விதிவிலக்குகளின் கதை - Story of exceptions


உலகெங்கிலும் மின்வழிக் கல்வி தன் தடத்தை உறுதியாகப் பதிக்கத் தொடங்கியிருக்கிறது.  கற்றல்-கற்பித்தலை புதியதோர் பரிமாணத்தை நோக்கிப் பயணிக்க வைத்திருக்கிறது. இலங்கை போன்ற அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளைப் பொறுத்தவரையிலே, இந்த மின் வழிக்கற்றலானது புதியதோர் எதிர்காலத்தை நோக்கிய முதலடியாகவே கருதப்படுகிறது.  பாடசாலைக் கல்வியில், பாடசாலையை அணுகுவதற்கான சம வாய்ப்பு வழங்கப்படுவது போல , மின்வழிக் கல்வியை அணுகுவதற்கான சம வாய்ப்பும் வழங்கப்படும் போது மின்வழிக் கல்வி தன் நிறை நோக்கத்தை அடையும். அதுவரை மின்வழிக் கல்வியால் உருவாக்கப்படும் ஏற்றத்தாழ்விடைவெளிகளை  நிரவவேண்டிய பாரிய சமூகப்பொறுப்பு எம்மத்தியில் முன்வைக்கப்பட்டிருக்கிறது. 

'அனைவருக்குமான இலவசக் கல்வி' என்ற பெரும் சமத்துவக் கல்விமுறைமையின் அதியுச்சப் பயனைப்பெற்றவர்கள் என்ற வகையில் அக்கல்வி முறைமையால் யாம் பெற்ற இன்பத்தை எமது சந்ததியினரையும் பெற வைக்க வேண்டிய பெரும் கடப்பாடு எமக்கு இருக்கிறது. யுத்தத்தின் பெயரால் பிராந்தியங்களுக்கிடையிலும் மாவட்டங்களுக்கிடையிலும்  வலயங்களுக்கிடையிலும் பாடசாலைகளுக்கிடையிலும் ஏற்படுத்தப்பட்டிருக்கும் ஏற்றத் தாழ்விடைவெளிகள் மின்கல்வி மூலம் மேலும் அதிகரிக்கப்பதற்கான வாய்ப்பு உருவாகாமல் இருக்க  நாம் துணை நிற்கவேண்டும். 

ஆதலினால், மருத்துவத்துக்கான அணுகலில் எங்ஙனம் நாம் சம வாய்ப்பை அங்கீகரிக்கிறோமோ அதே போல கல்விக்கான அணுகலிலும் நாம் சம வாய்ப்பை அங்கீகரிக்க முன்வரவேண்டும்.  ஏலவே காணப்படும் ஏற்றத் தாழ்விடைவெளிகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். அவற்றை மூடி மறைத்து முன்னேற்றங்களை மாத்திரமே வெளிப்படுத்திக் கொண்டிருப்பதானது எப்போதும் ஆரோக்கியமானதொரு எதிர்காலத்தைத் தோற்றுவித்து விடாமலும் கூடப் போகலாம். 

கல்வியைப் பொறுத்தவரையில் ஒருவரேனும் பின்னிற்க விடப்படலாகாது என்பது அடிப்படை உரிமை சார்ந்த அணுகலாகும். ஆதலினால், இப்பக்கமானது, மின் கல்விக்கான அணுகலைப் பெறச் சிரமப்படும் 'விதிவிலக்குகளின்' கதைககளைத் தாங்கி வரத் தீர்மானிக்கிறது. 

எப்போதும் பெரும்பான்மைச் சதவீதம் சார்ந்த தீர்மானங்களை ஏற்கவும் அங்கீகரிக்கவும் பழகிய எங்களுக்கு, சிலவேளைகளில் இது அசௌகரியமாகவும் பயனற்றதாகவும் கூடத் தெரியலாம். ஆனால்,  மின் கல்விக்கான அணுகலைப் பொறுத்த வரையில் நாம் செவிமடுக்க மறுக்கும், மறக்கும் ஒவ்வொரு கதையும் கணக்கில் வைக்கப்படவேண்டும் என்பது எனது அவா. 

No comments:

Post a Comment