Friday, July 23, 2010

‘3R’ முறைமை சொல்வது என்ன?

பசுமை, சூழல் மாசு, காலநிலை மாற்றம், கடல் மட்ட உயர்வு என்ற பல சொற்பதங்களை அன்றாடம் கேள்விப்படுகிறோம். அதேவகையில்தான் ‘3R’ எனற் சொற்பதமும் அமைகிறது. எந்த ஒரு செயற்பாடாயினும் ‘3R’ முறைமைக் கமைய மேற்கொள்ளப்பட வேண்டு மென்ற நியதி உலகளாவிய ரீதியிலே உருவாக்கப்பட்டு வருகிறது.

‘3R’ எனப்படுவது ஞிலீனீuணீலீ, ஞிலீணீyணீlலீ, ஞிலீusலீ என்ற 3 சொற்க ளையும் சுருக்கமாகக் குறிக்கும் சொற் பதமாகும். அதாவது, பாவனைக்குறை ப்பு, மீள்சுழற்சி, மீள்பாவனை ஆகிய மூன்று விடயங்களையும் கருத்தில் கொண்டே எம் அன்றாடச் செயற் பாடுகள் அமைய வேண்டுமென்ற நியதி உருவாக்கப்பட்டு வருகிறது.

எதிர்காலத்தை கருத்தில் கொள்ளாமல், தொழில்நுட்ப வளர்ச்சிகள், புதிய கண்டுபிடிப்புகள் அவற்றினாலான வருமானம் என புதிய பல இலக் குகளைத் தேடி மனிதன் தொடக்கிய பயணத்தின் வேகம் ஒரு கட்டத்தில் குறையத் தொடங்கியது. ஓசோன் படை அரிப்பு, சூழல் மாசடைதல், காலநிலை மாற்றம் எனப் புதிய பல பிரச்சினைகள் அவனது பயணத்தின் வேகத்தைக் குறைத்தன.

இயற்கையைக் கருத்தில் கொள்ளாமல் மனிதன் தொடுத்த கணைகளுக்கு இயற்கையும் எதிர்க்கணை தொடுத்தது. இயற்கையைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைக்கும் முயற்சியில் சற்றும் தளராத மனிதன், புதுப்புது வழிமுறைகளைக் கண்டுபிடித்தான்.

அந்த வழியிலேலே உருவாக்கப்பட்ட கொள்கை தான் ‘3R’ முறையாகும். பாவித்த பின் தூக்கியெறியும் கலாசாரம் 1980களில் பின்பு பரவத் தொடங்கியது. மேற்குலக நாடுகளிலே ஆரம்பிக்கப்பட்ட போதும், காலப் போக்கில் மூன்றாம் உலக நாடுகளினுள் நன்றாக ஊடுருவியது.

அடிப்படையில் மூன்றாம் உலக நாடுகள், சிறந்த கலாசாரப் பின்னணியையும் இயற்கையுடன் இணைந்து செல்கின்ற வாழ்வியலையும் கொண்டவை. ஆனால் அபிவிருத்தியடைந்த மேற்குலக நாடுகள் தமது உற்பத்திகளையும், கழிவுகளையும் நவீன யுகம், உலக மயமாதல் எனும் போர்வைகளில் மூன்றாம் உலக நாடுகளிடம் சந்தைப் படுத்தின. விளைவு, பாவித்ததும் தூக்கியெறியும் கலாசாரம் உலகம் முழுவதும் பரவியது.

அது மட்டுமன்றி, இயற்கை வளங்கள் மிகையாக நுகரப்பட்டன. பணக்கார நாடுகள், வறிய நாடுகளின் வளங்களைச் சுரண்டின. விளைவாக, சுற்றுச் சூழல் பிரச்சினைகள் உருவாகின. அவற்றைத் தொடர்ந்து சமூக பொருளாதாரப் பிரச்சினைகளும் அணிவகுத்தன.

தொட்டிலைக் கிள்ளியவர்களே பிள்ளையையும் ஆட்ட வேண்டு மல்லவா? ‘3R’ முறையையும் அதே பணக்கார நாடுகள் உருவாக்கின. இன்று எம் மத்தியில் பிரபல்யப் படுத்துகின்றன.

எந்த ஒரு பொருளினதும் தேவையற்ற, தேவைகளுக்கு மேலதிகமாக பாவனை குறைக்கப்பட வேண்டும். இரவு நேரங்களில் வீட்டின் பாவனையற்ற அறைகளிலும் மின் விளக்குகள் எரிந்தபடி இருக்கும். ஆனால் அவற்றைச் சிறிதளவிலேனும் கருத்தில் கொள்ளாதவர்களாக நாம் இருந்து விடுகிறோம். அவ்வாறு இருப்பதைத் தவிர்க்க வேண்டுமென்பதையே ’3R’ முறைமையின் ‘பாவனையைக் குறைத்தல்’ செயற்பாடு எதிர் பார்க்கிறது.

ஒரு தடவை பாவித்தபின், பயனில்லையெனப் பல பொருட்களை எறிந்துவிடுகிறோம். ஆனால், அவற்றை இயன்றளவு மீள மீள ஏதோ ஒரு வழியில் பாவிப்பதே சூழலுக்கு நன்மை பயக்குமெனத் தெரிவிக்கப் படுகிறது. ஒரு பக்கம் எழுதியோ அல்லது அச்சிடப்பட்ட கடதாசிகளை அவற்றின் தேவை முடிந்ததும் கசக்கியெறிந்து விடுகிறோம்.

ஆனால் மாறாக அவற்றின் அச்சிடப்படாத மறுபக்கத்தை வேறு தேவைகளுக்காகப் பயன்படுத்தலாமே? இத்தகைய செயற்பாடுகளைத்தான் ‘மீள் பாவனை’ எனும் பதவி ஊக்குவிக்கிறது.

ஒரு பொருளின் பாவனை முடிந்த பின், அப்பொருளை அதேவடிவில் மீள உபயோகிக்க முடியாத ஒரு நிலையில், அதனை பயனுள்ள இன்னொரு பொருளாக்கிப் பயன்படுத்துதல் இன்று நடைமுறையில் உள்ளது. பிளாஸ்டிக், கண்ணாடி மற்றும் கடதாசிப் பொருட்கள் பல அவ்வாறு உருமாற்றப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன. இத்தகைய செயற்பாடுகளைத் தான் ‘மீள் சுழற்சி’ எனும் பதம் ஊக்குவிக்கிறது.

‘3R’ முறைமையானது இலங்கை போன்ற கீழைத்தேய நாடுகளுக்கு ஒன்றும் புதிதானதல்ல. எம் முன்னோர்கள் கைக்கொண்டு வந்து பின் காலப் போக்கில் புறந்தள்ளிய முறைமைகளை மேற்குலக நாடுகள் புதிய வர்ணத்தீட்டி அறிமுகப்படுத்துகின்றன. நாமும் ஆவலுடன் அறிய முயல்கிறோம்.

வாழையிலைலே உணவருந்தியவர்கள் இன்று வாழையிலை போன்றே வடிவமைக்கப்பட்ட பிளாஸ்டிக் தட்டில் பெருமையாக உண்கிறார்கள். மாவிலே கோலம் போட்டு மாவிலைத் தோரணம் கட்டியவர்கள் வீடுகளை பிளாஸ்டிக் கோல ஸ்டிக்கர்களும் பிளாஸ்டிக் மாவிலை தோரணங்களும் அலங்கரிக்கின்றன. கடவுளைக்கூட நாம் விட்டுவைக்கவில்லை.

அவரது திருவுருவங்களையும் வாசனை திரவியம் பூசிய செயற்கைப் பூக்கள் தான் அலங்கரிக்கின்றன. இவற்றையெல்லாம் கெளரவம் எனக் கருதி பெருமை பேசுவோர் பலரைக் கண்டிருப்போம். ஏன் அவர்களில் ஒருவராக நாங்களும் இருக்கலாம்.

நாம் ‘3R’ முறையைக் கடைப்பிடிப்பதற்காகப் புதிதாக ஒன்றும் செய்யத் தேவையில்லை. கால ஓட்டத்தில் நாம் தொலைத்துவிட்ட எம் பண்பாட்டு, கலாசார நடைமுறைகளைத் தேடிக் கண்டுபிடித்து மீண்டும் கைக்கொண்டாலே போதும் ‘3R’ முறைமை எம் வாழ்வியலுடன் பின்னிப்பிணைந்து விடும்.

Friday, July 16, 2010

மருத்துவமனை கழிவுகளுக்கு என்ன நடக்கிறது?




கடந்த ஞாயிறன்று, உலக சனத்தொகை தினம் கொண்டாடப்பட்டது நாம் யாவரும் அறிந்த விடயமேயாகும். உலக சனத்தொகையானது காலத்துடன் அதிகரித்து வருவதும், 2050 ஆம் ஆண்டு சனத்தொகையின் பருமனில் இந்தியா சீனாவை விஞ்சப் போவது தொடர்பான எதிர்வுகூறல்களும் கூட நாம் அறிந்த விடயங்களே!

இவ்வாறு சனத்தொகை வளர்ச்சியடைந்து வருவதற்கான காரணங்களுள் மேம்பட்ட சுகாதார நிலைமைகளும் அடங்கிவிடுகின்றன. நோய்த் தொற்றைத் தடுப்பதற்கான வழிமுறைகளும் உடனடி மருத்துவ வசதிகளும் நல்ல கழிவகற்றல் வசதிகளும் சராசரி மனிதனின் ஆயுட் காலத்தையும் அதிகரிப்பதில் துணைபுரிகின்றன. அதுமட்டுமன்றி சிசு மரண வீதத்தையும் குறைக்கின்றன.

