Monday, December 28, 2009

Tuesday, December 22, 2009

மற்றைய இனங்களை வாழவிடாமல் செய்த குற்ற உணர்வுடன் கிடைக்கும் சுபிட்சம் தேவையா ??


‘பருவநிலை மாற்றத்தால் தேனீக்கள் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.’
‘உலகெங்கும் 17,000க்கும் மேற்பட்ட இனங்கள் அழிந்து போகும் ஆபத்தான நிலையில் இருப்பதாக இயற்கையைப் பாதுகாப்பதற்கான சர்வதேச அமையம் (IUCN) சிவப்புப் பட்டியலை வெளியிட்டுள்ளது.’
‘இதுவரை இனங்காணப்பட்டுள்ள 704 பவளப் பாறை இனங்களில் சுமார் 231 இனங்கள் அருகிவரும் இனங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. 1998 ஆம் ஆண்டு இவற்றில் 13 இனங்களே இவ்வாறு சேர்க்கப்பட்டிருந்தன.’
‘பண்டா கரடிகளுடன் சேர்ந்து உயிர் வாழ்ந்த ஸ்டெகோடான் யானை (பெரிய தந்தங்களையுடையது), சீனக் காண்டாமிருகம் போன்ற பல உயிரினங்கள் ஏற்கனவே அழந்துவிட்ட நிலையில், இன்று சீனாவில் மட்டுமே இப்பண்டாக் கரடிகள் காணப்படுகின்றன. இவற்றின் எண்ணிக்கை 1600 மட்டுமே.’
இன்றைய காலகட்டத்தில் இத்தகைய பல்வேறுபட்ட செய்திகள் எம்மை எட்டுகின்றன. ஆனால் நாம் அவற்றைப் பற்றி ஆழச் சிந்திக்கத் தலைப்படுவதில்லை. இயந்திரமயமான உலகத்திலே, செய்தியொன்றை அறிவதே பெரிய விடயமாகக் கருதப்படுகின்ற நிலையில் அறிந்த செய்தியைப் பற்றிச் சிந்திப்பதென்பது எதிர்பார்க்கப்பட முடியாதது.
இற்றைக்கு 3.8 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் பூமியில் வெறும் கற்களும் மண்ணும் உவர் நீருமே காணப்பட்டன. பின்னர் அமினோ அமிலங்கள் உருவாகி அதன் பின்னர் வாய்ப்பான சூழல் நிலைமைகள் உருவாகி, ஒரு கலவுயிர், இருகலவுயிர், பல கலவுயிரென உயிர்கள் தோற்றம் பெற்றன. புல்லாகிப் பூண்டாகிப் புழுவாய் மரமாகிப் பல்மிருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்...’ என மாணிக்கவாசகர் சிவபுராணத்தில் பாடுகின்றார்.
படிமங்களில் கண்டறியப்பட்ட புதிய வகை எலும்புக் கூடுகள் இப்பூமியில் இன்னும் அறியப்படாத உயிரினங்கள் வாழ்ந்து வந்தமைக்கான ஊகங்களுக்குச் சான்றுகளாக அமைந்தன. அவற்றின் தற்போதைய நிலையென்ன? அவை எவ்வாறு அழிந்துபோயின? போன்ற பல கேள்விகள் காலங்காலமாக வினவப்பட்டு வந்தன.
இந்நிலையில் சார்ள்ஸ் டார்வின் எனும் விஞ்ஞானி கூர்ப்புக்கொள்கையை முன்வைத்தார். அது பல சந்தேகங்களுக்குத் தீர்வாக விளக்கங்களையளித்தது. தக்கன பிழைக்கும் நலிந்தன அழியும் என்ற தக்கனப் பிழைத்தல் கொள்கைக்கு வித்திட்டது.
இனமொன்று அழிந்து போவதற்கு நேரடிக் காரணங்களும் பல மறைமுகமான காரணங்களும் காணப்படுகின்றன.
புவியில் காணப்படும் இனங்களின் வேறுபட்ட தன்மையே உயிர்ப் பல்வகை மையாகும். 1972 இல் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் புவிமாநாட்டில் உயிரியல் பல் வகைமையென்பது ‘தாங்களும் ஒரு பகுதியாகவுள்ள நிலம், கடல் மற்றும் ஏனைய நீர் சார் சூழலியல் முறைமைகள், நீர் வாழ் சூழலியற் தொகுதிகளுட்பட எல்லா இடங்களையும் சார்ந்த உயிரினங்கள் மத்தியிலான பல்வகைமை ஆகும்’ என்ற வரைவிலக்கணம் முன்வைக்கப்பட்டது.
ஆரம்பத்தில் உயிரினங்களுக்கிடையிலான சமநிலை இயற்கையாகவே பேணப்பட்டு வந்தது. ஆனால் காலப் போக்கில் உருவாகிய பல காரணங்கள் இந்த இயற்கைச் சமநிலையைக் குலைக்க ஆரம்பித்தன. இதனால் பல உயிரினங்கள் அழிந்தன. பல, அருகி வரும் நிலைக்குத் தள்ளப்பட்டன.
அச்சுறுத்தலுக்குள்ளாகும் உயிரினங்கள் பற்றிய தகவல்கள் இயற்கையைப் பாதுகாப்பதற்கான சர்வதேச அமையத்தினால் சிவப்புத் தரவுப் பட்டியல் எனும் பெயரில் 1981ஆம் ஆண்டு முதல் கிரமமாக வெளியிடப்பட்டு வருகின்றன. இத்தகவற் பட்டியலானது இவ்வுயிரினங்களை, அழிவடைந்த உயிரினங்கள் முதல் குறைந்தளவில் பாதிக்கப்படக் கூடிய உயிரினங்கள் வரை வகைப்படுத்தியிருக்கின்றது. அவ்வகைப்படுத்தல் வருமாறு
1. அழிந்துபோன உயிரினங்களான கரீபிய கடற்சிங்கம், தூதுசெல்லும் புறா போன்றன.
2. காடுகளில் அழிந்து, சுதந்திரமற்றுத் தனித்தனியாக மிருகக் காட்சிச் சாலைகள் போன்ற இடங்களில் வாழும் உயிரினங்கள்.
3. எதிர்காலத்தில் நிச்சயமாக அழிந்து போகக் கூடிய அபாயகரமான நிலையிலுள்ள உயிரினங்களான ஜாவா காண்டாமிருகம் போன்ற உயிரினங்கள்
4. தற்போது அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ள, எதிர்காலத்தில் அழிந்து போகக் கூடுமென எதிர்பார்க்கப்படும் நீலத் திமிங்கிலம், பனிச் சிறுத்தைகள், இராட்சத பண்டா போன்ற இனங்கள்.
5. எதிர்காலத்தில் அச்சுறுத்தலுக்குள்ளாகி அழிந்து போகலாமென எதிர்பார்க்கப்படுகின்ற சிங்கம், துருவக் கரடி, நீலத்திமிங்கிலம் போன்ற இனங்கள்.
6. எதிர்காலத்தில் அச்சுறுத்தலுக்குள்ளாகலாமென எதிர்பார்க்கப்படக்கூடிய இனங்கள்
7. வாழ்வியலுக்கு உடனடியான அச்சுறுத்தல் இல்லாத இனங்கள்.
8. அச்சுறுத்தல் தொடர்பான மதிப்பீடுகளை மேற்கொள்வதற்கான தரவுகள் பற்றாக்குறையாகவுள்ள இனங்கள்.
9. அச்சுறுத்தல் தொடர்பான மதிப்பீடுகள் மேற்கொள்ளப்படாத இனங்கள்.
இவை இவ்வாறு அச்சுறுத்தலுக்குள்ளாவதில் பல காரணிகள் செல்வாக்குச் செலுத்துகின்றன.
ஒவ்வொரு இனமும் தனித்துவமானதாகவே கருதப்படுகின்றது. பல்வேறு காரணிகளால் தான் வாழும் சூழலில் தன்னைத் தக்கவைத்துக் கொள்ள முடியாத இனமும், புதிய சூழலை ஏற்று வாழமுடியாத இனமும் அச்சுறுத்தலுக்கோ அல்லது அழிவுக்கோ உள்ளாகுமென்பதே அடிப்படை. தற்போது சூழல் பாதுகாப்பு தொடர்பான அமைப்புகளும் அரசாங்கங்களும் மனிதனால் ஏற்படும் அச்சுறுத்தலிலிருந்து இனங்களைப் பாதுகாக்கும் நோக்குடன் பல பாதுகாப்பு நிகழ்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்துகின்றன.

தேவைக்கு மேலதிகமாக அறுவடை செய்தல், சூழல் மாசு, இனங்களின் இயற்கை வாழ்விடங்களை அழித்தல், அவற்றை அழிக்கும் புதிய இனங்களின் அறிமுகம், அவற்றினால் ஏற்படும் உணவுக்கான போட்டி, உயிரினங்களை வேட்டையாடுதல் மற்றும் ஏனைய பல காரணிகள் போன்றவை முக்கியமாக நோக்கப்பட வேண்டியவை.
பல இனங்கள் அவதானிக்கப்படாமலே மறைந்து போயுள்ளன. இனங்களின் குடித்தொகை மரபுரிமையியல் மற்றும் குடியியல் தொடர்பான நிகழ்வுகள், கூர்ப்படைதலைப் பாதித்து அவற்றின் அழிவுக்குக் காரணமாகின்றன. சிறிய குடித்தொகையையுடைய இனங்கள் இத்தகைய நிகழ்வுகளின் போது அதிகளவில் பாதிக்கப்படுவதாக அறியப்படுகிறது.
வரையறுக்கப்பட்ட புவியியல் எல்லைகள் தனிப்பட்ட இனங்களின் அழிவுக்குப் பின்னணியாக அமைந்துள்ளதாகவும் அறியப்படுகிறது.
இயற்கைத் தேர்வானது தக்கனவற்றைப் பிழைக்க வைப்பதுடன் நலிந்தனவற்றை இல்லாதொழிக்கும் பாரம்பரிய இயல்பின் பல்வகைமையின் இழப்பானது, உயிரினங்கள் அழிவடைவதற்கான சாத்தியக் கூறுகளை உருவாக்கும். உயிரினங்களின் இனப் பெருக்கம் கட்டுப்படுத்தப்படுவதால் உயிரினங்களின் எண்ணிக்கை குறைவடைந்து காலப் போக்கில் அவை அழிவும் சாத்தியக் கூறுகளே அதிகளவில் காணப்படுகின்றன.
கலப்பு முறைப் பிறப்பாக்கம் போன்ற காரணிகள், இயற்கையாகவே கூர்ப்படைந்து அப்பிராந்தியத்திற்கே உரித்தானவையாகக் காணப்படும் இனங்களின் அழிவுக்குக் காணமாகின்றன.
குறித்த பிராந்தியத்திற்குரியதல்லாத இனங்கள் அப்பிராந்தியத்தினுள் கொண்டுவரப்படும் பொழுது மனிதனால் வலுக்கட்டாயமாகவோ அல்லது வாழ்விடங்கள் திருத்தியமைக்கப்படுவதாலோ சுதேச இனங்களுடன் கலப்புப் பிறப்பாக்கத்திலீடுபட்டு அவற்றின் நிலைப்பில் பாதிப்புக்களை ஏற்படுத்தும் இயற்கையாகவே கூர்ப்படைந்து வருமினங்கள் நலிவடைந்த கலப்பினங்களாக மாற்றப்படுவதால் அவை இயற்கைச் சூழலுடன் ஒன்றித்து நீண்ட காலம் வாழ முடியாமல் அழிந்துபோகும்.
வாழ்விடங்களின் தரம் குறைவடைதல், அவ்வினங்கள் நீண்ட காலம் உயிர்வாழ முடியாமற் செய்வதுடன் அவற்றை அழிவடையச் செய்வதிலும் பெரும் பங்குவகிக்கின்றது. வாழிடத்தின் தரமானது சூழலில் இனங்கள் வாழ முடியாதவாறு நச்சுத் தன்மையுடையதாக மாறுதல் போன்ற நேரடிக் காரணிகளாலும் மறைந்து வரும் வளங்களுடனோ அல்லது மற்றைய போட்டியினங்களுடனோ போட்டி போட முடியாதவாறு மட்டுப்படுத்தப்படல் போன்ற மறைமுகமான காரணங்களும் பங்கு வகிக்கலாம்.
சூழல் நச்சுத்தன்மையாக மாறுவதால் அச்சூழலின் அங்கத்தவர்கள் யாவருமே கொல்லப்படுவதால் இனங்களும் மிக வேகமாகக் கொல்லப்படும். நச்சுத்தன்மை மட்டம் குறைவாகவிருக்கும் சந்தர்ப்பங்களில் சூழலானது நீண்டகால நோக்கில் இனங்களின் ஆயுட்காலம், இனப்பெருக்கம் செய்யும் ஆற்றல், போட்டியிடும் தன்மை போன்ற விடயங்களில் பாதிப்பை ஏற்படுத்தும்.
வாழ்விடங்களின் தரம் இழக்கப்படுதலும் ஏனைய தேவைகளும் பொருளாதார ரீதியாக அவ்வாழ்விடங்கள் அழிக்கப்படுதலுக்கு வழிவகுக்கும். அயன மண்டல மழைக் காடுகள் பரந்தளவில் அழிக்கப்பட்டு இன்று புல் நிலங்களால் பிரதியீடு செய்யப்பட்டுள்ளன.
அடர் காடுகள் இல்லாதொழிக்கப்படுவதால் பல இனங்களின் வாழ்விடங்கள் அழிக்கப்பட்டு அவை உயர்வாழ முடியாமல் போகின்ற சந்தர்ப்பங்கள் அதிகமாக்கப்பட்டன. அடர்ந்த மரங்களின் நிழலையே ஆதாரமாகக் கொண்டு வாழும் ஒருவகைப் பாசித் தாவர இனம், காடுகள் அழிக்கப்பட்டதால் நிலத்தை நேரடியாக அடையும் சூரிய ஒளியைத் தாக்குப் பிடிக்க முடியாமல் அழிந்து போனமையைக் குறிப்பிடலாம்.
அழிந்துவரும் வளங்களும் புதிய போட்டி இனங்களும் கூட வாழிடங்களின் தரம் இழக்கப்படுவதில் பங்காற்றுகின்றன. பூகோளம் வெப்பமயமாதலானது சில இனங்களின் புவியியல் எல்லைகள் அதிகரிக்கப்பட வழி வகுத்ததால் வேறு சில இனங்களின் வாழ்விடம் அத்துமீறிப் பறிக்கப்படுவதற்குக் காரணமாகியது. அத்துடன் அத்தியாவசியமான வளங்களான நீர், மற்றும் உணவு போன்றனவும் வரையறுக்கப்பட்டுள்ளமையால் இனங்கள் அழிந்துபோகும் சாத்தியக் கூறுகள் அதிகம் காணப்படுகின்றன.
மனிதர்கள் புராதன காலம் தொட்டு உலகின் ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கு விலங்குகளையும் தாவரங்களையும் கொண்டு செல்கின்றார்கள். உணவுக்காகக் கால்நடைகள் தனித் தீவுகளில் விடப்பட்டமையும், படகிலிருந்து எலிகள் தப்பிப்பமையும் கூட இச்செயற்பாட்டின் விளைவுகளே.
இத்தகைய நடைமுறைகள் பல வேளைகளில் தோல்வியில் முடிந்தாலும் இவ்வாறு ஆக்கிரமிக்கும் வேற்றுப் பிராந்திய இனங்கள் சர்வதேச இனங்களை உண்பதாலும் அவற்றுடன் போட்டியிடுவதாலும் ஒட்டுண்ணிகள் மற்றும் நோய்களால் அவற்றை நோய் வாய்ப்படுத்தியும் அவற்றை அழிப்பதில் நேரடியாகப் பங்களிக்கின்றன. அதே சமயம் அவற்றின் வாழ்விடங்களை அழிப்பதாலும் வாழ்விடங்களின் தரத்தை இழக்கச் செய்வதாலும் மறைமுகமாகப் பங்களிக்கின்றன.
ஒரு இனமழிவதால் அதில் தங்கியுள்ள இனங்களும் அழிவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுகின்றன.
பூகோளம் வெப்பமயமாதலானது நீண்டகால நோக்கில் உயிரினங்கள் அழிவடைவதற்குக் காரணமாகின்றது. இன்று இருக்கும் நிலத் தாவரங்கள், விலங்குகளில் 25 சதவீதமானவை 2050ஆம் ஆண்டளவில் அழிந்து போகுமென எதிர்வு கூறப்படுகிறது. அதேசமயம் இன்று இருக்கும் இனங்களில் 33 – 50 சதவீதமான இனங்கள் அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளன என்ற உண்மை மறுக்கப்பட முடியாதது.
காபனீரொட்சைட் மட்டம் மற்றும் வெப்பநிலையின் வேகமான அதிகரிப்பு, ஆயிரக் கணக்கான இனங்கள் அழிந்து போகக் காரணமாகும். காலநிலை மாற்றம் மட்டுமன்றிக் காடழிப்பும் இனங்களின் அழிவுக்குக் காரணமாகின்றது.
இனங்கள் காலநிலை மாற்றத்திற்கேற்றவாறு தம்மை மாற்றியமைக்குமெனும் கருத்து பலரால் முன்வைக்கப்படுகின்ற போதிலும் காலநிலை மாற்றத்தின் விளைவுகளான மாற்றமடையும் மழை வீழ்ச்சி, பருவகாலங்கள் மற்றும் வெப்ப நிலை, உயரும் கடல் மட்டம், மாற்றமடையும் சூழல் தொகுதியின் கட்டமைப்பு, கிடைக்கும் உணவின் அளவிலான மாற்றம் போன்ற பல காரணிகள் பாதிப்பை எற்படுத்தும். படிப்படியான காலநிலை மாற்றத்தினாலேயே பெரியளவினாலான அழிவுகள் இடம்பெற்றதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அதே சமயம் காலநிலை மாற்றமான புதிய இனங்களின் தோற்றத்துக்கும் வழிவகுக்குமென்பதில் ஐயமில்லை. இவ்வருடம் வெளியாகியுள்ள சிவப்புத் தரவுப் பட்டியலானது காலநிலை மாற்றத்தால் ஏறத்தாழ 10 இனங்கள் அச்சுறுத்தலுக்குள்ளாகியிருப்பதாகத் தெரிவிக்கின்றது.
துருவப் பகுதிகளில் வாழுமினங்கள் சமுத்திரங்களின் வெப்ப நிலையுயர்வு, அதிகரிக்கும் காபனீரொட்சைட் காரணமாக ஏற்படும் அமிலத்தன்மை அதிகரிப்பு, உருகும் பனிக்கட்டிகள் போன்ற பல காரணிகளால் பாதிப்படைகின்றன.
சமுத்திரங்கள் அமிலத்தன்மையடைவதால் அவற்றில் வாழும் ஒருவகை மீனினம் (Clown Fish) தனது நுகர்வாற்றலை இழக்கின்றது- இதனால் தான் தங்கி வாழும் அனிமணியைத் தேடிப் பிடிப்பதில் பல சிரமங்களை எதிர்நோக்குவதால் அழிவுக்குள்ளாகின்றது. சமுத்திரங்களில் கலக்கும் காபனீரொட்சைட், முருகைக் கற்பாறைகளையும் அழிவுக்குள்ளாக்கும்.
வர்த்தக ரீதியாகப் பாரியளவில் முதலிடப்படுகின்ற மீன்பிடித் தொழில் சல்மன் எனப்படும் மீனினத்திலேயே அதிகளவில் தங்கியுள்ளது. நீரின் வெப்பநிலை காரணமாக நீரின் ஒட்சிசன் மட்டம் குறைக்கப்படுவதால் இம்மீனினம் நோய்வாய்ப்படுதல் அதிகரித்துள்ளதுடன் அதன் இனப் பெருக்கச் செயற்பாடும் பாதிப்படைகின்றது
சூழலின் காபனீரொட்சைட் மட்டம் அதிகரிப்பதால் தரமான, போஷாக்குள்ள யூக்கலிப்றஸ் இலைகளின் எண்ணிக்கை குறைவடைவதால் அவுஸ்திரேலியாவுக்கேயுரித்தான கோலா கரடிகள் பெரும் அச்சுறுத்தலை எதிர்நோக்குகின்றன. விலங்கினங்கள் மட்டுமன்றித் தாவர இனங்களும் இத்தகைய அச்சுறுத்தலை எதிர்நோக்குகின்றன.
இனங்கள், பெரியளவிலான அழிவுகளையும் எதிர்நோக்குகின்றன. பூமி தோன்றிய காலத்திலிருந்து இன்று வரை ஆகக் குறைந்தது ஐந்து தடவைகளாவது இத்தகைய பெரியளவிலான அழிவுகள் இடம்பெற்றிருக்கக் கூடுமெனக் கூறப்படுகின்றது. கடந்த 3.5 பில்லியன் ஆண்டுகளுள் இத்தகைய நான்கு அழிவுகள் இடம்பெற்றுள்ளன. இதுவே டைனசோர் போன்ற பல உயிரினங்கள் அழிவடைந்தமைக்கும் காரணமாகும் உயிர்க்கோளமானது மனிதனால் அழிக்கப்படும் சந்தர்ப்பங்களிலும் அழிவுக்குள்ளாகும்.
இவை தவிர மனித உணவிற்காகவும் பொழுது போக்கு மற்றும் ஏனைய தேவைகளுக்காகவும் இனங்கள் அழிக்கப்படுதலானது இன்று அதிகரித்து வருகின்றது. விலங்குகளை வேட்டையாடும் தொழில்நுட்பம் வளர்ந்துள்ளமை இந்நிலையை மேலும் அதிகரித்துள்ளது- விலங்குகள் மற்றும் சில தாவரங்களினால் உற்பத்தியாகும் பொருட்கள் அதிகளவில் விற்கப்படுவதால் தோல், கொம்பு, மருந்து, தளபாடம் போன்ற பல பொருட்களுக்காகவும் தேவைகளுக்காகவும் உயிரினங்கள் வேட்டையாடப்பட்டு வருவதுடன் தாவரங்களும் அழிக்கப்படுகின்றன.
பல உயிரினங்கள் செல்லப் பிராணிகளாக மாறி வருவதாலும், காடுகளில் அவற்றின் இனம் அழிவடைகின்றது.
மற்றைய இனங்களை எல்லாம் பாதிப்புக்கு உள்ளாக்கித் தான்மட்டும் சுகபோகத்தை அனுபவிக்க எண்ணும் சுயநலம் மிக்க இனமாகவே மனித இனம் தென்படுகின்றது- இன்று எமது வாழ்வியல் அச்சுறுத்தலுக்குள்ளாக ஆரம்பித்துள்ள போது, மற்றைய இனங்கள் பற்றிய கரிசனையைச் சுயநலத்துடன் அதிகரிக்கின்றோம்.
ஏழைகளை ஏழைகளாகவே வைத்திருந்து, பணக்காரர்கள் இன்னும் சீர்பெற்று உலகின் வளங்கள் யாவற்றையும் இந்த நூற்றாண்டிலேயே வெறுமையாக்கித் தன் கடல்களில் பிளாஸ்டிக், எண்ணெய்க் கழிவுப் பொருட்களை நிரப்பிப் பறவைகளையும் மிருகங்களையும் வாழ விடாமல் செய்து, பணத்தில் சீர் பெற்று மனதின் சீர் அழித்து குற்ற உணர்வுள்ள சுபிட்சம் பெறப் போகிறானா?’ என அண்மையில் மறைந்த எழுத்தாளர் சுஜாதா கேட்ட கேள்விக்கு பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள் இன்றைய சந்ததியினரான நாங்களே!

