Showing posts with label வவுனியா. Show all posts
Showing posts with label வவுனியா. Show all posts

Saturday, January 17, 2015

ஆவுரஞ்சிக் கற்கள் காலத்தின் தேவையோ?


எங்கள் வீட்டு விருந்தாளி இவள்......
வவுனியா நகரின் மத்தியிலே மரங்கள் சூழ்ந்ததோர் வட்ட வீதி.. ஆங்கோர் முறிந்த மின்சார இணைப்புத் தூண். . . வீதியில்  ஒய்யார நடைபோடும் மாடுகள்.. தூணைக் கடக்கும் போதெல்லாம் உரசும் அவற்றின் ஈர்ப்பு...

இது நான் அன்றாடம் காணும் காட்சிகளில் ஒன்று... எதேச்சையாய் ஒரு நாள்  அவதானித்தேன். பொறி தட்டவில்லை. சில நாட்களின் பின்னர்  ஆவுரஞ்சிக் கல் எதேச்சையாய்  நினைவுக்கு வந்தது. புத்தி ஒப்பீடு செய்தது. யதார்த்தம் புரிந்தது.

யாழ்ப்பாணக் கலாசாரமானது தர்ம சிந்தையைப் பிரதிபலிப்பது என்று எங்கோ கேட்ட ஞாபகம். கால ஓட்டத்திலே, இடப்பெயர்வுகளுடன் கூடிய உலகமயமாதலின் தாக்கத்திலே யாழ்ப்பாணம் இழந்து விட்டவைகளுள் இது மிக முக்கியமானது என்றும் சில வேளைகளில் எண்ணத்தோன்றும்.

இற்றைக்கு சில தசாப்தங்களுக்கு முன்னர்  யாழ் மண்ணின் அன்றாட வாழ்வியலிலே பல சிறப்பம்சங்கள் அங்கம் வகித்திருந்தன. இன்றைய நவீனத்தை உட்புகுத்தி கூறினால் அச்சிறப்பம்சங்களை அன்றைய உட்கட்டமைப்பு வசதிகள் என்று கூடக் கூற முடியும்.
 நவாலி வெளி கடந்து வட்டுக்கோட்டை செல்லும் பாதை அருகே இன்னமும் இருக்கும் துரவு, ஆவுரஞ்சிக்கல், கோவிலின் மறுபுரத்தே சுமை தாங்கிக்கல்

இன்றைய சனத்தொகைப்பெருக்கம் அன்று இருக்கவில்லை. சனத்தொகைச் செறிவு குறைவாக இருந்தது. வயல்வெளிகளும் பொட்டல்வெளிகளும் நிறைந்திருந்தன. ஆங்காங்கு துரவுகள் , சுமைதாங்கிக் கற்கள், ஆவுரஞ்சிக் கற்கள், தெரு மூடி மடங்கள், தண்ணீர்த்தொட்டிகள் என உட்கட்டுமானங்கள் காணப்பட்டன. இவை யாழ்ப்பாணக் கலாசாரத்துக்கென தனித்துவமானவை என்று கூறினாலும் மறுப்பதற்கில்லை. இவற்றைத்தான் யாழ்ப்பாணத்து வீதி தர்மம் என விளிக்கிறார் செங்கை ஆழியான்.

போக்குவரத்து என்றாலே மாட்டுவண்டிகளையும் சொந்தக் கால்களையும்  மட்டுமே நம்பியதாக எம்மவர்களுள் பெரும்பாலானோர் வாழ்ந்த காலம் ஒன்று இருந்தது.  அந் நிலையில் நெடுந்தூரம் பயணிப்பவர்கள் இடையிலே இளைப்பாறுவதற்கு தெரு மூடி மடங்கள் பயன்பட்டன. தமது சுமையை இறக்கி வைத்து களைப்பாறி மீண்டும் எடுத்துச் செல்வதற்கு ஏதுவாக சுமை தாங்கிக் கற்கள் அமைக்கப்பட்டன. 
சுமை தாங்கிக் கல்

எம்மவர் பண்பு கால் நடைகளைக் கூட விலக்கி வைக்கவில்லை. அவற்றிற்கும் தம் பண்பாட்டில் சம வகி பாகத்தை வழங்கியிருந்தனர்.  அதற்கு துரவுகளையும் தண்ணீர்த்தொட்டிகளையும் ஆவுரஞ்சிக் கற்களையும் சிறந்த உதாரணமாகக் கொள்ளலாம்.

ஆவுரஞ்சிக்கற்களானவை கால்நடைகளுக்கு ஏற்படும் திணைவு எனும் ஒரு வகைக் கடியினை நீக்கும் முகமாக உருவாக்கப்பட்டவை எனப் பெரியவர்கள் சொல்லி அறிந்திருக்கிறே. அக்கற்கள் ஒரு மாடு உரசக் கூடியளவு உயரத்திலே சொரசொரப்பான மேற்பரப்பையுடையனவாக அமைக்கப்பட்டிருக்கும். இந்த ஆவுரஞ்சிக் கற்களால் எவருக்கும் இடைஞ்சல் இருந்திருக்கும் என நான் என்  சொந்த அனுபவத்தில் உணரவில்லை.

ஆனாலும் இன்றைய காலத்தில் ஆவுரஞ்சிக் கற்களைக் காண்பது வெகு அரிதாகி விட்டது.  நாம் இன்று பயணிக்கும் பாதையானது நவீனம், அபிவிருத்தி, உலகமயமாதல் என புதுப் புது கோணங்களில் நீண்டு செல்கிறது.  அந்த கால ஓட்டத்தில்  இந்த உட்கட்டுமானங்களை எல்லாம் நாம் மறக்கடித்து விட்டோம். அதன் விளைவாக அவை  பாழடைந்து உருக்குலைந்து போயின. பல இருந்த இடமே தெரியாமல் போய்விட்டது.

