Saturday, October 29, 2011

கண்ணைக் குளமாக்கிய மண்ணின் வாழ்வியல்-4

யாழ்ப்பாணத்து மண்ணுடன் பனை பின்னிப் பிணைந்தது!

அந்தக் கண்காட்சி அரங்கைக் கடந்த போது, பொறிமுறை உபகரணங்கள் வைக்கப்பட்டிருந்த ஆறாவது அரங்குக்குச் செல்ல முடிந்தது. இன்றைய இளஞ்சந்ததி கண்டறியாத பொறிமுறை உபகரணங்கள் பல வைக்கப்பட்டிருந்தன. கடந்த ஒன்றரை நூற்றாண்டு காலத்திலே யாழ்ப்பாணத்தில் புழக்கத்தில் இருந்த பொறிமுறை உபகரணங்களான வானொலிப் பெட்டி, கிராமபோன், கையால் இயக்கும் சிறிய தையல் இயந்திரம் போன்ற பல அவற்றுள் அடங்கும். அவற்றைக் கண்டவுடன் மூத்த சந்ததியர் தம் பழைய நினைவுகளை மீட்கத் தொடங்கி
யிருந்தமையையும், தம்மோடு வந்திருந்த இளஞ்சந்ததியினருக்கு, அந்தக் காலத்து நினைவுகளை விளக்கியதையும் காணாக்கூடியதாக இருந்தது. அவற்றைப் பற்றிய விளக்கங்களை வழிகாட்டியாய் நின்றிருந்த
மாணவர்கள் அளித்திருந்தால் அந்த அரங்கில் கிடைத்த அனுபவம் மேலும் சிறப்பாக அமைந்திருக்கும்.