Friday, December 18, 2009

வேடிக்கை மனிதரைப் போல நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?


தொங்கும் கூட்டம் நடுவே
தொத்திப்பாய்ந்து ஒற்றைக்காலில்
ஒருகைப்பிடியில் அலைந்து
நின்றான அவன்!
சட்டெனத்திரும்பி
யன்னலினூடே ஒடும் மரங்களை
அதிசயித்துப்பார்த்து
பாவனை செய்தேன்!
ஒருமணி நேரம்
ஒற்றைக்காலில்
தொங்கிக்களைத்தவன்
ஏக்கமாய் முகம்பார்த்தான்!
என் இருக்கைத்தலைமேல்
அழகுவாசகமாய்
‘இது வலுவிழந்தோருக்கு’!

என்று யதார்த்தத்தைப் பிரதிபலிக்கிறான் கவிஞனொருவன். தமது சுயநலத்திற்காக மனித நேயத்தை மண்ணிற்குள் புதைக்கும் விந்தையான மனிதர்கள் நிறைந்த இப்பூவுலகைச் சளைக்காது எதிர்கொள்ளும் வலுவிழந்தோர் பாராட்டப்பட வேண்டியவர்களே.
இன்று ‘வலுவிழந்தோர்’ எனும் பதமானது அகராதிகளில் ‘மாற்றுத்திறன் படைத்தோர்’ எனும் பதத்தால் பிரதியீடு செய்யப்பட்டுள்ளது. இலங்கையைப் பொறுத்தவரையில் உடல், உள ரீதியான குறைபாடு காரணமாகத் தமது வாழ்வியல் தேவைகளைச் சுயமாக எதிர்கொள்ளமுடியாதவர்களே ‘மாற்றுத்திறன் படைத்தோர்’ எனச் சட்ட ரீதியாகக் கருதப்படுகின்றனர்.
சமூக அபிவிருத்தி அமைச்சு, விழிப்புலன், செவிப்புலன், பேச்சு, நகருதல், புரிந்து கொள்ளுமாற்றல், உளம் சார்ந்த விடயங்கள் தொடர்பான வலுவின் இழப்பைக் கருத்தில் கொண்டே இத்தகைய மாற்றுத்திறன் படைத்தோரை வகைப்படுத்துகிறது.
வலுவிழத்தல் எனப்படுவது பிறப்பினாலோ அல்லது பிறந்த பின்னர் ஏற்பட்ட விபத்து, நோய் போன்ற காரணிகளினாலோ உருவாகலாமெனக் கருதப்படுகிறது.
வயது வித்தியாசமின்றி விதிவசத்தால் எவரும், எச்சந்தர்ப்பத்திலும் வலுவிழந்தவராக மாறலாமென்ற உண்மையை மனித மனம் ஒருபோது உணருவதில்லை. வலுவிழந்தோரை வேற்று மனிதர்களாக நோக்கும் பிற்போக்கான மனப்பாங்கு இன்றும் எம்மிடத்தே காணப்படுகிறது.
உலகளாவிய மனித உரிமைப் பிரகடனம், வலுவிழந்தோரும் எந்தவகையான வேற்றுமைகளுமின்றி மனித உரிமைகளையும் சுதந்திரங்களையும் அனுபவிக்க உரித்துடையோரெனவும் குறிப்பிடுகிறது. சாதாரண மனிதர்களைப்போல மாற்றுத்திறனுடையோருக்கும் தமது அபிப்பிராயங்களை வெளிப்படுத்தவும், தாம் விரும்பிய தொழிலை மேற்கொள்ளவும், நியாயமான வாழ்க்கைத் தரத்தை அனுபவிக்கவும் உரிமையுள்ளதென்பது சமூகத்தால் முற்று முழுதாக உணரப்படவில்லை.
இன்று முழு உலகுமே எதிர்நோக்கும் சுகாதாரப் பிரச்சினைகளுள் வலுவிழத்தல் தொடர்பான பிரச்சினைகளே முன்னணியில் திகழ்கின்றன. குழந்தையொன்று வலுவிழந்த குழந்தையாகப் பிறக்கக் கூடிய சந்தர்ப்பங்கள் குறைக்கப்பட்டுள்ள போதிலும் அதிகரிக்கும் புதிய வகை நோய்களும் விபத்துக்களும், வன்முறைகளும் உலகளாவிய ரீதியில் வலுவிழந்தோரின் சதவீதத்தை அதிகரிப்பதில் பெரும்பங்காற்றுகின்றன.
இத்தகைய மாற்றுத்திறன் படைத்தோர், அடிப்படை மற்றும் புனர்வாழ்வு வசதிகளுக்கான வாய்ப்புகள் மிகவும் குறைந்தளவில் காணப்படுகின்ற வறிய நாடுகளிலேயே அதிகளவில் வசிக்கின்றனர்.
உலக சனத் தொகையில் 5 சதவீதமானோர் மாற்றுத்திறனுடையவர்களெனவும் அவர்களில் இருபது சதவீதமானோர் வறுமைக் கோட்டுக்குட்பட்டவர்களெனவும் உலக வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.


2001 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட குடிசனத்தொகை மதிப்பீடானது இலங்கையின் சனத்தொகையில் 1.6 சதவீதமானோர் மாற்றுத்திறனுடையோரெனக் குறிப்பிடுகிறது.
2003 ஆம் ஆண்டு ஐ. நா. ஸ்தாபனத்தால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளினடிப்படையில் இலங்கையின் சனத்தொகையில் ஏழு சதவீதமானோர் மாற்றுத்திறனுடையோரெனத் தெரிய வருகின்றது.
தற்போது இச்சதவீதம் மேலும் அதிகரிக்கப்பட்டிருக்கலாமெனவும் கருத்தப்படுகிறது.
இலங்கையின் இலவசக் கல்வித் திட்டம், சகலரும் கல்வி கற்கும் உரிமையைப் பெற்றுக்கொள்ள ஏதுவாக அமைகிறது. மாற்றுத்திறனுடையோரில் 69.3 சதவீதமானோர் பாடசாலைக் கல்வியை ஏதோ ஒரு மட்டம் வரையிலாவது பெற்றிருக்கின்றனர். அவர்களில் 3 சதவீதமானோர் மட்டுமே, க.பொ.த. உயர்தரக் கல்வித் தகைமைகளையுடையவர்களாவர்.
பல்கலைக்கழக அனுமதியில் மாற்றுத்திறன்மிக்கோருக்காக, குறிப்பிட்ட சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகங்களில் மாற்றுத்திறனுடைய மாணவர்களை இன்று சகஜமாகக் காண முடிகின்ற போதிலும், அவர்கள் கல்வியை இடையில் நிறுத்துவதற்கு சக மனிதர்களின் ஆதரவின்மை, போக்குவரத்துப் பிரச்சினைகள், இவர்களின் கல்வி தொடர்பாகப் பெற்றோர்களின் மனப்பாங்கு, அவர்கள் கற்பதற்கான உபகரணங்கள், மற்றும் வசதிகள் தொடர்பான குறைபாடுகள் போன்ற பல காரணிகள் ஏதுவாக அமையலாம்.
இலங்கையில், தொழில்புரியக் கூடிய மாற்றுத்திறனுடையோரில் 85 சதவீதமானோர் தொழில் வாய்ப்பற்றவர்களாகவே காணப்படுகின்றனர்.
அரச கருமபீடங்களின் ஆளணியில் 3 சதவீதமான இட ஒதுக்கீடு மாற்றுத்திறனுடையோருக்காக வழங்கப்பட்டுள்ள போதிலும் இத்தகைய சலுகைகள் தொடர்பான விழிப்புணர்வின்மையும், அவர்கள் நடைமுறையில் எதிர்நோக்கும் பல்வேறு சிக்கல்களும் அவர்கள் தொழில்வாய்ப்பைப் பெற்றுக்கொள்வதற்கான தடைக்கற்களாக அமைகின்றன.
அரச, அரசசார்பற்ற நிறுவனங்களும் பொது அமைப்புக்களும் மாற்றத்திறனுடையோருக்குச் சமூக அங்கீகாரத்தை வழங்கும் முகமாகச் சமூக மட்டத்தில் அவர்களுக்கான அமைப்புக்களைத் தோற்றுவிப்பதிலீடுபடுவதுடன் பல்வேறுபட்ட செயற்திட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றன.
பிறப்பினால் ஏற்படும் குறைபாடுகளைத் தவிர்க்க, கிராமங்கள் தொட்டு நகரங்கள் வரை பெரும்பாலான கர்ப்பிணித் தாய்மாரின் சுகாதார, மருத்துவத் தேவைகள் தொடர்பான சேவைகள் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன.
இலங்கையில் மாற்றுத்திறன் மிக்கோர் தொடர்பாகத் தேசிய ரீதியிலான பல்வேறுபட்ட கொள்கைகள் நடைமுறையிலுள்ளன. 1988 ஆம் ஆண்டு அமுலுக்கு வந்த பொது நிர்வாகச் சுற்று நிருபத்திலிருந்து 2003 ஆம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் வலுவிழத்தல் தொடர்பான தேசிய கொள்கையுட்படப் பல கொள்கைகளையும் சட்டங்களையும் உதாரணமாகக் கூறலாம். இக்கொள்கைகளினடிப்படையில் பல திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
1997 ஆம் ஆண்டு ஆரம்ப நிலைக் கல்வி தொடர்பான சீர்திருத்தங்கள், மாற்றுத்திறனுடைய சிறுவர்களையும் ஏனைய சிறுவர்களுடன் ஒருங்கே இணைத்துக் கல்வியைக் கற்பிக்க வழிவகுத்தது. தேசிய கல்வி நிறுவகம், மாற்றுத்திறனுடையோருடைய கல்வியின் அபிவிருத்தி தொடர்பான பல செயற்திட்டங்களை மேற்கொண்டு வருகிறது.
இலங்கையின் சுகாதாரம் தொடர்பான கொள்கைகள் மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதிலும் நோய்கள் மற்றும் பிறவிக்குறைபாடுகளைத் தடுப்பதிலும் பெரும்பங்காற்றுகிறது. மாற்றுத்திறனுடையோரை விளையாட்டுக்களிலீடுபடுத்தும் செயற்திட்டங்களும் நடைமுறையிலுள்ளன.

