Tuesday, February 23, 2010

காலநிலை மாற்றப் பரிசோதனையில் நீங்களும் பங்களிக்கலாம்!

எமது கலாசார முறைமைகள் சூழலையும் இயற்கையையும் அனுசரித்துப் போகக்கூடிய வகையில் அமைக்கப்பட்டவை

பூகோள வெப்பத்தை மூட்டிவிட்டது
சூரிய கதிர்களா?
பச்சையில்ல விளைவை ஆக்கும்
கரிப்புகை வாயுக்களா?
ஓசோன் குடைதனில்
விழும் ஓட்டைகளா?
வாயு மண்டலத்தில் முகில் மந்தை
உண்டாக்கும அண்டக்கதிர்களா?
அல்லது பம்பரமாய் சுற்றிவரும் பூமியின்
அச்சாணி சரிந்து போனமையா?
அல்லது எரிமலை கக்கிடும்
கரிப்புகை மண்டலமா?
ஆண்டுதோறும் காடுகள் எரிந்து
மூட்டும் புகையா?
பனியுகமும் கனல்யுகமும்
மீளும் நியதியை
குழப்பும் மனிதனா?
என்கிறது இணையத்தில் கண்ட வசனக் கவிதையொன்று!

மனிதன் கண்டமகத்தான விஞ்ஞான வளர்ச்சி கண்டு கதிகலங்கி நிற்கிறது அவன் அன்னை பூமி. பின்விளைவுகள் பற்றிய சிந்தனையின்றி விஞ்ஞானம் கண்ட அதீத வளர்ச்சி எதிர் விளைவுகளும் துரிதமாக உருவாகத் தலைப்பட்டதால், இன்று மட்டு ப்படுத்தப்பட்டுள்ளது.
காலம் கடந்து மனிதன் பெற்றிருக்கும் சுடலை ஞானம், இன்று அவனைப் பேண்தகு வழிமுறைகள் தொடர்பாகச் சிந்திக்கவைத்துள்ளது. இன்று முழு உலகுமே அவதானித்துக் கொண்டும் அவதானத் துடனும் இருக்கும் மிக முக்கியமான சூழற் பிரச்சினையாக காலநிலை மாற்றம் கருதப்படுகிறது.

எழுதும் போதோ அல்லது சொல்லும் போதோ ‘காலநிலை மாற்றம்’ எனும் பதம் மிகவும் எளிய பதமாகத் தென்பட்டாலும், அதனை விளக்குதல், மிகவும் சிக்கலானது. காலநிலை மாற்றத்தில் தெரிந்த பல காரணிகளும் தெரியாத பல காரணிகளும் செல்வாக்குச் செலுத்துகின்றன.

துருவப் பகுதிகளிலிருந்து அயனமண்டலப் பகுதிகள் வரை பல நாடுகளையும் சேர்ந்த விஞ்ஞானிகள் ஆய்வு நிலையங்களை நிறுவி ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இத்தகைய ஆய்வுகள் ஒரு சில நாட் களுடனோ அல்லது ஒரு சில மாதங் களுடனோ முடிந்து விடுபவை அல்ல. பல வருடங்களாக, ஏன் சில தசாப் தங்களாகக்கூட ஒரே ஆய்வுகள் நடந்தபடி இருக்கின்றன. இத்தகைய ஆய்வுகள் முடிவடைந்து அவற்றின் முடிவுகள் அங்கீகரிக்கப்பட்டுப்பின் விஞ்ஞான சஞ்சிகைகளில் வெளியிடப்பட மிகவும் நீண்ட காலம் எடுக்கும். அத்துடன் விஞ்ஞான சஞ்சிகைகள் ஒரு குறிப்பிட்ட படித்தவர்க்கத்தினரை மட்டுமே சென்றடைகின்றன.

இதனால் மிகவும் முக்கியமான, யாவராலும் அறியப்பட வேண்டிய பல விடயங்கள் சாதாரண பொதுமக்களைச் சென்றடைவதில்லை. அதற்கு பலரும் பலவிதமான நியாயப் பாடுகளை முன்வைக்கின்றனர். விஞ் ஞானமெனப்படுவது யாவருக்கும் பொதுவான விடயமாகக் கருதப்பட்டாலும் விஞ்ஞான மொழியைத் தெரிந்தவர்களால் மட்டுமே அதனைத் தெளிவாகப் புரிந்து கொள்ளக்கூடியதான ஒரு நிலையே இன்று காணப்படுகிறது.

விஞ்ஞானத்தால் கண்டுபிடிக்கப்படும், எதிர் கூறப்படும் விடயங்களின் பயனாளிகள் சாதாரண பொதுமக்களேயாகையால், விஞ்ஞானம் கூறும் விடயங்கள் எளிமைப்படுத்தப்பட்டு தொடர்பாடல் ஊடகங்கள் மூலம் பொதுமக்களைச் சென்றடைய வேண்டும். இதையே தொடர்பாடல் விஞ்ஞானம் என்பர்.

‘வெப்பமடையும் கோளில் தொடர்பாடல் விஞ்ஞானம்’ எனும் தலைப்பில் வள வாளர்களுடனான கலந்துரையாடலொன்றை கொழும்பு பிரிட்டிஷ் கவுன்சில் அண்மையில் ஏற்பாடு செய்திருந்தது. பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சூழல் தொடர்பான நிகழ்ச்சியொன்றின் தொகுப்பாளரும் பேச்சாளருமான காலநிதி, போல் ரோஸின் உரை நிகழ்ச்சி நிரலில் முன்னுரிமை வகித்தது. நிகழ்வின் பிரதம அதிதியாக விஞ்ஞான, தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண கலந்து கொண்டார்.

ஹிVரி ஆசியா பசுபிக்கின் இயக்குனரும் விஞ்ஞான எழுத்தாளருமான நாளக குணவர்தன கலந்துரையாடலுக்குத் தலைமை வகித்தார். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர் பேராசிரியர் எம்.டி.எம். ஜிப்ரி, இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஜயந்த வட்டவிதானகே மற்றும் கலாநிதி போல்ரோஸ் ஆகியோர் கலந்துரையாடலின் வளவாளர்களாகச் செயற்பட்டனர்.

இக் கலந்துரையாடலுக்கு ஊடகவிய லாளர்கள், விரிவுரையாளர்கள், சூழல் மற்றும் விஞ்ஞான அமைப்புக்களின் தலைவர்கள், மற்றும் சூழல் ஆர்வலர்கள் போன்ற பல்வேறுபட்ட தரப்பினரும் வருகைதந்திருந்தனர். கலாநிதி போல் ரோஸ், அந்தாட்டிக்காவில் காலநிலை மாற்றம் தொடர்பான ஆய்வொன்றில் ஈடுபட்டிருந்த விஞ்ஞானிகளுடன் இணைந்து பணியாற்றிருப்பின் இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.

ஆவணப்படங்கள் மற்றும் ஏனைய தொடர்பாடல் முறைமைகள் மூலம் அந்த ஆய்வு தொடர்பான விடயங்களை சமூகத்துக்கு எடுத்தியம்புவதே இவ்வாய்வில் இவரது பணியாகும். அது இலகுவானதல்ல. ஆய்வாளர்களுடன் துருவப்பகுதியான அந்தாட்டிக்காவியிலேயே தங்கி தனது தொடர்பாடல் முறைமைக்குத் தேவையான தரவுகளையும் தகவலையும் சேகரித்துப் பின் ஒழுங்கமைத்து பாமரருக்கும் விளங்கக்கூடிய வகையிலே வெளிப்படுத்த வேண்டும். இந்த ஆய்வு புராதன கால மெதேன் வாயு பற்றியதாகும்.

காலநிலை மாற்றத்தில் பெரும்பங்கை வகிக்கும் காரணிகளுள் வளிமண்டலத்தில் வெளியேற்றப்படும் மெதேன் வாயுவின் அளவும் ஒன்றாகும். இன்றைய காலகட்டங்களில் பல்வேறு மனித செயற்பாடுகளாலும் வழக்கமான இயற்கைச் செயற்பாடுகளாலும் மெதேன் வாயு சுழலுக்கு வெளிவிடப்படுகிறது.

இவ்வாயுவின் அளவில் ஏற்பட்ட சடுதியான அதிகரிப்பு பூமியின் வெப்பநிலையை அதிகரிப்பதில் பங்களிக்கிறது. பூமியின் வெப்பநிலை அதிகரிப்பும் அதனால் ஏற்படும் இதர விளைவுகளும் காலநிலை மாற்றத்தைத் தோற்றுவிக்க ஆரம்பித்துள்ளன. சிக்கலான இந்த காலநிலை மாற்றத்தில் முக்காலங்களிலும் மெதேனின் பங்களிப்பு எப்படி இருந்தது? எப்படி இருக்கிறது? எப்படியிருக்கும்? என ஆராய்வதே இவ்வாய்வின் நோக்கமாகும்.

பனியானது காலம் காலமாக ஒரு படையின் மேல் ஒரு படையாக படிந்தபடி செல்லும். புறக்காரணிகளால் பனி உருகுவதாயின், மேலுள்ள படைகளே முதலில் உருகத்தொடங்கும். பனியுடன் சேர்ந்து மெதேன்வாயுவும் உறை நிலையில் காணப்படும். துளை கருவிகள் மூலம் பனிப்போர்வைகளில் சிறிய ஆனால் ஆழமான துளைகளைவிட்டு பெறப்படும் உருளை வடிவான பனிக்கட்டி மாதிரிகளைச் சேமித்து ஆய்வுக்குட்படுத்துவர்.

அந்தாட்டிக்கா கண்டத்திற்கான மின்சார விநியோகத்திலிருந்து சகல வசிதிகளின் விநியோகமும் ஏனைய கண்டங்களிலிருந்தே பெறப்பட வேண்டும். ஆகையால் உயர் சக்தித் தேவையையுடைய இயந்திரங்களை இப்பகுதியில் பயன்படுத்துவது சற்றுக் கடினமானது.


இதன் காரணமாக துளை கருவிகளை ஆய்வாளர்களே இயக்குவர். இயலாத பட்சத்தில் மட்டும் சிறியளவிலான இயந்திங்களைப் பயன்படுத்தித் துளையிடுவர். இந்தத்துளையிடும் கருவிகள் இத்துளை கருவிகள் வெவ்வேறு பனிப்படைகள் கொண்டிருக்கும் பனிக்கட்டி மாதிரிகளை இலகுவாகப் பெற்றுக்கொள் வதற்குத் துணைபுரிகின்றன.

இவ்வாறு பெறப்பட்ட பனிக்கட்டி மாதிரிகள் பெயரிடப்பட்டு பனிக்குகைகளினுள் சேமிக்கப்பட்டுப் பின்னர் ஆய்வுக்காக ஆய்வு நிறுவனத்தின் தலைமையகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.

இம்மாதிரிகள் சாதாரண ஆய்வுகூடப் பரிசோதனை மாதிரிகள் போல சிறிதளவானவையல்ல. ஒரு மாதிரியே பல தொன்கள் நிறையுடையதாக இருக்கும். ஆய்வுப் பிரதே சத்தில் வைத்தே இப் பனிக்கட்டி மாத்தி ரியை உருக்கி புராதன மெதேனைப் பிரித் தெடுக்கும் செயற்பாட் டிலும் ஆய்வாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

பல தொன்கள் நிறை யுடைய பனிக்கட்டி மாதிரியை உருக்கி னால் ஒரு சீனிப் பருக்கையின் ஒன்றில் மூன்று பங்களவான மெதேன் பெறப்படும். இந்தமெதேன் மாதிரியை ஆய்வுக்குட்படுத்திப் பெறப்படும் முடிவுகளினடிப்படையில் புராதன காலத்தின் காலநிலை தொடர்பான முடிவுகளையோ அல்லது ஊகங்க ளையோ பெறமுடியுமென எதிர்பார்க்கப் படுகிறது.

அதே சமயம் அவற்றினடிப்ப டையிலும் காலநிலையின் தற்போதைய போக்கினடிப்படையிலும் எதிர்காலத்தின் காலநிலையை ஓரளவு துல்லியமாக எதிர்வு கூற முடியுமென விஞ்ஞானிகள் எதிர்ப்பார்க்கின்றனர். ஒவ்வொருவருடமும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு முடிவுகளின் போக்கு அவதானிக்கப்படும்.

இன்று சர்ச்சைக்குரிய விடயமாகி விட்ட ‘காலநிலை மாற்றம்’ தொடர்பான பரந்த அறிவைப்பெறவும், அதை ஏற்ப டுத்தும் நேடியான மற்றும் மறைமுகமான மனித செயற்பாடுகளை இனங்கண்டு அவற்றை எதிர்காலத்தில் தவிர்ப்பதற்கும் பெருந்துணை புரிகின்றன.

இச்செயற்பாடுகளின் முக்கிய பங்காளி களான சாதாரண மனிதர்களை விஞ்ஞான ஆய்வுகள் சென்றடைவதற்கு வெகுசனத் தொடர்பு ஊடகங்களின் அர்ப்பணிப்பும் ஆர்வமும் மிகவும் முக்கியமானதாகும்.

எல்லா விஞ்ஞா னிகளிடமும் சிக்கலான விடயங்களை பாமரருக்கும் விளங்கக்கூடிய வகையிலே வெளிப்படுத்தும் திறன் காணப்படாது. அதேசமயம் சில சிறந்த ஊடகவியலா ளர்களால் கூட விஞ்ஞானம் தொடர்பான விடயங்களைத் தமது ஊடகங்களில் தெளிவாக வெளிப்படுத்த முடியாமல் போகும். இந்நிலையில் தான், சிக்கலான விடயங்களையும் தெளிவாக விளக்கக்கூடிய விஞ்ஞான ஆர்வலர்களின் தேவை அவசியமாகிறது. கலாநிதி போல் ரோஸ் போன்றோரும் அத்தகையவர்களே.

இலங்கையிலே அத்தகைய சிக்கல்களைத் தவிர்ப்பதற்காக ஆர்வமுள்ள விஞ்ஞானிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனர். விஞ்ஞானம் தொடர்பான விடயங்களை மக்களுக்கு இலகுவாக விளக்குவதற்குத் தேவையான திறன்களை அவர்களிடம் விருத்திசெய்யும் வகையில் பயிற்சிப் பட்டறைகள் நடத்தப்பட்டு வருகின்றன. தேசிய விஞ்ஞான மன்றம் இவற்றிற்கான ஏற்பாடுகளை மேற்கொணடு வருவதாக கலாநிதி ஜயந்த வட்டவிதானகே தெரிவித்தார்.

