Sunday, June 26, 2011

அமெரிக்காவிலும் ஒரு புகுஷிமா?


  
அமெரிக்காவில் இருக்கும் மிசூரி நதி உலகின் 15 ஆவது பெரிய நதி. ஏறத்தாழ 2340 மைல்கள் நீளமானது. அதன் மூலத்திலிருந்து ஆரம்பித்து மிசிசிப்பி ஆற்றிலே கலக்கிறது. ஏறத்தாழ 10 மில்லியன் மக்கள் இந்த ஆற்றினால் பயன் பெறுகிறார்கள்.1673 இலே தான் ஐரோப்பியர்கள் இந்த நதியைக் கண்டு பிடித்தார்கள்.

நதி என்றால் பெருக்கெடுக்கத்தான் செய்யும். அப்படி இருக்கையில் மிசு+ரி ஒன்றும் விதிவிலக்கல்லவே. நதி ஒன்று பெருக்கெடுத்து அழிவுகள் பாரதூரமானவையாக அமையும்போது அது வரலாற்றிலே பதியப்படும். மிசூரி நதி பெருக்கெடுப்பது ஒன்றும் அமெ ரிக்காவுக்கு புதிதல்ல. 1881, 1953, 1993 ஆகிய ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தான் (2011 ஜூன்) மிசூரி நதியின் பெருக்கு கட்டுக்கடங்காமல் போயிருக்கிறது. இவ்வருடத்தின் இலை துளிர், கோடைக்கால ஆரம்பத்தில் ஏற்பட்ட தொடர் மழையால் மிசு+ரி நதியில் வெள்ளம் பெருக்கெடுத்திருக் கிறது. நீரின் அளவு நதியின் கொள் ளவை மீறியதால் குடியிருப்புப் பகுதி களுக்குள் நீர் புகத் தொடங்கியிருக் கிறது. நீரின் போக்கைத் தாக்குப் பிடிக்க முடியாத நீர்த்தேக்கங்கள் உடைப்பெடுக்கும் அபாயத்தை எதிர் நோக்கியுள்ளன. அத்தகைய 6 அணைக் கட்டுகளின் வான் கதவுகள் தற்போது திறந்து விடப்பட்டுள்ளன. நதி நீர் மட்டம் இன்னும் சில அடிகள் உயரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. 1993 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது நதியின் ஆழம் 44.3 அடிகளாக இருந்தது. அதுவே நதியின் மிகக் கூடிய ஆழமாகக் கருதப்பட்டி ருந்தது. ஆனால் தற்போது ஏற்பட்டி ருக்கும் வெள்ளம் அந்தப் பதிவையும் வென்று நதியின் ஆழத்தை 44.4 அடிகளாக்கியிருக்கிறது.

மனிதன் இயற்கைக்குப் புறம்பாகத் தொழிற்படும் போது தான் இயற்கை யின் சீற்றத்துக்கும் ஆளாகிறான். இந்த உண்மை மிசூரி நதியின் வெள் ளப்பெருக்கிலும் தெளிவாகத் தெரிகிறது. பல மில்லியன் ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மக்கள் பலர் தற்காலிகமாக வேறு இடங்களுக்குச் சென்றிருக்கிறார்கள். பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. வீதிகள், புகைவண்டிப்பாதைகள் பல சேதமடைந்திருக்கின்றன. வெள்ளம் பெருகாமல் தடுக்க மண் மூடைகளை அடுக்குகின்றனர். மரக்கட்டைகளை எரிக்கின்றனர். இந்த வெள்ளப் பாதிப்பு களின் தாக்கம் நீண்டகால நோக்கிலே வெளிப்படும் என நம்பப்படுகிறது. அதே வேளை உலகளாவிய ரீதியி லும் பல பின்னடைவுகளைத் தோற்று விக்கலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

நதியில் நீரின் போக்கு அதிகரித்த மையானது, அருகிவரும் மீனினங்கள் சில பெருகும் வாய்ப்பையும் ஏற்படுத்தி யிருக்கிறது. இவையெல்லாம் இப்படி யிருக்க மிசூரி நதியின் பெருக்கெடுப் பானது நெப்ராஸ்கா என்ற பகுதியை இன்னொரு புகுஷிமாவாக மாற்றிவி டுமோ என்ற ஊகங்கள் பலவும் எழுந்துள்ளன. ஏனெனில் உலகின் மிகப்பெரிய அணுசக்தி நாடு அமெரி க்காதான். காரணம், ஜப்பானில் உள்ளதைப் போல பல மடங்கு அதிக அணு உலைகளை தனது கடற்கரை நகரங்களில் உருவாக்கி வைத்துள்ளது அமெரிக்கா. மியாமியில் தொடங்கி அத்திலாந்திக் சமுத்திரத்தை ஒட்டியுள்ள அமெரிக்கக் கடற்கரை முழுவதும் 30க்கும் மேற்பட்ட அணு சக்தி நிலையங்களும் அவற்றில் நூற்றுக்கும் மேற்பட்ட அணு உலைகளும் நிறுவப்பட்டுள்ளன. இவை தவிர, மேற்குப் பகுதியில் பசுபிக் கடற்கரை நகரங்களிலும் 10 அணுசக்தி நிலை யங்கள் உள்ளன. அமெரிக்காவின் உட்புற மாகாணங்களில் மட்டும் 64 அணுசக்தி நிலையங்கள் உள்ளன.

தற்போது மிசூரி நதி பெருக்கெடுத் துள்ளதால் நெப்ராஸ்கா பகுதியில் உள்ள அணைக்கட்டுகள் யாவுமே திறந்து விடப்பட்டுள்ளன. அதனால் நெப்ராஸ்காவில் இருக்கும் அணு உலைகள் நீரில் மூழ்கும் அபாயத்தை எதிர் நோக்கியுள்ளன. /போர்ட் கார்ள்ஹோன் என்ற ஒரு அணு உலை கடந்த 21 ஆம் திகதி தற்காலிகமாக மூடப்பட்டது. அணு உலையின் சில பகுதிகளை ஏலவே 2 அடி வெள்ளம் ஆக்கிரமித்து விட்டிருக்கிறது. மின்சார உபகரணங்கள் இருக்கும் பகுதியை அவசர காலச்சுவர் பாதுகாத்து வருகிறது.

நீர் மட்டம் பாதுகாப்பு மட்டத்தை விட உயர்ந்தால் அணு உலைகள் மூடப்படும் என அதிகாரிகள் தெரிவிக் கின்றனர். அத்துடன் இது வரை அணு உலைகளிலிருந்து சூழலுக்கு எந்த ஒரு கதிர்த்தொழிற்பாட்டுப் பதார்த்தங் களும் விடுவிக்கப்படவில்லை. ஆனால் இயற்கையைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் மனிதனுக்கில்லையே. ஆதலால் அணு உலைகளுடன் சம்பந்தப்பட்ட சகல துறையினரும் வானிலை ஆராய்ச்சி மையத்துடனான தொடர்பைப் பேணி வருகிறார்கள். வானிலை மாற்றம் தொடர்பில் உடனுக்குடன் அறிவுறுத் தப்படுகிறார்கள். அமெரிக்க இராணு வத்தின் பொறியியல் படையணி தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த வருட ஆரம்பத்தில் ஜப்பான், புகுஷிமா அணு உலை அனர்த்தமும் அதனைத்தொடர்ந்து ஏற்பட்டு இன்றும் தொடர்ந்து வரும் சர்ச்சைகளும் உலக ளாவிய ரீதியிலே பெரும் விழிப்புணர் வைத் தோற்றுவித்துள்ளன எனலாம். சாதாரண மக்கள் மத்தியில் ஏற்பட்டி ருக்கும் இந்த விழிப்புணர்வு வெகுசனத் தொடர்பு ஊடகங்களுக்குக் கிடைத்த வெற்றி என்றால் கூட மிகையில்லை.