இச்சந்தர்ப்பத்திலே யாழ். பல்கலைக்கழக வரலாற்றுத்துறையினர் மேற்கொண்டிருக்கும் முயற்சி பாராட்டப்பட வேண்டியது. பல்கலைக் கழக முன்றலின் ஒரு பகுதியிலே எங்கோ பெயர்த்தெடுத்து வந்த தண்ணீர்த்தொட்டியும் ஆவுரஞ்சிக் கல்லும் சுமை தாங்கிக் கல்லும் உரிய விளக்கங்களுடன் வைக்கப்பட்டிருக்கின்றன. சந்ததிகள் கடந்தாலும் எம் பண்பாட்டை நினைவூட்ட அவை மட்டுமே எஞ்சி நிற்கப் போகின்றன.
யாழ். பல்கலைக்கழக வளாகத்தில்.....

என்ன என்று அறியாமலே அழிக்கப்பட்ட உட்கட்டுமானங்கள் ஏராளம் எனலாம். தமக்குத் தெரிந்தவற்றை தம் அடுத்த சந்ததியினருக்கு முழுவதுமாகக் கடத்தாமல் விட்டமை எம்மவர் செய்த மிகப்பெரிய வரலாற்றுத் தவறென்பதில் ஐயமேதுமில்லை. அவர்கள் கடந்து வந்த அவலங்கள் அதற்கு இடம் கொடுக்கவில்லை என்பது யதார்த்தமான உண்மையாகும். 

  நான் சிறு பராயத்தைக் கழித்த வீட்டிலே இருந்த மாட்டுக் கொட்டில் சீமெந்தால் ஆனது.  மாடு உண்ண வைக்கோல் போடுவதற்கு ஏதுவாகவும்  மாடு தண்ணீர் குடிப்பதற்கு ஏதுவாகவும் சீமெந்தினாலேயே கட்டுகள் அமைக்கப்பட்டிருந்தன. மாட்டைக் கட்டுவதற்கு ஏதுவாக தூண்கள் அமைக்கப்பட்டிருந்தன. 

இற்றைக்கு இரு தசாப்தங்களுக்கு முன்னர் கிளிநொச்சியின் திருவையாற்றிலே வில்சன் வீதியோரம் இருந்த ஒவ்வொரு வீட்டிலும் படலையோடு மாட்டுப்பட்டி இருக்கும். மாடுகளை மேய்ப்பவர்கள் காலையிலே வீடு வீடாகச் சென்று மாடுகள் எல்லாவற்றையும் மேய்ச்சலுக்கு ஓட்டி செல்வர். மாலையிலே மீண்டும் உரிய வீடுகளுக்குக் கொண்டு போய்ச் சேர்ப்பர்.  நீர்ப்பாசன ஊழியரான இராமலிங்கம் என்பவர்வீதியிலே செல்வோரின் தாகம் தீர்க்கவென குடி நீர்ப்பானை வைத்து பேணுவார் . மாட்டுப்பட்டிகளையோ மேய்ப்பவர்களையோ இப்போது காண்பது வெகு அரிதாகி விட்டது. அன்றிருந்த செழிப்பு அற்றுப் போய் சோபையிழந்து காட்சியளிக்கிறது வில்சன் வீதி. அந்த நினைவுகள் இன்னும் பசுமையாய் நிழலாடுகின்றன.
சேமமடு, வவுனியா

ஏறத்தாழ இரு தசாப்த காலங்களுள் எத்தனை மாற்றங்களை நாம் சந்தித்து விட்டோம்? மாடுகளும் அதற்கு விதி விலக்கல்லவே!  இன்று மாட்டுப்பட்டிகளைக் காண்பது வெகு அரிதாகி விட்டது. மழையிலும் வெயிலிலும் மரங்களுக்குக் கீழேயும் வீதியின் இரு மருங்கிலும் ஒதுங்கும் மாடுகள் தான் அதிகம் எனலாம்.

இரவுகளில் கூட தம் பட்டிக்குச் செல்லாமல் வீதி ஓரங்களிலேயே தஞ்சம் புகும் மாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஒரு மாட்டைக் காணவில்லை என்றால் கூட  துடித்துப் போகும்  உரிமையாளர்கள் மிக அரிதாகி விட்டனர் என்பதன்றி அதற்கு வேறெந்த அடிப்படைக் காரணமும் இருக்க முடியாது.

ஆவுரஞ்சிக் கல்லுக்காகவே அந்த வீதிக்கு வரும் மாடுகளை நான் கண்டிருக்கிறேன். வாசல் கதவு எப்போ திறக்கும்? எமக்கு யார் தண்ணீர் தருவார்கள் என ஏக்கமாய்ப் பார்க்கும் மாடுகளையும் கண்டிருக்கிறேன். தண்ணீர் குடித்து முடிந்ததும் நன்றிப் பெருக்கோடு விலகும் மாடுகளைக் காண்பதில் கிடைக்கும் திருப்தி எதிலும் கிடைப்பதில்லை என்பதையும் நான் உணர்ந்திருக்கிறேன். இந்த மாடுகளுக்கெல்லாம் கதைக்கத்தெரிந்தால் என்னெல்லாம் சொல்லும் என்று நான் கற்பனை பண்ணிப்பார்ப்பதுமுண்டு.  அக்கற்பனையில் மனிதன் கூனிக்குறுகித் தான் நின்றிருக்கிறான்.

