Sunday, May 22, 2011

பார்த்தீனியம் பற்றிய முதலாம் பக்க செய்தி


வடக்கில் பார்த்தீனிய கட்டுப்பாடு விழலுக்கு இறைத்த நீராகிப் போனது!அது 1980 களின் பிற்பகுதி...
உள்நாட்டுப் பிரச்சினைகளைத் தீர்க்கவென இந்திய அமைதிப்படை இலங்கையில் கால் பதித்திருந்த காலம். 1987 களில் இந்தியத்துருப்பினர் தம்முடன் செம்மறி ஆடுகளையும் கொண்டுவந்தனர். அவர்கள் கொண்டு வந்த ஆடுகள் மற்றும் பொதியுடன் ஒருவகை விதையும் சேர்ந்து வந்தது. அப்போது அந்த விதை பற்றி இலங்கையில் எவரும் அறிந்திருக்கவில்லை.

யாழ்ப்பாணத்தில் பார்த்தீனியத்தின் பரம்பல் எமது கட்டுப்பாட்டில் இல்லை என்றே கூற வேண்டும். (பாத்தீனியம்) பல பொது இடங்களில் பரவிக் காணப்படுகிறது.

முன்னர் எமது திணைக்களம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. வெவ்வேறு நிலைகளில் சிரமதானங்கள் மேற்கொள்ளப்பட்டன. மக்கள் மத்தியில் விழிப்புணர்வுக் கூட்டங்கள், பிரசாரங்கள் மற்றும் கருத்தரங்குகள் நடத்தப்பட்டன. பல விவசாய அமைப்புகளும் ஒத்துழைத்தன. ஆனால் மக்களிடம் இருந்து போதிய ஒத்துழைப்பு கிடைக்காததால் அவை எவையும் வெற்றியளிக்கவில்லை. மக்கள் தமது தோட்டத்திலிருக்கும் பார்த்தீனியம் செடிகளைக் களையக்கூட தயாராக இல்லை. இப்படி இருக்கும் போது பொது இடங்களில் இருப்பவற்றை எப்படிக் களைய முடியும்?

பார்த்தீனியம் செடிகளை ஒரேதரத்தில் அழிக்கமுடியாது. அழிப்பு நடவடிக்கைகளை குறித்த கால இடைவெளிகளில் கிரமமாக நடைமுறைபடுத்த வேண்டும். அத்துடன் செடிகள் பூக்க முதலே அழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இல்லாவிடில் விதைகள் விரைவாகப் பரப்பிவிடும்.

இந்த வருடம் பார்த்தீனிய கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை.

களை கொல்லிகள் மூலம் அவற்றை ஒழிப்பதற்கு போதிய நிதியுதவியும் கிடைக்கவில்லை. பார்த்தீனிய ஒழிப்பில் பிரதேச செயலகங்கள், பொதுமக்கள் உட்பட சகல தரப்பினரதும் ஒன்றிணைந்த ஒத்துழைப்பு அவசியமாகிறது. அந்த ஒத்துழைப்பு இல்லாமல் நாம் தனித்து நின்று எதையுமே செய்ய முடியாது.
இந்திய இராணுவம் முகாமிட்டிருந்த வவுனியா விவசாயப் பாடசாலை வளாகத்தில் விழுந்த அந்த விதைகள் விழுந்து முளைத்தன. விளைவு, பார்த்தீனியம் என்ற அழிக்கும் இயல்புடைய (புதிய வகை)த் தாவரம் முளைக்கத் தொடங்கியது. பார்த்தீனியமானது இந்தியாவில் இலங்கைக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டது என்றே கூறவேண்டும்.

இந்திய அமைதிப்படை முகாமிட்டிருந்த பகுதிகளிலெல்லாம் பார்த்தீனியம் மிகவும் வேகமாகப் பரவியது. அதன் பரவல் மனிதக் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டதாகியது. ஏனெனில் பார்த்தீனியம் பரவியுள்ளது என்பதை அறியவே எமக்குப் பல ஆண்டுகள் ஆகியிருந்தன.
இந்திய அமைதிப்படை மீளவும் தன் தாய் நாட்டுச் சென்று சில வருடங்களின் பின்னரே பார்த்தீனியத்தின் பரவல் பற்றி அறியப்பட்டது. 1999 ஜுலை மாதத்தின் பிற்பகுதியிலே வவுனியாவில் இத்தாவரம் பரவலாகக் காணப்படுவது கண்டறியப்பட்டிருந்தது.

அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் போது யாழ் குடாநாடு, முல்லைத்தீவு, திருகோணமலை, பொலன்னறுவை, குருணாகல், கண்டி, மற்றும் பதுளை போன்ற பல மாவட்டங்களில் இதன் பரவல் கண்டறியப்பட்டது.

இந்திய அமைதிப்படை முகாமிட்டிருந்த பகுதிகளிலே பார்த்தீனியம் செறிந்து பரவியிருந்தது. ஆதலால் இலங்கையில் அதன் பரவலுக்கு வித்திட்டது இந்திய அமைதிப்படையே என்று கூறப்படுகிறது. ஆனால் 1985 களிலே இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட் வெங்காயம், மிளகாய் விதைகளுடன் பார்த்தீனியம் விதைகளும் சேர்ந்தே வந்தாகவும் கூறப்படுகிறது.

பார்த்தீனியம் ஒரு சாதாரண களை தானே என எண்ணி அதை அலட்சியப்படுத்த முடியாது. விவசாயத்தில் மட்டுமன்றி சுற்றுச் சூழலிலும் மனித, விலங்குகளின் சுகாதாரத்திலும் பாரிய எதிர்விளைவுகளைத் தோற்றுவிக்கவல்லது.
இந்தியா, அவுஸ்திரேலியா, மெக்சிக்கோ, கர்பியத் தீவுகள் போன்ற நாடுகள் அந்த விளைவுகளை நன்கே அறிந்து வைத்திருக்கின்றன.
பார்த்தீனியத்தின் தாயகம் மெக்சிக்கோ வளைகுடாவை ஒட்டிய பகுதிகளாகும்.
1950 களிலே இந்தியா, அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்த கோதுமை விதைகளுடன் பார்த்தீனிய விதைகளும் சேர்ந்தே சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. மகாராஷ்டிர மாநிலத்தில் பரவத் தொடங்கிய விதை இந்தியாவின் ஒருசில மாநிலங்களைத் தவிர ஏனைய சகல பகுதிகளுக்கும் பரவியது.
இப்படி ஏதோ ஒரு காரணத்தால், உலகின் பல பாகங்களுக்கும் பரவியது. தெற்கு தென்கிழக்காசியா, பசுபிக் மற்றும் மேற்கு ஆபிரிக்க பிராந்தியங்களில் வேகமாகப் பரவியது.
பார்த்தீனியத்தின் உயிரியல் பெயர் Parthenium Hystrophorous என்பதாகும். இது மூலிகைத் தாவரமாகவும் அறியப்படுகிறது. ஆணி வேரையும் உறுதியான தண்டையும் உடையது. இதன் இலைகள் இளம் பச்சை நிறமானவை. ஆவியுயிர்ப்பைக் குறைக்கும் நோக்கிலே இலைகளில் மயிர்கள் காணப்படும். இதன் பூவின் நிறம் பழுப்பான வெள்ளையாகும். பல்கிளைத்தண்டுகளைக் கொண்டது.

இதன் விதைகள் கறுப்பு நிறமானவை. அவற்றின் மேற்பரப்பில் வெள்ளை வரிகள் காணப்படும். அவை மிகவும் சிறியவை (1-2cm நீளம்) ஆதலால் வெற்றுக்கண்ணுக்குத் தெரியக் கூடியவை என்று கூறி விடமுடியாது.

அயன வலய நாடுகளின் சுவாத்தியம் பார்த்தீனியத்தின் பரவலுக்கு மிகவும் சாத்தியமானதாகும். இலை துளிர், வசந்த காலங்களில் விதைகள் முளைக்கும். முளைக்க ஆரம்பித்து 4 வாரங்களிலேயே பூக்க ஆரம்பித்துவிடும். பூக்க ஆரம்பித்தால் தாவரம் இறக்கும் வரை தொடர்ந்து பூத்துக் கொண்டேயிருக்கும். ஒரு தாவரம் மட்டுமே ஒரு இலட்சம் விதைகளை உற்பத்தி செய்யக்கூடியது. இலையுதிர், குளிர் காலங்களில் இத்தாவரம் இறந்து போகும். இப்படியே இதன் வாழ்க்கை வட்டம் தொடர்ந்து நடைபெறும்.

இது மிகவும் வேகமாகப் பரவக்கூடியது. புல் நிலங்களிலும் கைவிடப்பட்ட நிலங்கள், வீதியோரங்கள், நீர் நிலைகளை அண்டிய பகுதிகளில் கூட்டம் கூட்டமாகக் காணப்படும். வீட்டுத் தோட்டங்களைக்கூட இச்செடி விட்டு வைத்ததாகத் தெரியவில்லை.
இது பல்வேறு வழிகளால் பரவுகிறது. வாகனங்கள், இயந்திரங்கள், விலங்குகள், விதைகள், விலங்குணவு, மற்றும் நீரால் பரவுகிறது. வெள்ளத்தாலும் கூட பரவுகிறது.
நீர் நிலைகள், ஆறுகளிலிருந்து நீர் கொண்டு செல்லப்படும் பகுதிகள் யாவற்றிற்கும் இவை பரவும். பதுளை கண்ட கெட்டிய பகுதியிலிருந்து பண்டாரவளை வரை பார்த்தீனியம் பரவுவதற்கு மகாவலி கங்கையே காரணமாக இருந்தது. பார்த்தீனியம் விதைகளின் காவியாக அது தொழிற்பட்டது.

அதேபோல யுத்த காலங்களில் வடபகுதி லொறிகளையும் வாகனங்களையும் சோதனை செய்யும் சாவடிகளை அண்டிய பகுதிகளிலே பார்த்தீனியத்தின் பரம்பல் மிக அதிகமாகக் காணப்பட்டமையும் அறியப்பட்டது.
அதேபோல கால்நடைகளின் சாணத்தில் இவ்விதைகள் காணப்படும். இப்படி பல்வேறுபட்ட வழிமுறைகளால் மிக இலகுவாகப் பரவும் வல்லமை வாய்ந்தது பார்த்தீனியம்.

பார்த்தீனியம் ஒரு அழிக்கும் இயல்புடைய தாவரமாக / களையாக அறியப்படுவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. பார்த்தீனியத்தின் வேகமாகப் பரவும் இயல்பு சுதேச தாவரங்களை அழித்து விடும் வல்லமை மிக்கது. இவை நிலங்களின் தரத்தைக் குறைக்கும் அத்துடன் கால்நடைகளின் உற்பத்தித் திறனையும் குறைக்கும். இவை காபனீரொட்சைட்டை வெளிவிடுபவையாதலால் நைதரசன் பதித்தல் பாதிக்கப்படும்.
பார்த்தீனியம் செடியின் மகரந்தமானது சிறுவர்கள், முதியோர்கள் மத்தியில் ஆஸ்துமாவை ஏற்படுத்தும். பல்வேறுபட்ட ஒவ்வாமை நோய்களையும் தோல்வியாதிகளையும் ஏற்படுத்தும். இதற்கு மனிதர் மட்டுமன்றி விலங்குகளும் விலக்கல்ல. விலங்குகளில் பால் உற்பத்தியை மட்டுமன்றி அவற்றின் நிறையையும் குறைக்கும். கண்களில் ஒருவித எரிச்சலைத் தோற்றுவிக்கும்.
பார்த்தீனியம் செடி ஏற்படுத்தும் சுகாதாரப் பிரச்சினைகள் வரையறையற்றவை என்று கூடக் கூறமுடியும்.

