Tuesday, January 26, 2010

வசூலில் சாதனை படைக்கும்~2012' தொடர்பான ஊகங்கள்இன்று உலகத்திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொ ண்டிருக்கும் திரைப்படத்தின் தமிழாக்கம் ‘2012 ருத்ரம்’ ஆகும். இத்திரைப்படம் வெளியான பின்னர் மக்கள் மனதில் எழும் பொதுவான கேள்வி 2012 இல் உலகம் அழியுமா? என்பதே!

இத்திரைப்படத்தின் கருப்பொருள் குறித்து யாரும் அதிகம் சிந்திப்பதில்லை. ஆனால் இக்கருப்பொருள் மிகவும் சுவாரசியமானது. தென்னமெரிக்காவின் ஆதி நாகரிகங்களுள் ஒன்றான மாயா நாகரிகத்தைச் சேர்ந்த மக்களின் நாட்காட்டியை ஆய்வு செய்து பார் த்த போதே 2012 ஆம் ஆண்டு டிசெ ம்பர் 21 ஆம் திகதி உலகம் அழியப் போவது எதிர்வு கூறப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி யுள்ளது.

மாயா மக்கள் இற்றைக்கு ஐயாயி ரம் ஆண்டுகளுக்கு முன்னரே சூரியத் தொகுதி பற்றியும் அதனது சுழற்சிகள் பற்றியும் நன்கு அறிந்திருந்தனர். மாயர்களைப் பொறுத்த வரையில் எண்களினடிப்படை யிலேயே யாவும் கணிக்கப்படுகின்றன. அத்துடன் சூரியனை அடிப்படையாகக் கொண்டே கணிப்புகள் மேற் கொள்ளப்பட்டுள்ளன.

நட்சத்திர மண்டலத்தின் ஒரு நாள் எனப்படுவது, பூமியைப் பொறுத்தவரையில் 25,625 வருடங்களாகும். மாயர்களின் நாட்காட்டி இதனை 5 காலகட்டங்களாகப் பிரிக்கிறது.

இப்போது நாம் இந்த ஐந்தாவது காலகட்டத்தின் இறுதிப் பகுதியினுள் காலடியெடுத்து வைத்திருக்கின்றோம். 2012, டிசெம்பர் 21 ஆம் திகதியின் பின்னர் புதியதோர் யுகத்தினுள் மனித சமூகம் காலடி பதிக்குமென மாயர்கள் எதிர்வு கூறுகின்றனர். சூரியனானது நட்சத்திர மண்டலத்தின் மையப்பகுதியால் புதுப்பிக்கப்படுவதாகவும், இச்செயற்பாடு 5125 வருடங்களுக்கொருமுறை நடைபெறுமெனவும் அவர்கள் கணித்துள்ளனர்.

அவர்களின் கணிப்பின்படி 2012 இலும் இத்தகையதொரு செயற்பாடு நடைபெறுமெனவும், அதன் காரணமாக புவியின் காந்தப்புலங்களிலும் குறிப் பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படுமெனவும் மாயர்களின் நாட்காட்டியை மேற்கோள் காட்டிப் பல ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

அந்நாட்காட்டியின் எதிர்வு கூறலி னடிப்படையில், இன்னும் புரியாத புதிராகக் காணப்படும் கரும் ஈர்ப்புமையம் (black hole) மற்றும் சூரியன், பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் சந்திக்கவுள்ளன.

கரும் ஈர்ப்புமையம் எனப்படுவது உயர் அடர்த்தியுடைய திண்மச் செறிவு ஆகும். அது உயர் ஈர்ப்பு சக்தியையுடைய கரிய பொருளாகக் காணப்படும். அண்டவெளியிலே காணப்படும் கோள்களும் நட்சத்திரங்களும் தமது சக்தியை இழந்தபின்னர் அத்திண்மச்செறிவினால் ஈர்க்கப்படும்.

விண்ணிலே செலுத்தப்படும் விண்வெளிக்கப்பல் கூடத் தனது பாதை மாறி, கருங்குழியொன்றினால் ஈர்க்கப்பட்டால் அது மீளத்திரும்பாது. இந்த கரும் ஈர்ப்புமையங்களின் ஈர்ப்புசக்தி காலத்துடன் அதிகரித்தபடியே இருக்கும்.

உயர் ஈர்ப்புசக்தியுடைய இத்தகைய கரும் ஈர்ப்புமையங்களுள் ஒன்றும் சூரியன், மற்றும் புவி ஆகியன ஒரே நேர்கோட்டில் வரும் போது கரும் ஈர்ப்புமையத்தின் காந்த மற்றும் ஈர்ப்பு விசைகளால் புவியும் சூரியனும் வெகுவாகப் பாதிக்கப்படலாமென விஞ்ஞானிகள் சம்பந்தப்படாத ஆய்வுகள் எதிர்வு கூறுகின்றன.

சூரியனில் ஏற்படும் மாற்றங்கள் சூரிய நிலநடுக்கத்தைத் தோற்றுவிக்கும் வாய்ப்புகளும் உண்டெனக் கூறப்படுகிறது. அத்துடன் காந்தவிசைகளின் தாக்கத்தால் பூமியின் துருவங்கள் இடம் மாறலா மெனவும், அதனால் பாரியளவிலான நிலநடுக்கங்கள், ஆழிப்பேரலைகள், எரிமலை வெடிப்புகள் போன்ற அனர்த்தங்கள் இடம்பெறலாமெனவும் கூறப்படுகிறது.

துருவங்களின் இடப்பெயர்ச்சி யானது விஞ்ஞானிகளால் ஏற்று க்கொள்ளப்பட்ட விடயமாகவிரு ந்தாலும், 2012 இல் நிகழுமா வென்பது கேள்விக் குறியாகவே யிருக்கின்றது.

சூரியனின் காந்தப்புலத்தில் ஏற்படும் மாற்றம் காரணமாக ஒவ்வொரு 5125 வருடங்களுக்கொருமுறையும் புவியின் சுழற்சியில் மாற்றம் ஏற்படுமென மாயர்கள் நம்பினர். இந்தக் கொள்கை யினடிப்படையில் அவர்கள் தமது நாட்காட்டியைத் தயாரித்தனர். அந்நாட்காட்டி, கி.மு. 3113 தொடக்கம் கி.பி. 2012 வரையான 5125 வருடங்களைக் கொண்டது.

1992 - 2000 வரையான காலப்பகுதியில் மனிதன் பல முன்னேற்றங்களைக் காண்பானெனவும், பிரபஞ்சம் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்வானெனவும் பூமி சரியாகப் பாதுகாக்கப்படாமல் விடப்பட்டு பல இயற்கை அனர்த்தங்கள் உருவாகலாமெனவும் எதிர்வு கூறினர்.

இவர்கள் சூரிய கிரகணங்களை மிகவும் துல்லியமாக எதிர்வு கூறியிருக்கின்றார்கள். கடந்த காலங்களில் இடம்பெற்ற, தற்போது இடம்பெறும் சடுதியான அனர்த்தங்களும், ஏனைய சூழல் பிரச்சினைகளும் அவர்களது எதிர்வுகூறலை உண்மையாக்கி விடுமோ என்றும் எண்ணத்தோன்றுகிறது.

புவியிலிருந்து 50 மில்லியன் மைல் களுக்குமப்பால், கோள் -கீ எனப் பெயரிடப்பட்ட புதிய கோளொன்றை 1983 ஆம் ஆண்டு நாசா அனுப்பிய விசேட வானியல் செய்மதி புகைப்படமெடுத்தது. 2008 ஆம் ஆண்டு கோள் - கீ இனை ஜப்பான் புகைப்படமெடுத்ததன் மூலம் நாசாவின் புகைப்படத்தை உறுதி செய்தது.

2011 அளவில் பூமியிலுள்ளோருக்கு இரண்டு சூரியன்கள் இருப்பது போல கோள் - கீ தென்படுமெனவும் எதிர்வு கூறப்படுகிறது. இந்நிகழ்வு கூடப் புவியில் மாற்றத்தை ஏற்படுத்தலாமெனச் சில ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மத்திய காலத்தில் வாழ்ந்த எதிர்வுகூறல் வல்லுநரான நொஸ்ராடமஸ் முதல் நவீன விஞ்ஞான ஆய்வாளர்கள் வரை இனி வரும் காலங்களில் பூமியில் எதிர்பாராத மாற்றங்கள் உருவாகலாமென எதிர்வு கூறுகின்றனர்.

