Sunday, August 29, 2010

மாயவலையின் கரிய முகம்


அண்மையில், பாடசாலை செல்லும் பதின் பருவத்து மாணவியொருவரின் தற் கொலை தொடர்பான செய்தியொன்று இணையத்திலும் பத்திரிகையிலும் வெளியாகியிருந்தது. முகநூல் (face book) என்ற சமூக வலைத் தளத்திலே இலண்டனிலிருக்கும் 19 வயது இளை ஞனுடன் சம்பந்தப்பட்ட மாணவி தொடர்பை ஏற்படுத்திக் கொண்டாராம்.

அவர்களது உறவும் முகநூலிலே வளர்ந்திருக்கிறது. அவ்விளைஞன் இலங்கை வந்தபோது அந்த மாணவியை நேரிலும் சந்தித்திருக்கிறாராம். அவர் மீண்டும் இலண்டன் சென்ற பின்னர் அம்மாணவியுடன் தொடர்பு கொள்வ தைத் தவிர்க்க அவர் முயன்றிருக்கிறார். அவரைப் பலமுறை தொடர்பு கொண்ட மாணவி தனது முயற்சிகள் தோல்வி கண்டதால் தற்கொலை செய்துகொண்டார் என்கிறது அந்தச் செய்தியின் சாராம்சம்.

அந்தச் செய்தியை அலசி ஆராய்ந்து கொண்டிருப்பதில் பயனெதுவும் இருக் கப் போவதில்லை. ஏனெனில் உயிரொன்று போய்விட்டது. எமது அலசல்களும் ஆராய்ச்சிகளும் போன உயிரைத் திரும் பக் கொண்டு வந்து விடப் போவதில்லை.

ஆனால் இந்தச் செய்தியால் குறிப்பு ணர்த்தப்படும் எச்சரிக்கையை விளங்கிக் கொள்ளவேண்டிய கடப்பாடு எம் ஒவ்வொருவருக்கும் உண்டு. ஏனெனில் இத்தகைய சம்பவங்கள் இனியும் நிகழாமல் தடுக்க, முன்னின்று செயற்பட வேண்டியவர்கள் நாங்களே!

தொழில்நுட்பங்களும், இணைய வசதிகளும் இன்றைய காலகட்டத்திலே துரித வளர்ச்சி கண்டு வருகின்றன. அத்துடன் வீட்டுக்கு வீடு கணனிகளும் இணைய வசதிகளும் இருக்குமளவிற்கு அவை மலிவாகவும் கிடைக்கின்றன.

மாணவர்களைப் பொறுத்தவரையிலே அவர்களின் இன்றைய கல்வித் திட்ட மானது, தேடலை ஊக்குவிக்கிறது. இந்தத் தேடலுக்கான சுலபமான திறவு கோலாக இணையம் மாறிவிட்டதை எவராலும் மறுக்க முடியாது.

குறிப்பாக நகரப் பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு, இணைய வசதி ஒரு அத்தியாவசியத் தேவையாக மாறிவிட்டது. அத்துடன் இலங்கையின் கல்வித் திட்டத்தில் கணனிக் கல்வி கட்டாயமாக்கப்பட்டுள்ளமையால் இணையப் பயன்பாட்டின் அறிமுகமும் சுலபமாகக் கிடைத்துவிடக்கூடிய நிலையே காணப்படுகிறது.

தன் பிள்ளை கற்கத் தேவையான வசதிகளை, உயிரைக் கொடுத்தாவது வழங்க வேண்டுமென்ற அப்பாவிப் பெற்றோர்களின் ஆவலை பிள்ளைகள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்த முனைகிறார்கள். அத்தகையதோர் செயற்பாட்டின் விளைவொன்றே இத் தற்கொலையுமாகும்.

‘அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு’ என்ற பழமொழி இணைய விடயத்தில் மிகவும் பொருந்திப் போகிறது என்றே சொல்ல வேண்டும். இணையத்தில் எவ்வளவோ பயன்தரத் தக்க தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. ஆயினும் ஒருவர் இணையப் பாவனை யில் தனது எல்லையைக் கடக்கும்போது வினையும் கூடவே தலைவிரிக்க ஆரம்பிக்கிறது.இணையம் இன்று சமூகமயப்படுத்தப் பட்ட வசதியாக மாற்றம் பெற்று வருகிறது. அந்தவகையிலே தான் சமூக வலைத் தளங்கள் உருவாக்கப்பட்டன. ஒரு கட்டத்தில் மின் கற்றலாக இருந்த இணைய வழிக் கல்வி இன்று சமூகக் கற்றலாகப் பரிணமித்திருக்கிறது.

அடிப்படையில் இந்த சமூக வலைத் தளங்களானவை, உலகின் எந்த மூலை யிலுமிருக்கும் ஒருவருடன் தொடர்பை மேற்கொள்ளுதல் எனும் செயற்பாட்டை அடிப்படையாகக் கொண்டவை. இணை யத் தொழில்நுட்பம் உலகத்தை அந்த ளவு குறுக்கி உள்ளங்கைக்குள் வைக்கி றது என்பதற்கு முகநூல் போன்ற சமூக வலைத் தளங்கள் மிகச் சிறந்த உதார ணங்கள். இவ்விணையத்தளங்கள் மிகவும் பிரபலமடைந்து வருவதால் தினமும் புதிது புதிதாய் உருவாக்கப்படு கின்றன. அத்துடன் சிறுவர் முதல் முதியவர்கள் வரை சகல வயதினரையும் தம் வசப்படுத்தி வைத்திருக்கின்றன.

எமக்குத் தெரிந்த, தெரியாத நபர்களை நண்பர்களாக இணைப்பது தான் இவ்வலைத்தளங்களின் அடிப்படை. அவ்வாறு நண்பர்களாக இணைபவர் களுடன் செய்திகள், புகைப்படங்கள், ஒளிப்படங்கள், அவற்றுக்கான கருத்துக் கள், குறிப்புகள் எனப் பலவற்றை தமக்கிடையே பகிர்ந்து கொள்ளல் இவ்விணையத்தளங்களின் அங்கத்தவர் கள் செய்யும் வேலையாகும். அத்தளங் களில் இணைந்து மேலும் மேலும் துலாவிச் செல்ல திகட்டாத சுவாரசியம் மிகுந்தவையாக அவை மாறிவிடுகின்றன.

ஆழ ஆராய்ந்து பார்த்தால், பாவனையாளர்களை ஒரு மாயா கற்பனை உலகுக்குள்ளே முடக்கிவிடு கின்றன என்ற உண்மையை உணரலாம்.

முன்னர் தொழில்நுட்ப வசதி வாய்ப்புகள் குறைவாகக் காணப்பட்டன. உலகம் பரந்து விரிந்திருந்தது. இளைஞர்கள் மத்தியில் இருந்த அறிவுத் தேடலும் விரிந்திருந்தது. இளைஞர்கள் தொடர்பான சமூகப் பிரச்சினைகளும் தற்கொலைகளும் குறைந்தளவில் காணப்பட்டன.

ஆனால் இன்று அந்நிலை தலைகீழாக மாறிவிட்டது. பள்ளி மாணவர்களை இணையம் சமூக வலைத்தளங்களின் பெயரால் தனக்கு அடிமைப்படுத்திக் கொண்டது.

அவசர உலகிலே அதிகரித்து வரும் நேரப் பற்றாக்குறைக்கு மத்தியில் உறவுகளைப் பேணும் சிறந்த ஊடகங்களாக இந்த சமூக வலைத் தளங்கள் இருப்பது உண்மை தான்.

ஆனால் அவை தற்கொலைகளில் கொண்டு போய் முடிக்கும் போதுதான், அவற்றின் பின் விளைவுகளைப் பற்றியும் ஆராய வேண்டிய தேவை ஏற்பட்டு விடுகிறது.

வளரிளம் பருவத்தினர் மத்தியில் காணப்படும் இத்தகைய பிரச்சினைகளுக்குப் பொறுப்புக்கூற வேண்டியவர்கள் பெற்றோர்களே தவிர, பிள்ளைகளல்ல.

தம் பிள்ளைகளுக்குத் தேவையான வசதி வாய்ப்புகளை எப்படியாவது வழங்கிவிடத் துடிக்கும் பல பெற்றோர், அவற்றை வைத்துத் தம் பிள்ளைகள் எப்படியெல்லாம் பயன்படுத்துவார்கள் என்பதைக் கவனிக்கத் தவறிவிடுகிறார்கள். இதை அனுகூலமாகக் கருதும் பிள்ளைகள், அவ்வசதி வாய்ப்புகளைத் துஷ்பிரயோகம் செய்ய முயல்கிறார்கள். விளைவு மன அழுத்தங்களாகவும் தற்கொலைகளாகவும் பரிணமிக்கிறது.

அவ்வசதி வாய்ப்புகளைப் பிள்ளைகளுக்கு வழங்க தாம் படும் சிரமங்களைப் பிள்ளைகளுக்குத் தெரிவிக்க பெற்றோர்கள் தவறிவிடுவதை இதற்கான காரணங்களில் ஒன்றாகக் குறிப்பிட முடியும். தமக்காகத் தமது பெற்றோர் படும் கஷ்டத்தைப் பிள்ளைகள் உணர்வதில்லை. பெற்றோரும் உணர்த்துவதற்கு முயல்வதில்லை.

நேரகாலமின்றி இந்தச் சமூக வலைத்தளங்களுக்கு அடிமையாகிவிடும் இளம் பருவத்தினரில் கல்வியும் நடத்தைக் கோலங்களும் பாதிக்கப்படுகின்றன. நண்பர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் ஆர்வமும் போட்டியும் மிகுதியாவதால், தெரியாதவர்களை எல்லாம் நண்பர்களாக்குகிறார்கள். இது கடைசியில் காதல் தோல்விகளிலும் தற்கொலைகளிலும் முடிகிறது. அறிவும் தேடலும் விசாரிக்கும் அளவுக்கு மனவிருத்தி விசாலப்படாமை இதற்குக் காரணம். உலகின் யதார்த்தங்களை விளங்கிக் கொள்ளும் அளவுக்கு மனம் உளர்ச்சி அடைந்திருப்பதில்லை.வளரிளம் பருவத்தினரின் இறப்பு வீதத்துக்கு மூன்றாவது முக்கிய காரணமாக தற்கொலை மாறி வருகிறது என்பது கவனத்துக்குரியது. உலகில் தினமும் 11 வளரிளம் பருவத்து இளைஞர்கள் தற்கொலை செய்து உயிரை மாய்ப்பதாகத் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இவற்றுள் பெரும்பாலானவை உளவியல் மற்றும் உணர்வு ரீதியான தாக்கங்களால் ஏற்படுபவையாகும்.

நம் நாட்டில் தற்போது உயர்தரப் பரீட்சை நடைபெற்று முடிவுறும் தறுவாயில் இருக்கிறது. இந்தப் பரீடசைக்குத் தோற்றும் பல மாணவர் களை பரீட்சையை அண்மித்த, பரீட் சைக் காலங்களில் கூட முகநூலில் face book காணமுடிகிறது. படித்தவற்றை மீட்டுப்பார்க்க வேண்டிய பொன்னான நேரத்தை முகநூலில் வீணே செலவிடுகிறார்கள். ஆனால் மூளை, மன ஓய்வுக்காக என்று தமக்கே உரித்தான நியாயப்படுத்தலையும் கூடவே வைத்திருக்கிறார்கள்.

பெற்றோர்கள் விழிப்புணர்வுடனும் தமது பிள்ளை என்ன செய்கிறது? என்ற தெளிவுடனும் இருந்தால் இத்தகைய பல விடயங்களைத் தவிர்க்க முடியும்.

வளரிளம் பருவத்தினருடன் கண்டிப்பாகவும் இருக்க முடியாது. அதே சமயம் எடுத்தேன்; கவிழ்த்தேன் எனவும் முடிவெடுக்க முடியாது. ஆகவே அவர்களை நட்புடன், இலாவகமாகக் கையாள வேண்டும்.

சமூக வலைத் தளங்களின் பாவனையைக் கட்டப்படுத்துவதாயின், முதலில் பெற்றோருக்கு அவை பற்றிய அறிவு தேவை. தற்கொலைகள் மலிந்துவிட்ட இன்றைய காலகட்டத்தில், பெற்றோர்கள் தங்கள் கெளரவத்தையோ அல்லது சிரமத்தையோ கருதாமல், கணனி, இணையம் தொடர்பான அடிப்படைக் கற்கை நெறிகளையாவது கற்கத் தலைப்பட வேண்டும். அது இரு வழிகளில் நன்மை பயக்கிறது. ஒன்று பெற்றோருக்கு, தமது பிள்ளைகள் கணனியில் என்ன செய்கிறார்கள் என்பது தெளிவாகும். தமது பெற்றோருக்கும் இந்த விடயங்கள் பற்றிய அறிவு உண்டு என உணரும் பிள்ளைகள் இணையத்தையும் கணனி வசதிகளையும் துஷ்பிரயோகம் செய்யப்பயப்படுவார்கள் என்பது இரண்டாவது நன்மை.

அதேபோல பாடசாலைகளிலும் ஆசிரியர்கள் பிள்ளைகளுடன் அளவளாவி அவர்களை நல்வழிப்படுத்தும் வகையில் செயற்பட வேண்டும். பிள்ளையின் நடத்தைக்கோலத்தில் மாற்றங்கள் தென்பட்டாலோ அல்லது மன அழுத்தம், தற்கொலை முயற்சிக்கான அறிகுறிகள் தென்பட்டாலோ, உடனடியாக வைத்திய உதவியை அல்லது மனநல ஆலோசகரின் உதவியை நாடுவதே மிகச் சிறந்தது.

வளமான பழக்கவழக்கங்களையும் பண்புகளையுமுடைய பண்பாடான கீழைத்தேயக் கலாசாரத்தை சார்ந்த மக்கள் நாங்கள்!

மேலைத்தேய நாகரிக மோகத்தில் எமது கலாசாரத்தின் நல்ல பண்புகளைக் காற்றுடன் கலந்து விட்டு, மேலைத் தேயக் கலாசாரத்தின் ஆரோக்கியமற்ற விடயங்களை மட்டும் உறுதியாகப் பற்றி நிற்கிறோம். இது எம்மை எங்கு கொண்டு போய் விடுமென்பதில் எவருக்குமே வெளிச்சமில்லை.

எமது நிலையை நாம் உணர்வதற்குள் ஒரு மாணவியின் உயிர் பலியாகி விட்டது. ஆனால் இனியும் அவ்வாறு உயிர்கள் பலியாகாமல் இருப்பது எமது கைகளில் மட்டுமே தங்கியிருக்கிறது.

Thursday, August 26, 2010

பச்சைக்கம்பளத்தை மீண்டும் போர்த்துகிறது கிளிநொச்சி மண்!சிறுவயதிலே பார்த்த பண்டாரவன்னியன் நாடகத்திலே வந்த ‘வந்தாரை வாழ வைக்கும் வன்னித் திருநாடு’ என்ற வரி, யதார்ததமானதே எனக் காலம் பல தடவைகள் யோசிக்க வைத்திருக்கிறது.

யார் தன்னடிக்கு வந்தாலும் அவர்களை வேற்றுமை பாராட்டாது அவர்களுக்கு வாழ்வாதாரம் வழங்கும் அற்புதமான மண் வன்னி மண். அந்த வன்னிப் பெருநிலப் பரப்பின் நெற்களஞ்சியம் எனப் போற்றப்படும் மாவட்டம் கிளிநொச்சியாகும்.