சனத்தொகை அதிகரிக்க, நிலங்கள் துண்டாடப்பட ஒவ்வொரு பிரதேசத்துக்குமாக மேய்ச்சல் நிலங்களை ஒதுக்க வேண்டிய தேவை இக்காலத்தில் ஏற்பட்டுள்ளது. வன ஓதுக்கெடுகளை விடுவித்து மேய்ச்சல் நிலமாக்குங்கள் எனக் கோரும் பண்ணையாளர்களை அடிக்கடிக் காண முடிகிறது.

மாடுகளைப் பராமரிப்பதிலும் அவற்றின் தேவைப்பாடுகளைக் கருத்தில் கொள்வதில் இன்றைய சந்ததி  அலட்சியம் காட்டுகிறது. மாறாக மாடுகளால் கிடைக்கும் பயனின் உச்ச அளவைப் பெற்றுக்கொள்ள அதீத ஆர்வம் காட்டுகிறது.   பணத்தை மையமாகக் கொண்ட ஆறறிவு ஜீவன் களால் பாதிக்கப்பட்டவை இந்த வாயில்லா ஜீவன் கள் என்பது கண் கூடு.

காலம் ஒன்றும் கடந்து போய்விடவில்லை. நாம் ஒவ்வொருவரும் சிந்தித்து செயற்பட்டால் எஞ்சியிருக்கும் பாரம்பரிய உட்கட்டுமா னங்களை  அழிவிலிருந்து மீட்க முடியும். அதே வேளை சுய நலத்தை மட்டுமே கொள்ளாமல் வாயில்லா ஜீவன் களையும் கருத்தில் கொண்டு வீதிக்கொரு ஆவுரஞ்சிக்  கல்லையும் தண்ணீர்த்தொட்டியையுமாவது அமைக்க முயற்சி எடுக்கலாம்.

நாம் வாழும் சூழல் தொகுதி வாழ்வுக்கு ஏற்றதாக இருக்க வேண்டுமாயினும் அங்கு சம நிலை இருக்க வேண்டும். எல்லா உயிர்களின் தேவைகளும் பூர்த்தி செய்யப்பட வேண்டும். அன்றேல் 'தன் வினை தன்னைச்சுடும்' என்ற முது மொழி  நிதர்சனமாவது கண்கூடு.

Wednesday, November 12, 2014

எதிர்கால இலங்கையில் தொலைக்காட்சியுடன் நாம்

(முதலாவது உலக தொலைக்காட்சி தினத்தை முன்னிட்டு இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனமும் கலாசார அமைச்சும் இணைந்து நடாத்திய அகில இலங்கை ரீதியிலான கட்டுரைப்போட்டியில் திறந்த பிரிவில் மூன்றாம் பரிசு பெற்ற கட்டுரை..)