யாழ்ப்பாண வாழ்வியலுடன் பனை வளம் பின்னிப் பிணைந்தது. தெற்கிலிருந்து பயணிக்கும் போது யாழ்ப்பாணத்தை அண்மிக்கிறோம் என்பதன் அடையாளமாக
அந்தப் பனை மரங்கள் இருந்தன. இன்றும் வழி நெடுகிலும் தலையிழந்து காட்சி தருகின்றன. கடந்த காலத்தின் கொடூர யுத்தம் அவற்றை அப்படி மாற்றியிருக்கிறது. பனையைக் கற்பக தரு என்பர். கட்டும் வீட்டிலிருந்து படுக்கும் பாய் வரை பனை எம் நடை முறை வாழ்வுடன் இயைந்ததாய் இருந்தது. ஆனால் நவீனம் அந்த வாழ்வியலைக் கைவிட வைத்து விட்டது எனலாம். அதனால் இன்றைய இளஞ்சந்ததியினருக்கு பனையின் அருமை தெரியவில்லை. அதைத் தெரிந்துகொள்ளவும் அவர்கள் ஆர்வப்பட்டதாகத் தெரியவில்லை. இந்தக் கண்காட்சி நிச்சயம் அவர்கள் மத்தியில் நிச்சயம் ஒரு விழிப்புணர்வைத் தோற்றுவித்திருக்கும் என நம்பலாம்.
யாழ் குடாநாட்டு பழங்குடி மக்கள் பனை ஓலைகளால் வேயப்பட்ட வீடுகளிலேயே வாழ்ந்தார்கள். அது தவிர புதிதாக வீடு கட்டுவதற்கும் பனை மரங்களில் இருந்து பெறப்பட்ட மரக்குற்றிகள், சிலாகைகள், வளைவுகள் என்பவற்றை அவர்கள் பயன்படுத்தினார்கள். பனை மரம் மூலம் பெறப்பட்ட பொருட்களின் இருந்து கட்டப்பட்ட வீடுகள் வெயில் காலத்தில் குளிர்ச்சியையும் மழைகாலத்தில் இதமான வெப்பத்தையும் கொடுத்தது. இதனால் வருடம் முழுவதும் சிறந்த சுவாத்தியத்துடன் அவர்கள் ஆரோக்கியமாகவும் மனநிறைவோடும் வாழ்ந்தார்கள்.
பாய், சுளகு, கொட்டைப் பெட்டி , பெட்டி, மூடு பெட்டி, கடகம், உறி, திருகணை , கூடை, பட்டை, பிளா, குடுவை , தட்டுவம், தொப்பி, நீத்துப்பெட்டி என வைக்கப்பட்டிருந்த எண்ணற்ற பனை உற்பத்திப்பொருட்கள் பிரமிக்க வைத்தன. எம் வாழ்வியல் எவ்வளவு தூரம் இயற்கையுடன் பின்னிப் பிணைந்திருந்தது என்பதற்கு அவை ஒவ்வொன்றும் சான்று பகர்ந்தன.
மின்சாரத்தைக் காணாத காலம் அது. குளிர்சாதனப்பெட்டிகள் இல்லை. ஆனால் இரவு ஓலைப்பெட்டியில் போட்டு மூடி வைத்த பிட்டு, காலையிலும் அப்போது தான் புதிதாக அவித்தது போல் இருப்பதன் இரகசியம் தான் என்ன? அது தான் பனை சொல்லும் வாழ்வு.
பனை ஒலைகளால் பொருட்களைப் பின்னுவதென்பது ஒரு அழகான கலை. ஒவ்வொரு பொருளைப் பின்னுவதற்கும் ஒவ்வொரு நுட்பம் இருக்கும். அவை எல்லாம் இன்று காணாமல் போய்க்கொண்டிருக்கின்றன என்பது தான் கசப்பான உண்மை. மூத்த சந்ததிக்குத்தான் அந்த நுட்பங்கள் தெரிந்திருக்கிறது. இடையிலே ஒரு பெரிய சந்ததி இடைவெளியை யுத்தம் ஏற்படுத்தி விட்டது. இளஞ்சந்ததி சற்று ஆர்வமாகத்தான் இருக்கிறது. இங்கு சந்ததி இடைவெளிகள் நிரப்பப்படுவதும் அவசியமாகிறது. அதே வேளை மூத்த சந்ததி மறைய முதல் , மூன்றாவது சந்ததிக்காவது அந்தக் கலை நுட்பங்கள் கடத்தப்பட வேண்டும். அவை எல்லாம் எமது கைகளில் தான் இருக்கின்றன. பாடசாலைக் காலங்களில் வடலிக் குருத்தோலைகளில் செய்யக் கற்றுக்கொண்ட கைப்பணிகள் எல்லாம் மனக்கண்ணில் ஒருகணம் வந்து போயின. இடப்பெயர்வுகளுக்குமப்பால் நவீனம் நோக்கிய எமது பயணமானது, எம் பாரம்பரிய வாழ்வியலிலிருந்து எம்மை எவ்வளவு தூரம் தனிமைப் படுத்தி விட்டது உணர முடிந்தது.