இலங்கையின் முதற் பத்து பெரிய நீர்ப்பாசனக் குளங்களுள் ஒன்றான இரணைமடுக்குளத்தாலும் அக்கராயன் குளம் போன்ற இன்னோரன்ன குளங்களால் நீர் வளத்தையும், இயற்கையாகவே அமைந்துவிட்ட மண்வளத்தையும் கொண்ட விவசாயப் பிரதேசம் கிளிநொச்சி.

உலர் வலயத்தில் அமைந்த பிரதேசமாயினும், மரங்களும் வயல் வெளிகளும் நீர் நிலைகளும் நிறைந்துள்ளமையாலோ என்னவோ, அங்கு வறட்சியின் கொடுமை தெரிவது மிக மிக அரிதாகும்.

கிளிநொச்சியையே சந்ததி சந்ததியாக, பூர்வீகமான வாழ்விடமாக கொண்டவர்கள் மிகச் சிலரே. 1958களின் பின்னர் அமைக்கப்பட்ட குடியேற்றங்களும் காலத்துக்குக் காலம் உருவான சில காரணங்களுமே, கிளிநொச்சியின் சனத்தொகையை அதிகரித்தன.

அங்குள்ள பெரும்பாலான மக்களின் வாழ்வாதாரத் தொழிலாக விவசாயம் மாறியது. பல நீர்ப்பாசன மற்றும் விவசாய அபிவிருத்தித் திட்டங்கள் கிளிநொச்சியை ஒரு விவசாயப் பிரதேசமாகவே மாற்றி, இயற்கை அன்னை அருளிய வளங்களின் உச்சப் பயனைப் பெற்றுக் கொண்டன.

குடியேறிய மக்கள் அங்கேயே நிலைத்திருப்பதற்கு கிளிநொச்சியின் வளங்கள் காரணமாய் அமைந்திருந்ததைக் காலம் உணர்த்தி நிற்கிறது.

வந்தாரை வாழ வைக்கும் வன்னித் திருநாடு என்ற சொற்றொடர் உணர்ந்தி நிற்கும் யதார்த்தமும் அதுவேயாகும்.

பச்சைப் பசேலென்ற வயல் வெளிகளையும் எப்பொழுதும் சலசலத்துக் கொண்டிருக்கும் வாய்க்கால்களையும் சிறிதும் பெரிதுமாய் நிறைந்து காணப்படும் குளங்களையும் அடர்ந்த நிழல் தரு மரங்களையும் கொண்ட அழகிய சூழலுக்குப் பழக்கப்பட்டவர்களால் எப்படி அவற்றையெல்லாம் விட்டு வரமுடியும்?

ஒரு கொடூர யுத்தம் முடிவுக்கு வந்து விட்ட இன்றைய கால கட்டத்திலேயே கிளிநொச்சிப் பிரதேசத்திற்குரிய மீள்குடியேற்ற நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுப் பல மாதங்களாகிவிட்டன. ஒரு பேரழிவிலிருந்து மீண்ட மக்கள், முற்றிலும் புதியதாக வாழ்க்கையை ஆரம்பித்திருக்கிறார்கள். விதைக்க விவசாயிகளின்றி, விளையாமல் கிடந்த வயல் நிலங்களுள் பல விதைக்கப்பட்டு இன்று அறுவடையும் கண்டு விட்டன.


கண்ணுக்கெட்டிய தூரம் வரை மஞ்சளாய் தெரியும் நெற்கதிர்களைத் தாங்கியபடி அறுவடைக்குத் தயாராகியிருந்த வயல்வெளிகளையும், வயல்வேலைகளில் மும்முரமாய் ஈடுபட்டிருந்த விவசாயிகளையும் காணும் போது எரிந்த சாம்பலில் இருந்து மீண்டும் உயிர்ப்பதாய் உருவகிக்கப்படும் பீனிக்ஸ் பறவை மட்டுமே நினைவுக்கு வந்தது.

கிளிநொச்சியின் நெற்பயிர்ச் செய்கை தொடர்பான விடயங்களை, திட்டமிடலுக்கான நிறைவேற்று அதிகாரி மோகனபவன் அவர்கள் எம்முடன் பகிர்ந்து கொண்டார்.

இம்முறை கிளிநொச்சியிலே சிறுபோகப் பயிராகவும் பருவம் பிந்திய பயிராகவும் நெல் விதைக்கப்பட்டது. ஏறத்தாழ 6000க்கும் அதிகமான ஏக்கர் நிலப்பரப்பிலே நெற்பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்பட்டது.

சிறுபோகத்தின் போது, சில குறிப்பிட்ட பிரதேசங்களில் மட்டுமே நெற்செய்கை மேற்கொள்ளப்பட தீர்மானிக்கப்பட்டதால் மீளக்குடியமர்ந்த விவசாயிகளின் மத்தியில் குடும்பம் ஒன்றுக்கு 2 ஏக்கர் நிலப்பகுதிகளாக வயற் காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.

4000 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலப்பகுதிக்கு இரணைமடுக் குளத்திலிருந்து நீர் பெறப்பட்டுள்ளது. அது தவிர வன்னெரிக்குளம், அக்கராயன் குளம், கரியாலை நாகபடுவான் குளம் ஆகியவற்றிலிருந்து மிகுதி விளை நிலங்களுக்கும் நீர் பெறப்பட்டது.

யாவற்றையும் இழந்து தற்போது மீளக்குடியேறியுள்ள விவசாயிகளுக்கு உதவும் வகையிலே, கமநலசேவைகள் திணைக்களத்தினால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் 2 ஏக்கர் நிலம் உழுது கொடுக்கப்பட்டது.கமநல சேவைகள் திணைக்களத்திடம் இருப்பிலிருக்கும் உழவு இயந்திரங்களின் பற்றாக்குறை காரணமாக, அவ்வாறு விளைநிலத்தை உழுது கொடுக்க முடியாத பட்சத்தில் ஒரு ஏக்கருக்கான உழவுக் கூலியாக ரூபா 4000/- வழங்கப்பட்டது. இது தவிர, 2 ஏக்கர் விளைநிலத்துக்குத் தேவையான விதை நெல்லும், மானிய விலையில் உரமும் வழங்கப்பட்டன.

இவற்றுடன் ஜப்பான், இந்தியா போன்ற நாடுகளின் உதவியுடனும் விவசாய அமைச்சின் உதவியுடனும் மானிய விலையில் சிறிய ரக உழவு இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

சிறுபோகத்துக்கே உரித்தான விளைச்சலும் கிடைக்கப் பெற்றுள்ளது. சில பகுதிகளைத் தவிர ஏனைய பகுதிகளில் எதிர்பார்த்த விளைச்சல் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அறுவடைக் காலத்திலே விவசாயிகள் எதிர்நோக்கிய பிரச்சினைகளில் ஒன்று மனிதவளப் பற்றாக் குறையாகும். நெற்பயிரைப் பொறுத்தவரையிலே, அரிவிவெட்டு, குறித்த காலப் பகுதியில் நடந்து முடிய வேண்டும். ஆனால் அதற்கான வேலையாட்களைத் தேடிப்பிடிப்பது பெருஞ்சிரமமாக இருந்தது.

இந்தப் பிரச்சினைகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலேயே அறுவடை இயந்திரம் ஒன்று பரவலாகப் பாவனைக்கு வந்துள்ளது. அது வன்னி மக்களுக்கு ஏலவே பரிச்சயமானது தான்.

மிக இலாவகமாக அரிவி வெட்டி நெல்லைப் பிரித்தெடுத்து தூற்றித்தரும் அந்த இயந்திரம் ஒரு இந்தியத் தயாரிப்பாகும். 1/4 ஏக்கர் விளை நிலத்தின் அறுவடையை 10 - 15 நிமிடத்தில் பெற்றுத் தரும் இவ்வியந்திரம் கடந்த சிறு போகத்திலே கிளிநொச்சி பிரதேசத்தில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டதைக் காண முடிந்தது.

இவ்வியந்திரத்தின் பயன்பாட்டால் செலவையும் நேர விரயத்தையும் குறைக்க முடியுமென விவசாயிகள் கருத்துத் தெரிவித்திருந்தனர். ஆயினும் விளைநிலம் ஈரப்பற்றாக இருக்கும் பட்சத்தில் இவ்வியந்திரத்தைப் பயன்படுத்த முடியாததொரு நிலை காணப்படுவதாகக் கருத்துத் தெரிவிக்கப்படுகிறது.

ஏனெனில் இவ்வியந்திரம் பெரிய பார இயந்திரமாக இருப்பதால் அதன் சில்லுகள் சேற்றினுள் புதையத் தலைப்படுகின்றன. அத்தகைய சந்தர்ப்பங்களில் அரிவு வெட்டுக்கு மனித வளமே பயன்படுத்தப்படுகிறது.

ஏறத்தாழ 48 இலட்சம் ரூபா பெறுமதியான அவ்வியந்திரங்களைத் தனியார் கொள்வனவு செய்து, விவசாயிகளிடம் வாடகைக்கு விடுகின்றனர். ஏக்கர் ஒன்றிற்கான வாடகையாக ஏறத்தாழ ரூ. 5000 அறவிடப்படுகிறது.

கமநல சேவைகள் திணைக்களத்திடமோ அல்லது விவசாயத் திணைக்களத்திடமோ அத்தகைய அறுவடை இயந்திரங்கள் இருந்தால் விவசாயிகள் குறைந்த செலவில் அறுவடையை மேற்கொள்ள முடியுமென்பது பலரின் ஆதங்கமாக இருக்கிறது.

ஆயினும் இந்திய அரசிடமும் சில நிறுவனங்களிடமும் இந்த இயந்திரம் தொடர்பான உதவிகள் திணைக்களத்தினால் கோரப்பட்டிருப்பதாகத் தெரிய வருகிறது. அத்தகைய உதவிகள் கிடைத்தால் எதிர்வரும் காலப் போகத்தின் அறுவடைக்கு அவற்றைப் பயன்படுத்தும் சாத்தியக் கூறுகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு இயந்திரத்தினால் அறுவடை செய்யப்படும் நெல், காய விடப்பட்டு மூடைகளில் சேகரிக்கப்படுகிறது.

இம்முறை கிளிநொச்சிப் பிரதேசத்திலே அறுவடை செய்யப்பட்ட நெல்லானது, வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் நெல் சந்தைப்படுத்தும் சபையினால் கொள்வனவு செய்யப்படுகிறது.ஒவ்வொரு குடும்பத்துக்கும் 2 ஏக்கர் நிலமே நெற் செய்கைக்காக வழங்கப்பட்டதால் அவர்களிடமிருந்து தலா 4000 கிலோ கிராம் நெல் அச்சபையினால் கொள்வனவு செய்யப்படுகிறது. இவை தவிர பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களாலும் நெல் கொள்வனவு செய்யப்படுகிறது. தத்தமது பிரதேசத்தில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை, அரசு வழங்கும் பணத்தைக் கொண்டு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் கொள்வனவு செய்கின்றன.

விவசாயிகளின் நலன் கருதி, தனியாரின் கொள்விலையுடனும் தற்போதைய விற்பனை விலையுடனும் ஒப்பிடுகையில் சற்று அதிகமான விலைக்கே கூட்டுறவுச் சங்கங்கள் நெல்லைக் கொள்வனவு செய்கின்றன. அவ்வாறு கொள்வனவு செய்த நெல்லை, கொழும்பிலோ வவுனியாவிலே விற்பதாயின், தற்போதைய சந்தை நிலவரத்தின் அடிப்படையில் அவை நட்டமடைய வேண்டிய நிலையே காணப்படுகிறது. ஆதலால் ஒன்றில் அவ்வாறு கொள்வனவு செய்த நெல்லை அவர்கள் சேமித்து வைக்க வேண்டும். இல்லையேல், நெல்லை அரிசியாக்கி விற்பனை செய்ய வேண்டும்.

யுத்தத்தின் கொடூரத்தால் தமது உடைமைகளை இழந்திருக்கும் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் களஞ்சிய வசதியின்மையாலும் அரிசி ஆலை வசதியின்மையாலும் பெருச்சிரமங்களை எதிர்நோக்கு கின்றன. தனியாருக்குச் சொந்தமான கட்டடங்கள் திருத்தப்பட்டு, பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களால் கொள்வனவு செய்யப்படும் நெல் மூடைகள் அங்கே சேமித்து வைக்கப்படுகின்றன.

இத்தகையதோர் நிலையில் விவசாயிகளிடம் மீதமாக இருக்கும் நெல் மூடைகளைப் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் கொள்வனவு செய்வதன் சாத்தியப்பாடுகள் கேள்விக்குறியாகவே இருக்கின்றன. ஆயினும் விவசாயிகளின் நலன் கருதியும், தமக்குக் கிடைக்கும் அரச உதவியைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்வதற்காகவும் தம்மால் இயன்றவரை அவை நெற்கொள்வனவை மேற்கொள்கின்றன.

எதிர்வரும் காலபோகத்துக்காக, இவ்வருடம் ஒக்டோபர் மாதத்திலே விளைநிலங்கள் விதைக்கப்படவிருக்கின்றன. கைவிடப்பட்ட விளை நிலங்களையும் விதைக்கும் திட்டங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. ஆகையால் ஏறத்தாழ 40,000 ஏக்கர் நிலத்திலே நெற் செய்கையை மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த சிறுபோகத்தைப் போலவே, எதிர்வரும் காலபோகத்துக்கும் விவசாயிகளுக்கு உரமானியம், விதைநெல், உழவு உதவிகள் வழங்கப்படவிருக்கின்றன. உழவு இயந்திரங்கள் மற்றும் அறுவடை இயந்திரங்களுக்குப் பற்றாக்குறை நிலவுவதால், அத்துறைகளில் தனியார் முதலீடுகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதாவது விவசாயத்துக்குத் தேவையான இயந்திரங்களை தனியாரிடம் குத்தகைக்குப் பெறக்கூடிய சூழலொன்று உருவாகலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. அதேபோல் உழைப்பை நோக்காகக் கொண்டு, வெளிமாவட்ட மக்கள் கிளிநொச்சியை நோக்கி நகரும் வாய்ப்புகளும் அதிகமாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


எந்த ஒரு உடைமையும் இல்லாமல், கிடைத்த சில உதவிகளுடன் மீளக்குடியமர்ந்து தமது பழைய வாழ்வைத் தொடங்க முயல்கின்றனர் கிளிநொச்சி விவசாயிகள். அவர்களுக்கு இவ்வாறு வழங்கப்படும் உதவிகள், அறுவடையின் பின்னர் தமது பழைய வாழ்வை மீட்பதற்கான ஒரு சிறு முதலீட்டை சேமிப்பாகத் தரும் என எதிர்பார்ப்பதில் தவறேதுமில்லை.

தற்போது என்றுமில்லாத அமைதியொன்று குடி புகுந்திருக்கும் கிளிநொச்சிப் பிரதேசத்தின் வயல் வெளிகளைத் தழுவி வரும் தென்றலின் காலடியில் மனம் தானே சரணடைந்துவிடும் என்பதும் கண்கூடு.

இந்த வயல் வெளிகளும் அடர்ந்த மரங்களும், சிதையாத குளங்களும் தான் கிளிநொச்சிப் பிரதேசத்தின் செழுமையை உலகுக்கு எடுத்துச் சொல்கின்றன. எனினும் நிலையான, நிறைவான அபிவிருத்திக்காக கிளிநொச்சிப் பிரதேசம் நெடுந்தூரம் பயணிக்க வேண்டியிருக்கின்றது என்பதை எவராலும் மறுக்க முடியாது. ஆனால் அபிவிருத்தித் திட்டங்கள் செம்மையாக நடைமுறைப்படுத்தப்படும்போது கிளிநொச்சியின் அழகும் செழுமையும் மேன்மேலும் மிளிரும் என்பதில் எதுவித ஐயமுமில்லை.