அந்த விழிப்புணர்வு தான் நெப்ரா ஸ்கா மக்கள் தொடுக்கும் கேள்விக் கணைகளின் பின்னணியிலும் இருக் கிறது. அணு உலைகள் இருக்கும் பகுதியில் நீர் மட்டம் உயர்ந்துள்ளதா என்று கேட்டே தமக்குப் பல தொலை பேசி அழைப்புகள் வந்து கொண்டிருப் பதாக சம்பத்தப்பட்ட அதிகாரிகள் கூறுகின்றனர். வெள்ளத்தைத் தடுப்ப தற்காய் மண் மூடைகள் அடுக்கப்படு கின்றன. ஆனால் அவை போதாது என ஆய்வாளர்களால் அறிவுறுத்தப்பட்டிருக் கின்றது. "போதுமான ளவு பாதுகாப்பு, முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டிருக்கின்றன. மேலதிக வெள்ளத்தடுப்பு கதவுகள் போடப்பட்டி ருக்கின்றன. ஆதலால் பயப்பட வேண்டிய தேவை இல்லை" என ஆய்வாளர்களு க்குப் பதிலளித்திருக்கிறது அதிகாரத் தரப்பு. பிரச்சினை யாதெனில், மிசு+ரி ஆற்றில் தற்போது உயர்ந்திருக்கும் நீர் மட்டம் ஓகஸ்ட் வரை குறையப் போவதில்லை என எதிர்வுகூறப்படுகிறது. பாதுகாப்புத் தடைகளும் இறப்பர் சுவர்களும் அணு உலைப்பகுதிக்குள் நீர் உட்புகுவதைத் தடுத்து வருகின்றன. ஆனால் இந்த நிலைமையின் எதிர் காலம் எதிர்வுகூறப்படமுடியாதது என்பதே யாவரும் அச்சம் கொள்வதற் கான காரணமாகும். அதேபோல நெப்ராஸ்காவில் அமைக்கப்பட்டிருக்கும் மற்றொரு அணு உலையான கூப்பர் உலையும் வெள்ள அபாயத்தால் பெரும் அச்சுறுத்தலை எதிர் நோக்கி யுள்ளது. அந்த அணு உலையின் தீயணைப்புப் பிரிவிலிருந்து மிசூரிநதி யிலே எண்ணெய்க்கழிவுகள் கலக்கவிடப் பட்டதாக அப்பகுதியின் சுற்றாடல் தர திணைக்களத்துக்கு அறிவுறுத்தப்பட்டி ருக்கிறது. அதாவது தீயணைப்புப் பிரிவையும் மிசு+ரி நதியையும் பிரிக்கும் தடைகள் வெள்ளத்தின் முன்னே செய லிழந்து போயின. எரிதலுக்குப் பாவிக் கப்படாத எண்ணெயும் ஏனைய கழிவு கள் கலந்த நீரும் மிசூரிநதியிலே கலக்கப்படுகின்றன. ஆனாலும் அவற்றில் கதிர்த்தொழிற்பாட்டுப்பதார்த்தங்கள் இல்லை எனக் கூறப்படுகிறது.

மிசூரி நதியிலே நீர் மட்டம் மேலும் உயர்ந்தால் கூப்பர் உலையையும் தற்காலிகமாக மூட வேண்டிய நிலை ஏற்படலாமென அச்சம் தெரிவிக்கின்ற னர் அதிகாரிகள்.

அமெரிக்க அணுக்கொள்கையைப் பொறுத்தவரையிலே அணு உலைகளின் பாதுகாப்புக்கான முக்கியத்தும் மிகவும் குறைவாகவே இருக்கிறது. என்று அணு உலை கட்டப்படுகிறதோ அன்றே அதனால் ஏற்படப்போகும் அழிவுக்கான வித்தும் இடப்படுகிறது எனலாம். நெப்ராஸ்காவிலிருக்கும் ஏதோ ஒரு அணு உலையிலே கசிவு ஏற்பட்டாலும் விளைவுகள் புகுஷிமா அணு உலைகளினதை ஒத்தவையாக இருக்கும் என எதிர்வு கூறப்படுகின்றன.

பூமியதிர்ச்சியால் புகுஷிமாவின் டாய் இச்சி அணு உலையில் கசிவு ஏற்படுவதற்கு 6 வருடங்களுக்கு முன்னர் அமெரிக்கசட்டவாளர்கள் உண்மையொன்றை உணர்ந்தனர். பூமியதிர்ச்சியால் அமெரிக்காவின் கிழக்கு பகுதியில் உள்ள அணு உலைகள் எதிர் நோக்கும் அச்சுறுத்த லானது எதிர்பார்த்ததை விட மிக அதிகமாகும் என்பதே அந்த உண்மை யாகும். இதையடுத்து அணுலைகளின் வடிவமைப்பை மாற்றியமைத்தல் தொடர்பாக ஆராய வேண்டுமென பொறியிலாளர்கள் அறிவுறுத்தப்பட்டனர்.

சட்டவாளர்கள் கண்டறிந்த உண்மை பொய்க்கவில்லை. அமெரிக்காவில் இல்லையாயினும் ஜப்பான், புகு'pமா விலே நி'ரூபிக்கப்பட்டது. புகுஷிமா அனர்த்தமானது எவரும் எதிர்பார்க்காதளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தியிருந்தமை நாம் யாவரும் அறிந்ததே. இவை இப்படியிருக்க, புகு'pமா அணூலை அனர்த்ததின் போது வெளியேறியே கதிர்த்தொழிற் பாட்டுத் தூசுகள் சில நாட்களிலேயே வட அமெரிக்காவைச்சென்றடந்தன என்ற புதியடோர் செய்தியும் தற்போது வெளியாகியுள்ளது. ஆனால் சம்பந்தப் பட்ட இரு அரசாங்கங்களும் இந்த உண்மையை மறைத்து விட்டன என WASHINGTON'S POST என்ற வலைப்பூ தெரிவிக்கிறது.

புகுஷிமா அணு உலை அனர்த்தம் நிகழ்ந்துகொண்டிருந்த காலப்பகுதியிலே பல்கலைக்கழக ஆய்வாளர்கள் பலர், கதிர்த்தொழிற்பாடுள்ள தூசுத்து ணிக்கைகளின் பரவல் தொடர்பாக எச்சரித்திருந்தனர். அத்துணிக்கைகள் வட அமெரிக்காவுக்கும் பின்னர் ஐரோப் பாவுக்கும் கூடப் பரவலாம் என்பது அவர்களது ஊகமாக இருந்தது.

ஜெட் விமானத்திலிருந்து வெளியேற்றப்படும் புகையை ஒத்ததாக இந்த தூசு துணிக்கைகளும் பசுபிக் சமுத்திரத்தைக் கடந்து பயணிக்கும் என்றனர். அது உண்மையே. நியூயோர் க்கில் தாக்கம் உணரப்பட்டது எனத் தெரிவிக்கப்படுகிறது. ஆனால், அக்கூற்று உறுதிப்படுத்தப்படவில்லை. ஜப்பானில் புகுஷிமா அணுஉலை அனர்த்தம் நிகழ்ந்த பின் உலகளாவிய ரீதியிலே பல நாடுகளிலும் எண்ணற்ற தரவுகள் சேகரிக்கப்பட்டு, அரசாங்கங்களிடையே பரிமாறப்பட்டன. ஆனால் அவை கல்வி யாளர்கள், ஆய்வாளர்கள் மத்தியிலோ பொதுமக்களிடமோ பகிரப்படவில்லை.

அணு ஆராய்ச்சி, அணுவுடன் தொடர்புடைய சகல விடயங்களிலும் இந்த நிலைமை தான் காணப்படுகிறது. அணுவுடன் தொடர்புடைய அனர்த்தமொன்று நிகழும் போது அதன் உண்மைப் பாதிப்புகள் வெளி உலகுக்குத்தெரியாமல் மறைக்கப்படுகின்றன.அணு உலைகளின் வடிவமைப்பு கூட இரகசியமாகவே பேணப்படுகிறது. இத்தகைய செயற்பாடுகளின் பின்னணியில் இராணுவ, அரசியல், பொருளாதார ரீதியான, பாதுகாப்புக் காரணங்கள் காணப்படுகின்றன. அத்தகைய காரணங்களின் முன்னே பொது மக்களின் நலன் என்பது செல்லாக் காசாகி விடுகிறது என்பதே நிதர்சனம்.


Sunday, June 19, 2011

மணற்காடு

Saturday, June 18, 2011

வற்றாப்பளை அம்மன் வைகாசி விசாக பொங்கல்
செவ்வாய் கிரகவாசிகள் என்றும் இளமையானவர்கள்!


செவ்வாய் கிரகத்தில் நீர் இருக்குமா? உயிரினங்கள் வாழக்கூடிய சாத்தியக் கூறுகள் இருக்குமா என போட்டி போட்டுக்கொண்டு ஆராய்ச்சிகள் நடக்கின்றன. ஆனால் செவ்வாய்க்கிரக வாசிகள் பற்றிய தகவல்களை அடுக்கடுக்காக வெளியிடுகிறான் பொறிஸ்கா என்ற ரஷ்யச் சிறுவன். அவன் கூறும் தகவல்கள் உண்மையாக இருந்தால், எமது பூமியும் இன்றைய செவ்வாய் கிரகம் போல் மாறிவிடும் காலம் வெகு தொலைவில் இல்லையோ? என்றே எண்ணத் தோன்றுகிறது.
பிறந்த குழந்தை ஒன்றுக்கு 15 நாட்களிலே தலையைத் தூக்க முடியுமா? நான்கே மாதங்களாகும் போது பாப (அம்மம்மா ரஷ்ய மொழி) என அழைக்க முடியுமா? ஏழு மாதங்களில் ‘எனக்கு ஒரு ஆணி வேண்டும்!’ எனக் கேட்க முடியுமா? ஒரு வயதிலே எழுத்துக்களைப் படித்து ஒன்றரை வயதில் ஒரு பத்திரிகையை வாசிக்க முடியுமா? இரண்டரை வயதிலே வண்ண ஓவியந் தீட்ட முடியுமா?
இவை யாவற்றையும் பொறிஸ்கா செய்திருக்கின்றான் என்றால் ஆச்சரியமாக இல்லையா? இவையெல்லாம் வழக்கமாக எம் மூளையில் பதியப்படும் தகவல்களின் அடிப்படையில் நடந்தவையாக தெரியவில்லை. ஆனால் நடந்தது உண்மைதான் என்கிறார்கள் பொறிஸ்காவின் பெற்றோர். அவனுக்கு பூர்வஜென்ம நினைவுகள் வந்து தான் செவ்வாய் கிரகத்திலிருந்து வந்தவன் என்று கூறி விஞ்ஞான உலகையே வியப்பில்ஆழ்த்தியிருக்கிறான், பொறிஸ்கா.