ஏறத்தாழ 15 வருடங்களுக்கு முன்பு, வடக்கிலே மின்சாரமில்லை. தொலைக்காட்சி , கணினி முதலாய நவீன பொழுது போக்குகள் இல்லை. வீட்டிலிருக்கும் முதியவர்கள் பாடசாலை விடுமுறை நாட்களிலே, இந்த அருங்கலைகளை சிறார்களுக்கும் கற்றுத்தருவார்கள். அதை விட ஓய்வு நேரங்களில் பனையோலைப் பொருட்களைப் பின்னுவதே அவர்களது வேலையாக இருக்கும். தாம் தயாரித்த பொருட்களை வீட்டுத்தேவைகளுக்கு மட்டுமன்றி, அயலவர்களுக்கும் கூட அன்பளிப்பாகத் தருவார்கள். எங்காவது பயணம் போகும் போதும் கொண்டு சென்று கொடுப்பார்கள். அவற்றைப் பெற்றுக்கொண்டவர்கள் " இது ஊரிலிருந்து ஆச்சி/அப்பு கொண்டுவந்தது"என்று பெருமையாகக் கூறுவதை நாம் கண்டிருப்போம். அந்த அழகிய வாழ்வு இன்று எங்கே போய் விட்டது?
இங்கு வருத்தத்துக்குரிய விடயம் யாதெனில், இக்காலத்தில் இந்தப் பொருட்களையெல்லாம் பிளாஸ்டிக், கறையில் உருக்குப் பொருட்கள் பிரதியீடு செய்து விட்டன. நீண்டகாலப் பாவனையையும் இலகு தன்மையையும் கருத்தில் கொண்டு நாம் பனம்பொருட்களைக் கைவிட்டு விட்டோம்.
ஆனால் அந்த நீண்ட காலத்துக்கு நிலைக்கும் என எண்ணும் பிளாஸ்டிக் பாவனைப் பொருட்களால் எவ்வளவு தூரம் எம் சுற்றுச்சூழல் மாசடைகிறது என்பது பற்றி நாம் சிந்திப்பதில்லை. அவற்றால் எத்தனை கொடிய விளைவுகள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன? ஏற்படப்போகின்றன என்பது பற்றியும் கவலைப்படுவதில்லை. நாம் கொண்டிருக்கும் இத்தகைய அலட்சியப்போக்கானது, எம் எதிர்காலச் சந்ததிக்கு ஒரு சுகாதாரமற்ற சூழலைத் தான் விட்டுவைக்கும். இது எமது உலகின் நிலை. ஏனெனில் யுத்தம் எம்மை ஒரு குறுகிய வட்டத்திற்குள் முடக்கி விட்டது.
யுத்தம் நிலவிய கடின சூழலில் அந்த நிலைமை தவிர்க்க முடியாததாகவும் இருந்தது. வெளி உலகில் என்ன நடக்கிறது என அறியும் ஆர்வம் எம்மக்களிடம் காணப்படவில்லை. ஏனெனில் தத்தமது பாடுகளைப் பார்ப்பதே அவர்களுக்குக் கடினமாக இருந்தது. ஆனால் யுத்தம் ஓய்ந்த இன்றைய சூழலில், நிலைமே வேறுபக்கமாகத் திரும்பியது. ஒரு காலம், தேடலுக்காகவே தன்னை அர்ப்பணித்த சமூகம், இன்று பணத்தின் காலடியில் விழுந்து கிடக்கிறதோ எனவும் எண்ணத்தோன்றும். பணத்துக்கு அத்துணை மரியாதை. இப்போதும் தேடல் காணாமல் போய் விட்டது. வெளியுலகத்தைப் பார்க்கும் ஆர்வம் அதிகரிக்கவில்லை. பணமிருந்தால் எதையும் சாதிக்கலாம் என்ற கொள்கை வேகமாகப் பரவி வருகிறது எனலாம்.