நாடொன்றைப் பொறுத்த வரையிலே அரச வைத்திய சாலைகளைத் தவிர்த்து மூலை முடுக்குகளெங்கும் தனியார் வைத்தியசாலைகள் முளைத்து வருகின்றன. இத்தகைய நிலைமையை அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளிலே பரவலாகக் காண முடிகிறது.

பொது இடங்களில் கொட்டப்படும் வீட்டுக் கழிவுகள் பற்றியும் குப்பைகள் பற்றியும் அதிக கரிசனம் செலுத்தும் நாங்கள் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் தொடர்பான விழிப்புணர்வை குறைந்தளவில் உடையவர்களாகவே காணப்படுகிறோம்.

வைத்தியசாலைகள் உட்பட, சுகாதாரத் துறையுடன் தொடர்புடைய பெரும்பாலான கட்டமைப்புக்களின் மூலம் வெளியேற்றப்படும் கழிவுகள் மிகவும் ஆபத்தானவை என்பது கூட எம்மில் பலருக்குத் தெரிவதில்லை.

சுகாதாரத் துறையுடன் தொடர்புடைய கட்டமைப்புக்களின் அடிப்படை நோக்கம், மக்கள் மத்தியில் சுகாதாரத்தை மேம்படுத்துவதேயாகும்.

ஆதலால், அந்தக் கட்டமைப்புக்களின் மூலம் வெளியேற்றப்படும் கழிவுகள் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துவனவாக அமையக்கூடாது. ஆனால், இன்றைய நிலைமையோ அவ்வாறு அமையவில்லை. உலகளாவிய ரீதியிலே ஒவ்வொரு வருடமும் பல பில்லியன் கிலோகிராம் திணிவுடைய இத்தகைய கழிவுகள் வெளியேற்றப்படுகின்றன.

ஆனால் இக்கழிவுகளுள் 75 – 90 சதவீதமானவை வீட்டுக் கழிவுகளுடன் ஒப்பிடுகையில் ஆபத்து அற்றவை என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவிக் கிறது. ஏனெனில் அவை நிர்வாக, பராமரிப்பு, மற்றும் உள்ளக நிர்வாகச் செயற்பாடுகள் காரணமாக வெளியேற்றப்படுப வையாகும்.

ஆயினும் மிகுதி 10 – 25 சதவீதமான கழிவுகள் நச்சுத் தன்மை மிக்கவையாகக் கருதப்படுகின்றன. அவை சுகாதார ரீதியாக மிகவும் அபாயமானவையாகும்.

எச். ஐ. வி. முதலான சில தொற்றுக்கள் மிகவும் வேகமாகப் பரவியதையடுத்து, ஒரு தடவை பாவிக்கப்பட்ட பின் வீசப்படும் மருத்துவ உபகரணங்களின் பாவனை அதிகரித்தது. அவை மருத்துவமனைக் கழிவுகளைப் பல மடங்காக்கின.

அடிப்படையில் மருத்துவமனைக் கழிவுகள் தொற்றுக்களையுடைய கழிவுகள், உடற்பாகங்களாலான கழிவுகள், கூரான கழிவுப் பொருட்கள், மருந்துக் கழிவுகள், பரம்பரை அலகுகளில் பிறழ்வை ஏற்படுத்தும் கழிவுகள், இரசாயனக் கழிவுகள், கதிர்த்தொழிற்பாடுகளுடைய கழிவுகள், பார உலோகக் கழிவுகள் எனப் பலவாறு வகைப்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு வகையிலும் திடக் கழிவுகளும் காணப்படலாம். திரவக் கழிவுகளும் காணப்படலாம். ஏன் வாயுக்கழிவுகள் கூடக் காணப்படலாம்.


பக்aரியா, வைரஸ், பங்கசு மற்றும் ஏனைய ஒட்டுணிகளின் தொற்று இருக்கலாமெனக் கருதப்படும் கழிவுகள் யாவுமே தொற்றை ஏற்படுத்தக் கூடிய கழிவுகளாகும்.

தொற்றுள்ள ஆய்வுகூடக் கழிவுகள், சத்திரசிகிச்சைகளின் பின் வெளியேற்றப்படும் கழிவுகள், தொற்றுக்குள்ளாகியதால் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் நோயாளிகளின் கழிவுகள், ஆய்வுகூடங்களிலுள்ள தொற்றுக்குள்ளான மிருகங்கள் போன்ற யாவுமே இத்தகைய கழிவுகளுக்குள் அடங்குகின்றன.

அவை மட்டுமன்றி தொற்றுக்குள்ளான மனிதர்களுடனோ விலங்குகளுடனோ ஏதோ ஒரு வகையில் தொடுகைக்குள்ளான உபகரணங்களும் தொற்றுக்குள்ளானவையாகக் கருதப்படும். தொற்றுக்குள்ளான கூரிய உபகரணக் கழிவுகளும் தொற்றை ஏற்படுத்தும் கழிவுகளாகவே கருதப்படுகின்றன.

மருத்துவ மனைகளிலே கழிவுகளாக வெளியேற்றப்படும் உடற் பாகங்கள், உடற் திராவகங்கள், குருதி, போன்றன யாவுமே உடற் பாகங்களின் கழிவுகளாகக் கருதப்படுகின்றன.

வெட்டுக்காயம் உட்பட காயங்களை ஏற்படுத்தக் கூடிய உபகரணங்களான ஊசிகள், உடைந்த கண்ணாடித் துண்டுகள், சத்திர சிகிச்சைக் கத்திகள், ஆணிகள் போன்றன யாவுமே கூரிய உபகரணக் கழிவுகளாகக் கருதப்படுகின்றன. இவை தொற்றை உடையனவாகவோ அல்லது தொற்றற்றனவாகவோ எப்படியிருந்தாலும் மிகவும் ஆபத்தானவையாகவே கருதப்படுகின்றன.

மருந்துக் கழிவுகளுள், காலாவதியான, பாவிக்கப்படாத, பழுதடைந்த, மற்றும் வீணாக்கப்பட்ட மருந்துகள், தடுப்பு மருந்துகள் யாவுமே அடங்கிவிடுகின்றன. மருந்துகளைக் கையாளும் போது பாவிக்கப்படும் பொருட்களும் இக்கழிவுகளுள் அடக்கப்படுகின்றன.

பரம்பரை அலகுகளில் பிறழ்வுகளை ஏற்படுத்தும் கழிவுகளாகச் சில இரசாயனப் பதார்த்தங்களும் கதிர்த் தொழிற்பாட்டுப் பதார்த்தங்களும் கருதப்படுகின்றன. இக்கழிவுகள் மிகவும் ஆபத்தானவையாகவே கருதப்படுகின்றன. ஏனெனில் புற்று நோயைத் தோற்றுவிக்கவும் பரம்பரை அலகுகளில் மாற்றங்களை ஏற்படுத்தவும் இவை காரணமாகிவிடுகின்றன.

இரசாயனக் கழிவுகள், திண்மம், திரவம், வாயு ஆகிய மூவகை நிலைகளிலும் வெளியேற்றப்படுகின்றன. அவற்றில் சில ஆபத்தானவை. சிலவோ ஆபத்தற்றவை.

பார உலோகங்களான பாதரசம் போன்றவற்றைக் கொண்டுள்ள கழிவுகளும் வெளியேற்றப் படுகின்றன. அவை மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தவையாகக் கருதப்படுகின்றன உடைந்த வெப்பமானிகள், குருதியமுக்க மானிகள் போன்ற உணர் கருவிகள் பாதரசம் வெளியே சிந்தக் காரணமாகின்றன.

வீசப்படும் உலர் கலங்களால் கட்மியமானது கழிவுகளுடன் கலக்கிறது. இவை தவிர கதிர்த் தொழிற்பாட்டுடன் தொடர்புடைய கருவிகளும் வாயு உருளைகளும் கூட பார உலோகங்களைக் கழிவுகளுடன் கலக்கச் செய்கின்றன.

இன்று சிறிய மருத்துவமனைகளிலும் கூட கீ கதிர் மற்றும் ஸ்கானிங் தொழில்நுட்பங்கள் நடைமுறைக்கு வந்துவிட்டன. ஆனால் அத்தகைய கதிர்த்தொழிற்பாடுகளுக்குப் பாவிக்கப்படும் பதார்த்தங்கள் கழிவுகளாக வெளியேற்றப்படும் போது ஏற்படுத்தும் பாதிப்புகள் மிகவும் பாரதூரமானவை.

பொதுவாக அப்பதார்த்தங்கள் ஒழுங்கான கொள்கலன்களினுள் அடைக்கப்பட்டு பாதுகாப்பாக வெளியேற்றப்படும். ஆயினும் அவை எங்கே, எப்படி வெளியேற்றப்படுகின்றனவென எவரும் அறிய முனைவதில்லை.

ஒரு வைத்தியசாலையிலே இவ்வளவு கழிவுகளும் வெளியேற்றப்படுகின்றன என்று கூட இதுவரை காலமும் நாம் சிந்தித்திருக்க மாட்டோம்.

ஒரு வைத்தியசாலையில் வெளியேற்றப்படும் கழிவுகளின் அளவு, அவ் வைத்தியசாலையின் தன்மையைப் பொறுத்துமாறுபடும். நடுத்தர அளவு, குறைந்தளவு வருமானம் பெறும் நாடுகளுடன் ஒப்பிடுகையில் கூடிய வருமானம் பெறும் நாடுகளால் வெளியேற்றப்படும் கழிவுகள் மிகவும் அதிகமாகும்.

