Showing posts with label வறட்சி. Show all posts
Showing posts with label வறட்சி. Show all posts

Monday, August 8, 2011

கிழக்கு ஆபிரிக்காவின் தலை விதி:

உலகின் மிகப்பெரிய அகதி முகாம் கென்யாவில்.....
ஆபிரிக்காவின் கொம்பு என வர்ணிக்கப்படுபவை வட கிழக்கு ஆபிரிக்க நாடுகளும் சோமாலிய குடா நாடுமாகும். எரித்ரியா, எதியோப்பியா, சோமாலியா ஆகிய நாடுகளும் இப்பகுதியிலேயே அடங்குகின்றன. ஏறத்தாழ 2,000,000 சதுர கிலோ மீற்றர் பரப்பளவுள்ள இப்பகுதியில் 100 மில்லியன் பேர் வரை வாழ்கிறார்கள்.

இப்பிராந்தியம் மத்திய கோட்டுக்கு மிக அண்மையில் இருக்கிறது. இப்பிராந்தியத்தைக் கடக்கும் பருவக்காற்றுகள் தம் ஈரப்பற்றை இழந்து உலர் காற்றுக்களாகவே கடக்கின்றன. ஆதலால் இப்பிராந்தியத்தின் ஒரு சில பகுதிகளைத் தவிர பெரும்பாலான பகுதிகளின் வருடாந்த சராசரி மழை வீழ்ச்சி மிகவும் குறைவாகவே இருக்கும்.

வரலாற்றுக்கு முந்தைய காலத்திலேயே இங்கு மனிதர்கள் (ஆதி மனிதர்கள்) வாழ்ந்தமைக்கான சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. புராதன காலத்திலே எகிப்து உரோம சாம்ராஜ்யங்களோடு இப்பகுதி அரசுகள் நல்லுறவைப் பேணி வந்தன. உரோமப் பேரரசுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வர்த்தகத்திலும் பெரும் பங்கு வகித்தன.

இந்த கொம்புப் பிராந்தியத்தின் எதிர்ப்பக்கத்திலே இஸ்லாம் சமயம் தோன்றிய போது அராபிய குடா நாட்டில் வசித்த உள்ளூர் வர்த்தகர்களும் படகோட்டிகளும் இஸ்லாமியரானார்கள். இஸ்லாம் மதம் தோன்றியதன் ஆரம்ப கால கட்டங்களிலே முஸ்லிம்கள் இந்த கொம்புப் பிராந்தியத்துக்கு குடிபெயர்ந்தார்கள். இப்பிராந்தியத்தின் ஆதிக் குடிகளும் காலத்துக்குக்காலம் மதம் மாறினார்கள்.

பின்னர் இப்பிராந்தியம் மத்திய காலப்பகுதியிலே முஸ்லிம் ஆட்சியாளர்களின் ஆதிக்கத்துக்கும் பின்னர் சுயஸ் கால்வாய் வெட்டப்பட்ட பின்னர் மேற்கு ஐரோப்பியரின் ஆதிக்கத்துக்கும் உட்படுத்தப்பட்டிருந்தது.
காலப்போக்கிலே இப்பிராந்திய நாடுகள் சுதந்திர நாடுகளாகப் பிரகடனப்படுத்தப்பட்டாலும், அப்பிராந்தியத்தின் கால நிலை காரணமாக உலகின் வேகத்துக்கு அவற்றால் ஈடு கொடுக்க முடியவில்லை.

எதியோப்பியாவைப் பொறுத்த வரையிலே அதன் 80% பொருளாதாரம் கோப்பி ஏற்றுமதியிலே யே தங்கியிருக்கிறது. சோமாலியாவைப் பொறுத்தவரையிலே வாழைப்பழம் மற்றும் கால் நடை ஏற்றுமதியே முக்கிய இடத்தை வகிக்கிறது.

எவை எப்படி இருந்தாலும் வறட்சி என்பது இந்த நாடுகள் தவிர்க்க முடியாத நிலைமையாக மாறி விட்டது. இப்பிராந்தியத்தின் தலை விதியே வறட்சி தான் என்றாலும் மிகையில்லை. காலத்துக்குக் காலம் வறட்சியை இல்லாதொழிக்க பல நட வடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் வேகமாக அதிகரிக்கும் கால் நடைகள், மனிதர்களின் குடித்தொகையின் முன்னே அவை செயலிழந்து போயின எனலாம்.

1983–85, 1991–92 மற்றும் 1998–99 காலப்பகுதியில் ஏற்பட்ட கடும் வறட்சியால் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பலியாயின. இது இயற்கையின் விளையாட்டோ எனவும் சில வேளைகளில் எண்ணத்தோன்றும். ஏனெனில் இயற்கையானது தனது சம நிலை குலைக்கப்படும் போது அதனைச் சீர் செய்ய முயலும். அதற்காக சில அனர்த்தங்களைத் தோற்றுவித்து சம நிலையைச் சீர் செய்யும். கட்டுப்பாட்டை மீறி அதிகரிக்கும் குடித்தொகையைக் கட்டுப்படுத்தத்தான் இயற்கை தன் விளையாட்டைக் காட்டி வருகிறதோ எனவும் எண்ணத்தோன்றும். ஏனெனில் மழை பொய்த்து வறட்சி ஏற்பட்டமையே பெருந்தொகை உயிர்கள் பலியானமைக்கு மூல காரணமாகும்.

ஆபிரிக்காவின் கொம்புப் பகுதியில் ஏலவே அடையாளங்காணப்பட்ட மிகவும் சிக்கலான காலப்பகுதிகளையொட்டிய நிலை தற்போது மீண்டும் உருவாகியிருக்கிறது. கிழக்கு ஆபிரிக்கா முழுவதும் பரவியிருக்கும் அக்கொடிய நிலைமை முழு உலகையும் தன் பக்கம் திருப்பியிருக்கிறது. ஏனெனில் இந் நிலைமையை ஆபிரிக்காவுக்கே உரிய நிலைமையாக எவராலும் பார்க்க முடியவில்லை. மாறாக உலகளாவிய நெருக்கடி ஒன்றுக்கான சமிக்ஞையாகவே பார்க்கின்றனர். கிழக்கு ஆபிரிக்காவில் சமத்துவமின்மை, உணவுப்பாதுகாப்பு, கால நிலை மாற்றம் ஆகியன ஒருங்கே சேர்ந்து நிலை கொண்டுள்ளன என்றாலும் மிகையில்லை.

