Friday, September 17, 2010

உதவி செய்யாவிடினும் உபத்திரவம் செய்யலாகாது!அரிது, அரிது மானிடராய் பிறத்தல் அரிது. அதனின் கூண், குருடு, செவிடு, நீங்கிப் பிறத்தல் அரிது என்கிறார் அவ்வையார்.
இத்தகைய அரிய குறைபாடுகளின்றிய மானிடப் பிறவியைப் பெற்று தமது அலட்சியப் போக்கினாலும் கவலையீனத்தாலும் அதனை இழக்கும், இழந்த பலரை நாம் கண்டிருப்போம். விபத்து என்ற ஒரு சொல்லினுள் மானிடப் பிறவியின் முடிவு அடங்கிவிடுவதை ஒரு போதும் ஜீரணிக்க முடியாது.
ஆனால் தினம் தினம் அதிகரித்துச் செல்லும் விபத்துக்களையும் அவற்றால் உருவாகும் உயிரிழப்புக்கள் மற்றும் அங்கவீனங்களின் எண்ணிக்கையையும் கருத்தில் கொள்ளும் போது நாம் எவ்வளவு தூரம் அலட்சியமாக, கவலையீனமாக இருக்கிறோம் என்பதும் புரியும்.
ஏனெனில் எந்த ஒரு விபத்துடனும் அவ்விரு இயல்புகளும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்புபட்டிருக்கின்றன.
செய்திப்பத்திரிகைகளிலே விபத்துக்கள் தொடர்பான செய்திகளுக்காக சில பக்கங்களைக் கூட ஒதுக்கிவிடலாம் என்றதான நிலையே இன்று காணப்படுகிறது. அங்குதான் முதலுதவியின் முக்கியத்துவமும் புலனாகிறது.
ஏனெனில், விபத்தினால் பாதிக்கப்பட்ட ஒருவர், வைத்திய அல்லது அவசர உதவி கிடைக்கத்தாமதமாகிய ஒரே காரணத்தால் உயிரிழந்து விடுகிறார். அல்லது அங்கவீனராகிறார். அவசர உதவி உடன் கிடைத்தாலே, உயிரிழக்கும், அங்கவீனராகும் சந்தர்ப்பங்களைத் தவிர்க்க முடியும்.

இலங்கையின் நகரப்பகுதிகளில் விபத்துக்குள்ளான ஒருவர், சிகிச்சைக்காக அரச வைத்தியசாலையைச் சென்றடைய குறைந்தது 20 - 30 நிமிடங்கள் ஆகின்றன. வைத்தியசாலை வாசலிலிருந்து விபத்துப் பிரிவுக்குச் சென்று வைத்திய உதவியைப் பெற்றுக்கொள்ள மேலும் 20 நிமிடங்கள் ஆகிவிடுகின்றன.
விபத்து நடந்து ஏறத்தாழ 50 நிமிடங்களின் பின்னரே வைத்திய உதவி கிடைக்கிறது. விபத்தினால் பாரதூரமான காயங்களுக்கும் இரத்தப் பெருக்குக்கும் உள்ளாகும் நபரொருவர், தன் மூளைக்குத் தேவையான குருதி கிடைக்காமல் உயிரிழக்கிறார். ஏனெனில் மூளைக் கலங்கள் குருதி கிடைக்காமல் 3 நிமிடங்கள் மட்டுமே உயிர்வாழும் தன்மையன.
விபத்து நடந்த இடத்திலேயே அவசர உதவியொன்று கிடைத்திருக்குமானால் இத்தகைய சந்தர்ப்பங்கள் தவிர்க்கப்படலாம் என்பதும் கண்டுகூடு.
முதலுதவியும் அவசர உதவிக்குள் அடங்கும். அடிப்படையில் முதலுதவி எனப்படுவது, திடீரென நோய் அல்லது விபத்து ஏற்பட்ட ஒருவருக்கு, வைத்தியரோ, பயிற்றப்பட்ட தாதியோ அல்லது அம்புலன்ஸ் வண்டியோ வரும்வரை அவ்விடத்தில் கிடைக்கக்கூடிய வசதிகளைக் கொண்டு அங்கீகரிக்கப்பட்ட முறைக்கேற்றவாறு பாதிக்கப்பட்டவரின் உயிரைக் காப்பாற்றுவதைக் குறிக்கும்.
இங்கே சில காரணிகளின் துணையுடன் முதலுதவி வரையறுக்கப்படுகிறது. ஏனெனில் இது ஒரு உயிருடன் தொடர்புடைய விடயமாகும். நல்ல நோக்குடன் செய்யப்படும் பிழையான முதலுதவி கூட உயிரைப் பறித்துவிடும் என்பதை நாம் ஒருபோதும் மறத்தலாகாது.
முதலுதவியோ அல்லது அவசர உதவியோ வழங்குவதன் அடிப்படை நோக்கங்கள், பாதிக்கப்பட்டவரின் உயிரைக்காப்பாற்றல், அவரது நிலைமை மேலும் சீர்கேடடையாமல் பாதுகாத்தல், அவர் விரைவில் குணம் பெற உதவிசெய்தல் என்பனவாகும்.