பூமியில் நடைபெற்ற பல நிகழ்வுகளை நொஸ்ட்ராடமஸ் எதிர்வு கூறியிருந்தார். அவற்றில் பல மிகவும் ஜிxலியமான வையாகக் காணப்பட்டன.

09/11 தாக்குதல் எனப்படும் அமெரிக்காவின் இரட்டைக்கோபுரங்கள் மீதான தாக்குதலை குறிப்புகளால் எதிர்வு கூறியிருந்தார். அத்தாக்குதல் நடந்த பின்னர், இணையத்தில் மிகவும் அதிகளவில் தேடப்பட்ட விடயமாக இவரது எதிர்வு கூறல்களே காணப் பட்டன. ஹிட்லர், நெப்போலியன் போன்றோரின் ஆதிக்கம், வீழ்ச்சி, மற்றும் ஏனைய பல வரலாற்று நிகழ் வுகளையும் எதிர்வு கூறியிருந்தார். இவரும் கி.பி. 2012 அளவில் உலகம் பெரிய மாற்றங்களை எதிர்நோக்குமென எதிர்வு கூறகின்றார்.

இ-சிங் எனப்படும் பண்டைய சீன சோதிட முறைமை எதிர் காலத்தை எதிர்வுகூறும் வழிகாட்டியாகக் காணப்படுகிறது.

நாணயங்க ளையோ அல்லது சிறிய தண்டுக ளையோ சுண்டு வதன் மூலம் 6 கோடுகள் வரையப் படும். அவை தடித்த கோடுகளா கவோ அல்லது முறிந்த கோடுகளா கவோ காணப் படும். அவை இரண்டை அடியாகக் கொண்ட எண்முறையைச் சார்ந்த அளவையியலை அடிப்படையாகக் கொண்டவை. ஒவ்வொரு கோடுகளுக்கும் சாத்தியமான நான்கு பெறுமானங்கள் உள்ளன.

அந்த எதிர்வுகூறல் முறைமையானது கணித ரீதியிலான கோலமொன்றை வெளிக்காட்டுவதாக அறியப்பட்டது. இதனை காலத்துடன் ஒப்பிட்டு வரைவு படுத்துகையில் உயர்வுகளையும் தாழ்வுகளையுமுடைய வரைபொன்று பெறப்பட்டது.

வரைபின் உயர்வுகளுக்குரிய காலங்கள், வரலாற்றிலே நாகரிங்களும் அரசுகளும் உச்சத்திலிருந்த காலங்களாகவும் வரைபின் தாழ்வுகளுக்குரிய காலங்கள், வரலாற்றில் அனர்த்தங்கள் நிகழ்ந்த நாகரிகங்கள் மற்றும் அரசுகள் வீழ்ச்சியடைந்த காலங்களாகக் காணப்பட்டன. அவ்வரைபில் கி.பி. 2012 ஆம் ஆண்டும் அத்தகையதோர் தாழ்வை வரைபு காட்டுவதுடன், அவ்வாண்டோடு அந்தக் காலக்கோடும் முடிவடைகிறது.

கலியுகம் ஆரம்பித்து 5000 வருடங்களின் பின்னர் சுவர்ண யுகமொன்று தோன்றுமெனவும் அது 10,000 வருடங்களுக்கு நிலைக்குமெனவும் கிருஷ்ண பகவான் கங்காதேவிக்குக் கூறியதாக பிரம்மவைவர்த்த புராணத்தில் குறிப்பிடப்படுவதாக இந்துக்கள் கூறுகின்றனர். மாயர்களைப் பொறுத்தவரையில் 5 வது காலகட்டம் கி.மு. 3114 இல் ஆரம்பித்தது. இந்துக்களைப் பொறுத்தவரையில் கலியுகம் கி.மு. 3102 இல் ஆரம்பித்தது.

மாயர்களும் இந்துக்களும் தமக்குள் எந்தவித நேரடித் தொடர்புகளுமில்லாமலே 2012 ஆம் ஆண்டு ஒரு புதிய உலகு உருவாகுமென்பதை எதிர்வு கூறியுள்ளனர். கலியுகம் இப்படித்தான் இருக்குமென இந்து மதம் கூறுகிறது. கலியுகத்திலே மக்கள் கோபத்தையும் பொறாமையையும் ஒருவருக்கொருவர் வெளிப்படையாகவே காட்டத் தலைப்படுவர்.

போலி விஞ்ஞானங்களை நம்புவர். சொன்ன சொல்லைக் காப்பாற்றுமியல்பு அற்றுவிடும். பல வழிகளிலும் துஷ்பிரயோகங்கள் இடம்பெறும். உண்மை, தன் மதிப்பை இழக்கும் துரோகத்தனங்கள் மலிந்து காணப்படும். தர்மம் உதாசீனப்படுத்தப்படும். மது மற்றும் போதை மருந்துகள் மனிதனில் ஆதிக்கம் செலுத்தும், மனித மனம் கட்டுப்படுத்தப்பட முடியாததாகும். இவையாவுமே கலியுகத்தின் வெளிப்பாடுகளாகக் குறிப்பிடப்படுகின்றன.

2012 ஆம் ஆண்டளவில் மலரப் போகும் சுவர்ணயுகமானது, மனிதம் நிறைந்த, நீதிமிக்க, நியாயமான உலகைத் தோற்றுவிக்குமென எதிர்வு கூறப்படுகிறது. இக்காலத்தில் உலகம் புதுவித மாற்றத்துக்குட்படுமெனவும் பணம் தனது மதிப்பை இழக்குமெனவும் இனவேறுபாடுகள் அழிந்து மனிதம் ஒளிர்வு பெறுமெனவும் தெரிவிக்கின்றனர்.

இவர்கள் யாவருமே மாற்றம் நடைபெறும் காலத்தை வரையறுத்துக் கூறாவிடினும், ஊகங்களின் பின்னணியில் ஆழ்ந்த கருத்தொன்றை விட்டுச் சென்றிருக்கின்றனர்.

அவர்களது கணிப்பின் படி, மனித சமுதாயம் தொழில்நுட்பம், பணம் யாவற்றையும் மீறிய ஞான மொன்றை அடையுமென எதிர்பார்க்கலாம்.

நாசா விஞ்ஞானிகளுட்பட பல விஞ்ஞானிகள் 2012 இல் உலகம் அழிந்து போவதற்கான சாத்தியக் கூறுகளெதுவுமில்லையெனத் தெரிவிக்கின்றனர். இத்தனை வசதி வாய்ப்புகளையும் ஆராய்ச்சிக்கான வழிவகைகளையும் ஏற்படுத்தித்தந்த நவீன விஞ்ஞானத்துக்கு என்றும் நன்றி கூறக் கடமைப்பட் டுள்ளோம்.


2012 நவம்பர் 13 ஆம் திகதி நடக்கவிருக்கும் சூரிய கிரகணத்தை எம்மால் மிகவும் துல்லியமாகக் கணக்கிட முடியும். ஆனால் உலகம் முடிவுக்கு வரு கிறது. எனும் விடயம் தொடர்பாக விஞ் ஞானத்தால் உதவி புரிய முடி யாது.

யாவற்றுக்கும் மேலாக ‘உலகம் அழியப்போகிறது’ அல்லது ‘உலகத்தின் முடிவு’ எனும் பதங்களின் உண்மை விளக்கத்தை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். அவை, ஒரே தடவையில் முழு உலகுமே அழிக்கப்பட்டு விடும் எனும் பொருளைத் தரமாட்டா. எம்முன்னோர்களும் அத்தகையதொரு கருத்தைச் சொல்ல வரவில்லை. 2012 ஆம் ஆண்டின் இறுதிக் கட்டம் தொடர்பாக அவர்களால் எதிர்வு கூறப்பட்ட விடயங்களை அவர்கள் எமக்கு விடுக்கும் எச்சரிக்கையாகவும் கருத முடியும்.