பெரியளவிலான பொருட் செலவுடன் பல வருடங்களாகத் தொடர்ந்து மேற் கொள்ளப்பட்ட பல விஞ்ஞான ஆய்வுகள் கூட விஞ்ஞான சஞ்சிகைகளில் வெளி யிடப்பட்ட பின்னர் பெட்டிகளுக்குள்ளும் நூலகங்களிலும் முடங்கிப்போவது இன்று நாம் கண்கூடாகப் பார்க்கின்ற விடயமாகும். இத்தகைய ஆய்வுகள் பொதுமக்களைச் சென்றடைவதிலும் பல நடைமுறைச் சிக்கல்கள் காணப் படுவதாக வளவாளர்கள் தெரிவித்தனர்.

மருத்துவ ரீதியான ஆய்வுகளைப் பொறுத்தவரையில், முதலில் எலிகளிலேயே கருதுகோள்கள் பரிசோதிக்கப்படும். பரிசோதனை முடிவுகள் மேலதிக ஆய்வுக்காக விடப்படும். இத்தகையதொரு நிலையில் இவ்விடயங்கள் தொடர்பான செய்திகளோ அல்லது நிகழ்ச்சிகளோ பொதுமக்களைச் சென்றடைந்தால் அவை பிழையான எண்ணக்கருக்களை அவர்கள் மத்தியில் தோற்றுவிப்பதோடு சில வேளைகளில் விபரீதமான விளைவுகளையும் எற்படுத்தலாமெனக் கருதப்படுவதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

அதேபோல விஞ்ஞான ஆய்வுகளை பொதுமக்களுக்கு வெளிப்படுத்துகையில், அறிவைப் பெறும் ஒவ்வொருவரும் தமது நிலைகளுக்கமைய ஒவ்வொருவிதமாக விளங்கிக் கொள்வர். அவர்கள் தவறாக விளங்கிக்கொள்ளும் பட்சத்தில் பாரதூரமான எதிர்விளைவு ஏற்படுவதைத் தவிர்க்க முடியாமல் போகும். அத்துடன் அவர்கள் மத்தியில் அவ்விடயம் தொடர்பான குழப்பம் ஏற்பட வழிவகுக்கும்.

இன்று வாதத்திற்கெடுக்கப்படும் ‘தேங்காயெண் ணைய், உடல் நலத்துக்கு உகந்ததா? ‘8னிவிளைவிப்பதா?’ எனும் சந்தேகத்தை உதாரணமாகக் கூறலாம். இத்தகைய சந்தேகங்களுக்கான முடிவுகள் ஆய்வுகளின டிப்படையிலேயே பெறப்படுகின்றன. இன்று உண்மையெனக் கூறப்படும் விடயமொன்று நாளை பொய்யென நிருபிக்கப்படலாம்.

விஞ்ஞானம் அத்த கையது. அதன் எல்லைகள் வரையறுக் கப்படவில்லை. எனவும் வளவாளர்கள் தெரிவித்தனர். இந்த உண்மையை உண ரும் பக்குவம் பாமரருக்கு ஊட்டப்பட வேண்டும். அதற்கு விஞ்ஞானிகளுடன் கைகோர்த்து நிற்க வேண்டியது வெகுசனத் தொடர்பு ஊடகங்களின் கடமையாகும்.

விஞ்ஞான விடயங்களையும் சூழல் தொடர்பான பிரச்சினைகளையும் மக்கள் விளங்கிக் கொள்வதில் அவர்களது மனப் பாங்குடன் சமூக கலாசார நடைமுறைகளும் செல்வாக்குச் செலுத்துகின்றன. சிறு வயது முதலே அவர்களின் மனப்பாங்கில் மாற்றத்தை ஏற்படுத்துதல் மூலமே விஞ் ஞான ஆய்வுகள் மக்களைச் சென்றடைய வழிவகுக்கப்படும். அப்போதுதான் பாமரரிலிருந்து சகலரும் ஒன்றிணைந்து காலநிலை மாற்றத்தின் போக்கைப் பின் நோக்கித் திருப்பமுடியும்.

தற்போது பொதுமக்களின் பாவனைக்காகத் திறந்து விடப்பட்டுள்ள காலிமுகத்திடல் தினமும் அதிகாலையில் காட்சியளிக்கும் கோலம் மிகவும் வருந்துதற்குரியது. பச்சைதிடலெங்கும் பொலித்தீன் குப்பைகள் நிறைந்து காணப்படும். அவற்றைக் கருத்தில் கொள்ளாமல் புற்றரைக்கு நீர் பாய்ச்சப்படும் போது பொலித்தீன் குப்பைகளுடன் சேர்ந்து காணப்படும் கரையக்கூடிய மாசுக்கள் இலகுவில் தரைக்குள் ஊடுருவிவிடும்.

மதிய வேளைக்குள் சூழல் சேவைகள் பிரிவினரால் குப்பை கூளங்கள் அகற்றப்படுகின்ற போதிலும் நாட்கள் நகர, தலை நகரின் பொழுது போக்கிடங்களிளொன்றான காலி முகத்திடலும் மாசுற்ற பகுதியாக மாறி விடுமோ என்றே எண்ணத்தோன்றுகிறது. இந்நிலைக்கான பொறுப்பையேற்க வேண்டியவர்களும் நாங்களே.

‘சிறு துளி பெருவெள்ளம்’ என்ற முதுமொழி சொல்ல விளையும் கருத்து சூழலை மாசுபடுத்துவதற்கும் பொருந்தும். தலைநகரின் வனப்பைக் கூறும் காலிமுகத்திடலில் சிறியது தானே என நினைத்து நாமொவ்வொருவரும் போடும் குப்பைகள் தான், அதிகாலையில் இயற் கையை இரசிக்க வேண்டிய காலி முகத்திடலைநோக்கி முகத்தைச் சுழிக்கவைக்கிறது. இங்கு எம் ஒவ் வொருவரையும் தவிர வேறு எவரையும் குறைகூற முடியாது. இந்நிலையில் தான், எமது மனப்பாங்குகள் மாற்றப்பட வேண்டியது அவசியமாகிறது.

கீழைத்தேயக் கலாசார முறைகள் சூழலையும் இயற்கையும் அனுசரித்துப் போகக்கூடிய வகையில் அமைக்கப்பட்டவை. இன்று நாம் எமது கீர்த்தி மிகு கலாசா ரத்தைத் தொலைத்துவிட்ட அதேநேரம் மேலைத்தேயக் கலாசாரத்துக்கும் ஈடுகொடுக்கமுடியாமல் தத்தளிக்கிறோம். சட்டதிட்டங்களுக்கு அடிபணிய மறுக்கின்ற அலட்சியப்போக்கு எம்மத்தியில் இல்லா தொழிக்கப்பட வேண்டும்.

சமூகத்தின் வெவ்வேறு பிரிவுகள், விடயங்களை வெவ்வேறுவிதமாக ஏற்றுக்கொள்கின்றனர். அத்தகையதொரு நிலைமாற்றப்பட வேண்டும். எமது கல்வித் திட்டம் குரு மையக் கல்வி முறைமையிலிருந்து மாணவர் மையக் கல்வித் திட்டமாக மாற்றப்பட்டமை கூட தேவைப்படும் மனப்பாங்கு மாற்றத்திற்கான முதலடியாகக் கருதப்படலாம்.

அண்மையில் ஆய்வொன்றிற்காக சிங்கராஜவனத்தின் எல்லையோரக் கிரா மங்களுக்குச் சென்ற போது, சட்டவிரோதமாக மரங்களை வெட்டுதல் தொடர்பாக அக்கிராமவாசிகளிடம் வினவினோம். அதற்கு வனத்திலுள்ள மரங்களைச் சட்டவிரோதமாக வெட்டுதல் சூழலுக்குத் தீங்கை ஏற்படத்து மெனத் தமது பிள்ளைகள் கூறுவதால் தற்போது தாம் அத்தகைய நடவடிக்கைகளின் ஈடுபடுவதில்லையெனத் தெரிவித்தனர். அவர்களது கூற்றின் உண்மைத்தன்மை உறுதிப்படுத்தப்படாத போதிலும், இச் சம்பவத்தை கல்வித்திட்டத்தால் ஏற்பட்ட மனப்பாங்கு மாற்றமாகக் கருதலாம்.இவ்வாறு மக்களின் மனப்பாங்குகளில் மாற்றத்தையேற்படுத்துவது தனிநபருடன் சமூகமும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய கடப்பாடாகக் கருதப்படுகிறது. ஒரு ஆய்வை முடித்து வெளியிடப் பல வருடங்கள் எடுத்த காலம் போய் இன்று சகலனவும் விரைவாக வெளியிடப்படுகின் றன. இணையத் தொழில்நுட்பமும் பெருந்துணைபுரிகிறது. ஆய்வு முடிவுகளின் துல்லியம் முன்னைய காலங்களைவிடத் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. அதற்கு துரித வளர்ச்சி காணும் தகவல் தொழில்நுட்பம் உதவி புரிகிறது.

பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், காலநிலை மாற்றப் பரிசோதனையொன்றை றடைமுறைப்படுத்தி வருகிறது. ‘சுப்பர் கணனி’ எனப்படும் உயர் வினைத்திற னுடைய கணனிகளைக் கூட்டாகப் பயன்படுத்துவதைவிட தகவல் தொழில் நுட்பத்தையும் இணையத்தொழில் நுட்ப த்தையும் ஒன்றிணைத்து உலகமெங்கும் பரம்பிய கணனிகளைத் தோற்றுவிப்பதன் மூலம் இப்பரிசோதனையை மேற்கொ ள்கிறது.

இப்பரிசோதனைத் திட்டத்தில் கணனியை உடைய எவரும் இணைந்து தமது கணனியின் நினைவகத்தில் பாவிக்கப்படாமல் இருக்கும் பகுதியை இத்திட்டத்திற்குப் பயன்படுத்தலாம். பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்ட மென்பொருளொன்றை தரவிறக்கி எமது கணனியிலும் இயங்கவிடலாம். அம்மென்பொருள் உலகிலுள்ள ஏனைய அம்மென் பொருட்களுடன் இணையத் தொழில்நுட்பத்தால் இணையும். காலநிலை மாற்றம் தொடர்பாக விஞ் ஞானிகளால் பெறப்பட்ட தரவுகளை இணைந்த இம்மென்பொருள் கூட்டு ஆய்வு செய்யும்.

மிகவும் செலவு குறைந்த ஆனால் வினைத்திறன் மிக்க இந்தத் திட்டம் கூட தொடர்பாடல் விஞ்ஞானத்தின் பயனேயாகும். உலகில் கணனியும் இணைய வசதியுமுள்ள எவரும் இத்திட்டத்தில் பங்கெடுக்கலாமென்பது காலநிலை மாற்றம் தொடர்பான விழிப்புணர்வை சகலரிடமும் ஏற்படுத்த வழிவகுக்கிறது.

ஆய்வு முடிவுகள் தொடர்பான விளக்கப்படங்களை www.bbc.co.uk என்னும் இணைய முகவரியில் பார்வையிடலாம். நீங்களும் உங்கள் பங்களிப்பைச் செலுத்தலாம். அதற்கான பாதை www.bbc.co.uk > BBC > science & Nature > Climate Change Experiment . இவ்வாறு வடிவமைக்கப்பட்ட பரிசோதனைகள் கடந்தகாலங்களுக்கான முடிவுகளைப் பிழையாகத்தந்தால் அவை நிராகரிக்கப்படும். சரியாகத்தந்தால் அவ்வடிவமைப்பு எதிர்காலத்துக்குப் பாவிக்கப்படுமென கலாநிதி போல் ரோஸ் குறிப்பிட்டார்.

சமூகத்தின் மனப்பாங்கை மாற்ற சமய அமைப்புக்களினால் தான் முடியுமெனில், அவற்றினூடு மாற்றத் துக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். கொள்கை வகுப்பாளர்களும் அரசுகளும் இணைந்து, அரசியலுக்கு மட்டுமே முக்கியத்துவத்தை வழங்காமல் சூழலுக்கும் இயற்கைக்கும் சேர்த்து முக்கியத்துவத்தை வழங்கினால் வெற்றி, மனித இனத்துக்கு மட்டுமல்ல! சகல ஜீவராசிகளுக்குமே!


Wednesday, February 17, 2010

பனிப்பாறைகள் உருகுவது தொடர்ந்தால் வற்றாத ஜPவநதிகளும் உலகிலிருந்து மறைந்து போகும்பூமி தோன்றிய வரலாற்றினடிப்படையில், ஆய்வாளர்கள் பல்வேறு காலகட்டங்களை வகுத்துள்ளனர். அத்தகையதொரு காலகட்டமே பனியுகமெனக் குநிக்கப்படுகிறது.

அக்காலகட்டத்தில் பூமிப்பந்தின் பெரும்பகுதி பனிக்கட்டி ஆறுகள், பனிப்பாறைகள் மற்றும் பனிப்போர்வைகளால் மூடப்பட்டிருந்தது. பூமியின் சராசரி வெப்பநிலையானது பல நூற்றாண்டுகளாகவும் தசாப்தங்களாகவும் சீராக மாறிவந்தது.

பூமியின் வருடாந்த சராசரி வெப்பநிலை தாழ்வாகக் காணப்படும் சில காலப்பகுதிகளில், பனிப்படலங்கள் உருவாவதற்கும், அவை பூமியின் பெரும்பகுதியை மூடுவதற்கும் வழிவகுக்கப்படும்.

கடந்த 2.5 மில்லியன் வருடங்கள், ஏறத்தாழ 20க்கும் மேற்பட்ட பனியுங்கள் நிகழ்ந்திருக்கலாமென ஆய்வாளர்கள் குநிப்பிடுகின்றனர்.

அதற்கு பூமியின் வருடாந்த சராசரி வெப்பநிலையானது சில காலங்களில் மிகவும் அதிகமாகவும், சில காலங்களில் மிகவும் தாழ்வாகவும் காணப்பட்டிருந்தமையே காரணம் எனலாம்.

இத்தகைய நிகழ்வுகள் கடந்தகாலங்களி ல் ஏறத்தாழ 20க்கும் மேற்பட்ட தடவைகள் நிகழ்ந்தி ருக்கலாமென ஊகிக்க முடியும்.