ஏலவே வறுமையாலும் பாதுகாப்பின்மையாலும் தவித்துப்போயிருந்த கிழக்கு ஆபிரிக்க மக்களை இவ்வாண்டின் (2011) நடுப்பகுதியிலே ஏற்பட்ட கடும் வறட்சி பெரும் துயரத்தில் ஆழ்த்தியது. சோமாலியாவின் இரு மாவட்டங்கள் பஞ்ச வலயங்களாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

ஆனால் சோமாலியாவிலிருந்து எதியோப்பியா தாண்டி, வட கென்யா மற்றும் மேற்கிலே சூடான், உகண்டாவின் வட கிழக்கு மாவட்டமான கராமோ வரை இந்த வறட்சி நிலை ஏற்பட்டிருக்கிறது.


இது 1950 இலிருந்தான 60 ஆண்டு வரலாற்றில் ஏற்பட்ட மிக மோசமான வறட்சியாகக் கருதப்படுகிறது. ஏறத்தாழ 12 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டு பட்டினியின் விளிம்பிலே நிற்கிறார்கள்.

கென்யாவின் வடக்கு மாவட்டமான டேர்க்கானாவின் மொத்த சனத்தொகை 850,000 ஆகும். அங்கு 385, 000 சிறுவர்கள் மிக மோசமான போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதனால் ஐநாவின் சிறுவர் நிதியம் உதவிப் பணியில் ஈடுபடும் அவசியம் ஏற்பட்டுள்ளது. போஷாக்கின்மை விகிதம் 2010ல் 15 விகிதமாகவும் 2011ல் 37 விகிதமாகவும் உயர்ந்துள்ளது. போஷாக்கின்மை மெதுவான உயிர்க்கொல்லி என்று யூனிசெப் இயக்குநர் அந்தோனி லேக் (Antony Lake) கூறுகிறார். யூனிசெப் செய்த மதிப்பீடுகளின் படி இரண்டு மில்லியன் சிறுவர்கள் ஆபிரிக்காவின் கொம்பு நாடுகளில் போசாக்கின்மையால் வாடுகின்றனர். உடனடி கவனம் செலுத்தப்படாவிட்டால் சிறுவர் உயிரிழப்பு பெருக வாய்ப்பு உள்ளது.

போசாஷாக்கின்மையால் பாதிக்கப்பட்ட இரண்டு மில்லியன் சிறுவர்களில் 500,000 சிறுவர்கள் உயிரிழக்கக் கூடும் என்றும் யூனிசெப் கருதுகிறது. அடுத்த மூன்று மாத காலத்தில் சிறுவர் மற்றும் பெண்களைப் பராமரிப்பதற்கு 31.8 மில்லியன் டொலர் உனடியாகத் தேவை என்று சென்ற வாரம் யூனிசெப் அறைகூவல் விடுத்துள்ளது. மேற்கு நாடுகளும் உதவி நிறுவனங்களும் இந்தத் தொகையைக் கொடுப்பதாக வாக்குறுதி அளித்துள்ளன.

கிழக்கு ஆபிரிக்காவில் ஏற்பட்டிருக்கும் இந்த நெருக்கடியானது மீள மீள உருவாகும் ஒரு நிலைமையாகவே தெரிகிறது. ஏலவே 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதமளவில் போசாக்கின்மை மற்றும் பஞ்ச நிலை ஒன்று தோன்றுவதற்கான அறிகுறிகள் தென்பட்டன. அந்த அறிகுறிகளுள் கால நிலை தொடர்பிலான காரணிகள், அதிகரித்த எண்ணெய் விலை, வசதிபடைத்தவர்கள் மத்தியில் இறைச்சிக்கு ஏற்பட்ட கேள்வியில் அதிகரிப்பு, விவசாய நிலங்களில் உயிர் எரிபொருளைப் பெறக்கூடிய தாவரங்களைப் பயிரிடத்தொடங்கியமை போன்ற பல விடயங்களும் உள்ளடங்கும்.

பேரழிவொன்று நடந்தால் அதனை ஒரு படிப்பினையாகக் கொண்டு இனி வரும் காலங்களிலே அத்தகைய பேரழிவுகள் நடக்கவிருப்பதைத் தவிர்க்கமுயலும் குணம் மனிதனுக்கு இருப்பதாகவே தெரியவில்லை. 1983–85, 1991–92 மற்றும் 1998–99 காலப்பகுதிகளில் கிழக்கு ஆபிரிக்கப் பிராந்தியத்தில் ஏற்பட்ட கொடிய வறட்சியை சம்பந்தப்பட்ட தரப்பினர் படிப்பினையாகக் கொண்டு தெளிவான சிந்தனையுடன் செயற்பட்டிருக்கலாம். ஆனால் எவரும் அப்படி நடந்ததாகத் தெரியவில்லை. விளைவாக முன்னையதிலும் கொடிய வறட்சி நிலைமை தற்போது ஏற்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாடும் தன் இராணுவத்தேவைகளுக்கு ஒதுக்கும் நிதியின் 2 சதவீதத்தை விவசாய ஆராய்ச்சிகளுக்கு வழங்குமாறு ஐ. நா பொதுவாகக் கோரியிருந்தது. ஆனால் அத்திட்டத்தின் மூலம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிதியிலே 1/3 பங்கு நிதி தான் கிடைக்கப்பெற்றது.

கடந்த இரு வருடங்களாக கிழக்கு ஆபிரிக்கப் பகுதியில் அதிலும் கொம்பு நாடுகளில் வானம் பொய்த்த காரணத்தால் விவசாயம் படுத்துவிட்டது. பல மில்லியன் மக்கள் வாழும் இந்தப் பகுதியில் பாரிய உணவு நெருக்கடி தோன்றியுள்ளது.

இத்துன்பியல் நிலைக்கு கால நிலை மாற்றமும் ஒரு காரணம் என அறியப்படுகிறது. தரவுகளின் அடிப்படையில் கால நிலை மாற்றத்தின் விளைவுகள் பல எதிர்வு கூறப்பட்டன. எதிர்வு கூறப்பட்டு வருகின்றன. எதிர்வரும் தசாப்தங்களில் வெப்ப வலயங்களின் வெப்ப நிலை உலகின் சராசரி வெப்ப நிலையின் 3 மடங்குகளாக இருக்கும் எனத்தெரிவிக்கப்படுகிறது. உயர் அந்தீஸ், இமயம் போன்ர நீரைத்தேக்கிவைத்திருக்கும் மலைகளில் இருக்கும் பனி உருகும் சாத்தியக்கூறுகள் ஏற்பட்டிருக்கின்றன.