அவன் யார் தெரியுமா? ரஷ்யாவில் சைரினோவிஸ்க் என்ற நகரத்தில் 1996, ஜனவரி 11 ஆம் திகதி பிறந்தவன்.அவன் தகவல்களைப் பெற்றுக் கொள்ளும் வழிகள் புதிராக இருப்பதாகக் கூறுகின்றனர் பெற்றோர். யாரும் கற்றுக் கொடுக்காமலே அவனுக்கு அசாத்திய ஆற்றல்கள் கிடைத்திருக்கின்றன.

அவனை இரண்டு வயதில் பாலர் பாடசாலையில் சேர்த்த போது அவனது மொழியாற்றல், நினைவுத் திறன், சுட்டித்தனம் போன்றவை அசாதாரணமாக இருந்ததாக ஆசிரியர்கள் குறிப்பிட்டிருக்கின்றனர். பாடசாலைக்கு அனுப்பினால் ஆசிரியரிடம் எழுந்து ‘நீங்கள் கற்பிப்பது தவறு’ என்று சுட்டிக்காட்டி இருக்கிறான்.
தாமரை வடிவிலே சம்மணமிட்டு அமர்ந்து செவ்வாய் கிரகம் பற்றியும், ஏனைய நாகரிகங்கள், கோள் தொகுதிகள் பற்றியும் பரபரப்பாக தெளிவாக விபரிக்கின்றான். இரண்டு வயதில் இருந்தே அவன் அப்படிக் கூறுவது தான் இன்னும் ஆச்சரியமாக இருக்கிறது.

தான் செவ்வாய்க் கிரகத்திலே வாழ்ந்ததாகவும், அங்கே உயிரினங்கள் வாழக்கூடிய சூழ்நிலை இருந்தது எனவும் அக்கிரகம் வரலாறு காணாத அனர்த்தமொன்றைச் சந்தித்தாலும் இன்னும் நிலைத்து நிற்கிறது எனவும் கூறுகிறான்.செவ்வாய்க் கிரகம் சந்தித்த பேரனர்த்தத்தால் அதன் வளி மண்டலம் அழிந்து போய்விட்டதாகவும் நிலத்துக்குக் கீழ் இருக்கும் நகரங்களில் சில கிரக வாசிகள் இன்னும் வசிப்பதாகவும் கூறுகிறான் பொறிஸ்கா. தான் அங்கு வாழும் காலத்தில் வர்த்தக மற்றும் விஞ்ஞான ஆய்வுக்காக அடிக்கடி பூமிக்கு வந்து செல்வதாகவும் கூறுகிறான்.
தான் ஒரு விண்கலத்தின் விமானியாக இருந்ததாகவும் குறிப்பிடுகிறான்.
இவையெல்லாம் நடந்தது லெமூரிய நாகரிக காலத்தில் எனவும் தனது லெமூரிய நண்பன் தன் கண் முன்னாலேயே இறந்து போவதைத் தான் கண்டதாகவும் கூறுகிறான் பொறிஸ்கா.

‘பூமியிலே ஒரு பேரனர்த்தம் நிகழ்ந்தது. மலைகள் வெடித்துச் சிதறின. பாரிய கண்டம் சிறு சிறு துண்டுகளாகப் பிரிந்து நீரினுள் மூழ்கியது. பாரிய கல் ஒன்று எனது லெமூரிய நண்பன் இருந்த கட்டடத்தின் மீது விழுந்தது. என் கண் முன்னாலேயே அவன் இறந்துபோனான். தற்போது பூமியில் மீண்டும் நாம் இருவரும் சந்திக்க வேண்டும்’ என்று லெமூரியா கண்ட அழிவு அண்மையில் நடந்தது போல பரபரப்பாக விபரிக்கிறான் அந்தச் சிறுவன்.
ஒரு நாள் பொறிஸ்காவின் தாய் அழிந்துபோன லெமூரியா கண்டம் தொடர்பான புத்தகமொன்றை வாங்கி வந்தார். அதைப் பார்த்த பொறிஸ்காவின் கண்கள் அகல விரிந்தன. லெமூரியன்கள் தொடர்பான ஓவியங்களையும் திபெத்திய மேட்டு நிலங்களின் புகைப்படங்களையும் ஆர்வமாகப் பார்த்தான் பொறிஸ்கா.
‘லெமூரியாக் கண்டம் அழிந்து 800,000 வருடங்களாகிவிட்டன. அது உனக்கு தெரியுமா?’ என பேராசிரியர் ஒருவர் வினவிய போது ‘ஆம் எனக்கு ஞாபகமிருக்கிறது; ஆனால் இங்கு எவரும் இதுபற்றி எனக்கு சொல்லவில்லை’ என மிகவும் சகஜமாகப் பதிலளிக்கிறான் பொறிஸ்கா.
பெரிய பேராசிரியர்களோடு கூட மிகச் சரளமாக உரையாடுகிறான். அவர்கள் பல்லாண்டு காலம் ஆராய்ந்து கண்டறிந்த விடயங்களை எல்லாம் மிகச் சுலபமாக எடுத்துரைக்கிறான்.

புதைகுழிகள் மற்றும் பிரமிட்டுக்கள் பற்றிய புத்தகமொன்றை அவன் வாசிக்க ஆரம்பித்த போதுதான் பல சுவாரசியமான விடயங்கள் வெளிப்பட்டன.‘சியொப்ஸின் பிரமிட்டை ஆராய்வதால் எந்த அறிவும் கிடைக்காது. அதற்குப் பதிலாக வேறொரு பிரமிட்டை ஆராய வேண்டும். அந்த பிரமிட்டை இன்னும் எவரும் கண்டுபிடிக்கவில்லை. மனிதத்தலை சிங்க உடம்பு எனக் காட்சி தரும் ஸ்பின்க்ஸ் பிரமிட்டுக்கள் மனித வாழ்வின் இரகசியங்கள் பல புதைந்திருக்கின்றன. அதற்கான திறவுகோல் அந்த உருவத்தின் காதுப் பகுதியில் இருப்பது போல் தெரிகிறது’ என விபரிக்கிறான் பொலஸ்கா.
மாய நாகரிகம் பற்றியும் கூறுகிறான். தற்போது பூமியிலே விசேட ஆற்றல்கள் கொண்ட குழந்தைகள் பிறக்கத் தொடங்கியமைக்கு காரணமும் கூறுகிறான். பூமியிலே புதிய மாற்றங்கள் நிகழப் போவதாகவும் அதற்கு பூமி வாசிகளின் மன நிலைக்கு அப்பால் புதிய அறிவொன்று தேவைப்படுவதாகவும் குறிப்பிடுகின்றான். முனைவுகள் இடம்மாறலாம். பூமியிலே ஒரு பேரனர்த்தங்கள் நிகழும். 2013 அளவில் நடக்க இருப்பது மிகவும் பெரியதாக இருக்கும்’ என்கிறான்.
‘இதற்காக எல்லாம் நான் பயப்படவில்லை. நாங்கள் எப்போதும் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். எங்களைப் போன்ற பலர் செவ்வாய்க் கிரகத்தில் வாழந்தார்கள். அங்கு பெரும் அணு ஆயுதப் போரொன்று நடந்தது. அதில் யாவுமே எரிந்து போயின. வெகு சிலர் மட்டுமே தப்பித்தார்கள். வீடுகளைக் கட்டினார்கள். புதிய ஆயுதங்களை உருவாக்கினார்கள். அங்கும் கண்டங்கள் இடம் மாறின. செவ்வாய் வாசிகள் காபனீரொட்சைட்டையே சுவாசிப்பார்கள். ஆனால் பூமிக்கு வந்தால் இந்த வளியைச் சுவாசிப்போம்.