இறுதியாக நிகழ்நத பனியுகமானது இற்றைக்கு ஏறத்தாழ 50,000 ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்ததாகவும், பின்னர் இற்றைக்கு 18,000 வருடங்களுக்கு முன் பூமியின் வெப்பநிலை உயர்வதற்கு ஆரம்பித்ததாகவும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

பனிமலைகள் தொடர்பாக மேற்கொள்ளப்படும் ஆய்வுகளே பனியுகங்கள் தொடர்பான முடிவுகளுக்கு வித்திட்டன. மூலமாகிய பனிமலையிலிருந்து பனிக் கட்டியாறுகள் உருவாகிக் கீழ் நோக்கி அடிவாரத்துக்கு வரும்போது மலைப் பகுதிகளிலும் மலையடிவாரங்களின் பாறைப் பகுதிகளிலும் தனித்துவமான கோலங்களைச் செதுக்கி விடுகின்றன. இத்தகைய சுவடுகளின் அடிப்படையிலேயே பனியுகங்கள் தொடர்பான கணிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டன.

இவ்வாறு நிகழ்ந்த பனியுகங்கள், பூமியின் காலநிலையிலும், அயனமண்டல உயிரினங்கனின் தோற்றத்திலும் பெரும்பங்கு வகித்தன. பனியுகம் நிகழும் காலகட்டத்தில், அயன மண்டலமானது உலர்ந்து காணப்படும் அதேவேளை, குனிர்மையான தன்மையுடையதாகவும் காணப்படும்.

இதனால் சில அயனமண்டல மழைக்காடுகள் உலர் வலயக் காடுகளாகவோ அல்லது சவன்னாக்காடுகளாகவோ மாற்றப்படும். அதே சமயம் சில அயனமண்டலக் காடுகள் இந்நிலைமையிலிருந்து தப்பித்து விலங்குகளுக்கும் தாவரங்களுக்கும் புகலிடமாக அமையும்.

இடைப்பனியுகக் காலப்பகுதிகளில் அயனமண்டலம் ஈரப்பற்றுள்ள நிலைமையை அடைகையில், அக்காடுகள் விரிவாக்கப்படுவதுடன், புகலிடம் பெற்ற தாவர மற்றும் விலங்குகளின் குடித்தொகை அதிகரிக்கப்படும்.

இன்று காணப்படும் அயனமண்டலக் காடுகள் அதிகளவிலான மழைவீழ்ச்சியைப் பெறுவதற்கும், எண்ணிக்கையில் அதிகளவான இனங்கனின் வாழிடமாகக் காணப்படுவதற்கும் இந்நிகழ்வே காரணமாகிறது. இத்தகைய காடுகளை ஆபிரிக்கா மற்றும் தென்னமெரிக்காவில் காணலாம்.

பூமியின் மேற்பரப்பிலே, ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்குப் பொருட்கள் இடம்பெயர்ந்தமையும் பனியுகம் நிகழ்ந்தமைக்கான சான்றாகக் கருதப்படுகிறது.

இவ்வாறு பனியுகங்கள் உருவாவதற்கு வானியல் ரீதியான மற்றும் புவியியல் [தியான காரணங்கள் குநிப்பிடப்படுகின்றன. சூரியப் பொட்டுக்களின் தோற்றமானது பனியுகம் உருவானதற்குரிய வானியல் ரீதியான காரணமாகக் கருதப்படுகிறது.

சூரியப் பொட்டுக்கள் எனப்படுபவை எதிர்பாராதளவிலான சூரியசக்தி வெளிவிடப்படும் சந்தர்ப்பங்கனில் ஏற்படும் வெளித்தள்ளுகைகளாகக் கருதப்படுகின்றன. வருடாந்தம் நிகழும் சூரியப் பொட்டுக்களின் எண்ணிக்கையானது 11 வருடங்களுக்கொரு முறை சீரான கோலமொன்றில் மாற்றமடைவதாகக் குநிப்பிடப்படுகிறது.


இந்த சூரியப் பொட்டுக்கள் புவிமேற்பரப்பில் பனிப்புலங்களின் அதிகரிப்புக்கும் குறைவுக்கும் காரணமாகின்றனவென விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். அதேசமயம், சூரியனைச் சுற்றி வரும் பூமியின் சுற்றுப் பாதையின் கேத்திரகணிதவியலில் ஏற்படும் மாற்றங்களும் பனியுகங்கள் உருவாகக் காரணமாகலாமென விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

புவி மேற்பரப்பில் நிகழும் மாற்றங்களும் பனியுகங்கள் உருவாகக் காரணமாகின்றன. எரிமலைகள் வெடிப்பதானது பூமியின் வெப்பநிலையில் வேறுபாடுகளைத் தோற்றுவிக்கும். அதேசமயம், எரிமலைகள் வெடிப்பதால் உருவாகும் தூசு துணிக்கைகனின் படலம் சூரியக்கதிர்களைத் தனது மேற்பரப்பில் தெநிப்படையச் செய்வதால், அவை புவி மேற்பரப்பை வந்தடைவதால் தவிர்க்கப்படுகின்றது.

எரிகற்கள் புவி மேற்பரப்பில் ஏற்படுத்தும் விளைவும் புவியின் வெப்பநிலையில் மாற்றத்தை ஏற்படுத்துமென நம்பப்படுகிறது.

கடந்த காலங்கனில் எரிகற்கள் புவிமேற்பரப்பில் மோதும் போதும் பாரியளவிலான தூசு துணிக்கைகள் வனிமண்டலத்தில் வெனிவிடப்படுகின்றன. இத்தகைய தூசு துணிக்கைகள் பூமியின் வருடாந்த சராசரி வெப்பநிலையைக் குறைப்பதில் பங்காற்றுகின்றன.

பூமியின் வருடாந்த சராசரி வெப்ப நிலையில் ஏற்படும் சிறி தளவிலான குறைவுகூட பனியுகமொன்றைத் தோற்றுவிக்குமென்பது வெளிப்படையான உண்மையாகும்.

தற்போது பெருமளவிலான பனிப்பாறைகளும் பனிக்கட்டி ஆறுகளும் பூமியின் முனைவுப் பகுதிகனிலேயே காணப்படுகின்றன. அவை இல்லாத கண்டமாக அவுஸ்திரேலியா மட்டுமே காணப்படுகிறது.

பனிப்பாறைகள் உருவாவதற்குப் பொருத்தமான நிபந்தனை காணப்படும் சில மத்திய கோட்டுப் பிரதேசங்கனிலும் இத்தகைய பனிப்பாறைகள் காணப்படுகின்றன. பனிக்கட்டி ஆறுகளுடன் சேர்த்து பாறைகள், மண், மரங்கள் மற்றும் ஏனைய சிதைவுகளும் அடித்துச் செல்லப்படுகின்றன.

கோடைக்காலத்திலேற்படும் குளிர்ந்த காலநிலையாலும் குளிர்காலங்களில் ஏற்படும் பனிப்பொழிவுகளாலும் பனிப்பாறைகள் தோற்றுவிக்கப் படுகின்றன. அந்தாட்டிக்கா பகுதிகளில் பனி வீழ்படிவு குறைவாகக் காணப்படுவதால் பனிப்பாறைகள் மிகவும் மெதுவாகவே பெருகுகின்றன.

பனிப்பொழிவு நிகழ நிகழ ஒரு படையின் மேல் அடுத்த படையாகப் பனி பெருகும். காலப்போக்கில் இப்படைகள் இணையத் தொடங்கும். அவ்வாறு இணைகையில் மேலுள்ள படைகளில் உருவாகும் அமுக்கம், கீழுள்ள படைகனிலுள்ள பனியைப் பனிக்கட்டிகளாக மாற்றும்.

இவ்வாறு பனிக்கட்டிகள் பெருகும் போது படைகளுக்கிடையிலான வளி இடைவெளியையும் சேர்த்து பனிப்பாறை உறுதிமிக்கதாக மாறும். இப்பனிப்பாறைகள் ஒளி நிறமாலையிலுள்ள நீலம் தவிர்ந்த ஏனைய நிறங்களை உறிஞ்சுவதால் அவை நீல நிறமாகக் காட்சி தருகின்றன.

இப்பனிப்பாறைகள் தமக்குத் தேவையான நிறை, புவியீ ர்ப்பு மற்றும் அமுக்கத்தைப் பெற்றவுடன், தமது சொந்தத் திணிவினால் ஏற்படுத்தப்படும் விசை காரணமாகக் கீழ் நோக்கிப் பனிக்கட்டியாறாகப் பாயும். இவ்வாறு உருவாகும் பனிக்கட்டியாறுகனிலும் பனிப்பாறைகளிலும் வருடம் முழுவதும் பனி காணப்படும். இவை பொதுவாக மலை உச்சிகள், பள்ளத்தாக்குகள் ஆகிய பகுதிகளில் காணப்படும்.

ஆனால் பனிப்பாறைகளுடன் ஒப்பிடுகையில் பனிப்போர்வைகள் வித்தியாசமானவை. இவை நிலமேற்பரப்பில் காணப்படும். இவற்நின் தடிப்பானது 4km வரை செல்லக்கூடியது. அந்தாட்டிக்கா பகுதியில் காணப்படும் பனியை பனிப்போர்வையாகவே கருதுகின்றனர்.

பனிப்பாறைகளின் ஆழத்துடன் அவற்றி ன் வெப்பநிலை மாற்றமடையும். ஆழம் அதிகரிக்க, புவி வெப்ப சக்தி காரணமாக, அவற்றி ன் வெப்பநிலை மேற்பரப்பைவிட அதிகமாகவிருக்கும்.

இயற்கையின் அருங்கொடையாகக் கருதப்படும் இந்தப்பனி, பூமியின் வெப்பநிலையை அதிகரிக்கவிடாமல் சீராகப் பேணுவதற்கும் உயிரினங்களுக்கிடையிலான சமநிலையைப் பேணுவதற்கும் பெருமளவில் பங்காற்றுகின்றது.

இன்று எங்கும் பேசப்பட்டு வரும் விடயமான காலநிலை மாற்றத்தின் விளைவுகளை ஒவ்வொருவரும் ஒவ்வொருமாதிரி விளங்கிக்கொள்வர்.

வறட்சியுடன் போராடும் விவசாயிக்குப் பட்டினியாகவும், மாலைதீவுகள் போன்ற சிறிய தீவுகளி ல் வசிக்கும் மக்களுக்கு வேறுநாடுகள் நோக்கிய இடம்பெயர்வாகவும், நகரமயப்படுத்தப் பட்ட பகுதிகனில் வாழ்வோருக்கு நீர்ப்பற்றாக்குறையாகவும் சுகாதாரப் பிரச்சினையாகவும் தென்படும்.இவ்வாறு ஒவ்வொருவரும் தத்தமது நிலைகளுக்கேற்ப புதிய புதிய பிரச்சினைகளை எதிர்கொள்கின்ற போதிலும், காலநிலை மாற்றமென்பது உலகளாவிய ரீதியில், சகல ஜீவராசிகளும் எதிர்நோக்கிவரும் முக்கிய பிரச்சினையாகும்.

இந்தக்காலநிலை மாற்றத்தை உருவாக்கும் மிக முக்கிய காரணியாக பூமியின் வருடாந்த சராசரி வெப்பநிலையுயர்வு கருதப்படுகிறது.

இவ்வாறு வெப்பநிலை உயர்வடைவதால் பனிப்பாறைகள் உருகும். பனிப்பாறைகள் உருக, புவியின் வெப்பநிலை மேலும் உயரும். இப்படியே இவை மீளும் தாக்கங்களாகத் தொடருமென எதிர்பார்க்கப்படுகிறது.

பனிப்பகுதிகளாகக் கருதப்படும் ஆர்டிக், அந்தாட்டிக்கா பகுதிகளே காலநிலை மாற்றத்துக்கான முன்னெச்சரிக்கையை விடுக்கும் தொகுதிகளாகக் கருதப்படுகின்றன. இந்த முனைவுப் பகுதிகள், வெப்பக்கதிர்களை புவி மேற்பரப்பால் உநிஞ்சப்படவிடாமல் மீண்டும் தெறி ப்படைய வைப்பதிலும் பங்களிக்கின்றன.

கைத்தொழில் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக வளிமண்டலத்தில் வெனிவிடப்படும் கழிவுகள் புவி வெப்பநிலையை அதிகரிப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன.

உலகளாவியரீதியில் வருடாந்த மொத்த உள்நாட்டு உற்பத்தியை ஒவ்வொரு நாடும் 5 சதவீதத்தால் குறைத்தால் புவியின் வருடாந்த சராசரி வெப்பநிலை 5 பாகை செல்சியசைவிட அதிகமான அளவினால் குறையுமென ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு சூழற் பிரச்சினையாக மட்டுமே காணப்பட்ட காலநிலை மாற்றம் இன்று பொருளாதாரப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இதனால் ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கு மிடையிலான இடைவெனி மேலும் அதிகமாக்கப்படுவதோடு, சூழல் அகதிகள் என்ற புதிய தரப்பினர் உருவாகும் காலமும் வெகு தொலைவில் இல்லையெனலாம்.

இக்காலநிலை மாற்றத்தை உருவாக்கும் பனிப்பாறைகள் உருகுதலானது அதிகளவில் மனித செயற்பாடுகனினாலேயே ஏற்படுகின்றது. ஆங்கிலேயப் பெளதிகவியலாளரான ஜோன் டின்டேல் என்பவர், புவியின் காலநிலையை மாற்றுவதில் காபனீரொட்சைட் மற்றும் நீராவியின் சக்தி ஆகியன பெரும் பங்கை வகிக்குமென 1863 ஆம் ஆண்டு தனது ஆய்வறிக்கையில் குநிப்பிட்டிருந்தார்.

அவர் குறிப்பிட்டதை உணர்வதற்கு எமக்கு ஏறத்தாழ ஒரு நூற்றாண்டிலும் அதிக காலம் எடுத்தது. இவ்வாறு நாம் உணர்ந்த விடயத்தைப் பரிகரிக்க, இன்னொரு நூற்றாண்டு காத்திருக்க முடியாது.

புவி வெப்பமடைவதால் பனிப்போர்வைகளும் பனிப்¡றைகளும் உருக ஆரம்பித்துள்ளன. 1990 கனின் பின்னர் அவை உருகும் வீதம் சடுதியான அதிகரிப்பைக் காட்டு கின்றது. 20 ஆம் நூற்றாண்டின் கடைசித் தசாப்தம் அந்த நூற்றாண்டி லேயே வெம்மை அதிகமாகவிருந்த தசாப்தமாகப் பதியப்பட்டது.