இலங்கையைப் பொறுத்தவரையிலே யாழ்ப்பாணம், மற்றும் வவுனியா ஆகிய பிரதேசங்களிலேயே இது அதிகளவில் பரம்பிக் காணப்படுகிறது. அத்துடன் திருகோணமலை (சீனன்குடா), குண்டசாலை, பதுளை, அம்பிலிப்பிட்டிய, சூரியவெவ ஆகிய பிரதேசங்களில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவுகளில் பரம்பிக் காணப்படுகிறது.
யாழ். மாவட்டத்திலே பலாலி வீதி, காங்கேசன் துறை வீதி, பருத்தித்துறை வீதி போன்ற பிரதான வீதிகளின் ஓரங்களிலே இச்செடியைப் பரவலாகக் காணமுடிகிறது. அதேவேளை யாழ்ப்பாணத்தில் பார்த்தீனியம் செடிகளில் அதிக சதவீதமானவை கோப்பாய் பிரதேசத்திலேயே பரவியிருப்பதாக ஆய்வொன்று தெரிவிக்கிறது.
பயிர்ச் செய்கையை பிரதான வாழ்வாதாரமாகக் கொண்ட பிரதேசம் கோப்பாய். பார்த்தீனியம் செடிகள் அங்கு செறிந்தளவில் பரம்பியிருப்பதால் விளைச்சலில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதும் அறியப்பட்டுள்ளது.
பாத்தீனியத்தின் பரம்பலைக் கட்டுப்படுத்தி அதனை முற்றாக ஒழிப்பதற்கு உலகளாவிய ரீதியில் பல்வேறு வழிமுறைகள் கையாளப்பட்டு வருகின்றன. அவற்றை வேரோடு பிடுங்கி அழிக்க முடியும். ஆனால் அது எவ்வளவு தூரம் நடைமுறைச் சாத்தியமானவை என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. ஏனெனில் தனிமைப்படுத்தப்பட்ட செடிகளையே அவ்வாறு அழிக்க முடியும். கூட்டம் கூட்டமாக அழிப்பதாயின் தேவையான மனித வளம் மிக அதிகமாகும். அத்துடன் ஒவ்வாமை நிலைமைகள் ஏற்படும் அபாயமும் காணப்படுகிறது. ஏற்கனவே பூத்த தாவரங்களை பிடுங்கி அழித்தலானது விதைகளை இன்னும் வேகமாகப் பரவலடையச் செய்யும்.
அத்துடன் பார்த்தீனியச் செடிகளைப் பிடுங்கி அழிப்பதற்குச் செலவாகும் நேரம் மிக அதிகமாகும்.

களைகொல்லிகளைப் பயன்படுத்தியும் பார்த்தீனியம் செடிகளை அழிக்க முடியும். இந்த முறையின் மூலம் இளந்தாவரங்களை அழித்தலே பயனுடையதாக இருக்கும். ஏனெனில் வயதான தாவரங்களை அழித்தாலும் அவற்றின் விதைகளால் மீண்டும் செடிகள் முளைப்பது தவிர்க்க முடியாததாகிவிடும். அத்துடன் இம்முறையை முகாமை செய்வதற்கான செலவும் மிக அதிகமாகும்.
இலங்கையிலும் பார்த்தீனிய கட்டுப்பாட்டுக்கென சம்பந்தப்பட்ட திணைக்களங்களால் கணிசமான நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்படுகிறது.

உயிரியல் முறைமை மூலம் (உயிரிக் கொல்லிகள்) பார்த்தீனியம் செடிகளின் பரம்பலைக் கட்டுப்படுத்துதல் வினைத்திறன் மிக்கதாகக் கருதப்படுகிறது. பங்கசுகளை அறிமுகப்படுத்தி இவற்றின் பரம்பலைக் கட்டுப்படுத்த முடியும். பங்கஸ் தொற்று ஏற்படுவதற்கு ஈரப்பதன் மிக்க நிலைமை அவசியம். வெப்ப நிலை மாற்றங்கள் பங்கஸ் தொற்றைப் பாதிக்க வல்லன. ஆதலால் பார்த்தீனியம் செடியின் பரம்பலை பங்கஸ் விருத்தியைக் கொண்டு கட்டுப்படுத்துவதென்பது இலங்கை போன்ற நாடுகளில் நடைமுறைச் சாத்தியமற்ற விடயமாகிறது.
பார்த்தீனியம் செடியின் பாகங்களை உணவாகக் கொள்ளும் பூச்சி இனங்களை அறிமுகப்படுத்தி செடியின் வளர்ச்சி, விதை உற்பத்தி போன்வற்றைக் குறைக்க முடியும்.

அவுஸ்திரேலியாவிலே 20 வருடகால ஆராய்ச்சியின் பின் பார்த்தீனியம் செடிகளின் பரம்பலைக் கட்டுப்படுத்துவதற்காக 9 பூச்சிகள் தேர்வு செய்யப்பட்டன. ஆனால் நடைமுறையில் இரண்டு மட்டும் இச்செடிக்குப் பாதிப்பை ஏற்படுத்த வல்லவை எனக் கண்டறியப்பட்டுள்ளது.
ஏனெனில் களைகளைக் கட்டுப்படுத்த பயன்படுத்தும் பூச்சிகளின் செயற்பாடு காலநிலை, கால அவகாசம் போன்றவற்றில் தங்கியிருக்கிறது.
ஆனால் பொதுமக்களிடம் போதியளவு விழிப்புணர்வு இல்லாவிடில் மேற்குறிப்பிட்ட எந்த முறைமைகள் மூலமும் உச்சப் பயனைப் பெற முடியாமல் போய்விடும். எவ்வளவுதான் சட்டதிட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டாலும் அதிகாரத் தரப்பும் பொதுமக்களும் இணைந்து அக்கறையோடு செயற்பட வேண்டிய தேவையொன்று காணப்படுகிறது. மிக முக்கியமான இரு தரப்புகளும் கைகோர்க்க முனையாத காரணத்தால் தான் இன்று யாழ்ப்பாணத்திலும் வவுனியாவிலும் பார்த்தீனியம் கட்டுப்படுத்த முடியாதளவுக்குப் பரம்பிக் காணப்படுகிறது.

கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் விழலுக்கு இறைத்த நீராகிப் போயின. குறித்த பிரதேசத்தில் பார்த்தீனியக் கட்டுப்பாட்டு / அழிப்பு நடவடிக்கைகளை ஒரு தடவை மட்டுமே மேற்கொள்ளவதால் எந்தப் பயனும் ஏற்படாது. ஒரே பிரதேசத்தில் குறித்த கால இடைவெளிகளில் மீண்டும் மீண்டும் மேற்கொள்ளும் போதே வெற்றியளிக்கும். இல்லாவிடில் பெருந்தொகை பணம் செலவாவது மட்டுமே மீதமாகும்.
இவை தொடர்பாக எவரும் அக்கறை கெள்வதாகத் தெரியவில்லை.

30 வருடகால யுத்தம் முடிந்து வடக்கு தெற்கு பகுதிகளுக்கிடையிலான போக்குவரத்தும் தங்கு தடையின்றி நடைபெறுகிறது. பார்த்தீனியத்தின் பரம்பல் என்ற பார்வையிலே நோக்கும் போது இப்போதுதான் இலங்கை பெரும் அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்பட்டிருக்கிறதோ என்றும் எண்ணத்தோன்றுகிறது.
பார்த்தீனியத்தை இலங்கை முழுவதும் பரப்ப வடக்குக்கும் தெற்குக்குமாய் சென்று வரும் வாகனங்கள் மட்டுமே போதும் என்கிறார் கொழும்பு பல்கலைக்கழக விலங்கியல் துறை பேராசிரியர் சரத் கொட்டகம. அவர் கடந்த கால வரலாறுகளையும் சுட்டிக்காட்ட மறுக்கவில்லை.

அவ்வாறு பரவுவதைக் கட்டுப்படுத்த என்ன செய்யப்போகிறீர்கள் என யாழ்ப்பாண விவசாயத் திணைக்களத்திடம் வினவினால், இதுவரை எந்த ஒரு திட்டமும் இல்லை, அப்படிப் பரவுவதற்கான சாத்தியக் கூறுகள் குறைவு. எதுவுமே பொதுமக்கள் ஒத்துழைத்தால்தான் வெற்றியளிக்கும் என்கிறார்கள்.

எவை எப்படியோ பொதுமக்கள், அதிகாரத்தரப்பினர், கற்றோர் என சகல தரப்பினரும் ஒன்றாகக் கைகோர்த்து முனைப்புடன் செயற்படாவிடில் ஏற்படப்போகும் பின்விளைவுகள் எமது கையை மீறிவிடும் என்பது மட்டுமே நிதர்சனம். எமது தோட்டங்களில் ஏதேச்சையாய் சில விதைகள் விழுந்த போது நாம் கவனிக்கவில்லை என்பது உண்மைதான். இன்று பார்த்தீனியம் எம் கண்ணுக்குத் தெரிந்தே பரவும் போது குருடராய் இருப்பதென்பது எப்படி நியாயமாகும்.

விவசாயத்துக்குத் தேவையான சகல வளங்களையும் இயற்கை அன்னை எமக்கு அள்ளி அள்ளித் தந்திருக்கிறாள்.அந்தப் பசுமை வளத்தைச் சுரண்ட முளைத்திருக்கும் பார்த்தீனியம் செடியை இனிமேலும் களைய முயற்சிக்காமல் இருப்பதென்பது எமது எதிர்காலச் சந்ததிக்கும் எம்மை வாழவைக்கும் தாய்நாட்டுக்கும் நாம் செய்யும் பெருந் துரோகமாகும்.

பேராசிரியர் சரத்கொட்டகம இப்படிச் சொல்கிறார்...

வடக்கிற்கும் தெற்கிற்கும் தங்குதடையின்றிப் பயணிக்கும் வாகனங்களால் இலங்கை முழுவதும் பார்த்தீனியம் பரவும் சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றன.

கடந்த கால வரலாறும் அதையே சுட்டி நிற்கிறது. யுத்தகாலங்களில் வாகனச் சோதனைச் சாவடிகள் இருந்த பகுதிகளின் அயற் சூழலில் பார்த்தீனியம் செறிந்து காணப்படுகிறது. லொறிகளிலிருந்து பொருட்கள் ஏற்றி இறக்கப்படும் போது பார்த்தீனியம் விதைகள் இலகுவாகப் பரவியிருக்கலாம் என நம்பப்படுகிறது. தற்போது இலங்கை முழுவதும் எந்தத் தடையுமின்றி வாகனங்கள் பயணிக்கின்றன. வடக்கிற்கும் சென்று வருகின்றன. இதனால் பார்த்தீனியம் இலங்கை முழுவதும் விரைவில் பரவக் கூடும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்துவதாகத் தெரியவில்லை. அவர்கள் உடனடிக் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மக்கள் தம்மை அறியாமலே காவிகளாக மாறலாம். ஆதலால் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்.

வடக்கில் மட்டுமன்றி இலங்கை முழுவதும் பார்த்தீனியம் செடியின் பரம்பல் தொடர்பிலான ஆய்வுகள் மேற்கெள்ளப்பட வேண்டும்.

பார்த்தீனியம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனமெடுத்து துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால் நிலைமை கையை மீறுவதை எவராலும் கட்டுப்படுத்த முடியாது.
 
 
யாழ். விவசாய திணைக்களத்தைச் சேர்ந்த பயிர் பாதுகாப்பு பாடவிதான உத்தியோகத்தர் தனபால சிங்கம் இப்படிக் கூறுகிறார்...


யாழ்ப்பாணத்தில் பார்த்தீனியத்தின் பரம்பல் எமது கட்டுப்பாட்டில் இல்லை என்றே கூற வேண்டும். (பாத்தீனியம்) பல பொது இடங்களில் பரவிக் காணப்படுகிறது.

முன்னர் எமது திணைக்களம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. வெவ்வேறு நிலைகளில் சிரமதானங்கள் மேற்கொள்ளப்பட்டன. மக்கள் மத்தியில் விழிப்புணர்வுக் கூட்டங்கள், பிரசாரங்கள் மற்றும் கருத்தரங்குகள் நடத்தப்பட்டன. பல விவசாய அமைப்புகளும் ஒத்துழைத்தன. ஆனால் மக்களிடம் இருந்து போதிய ஒத்துழைப்பு கிடைக்காததால் அவை எவையும் வெற்றியளிக்கவில்லை. மக்கள் தமது தோட்டத்திலிருக்கும் பார்த்தீனியம் செடிகளைக் களையக்கூட தயாராக இல்லை. இப்படி இருக்கும் போது பொது இடங்களில் இருப்பவற்றை எப்படிக் களைய முடியும்?