விளையாட்டு வீரர்களிலிருந்து அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஒலிம்பிக் விளையாட்டுக்கு நிகராக மாற்றுத்திறன் படைத்தோரையும் விளையாட்டுத்துறையில் சாதனை படைக்கத் தூண்டும் வகையில் ‘பராலிம்பிக்’ எனும் பெயரிலான சிறப்பு ஒலிம்பிக் போட்டி நான்கு வருடங்களுக்கொருமுறை நடத்தப்பட்டு வருகிறது.
1948 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியின் ஆரம்ப தின வைபவத்தின் போது இரண்டாம் உலக மகா யுத்தத்தால் வலுவிழந்தவர்களாக மாற்றப்பட்ட போர் வீரர்களை ஊக்குவிக்கு முகமாக அவர்களுக்கான சிறப்பு விளையாட்டுப் போட்டி ஒன்று நடத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து 1952 ஆம் ஆண்டிலிருந்து நான்கு வருடங்களுக்கொருமுறை பராலிம்பிக் போட்டிகளும் நடைபெற்று வருகின்றன. இவை தவிர உலகளாவிய ரீதியிலும், நாடளாவிய ரீதியிலும் இத்தகைய பல விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
மாற்றுத் திறனுடைய இளைஞர்களுக்கான தொழிற் பயிற்சிகளும், தகவல் தொழில்நுட்பத் துறையிலான அறிவூட்டல் நடவடிக்கைகளும், தொழில் வாய்ப்புக்களும் நாடளாவிய ரீதியில் வழங்கப்பட்டு வருகின்றன.
இவைதவிர அவர்களின் திறன்களை மேலும் அபிவிருத்தி செய்வதற்கான பயிற்சிகள் ஆற்றுப்படுத்தல் சேவைகள், சிறிய அளவிலான கடன் திட்டங்கள், வருமானத்தைப் பெற்றுக் கொள்ளக்கூடிய வழிகள், இளைஞர் கழகங்களின் உருவாக்கம், கலாசார நிகழ்வுகள், விளையாட்டு மற்றும் பொழுது போக்கு நிகழ்ச்சிகள் போன்ற பல செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
அத்துடன் மாற்றாற்றலுடையோர் தொடர்பான கொள்கைகளை வகுப்பதிலும், ஆய்வுகளை மேற்கொள்வதிலும், பயிற்சி நிகழ்வுகளைத் திட்டமிட்டு, ஏற்பாடு செய்து, மதிப்பீட்டை மேற்கொள்ளவதிலும் மாற்றாற்றலுடைய இளைஞர்களின் பங்களிப்பு உறுதி செய்யப்படுகிறது.
தேர்தல்களில் மாற்றுத்திறனுடையவர்களின் வாக்களிக்கும் உரிமையை மதிக்கும் வகையில் அவர்கள் இன்னொருவரின் உதவியுடன் வாக்களிக்கக் கூடிய வகையிலான ஆயத்தங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இவைதவிர போக்குவரத்து முறைமைகளிலும், பாடசாலைகள், பொது இடங்கள் போன்றவற்றிலும் மாற்றாற்றல் மிக்கோர் சகஜமாகத் தொழிற்படக்கூடிய வகையில் வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.
குடும்பத்தவர்களும் பெற்றோர்களும் இத்தகைய விடயங்கள் தொடர்பாக அறிவூட்டப்படுவதுடன் அவர்களுக்கு இவ்விடயம் தொடர்பான ஆலோசனைகளையும் ஆற்றுப்படுத்தல் சேவைகளையும் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மாற்றாற்றலுடைய வர்களுக்கான ஓய்வூதியத்திட்டங்களும் காப்புறுதித் திட்டங்களும் நடைமுறையிலுள்ளன.
அத்துடன் அவர்கள் ஓரளவாவது சுயமாகத் தொழிற்படக் கூடிய வகையில் முச்சக்கர வண்டிகள், சக்கர நாற்காலிகள், செவிப்புலன் மற்றும் விழிப்புலனிழந்தோருக்கான கருவிகள், ஏனைய அத்தியாவசியமான மருத்துவ உபகரணங்களுட்படப் பல உபகரணங்களும் வழங்கப்பட்டு வருகின்றன.
மாற்றுத்திறனுடையோரின் வாழ்வை மேம்படுத்துமுகமாக உலக சுகாதார ஸ்தாபனமும் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
அத்தகையோர் தொடர்பான தேசிய கொள்கைகளை வகுப்பதற்கும், அக்கொள்கைகளினடிப்படையில் பொதுமக்களின் ஒத்துழைப்புடன் அபிவிருத்திச் செயற்றிட்டங்களை மேற்கொள்வதற்குமான உதவிகளை வழங்கிவருகிறது. சர்வதேச ரீதியிலான வகைப்படுத்தலினடிப்படையில் நாடுகளில் காணப்படும் பல்வேறுபட்ட சுகாதார நிலைகளை இனங்காண்பதற்கும் உதவி வருகிறது.
வலுவிழத்தல் தொடர்பான பிரச்சினைகளை ஆரம்பத்திலேயே இனங்கண்டு அவற்றைப் பரிகரிக்க வழிசெய்வதுடன் பாதிக்கப்பட்டோரை வழி நடத்தத் தேவையான உபகரணங்கள், அவர்களுக்கேற்றவாறு அவர்கள் வாழும் சூழல் மாற்றியமைக்கப்பட வேண்டிய முறைமைகள் தொடர்பான உதவிகளையும் வழங்கி வருகிறது. குறிப்பாக வறிய மக்கள் மத்தியில் மனித உரிமைகள் தொடர்பாகவும் யாவருக்கும், யாவற்றிலும் சமவாய்ப்பு வழங்கப்பட வேண்டுமென்பது பற்றியும்
இவையாவற்றிற்கும் அப்பால் நாம் ஒவ்வொருவரும் எமக்கான பொறுப்பையுணர்ந்து செயற்பட வேண்டும். எதிர்காலத்தில் நாம் வலுவிழந்தோராக மாறுவதற்கான சந்தர்ப்பங்களையும், வலுவிழந்தோரை உருவாக்கும் சந்தர்ப்பங்களையும் குறைப்பதற்கான முயற்சிகளிலீடுபட வேண்டும்.
இன்று ஒருவர் வலுவிழந்தவராக மாறுவதற்கான முக்கிய காரணிகளாக விபத்துக்களும் வன்முறைகளுமே அமைகின்றன. விபத்துக்களானவை பெரும்பாலான சந்தர்ப்பங்களில் எமது கவனக்குறைவினாலேயே ஏற்படுகின்றன.
வீடுகளிலும் வெளியிடங்களிலும் நாம் மிகுந்த அவதானத்துடன் செயற்பட ஆரம்பித்தால், பெரும்பாலான விபத்துக்கள் தவிர்க்கப்படலாம். அதேசமயம், விபத்து ஒன்று நடைபெற்ற சந்தர்ப்பத்தில் பாதிக்கப்பட்டவரின் உயிரைக் காப்பாற்றுவதுடன், எமக்கும், சுற்றியுள்ளோருக்கும் எந்தவித ஆபத்தும் ஏற்படாத வகையில் செயற்படக்கூடிய விதமாக சம்பவ முகாமைத்துவம், மற்றும் அடிப்படை முதலுதவி தொடர்பான அறிவை நாம் ஒவ்வொருவரும் பெற்றிருத்தல் அவசியமாகிறது.
வன்முறைக் கலாசார மற்ற எதிர்காலச் சந்ததியை உருவாக்குவதிலும் நாம் பெரும் பங்கை வகிக்க வேண்டும்.
மாற்றுத்திறன் படைத்தோரையும் சக மனிதர்களாகவே கருத வேண்டும். அவர்களின் மனம் நோகும்படியான வார்த்தைப் பிரயோகங்களைத் தவிர்க்க வேண்டும்.
எமது சொல்லும் செயலும் அவர்களை ஊக்கப்படுத்துவதாக மட்டுமே அமைய வேண்டும். மாற்றுத்திறனுடைய ஒருவரைப் பற்றி எழுதும் சந்தர்ப்பத்தில் அவரால் இழக்கப்பட்ட வலுவுக்கு முக்கியத்துவம் வழங்காமல் அந்த நபருக்கும் அவரின் ஆற்றலுக்குமே முக்கியத்துவத்தை வழங்க வேண்டும். ‘விழிப்புலனிழந்த சிறுமி’, ‘ஊமைச் சிறுவன்’ போன்ற சொற்பதங்களின் பிரயோகம் தவிர்க்கப்படுதல் நன்று.
மாற்றுத்திறன் படைத்தோரைச் சந்திக்கும் சந்தர்ப்பங்களில் அவர்களையும் சக மனிதர்களாகக் கருதிச் சமமாக அமர்ந்து கதைத்தல், கை குலுக்குதல் போன்ற சாதாரண செயற்பாடுகளில் பங்கெடுக்க வேண்டும். அத்தகைய நபரொருவரின் பேச்சு தெளிவில்லாமல் இருப்பதன் காரணமாக அவர் சொல்வதை எம்மால் விளங்கிக் கொள்ள முடியாது போனால், மீளக்கேட்டறிய வேண்டுமே தவிர விளங்கிக் கொண்டது போல் பாவனை செய்யக்கூடாது.
மாற்றுத்திறன் படைத்த ஒருவருக்கு உதவி தேவைப்படுகிறதென அறிந்தால், அவரின் அனுமதியைப் பெற்ற பின்னர் உதவி செய்வதே சிறந்தது.
செவிப்புலனிழந்த ஒருவருடன் கதைக்க வேண்டுமெனின் அவருடைய தோளை மெதுவாகத்தட்டி அவரது முகத்தை நோக்கித் தெளிவாகக் கதைக்க வேண்டும்.
வெளிநாடுகளில் நாய் போன்ற மிருகங்களுக்கு மாற்றுத்திறன் படைத்தோரை வழிநடத்துவதற்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு அப்பயிற்சிகளினடிப்படையில் மாற்றுத்திறன் படைத்தோரை அவை வழி நடத்திச் செல்லும். அவ்வாறு வழி நடத்திச் செல்லப்படும் மாற்றுத்திறனுடையோரைச் சந்திக்க நேர்ந்தால், அவர்களை வழி நடத்திச் செல்லும் மிருகங்களைச் சீண்டக் கூடாது. அவ்வாறு சீண்டினால் அம்மிருகங்கள் தமது பயிற்சியை மறந்து செயற்பட ஆரம்பிக்கும்.
இது அம்மாற்றுத் திறனுடையோரை அசெளகரியங்களுக்குள்ளாக்கும். சக்கர நாட்காலி பாவிப்போருடன் கதைக்கும் போது அவர்களது கண்மட்டத்திலிருந்து கதைக்க வேண்டும். அத்துடன் அவர்களை வழிநடத்தும் உபகரணங்களைப் பிடித்தபடி கதைப்பதைத் தவிர்க்க வேண்டும்.
எமது குழந்தைகளோ, சகோதரரோ, உறவினர்களோ அல்லது நண்பர்களோ மாற்றாற்றலுடையவர்களாகவிருந்தால், அவர்களுக்கும் சிறந்ததோர் எதிர்காலம் காத்திருக்கிறது என்ற எண்ணத்தை ஊட்டும் வகையில் நாம் செயற்பட வேண்டும். அத்துடன் நாம் இறந்தபின் எமது கண் போன்ற உறுப்புக்களைத் தானம் செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடலாம்.
வெகுசனத் தொடர்பு ஊடகங்களும் பொதுமக்கள் மத்தியில் மாற்றாற்றலுடையவர்கள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் முன்னணி வகிக்க வேண்டும். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைச் செவிப்புலனற்றவர்களுக்காக ஒரே நேரத்தில் சைகை மொழி மூலமும் உபதலைப்புக்களுடன் ஒளிப்பரப்ப முயலலாம்.
விழிப்புலனிழந்தவர்களின் வாழ்வில் புதிய திருப்புமுனையை உருவாக்கிய ஹெலன் கெல்வர், நவீன விஞ்ஞான யுகத்திற்கு வித்திட்ட அணு விஞ்ஞானி அல்பேர்ட் ஜன்ஸ்டீன், இன்று முழு உலகையுமே ஒளியூட்டிக் கொண்டிருக்கும் மின் குமிழ்களை முதன் முதலில் கண்டுபிடித்த தோமஸ் அல்வா எடிசன் தொட்டு உலகப் புகழ்பெற்ற பெளதீகவியலாளரான சார்ள்ஸ் ஹோக்கின்ஸ், பாரம்பரிய நடனக் கலைஞரான சுதாசந்திரன் வரை மாற்றாற்றலுடைய பலர் எத்தனையோ சாதனைகளை நிலைநாட்டியிருக்கின்றார்கள். இன்னும் முகம் தெரியாத பலர் நிலைநாட்டிக் கொண்டிருக்கின்றார்கள்.
இவர்களெல்லாம், “பல வேடிக்கை மனிதரைப் போலே நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?” என்ற பாரதியின் வரிகளை நெஞ்சுயர்த்திப்பாடுபவர்களாகவே தெரிகின்றனர். மாற்றுத்திறன் படைத்தோரின் நம்பிக்கை நட்சத்திரங்களாகத் திகழும். இத்தகையோரின் வழியில் ஏனையோரும் சென்று சாதிக்க நாம் யாவரும் ஒன்று சேர்ந்து வழிசெய்ய வேண்டும்.
உலகமயமாதலையும் தாண்டி வேற்றுமைகளின்றிய உலகைத் தோற்றுவிக்க ஒன்றிணைவோமாக!

வேற்றுக்கிரகவாசிகள் பு+மியை உளவு பார்க்கின்றனரா?
வேகமாக வளர்ச்சி கண்டுவரும் நவீன விஞ் ஞான உலகையே வியப்புக்குள் ளாக்கித் தம்பக்கம் திரும்ப வைக் கும் பல நிகழ்வுகள் அன்றாடம் நடந்தபடிதான் இருக்கின்றன.
2002 ஆம் ஆண்டளவில் இலங் கையின் புராதன பிரதேசமான திம்புலாகலைக்குன்றின் உச்சியில் பிரதேசவாசிகள் விசித்திரமான நீலநிற ஒளியை அவதானித்தனர்.
அதே காலத்தில் பொலன்ன றுவை, அனுராதபுரம் வாசிகளும் அத்தகைய புதுமையான ஒளியை அவதானித்தனர். அவ்வொளி, பறக்கும் தட்டினுடையதாகவோ அல்லது வேற்றுக்கிரகவாசிகளு டன் தொடர்புடைடையதாகவோ இருக்கலாமெனப் பல ஊகங்கள் வெளியிடப்பட்டன.
உலகளாவிய ரீதியில் இத்தகைய பல நிகழ்வுகள் அவதானிக்கப் பட்டு வந்துள்ளன. ஆனால் இன் றுவரை இவை இத்தகையனதா னென விஞ்ஞானத்தால் வரைய றுத்துக்கூற முடியவில்லை. எனி னும் அது பல ஊகங்களை வெளியிட்டுள்ளது.
அண்டவெளியெனப்படுவது இன்றும் கூடப் பல ஊகங்களும் பிரமிப்புக்களும் நிறைந்ததாகவே காணப்படுகிறது. அண்டவெளி யானது பல்வேறு விதமான கோள்கள், நட்சத்திரங்கள், எரிகற்கள், வேறு பொருட்களுட்ப டப் பல்லாயிரம் பில்லியன் பொரு ட்களைத் தன்னகத்தே கொண்டுள் ளது.
நாங்கள் காணும் சூரியனும் ஒரு நட்சத்திரமே. அதைப் போன்று ஏறத்தாழ 500 பில்லியன் சூரியன்கள் அண்டவெளியில் காண ப்படுகின்றன. அண்டவெளியிலு ள்ள நட்சத்திரங்களை ஒரு நொடி இடைவேளை கூட விடாமல் எண்ணுவோமானால் எண்ணி முடிக்க ஆகக் குறைந்தது 60,000 வருடங்களாவது ஆகுமெனக் கணக்கிடப்பட்டுள்ளது.
புவியானது சூரியக்கிரகக் குடும் பத்திலுள்ள ஒன்பது கோள்களி லொன்றாகும். சூரியனையும் அதனைச் சுற்றிவரும் கோள்களை யுமே சூரியக்குடும்பம் அல்லது சூரியத்தொகுதியென்றழைப்பர். இச் சூரியத்தொகுதி போன்ற 240 சூரியத் தொகுதிகள் இனங்காணப்பட்டுள்ளன.
நம்பமுடியாதளவு பெரிய அண்ட வெளியினளவானது வேறு உயிரினங் களையுடைய கோள்கள் பற்றிய எண் ணக்கருவுக்கு வித்திடுகின்றதென்பதில் எதுவித ஐயமுமில்லை. விபரிக்க முடியாத பல வானியல் அவதான ங்கள் பண்டைக்காலம் தொட்டு வரலாற்றில் பதியப்பட்டுள்ளன.
அவற்றில் சில முற்றிலும் வானியல் தொடர்பானவை. சில, வானியல் கொள்கைகளுக்கப்பாற்பட்டவை. பறக்கும் தட்டு போன்ற அத்தகைய அவதானங்களை ‘அடையாளம் காணப்படாத பறக்கும் பொருட் கள்’ என நவீன விஞ்ஞானம் குறிப்பிடுகிறது.
கி. மு. 384 இல் கிரேக்க தத்துவஞானி அரிஸ்டோட்டில், விண்ணில் தான் கண்ட விசித்தி ரப் பொருட்களைச் ‘சொர்க்கத்தின் தட்டுக்கள்’ என விபரித்திருந்தார். கி. மு. 329 இல் மாவீரன் அலெக்சாண்டருடனான கிரேக்க இராணுவத்தின் இந்தியா நோக்கிய படை நகர்வை, வெள்ளிக்கேடயங்களையொத்த விசித்திரமான பறக்கக்கூடிய பொருட்கள் இடைமறித்தனவென வும் கூறப்படுகின்றது.
கி.பி. பதினோராம் நூற்றாண் டில் வாழ்ந்த சீனக் கல்வியாள ரான ஷென்குவே என்பவர், தான் எழுதிய கட்டுரையில், தன்னால் அவதானிக்கப்பட்ட இத்தகைய பறக்கும் பொருட்களைப் பற்றியு மெழுதியிருந்தார். அத்துடன் அப்பறக்கும் பொருளின் கதவுகள் திறக்கப்படக் கூடியதாகவும் அது ஒளி வீசக் கூடியதாகவும் அதிவே கமாகச் செல்லக்கூடியதாகவுமிருந் ததாகக் குறிப்பிட்டிருந்தார்.
மறு மலர்ச்சிக்கால ஓவியங்க ளில் இத்தகைய பொருட்களைக் காணக்கூடியதாகவிருந்த போதி லும் அன்றைய காலங்களில் அவற்றிற்குச் சமய ரீதியிலான விளக்கமேயளிக்கப்பட்டது.
1878இல் ஜோண்மார்டின் என்ற சாதாரண விவசாயி மிகப் பெரிய கருமையான வட்டவடிவப் பறக் கும் பொருளொன்றை அவதானி த்தார். அப்பொருள் தட்டுப்போ ன்று காணப்பட்டதால் ‘பறக்கும் தட்டு’ எனப் பெயரிடப்பட்டது.
1950’ களின் ஆரம்பம் வரை இத்தகைய அவதானங்களைப் பறக்கும் தட்டுக்களென்றே அழைத்து வந்தனர். 1952 இல் ஏற்கனவே பெறப்பட்ட பலவகை ப்பட்ட அவதானங்களினடிப்படை யில் இத்தகைய பொருட்கள் ‘அடையாளம் காணப்படாத பொருட்கள்’ எனப் பெயரிடப்பட்டன.
விமானங்களைப் போலவோ அல்லது ஏவுகணைகளைப் போலவோ அல்லாமல் முற்றி லும் வேறுபட்ட வகையில் செய ற்படக் கூடிய, வானில் பறக்கி ன்ற, விமானங்களல்லாத சகல பொருட்களும் இவ்வகைக்குள் அடங்குகின்றன. இதற்குப் பின்னரான காலப் பகுதிகளில் இத்தகைய பொருட்கள் பல நாடுகளில் அவதானிக்கப்பட்டன. இப்பொருட்கள் தொடர்பான ஆய்வுகளைப் பல நாடுகள் மேற்கொள்ள ஆரம்பித்தன.