ஒன்றுடனொன்று தொடர்புபடாத பல சமூகங்கள் ஒரே செய்தியைப் பல்வேறு வகையில் குறிப்புணர்த்தியுள்ளனவென்பது மறுக்கப்பட முடியாத உண்மையாகும். இந்த விடயம் தொடர்பாக வீணே பயந்து, காலத்தை அநியாயமாகக் கழிப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

பேரழிவொன்று நிகழ்ந்தால், அதனைச் செவ்வனே எதிர்கொள்ளக்கூடிய வகையிலான அனர்த்த முகாமைத்துவ, மனிதாபிமான, ஒருங்கிணைப்புப் பணிகளை முன்னெடுக்கக் கூடிய வகையில் அரசுகள் தயாராக வேண்டுமென விஞ்ஞானிகள் அறிவுறுத்துகின்றனர்.

பூமிக்கும் பூமிக்குச் சமீபமாகவுள்ள பொருட்களுக்குமிடையில் மோதல் நடக்கும் சாத்தியக்கூறுகள் தொடர்பாக ஆராய 2000 ஆம் ஆண்டளவில் பிரித்தானிய அரசு ஒரு ஆணைக்குழுவை அமைத்தது. அவ்வாணைக்குழுவின் கருத்துப்படி, பூமியுடன் பிறபொருளொன்று மோதுவதற்கான வாய்ப்பானது, ஒரு அதிர்ஷ்டலாபச் சீட்டை வெல்லும் வாய்ப்பை விட 750 மடங்கு அதிகமெனக் கணக்கிடப்படுகிறது.

அத்தகைய பொருட்கள் புவியில் மோதினால், பேரழிவுகள் தவிர்க்க முடியாததாகி விடும். 65 மில்லியன் வருடங்களுக்கு முன் அத்தகையதொரு பேரழிவு நிகழ்ந்ததனால்தான் டைனசோர் இனம் அழிந்ததாகக் கருதப்படுகிறது.

கனரி தீவுகளிலுள்ள எரிமலை வெடித்தால் சுனாமி போன்ற பாரிய அனர்த்தங்கள் ஏற்படலாமென எரிமலை ஆய்வு வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். சில தீவுகளிலுள்ள எரிமலைகள் வெடித்தால் பல மில்லியன் தொன்கள் நிறைவுடைய பாறாங்கற்கள் சமுத்திரத்தினுள் வீசப்படுவதால், சமுத்திர நீர்மட்டம் பல நூற்றுக்கணக்கான அடிகள் உயருமென எதிர்பார்க்கப்படுகிறது.

இங்ஙனம் உயரும் அலை கரையை அடைகையில், ஏறத்தாழ 100 அடி உயரம் வரை எழுவதால், கரையினுள்ளே 12 மைல் தூரம் செல்லுமெனவும் கூறப்படுகிறது. கடந்த 5 வருடங்களின் முன்னர், நாம் எதிர்கொண்ட சுனாமி அனர்த்தம் கூட, பூமிக்கு அடியிலுள்ள தட்டுக்களில் ஏற்பட்ட நடுக்கத்தால் உருவானதேயாகும்.

சில எரிமலைகள் வெடிப்பதால் சாம்பல், தூசுக்கள் மற்றும் கந்தகவீரொட்சைட் வாயு ஆகியன வளிமண்டலத்துக்கு வெளிவிடப்படும். இது நீண்டகாலம் நிலைக்கக்கூடிய குளிர்ந்த அலையைத் தோற்றுவிக்கக்கூடியது. இச்செயற்பாடு /யிரினங்களையும் தாவரங்களையும் அழியும் நிலைக்கு இட்டுச் செல்லுமென எதிர்வு கூறப்படுகிறது.

இவை தவிர, காலநிலை மாற்றம் தொடர்பான விடயங்களும் சூழல் மாசடைதல் பிரச்சினைகளும் கூடப் பாரியளவிலான எதிர்பார்க்கப்படாத விளைவுகளை ஏற்படுத்துமென எதிர்பார்க்கப்படுகிறது.


2012 தொடர்பான ஊகங்கள் வர்த்தக ரீதியாகப் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. இவ்விடயம் தொடர்பாகத் திரையிடப்பட்ட திரைப்படங்களும், வெளியிடப்பட்ட புத்தகங்களும் வசூலில் சாதனை படைக்கின்றன. அவற்றில் பெரும்பாலானவை இவ்வூகங்களை அடிப்படையாகக் கொண்ட புனைகதைகளாகக் காணப்படுகின்றன. அவை மக்கள் மத்தியில் புதிய ஊகங்களை உருவாக்கவும் தவறுவதில்லை.

இவையாவற்றுக்கும் மேலாக நாம் ஒவ்வொருவரும் தனிமனிதனாக எடுக்கும் முடிவுகளே ஒட்டுமொத்தமாக மீண்டும் எம்மைத் தாக்குகின்றனவென்பது மறுக்கமுடியாத உண்மையாகும். பழிக்குப் பழியெனப் பழிவாங்கும் உணர்வு, வெறுப்புணர்வு, இயற்கையை அழித்தல் மற்றும் போட்டி மனப்பாங்கு போன்ற பல எண்ணங்களாலும் செயற்பாடுகளாலும் நாமே எமது அழிவுக்கான நாளைக் குறித்துக்கொண்டவர்களாகிறோம்.

இன்று டைனசோர்களைப் பற்றி நாம் கதைப்பதைப் போல ஆதிக்கம் செய்து அழிந்துபோன மனித இனத்தைப் பற்றி நாளை இன்னொரு இனம் கதைக்கலாம்.

ஒருவரையொருவர் மனிதத்துடன் மதித்து, எமை வாழவைக்கும் பூமிக்கு எந்தவொரு தீங்கையுமிழைக்காது நன்றியுடன் வாழ்வோமாயின் சுபீட்சமான புதியதோர் உலகினுள் எம்மாலும் காலடி பதிக்க முடியும். பூமி, சூரியன் உட்பட, முழுப்பிரபஞ்சமுமே எமது முடிவுக்காகக் காத்திருக்கின்றது. இதுவே இன்றும் புதிராகக் காணப்படும் 2012 ஆம் ஆண்டு பற்றிய எதிர்வு கூறல்கள் சொல்லவரும் உண்மையாகும்.

உணர்வுகள் ஒன்றாகி 2012 இல் மனிதம் நிறைந்த புதியதோர் உலகில் காலடிவைக்க உறுதிகொள்வோமாக!

