Showing posts with label வன்னி மண். Show all posts
Showing posts with label வன்னி மண். Show all posts

Sunday, June 7, 2020

இது விதிவிலக்குகளின் கதை - 01 : யார்க்கெடுத்துரைப்போம்?




அது 2001 ஆம் ஆண்டு. க. பொ.த.சாதாரண தரப் பரீட்சைமுடிவுகள் வெளி வந்து நாமெல்லாம் உயர்தரப்பிரிவில் அடியெடுத்து வைத்த காலம். தலை நகரில் உள்ள பெண்களுக்கான ஒரேயொரு தமிழ் மொழி மூல, பகுதி அரச பாடசாலை அது. பாடசாலையின் தவணைக்கட்டணம் அப்போது 1000.00 ரூபாவாகியிருந்தது. அதைவிட மேலதிகமாக வெவ்வேறுகட்டணங்களும் இருக்கும். 1996 இடப்பெயர்வும் நாம் இழந்தவையும் எம்மை எப்போதும் ஒரு அழுத்தத்துக்குள்ளேயே வைத்திருந்தன. அம்மா அரச உத்தியோகம் பார்த்தாலும், பாடசாலைக்கட்டணம் கூட சில வேளைகளில் பெரும் சவாலாகத் தான் இருந்திருக்கிறது. 

முதல் வாரத்திலேயே தனியொருவரைத் தலைமையாகக் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகள் என எம்மில் சிலரை வகுப்பாசிரியரே அடையாளப்படுத்தியிருந்தார். தனியாக வந்து சந்திக்கச் சொன்னார். விபரங்களைக் கேட்டறிந்தார். முதலாம் தவணையிலிருந்து இறுதித் தவணை வரை நாம் பாடசாலையில் எதுவித கட்டணங்களும் செலுத்தவில்லை. எல்லாக் கட்டணத் தொகையும் கழிக்கப்பட்டு ஒவ்வொரு தவணையும் மீதமாக அறு நூற்றுச் சொச்சம் எமக்கு கைகளில் கிடைக்கும். பழைய மாணவிகள் சங்கத்தின் புலமைப்பரிசிலின் பயனாளிகள் நாங்கள்.  அதை வழங்குவதற்காக எமக்கு பழைய மாணவிகள் சங்கம் எந்தவொரு  நிபந்தனைகளையும் விதித்திருக்கவில்லை. " நல்லாய்ப் படிக்க வேணும்!". ஆசிரியர் சொன்னது அது மட்டும் தான். அதுவும் அந்த ஒரு தடவை மட்டும் தான்.  கடைசித் தவணைகளிலெல்லாம் என் புள்ளிகள்  50 ஐத் தாண்டியதில்லை. ஆனால் , வகுப்பாசிரியர் கடிந்தது கூட இல்லை. 


இன்றும் எனது உயர்தரக் கல்விக் காலத்தை மீட்டுப்பார்க்கிறேன். நாங்களெல்லாம் சராசரி மாணவர்கள் தான். எதற்காக எங்களைத் தேர்வு செய்து அந்தப் புலமைப் பரிசிலை வழங்கவேண்டும்?. வகுப்பில் முதலாவதாக வரும் மாணவியொருவருக்கு வழங்கியிருந்தால் சில நேரங்களில் அவரை மாவட்டத்தில் முதலிடத்தைப் பிடித்திருக்கச் செய்திருக்கலாம் தானே? அங்கு அந்த புலமைப்பரிசிலின் நோக்கம் கல்விக்கான அணுகல் தொடர்பில் எல்லாருக்கும் சம வாய்ப்பினை வழங்க வேண்டும்; வகுப்பில் காணப்படும் ஏற்றத் தாழ்விடைவெளி குறைய வேண்டுமென்பதாகத் தான் இருந்ததே தவிர ஏற்கெனவே அணுகல் காணப்படுபவர்களுக்கு மேலும் சிறப்பான அணுகலை உருவாக்க வேண்டும் என்பதாக இருக்கவில்லை. ஒருவேளை, பழைய மாணவிகள் சங்கம் அப்படி நினைத்திருந்தால், இன்று நாம் வகிக்கும் இடங்களைச் சில வேளைகளில் எம்மால் அடைய முடியாமல் கூடப் போயிருக்கலாம். 