பார்த்தீனியம் செடிகளை ஒரேதரத்தில் அழிக்கமுடியாது. அழிப்பு நடவடிக்கைகளை குறித்த கால இடைவெளிகளில் கிரமமாக நடைமுறைபடுத்த வேண்டும். அத்துடன் செடிகள் பூக்க முதலே அழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இல்லாவிடில் விதைகள் விரைவாகப் பரப்பிவிடும்.

இந்த வருடம் பார்த்தீனிய கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை.

களை கொல்லிகள் மூலம் அவற்றை ஒழிப்பதற்கு போதிய நிதியுதவியும் கிடைக்கவில்லை. பார்த்தீனிய ஒழிப்பில் பிரதேச செயலகங்கள், பொதுமக்கள் உட்பட சகல தரப்பினரதும் ஒன்றிணைந்த ஒத்துழைப்பு அவசியமாகிறது. அந்த ஒத்துழைப்பு இல்லாமல் நாம் தனித்து நின்று எதையுமே செய்ய முடியாது.

Sunday, May 15, 2011

ஆனைக்கோட்டையின் சொத்து அமெரிக்கா வசமானது எப்படி?சில ஆண்டுகளுக்கு முன்னர், யாழ்ப்பாணத்துக்கே சொந்தமான பொருளொன்று அமெரிக்காவின் சொத்தாக மாறியிருந்தமை வெளி உலகுக்குத் தெரிய வந்தது. அந்த விடயத்தை உலகுக்கு வெளிச்சம் போட்டுக்காட்டியவையும் ஊடகங்களே!
யாழ்ப்பாணத்தின் ஆனைக்கோட்டை பகுதியில் ஏறத்தாழ 3 தசாப்தங்களுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட நுண்ணுயிரி ஒன்று அமெரிக்காவுக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கே காப்புரிமை செய்யப்பட்டது. அந்த நுண்ணுயிரி மூலம் அந்த்ராசைக்கிளின் (Anthracycline) என்ற நுண்ணுயிரெதிர்ப்பு மருந்து தயாரிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. அந்த நுண்ணுரெதிர்ப்பு மருந்துக்கே அமெரிக்காவில் காப்புரிமை செய்யப்பட்டது. அதன் கண்டுபிடிப்பாளர்கள் காப்புரிமைக்குரியவர்கள் யாவருமே மேற்கத்தைய நாடுகளைச் சேர்ந்தவர்களாவர்.
1981 ஆம் ஆண்டு விண்ணப்பிக்கப்பட்டு 1983 இலே காப்புரிமையும் அதற்கான அங்கீகாரமும் வழங்கப்பட்டன.
ஆனைக்கோட்டையில் வயல் நிலமொன்றிலிருந்து பெறப்பட்ட மண்மாதிரியிலிருந்தே இந்த நுண்ணுயிரி பிரித்தெடுக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அது புதிய நுண்ணுயிரி இனம் என விளக்கப்பட்டு அதற்கு மார்சியா சி ஷியரர் (Marcia C.Shearer) என்று பெயரிடப்பட்டது.
அமெரிக்காவிலே இந்த நுண்ணுயிரி பதிவு செய்யப்பட்டபோது அதற்கான காப்புரிமை பெற்றவர்களின் பெயர்ப்பட்டியலில் மார்சியா சி. ஷியரர் என்ற பெயரும் காணப்படுகிறது.
அது எங்கே, எப்போது கண்டுபிடிக்கப்பட்டது என்றோ அல்லது காப்புரிமை செய்த விஞ்ஞானிகளுக்கு அந்த நுண்ணுயிரி பற்றி அறிவித்தது யார் என்ற விபரங்களோ காப்புரிமை பற்றிய ஆவணங்களில் குறிப்பிடப்படவில்லை.
அது உள்நாட்டு விஞ்ஞானியால் / விஞ்ஞானிகளால் சேகரிக்கப்பட்டு அமெரிக்காவுக்கு விற்கப்பட்டிருக்கலாம். இந்த விடயத்தைக் காட்டிக்கொடுத்தவரும் ஒரு விஞ்ஞானிதான். அன்று அவர் பணத்துக்கு ஆசைப்பட்டு காட்டிக்கொடுக்காமல் இருந்திருந்தால் இந்த விடயம் உலகுக்குத் தெரிந்தே இருக்காது.
ஃப்ரஜைலோமைசின் A என்ற சிக்கல் சேர்வையும் இந்த நுண்ணுயிரிலிருந்து தான் பிரித்தெடுக்கப்படுகிறது என்கின்றனர் காப்புரிமை பெற்றவர்கள். ஃப்ரஜைலோமைசின் தி யை மனிதர்கள், விலங்குகளுக்கு ஏற்படும் பக்டீரியா தொற்றின்போது எதிர்ப்பு மருந்தாக்கப் பாவிக்க முடியும்.
நுண்ணுயிரிகள் தனித்துவமான இயல்புகளைக் கொண்டிருந்தால் அவற்றைக் காப்புரிமை செய்ய முடியும் என்ற நடைமுறை 1873 இல் லூயி பாஸ்டருடன் ஆரம்பமானது. விளைவு மூன்றாம் உலக நாடுகளுக்கேயுரித்தான பல நுண்ணுயிரிகள் மேற்குலகின் சொத்துக்களாயின. அவற்றின் காப்புரிமையை மேல் நாடுகளின் வர்த்தக நிறுவனங்களும் ஆய்வு நிலையங்களும் பெற்றுக் கொண்டன.
உயிர்க்கொள்ளைக்கு இலங்கையும் பலியானதாக அறியப்பட்ட முதற் சம்பவம் இதுவாகும். உயிர்க்கொள்ளை என்ற சொற்பதம் அறியப்பட்டதென்னவோ 1993 இல் தான். ஆனால் அதற்கு முன்னரே இந்தக் கொள்ளை நடந்திருக்கிறது. அது பற்றிய போதிய அறிவோ விழிப்புணர்வோ இல்லாததால் எவராலும் அதைக் கண்டு கெள்ள முடிந்திருக்கவில்லை.
ஆனால் இந்த உயிர்க்கொள்ளையை மேற்கொள்ளும் கொள்ளையர்களும், அவர்களது முகவர்களும் இலங்கை போன்ற நாடுகளில் மிக நீண்டகாலமாகச் செயற்பட்டு வருகின்றார்கள். தமது தேவைகளை நிறைவேற்றுவதற்காக உள்ளூர் விஞ்ஞானிகளைத் தொடர்பு கொண்டவர்களும் இருக்கிறார்கள்.
உள்ளூர்வாசிகளின் ஆதரவு இருப்பதால்தான் முகவர்களால் தமது தேவைகளை சுலபமாகப்பூர்த்தி செய்ய முடிகிறது. ஏனெனில் பிறர் அறியாமல் காரியத்தை முடிப்பதென்பது உள்ளூர்வாசிகளால் மட்டுமே முடிந்த காரியமாகும். இதுதான் நாம் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டிய விடயமும் கூட.
மேற்குலக நாடுகளை விட மூன்றாம் உலக நாடுகளில் உயிர்ப்பல்வகைமை, வளங்களில் செறிவு மிகமிக அதிகமாகும். மேற்குலக நாடுகள் வளச்சுரண்டலில் வல்லவை என்பதை வரலாறு சொல்கிறது.
உறங்கிக்கிடந்த பாரதத்தை விவேகானந்தர் அன்று தட்டி எழுப்பியிருக்காவிட்டால் அங்கு எஞ்சியிருந்த கொஞ்ச நஞ்ச பொக்கிஷங்களும் கூட சுலபமாக மேற்குலகுக்குப் போயிருக்கும்.
இந்தியா, இலங்கை உட்பட்ட ஆசிய நாடுகளும் ஆபிரிக்க நாடுகளும் கொண்டிருக்கும் பாரம்பரியங்கள் தனித்துவமானவை. எத்தனையோ கண்டுபிடிப்புகளுக்கு அவைதான் முன்னோடியாக இருக்கின்றன.
ஆனால் இன்று மூன்றாம் உலக நாடுகளின் பட்டியலில் இருப்பவையும் அந்த நாடுகள் தான்.
இந்தப் பாரம்பரிய அறிவு முழுவதும் வாய்மொழி மூலமும் பயிற்சி மூலமுமே கடத்தப்பட்டு வந்தது. பல நூற்றாண்டுகளின் பின்னர் அது ஓலைச்சுவடிகள் போன்ற மூலங்களில் பதிக்கப்பட்டது. ஆனால் பிற்காலங்களில் மூன்றாம் உலகிலே காலனித்துவம் என்ற பெயரில் கால்பதித்த மேற்குலகு எல்லாவற்றையும் அள்ளிச்சென்றது. அது அள்ளிச்சென்றது என்று கூறுவதைவிட மக்கள் அதற்குத் தாரைவார்த்துக்கொடுத்தனர் என்று கூறுவது பொருந்தும். அவர்களுடைய அறிவுமட்டம் அந்தளவில் தான் இருந்தது. அறியாமை இருளிலே அவர்கள் மூழ்கி இருந்தனர்.
இப்போது மேலை நாட்டு அருங்காட்சியங்களில் வைக்கப்பட்டிருக்கும் தமது நாட்டு அரும் பொருட்களை ஆர்வத்துடன் பார்த்து அதிசயிக்கின்றனர்.
இன்று விஞ்ஞானம் வளர்ந்துவிட்டது. கல்வியறிவு மட்டம் உயர்ந்து விட்டது. ஆகவே மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கத்தானே வேண்டும் என்று ஒரு போதும் எண்ணக்கூடாது.
ஏனெனில், என்னதான் வளர்ச்சி அமைந்தபோதும் அவர்களின் அடிப்படை மனப்பாங்கில் மாற்றம் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. அப்படி ஏற்பட்டிருந்தால் ஆனைக்கோட்டைக்கே உரித்தான சொத்தின் காப்புறுதியை அமெரிக்கா பெறுவதற்கு வழிசமைத்துக் கொடுத்திருப்பார்களா?
உயிர்க்கொள்ளை (Biopiracy) என்ற சொல் புதிதாக இருக்கலாம். ஆனால் காப்புரிமையே அந்தச் சொல்லின் அடிப்படையாகும். உண்மையில் உயிர்ப்பொருட்களின் காப்புரிமை இயற்கைக்குரியது. ஆனால் சுயநலமிக்க மனித இனம் அதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை.
உயிர்ப்பொருளொன்று வர்த்தகமயமாக்கப்படாத வரை அதன் பாவனை பற்றியோ காப்புரிமை பற்றியோ எவரும் கவலைப்படுவதில்லை. ஆனால் அது வர்த்தகமயமாக்கப்படும் போது கிடைக்கும் நன்மைகளை யார் அனுபவிக்கப்பபோகிறார்கள் என்னும் போது தான் பிரச்சினை உருவாகிறது.
ஏனெனில் உயிர்ப்பொருள் வர்த்தகமயப்படுத்தப்பட்டால் கிடைக்கும் வருமானம் மிகவும் அதிகமாகும். அது தனிமனித சொத்தாகக் கருதப்படாமல் மனிதத்துக்காகப் பயன்படுத்தப்பட வேண்டும். அதற்கு உற்பத்தி பல மடங்குகளாக்கப்பட அதற்கேற்ப இலாபத்துடன் விற்கப்பட வேண்டும்.
மனிதத்தை மட்டும் கருத்தில் கொண்டு இலாப நோக்கின்றி விற்றால், உற்பத்தி பல மடங்குகளாகப் பெருகாது. அதேசமயம் உற்பத்தியாளரும் நட்டமடைய வேண்டி ஏற்படும். எவரும் அதை ஒருபோதும் விரும்பமாட்டார்கள்.
நோக்கம் நல்லதாக இருந்தாலும் உற்பத்திச் செலவை ஈடுசெய்வதற்கான ஒரே வழி வர்த்தகமயப்படுத்தலேயாகும்.
அதேவேளை அல்லும் பகலும் அயராது முயற்சி செய்து அந்த உயிர்ப்பொருளைக் கண்டுபிடித்தவருக்கும் அங்கீகாரம் வழங்கப்பட வேண்டிய தேவை ஒன்று காணப்படத்தான் செய்கிறது.
அவற்றின் அடிப்படையில் தான் உயிர்ப் பொருளின் விலை தீர்மானிக்கப்படுகிறது. கண்டுபிடிப்பாளரொருவர் உற்பத்தியாளராக முடியாது என்பது வெளிப்படை. ஏனெனில் இருவரது மன இயல்புகளும் வேறுபட்டவை. கண்டுபிடிப்பாளர் உற்பத்தியாளராக முயன்றால், இலாபம், பணம் என்ற நோக்கங்கள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். அவை பூர்த்தி செய்யப்பட்டால் அவருள் இருக்கும் ஞானமும் வேகமும் தமது உயிர்ப்பை இழந்து விடும்.
பொதுவாக கண்டுபிடிப்பாளர்கள் ஆய்வுகளிலும் புதிய கண்டுபிடிப்புக்களிலும் பைத்தியமாக இருப்பார்கள். ஆதலால் அவர்கள் தமது கண்டுபிடிப்பின் உற்பத்திகளைப் பலமடங்குகளாக்குவது பற்றி சிந்திக்க மாட்டார்கள்.
ஆனால் அவர்களது கண்டுபிடிப்பினாலான பயனை வர்த்தக ரீதியாக எவரோ அனுபவிப்பதென்பது அநீதியாக கருதப்பட்டது.
இதனால்தான் உலகளாவிய ரீதியில் காப்புரிமை தொடர்பான சட்ட திட்டங்கள் அமுல்படுத்தப்படலாயின.
 'எமக்குச்சொந்தமான பொருளொன்றுக்கு  இன்னொருவர் காப்புரிமை பெற்றார் என்று வைத்துக்கொள்வோம். நாளை அந்தப்பொருளை ஏதோ  ஒரு தேவைக்காக நாம் பயன்படுத்த வேண்டி இருப்பின், சட்டப்படி அவருக்கு ஒரு பெருந்தொகைப் பணத்தை நாம் கொடுக்க வேண்டியிருக்கும். அத்துடன் அப்பொருளைப் பயன்படுத்துவதால் எமக்கு கிடைக்கும் இலாபத்திலும் அவருக்கு பங்கிருக்கும். '