Sunday, August 22, 2010

நல்லை நகரில் உறையும் அலங்காரக் கந்தன்

“பஞ்சம் படை வந்தாலும்
பட்டினி தான் வந்தாலும்
அஞ்சுவமோ நாங்களடி கிளியே,
நல்லூர் கந்தன் தஞ்சமடி”


என்று நல்லைக் கந்தனின் புகழை யோகர் சுவாமிகள் கூறுகிறார். தமிழர்களின் கடவுளாகவும் குறிஞ்சி நிலத்தின் தெய்வமாகவும் போற்றப்படுபவன் முருகன். முருகன் என்றால் அழகன் என்பர். அழகன் என்றால் இலங்கை வாழ் மக்களைப் பொறுத்தவரையில் மனக் கண்ணில் தெரிபவன் நல்லூர்க் கந்தனேயாவான்.

இலங்கையிலே உள்ள பிரபல முருகன் கோவில்கள் ஒவ்வொன் றையும் ஒவ்வொரு பெயர் சொல்லி அழைப்பர். செல்வச் சந்நிதியில் உறையும் இறைவனை அன்னதானக் கந்தன் என்றும், கதிர்காமத்திலே உறையும் இறைவனை காவற் கந்தன் என்றும் அழைப்பர். அதேபோல அலங்காரக்கந்தன் என்று அழைக்கப்படும் முருகன் நல்லூர் பதியிலே உறையும் இறைவனாவான்.

ஒரு காலத்திலே யாழ். மண் சைவத்துக்கும் தமிழுக்கும் பெயர் போனதாய் அமைந்திருந்தது. கந்தபுராணக் கலாசாரத்தை அடியொற்றி, யாழ்ப்பாணக் கலாசாரம் எனத் தனக்கேயுரித்தான கலாசாரப் பாங்கையும் தனித்துவத்தையும் பேணி வந்தது.

மூலைக்கு மூலை, வீதிக்கு வீதி, கிராமத்திற்குக் கிராமம், நகரத்திற்கு நகரம் என எங்கு பார்த்தாலும் சிறியதும் பெரியதுமாக கோயில்களால் நிறைந்து காணப்படும் மண்ணாகக் காணப்பட்டது. இன்றும் காணப்படுகிறது. யாழ். மண்ணின் தொன்மைக்குச் சான்றாக இன்றும் தலைநிமிர்ந்து நிற்கும் ஊர்களுள் நல்லூரும் ஒன்றாகும்.

இலங்கையின் வட பகுதித் தமிழர்களின் இராசதானியாகவும் யாழ்ப்பாண இராச்சியம் அந்நியர் கைகளிலே வீழும் வரை அதன் தலைநகராகவும் நல்லூர் விளங்கியது.

நல்லூர் என்றதுமே யாவரது நினைவுகளையும் நிறைப்பது நல்லூர்க் கந்தசுவாமி கோயிலாகும். யாழ்ப்பாண வைபவ மாலை, கைலாய மாலை போன்ற தொன்மையான நூல்களிலிருந்தும் ஈழத்துடன் தொடர்புடைய இலக்கிய நூல்களிலிருந்தும் வரலாற்றுக் குறிப்புக்களிலிருந்தும் இக்கோயிலின் தொன்மையை அறிய முடியும்.

கி. பி. 12 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து கி. பி. 17 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை யாழ்ப்பாண இராச்சியத்தின் தலைநகரமாக நல்லூர் விளங்கியது. அவ்விராச்சியத்தின் இறுதிக் காலத்தில் நல்லூரிலிருந்த மிகப் பெரிய கோவில் இக்கந்தசுவாமி கோவிலேயென போர்த்துக்கேயரின் வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிப்பதாகக் கூறப்படுகிறது.

இக்கோயிலின் தோற்றம் பற்றிய சரியான தெளிவு இதுவரை காணப்படவில்லை. ஆயினும் யாழ்ப்பாண அரசு அமைந்திருந்த காலப் பகுதியில் இக்கோயில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருந்தது என்பதில் எவரும் ஐயம் தெரிவிக்கவில்லை.

யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்ட ஆரிய சக்கரவர்த்திகளின் வம்சத்தின் முதலாவது அரசனான கூழங்கைச் சக்கரவர்த்தியின் அமைச்சன் புவனேகவாகுவால் இக்கோயில் கட்டுவிக்கப்பட்டதென யாழ்ப்பாண வைபவ மாலையும் கைலாய மாலையும் கூறுவதாகச் சிலர் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

15ஆம் நூற்றாண்டிலே, யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய கோட்டே அரசனான ஸ்ரீ சங்கபோதி புவனேகபாகு எனப்படும் சண்பகப் பெருமாளால் கட்டப்பட்டதாக ஒரு சிலர் கருத்துத் தெரிவிக்கின்றனர். இதற்கு ஆதாரமாக அவர்கள் குறிப்பிடுவது, கோயிலிலே இன்றும் கூறப்பட்டு வரும் கட்டியம் ஆகும். இக்கட்டியம் சமஸ்கிருதத்திலே கூறப்பட்டு வருகிறது.

முன்னர் சிறியதாகவிருந்த கோயிலைத் தனது ஆட்சிக் காலத்தில் புவனேகபாகு பெருப்பித்துக் கட்டியிருக்கக் கூடும் என்று கருத்துத் தெரிவிப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

கிழக்கே வெயிலுகந்த பிள்ளையார் கோயில், தெற்கே கைலாசநாதர் கோயில், மேற்கே வீரமாகாளி அம்மன் கோயில், வடக்கே சட்டநாதர் கோயில் ஆகிய கோயில்களை நாற்றிசைகளிலும் அரணாகக் கொண்டு அமைந்திருக்கிறது நல்லூர்க் கந்தசுவாமி கோயில்!

யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய போர்ததுக்கேயத் தளபதியாகிய பிலிப் டி ஒலிவேரா, 1620 இல் தனது அரசின் தலைநகராக யாழ்ப் பாணத்தை மாற்றினான். அதையடுத்து நல்லூர் கந்தசுவாமி கோயிலை இடித்து தரைமட்டமாக்கும்படி உத்தரவிட்டான்.

அவ்வாறு இடித்துப் பெறப்பட்ட கற்கள் யாழ்ப்பாணத்தில் கோட்டை கட்டுவதற்குப் பயன்படுத் தப்பட்டதாகத் தெரியவருகிறது. அத்துடன் கோயில் இருந்த இடத்திலே போர்த்துக்கேயர் சிறிய கத்தோலிக்க தேவாலயமொன்றை அமைத்திருந்தனர். ஆட்சி ஒல்லாந்தரிடம் கைமாறிய போது அவர்கள் அதனை புரட்டஸ்தாந்த கிறிஸ்தவ தேவாலயமாக மாற்றினர்.

ஒல்லாந்தர் ஆட்சியின் இறுதிக் காலகட்டத்திலே இந்துக் கோயில்கள் பற்றிய இறுக்கமான நிலைப்பாடு தளர்வடைந்தது. நல்லூர்க் கந்தசுவாமி கோவிலும் மீள அமைக்கப்பட்டது. முன்னைய இடத்தில் கிறிஸ்தவ தேவாலயம் இருந்தபடியால் இன்னொரு இடத்தில் கோயிலை அமைத்தனர். அந்தக் கோயிலே இன்று நாம் காணும் நல்லைக் கந்தன் ஆலயம் ஆகும்.

நல்லூரிலே இன்று பாழடைந்து காணப்படும் யமுனாரிக்கு செல்லும் ஒழுங்கையில் அதற்கண்மையில் காணப்படும் கட்டடச் சிதைவுகள் நல்லைக் கந்தனின் பழைய கோயிலின் மதிலுக்குரியவையென கலாநிதி கந்தையா குணராசா குறிப்பிடுகிறார்.

அகத்தியனுக்குத் தமிழைத் தந்தவனாகவும் ஒரு நாவற்பழத்தை வைத்தே ஒளவையாருக்கு ஞானத்தை அருளியவனாகவும் குமரகுருபரருக்கு பேச்சுத்திறனை அளித்தவனாகவும் முத்து சுவாமி தீட்சிதருக்கு பாடும் வல்லமையை அருளியவனாகவும் முருகன் ஒரு தமிழ்க் கடவுளாகவே சித்தரிக்கப்படுகிறான்.நல்லூர்க் கந்தசுவாமி கோயிலை இரகுநாத மாப்பாண முதலியார் வம்சத்தினரே பரம்பரை பரம்பரையாக நிர்வகித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ். மண்ணிலே வாழ்பவர்கள் மட்டுமன்றி இலங்கை வாழ் தமிழர்கள் மற்றும் புலம் பெயர் தமிழர்கள் மத்தியிலும் நல்லூர்க் கந்தன் பிரபலமானவன்.

நல்லூர்க் கந்தனை இறைவனாய் வரித்து உயரத்தில் வைத்தாலும் தமது வீட்டு உறுப்பினர்களுள் ஒருவனாய் வரித்து உரிமையுடன் வழிபடும் வழக்கத்தை முருகனடியார்கள் யாவர் மத்தியிலும் காணமுடியும். அவர்கள் முருகன் மீது அளப்பரிய அன்பும், அவ்வன்பை மீறிய பக்தியும் கொண்டு உரிமையுடன் சேவிப்பவர்கள்.

நல்லை முருகனும் ஒன்றும் சளைத்தவனல்லவே. அவன் எவர்க்கும் அடிபணிந்ததில்லை. எவருக்காகவும் தனது வழக்கங்களை மாற்றியதுமில்லை. கோயிலினுள் நுழையும் போது ஆண்கள் மேலாடையைக் கழற்ற வேண்டுமென்பது நல்லூர் முருகன் கோயிலின் சட்டம். எந்த பிரபலமானவர் வந்தாலும் அந்தச் சட்டத்தை மதித்தால் தான் கோயிலினுள் செல்ல முடியும். முருகனையும் தரிசிக்க முடியும்.

உண்மையில் முன்னைய காலங்களிலே இந்தப் பாரம்பரியம் சகல இந்துக் கோயில்களிலும் பேணப்பட்டது. ஆனால் பல கோயில்கள் காலத்துடன் தமது பாரம்பரியங்களையும் மாற்ற, இந்தப் பாரம்பரியமும் இல்லாமல் போய்விட்டது.

ஆயினும் நல்லூர்க் கந்தன் ஆலயம் போன்ற ஒருசில கோயில்கள் மட்டும் இன்னும் பழைய பாரம்பரியங்களைப் பேணி வருகின்றன.

அவை அவ்வாறு பேணப்படாவிட்டால், எதிர்காலச் சந்ததிக்கு அவை பற்றித் தெரியாமலே போய்விடும் என்பது தான் நிதர்சனமான உண்மையாகும்.

இந்துக் கோயில்களிலே மிகவும் அரிதாகக் காணப்படும் வழக்கங்களுள் நேரந்தவறாமையும் ஒன்றாகும். நல்லைக் கந்தன் ஆலயத்தின் பூசைகளாயினும் சரி, திருவிழாவாயினும் சரி, குறித்த நேரத்திலே நடந்தேறும். எவருக்காகவும் முருகன் தனது நேர அட்டவணையை மாற்றமாட்டான். மழையோ வெயிலோ பூஜைகள், வீதியுலா யாவுமே குறித்த நேரத்தில் நடந்தேறும்.

1996 ஆம் ஆண்டு காலப் பகுதியிலே மக்களின் மின் பாவனையைக் குறைப்பதற்காக இலங்கையின் நேரம் மாற்றப்பட்டது. ஆனால், நல்லூர் முருகனின் பூஜை நேரங்கள் எவையும் புதிய நேர மாற்றங்களுக்கமைய மாற்றப்படவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

பணத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வரும் இன்றைய காலத்தின் போக்கு கோயில்களையும் விட்டு வைக்கவில்லை என்பது ஜீரணிக்க முடியாத ஒரு உண்மையாகும். அர்ச்சனைச் சீட்டுக்களிலும் இறை தரிசனத்திலும் பணத்திற்கு முக்கியத்துவம் வழங்குவதாகவே பெரும்பாலான கோயில்கள் இன்று காணப்படுகின்றன.

ஆனால் அன்றிலிருந்து இன்று வரை நல்லூர் முருகன் ஆலயத்திலே அர்ச்சனைச்சிட்டையின் பெறுமதி ஒரு ரூபா மட்டுமே. அத்துடன் நீங்கள் எவ்வளவு பணம் கொடுத்தாலும் அவ்வளவு பெறுமதிக்கும் அர்ச்சனைச்சிட்டைகள் தான் கிடைக்குமே தவிர மீதிப்பணம் கிடைக்காது.

பணமிருந்தால் தான் சுவாமி தரிசனம் என்ற இன்றைய காலத்திலும் ஏழையென்ன பணக்காரன் என்ன யாவரும் என்னடியில் சமன் என உணர்த்தி நிற்கிறான் நல்லூர்க் கந்தன்.

கடும் யுத்தம் மற்றும் இடப்பெயர்வுக் காலங்களைத் தவிர இக்கோயிலின் நித்திய நைமித்தியங்கள் நேரம் தவறாமல் இடையறாது நடைபெறுகின்றன. உற்சவங்களும் அவ்வாறே!

ஆடி அமாவாசையிலிருந்து ஆறாம் நாள் கொடியேறி 25 நாட்கள் இக்கோயிலின் மகோற்சவம் நடைபெறும்.

எங்கிருந்தாலும் இந்த உற்சவ காலத்திலாவது நல்லைக்கந்தன் அடியார்கள் ஊருக்கு வந்துவிடுவர். வரமுடியாதவர்கள் கூட விரதமிருந்து பயபக்தியோடு முருகனை வழிபடுவர்.

கொடியேற்றத்துடன் ஆரம்பித்து மஞ்சம், கார்த்திகை, கைலாய வாகனபவனி, தங்கரத பவனி, மாம்பழத்திருவிழா, சப்பைரதம், தேர்த்திருவிழா, தீர்த்தம், பூங்காவனம் ஆகிய முக்கிய திருவிழாக்களையடுத்து வைரவர்மடையுடன் உற்சவம் நிறைவுறும். ஒவ்வொரு திருவிழாவின் போதும் ஒவ்வொரு புதுவித அலங்காரத்துடன் ஐயன் முருகன் ஆடிவரும் அழகை வார்த்தைகளால் விபரிக்க முடியாது.

இதற்காகத்தானோ அவனை ‘அலங்காரக் கந்தன்’ என அழைக்கிறார்கள் என எண்ணத்தோன்றும். முக்கிய திருவிழாக்களின் போது முத்துக்குமாரசுவாமியும் ஏனைய நாட்களில் மூலவராகிய வேலும் வீதியுலா வருவர். உற்சவ காலத்திலே காலையும் மதியமும் உள்வீதியை வலம் வரும் மூர்த்தி மாலையிலே வெளி வீதியை வலம் வருகிறார்.
சிறுவர் முதல் பெரியவர்கள் வருடாந்தம் நல்லூரானின் உற்சவத்தை எதிர்பார்த்துக் காத்திருப்பர் என்றால் மிகையாகாது. உற்சவ காலங்களிலே கோயில் மட்டுமன்றி முழு ஊருமே களைகட்டி இருக்கும்.