ஆசியாவின் பனிமலைகளால் தான் பல ஆற்றுத்தொகுதிகள் வளம் பெறுகின்றன. அவ்வாற்றுத்தொகுதிகளை நம்பி பல மில்லியன் மக்கள் வாழ்கிறார்கள். அவர்களின் உணவுத்தேவை ஈடு செய்யப்படுகிறது. வெப்ப நிலை அதிகரிக்க, ஆறுகள் கொண்டு செல்லும் நீரின் அளவு குறைவடையும்.உணவுப்பயிர்கள் நீரின்றி பெரும் அழுத்தத்துக்குள்ளாகும். விளைவு உணவுப் பற்றாக்குறையாக வெளிப்படும். இது ஏலவே எதிர்வு கூறப்பட்ட நிலைமையாகும்.

அத்தகையதோர் நிலையையே இன்று கிழக்கு ஆபிரிக்கா எதிர் நோக்கியுள்ளது. இன்று காணப்படும் போக்கு எதிர்காலத்திலும் தொடர்ந்தால் நிலைமை விபரீதமாகும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

அதே வேளை இது இயற்கையின் நியதி எனச் சுலபமாக விட்டுச் செல்ல முடியாது. ஏனெனில் கடந்தகால அலட்சியப்படுத்தல்கள், ஒதுக்கல்களினால் ஏற்பட்ட விளைவு தான் இந்த வறட்சி. அதன் உச்சத்தினால், பெரும்பாலான நாடுகளில் ஒருவேளை சாப்பாட்டுக்குக் கூட வழியில்லாமல் மக்கள் பரிதவிப்பில் இருப்பதாகவும், இதற்காகப் பாடசாலைக்கு அனுப்புதல், உடைகள் வாங்குதல், அடிப்படை மருந்துச் செலவுகளைக் கூட அந்த நாட்டு மக்கள் கைவிட்டு வருவதாகவும் ஐ.நா. உலக உணவு ஸ்தாபனம் தெரிவிக்கிறது.

வன்முறையும், உள்நாட்டுப் போரும் சோமாலியாவை உருக்குலைத்து விட்டது. அங்கு இஸ்லாமிய ஷபாப் இயக்கத்துக்கும் பெயரளவிலான அரசாங்கத்துக்கும் இடையில் காணப்படும் முரண்பாடுகள் அனர்த்த நிலைமையை மேலும் மோசமாக்குகின்றன. தற்போது 3.7 மில்லியன் மக்கள் பட்டினியால் வாடுகின்றனர். பஞ்ச நிலை பிரகடனப்படுத்தப்பட்டிருக்கும் பகுதிகளில் பெரும்பாலானவை ஷபாப் புரட்சியாளர்களின் கட்டுப்பாட்டிலிருக்கும் பகுதிகளாகும். சோமாலியாவின் பரிதாப நிலைக்குக் காரணம் என யாவரும் ஒருங்கே சுட்டுவது இந்த ஷபாப் கிளர்ச்க்சியாளர்களைத் தான். சோமாலியாவிலே நடக்கும் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கும் இதே கிளர்ச்சியாளர்கள் தான் தடையாக இருக்கிறார்கள்.

கடந்த 20 ஆண்டுகளாக வன்முறை, மோதலில் ஊறிப் போய்க் கிடக்கும் அந்நாட்டில், ஒரு குடும்பம், தனக்குத் தேவையான உணவு, குடிநீருக்காக செலவிடும் தொகை கடந்த 2 ஆண்டுகளில் 85 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த 2007ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒரு குடும்பத்திற்கான செலவு 92 டொலராக இருந்தது. அது செப்டம்பர் மாதம் 171 டொலராக மாறியது.

பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்புவதையும், உடைகள் வாங்குவதையும் சோமாலியா மக்கள் கைவிட்டு நெடுநாட்களாகி விட்டன. பலர் தமக்குக் கிடைக்கின்ற உணவைச் சாப்பிட்டுக் கொள்ள பழகி விட்டனர். இந்நாட்டில், சத்தான உணவு கிடைக்காததால், பிறக்கும் ஐந்து குழந்தைகளில் ஒன்று இறந்து விடும் அவலமும் நீடிக்கிறது.

கென்யாவில் கடும் வறட்சி காரணமாக நூற்றுக்கணக்கான கால்நடைகள் மரித்துப் போய் விட்டன. இந்த நாட்டில் மட்டும் 30 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் உணவு கிடைக்காமல் அவல நிலையில் உள்ளனர்.வட கென்யாவின் டடாப் பகுதியில் உலகின் மிகப்பெரிய அகதிமுகாம் அமைக்கப்பட்டிருக்கிறது. இதுவே அப்பிராந்தியத்தில் நிலவும் வறட்சியின் கொடூரத்தைப் படம்பிடித்துக்காட்டப் போதுமானதாகும். 90,000 பேரைக் கொள்ளக்கூடியதாக வடிவமைக்கப்பட்ட இந்த முகாமிலே கடந்த சில மாதங்களுக்குள் மக்கள் தொகை 380,000 ஆகி விட்டிருந்தது. அதை விட அங்கு தினமும் சராசரியாக 1300 பேர் வந்து சேர்ந்த படி இருப்பதாக தவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது நீரைப் பேணும் நடவடிக்கைகளையும் வறட்சியைத்தாக்குப்பிடிக்கக்கூடிய பயிரினங்களை உருவாக்குவதையும் முன்னெடுக்கவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அதே போல சமத்துவத்தை உறுதி செய்யக்கூடிய வகையிலே உலக பொருளாதாரக் கொள்கைகள் மாற்றியமைக்கப்பட வேண்டும். தாழ் காபன் பொருளாதாரம் உருவாக்கப்பட வேண்டும்.

உலகின் பல பகுதிகளிலும் உணவுப் பொருட்களின் விலை மிகக் கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் ஏழை மக்களால் உணவுப் பொருட்களை வாங்கவே முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏழைகள் அதிகம் உள்ள நாடுகளில் ஒரு வேளை உணவு கிடைப்பது கூட பெரும் போராட்டமாக உள்ளது.விவசாயத்தை உலக அரசுகள் புறக்கணித்ததே இதற்குக் காரணம். கடந்த 80களுக்குப் பின்னர் உலகம் முழுவதிலும் விவசாயம் முக்கியமிழந்து போய் விட்டது.

1980ஆம் ஆண்டு உலக நாடுகள் சராசரியாக 17 சதவீத நிதியை விவசாயத்துக்கு ஒதுக்கின. ஆனால் 2006இல் இது 3.8 சதவீதமாக குறைந்து போனது. இருப்பினும் கடந்த 3 ஆண்டுகளாக இது இலேசான உயர்வைக் கண்டுள்ளது. ஆனால் அது போதுமானதாக இல்லை.