இந்தக் காப்புரிமை என்பது உயிர்ப்பொருட்களுக்கு மட்டுமல்ல. தனித்துவமான படைப்புகள், கண்டுபிடிப்புகள் யாவற்றுக்குமே பொருந்தும். மேற்குலக நாடுகள் இந்த காப்புரிமை தொடர்பில் ஒருபோதும் தளர்வைக் கடைப்பிடிப்பதில்லை.
ஆனால் மாறாக மூன்றாம் உலக நாடுகள் காப்புரிமை பற்றி அதிக கரிசனை செலுத்துவதில்லை எனலாம். அதனால் தான் மேற்குலகின் கலைப் படைப்பாளிகள் பெரும் செல்வந்தர்களாக இருக்கும் அதேவேளை எமது கலைப் படைப்பாளிகள் வறுமையிலேயே மடிந்து போகின்றனர்.
ஏனெனில் மேற்குலகில் கலைப்படைப்பாளியின் படைப்பொன்று எப்போதெல்லாம் மற்றொருவரால் பாவிக்கப்படுகிறதோ அப்போதெல்லாம் அவர் அப்படைப்பு மீது கொண்டிருக்கும் காப்புரிமைக்குரிய பணம் வழங்கப்படுகிறது. ஆனால் மூன்றாம் உலக நாடுகளில் அம்முறைமை நடைமுறைப்படுத்தப்படுவது மிகவும் அரிதாக இருக்கிறது.
இலங்கையும் அதற்கு விதிவிலக்கல்ல. இசை நிகழ்ச்சிகள், ஒலி, ஒளிபரப்புகள் மூலம் பலகோடி வருமானங்களை ஈட்டும் நிறுவனங்கள் பல தாம் உபயோகப்படுத்தும் கலைப்படைப்புகளின் காப்புரிமை பற்றிச் சிந்திப்பதில்லை. அல்லது அப்படைப்புக்களின் காப்புரிமையைத் தாமே வாங்கி விடுகின்றன.
முதன்முறையாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தான் ஒலிபரப்பும் பாடல்களின் படைப்பாளிகளையும் நன்மை பெறச் செய்தது என்பதையும் நாம் மறக்கக்கூடாது.
இவை இப்படி இருக்க, இன்றைய உலகில் உயிர்ப்பொருளைப் பொறுத்துவரையிலே காப்புரிமை என்பது மிக முக்கிமான விடயமாகி விட்டது.
ஆங்கில மருத்துவத்தின் ஆதிக்கம் தலை தூக்க முதல், சித்த, ஆயுர்வேதம் போன்ற பல பாரம்பரிய மருத்துவ முறைகளே புழக்கத்தில் இருந்தன. அவை குருசிஷ்ய முறைப்படி பரம்பரை பரம்பரையாகக் கடத்தப்பட்டு வந்தன.
அந்த முறைமைகளில் பயன்படுத்தப்படும் மூலிகைகளின் திறனைக் கண்டு கொண்டது மேற்குலகு. அவற்றில் இருக்கும் மருத்துவ குணமுடைய பகுதியை மட்டும் பிரித்தெடுத்து ஆங்கில மருத்துவத்தில் பயன்படுத்தத் தொடங்கியது. விளைவு, ஆங்கில மருத்துவத்தால் நோய்க்கு உடனடி நிவாரணி கிடைத்தது. பக்கவிளைவுகள் அதிகரித்தன. ஆனால் அவைபற்றி கருத்தில் கொண்டவர்கள் மிகச்சிலரே.
அவசர உலகில் அல்லலுறும் மக்கள் உடனடி நோய் நிவாரணியையே நாடினர். மருந்துக் கம்பனிகள் பெருகின. சுதேச மருத்துவத்துக்கே உரித்தானதாக இருந்த மூலிகைகளிலிருந்து தேவையான பதார்த்தங்கள் பிரித்தெடுக்கப்பட்டன. அவ்வாறு பிரித்தெடுக்கப்பட்டவற்றிற்கு மேற்குலகின் காப்புரிமையும் கிடைத்தது. இவ்விடயத்தில் அமெரிக்கா முன்னணியில் திகழ்கிறது எனலாம்.
இந்த நிலை மூலிகைகளுக்கு மட்டுமே உரித்தானதல்ல. இயற்கையின் அங்கங்கள் யாவற்றிற்கும் பொருந்தும்.
20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலே, மிகவும் சுவாரசியமான வழக்கு ஒன்று நடைபெற்றது. வேம்பிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட பதார்த்தங்களுக்கு அமெரிக்கா காப்புரிமை பெற்றிருந்தது. இந்திய விவசாயிகள் விழித்துக் கொண்டனர். அதனை ஒரு உயிர்க் கொள்ளை முயற்சியாகக் கருதினர்.
இந்தியர்களைப் பொறுத்த வரையிலே அவர்களது சுதேச அறிவின் சின்னமாக வேம்பு கருதப்படுகிறது. வேப்ப மரத்தின் ஒரு இனத்தின் உயிரியல் பெயர்கூட திzaனீiraணீhta inனீiணீa என்பதாகும். அப்பெயர்கூட அது இந்தியாவின் சுதேச இனம் என்பதைக் கூறுகிறது. வேப்ப மரத்தின் வேரிலிருந்து பட்டை தொட்டு இலை, பூ, வரையான சகல பகுதிகளுமே மருத்துவ குணமுடையவை.
ஆண்டாண்டு காலமாக பல்வேறுபட்ட மனிதத் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டு வந்தவை. தொன்மை வாய்ந்த பல இந்திய நூல்களிலே வேம்பின் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
பல நூற்றாண்டுகளாக, இந்த மேற்குலகம் வேம்பை கருத்தில் கொள்ளவே இல்லை. இந்தியாவில் தொழிலாளர்களும் சுதேச மருத்துவர்களும் தம் பல்வேறுபட்ட தேவைகளைப் பூர்த்தி செய்ய வேம்பைப் பயன்படுத்தி வந்தனர்.
ஆனால் காலனித்துவ ஆட்சியாளர்களான பிரித்தானியர், போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், பிரெஞ்சுக்காரர் போன்றோரின் கவனத்தை அது ஈர்க்கவில்லை. காலனித்துவத்தின் பின்னரான காலப்பகுதியில் (மேற்குலகிற்கு) விசேட பூச்சி கொல்லிகளைத் தயாரிக்க வேண்டிய தேவையொன்று ஏற்பட்டது. அப்போதுதான் வேம்பின் மருத்துவ குணத்தால் மேற்குலகும் ஈர்க்கப்பட்டது.
1971 இலே அமெரிக்க கம்பனியொன்று வேம்பு (இந்தியாவிலே) பயன்படும் விதத்தை அவதானித்தது. வேப்பங்கொட்டையை இறக்குமதி செய்யத் தொடங்கியது. அதில் தொடர்ச்சியாகப் பல ஆய்வுகளை மேற்கொண்டு பூச்சி கொல்லியாகப் பாவிக்கக் கூடிய பதார்த்தமொன்றைப் பிரித்தெடுத்தது.
1985 இலே அப்பதார்த்தத்துக்கான காப்புரிமையை அமெரிக்கா வழங்கியது. பின்னர் அந்தக் கம்பனி காப்புரிமையை பல்தேசிய கம்பனி ஒன்றுக்கு விற்றது. அந்த பல்தேசிய கம்பனியின் கீழ் இயங்கும் கிரேஸ் என்ற கம்பனியொன்று இந்தியாவிலே தொழிற்சாலையொன்றை நிறுவியது. வேம்புடன் தொடர்புடைய பொருட்களை உற்பத்தி செய்யும் உள்ளூர் உற்பத்தியாளர்களை அணுகியது. அவர்களுடைய உற்பத்தி, தொழில்நுட்ப முறைமைகளைப் பணம் கொடுத்து வாங்கும் முயற்சிகளில் ஈடுபட்டது. அத்துடன் அவர்களுடைய உற்பத்திகளை நிறுத்தி மூலப்பொருளாகவே தமக்கு விற்குமாறும் வலியுறுத்தியது. பல்வேறு வகைகளிலும் அழுத்தங்களைக் கொடுத்தது.
இன்னொரு கம்பனியுடன் இணைந்து வேப்பங்கொட்டைகளைப் பண்படுத்தத் தொடங்கியது. தினமும் 20 தொன் வேப்பங்கொட்டைகள் அவ்விதம் பண்படுத்தப்பட்டன. உள்ளூர் உற்பத்தியாளர்களிடம் நியாய விலையிலே மூலப்பொருளைக் கொள்வனவு செய்தது.
இதனால் உள்ளூர் உற்பத்தியும் பாதிக்கப்பட்டது.
அமெரிக்காவோ மிகவும் சுலபமாக பல மில்லியன் வருமானத்தை ஈட்டியது.
வேம்பு உற்பத்திப் பொருட்களின் மீது கிரேஸ் கம்பனி கொண்டிருந்த மூர்க்கத்தனமான ஆர்வம் இந்தியாவில் விவசாயிகள், விஞ்ஞானிகள், அரசியல்வாதிகள் என பலதரப்பினரிடமிருந்து ஒருமித்த எதிர்ப்பு உருவாகக் காரணமாகிது.
வேம்பு உற்பத்திக்கான காப்புரிமையைப்பெற பல்தேசிய கம்பனிகளுக்கு அதிகாரம் இல்லை என்ற கருத்து அவர்களால் முன்வைக்கப்பட்டது.
வழக்கு தொடரப்பட்டது. இருதரப்பும் பல்வேறு வாதங்களை முன்வைத்தன. திடீரென புதிய திருப்பம் உருவாகியது. வேம்பின் தாயகம் இந்தியா அல்ல. கென்யாதான் என்றது அமெரிக்கா. சுவடுகள் ஆராயப்பட்டன. அப்போதுதான் ஒரு உண்மை தெரியவந்தது. 1948 இலே இலங்கை கென்யாவுக்கு வேப்பங்கொட்டைகளை அனுப்பியமை தெரியவந்தது.
ஆசியாவின் பல பகுதிகளிலும் வேம்பு பரம்பி இருப்பதால் ஆசிய நாடுகள் ஒன்றிணைந்து அமெரிக்காவுக்கு எதிராகப் போராடின. இறுதியில் வெற்றியும் பெற்றன.
இதுதான் இன்றைய நிலைமை, நாம் விழிப்படையாவிட்டால் எமது வளங்கள் யாவுமே மேற்குலகினால் சுரண்டப்பட்டுவிடும்.
ஆனால் நாமொன்றும் அப்பாவிகளல்லர். இலங்கையின் பெருந்தோட்டப் பயிர்களுள் பிரதானமான தேயிலை, இறப்பர் ஆகியன எமது சுதேச பயிர்கள் அல்ல. பிரித்தானிய காலனித்துவ ஆட்சிக்காலத்தில் சீனாவிலிருந்து தேயிலையும் தென்னமெரிக்காவிலிருந்து இறப்பரும் கொண்டுவரப்பட்டு இலங்கையில் பயிரிடப்பட்டன.
அவற்றால் இன்று பெருவருமானம் பெறும் நாம் அதில் ஒரு சிறிய பகுதியையேனும் அவற்றின் தாய் நாட்டுக்குக் கொண்டுக்கிறோமா? இல்லையே.... இதுதான் இன்றைய உலகின் நடைமுறை.
இந்த உயிர்க் கொள்ளையால் சுற்றுச்சூழல் மாற்றியமைக்கப்படுகிறது. அதன் விளைவால் உயிர்ப்பல் வகைமை இழக்கப்படுகிறது. 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஆசியாவில் மட்டும் 100,000 க்கும் அதிகமான நெல்லினங்கள் காணப்பட்டன. ஆனால் இன்று அவை 12 இலும் குறைவாகி விட்டன. ஏன் இலங்கையிலும் அதே நிலை தான் காணப்படுகிறது. முன்னர் ஏறத்தாழ 2000 இனங்கள் காணப்பட்டன. தற்போது 5 இனங்கள் மட்டுமே காணப்படுகின்றன. இவையெல்லாம் உயிர்ப்பொருளின் வர்த்தகமயப்படுத்தல் ஏற்படுத்திய விளைவுகளாகும்.
உயிர்ப்பல்வகைமை இழக்கப்படுதலானது, உணவுப் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கும். இயற்கை அனர்த்தங்களை அதிகரிக்கச் செய்யும் சம போஷாக்குள்ள உணவு கிடைக்காமலே போகும்.
சுத்தமான நீர் கிடைக்காது, சமூக உறவுகள் பாதிக்கப்படும், உயிர்ப் பல்வகைமை அழிக்கப்பட்டால் அதை பழைய மாதிரியே மீள உருவாக்க முடியாது என்பதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
உயிர்க்கொள்ளையைத் தடுப்பதற்கு பல்வேறு நடைமுறைகளும் சட்டதிட்டங்களும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. கண்காணிப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் கூட அமைப்புகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் மரபணுக்கொள்ளைகள் அவற்றை எல்லாம் மீறிவிடுகின்றன என்பதும் மறக்கப்பட முடியாதது.
உயிர்ப்பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தல் என்பது இலங்கையில் தடைசெய்யப்பட்டிருக்கிறது. ஆனால் படித்தவர்கள் பலர் அவ்வாறு தாவரப்பதார்த்தங்களை வெளிநாடுகளுக்குக் கொண்டு செல்லும் போது சுங்கத்தில் பிடிபட்டிருக்கிறார்கள்.
இவ்விடயம் தொடர்பில் எமது சட்டமூலங்கள் மேலும் திருத்தப்பட வேண்டும் என்கிறார் சுற்றாடல் சட்ட வல்லுநர் ஜெகத் குணவர்தன.அப்படி இல்லாவிட்டால் பன்னெடுங்காலமாக இந்தியா பாகிஸ்தானில் விளைவிக்கபடும் பாஸ்மதி அரிசியின் காப்புரிமையை அமெரிக்கா பெற்றிருப்பது போன்றதான நிலை தான் எமது சுதேச உற்பத்திகளுக்கும் உருவாகும் என்பது கண்கூடு.