அன்றாடம் நடைபெறும் கோர விபத்துக்களையும் அவற்றினால் பாதிக்கப்படும் உயிர்களையும் கருத்தில் கொள்ளும் போது நாமும் முதலுதவியைக் கற்று பிறருக்கு உதவினால் என்ன என்ற எண்ணம் கூடத் தோன்றலாம். முதலுதவி செய்பவர் அங்கீகரிக்கப்பட்ட முறைக்கமைய நடத்தப்பட்ட பாடநெறியைப் பயின்று, அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தினால் நடத்தப்படும் எழுத்து மூல, செயன்முறைப் பரீட்சைகளில் சித்தியடைந்தவராக இருக்க வேண்டும். அது மட்டுமன்றி அங்கீகரிக்கப்பட்ட காலாவதியாகாத முதலுதவிச் சான்றிதழை உடையவராகவும் இருக்க வேண்டும்.

இது சாதாரண நபரொருவர் முதலுதவியாளனாக மாறுவதற்குரிய அடிப்படைத் தகுதிகளாகும். ஆனால் முதலுதவி அல்லது அவசர உதவியை மேற்கொள்ளுவதற்கு அதுமட்டும் போதுமானதல்ல. முதலுதவியாளன், இரக்கம், பூரண அமைதி, கடும் உழைப்பு, சாமர்த்தியம், அளவுக்கு மீறி முதலுதவி செய்யாமை போன்ற குணாம்சங்களையும் தன்னுள்ளே வளர்த்துக் கொள்ள வேண்டும்.

இலங்கையிலே, முதலுதவிப் பயிற்சி வழங்க அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களாக புனித ஜோன் அம்புலன்ஸ், செஞ்சிலுவைச் சங்கம் ஆகியன காணப்படுகின்றன.
ஆர்வமுள்ளவர்கள் தனிநபராகவோ அல்லது குழுவாகவோ அந்த நிறுவனங்களை அணுகி முதலுதவிப் பயிற்சியைப் பெற முடியும்.
விபத்திலே பாதிக்கப்பட்ட ஒருவரை முதலுதவி தெரிந்தால் மட்டுமே காப்பாற்ற முடியுமென்றில்லை.

நாம் விபத்தொன்று நடக்குமிடத்து காலங்காலமாகக் கையாண்டு வரும் தவறான நடைமுறைகளை இனியாவது தவிர்க்கமுயல வேண்டும். அவ்வாறு செய்தாலே பல உயிரிழப்புக்களையும் சேதங்களையும் குறைக்க முடியும்.
விபத்துக்குள்ளான ஒருவர் தொடர்பாக நாம் கருத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விடயங்கள் அவரது உணர்ச்சி நிலை, சுவாச வீதம், உள், வெளிக்காயங்கள் மற்றும் நாடித்துடிப்பு என்பனவாகும்.
இந்த விடயங்களின் அடிப்படைகளை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அத்துடன் அன்றாடம் நாம் சந்திக்கும் மயக்கம், குருதிப்பெருக்கு, வலிப்பு, மாரடைப்பு, பாம்புக்கடி, தீக்காயம் போன்ற சம்பவங்களின் போது எவ்வாறு செயற்பட வேண்டும்? எவ்வாறு செயற்படக்கூடாது? என்பதையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
தொலைக்காட்சி நாடகங்களிலும் திரைப்படங்களிலும் தவறாகக் காட்டப்படும் அவசர உதவி முறைமைகள் மக்கள் மத்தியில் கூடிய ஆதிக்கத்தைச் செலுத்துகின்றன.
வலிப்பு வந்தால் இரும்பைக் கொடுப்பதும் மயக்கம் வந்தால் தண்ணீர் தெளிப்பதும் பாம்பு கடித்தால் கடித்த இடத்தில் வாயை வைத்து உறிஞ்சுவதும் மாரடைப்பு வந்தால் இதயப் பகுதியில் பலமுறை அழுத்துவதும் கூட அத்தகைய ஆதிக்கத்தின் வெளிப்பாடுகளே!

முன்னொரு காலத்திலே அவை நடைமுறையில் இருந்திருக்கலாம். ஆனால் காலத்துடன் விஞ்ஞானமும் வளர்ச்சியடைந்து வரும் பொழுது அம்முறைகளின் பிரதி கூலங்கள் ஆராயப்பட்டு பிற்காலங்களிலே அவை தவிர்க்கப்பட்டிருக்கின்றன.
ஆனால் மாறாக நாமோ, கற்றறிந்தவர்கள் சொல்வதையும் கருத்தில் கொள்ளாது, பழைய முறைமைகளையே இன்னும் கையாண்டு வருகிறோம்.
ஒருவருக்கு மயக்கம் ஏற்படும் சந்தர்ப்பத்திலே, உடனேயே முகத்தில் தண்ணீர் தெளிக்கும் செயலைப் பலர் மேற்கொண்டு வருகின்றனர். அது பாதிக்கப்பட்டவரின் நிலைமையை மென்மேலும் சீர்கெடச் செய்யும் சந்தர்ப்பங்களையே உருவாக்கும்.