உணவு உற்பத்தியை அதிகரித்தால்தான் பட்டினியை வீழ்த்த முடியும். இது பொதுவான பிரச்சினை. விவசாயத்திற்கு உலக நாடுகள் முக்கியத்துவம் கொடுக்காவிட்டால் உலகம் முழுவதுமே பட்டினிச் சாவுக்குள்ளாகி விடும். இதை எவராலும் தடுக்க முடியாது என்று ஐ.நா. தெரிவிக்கிறது.உலகிலேயே அதிக அளவில் பட்டினியால் வாடும் மக்கள் ஆசியா மற்றும் பசிபிப் பகுதிகளில்தான் உள்ளனர். அடுத்த இடம் ஆபிரிக்க கண்டமாகும் என் கிறது ஐ. நா.

21 ஆம் நூற்றாண்டைப் பொறுத்தவரையிலே பட்டினி நிலை என்பது தேவையற்ற ஒன்று எனலாம். ஆபிரிக்காவில் முன்னைய காலங்களிலும் பட்டினி நிலை ஏற்பத்தான் செய்தது. ஆனால் அந்த நேரங்களில் கிடைத்த சர்வதேச உதவிகள் அவசரகாலத்தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டன. எதிர்காலத்தில் அத்தகைய நிலை ஒன்று மீண்டும் ஏற்படாமல் இருப்பதற்கான முற்காப்பு நடவடிக்கைகளுக்கு அவ்வுதவி பயன் படுத்தப்படவில்லை. அத்தகைய முற்காப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படமைக்கான குறிப்பிடத்தகு ஆதாரங்களும் இல்லை. அந்த நீண்ட காலத் திட்டங்கள் தொடர்பிலான ஏற்பாடுகள் அன்றே மேற்கொள்ளப்பட்டிருந்தால் இன்று இந்த அவல நிலை தோன்றியிருக்காது.

இனியாவது சர்வதேச சமூகம் விழிப்படைய வேண்டும். ஆபிரிக்காவின் கொம்பு நாடுகளில் காலத்திற்குக் காலம் ஏற்படும் வறட்சியையும், பட்டினிச் சாவையும் தூரநோக்குத் திட்டத்தின் மூலம் சமாளிக்க முடியும் என்று நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். மழையை வரவழைக்க எம்மால் முடியாவிட்டாலும் வறட்சியால் ஏற்படும் மனித அவலங்களைத் திட்டமிட்டுத் தவிர்க்க முடியும் என்று அவர்கள் நம்புகின்றனர். விவசாய மேம்பாட்டிற்கான சர்வதேச நிதியத்தின் (International Fund For Agricultural Development) அதிகாரி ஜோன் கிளீவர் (John Cleaver) கிழக்கு ஆபிரிக்காவின் வறட்சி தவிர்க்க முடியாத இயற்கை நிகழ்ச்சி. இந்த அடிப்படையில் நாம் திட்டமிடவேண்டும். என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், நீண்ட வறட்சியைத் தாங்கக் கூடிய உணவுப் பயிர்களை நாம் ஆராய்ச்சி மூலம் கண்டுபிடிக்க வேண்டும். அது மாத்திரமல்ல நீண்ட வறட்சியைத் தாங்கக் கூடிய கால்நடைகளையும் கால்நடை உணவுப் பயிர்களையும் உருவாக்கினால் தான் நிலமை கட்டுக்குள் வரும் என்றார். அவர் கூறுவதிலும் தவறு இருப்பதாகத் தெரியவில்லை. ஏனெனில் , ஆபிரிக்காவின் கொம்பு நாடுகளிலுள்ள விவசாய நிலங்கள் உயிர் எரிபொருளை உற்பத்தி செய்ய வல்ல தாவரங்களைப் பயிரிடும் நிலங்களாக மாற்றப்பட்டிருக்கின்றன. அவ்வாறு மாற்றும் போது எதிர்காலம் கருத்தில் கொள்ளப்படவில்லை என்பதே வெளிப்படை.

எதிர் பார்த்தோ எதிர் பாராமலோ பட்டினி நிலை தோன்றிவிட்டது. இனியும் கடந்த காலங்களை அலசி ஆராய்ந்துகொண்டிருப்பதில் பயனில்லை. அதே வேளை இனியொரு காலமும் இத்தகைய அவலநிலை ஏற்படாமல் இருக்க எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் பற்றி ஆராய வேண்டிய கடப்பாடு எமக்கு இருக்கிறது.

உலகளாவிய ரீதியிலே தொடரும் நிதி நெருக்கடிகள், இயற்கை அனர்த்தங்கள், பட்டினி நிலைமைகள் போன்றன எம்மை எங்கு கொண்டு போய் விடப்போகின்றன என்பதை எவராலும் மதிப்பிட முடியாது.

கிழக்கு ஆபிரிக்காவை, அதுவும் கொம்பு நாடுகளைப் பொறுத்தவரையிலே விவசாயமும் பண்ணை வளர்ப்புமே மக்களின் ஜீவனோபாயமாக இருந்தன. ஆதலால், மழை பொய்த்து பஞ்சம் ஏற்பட்ட போது அவர்களால் அதற்கு ஈடு கொடுக்க முடியவில்லை. அவர்களுக்கான காப்புறுதிகள் எவையுமே அந்த நாடுகளில் காணப்படவில்லை. ஆதலால் இனியாவது விவசாயிகளுக்கும் பண்ணைத் தொழிலாளர்களுக்குமான காப்புறுதித்திட்டம் ஒன்று உருவாக்கப்படுதல் அவசியமாகிறது.மழை பொய்த்து அவர்களது தொழிலிலே நட்டம் ஒன்று ஏற்பட்டால் அத்திட்டத்தின் கீழ், அந்த நட்டத்தின் ஒரு பகுதியையாவது ஈடு செய்யக்கூடியதாக இருக்கும்.

அதனுடன் நின்று விடுதல் பயனளிக்காது. அந்த மக்களின் பாரம்பரிய வாழ்வாதாரத் தொழிலின் எதிர்காலம் கேள்விக்குறியாகி நிற்கும் போது அதற்கான மாற்றீடுகள் அல்லது பிரதியீடுகளின் தேவையும் அவசியமாகிவிடுகிறது. ஆனால் இக்கருத்தைப் பலர் ஏற்க மறுக்கிறார்கள். ஏனெனில் இம்மக்களைப் பொறுத்தவரையிலே வாழ்வாதாரம் என்பது தொழில் அல்லது வருவாய்க்குரிய வழி மட்டுமல்ல. அவர்களது வாழ்க்கைப்பாங்கே அந்த வாழ்வாதரத்தையொட்டியதாகத்தான் அமைந்திருக்கிறது. ஆதலால் அவர்கள் பழக்கப்படாத வாழ்வாதரமொன்றை அவர்கள் மீது திணித்தல் நியாயமன்று என்கின்றன வாதங்கள். வாழ்வாதாரம் மாற்றப்படாவிடினும், அவர்களுக்கு வருமானம் கிடைக்கும் வழிகளாவது மாற்றப்பட வேண்டும் என்ற கருத்தில் மறுப்புக் கூற முடியாது.