உண்மையில் எமக்கு இந்த வளியைச் சுவாசிக்க விருப்பமில்லை. ஏனெனில் அதுதான் மூப்படைதலுக்கு வழிவகுக்கிறது. செவ்வாய் வாசிகள் எப்போதும் இளமையாக இருப்பார்கள். அங்கே நாங்கள் ஒரு விசேட கண்ணாடியை அணிவோம். எப்போதும் சண்டை பிடிப்போம்’
‘ஒரு கவலைக்குரிய விடயம் என்னவென்றால் செவ்வாயில் ஒரு நிலையம் இருக்கிறது. அது உண்மையில் அழிக்கப்பட வேண்டும். செவ்வாய் மீண்டும் பழைய நிலைமை அடைவதற்கு அந்த நிலையமே தடையாக இருக்கிறது. நாங்கள் அதற்கு அருகில் இருந்திருக்கிறோம்’ என்று சுவைபட விபரிக்கிறான் பொறிஸ்கா.செவ்வாயில் தரையிறங்கும் பூமியின் விண் கலங்கள் செயலிழந்து போவதற்கும் பழுதடைவதற்கும் என்ன காரணம்?’ என்று போறிசிடம் வினவினார் பேராசிரியர் ஒருவர்.
செவ்வாயிலிருந்து ஒரு சமிக்ஞை வந்தபடி இருக்கிறது. அது விண் கலங்களைச் செயலிழக்கச்செய்கிறது என உறுதிப்படக் கூறுகிறான் பொறிஸ்கா.
பிரபல பெளதிகவியல் விஞ்ஞானியாக ஸ்டீபன் ஹொக்கின்ஸ் வேற்றுக் கிரக வாசிகள் பற்றி குறிப்பிட்டிருந்த விடயத்தையும் இங்கு நினைவுபடுத்துதல் வேண்டும்.
வேற்றுக் கிரகவாசிகள் என்பது பொய்யல்ல. பூமியிலிருந்து அவர்களைத் தொடர்புகொள்ள முயல்வது மிகவும் ஆபத்தானது. அது எமது இருப்பிடத்தை அவர்களுக்குக் காட்டிக் கொடுப்பது போலாகிவிடும் என அண்மையில் ஸ்டீபன் ஹொக்கின்ஸ் எச்சரித்திருந்தார்.இனங்காணப்படாத பறக்கும் பொருட்கள் (UFO’s) அல்லது பறக்கும் தட்டுக்களை வரைபடம் வரைந்து விபரிக்கிறான் பொறிஸ்கா. அவற்றில் ஆறு படைகள் இருப்பதகாவும் அவற்றின் அளவுகளை சதவீத அடிப்படையிலும் கூறுகிறான். அவற்றைக் கேட்டுத் திகைத்துப் போய் நிற்கிறார்கள் பேராசிரியர்கள்.பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரே அழிந்துபோன ப்ரொசெர்பைன் என்ற கோளைப் பற்றியும் அது அழிந்து போன விதம் பற்றியும் கோள்கள் அழிந்து போவதைத் தாம் செவ்வாயிலிருந்து பார்த்துக் கொண்டிருப்பதாகவும் கூட பொறிஸ்கா கூறுகிறான்.பூமியிலுள்ள மக்கள் எதற்காகத் துன்பங்களை அனுபவிக்கின்றார்கள் என்றும் விபரிக்கிறான் பொறிஸ்கா. அவன் கூறும் விடயங்களை எவராலும் மறுக்க முடியவில்ல¨.‘சரியாக வாழாததாலும் மகிழ்ச்சியாக இருக்க முடியாததாலுமே பூமியிலுள்ள மக்கள் இவ்வளவு துன்பங்களையும் அனுபவிக்கிறார்கள்.
மற்றவரின் விதியிலே ஒருநாளும் தலையிடக் கூடாது. உங்கள் பூரணத்துவத்தை சிதைக்கவோ அழிக்கவோ முயற்சிக்கக் கூடாது. அபிவிருத்தி வட்டத்தை முடித்துக்கொண்டு அடுத்த பரிமாணத்துக்குச் செல்ல முயற்சிக்க வேண்டும். மக்கள் பரிவுள்ளவர்களாக மாற வேண்டும். யாரும் உங்களை அடித்தால் அதற்காக அவர்கள் சங்கடப்பட வேண்டும். உங்களை அவமானப்படுத்தினால் நீங்களே சென்று மன்னிப்பு கேளுங்கள். அவர்கள் உங்களை வெறுத்தாலும் நீங்கள் அவர்களிடம் அன்பு செலுத்துங்கள். அன்பு, பரிவு, மன்னிப்புடன் இணைந்த உறவுதான் மக்களுக்கு முக்கியமானது. லெமூரியர்கள் அழிந்ததற்குக் கூட அதுதான் காரணம்’ என்கிறான் பொறிஸ்கா.
செவ்வாயிலே தண்ணீர்ப் பிரச்சினை ஏற்பட்டதால் விண் கலங்களில் பூமிக்கு வந்து தண்ணீர் எடுத்துச்சென்றதாகக் குறிப்பிடுகின்றான் பொறிஸ்கா. செவ்வாய் கிரக வாசிகள் லெமூரியர்களைப் போல உயரமானவர்கள் என்றும் கூறுகிறான்.

ஆனால் சமூகம் பொறிஸ்காவை அங்கீகரிக்க மறுக்கிறது. இதனாலே அவனது வாழ்க்கை சிக்கலானதாக மாறிவிட்டிருக்கிறது. ஆனால் விஞ்ஞானம் கூட அவன் ஒரு வித்தியாசமான சிறுவன் என்பதை நிரூபிக்கத் தவறவில்லை. பொறிஸ்காவை சூழ இருக்கும் ஒளி வட்டமானது அவனது வயதை ஒத்த ஏனைய சிறுவர்களினதைவிடச் செறிந்ததாக வித்தியாசமானதாக காணப்படுவதும் நிரூபிக்கப்பட்டுள்ளது. தீயசக்திகள் எவையும் தடுக்காவிட்டால் அவன் பூமிக்கு வந்த நோக்கத்தைப் பூர்த்தி செய்வான் என நம்புகின்றனர் பேராசிரியர்கள். பொறிஸ்கா போன்றவர்களை இன்டிகோ ((INDIGO) சிறுவர்கள் என அழைப்பர். அவர்கள் சாதாரண மனிதர்களின் கட்டுப்பாட்டுக்கு அப்பால் உள்ள சக்திகளுடன் புவிச்சமூகத்தினுள் உள் நுழைக்கப்பட்டவர்கள் என நம்பப்படுகிறது. மனிதனின் பரிணாம வளர்ச்சியில் அவர்களுக்குரிய இடம் எது என்பது இன்னும் கேள்விக்குரியாகவே இருக்கின்றது. ஆனால் இன்டிகோ சிறுவர்களை ஒருபோது புறக்கணிக்க முடியாது என்பது மட்டுமே உண்மையாகும்.

கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக பூமியில் இன்டிகோ சிறுவர்கள் பிறந்த படிதான் இருக்கிறார்கள். இரண்டாம் உலக மயா யுத்தத்தின் பின் குறிப்பிடத்தக்களவு இன்டிகோ குழந்தைகள் பிறந்திருக்கின்றன. இன்று ஏறத்தாழ 2, 3 சந்ததிகளைச் சேர்ந்த அத்தகைய 2000 பேர் உயிர் வாழ்கின்றார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இயற்கை பல் பரிமாணங்களையுடையது. பூமியில் பிறந்த மனிதர்கள் முப்பரிமாண உயிரினங்கள் என அழைக்கப்படுகின்றார் கள். அவர்கள் உலகியலுக் குக் கட்டுப்பட்டவர்களாக இருக்கிறார்கள். அவர்களது அறியும் ஆற்றலுக்கு பூட்டுப் போடப்பட்டுள்ளது.
அந்த அறியும் ஆற்றல் திறக்கப்பட்டால்தான் மனிதன் முப்பரிமாண உலகைக் கடந்து உயர் பரிமாணங்களுக்குள் நுழைய முடியும்.
ஆனால் இந்த இன்டிகோ சிறுவர்களே பல் பரிமாண ஆற்றலுக்கான திறவுகோலுடன் பிறக்கிறார்கள். அவர்கள் முப்பரிமாண உடலமைப்பைக் கொண்டிருந்தாலும் அவர்களது அறிவாற்றல் உணர் நிலை நான்காவது பரிமாணத்திலே இருக்கிறது. அதேபோல் ஐந்தாவது பரிமாணத்துக்குள் நுழையும் ஆற்றலும் அவர்களுக்கு இருக்கிறது.

 உணர்நிலையானது நான்காவது பரிமாணத்தினுள் இருக்கும் போது பிரபஞ்ச ஒற்றுமை பற்றி அறிந்திருப்பார்கள். அது ஒன்றுபட்ட தன்மையைக் குறிக்கும். நாம் யாவரும் ஒருவரே. நாம் ஒருவரில் ஒருவர் தங்கியிருக்கிறோம். ஒருவருக்கு ஏற்படும் பாதிப்பு யாவரையும் பாதிக்கும். ஒருவரை விட மற்றவர் மேலானவரல்ல என்ற உண்மையை அறிந்து அதன் வழி நடப்பர். இன்டிகோ சிறுவர்களிடம் இந்த விழிப்புணர்வு இருக்கிறது. அதை பொறிஸ்காவின் கூற்றும் நிரூபிக்கிறது. அந்த விழிப்புணர்வு தான் ஐந்தவாது பரிமாணத்துக்கான திறவு கோலாகிறது. குறைந்த பரிமாணத்தில் இருக்கும் உயிரினங்களுக்கு ஐந்தாம் பரிமாணம் பற்றி அறியும் ஆற்றல் இருக்காது. இன்டிகோ சிறுவர்களால் அப்படியே தொடர்ந்து உயர் பரிமாணங் களுக்குச் செல்ல முடியும். பிரபஞ்சம் என்பது அற்புதங்கள் நிறைந்தது. அதை அணு விஞ்ஞானி ஐன்ஸ்டீன் கூட மறுக்கவில்லை. சுயநலமற்ற அன்பு என்ற ஒரே மந்திரம் மட்டும் தான் பெருந்துன்பங்களிலிருந்து மனித இனத்தைக் காப்பாற்றும் ஒரே ஆயுதம் என்பதை நாம் உணரும் வரை எமக்கு உய்வில்லை என்ற ஒன்றே நிதர்சனமாகும்.