அதேபோல அணு உலைகளினால் வெளியேற்றப்படும் கதிர்த் தொழிற்பாடுடைய கழிவுகளுடன் ஒப்பிடுகையில், வைத்தியசாலைகளில் வெளியேற்றப்படும் இத்தகைய கழிவுகளின் அளவும் குறைவாகும்.

வைத்தியசாலைகளில் கழிவுகள் வெளியேற்றப்படுபவதைத் தவிர்க்க முடியாது. ஆனால் அக்கழிவுகளை செவ்வனே முகாமைப்படுத்தினால், அவற்றினால் ஏற்படும் பாதிப்புக்களிலிருந்து சுற்றுச் சூழலையும் மனிதர்களையும் பாதுகாக்க முடியும்.

மருத்துவமனைகள் போன்ற சுகாதார அமைப்புக்களின் நச்சுக் கழிவுகள் ஒருபோதும் நகரக் கழிவுகளுடன் கலக்கவிடப்படலாகாது. ஆனால் பல அபிவிருத்தியடைந்த நாடுகளில் அவை நகரக் கழிவுகளுடன் கலக்கப்பட்டு அப்புறப்படுத்தப்படுகின்றன.

இல்லையேல் சுத்திகரிக்கப்படாமல் நீர் நிலைகளிலோ அல்லது நிலத்தினுள் புதைக்கப்பட்டோ அப்புறப்படுத்தப்படுகின்றன.



ஏனெனில் மருத்துவமனைக் கழிவுகளை முகாமைப்படுத்துவதொன்றும் எளிதான காரியமல்ல. அதற்கான செலவை ஈடுசெய்ய அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் பொருளாதார நிலை இடம் கொடுப்பதில்லை.

அத்துடன் செலவுகளைக் கணித்து அவற்றின் அடிப்படையில் வேறு உத்திகளைக் கையாளும் நிலையிலும் அந்த நாடுகள் இல்லை என்றே கூற வேண்டும்.

இந்த மருத்துவமனைக்கழிவுகளால் உருவாக்கப்படும் சுற்றுச் சூழல், சுகாதாரப் பிரச்சினைகள் தான் அவற்றை அப்புறப்படுத்துவதில் இருக்கவேண்டிய அக்கறையை மேன் மேலும் தெளிவுபடுத்துகின்றன.

சுற்றுச் சூழலின் ஆரோக்கியத்துக்கும் வாழும் மக்களின் ஆரோக்கியத்துக்குமிடையில் இடைத்தொடர்பு காணப்படுகிறது என்பதை எவராலும் மறுக்க முடியாது. சுற்றுச் சூழல் ஒழுங்காகப் பேணப்பட்டால், அங்கு வாழும் மக்களின் ஆரோக்கியமும் தானே அமைந்துவிடும். நாம் சூழலுக்கு வெளியேற்றும் கழிவுகளின் நச்சுத்தன்மை குறைக்கப்பட்டாலே, அக்கழிவுகளால் ஏற்படும் சூழல் மாசும் பல மடங்குகள் குறைவடையும்.

மருத்துவமனைக் கழிவுகளைப் பொறுத்தவரையிலே, அவற்றை மீள் சுழற்சி செய்தலும் அப்புறப்படுத்தலும் ஒழுங்குபடுத்தப்பட்ட கட்டமைப்பினடிப்படையிலே பாதுகாப்பாக மேற்கொள்ளப்படவேண்டும்.

தெற்காசிய நாடுகளில், மருத்துவமனைக் கழிவுகளின் சில வகைகள் உயர் வெப்ப நிலையிலே எரிக்கப்படுவதாகவும் சில வகைகள் தொற்று நீக்கம், நுண்ணுயிரழிவாக்கம் செய்யப்பட்டுப் பின் பரிகரிக்கப்படுவதாகவும் தாய்லாந்திலுள்ள ஆசிய தொழில்நுட்ப நிறுவகத்தின் ஆய்வொன்று தெரிவிக்கிறது.

தொற்றுக்களையுடைய கழிவுகளும் பரம்பரை அலகுகளில் பிறழ்வுகளை ஏற்படுத்த வல்ல கழிவுகளும் மிக உயர் வெப்பநிலையிலே எரிக்கப்படுகின்றன. அவற்றுள், வெப்பத்தைத் தாக்குப்பிடிக்கக் கூடியவை சில, மிக உயர் வெப்பநிலையிலே பிரிகையடையச் செய்யப்படுகின்றன.

பொதுவாக, திரவ நிலையிலுள்ள கழிவுகள் இரசாயனப் பதார்த்தங்கள் மூலம் தொற்று நீக்கப்படுகின்றன. அதேபோல, திண்ம நிலையிலுள்ள கழிவுகள் உயர் வெப்பம் வழங்கப்பட்டு தொற்று நீக்கப்படுகின்றன. கழிவுகள் நீராவியால் நுண்ணுயிரழிவாக்கம் செய்யப்படுகின்றன. நுண்ணலைகள் மூலம் கழிவுகளின் ஈரப்பற்று அகற்றப்படுகிறது.

‘பிளாஸ்மா ஆக்’ எனப்படும் நவீன தொழில்நுட்பமானது மின்வாய்கள் மூலம் கழிவுகளைச் சுத்திகரிக்கிறது. இத்தொழில் நுட்பத்தின் படி கழிவுகள் எரிக்கப்படவோ அல்லது சாம்பலாக்கப்படவோ மாட்டாது.

இறுதியாக சூழலுக்கு இவை பாரிய தீங்கை விளைவிக்கமாட்டாது எனக் கருதும் நிலையில் கழிவகற்றலுக்காக அமைக்கப்பட்ட கிடங்குகளுள் இட்டு நிரப்பப்படுகின்றன.

ஆனால் நடைமுறையிலே, பல வைத்தியசாலைகளில் இவை முறையாக நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. நகரக்கழிவுகளுடனே சேர்க்கப்படுகின்றன. சில வைத்தியசாலைகள் திறந்த வெளியிலே கழிவுகளைக் கொட்டி எரிக்கின்றன. அல்லது புதைக்கப்படுகின்றன.

நகரக் குப்பைகளைச் சேகரிக்கும் சாதாரண தொழிலாளர்கள் சில இறப்பர் மற்றும் பிளாஸ்டிக்கினால் செய்த மருததுவமனைக்கழிவுகளை மீள் சுழற்சி செய்து பாவனைக்குட்படுத்துகின்றன. இவை எவ்வளவு தூரம் ஆரோக்கியமானவை என்ற விடயம் கேள்விக்குறியாகவே இருக்கிறது.

பூட்டானிலே பாவித்தபின் எறியும் கூரான வைத்தியசாலை உபகரணங்கள் சுத்திகரிக்கவோ அல்லது நுண்ணுயிரழிக்கப்படவோ செய்யாமல் மீளப் பாவிக்கப்படுவதும் ஆசிய தொழில்நுட்ப நிறுவகத்தின் ஆய்விலே தெரியவந்திருக்கிறது.

இந்தியாவிலே, ஒரே குப்பை வண்டியில் சகல வகையான கழிவுகளும் அப்புறப்படுத்தப்படுவதும், சகல கழிவுகளும் ஒருங்கே கலக்கப்படுவதும் கூடக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவின் புனித நதிகள் என்றால் மனக்கண்ணில் முதலில் தெரிவது கங்கை நதியாகும். காலத்தால் தொன்மைவாய்ந்தது மட்டுமன்றி வருடம் முழுவதும் நீர் சல சலவென ஓடிக்கொண்டிருக்கும் நதியாகவும் கங்கை நதி காணப்படுகிறது. கங்கையிலே மூழ்கி எழுந்தால் செய்த பாவங்கள் கரைக்கப்பட்டுவிடும் என்பது ஐதீகம்.

ஆனால் இன்றைய நிலையில் கங்கையில் மூழ்கி எழுந்தால் புதிய நோய்களையும் சேர்த்துக் காவிக்கொண்டு வந்து விடுவோமோ என்ற அச்சம்தான் எழுகிறது. தொழிற்சாலைக் கழிவுகளும், மருத்துவமனைக்கழிவுகளும் கங்கை நதியிலே கலக்கப்படுகின்றன.

டையொக்சின் எனப்படும் நச்சு இரசாயனத்தின் செறிவு கங்கை நதி நீரில் அதிகமாக இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அதற்கான அடிப்படைக் காரணம் உயர் வெப்ப நிலையிலே எரிக்கப்பட்ட வைத்தியசாலைக்கழிவுகளின் மீதிகள் கங்கை நதி நீருடன் கலக்கப்படுதலேயாகும்.

வவுனியாவின் வைத்தியசாலைக் கழிவுகள் சுத்திகரிக்கப்படாமல் வவுனியாக் குளத்திலே கலக்கப்பட்டதால் அக்குளம் முற்றாக மாசடைந்து காணப்படுவதாக, ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழக, பட்டப்பின் கல்வி ஆய்வறிக்கையொன்று தெரிவிக்கிறது.