கோயில் வீதிகளில் சனத்திரளின் மத்தியிலே முருகன் அசைந்து அசைந்து வரும் காட்சியைக் காணக் கண் கோடி வேண்டும். அங்கப் பிரதட்சனை செய்பவர்கள், அடி அழிப்பவர்கள், கற்பூரச்சட்டி எடுப்பவர்கள், காவடி எடுப்பவர்கள் அருள் வந்து ஆடுபவர்கள் என தம்மால் இயன்ற வழியில் நேர்த்திக்கடன் செலுத்தும் அடியவர்களும் வீதியில் நிறைந்திருப்பர்.

எவ்வளவு துன்பங்கள், கவலைகள், இழப்புகளைச் சந்தித்த போதும் ‘உன்னையல்லால் துணை எவரும் உண்டோ?’ என முருகனைத் தேடி லட்சக்கணக்கில் திரண்டிருக்கும் பக்தர்களைக் காண மெய்சிலிர்க்கும்.

ஈழத்துச்சித்தர் பரம்பரைக்கு களமாக அமைந்ததும் நல்லூர் தேரடி என்றால், எவராலும் மறுக்கமுடியாது... இதே நல்லூரின் வீதி தான், பல யாகங்களுக்கும் களமாய் அமைத்ததை எந்த ஒரு தமிழனும் மறக்க மாட்டான்..

நல்லூர்க்கந்தசுவாமி கோயிலின் உற்சவகாலங்களிலே கடை வீதிகளும் களைகட்டிப்போயிருக்கும். யாழ்ப்பாணத்தின் பிரபலமான ஐஸ்கிaம் கடைகள் எல்லாம் பெரிய பந்தல் அமைத்திருக்கும். உற்சவகாலங்களிலே அவற்றின் விற்பனையும் அமோகமாக இருக்கும். கடலைக்கடைகளும் சுண்டல்கடைகளும் தண்ணீர்ப்பந்தல்களும் வீதியெங்கிலும் நிறைந்து காணப்படும். இவை தவிர பலதரப்பட்ட வயதினரையும் கவரும் வகையிலே கடை வீதிகளை கட்டிக்காணப்படும்.

ஏறத்தாழ 15 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற நல்லூர்த் திருவிழாவிலே அமைக்கப்பட்ட கண்காட்சி அரங்குகளும் பொய்க்கால்க்குதிரை ஆட்டமும் தஞ்சாவூர் பொம்மைகளும் இன்றும் மனக்கண்ணில் பசுமையாய் நிழலாடுகின்றன. திருவிழாவிலே சுவாமி தரிசனத்தைப் பகுதிநேர வேலையாய் வைத்துக்கொண்டு கடலையைக் கொறித்து ஐஸ்கிaமைச் சுவைத்து அரட்டை அடிப்பதற்காகவே காத்திருக்கும் இளம்பருவத்தினரையும் இங்கு குறிப்பிடவேண்டும்.

அவையெல்லாம் அந்தந்தப் பருவத்திலே அனுபவிக்க வேண்டியவை. நல்லூர்த்திருவிழாக் காலத்தை அனுபவித்த ஒவ்வொருவருக்கும் அந்த நினைவுகள் பசுமையானவைதான். அதற்கு மதம் ஒரு தடையாக இருந்தல்ல என்பதையும் இங்கு குறிப்பிடவேண்டும்.

இம்முறை உற்சவ காலத்திலே வழக்கத்திற்கு மாறாக, சகல இனத்தவரும் கலந்துகொள்வதாலும், நவீன நாகரீகத்தை எளிதாகப் பற்றிக்கொள்ளும் இளஞ்சந்ததியினர் அதிகளவில் கலந்துகொள்வர் என எதிர்பார்க்கப்படுவதாலும் கோவிலுக்குள் செல்லும் போது உடுத்தியிருக்க வேண்டிய உடை தொடர்பாகக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக்கிறது.இது வரவேற்கப்படத்தக்க விடயமாகும். கோயில் குளங்களோடும் இறைவழிபாட்டோடும் ஒன்றிப்போன வழங்கங்களை உடைய உயரிய பண்பாடு எங்கள் பண்பாடு.

வைகறைப்பொழுதிலே ‘முருகா’ எனக் கூவியழைத்து பெருவீதி மணலிலே உடல்புரண்டு பிரதட்டை செய்யும் எம்மவரின் பக்திமழையைக் காண்கையில் எங்கள் இனம்; எங்கள் மொழி; எங்கள் முருகன்; எங்கள் இறை நம்பிக்கை; இவற்றுக்கெல்லாம் ஏதுகுறையென இவ்வளவு காலமும் மார்தட்டிவந்தோம். இனியும் அப்படியே இருக்க வேண்டும் என்பதுதான் எம் யாவரது அவாவும் கூட. அது வேறு எவர்கையிலும் இல்லை. எமது கைகளிலேயே இருக்கிறது. முயன்றுதான் பார்ப்போமே?

உங்கள் வீடுகளிலும் மின்சாரத்தை சேமிக்க...

மின்விளக்குகள்
நீங்கள் பாவிக்கும் மஞ்சள் ஒளி மின் குமிழ்களைத் தவிர்த்து வெள்ளொளி மின் குமிழ்களை உபயோகிக்கவும். வெளிச்சம் தேவையான நேரங்களில் மட்டுமே மின் விளக்குகளைப் பாவியுங்கள்! நீங்கள் செலுத்தும் மின் கட்டணமானது, மின் விளக்குகளின் எண்ணிக்கை, அவற்றின் வலு, அவை பாவிக்கப்படும் நேரம் ஆகியவற்றில் மட்டுமே தங்கியுள்ளது என்பதை நினைவில் வைத்திருங்கள்!


குளிர்சாதனப் பெட்டிகள்
குளிர்சாதனப் பெட்டியின் கதவைத் திறக்க முதல் ஒரு கணம் சிந்தியுங்கள். வெளியில் எடுக்க வேண்டிய பொருட்கள் எவை? உள்ளே வைக்க வேண்டிய பொருட்கள் எவை? எனத் தீர்மானித்த பின்னரே கதவைத் திறக்க வேண்டும்.

அடிக்கடி கதவைத் திறப்பதையும் தவிர்க்க வேண்டும். குளிர்சாதனப் பெட்டியில் ஏதாவது பழுதுகள் இருந்தால் உடனேயே திருத்திவிட வேண்டும்.

குளிர்சாதனப் பெட்டியைப் பொருட்களால் நிறைக்கக்கூடாது. சூரிய ஒளி நேரடியாகப்படும் இடங்களிலோ, வெப்பம் பிறப்பிக்கப்படும் இடங்களிலோ குளிர்சாதனப் பெட்டியை வைக்கக் கூடாது. அதேபோல் சூடான பொருட்களையும் குளிர்சாதனப் பெட்டியினுள் வைக்கக்கூடாது.


மின்னழுத்திகள்
அழுத்தப்படுவதற்குக் குறைந்தளவு வெப்பம் தேவைப்படும் ஆடைகளிலிருந்தே அழுத்த ஆரம்பிக்க வேண்டும். அதேபோல மின்னழுத்தியின் மின்னிணைப்பைத் துண்டித்த பின்னரும் அதன் வெப்பம் குறையும் வரை குறைந்தளவு வெப்பம் தேவைப்படும் ஆடைகளை அழுத்த வேண்டும்.

அடிக்கடி மின்னழுத்தியைப் பாவிக்காமல், ஒரே தடவையிலேயே பல ஆடைகளை அழுத்தப் பழக வேண்டும். மின்னழுத்தியை ஒருபோதும் நிலைக்குத்தாக வைக்கக் கூடாது. நீராவி அழுத்திகள் சிக்கனமானவையாகும்.

வெப்பத்தைத் தெறிப்படையச் செய்யக்கூடியதாக அழுத்தும் மேசைகளின் மேற்பரப்பு அமைய வேண்டும். ஆடைகளை அழுத்த முதல் அவசியம் அழுத்த வேண்டுமா எனச் சிந்தித்து தேவையாயின் மட்டுமே அழுத்த வேண்டும்.


தொலைக்காட்சிகளும் கணினிகளும்
பலர் தொலைக்காட்சி பார்த்து முடிந்தபின் தொலை இயக்கியால் அதன் இயக்கத்தை நிறுத்திவிடுவர். அவ்வாறு தொலைக்காட்சியின் இயக்கம் நிறுத்தப்படும் போது அதற்குத் தேவையான வலு 7.3 w ஆகும். அதாவது மாதாந்தம் 5.3 அலகுகள் மின்சாரம் தேவைப்படுகிறது-

ஆகையால் தொலைக்காட்சி பாவிக்கப்படாத சந்தர்ப்பங்களில் அதன் ஆளியைத் திறந்து மின்னிணைப்பைத் துண்டிப்பதன் மூலம் மின் சக்தியைச் சேமிக்கலாம்.

அதேபோன்ற செயற்பாட்டை (Standby) கணினியில் மேற்கொண்டால் கணினிக்குத் தேவையான வலு 60 w ஆகும். இதனால் மாதமொன்றிற்கு 43 அலகுகள் மின்சாரம் தேவைப்படுகிறது. கணினிப் பாவனையாளர்கள் இதை உணர்வதில்லையென்பதும் குறிப்பிடத்தக்கது.


மின் விசிறிகள்
சாதாரண மின் விசிறிகளைவிட மேசை மின் விசிறிகள் சிக்கனமானவை. முன்னர் பாவனையிலிருந்த மின் விசிறிகள் எவ்வளவு வேகமாகச் சுழன்றாலும் ஒரேயளவிலான மின்சாரத்தையே உள்ளெடுக்கும். ஆனால், தற்போது பாவனையிலிருப்பவை அவ்வாறானவையல்ல.

மின் விசிறிகளிற்காகச் செலவாகும் மின்சாரத்தைச் சேமிப்பதற்கான சிறந்த வழி, காற்றோட்டமான வீடுகளை அமைத்தலாகும். இல்லாத பட்சத்தில் காற்றுச் சீராக்கிகளைப் பயன்படுத்தியும் மின்சாரத்தைச் சேமிக்கலாம்.


மூலம் : மின்வலு எரிசக்தி அமைச்சின் இணையத்தளம்

பசுமைப் பொருளாதாரத்தை நோக்கிய பயணத்தின் முதற்காலடி
அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுக்கு மத்தியில் நாம் மீளமுடியாது தத்தளித்துக்கொண்டிருக்கும் இன்றைய கால கட்டத்தில், இயன்றவரை செலவுகளைக் குறைத்து கடனின்றி வாழ்வது பிரம்மப் பிரயத்தனம்தான்.

பணத்தை சுளையாகச் செலுத்த வேண்டிய மின் கட்டணம் போன்ற செலவுகளைக் குறைக்க முயற்சித்தாலே, கடனின்றி வாழ முடியும். எமது மாதாந்த மின் கட்டணத்தின் அரைவாசிக்குப் பொறுப்புக் கூற வேண்டியது எமது அலட்சியப் போக்குத்தான் என்றால் அது மிகையாகாது.

நாம் மாதாந்தம் எவ்வளவு மின்னலகுகளைப் பாவிக்கின்றோம் என்பதை அறிந்து, பாவனையைக் குறைக்க முயற்சி செய்யலாம். அதேபோல, நாம் பாவிக்கும் ஒவ்வொரு மின்சாதனத்தின் வலு அளவுகளைத் தெரிந்து வைத்திருக்கவும் வேண்டும்.

உயர் வலு அளவுகளையுடைய மின்சாதனங்களின் பாவனையை இயன்றவரை குறைக்க முயற்சி செய்ய வேண்டும்.

பாவனையில் இல்லாதபோது, ஆளியுடனான மின்சாதனங்களின் இணைப்பைத் துண்டித்துவிட வேண்டும். அதேபோல மின் சாதனங்கள் ஏதாவது பழுதடைந்திருந்தால், அவற்றை உடனேயே பழுதுபார்த்து வைத்து விடுங்கள். ஏனெனில் பழுதடைந்த மின் சாதனங்கள் இயங்குவதற்குத் தேவையான மின்சக்தியின் அளவு சாதாரண அளவை விட அதிகமாகும்.

தேவையற்ற நேரங்களில் மின்சாதனங்கள் பாவிக்கப்படுவதைத் தவிர்ப்பதன் மூலமே பெருமளவு மின் அலகுகளைச் சேமிக்க முடியும். மின் கட்டணப் பற்றுச்சீட்டு பற்றிய தெளிவின்மையும் எம்மத்தியில் காணப்படுகிறது.

மின் அலகுகளின் பாவனையைக் கணிப்பதற்கு வரும் மின்சார சபை ஊழியர்கள் கிரமமாக 30 நாட்களுக்கு ஒருமுறை வருவது மிகவும் அரிது என்ற முறைப்பாடும் பலர் மத்தியில் காணப்படுகிறது.

சில மாதங்களுக்கான மின் கட்டணம் 30க்கும் குறைவான நாட்களுக்குக் கணிக்கப்படும். அதேவேளை சில மாதங்களுக்கான மின் கட்டணம் 30க்கும் அதிகமான நாட்களுக்குக் கணிக்கப்படுகிறது.

எமது நாட்டிலே நடைமுறையிலிருக்கும் மின்கட்டண முறைமையின்படி, ஒருவரின் மின் பாவனை மாதாந்தம் குறிப்பிட்ட மின் அலகுகளை விட அதிகமாக இருந்தால் ஒரு அலகுக்கான மின் கட்டணம் அதிகரிக்கும். மாதாந்த மின் கட்டணம் 30க்கும் அதிகமான நாட்களுக்குக் கணிக்கப்படுகையில் பெரியளவிலான தொகையைக் கட்டணமாகச் செலுத்த வேண்டிய தேவை ஏற்படுகிறது.

இத்தகைய பிரச்சினைகள் ஏற்படும் பட்சத்தில் அவற்றை உடனேயே இனங்கண்டு, சம்பந்தப்பட்ட மின்சார சபை ஊழியர்கள் முன்னிலையில் தெளிவுபடுத்திக் கொள்வதே சிறந்த வழியாகும். இல்லாவிட்டால் பணத்தை வீணாகச்செலவழிக்க வேண்டியதாகிவிடும்.

மின்சாரத்தைச் சேமிப்பதால் செலவு மீதப்படுத்தப்படுவதுடன், சுற்றுச்சூழல் ரீதியாகவும் சுகாதார ரீதியாகவும் பெறப்படும் நன்மைகள் அளப்பரியன.

முழு நாட்டுக்கும் மின்சாரத்தை வழங்குவதற்காக, மின்சாரம் பல வழிகளில் உற்பத்தி செய்யப்படுகிறது. இலங்கையைப் பொறுத்த வரையிலே நீர் மின் உற்பத்தி பிரதான இடத்தை வகிக்கிறது. இரண்டாவது இடத்தை வகிப்பது சுவட்டு எரிபொருட்கள் மூலமான மின் உற்பத்தியாகும்.

சுவட்டு எரிபொருள் பயன்பாட்டின் மூலம் மின் உற்பத்தி செய்யப்படும் போது சூழல் மாசு பெருமளவில் ஏற்படுகிறது. தேவையற்ற மின் பாவனையை ஒவ்வொருவரும் குறைக்க முயன்றால், சூழல் மாசடைதலும் பெருமளவில் தவிர்க்கப்படும்.

அதேபோல, சுற்றுச்சூழல் மாசடைவது குறைக்கப்பட்டால் சுற்றுச் சூழல் மாசால் ஏற்படும் சுகாதாரப் பிரச்சினைகளும் பெருமளவில் தவிர்க்கப்பட முடியும். அத்துடன் வீடுகளிலே மின்சாரத்தைச் சேமிக்கும் செயற்பாடுகளை மேற்கொண்டால் குடும்பச் சூழலும் ஆரோக்கியமானதாக அமையுமென்பதே ஆய்வாளர்களின் வாதமாக இருக்கிறது.