Friday, October 28, 2011

சீன வெடி இல்லாத தீபாவளி!

தீபாவளி மூன்று தசாப்தங்களுக்கு முந்திய காலம் வரை அது ஒரு மகிழ்ச்சியான பண்டிகை. ஊரே இணைந்து கொண்டாடிய பண்டிகை. உள் நாட்டு யுத்தம் என்று வெடித்ததோ, அன்றோடு எம் பண்டிகைகளும்தம் தனித்துவத்தை இழக்கத்தொடங்கின என்று தான் கூற வேண்டும். அமைந்தியாய் இருந்த வாழ்வியல்பின்னர் இடப்பெயர்வு எப்போ என எதிர்பார்த்து, எப்போதும் தயாராக இருக்கும் வாழ்வியலாய்ப் பரிணமித்தது.  அக்காலப்பகுதிகளிலே ஜனித்த குழந்தைகள் தான் இன்றைய இளஞ்சந்ததியர். நாளை புதியதொரு சந்ததியை வழி நடத்தப் போகிறவர்கள். அவர்கள் உலகை அறியத்தொடங்கியிருந்த காலம் மிகவும் கொடியது என்றுதான் கூற வேண்டும். காலம் காலமாக சம்பிரதாய பூர்வமாகக் கொண்டாடப்பட்டு வந்த பண்டிகைகள் எல்லாம் அக்காலத்தில் செயலிழந்து போயின. ஆதலினால் எம்பண்டிகைகள் காவி வந்த தார்ப்பரியங்களும் மெல்ல மெல்ல மறைந்து போயின. ஆனால் பண்டிகைகள் மட்டும் நிலைத்திருந்து புதிய பல தார்ப்பரியங்கள் முளை விட வழிவகுத்து விட்டன என்றே கூற வேண்டும்.