விவசாயத்துக்காக அமைக்கப்பட்ட இந்தக் குளம் இன்று மாசடைந்து போயுள்ளது. இந்த நீர் விவசாயத்துக்காகப் பயன்படுகையில், அதனால் உருவாகப் போகும் சுற்றுச் சூழல் மற்றும் சுகாதாரப் பிரச்சினைகள் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் எனக் கற்பனை செய்யவே முடியவில்லை. குறுகிய காலத்திலே எந்த ஒரு விளைவும் கண்ணுக்குத் தெரிவதில்லை. ஆனால் நீண்ட கால நோக்கிலே அவற்றை கண்டறியும் போது அவற்றைக் கட்டுப்படுத்த முயல்தலானது எமது கையை மீறிய செயற்பாடாகவே இருக்கும்.

வவுனியா வைத்தியசாலை மட்டுமன்றி இன்னும் பல வைத்தியசாலைகளிலும் இதனை ஒத்த செயற்பாடுகள் நடைபெற்றிருக்கலாம். ஆனால், அவை வெளிக்கொணரப்படுவதில்லை. இங்குதான் ஆய்வாளர்களது தேவை அவசியமாகிறது.

ஆய்வாளர்களும் ஆய்வு நிறுவனங்களும் இணைந்து இத்தகைய ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். ஆய்வு முடிவுகளை விஞ்ஞானச் சஞ்சிகைகளிலும் புத்தகங்களிலும் உறங்க வைக்காமல், அவற்றை எளிமைப்படுத்த வேண்டும். அவை வெகுசனத் தொடர்பு ஊடகங்கள் மூலம் பொதுமக்களைச் சென்றடைய வழி செய்ய வேண்டும். அப்போதுதான் பொதுமக்கள் விழிப்படைவார்கள்.

அவர்கள் விழிப்படைந்தால், மருத்துவமனை நிர்வாகம் தனது எண்ணப்படி இக்கழிவுகளை அகற்றிவிட முடியாது. இதனால் கிடைக்கும் வெற்றி எம் யாவருக்குமுரியதே.

மருத்துவமனை நிர்வாகத்தையோ, அல்லது ஒரு நாட்டையோ அல்லது ஒரு கருதுகையில், இக்கழிவுகளை அப்புறப்படுத்துவதற்காகக் கொடுக்கும் விலை, விளைவுகளுடன் ஒப்பிடுகையில் இலாபகரமானதில்லை என்ற கருத்தொன்றும் நிலவி வருகிறது.

எங்கு பார்த்தாலும் பணரீதியான பெறுமதிக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் இன்றைய உலகைப் பொறுத்த வரையிலே பலருக்கு இக்கருத்து நியாயமாகவும் தெரிகிறது. இயற்கையும் உயிர்களும் விலைமதிப்பற்றவை. அவற்றிற்கு தீங்கு விளைவிக்கப்படும் எந்த ஒரு செயற்பாட்டிற்கான செலவும் நட்டமாகக் கருதப்பட முடியாதது என்பதை நாம் உணர வேண்டும். அங்கும் ஆய்வுகள் தான் அவசியமாகின்றன. ஏனெனில் எந்த ஒரு விடயமும் தர்க்கபூர்வமாக நிரூபிக்கப்பட வேண்டுமென இன்றைய உலகம் விரும்புகிறது.

நாம் ஒவ்வொருவரும், இந்தக் கழிவுகளுக்கெல்லாம் என்ன நடக்கிறது எனத் துருவ முற்பட்டால் சகல கழிவுச் சுத்திகரிப்புச் செயற்பாடுகளும் ஒழுங்காக நடக்கும் என்பதே நிதர்சனமான உண்மையாகும்.

Thursday, July 15, 2010

சூழலியலில் செய்மதி தொழில்நுட்பம்

செய்மதித் தொழில்நுட்பம் வளர்ந்து வரும் வேகம் பிரமிக்கத்தக்கது. மறைந்த விஞ்ஞானி ஆதர் சி கிளாக்கின் விஞ்ஞான புனைகதையொன்றிலே கருவுற்று இன்று வானுயர்ந்த விருட்சமாக வளர்ந்து வருகிறது. செய்மதிகளின்றி உலகில்லையென்ற நிலையே இன்று காணப்படுகிறது.

ஆனால் இணைய வசதியுள்ள எந்த ஒரு நபரும் செய்மதித் தொழில் நுட்பத்தை உபயோகிக்க முடியுமென்ற விடயத்தைப் பலர் உணர்வதில்லை. 1980 களிலே 25 அங்குலம் X 25 அங்குலம் என்ற பரிமாணமுடைய சதுர அலகுகளை (pixels) அடிப்ப டையாகக் கொண்ட புகைப்படங்கள் செய்மதித் தொழில்நுட்பத்தின் மூலம் பெறப்பட்டன.

ஆனால் இன்றோ, 9 அங்குலம் X 9 அங்குலம் பரிமாணமுடைய சதுர அலகுகளை அடிப்படையாகக் கொண்ட செய்மதி மூலமான வான் புகைப்படங்கள் பெறப்படுமளவிற்கு செய்மதித் தொழில்நுட்பம் வளர்ச்சி கண்டுள்ளது.

சூழலியல் நோக்கிலும் செய்மதித் தொழில்நுட்பத்தின் பங்கு அளப்பரியது. முக்கியமாக காடுகள் அழிக்கப்படுதல் நிலங்கள் வரண்டு போதல் போன்ற சூழல் பிரச்சினைகளை இலகுவாக இனங்காண்பதற்கான அடிப்படையாகவும் செய்மதித் தொழில்நுட்பமே அமைந்து விடுகிறது.

வனப்பகுதிகளிலோ தோட்டங்களிலோ நோய்களின் பீடிப்பால் ஏற்படும் தாக்கத்தை இனங்காண்பதற்கும் இந்தச் செய்மதிப் புகைப்படங்களே துணைபுரிகின்றன. அடர்ந்த காடுகளில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத செயற்பாடுகளை இனங்காணவும் இந்தச் செய்மதிப் படங்கள் வழிவகுக்கின்றன.

சட்டவிரோத செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதை இனங்காணுமிடத்து அவை தொடர்பாகச் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறியத்தர வேண்டும். அவற்றை இனங்காண நாம் நேரடியாக அந்த இடத்துக்குச் செல்லத் தேவையில்லை.

செய்மதித் தொழில்நுட்பத்தின் மூலம் சம்பந்தப்பட்ட இடத்தைச் கண்காணிக்கக் கூடிய வசதியைச் செய்மதித் தொழில்நுட்பம் ஏற்படுத்தித் தந்திருக்கிறது. இணைய இணைப்பும் ஒரு கணனியும் இருந்தாலே எமது நாட்டின் வனப்பிராந்தியங்களுக்கு என்ன நடக்கிறது என்று அறிந்து கொள்ள முடியும். google இணையத்தளத்திலே இருக்கும் google earth என்ற மென்பொருளைத் தரவிறக்கி நீங்களும் முயன்று பாருங்களேன்.!

Friday, July 9, 2010

உலக மக்கள் தொகை பெருகி வருகையில் உணவுக்கும் நீருக்கும் எங்கு போவது?



மனித வாழ்வின் சமூக பொருளாதாரக் கட்டமைப்புக்கள் ஒவ்வொன்றும் குடிசனத் தொகையின் அளவிலேயே தங்கியுள்ளன. உலகளாவிய ரீதியிலே சனத்தொகையானது அதிகரித்து
வருகின்ற போதிலும் சில அபிவிருத்தியடைந்த நாடுகளிலே சனத்தொகையின் வளர்ச்சிப் போக்கு குறைவடைந்தும் செல்கிறது. அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் நகர்ப் பகுதிகள் சனத்தொகை அடர்த்தி கூடியவையாக மாறிவருகின்றன.

உலகளாவிய ரீதியிலே அதிகரித்து வரும் சனத்தொகையால் தான் பற்றாக்குறை மற்றும் மிகை நுகர்வு போன்ற புதிய பிரச்சினைகள் உருவாகத் தொடங்கின.


எங்கு பார்த்தாலும் நிலப்பற்றாக்குறை, நீர்ப் பற்றாக்குறை என இயற்கை வளங்கள் பற்றாக்குறையாகத் தொடங்கின. அதேபோல ஒரு பகுதி சனத்தொகையால் வளங்கள் மிகையாக நுகரப்பட ஒரு பகுதி சனத்தொகைக்கு வளங்களே இல்லாமல் போயின.

இத்தகைய சமமற்ற வளப் பங்கீடு காரணமாக மேலும் பல சமூக பொருளாதாரப் பிரச்சினைகள் தோற்றம் பெற்றன. அதிகரித்து வரும் சனத்தொகையால் சூழல் மாசடைதல் பிரச்சினைகளைக் கட்டுப்படுத்த முடியாமல் போயிற்று.

உலக சனத்தொகை வளர்ச்சிப் போக்கினடிப்படையில், உலக குடித்தொகை கடிகாரமானது. உலக சனத்தொகையைத் தினமும் மதிப்பிட்டுக் கொண்டிருக்கிறது. அதேபோல சனத்தொகை வளர்ச்சி வீதம் வருடாந்தமும் ஒரு தசாப்தத்துக்கொரு முறையுமெனக் கணிப்பிடப்படுகின்றது. இது வரைகாலத்துக்குள் 1950 களே உயர் சனத்தொகை வளர்ச்சி வீதத்தையுடைய தசாப்தமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அத்தசாப்தத்தின் சனத்தொகை வளர்ச்சி வீதம் வருடத்துக்கு 1.8 சதவீதமாக இருந்தது. அதேபோல 1963 ஆம் ஆண்டே சனத்தொகை வளர்ச்சி வீதம் அதிகமாக இருந்த ஆண்டாகப் பதியப்பட்டுள்ளது. அவ்வாண்டின் சனத்தொகை வளர்ச்சி வீதம் 2.2 ஆகும். 2040 ஆம் ஆண்டுக்கும் 2050 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்திலே உலக சனத்தொகை 9 பில்லியனை எட்டுமெனத் தெரிவிக்கப்படுகிறது.