அடிப்படையில் மயக்கம் ஏற்படுவது, மூளைக்குச் செல்லும் குருதியின் அளவு குறைவடைவதனாலேயே ஆகும். அது மட்டுமன்றி வேறு பல காரணங்களாலும் கூட மயக்கம் ஏற்படலாம் என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். அத்தகையதோர் நிலையில் அவசர உதவியை வழங்குவதன் நோக்கம் மூளைக்குச் செல்லும் குருதியின் அளவை அதிகரிப்பதாக இருக்க வேண்டும். அத்துடன் பாதிக்கப்பட்டவர் செளகரியமாக இருக்க உதவுதல் வேண்டும்.

வலிப்பு ஏற்பட்ட ஒருவருக்கு உடனேயே கையில் இரும்புத்துண்டைக் கொடுக்கும் வழக்கம் இன்றும் காணப்படுகிறது. அவ்வாறு இரும்பையோ உலோகத்திறப்பையோ கொடுப்பதால் வலிப்பு குணம் பெறுவதில்லை. மாறாக அச்செயற்பாடு பாதிக்கப்பட்டவரின் உடலில் காயங்கள் ஏற்படவே வழிவகுக்கும்.
வலிப்பால் பாதிக்கப்பட்ட ஒருவரை சந்திக்க நேர்ந்தால் அவருக்கு காயங்கள் ஏற்படாவண்ணம் செயற்பட வேண்டியதே அவசர உதவியாகும். அருகிலிருக்கும் தளபாடங்களையோ அல்லது பாதிப்பை ஏற்படுத்தும் பொருட்களை அகற்ற வேண்டும். அத்துடன் அவரது தலை அடிபடாத வண்ணம் அவரை அணைத்து வைத்து வைத்திய உதவியை நாடுவதே சிறந்தது.
மாரடைப்பினால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு உடனடியாக வைத்திய உதவியைப் பெற்றுக்கொடுப்பதே அவசர உதவியாகும். திரைப்படங்களில் காட்டப்படுவது போல் மார்பழுத்தங்களைக் கொடுக்கக்கூடாது.
ஒருவர் இதயத்துடிப்பும் சுவாசமுமின்றி நினைவிழந்திருக்கிறார் என உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் மட்டுமே மார்பழுத்தமும் செயற்கைச் சுவாசமும் குறித்த விகிதத்தில் மாறி மாறி வழங்கப்படும். இத்தகைய அவசர உதவிகள் பயிற்றப்பட்ட ஒருவரால் மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்பதை நாம் எப்பொழுதும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

‘உதவி செய்யாவிடினும் உபத்திரவம் செய்யாதே’ என முதியவர்கள் சொல்லக் கேட்டிருப்போம். விபத்தொன்றின் போது வழங்கப்படும் அவசர உதவியைப் பொறுத்தவரையிலே இக்கூற்று மிகவும் பொருத்தமானதாகும்.

வெளிக்காயங்கள் காரணமாக சிறியளவிலோ அல்லது பெரியளவிலோ இரத்தப் பெருக்கு ஏற்படும் பொழுது காயத்தின் மேல் ஐஸ்கட்டியை வைக்கும் தவறான பழக்கமொன்றைக் கைக்கொள்கிறோம். மனித உடலானது தனக்குப் பாதிப்பொன்று ஏற்படுமிடத்து இயற்கையாகவே எதிர்ப்பைத் தோற்றுவிக்கும் வல்லமை மிக்கது.

வெளிக்காயமொன்று ஏற்படும் போது குருதிப்பெருக்கைத் தடுப்பதற்காக குருதிச்சிறுதட்டுக்கள் தொழிற்படத் தொடங்கும். பின்னர் இரசாயனப் பதார்த்தமொன்று சுரக்கப்பட்டு பைபிரினோஜன் என்ற வலை உருவாகும். இது குருதிக் கலங்களைச் சிறைப்படுத்திக் குருதிப்பெருக்கைக் குறைக்கும்.

உடல் தானே இவ்வாறு செயற்படும் சந்தர்ப்பத்தில், காயம் ஏற்பட்ட இடத்தில் நாம் ஐஸ்கட்டியை வைத்தால் அது பைபிரினோஜன் என்ற