ஆறடியிலும் குறைந்த உயரம்....கிடுகால் மேய்ந்த கூரை... களிமண்ணும் சாணமும் கலந்து மெழுகிய தரை.. செங்கற்கள் அடுக்கிய சுவர்.. சமையலறைப்பகுதியில் ஒரு சில பாத்திரங்கள்... ஆங்காங்கே கொடிகளில் இடம் பிடித்திருக்கும் உடு புடைவைகள்.... கட்டொன்றில் நிலை கொண்டிருக்கும்  நேர்த்திரை தொலைக்காட்சி......விதைவைத் தாய்.. மகள்... மண் விளையாட்டே தஞ்சமான இரு பேரக்குழந்தைகள்... வீட்டை விட உயரத்தில் செய்மதித் தொலைக்காட்சிக்கான சமிக்ஞை வாங்கி...
இந்த விவரணம் கண்காணாத தேசத்துக் காட்சியை மனக்கண்ணில் உருவாக்குவதற்காக சித்தரிக்கப்பட்டதல்ல. இதுவே  நிகழ்கால இலங்கையின் யதார்த்தம். இலங்கையில் தொலைக்காட்சி  காலடி எடுத்து வைத்து ஆக 3 தசாப்தங்கள் மட்டுமே கடந்து விட்டிருக்கின்றன. அன்று ஊருக்கொன்றாய் எட்டிப் பார்த்த தொலைக்காட்சிகள் இன்று வீட்டுக்கு இரண்டிலும் அதிகமென நிலைகொண்டிருக்கின்றன.
ஆசியாவின் ஆச்சரியமாக மாறுதல் தொடர்பில் வீறு நடை போட்டுக்கொண்டிருக்கும் எம் நாட்டில் மின்சார இணைப்பு கிடைக்காத கிராமங்களிலும் கூட ஓர் ஆடம்பரக் குறிகாட்டியாக இருப்பதில் தொலைக்காட்சிகளே முன்னணி வகிக்கின்றன.|
இக்கட்டுரையிலே வட மாகாணத்தை அடிப்படையாகக் கொண்டு இன்றைய இலங்கையின் யதார்த்தத்தை வெளிப்படுத்துதல் சிறப்பாக இருக்கும் என நான் எண்ணுவதில் தவறேதும் இல்லை என நம்புகிறேன்.
பிச்சை புகினும் தென்னிந்திய சின்னத்திரைத் தொடர்களைப் பார்த்தால் தான் அன்றைய நாள் மன நிறைவுடன் கழியும் என நம்பும் குடும்பங்கள் சடுதியாக அதிகரித்து வருகின்றன. முன்னொரு காலத்திலே கூட்டு வாழ்வை அடிப்படையாகக் கொண்டிருந்த வாழ்வியல் இன்று சின்னத்திரையில் தங்கிய தனிமை வாழ்வியலை அணுகும் நிலைக்கு வந்து விட்டது.  அன்று நாம் கொண்டிருந்த கூட்டு வாழ்வியலானது ஒன்றாய் கூடி உணவருந்துதல் தொட்டு முடிவெடுத்தல் வரை சகலதையும் உள்ளடக்கியதாக இருந்தது. அவ்வாழ்வியலிலே துயர்கள் பகிரப்பட்டன. உணர்வுகள் மதிக்கப்பட்டன. இன்பம் துளிர் விட்டு கிளை பரப்பியிருந்தது. குடும்பக்கட்டமைப்பு பேணப்பட்டது. சமூகப்பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டது.
இன்றோ நிலைமை தலை கீழாய் மாறிவிட்டது. என்று செய்மதித் தொலைக்காட்சி கூட்டு வாழ்வியலினுள் ஊடுருவத்தொடங்கியதோ அன்றே ஒட்டகத்துக்கு இடங்கொடுத்த கதையாக அந்த வாழ்வியல் தொலைந்து போகத்தொடங்கியது.
முதலாளித்துவப் பொருளாதாரம் வலுப்பெறும் இந்த நவீன உலகிலே அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளே நுகர்வுக் கலாசாரத்துக்கு வெகுவாக ஈர்க்கப்படுவன என்பதில் எதுவித ஐயமுமில்லை. இலங்கையும் அந் நிலைமைக்கு விதிவிலக்கல்லவே!
சனத்தொகை பெருகத்தொடங்கி விட்டது. தேவைகள் அதிகரிக்கத் தொடங்கிவிட்டன. வளங்கள் அருகத்தொடங்கி விட்டன. மனித வாழ்வு போட்டி மிக்கதாகவே மாறிவிட்டது. தனிநபர் மையச் சிந்தனைகள் பெருகத்தொடங்கி விட்டன. அவையே மனித வாழ்வின் குறிக்கோள்களாகவும் மாறிவிட்டன. ஒரு காலத்தில் எம்மவர் மத்தியில் வலுவாக வேரூன்றியிருந்த சக மனிதர் பற்றிய அக்கறை, அன்பு, ஆதரவு, இரக்கம், மதிப்பு , மரியாதை என யாவுமே செல்லாக்காசாகி விட்டன.
வட இலங்கையிலே சமூக நிலைமை இப்படியிருக்க, உள்ளூர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பவர்கள் விரல் விட்டு எண்ணக்கூடியவர்கள் மட்டுமே. பெரும்பாலானவர்களுடைய தொலைகாட்சிகளிலே உள்ளூர் அலை வரிசையை பார்க்கும் வசதி கூட இருக்காது.       நாளைய நாட்டின் தூண்கள் என எப்போதுமே வர்ணிக்கப்படும் இளஞ்சமுதாயத்துக்கு இந்த உள்ளூர் அலைவரிசைகள் மீது எதுவித நாட்டமும் இல்லை என்று கூறினாலும் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை.
 புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக்கொண்டது போல, தென்னிந்திய தொலைக்காட்சிகளைப் பின்பற்றத்தொடங்கிய உள்ளூர் அலை வரிசைகள் தம் சுயத்தை இழந்து கொண்டிருக்கின்றன. அடிப்படையில் அவர்கள் பாசாங்கு செய்ய முயலும் இந்திய-ஆங்கிலத் தமிழ் மொழி நடையானது எம் கொஞ்சு தமிழ் மொழியின் அழகிய நடையைத் தொலைந்து போகச் செய்துவிட்டது.
இன்றும் கூட தூய தமிழை ஒரளவேனும் வழக்கொழியச் செய்யாமல் அடுத்த சந்ததிக்கு கடத்திச் செல்லும் பணியை அரச ஊடக நிறுவனங்கள் மட்டுமே செய்கின்றன எனலாம். ஆனாலும் மக்கள் மனங்களை வெல்வது தொடர்பில் தென்னிந்திய அலைவரிசைகளோடு இலங்கையின் உள்ளூர் அலை வரிசைகளால் போட்டி போட முடியவில்லை. இதே நிலைமை எதிர்காலத்திலும் தொடருமானால் உள்ளூர் அலைவரிசைகள் இருந்த இடம் தெரியாமல் போய்விடும் சாத்தியக் கூறுகளே அதிகம் எனலாம்.
தொழில்னுட்ப ரீதியாக நோக்கினால், இந்த உள்ளூர் அலைவரிசைகள் செய்மதித் தொழில் நுட்பத்தால் உள்வாங்கப்படல் அவசியமாகிறது. அத்துடன் இலங்கையில் உள்ள மூலை முடுக்குகளை எல்லாம் ஊடுருவக் கூடிய வகையிலே அவற்றின் வீச்சு விரிவாக்கப்படலும் அவசியமாகிறது. இணையத்தொழில் நுட்பத்தை பாவிக்கத் தொடங்குவதன் மூலம் நிகழ்ச்சிகளை இணையம் மூலமும் ஒளிபரப்பலாம்.
நிகழ்ச்சிகளைப் பொறுத்தவரையிலே, காலத்தின் தேவை கருதிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மொழி நடையோ அல்லது கலாசாரமோ மாற்றப்படாத வகையில் நவீன போக்குடன் இணைத்து வழங்க முயற்சி செய்யலாம். 1990 களின் ஆரம்ப காலங்களில் அரச தொலைக் காட்சி ஒளிபரப்பிய பல தரமான நிகழ்ச்சிகள் இன்று மருந்துக்குக் கூட கிடைப்பதில்லை.
எம்மவர் வாழ்வியலாகட்டும்; இன்று அவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளாகட்டும்; அவர் தம் வரலாறாகட்டும்; தொலைத்துக்கொண்டிருக்கும் பண்பாடாகட்டும்; சமயமாகட்டும், மொழி, இலக்கியங்களாகட்டும்; கலைப்படைப்புகளாகட்டும்; வேற்றுமையில் ஒற்றுமை காணும் பல்லின கலாசாரமாகட்டும்; அவற்றை எல்லாம் நவீனம் கலந்து வெளிப்படுத்துதல் இளைஞர்களையும் ஈர்க்கத்தொடங்கும்.
இலங்கையின் பாரிய சொத்தாகக் கருதப்படும் இயற்கை வளங்களையும் உயிர்ப்பல்வகைமையையும் பேணக்கூடிய வழியிலான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் எதிர்கால நோக்கில் மிக மிக அவசியமானவை.
சுற்றுலாத்துறையில் அதிகமுதலீடுகளை மேற்கொண்டு வெளி நாட்டுப் பயணிகளைக் கவரும் முயற்சிகளில் ஈடுபடும் நாம் உள்ளூர்வாசிகளை எப்படிக் கவர்வது என்பது தொடர்பில் அதிக அக்கறை காட்டுவதில்லை. அந்த மாபெரும் பணியை முன்னெடுக்கவேண்டியது தொலைக்காட்சியேயன்றி வேறெதுவுமல்ல.