மூலம் : ரஷ்ய பேராசிரியர் கென்னடி பெலிமோவின் ஆய்வுக் குறிப்பு (2004)

Sunday, June 5, 2011

காட்டுயிர்களிடமிருந்து நாம் கற்றுக்கொண்டிருப்பவை!


தொழிற்படும் யன்னல்கள்

தாவரங்களின் பிரதான தொழிலாகிய ஒளித்தொகுப்பின் அடிப்படையிலே தொழிற்படக் கூடிய யன்னல்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. சாதரண சூரிய கலங்கள் எந்த ஒரு செலவும் இல்லாமல் மீள உருவாக்கப்படக் கூடிய சக்தியைப் பிறப்பிக்கவில்லை. அவற்றில் காணப்படும் சிலிக்கன் மேற்பரப்பைத் தயாரிக்க அதிக செலவாகிறது. அதிக சக்தி தேவைப் படுகிறது. அந்த உற்பத்தியின் போது சூழலுக்குத் தீங்கை விளைவிக்கக் கூடிய உப பொருட்களும் உருவாகின்றன. அத்தகைய சூரிய கலங்களுக்கு மாற்றாக ஒளித்தொகுப்பை அடிப்படையாகக் கொண்ட சாயஉணர் சூரிய கலங்கள் கண்டு பிடிக்கப்பட்டிருக்கின்றன. தாவரமொன்றில் இலை பச்சையத்தைக் கொண்டு சூரிய ஒளிக்கு எப்படி தொழிற்படுகிறதோ அதே போலவே இந்த சூரிய கலங்களும் தொழிற்படுகின்றன. குறைந்தளவு சக்தியுடன், எந்த ஒரு நச்சுப் பதார்த்தங்களையும் வெளி விடாமலே இவை தயாரிக்கப்படுகின்றன. அவை கட்டட மேற்பரப்பிலே பொருத்தப்படவும் கூடியவை.சிம்பன்சி கண்டுபிடித்த மருந்து

நவீன மருத்துவத்தில் பயன்படும் 25 சதவீதமான மருந்துகள் தாவரங்களிலிருந்து நேரடியாகப் பெறப்படுபவை. மருத்துவத்தில் பயன்படக் கூடிய பல நூற்றுக்கணக்கான தனித்துவமான இரசாயனப் பதார்த்தங்களைக் கொண்ட பல நூறாயிரம் தாவரங்கள் இனங்காணப்பட்டுள்ளன. இன்னும் புதிய மருந்துகளைக் கண்டு பிடிக்க வேண்டுமாயின் எங்கிருந்து ஆரம்பிப்பது என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழத்தான் செய்கிறது. தாவரங்களின் வகையையும் அவற்றில் இருக்கும் இரசாயனப் பதார்த்தங்களையும் இனங்கண்டு பிரித்தெடுத்து மருத்தைக் கண்டு பிடிக்க பல மில்லியன் ஆண்டுகள் செல்லலாம். அதிஷ்டவசமாக சிம்பன்சி குரங்குகள் என்ன செய்கின்றன என்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்து வைத்திருக்கிறார்கள். சிம்பன்சி போன்ற மனிதனல்லாத விலங்குகள் தம்க்கு சுகயீனமொன்று நேரும் போது எந்தத் தாவரங்களைப் பயன்படுத்தி குணமடைகின்றன என ஆய்வாளர்கள் அவதானிக்கிறார்கள். பின்னர் அவற்றை மனிதனுக்கும் பிரயோகிக்கிறார்கள்.

சிம்பன்சி குரங்குகள் சுகயீனமடையும் போது வெரோனியா சாதி மரத்தை நாடிச் செல்வது அவதானிக்கப்பட்டது. புழுக்களால் ஏற்படும் சுகயீனங்களைக் குணப்படுத்தக் கூடிய ஆற்றல் அந்த மரத்துக்கு இருப்பது பின்னர் தானங்கண்டறியப்பட்டது.கார்களின் வடிவமைப்பு

மரங்கள் தமது பலத்தை உச்சப்படுத்தக் கூடிய வகையிலே தமது கட்டமைப்பை வடிவமைத்துக் கொள்கின்றன. அவை தமது நார்களை ஒழுங்குபடுத்தி தகைப்பைக் குறைப்பதும் பலம் தேவையான பகுதிகளுக்கு மேலதிக பதார்த்தங்களை அனுப்புவதும் கூட பலத்தை உச்சப்படுத்தவே!

பாரம் கூடிய கிளைகளிலே இதை அவதானிக்க முடியும். இதே நுட்பத்தை பொறியியலாளர்களும் பயன்படுத்தத் தொடங்கி விட்டார்கள். மரங்கள் எப்படி பலத்தை உச்சப்படுத்துகின்றனவோ அதே போன்ற வடிவமைப்பை தொழிற்சாலை வடிவமைப்பிலும் மேற்கொள்ள மென்பொருட்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளன. கார்களும் அதே நுட்பத்திலே வடிவமைக்கப்படுகின்றன.


பாரங்குறைந்த உறுதியான தயாரிப்புகள்

தற்போது தயாரிக்கப்படும் இந்த புதிய தண்ணீர்ப் போத்தல்களில் மற்றைய பிளாஸ்டிக் போத்தல்களை விட குறைந்தளவு பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுகிறது. அதேவேளை உறுதித் தன்மை அதிகமாகக் காணப்படுகிறது. இந்தப் போத்தல்களை வடிவமைத்த நிறுவனத்துக்கு மாதிரியாக இருந்தவை மரங்கள் என்றால் நம்ப முடிகிறதா?

மரங்களில் பொதுவாகக் காணப்படும் சுருளி வடிவான கட்டமைப்பின் அடிப்படையிலேயே இந்த போத்தலும் வடிவமைக் கப்பட்டிருக்கிறது. இந்த வடிவமைப்பினால் வருடாந்தம் 250 தொன் மூலப்பொருளும் மீள் சுழற்சி செய்யத்தேவையான சக்தியும் பெருமளவில் மீதப்படுத்தப்படுவதாகத் தெரிகிறது.


சுவட்டு எரிபொருள் இல்லாத எதிர்காலம்


ஐதரசன் அணுவானது எமது DNA மூலக்கூற்றின் வடிவத்தை பேணுகிறது . அதே வேளை விண்ணுக்கு ரொக்கட்டுகளை அனுப்புவதற்கான எரிபொருளாகவும் பயன்படுகிறது. சுவட்டு எரிபொருட்கள் நிச்சயம் ஒரு நாள் ஐதரசன் அணுக்களால் பிரதியீடு செய்யப்படும் என்பதில் எதுவித ஐயமும் இல்லை. தற்போது ஐதரசன் அணுவைப் பிரித்தெடுக்க சுவட்டு எரிபொருட்களே பயன்படுகின்றன. ஆனால் தாவரங்களோ சூரிய ஒளிமுன்னிலையில் அதனையொத்த தொழிற்பாட்டை மேற்கொள்கின்றன. தாவரங்கள் கொண்டிருக்கும் வியத்தகு இயல்பை அடிப்படையாகக் கொண்ட செயற்கை இலைகள் தயாரிக்கப்படுகின்றன. சூரிய ஒளி முன்னிலையில் இந்த செயற்கை இலைகளை நீரினுள் இட்டால் அவை ஐதரசன் வாயுவைத் தயாரிக்கின்றன. அது ஒரு எரிபொருள் கலத்திற்கு வழி நடத்தப்படுகிறது. அதன் மூலம் மின் சக்தி பிறப்பிக்கப் படுகிறது. இச்செயற்பாட்டின் மூலம் சுத்தமான நீர் மட்டுமேகழிவுப் பொருளாக . வெளியேற்றப்படு கிறது.


சாயமின்றிய நிறங்கள்

வண்ணப் பூச்சுகள், பிளாஸ்டிக்குகளில் சாயங்கள் பயன்படுகின்றன. அவற்றிலே பார உலோகங்களும் நச்சுத்தன்மையான இரசாயனப் பதார்த்தங்களும் காணப்படுகின்றன. நிறங்களை உருவாக்குவதற்கான மாற்றுவழியை வண்னத்துப் பூச்சிகள் கற்றுத் தந்திருக்கின்றன. மத்திய மற்றும் தென்னமெரிக்க பகுதிகளில் உள்ள நீல நிற வண்ணத்துப் பூச்சிகள் தமது சிறகுகளால் சமிக்ஞைகளை வெளியிட வல்லவை. அவற்றின் சிறகுகள் கொண்டிருக்கும் கவர்ச்சியான நிறம் சாயத்தால் உருவானதல்ல. சிறகுகளில் காணப்படும் நுண்ணிய ஒளி ஊடு புகும் படைகள் நீல ஒளியை மட்டும் தெறிப்படையச் செய்கின்றன. இதே தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தியே சாயங்களைப் பயன்படுத்தாமல் கவர்ச்சியான நிறங்களுடன் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.
மரங்களின்றி வாழ்வேது?