இன்றைய அவசர உலகில், வாழ்க்கை இயந்திரமயப்படுத்தப்பட்டுவிட்டது. நேரத்தை மீதப்படுத்துவதற்காகவும் வேலையைச் சுலபமாக்குவதற்காகவுமென உருவாக்கப்பட்ட மின்சாதனங்கள் ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் இருந்த குடும்பச் சூழலைச் சிதைத்துவிட்டன. ஒரு மனிதனின் உடல், உள ஆரோக்கியமான வாழ்விலே குடும்பச் சூழல் பெரும் பங்கு வகிக்கிறது.

மின்சாதனங்களின் பாவனையைக் கட்டுப்படுத்தவோ அல்லது அவற்றின் தேவையற்ற பாவனையைக் குறைக்கவோ முயன்றால் குடும்பச் சூழலும் முன்னைய காலங்களில் இருந்தது போல மாறிவிடும் சாத்தியக் கூறுகள் இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இரவிலே நேரகாலத்துடன் நித்திரைக்குச்சென்று அதிகாலையிலே எழுந்திருக்கப் பழகுவதன் மூலம் மின்சாதனங்களின் பாவனையைக் குறைக்க முடியும். அவ்வாறு அதிகாலையில் எழுந்தால் நேரமும் மீதமாகும். அதேபோல் உடல் உறுப்புகள் வேலை செய்யும் காலம் அதிகரிக்கப்பட, கொழுப்பு போன்ற உணவுகள் தேவைக்கு அதிகமாக உடலில் படிவதும் தவிர்க்கப்படும்.

குளிர் தேசங்களில், குளிரின் தாக்கத்தைக் குறைப்பதற்காக வெப்பத்தை ஏற்படுத்தும் சாதனங்கள் பாவிக்கப்படுகின்றன.

அவற்றின் பாவனையைக் குறைத்தாலே, வளிமண்டலத்துக்கு வெளியேற்றப்படும் காபனீரொட்சைட்டின் அளவைக் குறைக்கலாமெனவும் அதன் மூலம் மக்களின் சுகாதார நிலைமையை மேம்படுத்தலாமெனவும் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் இலங்கையைப் பொறுத்த வரையிலே அத்தகைய உபகரணங்களின் பாவனை மிகவும் அரிதாகவே காணப்படுகிறது.

வீட்டிலேயே முடங்கிக் கிடக்காமல், வெளியே சென்று வருவதன் மூலம் மின்சாரத்தைச் சேமிக்க முடியுமெனவும் எது ஆரோக்கியமானதெனவும் கருதப்படுகிறது. ஏனெனில் மனித உடல், இயற்கை ஒளியை விட்டமின்களாகவும் கனியுப்புக்களாகவும் தொகுக்கும் வல்லமையுடையது.

அத்துடன், வீட்டுக்குள் இருக்கும் போதுதான் மின்சாதனங்களின் பாவனைக்கான தேவையும் அதிகமாகக் காணப்படுகிறது.

ஒரு மாடியாயினும் மாடிப் படிகளில் எறி இறங்குவதற்கு பலர் மின்னுயர்த்திகளையே பயன்படுத்துகின்றனர். படிகளில் ஏறமுடியாதோர் தவிர ஏனையோர் மாடிப் படிகளில் ஏறி இறங்குவதை வழக்கமாகக் கொள்ளலாம். இது மின்சாரத்தைப் பெருமளவில் சேமிக்க உதவுவதோடு இருதய நோய்களின் தாக்கத்தையும் குறைக்கும். அதுமட்டுமன்றி, மின் தூக்கிகளில் பலருடன் பயணிக்கும் போது ஏற்படும் நோய்த்தொற்று அபாயமும் இருக்காது.

தொலைக்காட்சி, விளையாட்டுகளும் கணனி விளையாட்டுகளும் கூட இன்று பரவலாக அதிகரித்துக் காணப்படுகின்றன. அவை முன்னைய காலங்களில் வழக்கிலிருந்த பலகை விளையாட்டுக்களை வழக்கொழிந்து போகச் செய்துவிட்டன.

அவையெல்லாம் அறிவையும் மூளையையும் விருத்திசெய்யும் ஆரோக்கியமான விளையாட்டுக்களாகும். அத்துடன் குடும்பத்திலுள்ள அனைவரும் இணைந்து விளையாடக் கூடியவை. கரம், சதுரங்கம், பல்லாங்குழி போன்ற பல விளையாட்டுக்கள் அத்தகையனவேயாகும்.

விளையாடுவதற்கு மின்சாரத்தை நம்பியிருக்காத இத்தகைய விளையாட்டுக்களை மீள ஆரம்பிப்பதன் மூலமும் எமது மின் கட்டணத்தைக் குறைக்க முயலலாம். இவையெல்லாம் குடும்ப உறவுகளைப் பலப்படுத்தும் சாதனங்களே!

சுவட்டு எரிபொருள் மூலமான மின் உற்பத்தி ஏனைய வழிமுறைகளுடன் ஒப்பிடுகையில் இலகுவானதும் ஆரம்பச் செலவு குறைந்ததுமாக இருக்கிறது. இதனால் கைத்தொழில் புரட்சியை அடுத்து அத்தகைய எரிபொருள் மூலமான மின் உற்பத்தி வேகமாக வளர்ச்சியடைந்தது.

காலப் போக்கில் அந்த வளர்ச்சி சூழல் மாசடைதலை உருவாக்கியது. சூழல் மாசடைதல் பிரச்சினைகள் வளர்ச்சியின் போக்கைவிட வேகமாக அதிகரித்தன. இதன் விளைவாக பசுமை மின்சார உற்பத்திக் கொள்கைகள் வலுப்பெற்றன.

பசுமை மின்சாரம் எனப்படுவது, மீள உருவாக்கப்படக்கூடிய வளங்களின் முலம் இயன்றவரை சூழலுக்குத் தீங்கு விளைவிக்கப்படாத வகையிலே பிறப்பிக்கப்படும் மின்சாரத்தைக் குறிக்கிறது.

காற்று, சூரியன் மற்றும் அதன் ஒளி - அழுத்த சக்தி, நீர் வளம் போன்றவையே அந்த மீள உருவாக்கப்படக் கூடிய வளங்களாகும்.

இன்றைய காலங்களில் ‘பசுமை’என்ற பதம் மிகவும் பிரபலம் வாய்ந்ததாக காணப்படுகிறது. எந்தத் துறையாயினும் சரி பொருளாயினும் சரி ‘பசுமை’ என்ற அடைமொழியுடனேயே பெயரிடப்படுகிறது. சூழலுக்குத் தீங்கை விளைவிக்காதது என்ற கருத்தையே ‘பசுமை’ என்ற பதம் விளக்குகிறது.

மீள உருவாக்கப்படக்கூடிய வளங்களின் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்தால் சூழலை மாசுபடுத்தும் வாயுக்களின் வெளியேற்றம் தடுக்கப்படும். அதாவது, காபனீரொட்சைட், நைதரசன் சேர்வை வாயுக்கள், கந்தகவீரொட்சைட்டு, காபன் துணிக்கைகள் போன்ற நிலத்திலோ நீரிலோ அல்லது வளி மண்டலத்திலோ வெளிவிடப்படமாட்டாது.

இப்பதார்த்தங்கள் பொதுவாக ஏற்படுத்தும் விளைவுகளான காலநிலை மாற்றம், பார உலோகங்களின் படிவு, அமிலமழை போன்றன தவிர்க்கப்படலாம்.

அத்துடன், எரிபொருள் தேவைக்காக கனிய வளங்களை அகழ்ந்தெடுப்பதால் நிலப் பகுதிக்கு ஏற்படும் பாதிப்புகள் தவிர்க்கப்படும்.

இயற்கைச் சூழலை எந்தவிதமாசுக்களுமின்றி எமது எதிர்காலச் சந்ததிக்கு வழங்குவதற்கான முதலடியாக, மீள உருவாக்கப்பட முடியாத சக்தி வளங்களின் மூலமான மின் உற்பத்தி கருதப்படுகிறது.

பொருளாதார ரீதியாகவும் நன்மை பயக்கும் இச் செயற்பாடு வேலைவாய்ப்புக்களை அதிகரிப்பதுடன் பின்தங்கிய பிரதேசங்களின் அபிவிருத்திக்கும் வழிவகுக்கிறது.

இலங்கையில் எதிர்வரும் 2011 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவிருக்கும் புதிய மின் கட்டண முறைமை பற்றிப் பலரும் பலவிதமாக விமர்சித்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் இத்தகைய மின் கட்டணக் கொள்கைகள் எல்லாம் மின்சாதனங்களின் அவசியமற்ற பாவனையைக் கட்டுப்படுத்துவதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளன. நாம் அதற்கு இயைந்த வகையில் செயற்பட்டால் அக்கட்டண முறைமையின் உச்ச பயனைப் பெறப்போகின்றவர்களும் நாங்களே!

அவ்வாறு செயற்பட இயலாவிடில், ‘பசுமை’ மின்சாரத்தின் பாவனைக்கு நாம் மாறவேண்டும் என்பதே, இப் புதிய மின் கட்டண முறைமையின் பின்னாலிருக்கும் கொள்கையாகத் தெரிகிறது.

இலங்கையிலே காற்றாலைகள் மூலமான மின் உற்பத்தியும் சூரிய சக்தி மூலமான மின் உற்பத்தியும் அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறைக்கும் வந்துவிட்டன.

சூரிய சக்தியின் பயன்பாடு கிராமங்களையும் ஆக்கிரமித்துவிட்டது. இருளிலே மூழ்கிக்கிடந்த கிராமங்களெல்லாம் சூரிய சக்தியின் பயன்பாட்டால் ஒளியூட்டப்பட்டு வருகின்றன.

இலங்கையின் மேற்கு மற்றும் தென் பகுதியில் காற்றாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. வெகு விரைவில் காற்றுச் சக்திப் பண்ணையொன்று புத்தளத்தில் அமைக்கப்படவிருக்கிறது.

இவற்றையெல்லாம் பசுமைப் பொருளாதாரத்தை நோக்கி இலங்கையைப் பயணிக்கச் செய்யும் செயற்றிட்டங்களாகவே கருதமுடியும்.

பொதுமக்கள் மத்தியில் இவை தொடர்பான விழிப்புணர்வு ஊட்டப்பட்டால் மட்டுமே அவை 100 சதவீத வெற்றியைத் தரும் எனலாம். ஆகையால் வெகுசனத் தொடர்பு ஊடகங்கள் யாவும் ஒன்றிணைந்து அவ் விழிப்புணர்வை ஊட்ட வேண்டுமென்பதே காலத்தின் தேவையாக இருக்கிறது.

Sunday, August 8, 2010

கற்பனை வளத்தை பெருக்கும் வாசிப்புத்திறன்

வாசித்தல் என்பது குறி ப்பாக, சிறுவர்கள் மத்தியில் ஊக்குவிக் கப்பட வேண்டிய ஒரு பழக்கமாகும். இன்றைய அவசர உலகிலே, தொலைக் காட்சி என்ற சிறிய பெட்டியினுள்ளும் பிரத்தியேக வகுப்பு என்ற சிறிய உலகத்தினுள்ளும் பெற் றோர் தமது பிளைகளை முடக்கி விடுகின்றனர்.

கற்பனாசக்தியென்பது, சிறுவயதிலேயே உருவாக்கப்பட்டு வளர்க்கப்பட வேண்டிய திறனாகும். நகரமயப்படுத்தல் என்ற நெருப்பிலே குளிர்காய முயலும் இந்தச் சிறுவர்களில் பெரும்பாலானோர் புத்தகங்களைத் தேடி வாசிக்கும் ஆர்வம் குறைந்தவர்களாகவே காணப்படுகின்றனர்.

வாசித்தலானது, கற்பனை வளத்தை ஊற்றெடுக்கச் செய்யும் இலகுவான வழியாகும். எந்த வித நூலாயினும், ஒவ்வொரு வரியையும் வாசிக்கும் போது, அதன் விளக்கம் மனக் கண்ணில் படமாக ஓடும். சிந்திக்கும் ஆற்றலும் கற்பனை செய்யும் ஆற்றலும் தானே பெருகும்.

வாசித்தலைப் போல, வானொலி கேட்டலும் இத்திறன்களை விருத்தி செய்யும். மாறாக, தொலைக்காட்சியோ, ஒலி அமைப்புடன் காட்சியையும் காட்டி, பாவனையாளரின் சிந்தனையைக் குறுக்கி, தனது காட்சிகளுக்குள்ளேயே முடக்கி விடும்.

சிறுவர்களைப் பொறுத்தவரையிலே, கணனி விளையாட்டுக்களும் கூட அதே வேலையைத்தான் செய்கின்றன. ஆனால் தொலைக்காட்சியுடன் ஒப்பிடுகையில் வினைத்திறன் மிக்க வகையிலே மேற்கொள்கின்றன. அது மட்டுமன்றிச் சிறுவர்களை மாய உலகொன்றினுள்ளேயே அழைத்துச் சென்று, அவர்களின் சிந்தனைத் திறனைத் திசை திருப்பிவிடுகின்றன.

சிறுவர்களைப் பொறுத்தவரையிலே, தொலைக்காட்சிக்கு முழுநேர அடிமையாதலென்பது ஆரோக்கியமான விடயமல்ல. இயற்கையை உள்ளபடியே விபரிக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிக ளைத் தவிர்த்து, யாருடைய கற்பனை யிலேயோ உருவாகிப் பின்னர் காட்சிப் படுத்தப்படும் விவரணச் சித்திரங்கள் எமது கற்பனை வளத்தை முடக்கிவிடும்.

கேலிச்சித்திர நிகழ்ச்சிகளும் அத்தகையனவே. ‘கன்னத்தில் முத்தமிட் டால்’ திரைப்படத்தில் உருவகப்படுத் தப்பட்டிருக்கும் இலங்கையின் ‘மாங் குளம்’ கிராமம் அத்தகைய விவர ணங்களுக்கு மிகச்சிறந்த உதாரணமாகும்.

மனிதன் கடந்து வந்த பாதை பற்றிய அறிவும் தமது முன்னோர் பற்றிய அறிவும் சிறுவர்களுக்கு ஊட்டப்பட வேண்டும். அந்த விடயங்கள்தான், தாமும் சாதிக்க வேண்டும் என்ற துடிப்பையும் உணர்வையும் அவர்களிடத்தில் ஊட்டும்.

முன்னைய காலங்களிலே, சிறுவர்களுக்கான படக்கதைத் தொகுதிகள் புத்தகமாக வெளிவரும். அவற்றிலே எமது வரலாறு பற்றிய கதைகள், புராணக்கதைகள், நல்வழிக்கதைகள் என வாசிக்கத் தெரிந்த மழலையருக்குக் கூட விளங்கும் வகையிலே பல படக்கதைகள் அமைந்திருக்கும். அவை சிறுகுழந்தைகளின் மனதிலே ஏற்படுத்தும் தாக்கம் மிகவும் பெரியது.

இன்று நாம் கற்கும் வரலாற்றில் இடம்பெற்றிருக்கும் விஞ்ஞானிகள் பலர், பாடசாலைக் கல்விக்கான வாய்ப்பற்றவர்களாகவே இருந்தனர். ஆனால் அறிவிற்கான தேடல் அவர்களிடம் இருந்தது. புத்தகங்களைத் தேடிக்கற்றனர். புதிய புதிய கண்டுபிடிப்புகளும் தேற்றங்களும் கொள்கைகளும் உருவாயின.