இவற்றையெல்லாம்  நவீனம் கலந்து செவ்வனே நடைமுறைப்படுத்தினால் மட்டுமே தொலைக்காட்சிகளால் சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதில் பங்களிக்க முடியும்.

சாரதாஞ்சலி கர்ணன்

Wednesday, July 16, 2014

இணைப்பின் ஆறுதல்..






அது ஒரு காலம்.. செய்தித்தளங்களை மட்டுமே சுற்றி வந்த மனதோடு தலைநகரில் இருந்தபடி இருதலைக் கொள்ளி எறும்புகளாய் தவித்துக்கொண்டிருந்தவர்களுள் நானும் ஒருத்தி.. வைத்தியசாலைகள் வரை தம் பயணத்தைத் தொடர்ந்தவர்களுக்கு சமூக வலைத்தளங்களினூடு நட்புகளின் பெரு உள்ளங்கள் சேர்ந்து சகோதர மொழி பேசும் உறவுகள் மூலம் என்னால் முடிந்தவரை உதவ முடிந்ததில் சிறு ஆறுதல். 

வவுனியா... அன்றைய கால கட்டத்தில் ஒரு ஆறுதல் மையம். வடக்கிலிருந்து வந்த தேவைகளும் தெற்கிலிருந்து வந்த தீர்வுகளும் சந்தித்த வன்னிப் பெரு நிலம் தான் இந்த வவுனியா என்று கூறுவதில் தவறேதும் இல்லை. 

நிவாரணக் கிராமங்களாய் பெரியார்களின் பெயர்கள் சூட்டப்பட்ட முகாம்களில் செறிந்திருந்தோர் பலவகை. சிறுவர்..முதியோர்..கர்ப்பிணித்தாய்மார்... கைவிடப்பட்ட, விதவையாக்கப்பட்ட பெண்கள்..வலுவிழந்தோர் என எண்ணிலடங்கா குழுமங்கள்.... கணிதம் கற்றவளாய் கூற விழைந்தால் அது ஒரு சிக்கலான இடைவெட்டுகளுடன் கூடிய தொடைத் தொகுதி எனலாம்.
குடும்பமாய் வந்தவர்களை விட ஆதரவின்றி வந்தோர் மிக அதிகம்... அவர்களை எல்லாம் எங்கு இணைப்பதென்பது பெருங்கேள்விக்குறி..
வவுனியாவில் நிலைபெற்றிருந்த ஆதரவற்றோர் இல்லங்கள் நிறைந்து வழியத்தொடங்கின. புதிய இல்லங்கள் பல உருவாகத்தொடங்கின.  அவையும் குறையின்றி நிறையவே செய்தன.

அன்றைய காலத்தில் வேறு எதையும் எண்ணத் தோன்றவில்லை. திக்கற்று நின்றவர்களுக்கு ஓரளவேனும் பாதுகாப்பாக இருக்க ஒரு புகலிடம். அத்தோடு  நிர்வாகத்தரப்பின் பணி முடிந்து போக இல்லங்களின் பணி ஆரம்பமாகியது. 

கட்டுப்பாடான கட்டமைப்புக்குள் பல காலம் வாழ்ந்து இன்னல்கள் பல கடந்து மரண வாயில் வரை சென்று மீண்டவர்களை இயல்பு நிலைக்குத் திருப்புதல் ஒன்றும் சாதாரணமானது அல்லவே? இல்லங்கள் செய்யும் பணியும் அத்தகையது தான். அதை எவரும் சுலபமாக எடைபோட்டு எள்ளி நகையாடி விட முடியாது. 