அந்த நிலை மாறி, இன்று நாமெல்லாம், சமூகம் சார்ந்த தீர்மானங்களை மேற்கொள்ளும்  நிலைகளை எட்டியிருக்கிறோம். எமக்கு முந்திய சந்ததியினர் தீர்மானங்களை எடுப்பதற்காய்த் துணை புரிகிறோம். ஆனாலும் கூட, 'கல்வியில் சமத்துவம் தேவை' என்பதை எம்மால் அங்கீகரிக்க க் கூட முடியவில்லை.  மின் கல்வி என்கிறோம். 63% அணுகல் இருக்கிறது என்கிறோம். மீதி  37% க்கும் தொலைக்காட்சி, வானொலி மூல அணுகல் இருக்கிறது என் கிறோம். முக நூலில் தரவேற்றினால் 95% அணுகல் கிடைக்கும் என்கிறோம். அந்த 95% அணுகலுக்குரியவர்கள் யார் என்பது பற்றிய தரவுகள் எம்மிடம் இல்லை. வறுமையே இல்லை என்கிறோம். மின் கல்விக்கான அணுகலை வறுமை தடுக்கவில்லை என்கிறோம். பிரச்சினை எல்லாம் இணைய இணைப்பின் செறிவிலும் புலப்பரப்பிலுமே இருக்கிறது என்கிறோம். பாடசாலை ஆரம்பித்ததும் மின் கற்பித்தல் மூலம் நடைபெற்றவை அனைத்தும் மீளக் கற்பிக்கப் படும் என்கிறோம். கோவிட் 19 போன பின், மின் கல்வியும் ஆறிய கஞ்சியாகி விடும் என்கிறோம். எம்மை நினைக்கும் போது வருத்தமாகத் தான் இருக்கிறது. இலக்கேயில்லாமல் பயணிக்கிறோமா என்றும் சில வேளைகளில் எண்ணத் தோன்றுகிறது.  பெற்றோரை இழந்த பிள்ளைகளை எல்லாம் விதிவிலக்குகள் என எப்படி எம்மால் இலகுவாகக் கூறிவிட முடிகிறது? அவர்களை மற்றவருக்குச் சமமாக நடாத்த வேண்டியது சமூகம் சார்ந்து எமக்கிருக்கும் பொறுப்பு என ஏன் எம்மால் எண்ணக்கூட முடியவில்லை?

வைத்தியசாலையில், நோயாளியைப் பரிகரிக்கும் போது பாரபட்சம் நடந்தால் கொதித்தெழுகிறோம். 67% நோயாளிகளைப் பரிகரித்து விட்டு மீதமானோரைப் பரிகரிக்க முடியாது என்று கூறினால், அமைதியாய்ச் சென்று விடுவோமா என்ன? கேட்டால் , அது மனித உயிர் சார்ந்தது. சமத்துவம் தேவை  என்று விளக்கமும் வைப்போம்.  ஆனால், கல்வியில் சமத்துவம் என்பது ஒரு சந்ததியின் இருப்பையே தீர்மானிக்கும் என்பதை எம்மால் உணரக் கூட முடிவதில்லை என்பது வருத்தமளிக்கிறது. 