பாடசாலை சென்று கற்காதவர் உருவாக்கியவற்றைத் தான் நாம் பாடசாலைகளிலும் பல்கலைக்கழகங் களிலும் கற்கிறோம். இந்த உதாரணமே புத்தகங்களின் சக்தி எத்தகையது என்பதை விளக்கப் போதுமானதாகும்.

புத்தகங்கள் அச்சிடப்படும் முன்னர் கீழைத்தேசங்களிலே ஓலைகளினாலான ஏடுகளில் எழுதிப் பேணும் வழக்கம் இருந்தது. இடையிலே, கடதாசிகளில் கையெழுத்துப் பிரதிகளாகப் பேணும் வழக்கமும் காணப்பட்டது. ஏடுகளில் எழுதப்பட்டுப் பேணப்படுவதற்கு முன்னர் தகவல்கள் செப்பேடுகளிலும் கல்வெட்டுகளிலும் பொறிக்கப்பட்டுப் பேணப்பட்டன.

இப்படிப் பல்வேறு வழிவகைகளிலும் எம் முன்னோர்கள் தகவல்களைப் பேணி வைத்தமையால் தான், எமது சமூகத்தின் மொழியின், சமயத்தின் தொன்மையைப் பற்றியும் அதன் வரலாற்றைப் பற்றியும் எம்மால் இவ்வளவு தூரம் பேச முடிகிறது.

‘காயசண்டிகை’ பற்றி அறிந்திருப் போம். ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றாகிய மணிமேகலையிலே, ‘யானைப் பசி’ எனும் நோயை உடைய காயசண்டிகை என்பவள், எவ்வளவு உணவை எந்த நேரம் கொடுத்தாலும் பசி அடங்காதவளாகச் சித்தரிக்கப்படுகிறாள்.

சிறுவர்கள் மத்தியிலும் அத்தகைய வாசிப்புப் பசி உருவாகினாலே போதும். அவர்கள் தம் வழியிலேயே பயணித்து தமக்கான இலக்கைச் சுலபமாக எட்டிவிடுவர். இல்லையேல் கிணற்றுத்தவளை போல, ஒரு சிறிய வட்டத்திற்குள்ளேயே தமது எதிர்காலத்தையும் முடக்கிவிடுவர்.

இன்று பிரபலமாயிருக்கும் இணையவசதிகள் மின் நூல்களையும் இணைய வாசிப்பையும் கூட பிரபல்யப்படுத்தியிருக்கின்றன.

கணனி மொழியிலே வன் பிரதிகள் என அழைக்கப்படும் கடதாசியிலே அச்சிடப்பட்ட நூல்களின் நிலையாத தன்மை, சேமித்து வைக்கும் சிரமங்கள், செலவு, அவற்றினால் உருவாகும் செலவு. அவற்றைப் பகிர்ந்து கொள்வதில் உள்ள கஷ்ட நஷ்டங்கள் போன்ற பல நடைமுறைச் சிக்கல்களை இணைய வழி வாசிப்பும் மின் நூல்களும் தவிர்த்து விடுகின்றன.

தேவையான நூல்களை இணையத்திலேயே தேடலாம். வாசிக்கலாம். தேவையேற்படின் அனுமதியுடன் தரவிறக்கலாம். ஏன், உங்களிடம் இருப்பவற்றை இணையத்திலே பதிவேற்றி மற்றவர்களுடன் பகிர்ந்தும் கொள்ளலாம்.

இவையெல்லாம், நவீன தொழில் நுட்பம் எமக்கு வழங்கியிருக்கும் வசதி வாய்ப்புகள். ஒருகாலத்திலே வன்பிரதிகளாக மட்டுமே வெளிவந்து கொண்டிருந்த சஞ்சிகைகளை இன்று மென்பிரதிகளாகவும் பெற்றுக்கொள்ள இணையம் வழிவகுக்கிறது.

வன்பிரதிகளாக அல்லாமல், மின்சஞ்சிகைகளாகவும் மின் நூல்களாகவும் பல வெளிவரத் தொடங்கிவிட்டன. உலகம் எங்கேயோ போய்க் கொண்டிருக்கிறது. அதன் வேகத்துக்கு ஆரோக்கியமான வழியிலே நாம் ஈடுகொடுக்காவிட்டால், இவ்வுலகில் எமது ஆக்கபூர்வமான நிலைப்பும் கேள்விக்குறியாகிவிடும் என்பதே நிதர்சனம்!

கழிவுகளிலிருந்தான மின்சார உற்பத்தி!

எங்கு பார்த்தாலும் சக்திப் பற்றாக்குறையை மையப் படுத்திச் செய்திகள் வரத் தொடங்கி விட்டன. மின் பாவனைக் கட்டணங்களின் மீளமைப்பு, புதிய புதிய சக்தி வளங்களின் அறிமுகம், அவற்றின் பாவனை, ஒட்டுமொத்த சக்தி வளங்களின் சிக்கனம் மிகுந்த பாவனையென சக்தித்துறை பல பரிமாணங்களை எடுத்துக் கொண்டிருக் கிறது. அவை தொடர்பான தகவல் களை நாமும் அன்றாடம் அறிகிறோம்.

மீள உருவாக்கப்படக் கூடிய சக்தி வளங்களின் பாவனையும் மீள உரு வாக்கப்பட முடியாத சக்திவளங்களின் சிக்கனமான பாவனையும் இன்றைய காலகட்டத்தில் ஊக்குவிக்கப்பட்டு கொண்டு வருகின்றன.

அந்த வகையிலே இன்று பிரபல மடைந்து வரும் மீள உருவாக்கப்படக் கூடிய சக்தி வளமாக, உயிரினங்களின் கழிவுகள் காணப்படுகிறது.

உயிர் வாயு என்றால் ‘மெதேன்’ என்று மட்டுமே அறிந்திருப்போம். ஆனால் உயிர் வாயு என்பது, மெதேன் வாயுவால் மட்டுமே ஆனதல்ல. அது மெதேன் வாயு உட்பட்ட சில வாயுக்களின் கலவையாகும்.

அடிப்படையில், உயிர்வாயு எனப் படுவது, சேதனப்பதார்த்தங்கள் ஒட்சிசன் இல்லாத நிலையில் உயிரியல் ரீதியாகப் பிரிகையடையும் போது வெளியேறும் வாயுவைக் குறிக்கும். அடிப்படையில் உயிர் வாயு இரண்டு வகைகளாகக் காணப்படுகிறது.

ஒன்று காற்றின்றிய பிரிகையால் உயிர்த்திணிவு, நகரக் கழிவுகள், பசுமைக் கழிவுகள், தாவரப் பகுதிகள், சக்தியைப் பிறப்பிக்கும் வல்லமையுடைய தாவரங்கள் போன்றவை பிறப்பிக்கும் வாயுவாகும்.

இது அடிப்படையில் மெதேன் மற்றும் காபனீரொட்சைட்டு வாயுக்களைக் கொண்டது.

மற்றையது மரக்கட்டைகள் வாயுவேற்றப்படும் (குறைதகனத்துக்குட் படும்) போது பெறப்படுவதாகும். அது அடிப்படையில் நைதரசன், ஐதரசன், காபன் ஆகிய வாயுகளைக் கொண்டிருக்கும். அத்துடன் குறிப்பிடத்தக்களவிலான மெதேன் வாயுவையும் கொண்டிருக்கும்.

மெதேன், ஐதரசன், காபன் மொனொக்சைட் போன்ற வாயுக்கள் குறைதகனத்துக்கும் உட்படும். அதே சமயம் ஒட்சிசனுடன் ஒட்சியேற்றப்படவும் செய்யும்.

இந்தக் குறைதகனம் அல்லது உயிர்ப்பொருட்களின் காற்றின்றிய பிரிகையால் உருவாக்கப்படும் உயிர்வாயு ஒரு எரிபொருளாகப் பயன்படுகிறது. உலகின் எந்த ஒரு நாடாயினும் மிகவும் செலவு குறைந்த எரிபொருளாக உயிர்வாயு காணப் படுகிறது. அத்துடன் இன்றைய நவீன உலகிலே, பலவழிகளிலும் பயன்படும். சுற்றுச்சூழல் மாசைக்குறைக்கும் வல்லமை மிக்க எரிபொருளாக காணப்படுகிறது.

இவ்வாயுவைப் பயன்படுத்தி, வாகனங்களைக் கூட இயக்க முடியும். வெப்பத்தைப் பிறப்பிக்கும் இயந்திரங்களையும் இயக்க முடிவதுடன் இயக்க சக்தியையோ மின் சக்தியையோ பிறப்பிக்க முடியும். ஏன், தெரு விளக்குகள் கூட உயிர்வாயுவினால் ஒளியூட்டப்பட முடியும்.

உயிர் வாயுவொன்றும் எமக்குப் புதிதானதல்ல. பண்டைய காலத்திலே அழுகிய மரக்கறிகள் தீப்பற்றக் கூடிய வாயுவொன்றைப் பிறப்பிப்பதை பாரசீகர்கள் கண்டுணர்ந்திருக்கின்றனர். நாடுகாண் பயணியாகிய மார்க்கபோலோ, மூடிய கழிவு நீர்த்தாங்கிகளின் பயன்பாட்டை சீனாவில் கண்டதாகத் தனது குறிப்பேட்டில் குறித்திருந்தார்.

முதலாவது கழிவு நீர்த்தாங்கி இந்தியாவின் மும்பையில் 1859 இல் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் அவ்வுயிர்க் கழிவுகளின் மூலம் உயிர் வாயுவை உற்பத்தி செய்யும் தொழில் நுட்பம் பிரித்தானியாவில் 1895 ஆம் ஆண்டிலேயே கண்டுபிடிக்கப்பட்டது.

அழிந்த விலங்கினங்களும் தாவரங் களும் குளம் குட்டைகளினுள்ளேயே கிடந்து பல நாட்கள் ஆன பின் அந்நீர்ப் பரப்பிலிருந்து வாயுக்குமிழிகள் உருவாவதையும் அவை தீவைத்தால் எரியும் தன்மையுடையனவாக இருந்த மையையும் தொன்று தொட்டு மனிதர்கள் அறிந்திருந்தனர். ஆயினும் ஏறத்தாழ 200 ஆண்டுகளுக்கு முன்பு தான் அதற்கான காரணம் கண்டறியப்பட்டது.

அழியாத, இயற்கைச் சக்தி முதலாகிய சூரியனிலிருந்து தாம்பெற்ற சக்தியைத் தாவரங்கள் இரசாயன சக்தியாகவும், அத்தாவரத்தை உண்ணும் விலங்குகள் தம் எருக் கழிவுகளில் உயிர்ச்சக்தியாகவும் பேணுகின்றன.

மனிதனானவன் கற்காலம் தொட்டு விலங்குகளின் எருக்களைக் கையாண்டு வருகின்றான் என்பது நாம் யாவரும் அறிந்த விடயமே. தாவரங்களின் பசளையாக ஆண்டாண்டு காலமாகப் பயன்படுத்தப்பட்ட அந்த எரு தான் இன்று கார்களையும் பஸ்களையும் ஒட்டவும் வீடுகளுக்கு ஒளியூட்டவும் பயன்படுகிறது என்றால் ஆச்சரியமாக இல்லையா?

இந்த விலங்குகளின் எரு ஒருங்கே சேகரிக்கப்பட்டு காற்றின்றிய நிலையிலேயே நுண்ணங்கிகளின் தாக்கத்துக்குட்படுத்தப்பட்டு உயிர் வாயு பிறப்பிக்கப்படுகிறது. பாரியளவில், நீர்மின் சக்தி பிறப்பாக்கம் போல உயிர் வாயுமூலமான மின்னுற்பத்தி நடைபெறுவது இலங்கை போன்ற அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளிலே மிகவும் குறைவாகும்.

மாறாக, வீடுகளின் வெப்பமாக்கல், ஒளியூட்டல் தேவைகளுக்காக கிராமிய மட்டங்களிலே உயிர்வாயு மூலமான மின்னுற்பத்தியின் பயன்பாடு மிகவும் அதிகமாகவே காணப்படுகிறது. அத்தகைய உயிர் வாயுத் தொகுதிகளின் பாவனையானது, விவசாயச் சமூகங்களின் உற்பத்தித் திறனைப் பெருக்குவதில் பெருந்துணை புரிகிறது.

ஏனெனில் விவசாய, கால்நடைகளின் பண்ணைக் கழிவுகள் உயிர்வாயுத் தயாரிப்பிற்குப் பயன்படுத்தப்பட்டு, அவற்றின் இறுதிவிளைவு விவசாய உரமாகவும் மண் வளமாக்கியாகவும் பயன்படுத்தப்படும். அதே சமயம், தயாரிக்கப்பட்ட உயிர் வாயுவானது சக்தித் தேவையை ஈடுசெய்யப் போதுமானதாக இருக்கும்.

மெதேன் என்பது ஒரு பச்சையில்ல வாயுவாகும். அந்நிலையில் மெதேன் வாயு மூலமான சக்திப் பிறப்பாக்கம் பச்சையில்ல விளைவைத்தோற்றுவிக்காதா? என்ற கேள்வி பலர் மத்தியிலும் எழத்தான் செய்கிறது. மெதேன் வாயுவின் வெப்பமாக்கும் தன்மை, காபனீரொட்சைட் வாயுவின் வெப்பமாக்கும் தன்மையைவிட 21 மடங்குகள் அதிகமாகும்.

கழிவுகளில் இருந்து மெதேனை உற்பத்தி செய்து, வெப்பத்தையோ மின்சாரத்தையோ பிறப்பிக்கும் போது மெதேன்வாயு குறைதகனத்துக்குள்ளாகி காபனீரொட்சைட்டாக மாற்றப்பட்டு சூழலுக்கு வெளிவிடப்படுகிறது. ஆகையால் பச்சை இல்ல விளைவு சாதாரண மெதேன் வெளியேற்றத்துடன் ஒப்பிடுகையில் 20 மடங்குகளால் குறைக்கப்படுகிறது.

அத்துடன், உயிர்வாயு உற்பத்தி செய்யப் பயன்படும் கழிவுகள் திறந்த சூழலில் உக்கவிடப்படுவதில்லை. ஆகையால் இம்முறைமை மூலம் வெளிச்சூழலுக்கு விடுவிக்கப்படும் மெதேன் வாயுவின் அளவும் குறைவாகவே காணப்படுகிறது.

உயிர்வாயு மூலமான சக்திப் பயன்பாடு காபன் நடுநிலையான சக்திப் பயன்பாடாகவே காணப் படுகிறது. ஏனெனில், இயற்கையான காபன் வட்டத்திலே தாவரங்களால் பதிக்கப்படும் காபனே உயிர்வாயு மூலமான சக்திப் பிறப்பாக்கத்தின்போது சூழலுக்கு வெளிவிடப்படவும் செய்கிறது.

1m3அளவிலான தூய உயிர் வாயுவானது 6kwh சக்தியைப் பிறப்பிக்கவல்லது. ஆனால் அதன் மூலம் மின்சாரத்தைப் பிறப்பிக்க முயலும் போது 2kwh அளவான பாவனைக்குட்படுத்தக்கூடிய மின்சாரம் பெறப்படுகிறது. மிகுதிச் சக்தி வெப்பமாக வெளியேற்றப்படுவதால், வெப்பமாக்கல் தேவைகளுக்காகப் பயன்படுகிறது. 2kwh சக்தி என்பது 100w மின்குமிழை 20 மணித்தியாலங்கள் எரிப்பதற்குப் போதுமானதாகும்.