அந்த சிக்கலான ஆரம்பம் இன்று அரைத் தசாப்தங்களையும் தாண்டி தன் முடிவிலிப்பாதையிலே பயணித்துக்கொண்டிருக்கிறது. இல்லங்களை நிர்வகிக்கும் உள்ளங்கள் இனியும் சலித்துப் போகாமல் இருப்பதற்காக ஒரு பயிற்சிப்பட்டறை காலத்தின் தேவையாக இருந்தது. பொதுக்கூட்டமொன்றில் பலரின் கோரிக்கைக்கமைய ஏகமனதாய் தீர்மானிக்கப்பட்டது. 

உடனடியாய் மனக்கண்ணில் தெரிந்த வளவாளர் உள நல மருத்துவர் வைத்தியக் கலாநிதி  சிவசுப்பிரமணியம் சிவதாஸ். வன்னியின் துயரறிந்து தலைநகரிலிருந்து அதே சிக்கலான காலத்தில் வவுனியாவுக்கு தன் சுயவிருப்பிலே பணியாற்ற வந்தவர். பல தளர்ந்த மனங்களை புத்துணர்வு பெற வைப்பதில் அவருக்கு  நிகர் அவர் மட்டுமே.
சலிப்புற்ற அந்த உள்ளங்களை புத்துணர்வு பெறச் செய்வதற்காக தவசிகுளத்தில் அமைந்திருக்கும் சேவா லங்கா பயிற்சி மையம் தேர்வு செய்யப்பட்டது.  பராமரிப்பு குறைவாக இருந்த போதும் இயற்கை அன்னையின் அருட்கொடையாய் வீசிய காற்றின் சுகம் குறைகளை மறைய வைத்துவிட்டது.

தன் அனுபவப் பகிர்வை இணைத்து வைத்தியக்கலாநிதி சிவதாஸ் இரு பகுதிகளாய் நடாத்திய முழு நாள் பயிற்சிப்பட்டறையின் போது என்  ஆழப்பதிந்தவற்றை பகிர்வதில் சிறு மகிழ்ச்சி. 

“ஒரு அதிகாலைப்பொழுதிலே முதலாவது நபராக என்னிடம் ஒரு வயதான அம்மா வந்திருந்தார். வெளி நோயாளர் பிரிவிலே புதினம் பார்க்க வந்த ஆச்சிக்கு இலக்கத்துண்டைக்கொடுத்து பெயரைப் பதிந்து விட்டார்கள் போலும். இயலாக்கட்டத்தில் என்னிடம் அனுப்பி இருக்கிறார்கள் என ஊகிக்க முடிந்தது. உள்ளே நுழைய முன்னரே எனக்கு மன நோயொன்றுமில்லை; தீராத நாரி உழைவு மட்டுமே என தெளிவாகக் கூறிவிட்டார். அவரது குடும்ப வரலாற்றையும் கூட ஊகிக்க முடிந்தது. எப்போது இந்த வியாதி வந்தது என்று கேட்டேன். கடைசி மகளை ஜேர்மனிக்கு பயணம் அனுப்பிவிட்டு திரும்பி வரும்போது குண்டும் குழியுமாய் இருந்த பாதையில் மகிழூந்து துள்ளித் துள்ளி வந்ததன் விளைவு என்றார். என் ஊகம் சரியாக அமைந்தது. 

மனதுக்கும் உடலுக்கும் இருக்கும் அந்த மறைமுகத் தொடர்பை எப்படி அந்த மூதாட்டிக்கு புரிய வைப்பது என்பது பெரும்புதிராக இருந்தது. தொடர் சிந்தனையில் இருந்த என் எண்னத்தில் தோன்றியது ஒரு விபத்து பற்றிய விவரணம்.
அம்மா..! நீங்கள் உங்கள் கணவருடன் ஒரு சைக்கிளிலே பயணம் செய்கிறீர்கள் என வைத்துக் கொள்ளுவோம். எதிரே வந்த இன்னொரு சைக்கிளுடன் உங்கள் சைக்கிள் மோதி நீங்கள் விழுந்து விட்டீர்கள் என்றால் என்ன நடக்கும் என்று கேட்டேன். பயமாக இருக்கும் . அதனால்  நெஞ்சு படபடக்கும் என்றார். பயம் எங்கே இருக்கிறது என்று கேட்டேன்? மனதிலே என்றார். நெஞ்சு எங்கே இருக்கிறது என்று கேட்டேன்? உடலிலே என்றார்.   நீங்கள் கடைசியாகச் செய்த கடின வேலை என்ன என்று கேட்டேன்? மாவிடித்தேன் என்றார். நவீனம் தலை தூக்கிய உடலில் ஒரு மூதாட்டி தான் மாவிடித்தேன் என்று கூறுவதே அவரது உடலின் உறுதியைத் திறம்படச் சொல்லும். அத்தனை உறுதி வாய்ந்த உங்களுக்கு எப்படியம்மா நாரி உளைவு இருக்கும்? உங்கள் மனதில் உள்ள கவலை தான் உங்களுக்கு அப்படித்தெரிகிறது என்றேன். அன்று போனவர் இன்றுவரை  என்னிடம் திரும்பி வரவில்லை.” 

இது உடலுக்கும் மனதுக்கும் இடையில் இருக்கும் தொடர்பைப் புரிய வைப்பதற்காய் வைத்தியக் கலாநிதி சிவதாஸ் சொன்ன கதை.
மனம்-உடல் இவை இரண்டும் ஒன்றுடனொன்று மறைமுகமாகத் தொடர்புபட்டவை. ஒருவன் மகிழ்வாய் இருத்தல் என்பது அவனது கையில் மட்டுமே இருக்கிறது என்ற மிகப்பெரிய உண்மையை நாம் உணர வேண்டும். நாம் எதைச் செய்தாலும் காதலோடு செய்ய வேண்டும். அப்போது சலிப்படைதல் இருக்காது என்பது தெளிவு.