இங்கு தான் அரசியல் தலை தூக்குகிறது. தளம்பிக்கொண்டிருக்கும் அரசியல் நிலைமைகள் ஒரு னாட்டின் பொருளாதாரத்தைச் சிதைத்து முழு நாட்டையுமே அவல நிலைக்கு இட்டுச்செல்லும் ஆற்றல் படைத்தவை. அத்தகையதோர் நிலைமையைத்தான் நாம் சோமாலியாவிலே காண்கிறோம். சோமாலிய முரண்பாடுகளுக்கு அரசியல் தீர்வு ஒன்று ஏற்படுத்தப்படுமாயின் அந் நாட்டின் வறுமை, பட்டினி, பஞ்ச நிலையில் பாதியை ஒழித்துவிட முடியும்.

.அரசியல் ரீதியாகத் தனிமைப்படுத்தப்பட்ட நாடு சோமாலியா. உலகிலே நட்பு என்று சொல்லும் அளவுக்கு சோமாலியா எந்த நாட்டுடனுமே உறவைப் பேணவில்லை எனலாம். அங்கு சர்வதேச சமூகத்தின் தலையீட்டுடன் ஆக்க பூர்வமான நீண்ட காலத்தீர்வு ஒன்று ஏற்படுத்தப்பட்டாலன்றி சோமாலியாவுக்கு விடிவு ஏற்படாது எனலாம்.

இந்த நீண்ட காலத்தீர்வுகள் எல்லாம் ஆற அமர யோசித்து மெதுவாக அமுல் படுத்தப்பட வேண்டியவை. ஆனாலும் குறுகிய கால நோக்கிலே, பல அவசரகால உதவிகளைச் செய்யவும் நாம் தவறக்கூடாது.

பசிக்கொடுமையில் இருக்கும் 12 மில்லியனுக்கும் அதிகமான மக்களை அந்த அவலத்திலிருந்து மீட்டெடுக்க உணவுப் பொருட்கள் தேவையாக இருக்கிறது. இந்த நிலைமையை சர்வதேச சமூகம் உணர்ந்து செயற்படும் போது பல்லாயிரக்கணக்கானோர் பட்டினியால் இறந்து போயிருப்பர் என்பது நிதர்சனம்.

கிழக்கு ஆபிரிக்காவின் எண்ணெய் வளத்திலே அதிக கரிசனை கொண்ட சர்வதேசம் , மக்களின் அவல நிலை என்று வரும் போது சற்று மந்த கதியிலான போக்கையே கடைப்பிடிக்கிறது. ஆயினும் பல மனிதாபிமான நிறுவனங்களின் உதவியுடன் நிவாரணப்பணிகள் இயன்றளவு சிறப்பாகவே நடைபெற்று வருகின்றன.

இந்த கிழக்காபிரிக்க வறட்சி என்பது கடந்த வாரமோ அல்லது கடந்த மாதமோ ஏற்பட்ட விடயமல்ல. கடந்த ஆண்டே அந் நாடுகளில் வறட்சி ஆரம்பித்து விட்டது. ஆனால் எவரும் கண்டு கொள்ளவில்லை. நிலைமை கையை மீறிப்போன பின்னரே அதை உலக நாடுகள் உணர்ந்திருக்கின்றன என்பதுதான் வருந்துதற்குரிய விடயம்.

முக்கியமான குறிகளாகக் கருதப்படும் இறப்பு வீதம், போஷாக்கின்மை ஆகியவை மட்டுமன்றி உணவுப்பொருட்களின் விலை பற்றியும் நாம் கரிசனை செலுத்த வேண்டும். உணவுப்பொருட்களின் விலை செல்லும் போக்கை ஆராய்ந்தால், எதிர்காலத்தை அதுவே குறி காட்டும்.

இந்த மக்களின் எதிர்காலம் கூட மழையை நம்பித்தான் இருக்கிறது. ஏனெனில் இந்த ஆண்டு ஐப்பசியளவில் பெய்யும் வழக்கமான மழை பெய்தால் தான் , 2012 ஆம் ஆண்டு தை, மாசி மாதங்களில் நிலைமை சுமுகமடையும் என எதிர்பார்க்கலாம். சொன்ன படி ஐப்பசி மாதம் மழை பெய்யாவிடில், கிழக்கு ஆபிரிக்க மக்களின் எதிர்காலத்தை எல்லாம் வல்ல இயற்கையின் கையிலேயே விட்டு விட வேண்டியது தான்.

எங்கோ கிழக்காபிரிக்காவில் ஏற்பட்டிருக்கும் பஞ்ச நிலைமையை எமக்கு எடுத்துச் சொல்வதனால் என்ன பயன் என்று கேட்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். எமது நாடும் ஆசிய நாடு தான். உலகில் எந்தவொரு மூலையில் சிறு மாற்றம் ஏற்பட்டாலும் அது ஏதோ ஒரு வழியில் எம்மைப் பாதிக்கும்.

இயற்கை எமக்கு த் தந்திருக்கும் அரிய வளங்களை வீணடித்தால், கொம்பு நாடுகளுக்கு நேர்ந்திருக்கும் நிலைமை நாளை எமக்கும் கூட ஏற்படலாம். அதற்கான சாத்தியக்கூறுகள் பல இங்கும் காணப்படுகின்றன. ஆனால் நாம் அனைவரும் முயன்றால் அத்தைகைய நிலைமை எப்போதுமே ஏற்படாதவாறு எம் வளங்களைப் பேணமுடியும். முயன்று தான் பார்ப்போமே?


Sunday, February 7, 2010

சாது மிரண்டால் காடு கொள்ளாது

"பகுத்தறிவற்ற மிருகங்களைவிட பகுத்தறிவுள்ள மனிதனே அதிக அழிவுகளை எதிர்நோக்குகின்றான்"



பல்லாயிரம் உயிர்களைப் பலிகொண்ட கொடூரமான ஆழிப்பேரலை அனர்த்தம் நிகழ்ந்து சரியாக அரை தசாப்தம் கடந்துவிட்ட நிலையிலும் கூட இயற்கை அனர்த்தங்கள் தொடர்பிலான பல விடயங்கள் இன்னும் புரியாத புதிர்களாகவே காணப்படு கின்றன. இயற்கையை மீறத் தெரிந்த மனிதன், இயற்கையின் சீற்றத்தை முற்றாக எதிர்கொள்ள முடியாத நிலையிலேயே காணப்படுகின்றான்.