ஆட்சி (GOVERNANCE) சார்ந்து பயணிக்க வேண்டியவர்களுள்  நானும் ஒருத்தி என்ற வகையில், நிலைத்து நிற்கும் அபிவிருத்தி இலக்குகளும் அவற்றை அடைவதற்காக எம்முன் குவிந்திருக்கும் கடப்பாடுகளும் அடிக்கடி மனக்கண்ணில் வந்து செல்கின்றன.  சமத்துவமும் (EQUITY) ஒருவரையும் பின்னிற்க விடக்கூடாது (LEAVING NO ONE BEHIND) என்ற அடிப்படையும் மனவெளியில் அடிக்கடி எட்டிப்பார்க்கின்றன. 37 சதவீதத்துக்கு தொலைக்காட்சி வழிக் கல்விக்கான அணுகல் காணப்படுமாயின் மின் கல்வி க் கான அணுகல் காணப்படும் 67% க்கும் அதே தொலைக்காட்சி வழிக் கல்விக்கான அணுகல் காணப்படத்தானே வேண்டும். அப்படியாயின், ஏன் நாம் தொலைக்காட்சி வழிக் கல்வியில் மட்டும் கவனம்
செலுத்த எண்ணவில்லை? 67 சதவீதமானோர் மின் வழியில் கற்றாலே போதும் என எண்ணுவது எந்த வகையில் நியாயமாக இருக்கும்? இப்படி என்னுள்ளே எழும் பல கேள்விகள் விடை காண முடியாமல் தவிக்கின்றன. 

கோவிட் 19 இன் பெயரால் கல்விக்கான அணுகல் தடுக்கப்பட்டமை ஒரு சில மாதங்கள் மட்டுமே. இந்தக் காலத்தை ஏன் நாம் மாணவர்களின் புத்தாக்கத் திறனை ஊக்குவிக்கப் பயன்படுத்தக் கூடாது. சூழலை அவதானிப்பதற்காக இயற்கை தன் ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் வழங்கிய காலமாக ஏன் பார்க்க க் கூடாது? ஆசிரியர்கள் இணைந்து ஓரிரு பாடங்களை இணைத்து ஏன் மாணவர்களுக்கு செயற்பாடுகளை வழங்க க் கூடாது? தமக்குக் கிடைக்க க் கூடிய வளங்களைக் கொண்டு மாணவர்கள் ஒவ்வொருவரும் தம் ஆக்கங்களை உருவாக்கக் கிடைத்த அரிய சந்தர்ப்பங்களாக இதை ஏன் பாவித்திருக்க க் கூடாது?  அப்படிச் செய்திருந்தால், மாணவர்களிடம் காணப்படும் எத்தனை விசேட திறமைகள் வெளிப்பட்டிருக்கும். அவர்களது ஆக்கங்களை எல்லாம் நிலமை சுமுகமான பின்னர் காட்சிப் படுத்தியிருந்தால்...புத்தகமாக வெளியிட்டிருந்தால்... எத்தனை ஏற்றத்தாழ்வுகள் நீக்கப்பட்டிருக்கும்? அறிவுப்பகிர்வுகளுக்காக எவ்வளவு சந்தர்ப்பங்கள் கிடைத்திருக்கும்?

உலகின் தொழில் நுட்பங்களும் கண்டுபிடிப்புகளும் இயற்கையை அவதானித்தமையால் உருவானவையே தவிர, வெறும் ஏட்டுக்கல்வியால் உருவானவையல்ல. ஏட்டுச் சுரைக்காய் பல வேளைகளில் கறிக்கு உதவுவதில்லை. பல சந்தர்ப்பங்களில் நாம் பரீட்சைகளில் பெற்ற புள்ளிகளை எவரும் நோக்குவதில்லை. சித்தியெய்தப்பட்டிருக்கிறதா இல்லையா என்பதை மட்டுமே பரீட்சித்திருக்கிறார்கள். இதை நானும் அனுபவத்தில் கண்டிருக்கிறேன். ஆனால், புறக்கிருத்திய நடவடிக்கைகளால் கிடைக்கும் திறன்களும் அனுபவங்களும்  தான் எக்காலத்திலும் எச்சந்தர்ப்பத்தையும் எதிர்கொள்ளத் துணை நிற்கும் என்பதை நாம் பல வேளைகளில் மறந்து விடுகிறோம். மாணவர்கள் மீது ஏட்டுக்கல்வியை மேலும் மேலும் திணித்து, கோவிட் 19 இன் பின்னரான காலப்பகுதியில் ஏற்றத் தாழ்வுகளை அதிகரிக்காமல்,  கோவிட் 19 இன் பின்னரான காலத்தை எதிர்கொள்ள அவர்களை நாம்  தயார்படுத்த வேண்டும். 