Sunday, May 8, 2011

வெள்ளம் வந்தபின் அணை கட்டி என்ன பயன்?


சுவீடன் நாட்டின் தலைநகர் ஸ்டோக்ஹோமிலே கடந்த ஏப்ரல் மாதம் மாநாடொன்று நடைபெற்றது. 173 நாடுகள் பங்கேற்றிருந்தன. கொடிய நச்சுத் தன்மைமிக்க சேதன மாசாக்கிகளின் பயன்பாட்டைத் தடை செய்வது பற்றி விவாதித்தன. இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை ஸ்டோக்ஹோமில் கூடும் இந்த நாடுகள், இவ்வாறு விவாதிப்பது சகஜமானது. விவாதத்துக்குரிய கருத்தை பல நாடுகள் ஆமோதிக்கும் சில நாடுகள் மெளனம் சாதிக்கும் சிலவோ ஒரேயடியாக மறுக்கும்.
இம்முறை நடைபெற்ற மாநாடு ஸ்டோக்ஹோம் உடன்பாடு கைச்சாத்திடப்பட்ட பின்னர் நடைபெறும் 5 ஆவது மாநாடாகும். அதில் என்டோசல்பன் எனப்படும் நச்சுத்தன்மையான பூச்சிக்கொல்லியைத் தடை செய்வது தொடர்பாக நாடுகள் விவாதித்தன. தமது மக்களின் நல்வாழ்விலே அதிக கரிசனை கொண்ட 125 நாடுகள் என்டோ சல்பனுக்கு தடை விதித்தன. 47 நாடுகள் மெளனமாகவே இருந்தன. எமது அயல் நாடான பாரதம் மட்டும் தடை செய்ய அடியோடு மறுத்தது. அந்த மறுப்பின் எதிரொலியாய் ஊடகங்கள் விழித்துக்கொண்டன. என்டோசல்பன் விவகாரம் பூதாகரமானது என்ற உண்மையை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியவை இந்த ஊடகங்கள் தான் என்றால் மிகையாகாது.
இந்தியாவின் கேரள மாநிலம் கடவுளுக்குச் சொந்தமானது என்பர். சலசலத்து ஓடும் ஆறுகள், அழகான குளங்கள், சுற்றிலும் தென்னை மரங்கள், பாரம்பரியம் மாறாமல் கட்டப்பட்டிருக்கும் வீடுகள், எங்கு பார்த்தாலும் கண்ணுக்கு குளிர்ச்சி தரும் காட்சி நிறைந்து காணப்படும் மாநிலம் கேரளா. துரித நகரமயமாக்கலின் ஆதிக்கத்தை அங்கு காண்பது மிக அரிது எனலாம்.
அந்த இயற்கை கொஞ்சும் மாநிலத்திற்கு கிடைத்த சாபக்கேடு இந்த என்டோசல்பன். கேரளாவின் காசர் கோடு பகுதியிலே இந்தப் பூச்சி கொல்லி பரவலாகப் பயன்படுத்தப்பட்டது. அது மட்டுமன்றி முத்தளமரடா பகுதிகளில் உள்ள மாம்பழத் தோட்டங்களில் உலங்கு வானூர்தியிலிருந்து என்டோசல்பன் பூச்சிகொல்லி தெளிக்கப்பட்டது.
சில காலங்களின் பின், என்டோசல்பன் அதிகளவு பாவிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் மக்களுக்கு பலவிதமான நோய்கள் ஏற்பட்டமை அவதானிக்கப்பட்டது. சிறுவர், சிறுமியர் மத்தியில் வளர்ச்சிக்குறைபாடு, பிறக்கும் குழந்தைகளின் மன வளர்ச்சிக் குறைபாடு, நரம்பு மண்டலப் பாதிப்பு போன்றன அறியப்பட்டன.
என்டோசல்பனின் விளைவுகளை உணர்ந்த கேரள மாநில அரசு 2005 ஆம் ஆண்டு அப்பூச்சிகொல்லி மருந்துக்கு முற்றாகத் தடை விதித்தது. ஆனால் என்டோ சல்பனின் விபரீதத்தை இந்திய மத்திய அரசு உணரவில்லை போலும். ஆதலால் கேரள மாநிலம் தவிர்ந்த ஏனைய மாநிலங்களிலெல்லாம் என்டோசல்பன் பாவனையிலிருந்தது. இதற்கு தமிழ் நாடும் விதிவிலக்கல்ல. விளைவு கேரள - தமிழ்நாடு எல்லையோரக் கிராமங்களில் என்டோசல்பனின் பாவனை தாராளமாகி, கேரளாவுக்குள்ளும் இலகுவாக ஊடுருவியது.
நிலைமை இப்படி இருக்கையில் தான் 5ஆவது ஸ்டோக்ஹோம் மாநாடும் நடந்து முடிந்திருக்கிறது. அம்மாநாட்டில் இந்தியா நடந்து கொண்டவிதம், தற்போது பல சர்ச்சைகளை உருவாக்கியிருக்கிறது. ஆனால், இந்தியா இவ்வாறு என்டோசல்பனைத் தடை செய்ய மறுத்தமைக்கும் பல காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. உண்மையில், இந்தியா இந்த பூச்சிகொல்லி மருந்தை ஒரேயடியாகத் தடை செய்வதற்குத்தான் மறுத்தது எனலாம். பாவனையைப் படிப்படியாகக் குறைத்து மெதுவாக இல்லாமல் செய்யும் நடைமுறைக்கு உடன்பட முயற்சித்தது.
ஏனெனில், என்டோசல்பனளவு வினைத்திறன் மிக்க வேறெந்த பூச்சி கொல்லி மருந்தையும் இந்தியா உருவாக்கியிருக்கவில்லை. அதே வேளை இன்றைய விவசாயிகள் பலர் இயற்கை விவசாயத்துக்குப் பழக்கப்பட்டவர்களுமல்லர்.
என்டோசல்பனை இந்தியாவே தயாரிக்கிறது. ஒரு வருடத்துக்கு 900 தொன் உற்பத்தி செய்யப்படுகிறது. அரைவாசி தேசிய பாவனைக்கும் மிகுதி ஏற்றுமதிக்கும் பயன்படுகிறது. விவசாயம் முக்கிய பங்கு வகிக்கும் நாடான இந்தியாவிலே 75 சதவீதமான விவசாயிகளின் வாழ்வாதாரம் இந்த என்டோசல்பனை நம்பியே இருக்கிறது.
இம் மருந்தை உடனடியாகத் தடை செய்தால் 75 சதவீத இந்திய விவசாயிகளும் நட்டாற்றில் விடப்படுவர் என்பதே இந்தியாவின் நிலைப்பாடாக இருக்கிறது. ஏலவே உலக உணவுப் பிரச்சினை, தண்ணீர் பற்றாக்குறை, எல்லைப் பிரச்சினை, சனத்தொகை அதிகரிப்பு, பயங்கரவாதம் என பல்வேறுபட்ட பிரச்சினைகள் அட்டதிக்குகளிலும் இந்தியாவை அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் விவசாயத்துறையில் சடுதியான வீழ்ச்சியை ஏற்படுத்துவதானது இந்தியாவின் வல்லரசுக்கனவை கணப்பொழுதில் சிதைத்து சின்னாபின்னாமாக்கிவிடும் என்பது நிதர்சனம்.
என்டோசல்பன் பாவனையால் உருவாகிய பிரச்சினைகள் இந்தியாவின் கேரள மாநிலத்தில் மட்டும் அறியப்படவில்லை. கர்நாடகாவுடன் விவசாயத்துக்குப் பெயர் போன பஞ்சாப் மாநிலத்திலும் இதை ஒத்த பிரச்சினைகள் இனங்காணப்பட்டுள்ளன.
பஞ்சாப் மாநிலத்தின் பாட்டிண்டா பகுதியில் என்டோசல்பனின் மிகை பாவனையால் மண்வளம் குன்றி நச்சுத்தன்மை அதிகரித்திருக்கிறது.
ஏறத்தாழ 35 வருடங்களுக்கு முன்னர் 1976 இலே கேரள மாநிலத்தின் காசரகோடு மாவட்டத்தில் இருக்கும் முந்திரித் தோட்டங்களுக்கு பூச்சி கொல்லியொன்று தெளிக்கப்பட்டது. வானிலிருந்து விசிறப்பட்ட நச்சுத்தன்மையான அந்தப் பூச்சிக் கொல்லிதான் என்டோசல்பனாகும். அப்போதிலிருந்து 2011 ஆம் ஆண்டு வரை வருடமொன்றுக்கு 3 தடவைகள் அதே முறையிலே என்டோசல்பனை விசிறும் நடைமுறை வழக்கிலிருந்தது.
காற்றிலே பரவும் சேதன குளோரினான இந்தப் பூச்சிக் கொல்லி நச்சுத் தன்மையானது. போபால் அனர்த்தத்தை ஒத்த இரசாயன அனர்த்தத்தைத் தோற்றுவிக்கக் கூடியது.
என்டோ சல்பனின் பாவனை ஆரம்பித்து 3 வருடங்களின் பின்னர் தான் அதன் தாக்கங்கள் உணரப்பட்டன. 1979 இல் பிறந்த குழந்தைகளில் வளர்ச்சிக் குறைவும் கால்முடமாதலும் அவதானிக்கப்பட்டது.
1990 களிலே இந்தக் குறைபாடுகள் வெளிப்படையாகத் தெரிய ஆரம்பித்தன. அதிகளவில் பாதிக்கப்பட்டது கர்ப்பிணிப் பெண்களும் சிறுவர்களும் குழந்தைகளுமே. பிறவிக்குறைபாடுகள் மட்டுமன்றி பல்வேறுபட்ட நோய்களும் கண்டறியப்பட்டன. அவற்றுள் பல மையநரம்புத் தொகுதி, இனப்பெருக்கத் தொகுதியுடன் தொடர்புடையவையாகும். புற்றுநோயின் தாக்கம் அதிகரித்துக் காணப்பட்டமையும் அறியப்பட்டது.
2002 இல் கேரள மேல் நீதிமன்று என்டோ சல்பனைத் தடை செய்வதற்கும் இந்த நிலைமை தான் காரணமாகிறது.
இது இந்தியாவுக்கு மட்டுமே உரிய பிரச்சினை அல்ல என்பதை மனதில் கொள்ள வேண்டும். என்டோ சல்பன் பாவனையிலிருக்கும் சகல நாடுகளும் கேரளம் எதிர்நோக்கும் பிரச்சினைகளை ஒத்த பலவற்றை எதிர்நோக்குகின்றன.