1980களில் இப்பொருட்கள் தொடர்பாகப் புதிய திருப்புமு னையொன்று ஏற்பட்டது. விஞ் ஞானப்புனைகதை எழுத்தாளர்க ளும், திரைப்பட மற்றும் நாடக இயக்குநர்களும் வேற்றுக்கிரக மனிதர்கள், பறக்கும் தட்டுக்கள் தொடர்பான பலவித கருப்பொரு ட்களையுடைய ஆக்கங்களையுரு வாக்கிப் பல்வேறுபட்ட ஊகங்க ளுக்கு வழிவகுத்தனர்.
இவ்வேற் றுக் கிரகங்களைச் சேர்ந்த மனித ர்கள் இயற்கையை மீறிய சக்தி யையும் தோற்றத்தையுமுடையவர் களாகச் சித்தரிக்கப்பட்டனர். இது கற்பனையாகவிருந்தாலும் விடை காணமுடியாத பல வினாக்களு க்கு ஊகங்கள் மூலம் விடையளி த்தது. மிகவும் பிரபல்யமான ‘எக்ஸ் பைல்ஸ்’ (X- Files) போன்ற தொலைக்காட்சித் தொடர்களும் ‘கடவுளின் ரதங்கள்’(Chariots of god) போன்ற புத்தகங்களும் மிகச்சிறந்த உதாரணங்களாகும்.
ராடர்களில் கூடச் சில புதிய பொருட்கள் பதியப்பட்ட ஆதார ங்களுள்ளனவென்பது மறுக்க முடியாத உண்மையாகும். இவை தவிர இத்தகைய பொருட்கள் பூமியில் இறங்கியதால் நில மேற் பரப்பில் ஏற்பட்ட அடையாளங் கள், அவை இறங்குமிடங்களில் வசிக்கும் மக்களுக்கும் விலங்குக ளுக்கும் ஏற்பட்ட பாதிப்புக்கள் போன்ற பல ஆதாரங்களும் பல் வேறு ஊகங்களைத் தோற்றுவிக் கின்றன. அத்துடன் இப்பொருட் கள் ஒளியைவிட வேகமாகப் பயணிக்கக் கூடியவையென்ற ஊகங்களும் காணப்படுகின்றன.
அடையாளம் காணப்படாத பறக்கும் பொருட்கள் தட்டு வடிவம், நீள்வட்ட, செவ்வக, முக்கோண வடிவத்துடன் ஒரு சக்கரம் அல்லது இரண்டு சக்கரங் களையுடையனவாகவும் பல்வேறு பட்ட அளவுகளிலும் காணப்படுவ தாக விபரிக்கப்படுகின்றன. அவற் றில் சிலவுடன் ஏறத்தாழ 4 அடி அல்லது 2 அடி உயரமான வித்தி யாசமான தோற்றத்தையுடைய மனிதர்களும் காணப்பட்டதாகக் கூறப்படுகின்றது.
குறிப்பாக அமெரிக்கா போன்ற சில அரசாங்கங்கள் இத்தகைய அடையாளம் காணப்படாத பறக் கும் பொருட்கள் தொடர்பான ஆய்வுகளை மிகவும் இரகசியமாக மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவின் நெவடா பாலைவனத்தின் ஒரு பகுதியான ‘பிரதேசம் 51’ எனப் பெயரிட ப்பட்ட பிரதேசத்தினுள் இத்த கைய வேற்றுக்கிரகவாசிகள் உயி ருடனும் உயிரின்றியும் மறைக்கப் பட்டு வருவதாகச் செய்திகள் உலவியதுண்டு.
அமெரிக்க அரசு ‘பின்னோக்கிய பொறியியல்’ முறைமையின் துணையுடன் இத்தகைய அடையாளம் காண ப்படாத பறக்கும் பொருட்களின் தொழில் நுட்பத்தை ஆராய்ந்து வருவதாகவும், இத்தொழில் நுட்பத்தையடிப்படையாகக் கொண்டு பி- 2 வகையைச் சேர்ந்த மிக வேகமாகப் பயணிக்கக் கூடிய விமானப்படை விமானங்களை வடிவமைத்துள்ள தாகவும் ஆதாரமற்ற தகவல்கள் வெளியானமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பின் நிமித்தம், இத்த கைய பல ஆய்வுகளின் விபரங் கள் வெளியிடப்படவில்லை யென்பதும் பலரது ஊகம்.
நாம் வாழும் புவியிலுள்ள சூரியத் தொகுதி போல வேறுபல சூரியத் தொகுதிகளும் அண்ட வெளியில் காணப்படுகின்றன வென ஆதாரபூர்வமாக நிரபிக்கப் பட்டுள்ள நிலையில், புவியைப் போல உயிரினங்களின் தோற்றத் துக்கும் நிலைப்புக்கும் ஏதுவான சூழலையுடைய வேறு கோள்கள் அச்சூரியத் தொகுதிகளிலும் காண ப்படலாம் என்ற ஊகங்களை மறு க்க முடியாது.
இந்த ஊகங்கள் தான் தர்க்க ரீதியான ஆதாரங் களை முன் வைப்பதற்கு அடிப்ப டையாக அமைகின்றனவெனி னும், இப்பொருட்கள் தொடர்பான தர்க்க ரீதியான ஆதாரங்கள் எவையும் இதுவரை முன்வைக்கப்படவில்லை என்பதே வெளிப்படையான உண்மையாகும்.
மனிதனதும், ஏனைய உயிரினங்களினதும் உடலியல் கட்டமைப்புக்கும் வாழ்வின் நிலைப்புக்கும் அடிப்படையாக அமையும் காபன், ஐதரசன், ஒட்சிசன், நைதரசன் போன்ற முக்கியமான மூலகங்களைப் போல, அத்தகைய வேற்றுக்கிரக உயிரினங்களின் தோற்றத்துக்கும் நிலைப்புக்கும், மனிதனால் அறியப்படாத வேறு பல மூலகங்கள் கூடக் காரணமாக இருக்கலாம். அவ்வேற்றுக் கிரகவாசிகள் வித்தியாசமான உடலமைப்பையுடையவர்களாகவும் காணப்படலாம்.
விஞ்ஞானிகள் வானொலித் தொலைகாட்டிகளைப் பயன்படுத்தியும் ஏனைய நவீன தொலைகாட்டிகளைப் பயன்படுத்தியும் வேற்றுக்கிரக மனிதர்கள் தொடர்பான சமிக்ஞைகள் தென்படுகின்றனவாவென அறிவதில் ஆர்வம் காட்டுகின்றனர். வேற்றுக்கிரக மனிதர்களிடையே தொடர்பாடல் காணப்பட்டால் நவீன தொழில் நுட்பத்தால் அவற்றை மனிதர்களால் கேட்கக் கூடியதாகச் செய்ய முடியும்.
ஆனால் அவர்கள் புவியிலுள்ளோரைவிட, தொழில் நுட்ப ரீதியாகவும் அறிவு ரீதியாகவும் மிகவும் முன்னேற்றமடைந்தவர்களாகக் கருதப்படுவதால் தம்மைப்பற்றிய தகவல்களைப் பிறர் அறிய முடியாத வகையிலான தொழில் நுட்பங்களைப் பாவிப்பவர்களாகக் கூட இருக்கலாமெனவும் தெரிவிக்கப்படுகிறது.
விஞ்ஞானிகள் புவியிலிருந்து சமிக்ஞைகளை அனுப்பி ஏதாவது பதில் கிடைக்கிறதாவென எதிர்பார்த்தவண்ணம் உள்ளன. ஆனால் வேற்றகிரகவாசிகள் எமது சமிக்ஞைகளைத் தமது தொழில் நுட்பம் மூலம் தவிர்க்கவும் முயலலாமெனத் தெரிவிக்கப்படுகிறது.
சாதாரண மனிதரால் ஒளியின் வேகத்தில் பயணிக்க முடியாது. ஆனால் வேற்றுக்கிரக மனிதர்களால் அவ்வாறு பயணிக்க முடியுமெனவும், அந்நிலையில் ஒரு சூரியத் தொகுதியிலிருந்து இன்னொரு சூரியத் தொகுதிக்கு ஒருசில மணித்தியாலங்களுக்குள்ளேயே அவர்களால் பயணிக்க முடியுமெனவும் ஊகங்கள் தெரிவிக்கப்படுகின்றன.
ஆனால் அந்த வேகத்தில் பொருளொன்று பயணிக்குமாயின் வளியுடன் ஏற்படும் உராய்வு காரணமாக அப்பொருள் தீப்பற்றுமென விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
இலங்கையைப் பொறுத்தவரையிலும் இத்தகைய அடையாளங் காணப்படாத பறக்கும் பொருட்கள் பல இடங்களில் அவதானிக்கப்பட்டுள்ளன. 2006 ஆம் ஆண்டு காலியில் இரண்டடி உயரமான விசித்திர மனிதர்கள் தென்பட்டனரெனவும், அவர்களை அணுக முற்பட்ட பொதுமக்கள், அம் மனிதர்களிலிருந்து இருபது மீற்றர் தொலைவிலேயே மயங்கி விழுந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
2002 ஆம்ஆண்டு நீல ஒளியை வெளியிடுகின்ற விசித்திரமான பொருளொன்று திம்புலாகலையில் தரையிறங்கியமை தொடர்பான தகவல்கள் நாம் யாவரும் அறிந்ததே.
1998 இல், பண்டாரவளையிலுள்ள பாடசாலையொன்றின் விளையாட்டு மைதானத்தில் வித்தியாசமான சத்தமொன்று கேட்டதாகவும் அதனைத் தொடர்ந்து தட்டுவடிவமான பொருளொன்றைக் கால்களுடன் கண்டதாகவும், அப்பொருள் சிவப்பு, மஞ்சள் நிற ஒளியை வீசியபடி மிகவும் வேகமாக வானில் பறந்து மறைந்ததாகவும் ஆண்டு மூன்றில் கல்விபயிலும் சிறுவனொருவன் விபரித்திருந்தான்.
பறக்கும் தட்டுக்களைப் பற்றி முன்னெப்பொழுதும் கேள்விப்பட்டிராத அச்சிறுவனின் கூற்றை எவராலும் மறுக்க முடியவில்லை. அதைத் தொடர்ந்து வயதில் பெரிய இன்னொரு சிறுவனிடமும், வேறு சிலரிடமும் விசாரித்த பொழுது பெறப்பட்ட தகவல்கள் ஏற்கனவே பெறப்பட்ட தகவல்களைப் போலவே இருந்தன.
அத்துடன் அத்தட்டு எட்டடி விட்டத்தையும் ஏழடி உயரத்தையும் உடையதென விபரிக்கப்பட்டது. பாடசாலையின் அதிபர், அவ்விசித்திரப் பொருளினால் நிலத்திலேற்பட்ட அடையாளங்களைப் புகைப்படமெடுத்திருந்தார். அத்துடன் அப் பிரதேசத்திற்குரியதல்லாத ஒருவகை வெள்ளை நிறப்பூச்சிகளும் இறந்து காணப்பட்டன.
1990 இல் தட்டுவடிவமான அடையாளம் காணப்படாத பொருளொன்று சமுத்திரத்திலிருந்து கிளம்பி வானை நோக்கிச் சென்றதாகவும், தமது கப்பலை ஏறத்தாழ 15 நிமிடங்கள் நிலைகுலையச் செய்திருந்ததாகவும் மாலுமியொருவர் தெரிவித்தார்.
இந்து சமுத்திரத்தில் மாத்தறையின் தென்பகுதியிலிருந்து 210 மைல் தொலைவிலேயே இச்சம்பவம் நிகழ்ந்தது. அப்பொருள் சமுத்திரத்திலிருந்து எழும்பியதாலேற்பட்ட பாரிய அலைகள் கப்பலின் புறக்கட்டமைப்பில் சேதத்தை ஏற்படுத்தியதாகவும் அவர் தெரிவித்தார். அத்துடன் அப்பொருள் கப்பலை விட ஐந்து மடங்கு பெரிதாக விருந்ததாகவும் வெள்ளி நிறமாக ஒளிவீசியதாகவும் அவர் கூறினார்.
கப்பலிலிருந்த உபகரணங்களும் திசை காட்டியும் பலதடவைகள் சுழன்றதாகவும் வானொலியைப் பயன்படுத்தி உதவி கோர முடியாமல் இருந்ததாகவும் 15 நிமிடங்களின் பின்னர் அப்பொருள் மாயமாக மறைந்து நிலைமை அமைதிக்குத் திரும்பியதாகவும் அவர் தெரிவித்தார்.
கடற்கரை அதிகாரசபை இப்பொருள் தொடர்பான ஆதாரங்களைச் சேர்ப்பதற்குப் பல வாரங்கள் முயன்ற போதிலும் எந்தவித ஆதாரங்களும் கிடைக்கவில்லை. இது அடையாளம் காணப்படாத பொருட்கள் தொடர்பான உத்தியோகபூர்வ அவதானமாகக் கருதப்பட்ட போதிலும் அதற்கான விளக்கங்களெவையும் வழங்கப்படவில்லை.
விண்வெளி ஆய்வுமையமாகிய நாசா இத்தகைய தட்டுக்கள் போன்ற பொருட்கள் இயற்கையின் தோற்றப்பாடுகளேயன்றி வேறல்ல என்று கூறுகிறது. எம்மைவிட்டு நீங்கிய விஞ்ஞானப் புனைகதை எழுத்தாளர்களின் முன்னோடியாகிய இலங்கையில் வாழ்ந்த விஞ்ஞானி ஆதர் சி. கிளார்க்கிடம் இத்தகைய பொருட்களைப் பற்றி வினவுகையில், அவர் பின்வருமாறு குறிப்பிட்டார்.
“காலநிலை மற்றும் ஒளி தொடர்பான சில நிபந்தனைகளின் கீழ் செவ்வாய், சந்திரன் போன்ற கோள்கள் இத்தகைய அடையாளம் காணப்படாத பறக்கும் பொருட்களாகத் தென்படலாம். நாசா விஞ்ஞானிகள் இத்தகைய எந்தவொரு நிகழ்வையும் வானில் அவதானிக்கவில்லை.
எமது புவியின் வானியல் எல்லைக்குள் வரும் எந்தவொரு புதிய பொருளையும் 5 நிமிடங்களுக்குள் இனங்காணக் கூடிய வகையில் நவீன தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது. ஒரு மாலை வேளையில் காலிமுகத்திடலுக்குச் சென்று வான்பரப்பை அவதானித்தால் பல விதமான பொருட்களை, பல்வேறு வண்ணங்களில் அவதானிக்க முடியும்”
எமது நவீன தொழில் நுட்பங்களால் கண்டுபிடிக்க முடியாத வகையில் அவதானிக்கப்படும் இத்தகைய பொருட்களைப் பற்றி ஆழ்ந்து சிந்திக்கையில் தொழில்நுட்பத்தில் மனிதனைவிடப் பலமடங்கு முன்னேறியவர்கள். வேற்றுக்கிரகங்களில் இருப்பார்களோ என்றே எண்ணத்தோன்றுகிறது. விஞ்ஞானிகளைப் பொறுத்தவரையில் இது யதார்த்தத்திற்கு அப்பாற்பட்ட விடயமாகவே காணப்படுகிறது.
அவ் வேற்றுக் கிரகவாசிகளுடன் ஒப்பிடுகையில் மனிதனைப் பாலர் பாடசாலைக்குச் செல்லும் சிறுவனாகவே கருதுமுடியும். விஞ்ஞான யுகம், இலத்திரனியல் யுகம், நனோ யுகமென முன்னேறி வரும் மனிதனைப் பொறுத்தவரையில் அவனது அறிவுக்கு அப்பாற்பட்ட விந்தைகளென்றே இவற்றைக் கருத முடியும்.