இன்று இருந்த இடம் என்னவென்றே தெரியாமல் மறைந்துபோய்க்கொண்டிருக்கும் தார்ப்பரியங்களை எம் மூத்தவர்களிடமிருந்து நாம் அறிந்து கொள்ள வேண்டும். இல்லையெனில் எம்மால் அவற்றை அடுத்த சந்ததிக்கு க் கடத்த முடியாமல் போய்விடும். 80 களுக்கு முற்பட்ட காலங்களிலே தீபாவளி எப்படி களை கட்டியிருந்தது என்று பேராசிரியர் சிவச்சந்திரன் யாழ். தினகரனுடன் பகிர்ந்து கொண்டார்.
   இலங்கையிலே இந்தியாவைப்போல வெகு கோலாகலமாக தீபாவளிப்பண்டிகை கொண்டாடப் படுவதில்லை. தீபாவளியை ஒட்டிய முரண்பாட்டுக் கொள்கைகளை திராவிட முன்னேற்றக் கழகம் கொண்டிருந்தது. அதனால் தீபாவளியை ஒரு ஆரியப் பண்டிகையாகவும் ஆரியனாகிய கிருஷ்ண பரமாத்மா, திராவிடனாகிய நரகாசுரனை வதம் செய்த திருநாளாகையால் திராவிடர்களாகிய தமிழர்கள் தீபாவளியைக் கொண்டாடுவதென்பது ஆரோக்கியமானதல்ல என்ற கொள்கையொன்று தமிழ் நாட்டில் எழுந்தது. எது எப்படி இருந்தாலும், எவ்வளவு கடன் தான் இருந்தாலும் தீபாவளியை விமரிசையாகக் கொண்டாட தமிழக மக்கள் பின்னிற்பதில்லை. இது இந்தியாவின் நிலைமை.

 ஆனால் இலங்கையிலோ நிலைமை சற்று மாறுபட்டது. தீபாவளியென்றால் கோயில்களை நோக்கிப் படையெடுத்து, சன நெரிசலில் மிதந்து அர்ச்சனை செய்து வீடும் திரும்பும் இன்றைய சம்பிரதாயம் அன்று காணப்படவில்லை. அது புதிதாக முளைத்தது என்று தான் கூற வேண்டும். முன்னர் தீபாவளி என்றால் கிராமங்கள் களை கட்டிப் போய் இருக்கும். மக்கள் நிச்சயம் ஆட்டிறைச்சி பங்கு போடுவார்கள். கள்ளின் பாவனை சற்றுத்தாராளமாகவே இருக்கும்.

  விடுமுறை தினமாகையால் வெளியூரில் இருப்பவர்கள் எல்லாம் தம் கிராமங்களுக்குச் செல்வார்கள். அதிலும் மணமாகி, கணவன் வீட்டுக்குச் சென்ற பெண்கள் குடும்பத்துடன் தாய்வீடு வருவர். விருந்தும் புத்தாடையும் இல்லாத தீபாவளி கொண்டாடப்பட்டதே இல்லை எனலாம். விருந்துகளில் இறைச்சிக்கு அதிக முக்கியத்துவம் இருந்தமையால், கோயில்களுக்குச் சென்று வழிபடும் வழக்கம் குறைவாகவே இருந்தது.
  சீனவெடிக்கு பெரும் முக்கியத்துவம் இருந்தது. வெடியின் மூலம் சீனா. முன்னைய காலங்களிலே சீனாவிலிருந்து வெடி பெறப்பட்டமையால் சீன வெடி என்ற பெயர் நிலைத்து விட்டது. தீபாவளிப் பண்டிகையின் போது வெடி கொழுத்தும் வழக்கம் யுத்தம் தொடங்கிய பின்னர் தான் அற்றுப்போனதெனலாம்
  தலைத்தீபாவளி கொண்டாடும் வழக்கமும் எம்மவரிடத்தே இருக்கிறது. ஆனால் தமிழகத்தைப்போல இங்கு சீர் செய்து பிரமாண்டமாக எவரும் கொண்டாடுவதில்லை. ஆனாலும் புதுமணத்தம்பதியரின் மனம் மகிழ அவர்களுக்கு புத்தாடை, பரிசுப்பொருட்களை வழங்குவார்கள்.