இயற்கை அனர்த்தமெனப்படுவது இயற்கையாகச் சூழலில் ஏற்படுத்தப்படும் நிகழ்வுகளேயாகும். அவை இயற்கையாக ஏற்படுத்தப்படினும் அவற்றின் பின்னணியில் கணிசமான பங்கை வகிப்பது மனித இனமன்றி வேறில்லை. அத்துடன் இயற்கை அனர்த்தத்தினால் ஏற்படுத்தப்படும் அழிவுகளில் பெருமளவில் பாதிக்கப்படுவதும் மனித சமுதாயமே.

இந்த பிரபஞ்சம் பஞ்ச பூதங்களாலான தென்பர். பஞ்ச பூதங்களாலான நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகியன சீற்றம் கொள்வதால் உருவாவதே இயற்கை அனர்த்த மெனக் கருதப்படுகின்றது. இப்பஞ்சபூதங்கள் நில நடுக்கம், எரிமலை வெடிப்பு, நிலச் சரிவு, வெள்ளம், கடற்கோள், சூறாவளி, காட்டுத்தீ, வறட்சியென வெவ்வேறு வடிவங்களில் தமது சீற்றத்தை வெளிப்படுத்துகின்றன.

இச்சீற்றம் பல உயிர்ச் சேதங்களையும் சொத்துக்களின் அழிவையும் ஏற்படுத்துவதையும் நாம் கண்கூடாகக் காண்கிறோம். எனினும் அவை யாவற்றிற்கு மப்பால், அவற்றை உருவாக்கும் காரணிகளைப்பற்றிச் சிந்திக்கத்தவறிவிடு கிறோம். காரணிகளைப் பற்றிச் சிந்தித்தால்தான இயற்கை அனர்த்தத்தைக் குறைப்பதற்கோ அல்லது அதிலிருந்து எம்மைப்பாது காப்பாதற்கோ உரிய வழி முறைகளைக் கையாள முடியும்.

இயற்கை அனர்த்தங்களினடிப்படை யாகவிருப்பது சூரியனும் புவியின் உட்பகுதியுமாகும். பூமியின் உட்பகுதி பூமியை வெப்பமாக்குவதன் மூலம் அதன் தட்டுக்களை அசையச் செய்யும். இத்தட்டுக்களினசைவுகளே நிலநடுக்கங்களைத் தோற்றுவிக்கும். ஆனால் இந்தத் தோற்றப்பாடுகளே, பூமி தொழிற்படும் நிலையிலிருப்பதற்கான சமிக்ஞைகளாகக் கருதப்படுகின்றன.

பூமியில் இயற்கையாகவே கண்டங்கள், சமுத்திரங்கள், மலைகள் மற்றும் சமவெளிகள் உட்பகுதித் தட்டுக்கள் ஆகியன சமநிலையில் காணப்படும். இத்திணிவுகள் மெதுவாக அசைந்து தமக்கிடையிலான சம நிலையைப் பேணிக்கொள்ளும் பூமியின் உட்பகுதியின் வெப்பநிலை மேற்பகுதியின் வெப்பநிலையை விட மிக அதிகமாகக் காணப்படும்.

இவ்வெப்பம், தட்டுக்களை நகரம் செய்யும் இத்தட்டுக்களின் நகர்வே நில நடுக்கங்க ளையும் ஆழிப் பேரலையையும் தோற்றுவிப் பதில் முன்னணி வகிக்கிறது. அத்துடன் தட்டுக்களுக்கிடையிலான இடைவெளியில் அமுக்கமொன்று தோற்றுவிக்கப்படுவதால் எரிமலை வெடிப்புகள் உருவாகும்.

சூரியனானது புவிமேற்பரப்பைச் சூடாக்குவதன் மூலம் காலநிலையைச் சீராகப் பேணுகின்றது. புவிமேற்பரப்பிலுள்ள நீரானது. ஆவியாகி மழையாகப் பெய்வதற்கும் வளியமுக்க முறைமைகளுக்கும் சூரியனே காரணமாகின்றது. சூரியவெப்பத் தினால் உயரமுக்கம் உருவாக்கப்படுவதுடன் உயரமுக்கப்பகுதிகளிலிருந்து தாழமுக்கப் பகுதிகளை நோக்கி வளி அசைவதால் காற்று உருவாகும். புயல், சூறாவளி, மினிசூறாவளி மற்றும் உக்கிரமான கடல் அலை, மழை ஆகியன தோற்றுவிக்கப்பட மேற்கூறிய செயற்பாடே காரணமாகின்றது.

இயற்கை சம நிலையானது ஆதரிக்கும் சனத் தொகை உட்கட்டமைப்பு வசதிகளின் விரிவாக்கம், நகரமயமாதல், இயற்கை வளங்களின் அதீத பாவனை, நீர், நிலம் மற்றும் வளியில் கழிவுகள் வெளியேற்றப்படல் போன்ற மனித செயற்பாடுகளால் குலைவடைகின்றது. கடந்த சில தசாப்தங்களாக நிகழ்ந்துவரும் இயற்கை அனர்த்தங்கள் முன்னைய தசாப்தங்களுடன் ஒப்பிடுகையில் சடுதியான அதிகரிப்பைக் காட்டுவதை ஆய்வுகள் அவதானித்துள்ளன.

துரிதமாக மாறிவரும் காலநிலையும் இயற்கை அனர்த்த எண்ணிக்கையின் அதிகரிக்கும் போக்குக்கு காரணமாகிறது.

வெள்ளம், நிலச்சரிவு, வறட்சி, காட்டுத்தீ உட்படப்பல இயற்கை அனர்த்தங்கள் மனித நடவடிக்கைகளினாலேயே மிகவும் உக்கிரமமாகத் தென்படுகின்றன.

ஆறு கடல் போன்ற நீர் நிலைகளின் நீர்மட்டம் உயர்வதால் நீரானது. அவற்றின் எல்லையைத் தாண்டி நிலத்தை நோக்கிப்பாய்கின்றது. அவ்வாறு நீர் பாய்ந்தோடும் சிலப்பகுதிகள் அழிவுக்குட்படுத்தப்பட்டால் மட்டுமே அது வெள்ளப்பெருக்கு எனப்படும். காடழிப்பு, திட்டமிடப்படாத நகரமயமாக்கல், விஞ்ஞான ரீதியான மண் பாதுகாப்பு நடைமுறைகளைப் பயன்படுத்தாமை போன்ற மனித செயற்பாடுகளே வெள்ள அழிவுகளின் பின்னணியில் பெரும் பங்கு வகிக்கின்றன.