உலக சுற்றாடல் தினம் இன்று

உலகம் எவ்வளவு வேகமாகச் சுழல்கிறதோ அதைவிட இன்னும் வேகமாக மாற்றங்களை எதிர்கொள்கிறது. அதைவிட அதீத வேகத்தில் இயற்கை வளங்கள் பாவனைக்குட்படுத்தப்படுகின்றன. அவற்றுள் பிரதானமானவை தாவரங்கள்.அத் தாவரங்களின் பல்வகைமை நிறைந்து காணப்படும் வளம் வன வளம். எத்தனையோ மில்லியன் உயிரினங்கள் இவ்வுலகில் நிலைத்து நிற்பதற்கு ஆதாரமாக இருப்பதும் இந்த வன வளம் தான். தாவரம் என்ற ஒரு பிரதான இனம் நிலைத்து நிற்காவிட்டால் அதில் தங்கியிருக்கும் ஏனைய உயிரினங்கள் யாவற்றின் நிலைப்பும் கேள்விக்குறியாகிவிடும். ஆனால் மனித சமுதாயம் காலங்கடந்த பின்னர் தான் அதை உணர்ந்திருக்கிறது.

காடுகள் இருப்பதால் உலகிற்குக் கிடைக்கும் நன்மைகள் எண்ணற்றவை. அவற்றை வகைப்படுத்துதல் மிகக் கடினம். சுத்தமான குடி நீராகட்டும், தாவர, விலங்குகளுக்கு வாழிடமாகட்டும், பொருளாதார வளர்ச்சியாகட்டும், சுத்தமான வளியாகட்டும், பொழுதுபோக்கு நடவடிக்கைகளாகட்டும், ஏன் சிறந்த எதிர்காலமாகட்டும்.. அவை எவையுமே இந்த காடுகளின் துணையின்றி சாத்தியமாகாது. மரங்களால் எமக்குக் கிடைக்கும் மிகப் பிரதானமான நன்மை ஒட்சிசன் எனலாம். எமக்கு ஒட்சிசனைத் தருவதற்கு மரங்களே இல்லை என்றால் நாம் உயிர் வாழ்வதும் சாத்தியப் பட்டிருக்காது.

அவை மட்டுமன்றி மண்ணரிப்பு, நிலச்சரிவு, வெள்ளம் போன்ற பல அனர்த்தங்கள் னிகழாமல் காப்பதிலும் காடுகளுக்கு பெரும்பங்குண்டு.

மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படச்செய்யக் கூடிய பல வளங்களை காடுகள் கொண்டிருக்கின்றன. மனித சமுதாயம் இதை உணர்ந்த காலத்திலிருந்து அந்த வளங்களைப் பாவிக்கத்தொடங்கி விட்டிருந்தது. ஆனால் சடுதியாக அதிகரிக்கத்தொடங்கிய சனத்தொகையும் வாழ்க்கைத்தரத்தைப் பேணுவதற்கான கேள்வியும் புதிய போக்கினைத் தோற்றுவித்தன. வளங்களின் அளவு அதிகரிக்கப்பட வேண்டிய தேவை எழுந்தது. ஆனால் மாறாக இருக்கும் வளங்கள் மிக வேகமாக அருகத் தொடங்கின. வனவளங்கள் அழிக்கப்பட்டு அந்த நிலம் பல்வேறு பட்ட அபிவிருத்தித் தேவைகளுக்காகப் பயன்படுத்தப் படத் தொடங்கியது.

மனித வாழ்வின் ஒவ்வொரு அங்கத்திலும் மரங்களின் பயன் பாடு இருக்கும். மரங்களை வெட்டுதல்/காடுகளை அழித்தலானது மரக்காலை மற்றும் கடதாசிக் கைத் தொழிலுடன் நேரடியாகத் தொடர்பு பட்டது. உதாரனமாக வீடு கட்டுவதாகட்டும், கடற்தொழில் நுட்பப்பொருட்களின் தயாரிப்பாகட்டும், தளபாட தயாரிப்பாகட்டும்.. எவையாயினும், அவற்றிற்கான கேள்வி முடிவுக்கு வந்ததாக சரித்திரம் இல்லை. பிளாஸ்டிக்கிலான மேசை ஒன்றை விட மரத்தாலான மேசையையே மனித மனம் அதிகம் விரும்புகிறது. மாடிப்படிகளுக்கு வைக்கப்படும் இரும்பினாலான பிடிகளை விட மரத்தினாலான பிடிகளே அதிகம் விரும்பப்படுகின்றன. அப்படி விரும்பும் மனித மனம் அப்பொருட்களைத்தயாரிக்க / நாம் விரும்பும் சுகபோக வாழ்வை அனுபவிக்க எத்தனை மரங்கள் வெட்டப்படுகின்றன என ஒருபோதும் சிந்திப்பதில்லை.

காடுகள் வகை தொகையின்றி அழிக்கப்படுவதற்கான மற்றொரு பிரதான காரணம் பயிர்ச்செய்கை நிலங்களுக்கான தேவையாகும். காடுகளை எரிப்பது மிகச்சுலபம். அதே நேரம் காடுகள் இருக்கும் நிலப்பகுதி வளம் மிக்கது. விவசாயத்துக்கு ஏற்ற சூழ் நிலைகளை (மண்வளம்)கொண்டிருக்கும். அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளிலும் அயன வலய மழைக்காடுகளையுடைய நாடுகளிலும் இன்னும் இந்த நிலைமை தொடர்வதைக் காண முடியும். இந்த நாடுகளைச் சேர்ந்த வறிய விவசாயிகள் தமது விவசாயம், பண்ணைவளர்ப்புத் தேவைகளுக்கான நிலத்தை காடுகளை எரித்து பெற்றுக்கொள்கிறார்கள்.

இவை இப்படி இருக்க, பாரிய கம்பனிகள் பல்லாயிரம் சதுரமைல் பரப்பளவிலான வனப்பகுதிகளை எரிக்கத்தொடங்க, பிரச்சினை விஸ்வரூபம் எடுத்தது. உலக உணவுச் சந்தையில் உருவான பெரும் போட்டியை அடுத்து பாரிய அளவில் விவசாய முயற்சிகளை மேற்கொள்ள அக்கம்பனிகள் முயன்றமையே அதற்கான காரணமாகும்.

ஆனால் எவருமே தங்கள் நிலத்தில் கரிசனை கொள்ளவில்லை. விவசாய நிலத்தின் வளம் குன்றும் போது அதை மேம்படுத்த முயற்சிக்கவில்லை. மேலும் காடுகளை அழித்து புதிய நிலங்களில் விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டனர். வளங்குன்றிய நிலம் அப்படியே இருந்தது. ஆக்குவதை விட அழிப்பது இலகு என்பது வெளிப்படை உன்மை. காடழிப்பிலே அக்கூற்றின் யதார்த்தை நன்கு உணர முடியும்.

ஒரு காலத்தில் இலங்கையின் மொத்த நிலப்பரப்பில் 75 சதவீதம் காடுகளாகக் காணப்பட்டன. பிரித்தானிய காலனித்துவ ஆதிக்கத்துடன் துரித கதியிலே அதிகரித்த காடழிப்பு காரணமாக இன்று 23 சதவீத நிலப்பகுதி (2004)மட்டுமே காடுகளாகக் காணபடுகிறது. இனியும் காடழிப்பு மேற்கொள்ளப்படவேண்டுமாயின் அது இலங்கையின் வடபகுதியில் மட்டுமே சாத்தியமாக இருக்கும் என்கிறார் பேராசிரியர் சரத் கொட்டகம. அதாவது, இலங்கையின் தென் பகுதியைப் பொறுத்தவரையிலே எஞ்சியிருக்கும் வனப்பகுதிகள் யாவுமே பாதுகாக்கப்பட்டவை. பாரிய அளவில் அவற்றை அழிப்பதானது சாத்தியமற்ற ஒன்று. ஆனால் இதற்கு மாறானதொரு நிலமையே வடக்கில் காணப்படுகிறது என்பது தான் பேராசிரியர் சரத் கொட்டகம சொல்ல விழையும் விடயமாகும்.

அவரது கூற்றில் உண்மை இல்லாமலில்லை. இலங்கையின் செய்மதிப் புகைப்படத்தை நோக்கினால் தென் பகுதியுடன் ஒப்பிடுகையில், வட பகுதி பசுமை மிக்கதாகத் தெரியும். தென் பகுதியுடன் ஒப்பிடுகையில் வடபகுதியில் நகரமயமாக்கலின் ஆதிக்கம் மிகவும் குறைவாகக் காணப்பட்டமையே அதற்கான காரணமாகும். ஆதலால் அங்கு பாரியளவில் காடழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.

ஆனால் வடப்குதியின் கைவிடப்பட்ட காணிகளிலும் வனப்பகுதிகளிலும் பெறுமதி மிக்க மரங்கள் சட்டவிரோதமாகத் தறிக்கப்படுவதாக செய்திகள் வெளியான வண்ணமிருக்கின்றன. அவற்றின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டியது சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கடமையாகும். பொது மக்கள் கூட இந்த சட்டவிரோத மரத் தறிப்பு தொடர்பாக எந்த வித அக்கறையும் இல்லாமல் இருப்பது வருத்தத்திற்குரியதாகும். வடபகுதி நில வளம் மிக்கது. அதன் நிலவளத்திலும் கால நிலை, மழை வீழ்ச்சியிலும் மரங்கள் வகிக்கும் பங்கு அளப்பரியது. இவ்வாறு மரங்கள் தொடர்ந்தும் அழிக்கப்பட்டு வந்தால் வடபகுதி பாலையாகும் காலமும் வெகு விரைவில் வந்து விடும் என்பதே நிதர்சனம்.