இயற்கை வலையைச் சிதைத்து, குருதிப்பெருக்கை மேலும் அதிகரிக்கவே செய்யும்.
சுளுக்கு போன்ற இழையங்கள் தொடர்பான பாதிப்புகளும் ஊமைக்காயங்களும் ஏற்படும் பட்சத்தில் பாதிக்கப்பட்ட பகுதிக்கு ஐஸ்கட்டி வைத்து சுற்றப்பட்ட துணியால் ஒத்தடம் கொடுக்க வேண்டும். இங்கும் உடல் குருதிப் பெருக்கைத் தடுக்கும் வகையிலே செயற்படும். ஆனால் உடலின் உட்பகுதியில் குருதி உறைவதானது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும். ஆதலால் ஏலவே குறிப்பிட்டது போல ஒத்தடம் கொடுத்தலானது உள்ளகக் குருதி உறைதலைத் தடுக்கும்.
மாறாக நாம் கைக்கொள்ளும் நடைமுறையோ பாதிக்கப்பட்ட பகுதியை உரோஞ்சுதலாகும். இது தவிர்க்கப்பட வேண்டும்.
இன்னும் கிராமப்பகுதிகளிலே வெட்டுக்காயம் எற்பட்டால், கோப்பித்தூள் அல்லது மஞ்சள் தூள் வைத்துக் கட்டும் வழக்கம் காணப்படுகிறது. அவையெல்லாம் சரி, பிழை என்று வாதிடுவதற்கு அப்பால், இறுதியாக நவீன மருத்துவ உதவி நாடப்படுமாயின் அவற்றைத் தவிர்த்தல் நன்று என்றே கூறப்படுகிறது. ஏனெனில் அவ்வாறு செய்தால் வைத்தியசாலையில் காயத்தை துப்புரவு செய்ய மேலதிக நேரம் தேவைப்படுகிறது எனவும் கூறுகின்றனர். உயிரைக்காப்பாற்றல் என்ற செயலின் பின்னணியில் நேரம் இன்றியமையாத பங்கை வகிக்கிறது.
ஒருவரைப் பாம்பு கடித்துவிட்டால் உடனே கடிப்பட்ட இடத்தில் கத்தியால் கீறிட்டு வாய்வைத்து விஷத்தை உறிஞ்சும் பழக்கம் இன்றும் பரவலாகக் காணப்படுகிறது. அது ஒருபோதும் செய்யப்படக் கூடாதது என மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஏனெனில் உறிஞ்சுபவரின் வாய்க்குழிக்குள்ளோ அல்லது சமிபாட்டுத் தொகுதியிலோ புண் காணப்படலாம். அப்படி இருக்கும் பட்சத்தில் அந்தப்புண்ணினூடு விஷம் கடத்தப்பட்டு விஷத்தை உறிஞ்சிய வரது உடலிலும் நஞ்சு ஏறலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
தீக்காயம் ஒன்று ஏற்படும் சந்தர்ப்பத்திலே, காயத்தின் மேல் பற்பசையைத் தடவுவதும் வாழைத்தண்டுச் சாற்றை விடுவதும் கூட பலர் மத்தியில் இன்றும் வழக்கத்திலிருக்கிறது.
அவ்வாறு செய்வதன் அடிப்படை நோக்கம், காயம் ஏற்பட்ட இடத்தைக் குளிர்மைப்படுத்துவதேயாகும். ஆனால் அதற்காக பற்பசை போன்ற பதார்த்தங்களைப் பாவிக்கும் போது, அவற்றில் இருக்கும் இரசாயனப் பதார்த்தங்கள் பாரதூரமான விளைவுகளையும் கூட ஏற்படுத்தலாம். தீக்காயம், அபாயகரமானது எனக்கருதப்படாத பட்சத்தில் ஓடும் நீரிலே பாதிக்கப்பட்ட பகுதியை குறைந்தது, 10 நிமிடங்களாவது வைத்திருக்க வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
தீக்காயம் அபாயகரமானதாக இருக்குமிடத்தில் வைத்திய உதவியை உடனடியாக நாடுவதே சிறந்தது.
அத்துடன் தீக்காயம் ஏற்பட்ட பகுதியை சுத்தமான பொலித்தீனால் மட்டுமே மூடி, பாதிக்கப்பட்டவரை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்ல வேண்டும் எனக் கூறப்படுகிறது. ஒருபோதும் துணியாலோ அல்லது வேறு பொருட்களாலோ மூடக்கூடாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
எவராயினும், விபத்தொன்றின் போது அவசர உதவியை மேற்கொள்ளச் செல்ல முதல் தமது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். முதலிலே தம்மை அமைதிப்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்டவருக்கு உதவுவதால் எந்த ஒரு கிருமித்தொற்றும் தம்மை அடையவில்லை என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். அதனால் தான் இத்தகைய சந்தர்ப்பங்களில் கையுறைகளின் பாவனை கட்டாயப்படுத்தப்படுகிறது. ஆதலால் பாவித்தபின் தூக்கி வீசக்கூடிய ஒரு சோடி கையுறையை எப்பொழுதும் கூடவே வைத்திருப்பது சிறந்தது.
வசதிகள் கிடைக்குமாயின் பாதிக்கப்பட்ட வரைக் கையாள முன்னரும் கையாண்ட பின்னரும் கைகளைச் சவர்க்காரமிட்டுக் கழுவ வேண்டும்.
கையுறைகள் இல்லாத பட்சத்தில் பொலித்தீன் பைகளால் கைகள் காவலிடப்பட வேண்டும்.
கைகளிலே காயங்கள் இருந்தால் அவை நீர்புகாவண்ணம் பந்தனமிடப்பட்டிருக்க வேண்டும். வெற்றுக் கைகளால் காயங்களையோ உடற் திராவகங்களையோ தொடுதலைத் தவிர்க்க வேண்டும்.
அதேபோல கழிவுப் பொருட்கள் பாதுகாப்பான முறையிலே அகற்றப்பட்டுள்ளன என்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
காலங்காலமாக ஒரு சில நடைமுறைகளைக் கையாண்டு வந்தவர்களுக்குச் சில வேளைகளில் இவ்விடயங்களை ஏற்க முடியாமல் போகலாம். ஆனால் இவையாவுமே தர்க்க ரீதியாக நிரூபிக்கப்பட்டவை. இவற்றின் அடிப்படையிலேயே முதலுதவிப் பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன.