Tuesday, January 12, 2010

மனிதம் இருந்தால் மட்டுமே மனதை ஒருமைப்படுத்த முடியும்

சுவாமி விவேகானந்தரின் 147 ஆவது ஜனன தினம் இன்று

நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னைப் பலவீனன் என நினைத்தால் பலவீனனாகவே ஆகிவிடுவாய். நீ உன்னை வலி மையுடையவன் என நினைத்தால் வலிமை படைத்தவனாகவே ஆகிவிடுவாய்’ என ஒரு வீரத்துறவி, அறியாமை இருளில் மூழ்கிக் கிடந்த பாரதத்தைத் தட்டியெழுப்பினார்.
மேலைத்தேய நாடுகளின் ஆதிக்கம் பல வழிகளிலும் மேலோங்கியிருந்த ஒரு காலப் பகுதியில், அமெரிக்காவின் சிக்காக்கோ நகரில், பல்லாயிரக் கணக்கான பார்வையாளர்களின் மத்தியில் ‘அமெரிக்க நாட்டுச் சகோதர சகோதரிகளே!’ என விளித்து, அவர்களனைவரையும் தம்பக்கமிழுத்து, இந்து சமயக் கொள்கைகளும் தத்துவங்களும் முழு உலகுக்குமே பரவுவதற்கு அதே துறவியே வழிவகுத்தார்.
வங்கதேசம் பெற்றெடுத்த முத்துக்களுள் ஒன்றாகத் திகழும் சுவாமி விவேகானந்தரே அந்த வீரத்துறவியாவார்.
தன்னுடைய போதனை, சிந் தனை, செயல் யாவற்றையுமே இந்து சமயமென்ற குறுகிய வட் டத்துக்குள் அடக்காமல் இந்து, கிறிஸ்தவம், இஸ்லாம், பெளத் தம் என்று எம்மதத்தைத் தழுவி யோரும் ஏற்றுப் பின்பற்றக்கூடிய வகையில், மனிதப் பிறவியெடுத்த எவருக்கும் பொருந்தக் கூடியதாக அமைந்திருந்தார்.
அவரது சொல்லும் செயலும் மனித குலத்தின் மேம்பாட் டையே குறிக்கோளாகக் கொண் டிருந்தன. தான், தனது இனம், தனது மொழி, தனது நாடு என்ற குறுகிய மனப்பாங்கை விடுத்து உலகம் முழுவதிலுமுள்ள மக்கள் அறியாமை இருளிலிருந்து மீண்டு உய்ய வேண்டுமென்ற நோக் கோடு தொழிற்பட்டார்.
கற்றோரால் மட்டுமே அறியக் கூடியதாகவும் பயன்பெறக் கூடிய தாகவுமிருந்த இந்துசமயக் கொள்கைகளையும் தத்துவங்க ளையும் பாமரரும் உணர்ந்து விளங்கிக் கொள்ளக்கூடிய வகையில் எளிமைப்படுத்தி விளக்கிய பெருமையும் விவேகானந்தரையே சாரும்.
கல்கத்தா நகரில் மிகவும் பிர பலமான சட்டத்தரணியாகவிருந்த விசுவநாத தத்தருக்கும் அவரது மனைவியான புவனேஸ்வரி தேவிக்கும் மகனாக 1863ஆம் ஆண்டு ஜனவரி 12 ஆம் திகதி குழந்தையொன்று அவதரித்தது. அக்குழந்தைக்கு ‘நரேந்திரன்’ எனப் பெயரிட்டு வளர்த்தனர்.
கங்கை ஆறு பெருக்கெடுத் தோடும் புனித நகரான கல்கத்தா விலே, காளி அன்னையை வழிப டும் ஒரு குடும்பத்திலே அவதரி த்த நரேந்திரன் மிகவும் துடிதுடிப் பான சிறுவனாக வளர்ந்தான்.
சிறுவனுக்கேயுரிய குறும்புத் தனங்கள் அவனிடம் சற்று அதிக மாகவே காணப்பட்ட போதும் இறைநாமத்தை உச்சாடனம் செய்து தியானத்தில் ஈடுபடுவதில் இயற்கையாகவே அவனுக்கு அதிக ஆர்வம் காணப்பட்டது. அனைவரும் அவனை ‘நரேன்’ எனச் செல்லமாக அழைப்பர்.
நரேன் கல்வி கற்கச் செல்லவில் லையெனினும் கல்வி அவனைத் தேடி வந்து அவனைச் சரணாகதி யடைந்ததென்றே கூற முடியும். புத்தகத்தை ஒருமுறை புரட்டிப் பார்த்தாலே அதிலுள்ள விடயங்களை மனதில் பதிக்கும் ஆற்றல் அவனுக்கு இருந்தது.
ஆரம்பகாலக் கல்வியை வீட்டி லேயே கற்று பின்னர் கல்கத்தா வில் பிரபலமான கல்லூரியொன் றில் கலைமாணிப் பட்டம் பெற் றான். நரேனிடம் இயற்கையா கவே மனித நேயம் குடிகொண்டி ருந்ததை அவனது வாழ்வில் நட ந்த சம்பவங்கள் சித்தரிக்கின்றன.
இளம் வயதிலேயே ஆன்மீகத்தில் அதிக நாட்டமிருந்தமையால், கடவுளை நேரில் காண வேண்டுமென்ற பேரார்வம் அவனிடம் இருந்தது.
பல ஞானிகளையும் மேதைக ளையும் அறிஞர்களையும் வினவி னான். அவனது கேள்விக்கு எவ ருமே விடையளிக்கவில்லை. கட வுளைக் காண முடியாத மதம் தனக்குத் தேவையில்லையென நரேன் எண்ணியவேளை, இராம கிருஷ்ண பரமஹம்சரைச் சந்தித் தான். ‘கடவுளைக் காண முடி யுமா?’ என்ற அவனது கேள்வி க்கும் விடை கிடைத்தது. ஐயம் தெளிந்தான்.
மீண்டும் மீண்டும் காளி அன்னையின் அருட் புனலி னால் ஆட்கொள்ளப்பட்டான். நரேந்திரனாகப் பரமஹம்சரிடம் வந்தவன் விவேகானந்தராகப் பரி ணமித்தான். ராமகிருஷ்ண பரமஹம்சரால் நேரடியாகப் பயிற்றுவிக்கப்பட்ட இளைஞர்க ளுள் நரேனில் ஞான ஒளி அதிக மாகவே ஒளிர்ந்தது. ராமகிருஷ் ணர் ஒரு தடவை, ‘நரேன்! என்னிடம் உள்ளதையெல்லாம் உன்னிடம் கொடுத்துவிட்டு ஏழையாகிவிட்டேன்’ என்று உரைத்திருக்கின்றார்.
1886ம் ஆண்டு ஸ்ரீராமகிருஷ் ணர், அன்னை காளியுடன் இரண் டறக் கலந்த பின்னர் விவேகானந்தரின் பொறுப்புக்கள் அதிகரித்தன.
ஒரு பரிவிராஜக சந்நியாசியாக இமயம் முதல் குமரிவரை இந் தியா முழுவதும் பயணித்தார். பல யோகிகளையும் சாதுக்களை யும் சந்தித்தார். அவர்களது அரு ளையும் புதுப்புது அனுபவங்களை யும் பெற்றார். ஆன்மீகத்தால் மேன் மேலும் மெருகூட்டப்பட்டார்.
1893இல் அமெரிக்காவின் சிக் காகோ நகரில் நடைபெற்ற மா நாட்டில் உரையாற்றி முழு உல கையுமே தன் பக்கம் திருப்பினார்.
அவரது கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட பலரும் சீடர்களாக மாறி, அவர் காட்டிய பாதையில் நடை பயின்றனர். சுவாமிஜியின் ஆன்மீகப் பணியும் ஆரம்பித்தது. துறவிகள் என்றால் தவம் செய்பவர்களென்ற எண்ணத்தை மாற்றியமைத்து மடங்களைத் தாபித்து படித்த இளைஞர்களை மடத்துறவிகளாக்கி மக்களிடையே கலக்கச் செய்தார்.
அதன் மூலம் அவர்களது அறிவு, அன்பு, ஆன்மிக அனுபவம் ஆகியன யாவும் சாதாரண மக்களை எளிதாகச் சென்றடைந்தன. சுவாமிஜியின் மேலைத் தேயச்சீடர்களால் அவரது பணிகளை முழு உலகுமே அறியத்தலைப்பட்டது.
நாடொன்றின் எதிர்காலம் இளைஞர்களின் கைகளிலே தங்கியிருப்பதை உணர்ந்து இளைஞர்களுக்கு அறைகூவல் விடுத்ததோடல்லாமல் அவர்களுக்கு முன்னோடியாகவும் திகழ்ந்தார்.
இளைஞர்களே நாட்டின் ஜீவ நாடியெனவும் உற்சாகமும் துடிப்பும் கொண்ட இருநூறு ஆண்களையும் பெண்களையும் தன்னிடம் ஒப்படைத்தால், நாட்டை வானோர்கள் வதியும் தேசமாக, இன்பப் பூஞ்சோலையாக மாற்றமுடியுமென்றார். 1902, ஜுலை மாதம் தனது 39ஆவது வயதில் மகா சமாதியடைந்தார்.
இன்றைய இளைஞர்கள் மத்தியில் ஆன்மிகம் எனப்படுவது வேடிக்கைக்கும் நகைச்சுவைக்குமுரிய விடயமாகக் காணப்படுகிறது. ஆன்மீகத்தால் ஈர்க்கப்படும் இளைஞர்களின் எண்ணிக்கை மிகக் குறைவானது.
ஆன்மிகம் தொடர்பான புரிதலின்மையே இந்நிலைக்கான அடிப்படைக் காரணியாகும். ஆன்மிகமானது எந்தவொரு எல்லைக்குள்ளும் உள்ளடக்கப்படாதது. மதங்கள் யாவற்றையும் கடந்து பரம்பொருளை அடைவதற்கான மார்க்கத்தை ஏற்படுத்தும் நிலையே ஆன்மிகம் ஆகும்.
அதற்கு ஆதியோ அந்தமோ அல்லது அதை அடக்கி ஆட்சி செய்ய மனிதரோ இல்லை. ஆன்மிகம் தொடர்பான சரியான வழிகாட்டல்களும் கருத்துக்களும் கிடைக்காததால் தான் இளைஞர்கள் ஆன்மிகத்தை நாடுவதில்லையோ என்றும் எண்ணத்தோன்றுகிறது.
தானங்களுள் உயர்ந்தது ஆத்மதானம். அதை அடுத்தது எழுத்தறிவிக்கும் வித்தியாதானம். அதை அடுத்தது உயிரைக் காப்பாற்றும் ஜீவதானம். இறுதியானதே அன்னதானம் என்கிறார் விவேகானந்தர்.