தரம் 5 புலமைப்பரிசில், கட்டாயமானதல்ல என அரசே அறிவித்த பின்னரும் கூட,  பத்தே வயதான மாணவர்கள் பெரும் அழுத்தங்களின் மத்தியில் மின் வழிக் கல்வியில் இணைந்திருக்கிறார்கள். உண்மையிலேயே புலமைப்பரிசில் தேவைப்படுபவர்களுக்கு அந்த மின்வழிக்கல்விக்கான அணுகல் இருக்கிறதா என ஆராய்ந்தால் எம் எவரிடமும் தரவுகள் இல்லை. பல இடைவெளிகளை வெறும் இலக்கங்களால் நிரப்பிவிடத்தான் நாம் துடிக்கிறோம். பொது வெளியில் விமர்சனங்களையும் மாற்றுக் கருத்துகளையும் ஏற்பதற்கு நாம் இன்னும் தயாராகவில்லை. தரவுகள் சார்ந்து விஞ்ஞான பூர்வமான முடிவுகளை எடுப்பதற்கான வல்லமை இன்னும் எம்மிடம் உருவாகவில்லை. அதற்கான தரவுகளும் எம்மிடத்திலில்லை.  அன்றிலிருந்து இன்றுவரை மொத்த ஆசிரியர் தொகையை மொத்த மாணவர் தொகையால் பிரித்தே விளக்கம் சொல்லிப் பழகிவிட்டோம். ஆதலினால் எமக்கு ஏற்றத்தாழ்வுகளை உணர முடிவதில்லையோ என்னவோ?

A9  வீதியால் பயணித்தபடி, "வன்னி எப்படி அபிவிருத்தியடைந்து விட்டது தெரியுமோ?" என தொலைபேசியில் விளக்கம் சொல்பவர்கள் தான் நாங்கள். 
அவ்வீதியிலிருந்து சில மீற்றர்கள் உள்ளே சென்றாலே எமக்கு உண்மை நிலவரம் புரிந்துவிடும். ஆனால், பொதுவாக நாம் அப்படிச் செய்வதில்லை. அகன்று விரிந்த வன்னியின் நிலப்பரப்பின் அந்தங்களிலுள்ள பாடசாலைகளும் மீளக் குடியமர்ந்த, மீள்குடியேற்றப்பட்ட குடும்பங்களின் வாழ்வியலும் எமக்கு எப்போதும் புரிவதில்லை என்பதால் பிராந்தியம் சார்ந்த எமது நிர்வாக முடிவுகளில் அவை தாக்கம் செலுத்துவதில்லை.  எங்கள் முடிவுகள் எப்படி மெறுபேற்றை நோக்கிச் செல்லும்? எங்களாலேயே இந்த ஏற்றத்தாழ்வுகளை அங்கீகரிக்க முடியாவிட்டால், யார் தான் அங்கீகரிக்கப் போகிறார்கள்? யாரிடம் நோவோம்? யார்க்கெடுத்துரைப்போம்?


மீண்டும் மீண்டும் என் நினைவுகளை மீட்கிறேன். சைவ மங்கையர் வித்தியாலயமும் அதன் தூர நோக்கும் எட்ட முடியா உயரத்தில் நின்று புன்னகைக்கின்றன. 

Thursday, August 26, 2010

பச்சைக்கம்பளத்தை மீண்டும் போர்த்துகிறது கிளிநொச்சி மண்!



சிறுவயதிலே பார்த்த பண்டாரவன்னியன் நாடகத்திலே வந்த ‘வந்தாரை வாழ வைக்கும் வன்னித் திருநாடு’ என்ற வரி, யதார்ததமானதே எனக் காலம் பல தடவைகள் யோசிக்க வைத்திருக்கிறது.

யார் தன்னடிக்கு வந்தாலும் அவர்களை வேற்றுமை பாராட்டாது அவர்களுக்கு வாழ்வாதாரம் வழங்கும் அற்புதமான மண் வன்னி மண். அந்த வன்னிப் பெருநிலப் பரப்பின் நெற்களஞ்சியம் எனப் போற்றப்படும் மாவட்டம் கிளிநொச்சியாகும்.