இந்நிகழ்வு துருவப்பகுதிகளுக்கு மட்டுமே வரையறுக்கப்படாமல் பனிப்படிவுகள் காணப்படும் சகல பிரதேசங்கனிலும் நடைபெறுகிறது.

இவ்வாறு பனியுருகுவதில் செல்வாக்குச் செலுத்தும் பிரதான காரணியாக, கரிய காபனின் படிவு கருதப்படுகிறது. உலகின் மூன்றாவது துருவமென அழைக்கப்படும் திபெத்திய மேட்டு நிலத்தில் காணப்படும் பனிப்போர்வைகளினதும், பாறைகளினதும் சராசரி வெப்பநிலை ஒவ்வொரு தசாப்தமும் 0.3 பாகை செல்சியசால் அதிகரித்து வருவதாகக் கணிப்பிடப்படுகிறது.

சுவட்டு எரிபொருட்கனின் பாவனையாலும், முக்கியமாக அவற்நின் குறைதகனத்தாலும் ஏனைய மனித செயற்பாடுகளாலும் வனிமண்டலத்தில் காபdரொட்சைட்டும் சேதனக்காபனும் கரிய காபனும் வெனிவிடப்படுகின்றன. கரிய காபன், தனது கருமைத்தன்மையால் அதிகளவிலான வெப்பக்கதிர்ப்பை உநிஞ்சுகிறது.

ஆகையால் சேதனக்காபனுடன் ஒப்பிடுகையில் வனிமண்டலத்தை அதிகளவில் வெப்பமாக்கும். வளிமண்டத்தில் வெளிவிடப்படும் காபனீரொட்சைட்டானது வனிமண்டலத்திலே ஏறத்தாழ 100 வருடங்களுக்கு நிலைத்து நிற்கும். ஆனால் இந்தக்கரிய காபனோ, ஒரு சில வாரங்களுக்கு மேல் நிலைத்து நிற்காது. எனவே காபனீரொட் சைட்டைக் கட்டுப்படுத்துவதைவிட கரிய காபனைக் கட்டுப்படுத்துவது வினைத்திறன் மிக்கதாக இருக்குமென நம்பப்படுகிறது.

இவ்வாறு கட்டுப்படுத்துவதன் பலனை உடனடியாக அறியக்கூடியதாக இருக்கும்.

வளிமண்டலத்தில் காணப்படும் இக்கரிய காபன் துணிக்கைகள் பச்சை இல்ல வாயுக்களைப் போல புவி மேற்பரப்பைச் சூடாக்குவதில்லை. இவை வளிமண்டலத்தின் வெப்பநிலையை அதிகரிப்பதால் பனிப்பாறைகள் உருகத் தொடங்கும். அதேசமயம் இந்தக் காபன் துணிக்கைகள் பனிப்போர்வைகள் மீதும் பனிப்பாறைகள் மீதும் படிவதால் அவற்றின் தூய வெண்மை நிறம் மங்கி அவை அழுக்கடைய ஆரம்பிக்கும்.

இவ்வாறு அழுக்கடைந்த பனி, சூரிய வெப்பத்தை அதிகளவில் உறிஞ்சுவதால் பனி மேலும் உருகத் தொடங்கும். கரிய காபனானது கப்பல்கள், வாகனங்கள், நிலக்கரி மின்னுற்பத்தி நிலையங்கள் வெளிவிடும் புகைகளில் அதிகளவில் காணப்படுகிறது.

ஆசியாவிலே, கரிய காபனை அதிகளவில் வெளிவிடும் நாடாக சீனா கருதப்படுகிறது. இது தவிர அதிகரிக்கும் பச்சை இல்ல வாயுக்களுடன் ஒசோன் படை அரிப்படைதலும் புவியின் வெப்பநிலையை அதிகரிப்ப தில் பங்களிக்கின்றன. இவை காரணமாகப் பனி பெருமளவில் உருக ஆரம்பித்துள்ளது.

இவ்வாறு பனி உருகிவருவதை அவதானிக்க செய்மதித் தொழில்நுட்பம் உதவுகிறது. செய்மதிப் படங்கள் மூலம் பனிப்பாறைகனில் ஏற்படும் மாற்றத்தைத் தெளிவாக அவதானிக்கலாம். அத்துடன் பனிப்பாறைகனின் பெளதிக இயல்புகளையும் துல்லியமாக அவதானிக்க முடியும்.

உருகும் பனியால் கடல்மட்டம் பாரியளவில் உயருமென எதிர்பார்க்கப் படுகிறது. கிறி ன்லாந்தில் உள்ள பனி முழுவதுமாக உருகினால், சமுத்திரங்க ளின் நீர்மட்டம் 7 பாகை செல்சியசால் உயருமென எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் எஸ்கிமோவர் போன்ற பழங்குடியினர் வாழ்விடமற்று அழிந்து போவரென எதிர்வு கூறப்படுகிறது.

வளிமண்டலத்தால் காவிச் செல்லப்படும் வெப்பம் காரணமாக உருகும் துருவப் பகுதிப் பனிப் பாறைகளால் சமுத்திர நீரோட்டங்க ளின் தன்மை மாற ஆரம்பிக்கும். சமுத்திர நீ ரோட்டங்களும் வானிலையில் செல்வாக்குச் செலுத்துவதால் வானிலையில் எதிர்பாராத மாற்றம் ஏற்படும்.

கடல் `ர்மட்டம் உயர்வடையும் அதேநேரம், கடல் `ரின் உவர்த்தன்மை குறைவடையலாமென எதிர்பார்க்கப்படுகிறது. பனி உருகத்தொடங்க, வனிமண்டலத்தில் வெனிவிடப்படும் மெதேன் வாயுவின் அளவும் அதிகரிக்கும். இந்நிகழ்வுகள் மீளும் தாக்கமாக நடைபெறுவதால் உலகளாவிய [தியில் வானிலை மற்றும் காலநிலை மாற்றங்கள் பாரியளவில் ஏற்படும்.

உருகும் பனிமலைகள் காரணமாக அவற்நிலிருந்து உருவாகும் ஆறுகள் ஊற்றெடுப்பது தடைப்படுமெனக் குநிப்பிடப்படுகிறது. திபெத்திலுள்ள மலைத் தொடர்கனில் காணப்படும் பனிச்சிகரங்கள் மிகவும் வேகமாக உருகிவருவதால் ஏரிகனின் பரப்பளவு அதிகரிப்பதுடன், புதிய பல ஏரிகள் உருவாகின்றனவென ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதன் காரணமாக நதிகளில் வெள்ளம் ஏற்படுவதுடன், வற்றாத ஜீவ நதிகள் கூட ஒரு சில பருவங்களில் மட்டுமே நீரையுடைய நதிகளாக மாற்றம் பெறும் சாத்தியக் கூறுகளும் காணப்படுகின்றன.

இன்று காணப்படும் நிலை எதிர்காலத்திலும் தொடர்ந்தால் இன்னும் 30 வருடங்களில் இமாலயப் பனிச்சிகரங்களையும் கங்கை போன்ற ஜீவநதிகளையும் கூடக் காணமுடியாமல் போகுமென ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

உயரும் கடல் மட்டத்தால் சிறிய தீவுகள் பல, கடலினுள் மூழ்கும். நன்னீர் வளம் பாதிக்கப்படும். பென்குயின், கடற்சிங்கம் போன்ற பல உயிரினங்கள் அழிவடைந்து போகும். புவி மற்றும் சமுத்திரத் தொகுதியின் சமநிலை பாதிக்கப்படுவதால் பல இயற்கை அனர்த்தங்கள் தவிர்க்க முடியாதனவாகும். அத்துடன் மறைமுகமான விளைவுகளாகக் காணப்படும் சமூக பொருளாதார நெருக்கடிகள் அதிகரிக்கும்.

மொத்தத்தில் மனிதனுட்பட சகல ஜீவராசிகனின் வாழ்வியலும் கேள்விக்குறியாகும். இந்நிலை இப்படியே தொடர்ந்தால் மனிதன் தனது வாழ்வியலை வளமாகப்பேண உருவாக்கிய முறைமைகள் அவனையே அழித்துவிடும் காலம் நெருங்குகிறதோ என்றும் எண்ணத்தோன்றுகிறது.

இனியும் காலம் தாழ்த்தாமல் நாமொவ்வொருவரும் மேற்கொள்ளும் முயற்சிகளால் புவி வெப்பமடைதலைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதன் மூலம் பனிப்பாறைகள் மேலும் உருகுவதைத் தவிர்க்கலாம்.

சேதன மற்றும் கரிய காபன் வெனிவிடப்படுவதைத் தவிர்க்கும் செயற்பாடுகளில் ஈடுபடுவதே பனி உருகுதலைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்போதுமானது. மீள உருவாக்கப்படக்கூடிய சக்தி வளங்களின் பாவனையை அதிகரிக்க வேண்டும்.

நாம் விழிப்படைவதோடு மட்டமல்லாமல் எம்மைச் சார்ந் தோருக்கும் இத்தகைய விடயங்கள் தொடர்பான விழிப்புணர்வையூட்ட வேண்டும். பூமித்தாயின் பிள்ளைகளான நாமொவ்வொருவரும் உணர்ந்து, ஒன்றிணைந்து செயற்பட்டாலன்றி வேறெந்தவகையி லும் பனிக்கட்டிகள் உருகுவதைக் கட்டுப்படுத்த முடியாதென்பதே வெளிப்படையான உண்மையாகும்.

Tuesday, February 9, 2010

உலகின் மீன் வளம் இன்னும் நாற்பது வருடங்கள் தானா?

மீனுணவென்றால் என்னவென்று வினவப் போகிறது எதிர்கால சந்ததி

இன்று சாதாரண மக்களும் உணரக்கூடிய பிரச்சினைகளான பருவகால மாற்றங்கள் கடலரிப்பு, சூழல் வெப்பநிலை உயர்வு, போன்ற சூழல் பிரச்சினைகள், மக்கள் மத்தியில் தாம் வாழும் சூழலின் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுவதற்குக் காரணமாகிவிட்டன.

காலநிலை மாற்றம், புவி வெப்ப நிலையுயர்வு, அயன மண்டலக் காடுகளின் அழிப்பு போன்ற சூழல் பிரச்சினைகளின் வரிசையில் இன்று பலராலும் பேசப்படும் மிக முக்கியமான பிரச்சினையாக மிகை மீன்பிடி கருதப்படுகிறது.

தொன்று தொட்டு நடைமுறையிலிருந்து வந்த மீன்பிடிக் கைத்தொழில் வர்த் தகமயப்பட்டு வந்ததனால் உருவாகிய விளைவே இந்த மிகை மீன் பிடியாகும்.

இதன் காரணமாக 2050 ஆம் ஆண்டளவில் உலகின் மீன் வளம் தீர்ந்துபோகுமென எதிர்பார்க்கப்படுகிறது.

மீன்பிடிக் கைத்தொழில் வர்த்தக ரீதியாக விஸ்வரூபம் எடுப்பதற்கு 1950 களின் பின்னர் உருவான காலப் பகுதி வழிவகுத்தது. துரித வளர்ச்சி கண்ட தொழில்நுட்பமும் இயந்திரமயமாக மாற்றப்பட்டு வந்த வாழ்க்கை முறைமையும் மீன்களைப் பதப்படுத்தும் தொழிற்றுறைக்கான சந்தை வாய்ப்பை உறுதிசெய்தன. இதனால் சிறுகைத் தொழிலாக இருந்து வந்த மீன்பிடித்துறை இலாபமீட்டும் தொழிற்றுறையாக மாற்றம் பெற்றது.

கடலுக்கடியில் நடக்கும் மாற்றங்கள் வெளியில் தெரியாதவை. ஆகையால் அவை செய்திகளாக வெளிப்படுத்தப் படுவதில்லை.

ஏனைய சூழற் பிரச்சினைகள் தொடர்பான கரிசனைகள் ஏற்படுத்தப்பட்டு பல ஆண்டுகளின் பின்னரே கடல் தொடர்பான பிரச்சினைகள் கண்ட றியப்பட்டன.

உலகளாவிய ரீதியில் பணம் படைத்த அரசாங்கங்கள் மீன் வளத்தை அதிகரிக்கும் முயற்சியில் அதிக முதலீட்டை மேற்கொள்கின்றன. 1950 களிலிருந்த மீன்வளம் இன்று 90 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளமையே அதற்கான காரணமாகுமென விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

மீன்பிடியானது தொன்றுதொட்டு மனித நாகரிகத்துடன் பின்னிப் பிணைந்த செயற்பாடாகவே காணப்படுகிறது. எமது உணவின் பெரும்பகுதி விவசா யத்தால் பெறப்பட்ட போதிலும், மீனு ணவும் பெரும் பங்கை வகிக்கிறது. மீன்க ளும் வரையறுக்கப்பட்ட குடித்தொகையை யுடைய விலங்கினங்களே என்பதை நாம் ஒருபோதும் உணர்வதில்லை.

அதேநேரம் மிகவும் அதிகளவில் பெறப்படும் உணவு மூலமாகவும் மீன்களே காணப்படுகின்றன. நாம் எமக்குத் தேவையான அளவு மீன்களைப் பெற வேண்டுமாயின், எமது தேவையை ஈடுசெய்யக்கூடிய வகையில் மீன்களின் குடித் தொகையும் பெருக வேண்டும்.

துரிதமாக அதிகரிக்கும் தேவைகளைப் போல மீன்களின் குடித்தொகையும் வேகமாகப் பெருகுமென எதிர்பார்க்க முடியாது. அதிகரிக்க ஆரம்பித்த மீன்பிடி வர்த்தகத்தினால், 17ஆம் நூற்றாண்டளவிலே பல அரிய மீனினங்கள் அழியும் நிலை க்குத் தள்ளப்பட்டன.


அத்திலாந்திக் சமுத்திரம் தொடர்பான தகவல்களும் தரவுகளும் 17ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்திலிருந்து சேகரிக்கப்பட்டு வருகின்றன. 17ஆம் நூற்றாண்டின் ஆரம்பகால கட்டத்தில் ஏறத்தாழ 600 மில்லியன் பச்சை ஆமைகளும் கணக்கிட முடியாதளவு கடற்சிங்கங்களும் திமிங்கிலங்களும் காணப்பட்டதாக அத் தரவுகள் தெரி விக்கின்றன.