சமயம் என்பது ஒரு சமுதாய ஏற்பாடு மட்டுமே. உண்மை ஒன்றாக இருக்கின்ற போதிலும் மக்கள் தத்தமது மனப்பக்குவ நிலைகளுக்கேற்ப அதனைப் பலவாறாகப் பார்க்கின்றனர். இவ்வுண்மை எம்மில் பலருக்கு விளங்குவதில்லை.
காலையில் உதிக்கும் சூரியனின் கதிர்கள் எங்கும் வியாபித்திருப்பது போல ஆன்மிகமும் எங்கும், எல்லா உயிர்களிடத்திலும் வியாபித்துக் காணப்படுகின்றது. ஆனால் எல்லோரும் அதனை வெளிப்படுத்துவதில்லை. ஆன்மிகத்தில் ஈடுபடுதல் என்பது கோயிலுக்குச் செல்வதோ அல்லது குறிப்பிட்ட குரு ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவரிடம் பயில்வதோ அல்லது புத்தகங்கள் வாசிப்பதோ அல்ல.
உண்மையில் ஆன்மிகம் மனம் சார்ந்தது. எந்த மனிதன் மனிதத் தன்மையை அதிகமாகக் கொண்டிருக்கின்றானோ அவனே உண்மையான ஆன்மிகவாதியாகக் கருதப்படுகின்றான். அதையே விவேகானந்தரும் சமய சமரசத்தின் அடிநாதம் மனித நேயம் என்று கூறுகிறார்.
இன்று மத பேதங்களாலும் சுயநலத்தாலும் மனித நேயம் சிதைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. மனிதம் இருந்தால் மட்டுமே மனதை ஒரு நிலைப்படுத்த முடியும். குடும்பத்திலுள்ளோரை ஒன்று சேர்ப்பதற்காகவே வீடுகளில் சுவாமியறை இருப்பதாகவும் அதேபோல ஊர் மக்களை ஒன்றுமையுடன் வாழ வைக்கவே கோயில்கள் இருப்பதாகவும் மகாகவி பாரதியார் கூறினார்.
‘ஒற்றுமையாக இன்பதுன்பங்களைப் பகிர்ந்து வாழுமிடமே கோவில்’ என்ற பாரதியாரின் கூற்று, மனிதத்தைக் கடைப்பிடித்து மக்களை ஒன்றிணைக்குமிடமே கோவிலென்ற உண்மையை எடுத்துரைக்கின்றது.
சுவாமி விவேகானந்தர் ‘என் அமெரிக்கச் சகோதர சகோதரிகளே!’ என்று ஆரம்பித்து மனிதத்தின் வெளிப்பாடாகத் தன் சொற்பொழிவை ஆற்றினார். அந்த இயல்பினாலேயே மிகவும் இளைய வயதில்கூட அவரால் செயற்கரிய செயல்களைச் செய்ய முடிந்தது.
ஆன்மிகத்தின் ஆணிவேர் மனிதமும் அன்பும் மட்டுமே என்ற விவேகானந்தரின் கொள்கை தான் இன்று இராமகிருஷ்ண மடங்களும், விவேகானந்த கேந்திரங்களும், சாரதா சேவாச்சிரமங்களும் உலகெங்கும் வியாபித்து மக்களுக்கு சேவை புரியக் காரணமாகியது.
39 வயதிற்குள், ஒரு இளைஞனால், தன்னம்பிக்கையையும் தன் ஆன்ம பலத்தையும் இறை நம்பிக்கையையும் மட்டுமே துணையாகக் கொண்டு, மூடநம்பிக்கைகளாலும் சாதி வேறுபாடுகளாலும் கட்டுண்டு உறங்கிக் கிடந்த பாரதத்தைத் தட்டியெழுப்பி இளைஞர்களை ஒன்றிணைக்க முடிந்ததென்பது, இளைஞர்களின் சக்தியை எடுத்தியம்புகிறது.
அந்த இளைஞன் சாதித்ததில் 10 சத வீதத்தையேனும் எம் ஒவ்வொருவராலும் சாதிக்க முடிந்தால் அதைவிடப் பெருவெற்றி வேறொன்றுமில்லை. இளைஞர்களாகிய நாமே இந்த நாட்டின் முதுகெலும்பு. எம்மால் முடியாதது எதுவுமில்ல.
ஆனால் எம்மில் பலர், சோர்ந்து போய், செயலற்று, அறியாமை நிலையாகிய தாமத குணத்தில் ஆழ்ந்திருக்கிறோம். இவ்வாறு விரயமாகிக் கொண்டிருக்கின்ற வாழ்க்கை அர்த்தமற்றதாக, சுவையும் உயிர்ப்புமற்றதாகச் செல்ல இனியும் அனுமதிப்பானேன்? இந்த அறியாமை இருளிலிருந்து விழித்தெழுவோம்! புதியதோர் உலகம் சமைப்போம்!
அதன் முதற்படியாக, உன்னதமான இலட்சியம் அல்லது குறிக்கோள் ஒன்றை வகுத்துக்கொள்வோம். அதையே கனவுகண்டு, அதனையொட்டியே வாழ்ந்து வர முயற்சிப்போம். இதுவே வெற்றிக்கான வழியாகும்.
நிறைந்த விடா முயற்சியையும் பெரும் மன உறுதியையும் கொண்டு கடுமையாய் உழைப் போம். எம் எவரையும் இறை வன் வீணாகப் படைக்கவில்லை. ஒவ்வொருவருடைய வாழ்க் கையும் அர்த்தமுள்ளதாக அமைய வேண்டுமென்பதே இறைவனின் விருப்பமாகும்.
அதற்குரிய ஆற்ற லையும் அவனே வழங்கியி ருக்கின்றான். எம் ஒவ்வொ ருவருள்ளும் புதைந்திருக்கும் ஆற்றல் என்னவென்பதை நாம் முதலில் கண்டுபிடிக்க வேண்டும். எம்மை என்றுமே தாழ்த்திக்கொள்ளக் கூடாது.
ஒரு அடி பின்வாங்குவதால் எந்தவொரு துரதிஷ்டத்தையும் தவிர்த்துக்கொள்ள முடியாது. உல கிலுள்ள கடவுளர்களை எல்லாம் கூவியழைத்தால் கூட துன்பம் விலகிவிடப் போவதில்லை. நாம் எதிர்த்து நின்றால் அது தானே விலகிவிடும்.
உலக இன்பங்களில் உழன்று, மயங்கி, வெறும் கோழைகளாக மாறாமல் துன்பங்களை எதிர்த்து நிற்போம். பிறரின் உதவியை எதிர்பாராது இறைவனை நம்பி நேர் வழியில் நடப்போம். தனி மரம் என்றுமே தோப்பாவதி ல்லை. நாமொவ்வொருவரும் சிதறுண்டு நிற்கும் எம் எண்ண ங்கள் ஒருமைப்பட, நேரத்தை நன்றே முகாமைப்படுத்தி, காலத்தின் தேவையை உணர்ந்து எம் திறமையை அர்ப்பணிக்க முன்வரவேண்டும்.
உயிரே போவதானாலும் கூட எம்பணி நேர்மையானதாக அமை யட்டும்! எம்மிடம் உள்ளதைப் பிறருக்கும் வழங்கும் சீரிய பணியை மேற்கொள்வோம். தோழர்களே, முயன்றுதான் பார்ப்போமே! விவேகானந்தர், இப்பூவுலகிலே ஜனித்த இன்றைய நாள் எங்கள் வாழ்விலும் ஒரு திருப்புமுனை யாக அமையட்டும்!