உலகின் மிகப்பெரிய மழைக்காடு அமேசன் காடு. அது பாரிய பொருளாதார நெருக்கடிக்குள்ளாகியிருக்கும் தென் அமெரிக்காவிலே அமைந்திருக்கிறது. விவசாயத்துக்கும் பல்வேறுபட்ட மனிதத் தேவைகளைப் பூர்த்திசெய்வதற்குமென இந்த அமேசன் காடு அழிக்கப்பட்டு வருகிறது. 1978-1988 வரையான ஒரு தசாப்த காலத்துக்குள் 230,000 சதுர மைல் பரப்பளவிலான அமேசன் காடு அழிக்கப்பட்டிருக்கிறது. இன்னும் அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.

பிறேசிலின் சக்தித் தேவையைப் பூர்த்திசெய்வதற்காக அமேசன் காட்டின் மத்தியிலே நீர் மின் உற்பத்தி நிலையம் ஒன்றை அமைக்க கடந்த மூன்று தசாப்தங்களாகத் திட்டமிடப்பட்டு வந்தது. பல்வேறுபட்ட எதிர்ப்புக்களுக்கு மத்தியிலும் இந்தத் திட்டத்துக்கு தற்போது அனுமதி வழங்கியிருக்கிறது பிறேசிலின் சுற்றாடல் ஏஜென்சி.

நீர்மின் உற்பத்தி நிலையத்துக்கான நீர் பெலோ மொன்டே என்ற அணையைக் கட்டுவதன் மூலம் பெறப்படவிருக்கிறது. இதனால் அமேசன் பழங்குடியினர் பாதிக்கப்படுவது மட்டுமன்றி அமேசன் காட்டின் சம நிலையும் குலைக்கப்படும் என பல்வேறு எதிப்புகள் கிளம்பியுள்ளன. ஆனால் பிறேசிலோ எதையும் கவனத்தில் கொண்டதாக தெரியவில்லை. இதே பிரேசிலின் நகர்ப் புறங்களில்தான் வளியின் தரம் மிகவும் மோசமாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உலகிலேயே மிகப்பெரிய மழைக்காட்டைக் கொண்டிருக்கும் நாடு தனக்குக் கிடைத்த இயற்கையின் கொடையைப் பற்றி அதீத அக்கறை கொள்ளாமல் இருப்பது வருந்துதற்குரிய விடயமே.

இத்தகைய மனித மனப்பாங்குகள்தான் காடழிப்பிற்கான அடிப்படைக் காரணங்களாயின என்பது கண்கூடு.

ஏலவே குறிப்பிட்டது போன்று தாவரங்களிலிருந்தே பெருமளவிலான ஒட்சிசன் கிடைக்கப்பெறுகிறது. தாவரங்கள் செறிந்து காணப்படுவது வனப்பகுதிகளிலேயேயாகும். ஆதலால் காடழிப்பானது நாம் சுவாசிக்கும் வழியின் தரத்தில் எத்தகைய எதிர்மறையான விளைவைத் தோற்றுவிக்கும் என நாம் உணரவேண்டும். பச்சை இல்ல விளைவுக்குக் காரணமாய் அமையும் பிரதான வாயு காபனீரொட்சைட்டு ஆகும். உண்மையில் பச்சை இல்ல விளைவு எனப்படுவது காபனீரொட்சைட்டு உற்பத்தியாளர்களுக்கும் (வாகனங்கள், மனிதன்) காபனீரொட்சைட்டு நுகரிகளுக்கும் (தாவரங்கள்)இடையிலான சம நிலை எனலாம். உலகளாவிய காபன் வட்டமும் இதனுள் அடங்கும். உலகளாவிய ரீதியிலே அயனவலயக் காடுகளிலே இருக்கும் தாவரங்களும் மண்ணும் மட்டும் வருடாந்தம் பல நூற்றுக்கணக்கான பில்லியன் தொன் காபனை உறிஞ்சுகின்றன. காடழிப்பு அந்த அளவைக் குறைக்கிறது. அதேவேளை சுவட்டு எரிபொருட்களை எரிப்பதாலும் ஏனைய செயற்பாடுகளாலும் பல பில்லியன் தொன் காபன் வளிமண்டலத்திற்கு வெளிவிடப்படுகிறது. பூகோளம் வெப்பமயமாதலிலும் சுத்தமான வளி கிடைப்பதிலும் காடழிப்பு எவ்வளவு பெரிய தாக்கத்தைச் செலுத்துகிறது என்பது கண்கூடு.

கால நிலைமாற்றத்துக்கு எதிராக மனிதன் தொழிற்படுகிறானோ இல்லையோ காடுகள் தொழிற்பட்டுக்கொண்டிருக்கின்றன. காபனைச் கேமிப்பதாகட்டும்; காபனீரொட்சைட்டை உறிஞ்சி தமது உயிர்த்திணிவினுள் சிறைப்படுத்துவதாகட்டும். காடுகள் செய்யும் பணி அளப்பரியது. வெறும் வார்த்தைகளால் விபரிக்க முடியாதது.

இன்று உலகில் வாழும் 60 மில்லியன் பழங்குடி மக்களின் புகலிடமாக இருப்பவையும் இந்தக் காடுகளே. அதேகாடுகள் தான் 1.6 பில்லியன் மக்களின் வாழ்வாதாரமாகவும் இருக்கின்றன.

காடுகள் அழிக்கப்படுவதானது உயிர்ப்பல்வகைமை இழக்கப்படுவதற்கான பிரதான காரணியாகும். சூழற்தொகுதிகள், அவற்றுடன் தொடர்புடையனவான விவசாயம், மருத்துவம், பொழுதுபோக்கு, போன்ற பல விடயங்கள் நிலைத்து நிற்பதற்கு உயிர்ப்பல்வகைமையே காரணமாகிறது. உலகிலே ஏறத்தாழ 5 தொடக்கம் 80 மில்லியன் உயிரினங்கள் (தாவரங்கள், விலங்குகள்)காணப்படுகின்றன. அந்த குடித்தொகையில் 7 சதவீதமானவற்றை அயனவலய மழைக்காடுகள் உள்ளடக்குகின்றன. காடுகள் இல்லாமல் பல உயிரினங்கள் வாழ முடியாது. காடுகள் அழிக்கப்பட அவை அழிந்தே போகும். விளைவாக உயிர்ப்பல்வகைமை அழிக்கப்பட சூழலின் சமநிலை குலைந்து மனித இனத்திற்கே வினையாக முடியும்.

காடழிப்பும் காடுகள் தரமிழத்தலும் தடுக்கப்பட்டால் தற்போது வளிமண்டலத்திலிருக்கும் 20 சதவீத பச்சை இல்ல வாயுக்கள் உறிஞ்சப்படலாம் என்கின்றன ஆய்வுகள். காடழிப்பும் காடுகள் தரமிழத்தலும் வெவ்வேறானவை. காடழிப்பு என்பது காடுகளில் மரங்கள் முற்றாக அழிக்கப்படுவதைக் குறிக்கும். வர்த்தக நோக்கிலும் பல்வேறு தேவைகளுக்காகவும் மரங்கள் வெட்டப்படுதலும் காட்டுத்தீயால் மரங்களளழிக்கப்படுவதும் கூட காடழிப்பு நடவடிக்கைகளாகவே கருதப்படுகின்றன. ஆனால் முறையான முகாமைத்துவத்தின் கீழ் வனப்பகுதிகள் பேணப்பட்டால் காடழிப்பு தடுக்கப்படும் சாத்தியக்கூறுகள் நிறையவே காணப்படுகின்றன. ஒவ்வொரு நாட்டிலும் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள் இதற்கு மிகச்சிறந்த உதாரணமாகும்.

காடுகளின் தரமானது அவை அமைதிருக்கும் சூழல் தொகுதிகள் நிலைத்திருக்கும் வீதத்தைப் பொறுத்தே மதிப்பிடப்படுகிறது. காடுகளின் மண்வளம், உயிர் வளம், தாவரப் படைகள் போன்றவற்றின் அடிப்படையில் அது மதிப்பிடப்படும். விறகுக்காக காடுகளைப் பயன்படுத்துவதும் பூச்சிகள், பீடைகளின் தாக்கமும் கூட காடுகள் தரமிழப்பதற்கு வழி வகுக்கும்.

2008 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒன்றுகூடிய ஐ. நா சபை அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளிலே காடழிப்பு, காடுகள் தரமிழத்தலைத் தவிர்க்கும் நோக்கில் REDD (Reducing Emissions from Deforestation and forest Degradation ) என்ற செயற்றிட்டத்தை ஆரம்பித்தது.

இத்திட்டத்தின் கீழ் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளிலே பல்வேறு செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப் பட்டு வருகின்றன. இத்திட்டத்திலே ஆபிரிக்க, ஆசிய-பசுபிக், இலத்தீன் அமெரிக்க பிராந்தியங்களைச் சேர்ந்த 29 நாடுகள் இணைந்துள்ளன. அதற்கு இலங்கையும் விதிவிலக்கல்ல.