இலங்கையின் முதற் பத்து பெரிய நீர்ப்பாசனக் குளங்களுள் ஒன்றான இரணைமடுக்குளத்தாலும் அக்கராயன் குளம் போன்ற இன்னோரன்ன குளங்களால் நீர் வளத்தையும், இயற்கையாகவே அமைந்துவிட்ட மண்வளத்தையும் கொண்ட விவசாயப் பிரதேசம் கிளிநொச்சி.

உலர் வலயத்தில் அமைந்த பிரதேசமாயினும், மரங்களும் வயல் வெளிகளும் நீர் நிலைகளும் நிறைந்துள்ளமையாலோ என்னவோ, அங்கு வறட்சியின் கொடுமை தெரிவது மிக மிக அரிதாகும்.

கிளிநொச்சியையே சந்ததி சந்ததியாக, பூர்வீகமான வாழ்விடமாக கொண்டவர்கள் மிகச் சிலரே. 1958களின் பின்னர் அமைக்கப்பட்ட குடியேற்றங்களும் காலத்துக்குக் காலம் உருவான சில காரணங்களுமே, கிளிநொச்சியின் சனத்தொகையை அதிகரித்தன.

அங்குள்ள பெரும்பாலான மக்களின் வாழ்வாதாரத் தொழிலாக விவசாயம் மாறியது. பல நீர்ப்பாசன மற்றும் விவசாய அபிவிருத்தித் திட்டங்கள் கிளிநொச்சியை ஒரு விவசாயப் பிரதேசமாகவே மாற்றி, இயற்கை அன்னை அருளிய வளங்களின் உச்சப் பயனைப் பெற்றுக் கொண்டன.

குடியேறிய மக்கள் அங்கேயே நிலைத்திருப்பதற்கு கிளிநொச்சியின் வளங்கள் காரணமாய் அமைந்திருந்ததைக் காலம் உணர்த்தி நிற்கிறது.

வந்தாரை வாழ வைக்கும் வன்னித் திருநாடு என்ற சொற்றொடர் உணர்ந்தி நிற்கும் யதார்த்தமும் அதுவேயாகும்.

பச்சைப் பசேலென்ற வயல் வெளிகளையும் எப்பொழுதும் சலசலத்துக் கொண்டிருக்கும் வாய்க்கால்களையும் சிறிதும் பெரிதுமாய் நிறைந்து காணப்படும் குளங்களையும் அடர்ந்த நிழல் தரு மரங்களையும் கொண்ட அழகிய சூழலுக்குப் பழக்கப்பட்டவர்களால் எப்படி அவற்றையெல்லாம் விட்டு வரமுடியும்?

ஒரு கொடூர யுத்தம் முடிவுக்கு வந்து விட்ட இன்றைய கால கட்டத்திலேயே கிளிநொச்சிப் பிரதேசத்திற்குரிய மீள்குடியேற்ற நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுப் பல மாதங்களாகிவிட்டன. ஒரு பேரழிவிலிருந்து மீண்ட மக்கள், முற்றிலும் புதியதாக வாழ்க்கையை ஆரம்பித்திருக்கிறார்கள். விதைக்க விவசாயிகளின்றி, விளையாமல் கிடந்த வயல் நிலங்களுள் பல விதைக்கப்பட்டு இன்று அறுவடையும் கண்டு விட்டன.


கண்ணுக்கெட்டிய தூரம் வரை மஞ்சளாய் தெரியும் நெற்கதிர்களைத் தாங்கியபடி அறுவடைக்குத் தயாராகியிருந்த வயல்வெளிகளையும், வயல்வேலைகளில் மும்முரமாய் ஈடுபட்டிருந்த விவசாயிகளையும் காணும் போது எரிந்த சாம்பலில் இருந்து மீண்டும் உயிர்ப்பதாய் உருவகிக்கப்படும் பீனிக்ஸ் பறவை மட்டுமே நினைவுக்கு வந்தது.