Tuesday, January 5, 2010

' முகநூல்' மாய உலகை உருவாக்கி விவசாயத்தில் ஈடுபட வைக்கிறது

அண்மையில் தலைநகரில் நடந்த திருமண வைபவ மொன்றிற்குச் சென்றிருந்த போது, ‘நீ எவ்வளவு அறுவடை செய்தாய்?’, ‘நீ எவ்வளவு சம்பாதித்தாய்?’, ‘தற்போது விவசாயத்தில் எந்த மட்டத்திலுள்ளாய்?’ போன்ற சம்பாஷணைகளை இளைஞர்கள் மத்தியில் அவதானிக்கக்கூடியதாக இருந்தது.
இளைஞர்கள் தலைநகரில் விவசாயம் செய்கிறார்களோ? என்ற சந்தேகத்துடன் வியந்தவர்கள் பலர். அந்த இளைஞர்கள் யாவரும் உண்மையிலேயே மண்ணைக் கொத்தி பண்படுத்திப் பயிரிட்டு அறுவடையை மேற்கொள்பவர்களல்லர்.
இன்று மிகவும் பிரபல்யமாகக் காணப்படும் இணையத் தளமொன்றிலுள்ள விளையாட்டைப் பற்றிய சம்பாஷணையே அதுவாகும். கணினி மற்றும் இணைய வசதியுடைய சகலரும் எந்தவித பேதமுமின்றி இத்தகைய விளையாட்டுக்களில் ஈடுபடுவது அதிகரித்து வருகின்றது.
இன்று இணையமானது சமூக வலைப்பின்னல் எனப்படும் புதிய பரிணாமத்தையும் அடைந்துள்ளது. இணையம் வழங்கும் வசதிகள் பல இன்று சமூக மயப்படுத்தப்பட்டுள்ளன.
இதற்கு உதாரணமாக மின் கற்றலெனப் பட்டிருந்த கல்வி முறையின் போக்கு இன்று சமூகக் கற்றல் முறைமையாக மாற்றப்பட்டமையைக் குறிப்பிடலாம்.
ஒரு தனிப்பட்ட நபரைப் பற்றி அறிய விரும்பினால் அவர் வாழும் கிராமத்தில் அல்லது அவருடைய வீதியில் வாழ்பவர் அல்லது அவரது அயலவர் அல்லது அந்நபரின் நெருங்கிய உறவினர்களிடமோ தொடர்புகொண்டால் தவிர அவரைப் பற்றிய தகவல்களை அறிவது மிகவும் கடினமாயிருந்த காலத்தையெல்லாம் நாம் கடந்து விட்டோம்.
தபால் தொலைத் தொடர்பு அறிமுகமானதன் பின்னர் கடிதத் தொடர்புகள் மூலமும் தொலைபேசி, தொலைநகல் அறிமுகமானதன் பின் கடிதத் தொடர்பைவிடத் துரிதமாகவும் தகவல்களைப் பெற்றனர். இணையத்தின் அறிமுகத்துடன், மின்னஞ்சல் மூலம் ஓரிரு செக்கன்களிலேயே தகவல்கள் பரிமாற்றப்பட்டன.
இவற்றை எல்லாம் தாண்டித் தகவல் பரிமாற்றத்துக்கான மிகவும் இலகுவான, எளிமையான முறையாக சமூக வலைப்பின்னல் முறைமை விளங்குகிறது. இம்முறைமை உலகின் எந்த மூலையிலிருந்தாலும் ஒருவரைப் பற்றி ஒருவர் அறிவதற்கும் தொடர்பாடலை மேற்கொள்வதற்கும் உதவுகிறது.
இந்த சமூக வலைப்பின்னல் முறைமையை அடிப்படையாகக் கொண்டு www.hi5.com,www.ringo.com,www.facebook.com,www.twitter.comபோன்ற பல இணையத்தளங்கள் செயற்படுகின்றன. புதிய பல இணையத் தளங்கள் அறிமுகமாகிய வண்ண மிருக்கின்றன.
கடந்த வருடம் உலகளாவிய ரீதியில் ஏறத்தாழ 350 மில்லியன் பாவனையா ளர்களையுடைய தளமாக, சமூக வலைப்பின்னல் தளங்களில் முன்னணியில் திகழ்வது www.facebook.com இணையத்தளமாகும். இலகு தமிழில் ‘முகநூல்’ என அழைப்பர். இது உலகம் முழுவநிம் ஏறத்தாழ இரண்டு சந்ததி யினரைத் தன் வசப்படுத்தி வைத்திருக் கும் இணையத் தளமாகும்.
2004 ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஹவார்ட் பல்கலைக்கழக மாணவனான மார்க் சக்கர்பேக் என்ற இளைஞன் பல்கலைக்கழக மாணவர்களிடையே தொடர்பை ஏற்படுத்து முகமாக இணையத் தளமொன்றைப் பொழுது போக்காக ஆரம்பித்தார். காலப்போக்கில் ஏனைய மாணவர்களும் பங்குபெறும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுப் பின்னர் 2006 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் முதல் 13 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் பங்குகொள்ளக்கூடிய இணையத்தளமாக மாறியது.
இவ்விணையத்தளம், செய்திகள் புகைப்பட மற்றும் வீடியோத் தொகுப்புகள் குறிப்புகள், இணைப்புகள், அவை யாவற்றிற்குமான கருத்துக்கள், உடனடி அரட்டை, பல்வேறு விளையாட்டுக்கள், கேள்வி பதில்கள், எதிர்வு கூறல்களென எண்ணிலடங்காத சேவைகளைத் தன் பாவனையாளர்களுக்கு வழங்கி வருகிறது.
இச்சேவைகள் ஒருவருடனொருவர் தொடர்புகொள்வதை அடிப்படை நோக்கமாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள போதிலும் பாவனையாளர்களை ஒருமயமான கற்பனை உலகிற்குள் அழைத்துச் செல்கின்றன என்பதைப் பலர் உணர்வதில்லை.
இவ்விணையத்தளத்தில் தமது தகவல்களையும் கடவுச் சொல்லையும் பதிந்து எவரும் அங்கத்தவராகலாம். அங்கத்துவம் முற்றிலும் இலவசமானது. அங்கத்தவர்கள் ஒவ்வொருவருக்குமுரிய தனித்துவமான இணையப் பக்கங்கள் உருவாக்கப்படும். அங்கத்தவர்கள் தமது பெயர், மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி இலக்கம் முதல் தமது பொழுது போக்குகள், தமக்கு விருப்பமான புத்தகங்கள் வரை தம்மைப் பற்றிய சகல தகவல்களையும் இணைக்கலாம்.
குற்றங்களைத் தவிர்ப்பதற்காக மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைபேசி இலக்கம் போன்றவை பார்வைக்குரியனவாக மட்டுமே காணப்படும்.
எமக்குத் தெரிந்த நபர்களையும் தெரியாதவர்களையும் நண்பர்களாக இணைக்க முடியும். ஒருவரை நண்பராக இணைக்கும்படி ஏனைய நண்பர்களுக்கும் பிரேரிக்க முடியும்.
அங்கத்தவர்கள், தமது அடையாளப் புகைப்படங்களையும் ஒளிப்படங்கள் மற்றும் புகைப்படங்களின் தொகுப் புக்களையும் பதிவேற்றக்கூடிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அத்துடன் அப்புகைப் படங்களுக்கான தலைப்புக்களையும் விபரங்களையும் எழுத முடியும்.
புகைப்படத்தில் உள்ளவர்களைக் குறிப்பிட முடியும். அதேசமயம் மற்றவர்களால் குறியிடப்பட்ட தமது புகைப்படங்களையும் பார்வையிட முடியும். புகைப்படம் தொடர்பான தமது கருத்துக்களை நண்பர்களும் எழுதுவதற்கும் இடம ளிக்கப்பட்டுள்து.
நண்பர்கள் எவராவது நேரிணையத்தில் இருந்தால் அவர்களுடன் நேரடியாக எழுத்து மூலம் உரையாட முடியும். ஒவ்வொருவருடைய முகப்புப் பக்கத்திலும் நேரடிச் செய்தி இணைப்புக்கான தேர்வு காணப்படும். இதன் மூலம் ஏனைய நண்பர்கள் என்ன செய்கின்றார்கள் என்பதையும் உடனுக்குடன் அறியலாம்.