 மனம் – உடல் பற்றியெல்லாம் நாம் ஆராய முன்னர் மன நோய்க்கும் மன நலக்குறைபாட்டுக்கும் இடையே இருக்கும் வித்தியாசத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு நாட்டிலே மன நோயானது 10% க்கு மேற்படாமலே இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதற்கு இலங்கையும் விதிவிலக்கல்ல. ஆனால் மன நலக்குறைபாடு எனும் போது இலங்கையில் அது ஏறத்தாழ 60-70%  ஆக இருக்கிறது என அறியமுடிகிறது.

ஒருவர் மகிழ்வாய் இருப்பதில் 10% புறக்காரணிகளும் 90 % அகக்காரணிகளும் தொடர்புபட்டிருக்கின்றன.
 எம் வாழ்வில் நாம் நீடித்த மகிழ்ச்சியைக் காண வேண்டுமாயின் சில விடயங்களில் அதிக கவனம் செலுத்தவேண்டியிருக்கிறது. ஒரு விடயத்துடன் இணைப்பை ஏற்படுத்தினால் மகிழ்ச்சி தானே கிடைக்கும் என்பது திண்ணம். அதே போல சுய மதிப்பை எப்போதும் உயர்த்திக்கொள்ள வேண்டும். அதாவது தன்னை, தனது நேர் மறை இயல்புகளைக் கணித்து தன்னைத் தானாக ஏற்றுக்கொள்ளும் ஆற்றலை ஒவ்வொருவரும் வளர்த்துக்கொள்ள வேண்டும். 

மாற்றங்களை எதிர்கொள்வது மட்டுமல்லாமல் அவற்றை ஏற்றுக்கொள்ளவும் பழக வேண்டும். இன்றும் நாம் கொண்டிருக்கும் இந்த நீடித்த துயருக்கு மாற்றங்களை அன்று ஏற்றுக்கொள்ளாமல் இருந்தமையும் ஒரு காரணம் என்று சொல்வதில் தவறேதும் இல்லை.
பரிவு, இரக்கம் போன்ற நற்குணங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். நாம் அணுகும் விடயங்களை பரிவுடன் அணுகும் போது மகிழ்ச்சி தானே வந்து சேரும். 

பெறுமானங்களைச் சேர்த்துக்கொள்ள நாம் பழக வேண்டும். இந்த பெறுமானங்களை பொருள், பதவி, உறவு, ஆன்மீகம் என்ற நால்வகை  அடிப்படைகளில் உருவாக்க முடியும்.  நவீன உலகிலே நாம் பொருளுக்கும் பதவிக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தை உறவுக்கும் ஆன்மீகத்துக்கும் கொடுப்பதில்லை. 

சில தசாப்தங்களுக்கு முன்னர் எம் பாட்டன் பக்தி மிஞ்சி மெய்யுருகி கடவுளை வழிபட்ட போது கிடைத்த உணர்வை,  எட்டிப்பார்த்து ஒற்றை விரலால் திருநீறு பூசி விரையும் இன்றைய வாரிசு உணர வாய்ப்பில்லை.
எப்போது பொருளுக்கும் பதவிக்கும் நாம் கொடுக்கும் முக்கியத்துவத்தைக் குறைத்து உறவுக்கும் ஆன்மீகத்துக்கும் அதிகமாகக் கொடுக்க முயல்கிறோமோ அப்போது நீடித்த மகிழ்ச்சி எம் வீட்டு வாசலை எட்டிப் பார்க்கும். 

குறிப்பாக சிறுவர்களைப் பராமரிப்பவர்கள் என்ற ரீதியில் ஒவ்வொருவரும் நீடித்த மகிழ்ச்சியைப் பெற்றுக்கொள்வது மிக மிக அவசியமாகிறது. 

சிறுவர்களானவர்கள் பெரியவர்களிடமிருந்து குறிப்பாகச் சில விடயங்களிலே வேறுபட்டுக்காணப்படுகிறார்கள். அவற்றுள் மிகப் பிரதானமானவை தங்கியிருத்தலும் வார்த்தைப்படுத்தலும் என்றால் மிகையாகாது. வளர்ந்தவர்கள் நாம் ஒரு விடயத்தை வாய்மொழி மூலம் விளங்கப்படுத்துவது போல் சிறுவர்களால் செய்ய முடிவதில்லை. ஆதலால் அவர்களுடனான தொடர்பாடலில் உடல்மொழியின் வகிபாகம் மிக அதிகம் எனலாம். 

குழந்தையொன்று தான் பிறந்த்திலிருந்து 6 மாதங்கள் வரைக்கும் காண்பவர்களை எல்லாம் பார்த்து சிரிப்பதை நாம் அவதானித்திருப்போம். 6-7 மாதங்களைக்கடக்கும் போது தான் அதற்கு தன் தாய் மிக முக்கியமான ஒருவர் என்ற புரிதல் ஏற்படத் தொடங்குகிறது. 15 மாதங்கள் கடந்தவுடன் தாயைப் பிரிந்தால் அது நிரந்தர பிரிவு என முடிவு செய்து விடுகிறது. ஆதலால் தான் அப்பருவத்தில் தாயை தற்காலிகமாகப் பிரிய நேரிட்டாலும் கூட அதை ஏற்க முடியாமல் குழந்தை வீரிட்டு அழும்.
3-4 வயதாகும் போது அக்குழந்தை பாதுகாப்பான பிணைப்பை உருவாக்க முயல்கிறது. சாதாரணமாக தாயும் தந்தையும் சண்டைபிடித்தால் அதை பாதுகாப்பற்ற தன்மையாக குழந்தை உணர்கிறது. இந் நிலைமை குழந்தையின் உள ஆரோக்கியத்திலே பாதிப்பை ஏற்படுத்தும் என்பது தெளிவு.