விபத்தொன்றின் போது அவசர உதவியை வழங்குபவரோ அல்லது முதலுதவி செய்பவரோ வைத்தியர் அல்ல என்பதை ஒரு போதும் மறக்கக்கூடாது. ஆதலால் வைத்திய ஆலோசனையின்றி எந்த ஒரு மருந்தையும் பாதிக்கப்பட்டவருக்குக் கொடுக்கக்கூடாது.
அவசர உதவி கிடைத்திருந்தால் இன்று மறைந்து போன உயிர்கள் பல காப்பாற்றப்பட்டிருக்கலாம் என்று மனம் எண்ணுகிறதல்லவா? அவசர உதவி தகுந்த நேரத்தில் சரியாகக் கிடைக்க வேண்டும். அவ்வாறு நாம் வழங்கும் உதவி சரியானது என உறுதி செய்வதற்கு பிழையான செயற்பாடுகள் உதவி வழங்கப்படுவதன் நோக்கங்கள் போன்றவை பற்றிய அறிவு அவசியம். அத்துடன் அவசர உதவி வழங்கும் திறன் புத்தக அறிவினால் ஒரு போதும் மேம் படாது. செய்முறை அறிவு மட்டுமே அத்திறனை மேன்படுத்தும்.
தெரியாததைச் செய்வதை விட செய்யாமல் இருப்பதே சிறந்தது. அதுவே பல உயிர்களைக் காப்பாற்றிவிடும்.

Friday, September 3, 2010

மனக்கண் முன்னே விரிகிறது மலரப் போகும் புதிய கிளிநொச்சி
உலகளாவிய ரீதியிலே பல நாடுகளின் அபிவிருத்தித் திட்டங்கள் எம்மை வியக்க வைக்கின்றன.

மூன்றாம் உலக நாடுகளைப் பொறுத்த வரையிலே, நிலை யான அபிவிருத்தியை நோக்கிய திட்டங்களும் நகர, பிரதேசத் திட்டமிடல் நடவடிக்கைகளும் மிகவும் குறைந்தளவிலேயே நடைமுறைப்படுத்தப்படுகின்றன. அதற்கு அந்நாடுகள் எதிர்நோக்கும் பல்வேறுபட்ட அடிப்படைப் பிரச்சினைகளும் காரணமாய் அமைந்து விடுகின்றன.

மாறாக அபிவிருத்தியடைந்த நாடுகளோ, தேசிய பெளதிகத் திட்டமிடல் கொள்கை மற்றும் வரைவின் வழிகாட்டல்களுக்கு ஏற்பவே தமது அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன. அதனால் தான் நீண்டகால அடிப்படையிலே பல்வேறுபட்ட மாற்றங்களுக்கு முகம் கொடுத்தும் அவற்றால் நிலைத்து நிற்க முடிகிறது.

அத்தகையதோர் அடிப்படையிலே, அபிவிருத்தியடைந்த நாடுகளை முன்னுதாரணமாகக் கொண்டு இலங்கையில் தேசிய பெளதிகத் திட்டமிடல் திணைக்களம், 2000 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. அத்திணைக்களத்தின் கீழ் திட்டவரைவுகள் தயாரிக்கப்பட்டு இலங்கையின் அபிவிருத்தித் திட்டங்கள் பல நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

அவ்வரைவுகளின் அடிப்படையிலே திட்டமிடப்பட்ட நகர்ப்புற பிரதேச வலையமைப்பு, நகர மற்றும் கிராமிய வலையமைப்பு உட்பட இன்னும் பல செயற்திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. நகரத் திட்டமிடலைப் பொறுத்த வரையிலே போக்குவரத்து வசதிகள் அபிவிருத்தியடையாத பிரதேசங்களில் பல ஆரம்ப காலகட்டப் பிரச்சினைகள் தவிர்க்கப்பட முடியாதனவாகிவிட்டன.

அத்தகையதோர் பிரச்சினையையே கிளிநொச்சி வாழ் மக்கள் தற்போது எதிர்நோக்குகின்றனர். அதுதான் சந்தைப் பிரச்சினையாகும். கிளிநொச்சிப் பிரதேசத்தின் பொதுச் சந்தை தற்போது அம்பாள் குளத்திலே அமைக்கப்பட்டிருக்கிறது.