கிளிநொச்சியின் நெற்பயிர்ச் செய்கை தொடர்பான விடயங்களை, திட்டமிடலுக்கான நிறைவேற்று அதிகாரி மோகனபவன் அவர்கள் எம்முடன் பகிர்ந்து கொண்டார்.

இம்முறை கிளிநொச்சியிலே சிறுபோகப் பயிராகவும் பருவம் பிந்திய பயிராகவும் நெல் விதைக்கப்பட்டது. ஏறத்தாழ 6000க்கும் அதிகமான ஏக்கர் நிலப்பரப்பிலே நெற்பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்பட்டது.

சிறுபோகத்தின் போது, சில குறிப்பிட்ட பிரதேசங்களில் மட்டுமே நெற்செய்கை மேற்கொள்ளப்பட தீர்மானிக்கப்பட்டதால் மீளக்குடியமர்ந்த விவசாயிகளின் மத்தியில் குடும்பம் ஒன்றுக்கு 2 ஏக்கர் நிலப்பகுதிகளாக வயற் காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.

4000 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலப்பகுதிக்கு இரணைமடுக் குளத்திலிருந்து நீர் பெறப்பட்டுள்ளது. அது தவிர வன்னெரிக்குளம், அக்கராயன் குளம், கரியாலை நாகபடுவான் குளம் ஆகியவற்றிலிருந்து மிகுதி விளை நிலங்களுக்கும் நீர் பெறப்பட்டது.

யாவற்றையும் இழந்து தற்போது மீளக்குடியேறியுள்ள விவசாயிகளுக்கு உதவும் வகையிலே, கமநலசேவைகள் திணைக்களத்தினால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் 2 ஏக்கர் நிலம் உழுது கொடுக்கப்பட்டது.



கமநல சேவைகள் திணைக்களத்திடம் இருப்பிலிருக்கும் உழவு இயந்திரங்களின் பற்றாக்குறை காரணமாக, அவ்வாறு விளைநிலத்தை உழுது கொடுக்க முடியாத பட்சத்தில் ஒரு ஏக்கருக்கான உழவுக் கூலியாக ரூபா 4000/- வழங்கப்பட்டது. இது தவிர, 2 ஏக்கர் விளைநிலத்துக்குத் தேவையான விதை நெல்லும், மானிய விலையில் உரமும் வழங்கப்பட்டன.

இவற்றுடன் ஜப்பான், இந்தியா போன்ற நாடுகளின் உதவியுடனும் விவசாய அமைச்சின் உதவியுடனும் மானிய விலையில் சிறிய ரக உழவு இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

சிறுபோகத்துக்கே உரித்தான விளைச்சலும் கிடைக்கப் பெற்றுள்ளது. சில பகுதிகளைத் தவிர ஏனைய பகுதிகளில் எதிர்பார்த்த விளைச்சல் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அறுவடைக் காலத்திலே விவசாயிகள் எதிர்நோக்கிய பிரச்சினைகளில் ஒன்று மனிதவளப் பற்றாக் குறையாகும். நெற்பயிரைப் பொறுத்தவரையிலே, அரிவிவெட்டு, குறித்த காலப் பகுதியில் நடந்து முடிய வேண்டும். ஆனால் அதற்கான வேலையாட்களைத் தேடிப்பிடிப்பது பெருஞ்சிரமமாக இருந்தது.

இந்தப் பிரச்சினைகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலேயே அறுவடை இயந்திரம் ஒன்று பரவலாகப் பாவனைக்கு வந்துள்ளது. அது வன்னி மக்களுக்கு ஏலவே பரிச்சயமானது தான்.

மிக இலாவகமாக அரிவி வெட்டி நெல்லைப் பிரித்தெடுத்து தூற்றித்தரும் அந்த இயந்திரம் ஒரு இந்தியத் தயாரிப்பாகும். 1/4 ஏக்கர் விளை நிலத்தின் அறுவடையை 10 - 15 நிமிடத்தில் பெற்றுத் தரும் இவ்வியந்திரம் கடந்த சிறு போகத்திலே கிளிநொச்சி பிரதேசத்தில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டதைக் காண முடிந்தது.