   முக்கியமாக, அனைவரும் ஒன்று கூடும் திரு நாளாக இந்த தீபாவளி இருக்கும். கிராமங்களிலே விளையாட்டுப்போட்டிகள் நடக்கும். எப்பொழுதும் களைகட்டும் நிகழ்ச்சியாக இருந்த தினகரன் மாட்டுச் சவாரி கூட நடந்தேறியிருக்கிறது. கூத்துகள், நாடகங்கள் கூட அரங்கேறும்.
 மொத்தத்தில் அன்றைய சமூக நல்லிணக்கத்துக்கு , கிராமிய ஒற்றுமைக்கு வழிகோலும் பண்டிகையாக தீபாவளியும் அமைந்திருந்தது எனலாம்.
யுத்தம் துடைத்தெறிந்திருந்த இந்த இனிய நினைவுகளை மீட்பதிலும் கூட ஒரு தனி சுகம் இருக்கத்தான் செய்கிறது. யுத்த காலத்தில், வெடிகள் தடை செய்யப்பட்டிருந்தன. பல வேளைகளில் கொண்டிருக்கும் பதற்ற மன நிலையில் தீபாவளிப்பண்டிகை மறக்கப்பட்ட சந்தர்ப்பங்களும் இருக்கத்தான் செய்கின்றன.

  இன்று சமாதானம் தலை தூக்கி விட்டது. ஆனால், எம்மவர் போக்கு எதிர்த்திசையிலே பயணிக்கிறதோ என்ற அச்சமும் சேர்ந்தே நிலவுகிறது. நாம் கைக்கொண்டு வந்த தார்ப்பரியங்கள் மறக்கடிக்கப்பட்டமையால், அர்த்தமே இல்லாத புதிய தார்ப்பரியங்கள் முளைக்கத் தொடங்கி விட்டன. அத்துடன் கூடவே தொலைக்காட்சிக் கலாசாரம் தொடர்கிறது . விசேட தினங்களிலே குடும்பத்திலுள்ள சகலரையும் வீட்டுக்குள்ளே முடக்கி வைப்பதில் அலை வரிசைகள் போட்டி போடுகின்றன. அப்போது, தீபாவளி மட்டும் என்னவிதி விலக்கா? ஒரு குறுகிய கற்பனை எல்லைக்குள் மனிதனை முடக்கும் தொலைக்காட்சி என்ற அரக்கனையாவது இன்று தவிர்த்துப் பார்ப்போமே?

நடந்து முடிந்த இந்த யுத்தம் எத்தனையோ பேரை ஒரு கணப்பொழுதில் ஆதரவற்றோர் ஆக்கியிருக்கிறது. இன்றைய நன்னாளில் அவர்களில் எவருக்காவது உதவ முயலாலாமே?முடியாது! சாத்தியமே இல்லை என்கிறீர்களா? மனம் இருந்தால், நிச்சயம் இடமும் இருக்கும். நாம் நினைத்தால் எதையும் சாதிக்கலாம். இன்றே எழுவோம்! களத்தில் இறங்குவோம்!