திருவையாறிலோ இல்லை பரந்தனிலோ இருப்பவர் 1/2 கிலோ மீனையும் இரண்டு மரக்கறிகளையும் வாங்குவதற்காக அம்பாள் குளம் வரை செல்வதென்பது அடிப்படையில் நடைமுறைக்குச் சாத்தியமற்றது தான். ஆயினும் சலிப்புடன் சந்தைக்குச் சென்றுவரும் பொதுமக்களையும் காணக்கூடியதாகவிருக்கிறது.

இத்தகையதோர் நிலையில், கிளிநொச்சி வாழ் மக்கள் யாவர் மனதிலும் ‘ஏன் எமது பொதுச் சந்தை தொலைவிலுள்ள அம்பாள் குளத்திலே அமைக்கப்பட்டு வருகிறது?’ என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதே ஆதங்கம் எமக்குள்ளும் எழுந்தமையால் கிளிநொச்சியின் திட்டமிடல் பணிப்பாளர் மோகனபவனிடம் இவ்விடயம் குறித்து கருத்துக் கேட்டோம். அவர் தனது வேலைப்பளுவுக்கு மத்தியிலும் மிகவும் தெளிவாக கிளிநொச்சியின் பொதுச் சந்தை தொடர்பான எமது ஆதங்கங்களைத் தெளிவுபடுத்தினார்.

1996 களுக்கு முற்பட்ட காலங்களிலே கிளிநொச்சி நகரின் மத்தியிலே, புகையிரத நிலையத்துக்கு அருகாமையில் இருந்த மரக்காலை வளவினுள் பொதுச் சந்தை அமைந்திருந்தது. பின்னர் காலத்துடன் பொதுச் சந்தையும் இடம்பெயர்ந்தது. 1996 களின் பின்னரான காலப் பகுதியிலே, டிப்போச் சந்திக்கு அருகாமையில் அமைக்கப்பட்டு நன்றாகவே இயங்கி வந்தது.

தற்போது, டிப்போச் சந்தியை அண்மித்த பகுதி புனித பிரதேசமாக்கப்பட்டுள்ளது. சந்தை எனப்படுவது மிகவும் ஆரவாரமான பகுதியாகும். அதனால், டிப்போ சந்திக்கருகாமையில் சந்தையை அமைத்தலானது புனிதப் பிரதேசத்தின் அமைதியைக் குலைத்துவிடுமென்பதாலும் அபிவிருத்தி ரீதியான வேறு பல காரணங்களாலும் பொதுச் சந்தை அம்பாள் குளத்துக்கு நகர்த்தப்பட்டது.

கொடூர யுத்தமொன்று முடிவுக்கு வந்து, பின் கிளிநொச்சியில் மீள்குடியேற்றமும் ஆரம்பிக்கப்பட்டது. அக்காலகட்டத்தில், கிளிநொச்சி நகரின் மையப் பகுதியாகிய தற்போது தகர்ந்து காணப்படும் பொதுத் தண்ணீர்தாங்கியை அண்டிய பகுதியிலே தற்காலிகமாக சந்தை இயங்கி வந்தது.

அப்பகுதியில் போதிய இடவசதி இல்லாமல் இருந்தது. அத்துடன் அது சந்தை அமைக்கப்பட உகந்த பிரதேசம் அல்ல எனவும் உணரப்பட்டது. ஆகவே அச்சந்தையை இன்னொரு அமைவிடத்துக்கு மாற்ற வேண்டிய தேவையும் உணரப்பட்டது. கிளிநொச்சியின் நிலையான அபிவிருத்தியைக் கருத்தில்கொண்டு பொதுச் சந்தை, அம்பாள் குளத்துக்கு மாற்றப்பட்டது.


அவ்வாறு மாற்றப்பட முதல் எங்கு மாற்றலாம் என்பது பற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடனான கலந்துரையாடல் ஒன்று நடாத்தப்பட்டது. அக்கலந்துரையாடலிலே கிளிநொச்சிக்குளத்திற்கு அருகாமையில் உள்ள பகுதியில் சந்தையை அமைக்கலாம் என்ற கருத்து தெரிவிக்கப்பட்டது.

அவ்வாறு சந்தையை அமைத்தால், சந்தைக் கழிவுகள் கிளிநொச்சிக்குளத்திலே கலக்கப்படும் வாய்ப்பு இருப்பதாகவும் குளத்தின் சுற்றுச் சூழல் பாதிப்படையும் எனவும் கருத்தப்பட்டதால் சுற்றுச் சூழலுடன் தொடர்புடைய அதிகாரிகளின் ஒப்புதல் கிடைக்கவில்லை.

இதையடுத்து ‘1996 களின் முன்னர் இருந்த மரக்காலை வளவிலே சந்தையை மீள அமைக்கலாம் என்று கருத்துக் கூறப்பட்டது. ஆனால் ஏறத்தாழ 16 ஏக்கர் பரப்பளவுள்ள அக்காணியினுள் நிர்வாகக் கட்டடத் தொகுதியொன்றை அமைக்கும் திட்டம் இருக்கிறது.