மனிதன் விரும்பியோ விரும்பாமலோ இயற்கையுடன் இயைந்து வாழ வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறான். தான் வாழும் சூழற் தொகுதியில் பிரதான அங்கமாக இருக்கிறான். சூழற்தொகுதி ஒன்றின் அங்கங்களுக்கிடையே இடைத் தொடர்புகள் காணப்படும். அவை எல்லாம் சீராகப் பேணப்பட்டால் தான் சூழல் தொகுதி சமநிலையில் இருக்கும். அதன் அங்கங்களாக இருக்கும் அங்கிகளும் நிலைக்க முடியும்.
என்டோசல்பனானது, தான் பிரயோகிக்கப்படுகின்ற சூழலிலிருக்கும் அங்கிகள் யாவற்றையும் பாரபட்சமின்றிப் பாதிக்கிறது என்றே கூறுவேண்டும்.
விளைவு, உணவுச் சங்கிலியின் உயர்படியாகக் கருதப்படும் மனிதனின் உடலில் அதிக செறிவில் என்டோசல்பன் சேர்ந்துவிட, அது பல்வேறு உடற் தாக்கங்களை ஏற்படுத்தத் தொடங்கியது. என்டோசல்பனாது உடற் கலங்களைப் பிறழ்வடையச் செய்ய வல்லது ஆகையால், அதனால் உருவாகும் குறைபாடுகளை மனிதக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதும் இயலாமல் போனது.
இந்நிலையிலே, 2001 இல் ஸ்டோக்ஹோம் நகரிலே கூடிய உலக நாடுகள் நச்சுத்தன்மையான சேதன மாசாக்கிகளை தடை செய்வதும் தடை செய்யும்/இல்லாதொழிக்கும் உடன்பாட்டை எட்டின. 2004 இலிருந்து அந்த உடன்பாடு கட்டாயப்படுத்தப்பட்டது. அதனடிப்படையிலே உலகளாவிய ரீதியில் பல நாடுகளிலே என்டோசல்பன் தடைசெய்யப்பட்டது.
எப்படி ஒரு காலத்தில் டி.டி.ரி புழக்கத்திலிருந்து பின் என்ன காரணத்துக்காகத் தடை செய்யப்பட்டதோ அதை ஒத்த காரணத்துக்காகவே என்டோசல்பனும் தடை செய்யப்பட்டிருக்கிறது. இந்த ஸ்டோக்ஹோம் உடன்பாட்டில் இலங்கையும் கைச்சாத்திட்டது. 2005 இலிருந்து என்டோசல்பனை உள்நாட்டில் தடை செய்தது.
இந்தியாவுடன் ஒப்பிடுகையில் இலங்கை சிறிய நாடு. இங்கு என்டோசல்பன் தடை செய்யப்பட்டபோது பொருளாதாரத்தில் பாரிய பாதிப்பு எதுவும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. ஆனால் இந்தியா பரப்பளவில் பெரியது. என்டோ சல்பனை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தடை செய்தால் தான் பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடுமோ என அது அஞ்சுகிறது. ஆதலால் தான், அதன் பாவனையைப் படிப்படியாகக் குறைக்கும் தீர்மானத்தை எட்டியிருக்கிறது.
ஆரோக்கியமான சூழலில் உயிர் வாழ்தல் என்பது இவ்வுலகில் வாழும் சகல ஜீவராசிகளதும் உரிமையாகும். அந்த உரிமையைப் பறிக்கும் அதிகாரம் எவருக்கும் இல்லை. பொருளாதார நெருக்கடியை மனதில் கொண்டு, பல உயிர்களின் உரிமையைப் பறிப்பது எவ்வளவு தூரம் நியாயமானது என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.
எமது சமூகம் மிகவும் தொன்மையான வரலாற்றைக் கொண்டது. இயற்கையுடன் இயைந்த செயற்பாடுகளை மேற்கொண்டு வாழ்ந்தமையால் தான் இத்தனை தொன்மையான வரலாறு இருக்கிறதோ என்றும் சிலவேளைகளில் எண்ணத் தோன்றும், ஆனால் விஞ்ஞான வளர்ச்சியும் மனித ஆசைகளும் ஒன்றுக்கொன்று போட்டியாக அதிகரித்துச் சென்றன. அதன் பயனாக உருவான வைதான் இந்த இரசாயனப்பூச்சி கொல்லிகள்.
அதிகரித்து வரும் கேள்வியையும் இலாபநோக்கையும் திருப்திப்படுத்தி உயர் விளைச்சலைப் பெறும் இலகு வழிகளாக இப்பூச்சிகொல்லிகளும் இரசாயன உரங்களும் காணப்படுகின்றன. இவற்றின் அறிமுகமும் பயன்பாடும் இயற்கை விவசாய முறைமைகளை இல்லாதொழித்து விட்டன என்றே கூறவேண்டும்.
ஆனால் இந்த இரசாயனப் பொருட்களின் எதிர்மறையான விளைவுகள் இனியும் தோன்றாமல் இருக்க வேண்டுமாயின் இயற்கை விவசாயத்துக்கு மாறுவதே சிறந்த நடைமுறையாகக் கொள்ளப்படுகிறது.

இலங்கையின் புத்தளம் பகுதியில் மிகை இரசாயனப் பசளைகளின் பாவனை பாரிய தாக்கத்தைச் செலுத்துவதாகத் தெரிகிறது. கற்பிட்டியை அண்டிய பகுதிகளில், நிலம் மணற்பாங்கானது. பேராசை மிக்க விவசாயிகள் உயர் விளைச்சலை மட்டுமே கருத்தில் கொண்டு தேவைக்கும் அதிகமான அளவு இரசாயன உரங்களைப் பாவித்தனர். பாவிக்கின்றனர். அப்பகுதிகளில் வெங்காயம், மிளகாய் போன்ற உயர் வருமானம் தரும் பயிர்கள் பயிரிடப்படுகின்றன. மிகை இரசாயன உரங்களின் பிரயோகத்தால் உரிய காலத்துக்கு முன்னரே உயர் விளைச்சல் கிடைத்து வருகிறது.
பொதுவாகப கற்பிட்டி பகுதியில் உலர் காலநிலையே நிலவும். இரசாயன உரங்களை மிகையாக இட்டு நாள் முழுவதும் நீர்பாய்ச்சினர் அந்த பாமர விவசாயிகள். எந்தத் தாவரமாயினும் தனது தேவைக்கு மேலதிகமான எந்த ஒரு கனிப் பொருளையும் உள்ளெடுக்காது. அது நியதி. அதேவேளை புத்தளத்தில் நிலக்கீழ் நீர்மட்டம் ஆழமற்றது. மிகை இரசாயன உரங்களில் காணப்படும் நைத்திரேற்று, நைத்திரைற்று அயன்கள் நாள் முழுவதும் பாய்ச்சப்படும் நீரிலே கரைந்து நிலக்கீழ் நீரை மாசுபடுத்தின. கற்பிட்டி பகுதியின் பிரதான நீர்மூலம் நிலக்கீழ் நீராகும். விவசாயிகளின் மூடத்தனமான செயற்பாட்டின் வினை கிணற்று நீரிலே தெரிந்தது. கிணற்று நீரின் மணமும் சுவையும் மாறியது. அறியாமல் அருந்திய மக்கள் பல உடல் நலக்குறைவுளுக்கு ஆளாயினர். நீலக்குழந்தைகள் பிறந்தன.
இவ்விடயம் தொடர்பாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் வட மத்திய மாகாண பிரதி பொது முகாமையாளர் தீப்தி சுமனசேகர எம்முடன் சில கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.
ஏலவே குறிப்பிடப்பட்டது போல் கற்பிட்டி பகுதியின் நிலக்கீழ் நீர் மாசடைந்துள்ளதால், அதனைப் பயன்படுத்தி மக்களுக்கு குழாய் வழி நீரை வழங்க முடியாத நிலை காணப்படுகிறது. இந்த மாசடைந்த நீரை குடித்தல், சமைத்தல் தவிர்ந்த ஏனைய தேவைகளுக்குப் பயன்படுத்த முடியும்.
கற்பிட்டியின் சில பகுதிகளில் நிலக்கீழ் நீர் மாசடையவில்லை. ஆகையால் மக்கள் தமது குடிநீர், சமையல் தேவைகளுக்கான நீரை அப்பகுதிகளில் பணம் கொடுத்து வாங்குகின்றனர். தண்ணீர்காவு வண்டிகள் மூலமும் குடிநீர் விநியோகம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. அரசும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் இரசாயன உரங்களின் மிகை பாவனையால் ஏற்படும் விபரீதங்கள் தொடர்பாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன. இயற்கை முறை விவசாயம் ஊக்குவிக்கப்படுகிறது.
உவர் நீரை நன்னீராக்கி விநியோகத்தை மேற்கொள்ளும் திட்டங்களும் காணப்படுகின்றன. ஆனால் இன்னும் போதிய நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்படாமையால் அவை நடைமுறைக்கு வரவில்லை என்கிறார் தீப்தி சுமணசேகர.
நீர்வளம் நிறைந்த நன்னாடு என்று பெயர் பெற்ற தேசம் இலங்கை. ஆனால் உணவுத் தேவைக்கான நீர் பணம் கொடுத்து வாங்கப்படுகிறது என்ற செய்தி அதிர்ச்சி தருவதாக இல்லையா? ஆழம் குறைந்த நிலக்கீழ் நீர்வளம் கொண்ட கற்பிட்டி பிரதேசத்தின் இன்றைய நிலை வருந்துவதற்குரியது. அதற்கு எமது பணத்தாசையும் தூரநோக்கற்ற செயற்பாடுகளுமே காரணங்களாகின்றன. இந்நிலை கற்பிட்டிக்கு மட்டுமே உரியதல்ல. கற்பிட்டி போன்ற பல பகுதிகள் இன்னும் வெளிச்சத்துக்கு வராமல் இருக்கலாம். நாங்கள் சிந்தித்துச் செயற்படாவிட்டால் எதுவும் நடக்கப்போவதில்லை.
வெள்ளம் வந்தபின் அணைகட்ட முயன்றால் எந்த நன்மையும் விழையாது என்பது மட்டுமே நிதர்சனமான உண்மை.