கண்ணைக் குளமாக்கிய மண்ணின் வாழ்வியல்-3

தராசேற்றப்பட்ட குத்துவிளக்குகள்

சம காலத்து கருங்கற் சிற்பங்களும் கூட அரங்கை அலங்கரித்தன. கடந்த சில காலம் வரை அன்றாடப் புழக்கத்திலிருந்து தற்போது அருகிப்போயிருக்கும் பித்தளைப் பொருட்கள் பலவும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. பழங்கால பித்தளைச் சாவிகள், சருவங்கள், குடங்கள், வெற்றிலைத் தட்டம், தாம்பாளம், இட்டலிச் சட்டி, விளக்குகள், பாக்குவெட்டி, பல அடுக்குச் சாப்பாட்டுப் பெட்டிகள், மூக்குப்பேணி முதலான பொருட்களும் அவற்றுள் அடங்கும். அவற்றின் விபரங்களைச் சிறுவர்கள் மிகவும் ஆர்வத்துடன் கேட்டறிந்ததையும் காணக்கூடியதாக இருந்தது.
மூக்குப்பேணிகளைப் பொறுத்தவரையில் ஒரு பின்னணி இருக்கிறது. மூக்குப்பேணி என்பது பேணியில் வாய் படாமலும், அதேவேளை உள்ளிருக்கும் பானம் வெளியே சிந்தாமல் அருந்தத்தக்க வகையிலும் அமைக்கப்பட்டிருக்கும். அவைதான் மூக்குப்பேணி உருவாகவே காரணமாயிருந்தன. யாழ் மண்ணில் மூக்குப்பேணியின் பரவலான பாவனைக்கு அங்கு நிலவிய இறுக்கமான சாதிப்பாகுபாடுகளும் காரணமாய் அமைந்திருக்கின்றன.
அதாவது, வெவ்வேறு சாதிக் கட்டமைப்புகளைப் பொறுத்தவரையிலே, ஒரு சாராருடைய எச்சில் பட்ட பேணியில் இன்னொரு சாரார் குடிப்பதென்பது பெருங்குற்றமாகக் கருதப்பட்டது. ஆதலால் மூக்குப்பேணிகள் சகஜமான பாவனையில் இருந்தன.
தற்போது இந்த சாதியப் பாகுபாடுகள் இறுக்கமாகக் கடைப்பிடிக்கப்படாமையால் மூக்குப்பேணிகளின் பாவனை தேவையற்றதாகி, அவை அருகத்தொடங்கி விட்டன என்றார் விளக்கமளித்த மாணவியொருவர். ஒரு காலத்திலே குடும்பங்களின் அந்தஸ்தைக் கணிக்கும் அளவு கோல்களாக மட்டுமன்றி, அன்றாட வாழ்வியலிலே புழக்கத்தில் இருந்தவையுமான குத்து விளக்குகள், வெற்றிலைத் தட்டங்கள், மூக்குப் பேணிகள் எல்லாம் பகிரங்கமாகத் தராசில் தொங்கிய காலம் ஒன்றும் யாழ். மண்ணில் உருவாகத் தொடங்கியதை எவரும் மறுக்க முடியாது.
யுத்தம் தணிந்து சமாதான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டிருந்த 2002 - 2003 காலப்பகுதியில் யாழ். நாச்சிமார் கோயிலடியில் ஒரு சோடி பித்தளை குத்துவிளக்கை வெறும் 250 ரூபாவுக்கு விற்றிருக்கிறார்கள். என் நண்பியொருவர் அதை தான் வாங்கிவந்து பேணி வருவதாகக் கூறியிருந்தார். அந்தக் குத்துவிளக்குகளின் அடிப்பாகத்திலே உரிமையாளரின் பெயர் மிகவும் நுணுக்கமாகப் பொறிக்கப்பட்டிருந்தது என்றார் அந்த நண்பி. அந்தக் குத்துவிளக்குகள் மட்டும்.
நாச்சிமார் கோயிலடியில் விற்கப்படவில்லை. மூக்குப்பேணிகள், கமண்டலங்கள் போன்ற பல பழங்காலத்துப் பொருட்கள் அடிமாட்டு விலைக்கு விற்கப்பட்டிருக்கின்றன. ஒன்றில் அவை திருடப்பட்டு விற்கப்பட்டிருக்கலாம். அல்லது முன்னோர் வழி வந்தவை, இனித் தேவையில்லை. காசாக்கி விடுவோம் என உரிய இளஞ்சந்ததியினர் விற்றிருக்கலாம்.
இந்த நிலை அன்றுடன் ஓய்ந்து விடவில்லை. இன்றும் மறைமுகமாகத் தொடர்கிறது. ஒரு கிலோ செம்பு இவ்வளவு ரூபா, ஒரு கிலோ பித்தளை இவ்வளவு ரூபா என தம்மிடமுள்ள பழம் பெருட்களை உலோகத்தின் நிறைக்கு ஏற்ப விற்றுவிடுவதில் எம்மவர்கள் வல்லவராகவே இருக்கிறார்கள்.
எம்மவருக்கு அவற்றின் பயன்பாடு தேவையில்லாது போய்விட்டதா? அல்லது அவற்றில் காணப்படும் கலை நயத்தையாவது இரசிக்கத் தெரியவில்லையா? அல்லது அவர்கள் அதன் பெறுமதியை உணரவில்லையா? அல்லது அவற்றுக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் வரலாறு பற்றி அக்கறை கொள்ளவில்லையா? எனப் பல கோணங்களில் சிந்திக்கத் தோன்றுகிறது.
அந்த சிந்தனைக்கும் அப்பால் பணம் எனும் பேய் தான் யாழ். மண்ணில் எம்மவரின் அடிப்படைத் தேவை என்ற நிலை உருவாகி விட்டதா? அல்லது உருவாக்கப்பட்டு விட்டதா? என்று நாம் சிந்திக்க வேண்டும். எம்மவர்கள் மத்தியில் பணம் தான் அத்தியாவசியம் என்ற எண்ணப்பாடு உருவாகாமல் விட்டிருந்தால் பழங்கால உலோகப்பொருட்கள் எல்லாம் தராசில் ஏறியிருக்குமா? இன்னும் ஏறிக்கொண்டு தான் இருக்குமா? இது நாம் சிந்திக்க வேண்டிய தருணம். இவ்வளவு நாளும் நாம் கண்டும் காணதவர்களாய் இருந்து விட்டோம். உலோகப் பொருட்களும் தராசேறி, தெற்குக்கும் தீக்குள்ளுமாய்ச் சென்றுவிட்டன.