ஒவ்வொருவருக்கும் தனித்துவமான சுவரொன்று காணப்படும். அதில் உரிமையாளரோ அல்லது அவரது நண்பர்களோ எழுத முடியும். புகைப்படங்கள் உட்படப் பல விடயங்களை இணைக்க முடியும். தொடர்பாடலுக்குரிய நவீன வழியாக இது தென்படுகிறது.
இவை தவிர ஒவ்வொரு அங்கத்தவரும் குறித்த கணத்தில் தமது நிலையென்ன என்பதைத் தெரிவிக்கலாம். அதனை ஏனைய நண்பர்களும் பார்க்கலாம்.
தான் என்ன செய்கிறேன். அல்லது தனது நிலையென்ன என்பதை மற்றவர்களுக்குத் தெரிவிக்கும் ஒரு செயற்பாடாகவே இது காணப்படுகிறது.
எந்த விடயம் தொடர்பான குறிப் புக்களையும் படத்துடன் இணைக்க முடியும். அக்குறிப்புகளில், தேவையான வர்களைக் குறியிட முடியும். நண் பர்களுடைய பக்கங்களைப் பார்வையிடலாம். அவர்களுடைய நண்பர்களில் யாரையாவது எமது நண்பர்களாக இணைக்க விரும்பினால் விருப்பத்தை அவர்களிடம் தெரிவிக்கலாம்.
அவர்களும் விரும்பினால், இரு தரப்பினரும் நண்பர்களாகலாம். முகநூலில் நண்பர்களை இணைத்தலென்பது இரு தரப்பும் விரும்பினால் மட்டுமே நடைபெறும் ஒரு செயற்பாடாகும்.
நண்பர்களின் பக்கங்களில் பிடித்த விடயங்களை எமது பக்கத்துக்கு அஞ்சலிடலாம். முகநூலின் எந்தவொரு பகுதியையும் நாம் விரும்பினால் ‘நான் இதை விரும்புகிறேன்’ எனத் தெரிவிக்கலாம். அதேநேரம் அப்பகுதி தொடர்பான எமது கருத்துக்களை எழுதலாம். மற்றவர்கள் எழுதிய கருத்துக்களுக்கும் பதிலளிக்கலாம்.
குழுக்களை உருவாக்குவதன் மூலம் ஒத்த ஆர்வமுடையவர்கள் ஒன்றிணையலாம். தமக்கிடையே கருத்துக்கள், விமர்சனங்கள், புகைப்படங்கள் மற்றும் ஒளிப்படங்களைப் பரிமாறலாம்.
வினா விடைப் போட்டிகள், விளையாட்டுக்கள், வாழ்த்து மடல்கள், பரிசுகள் அனுப்புதல் போன்ற பல செயற்பாடுகளை பிரயோகம் எனும் பகுதியினூடு மேற்கொள்ளலாம். அங்கத்தவர்களால் பாதிக்கப்பட்ட இத்தகைய விடயங்களையும் இணை க்கலாம்.
நவநாகரிக மோகத்தினால் விட்டுச் செல்லப்பட்ட பல விடயங்களை, மாய உலகொன்றைத் தோற்றுவித்து, விளையாட்டுக்களின் மூலம் கண்முன்னே கொண்டு வருவதில் முகநூல் முன்னணியில் திகழ்கிறது. அறிவை விருத்தி செய்யக்கூடிய பல விளையாட்டுக்களையும் முகநூல் கொண்டுள்ளதென்பது மறுக்க முடியாத உண்மையாகும். வெகு தொலைவிலிருந்தால் கூட அவர்களுடன் இணைந்து போட்டியாக விளையாடக் கூடிய வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
உலகளாவிய ரீதியில் பெற்றோர் முதல் பிள்ளைகள் வரை குடும்பம் குடும்பமாக விளையாடும் விளை யாட்டுக்களாக விவசாயம் தொடர்பான விளையாட்டுக்கள் காணப்படுகின்றன.
இவ்விளையாட்டுக்கள் மிகவும் சுவாரசியமான விதத்தில் உருவாக்கப் பட்டுள்ளன என்பதை அவற்றை விளையாடும் எவராலும் மறுக்க முடியாது. இவ்விளையாட்டில் சேர்ந்தவுடன், ஒவ்வொருவருக்கும் சிறிதளவு சில்லறைகளும் ஒரு மாய உலகில் சிறிய நிலமொன்றும் வழங்கப்படும். விவசாயமொன்றை மேற்கொள்வதற்கான செயற்பாடுகள் பொத்தான்களின் வடிவில் காணப்படும்.
உரியதை அழுத்துவதன் மூலம் நிலத்தைப் பண்படுத்தலாம். விதைக்கலாம், நீர் பாய்ச்சலாம். அத்துமீறி உள்நுழையும் விலங்குகளைத் துரத்தலாம். நிலக்கு வேலியிடலாம். அறுவடை செய்யலாம். விளைச்சலை விற்று வருமானமீட்டலாம். ஈட்டிய வருமானத்தைக் கொண்டு நிலத்தை மேலும் விஸ்தரிக்கலாம்.
வசதிகளை மேம்படுத்தலாம். இவ்வாறான பல செயற்பாடுகளைச் செய்யலாம். இவ்விளையாட்டில் பல படிநிலைகள் காணப்படும். குறித்த படிநிலையின் இலக்கையடைந்தால் அடுத்த படிநிலைக்கு முன்னேறலாம்.
ஒவ்வொரு பயிரையும் விதைத்த பின் அறுவடை செய்வதற்கான நேரம் குறிக்கப்பட்டிருக்கும். குறித்த நேரத்தில் அறுவடை செய்யப்படாவின் அயலிலுள்ள நண்பர்கள் விளைச்சலைத் திருடிவிடுவர். எமது நிலத்துக்கு அயலில் உள்ள நிலங்களில் விவசாயத்தை மேற்கொள்ளுமாறு நண்பர்களுக்கும் அழைப்பை விடுக்கலாம். அவர்கள் அவ்வழைப்பை ஏற்றுக் கொண்டால், எமது புள்ளிகள் அதிகரிக்கப்படும்.
இவை மட்டுமன்றி இன்னும் எண்ணிலடங்காத செயற் பாடுகளை மேற்கொள்ள முடியும். தமது விவசாய நிலங்களை அழகுபடுத்தலாம். புகைப்படங்கள் எடுத்து நண்பர்களுடன் பகிரலாம். இதுபோன்ற பல விளையாட்டுக்கள் இன்று முகநூல் பாவனையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமாகக் காணப்படுகின்றன.
இந்த மாய உலகில், செல்லப் பிராணிகளைத் தத்தெடுத்து உணவூட்டி வளர்க்கும் விளையாட்டுக்களும், மிருகக் காட்சிச் சாலைகளை உருவாக்கிப் பராமரிக்கும் விளையாட்டுக்களும் இன்னும் பல புதுவித விளையாட்டுக்களும் காணப்படுகின்றன.
இணையக் குற்றங்கள் அதிகரித்துள்ள இன்றைய காலகட்டத்தில் அக்குற்றங்களை இயன்ற வரையில் தவிர்க்கும் வகையில் ஒவ்வொரு செயற்பாட்டையும் அங்கத்தவர்களின் விருப்பத்துக்கேற்ப கட்டுப்படுத்தக்கூடிய வகையிலேயே முகநூல் அமைக் கப்பட்டுள்ளது.
ஆனால் பல அங்கத்தவர்கள் அவற்றைப் புரிந்து செயற்படுவதில்லை. இதன் காரணமாகப் பல அசம்பாவிதங்கள் நடைபெறுவதும் தவிர்க்க முடியாததாகிவிடுகிறது.
ஏறத்தாழ ஐந்து வருடங்களாக, பல மில்லியன் பாவனையாளர்களுடன் ஒரு சமூக வலைப்பின்னல் தளம் நிலைத்து நிற்பதென்பது மிகப் பெரிய விடயம். செக்கனுக்கு செக்கன் அபிவிருத்தியடைந்து வரும் கணினித் தொழில்நுட்பத்திற்கு ஈடுகொடுப்பதே இவ்விணையத்தளத்தின் வெற்றிக்கு மிகப் பிரதான காரணியாக அமைகிறது.
அவசர உலகிலே, அதிகரித்துவரும் நேரப் பற்றாக்குறைக்கு மத்தியில் உறவுகளுடனான தொடர்பைச் சீராகப் பேணுதலென்பது சற்றுக் கடினமான விடயமேயாகும். இத்தகைய சந்தர்ப்பத்தில் உறவுகளைப் பேணுவதற்கான சிறந்த ஊடகமாக முகநூல் காணப்படுகின்றது.