என்டோசல்பன்


 • இது சேதன குளோரின் கூட்டத்தைச் சேர்ந்த பூச்சி கொல்லியாகும். 
 • 1950 களில் அறிமுகம் செய்யப்பட்டது. 
 • விவசாயத்துறைக்கு அச்சுறுத்தலாக மாறிய பலவகையான பீடைகளுக்கு எதிராக இது பாவிக்கப்படுகிறது. 
 • தொடுகை, உட்கொள்ளல், சுவாசம் ஆகிய 3 வழிகளாலும் பீடைகளைக் கொல்கிறது.
 • வீட்டுப்பாவனைக்கு உகந்ததல்ல. 
 • என்டோ சல்பன் பல தவறான வழிகளில் பயன்படுத்தப்படுவதும் கண்டறியப்பட்டுள்ளது.
 • அதன் இரசாயனச் சூத்திரம் C9H6Cl6O3S என்பதாகும். 

 • என்டோசல்பனால் ஏற்படும் விளைவுகள்
 • இது பீடைகளை மட்டும் அழிக்காது. 
 • அச் சூழலிலுள்ள மண்புழுக்கள், தேனீக்கள், எறும்புகள், சிலந்திகள் என நன்மை பயக்கும் அங்கிகளையும் அழிக்கும். 
 • அதன் செறிவு அதிகரிக்க ஈரூடக வாழிகள், பறவைகள், ஊர்வன போன்றவற்றையும் இறுதியில் மனிதனையும் பாதிக்கும்.
 • மனிதனின் நரம்பு மண்டலத்தை அதிகளவில் பாதிக்கிறது. 
 • கர்ப்பிணிப் பெண்களும் குழந்தைகளுமே பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர்.
 • பிறவிக்குறைபாடுகள், புற்றுநோய், இனப்பெருக்கத் தொகுதியுடன் தொடர்புடைய பிரச்சினைகள், ஊனம் உட்படப் பல உடல் நலக்குறைபாடுகள் ஏற்படுகின்றன. 
 • என்டோசல்பன் மரபணுக்களில் பிறழ்வுகளை ஏற்படுத்த வல்லது. 
 • ஆதலால் இந்த உடல் நலக்குறைபாடுகள் பல சந்ததிகளுக்குத் தொடரும் வாய்ப்புகளை அதிகம் கொண்டவை. 
 • என்டோ சல்பனின் பரவல் இது எளிதில் ஆவியாவதால் காற்றுடன் இலகுவாகக் கலக்கும். 
 • அக்காற்றைச் சுவாசிக்கும் அங்கிகள் யாவுமே பாதிக்கப்படும். 
 • இது ஏறத்தாழ 5 மாதங்களுக்கு அழியாமல் இருக்குமென அறியப்பட்டுள்ளது.
 • சில என்டோசல்பன் சம பகுதியங்களின் அரை ஆயுட்காலம் 80-600 நாட்களாகும். 
 • அமிலத்தன்மையான சூழலில் இது அதிகளவில் இருக்கும். 
 • நீரிலே ஏறத்தாழ 35 - 150 நாட்கள் வரை காணப்படும். நீரிலே கரையாது நீருடன் சேர்த்து காவப்படும். 
 • என்டோசல்பன் தெளிக்கப்பட்ட இடங்களில் மழை பெய்யும் போது அது மழை நீருடன் கலந்து மழை வடிந்தோடிச் செல்லும் இடங்களுக்கெல்லாம் செல்லும். 
 • ஆறு, குளம், கடல் என யாவற்றிலும் கலக்கும். 
 • அவற்றிலிருந்து நீரைப்பெறும் அங்கிகளுக்கும் கடத்தப்படும். 
 • இப்படியே உணவுச் சங்கிலியின் உயர் படி வரை செல்லும். 
 • மண்ணும் நச்சுத்தன்மையாகும். 
 • இவ்வாறு தொடர்ந்து உள்ளெடுக்கப்பட, அங்கிகளின் உடலினுள் என்டோசல்பனின் அளவு / செறிவு அதிகரிக்குமே தவிரக் குறைவடையாது. 
 • விளைவு விபரீதங்களைத் தோற்றுவிக்கும். 
 • உலகளாவிய ரீதியில் அறியப்பட்ட பாதிப்புகள் சில 
 • சூடான் (1988) 
 • நீர்ப்பாசன வாய்க்காலில் உள்ள மீன்கள் இறந்தன. அந்த நீரைக் குடித்த 3 பேரும் இறந்து போயினர்.
 • பிலிப்பைன்ஸ் (1996) 
 • என்டோசல்பனின் தவறான பாவனையால் நத்தைகள் இறந்தன.
 • இலங்கை (1994 - 1998) 
 • நச்சுத்தன்மையால் இறப்போரின் எண்ணிக்கை அதிகரித்தது.
 • வட இந்தியா (1995 - 1997) 
 • மிகையாக விசிறப்பட்ட என்டோசல்பனால் 18 பேர் இறந்தனர்.
 • கியூபா (1999) 
 • என்டோசல்பன் தாக்கமுள்ள உணவை உட்கொண்ட சுகயீனமடைந்த 63 பேரில் 15 பேர் இறந்தனர்.
 • பெனின் (1999 - 2000) 
 • பருத்தி அறுவடைக்காலத்தில் 37 பேர் இறந்தனர். 36 பேர் கடும் சுகயீனமடைந்தனர்.
 • காசரகோடு (கேரளா) 
 • பல உடல் நலக்குறைபாடுகளும் பிறவிக்குறைபாடுகளும் அறியப்பட்டன. 

 • என்டோ சல்பனின் பிரதியீட்டுச் செயன்முறைகள் 
 • இரசாயன முறைமைகளின் பயன்பாட்டை தவிர்த்தல்.
 • ஒருங்கிணைந்த பீடை முகாமைத்துவ நடைமுறைகளை மேற்கொள்ளல்.
 • பீடைகளை உயிரியல் ரீதியாகக் கட்டுப்படுத்தல்.
 • மூலிகை தாவரவியல் பூச்சி கொல்லிகளைப் பயன்படுத்துதல். 

 • இலங்கையில் இருந்த என்டோசல் பனின் வர்த்தகப் பெயர்கள்
 • Thoidan 
 • Thionex
 • Endomack 
 • Endocel Baurs 
 • Endosulfan Harcros Har Cosan 
 • Radstar Anglo - Sulfan

இன்றைய நிலை இது தான்! காசரகோட்டிலே என்டோசல்பன் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட இரண்டரை வயதான குழந்தையொன்று இறந்து போனது. அக்குழந்தையை அரச மருத்துவனை உள்ளெடுக்க மறுத்ததெனவும் வைத்தியர்கள் பரிகரிக்க மறுத்தார்கள் எனவும் சர்ச்சைகள் எழுந்துள்ளன. பலரது அலட்சியத்தால் ஒரு குழந்தையின் உயிர் அநியாயமாகப் பறிக்கப்பட்டது என்பது தான் உண்மை. இதுதான் வளர்முக நாடுகளின் நிலை!


Sunday, May 1, 2011

தொழிலுக்காக வாழ்க்கையா?