இவ்வியந்திரத்தின் பயன்பாட்டால் செலவையும் நேர விரயத்தையும் குறைக்க முடியுமென விவசாயிகள் கருத்துத் தெரிவித்திருந்தனர். ஆயினும் விளைநிலம் ஈரப்பற்றாக இருக்கும் பட்சத்தில் இவ்வியந்திரத்தைப் பயன்படுத்த முடியாததொரு நிலை காணப்படுவதாகக் கருத்துத் தெரிவிக்கப்படுகிறது.

ஏனெனில் இவ்வியந்திரம் பெரிய பார இயந்திரமாக இருப்பதால் அதன் சில்லுகள் சேற்றினுள் புதையத் தலைப்படுகின்றன. அத்தகைய சந்தர்ப்பங்களில் அரிவு வெட்டுக்கு மனித வளமே பயன்படுத்தப்படுகிறது.

ஏறத்தாழ 48 இலட்சம் ரூபா பெறுமதியான அவ்வியந்திரங்களைத் தனியார் கொள்வனவு செய்து, விவசாயிகளிடம் வாடகைக்கு விடுகின்றனர். ஏக்கர் ஒன்றிற்கான வாடகையாக ஏறத்தாழ ரூ. 5000 அறவிடப்படுகிறது.

கமநல சேவைகள் திணைக்களத்திடமோ அல்லது விவசாயத் திணைக்களத்திடமோ அத்தகைய அறுவடை இயந்திரங்கள் இருந்தால் விவசாயிகள் குறைந்த செலவில் அறுவடையை மேற்கொள்ள முடியுமென்பது பலரின் ஆதங்கமாக இருக்கிறது.

ஆயினும் இந்திய அரசிடமும் சில நிறுவனங்களிடமும் இந்த இயந்திரம் தொடர்பான உதவிகள் திணைக்களத்தினால் கோரப்பட்டிருப்பதாகத் தெரிய வருகிறது. அத்தகைய உதவிகள் கிடைத்தால் எதிர்வரும் காலப் போகத்தின் அறுவடைக்கு அவற்றைப் பயன்படுத்தும் சாத்தியக் கூறுகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு இயந்திரத்தினால் அறுவடை செய்யப்படும் நெல், காய விடப்பட்டு மூடைகளில் சேகரிக்கப்படுகிறது.

இம்முறை கிளிநொச்சிப் பிரதேசத்திலே அறுவடை செய்யப்பட்ட நெல்லானது, வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் நெல் சந்தைப்படுத்தும் சபையினால் கொள்வனவு செய்யப்படுகிறது.



ஒவ்வொரு குடும்பத்துக்கும் 2 ஏக்கர் நிலமே நெற் செய்கைக்காக வழங்கப்பட்டதால் அவர்களிடமிருந்து தலா 4000 கிலோ கிராம் நெல் அச்சபையினால் கொள்வனவு செய்யப்படுகிறது. இவை தவிர பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களாலும் நெல் கொள்வனவு செய்யப்படுகிறது. தத்தமது பிரதேசத்தில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை, அரசு வழங்கும் பணத்தைக் கொண்டு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் கொள்வனவு செய்கின்றன.

விவசாயிகளின் நலன் கருதி, தனியாரின் கொள்விலையுடனும் தற்போதைய விற்பனை விலையுடனும் ஒப்பிடுகையில் சற்று அதிகமான விலைக்கே கூட்டுறவுச் சங்கங்கள் நெல்லைக் கொள்வனவு செய்கின்றன. அவ்வாறு கொள்வனவு செய்த நெல்லை, கொழும்பிலோ வவுனியாவிலே விற்பதாயின், தற்போதைய சந்தை நிலவரத்தின் அடிப்படையில் அவை நட்டமடைய வேண்டிய நிலையே காணப்படுகிறது. ஆதலால் ஒன்றில் அவ்வாறு கொள்வனவு செய்த நெல்லை அவர்கள் சேமித்து வைக்க வேண்டும். இல்லையேல், நெல்லை அரிசியாக்கி விற்பனை செய்ய வேண்டும்.