ஒவ்வொரு தனிமனித வாழ்வியலிலும் காணப்படும் சமூக பொருளாதா ரீதியிலான பிரச்சினைகளுக்கு அடிப்படையாக அமைவது உலகளாவிய சனத்தொகை வளர்ச்சியேயாகும். அது மட்டுமன்றி நாடுகள், பிராந்தியங்களின் அபிவிருத்தியும் உலகளாவிய, பிராந்திய ரீதியிலான, நாடளாவிய சனத்தொகை வளர்ச்சியில் தங்கியுள்ளமையை மறுக்க முடியாது.

உலக சனத்தொகையானது 1987 ஆம் ஆண்டு ஜுலை 11 ஆம் திகதி 5 பில்லியனை எட்டியது. அதன் பின்னர், உலக சனத்தொகை சீரான வீத்தில் வளர்ச்சியடையத் தொடங்கியது.

உலக சனத்தொகை 5 பில்லியனை எட்டியதையடுத்து அது தொடர்பாக மேலும் அறிந்து கொள்வதற்கு உலக மக்கள் ஆர்வம் கொண்டனர். அதையடுத்து ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித்திட்டம் 1989 ஆம் ஆண்டு முதல் ஜுலை 11 ஆம் திகதியை உலக சனத்தொகை தினமாகப் பிரகடனப்படுத்தியது.

உலகளாவிய சனத்தொகை தொடர்பான விழிப்புணர்வை மக்கள் மத்தியிலே உருவாக்கும் பொருட்டு ஒவ்வொரு வருடமும் அந்த நடப்பு வருடத்திலுள்ள, சனத்தொகை தொடர்பான பிரச்சினைகளைத் தொனிப் பொருளாகக் கொண்டு இத்தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதற்கமைய 2010 ஆம் ஆண்டுக்கான தொனிப் பொருளாக ‘ஒவ்வொருவரும் முக்கியமானவர்கள்’ என்ற தொனிப்பொருள் அமைந்துள்ளது. உத்தியோகபூர்வமான குடிசனத்தொகை மதிப்பீட்டிலே, குழந்தைகள் முதல் முதியோர் வரை சகலரும் பங்கு பற்றும் வகையில் மக்களை ஊக்குவிக்கும் நோக்கை அது அடிப்படையாகக் கொண்டது.

அதுமட்டுமன்றி குடிசனத்தொகை மதிப்பீட்டிற்கான தரவுகளைச் சேகரித்தல் தொடர்பான அறிவூட்டுதலை உபநோக்காகக் கொண்டமைந்திருக்கிறது.

வறுமைப் பிரச்சினைகளை வெற்றிகரமாக எதிர்நோக்க சமூகக் கொள்கைளையும் செயற்றிட்டங்களையும் வடிவமைக்க வேண்டியது அவசியமாகிறது. அத்தகைய செயற்பாடுகளுக்கு குடிசனத் தொகை தொடர்பான தரவுகள் மிகவும் அவசியமாகும்.

‘ஒவ்வொரு கருத்தரிப்பும் முக்கியமானது; ஒவ்வொரு பிறப்பும் பாதுகாப்பாக இருக்கிறது; ஒவ்வொரு இளைஞனும் எச். ஐ. வி. தொற்று அற்றவனாக இருக்கிறான்; ஒவ்வொரு பெண்ணும் மாண்புடனும் மரியாதையுடனும் மதிக்கப்படுகிறாள்’ என இத்தினத்திலே நாம் உறுதி செய்துகொள்ள வேண்டுமென ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் தெரிவிக்கிறது.

குடிசனத்தொகை தொடர்பான விடயங்களை நோக்கவென, ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் கிளை அமைப்பாக ஸினிபிஜிதி எனும் அமைப்பு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

தேசிய அரசாங்கங்கள் மட்டுமன்றி மாகாண சபைகளுடனும் ஏனைய அரச சார்பற்ற, தனியார் நிறுவனங்களுடனும் இணைந்து பல செயற்றிட்டங்களை இந்த அமைப்பு மேற்கொண்டு வருகிறது.



அத்துடன் ஒவ்வொரு நாட்டிலும் சனத்தொகைப் பிரச்சினைகளை அணுகுதல் தொடர்பாக மேற்கொள்ளப்படும் செயற்றிட்டங்களுக்கு ஒத்துழைப்பையும் வழங்குகிறது.

2050 ஆம் ஆண்டளவிலே, உலகின் சனத்தொகை 9 பில்லியனாக மாறப்போகிறது. பரந்தளவிலான வறுமை, வேலையின்மை, பட்டினி போன்ற பல பிரச்சினைகள் உருவெடுக்கப் போகின்றன என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்பிரச்சினைகளை முறையாக அணுக, ஒழுங்காக ஆய்வு செய்யப்பட்ட துல்லியமான தரவுகள் மிகவும் அவசியமாகின்றன.

அத்தரவுகள் எங்கிருந்தோ பெறப்படுபவை அல்ல. அவை எம் ஒவ்வொரு வரிடமிருந்தும் பெறப்பட்டவையாகும். நாம் ஆய்வாளர்களுக்குத் தேவையான தரவுகளைச் சரியாக வழங்கினால் தான் ஆய்வு முடிவுகளும் துல்லியமாக அமையும். ஒவ்வொரு குடிமகனிடமிருந்தும் பெற்ற தரவுகளை ஒழுங்குபடுத்தி முறையே ஆய்வுசெய்து முடிவுகளைப் பெறுவதொன்றும் இலகுவான காரியமல்ல.

அதனால் தான் குடிசனத்தொகை மதிப்பீடு நீண்ட காலத்துக்கொருமுறை நடைபெறுகிறது. குடிசன மதிப்பீடு நடைபெறும் ஆகக் குறைந்த காலப் பகுதி 10 வருடங்களாகும்.

இந்த வருடத்துக்கான உலக சனத்தொகை தினத்தின் தொனிப் பொருள், ஒவ்வொருவரும் குடிசனத்தொகை மதிப்பீட்டில் பங்கெடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறது. குறிப்பாக, சிறுவர்களதும் பெண்களினதும் பங்களிப்பு அதிகமாக இருக்க வேண்டுமென எதிபார்க்கிறது.

1790 ஆம் ஆண்டின் பின்னரே, சிறுவர்களைக் குடிசனத் தொகை மதிப்பீட்டில் பங்கெடுக்க வைக்கும் செயற்பாடு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. ஆயினும் 5 வயதிற்குட்பட்ட சிறுவர்களின் பங்களிப்பு ஏனைய வயதினருடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவானதாகவே இருக்கிறது.

குடிசனத் தொகை மதிப்பீட்டில் பங்கெடுக்கும் ஒவ்வொரு சிறுவனும், தேவையுடைய சமுதாயங்களை இனங்காண்பதற்கு மிகவும் அவசியமானதாக இருப்பானெனத் தெரிவிக்கப்படுகிறது.

குடிசனத் தொகை மதிப்பீடானது தேசிய ரீதியிலான தேவைகளை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட வேண்டும். அத்துடன், அக் குடிசனத் தொகை மதிப்பீட்டின் மூலம் பெறப்படும் முடிவுகள், சர்வதேச ரீதியாகவும் காலத்துடனும் ஒப்பிடப்படக் கூடியதாக இருக்க வேண்டும். அதேபோல, பொதுமக்கள் விரும்பித் தரவுகளைத் தரும் வகையிலேயும் அமைய வேண்டும்.

ஒரு சமுதாயமோ அல்லது ஒரு தனி நபரோ சிரந்த சுகாதார வசதியுடன் , கல்வி, போக்குவரத்து, மற்றும் வசிப்பிட வசதிகளுடன் இருப்பதையோ அல்லது அந்த வசதிகளற்றிருப்பதையோ முழு உலகுக்கும் தெரிவிக்கும் காட்டியாக குடிசனத்தொகை மதிப்பீடு காணப்படுகிறது.

ஒரு நாட்டுக்குள்ளும் கல்விக்கான, சுகாதார வசதிகளுக்கான இட ஒதுக்கீடுகளும் ஏனைய அபிவிருத்தித்திட்டங்களும் கூட குடிசனத்தொகை மதிப்பீட்டினடிப்படையிலேயே மேற்கொள்ளப்படுகின்றன.

அண்மைக்காலங்களிலே, சூழலியலாளர்களும் பொருளியலாளர்களும் உலக சனத்தொகை வளர்ச்சிப்போக்கை ஆராய்ந்து எதிர்கால நிலைமைகளை மதிப்பிடவும் எதிர்வு கூறவும் அதிக ஆர்வமுடையவர்களாகக் காணப்படுகிறார்கள்.

ஏனெனில், சனத்தொகையின் வளர்ச்சிப் போக்கு இன்று மனிதனின் எதிர்காலம் தொடர்பான சகல விடயங்களையும் தீர்மானிக்கும் காரணியாக மாறிவிட்டது.