ஆனால் இனியும் அப்படி இருத்தல் தகாது. எம்மால் இயன்றவரை அவை எம் கண் முன்னே தராசேறுவதைத் தடுக்க முயல வேண்டும். ஒன்றில் எம்மிடம் இருப்பவற்றை விற்க முயலக் கூடாது. பண வசதி படைத்தவர்கள் அவற்றை வாங்கி தாமே பேணலாம். இல்லையேல் நல்லுள்ளம் படைத்தவர்கள் அவற்றை யாழ். பல்கலைக்கழக வரலாற்றுத்துறையினருக்கு அன்பளிப்பாக வழங்கலாம். புலம்பெயர் தமிழர்களுக்கும் இது பொருந்தும்.
நான்காவது கண்காட்சி அரங்கையடுத்து அமைக்கப்பட்டிருந்த அரங்கிலே தொன்று தொட்டு பயன்பாட்டிலே இருந்து வரும் மீன்பிடி உபகரணங்கள், மீன்பிடி முறைமைகள் போன்றன புகைப்படங்களாகவும் பொருட்களாகவும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. மீன்பிடித் தொழிலோடு தொடர்புடைய வலை வகைகள், தங்கூசி வகைகள், இறால் கூடு என்பவற்றுடன், மாதிரி படகு மற்றும் கட்டுமரம் போன்றனவும் கூட மிகவும் அழகாகக் காட்சிப்படுத்தப்பட்டிருநதன. அவற்றுடன் யாழ்ப்பாணத்துக்கே உரித்தான தோட்டப் பயிர்களின் புகைப்படங்கள் வைக்கப்பட்டிருந்தன.
‘கந்தன் நல்ல கமக்காரன்’ என்று தொடரும் சிறுவர் பாடல்.... புத்தகத்தின் பின்னணியில் விவசாயி ஒருவர் தோலிலே ஏரை வைத்தபடி நடந்து செல்லும் ஓவியம் வரையப்பட்டிருக்கும். கலப்பை பூட்டிய மாட்டுடன் வயலை உழும் விவசாயியின் படம் வரையப்பட்டிருக்கும். அதைப் பாடப் புத்தகத்திலே பார்த்த சந்ததியொன்று இருக்கிறது. அதற்கடுத்த சந்ததியினருக்கோ உழவு இயந்திரம் இருந்தால் தான் விவசாயம் என்ற எண்ணம். ஏரும் கலப்பையும் அருஞ்சொற்களாகப் போய்விட்டன.
அதே கண்காட்சி அரங்கிலே ஏர் ஒன்று வைக்கப்பட்டிருந்தது.
அது என்ன என்று கேட்டறிய முயலும் சிறுவர்களையும் இதுவா ஏர் என வியக்கும் இளைஞர்களையும் பரவலாகக் காண முடிந்தது. ஏர் என்பது ஆரம்பகாலத்திலிருந்து நிலத்தைக் கிளறிப் பயிர்ச் செய்கைக்கு உகந்ததாக்குவதற்கு உதவிவரும் ஒரு கருவியாகும். ஏர்கள் விவசாயத்திற்கு மட்டுமன்றி கடலடிக் கம்பி வடங்கள் பதிப்பதற்கும் உதவுகின்றன.
ஆனால் பிற்காலத்தில் உழவு இயந்திரங்கள் அறிமுகமாகத் தொடங்கியது. ஏர்களின் பாவனையும் அருகத் தொடங்கிவிட்டது. மரத்தினால் செய்யப்பட்ட கருவியாகிய ஏர், நுகம், கருவுத்தடி, மேழி, முட்டி, கலப்பைக்கயிறு, கன்னிக்கயிறு (கழுத்துக்கயிறு) எனும் பகுதிகளால் ஆனது. ஆரம்ப காலங்களில் ஒரு எருதினாலும் பிற்காலங்களில் இரு எருதுகளாலும் இழுத்துச் செல்லும் வண்ணம் பயன்படுத்தப்பட்டது. ஏரின் நவீன வடிவமே கலப்பையாகும்.
பாவனை பொருட்கள்]
கலப்பையானது மண்ணைப் புரட்டிப்போடும் தொழிற்பாட்டை மட்டுமே மேற்கொள்கிறது. மாறாக ஏரோ மண்ணை ஆழமாக உழும். புரட்டிப் போடாது. ஏரை நாட்டுக் கலப்பை என்று கூறுவோரும் உளர். இக்கண்காட்சியில் ஏருடன் சேர்த்து நுகமும் வைக்கப்பட்டிருந்தது.
நுகம் என்பது மரக்கட்டையினால் செய்யப்பட்ட ஒருவகைக் கருவியாகும். மிருகங்களைக் கொண்டு பாரங்களை சுமப்பதற்கு அல்லது வண்டிகளை இழுப்பதற்கு இது அதிகளவில் பயன்படுத்தப்படும். மிருகங்களின் கழுத்தில் இதைச் சொருகுவர். மாட்டு வண்டியின் ஒரு பாகமாகவும் நுகம் கருதப்படுகிறது.
இப்போதும் ஒரு சில பகுதிகளில் விவசாய நடவடிக்கைகளுக்காக நுகம் பூட்டிய எருதுகள் பயன்படுத்தப்படுகின்றன.
கம்மாலைகள் என்றால் என்ன என்று கேட்கும் காலம் இன்று உருவாகிவிட்டது. தற்போது ஊர்ப்பகுதிகளில் எங்காவது ஒரு மூலையில் ஓரிரண்டு கம்மாலைகளை வெகு அரிதாகக் காண முடியும்.
கம்மாலைகள் இரும்பை உருக்கி வார்க்கும் நிலையங்களாகும். இரும்பு வேலைகள் யாவும் அங்கேயே நடைபெறும்.
கம்மாலைகளிலே தீச் சுவாலையைத் தொடர்ந்து பேணுவதற்கான வளி விநியோகத்தை ஏற்படுத்த ஒரு சிறப்பு விசிறி அமைக்கப்பட்டிருக்கும். அந்த விசிறியும் கூட காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.
விசிறியைத் தனியாக வைத்திருந்ததைக் காட்டிலும் கம்மாலை போன்ற அமைப்பைச் செய்து அதிலே விசிறியைப் பொருத்தியிருந்தால் இளஞ்சந்ததியர் மேலும் பயனடைந்திருப்பர்.