தொடர்பற்றுப் போன உறவுகளுடனும் சிறுவயது நண்பர்களுடனும் தொடர்பை ஏற்படுத்துவதற்கு முகநூல் உதவுகிறது. ஒரு பொழுது போக்குக்காகவும் இயந்திரமயப்படுத்தப்பட்ட வாழ்க்கையில் ஏற்படுத்தப்படும் மனச் சோர்வைப் போக்கவும் முகநூல் பயன்படுகிறது. கைத்தொலைபேசிகளினூடாகவும் இத்தளத்தைப் பார்வையிட முடிவதுடன் பதிவுகளையேற்றவும் முடிகிறது.
புகைப்படங்கள் மற்றும் ஒளிப்படங்களைப் பகிரவும், சேமிக்கவும் சிறந்த தளமாக முகநூல் அமைகிறது. உலகின் எந்த அந்தத்திலிருந்தாலும் ஒருவர் தொடர்பான விடயங்களை உடனுக்குடன் அறியவும் தொடர்புகளை மேற்கொள்ளவும் உதவுகிறது. இத்தளம் உலகில் பிரபலமான பல மொழிகளிலே காணப்படுவதால், இத்தளத்தை உபயோகிக்க ஆங்கில மொழியறிவு அவசியமில்லை. இணைய அறிவு மட்டுமே போதுமானது.
பிடித்த விடயங்களை மற்றவர்களுடன் பகிரவும் முகநூல் உதவுகிறது. எல்லா உறவுகளையும் ஒருபக்கத்தினுள்ளேயே அடக்குவதன் உலகம் எவ்வளவு சிறியதென்பதை உணர்த்துகிறது. பெயரை மட்டும் வைத்தே உறவுகளைத் தேடிக் கண்டுபிடிக்க முடியும். பல விடயங்களைச் மிகக் குறுகிய நேரத்திற்குள்ளேயே அறிந்துகொள்ள உதவுகிறது.
இன்றைய கல்வி முறைமை புத்தகம் சாராது தேடல் சார்ந்ததாகவே காணப்படுகிறது. ஆகையால் பல்வேறுபட்டோருடன் தகவல்களைப் பரிமாறுவதற்கு மிகச் சிறந்த ஊடகமாகக் காணப்படுகிறது. வர்த்தக ரீதியான செயற்பாடுகளுக்கும் விளம்பரங்களுக்கும் கூட முகநூல் உதவி செய்கிறது. முகநூலை நடத்தத் தேவையான பணம் விளம்பரங்கள் மூலமே பெறப்படுகிறது.
பொழுதைப் போக்குவதற்கான இலகுவழியாகவும் முகநூல் தென்படுகிறது. பாவனையாளரை ஒரு மாய உலகினுள்ளே சஞ்சரிக்க வைத்து அவர்களின் கற்பனைத் திறனைக் குறைக்கிறது. அதிகாலை எப்படியிருக்குமென்று தெரியாதவர்களைக் கூட அதிகாலையில் எழுப்பி அறுவடை செய்யவைக்கிறது. அவசர உலகைக் கருத்தில் கொள்கையில் இது நேரத்தை விரயமாக்குமொரு செயற்பாடாகவும் கருதப்படுகிறது.
பாடசாலை செல்வோரின் கட்டுப்பாடின்றி முகநூல் பாவனையானது அவர்களின் கல்வி, மற்றும் நடத்தைக் கோலங்களில் பாதிப்பை ஏற்படுத்துவதுடன் தற்கொலைகளின் எண்ணிக்கையையும் அதிகரித்துள்ளது.
பொதுவாக வேலைத் தளங்களில் முகநூலின் பாவனை, உற்பத்தித் திறனையும் பணியாளர்களின் வினைத் திறனையும் குறைப்பதாகக் கணிப்பிடப்படுவதால் உலகளாவிய ரீதியில் பல வேலைத் தளங்கள் முகநூலின் பாவனையைத் தடை செய்துள்ளன. ஆனால் வெளிநாடுகளில் வேலைக்குச் சேரும் நபரொருவரின் அடிப்படைத் தகைமைகளுள் ஒன்றாக முகநூல் கணக்கும் கருதப்படுகிறது.
பல பாடசாலைகளும் பல்கலைக் கழகங்களும் கூடத் தமது எல்லைக்குள் முகநூலின் பாவனையைத் தடை செய்துள்ளன. விவசாயம், செல்லப் பிராணிகள், மிருகக் காட்சிச் சாலை போன்ற விளையாட்டுக்கள் தினமும் முகநூலைப் பார்வையிடத் தூண்டுவதுடன், கிட்டத்தட்டப் பாவனையாளரை முகநூலுக்கு அடிமையாக்கி விடுகின்றன. இத்தகைய விளையாட்டுக்களிலிருந்து மீள முடியாமல் கடனட்டை மூலம் பணம் செலுத்தி விளையாடுபவர்களும் காணப்படுகின்றனர். காலம் கடந்த ஞானத்தைப் பெற்றவர்களும் இருக்கின்றார்கள்.
முகநூலில் நடைபெறும் விடயங்களை உடனுக்குடன் குறுஞ் செய்திச் சேவைகள் மூலம் கைத்தொலைபேசியில் பார்க்கக் கூடியதாகவிருப்பது பாவனையாளர்களை மேலும் முகநூலுக்கு அடிமையாக்குகிறது.
இத்தகைய இணையத்தளங்களின் பாவனையானது கூரிய கத்தியைப் போன்றது. கத்தி வைத்தியரிடமா அல்லது கொலைகாரனிடமா இருக்கிறது என்பதைப் பொறுத்து அதன் பாவனை வேறுபடும். ஒருவரை ஒருவர் உளவு பார்க்கவும் இத்தகைய சமுக வலைப்பின்னல் தளங்களே காரணமாகின்றன.
நெருங்கிய உறவுகள் கூட முக நூலின் வரவால், முகநூலினூடு மட்டுமே தொடர்புகொண்டு தூரச் செல்லும் சந்தர்ப்பங்களும் காணப்படுகின்றன.
நண்பர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் பெருமைகொள்வோர் தாமாகவே ஆபத்தை விலைக்கு வாங்கிக்கொள்கின்றனர். முகநூல் நட்புக்குப் புதியதோர் வரைவிலக்கணத்தை வழங்கிவிடுமோ என்றதோர் அச்சமும் நிலவி வருகிறது.
முகநூலினூடாகப் பாவனையாளர்கள் அரசாங்கத்திற்கு எதிரான பிரசாரங்களை மேற்கொண்டமைக்காக முகநூல் பாவனையைத் தடைசெய்த நாடுகளுமுள்ளன. சிரியா, பர்மா, பூட்டான், ஈரான், வியட்நாம் போன்ற நாடுகளே இவ்வாறு தடைசெய்துள்ளன.
முகநூல் தளம், தானே பலவகையான கட்டுப்பாடுகளை விதிப்பதன் மூலம் துஷ்பிரயோகங்களை இயன்றவரை தவிர்த்து வருகிறது. ஒவ்வொரு பெற்றோரும் தனது பிள்ளை எவ்வளவு தூரம் முகநூல் பாவனையிலீடுபடுகின்றதென்பதை அவதானிக்க வேண்டும். பாவனையாளர் ஒவ்வொருவரும் பகுத்தறிவுடன் செயற்பட வேண்டும்.
மதுவுக்கடிமை, போதைப்பொருளுக்கு அடிமை என்ற காலங்கள் கடந்து முகநூலுக்கடிமை என்றொரு காலம் வெகு விரைவில் உருவாகுமோ என்றும் எண்ணத் தோன்றுகிறது. மாய உலகில் சஞ்சரிப்பது இன்பமாகத் தோன்றினாலும் உள ரீதியான ஆரோக்கியத்துக்கு அது ஒரு போதும் நன்மை பயக்காது.
கற்காலம், வெண்கலக்காலம் என்றெல்லாம் காலங்கள் வரை யறுக்கப்படுகின்ற போது இணையக் காலமொன்று வரையறுக்கப்படுகையில் அதன் உப பிரிவுகளிலொன்றாக முகநூல் காலமும் இருக்குமென்பதில் எதுவித ஐயமுமில்லை.
‘கனியிருப்பக்காய் கவர்ந்தற்று’ என்ற முதுமொழியின் அர்த்தத்தை ஆழ உணர்ந்து முகநூலைப் பாவி ப்பதுடன் அதன் ஆதிக்கத்தை ஓங்க விடாது, அதை எமது கட்டுப் பாட்டுக்குள் வைத்திருந்தால், அதி கம் நன்மை பயக்கும் தளமாகவே முக நூலுமிருக்கும்.