தியின் வெற்றியை வெளிப்படுத்தியமையை விட நிதி வழங்குநரின்  வெற்றியை அதிகம் வெளிக்காட்டுவனவாக அமைந்திருந்தன. இலக்குகளை அடையத்தவறினால் என்ன நடக்கும் என்பது தொடர்பில் எந்தவொரு கடப்பாடுகளும் விதிக்கப்பட்டிருக்கவில்லை.  அவை உள்ளூர் பங்களிப்பையும் பொதுவான  வலுவூட்டலையும் (பெண்களின் வலுவூட்ட தவிர்ந்த) குறைவாக மதிப்பிட்டிருந்தன.  அவ்விலக்குகளில் சூழலின் நிலைத்திருக்கும் தன்மைக்கு அதிகளவில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கவில்லை.
இத்தகைய குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையிலும் அபிவிருத்தியின் நிலைத்து நிற்கும் தன்மையின் அவசியம் கருதியும்  2030 ஆம் ஆண்டளவிலே அடையப்படவேண்டிய இலக்குகளாக  17 நிலையான அபிவிருத்தி இலக்குகள் வகுக்கப்பட்டன. அவ்விலக்குகளை 15 வருட காலத்துக்குள் அடைய முயற்சி செய்வதாக கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐக்கிய நாடுகளின்  நிலைத்து நிற்கும் அபிவிருத்தி உச்சி மாநாட்டிலே இலங்கை உட்பட 193 உலக நாடுகள் உறுதி பூண்டன. இவ்வுடன்பாட்டை நடைமுறைப்படுத்தாவிட்டால் பாரிஸ் உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்தைப் போன்று எந்த நாடுகளும் தண்டனைகளுக்குள்ளாக்கபடப்போவதில்லை. ஆயினும் இந்த இலக்குகளுடன் இயைந்து நடக்காத நாடுகளுக்கு அபிவிருத்திக்கான நிதி கிடைக்காமல் போகும். அதுவே பாரியதொரு இழப்பாகும். இந்த நிலைத்து நிற்கும் அபிவிருத்தி இலக்குகளானவை எல்லா நாடுகளுக்கும் எல்லாத் துறைகளுக்கும் பொதுவானவை. ஒவ்வொரு இலக்குகளுக்கும் இடையே இடைத்தொடர்புகள் காணப்படுகின்றன. ஒன்றை அடைவதால் மற்றொன்றையும் ஒன்றை அடைவதற்காக பலவற்றையும் அடைய வேண்டியிருக்கிறது.
நிலைத்து நிற்கும் அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கான இலங்கையின் கொள்கை ஆவணம் ‘தூர நோக்கு 2025: வளமான நாடு’என்ற பெயரில் கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது. நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடையும்  இலங்கையின் நெடும் பயணத்தின் வெற்றியானது அவ்விலக்குகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட சகலதரப்பினரிடமும் காணப்படும் விழிப்புணர்விலேயே தங்கியுள்ளது. ஆதலினால்   ‘நிரல் 2030’ என்ற இத்தொடர் இனி வரும் காலங்களில் நிலைத்து நிற்கும் அபிவிருத்தியின் பல்வேறு பரிமாணங்களை உங்களுக்கு அறியத்தரும்.  நிலையான அபிவிருத்தி இலக்குகளை நோக்கிய இலங்கையின் பயணத்தில் நாம் அனைவரும் கைகோர்த்து ஒன்றிணைய இம்முயற்சி வழி சமைக்கும் என்பதில் எதுவித ஐயமும் இல்லை!


Tuesday, October 23, 2018


அபிவிருத்தியை நோக்கிய புதிய தொடர்!


 நாம் வாழும் வாழ்வை மாற்ற முயலும் புதிய முயற்சி!