எவ்வளவு கழிவு உயிர்வாயு மூலமான சக்திப் பிறப்பாக்கத்திற்குப் பயன்படுகிறதோ, சக்திப்பிறப்பாக் கத்தின் பின்னரும் திணிவின் அடிப்படையில் மீதமாக இருக்கும். ஆனால் அது சூழலை மாசடையச் செய்யும் தன்மை குறைந்ததாகவும் சிறந்த உரமாகவும் காணப்படும்.

எருக்களிலிருந்து உயிர்வாயு மூலமான சக்திப் பிறப்பாக்கமானது, விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட கிராமியச் சமூகங்களுக்கு மிகவும் பயனுள்ள செலவு குறைந்த வழிமுறையாகக் காணப்படுகிறது. அவை சமைத்தல், வெப்பமாக்கல் நீரைக் கொதிக்கவைத்தல், தானியங்களை உலர்த்துதல், குளிரூட்டல், வீடுகளுக்கு, ஒளியூட்டல் போன்ற பல தேவைக ளுக்கு உயிர்வாயு மூலம் பிறப்பிக்கப் படும் சக்தியைப் பயன்படுத்துகின்றன.

உயிர்வாயுவை ஒடுக்கி, உழவு இயந்திரங்களின் எரிபொருளாகப் பயன்படுத்துவது என்பது சற்றுச் சிக்கலான, செலவு கூடிய முறைமையாகும்.

உயிர்வாயுவை உற்பத்தி செய்யும் போது அதிலே, மெதேன் அல்லாத வேறு வாயுக்களும் காணப்படும். அவற்றுள் பிரதானமானவை காபனீ ரொட்சைட்டு, ஐதரசன் சல்பைட்டு, நீராவி என்பனவாகும். ஐதரசன் சல்பைட்டு போன்றவை சுற்றுச்சூழலுக்கும் மனிதனுக்கும் தீங்கு விளைவிக்கக் கூடியவை. ஆதலால் உயிர்வாயுவானது முதலில் தூயதாக்கப்பட வேண்டியது அவசியமாகிறது.

அதேபோல உயிர்வாயு மூலமான சக்திப் பிறப்பாக்க அமைப்பில் ஏற்படும் சிறிய குறைபாடுகள் கூட, வெளிச்சூழலுக்கு மெதேன் வாயுவை வெளியேற்றுவதில் பங்காற்றத்தவறுவதில்லை. அத்தகையதொரு நிலை ஏற்படுமாயில் விளைவுகள் மிகவும் பாரதூரமானவை. ஏனெனில் மெதேன் வாயு நிறமற்றது. ஆகையால் எங்கிருந்து வெளியேறுகிறது என்பதைக் கண்டறிதல் மிகவும் கடினமாகும்.

அது மட்டுமன்றி அது தீப்பற்றி எரியும் ஆற்றல் மிக்கது. வளி மண்டலத்தின் மெதேன் அளவு 6-15% ஆக மாறுகையில் தானே தீப்பற்றும்.

எனவேதான், உயிர்வாயு மூலமான சக்திப் பிறப்பாக்க கட்டமைப்பின் கட்டடங்கள் காற்றோட்டம் மிக்கவையாக அமைக்கப்பட வேண்டும் எனவும் மின்னுற்பத்தியுடன் தொடர்புடைய சாதனங்கள் இலகுவில் எரியும், வெடிக்கும் தன்மை குறைந்தனவாக இருக்க வேண்டுமெனவும் வாயு வெளியேறும் பட்சத்தில் அதனை உணர்ந்து அறிவிக்கும் அலாரமுறை மைகளும் அமைக்கப்பட வேண்டியது அவசியம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

உயிர்வாயு மூலமான சக்திப் பயன்பாடு கிராமிய மட்டத்தில் இலங்கையிலும் ஆரம்பிக்கப்பட்டு மேற்கொள்ளப்படுகிறது. அத்தகைய தோர் பரீட்சார்ந்த முயற்சியில் லுணு விலவில் அமைந்துள்ள தென்னை ஆராய்ச்சி நிலையமும் இறங்கியுள்ளது.

விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சின் மாற்றுச் சக்திப் பிரிவுடன் இணைந்து இப்பரீட்சார்த்த திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. இது மாதம்பே பகுதியிலுள்ள ரத்மாலகர தோட்டத்திலே 2005ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்டு இன்று வரை தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படுகிறது.

கிளிசிரிடியா எனப்படும் பல்தேவைகளுக்கும் பயன்படும் சீமைக்கிளுவையை உயிர்சக்திக்கும் உயிர்வளமாக்கியாகவும் பயன்படுத்துவதே இத்திட்டமாகும். சீனுமக்கிளுவைக்கும் உயிர்வாயு உற்பத்திக்கும் என்ன தொடர்பு? என்ற சந்தேகம் பலருக்கு உருவாகக்கூடும் அது நியாயமும் கூட. இத்திட்டம் இரண்டு இலக்குகளைக் கொண்டது.

ஒன்று தென்னை, மந்தைகள், சீமைக்கிளுவை, வைக்கோல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட விவசாயத் தொகுதியின் செயற்பாட்டை விளக்குதலும் பால் உற்பத்தியைப் பெருக்குதலுமாகும்.

மற்றையது, பொருளாதார ரீதியாக இலாபகரமான, சீமைக்கிளுவையை அடிப்படையாகக் கொண்டு மந்தைகளின் எருக்களையோ அல்லது பசுமை எருக்களையோ பயன்படுத்தியும் சக்தித் தேவையைப் பூர்த்தி செய்தலும் விறகுத் தேவையைப் பூர்த்தி செய்தலுமாகும்.

இதற்காக 1 ha நிலப்பரப்பில் ஏறத்தாழ 150 தென்னை மரங்கள் வளர்க்கப்பட்டு செவ்வனே பராமரிக் கப்படுகின்றன. தென்னை மரங்களுக் கிடையிலான இடைவெளியிலே சீமைக்கிளுவை வளர்க்கப்படுகிறது. இத்தகைய சீமைக்கிளுவை மரங்கள் ஏறத்தாழ 7000 காணப்படுகின்றன. அத்துடன் பால் மற்றும் எருத் தேவைகளுக்காக ஆறு எருமை மாடுகளும் வளர்க்கப்படுகின்றன.ஒன்றிணைந்த தீனியாக அவற்றிற்கு புற்கள், சீமைக்கிளுவை, வைக்கோல் ஆகியன வழங்கப்படுகின்றன. அத்துடன் இத்திட்டத்தின் ஒரு சிறு பகுதியாக உயிர்வாயு உற்பத்தி நடைபெறுகிறது. அடிப்படையில், ஒரு தென்னந்தோப்பை எப்படி உச்ச லாபம் மிக்க உயர் உற்பத்தித் திறனுடையதாக மாற்ற முடியுமென்பதை, சீமைக்கிளுவைகளின் பயன்பாட்டைக் கொண்டு விளக்குவதே இத் திட்டமாகும்.

இதன் ஒரு பகுதியான, உயிர்வாயு எருமூலமான உற்பத்திக்காக ஆறு எருமை மாடுகளும் எப்பொழுதும் தொழுவத்திலேயே கட்டப்பட்டிருக்கும். அங்கேயே அவற்றிற்குத் தீனி வழங்கப்படும். அவை தன்னிச்சையான மேய்ச்சலுக்கு அனுப்பப்படுவதில்லை.

அவற்றின் எருவை (உயிர்க் கழிவு) ஒரேயடியாகச் சேமிக்கும் வசதிக்காகவே அவ்வாறு செய்யப்படுகின்றன. அவ்வுயிர் கழிவுகள் ஒரு கான்வழியே சென்று நிலத்துக்குக் கீழிருக்கும் தொட்டியிலே அடையும்.

பின்னர் உயிர்வாயு உற்பத்திக்காக அமைக்கப்பட்ட தாங்கியினுள் நுண்ணங்கிகளுடன், பொருத்தமான பெளதீகச் சூழ்நிலையில் காற்றின்றிய பிரிகைக்குட்பட்டு உயிர் வாயு உற்பத்தி செய்யப்படும். அடிப்படையில் உயிர்வாயுவிலே கலந்திருக்கும் ஐதரசன் சல்பைட்டை ஒட்சியேற்றுவதற்காக 6 - 8 சதவீத ஒட்சிசன் உட்செலுத்தப்படும். அதேபோல் உயிர் வாயு நீரினூடு செலுத்தப்பட்டு சிறிய விட்டமுடைய குழாய்களினால் பின்பிறப்பாக்கியைச் சென்றடையும்.

அவ்வாறு நீரினூடு செலுத்தப்படுவதற்கான நோக்கம் உயிர் வாயுவிலே கலந்திருக்கும் காபனீரொட்சைட்டை அகற்றுதலாகும்.

குழாய் வழியாகச் செல்லும் தூயதாக்கப்பட்ட உயிர்வாயு பின்பிறப்பாக்கியை தானாகவே இயக்கும் வல்லமையற்றது என்பதையும் நாம் இங்கு கருத்தில் கொள்ள வேண்டும்.

இன்னொரு எரிபொருளால் இயக்கப்படும் மின்பிறப்பாக்கி தொடர்ந்து இயங்குவதற்கு உயர்வாயு துணை புரிகிறது. இத்திட்டத்திற்கமைவான உயிர்வாயு உற்பத்தியால் ஒரு வீட்டின் அடிப்படை சக்தித் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. ஆனால் உயர் சுமையுடைய குளிர்சாதனப் பெட்டி போன்றவற்றின் பாவனை இயலாத காரியமாகும். தொலைக்காட்சியின் பாவனை சாத்தியமானது.

இத்திட்டத்திலே, உயிர் வாயு சேமிக்கப்படுவதில்லை. அதற்கான செலவு அதிகமாதலால் தேவைக்கு மேலதிகமாக உற்பத்தி செய்யப்படும் உயிர் வாயு பயனற்றுக் காணப்படுகிறது. உயிர்வாயு உற்பத்தியின் போது எஞ்சும் கழிவுகள் திறந்த நிலக்கீழ்த் தாங்கியில் சேமிக்கப்பட்டு தேவையேற்படும் போது உரமாகப் பயன்படுத்தப்படுகின்றன. அதேசமயம், திறந்த தாங்கியிலே சேமிக்கப்படுவதால் வளியிலான ஒட்சியேற்றமும் நடைபெறுகிறது.

6 எருமை மாடுகளும் ஒரே இடத்தில் கட்டப்பட்டு வைத்திருப்பது மனிதாபிமானிகளையும் விலங்கு நல ஆர்வலர்களையும் வருத்தவே செய்யும். அவ்வெருமை மாடுகள் தன்னிச்சையான மேய்ச்சலுக்கு விடப்படுவதே இல்லை. அந்த வாயில்லா ஜீவன்களின்

வாழ்வுரிமையைப் பறித்து சகல வல்லமையும் படைத்த மனிதனின் வாழ்வுரிமையை மெருகூட்டுவதா என்ற கேள்வி அவர்களின் மனதைத்துளைத்திருக்கும் என்பதில் எதுவித ஐயமுமில்லை. இது பரீட்சார்த்த முயற்சி ஆகையால், ஏற்றுக்கொள்ளவோ நியாயப்படுத்தவோ முயல்கிறோம்.

ஆனால் இம்முயற்சி நிஜமாகவே நடைமுறைக்கு வரும்போது அது எவ்வளவு தூரம் மனிதாபிமானமானது என்பதும் நியாயமானது என்பதும் சிந்திக்கப்பட வேண்டிய விடயங்களே.

ஆகையால்தான் மிருகக்காட்சிச்சாலைகளுக்கு இத்திட்டம் பொருத்தமாக அமையுமோ எனவும் எண்ணத் தோன்றுகிறது.

நாம் மனிதராக இப்பூவுலகில் ஜனித்துவிட்டதால் எதையும் செய்யலாம் என்ற உணர்வும் எம்மை வெல்ல எவருமில்லை என்ற உணர்வும் எம்முடனேயே வந்துவிடுகிறது. ஒருகாலத்தில் ஆட்சிசெய்த இனமாகிய, டைனசோர் இனம் இன்று சுவடுகளாக மட்டுமே மாறிய கதையை நாம் அறிவோம்.

ஆகையால், எம் முயற்சிகள் ஒவ்வொன்றும் எந்த உயிரையும் பாதிக்காத வகையிலே அமைய வேண்டும். உயிர்களுக்குள் பேதமில்லை என்ற உணர்வு எம்மத்தியில் உருவாக வேண்டும். எரு மூலமான உயிர்ச்சக்தியின் பிரயோகங்களும் உற்பத்தியும் சிறந்த சிந்தனைகள்தான். ஆனால் அவை மேன்மேலும் விருத்தி செய்யப்பட்டு எந்த உயிரினத்தின் வாழ்வுரிமையும் பறிக்கப்படாத வகையிலே அவை பிரயோகிக்கப்பட வேண்டும். அப்போதுதான் மனித இனம் சிறக்க முடியும்.

Sunday, August 1, 2010

கல்லிலே கண்ட கலைவண்ணம்


‘உலகிலே கோவில் கட்டும் துறையில் தமிழினம் தான் உயர்ந்து விளங்கியது. இந்தியாவில் இதுவரை கட்டப்பட்ட கோவில்களிலே தஞ்சை பெருங்கோவில் தான் மிகப் பெரியது’ என பிரித்தானிக்கா தகவல் களஞ்சியம் குறிப்பிடுகிறது.

ஆட்சி நிலை, ஆடம்பரமான மாட மாளிகைகள், கோட்டைகள் என எங்கும் பிரமாண்டத்தை உருவாக்கிய மன்னர்கள், கோவில்களிலும் பிரமாண்டத்தை விட்டுவைக்கவில்லை. ஆயிரம் வருடங்களுக்கும் மேலாக நின்று நிலைத்து காலத்தால் அழிக்கப் படாத வரலாற்றைப் பறை சாற்றும் தென்னிந்தியக் கோவில்களின் பிரமாண்டம், அவ்வுண்மையைத் தெளிவுபடுத்தும். வட இந்தியாவின் சிறப்பு பிரமாண்டமான கலை நயம் மிக்க கோட்டைகளும் அரண்மனைகளுமென்றால், தென் இந்தியாவின் சிறப்பு, இந்தத் திருக்கோவில்களேயாகும்.

அரண்மனைகளைவிட, கோவில்களைக் கட்டுவதிலே தென்னிந்திய மன்னர்கள் அதிக ஆர்வம் செலுத்தினாரோ என்றும் எண்ணத் தோன்றுகிறது. ஏனெனில், இன்றளவிலும் நிலைத்திருந்து மன்னன் தன் புகழ்பாடும் அரண் மனைகளை விட, கோவில்களின் எண்ணிக்கை மிக அதிகமாகும்.

கோவில் திருப்பணிகளை நன்கு மேற்கொண்டால், அவை காலத்தால் அழிக்கப்படாமல் பேணப்பட்டு, தம்புகழை என்றும் பாடிக் கொண்டிருக்கும் என்று எண்ணினரோ எனவும் தோன்றுகிறது.

அந்த வகையிலே, ஆயிரம் ஆண்டு காலமாக நிலைத்து நின்று எம்முன்னவர்களின் வரலாற்றையும் தொழில் நுட்ப அறிவையும் ஒருங்கே பறைசாற்றும் பெருமை தஞ்சை பெருங்கோயிலைச் சாரும் என்றால் மிகையாகாது.