அத்துடன் அக்காணி, கிளிநொச்சி நகரின் மத்தியில் இருப்பதாலும் அக்காணியைச் சூழ மக்கள் குடியிருப்புகள் இருப்பதாலும் அவ்விடத்தில் சந்தையை அமைப்பது நகரின் அழக்குக்கும் சுற்றுச் சூழலுக்கும் உகந்ததல்ல என உணரப்பட்டது.

விளைவாக, சந்தை அமைக்கப்படுவதற்கு ஏற்ற பிரதேசமாக அம்பாள் குளம் தெரிவு செய்யப்பட்டது.

தம்புள்ளவில் அமைக்கப்பட்ட பொருளாதார மத்திய நிலையம் போன்றதான மத்திய நிலையமாக எதிர்காலத்தில் அம்பாள் குளம் சந்தையையும் மாற்றுவதற்குத் திட்டங்கள் உள்ளனவெனத் தெரிவிக்கப்படுகிறது. இதற்கு ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டம் உதவி வழங்க இருக்கிறது.

எதிர்காலத்தைக் கருத்தில்கொள்கையில் பெரியளவிலான கொள்வனவுத் தேவைகள் உருவாகும்போது அம்பாள் குளத்தில் பொருளாதார மத்திய நிலையம் அமைக்கப்பட்டால் யாவருக்கும் பயனுள்ளதாக அமையும் என்பது கண்கூடு.

எதிர்காலத்தில் உருவாகலாம் எனக் கருதப்படும் போக்குவரத்து நெரிசலுக்கு அம்பாள் குளத்தில் பொருளாதார மத்திய நிலையம் அமைதல் தீர்வாக அமையும் என்ற கருத்தும் நிலவி வருகிறது. ஏனெனில் முறிகண்டியிலிருந்து அம்பாள் குளம் வரை ஏ9 வீதிக்குச் சமாந்தரமாக அக்கராயன் வீதி செல்கிறது. எதிர்காலத்திலே அவ்வீதியை பரந்தன் வரை விஸ்தரிக்கும் திட்டங்களும் காணப்படுகின்றன.

அம்பாள் குளத்தில் அமைக்கப்படவிருக்கும் பொருளாதார மத்திய நிலையத்துக்காக வரும் வாகனங்கள், முறிகண்டியிலிருந்து அக்கராயன் வீதியினூடாக அம்பாள் குளத்துக்கு வரமுடியும். இதனால் குறிப்பாக, பார ஊர்திகளின் போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

அம்பாள் குளம் பொதுச் சந்தை பொருளாதார மத்திய நிலையமாகும் சமகாலத்திலே, பரந்தன், திருவையாறு என ஏனைய பிரதேசங்களிலும் சிறு கொள்வனவுக்கான சந்தைகள் பல உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்தகையதோர் நிலையில், சந்தை தொடர்பாக மக்கள் இன்று எதிர்நோக்கும் போக்குவரத்துச் சிக்கல்கள் இல்லாமலே போய்விடும்.பொதுச் சந்தையின் அம்பாள்குளம் நோக்கிய நகர்வுடன் தொடர்புடையது, கிளிநொச்சி பஸ் நிலையத்தின் அமைவிடமாகும். கிளிநொச்சி பஸ் டிப்போவை அது தற்போது அமைந்திருக்கும் இடத்திலேயே அமைக்க வேண்டும் என ஒரு சாராரும் அம்பாள் குளம் பொதுச் சந்தைக்கு அருகாமையில் அமைக்கவேண்டும் என ஒரு சாராரும் கருத்துத் தெரிவிப்பதாகத் தெரிகிறது. இவ்விடயம் தொடர்பான திட்டவட்டமான முடிவுகள் எவையும் இதுவரை எடுக்கப்படவில்லை.

ஆனால், பொது மக்களின் வசதியைக் கருத்தில் கொள்ளும்போது பஸ் டிப்போவானது அதன் தற்போதைய அமைவிடத்திலே தொடர்ந்தும் இருப்பது விரும்பத்தக்கதாக அமையும்.

தற்போதைய அமைவிடம் ஏ9 வீதிக்கு மிக அருகாமையில் அமைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும். தற்போது கிளிநொச்சியின் பிரதான வீதிகளூடான பஸ் போக்குவரத்து மிகவும் இலகுபடுத்தப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் போக்குவரத்து வசதிகள் விஸ்தரிக்கப்படும்போது, சந்தைக்குச் செல்வோருக்காக வேண்டுமானால் அம்பாள் குளத்தில் சிறிய பேரூந்து நிலையமொன்று அமைக்கப்படலாம்.

கிளிநொச்சியில் அமைந்திருக்கும் திணைக்களங்கள் மற்றும் நிர்வாக அலுவலகங்களைப் பொறுத்த வரையிலே, அவை ஒவ்வொன்றும் ஏ9 வீதியின் வழியே வெவ்வேறு பகுதிகளில் காணப்படுகின்றன. பஸ் போக்குவரத்தை மட்டும் நம்பி வரும் நபரொருவர் தனது அலுவல்களை முடிப்பதற்கு போக்குவரத்து சிரமங்களை எதிர்நோக்குகிறார்.