சனத்தொகை வளர்ச்சிவீதம் எங்ஙனம் கணிக்கப்படுகிறது எனப்பலர் அறிவதில்லை. ஒரு நாட்டின் சனத்தொகை வளர்ச்சி வீதமானது அந்நாட்டின் பிறப்பு, இறப்பு வீதங்களிலேயே தங்கியுள்ளது. அத்துடன் பிறப்பு இறப்பு வீதங்கள் ஏனைய சதவீதங்களைப் போன்று நூறுக்கு எத்தனை எனக் கணிக்கப்படுவதில்லை. அவை ஆயிரத்துக்கு எத்தனை எனக் கணிக்கப்படுபவையாகும். பிறப்பு வீதத்துக்கும் இறப்பு வீதத்துக்கும் இடையிலான வித்தியாசத்தைப் பத்தால் வகுக்கும் போது பெறப்படுவதே சனத்தொகை வளர்ச்சி வீதமாகும்.

சனத்தொகை அதிகரிக்க, அதிகரிக்க மனிதத் தேவைகளும் அதிகரிக்கும். இதனால் வளங்களின் பாவனை மிகவேகமாக அதிகரிக்கும். வளங்களின் பாவனையின் துரித அதிகரிப்பு, சுற்றுச் சூழல் மாசைத் தோற்றுவிக்கும்.



ஆய்வுகளின் அடிப்படையிலே உலக சனத்தொகை வளர்ச்சி வீதம் இப்போது குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சனத்தொகை காலத்துடன் அதிகரிக்கும் அளவு தான் குறைவடைந்துள்ளதே தவிர காலத்துடன் சனத்தொகை குறைவடையவில்லையென்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

2050ஆம் ஆண்டளவிலே, இந்தியாவின் சனத்தொகையானது (1.7 பில்லியன்) அதே நடப்பு ஆண்டிலுள்ள சீனாவின் சனத்தொகையை (1.4 பில்லியன்) விட அதிகமாக இருக்குமென எதிர்வு கூறப்படுகிறது. அப்போது, இவ்விரண்டு நாடுகளில் மட்டுமே உலக சனத்தொகையின் ஒன்றில் மூன்றைவிட அதிகமான பகுதி மக்கள் வாழ்வர் எனவும் குறிப்பிடப்படுகிறது.

அதேபோல சனத்தொகை வளர்ச்சிவீதம் அதிகமுள்ள கண்டமாக ஆபிரிக்கா காணப்படுகிறது. ஏனெனில் இக்கண்டத்திலுள்ள 20க்கும் மேற்பட்ட நாடுகளிலே மொத்தக் கருத்தரிப்பு வீதம் (ஒரு பெண்ணுக்குப் பிறக்குமென எதிர்பார்க்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை) 5 இலும் அதிகமாக இருக்கிறது. இதனால், 2050ஆம் ஆண்டளவிலே ஆபிரிக்காவின் சனத்தொகை இரட்டிப்படைந்து 2 மில்லியனாகுமெனவும் எதிர்வு கூறப்படுகிறது.

சனத்தொகை வளர்ச்சிவீதம் பிரச்சினைக்குரியதாக இருக்குமென எதிர்பார்க்கப்படும் நாடுகள் யாவுமே அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளாகும். வாழ்க்கைத்தரமும் தலாவருமானமும் உயர்வாக இருக்கும் நாடுகள் அபிவிருத்தியடைந்த நாடுகளாகக் கருதப்படுகின்றன.

அவ்விரு காட்டிகளும் குறிப்பிட்ட மட்டத்தைவிடக் குறைவாக உள்ள நாடுகள் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளாகவும் கருதப்படுகின்றன. அபிவிருத்தியடைந்த நாடுகள் நீண்டகால பொருளாதார வளர்ச்சியைக் கண்டுவரும் அதேவேளை தொழில்நுட்ப ரீதியாகவும் முன்னேற்றம் கண்டவையாகக் காணப்படுகின்றன.

ஆனால் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளோ, நீண்டகால அபிவிருத்தியின் நன்மைகளைப்பெறாதவையாக இருப்பதுடன் தொழில்நுட்பத்துக்காக அபிவிருத்தியடைந்த நாடுகளை நம்பியிருப்பனவாகவும் காணப்படுகின்றன.

அபிவிருத்தியடைந்த நாடுகளின் சனத்தொகை வளர்ச்சி வீதமும் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் சனத்தொகை வளர்ச்சி வீதத்தை விடக் குறைவாகும். ஆகையால் தான் சீன அரசு, சீனாவில் வசிக்கும் குடும்பம் ஒன்றிலே இருக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையை மட்டுப்படுத்த முனைகிறது. அந்த எண்ணிக்கையை விட ஒரு குடும்பத்திலுள்ள குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்தால், அக்குழந்தைகளுக்கு கல்வி உட்பட்ட பல வசதிகளை அரசு வழங்க மறுக்கிறது.

மாறாக அமெரிக்கா போன்ற நாடுகள் இத்தகைய மட்டுப்படுத்தல் நடவடிக்கைகள் எவற்றிலும் ஈடுபடுவதில்லை. இங்கு தான் வளங்களின் சமமற்ற பகிர்வும் உருவாகிறது.

உலக வரைபடத்திலே, இலங்கை ஒரு சிறிய புள்ளியாய் தெரிவதால், இலங்கையின் சனத்தொகை தனியாக உலகளாவிய ரீதியிலே பெரிய தாக்கத்தைச் செலுத்தப் போவதில்லை. ஆயினும் இலங்கையும் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுள் ஒன்று என்பதை நாம் ஒரு போதும் மறக்கக் கூடாது.

இலங்கையின் அபிவிருத்தித் திட்டங்கள் பல சனத்தொகைப் பரம்பலின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படுகின்றன. இலங்கையின் இலவசக் கல்வித் திட்டத்தின் கீழ் கல்வி பயிலும் ஒவ்வொரு மாணவனதும் இலக்காக இருக்கும் பல்கலைக்கழக அனுமதியும் குடிசனத்தொகை மதிப்பீட்டுடன் தொடர்புடையதேயாகும்.

மாவட்டங்களின் சனத்தொகைப் பரம்பலையும் அதனுடன் தொடர்புபட்ட ஏனைய காட்டிகளையும் அடிப்படையாகக் கொண்டே மாவட்டங்களுக்கான பல்கலைக்கழக வெட்டுப் புள்ளியும் இட ஒதுக்கீடும் தீர்மானிக்கப்படுகின்றன.

அதே காட்டிகளின் அடிப்படையிலேயே பின்தங்கிய மாவட்டங்களும் கணிக்கப்படுகின்றன. இவற்றையெல்லாம் தீர்மானிப்பது கூட குடிசனத்தொகை மதிப்பீடேயாகும்.

இலங்கையிலே குடிசனத்தொகை மதிப்பீடு 2001 ஆம் ஆண்டு நடைபெற்றது. ஆனால், சில தவிர்க்க முடியாத காரணங்களால் இலங்கை பூராவும் நடத்தப்படவில்லை.

இந்நிலையில், எதிர்வரும் 2011 ஆம் ஆண்டு முழு இலங்கையிலும் குடிசனத் தொகை மதிப்பீடு நடத்தப்படவிருக்கிறதென இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்களம் அறிவித்திருக்கிறது. அவ்வாறு குடிசனத்தொகை மதிப்பீடு மேற்கொள்வதால் ஏற்படும் நன்மைகளையும், மேற்கொள்வதில் அரசும் சம்பந்தப்பட்ட ஊழியர்களும் எதிர்நோக்கும் சிரமங்களையும் உணர்ந்து எமது பூரண பங்களிப்பை நாம் வழங்க வேண்டும்.

ஏனெனில் அந்தக் குடிசன மதிப்பீடு மிகவும் துல்லியமாக இருக்கும் பட்சத்தில் அதனால் கிடைக்கும் நன்மைகளை அனுபவிக்கப் போவதும் நாங்களே! ஆகையால், 2011 இலே இலங்கையில் மேற்கொள்ளப்படவிருக்கும் குடிசன மதிப்பீடு முன்னைய காலங்களினதைவிட மிகவும் துல்லியனமாக இருக்கும் வகையில் எமது பங்களிப்பைச் செலுத்துவோமென, உறுதி கொள்வோமாக!

Friday, July 2, 2010

கோபத்தின் வெளிப்பாட்டால் மாசுபடும் சுற்றுச் சூழல்




ஒவ்வொரு தனி மனிதனின் வெற்றியினதும் தோல்வியினதும் பின்னணியில் உள்ள முக்கிய காரணங்களுள் பழக்கவழக்கங்களும் குறிப்பிடத்தக்க இடத்தை வகிக்கின்றன. பழக்கவழக்கங்கள் எனப்படுபவை நாம் வழக்கங்களாக்கிவிட்ட பழக்கங்களையே குறிக்கின்றன.

‘ஒவ்வொருவருடைய பழக்க வழக்கங்களும் அவர்களின் மனப்பாங்கையே பிரதிபலிக்கின்றன’ என்ற கூற்றை ஒருபோதும் மறுக்க முடியாது. ஒருவருடைய மனப்பாங்கைத் தீர்மானிப்பதில், அவர் சார்ந்த சூழல் பெரும்பங்கு வகிக்கிறது.

எமது பழக்கவழக்கங்கள் எம்மை மட்டுமே பாதித்துக் கொண்டிருக்கின்றவரை அவை பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தாது. ஏற்படுத்தினாலும் தனி ஒருவரை மட்டுமே பாதிக்கும். அதேசமயம் தனிநபர் ஒருவரின் பழக்கவழக்கங்கள் மற்றவர்களையும் பாதிக்கின்றது என அறியப்படும் பட்சத்தில் அவை மாற்றப்பட வேண்டியது மிக அவசியமாகும்.