மீனெண்ணெய்க் குளிகைகள் தயாரிக்கப் பயன்படும் மீன்களான ‘கொட்’ இன மீன் வகைகள் ஒரு காலத்தில் அத்திலாந்திக் சமுத்திரத்தில் பரவலாகக் காணப்பட்டன. கூடையொன்றினால் அள்ளக்கூடிய அளவிற்கு அவற்றின் குடித்தொகை பரம்பிக் காணப்பட்டது. ஆனால் இன்றோ அவை பெரும் அச்சுறுத்தலுக் குள்ளாகியுள்ளன.

இன்று தகரத்தில் அடைக்கப்படும் மீனினங்களுள் அதிக கேள்வியையுடைய மீனினமாகக் கருதப்படும் ‘சமன்’ மீனினமும் இதே நிலையையே எதிர்நோக்குகின்றது.

மிகை மீன்பிடியானது,

1. உயர் பயனைத் தரமுடியாத/ வளர்ச்சியடையாத மீன்களை மிகையாகப் பிடித்தல்

2. வளர்ச்சியடைந்த மீன்களை மிகையாகப் பிடித்தல்.

3. சூழல் தொகுதியிலுள்ள மீன்களல் லாத வேறு இனங்களைப் பிடி த்தலும் மிகை மீன்பிடி காரணமாக கடல் சூழல் தொகுதியின் சமநிலை குலைக்கப்படுதலும்

என 3 வகைகளாகப் பிரிக்கப்படுகிறது. வளர்ச்சியடையாத மீன்களை மிகையாகப் பிடித்தலானது மீன்கள் வளர்வதற்கான கால எல்லை அதிகரிக்கப்பட ஏதுவாகிறது. அதேசமயம் வளர்ந்த மீன்களை மிகை யாகப் பிடித்தலானது மீன்களின் குடித் தொகை பெருக்கப்படாமல் இருப்பதற்கே வழிவகுக்கும்.

இவற்றுள் மீனினங்கள் தவிர்ந்த வேறு கடல் வாழ் உயிரினங்களும் சேர்த்துப் பிடிக்கப்படுகையில் சூழல் தொகுதியின் சமநிலை குலைக்கப்படுவது டன் தேவையின்றிப் பல உயிரினங்கள் அழிவதற்கும் வழிவகுக்கும்.

இவ்வாறு அதிக கேள்வியுடைய மீனினங்கள் அருகி வருவதால், ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் போன்ற அபிவிருத்தியடைந்த நாடுகள் வர்த்தக ரீதியாகப் பெறுமதி வாய்ந்த மீனினங்க ளைச் சர்வதேசக் கடற்பரப்பிலே தேடுவ தற்கு ஆரம்பித்துள்ளன. இச்செயற்பாடானது வளர்முக நாடுகளின் உணவுப் பாதுகாப் புக்கு மாபெரும் அச்சுறுத்தலாக அமை கிறது.

தொழில் நுட்பத்தின் உயர் பிரயோகத் தையுடைய காலகட்டத்தில் வாழும் இன் றைய மனிதன் ரேடார், செய்மதித் தொழில் நுட்பங்களாலும் நவீனமயப்படுத்தப்பட்ட கப்பல் போன்ற கடற்கலங்களின் உதவியுடனும் மீன் வளத்தை இலகுவாக எடுத்துச் செல்கின்றான். கடலானது இன்றும் எம் மனக்கண்ணில் மீன்வளம் நிறைந்த பகுதியாகவே தென்படுகிறது.

ஆனால் அத்தகையதொரு காலத்தைக் கடந்து நாம் நெடுந்தூரம் பயணித்து விட்டோமென்பதே மறுக்கப்பட முடியாத உண்மை. தற்போது மனிதன் மீன் வளத்தை எடு த்துச் செல்லும் மட்டம் எதிர்காலத் திலும் தொடர்ந் தால் மீனுணவை சுவைத்தறியாத தோர் எதிர்கால சந்ததியினரையே எம்மால் உருவா க்க முடியுமென விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

வர்த்தக ரீதியி லான மீன்பிடித் தொழிலில் பயன்படும் பாரிய ட்ரோலர் கப்பல் களின் வலைகள் மிகவும் பெரியவை. அவை ஏறத்தாழ 60 மைல் நீளத்திற்கு கொழுக்கிகளால் இணைக்கப்பட்டிருக்கும். இத்தகைய செயற்பாட்டினால் பல கடல்வாழ் உயிரினங்கள் அழிந்து போகின்றன.

அத்துடன் பிடிக்கப்படும் இனங்களுள் 50 சதவீதத்திற்கு மேற்பட்டவை தேவையற்றனவாகையால் மீண்டும் கடலினுள்ளே வீசப்படுகின்றன. இவ்வாறு கடலினுள் வீசப்படும் இனங்களுள் கடற்பறவைகள், ஆமைகள் மற்றும் சுறா மீன்களும் கூட அடங்குகின்றன.

அபிவிருத்தியடைந்த நாடுகள் வறிய நாடுகளுடன் கடற்றொழில் ரீதியான பல ஒப்பந்தங்களை மேற்கொள்கின்றன. இவ்வொப்பந்தங்கள் அவ்வறிய நாடுகளின் கடல் வளத்தைச் சுரண்டும் தன்மையனவாகவே காணப்படுகின்றன.

மேற்கு ஐரோப்பிய நாடுகள் சோமாலியா போன்ற வறிய ஆபிரிக்க நாடுகளின் கடல் எல்லைகளில் மீன்பிடித்தலில் ஈடுபடுதலானது அத்தகையதோர் ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே ஆகும்.

வறிய சோமாலிய மீனவர்களால் இத்தகைய வர்த்தக ரீதியான முயற்சி களுடன் ஈடுகொடுக்க முடியாதிருக்கிறது. இதனால் அவர்கள் பட்டினியையும் இடம்பெயர்வுகளையும் எதிர் நோக்குகின்றனர்.

மீன் வளமானது சகல கடற்பரப்புகளிலும் ஒரேயளவாகப் பரம்பிக் காணப்படுவதி ல்லை. ஐரோப்பிய மீன் சந்தைகளிலே விற்பனை செய்யப்படும் மீன் வகைகளில் பெரும்பாலானவை சர்வதேசக் கடற் பரப்பில் பிடிக்கப்பட்டவையே.

இதன் காரணமாக இலங்கையுட்படப் பல நாடுகள் மீன் வளப் பற்றாகுறையை எதிர்நோக்குகின்றன. மேற்கத்தைய நாடுகளில் சூரைவகை மீன்களுக்கு இருக்கும் உயர் கேள்வியையடுத்து இலங்கையின் மஞ்சள் சூரை இன மீன்களை ஏற்றுமதி செய்கிறது.

தேயிலை, இறப்பர் பயிர்களுக்கு வயதாகும் போது அவை வேறு புதிய பயிர்களால் பிரதியீடு செய்யப்படுகின்றன. அதேபோல மீன்வளத்தைப் பயன் படுத்துகையில் அது பிரதியீடு செய்யப்பட வேண்டுமென்ற சிந்தனை பயனாளர்களுக்குத் தோன்றுவதில்லை. எல்லாம் இயற்கையின் செயலென எண்ணி, பயன்படுத்துவதில் மட்டுமே குறியாகவிருப்பவர்கள் பலர்.


சிறியளவிலான பயன்பாடுகளின் போது அத்தகைய மனப்பாங்கு ஓரளவு ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவிருப்பினும் வர்த்தக ரீதியான முயற்சிகளின் போது மீனினங்கள் முற்றாக அழிந்துவிடும் சாத்தியக் கூறுகளே அதிகளவில் காணப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அத்துடன் சுறா மீன், வாளை மீன், சூரை மீன் போன்ற பெரிய மீன் வகைகளும் பாதிப்புக்குள்ளாகுமெனக் கணிப்பிடப்படுகிறது.


கடல் வளமானது மீனுணவை மட்டடும் கொண்டதல்ல. கடல் வாழ் உயிரினங்கள் சமுத்திரங்களின் அடியிலுள்ள வாழ்வியலின் அழகை வெளிப்படுத்தும் ஆவணப்படுங்கள் மக்கள் மத்தியில் வரவேற்கப்படுகின்றன.

மீனுணவிலே அதிக விருப்புடைய அதே மனிதன் தான் இந்த உயிரிகளின் இயற்கை வாழ்வை ரசிப்பதிலும் ஆர்வம் காட்டுகிறான். ஆயிரக் கணக்கில் பணத்தைச் செலவளித்து அவற்றைப் பார்க்க விரும்புகின்றனர்.

திமிங்கிலங்களை நேரடியாகக் கடலினுள் சென்று அவதானிக்கக் கூடிய வகையிலான ஆயத்தங்களும் நடைமுறையிலுள்ளன. இலங்கையிலும் அத்தகைய ஏற்பாடுகள் அபிவிருத்தியடைந்து வருகின்றன.

சுறா மீன்கள் எப்பொழுதும் மனிதனுக்கு ஆபத்தை விளைவிப்பனவாகவே சித் தரிக்கப்படுகின்றன. ஆனால் உண்மையில் அவை அத்தகையனவல்ல. மாறாக மனி தனே தனது உணவுத் தேவைகளுக்காகவும் பணத் தேவைகளுக்காகவும் அவற்றைக் கொல்கிறான்.

ஆனால் அவற்றை அழிப்பதன் மூலம் கிடைக்கும் பணத் தினளவை விட அவற்றைப் பாதுகாப்பதன் மூலம் கிடைக்கும் பணத்தின் அளவு அதிகம் என்ற உண்மையை அழிப்பவர்கள் விளங்கிக் கொள்வதில்லை.

தென்னாபிரிக்கா, அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து, மற்றும் பசுபிக் தீவுகள் போன்ற நாடுகளின் கடலெல்லைகளுள் பாதுகாக்கப்பட்ட கடற் பகுதிகளை உருவாக்க அந்நாட்டு அரசாங்கங்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் மீன் பிடித்தல் தடைசெய்யப்பட்டிருக்கும்.

சிறு வயதிலிருந்தோ அல்லது சந்ததி சந்ததியாகவோ மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருபவர்கள் கடலில் மீன் வளம் குறைவடைந்திருப்பதைத் தாம் உணர்ந்துள்ளதாகத் தெரிவிக்கின்றனர். பேண்தகு வழி முறைகளினாலான மீன்பிடித்தலை மேற்கொள்வதும் மீன் வளத்தை முற்றாக அழிந்துபோக விடாமல் பாதுகாக்கக் கூடிய சிறந்த வழியாகக் கருதப்படுகிறது.

இலங்கையின் தென் பகுதியில் காண ப்படும் பாரம்பரிய மீன்பிடி முறைமை இதற்கு மிகச் சிறந்த உதாரணமாகும். ஒற்றைத் தூண்டிலால் இவ்வாறு மீன்களைப் பிடிக்கும் போது தேவையற்ற உயிரினங்களையும் பிடித்து மீண்டும் கடலினுள் எறியும் சந்தர்ப்பங்கள் தவிர்க்கப்படுகின்றன.

மாலைதீவுகளில் வர்த்தக நோக்கிலான மீன் பிடி வலைகளைக் கொண்டு மீன்பிடித்தல் தடை செய்யப்பட்டுள்ளதுடன் தூண்டிலால் மீன்பிடித்தல் ஊக்குவிக்கப்படுகிறது.

பாதுகாக்கப்பட்ட கடற்பகுதிகள் இலங்கையிலும் ஒருநாள் உருவாகுமென மறைந்த விஞ்ஞானியும் புனைகதை எழுத்தாளருமான ஆதர் சி. கிளார்க் எதிர்வு கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இத்தகைய பாதுகாக்கப்பட்ட கடற் பகுதியானது உல்லாசப் பயணிகளும் சூழல் ஆர்வலர்களும் கடல் வாழ் உயிரினங்களைப் பார்க்கவும் அவை தொடர்பான விடயங்களைக் கண்டறியவும் வழி சமைக்கும். அதேசமயம் கடல்வாழ் உயிரினங்களுக்கான பாதுகாப்பான வாழிடமாகவும் அமையும்.

அத்துடன் மனிதரின் நடமாட்டத்தால் கடல்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படாத வண்ணம் நடைமுறைகள் மேற்கொள்ளப்படும். சுழியோடுதல், கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் பவளப் பாறைகளைப் பார்வையிடுதல் போன்ற பொழுதுபோக்குச் செயற்பாடுகள் தற்போது மிகவும் பிரபலமடைந்து வருகின்றன.

மீன் வளம் குறைவடைவதால் உள்நாடுகளிலும் கூட மீனுணுவின் விலை அதிகரிக்கும். இதன் காரணமாக, குறைந்த வருமானமுடைய நுகர்வோரால் மீனுணவை நுகர முடியாமலே போய்விடும்.

அத்துடன் குறைவடைந்து வரும் மீன்வளம் காரணமாகவும் ஒழுங்கற்ற முகாமைத்துவத்தினாலும் மீன்பிடித்துறை வருடாந்தம் 50 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானத்தை இழந்து வருகின்றதென உலக வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.

நாட்டின் ஒவ்வொரு மீன் பிடி இறங்கு துறைக்கும் அதனூடு செல்லும் மீனவர்கள் பிடிக்கக்கூடிய மீன்களின் அளவு வரையறுக்கப்பட வேண்டும். குறித்த எல்லையினுள்ளேயுள்ள மீன்களின் குடித்தொகைக் கணிப்பீட்டின் படியே இந்த ஒதுக்கீடு மேற்கொள்ளப்படும்.

தினமும் பெறப்படும் மீன்களின் தொகை கண்காணிக்கப்பட வேண்டும். இது நடைமுறைச் சாத்தியம் குறைவான ஒரு விடயமாக இருந்தாலும் எதிர்காலத்தைக் கருத்தில் கொள்கையில் சிறந்த செயன்முறையாகவே கருதப்படுகிறது.

அத்துடன் வருடத்தில் குறித்த ஒரு பருவத்தில் குறித்த பிரதேசத்தில் மீன்பிடித்தலைத் தடைசெய்தலும் மீன் வளம் பெருக வழி செய்யும்.

இந்நடைமுறை, தென் சீனக் கடற் பரப்பில் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

மீன்வளம் குறைவடையும் விடயங்கள் தொடர்பாகவும் அவற்றைத் தடுக்க மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் தொடர்பாகவும் மீனவர்கள் விழிப்புணர்வூட் டப்பட வேண்டும். ஏனெனில் மீன் வளம் குறைவடைவதால் பாதிக்கப்படும் ஒரு தரப்பினராக அவர்கள் இருப்பதுடன் அவர்களது ஒத்துழைப்பின்றி எந்த ஒரு செயற்றிட்டமும் வெற்றியளிக்காது என்பதே நிதர்சனமான உண்மையுமாகும்.