3-4 வயதாகும் குழந்தை தாயின் தற்காலிக பிரிவை உணரத்தொடங்கும்.  குழந்தையின் 5 வயது வரை தேர்ச்சி, வளர்ச்சி, விருத்தி, மகிழ்ச்சி என்ற நான்கு பரிமாணங்களிலே மூளையின் விருத்தி நடைபெறும். ஆனால் அதன் விருத்தி அத்தோடு நின்றுவிடாது. முன் மூளையின் விருத்தி 24 வயதிலே பூரணப்படுவதாக அண்மைய நரம்பியல் விஞ்ஞான ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த முன்மூளையின் விருத்தி தான் புத்தாக்க செயற்பாடுகளுக்கும் தலைமைத்துவம், முடிவெடுக்கும் ஆற்றல் போன்ற பண்புகளுக்கும் காரணமாக அமைகிறது.

மூளையின் பிரதான விருத்தி நடைபெறும் காலப்பகுதியிலே அதனை மேலும் தூண்ட வேண்டிய கடப்பாடு குறிப்பாக பெற்றோருக்கு இருக்கிறது.பலதரப்பட்ட விளையாட்டுகள் மூலமே அவ்விருத்தியைத் தூண்ட முடியும். தலாட்டுப்பாடல் தொட்டு எண்ணெய்/சூரியக் குளியல் வரை எம்மவர் மத்தியில் வழங்கி வந்த நடைமுறைகள் குழந்தையின் ஐம்புலன்களை தூண்டுவதாக அமைந்திருந்தன. ஆனால் நவீனம் ஆக்கிரமித்துவிட்ட இன்றைய காலகட்டத்தில் தொலைக்காட்சிப் பெட்டியே தஞ்சமென வாழும் பெற்றோர் தம் வழியிலே குழந்தையையும் பழக்கப்படுத்தி விடுகிறார்கள். இது காலப்போக்கில் குழந்தைகளுடைய திறன் விருத்தியைக் கருத்தில் கொள்ளும் போது பின்னடவைத் தோற்றுவிக்குமோ என்ற அச்சம் அறிவியலாளர்கள் மத்தியிலும் எழாமலுமில்லை.

குழந்தையானது தன் ஒரு வயதின் பின்னரே நிறங்களை வேறுபிரித்து அறிகிறது. ஆனாலும் அசைவுகளை அவதானித்தபடியே இருக்கிறது. சிறு குழந்தைகள் கேலிச்சித்திர ஒளிப்படங்களை விரும்பிப் பார்ப்பதற்கும் அதுவே காரணம். அதுவே சுலபமாகி விட, பெற்றோர் தம் பிள்ளையை கேலிச்சித்திரத்துக்கு அடிமையாக்கி அதன் திறன் விருத்திக்கு தாமே எதிரியாகிவிடுகிறார்கள்.

குடும்பச்சூழலிலே வாழும் குழந்தைகள் தாம் வளரும் புறச்சூழலிலிருந்தும்  தம் பெற்றோரிடமிருந்தும் காலத்துடன் நிறைய விடயங்களைக் கற்றுக்கொள்கிறது. அதன் மூலம் தான் வாழ்வில் சந்திக்கப்போகும் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் வழிகளையும் கண்டுகொள்கிறது. ஆனால் இல்லங்களிலே வளரும் சிறார்களுக்கு அத்தகையதொரு சந்தர்ப்பம் வாய்ப்பதில்லை என்றே கூறமுடிகிறது. மிக இறுக்கமான சூழலிலே வாழப் பழகிக்கொண்ட அச்சிறார்கள் வெளிச் சூழலை எதிர்கொள்வதில் பல சிரமங்களை எதிர்கொள்கிறார்கள் என்பது கண்கூடு.

பிள்ளையைத் தந்தை அடித்தால் அது அழுகிறது. அந்த அழுகையானது தந்தை அடித்ததால் ஏற்பட்ட வலியின் விளைவு என்பதற்குமப்பால் தான் தந்தையால் புறக்கணிக்கப்பட்டுவிட்டேன் என்ற எண்ணத்தால் கிடைத்த ஏக்கத்தால் வந்தது எனலாம். இல்லக்குழந்தைகள் மத்தியிலும் இந்நிலை காணப்படுகிறது. குடும்பச் சூழலில் வளரும் குழந்தைகளைக் காட்டிலும் இல்லக் குழந்தைகள் அதீத பரிவுடன் கவனிக்கப் படவேண்டியவர்கள்.
சிறுவர்களை அணுகும் போது பச்சாதாபத்துடன் அணுக வேண்டும். அவர்களது மன உணர்வுகளை நாமும் புரிந்தவர்களாய் கனிவுடன் வழி நடத்தினால் மட்டுமே சிறந்த எதிர்காலத்தை நோக்கி அவர்களைப் பயணிக்கச் செய்ய முடியும்.

இத்துணை சிக்கலான விடயங்களையும் நகைச்சுவையாய் பகிர்ந்த அன்றைய பயிற்சிப் பட்டறை சலிப்படைந்து போன உள்ளங்களை நம்பிக்கையூட்டி துடிப்புடன் மீள வைத்தது என்றால் மிகையாகாது.