மாற்றம் பெறும் வைரஸ் கிருமிகள்


டெங்கு, எய்ட்ஸ், மூளைக் காய்ச்சல், பறவைக் காய்ச்சல், மஞ்சள்காமாலை பன்றிக்காய்ச்சல் என்றெல்லாம் பட்டியல் நீளுகிறதுமனிதனின் ஆயுட் காலத்தை அதிகரிக்கச் சளைக்காது முயன்றுவரும் மருத்துவ விஞ்ஞானத்துக்கு மாபெரும் சவாலாக அமைகின்ற காரணிகளுள் முன்னணியில் திகழ்வது ‘வைரஸ்’ எனப்படும் நுண்ணுயிராகும். மிகச் சாதாரணமான தொற்றாகக் கருதப்படும் தடிமனிலிருந்து சற்றுப்பாரதூரமான அம்மை நோய் தொட்டு மிகவும் கொடிய எய்ட்ஸ் நோய் வரை எண்ணிலடங்கா நோய்கள் பல்வேறுபட்ட வைரஸ்களினால் பரப்பப்படுகின்றன.
பங்கசு (பூஞ்சணம்) பக்aரியா போன்ற நுண்ணுயிர்களைவிட வைரஸ்கள் பருமனில் சிறியன. வித்தியாசமான குணவியல்புகளையுடையன. இவை பொதுவாகக் குறித்த ஒரு வகைக் கலங்களையே தொற்றுக்குள்ளாக்கும் தன்மையுடையன.
உலகில் பல வகையான வைரஸ்கள் காணப்படுகின்ற போதிலும் குறிப்பிட்ட வைரஸ்கள் குறித்த சில வகைத் தாவரங்களையோ, விலங்குகளையோ மட்டுமே தாக்கும் வல்லமை படைத்தவை.
மிகச் சாதாரணமான நுண்ணுயிர்களாகக் கருதப்படும் இவ்வைரஸ்கள் நடைமுறையில் ஒவ்வொரு மனிதனையும் தொற்றுக்குள்ளாக்கக் கூடியன. எனினும் பொதுவாகக் குழந்தைகளையும் சிறுவர்களையுமே அதிகளவில் பாதிக்கக் கூடியன. அதேசமயம் ஒருசில வைரஸ்கள் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் ஆற்றல் மிக்கவை.
எமது உடல் வைரஸ்களுக்கெதிராகத் தொழிற்படும் வகையில் பல தடுப்புக்களைக் கொண்டுள்ளது. மேற்றோலானது வைரஸ்கள் உடலினுட் செல்லாவண்ணம் தடுக்கிறது. உடலின் நீர்ப்பீடனத் தொகுதி வைரஸ்களுக்கு எதிராகத் தொழிற்படும்.
காற்று, தொடுகை, நுளம்பு போன்ற காவிகளுட்பட பல வழிகளால் வைரஸ் பரப்பப்படலாம். சாதாரணமாக வைரஸ் தொற்றுக்கள் மூக்கு, தொண்டை, சுவாசப் பாதைகளில் ஏற்படும்.
உயிர்க்கலமொன்றைத் தாக்கும் வைரஸானது, பதார்த்தமொன்றை வெளியிடும். அப்பதார்த்தம் தொற்றுக்குள்ளாக்கப்பட்ட கலத்தைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்து வைரஸின் எண்ணிக்கை மடங்குகளாகப் பெருகுவதற்கு வழிவகுக்கும்.
பொதுவாக வைரஸானது உயிர்க் கலத்தின் சாதாரண தொழிற் பாடுகளைத் தடுப்பதால் அவ்வுயிர்க்கலம் இறக்க நேரிடும். அவ்விறந்த கலம் வெளிப்படுத்தும் புதிய வைரஸ்கள் ஏனைய உயிர்க்கலங்களையும் தொற்றுக்குள்ளாக்கும்.
சில வைரஸ்கள் தொற்றுக்குள்ளான கலங்களின் சாதாரண செயற்பாடுகளை மாற்றியமைக்கும். இதனால் இக்கலங்கள் புற்றுநோய்க் கலங்களாக உருவெடுக்கும் ஆபத்தும் காணப்படும்.
எமது உடலின் நிர்ப்பீடனத் தொகுதி இயற்கையாகவே பிறபொருளெதிரிகளைத் தோற்றுவிக்கக் கூடியது. ஒரு குழந்தை பிறக்கும் போதே பலவிதமான வைரஸ்களை எதிர்க்கக் கூடிய ஆற்றலுடனேயே பிறக்கின்றது.
தாய்ப்பாலானது, பக்aரியா, வைரஸ் உட்படப் பல பிறபொருட்களின் எதிரியாகத் தொழிற்படக் கூடியதென்பதும் குறிப்பிடத்தக்கது. எமது உடலின் நோயெதிர்ப்பு சக்தியே வைரஸ் தொற்றின் தீவிரத்தைத் தீர்மானிப்பதில் முன்னிலை வகிக்கிறது.
வைரஸ் தொற்றின் பொதுவான அறிகுறிகளாக, இருமல், தும்மல், தடிமன், உடல் வெப்ப நிலையுயர்வு அல்லது காய்ச்சல், உடற் பலவீனம், வெளிறிய முகம், உடற்பாகங்களில் வலி அல்லது உளைச்சல் போன்றன கருதப்படுகின்றன. எமது உடலானது தன்னைத் தாக்கும் பிறபொருளொன்றை எதிர்க்குமுகமாகவே மேற்குறிப்பிட்ட அறிகுறிகளைத் தோற்றுவிக்கும்.
இவை வைரஸ் தொற்றினாலேற்பட்ட நேரடிப்பாதிப்புகளல்ல என்பதையும், வைரஸ் தொற்றினை எதிர்க்குமுகமாக நீர்ப்பீடனத் தொகுதியால் வெளிப்படுத்தப்படும் எதிர்ப்பினால் ஏற்பட்ட விளைவுகளே என்பதையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.
உடலின் வெப்ப நிலை 98.6 எப் இலிருந்து 102எப் வரை அதிகரிக்கும். குருதியிலுள்ள வெண்குருதிச் சிறுதுணிக்கைகள் வைரஸ் தொற்றை எதிர்த்துப் போராடியதால் உருவாகிய இறந்த பதார்த்தங்களையும் கழிவுகளையும் உடலிலிருந்து வெளியேற்றுமுகமாகத் தடிமன், இருமலுடன் தும்மலும் ஏற்படலாம். வைரஸ் தொற்றை எதிர்க்க உடல் கடினமாகப் போராடுவதால் சக்தி இழப்பு அதிகமாக நிகழும். இதனால் பலவீனமாக இருப்பது போன்ற உணர்வேற்படும். உடலின் நீரும் இழக்கப்படுவதால் உடல் முழுவதும் வலியோ அல்லது உளைச்சலோ உணரப்படலாம்.
வைரஸ்கள் தாம் ஒன்றிலொன்று வேறுபட்டிருப்பதைப் போல, தாம் தாக்கும் மனிதர்களிலும் வெவ்வேறு அறிகுறிகளைக் காட்ட வல்லன. இவற்றின் இத்தன்மை காரணமாக, வைரஸ் தொற்றின் குணங்குறிகளைத் திட்டவட்டமாகக் கூற முடியாது.
அத்துடன் சில வைரஸ் தொற்றுக்கள், வேறு நோய்களின் உருவாக்கத்துக்கும் வித்திடக் கூடியவை. மஞ்சள் காமாலை நோயை ஏற்படுத்தவல்ல ஹைப்பட்டைடிஸ் பி, சி வைரஸ்கள் பிற்காலங்களில் ஈரல் புற்று நோயை ஏற்படுத்த வல்லவை என அறியப்படுகிறது.
நோயின் அறிகுறிகள், குருதிப் பரிசோதனை மற்றும் பாதிக்கப்பட்ட இழையங்களின் பரிசோதனை போன்ற பல வகைப்பட்ட சோதனைகள் மூலம் வைரஸின் தாக்கம் மற்றும் தன்மை போன்ற இயல்புகள் இனங்காணப்படலாம்.
வைரஸ் தொற்றானது பொதுவாகக் குழந்தைகள் மற்றும் சிறுவர்களையும் நோயெதிர்ப்பு சக்தி குறைந்தவர்களையுமே அதிகளவில் பாதிக்கின்றது.
அத்துடன், வேறு பல நோய்த் தொற்றுடையவர்களையும் பாதிக்கின்றது. இதன் காரணமாகவே எச்.ஐ.வி தொற்றுடையவர்களுக்கு மிகச் சாதாரணமான தடிமன் ஏற்பட்டால் கூட மரணம் சம்பவிக்கும் ஆபத்து இருப்பதாகக் கூறப்படுகிறது.
சுகதேகியாகவுள்ள ஒருவரால் வைரஸ் தொற்றின் அச்சுறுத்தலை எந்தவித வைரஸ் கொல்லி மருந்துகளுமின்றி சாதாரண நடைமுறைகளால் குறைக்க முடியும். எமது உடலானது வைரஸ் மற்றும் பக்aரியாத்தொற்றுக்களை எதிர்க்குமுகமாகத் தனது வெப்ப நிலையையுயர்த்தும். அத்துடன் உடற் சக்தியும் உடற் திராவகங்களும் விரயமாகும். இவற்றை ஈடு செய்யுமுகமாக நீராகாரங்களை உள்ளெடுக்க வேண்டும்.
இயன்றவரை ஆரோக்கியமாக இருக்க முயற்சிக்க வேண்டும். ஊட்டச்சத்துக்கள் மற்றும் கனிப்பொருட்கள் நிறைந்த உணவை உட்கொள்வதன் மூலம் எமது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும். இவை தவிரக் கைகளை அடிக்கடி சவர்க்காரமிட்டுக் கழுவ வேண்டும்.
உணவை உண்ணமுதலும் வெளியில் சென்று வந்த பின்னரும் கைகளை நன்கு கழுவ வேண்டியது அவசியமாகும். பிறருக்குப் பாதிப்பு ஏற்படா வண்ணம் இருமல், மற்றும் தும்மலின் போது வாயையும் மூக்கையும் கைக்குட்டையால் மூடப்பழக வேண்டும்.
உடலில் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதெனச் சந்தேகித்தால், பாடசாலை, அலுவலகம் மற்றும் ஏனைய பொது இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். இயலாவிடின் முகமூடியணிந்து செல்லுதல் விரும்பத்தக்கது.
சில வைரஸ் தொற்றுக்களுக்குத் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வைரஸ் கிருமிகளாலேற்படும் நோய்களுக்கான தடுப்பு மருந்தை முதலில் கண்டுபிடித்தவர் லூயி பாஸ்டராவார். குறிப்பாக விசர் நாய்க் கடியினால் ஏற்படக் கூடிய நீர் வெறுப்பு நோய், மற்றும் அம்மை நோய் போன்றவற்றுக்கான தடுப்பு மருந்துகளையே இவர் கண்டுபிடித்தார்.
உடலில் வைரஸ்கள் தொடர்பான எதிர்ப்பு சக்தி இயற்கையாகவே இல்லாத விடத்து, இறந்த வைரஸின் பதார்த்தம் தடுப்பூசி மூலம் உடலினுள் செலுத்தப்பட்டு எமது உடலை இயற்கையாகவே, அவ்வைரஸிற்கு எதிரான பிறபொருளெதிரியைத் தோற்றுவித்து தொழிற்படவைக்கும்.
அல்லது உயிர் வைரஸ் உடலைத் தாக்குமிடத்து, இயற்கையாகவே சில நாட்களின் பின்னர் உடல் அவ்வைரஸிற்கெதிராகத் தொழிற்பட ஆரம்பிக்கும். எனினும் பொதுவாகப் பாரதூரமான விளைவுகளேற்பட முன்னரே உடலில் பிறபொருளெதிரி தோற்றுவிக்கப்பட்டுவிடும்.
தடுப்பு மருந்துகளைப் போன்றே வைரஸ் நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகளும் சில வைரஸ் தொற்றுக்களுக்கு மட்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை பொதுவாக வாயினாலேயே உள்ளெடுக்கப்படுகின்றன. எனினும் ஊசி மூலம் களிம்புகளாகவும், துகள்களாக முக்கின் மூலம் உள்ளெடுக்கப்படும் மருநதுகளும் காணப்படுகின்றன.
இவை பொதுவாக நோய் எதிர்ப்புச் சக்தி குறைவானவர்கள், முதியவர்கள், மற்றும் சிறுவர்களுக்கே பரிந்துரைக்கப்படுகின்றன. இவை அடிப்படையில் குறிப்பிட்ட வைரஸ் உடலினுள் பல மடங்குகளாகப் பெருகுவதைத் தடுக்கின்றன. சில வைரஸ் நுண்ணுயிர்க்கொல்லிகள் உடலின் நிர்ப்பீடன சக்தியை வலுப்படுத்தி இயற்கையாகவே நிர்ப்பீடனத் தொகுதியை வைரஸ்களுக்கெதிராகத் தொழிற்பட வைக்கின்றன.
பக்ரீரியாக்களைக் கொல்லும் நுண்ணுயிர் கொல்லி மருந்துகள் வைரஸ் தொற்றை இல்லாதொழிக்கப் பயன்படமாட்டா. ஆனால் இவ்விடயம் தொடர்பாக போதிய அறிவின்மையால், மருத்துவ ஆலோசனைகளின்றி வைரஸ் தொற்றுக்குப் பரிகாரமாக பக்aரியாக்களைக் கொல்லும் நுண்ணுயிர் கொல்லி மருந்துகளை சிலர் உள்ளெடுக்கின்றனர்.
இவ்வாறு அவற்றைத் தேவையின்றி உள்ளெடுக்கும் போது உடலிலுள்ள பக்aரியாக்கள் அம்மருந்துகளை எதிர்க்கக்கூடிய வீரியம் மிக்கனவாகவும் மாறிவிடுகின்றன. இதனால் அம்மருந்துகளின் வீரியம் குறைக்கப்படுவதுடன் சில சந்தர்ப்பங்களில் தேவைக்கு அதிகமான அளவுகளிலும் உட்கொள்ள வேண்டியிருக்கும். ஆனால் வைரஸ் தொற்றுடன் பக்aரியாத் தொற்றும் இருக்கும் பட்சத்தில் மட்டுமே பகaரியா நுண்ணுயிர் கொல்லி மருந்துகள் உள்ளெடுக்கப்படலாம்.
பக்aரியா நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகளுடன் ஒப்பிடுகையில் வைரஸ் நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகளை உற்பத்தி செய்தல் சற்றுக் கடினமானது.
அத்துடன் இவ்வைரஸ் நுண்ணுயிர் கொல்லி மருந்துகள் உடற் கலங்களில் நச்சுத் தன்மை மிக்கவையாக மாறும் சாத்தியம் இருப்பதாக அறியப்படுகிறது.
இன்று பரவலாகப் பேசப்படும் பன்றிக் காய்ச்சலும் வைரஸால் பரப்பப்படும் ஒரு நோயேயாகும். இன்புளுவென்ஸா எனப்படும் வைரஸ்கள் மனிதன், பன்றியுட்பட்ட முலையூட்டிகளைப் பாதிக்கக் கூடியனவாகக் காணப்பட்டன.
2009 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலங்களில் பன்றிக் காய்ச்சலுக்குரிய இன்புளுவென்ஸா வைரஸானது பன்றிகளிலிருந்து மனிதனுக்கு இலகுவில் பரப்பப்பட முடியாததாகவே காணப்பட்டது. அத்துடன் ஒரு மனிதனிலிருந்து இன்னொரு மனிதனுக்குத தொற்றும் ஆற்றலும் குறைவானதாகக் காணப்பட்டது. பண்ணைகளில் பன்றிகள் மத்தியில் வேலை செய்பவர்கள் மத்தியில் மட்டுமே இனங்காணப்பட்டது.
1918 ஆம் ஆண்டு பன்றிகளில் இனங்காணப்பட்ட இவ்வைரஸ் பல தசாப்தங்களாக எவ்வித மாற்றங்களுக்குமுட்படாது 1990களில் பல்வகைமையடைந்தது. ஆனால், இதற்கான காரணங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. இன்புளுவென்ஸா வைரஸ் தொடர்ந்து மாற்றமடையக் கூடியது. இதன் ஒரு குறிப்பிட்ட வகை உருவாக்கும் தொற்றே பன்றிக் காய்ச்சலாகும்.
இவ்வாறு அடிக்கடி மாற்றம் பெறும் வைரஸ்கள் மனிதர் மத்தியில் தொற்று நோயாகப் பரவும் சந்தர்ப்பத்தில் அவற்றிலிருந்து தப்பித்தல் சற்றுக் கடினமான விடயமேயாகும்.
2009 ஆம் ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் மெக்சிகோவில் நூற்றுக்குமேற்பட்ட சுவாச நோயாளர்கள் இனங்காணப்பட்டதையடுத்து அவர்களுக்குப் பன்றிக் காய்ச்சல் தொற்று இருக்கலாமெனச் சந்தேகிக்கப்பட்டது. பின்னர் ஐக்கிய அமெரிக்காவின் பல மாநிலங்களுக்கும் வேகமாகப் பரவிய இப்பன்றிக் காய்ச்சலை உலக சுகாதார ஸ்தாபனம் கொள்ளை நோயாக அறிவித்தது. 2009 ஆகஸ்ட் மாதத்தில் 170க்கு மேற்பட்ட நாடுகளில் இப்பன்றிக் காய்ச்சல் பரவியது.
இவ்வைரஸின் வெளிமேற்பரப்பில் காணப்படும் புரதங்களின் பெயரையடிப்படையாகக் கொண்டு அதுசி1 னி1 வைரஸ் எனப் பெயரிடப்பட்டது.
இப்பன்றிக் காய்ச்சல் மனிதனிலிருந்து மனிதனுக்குத் தொற்றக் கூடியது. பொதுவாக இது ஒரு சுவாசத்தொற்றாகவே கருதப்படுகிறது. காற்றினாலும் தொடுகையினாலுமே பரப்பப்படுகிறது. வீட்டில் ஒருவருக்கு இத்தொற்று ஏற்பட்டால் வீட்டின் 8 - 19 சதவீதமான பகுதிகளிலோ அல்லது அங்கத்தவர்களிலோ இத்தொற்று காணப்படுமென ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இத்தொற்றுள்ளவர்களிடம் காய்ச்சல், இருமல், தொண்டை நோவு, தடிமன், வாந்தி, வயிற்றோட்டம் போன்ற அறிகுறிகள் அறியப்பட்டுள்ளன. சிறுவர்கள் மத்தியில் காய்ச்சல் காணப்படாமல் சுவாசப் பிரச்சினைகள் மட்டும் கூடக் காணப்படலாம். இத்தொற்றினால் 24 வயதுக்குக் கீழ்ப்பட்டவர்களே அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்.
பன்றிக் காய்ச்சல் தொற்று, சுகதேகியொருவரில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தாதென எதிர்பார்க்கப்படுகின்ற போதிலும் சிலருக்குக் கடுமையான சுவாச நோய்கள், நியூமோனியா போன்றவை ஏற்படக் காரணமாகிச் சில வேளைகளில் மரணத்துக்கும் வழிவகுக்கும். கர்ப்பிணித் தாய்மார் அதிகளவில் பாதிப்படைவரெனக் கூறப்படுகிறது.
ஆஸ்துமா, சுவாச நோய், இருதய நோய், நீரிழிவு, சிறுநீரகப் பாதிப்பு போன்றவற்றையுடைய நோயாளிகள் மற்றும் புற்று நோயாளர்கள் மத்தியில் பாரதூரமான விளைவுகளைத் தோற்றுவிக்கவல்லது. சிறுவர்கள் மற்றும் நோயெதிர்ப்பு சக்தி குறைந்த வளர்ந்தோர் மத்தியில் இத்தொற்று 10 நாட்களுக்கும் அதிகமாக நீடிக்கும்.
65 வயதிற்கு மேற்பட்டோர். இக்காய்ச்சலால் பாதிக்கப்படும் சந்தர்ப்பம் குறைவாகவே காணப்படுகின்றதெனவும், அவர்கள் பாதிக்கப்பட்டால் பாதிப்பு மிகவும் அதிகமாகவிருக்குமெனவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
சிறிதளவிலான சுவாசப்பிரச்சினைகளோ அல்லது காய்ச்சலோ உணரப்படும் பட்சத்திலும் இக்காய்ச்சலுக்கான வேறு அறிகுறிகள் தென்படும் பட்சத்திலும் அவற்றை அலட்சியம் செய்யாது உடனடியாக வைத்தியரை நாட வேண்டியது அவசியமாகிறது.
தமது பிள்ளைகளிடம் இத்தகைய அறிகுறிகள் காணப்படுகின்றனவா எனப் பெற்றோர் அவதானிக்க வேண்டும். இத்தொற்று ஏற்பட்டால்,
இருமும் போதும் தும்மும் போதும் கைக்குட்டைகளை உபயோகிக்க வேண்டும். அத்துடன் அக்கைக்குட்டைகள் பாவனையின் பின்னர் நன்றாக சலவை செய்யப்பட வேண்டும்.
அடிக்கடி சவர்க்காரம் அல்லது வேறு தொற்று நீக்கிகளைப் பயன்படுத்தித் கைகளைக் கழுவ வேண்டும். கைகளைக் கழுவாமல் மூக்கு, கண்கள், வாய் என்பவற்றைத் தொடுவதைத் தவிர்க்க வேண்டும். இயன்றவரை பொது இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். செல்ல வேண்டிய தேவையேற்படின், முகமூடி அணிந்து செல்லுதல் நன்று.
தொற்று ஏற்படாவிடினும், தொற்றுக்குள்ளானவரின் அருகில் செல்லுதல் தவிர்க்கப்பட வேண்டும். தேவையேற்படின் அவரிலிருந்து 4 அடிதூரம் தள்ளி நின்று கதைத்தலே சிறந்தது. நுண்ணங்கிகள், தொற்றக் கூடிய பாத்திரங்கள், குவளைகள், தண்ணீர்ப் போத்தல்கள் போன்றவற்றைப் பகிரக்கூடாது.
நோயுற்ற ஒருவர் தும்மும் போது காற்றின் மூலம் நோய்க் கிருமிகள் பரவத்தலைப்படுவதால் மேசை, விசைப் பலகை, தொலைபேசி, கதவுக் கைப்பிடிகள், ரூபா நோட்டுக்கள் போன்றவற்றைக் கையாண்ட பின்னர் கைகளைக் கழுவுதல் சிறந்தது.
பன்றிக் காய்ச்சலுக்கான தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள போதிலும் மிகவும் வரையறுக்கப்பட்ட அளவிலேயே காணப்படுவதால் அவற்றை வழங்குவதில் கர்ப்பிணித் தாய்மார்கள், குழந்தைப் பராமரிப்பாளர்கள், சுகாதாரப் பணிப்பாளர்கள், சிறு குழந்தைகள் தொடக்கம் 24 வயதுக்குட்பட்டோர் வேறு நோய்களையுடைய 25 வயது தொடக்கம் 64 வயது வரையான வளர்ந்தோர். ஆகியோருக்கே முன்னுரிமை வழங்கப்படுகிறது. இன்புளுவென்ஸா தடுப்பு மருந்துகளுக்கு ஒவ்வாமையுடையவர்கள் இத்தடுப்பு மருந்தை உள்ளெடுத்தலாகாது.
இலங்கையில் பன்றிக் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட முதலாவது நபர் 2009, ஜுன் மாதம் இனங்காணப்பட்டார். ஒக்டோபர் 15ம் திகதியளவில் ஏறத்தாழ 140 பேர் இந்நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதாக அறியப்பட்டது.
நவம்பர் 14ம் திகதி இந்நோயின் தொற்றுக் காரணமாக மாணவரொருவர் உயிரிழந்தார். 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஏறத்தாழ 258 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையிலும் இந்நோயால் மரணம் சம்பவிக்க ஆரம்பித்து விட்டதாகையால், நாமொவ்வொருவரும் இந்நோய் தொடர்பாக விழிப்புணர்வுடனிருப்பது அவசியமாகிறது.
சகல வெகுசனத் தொடர்பு ஊடகங்களும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த ஒன்றிணைய வேண்டுமென்பதே காலத்தின் தேவையாகும்.