ஆழ்கடல் மீன்பிடித் துறைக்கு வழங்கப்படும் மானியங்களை நிறுத்துதலும் நுகர்வோர் மத்தியில் விழிப்புணர்வை உருவாக்குதலும் நன்னீர் மீன் வளர்ப்பை ஊக்குவித்தலும் கூட மீன் வளத்தைப் பெருக்கும் நடவடிக்கைகளாகவே கருதப்படுகின்றன.

இலங்கையில் வருடாந்தம் 31,9120 மெற்றிக் தொன் மீன்கள் பிடிக்கப்படுகின்றன. அவற்றுள் 86 சதவீதமானவை கடலிலிருந்தே பெறப்படுகின்றன. அதே சமயம் வருடாந்தம் ஏறத்தாழ 4000 மில்லியன் ரூபாவை தகரத்தில் அடைக்கப்பட்ட மீன்களின் இறக்குமதிக்காக இலங்கை செலவழிக்கிறது.

இலங்கையைப் பொறுத்தவரையில் மனிதனால் உருவாக்கப்பட்ட 12,000 சிறியளவிலான நீர்த் தேக்கங்கள் காணப்படுகின்றன. அவற்றில் பெரும்பாலானவை புராதன இலங்கையின் அடையாளங்களாக இன்னும் காணப்படுபவையாகும்.

அத்தகைய நீர்த் தேக்கங்களை உபயோகித்து நன்னீர் மீன் வளர்ப்பை ஊக்குவிக்க முடியும். அதே சமயம் மீன் வளர்ப்பில் பாரம்பரிய மற்றும் நவீன முறைமைகள் ஒன்றிணைந்த பயிற்சிகளையும் கைக்கொள்ள முடியும். இந்நீர்த் தேக்கங்களின் மொத்தப் பரப்பளவு ஏறத்தாழ 40,000 ஹெக் டயர்களாகையால் வருடாந்தம் ஆகக் குறைந்தது 10,000 ஹெக்டயர் பரப்பையாவது இவ்வாறு பயன்படுத்தும் ஏற்பாடுகள் அரசினால் மேற்கொள் ளப்பட்டு வருகின்றன.

எமது மீன் வளத்தை அதிகரிக்கும் வகையிலான இத்தகைய நடவடிக் கைகளையும் மேற் கொள்வதன் மூலம் இறக்குமதிச் செலவை குறைக்கலாம்.

மீன் வளம் நிறைந்த எங்கள் நாட்டில் மீன் பிடித் துறையில் தன்னிறைவு காண்பதோடு மட்டுமன்றி மீனுணவைப் பற்றி மட்டுமே நாம் சிந்திக்காமல் மீன்களின் எதிர்காலம் பற்றியும் சிந்திக்கத் தலைப்பட வேண்டும். பேண்தகு வழி முறைகளால் மீன் வளத்தைப் பெருக்க ஒன்றிணை வோமாக!

Sunday, February 7, 2010

சாது மிரண்டால் காடு கொள்ளாது

"பகுத்தறிவற்ற மிருகங்களைவிட பகுத்தறிவுள்ள மனிதனே அதிக அழிவுகளை எதிர்நோக்குகின்றான்"பல்லாயிரம் உயிர்களைப் பலிகொண்ட கொடூரமான ஆழிப்பேரலை அனர்த்தம் நிகழ்ந்து சரியாக அரை தசாப்தம் கடந்துவிட்ட நிலையிலும் கூட இயற்கை அனர்த்தங்கள் தொடர்பிலான பல விடயங்கள் இன்னும் புரியாத புதிர்களாகவே காணப்படு கின்றன. இயற்கையை மீறத் தெரிந்த மனிதன், இயற்கையின் சீற்றத்தை முற்றாக எதிர்கொள்ள முடியாத நிலையிலேயே காணப்படுகின்றான்.

இயற்கை அனர்த்தமெனப்படுவது இயற்கையாகச் சூழலில் ஏற்படுத்தப்படும் நிகழ்வுகளேயாகும். அவை இயற்கையாக ஏற்படுத்தப்படினும் அவற்றின் பின்னணியில் கணிசமான பங்கை வகிப்பது மனித இனமன்றி வேறில்லை. அத்துடன் இயற்கை அனர்த்தத்தினால் ஏற்படுத்தப்படும் அழிவுகளில் பெருமளவில் பாதிக்கப்படுவதும் மனித சமுதாயமே.

இந்த பிரபஞ்சம் பஞ்ச பூதங்களாலான தென்பர். பஞ்ச பூதங்களாலான நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகியன சீற்றம் கொள்வதால் உருவாவதே இயற்கை அனர்த்த மெனக் கருதப்படுகின்றது. இப்பஞ்சபூதங்கள் நில நடுக்கம், எரிமலை வெடிப்பு, நிலச் சரிவு, வெள்ளம், கடற்கோள், சூறாவளி, காட்டுத்தீ, வறட்சியென வெவ்வேறு வடிவங்களில் தமது சீற்றத்தை வெளிப்படுத்துகின்றன.

இச்சீற்றம் பல உயிர்ச் சேதங்களையும் சொத்துக்களின் அழிவையும் ஏற்படுத்துவதையும் நாம் கண்கூடாகக் காண்கிறோம். எனினும் அவை யாவற்றிற்கு மப்பால், அவற்றை உருவாக்கும் காரணிகளைப்பற்றிச் சிந்திக்கத்தவறிவிடு கிறோம். காரணிகளைப் பற்றிச் சிந்தித்தால்தான இயற்கை அனர்த்தத்தைக் குறைப்பதற்கோ அல்லது அதிலிருந்து எம்மைப்பாது காப்பாதற்கோ உரிய வழி முறைகளைக் கையாள முடியும்.

இயற்கை அனர்த்தங்களினடிப்படை யாகவிருப்பது சூரியனும் புவியின் உட்பகுதியுமாகும். பூமியின் உட்பகுதி பூமியை வெப்பமாக்குவதன் மூலம் அதன் தட்டுக்களை அசையச் செய்யும். இத்தட்டுக்களினசைவுகளே நிலநடுக்கங்களைத் தோற்றுவிக்கும். ஆனால் இந்தத் தோற்றப்பாடுகளே, பூமி தொழிற்படும் நிலையிலிருப்பதற்கான சமிக்ஞைகளாகக் கருதப்படுகின்றன.

பூமியில் இயற்கையாகவே கண்டங்கள், சமுத்திரங்கள், மலைகள் மற்றும் சமவெளிகள் உட்பகுதித் தட்டுக்கள் ஆகியன சமநிலையில் காணப்படும். இத்திணிவுகள் மெதுவாக அசைந்து தமக்கிடையிலான சம நிலையைப் பேணிக்கொள்ளும் பூமியின் உட்பகுதியின் வெப்பநிலை மேற்பகுதியின் வெப்பநிலையை விட மிக அதிகமாகக் காணப்படும்.

இவ்வெப்பம், தட்டுக்களை நகரம் செய்யும் இத்தட்டுக்களின் நகர்வே நில நடுக்கங்க ளையும் ஆழிப் பேரலையையும் தோற்றுவிப் பதில் முன்னணி வகிக்கிறது. அத்துடன் தட்டுக்களுக்கிடையிலான இடைவெளியில் அமுக்கமொன்று தோற்றுவிக்கப்படுவதால் எரிமலை வெடிப்புகள் உருவாகும்.

சூரியனானது புவிமேற்பரப்பைச் சூடாக்குவதன் மூலம் காலநிலையைச் சீராகப் பேணுகின்றது. புவிமேற்பரப்பிலுள்ள நீரானது. ஆவியாகி மழையாகப் பெய்வதற்கும் வளியமுக்க முறைமைகளுக்கும் சூரியனே காரணமாகின்றது. சூரியவெப்பத் தினால் உயரமுக்கம் உருவாக்கப்படுவதுடன் உயரமுக்கப்பகுதிகளிலிருந்து தாழமுக்கப் பகுதிகளை நோக்கி வளி அசைவதால் காற்று உருவாகும். புயல், சூறாவளி, மினிசூறாவளி மற்றும் உக்கிரமான கடல் அலை, மழை ஆகியன தோற்றுவிக்கப்பட மேற்கூறிய செயற்பாடே காரணமாகின்றது.

இயற்கை சம நிலையானது ஆதரிக்கும் சனத் தொகை உட்கட்டமைப்பு வசதிகளின் விரிவாக்கம், நகரமயமாதல், இயற்கை வளங்களின் அதீத பாவனை, நீர், நிலம் மற்றும் வளியில் கழிவுகள் வெளியேற்றப்படல் போன்ற மனித செயற்பாடுகளால் குலைவடைகின்றது. கடந்த சில தசாப்தங்களாக நிகழ்ந்துவரும் இயற்கை அனர்த்தங்கள் முன்னைய தசாப்தங்களுடன் ஒப்பிடுகையில் சடுதியான அதிகரிப்பைக் காட்டுவதை ஆய்வுகள் அவதானித்துள்ளன.

துரிதமாக மாறிவரும் காலநிலையும் இயற்கை அனர்த்த எண்ணிக்கையின் அதிகரிக்கும் போக்குக்கு காரணமாகிறது.

வெள்ளம், நிலச்சரிவு, வறட்சி, காட்டுத்தீ உட்படப்பல இயற்கை அனர்த்தங்கள் மனித நடவடிக்கைகளினாலேயே மிகவும் உக்கிரமமாகத் தென்படுகின்றன.

ஆறு கடல் போன்ற நீர் நிலைகளின் நீர்மட்டம் உயர்வதால் நீரானது. அவற்றின் எல்லையைத் தாண்டி நிலத்தை நோக்கிப்பாய்கின்றது. அவ்வாறு நீர் பாய்ந்தோடும் சிலப்பகுதிகள் அழிவுக்குட்படுத்தப்பட்டால் மட்டுமே அது வெள்ளப்பெருக்கு எனப்படும். காடழிப்பு, திட்டமிடப்படாத நகரமயமாக்கல், விஞ்ஞான ரீதியான மண் பாதுகாப்பு நடைமுறைகளைப் பயன்படுத்தாமை போன்ற மனித செயற்பாடுகளே வெள்ள அழிவுகளின் பின்னணியில் பெரும் பங்கு வகிக்கின்றன.

நிலச்சரிவானது பூகற்பவியல் தொடர்பான ஒரு விடயமாகக் கருதப்படுவதுடன், அது நில அசைவு, மண் சரிவு போன்ற பலவற்றை உள்ளடக்கியதாகும். பொதுவாக மலைப்பாங்கான பிரதேசங்களிலும் கடற்கரையோரங்களிலும் நிலச்சரிவு தொடர்பான நிகழ்வுகள் எதிர்பார்க்கப்படும்.

நிலச்சரிவு ஏற்படுவதற்குப் புவியீர்ப்பினால் ஏற்படுத்தப்படும் விசையே அடிப்படையாக அமைகின்றது. அத்துடன் நிலக்கீழ் நீரினால் ஏற்படுத்தப்படும் அமுக்கம், சரிவுகளின் சமநிலையைக் குலைப்பதாலும் நிலைக்குத்தான மரங்கள் அல்லது பயிர்கள் இல்லாத, மண்கட்டமைப்புக் குலைந்த சரியான நிலயங்களிலும், ஆறுகளாலும் சமுத்திரங்களாலும் ஏற்படுத்தப்பட்ட மண்ணரிப்பினாலும் எரிமலை வெடிப்பு, கடும்மழை போன்ற இயற்கைக் காரணிகளாலும் நிலச்சரிவு ஏற்படும்.

இவை தவிர பாரிய இயந்திரங்கள், வாகனங்கள் மற்றும் குண்டு வெடிப்புகளின் அதிர்வு காரணமாகவும், நிலச் சரிவின் வடிவம் மாற்றியமைக்கப்படும் வகையிலான வேலைத்திட்டங்களாலும் உறுதியற்ற நில மேற்பரப்பில் ஆழ வேரூன்றிய தாவரங்களை அழிப்பதாலும், நிலத்தினுள் வடிந்தோடும் நீரினளவைக் குறைக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் நிர்மாணம், விவசாயம், வனவளம் தொடர்பான செயற்பாடுகளாலும் நிலச்சரிவு ஏற்படுகின்றது.

மிகவும் பாரதூரமான அழிவுகளை ஏற்படுத்தும் அனர்த்தங்களிலொன்றாகக் கருதப்படும். காட்டத்தீயானது வெப்பமான காலநிலை அதிகரிக்கும். சந்தர்ப்பங்களில் மர இலைகளின் வடிவிலுள்ள எரிபொருட்கள் தமது எரிபற்று நிலையை அடைவதால் ஏற்படுகின்றது.

நீர்வழங்கலில் ஏற்படும் பற்றாக்குறை காரணமாகவே வறட்சி ஏற்படுகின்றது. சில பிரதேசங்களில் குறுகியகால வறட்சி சாதாரணமாகக் கருதப்படுகிறது. ஆனால் வறட்சி மிக நீண்டகாலத்துக்கு நீடிக்கப்படும் சந்தர்ப்பங்களும் காணப்படுகின்றன.

உலக வரை படத்திலே இலங்கை ஒரு மிகச் சிறிய தீவாக இருக்கின்ற போதிலும் இயற்கை அனர்த்தங்களால் அதிகளவில் பாதிக்கப்படுகின்ற உலக நாடுகளுள் 42 ஆவது இடத்தை வகிக்கின்றது. 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ம் திகதி ஆழிப்பேரலை அனர்த்தத்தை எதிர்நோக்கும் வரை அடிக்கடி இடம்பெறும் வெள்ளப்பெருக்கு கடலரிப்பு, மண்சரிவு, வறட்சி போன்றனவே நாம் எதிர்நோக்கிய இயற்கை அனர்த்தங்களாகக் காணப்பட்டன.

இலங்கையைப் பொறுத்தவரையில் மலைநாட்டைப் பெரும் அச்சறுத்தலுக்குள்ளாகும் இயற்கை அனர்த்தமாக நிலச்சரிவு காணப்படுகின்றது. நிலச்சரிவு அபாயமுள்ள மாவட்டங்களாக பதுளை, நுவரெலியா, இரத்தினபுரி, கேகாலை, கண்டி, மாத்தளை, களுத்துறை, காலி, மாத்தறை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்கள் அறியப்பட்டுள்ளன.