சிலர் பிறரைக் கேலி பேசுவர். சிலர் தமது பிழைகளையும் நியாயப்படுத்துவர். சிலர் எதற்கெடுத்தாலும் கோபம் கொள்வர். சிலர் எவருடனும் சாந்தத்துடன் கண்ணியமாகப் பேசுவர்.

சிலர் நல்ல விடயங்களைப் பாராட்டுவர். சிலர் வயது வித்தியாசம் பார்க்காமல் மரியாதையுடன் பழகுவர். ஆனால் சிலரோ யாரைக் கண்டாலும் மரியாதைக் குறைவாகவே பேசுவர். நேரந்தவறாமை சிலரது வழக்கமாக இருக்கும்.

நேரம் தவறுவதே சிலரது வழக்கமாக இருக்கும்.

பிறரிடம் காணப்படும் நல்ல பழக்கவழக்கங்களை நாம் பின்பற்றிக் கொள்ளும் அதேவேளை எம்மிடம் குடிகொண்டிருக்கும் கெட்ட பழக்கங்களை உணர்ந்து மாற்ற முயலவேண்டும்.

அத்தகைய மாற்றப்பட வேண்டிய பழக்கவழக்கங்களுள் கண்ட இடங்களில் துப்புதலும் குப்பைகளைக் கொட்டுதலும் கூட அடங்குகின்றன.

சூழலியல், மற்றும் சுகாதார நோக்கிலே இப்பழக்கவழக்கங்கள் இரண்டும் மாற்றப்படுதல் மிகவும் அவசியமாகிறது.

பீஜிங் ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஏற்பாட்டை, சீனா மேற்கொண்டு வந்த காலங்களில், அதிகாரிகள் சீன மக்களின் சில பழக்க வழக்கங்கள், சீன தேசத்துக்கு அவதூறை ஏற்படுத்திவிடுமோ என அச்சம் அடைந்தனர். துப்புதல், வரிசைகளில் நிற்கும் போது இடையே குறுக்கிடுதல், குப்பைகளைக் கொட்டுதல் ஆகியனவே அதிகாரிகள் அச்சமடைந்த பழக்கவழக்கங்களாகும்.

ஒலிம்பிக் போட்டிகளின் நிமித்தமாவது அவற்றை மாற்றியமைப்பதற்கு ஒலிம்பிக் குழுவினர் பல முயற்சிகளை மேற்கொண்டனர்.


ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கும் வரை ஒவ்வொரு மாதத்தின் 11ஆவது நாளும் வரிசையில் நிற்பதற்கான தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. அத்தினத்திலே அவசரப்படாமல் வரிசையில் நின்று தமது வேலைகளை நிறைவேற்றுவதற்கு மக்கள் ஊக்குவிக்கப்பட்டனர்.

மக்கள் வீதிகளில் துப்புவதைத் தவிர்க்க ஒவ்வொருவருக்கும் பைகள் இலவசமாக வழங்கப்பட்டு, அப்பைகளினுள் துப்புமாறு அவர்கள் அறிவுறுத்தப்பட்டனர். அதனை மீறுபவர்களிடம் தண்டப் பணம் அறவிடப்பட்டது.

இத்தகைய கெட்ட பழக்கங்களைத் தவிர்த்தலை ஊக்குவிக்கு முகமாக பல பதாகைகளும் தொங்கவிடப்பட்டன. இந்தத் தகவலானது, பிரித்தானிய ஒளிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் செய்திப் பிரிவின் ஒலிபரப்பிலிருந்து பெறப்பட்டது.

உமிழ் நீரையோ அல்லது வாய்க்குள் இருக்கும் பொருட்களையோ பலவந்தமாக வெளியேற்றுதலைத் ‘துப்புதல்’ என்பர். ஒரு நபர், மற்றொருவர் மீது துப்புவதானது வெறுப்பு, கோபத்தை வெளிப்படுத்தும் செயலாக உலகளாவிய ரீதியிலே கருதப்படுகிறது.

கண்ட இடங்களிலே துப்புவதால் அந்த இடங்கள் அழுக்கடைவதுடன் அவற்றின் அழகும் இழக்கப்பட்டு விடுகிறது. சாதாரண பக்aரியா கொல்லி மருந்துகளுக்குக் குணமாகாத நிமோனியா நோயும் கசமும் வெகுவிரைவாகப் பரவுவதற்கு கண்ட இடங்களில் துப்பும் பழக்கம் காரணமாய் அமைந்துவிடுகிறது. வைரஸ்கள் பரவுவதற்கும் இதே பழக்கம் காரணமாகிறது.

இலங்கையிலே சி1னி1 இன்ஃபுளுவென்சா வைரஸ் பரவுவதற்கான மூலகாரணிகளுள் இப்பழக்கம் முன்னணி வகித்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்திருந்தனர். இவ்வைரஸ் உமிழ் நீரில் ஏறத்தாழ 8 மணித்தியாலங்கள் வரை உயிர் வாழ்வதால், அது நோய் வெகு விரைவாகவும் சுலபமாகவும் பரவ ஏதுவாக அமைந்துவிடுகிறது-

‘துப்புதல்’ என்ற பழக்கம் சி1னி1 இன்ஃபுளுவென்சா மட்டுமன்றி எந்தவொரு சுவாச நோயும் பரவுவதற்குக் காரணமாக அமைகிறது.

இப்பழக்கத்தை கல்வியறிவற்ற வறிய சமுதாயங்களுக்குரியதொரு பழக்கமென வரையறுத்துக் கூறமுடியாது. நவீனரக வாகனங்களிலே பயணிக்கும் பணக்காரர்களையும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களையும் கூட இப்பழக்கம் விட்டு வைப்பதில்லை. கண்ட இடங்களில் துப்புதல் சுகாதாரத்துக்குக் கேடானது என அவ்வாறு துப்புபவர்கள் எவருமே எண்ணுவதில்லை.

வெற்றிலையை மெல்பவர்கள் ஒரு இலக்கை நோக்கித் துப்புவதை கலையாகவே கருதுகின்றனர் என்ற விடயம் மிகவும் வருந்தத் தக்கதாகும். சுட்டு விரலுக்கும் நடு விரலுக்குமிடையே வாயை வைத்து உயர் விசையுடன் துப்புவதை இன்றும் கிராமங்களில் அவதானிக்கலாம்.

துப்புவதை ஒரு பாரம்பரியமாகக் கருதுபவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். இவர்களெல்லாம் தாம் உன்னதமாக நினைக்கும் செயற்பாட்டால் உருவாகும் விளைவுகளை அறியாத வர்களாகவே தெரிகின்றனர்.

ஆபிரிக்காவின் மசாய் இன மக்களைப் பொறுத்தவரையிலே, துப்புதல் அதிஷ்டத்துடன் தொடர்புபட்ட விடயமாகக் கருதப்படுகிறது. அதிஷ்டத்துக்காக மட்டுமன்றி, சிறுவர்களைக் கண்டாலோ அல்லது தமக்குப் பிடித்தமானவர்களைக் கண்டாலோ இந்த இன மக்கள், சம்பந்தப்பட்ட நபர்களின் கைகளில் துப்பிய பின்னரே கை குலுக்குவார்கள்.

கிரேக்க கலாசாரத்திலே, ஒருவருக்கு புகழாரம் கிடைத்தால் உடனே அவர் மீது மூன்று தடவை துப்புவார்கள். இது திருஷ்டி கழிக்கும் செயற்பாடாகக் கருதப்படுகிறது. அத்துடன் திருமணங்களின் போது மணமகளின் மீது துப்புவதன் மூலம் நல் வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் வழக்கமும் கிரேக்க மக்களிடம் காணப்பட்டது.

திருஷ்டி கழித்தபின் அதற்கான பொருட்களின் மீது மூன்று தடவைகள் துப்பும் வழக்கம் இன்றும் எம் கிராமங்களில் காணப்படுகிறது.

இன்று பல இடங்களில், ‘இங்கே துப்புதல் தடைசெய்யப்பட்டுள்ளது’ என்ற அறிவித்தலைக் காண முடிகின்றது. கால்பந்து மற்றும் கிரிக்கெட் வீரர்களிடமும் இப்பழக்கம் காணப்படுவதை நாம் அவதானித்திருப்போம். முன்னைய காலங்களிலே, துப்புவதற்கென ‘படிக்கம்’ என்ற சாடியைப் பாவித்தார்கள். பித்தளை, வெண்கலம் போன்ற உலோகங்களினால் ஆக்கப்பட்டிருக்கும் இச்சாடியினுள் மண் போடப்பட்டிருக்கும். துப்ப வேண்டிய தேவையேற்படின், அதனுள் துப்புவார்கள். அதனால் இப்பழக்கம், சுகாதார சீர்கேடுகளை ஏற்படுத்தாது.



எமது பாட்டன், முப்பாட்டன் காலங்களிலே காணப்பட்ட இந்த முறைமை, இன்றைய அவசர உலகிலே, வழக்கொழிந்து போய்விட்டது. எமது முன்னோர்கள் எத்துணை தீர்க்கதரிசனத்துடன் இத்தகைய நடைமுறைகளைக் கையாண்டார்கள் என்பதும் தெளிவாகிறது.

பொது இடங்களிலே இவ்வாறு துப்புபவர்களை நாம் கண்டிருப்போம். பாதைகளில் நடந்து செல்லும் போதும், வாகனங்களில் பயணிக்கும் போது யன்னல்களூடும் துப்புபவர்களை நாம் பல தடவைகள் சந்தித்திருப்போம். அருகிலே நடந்து செல்லும் பொதுமக்கள் பற்றிய அக்கறை அவர்களுக்கு துளியளவேணும் இருப்பதில்லை.