மலிவு விலையில் சூரியசக்தி கிடைக்கும் காலம் வெகு தொலைவில் இல்லைவளிமண்டலத்தை மாசுபடுத்தும் எரிபொருள் பாவனையைப் பூமி இனிமேலும் தாங்குமா?

விண்டுரைக்க அரிய அரிதாய், விரிந்த வான வெளியென நின்றனை! அண்ட கோடிகள் வானில் அமைத்தனை! பரிதி என்னும் பொருளிடை ஓய்ந்தனை! பரவும் வெய்ய கதிரெனக் காய்நதனை! வாயுவாகி வெளியை அளந்தனை! விண்ணை அளக்கும் விரிவே சக்தி!’
என்றான் மகாகவி பாரதி அவன் ‘சக்தியே முதற்பொருள்! தோற்றம் பல, சக்தி ஒன்றே! வடிவம் மாறினும் சக்தி மாறுவதில்லை! எனத்தன் வசனக் கவிதையில் பாடிய கொள்கையை உலகமே போற்றும் விஞ்ஞான மேதை ஜன்ஸ்டீன் கணிதம் மூலம் நிறுவிக் காட்டினார்.
இன்று நாம் பாவிக்கும் சக்தி வளங்கள் யாவற்றினதும் தோற்றுவாயகச் சூரியனும் பிரபஞ்சமுமே கருதப்படுகின்றன.
சூரிய சக்தியை முதலாகக் கொண்டு உணவைத் தயாரிக்கும் தாவரங்களும் உணவுச் சங்கிலியிலுள்ள ஏனைய உயிரினங்களும் அழிவடைந்து உக்கிப் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகள் நிலத்தினடியில் படிவுகளாக மாற்றப்பட்டு இன்று சுவட்டு எரிபொருளாக அகழ்ந்தெடுக்கப்படுகின்றன. எமது பிரதான சக்தி மூலமான பெற்றோலிய எரிபொருளும் ஒரு சுவட்டு எரிபொருளேயாகும்.
சூரிய சக்தியெனப்படுவது, புவியிலிருந்து பல்லாயிரம் மைல்களுக்குப்பால் எரிந்துகொண்டிருக்கும் பந்து போன்ற சூரியனிலிருந்து வெளிப்படும் கதிர்கள் கொண்டிருக்கும் சக்தியைக் குறிக்கும்.
சூரிய சக்தியை வெப்ப சக்தி மற்றும் ஒளிச் சக்தியென இரண்டாக வகைப்படுத்தலாம். இயந்திரங்களையும் ஆலைகளையும் இயக்கும் நீர் போன்ற திரவங்களை வெப்பமாக்க வெப்பசக்தியும் சூரிய கலங்களில் ஒளி அழுத்தமாகச் சேமிக்கப்பட்டு மின் முதலாக ஒளிச்சக்தியும் பயன்படுகின்றன.
சூரிய கதிர்கள் பல படை மண்டலங்களைக் கடந்து புவியை வந்தடைகையில் அவற்றின் சக்தியில் பெரும் பகுதி இழக்கப்பட்டு விடுகிறதெனினும் புவியை வந்தடையும் சூரிய கதிர்களின் மொத்த சக்தியின் அளவானது, புவியிலுள்ள மக்களின் மொத்த சக்தித் தேவையின் பல மடங்கெனக் கணிப்பிடப்படுகிறது.
வளிமண்டலத்தில் காணப்படும் வளிமூலக் கூறுகள், நீராவி, முகில்கள், தூசு துணிக்கைகள் மற்றும் மாசுக்கள் போன்ற சூரியனிலிருந்து வரும் பெரும்பாலான ஒளிக்கதிர்களைப் பரவலடையச் செய்கின்றன. இச்செயற்பாட்டால் ஒளிக்கதிர்களின் செறிவு குறைக்கப்படுகிறது.
மனிதனானவன் அன்று தொட்டு இன்றுவரை தனது சக்தித் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலேயே சூரியனைப் பயன்படுத்தி வருகின்றான்.
வேட்டை யுகத்தில் தான் வேட்டையாடிய மிருகங்களின் இறைச்சியைச் சூரிய வெப்பத்தில் காயவிட்டுப் பதப்படுதுதியதும் சூரிய வெப்பத்தால் சூடாகும் கற்களின் மேல் பாத்திரங்களை வைத்துச் சமைத்ததுமு நாம் யாவருமறிந்த விடயங்களே!
பல வழிபாடுகள் இயற்கைக்கு முக்கியத்துவம் வழங்கின. இன்றும் வழங்கி வருகின்றன. சுதேச அமெரிக்கர்களிலிருந்து பண்டைய இந்துக்கள், உரோமர்கள், கிரேக்கர்கள், பாரசீகர்கள், எகிப்தியர்கள் மற்றும் பபிலோனியர்கள் வரை தமது வாழ்வியலில் சூரிய வழிபாட்டுக்கு முக்கியத்துவம் வழங்கியிருந்தார்கள்.
ஆதிநாகரிகங்கள் சூரியன் ஒரு சக்தி மூலமென உணர்ந்திருந்தன. பண்டைய கிரேக்கர்கள் ஹீலியோஸ், மற்றும் அப்பலோ போன்ற சூரியக் கடவுளர்களுக்குப் பல கோவில்களைக் கட்டியிருந்தனர். வெப்ப சக்தியையும் ஒளிச் சக்தியையும் பயன்படுத்தும் விதமாக வீடுகளை அமைத்திருந்தனர்.
சுதேச அமெரிக்கர்கள், இயற்கையாகவே பகலில் சூரிய வெப்பத்தை உள்வாங்கி இரவில் வெளிவிடும் மலைச்சரிவுகளில் வீடுகளை அமைத்துச் சூரிய சக்தியின் பயனைப் பெற்றனர்.
உரோமர்கள் உலகிலேயே முதன் முதலாகக் கண்ணாடி யன்னல்களை அமைத்துச் சூரிய வெப்பத்தைச் சிறைப்படுத்தி வீடுகளின் உட்புறத்தைக் கதகதப்பாகப் பேணினர்.
அத்துடன் பரந்து காணப்பட்ட இராச்சியத்திலுள்ள பிரதேசங்களிலிருந்து கொண்டுவரப்படும் தாவரங்களையும் விதைகளையும் பேணி வளர்க்கக் கண்ணாடி வீடுகளை அமைத்துச் சூரிய வெப்பத்தைச் சிறைப்படுதுதி அத்தாவரங்கள் வளர்வதற்கான சூழலை ஏற்படுத்தித் கொடுத்திருந்தனர்.
இந்துக்கள் சூரிய வழிபாட்டின் மூலம் சூரிய சக்தி உள்வாங்கப்படுமெனும் தத்துவத்தில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கின்றனர். இருக்கு வேதம் சூரிய வழிபாட்டை விபரிக்கிறது. இந்துக்களின் புனித மந்திரங்களில் ஒன்றாகக் கருதப்படும் காயத்ரி மந்திரமும் யோகம் சொல்லும் சூரிய நமஸ்காரமும் சூரியனை வணங்கி அவனது சக்தியை உள்வாங்கு முகமாக இன்றும் வழக்கிலிருந்து வரும் விடயங்களாகும்.
சகல திறன்களும் படைத்தவனாய்ச் சித்தரிக்கப்படும் கர்ணன், குந்திதேவி சூரிய பகவானைப் பிரார்த்தித்தால் கிடைத்த பிள்ளையென மகாபாரதம் கூறுகிறது- புராதன இந்துக் கோவில்கள் சூரியசக்தி தாராளமாகக் கிடைக்கக் கூடிய வகையில் கட்டப்பட்டன என்பதற்கு வரலாறு சான்று பகர்கின்றது.
மறுமலர்ச்சிக்கால அறிஞரான லியானடோ டாவின்சி சூரிய சக்தியின் கைத்தொழிலாக்கத்தைக் கி. பி. 1441 இல் எதிர்வு கூறியிருந்தார். சூரிய சக்தியைச் சேமிப்பதற்கான முதல் முயற்சி சுவிஸ் நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானியொருவரால் 1767 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு தொடர்ந்த முயற்சிகள் சூரிய சக்தி தொடர்பான ஒளிமின் விளைவு, ஒளி அழுத்தக் கலங்கள் போன்ற பல கண்டுபிடிப்புக்களுக்கு வித்திட்டன.
1921இல் விஞ்ஞானி ஐன்ஸ்டீன் பெளதீகவியலுக்கான நோபல் பரிசை, ஒளிமின் விளைவு தொடர்பான தனது ஆய்வுக்குப் பெற்றிருந்தார். 1958 இல் அமெரிக்கா செய்மதியொன்றைச் சூரிய கலம் மூலம் சக்தியைப் பெறக்கூடிய வகையில் வடிவமைத்தது.
1960 களில் ஏற்பட்ட பெற்றோலிய எண்ணெய் விலை அதிகரிப்பு, தரம் குறைந்த பெற்றோலிய எண்ணெய் குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட வழிவகுத்தது. இதனால் சூரிய சக்தித் தொழில் நுட்பத்தின் முன்னேற்றம் தடைப்பட்டது. பின்னர் காலப் போக்கில் ஏற்பட்ட சூழல் மாசடைதல் பிரச்சினைகளால் சூரியசக்தித் தொழில் நுட்ப முன்னேற்றம் மீண்டும் தலைதூக்கியது.
முழு உலகுமே எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் சூழல் மாசடைதல் மற்றும் அருகிவரும் இயற்கைவளங்கள் தொடர்பான பிரச்சினைகள் மீள் உருவாக்கப்படக் கூடிய சக்தி வளங்களான சூரிய ஒளி, சூரிய வெப்பம், மற்றும் சூரியனில் தங்கியிருக்கும் வளங்களான காற்று, நீர் மின்னியல் மற்றும் உயிரியல் தொகுதி ஆகியனவும் கருதப்படுகின்றன.
வர்த்தக மற்றும் கைத்தொழிற்றுறைகள் இச்சக்தி வவளங்களைப் பயன்படுத்தித் தமது சக்தி மூலங்களை விரிவாக்குவ துடன் பணத்தைச் சேமிக்கும் வழிவகைகளையும் கையாள ஆரம்பித்துள்ளன.
புவி கோள வடிவமாகவிருப்பதால் சூரியக் கதிர்கள் மத்திய கோட்டுப் பிரதேசங்களில் செங்குத்தாகவும் முனைவுப் பிரதேசங்களில் சாய்வாகவும் வந்தடைகின்றன. இதனால் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது மத்திய கோட்டை அண்டிய நாடுகளில் படும் சூரிய கதிர்களின் செறிவு அதிகமாகவிருக்கும்.
சூரிய சக்தியின் பாவனை அது பாவிக்கப்படும் பிரதேசத்தின் புவியியல் அமைவு, பாவிக்கப்படும் நேரம், பருவ காலம், கால நிலை போன்ற காரணிகளில் தங்கியுள்ளது- சூரிய சக்தியின் பாவைனயில் சூரிய கதிர்களின் செறிவு ஆதிக்கம் செலுத்துவதால் வருடத்தின் 360 நாட்களும் சூரிய ஒளி கிடைக்கப்பெறும் இலங்கை போன்ற நாடுகளுக்கே சூரியனைச் சக்தி மூலமாகப் பபயன்படுத்துவது இலகுவான விடயமெனலாம்.
இத்தகைய மீள் உருவாக்கப்படக் கூடிய சக்தி வவளங்களைச் சேமித்துத் தேவைகளுக்கேற்ப பாவிக்கக் கூடிய வழிவகைகளை நவீன தொழில்நுட்பம் உருவாக்கியிருக்கிறது- சூரிய கதிர்கள் துணிகளை நேரடியாக உலர்த்தவும் நீரைக் கதகதப்பாகப் பேணவும், வாகனங்களின் சசக்தி மூலமாகவும், கணிப்பொறி போன்ற கருவிகளை இயக்கவும் ஒளியூட்டல் செயற்பாடுகளுக்கும் உதவுவது நாம் யாவருமறிந்ததே. இலகுவில் உருவாக்கப்படக் கூடிய சூரியசக்தி அடுப்புகள் மிகவும் பாதுகாப்பான, சிக்கனமான முறையில் உணவைச் சமைக்க வழிவகுக்கின்றன.
அமெரிக்கர்களால் வடிவமைக்கப்பட்ட சூரிய சக்தியால் இயங்கக்கூடிய விமானம் 1990ஆம் ஆண்டில் எந்தவித எரிபொருளுமின்றி வானில் 4060 றிசீ தூரம் பறந்து உலக சாதனை படைத்தது.
பெரும்பாலான மின் சாதனங்கள் சூரிய சக்தியாலும் இயக்கப்படக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. இன்று பலராலும் பேசப்படும் செய்மதித் தொழில் நுட்பத்தின் அடிப்படையாகிய செய்மதிகளின் இயக்கத்திற்குத் தேவையான சக்தியை அவற்றில் பொருத்தப்பட்டிருக்கும் சூரிய கலங்களே வழங்குகின்றன.
மீள உருவாக்கக்கூடிய சக்தி வளங்களின் பாவனையில் ஐஸ்லாந்து நாடு முன்னணியில் வகிப்பதுடன் உலக நாடுகளுக்கு மிகச் சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்கிறது. அந்நாட்டின் 99 சதவீதமான சக்தித் தேவை இத்தகைய சக்தி வளங்களாலேயே பூர்த்தி செய்யப்படுகிறது. எதிர்வரும் 2010 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெறவிருக்கும் பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டிக்கென, புதிய விளையாட்டரங்கொன்று புதுடெல்லியில் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது.
தியாகராஜ் விளையாட்டரங்கெனப் பெயரிடப்பட்டுள்ள இவ்விளையாட்டரங்கு சூரிய சக்தியையே சக்தி முதலாகக் கொண்டு சிறந்த சூழல் முகாமைத்துவத்துடன் கூடிய உயர்தர வசதிகளையுடையதாக வடிவமைக்கப்பட்டு வருகிறது. ஒளி அழுத்த விளைவையடிப்படையாகக் கொண்டு, விளையாட்டரங்கின் சகல தேவைகளுககும் சூரியனே சக்தி முதலாக அமைவது, ஏனைய நிர்மாணப் பணிகளுக்கும் சிறந்ததோர் எடுத்துக் காட்டாகும்.
சூரிய சக்தியின் வினைத்திறன் மிகக் பயன்பாடானது, பல துறைகளிலும் ஆதிக்கம் செலுத்துவதுடன் நாடுகளின் விரைவான அபிவிருத்திக்கும் வழிவகுக்கும்.
சூழல் மாசடைதல் தொடர்பான சகல சூழல் பிரச்சினைகளையும் கட்டுப்படுத்துவதற்குச் சூரிய சக்தியின் பயன்பாடு ஒரு சிறந்த வழிமுறையாக அமையும். பெற்றோலிய எரிபொருட்களின் தகனக்தால் உருவாகும் விளை பொருட்கள் வளியை மாசடையச் செய்கின்றன.
இப்பெற்றோலிய எரிபொருட்கள் சூரிய சக்தியால் பிரதியீடு செய்யப்படுவதால் வளிமாசடைதல் குறைக்கப்படுகிறது. அத்துடன் பச்சை இல்ல வாயுக்கள் வெளிவிடப்படுவதில்லையாதலால் சூரிய சக்தியின் பயன்பாடு பச்சை இல்ல விளைவுக்கு எந்தவித பங்களிப்பையும் மேற்கொள்ளாது.
கிராமிய மட்டங்களிலிருந்து தேசிய மட்டம் வரை சக்தியைச் சேமிக்கும் மிகச் சிறந்த வழியாகச் சூரிய சக்தியின் பாவனை கருதப்படுகிறது. இது காலப்போக்கில் உலர் மின்கலங்களின் பாவனையைக் குறைப்பதுடன் பாவனை முடிந்து அவற்றை வீசுவதால் ஏற்படும் எற்படும் நில மற்றும் நீர்மாசுக்களையும் குறைவடையச் செய்யும்.
அருகிவரும் இயற்கை வளங்களின் பாவனையும் காடழிப்பும் குறைக்கப்படுவதுடன் மண்ணரிப்புத் தடுக்கப்பட்டு தரமிழந்த நிலங்கள் புதுப்பிக்கப்படவும் வழிவகுக்கும். இவைதவிர மக்களின் சமூக பொருளாதார அபிவிருத்திக்கும் வாழ்க்கைத்தரத்தின் உயர்வுக்கும் சூரிய சக்தியின் பபயன்பாடு இன்றியமையாததாகும்.
இதனால் பாரிய மின்பிறப்பாக்கி நிலையங்களின் தேவை குறைவடைவதுடன் எரிபொருள் விநியோகத்துக்காக ஒரு நிறுவனத்தையே நம்பியிருக்க வேண்டிய தேவை குறைவடைகிறது. எரிபொருள் விநியோகத்துக்காக ஒரு நிறுவனத்தையே நம்பியிருக்க வேண்டிய அவசியமில்லாமற் போய்விடும்.
அணு உலைகளின் உருவாக்கத்துக்கான முக்கியத்துவம் குறைக்கப்படும். மின்சார வசதியற்ற பின்தங்கிய கிராமங்கள் யாவும் ஒளியூட்டப்படும். இது கிராமியக் கைத்தொழில்களை ஊக்குவிப்பதுடன் கிராமங்களின் கல்வி மட்டம் மற்றும் சுகாதார மட்டங்களை உயர்த்தும்.
கிராமங்களுக்கான தொலைத்தொடர்பு வசதிகள் மேம்படும். மக்கள் கிராமங்களிலிருந்து நகரங்களை நோக்கி இடம்பெயரும் நிலை தவிர்க்கப்படும். மக்களின் வாழ்க்கைத்தரம் அதிகரிக்கப்படும். பெற்றோலிய எரிபொருளுக்கான செலவைக் குறைத்து அந்நியச் செலாவணியை மீதப்படுத்தலாம்.
இலங்கையின் தற்போதைய பொருளாதார அபிவிருத்திக் கொள்கையானது பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தியில் தனியார் துறை மற்றும் அரச துறையின் ஒருமித்த பங்களிப்பை வலியுறுத்துவதாகவே அமைந்துள்ளது. இவ்விலக்கினை அடைவதற்காகப் பல செயற்றிட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
மின்வலு சக்தி அமைச்சு பேண்தரு சக்தி அதிகார சபையின் மூலம் மீள உருவாக்கக்கூடிய சக்தி வளத்தையுடைய தீவாக இலங்கையை மாற்றும் நோக்குடன் பல திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது. இச்செயற்றிட்டத்தின் முதற்கட்டமாக, விவசாய மற்றும் உணவு உற்பத்தியை அபிவிருத்தி செய்யும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
யு. எஸ். எய்ட் நிதி உதவியுடன் கொழும்பில் அமைக்கப்பட்டடுள்ள பிராந்தியநிலையம் மூலம் வினைத்திறன் மிக்க வகையில் கிராமங்கள் தோறும் சூரிய சக்தியைப் பயன்படுத்தி மின்சாரம் வழங்கப்படுகிறது. இது எதிர்காலத்தில் பெற்றோலிய எரிபொருளில் தங்கியிருக்காத நாடுகளில் ஒன்றாக இலங்கையையும் மாற்றும் என்பதில் எதுவித ஐயமுமமில்லை.
இன்று சூரிய சக்தி தொடர்பான வணிகங்கள் இலாபமீட்டும் வணிகங்களாக மாறி வருகின்றன. இலங்கையில் ஏறத்தாழ சூரிய சக்தியைப் பயன்படுத்தும் 130,000 வீட்டுத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. சூரிய சக்தி தொடர்பான துறைகளின் அபிவிருத்தியினதும் விரிவாக்கலினதும் அவசியம் தவிர்க்கமுடியாததாகிவிட்டது.
இவை இளைஞர்களுக்கான வேலைவாய்பபை அதிகரிக்கும். இலங்கையைப் பொறுத்தவரையில் பதின்மூன்று நிறுவனங்கள் இத்துறையில் ஈடுபட்டு வருகின்றன.
மேலும் பல நிறுவனங்கள் இத்துறையில் ஈடுபட முன்வந்தால் இன்னும் நான்கு வருடங்களில் முழு இலங்கையுமே மின்சார வசதியைப் பெறக் கூடியதாக இருப்பதுடன் தெருவிளக்குகள், வாகனத் தரிப்பிடப் பற்றுச் சீட்டை வழங்கும் இயந்திரங்கள், வீதிச் சமிக்ஞை விளக்குகள் போன்றவையும் சூரிய சக்தியைப் பயன்படுத்தி இயக்கப்படலாம்.
இலங்கையின் சனத்தொகையில் 80 சதவீதமானோர் கிராமங்களிலேயே வசிபப்தால் சூரிய சக்தியின் அறிமுகம் கிராமியப் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதில் பெரும்பங்கை வகிக்கும் பல, சிறியளவிலான திட்டங்களை நடைமுறைப்படுத்துதல் மேலும் நன்மை பயக்கும்.
இதனடிப்படையில் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்ட நீர்ப்பாசனத் திட்டமானது உலகிலேயே சூரிய சக்தியைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் மிகப் பெரிய சொட்டு நீர்ப்பாசனத் திட்டமாகக் கருதப்படுகிறது. இத்திட்டம் சிறந்த விளைச்சலைப் பெற்றுத்தருவதுடன் விவசாயிகளின் வருமானத்தையும் உயர்த்துவதாக அறியப்பட்டது.
எனினும் இத்திட்டத்தின் பல முறைமைகள் இன்றும் பாவிக்கப்படாமலிருப்பதாக 2008 ஆம் ஆண்டு பல்கலைக்கழக மாணவர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்று தெரிவிக்கிறது. இத்திட்டம் வெற்றியடைய வேண்டுமாயின் அரச துறையிலிருந்து விவசாயிகள் வரை இத்திட்டத்துடன் தொடர்புடைய சகல தரப்பினரும் விழிப்புணர்வு, அக்கறை மற்றும் அர்ப்பணிப்புடன் செயற்படுதல் அவசியமாகிறது.
இத்திட்டம் ஒழுங்கான முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டால், கைவிடப்பட்ட விவசாயக் கிராமங்களின் மக்கள் மீண்டும் அன்றாடச் செயற்பாடுகளைத் தமது கிராமங்களிலேயே மேற்கொண்டு விரைவான பயனைப் பெறக் கைகொடுக்குமென்பது கண்கூடு.
தகவல் தொழில்நுட்ப வசதிகள் இலங்கையின் பல கிராமியப் பாடசாலைகளைச் சென்றடைவதற்குப் பெரும் தடையாக அமையும் காரணி மின்சார வசதியாகும். பாடசாலைகளுக்கெனத் தனித்தனி சூரிய கலங்களை வழங்கிக் கணனிகளின் பாவனையுட்பட சகல தகவல் தொழில்நுட்ப வசதிகளையும் செயற்படுத்தும் திட்டம் தற்போது நடைமுறையில் உள்ளது.
சூரிய சக்தியால் கிராமங்கள் தோறும் தொலைத் தொடர்பு வசதிகள் மேம்படுத்தப்படும். மண்ணெண்ணெய் விளக்குகளால் ஏற்படும் சுகாதாரப் பிரச்சினைகள் உயிராபத்துகள், மற்றும் பராமரிப்புச் சிக்கல்கள் இல்லாதொழிக்கப்படும்.
கிராமிய மக்களின் கல்வி அறிவு மட்டம் அதிகரிக்கப்படுவதோடு தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில் நுட்பத்தையே அடிப்படையாகக் கொண்ட இன்றைய உலகைக் கிராமிய மட்டத்திலிருந்து சகல இலங்கையருமே வெற்றிகரமாக எதிர்கொள்ளச் சூரிய சக்தியின் பாவனை வழிவகுக்கும்.
சூரிய சக்தியால் மிகவும் பாதுகாப்பான மற்றும் சிக்கனமான முறையில் உணவைச் சமைக்கு வழிமுறைகளும் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சூரிய சக்தியின் பயன்பாட்டில் மிகப் பெரிய பின்னடைவாக அமைவது, திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான ஆரம்பச் செலவாகும். ஆனால் எதிர்காலத்தில் பாவனைக்கு வரவிருக்கும் நனோ சூரியத் தொழில் நுட்பத்தின் அறிமுகம், இச்செலவைப் பாரிய அளவில் குறைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
இது மிகக் குறைந்த செலவில் பாரியளவிலான சூரிய கலங்கள் மற்றும் உபகரணங்களின் உற்பத்தியை ஊக்குவிப்பதுடன் சூரிய சக்தியை வியத்தகு வகையில் வினைத்திறன் மிகக் வேறு சக்திகளாக மாற்றவும் வழிவகுக்கிறது. உலகிலேயே முதன்முறையாக நிலக்கரியைவிட மலிவான விலையில் சூரிய சக்தி கிடைக்கவிருக்கும் காலம் வெகு தொலைவிலில்லை எனலாம்.
கடன் திட்டங்களையும் மானிய முறைகளையும் அறிமுகப்படுத்திச் சூரிய சக்தியின் பாவனை மக்கள் மத்தியில் ஊக்குவிக்கப்படலாம்.
வெகு சனத்தொடர்பு ஊடகங்கள் சூரிய சக்தியின் பாவனை தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வை ஊட்டுவதிலும் பெரும் பங்கை வகிக்க வேண்டும். பொறுப்புள்ள மானிடராய் நாம் ஒவ்வொருவரும் சிந்திக்கத் தலைப்பட வேண்டும்.
சக்தி விரயத்தைத் தவிர்க்கும் வழி வகைகளைக் கையாள்வதுடன் நின்றுவிடாது எமது வசதிக்கேற்ற வகையில் சூரிய சக்தியின் பாவனையை அதிகரிக்க முயல வேண்டும்.
புதிதாக இல்லமொன்றையோ அல்லது கட்டடமொன்றையோ நிரமாணிக்கவிருக்கும் சந்தர்ப்பத்தில் சூரிய சக்தியின் உச்ச பாவனையைக் கருத்தில் கொண்டு திட்டமிடல் வேண்டும். இத்தகைய சிந்தையுடன் நாம் ஒவ்வொருவரும் நடந்தால் சுபீட்சமான இலங்கையை எமது எதிர்காலச் சந்ததியினரிடம் கையளிக்கமுடியுமென்பதே நிதர்சனமான உண்மை