குறுகிய காலத்தில் கிடைக்கும் தேவைக்கதிகமான மழைவீழ்ச்சி காரணமாக வழிந்தோடும் நீர் இயற்கை நீர் மேற்பரப்புத் தொகுதிகளின், கொள்ளளவை மீறும் சந்தர்ப்பங்களில் வெள்ளம் உருவாகும். இலங்கையின் பிரதான ஆறுகள் யாவும் மத்திய மலைநாட்டிலேயே உற்பத்தியாகின்றன. மலையகப் பிரதேசங்கள் மழை வீழ்ச்சியை எதிர்கொள்ளும் போது, மலைகள் சூழ்ந்திருக்கும் மேட்டுநிலப் பிரதேசங்களில் குறுகிய காலத்துக்குள்ளேயே வெள்ள அபாயம் ஏற்படும். இதன் காரணமாக, அப்பிரதேச மக்கள் காலங்காலமாகப் பெருஞ்சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். இலங்கையின் மேற்கு, தென்மேற்கு, வடக்கு, வடகிழக்கு, கிழக்கு பகுதிகளே வெள்ள அபாயத்தை எதிர்நோக்கும் பகுதிகளாகும். போதியளவு வடிகாலமைப்பு வசதிகளின்மையும் திட்மிடப்படாத துரித அபிவிருத்திச் செயற்றிட்டங்கள் மற்றும் நிலப்பாவனை முறைமைகளும் ஆறுகள் பெருக்கெடுக்கக் காரணமாகின்றன.

இலங்கையின் மேற்குப் பகுதியிலுள்ள ஆறுகளில் வருடம் முழுவதும் நீர் காணப்படும். ஆனால் ஏனைய பகுதிகளிலுள்ள ஆறுகள் சிலபருவங்களில் வற்றி விடும் தன்மையானது. ஆதலால் அப்பகுதிகளில் வறட்சியென்பது தவிர்க்க முடியாததொரு அனர்த்தமாக மாறிவிடுகிறது. இலங்கையில், மழை வீழ்ச்சியின் போக்கு அண்மைக் காலமாக மாறிவருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் வறட்சியின் அச்சுறுத்தல் எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்கலாமெனக் கருதப்படுகிறது.

இலங்கையின் தென் கீழ் வட மற்றும் வடமேல் மாகாணங்களே இவ்வச்சுறுத்தலை அதிகளவில் எதிர்நோக்குகின்றன. அவற்றில் அமைந்துள்ள புத்தளம், அனுராதபுரம், அம்பாந்தோட்டை, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் அம்பாறை மாவட்டங்கள் பெரியளவிலான அழிவுகளை எதிர்நோக்கும் மாவட்டங்களாகக் கருதப்படுகின்றன. இலங்கையின் மேற்குப்பகுதியே வறட்சிக்கான அபாயம் குறைந்த பகுதியாகக் கருதப்படுகின்றது.

இலங்கையில், புயல் மற்றும் சூறாவளி ஆகியன வங்காளவிரிகுடாவில் உருவாகும் தாழமுக்கம் காரணமாக உருவாகின்றன. குறிப்பிட்ட சில மாதங்களில், இலங்கையின் சில பகுதிகளை இத்தாழமுக்கம் கடந்து செல்கின்றது. கடந்த 100 வருடங்களில் சூறாவளியானது 4 தடவைகள் மட்டுமே பாரியளவிலான சேதங்களை ஏற்படுத்தியி ருந்தது. அத்துடன் குறிப்பிடத்தக்களவிலான எண்ணிக்கை புயல்களும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. இலங்கையின் கிழக்குக் கரையோரம் மற்றும் வடபகுதி ஆகியனவே பாரியளவில் அச்சுறுத்தலை எதிர்நோக்கும் பகுதிகளாகக் கருதப்படுவதுடன் 80 சதவீதமான சூறாவளி அனர்த்தங்கள் நவம்பர், டிசெம்பர் மாதங்களிலே ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இலங்கையின் தென்மேற்கு மலைப்பகுதிகளிலும், வட கிழக்கு, தெற்கு பகுதிகளிலும் ஒன்றுக்கு மேற்பட்ட இத்தகைய அனர்த்தங்களை அதிகளவில் எதிர்நோக்கும் அபாயமுடையனவாகக் கருதப்படுகின்றன. அப்பகுதிகளிலுள்ள கேகாலை, இரத்தினபுரி, மட்டக்களப்பு, அம்பாறை, காலி, அம்பாந்தோட்டை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களே முக்கியமாகக் கருதப்படுகின்றன. இத்தகைய அனர்த்தங்கள் எதிர்பார்க்ககப்படக் கூடியன. ஆனால் இவை தவிர, சமுத்திரங்களில் எங்கோ ஒரு பகுதியின் கீழுள்ள புவித்தட்டுக்கள் அசைவதால் ஏற்படும் நிலநடுக்கம், ஆழிப்பேரலைகளைத் தோற்றுவித்து, அவை மூலம் பாரியளவிலான அனர்த்தம் ஏற்படலாம். இத்தகையதொரு அனர்த்தமே 2004 இல் நாம் கண்ட சுனாமியாகும்.

பல்வேறுபட்ட அபாய அறிவிப்பு அல்லது எச்சரிக்கைச் செயற்றிட்டங்கள் காணப்பட்டாலும் இத்தகைய அனர்த்தங்களின் விளைவுகள் எதிர்வு கூறப்பட முடியாதவை.

அத்துடன் இத்தகைய இயற்கை அனர்த்தங்கள் தவிர்க்கப்பட முடியாதவையென்பதையே வரலாறும் கூறுகின்றது. இன்று நாம் காணும் கண்டங்கள் யாவும் இத்தகைய பாரியளவிலான இயற்கை அனர்த்தங்களாலுருவானவையாகவே கருதப்படுகின்றன.

பனியுகத்தில், பனிதிரண்டு காணப்பட்டமையால் சமுத்திர நீர்மட்டம் தாழ்வாகக் காணப்பட்டது. அப்போது உலகின் கண்டங்களும் தீவுகளும் பல பகுதிகளில் இணைந்து காணப்பட்டன. தமிழகத்துடன் இலங்கையும், புளோரிடாவுடன் கியூபாவும், அவுஸ்திரேலியாவுடன் பப்புவாநியூகினி தீவும் இணைந்து காணப்பட்டதாகக் கருதப்படுகிறது. பனியுகம் மாறி, சூழலின் வெப்பநிலை படிப்படியாக அதிகரிக்கப் பனிப்பாறைகள் உருகிக் கடல்மட்டம் உயர்த்ததாலேயே இன்று காணப்படும் பல தீவுகள் கண்டங்களிலிருந்து பிரிக்கப்பட்டு உருவாக்கப்பட்டதாகக் தெரிவிக்கப்படுகிறது.

ஆதி நாகரிகங்களான இந்து நாகரிகம், தென்னமரிக்காவின் மாயா நாகரிகம் முதல் கிரேக்க ட்ராய் சமுதாயம் வரை திடீரென அழிந்து கட்டங்கள் சிதைந்து போனமைக்குப் பெரும் பூகம்பங்கள் காரணமாக அமைந்திருக்கலாமென ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். பூம்புகார் நகர் கடலுக்கடியில் சென்றமைக்கும் கடற்கோள் அனர்த்தம் காரணமாகவிருக்கலாமென நம்பப்படுகிறது.

இயற்கை அனர்த்தங்கள் பெருந்துயரையும் பாரிய அழிவுகளையும் ஏற்படுத்தினாலும் அவற்றை எமக்கான படிப்பிகையாகக் கருத வேண்டும். திணையெனும் பெயரில் வினையை விதைத்து இறுதியில் வினையையே அறுவடை செய்யும் எம்மொவ்வொருவருக்கும் ஒவ்வொரு இயற்கை அனர்த்தமும் உயிரின் மதிப்பை உணர்த்துவதாகவே தெரிகின்றது. இயற்கை அனர்த்தங்களினால் ஆறறிவற்ற ஜீவராசிகளை விட ஆறறிவுடைய மனிதனே அதிக அழிவுகளை எதிர்நோக்குகின்றானென்பது மறுக்க முடியாத உண்மையாகும். ‘சாது மிரண்டால் காடு கொள்ளாது’ என்ற முதுமொழியை, ஆழிப்பேரலை அனர்த்தத்தின் போது எம்மில் பலர் உணர்ந்திருப்பர்.

இயற்கை அனர்த்தத்திலிருந்து எம்மைப் பாதுகாக்கக் கூடிய வழிமுறைகளை எமது செயற்பாடுகள் ஒவ்வொன்றிலும் கைக்கொள்வதோடு இயற்கை அனர்த்தத்தைத் தோற்றுவிக்க ஏதோ ஒரு வகையில் காரணியாக அமையும் செயற்பாடுகளை நிறுத்தவும் ஒன்றிணைவதே எமது எதிர்காலச் சந்ததியினருக்கு நாம் செய்ய வேண்டிய கடமையாகும்.

Thursday, February 4, 2010

உலகின் மின்சாரத் தேவையை பூர்த்தி செய்ய சமுத்திரத்தில் சக்திவளம்

அபிவிருத்திக்கான பாதையில் அடியெடுத்து வைத்துள்ள இலங்கையின் எதிர்காலத்தைக் கருத்தில் கொள்கையில், மீள உருவாக்கப்படக்கூடிய சக்தி வளங்களின் உபயோகம் தொடர்பான சிந்தனைகளும் ஆராய்ச்சிகளும் காலத்தின் தேவைகளாகக் கருதப்படுகின்றன.

இயற்கை அன்னை தந்த அருங்கொடைகளை ஒருங்கே பெற்ற ஒரு சில தேசங்களுள் இலங்கையும் ஒன்றாகும். அது சங்கத்தமிழ் கூறும் ஐவகை நிலங்களுள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய நான்கையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

உலக வரைப்படத்தில் ஒரு புள்ளியாகத் தெரிந்தாலும் எத்தனையோ பெரிய நாடுகளுக்கு கிடைக்காத இயற்கை அன்னையின் அருள் இலங்கைக்கு கிடைத்துள்ளது.

‘நான்’ என்ற சிறிய உலகத்தினுள்ளேயே சஞ்சரித்து, எம்மைப்பபற்றி மட்டுமே சிந்திக்கப் பழகியதால் இவை தொடர்பான விடயங்கள் எம்மை அணுகுவதற்குக்கூட இடமளிக்கத் தவறிவிடுகிறோம்.

பூமியில் ஏறத்தாழ 75 சதவீதமான பகுதி சமுத்திரங்களால் சூடிப்பட்டிருக்கிறது.

சமுத்திரங்களின் நீர், நீர்மேற்பரப்பிலுள்ள வளி, சமுத்திரங்களின் அடியிலுள்ள நிலம் ஆகியன எண்ணிலடங்காத சக்திவளங்களைக் கொண்டுள்ளன.

அச்சக்தி வளங்களுள் மீள உருவாக்கப்படமுடியாத சக்தி வளங்களாகிய பெற்றோலிய எண்ணெய் போன்றனவும் மீள உருவாக்கப்படக்கூடிய சக்தி வளங்களாகிய அலைவீச்ச சக்தி, சமுத்திர நீரோட்ட சக்தி, சமுத்திரவெப்பசக்தி போன்றனவும் அடங்கும்.

பல இடங்களில் கடலுக்கடியில் பெற்றோலியம் மற்றும் இயற்கை வாயு ஆகிய பாரிய படிவுகளாகக் காணப்படுகின்றன. அண்மைக்காலங்களில் சம்பிரதாய பூர்வமான சக்தி மூலங்களாகக் கருதப்படும் மீள உருவாக்கப்பட முடியாத சக்தி வளங்களாகிய நிலக்கரி, பெற்றோலியம் போன்றவற்றின் விலை எதிர்பாராதவிதத்தில் அதிகரித்து வருகின்றமையானது புதிய சக்தி மூலங்களைத் தேடும் பணிக்கு வித்திட்டது. அத்துடன் இன்று நாம் எதிர்நோக்கி வரும் சூழல் மாசடைதல் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான பிரச்சினைகளிலும் அதிகளவில் செல்வாக்குச் செலுத்தும் காரணியாக, மீள உருவாக்கப்பட முடியாத சக்தி வளங்களின் பயன்பாடு அமைகிறது. இதன் காரணமாக, இந்த சூழல் மாசடைதல் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான தேடலும் அதிகரித்தது.


சமுத்திரநீரானது சூரியனின் வெப்பம் காரணமாக வெப்பசக்தியையும் அலைகள் மற்றும் நீரோட்டங்கள் காரணமாக இயக்கச் சக்தியையும் பிறப்பிக்கவல்லது.

உலகின் மிகப் பெரிய சூரிய சக்தி சேமிப்பான்களாக சமுத்திரங்கள் கருதப்படுகின்றன. சமுத்திரங்களின் ஆழப்பகுதிகளை விட நீர்மேற்பரப்பானது சூரிய வெப்பத்தால் அதிகளவில் சூடாகும். இதன் காரணமாக சமுத்திரத்தின் மேற்பரப்புக்கும் இடையில் வெப்பநிலை வித்தியாசம் ஒன்று உருவாகும்.

வெப்பநிலை வித்தியாசங்களே வெப்பசக்தியை ஒருவாக்குகின்றன. இவ்வாறு உருவாக்கப்படும் சமுத்திர வெப்பசக்தியானது மின்சார உற்பத்தி போன்ற பலவகைகளிலும் பாவிக்கப்படக்கூடியது.

ஆனால் ஆழ்கடல் அல்லது ஆழமான சமுத்திரப்பகுதிகளிலேயே இவ்வாறு மின்சாரத்தை உற்பத்தி செய்யலாம். சூரிய வெப்பத்தால் உருவாகும் இந்த சமுத்திரவெப்பசக்தியும் காற்றுமே சமுத்திர நீரோட்டங்களை உருவாக்குகின்றன.

காற்று, நீரின் உவர்த்தன்மை, வெப்பநிலை மற்றும் புவிச்சுழற்சியாகிய காரணிகளே சமுத்திர நீரோட்டங்களின் சிக்கலான தோற்றப்பாட்டைப் பாதிக்கின்றன அத்துடன் சமுத்திர நீரோட்டங்கள் சார்பளவில் மாறாதவை. அத்துடன் சமுத்திர நீரின் தொடர் நகர்வுக்கேற்ப அவை ஒரே திசையில் நகரும் தன்மையன. கலிபோர்னியா நீரோட்டம், புளோரிடா நீரிணை நீரோட்டம் போன்றவற்றை உதாரணமாகக் கூறலாம்.