நிலச்சரிவானது பூகற்பவியல் தொடர்பான ஒரு விடயமாகக் கருதப்படுவதுடன், அது நில அசைவு, மண் சரிவு போன்ற பலவற்றை உள்ளடக்கியதாகும். பொதுவாக மலைப்பாங்கான பிரதேசங்களிலும் கடற்கரையோரங்களிலும் நிலச்சரிவு தொடர்பான நிகழ்வுகள் எதிர்பார்க்கப்படும்.

நிலச்சரிவு ஏற்படுவதற்குப் புவியீர்ப்பினால் ஏற்படுத்தப்படும் விசையே அடிப்படையாக அமைகின்றது. அத்துடன் நிலக்கீழ் நீரினால் ஏற்படுத்தப்படும் அமுக்கம், சரிவுகளின் சமநிலையைக் குலைப்பதாலும் நிலைக்குத்தான மரங்கள் அல்லது பயிர்கள் இல்லாத, மண்கட்டமைப்புக் குலைந்த சரியான நிலயங்களிலும், ஆறுகளாலும் சமுத்திரங்களாலும் ஏற்படுத்தப்பட்ட மண்ணரிப்பினாலும் எரிமலை வெடிப்பு, கடும்மழை போன்ற இயற்கைக் காரணிகளாலும் நிலச்சரிவு ஏற்படும்.

இவை தவிர பாரிய இயந்திரங்கள், வாகனங்கள் மற்றும் குண்டு வெடிப்புகளின் அதிர்வு காரணமாகவும், நிலச் சரிவின் வடிவம் மாற்றியமைக்கப்படும் வகையிலான வேலைத்திட்டங்களாலும் உறுதியற்ற நில மேற்பரப்பில் ஆழ வேரூன்றிய தாவரங்களை அழிப்பதாலும், நிலத்தினுள் வடிந்தோடும் நீரினளவைக் குறைக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் நிர்மாணம், விவசாயம், வனவளம் தொடர்பான செயற்பாடுகளாலும் நிலச்சரிவு ஏற்படுகின்றது.

மிகவும் பாரதூரமான அழிவுகளை ஏற்படுத்தும் அனர்த்தங்களிலொன்றாகக் கருதப்படும். காட்டத்தீயானது வெப்பமான காலநிலை அதிகரிக்கும். சந்தர்ப்பங்களில் மர இலைகளின் வடிவிலுள்ள எரிபொருட்கள் தமது எரிபற்று நிலையை அடைவதால் ஏற்படுகின்றது.

நீர்வழங்கலில் ஏற்படும் பற்றாக்குறை காரணமாகவே வறட்சி ஏற்படுகின்றது. சில பிரதேசங்களில் குறுகியகால வறட்சி சாதாரணமாகக் கருதப்படுகிறது. ஆனால் வறட்சி மிக நீண்டகாலத்துக்கு நீடிக்கப்படும் சந்தர்ப்பங்களும் காணப்படுகின்றன.

உலக வரை படத்திலே இலங்கை ஒரு மிகச் சிறிய தீவாக இருக்கின்ற போதிலும் இயற்கை அனர்த்தங்களால் அதிகளவில் பாதிக்கப்படுகின்ற உலக நாடுகளுள் 42 ஆவது இடத்தை வகிக்கின்றது. 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ம் திகதி ஆழிப்பேரலை அனர்த்தத்தை எதிர்நோக்கும் வரை அடிக்கடி இடம்பெறும் வெள்ளப்பெருக்கு கடலரிப்பு, மண்சரிவு, வறட்சி போன்றனவே நாம் எதிர்நோக்கிய இயற்கை அனர்த்தங்களாகக் காணப்பட்டன.

இலங்கையைப் பொறுத்தவரையில் மலைநாட்டைப் பெரும் அச்சறுத்தலுக்குள்ளாகும் இயற்கை அனர்த்தமாக நிலச்சரிவு காணப்படுகின்றது. நிலச்சரிவு அபாயமுள்ள மாவட்டங்களாக பதுளை, நுவரெலியா, இரத்தினபுரி, கேகாலை, கண்டி, மாத்தளை, களுத்துறை, காலி, மாத்தறை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்கள் அறியப்பட்டுள்ளன.


குறுகிய காலத்தில் கிடைக்கும் தேவைக்கதிகமான மழைவீழ்ச்சி காரணமாக வழிந்தோடும் நீர் இயற்கை நீர் மேற்பரப்புத் தொகுதிகளின், கொள்ளளவை மீறும் சந்தர்ப்பங்களில் வெள்ளம் உருவாகும். இலங்கையின் பிரதான ஆறுகள் யாவும் மத்திய மலைநாட்டிலேயே உற்பத்தியாகின்றன. மலையகப் பிரதேசங்கள் மழை வீழ்ச்சியை எதிர்கொள்ளும் போது, மலைகள் சூழ்ந்திருக்கும் மேட்டுநிலப் பிரதேசங்களில் குறுகிய காலத்துக்குள்ளேயே வெள்ள அபாயம் ஏற்படும். இதன் காரணமாக, அப்பிரதேச மக்கள் காலங்காலமாகப் பெருஞ்சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். இலங்கையின் மேற்கு, தென்மேற்கு, வடக்கு, வடகிழக்கு, கிழக்கு பகுதிகளே வெள்ள அபாயத்தை எதிர்நோக்கும் பகுதிகளாகும். போதியளவு வடிகாலமைப்பு வசதிகளின்மையும் திட்மிடப்படாத துரித அபிவிருத்திச் செயற்றிட்டங்கள் மற்றும் நிலப்பாவனை முறைமைகளும் ஆறுகள் பெருக்கெடுக்கக் காரணமாகின்றன.

இலங்கையின் மேற்குப் பகுதியிலுள்ள ஆறுகளில் வருடம் முழுவதும் நீர் காணப்படும். ஆனால் ஏனைய பகுதிகளிலுள்ள ஆறுகள் சிலபருவங்களில் வற்றி விடும் தன்மையானது. ஆதலால் அப்பகுதிகளில் வறட்சியென்பது தவிர்க்க முடியாததொரு அனர்த்தமாக மாறிவிடுகிறது. இலங்கையில், மழை வீழ்ச்சியின் போக்கு அண்மைக் காலமாக மாறிவருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் வறட்சியின் அச்சுறுத்தல் எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்கலாமெனக் கருதப்படுகிறது.