மே தின சிறப்புக் கட்டுரை 

அது மேற்குலகில் கைத்தொழில் புரட்சி ஆரம்பித்திருந்த காலம். உற்பத்தித் திறனுக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட காலம்.
அப்போது, சூரியோதயத்திலிருந்து சூரியாஸ்தமனம் வரை என்பது தான் தொழிலாளர்களுக்குரிய வேலை நேரம். அது 14 மணித்தியாலங்களாகலாம். ஏன் சிலவேளைகளில் 16, 18 மணித்தியாலங்களாகக் கூட இருக்கலாம். அந்தக் கால மேற்குலகில் இவையெல்லாம் சர்வசாதாரணம். இதற்கு ஐக்கிய அமெரிக்கா ஒன்றும் விதிவிலக்கல்ல.
தொழிலாளர்கள் 19 மணித்தியாலங்களுக்கு மேலும் வேலை செய்கிறார்கள். என்பதே 1806 ஆம் ஆண்டு தான் வெளிச்சத்துக்கு வந்தது. இதுதான்  என்று மே மாதம் முதலாம் திகதி பிரகடனப்படுத்தப்பட வித்திட்டது எனலாம்.
ஆனால் இந்த தொழிலாளர் தினமொன்றும் அவ்வளவு இலகுவாகப் பிரகடனப்படுத்தப்படவில்லை. 19ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலகட்டங்களிலே தொழிலாளர்களின் வேலைநேரத்தைத் 10 மணித்தியாலங்கள் ஆக்கக் கோரி பல கைத்தொழில் நிலையங்களிலே போராட்டங்கள் வெடித்தன. வேலை நிறுத்தங்கள் ஆரம்பித்தன. உலகின் முதலாவது தொழிற்சங்கமாகக் கருதப்படுவது பிலடெல்பியா திருத்துநர்கள் சங்கமாகும். இங்கிலாந்திலே தொழிலாளர்கள் இணைந்து சங்கமொன்றை உருவாக்குவதற்கு 2 வருடங்களுக்கு முன்னரே அது உருவாக்கப்பட்டது.
பிலடெல்பியாவில் 1827 ஆம் ஆண்டு 10 மணித்தியால வேலை நேரத்தைக் கோரி ஆரம்பிக்கப்பட்ட தொழிச் சங்கங்கள் வெகு விரைவிலே ஒரு இயக்கமாக இணைந்தன. அதனால் 1837 இல் பெரு நெருக்கடி ஒன்று உருவாகியது. அப்போதிருந்த அமெரிக்க ஜனாதிபதி வான் பரென் அரச துறையில் வேலை செய்வோரின் வேலை நேரத்தை மட்டும் 10 மணித்தியாலங்களாகக் குறைத்தார். ஏனைய துறைகளிலும் அதே மாற்றங்களைக் கொண்டு வருவதற்கான போராட்டங்கள் அடுத்த சில தசாப்தங்களுக்குத் தொடர்ந்தன. ஆனால் தொழிலாளர்கள் 8 மணித்தியால வேலை நேரத்தைக் கோரிப் போராட்டம் நடத்த முன்னரே பல கைத்தொழில் நிறுவனங்கள் அவர்களின் வேலை நேரத்தை 10 மணித்தியாலங்களாகக் குறைத்தன.
பின்னர், அமெரிக்காவில் மட்டுமன்றி அவுஸ்திரேலியாவிலும் 8 மணி நேர வேலைக்கான போராட்டங்கள் வலுப்பெறத் தொடங்கின. 8 மணி நேர வேலை, 8 மணி நேர ஓய்வு, 8 மணி நேரப் பொழுது போக்கு என்ற சுலோகங்களுடன் தொழிலாளர்கள் 1856இல் போராட ஆரம்பித்தனர். வெற்றியும் கண்டனர். அவுஸ்திரேலியாவில் இந்த 8 மணித்தியால இயக்கம் தான் மே தினத்தின் தோற்றத்துக்கு வழிவகுத்தது எனலாம். உலகளாவிய ரீதியிலே இந்தத் தொழிற்சங்கங்கள் இணைய ஆரம்பித்தன. அமெரிக்க தொழிலாளர் சம்மேளனத்தினால் 1884 ஒக்டோபர் 4 ஆம் திகதி பிரேரணை ஒன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதாவது ஐக்கிய அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் 1886 மே மாதம் 1 ஆம் திகதியிலிருந்து தொழிலாளர்களின் வேலை நேரம் 8 மணித்தியாலமாக்கப்பட வேண்டுமென்பதே அந்தப் பிரேரணையாகும். அப்படி இருந்தும் கூட பல கடைகளிலும் தொழிற்சாலைகளிலும் ஆலைகளிலும் பெரும் போராட்டங்களின் பின்னரே 8 மணித்தியால வேலை நேரம் அங்கீகரிக்கப்பட்டது.
இதற்கிடையில் உலகளாவிய ரீதியில் ஒன்றிணைந்து உருவான தொழிற்சங்கங்கள் சம்மேளனத்தின் தலைமைப்பீடம் லண்டனிலிருந்து 1872 இல் அமெரிக்காவுக்கு மாற்றப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
1886 இலே தொழிலாளர் போராட்டங்கள் அதிகரித்தன. போராட்ட மையமாக சிக்காக்கோ இருந்தபோதும் பல நகரங்கள் சிக்காக்கோவுடன் இணைந்தன. ஏறத்தாழ 500,000 பேர் அந்த ஆண்டின் மே 1 ஆம் திகதி பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதை ‘சமூக யுத்தம்’ என்றும் ‘முதலாளித்துவத்தின மீதான வெறுப்பு’ என்றும் வரலாற்று ஆய்வாளர்கள் வர்ணித்தனர். அந்தமேதினத்தன்று போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுள் அரைவாசிக்கு மேற்பட்டோருக்கு வெற்றி கிடைத்தது என்றே கூறவேண்டும். அவர்களது வேலை நேரம் 8 மணித்தியாலங்களாகக் குறைக்கப்படாத போதும் கணிசமானளவு குறைக்கப்பட்டமையானது முன்னேற்றகரமானதாகவே தெரிந்தது.
சிக்காக்கோவில் நடைபெற்ற மே தினப் போராட்டமானது மிகவும் மூர்க்கத்தனமாக இருந்தது எனலாம். தொழிலாளர்களுடைய தொழிற் சூழல் மேம்பட வேண்டுமென்பது மட்டுமன்றி முதலாளித்துவம் ஒழிக்கப்பட வேண்டும் என்ற நோக்குகளோடும் அது முன்னெடுக்கப்பட்டது.
அப்போது ஹே சந்தை சதுக்கத்தில் பொலிசார் மேற்கொண்ட திறந்த வெளித்துப்பாக்கிப்பிரயோகத்தின் போது நால்வர் கொல்லப்பட்டனர். இனந்தெரியாதோரால் குண்டொன்று வெடிக்க வைக்கப்பட்டது. ஒரு பொலிஸ் வீரருடன் 10க்கும் மேற்பட்ட பொதுமக்களும் கொல்லப்பட்டனர். உலகளாவிய ரீதியில் போராட்டங்கள் வலுப்பெற இச்சம்பவம் காரணமாகியது. இன்றும் மே தினத்தன்று இச்சம்பவம் நினைவு கூரப்படுகின்றது.
1889 இலே பிரெஞ்சு சமூகவியலாளர்களால் மே தினம் என்றழைக்கப்படும் மே 1 ஆம் திகதி தொழிலாளர்களுக்கும் அவர்களது பிரச்சினைகளுக்குமுரிய நாளாகக் கருதப்பட்டடது. அதுவே சர்வதேச தொழிலாளர் தினமாகியது.
1920 களிலிருந்து மே தின ஊர்வலங்களை நடத்தும் வழக்கம் தொடங்கியது. பல நாடுகளில் அன்றைய தினம் பொது விடுமுறை நாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டது.
மே தினம் என்பது 20 ஆம் நூற்றாண்டுக்குரியதல்ல. கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே வசந்த காலத்தை வரவேற்கும் தினமாக மேதினம் அமைந்திருந்தது.
உரோம சாம்ராஜ்யம் வலுப்பெற்றிருந்த காலத்திலே மலர்களுக்கென தெய்வமாகக் கருதப்பட்ட ஃபுளோரா (பிlora) வுக்குரிய திருவிழா மே தினத்தன்று கொண்டாடப்பட்டது. அதேபோல் ஜேர்மனிய ஆட்சிப் பகுதிகளிலும் வசந்த காலத்தில் திருவிழாவாகக் கொண்டாடப்பட்டது.
கிறிஸ்தவ மதத்தின் தோற்றத்தையடுத்து மேற்குலகில் அது வேகமாகப்பரவியது. அப்போது இக்கொண்டாட்டங்கள் கிறிஸ்தவமயப்படுத்தப்பட்டன. ஐரோப்பா, அமெரிக்காவில் மே தினக் கொண்டாட்டங்கள் பிரபலமடைந்தன. அடிப்படையில் வசந்தகாலத்தை வரவேற்பதாக அமைந்த போதிலும் மே கம்பத்தைச் சுற்றி ஆடுவதும் மே அரசியாகக் கண்டறியப்படுபவருக்கு முடிசூடுவதும் சம்பிரதாயங்களாயின.
உரோமன் கத்தோலிகர்களைப் பொறுத்தவரையிலே மே தினம் கன்னி மேரிக்குரிய திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. மேரியின் தலையிலே மலர்க்கிரீடங்களைச் சூட்டியும் மகிழ்வர்.
இத்தகைய புராதனமான மே தினம் தற்போது சர்வதேச தொழிலாளர் தினமாக மாறிவிட்டது.
இந்தியாவிலோ இரு மாநிலங்கள் மட்டும் தாம் உருவாகிய தினமாக மே தினத்தைக் கொண்டாட, ஏனையவை தொழிலாளர் தினத்தைக் கொண்டாடுகின்றனர்.
பொம்பே என்ற மேற்கு மாநிலத்திலிருந்து செளராஷ்டிர மீள் ஒருங்கிணைப்புச் சட்டத்தின் கீழ் 1960 ஆம் ஆண்டு மே மாதம் 1ஆம் திகதி இரு மாநிலங்கள் தோன்றின. அவைதான் இந்தியாவின் மேற்குக் கரையோரப் பகுதிகளில் அமைந்திருக்கும் குஜராத் மற்றும் மகராஷ்டிரா மாநிலங்களாகும். மராத்தி மற்றும் குஜராத்தி என்ற இரண்டு மொழிகளின் அடிப்படையிலேயே இம் மாநிலங்கள் பிரிக்கப்பட்டன.
இப்படி உலகளாவிய ரீதியில் ஒவ்வொரு நாடும் தனக்கே உரித்தான சிறப்பு சம்பிரதாயங்களுடன் மே தினத்தைக் கொண்டாடுகின்றது.
ஆனால் சர்வதேச தொழிலாளர் தினம் பிரகடனப்படுத்தப்பட்ட பின்னர் தத்தமது தனித்துவமான சம்பிரதாயங்களுடன் தொழிலாளர் தினத்தையும் இணைத்து யாவரும் ஒத்து அனுஷ்டித்து வருகின்றனர்.
8 மணித்தியாலப் போராட்டம் நடந்து இன்று ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகிவிட்டது. அதற்குப் பின் மனித உரிமைகள், அடிப்படை உரிமைகள், தொழிலாளர் நலன் போன்ற பல விடயங்கள் தொடர்பான பிரகடனங்கள் மேற்கொள்ளப்பட்டுவிட்டன. அதேபோல, அன்று தொழிலாளர்களையே நம்பியிருந்த பல வேலைகளை இன்று இயந்திரங்கள் மேற்கொள்கின்றன. ஆதலால் அன்றுடன் ஒப்பிடுகையில் தொழிலாளர்களின் வேலைப்பழு குறைந்துதான் உள்ளது.
இவற்றிற்கெல்லாமப்பால் சகல தொழில் விடயங்களிலும் சர்வதேச ரீதியிலான தரக் கட்டுப்பாடு மற்றும் தர நிர்ணயம் மேற்கொள்ளப்பட வேண்டுமென்பதும் அவசியமாக்கப்பட்டுள்ளது. அங்கும் தொழிலாளர் நலன் முக்கிய இடத்தை வகிக்கிறது. ஆனால் தற்போதைய நிலை கடந்த நூற்றாண்டை விட மோசமாக இருக்கிறதோ என்றும் சில வேளைகளில் எண்ணத் தோன்றும்.
இவ்வளவு விடயங்கள் இருந்தாலும் உலகளாவிய ரீதியிலே ஓய்வின்றி வேலை செய்யும் தொழிலாளர்களும், ஊன் உறக்கமின்றி வேலை வாங்கப்படும் தொழிலாளர்களும் இருக்கத்தான் செய்கிறார். அவர்கள் வெகுசிலர் மட்டுமே என்று சுலபமாகக் கூறிச் செல்ல முடியாது. ஏனெனில் அவர்கள் கணிசமான தொகையினர் ஒரு நூற்றாண்டு கடந்தாலும் கூட முதலாளித்துவம் இன்றும் தன் கோரமுகத்தைக் காட்டிக்கொண்டுதான் இருக்கிறது.
தொழிலாளர் நலன் தொடர்பான விடயங்கள் சட்ட ரீதியாக அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றன. இருப்பினும், பல தொழில் வழங்குநர்கள் அவற்றைப் பின்பற்றுவதாகத் தெரியவில்லை.
தொழிலாளர்களுடைய நோக்கிலே, அதிகரித்துச் செல்லும் வாழ்க்கைச் செலவுக்கு ஈடுகொடுக்க வேண்டிய தேவையொன்று காணப்படுகிறது. அதேசமயம் தமது வாழ்க்கைத்தரத்தை உலகின் போக்கோடு ஒருமிக்கச் செய்ய வேண்டிய தேவையும் காணப்படுகிறது.
அவை அடிப்படைத் தேவைகளாகிவிட தொழிலாளர்கள் அவற்றிற்கு அதிக முக்கியத்துவத்தை வழங்கத் தலைப்படுகிறார்கள். இதனால் தமது நலன், தாம் வேலை செய்யும் நேரம் என்பன தொடர்பாக அதிக கரிசனை செலுத்தத் தவறி விடுகின்றார்கள். கடைசியில் அவர்களுக்கு வேலையே வாழ்க்கையாகி விடுகிறது.
இது நாட் கூலிபெறும் தொழிலாளர்களுக்கு மட்டுமே பொருத்தமானது என நாம் ஒருபோதும் எண்ணிவிடக் கூடாது. ஒரு முதலாளித்துவத்தின் கீழ் தொழில் மேற்கொள்ளும் சகலருக்கும் பொருந்தும்.
முதலாளித்துவமோ, தான் கொடுக்கும் சம்பளத்திற்கான உச்சப் பயனைப் பெறவே எத்தனிக்கிறது. அத்துடன் அத்தகையோர் பலருக்கு சட்ட ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட தொழிலாளர் நலன் தொடர்பிலான விழிப்புணர்வு மிக மிகக் குறைவாகும். பல தொழில் வழங்குநர்கள் தம்மிடம் வேலை செய்வோருக்கு அவை பற்றி அறிவுறுத்தும் கடமையிலிருந்து தவறி விடுகின்றன. இன்றைய தினத்திலாவது சகல தொழிலாளர் மட்டங்களி லும் அத்தகைய விழிப்புணர்வை ஊட்டுவ தற்கு சகல வெகுசனத் தொடர்பு ஊடகங்க ளும் ஒன்றிணைய வேண்டும். அதே போல ஒவ்வொரு தொழிலாளரும் தான் வாழ்வதற்காக வேலை செய்கிறாரா?
இல்லை வேலை செய்வதற்காக வாழ்கிறாரா? என்று சிந்திக்க வேண்டும்.
அந்த சிந்தனையின் பின்னர் கிடைக்கும் தெளிவு தான் தொழிலாளர் நலன் தொடர்பான விழிப்புணர்வுக்கு முதற்படியாகும். முயன்று தான் பார்ப்போமே!