யுத்தத்தின் கொடூரத்தால் தமது உடைமைகளை இழந்திருக்கும் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் களஞ்சிய வசதியின்மையாலும் அரிசி ஆலை வசதியின்மையாலும் பெருச்சிரமங்களை எதிர்நோக்கு கின்றன. தனியாருக்குச் சொந்தமான கட்டடங்கள் திருத்தப்பட்டு, பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களால் கொள்வனவு செய்யப்படும் நெல் மூடைகள் அங்கே சேமித்து வைக்கப்படுகின்றன.

இத்தகையதோர் நிலையில் விவசாயிகளிடம் மீதமாக இருக்கும் நெல் மூடைகளைப் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் கொள்வனவு செய்வதன் சாத்தியப்பாடுகள் கேள்விக்குறியாகவே இருக்கின்றன. ஆயினும் விவசாயிகளின் நலன் கருதியும், தமக்குக் கிடைக்கும் அரச உதவியைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்வதற்காகவும் தம்மால் இயன்றவரை அவை நெற்கொள்வனவை மேற்கொள்கின்றன.

எதிர்வரும் காலபோகத்துக்காக, இவ்வருடம் ஒக்டோபர் மாதத்திலே விளைநிலங்கள் விதைக்கப்படவிருக்கின்றன. கைவிடப்பட்ட விளை நிலங்களையும் விதைக்கும் திட்டங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. ஆகையால் ஏறத்தாழ 40,000 ஏக்கர் நிலத்திலே நெற் செய்கையை மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த சிறுபோகத்தைப் போலவே, எதிர்வரும் காலபோகத்துக்கும் விவசாயிகளுக்கு உரமானியம், விதைநெல், உழவு உதவிகள் வழங்கப்படவிருக்கின்றன. உழவு இயந்திரங்கள் மற்றும் அறுவடை இயந்திரங்களுக்குப் பற்றாக்குறை நிலவுவதால், அத்துறைகளில் தனியார் முதலீடுகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதாவது விவசாயத்துக்குத் தேவையான இயந்திரங்களை தனியாரிடம் குத்தகைக்குப் பெறக்கூடிய சூழலொன்று உருவாகலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. அதேபோல் உழைப்பை நோக்காகக் கொண்டு, வெளிமாவட்ட மக்கள் கிளிநொச்சியை நோக்கி நகரும் வாய்ப்புகளும் அதிகமாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


எந்த ஒரு உடைமையும் இல்லாமல், கிடைத்த சில உதவிகளுடன் மீளக்குடியமர்ந்து தமது பழைய வாழ்வைத் தொடங்க முயல்கின்றனர் கிளிநொச்சி விவசாயிகள். அவர்களுக்கு இவ்வாறு வழங்கப்படும் உதவிகள், அறுவடையின் பின்னர் தமது பழைய வாழ்வை மீட்பதற்கான ஒரு சிறு முதலீட்டை சேமிப்பாகத் தரும் என எதிர்பார்ப்பதில் தவறேதுமில்லை.

தற்போது என்றுமில்லாத அமைதியொன்று குடி புகுந்திருக்கும் கிளிநொச்சிப் பிரதேசத்தின் வயல் வெளிகளைத் தழுவி வரும் தென்றலின் காலடியில் மனம் தானே சரணடைந்துவிடும் என்பதும் கண்கூடு.

இந்த வயல் வெளிகளும் அடர்ந்த மரங்களும், சிதையாத குளங்களும் தான் கிளிநொச்சிப் பிரதேசத்தின் செழுமையை உலகுக்கு எடுத்துச் சொல்கின்றன. எனினும் நிலையான, நிறைவான அபிவிருத்திக்காக கிளிநொச்சிப் பிரதேசம் நெடுந்தூரம் பயணிக்க வேண்டியிருக்கின்றது என்பதை எவராலும் மறுக்க முடியாது. ஆனால் அபிவிருத்தித் திட்டங்கள் செம்மையாக நடைமுறைப்படுத்தப்படும்போது கிளிநொச்சியின் அழகும் செழுமையும் மேன்மேலும் மிளிரும் என்பதில் எதுவித ஐயமுமில்லை.