Friday, November 13, 2009

பு+மித்தாய்க்கு இழைக்கும் கொடுமைகள் இறுதியில் பிள்ளைகளுக்கே வந்துசேரும்


காலநிலை மாற்றமெனப் படுவது காலத்துடன் புவி அல்லது அதன் பிராந்தியங்களில் ஏற்படும் சீதோ ஷண மாற்றங்களைக் குறிக்கும். வளி மண்டலம் தனது சராசரி நிலையிலி ருந்து தசாப்தங்களிலோ அல்லது மில் லியன் வருடங்களிலோ அடையும் மாற்றத்தைக் காலநிலை மாற்றமெனலாம்.

காலநிலை மாற்றமானது புவியின் உள்ளக மாற்றங்கள், சூரிய ஒளிச் செறிவில் ஏற்படும் வேறுபாடு போன்ற புற விசைகள் மற்றும் சமீப நூற்றாண்டுகளின் மனித நடவடிக்கைகள் போன்ற காரணங்களால் ஏற்படலாம். இது இன்று பலராலும் பேசப்படும் ஒரு சொற்றொடராகவே காணப்படுகிறது.

புவி வெப்பமடைதல், பனிப் பாறை உருகுதல், கடல் மட்டம் உயருதல், வெள்ளம், வரட்சி, புதிய நேய்க்களெனப் பலரும் கதைக்கக் கேட்டிருப்போம். நாமும் கதைத்திரு ப்போம். ஆனால் அடிப்படையில் என்ன நிகழ்கிறது என்பதை அறிந்த வர்கள் அப்பலருள் மிகச் சிலரேயாவர்.

எமது அன்றாட பல்வேறு செயற் பாடுகள் காலநிலை மாற்றத்தைத் தோற்றுவிப்பதில் நேரடியாகப் பங்களிக்கின்றன என்பதை எம்மில் பலர் அறிவதில்லை. ஒவ்வொரு தடவையும் தொலைக்காட்சி பார்க்கும் போதும் வாகனங்களில் பயணிக்கும் போதும் நாம் கால நிலை மாற்றத்தின் பங்காளிகளாக மாறுகிறோம்.

உலகம் தோன்றிய காலத்திலிருந்து காலநிலை மாற்றமானது ஒரு மெது வான செயற்பாடாக நடைபெற்றுக் கொண்டுதானிருக்கிறது.

மிக மிக ஆரம்பத்தில் 10 பாகை செல்சியஸ் ஆகவிருந்த புவியின் வெப்பநிலை, காலப் போக்கில் உயிர்கள் நிலைத்து வாழக்கூடிய வகையில் மாறியது கூட இக்காலநிலை மாற்றத்தால்தா னெனக் கூறலாம்.

ஆனால் கடந்த இரு நூற்றாண்டுகளாக இக் கால நிலை துரித கதியில் மாற்றமடைந்து வருவதுடன் சாதாரண மனிதனின் அவதானிப்பால் உணரக்கூடியதாகவு மிருக்கிறது. இலங்கையின் கரை யோரப் பகுதிகளில் தொடர்ந்து பய ணங்களை மேற்கொள்பவர்கள், காலத்துடன் கடலரிப்பின் அதிகரி ப்பை நன்கு உணர்ந்திருப்பார்கள்.

பருவ காலம் கடந்த மற்றும் சீரற்ற மழை வீழ்ச்சியையும் எதிர்பாராத வரட்சியையும் எதிர்நோக்குகிறோம். ஆனால் இவையெல்லாம் எதனால் இடம்பெறுகின்றனவெனச் சிந்திக்கத் தவறிவிடுகிறோம்.

வேகமாகப் பெருகி வரும் சனத்தொகை மனிதனின் தேவைகளை அதிகரிக்கிறது. அத்தேவைகளின் அதிகரிப்புக்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் கைத்தொழில், மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளில் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் ஊக்குவிக்கப்படுகின்றன. அவை காலநிலை மாற்றத்தை ஏற்படுத்தும் அடிப்படைக் காரணிகளாகின்றன.

காலநிலை மாற்றத்தைத் தோற்றுவிக்கும் பிரதான காரணியாகப் பூகோளம் வெப்பமயமாதல் கருதப்படுகின்றது. இயற்கை மற்றும் மனித செயற்பாடுகள் பூகோளம் வெப்பமயமாதலைத் தோற்றுவிப்பதன் மூலம் காலநிலை மாற்றத்துக்கு வழிவகுக்கின்றன.

வளி மண்டலத்திலுள்ள பச்சை இல்ல வாயுக்களே பூகோளம் வெப்பமயமாதலைத் தோற்றுவிக்கின்றன. அடிப்படையில் இப்பச்சை இல்ல வாயுக்கள் வளிமண்டலத்தின் மீது ஒரு படையாகச் செயற்பட்டு பூகோளத்தின் வெப்ப நிலையை உயிர்கள் நிலைத்திருக்கக்கூடிய வகையில் சீராகப் பேணுகின்றன.

காபனீரொட்சைட், மெதேன், நைதரசன்ரொட்சைட் போன்ற வாயுக்களும் பச்சை இல்ல வாயுக்களுள் அடங்குகின்றன. கடந்த இரு நூற்றாண்டுகளில் மிக வேகமாக வளர்ந்து வரும் கைத்தொழில் மற்றும் தொழில் நுட்ப முன்னேற்றம் இவ்வாயுக்கள் அதிகளவில் வெளிவிடப்பட வழி வகுத்தமையால், வளிமண்டலத்தில் இவ்வாயுக்களின் செறிவு அதிகரிக்கப்பட்டு புவி வெப்பமயமாதல் தோற்றுவிக்கப்படுகிறது.

பச்சை இல்ல வாயுக்களை வெளிவிடும் முக்கிய செயற்பாடாகப் பெற்றோலியப் பாவனை இருந்து வருகிறது. இலங்கையைப் பொறுத்தவரையில் 1996 ஆம் ஆண்டு 32 சதவீதமாகவிருந்த பெற்றோலியப் பாவனை, 2005 ஆம் ஆண்டளவில் 45 சதவீதமாக உயர்ந்திருந்தது.

இப்பாவனையில் போக்குவரத்து 50 சதவீதத்தையும் சக்தி மூலமாகப் பயன்படுத்துதல் 25 சதவீதத்தையும் ஏனைய தொழிற்சாலை மற்றும் வீட்டுத் தேவைகள் மிகுதி 25 சதவீதத்தையும் கொண்டிருக்கும்.