ஒரு நாட்டை உருவகப்படுத்த வேண்டுமாயின் முதலில் தெரிவது அந்த நாட்டில் வாழும் மக்களேயாவர். ஒரு நாட்டைப் பற்றிச் சிந்திக்கும் போது எழிலும் அன்பும் மட்டுமே மனக் கண்ணில் தெரிய வேண்டுமென்பர். வீதிகளில் துப்புபவர்களின் பின்புலம் எப்படிப்பட்டதாக இருக்கும் என, உடனேயே தீர்மானிக்க முடியும். சிங்கப்பூர் போன்ற நாடுகளைப் பார்த்த உடனேயே மனம் மகிழ்வுறும்.

ஏனெனில் வீதியோரங்களிலே கூட குப்பைகூளங்களைக் காணமுடியாது. அங்கே, கண்ட கண்ட இடங்களில் எவரும் துப்பமாட்டார்கள். மீறுவோர் பெரிய பெறுமதியைத் தண்டப் பணமாகச் செலுத்தியே ஆக வேண்டும்.இந்த நடைமுறை பல வருட காலங்களாக, சிங்கப்பூரிலே உள்ளது. அதனால் தான் சிங்கப்பூர் அழகு மிளிரும் நாடாகத் தெரிகிறது.

சிங்கப்பூர் போன்ற பல நாடுகளிலே கண்ட இடங்களில், பொது இடங்களில் துப்புதல் சட்ட ரீதியாகத் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இலங்கையைப் பொறுத்தவரையிலே அத்தகைய சட்டங்கள் எவையும் இதுவரை உருவாக்கப்படவில்லை. அவ்வாறு சட்டங்கள் உருவாக்கப்பட்டு தண்டப் பணம் அறவிடப்பட்டால் தான் எம் மக்கள் திருந்துவார்கள் என்றே எண்ணத்தோன்றுகிறது.

ஆனால், இன்றைய இளஞ்சந்ததியினர் இப்பழக்கத்தின் விளைவுகளை அறிந்து திருந்தினால், நாளைய சமுதாயமாவது நாகரிகமான ஆரோக்கியமான சமுதாயமாக இருக்குமெனலாம்.

துப்புதல் போலவே, கண்ட இடங்களில் குப்பைகளை வீசும் வழக்கமும் இன்று எம்மவர் மத்தியில் அதிகரித்துக் காணப்படுகிறது. தங்கள் வீட்டுக் குப்பைகளை பொது இடங்களிலே கொட்டிவிட்டு தமது வீட்டைச் சுத்தமாக வைத்திருப்பதில் வல்லவர்களாகவே யாவரும் இருக்கின்றனர். நாம் பொது இடங்களில் போடுவது சிறு கடதாசித் துண்டாக இருப்பினும், அதனை அகற்றுவதற்கான செலவு அக்குப்பையின் உண்மைப் பெறுமதியை விட அதிகமென்ற உண்மை பலருக்குப் புரிவதில்லை.

பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பொலித்தீன் பைகளின் பாவனை ஒவ்வொருவரது வாழ்வியலிலும் நன்கு ஊடுருவிவிட்டது. பாவனை முடிந்ததும் பொருட்களைத் தூக்கியெறியும் கலாசாரம் சகஜமாகிவிட்டது.

ஆகையால் பொது இடங்களில் சேரும் குப்பைகள் பெருகத் தொடங்கின. அங்கிருக்கும் குப்பைத் தொட்டிகள் மட்டும் வெறுமையாக இருப்பதையும் வேறு தேவைகளுக்காகப் பாவிக்கப்படுவதையும் கூடக் காணமுடிகிறது. குப்பைகளோ நாலா பக்கங்களிலும் சிதறிக் கிடக்கின்றன. இத்தகையதோர் நிலை இலங்கையில் மட்டும் காணப்படுவதான ஒன்றல்ல. பெரும்பாலான வளர்முக நாடுகளில் இதேநிலை தான் காணப்படுகிறது.

சென்னை மாநகரின் பிரதான பஸ் நிலையமாகிய கோயம்பேடு ஒம்னி பஸ் நிலையத்தில் கிடைத்த அநுபவமொன்று ஞாபகத்துக்கு வருகிறது. எங்கு பார்த்தாலும் ‘நகரைச் சுத்தமாக வைத்திருங்கள்!’ என்ற விளம்பரப் பலகைகளைக் காணக் கூடியதாக இருந்தது.

ஆனால் கையிலிருந்த குப்பைகளைப் போடுவதற்காக குப்பைத் தொட்டிகளைத் தேடி கடைசியில் களைப்பு மட்டுமே எஞ்சியது. பின்னர் எமது பயணப்பை தான் அக்குப்பைகளையும் ஏற்றுக் கொண்டது. கண்ட இடங்களிலே குப்பைகள் வீசப்படுவதற்கு இத்தகைய அனுபவங்கள் கூட, காரணமாகிவிடுகின்றன. குறித்த இடத்திலே குப்பைத் தொட்டி இல்லாவிட்டால் என்ன? அது இருக்கும் இடத்தைக் காண்கையில் குப்பைகளை அப்புறப்படுத்த முயலலாமே!

வைத்தியசாலைகளிலும் கழிவுகள் மற்றும் குப்பைகளை அகற்றும் சிற்றூழியர்கள் வேலை நிறுத்ததில் ஈடுபடும் காலங்களில் அவ்வைத்தியசாலைகளின் நிலையைக் கற்பனை செய்து பார்க்கக்கூட முடியாது. சிற்றூழியர்கள் இருந்தால்கூட, சில வைத்தியசாலைகளின் குப்பைகள் கிரமமாக அகற்றப்படாத நிலையைப் பல இடங்களிலே காணமுடிகிறது. பொது இடங்களில் உள்ள இத்தகைய குப்பைகளைக் கருதுகையில் கண்ணிருந்தும் குருடர்களாகவே இருக்கிறோம்.

இவ்வாறு பொது இடங்களிலே வீசப்படும் குப்பைகள் ஒரு நாட்டிற்கு சுகாதார ரீதியாகவும் நிதி ரீதியாகவும் பெரும் சுமையையே தருகின்றன.

பலதொற்று நோய்கள் பரவுவதற்கும் புதிய பல நோய்கள் உருவாக்கப்படுவதற்கும் கூட, இந்த குப்பை கூளங்கள் காரணமாக அமைந்துவிடுகின்றன. பாவனைக்குதவாதென வீசப்படும் வெற்றுக் கொள்கலன்களில் மழை காரணமாக தேங்கி நிற்கும் தெளிந்த நீர் டெங்கு நுளம்புகளின் இனப்பெருக்கத்துக்குக் காரணமாக அமைந்து விடுகிறது. இதே போல இக்குப்பைகள் பல்வேறு நோய்க்கிருமிகளின் விருத்திக்கும் வழிவகுத்து விடுகின்றன.

நீர்நிலைகளில் கொட்டப்படும் கழிவுகள் நீரை மாசுபடுத்துகின்றன. குப்பைகளினூடு வடிந்தோடும் நீரிலே கரைந்திருக்கும் மாசுக்கள் நிலக் கீழ் நீரை மாசுபடுத்தி விடுகின்றன. அத்துடன் பார உலோகங்களின் செறிவையும் நிலக்கீழ் நீரிலே அதிகரித்து விடுகின்றன.

இவை காரணமாக நீரினால் பரவும் நோய்களும் நீண்டகால நோக்கில் புற்றுநோய் போன்ற கொடிய நோய்களும் கூட உருவாகும் வாய்ப்புகள் அதிகம் காணப்படுகின்றன.

இதனால், ஒரு நாட்டின் சுகாதாரச் செலவு அதிகரிப்பதுடன் ஆரோக்கியமற்ற மக்கள் சமுதாயம் காரணமாக நாட்டின் அபிவிருத்தியும் பாதிக்கப்படும்.

இக்குப்பைகளைச் சேர்த்து பொருத்தமான இடத்திலே வைத்து அப்புறப்படுத்துவதுடன், தேவையான சந்தர்ப்பங்களில் அவற்றை மிக உயர் வெப்பநிலையிலே எரிப்பதற்கான செலவும் மிக அதிகமாகும்.

குப்பை போடுபவர்கள் எவரும், அச்செலவைப் பற்றிச் சிந்திப்பதில்லை யென்பதே வெளிப்படையான உண்மையாகும்.

மக்களின் இத்தகைய மனப்பாங்குகளுக்கு பாடசாலைகளும் பொறுப்பேற்க வேண்டுமென்றே தோன்றுகிறது.

பொது இடங்களிலே குப்பைகளை வீசுதல், துப்புதல் தொடர்பான விழிப்புணர்வு இளஞ்சமுதாயத்திடம் சரியாக ஊட்டப்பட்டாலே போதுமானது. அதற்கான முதலடியை எடுத்து வைக்க வேண்டியவர்கள் பாடசாலைச் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களேயன்றி வேறெவருமல்லர்.

ஆனால் அது பாடசாலைகளின் வேலையென எண்ணி மற்றையவர்கள் அலட்சியமாக இருத்தலும் உகந்ததல்ல.

எடுத்தற்கெல்லாம் நகர சபைகளையும் அரச அதிகாரிகளையும் குறை கூறாது, நாம் ஒவ்வொருவரும் முயன்றால் குப்பைகளையே காணமுடியாத சிங்கப்பூராக எமது நாட்டையும் மாற்றமுடியுமென்பதில் எதுவித ஐயமுமில்லை!