அத்தகைய சிரமங்களை எதிர்காலத்தில் தவிர்க்கும் நோக்கிலே, கிளிநொச்சி நகரின் மத்தியில் அரச நிர்வாகக் கட்டடத் தொகுதியொன்றை அமைக்கும் திட்டம் உருவானது. அதன் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட காணியே, முன்னர் சந்தை இருந்த மரக்காலை வளவாகும்.தற்போதுள்ள கிளிநொச்சி மாவட்ட செயலகத்தை விஸ்தரிப்பதாயின், இரண்டு கட்டடங்கள் அழிக்கப்பட வேண்டிய தேவையொன்று காணப்படுகிறது. அவ்வாறு செய்தலானது, மாவட்ட செயலகத்தின் அன்றாட நடவடிக்கைகளைப் பாதிக்கும் எனவும் நம்பப்படுகிறது. அத்துடன் தற்போதைய மாவட்ட செயலகத்தில் போதியளவு வாகனத் தரிப்பிட வசதி இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏ9 வீதியை 6 வழிப்பாதையாக மாற்றும் திட்டங்களும் காணப்படுகின்றன. அத்திட்டங்கள் நடைமுறைக்கு வரும் போது மாவட்ட செயலகத்தின் வாகனத் தரிப்பிடம் முழுவதும் புதிய வீதிக்காக உள்வாங்கப்பட்டு விடும் நிலையொன்று காணப்படும். இவை திட்டமிடல் பணிப்பாளர் மோகனபவன் எம்முடன் பகிர்ந்துகொண்ட விடயங்களாகும்.

திட்டமிடல் பிரதிப் பணிப்பாளர் கெளரிதாசனுடனான கருத்துப் பகிர்வின்போது இந்த நிர்வாகக் கட்டடத் தொகுதியின் நிர்மாணப் பணிக்கான திட்ட வரைவுகள் தயாரிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். அத்துடன் நகர அபிவிருத்தி அதிகார சபையின் திட்ட வரைவுக்காக தரவுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இத்திட்டத்திற்கான ஒதுக்கீடுகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுவிட்டன எனவும் தெரிவித்தார்.

அத்துடன், நகர அபிவிருத்தி அதிகார சபையானது, ஏ9 வீதியையொட்டிய பகுதியை வர்த்தகமயமாக்குவதை விரும்புகிறது எனவும் அறிய முடிகிறது.

வர்த்தகத்தை நோக்கமாகக் கொண்ட அபிவிருத்தித் திட்டங்கள் ஏ9 வீதியையொட்டிய பகுதிகளில் மேற்கொள்ளப்படலாமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்விடயங்களையெல்லாம் கருத்தில் கொள்ளும்போது ஒரு நிர்வாகக் கட்டடத் தொகுதியின் தோற்றம் எவ்வளவு தூரம், பயனுள்ளதாக அமையும் என ஊகிக்க முடிகிறதல்லவா?

இந்தப் புதிய நிர்வாகக் கட்டடத் தொகுதிக்கு மாவட்ட செயலகமும் இடம்மாற்றப்படும். அதே சமகாலத்தில் தற்போது மாவட்ட செயலகம் அமைந்திருக்கும் வளவிலே வாகனத் தரிப்பிட வசதிகளுடன் கூடிய கலாசார மண்டபத்தை அமைக்கும் திட்டங்களும் காணப்படுகின்றன.

இவை கிளிநொச்சி நகர அபிவிருத்தி தொடர்பான எண்ணங்களின் பகிர்வேயாகும்.

நகரொன்றைத் திட்டமிட்டு வடிவமைத்தல் ஒன்றும் இலகுவான காரியமல்லவே. திட்டமிடல் செம்மையாக இருக்குமிடத்து, சகல ஒப்புதல்களும் ஒதுக்கீடுகளும் கிடைக்கும்போது திட்ட வரைவுகள் உருவாக்கப்பட்டு வடிவமைப்பு நடைமுறைப்படுத்தப்படும். அதற்கு சில வருடங்களாகலாம். ஓரிரு தசாப்தங்கள் கூட ஆகலாம். ஏனெனில், மூன்றாம் உலக நாடுகளைப் பொறுத்தவரை, கிடைக்கும் நிதி ஒதுக்கீட்டுக்கு அமையவே திட்டங்களை நடைமுறைப்படுத்த முடியும்.இடிபாடுகளுடன் கண்டு பழகிய கிளிநொச்சி நகரை, சிறந்த திட்டமிடலின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட நகராகக் கற்பனை செய்து பார்க்கையில் உள்ளம் மகிழ்கிறது. உண்மையிலேயே கிளிநகரை அப்படிக் காணும்போது இருக்கப்போகும் உணர்வுகள் விபரிக்கப்பட முடியாதவை. சாதகமான போக்கிலே சிந்தித்து நாம் ஒன்றிணைந்தால் இயலாதகாரியங்களும் எளிதில் நடந்தேறிவிடும் என்பதே நிதர்சனமான உண்மையாகும்.