காற்றின் வேகத்துடன் ஒப்பிடுகையில் சமுத்திர நீரோட்டங்களின் வேகம் குறைவானது. ஆனால் நீரின் அடர்த்தி காரணமாக, அவை பாரியளவிலான சக்தியைக்காவுகின்றன.

வளியின் அடர்த்தியுடன் ஒப்பிடுகையில் நீரின் அடர்த்தியானது 800 மடங்குகள் அதிகமானது. ஆகையால் ஒரே மேற்பரப்பளவில், மணித்தியாலயத்துக்கு 19.2 கிலோமீற்றர் வேகத்தில் நகரும் நீர்காவும் சக்தியானது, ஒரு மணித்தியாலத்துக்கு 110 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்கும் காற்றுகாவும் சக்திக்கு நிகரானது.

இத்தகைய பாரியளவிலான சக்தி மனிதனால் பாவிக்கக்கூடிய வழியில் மாற்றியமைக்கப்படலாம்.

ஜப்பான், சீனா, ஐக்கிய அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் தற்போது இந்து சமுத்திர நீரோட்டங்கள் காவும் சக்தியை உபயோகிக்கக்கூடிய வழிவகைகள் தொடர்பாக ஆர்வம் கொண்டு செயற்பட்டு வருகின்றன.

இயந்திரங்கள் இணைக்கப்பட்டு இன்னும் வர்த்தக ரீதியாக இச்சக்தி உபயோகிக்கப்படா விடினும் சிறியளவிலான பரீட்சார்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட வண்ணம் தான் இருக்கின்றன. அலை நீரோட்டங்கள் கரைகளுக்கு அண்மையாகக் காணப்படும்.

சமுத்திரங்களுக்கடியில் ஒன்றுடனொன்று இணைக்கப்பட்ட நீர்ச்சுழலி இயந்திரங்களைச் சுழல விடுவதன் மூலம் நீரோட்டங்கள் காவும் சக்தியை மின்சக்தியாக மாற்ற முடியும்.

இத்தகைய நீர்ச்சுலி இயந்திரங்களை ஒரு குழுமமாக அமைப்பதன் மூலம் கடல் நீரோட்டப் பண்ணையை அமைத்து வினைத்திறன் மிக்கவகையில் மின்சாரத்தைப் பெற முடியும்.

எந்தவித எரிபொருட் செலவுமின்றி, உலகின் சக்தித் தேவையைப் பூர்த்தி செய்யத் தேவையான மின்சாரத்தை விட ஐந்து மடங்கு மின்சாரத்தை பெற முடியும்.

உலகின் வருடாந்த சக்தித் தேவையினடிப்படையில் சராசரியாக 14,000 டெரா வற் மணித்தியாலங்கள் மின்சாரம் பாவிக்கப்படுகிறது. ஆனால் சமுத்திர நீரோட்டங்களின் சக்தியால் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் அளவு 80,000 டெராவற் மணித்தியாலங்களையும் தாண்டுமெனக் குறிப்பிடப்படுகிறது.

இவ்வழியில் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான முதலீட்டுச் செலவு மிகவும் அதிகமென எதிர்பார்க்கப்படுகிறது. இது போன்றே ஒரு காலத்தில் முதலீட்டுச் செலவு மிகவும் உயர்வாகவிருந்த சூரிய கலங்கள் மற்றும் சூரியப்படல்களில் முதலீட்டுச் செலவானது நனோ தொழில்நுட்பம் உட்பட்ட புதிய கண்டு பிடிப்புகளால் குறைவடைந்து வருவதும் நாமறிந்ததேயாகும்.

சூரியன் சமுத்திரங்களில் தாக்கத்தைச் செலுத்தினாலும் அலைகளின் உயர்வும் தாழ்வும் சந்திரனின் ஈர்ப்புச் சக்தி காரணமாகவே ஏற்படுகிறது. அத்துடன் அலைகள் காற்றினால் ஏற்படுகின்றன. இச்சக்தியிலிருந்து மின்சார சக்தியைப் பெறுவதற்கு இயங்கு பொறிகளையுடைய கருவிகளும் அவசியமாகின்றன.


அலைவீச்ச வலுவானது நீரின் அடர்த்தி, நீரோட்டத்தின் வேகம், சுழலியின் ஆரை ஆகிவற்றில் தங்கியுள்ள சார்பாகவே கருதப்படுகிறது. அலைவீச்சத்தில் தேக்கப்பட்டிருக்கும் சக்தியையும் மின்சக்தியாக மாற்றுவதற்கான பொறிமுறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

நவீன தொழில்நுட்பத்தை வர்த்தக மயமாக்கும் செற்பாடுகளில் இத்தகைய மீள உருவாக்கப்படக்கூடிய சக்திவளங்களின் தேவை இன்றியமையாததாகி விட்டது.

சூரிய சக்தி மற்றும் காற்றுச் சக்தி தொடர்பான தொழில்நுட்ப முறைமைகள் வர்த்தக மயப்படுத்தப்பட்ட அளவுக்கு சமுத்திரங்களில் தேக்கப்பட்டுள்ள சக்திவளங்களின் பிரயோகங்கள் வர்த்தகமயப்படுத்தப்படவில்லை.

பல பகுதிகளில் பரீட்சார்த்தச் செயன்முறைகளாக இச்சக்தி வளங்களின் மூலம் மின்சார உற்பத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அபிவிருத்தியடைந்த நாடுகளே இன்று முழு உலகும் எதிர்நோக்கும் சூழற் பிரச்சினைகளுக்கான அடிப்படைக் காரணகார்த்தாக்களாகக் கருதப்படுகின்றன.

இன்றும் அதிகளவிலான காபனைச் சூழலுக்கு வெளிவிடும் நாடுகளாகவே அவை காணப்படுகின்றன. அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் சூழல் மாசடைதலுக்குத்து தாம் பங்களிக்கும் சதவீதத்தை விட அதிகளவான சதவீத விளைவுகளை அநுபவிக்கின்றன.

இந்நிலையில், இத்தகைய அபிவிருத்தியடைந்த நாடுகள், அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் மீள உருவாக்கப்பட முடியாத சக்திவளங்களின் பாவனையை ஊக்குவிக்கும் செயற்றிட்டங்களை மேற்கொள்கின்றன. ஆனால் தாமோ மீள உருவாக்கப்படக்கூடிய சக்திவளங்களின் பிரயோகத்துக்கு மாறுவதுடன், அவை தொடர்பான ஆய்வுகளுக்கும் பெருந்தொகையான பணத்தை முதலீடு செய்கின்றன. ஆய்வார்களால், இது வளர்முக நாடுகளைப்படு குழிக்குள் தள்ளும் ஒரு முயற்சியாகவே கருதப்படுகிறது.

இலங்கையைப் பொறுத்தவரையிலும், சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய, மீள உருவாக்கப்பட முடியாத சக்திவளங்களைக் கொண்டு சக்தி பிறப்பாக்க நடவடிக்கைகள் புதிதாக ஆரம்பிக்கப்படுவதை விட, மீள உருவாக்கப்படக்கூடிய சக்தி வளங்களின் பாவனை அவை தொடர்பான ஆய்வுகள் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும். சமுத்திரங்களில் தேக்கப்பட்டிருக்கும் இத்தகைய சக்தி வளங்களைப் பெற்றுக் கொள்வதற்கு இலங்கையின் யாழ்- தீவகம், திருகோணமலை, காலி, அம்பாந்தோட்டை, மன்னார் வளைகுடா ஆகிய பிரதேசங்களில் சாதகமான நிலைமைகள் காணப்படுவதாக உள்நாட்டு மற்றும் சர்வதேச மட்டத்திலான ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மொறட்டுவ பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடமும் இத்தகைய ஆய்வுகளை மேற்கொண்டு சாதகமான முடிவுகளைக் கண்டிருக்கிறது.

சமுத்திர வெப்பசக்தி, அலைவீச்ச சக்தி, நீரோட்டசக்தி ஆகியவற்றைக் கொண்டு மின்சாரசக்தியைப் பெறும் போது சூழலுக்குத் தீங்கை விளைவிக்கக்கூடிய எந்தவொரு விளைபொருளும் வெளிவிடப்பட மாட்டாது.

இந்தக் காரணிதான் இத்தகைய சக்தி வளங்களைப் பற்றி மேலும் சிந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆரம்ப முதலீட்டைத் தவிர மின்னை உற்பத்தி செய்வதற்கான நாளாந்தச் செலவுகள் எவையும் உருவாகாது.

அத்துடன் இலங்கையைப் பொறுத்தவரையில், இலங்கையின் புவியியல் அமைப்பு இச்சக்தி வளங்களின் பாவனைக்குச் சாதகமானதோர் நிலைமையையே தோற்றுவித்துள்ளது.

அத்துடன் மீள உருவாக்கப்படகூடிய இந்த சக்தி வளங்களைப் பயன்படுத்த மிகப்பெரும் மூலதனத்தைப் பாவிக்க வேண்டிய அவசியமில்லை. அத்துடன் முதலீட்டை ஒரேயடியாக இடாமல் கட்டம் கட்டமாக இட்டு அபிவிருத்தி செய்யலாம்.

இவ்வியந்திரத் தொகுதியில் சேமிப்பான்களையும் இணைப்பதன் மூலம் தொடர்ச்சியாக மின்சாரத்தைப் பெற்றுக் கொள்ளக்கூடிய வழிவகைகள் செய்யப்படலாம்.

இவ்வளங்கள் தீர்ந்து போகும் என்பதற்கு மாறாக, மீண்டும் மீண்டும் புதுப்பிக்கப்படும் வளங்களாகும். இயந்திரங்களைத் தொடக்கி வைப்பதற்குக் கூட ஐதரோகபான் எரிபொருட்களைப் பாவிக்க வேண்டியதில்லை.

அத்துடன் இச்சக்திவளங்களிலிருந்து மின்னைச் சேகரிக்கும் பொறிமுறையானது,

1. அதிகளவிலான மின்னைச் சேமிக்கும் வல்லமை

2. இடிப்பு குறைக்கப்பட்ட சேமிப்பு

3. நீடித்த ஆயுட்காலம் (பாவனைக்காலம்)

4. குறைந்த செலவு

5. சூழலை மாசுபடுத்தாத தன்மை

ஆகிய குணவியல்புகளைக் கொண்டிருத்தல் அவசியமானது. ஏனெனில் இங்கு குறிப்பிடப்படும் மின்சக்தி ஒருவாகனத்தை இயக்குவதற்குத் தேவையான மின்சகத்தி அல்ல. ஒரு நாட்டின் அல்லது உலகத்தின் மின்சக்தித் தேவையைப் பூர்த்தி செய்யக்கூடிய அளவிலான மின்சக்தியாகும்.

இச்சக்திவளங்களின் பிரயோகம் பல்வேறு சவால்களையும் எதிர்நோக்க வேண்டியிருக்கிறது. இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் துருப்பிடித்தலானது, இத்துறை எதிர்நோக்கும் முக்கிய சவாலாகும். சமுத்திர நீரின் உவர்த்தன்மை, துருப்பிடித்தலைத் தூண்டும் தன்மையது.

ஆகையால் துருப்பிடித்தல் காப்பு முறைகளை, உச்ச வினைத்திறனுடன் நடைமுறைப்படுத்தல் அவசியமாகிறது. சுழலிகளின் இயக்கத்தாலும் சத்தத்தாலும் கடல் வாழ் உயிரினங்களின் பாதுகாப்பும் வாழ்வும் கேள்விக்குறியாகிறதென்பது மறுக்கமுடியாத உண்மையாகும்.

அத்துடன் சமுத்திர நீரோட்டங்ளிலிருந்து சக்தியைப் பெற்றுக் கொள்ளும் போது அவற்றின் வேகம் குறைக்கப்படுவதால் ஏற்படவிருக்கும் விளைவுகள் எதிர்வு கூறப்பட முடியாதவை. சமுத்திரத்திலிருந்து சக்தியைப் பெறும் போது சமுத்திரத்தின் வெப்பநிலை மற்றும் உவர்த்தன்மை போன்ற பெளதிக இயல்புகள் மாற்றமடைய விளைவதால் கடல் வாழ் உயிரினங்கள் பாதிப்பை எதிர்நோக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.


இவ்வாறு உயிரினங்களுக்கு ஏற்படும் பாதிப்பை, இயந்திரங்களை இயக்கும் போது ஏற்படும் பாதிப்பு, இயந்திரங்களைப் பொருத்தும் போது ஏற்படும் பாதிப்பு என இருவகைப்படுத்தலாம். ஏலவே குறிப்பிட்ட இத்தகைய

இயந்திரங்களைப் பொருத்தும் போது இயக்கும் போதும் சத்தங்கள் ஏற்படாத வண்ணம் தொழிற்படவும், பொருத்தும் போது உருவாக்கும் கழிவுப் பொருட்களைச் சமுத்திரத்தினுள் கலக்கவிடாமல் செய்யவும், கடல்வாழ் உயிரினங்களின் இடப்பெயர்வு, முட்டையிடும் காலங்களைக் குழப்பாத வகையிலும் கடல்வாழ் மூலையூட்டிகள் பாதிக்கப்படாத வகையிலும் தொழில் நுட்பங்கள் விருத்தி செய்யப்பட்டுள்ளன.

கடல்வாழ் உயிரினங்கள், தற்செயலாக இந்த இயந்திரத் தொகுதிக்குள் அகப்பட்டால், அவை வெளியேறுவதற்கான திறந்த வாயில்களும் காணப்படும் வகையில் இயந்திரத் தொகுதிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆயினும் மிதக்கும் உயிரினங்களான ஜெலி மீன்கள் போன்ற மினினங்கள் பாதிக்கப்படுவது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. மீடிறனும் வீச்சமும் குறைந்த ஒலியைப் பிறப்பிக்கக் கூடிய வகையிலும் பிறப்பாக்கிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

முடிவாக, அதிகரித்துவரும் சனத் தொகையுடன் அதிகரிக்கும் சக்தித் தேவையையும் புதிது புதிதாக உருவாக்கிவரும் சூழற் பிரச்சினைகளையும் கருத்தில் கொள்கையில் சூழலுக்கு ஒரு சதவீத பாதிப்பையேனும் ஏற்படுத்தாக வகையில் இத்தகைய மீள உருவாக்கப்படக்கூடிய சக்திவளங்களின் பாவனை பற்றிச்சிந்தித்து அவற்றைச் செயற்படுத்துவதில் தவறேதுமில்லையென்றே தோன்றுகிறது.