சுற்றாடல் தொடர்பான பல ஒப்பந்தங்கள், இணக்கப்பாடுகளை நடைமுறைப் படுத்துவதில் இலங்கை பின் நின்றது உண்மை தான். ஆனால் இந்த உடன்பாடு செவ்வனே நடைமுறைப்படுத்தப்பட்டால் இலங்கைக்கு பல நன்மைகள் கிடைக்கும் என்கிறார் சுற்றாடல் சட்டத்தரணி ஜெகத் குண்வர்தன.

காடுகள் அழிக்கப்படுவதன் தாக்கம் கையை மீறிச்செல்வதை உணர்ந்த ஐக்கிய நாடுகளின் சுற்றாடல் திட்டம் 2011 ஆம் ஆண்டை காடுகளுக்கான ஆண்டாகப் பிரகடனப்படுத்தியுள்ளது. அதை ஆதரிக்கும் முகமாக இவ்வருடத்திற்குரிய உலக சுற்றாடல் தினமானது (இன்று) காடுகள்:உங்களுக்கான சேவையில் இயற்கை எனும் தொனிப்பொருளில் கொண்டாடப்படுகிறது. இவ்வருடம் அதைக் கொண்டாடும் நாடாக இந்தியா அறிவிக்கப்பட்டிருக்கிறது. துரிதமாக வளர்ச்சியடையும் பொருளாதாரத்தைக் கொண்டிருக்கும் நாடுகளில் ஒன்று இந்தியா. அதன் பொருளாதாரத்தை பசுமைப் பொருளாதாரமாக மாற்றுவதற்கான முதலடியே அத்தெரிவின் நோக்கமாகும்.

உலக சுற்றாடல் தினம் 1972 ஆம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்டது. அதையொட்டி உலகளாவிய ரீதியிலே ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு தொனிப்பொருளில் பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்கள் செயற்படுத்தப்படுகின்றன. சிறு துளி பெரு வெள்ளம் என்பதற்கமைய உலகின் மூலை முடுக்குகளிலெல்லாம் மேற்கொள்ளப்படும் சிறு முயற்சிகள் கூட பெரும் பயனைத் தர முடியும் என்பதே இந்த செயற்பாடுகளின் உள்ளார்ந்த நோக்கமாகும்.

வன வளத்தைப் பாதுகாப்பதன் மூலம் பசுமைப் பொருளாதாரத்தை நோக்கிய பாதையில் முழு உலகையும் திருப்புவதே இன்றைய தினத்துக்கான தொனிப்பொருளாகும். 7 பில்லியனைத் தாண்டிக்கொண்டிருக்கிறது உலக சனத்தொகை. மனிதர் ஒவ்வொருவரதும் வாழ்க்கைத்தரம் உயரவேண்டுமாயின் காடுகளின் ஆரோக்கியமும் பேணப்படவேண்டும் என்பது அடிப்படை. ஆதலால் காடுகளைப் பாதுகாக்கவேண்டியது எம் ஒவ்வொருவரதும் கடமையாகும்.

நாடுகளின் பொருளாதாரம், சனத்தொகை அதிகரிப்பு மற்றும் ஏனைய சமூகக் காரணங்களால் காடழிப்பிற்கான காரணங்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன எனலாம். ஆயினும் அவற்றை எல்லாம் இலகுவாக வெற்றிகொள்ளும் வழிகளும் இல்லாமல் இல்லை. அவற்றை நடைமுறைப் படுத்த வெவ்வேறுபட்ட மக்கள் தரப்பினதும் அமைப்புகளது ஒத்துழைப்பே அவசியமாகிறது. வனப்பகுதிகளைப் பாதுகாத்தல் என்பதே காலங்காலமாக நடைமுறையிலிருக்கும் பிரதான முறைமையாகும். சகல தரப்பினரும் இணைந்து சர்வதேச, பிராந்திய, தேசிய ரீதியிலே கொள்கைகளை உருவாக்கி கைத்தொழில்களில் தலையிட்டு காடுகளின் நிலையான எதிர்காலத்தை உறுதி செய்ய வேண்டும். இதன் மூலம், வனப்பகுதிகள் பாதுகாக்கப்படுவதுடன் ஒழுங்காக முகாமை செய்யப்படும்.

காடுகளை அழிப்பதன் மூலம் உற்பத்திசெய்யப்படும் பொருட்களின் பாவனையைக் குறைக்க வேண்டும். மீள்சுழற்சி செய்யக் கூடிய பொருட்களின் பாவனை ஊக்குவிக்கப்பட வேண்டும். இதனால் மரப்பொருட்களின் பாவனை மட்டுப்படுத்தப்படலாம் என நம்பப்படுகிறது. இதனால் அரப்பொருட்களின் வி நியோகமும் கேள்வியும் மட்டுப்படுத்தப்படும்.

நிலங்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்தத் தக்க வழியிலே வினைத்திறன் மிக்க விவசாய முறைமைகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அதே வேளை காடழிப்பினால் ஏற்படும் எதிர்மறையான விளைவுகள் பற்றி மக்கள் அறிவூட்டப்பட வேண்டும். அத்தகைய அறிவூட்டல் செயற்றிட்டங்களுக்கான் முதலீடு அதிகரிக்கப்படவேண்டும்.

அண்மையில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழக பட்டப்பின் கல்வி மாணவர்கள் யகிரல பகுதியில் கள ஆய்வொன்றை மேற்கொண்டிருந்தனர். அப்பகுதி சிங்கராஜ வனத்தின் எல்லையோரக் கிராமங்களை உள்ளடக்கியது. அவர்களது வாழ்வாதாரத்தில் சிங்கராஜ வனத்துக்கு பெரும்பங்குண்டு. மாணவர்கள் மேற்கொண்ட கள ஆய்வும் அவ்விடயத்துடன் தொடர்புடையதேஅத்தகைய கிராமங்களில் ஒரு கிராம மக்கள் தாம் எந்த ஒரு தேவைக்காகவும் மரங்களை வெட்டுவதில்லை என்ற ஒருமித்த கருத்தைத் தெரிவித்திருந்தனர். அதற்கான காரணத்தை வினவினர் பல்கலைக் கழக மாணவர்கள். மரங்களை வெட்டக்கூடாது என பாடசாலைகளில் தமது பிள்ளைகளுக்குப் போதிக்கப்பட்டு வருவதாகவும், அதனால் மரங்களை வெட்ட தம் பிள்ளைகள் அனுமதிப்பதில்லை என்பதுவுமே அந்த பாமர மக்கள் முன்வைத்த காரணங்களாகும். அறிவூட்டல் நடவடிக்கைகள் எத்துணை பயனுடையவை என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சிறந்த உதாரணமெனலாம்.

.முழுக் காடுகளையும் தனியொருவர் எப்படிப் பாதுகாக்கமுடியும் என்ற கேள்வி எம் ஒவ்வொருவர் மத்தியிலும் எழலாம். அதற்கு இலகுவான வழியொன்று இருக்கிறது. பெரிதாக ஒன்றும் செய்ய வேண்டிய தேவை இல்லை. எமது வாழ்க்கை முறைமையை மாற்றியமைத்தால் மட்டுமே போதுமானது. ஆனால் பலருக்கு அது தான் கடினமான காரியமாக இருக்கிறது.

இன்று மரத்தாலான பல பொருட்கள் பாவனையில் இருக்கின்றன. உலகளாவிய ரீதியிலே பொருளாதாரமும் வளர்ச்சியடைந்து செல்கிறது. அதே போக்கில் நடுத்தரவர்க்கமும் வளர்கிறது. நடுத்தர வர்க்கம் வளர்ச்சியடையும் போது மர உற்பத்திப்பொருட்களுக்கான கேள்வியும் அதிகரிக்கத்தான் செய்கிறது. மர உற்பத்திப் பொருட்களுக்குப் பதிலாக சூழலைப் பாதிக்காத மாற்றுத்தயாரிப்புகளை நாட வேண்டும். பலருக்கு அது இலகுவான ஒரு விடயமாகத் தெரியவில்லை. ஆனால், அது நடைமுறைச் சாத்தியமானது. அத்துடன் இன்னும் சில காலங்களில் தவிர்க்கமுடியாததும் ஆகிவிடும். மரத்துக்கு இருக்கும் தேவையை வெகுவாகக் குறைக்க வல்லதும் கூட. பாதுகாப்பான சூழல் ஒன்று உருவாக இந்த நடைமுறை நிச்சயம் வழிவகுக்கும்.

கேரளாவிலே, விளம்பரப் பதாகைகளைத் தொங்க விடுவதற்காக மரங்களில் ஆணி அறைவதை தடுக்கவேண்டும் என பாடசாலை மாணவர்கள் மேல் நீதிமன்றத்துக்கு கடிதம் எழுதியிருந்தனர். கடிதத்தை மனுவாக ஏற்று விசாரணைக்கு எடுத்துள்ளது மேல் நீதி மன்றம். நாம் நினைத்தால் முடியாதது எதுவுமே இல்லை என்பதற்கு இச்சம்பவம் ஒரு சிறந்த உதாரணமாகும்.


காடழிப்பைத் தடுத்தலும் எம்மொவ்வொருவர் கைகளிலே தான் இருக்கிறது. முயன்று தான் பார்ப்போமே?