இலங்கையின் தென் கீழ் வட மற்றும் வடமேல் மாகாணங்களே இவ்வச்சுறுத்தலை அதிகளவில் எதிர்நோக்குகின்றன. அவற்றில் அமைந்துள்ள புத்தளம், அனுராதபுரம், அம்பாந்தோட்டை, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் அம்பாறை மாவட்டங்கள் பெரியளவிலான அழிவுகளை எதிர்நோக்கும் மாவட்டங்களாகக் கருதப்படுகின்றன. இலங்கையின் மேற்குப்பகுதியே வறட்சிக்கான அபாயம் குறைந்த பகுதியாகக் கருதப்படுகின்றது.

இலங்கையில், புயல் மற்றும் சூறாவளி ஆகியன வங்காளவிரிகுடாவில் உருவாகும் தாழமுக்கம் காரணமாக உருவாகின்றன. குறிப்பிட்ட சில மாதங்களில், இலங்கையின் சில பகுதிகளை இத்தாழமுக்கம் கடந்து செல்கின்றது. கடந்த 100 வருடங்களில் சூறாவளியானது 4 தடவைகள் மட்டுமே பாரியளவிலான சேதங்களை ஏற்படுத்தியி ருந்தது. அத்துடன் குறிப்பிடத்தக்களவிலான எண்ணிக்கை புயல்களும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. இலங்கையின் கிழக்குக் கரையோரம் மற்றும் வடபகுதி ஆகியனவே பாரியளவில் அச்சுறுத்தலை எதிர்நோக்கும் பகுதிகளாகக் கருதப்படுவதுடன் 80 சதவீதமான சூறாவளி அனர்த்தங்கள் நவம்பர், டிசெம்பர் மாதங்களிலே ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இலங்கையின் தென்மேற்கு மலைப்பகுதிகளிலும், வட கிழக்கு, தெற்கு பகுதிகளிலும் ஒன்றுக்கு மேற்பட்ட இத்தகைய அனர்த்தங்களை அதிகளவில் எதிர்நோக்கும் அபாயமுடையனவாகக் கருதப்படுகின்றன. அப்பகுதிகளிலுள்ள கேகாலை, இரத்தினபுரி, மட்டக்களப்பு, அம்பாறை, காலி, அம்பாந்தோட்டை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களே முக்கியமாகக் கருதப்படுகின்றன. இத்தகைய அனர்த்தங்கள் எதிர்பார்க்ககப்படக் கூடியன. ஆனால் இவை தவிர, சமுத்திரங்களில் எங்கோ ஒரு பகுதியின் கீழுள்ள புவித்தட்டுக்கள் அசைவதால் ஏற்படும் நிலநடுக்கம், ஆழிப்பேரலைகளைத் தோற்றுவித்து, அவை மூலம் பாரியளவிலான அனர்த்தம் ஏற்படலாம். இத்தகையதொரு அனர்த்தமே 2004 இல் நாம் கண்ட சுனாமியாகும்.

பல்வேறுபட்ட அபாய அறிவிப்பு அல்லது எச்சரிக்கைச் செயற்றிட்டங்கள் காணப்பட்டாலும் இத்தகைய அனர்த்தங்களின் விளைவுகள் எதிர்வு கூறப்பட முடியாதவை.

அத்துடன் இத்தகைய இயற்கை அனர்த்தங்கள் தவிர்க்கப்பட முடியாதவையென்பதையே வரலாறும் கூறுகின்றது. இன்று நாம் காணும் கண்டங்கள் யாவும் இத்தகைய பாரியளவிலான இயற்கை அனர்த்தங்களாலுருவானவையாகவே கருதப்படுகின்றன.

பனியுகத்தில், பனிதிரண்டு காணப்பட்டமையால் சமுத்திர நீர்மட்டம் தாழ்வாகக் காணப்பட்டது. அப்போது உலகின் கண்டங்களும் தீவுகளும் பல பகுதிகளில் இணைந்து காணப்பட்டன. தமிழகத்துடன் இலங்கையும், புளோரிடாவுடன் கியூபாவும், அவுஸ்திரேலியாவுடன் பப்புவாநியூகினி தீவும் இணைந்து காணப்பட்டதாகக் கருதப்படுகிறது. பனியுகம் மாறி, சூழலின் வெப்பநிலை படிப்படியாக அதிகரிக்கப் பனிப்பாறைகள் உருகிக் கடல்மட்டம் உயர்த்ததாலேயே இன்று காணப்படும் பல தீவுகள் கண்டங்களிலிருந்து பிரிக்கப்பட்டு உருவாக்கப்பட்டதாகக் தெரிவிக்கப்படுகிறது.

ஆதி நாகரிகங்களான இந்து நாகரிகம், தென்னமரிக்காவின் மாயா நாகரிகம் முதல் கிரேக்க ட்ராய் சமுதாயம் வரை திடீரென அழிந்து கட்டங்கள் சிதைந்து போனமைக்குப் பெரும் பூகம்பங்கள் காரணமாக அமைந்திருக்கலாமென ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். பூம்புகார் நகர் கடலுக்கடியில் சென்றமைக்கும் கடற்கோள் அனர்த்தம் காரணமாகவிருக்கலாமென நம்பப்படுகிறது.

இயற்கை அனர்த்தங்கள் பெருந்துயரையும் பாரிய அழிவுகளையும் ஏற்படுத்தினாலும் அவற்றை எமக்கான படிப்பிகையாகக் கருத வேண்டும். திணையெனும் பெயரில் வினையை விதைத்து இறுதியில் வினையையே அறுவடை செய்யும் எம்மொவ்வொருவருக்கும் ஒவ்வொரு இயற்கை அனர்த்தமும் உயிரின் மதிப்பை உணர்த்துவதாகவே தெரிகின்றது. இயற்கை அனர்த்தங்களினால் ஆறறிவற்ற ஜீவராசிகளை விட ஆறறிவுடைய மனிதனே அதிக அழிவுகளை எதிர்நோக்குகின்றானென்பது மறுக்க முடியாத உண்மையாகும். ‘சாது மிரண்டால் காடு கொள்ளாது’ என்ற முதுமொழியை, ஆழிப்பேரலை அனர்த்தத்தின் போது எம்மில் பலர் உணர்ந்திருப்பர்.

இயற்கை அனர்த்தத்திலிருந்து எம்மைப் பாதுகாக்கக் கூடிய வழிமுறைகளை எமது செயற்பாடுகள் ஒவ்வொன்றிலும் கைக்கொள்வதோடு இயற்கை அனர்த்தத்தைத் தோற்றுவிக்க ஏதோ ஒரு வகையில் காரணியாக அமையும் செயற்பாடுகளை நிறுத்தவும் ஒன்றிணைவதே எமது எதிர்காலச் சந்ததியினருக்கு நாம் செய்ய வேண்டிய கடமையாகும்.