பல அறிந்த, அறியாத அதிசயங்களையும் புதிர்களையும் தன்னகத்தே தாங்கி இன்றும் வானளாவி நிற்கும் தஞ்சை பெருங்கோயிலைக் காண கண்கோடி வேண்டும் என்றால் மிகையில்லை. தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டியவன் இராஜராஜசோழன் என்று சொல்ல இன்று பலர் காணப்படுகின்றார்கள். அது கடந்த ஒரு நூற்றாண்டு காலமாகத்தான் அவர்களுக்குத் தெரியும் என்றால் ஆச்சரியமாகத் தான் இருக்கிறது.

ஜேர்மனிய அறிஞரான ஹீல்ஷ் என்பவர் 1886 ஆம் ஆண்டு தஞ்சைப் பெருங்கோவிலின் கல்வெட்டுக் களை ஆராய்ந்தார். அவரது ஆய்வுதான், தஞ்சைப் பெருங் கோயிலைக் கட்டியது. இராஜ ராஜ சோழன் என்பதை வெளியுலகுக்கு எடுத்துக் கூறியது.

பிரமிப்பின் உச்சமாகவே தெரியும் தஞ்சை பெருங்கோயிலின் சிறப்புக்களை விரித்தால் பெருகும். தொகுத்தால் எஞ்சும். கோவிலுக்குள் செல்வதற்கு ஒன்றன் பின் ஒன்றாக மூன்று வாயில்கள் காணப்படுகின்றன. அவற்றுள் மூன்றாவது வாயிலை இராஜராஜன் வாயில் என்பர். அவ்வாயிலின் இருபுறமும் அமைக்கப்பட்டிருக்கும் துவார பாலகர்களின் சிலைகள்தான் உலகின் மிகப் பெரிய துவாரபாலகர்களின் சிலைகளாகக் காணப்படுகின்றன.

இவை ஒவ்வொன்றும் தலா 18 அடி உயரமானவை. இந்த வாயிலின் கோபுரத்திலே, இறைவன் முப்புரங்களை எரித்த கதையும் சண்டேசுரருக்கு அருள் புரிந்த கதையும் அழகிய சிற்பங்களால் வடிக்கப்பட்டுள்ளன. அவைமட்டுமன்றி கண்ணப்பநாயனார் சரிதம், முருகன் - வள்ளி திருமணம் மார்க்கண்டேயருக்குக் கிடைத்த சிவதரிசனம் போன்ற பல புராணக் கதைகளும் சிற்பங்களாக நிலைத்திருக்கின்றன.

இராஜராஜன் வாயிலை அடுத்து வருவது திருச்சுற்று மாளிகையாகும். திருச்சுற்று மாளிகையையடுத்து இருப்பது கர்ப்பக்கிரகமும் அதற்கு மேலே காணப்படும் விமானமுமாகும். திருச்சுற்று மாளிகையிலே இராஜராஜனின் பின் காலத்துக்குக் காலம் ஆட்சி செய்த மன்னர்களால் கட்டப்பட்ட சிறிய கோவில்களும் காணப்படுகின்றன.


இக்கோவிலின் கட்டட அமைப்பையும் அதன் நுட்பத்தையும் பார்த்து நவீன பொறியியலாளர்கள் வியந்து நிற்கின்றனர். அந்த ஆற்றல் மிகு கட்டடக் கலைத் தொழில்நுட்பம் இன்னும் கூட ஆய்வாளர்களால் துல்லியமாகக் கண்டறியப்படவில்லை என்பதே உண்மையாகும்.

இந்தக் கோவிலின் விமானம் மட்டுமே, 216 அடி உயரமானது. இன்றைய கோவிலின் நுழைவாயில்கள், கர்ப்பக்கிரகம், அதனையொட்டிய விமானம் திருச்சுற்று மாளிகையிலுள்ள சண்டேசுவரர் ஆலயம் ஆகியன மட்டுமே இராஜராஜனின் காலத்திலே கட்டடப்பட்டவையாகும்.

இக்கோவில் முழுவதுமே கருங்கற்களால் கட்டப்பட்டது. அதற்காகப் பயன்படுத்தப்பட்ட கற்களின் நிறை, ஏறத்தாழ 1 இலட்சத்து 40 ஆயிரம் தொன்கள் எனக்கணக்கிடப்படுகிறது. இங்குள்ள அதிசயம் என்னவெனில், தஞ்சை நகரின் சுற்றுச் சூழலிலே, கருங்கற்களையுடைய பகுதிகள் எவையும் காணப்படவில்லை என்பதாகும்.

அவை ஆகக் குறைந்தது 75 கிலோ மீற்றர் தூரத்திலிருந்தாவது கொண்டு வரப்பட்டிருக்க வேண்டும் என ஆய்வாளர்கள் தெரிவிக் கின்றனர். ஒரு லட்சத் துக்கும் மேற் பட்ட தொன் கற்களை இன்றைய தொழில்நுட்ப வசதிகள் எவையுமே இல்லாத ஒரு காலத்தில் எப்படி அவ்வளவு தூரம் நகர்த்தி 216 அடி உயரத் துக்கு ஏற்றியிருக்க முடியுமெனப் பலரும் வியக்கிறார்கள்.

சிலரோ வெவ்வேறு ஊகங்களின் அடிப் படையில் முயற்சி செய்தும் பார்த்தனர். ஆனால் இராஜராஜன் கற்களை நகர்த்திய உண்மைத் தொழில் நுட்பம் துல்லியமாகக் கண்டு பிடிக்கப்படவிலலை. ஊகங்கள் மட்டுமே தெரிவிக்கப்படுகின்றன.

இராஜராஜன், இக்கோவிலின் கட்டுமானத்துக்குப் பயன்படுத்திய வையாவுமே பிரமாண்டமான கற்களாகும். பல தூண்கள் ஒரே கல்லால் ஆனவை. சிலவோ, ஏறத்தாழ 40 அடி உயரமானவை. அவற்றையெல்லாம் ராஜராஜன் எப்படி தஞ்சைக்குக் கொண்டு வந்து சேர்த்தான் என்பது எம்மைப் பொறுத்தவரையிலே பிரமிப்பாகத்தான் இருக்கிறது.

டிஸ்கவரி தொலைக்காட்சியிலே, தஞ்சை பெருங்கோவில் தொடர்பான ஆவணப் படம் ஒன்று காட்டப்பட்டது. அங்கு ஆய்வாளர்கள், ராஜராஜன் எப்படி இக் கற்களை, தஞ்சைக்குக் கொண்டுவந்திருப்பான் என ஊகித்து முயற்சி செய்து பார்த்தனர்.

பிரமாண்டமான கருங்கல் ஒன்றிலே கயிற்றைக்கட்டி, அதனை ஒன்றின் பின் ஒன்றாக அடுக்கப்பட்டிருந்த மரக்குற்றிகளின் மேல் வைத்தனர். யானையொன்று கல் கட்டப்பட்ட கயிற்றினை இழுக்க, உருளும் மரக்கட்டைகளின் மீது கல் மெதுவாக அசையத் தொடங்கியது. முயற்சி வெற்றி பெற்ற போதும், ராஜராஜனின் படைத்திறனும் வினைத்திறனும் மெய்சிலிர்க்க வைத்ததென்பதேயுண்மையாகும்.

இந்த பிரமாண்டமான கோவிலின் அத்திவாரமோ வெறும் 5 அடி மட்டுமே என்று கூறப்படுகிறது. கோவிலின் தள அமைப்புக்களும் மண்டபங்களும் கூட வைத்த கண்ணை அசைக்க விடுவனவாகத் தெரியவில்லை.

13 நிலைகளையுடைய 216 அடி உயரமான விமானம், கற்களால் அமைக்கப்பட்ட திண்ம வடிவமல்ல. ஒரு கூம்பு கவிழ்க்கப்பட்டால் எப்படி இருக்குமோ, அது போலவே அந்த விமானமும் அமைக்கப்பட்டிருக்கிறது.

தஞ்சைப் பெருங்கோவில் தொடர்பான பல தகவல்களை, கல்வெட்டுக்களாகப் பதிவு செய்த ராஜராஜன், அக்கட்டடக் கலைநுட்பத்தை மட்டும் எங்குமே பதிவு செய்யவில்லை என்பது வியப்பான விடயமாகும்.

தஞ்சைப் பெருங்கோவிலின் விமானத்தின் நிழல் தரையில் விழுவதில்லை என்றும் விமானத்தின் உச்சி, ஒரேகல்லினால் ஆனது என்றும் கூடக் கூறப்படுகிறது.

பஞ்ச பூதத் தலங்கள், தென்னிந்தியாவிலே தனித்தனியாகக் காணப்படுகின்றன. மாறாக, ராஜராஜேஸ்வரம் எனும் தஞ்சை பெருங்கோவிலிலே, பஞ்ச பூதங்களும் ஒரே இடத்தில் உருவகப்படுத்தப்பட்டுள்ளன.

இக்கோவில் ‘10 விரல் அளவு’ என்ற விகிதாசாரத்தை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். சோழர்களின் கணிப்புப்படி ‘10 விரல் அளவு’ என்பது 33 ணீசீ ஆகும். கோவிலின் சகல அளவீடுகளும் 33 ணீசீ இன் விகிதங்களாகவே காணப்படும் உண்மை அதிசயிக்க வைக்கிறது. ‘ஒரு விரல்’ எனப்படுவது 8 நெல் மணிகளை வரிசையாக அடுக்கினால் பெறப்படும் அளவு ஆகும்.

இவ்வாறு கணித ரீதியாக மிகவும் துல்லியமாகக் கட்டப்பட்டிருக்கும் இவ்வாலயத்தில் எந்த ஒரு கல்லும் வெறுமையாக விடப்படவில்லை. மிகவும் நுணுக்கமான கலை நயம் மிக்க சிற்பங்களும் அலங்காரங்களும் ஓவியங்களும் வகை தொகையின்றிக் காணப்படுகின்றன. கல்லாலான சங்கிலிகளும் நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகளும் பிரமிக்க வைக்கின்றன.

தற்போது கர்ப்பக்கிரகத்திற்கு முன்னே காணப்படும் பிரமாண்ட மான நந்தியும் அதன் மண்டபமும் நாயக்கர் காலத்தவையாகும். நந்தி ஒரே கல்லிலே செதுக்கப்பட்டதென்பதும் குறிப்பிடத்தக்கது.

அந்நியப்படையெடுப்புக்களால் இலங்கையிலே அழிக்கப்பட்ட கோவில்கள் பற்றிக்கற்ற எமக்கு, தென்னிந்தியாவின் தொன்மைவாய்ந்த கோவில்கள் மட்டும் இன்னும் எப்படி நிலைத்திருக்கின்றன என்ற கேள்வி மனதிலே எழலாம்.

இலங்கையிலும் அதிகமாக இந்தியா பல உள்நாட்டு மற்றும் அந்நியப் படையெடுப்புக்களைச் சந்தித்தது. அவற்றையெல்லாம் தாண்டி இக்கோவில்கள் இன்றும் நிலைத்து நிற்கின்றனவெனில் அவற்றை என்னவென்று சொல்வது?

இராஜராஜசோழனின் காலத்துக்கு முன்னரே சோழநாடு வளமிக்கதாகவே இருந்தது. அங்கே விவசாயம் செழித்தது. பொன்னும் பொருளும் கொழித்தன. அரபு நாடுகளுடனும் கிழக்காசிய நாடுகளுடனும் மன்னன் ராஜராஜன் மேற்கொண்ட வாணிபத்தால் அவனது திறைசேரி நிரம்பி வழிந்தது.

அச்செல்வத்தின் பெரும் பகுதியை மன்னன் தஞ்சைப் பெருங்கோவிலுக்குக் காணிக்கையாகச் செலுத்தியிருந்தான்.

கோவிலின் செயற்பாடுகள் நீண்டகாலத்துக்கு தங்கு தடையின்றி நடைபெறுவதற்கான முதலீடாக மன்னன் அவற்றை மேற்கொண்டிருந்தான். அதைப்போல பல கிலோ எடையுடைய தங்கம், வெள்ளிப் பொருட்கள், செப்புச் சிலைகள் எனப் பலவற்றை கோவிலுக்கு வழங்கியிருந்தான்.

அவை ஒவ்வொன்றின் விபரத்தையும் தவறவிடாது கல்வெட்டில் பதித்திருந்தான். காலத்துக்குக்காலம் உருவாகிய ஆக்கிரமிப்பாளர்களால் அவை யாவுமே கொள்ளையடித்துச் செல்லப்பட்டுவிட்டன. ஆனால் அக் கல்வெட்டுக்கள் மட்டும் சோழ நாட்டின் செல்வச் செழிப்பை உலகுக்குப் பறைசாற்றி நிற்கின்றன.

இன்னும் நாம் அறிந்த, அறியாத ரகசியங்கல் பல இக்கோவிலிலேயே நிறைந்து காணப்படுகின்றன என்பதை எவராலும் மறுக்க முடியாது.

சோழ நாட்டின் வளமும் செல்வச் செழிப்பும் அந்நிய நாட்டின் ஆக்கிரமிப்பாளர்களை அப்பூமியிலே ஊழித்தாண்டவம் ஆடவைத்தன.

செல்வத்தை அள்ளிச் செல்லும் ஆர்வம் மிகுந்த ஆக்கிரமிப்பாளர்கள், கோவிலை அழிக்க முயலவில்லை.

ஏன் கோவிலை உடைத்து அக்கற்களைக் கொண்டு அணைக்கட்ட எண்ணிய வெள்ளையர்கள் கூட, பின்னர் ஏனோ அவ்வெண்ணத்தைக் கைவிட்டு விட்டனர்.

இப்படி எல்லா அழிவுகளையும் கண்டு, தற்போது யுனெஸ்கோ நிறுவனத்தால் பாதுகாக்கப்பட வேண்டிய கலாசாரச் சின்னமாகப் பேணப்படுகிறது. இந்த வருடம், தனது 1000 ஆவது வருடத்தைப் பூர்த்தி செய்யும் கலைக்கோவிலாக ராஜராஜேஸ்வரம் திகழ்கிறது.

தமிழனாய்ப் பிறந்த ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய கோவில் இப்பெருங் கோவில். ஆத்திகவாதியோ நாத்திகவாதியோ எவராயினும் இக்கோவிலைத் தம் வாழ்வில் ஒரு தடவையாவது சென்று பார்க்க வேண்டும்.

அக்கோவிலின் பிரமாண்டமும் சிற்பக்கலையின் நுட்பமும் எம் முன்னோரின் அறிவுத் திறத்தை எமக்கு எடுத்துக் காட்டும். சோழன் கல்லிலே கண்ட கலை வண்ணத்தை, நாம் நேரிலேனும் தரிசிக்காவிடில், இணையத்தினூடாக முப்பரிமாண, 360 சுழற்சியிலே கண்டு இன்புறலாம். அது நேரேயே சென்று தரிசிப்பது போன்ற மாய உணர்வை ஏற்படுத்தும். அவ்வுணர்வு நேரிலே சென்று தரிசிக்கும் ஆர்வத்தை நிச்சயம் ஏற்படுத்தும்.இங்கு குறிப்பிடப்பட்டவை எல்லாம் வெறும் கைமண்ணளவு தான். குறிப்பிடப்படாதவை உலகளவானவை. இவையெல்லாம், தமிழரின் தொன்மையையும் அறிவுத் திறத்தையும் வெளிப்படுத்தும், காலச் சருகு மறைக்காத சுவடுகளாகவே தெரிகின்றன.