பெற்றோலிய எரிபொருள் பாவனையால் உலகளாவிய ரீதியில் வளிமண்டலத்திலுள்ள காபனீரொட்சைட் மற்றும் மெதேன் வாயுக்களின் அளவு கணிசமாக அதிகரித்துள்ளது.

இவை தவிர தற்போது கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ள பச்சை இல்ல வாயுக்களை வெளியேற்றும் குளிர்சாதனப் பெட்டி போன்ற உபகரணங்களின் பாவனையும் காடுகள் போன்ற இயற்கை வளங்களின் அழிப்பும் பூகோளம் வெப்பமயமாதலில் செல்வாக்குச் செலுத்துகின்றன.

பூகோளம் வெப்பமடைவதால், துருவப் பகுதியிலுள்ள பனிப்பாறைகள் உருகத் தொடங்கும். வெப்பத்தால் கடல் மற்றும் சமுத்திர நீர் விரிவடையத் தொடங்கும். உயரும் கடல் மட்டத்தால் எதிர்காலத்தில் மாலைதீவுகள் போன்ற சிறிய தீவுகள் கடலினுள் அமிழ்ந்து போகலாம்.

அத்துடன் நன்னீர் வளங்களுள் உவர் நீர் கலக்கப்படும் சாத்தியம் அதிகரிப்பதால் நன்னீர்ப் பற்றாக்குறை ஏற்படும். நீர் ஆவியாதல் அதிகரிக்கும். உலகின் நீர்ச் சமநிலை குலைவடையும்.

சூழலின் வெப்பநிலை அதிகரிப்பதால் சூழல் மாசடைதல் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும். இன்னும் சில தசாப்தங்களில் பூகோளத்தின் சராசரி வெப்பநிலையானது 1.40வி – 5.40வி யால் அதிகரிக்குமெனவும் 2100 ஆம் ஆண்டளவில் கடல் மட்டமானது 9 ணீசீ – 88 ணீசீ வரை உயரும் எனவும் எதிர்வு கூறப்படுகிறது.

இவை யாவும் காலநிலை மாற்றத்தில் பெருஞ்செல்வாக்குச் செலுத்துகின்றன. ஒரு நாட்டின் தலா வருமானத்துடன் அந்நாடு வெளியேற்றும் பச்சை இல்ல வாயுக்களின் அளவு அதிகரித்துச் செல்கிறது என ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

இக்காலநிலை மாற்றத்தின் அவதானிக்கப்படக் கூடிய விளைவுகளாகச் சீரற்ற மழைவீழ்ச்சி, பருவ காலங்களின் கால அளவுகளில் ஏற்படும் மாற்றங்கள், பாரிய அழிவுகளை ஏற்படுத்தும் புயல் மற்றும் இயற்கை அழிவுகள், வெள்ளப் பெருக்கு, வரட்சி, மண் சரிவுகள், காணாமற் போகும் கடற்கரையோரங்கள், இடம்பெயரும் மீன் வளங்கள், உவர் நீராகும் நன்னீர் வளங்கள் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

காலநிலை மாற்றமானது உயர் அகலாங்குகளில் உள்ள நாடுகளின் காலநிலையைப் பெருமளவில் பாதிக் குமென நம்பப்படுகிறது.

குறித்த காலங்களில் மட்டுமே பூக்கும் தாவ ரங்களின் பூக்கும் காலங்கள் மாறுபடு வதுடன் பருவ காலத்திற் கேற்ப இடம்பெயரும் உயிரினங்க ளின் இடப்பெயர்வும், நிலைப்பும் அச்சுறுத் தலுக்குள்ளாக்கப்படும்.

அத்தியாவசிய மான இயற்கை வளங்கள் மேலும் அழிவடையும். விவசாய முறைமை கள் குலைவ டையும். பனிக்கரடிகள், பென்குயி ன்கள், கடல் வாழுயிரினங் கள், பவளப் பாறைகள் மட்டுமன்றிப் பல உயிரினங்களின் வாழ்வு அச்சுறு த்த லுக்குள்ளாகும். உயிரினங்களுக் கிடையிலான சமநிலை குலைக்கப் படும்.

புராதன நினைவுச் சின்னங்கள் அழிவுக்குள்ளாகும். நீர்ப்பற்றாக்குறை அதிகரிக்கும். முடிவில் உயிர்களின் உயிர் வாழும் உரிமை கேள்விக் குறியாக்கப்படுமென்பதே நிதர்சன மான உண்மை.

நலிவாக்கப்பட்ட வளிமண்டல அமுக்க மாற்றங்களால் உலர்வலயப் பிரதேசங்கள் அதிக மழை வீச்சியைப் பெறுவதுடன் ஈரவலயப் பிரதேசங்கள் அதிகளவில் வரட்சியடைதலே எல்நினோக்கால நிலை எனப்படும். காலநிலை மாற்றம் எல்நினோக் காலநிலைக்கான சாத்தியக்கூறுகளை அதிகரிக்குமெனலாம்.

இவை தவிரப் பல நோய்கள் உரு வாவதற்கான அடிப்படைக் காரணி யாகவும் இக்காலநிலை மாற்றம் அமைகிறது.

பொதுமக்களின் சுகாதார மானது பாதுகாப்பான குடிநீர், போதுமான அளவு உணவு, பாதுகா ப்பான புகலிடம், சிறந்த சமூக நிலைமைகள் ஆகிய காரணிகளி லேயே தங்கியுள்ளது. காலநிலை மாற்றம் இக்காரணிகள் யாவற்றி லுமே பாதிப்பை ஏற்படுத்திப் பொது மக்களின் சுகாதார நிலைமைகளை யும் கேள்விக்குறியாக்குகிறது.

குறிப்பாகப் பருவ கால அளவுகளில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக நுளம்பு போன்ற காவிகளால் பரப்பப்படும் டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் பரவும் காலம் அதிகரிக்கப்படும். அதே நேரம் சீரற்ற மழை வீழ்ச்சி, காவிகளின் இனப் பெருக்கத்துக்கு வழிவகுப்பதுடன் நோய் பரவுதலையும் அதிகரிக்கும்.

மாசடையும் நன்னீர் வளங்களால் வயிற்றோட்டம், கொலரா போன்ற நோய்களின் அச்சுறுத்தல்களும் அதிகரிக்கும். இவை தவிர, அதிகரித்து வரும் சுவட்டு எரிபொருள் பாவனையால் சுவாச நோய்களும் அதிகரிக்கும்.

வெப்ப அலைகளால் தோல், சுவாச மற்றும் இருதய நோய்களும், குறைவடைந்துவரும் உணவு உற்பத்தியால் போசாக்கின்மையும் ஏற்படக் கூடிய சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றன.

எல்லாவற்றிக்கும் மேலாகக் காலநிலை மாற்றம் ஏற்படுத்தப் போகும் பொருளாதார ரீதியிலான பாதிப்புக்கள் பற்றியும் நாம் சிந்திக்கவேண்டிய நிலையில் உள்ளோம். நாடளாவிய ரீதியில் பஞ்சம், பட்டினி அதிகரிக்கும். அகதிகளின் சுமை அதிகரிக்கும்.

எஞ்சியிருக்கும் இயற்கை வளங்களுக்கான போட்டி அதிகரிக்கும். முகாமைத்துவப்படுத்தப்பட முடியாத அளவில் குடியகல்வு இடம்பெறும். மாசடையும் நன்னீர் வளங்கள் விவசாய உற்பத்தி மற்றும் கால்நடை வளர்ப்பைப் பாதிக்கும். இது நாடொன்றின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பாதிப்பை ஏற்படுத்தும்.

காப்புறுதி நிறுவனங்கள் உட்படப் பல வர்த்தக நிறுவனங்கள் வீழ்ச்சியடையும் நிலைக்குத் தள்ளப்படும். விண்வெளி ஆராய்ச்சிகளும் பயணங்களும் பிற்போடப்படலாம். தொழில் நுட்ப முன்னேற்றங்களும் ஆராய்ச்சிகளும் தடைப்படலாம். இன்னொரு பொருளாதார நெருக்கடிக்கும் உலகம் மீண்டும் தள்ளப்படும் காலம் வெகுதொலைவிலில்லை.

அபிவிருத்தியடைந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில், காலநிலை மாற்றத்துக்கு இலங்கை சிறியளவிலான பங்களிப்பையே செலுத்தியிருக்கிற போதிலும் பாரிய விளைவுகளை எதிர்நோக்கும் நிலைக்கே தள்ளப்பட்டுள்ளது. காலநிலை மாற்றத்தால் இலங்கையின் உலர் வலயப் பிரதேசம் மேலும் வரட்சியை எதிர்நோக்குமெனவும் ஈரவலயப் பிரதேசம் இன்னும் அதிக மழை வீழ்ச்சியைப் பெறுமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இது சிறிதளவிலான வானிலை மற்றும் காலநிலை மாற்றங்களுக்கே பாதிப்புக்குள்ளாகும் நெல், தேயிலை, மற்றும் இறப்பர் போன்ற பயிர்ச்செய்கைகள் பாதிப்புக்குள்ளாகும். நுவரெலியா மாவட்டத்தில் உருளைக் கிழங்கு விளைவிக்கப்பட முடியாத காலம் கூட ஏற்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் கடல் நீர் நன்னீருடன் கலப்பதால் விவசாயம், கால்நடை வளர்ப்பு போன்ற துறைகள் அதிகளவில் பாதிக்கப்படுவதுடன், குடிநீர்ப் பிரச்சினையும் உருவாகும்.

கடற்கரையோரக் குடியிருப்பாளர் கள் உள்நோக்கி இடம்பெயரத் தலைப்படுவதால் விவசாய நிலங்கள் அபிவிருத்தித் தேவைகளுக்குப் பாவி க்கப்படும் சாத்தியம் உள்ளது. மீன்பி டித் தொழிலுடன் சுற்றுலாத்துறையும் பாதிப்புக்குள்ளாகும்.

இவை தவிர நுளம்புகள், ஈக்கள், கரப்பொத்தான் களின் பரம்பல் அதிகரிக்கப்படுவது டன் டெங்கு, மலேரியா போன்ற நோய்களின் அச்சுறுத்தல்களும் களைத் தாவரங்களின் பரவுதலும் அதிகரிக்குமென எதிர்பார்க்கப் படுகிறது.

எம்மால் காலநிலை மாற்றத்தைக் குறுகிய கால அடிப்படையில் தடுக்க முடியாவிடிலும், அயன மண்டல சூழல் தொகுதி உயிர் வாழ எம்மா லான உதவிகளைச் செய்ய முடியும். அதற்கு நீர்வலு, காற்றின் வலு, சூரிய சக்தி போன்ற இயற்கை வள ங்களிலிருந்தும் தொழிற்சாலை மற் றும் வீடுகளிலிருந்து வெளியேற்றப் படும் கழிவுகளிலிருந்தும் வினைத் திறன் மிக்க வகையில் சக்தியைப் பெற வழிசெய்யப்பட வேண்டும்.

பெரிய தொழிற்சாலைகள் தமக்குத் தேவையான சக்தியைப் பெறத் தாமே சக்தி மூலங்களை வைத்திருக்க வேண்டும். இயற்கை வளங்களின் மிகை பாவனை குறைக்கப்பட வேண்டும். சிறந்த கழிவு முகாமைத்துவத்துடன் பொருட்களின் மீள்பாவனையும் மீள் சுழற்சியும் ஊக்குவிக்கப்பட வேண்டும்.

காலநிலை மாற்றத்தால் ஏற்படப் போகும் விளைவுகளை எதிர்நோக்கக் கூடிய வகையில் புதிய முறைமைகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும். தேசிய ரீதியில் வானியல், நீரியல், புவியி யல், கடல் வளம் மற்றும் சுகாதாரம் போன்ற சேவைத் துறைகளுக்கி டையே சிறந்த ஒத்துழைப்புப் பேணப்பட வேண்டும்.

கொள்கைகளும் சட்டங்களும் அமுலுக்கு வரவேண்டும். எனினும் பொதுமக்களின் பங்களிப்பு இன்றியமையாதது. இளைஞர் கழகங்கள் போன்ற அமைப்புகளினூடு கிராமிய மட்டத்திலிருந்து மக்கள் மத்தியில் காலநிலை மாற்றம் தொடர்பான விழிப்புணர்வு ஊட்டப்பட வேண்டியதுடன் ஏற்படப் போகும் விளைவுகளை எதிர்கொள்ளவும் பொதுமக்கள் தயார் செய்யப்பட வேண்டியது அவசியமாகும்.

காலநிலை மாற்றம் தொடர்பாக உலகளாவிய ரீதியில் பல மாநாடுகள் நடத்தப்படுகின்றன. கடந்த ஆவணி மாதம் நடைபெற்ற காலநிலை மாற்றத்திற்கான மூன்றாவது உலக மகாநாடும், அடுத்த மாதம் நோர்வேயில் நடைபெறவிருக்கும் மாநாடும் இவற்றிற்குச் சில உதாரணங்களாகும்.

இவை தவிரக் காலநிலை மாற்றம் தொடர்பாக ஆராயவும், நடவடிக்கை களை மேற்கொள்ளவும் பல அரச சார்பற்ற நிறுவனங்களும், சுயாதீனக் குழுக்களும் உருவாக்கப்பட்டுள்ளன.

எமது பூமி அன்னையை இக்காலநிலை மாற்றம் ‘மெல்லப்புவி இனிச்சாகும்’ எனும் நிலைக்குத் தள்ளியிருக்கிறது. நாம் எமது எதிர்காலச் சந்ததியினருக்கான இயற்கை வளங்களை அழித்து வருகிறோம். சிறந்த பிரஜையாக, எம் எதிர்காலச் சந்ததியினருக்கு நல்வழி காட்டும் முன்னோராக நாம் செயற்பட வேண்டும்.

எளிமையாக வாழப்பழக வேண்டும். எம்மை ஆடம்பர வாழ்வியலுக்கு இட்டுச் செல்லும் மனப்பாங்கை மாற்ற வேண்டும். நாம் வாழும் சூழலின் காப்பாளரும் நாமே என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

மின் குமிழ்கள், மின் விசிறிகள், ஏனைய மின் உபகரணங்கள், கணினி போன்றவற்றின் ஆளிகளைத் தேவையற்ற நேரங்களில் திறந்து வைத்தல், நீரைச் சேமிக்கும் வழிவகைகளை இயன்றவரை கையாளல், கைத்தொலைபேசி மின்னேற்றப்பட்டவுடனேயே மின் தொடர்பைத் துண்டித்தல், தேவையற்ற வாகனப் பிரயாணங்களைத் தவிர்த்தல், வீட்டிலுள்ள மின்னுபகரணங்களின் எண்ணிக்கையைக் குறைத்தல், மரங்களை நாட்டுதல், பிளாஸ்டிக் பைகளின் பாவனையைத் தவிர்த்தல், ஒரு பக்கம் மட்டும் அச்சிடப்பட்ட தாளை மீளப் பாவித்தல், சூரிய கலங்களின் பயன்பாட்டை அதிகரித்தல், கழிவுகளின் பெறுமதியை உணர்ந்து அவற்றை மீள் சுழற்சி செய்தல், சக்தியைச் சேமிக்கும் மின் குமிழ்களைப் பாவித்தல், நாம் சார்ந்துள்ள சமூகத்துக்கும் காலநிலை மாற்றம் தொடர்பான விடயங்கள் பற்றி அறிவூட்டல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடலாம்.

கி.பி. 1851 ஆம் ஆண்டு செவ் விந்தியருக்குச் சொந்தமான இருபது இலட்சம் ஏக்கர் நிலப்பரப்பை அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி செவ்விந்தியரிடம் விலைக்குக் கேட்ட போது, அவர்களின் தலைவனான சியட்டில் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதம் மிகவும் பிரபல்யமானது. அக்கடிதத்திலிருந்து சில வரிகள் வருமாறு.

‘விலங்குகள் இல்லையென்றால் மனிதனேது? விலங்குகளெல்லாம் ஒழிக்கப்பட்டுவிட்டால் ஆன்மாவை விட்டுச்சென்ற கூடு போல மனித னும் இறந்துவிடுவான். பூமி எங்கள் தாயென்று நாங்கள் எங்கள் குழந்தை களுக்குச் சொல்லிக் கொடுத்தோம். அதை உங்கள் பிள்ளைகளுக்கும் சொல்லிக் கொடுங்கள்.

பூமிக்கு எதுவெல்லாம் நேரிடுமோ, அது அதன் பிள்ளைகளுக்கும் நேரிடும். வாழ்க்கை என்ற வலையை மனிதன் பின்னவில்லை. அவன் அதிலோர் இழை மட்டுமே. அந்த வலைக்கு அவன் எத்தனை கேடுகள் செய்தா லும் அவற்றையெல்லாம் தனக்கே செய்து கொண்டவனாகிறான்.

நீங்கள் படுத்துறங்கும் நிலத்தை நீங்களே அசுத்தப்படுத்தினால் ஓரிரவில் உங்கள் குப்பைகளுக்குள்ளேயே மூச்சுத்திணறி நீங்கள் இறந்து போகலாம். நாங்கள் எங்கள் நிலத்தை விற்பதாக வைத்துக் கொள்வோம்.

உங்கள் நிலத்தை நாங்கள் நேசித்தது போலவே நீங்களும் நேசியுங்கள். உறுதியோடும் வலிமையோடு, பூரண விருப்பத் தோடும் உங்கள் குழந்தைகளுக்காக இந்த நிலத்தைப் போற்றிக் காப்பாற்றுங்கள்’

படிப்பறிவற்ற அப்பழங்குடியினர் அன்று உணர்ந்து கூறியதை, ஏறத்தாழ ஒன்றரை நூற்றாண்டுகளின் பின்னரே எம்மால் உணர முடிந்திருக்கிறது. இது இன்று நாகரிகமான சமுதாயமென மார்தட்டும் மனித இனத்தின் சாபக்கேடன்றி வேறென்ன?
-சாரதா மனோகரன் (source: www.thinakaran.lk)