Sunday, May 30, 2010

சூழலுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கும் மெக்ஸிகோ வளைகுடா எண்ணெய் கசிவுஎங்கு பார்த்தாலும் சூழல் மாசடைதல், பூகோளம் வெப்பமடைதல், உயிரினங்கள் அழிந்து போதல் என சூழல் சம்பந்தமான பிரச்சினைகளையும் அவற்றிலிருந்து மீள்வதற்கான பாதுகாப்பு நடைமுறைகளையும் பற்றியே மாநாடுகள் நடக்கின்றன. செய்திகள் வெளியிடப்படுகின்றன. மனித செயற்பாடுகளால் இயற்கை மீறப்படுகிறது என உணரப்பட்டதால் இயற்கையையும் அது சார்ந்த சூழலையும் பாதுகாக்கும் பொருட்டு பல நடைமுறைகளை மனிதன் ஏற்படுத் தத் தொடங்கினான். இயற்கையை மீறிய மனிதனே அதைப் பாதுகாக்கும் நடவடிக்கை யெடுப்பது வேடிக்கையான விடயம் தான். எனினும் அதை எற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயத்திலே தான் மனித சமுதாயம் இருக்கிறது.

இயற்கை வளங்களும் உயிரினங்களின் பல் வகைமையும் துரிதமாக அழிந்து வருகின்ற நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக முனைந்து கொண்டிருக்கிறான் இந்த அதிபுத்திசாலை மனிதன்! இத்தகையதோர் நிலையிலே, மெக்சிக்கோ வளைகுடாவின் எண்ணெய்க் கசிவு சூழலியலாளர்களை மட்டுமன்றி முழு உலகையுமே கலங்கடிக்க வைத்திருக்கிறது.

சமுத்திரப் பகுதிகள் வளமானவை. உயிர்ச் சுவட்டு எரிபொருட்களும் அவை கொண்டிருக்கும் வளங்களுள் பிரதானமானவையாகும். இந்த எண்ணெய் வளம், சமுத்திரங்களிலே, பல்லாயிரம் அடி ஆழத்திற்குக் கிணறுகளைத் தோண்டுவதன் மூலம் அகழ்ந்தெடுக்கப்படுகின்றது.

சிலவேளைகளில் அகழ்ந்தெடுக்கப்படும் எண்ணெய் கசிந்து சமுத்திரத்தின் நீர்ப்பரப்பிலே பரவத் தொடங்கும். இத்தகையதோர் நிலைமையே கடந்த ஏப்ரல் மாதம் 20ஆம் திகதியும் ஏற்பட்டது.

பெயொண்ட் பெட்ரோலியம் எனப்படுவது எண்ணெய் அகழ்வில் ஈடுபடும் முன்னணி பிரித்தானிய நிறுவனங்களுள் ஒன்று. அது உலக சமுத்திரங்களின் பல இடங்களில் இயந்திர மேடைகளை அமைத்து ஆழ்துளை இயந்திரங்களின் மூலம் எண்ணெய் அகழ்வை மேற்கொள்கிறது. இந்நிலையில் மெக்ஸிக்கோ வளைகுடாவில், கரையிலிருந்து 48 மைல் தூரத்தில் இருக்கும் அந்நிறுவனத்தின் ஆழ்துளை இயந்திரம் ஒன்று கடந்த ஏப்ரல் மாதம் வெடித்தது. அங்கு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த தொழிலாளர்கள் 11 பேர் கொல்லப்பட்டனர்.

பொதுவாக எண்ணெய் கிணறுகளில் எண்ணெய்க் கசிவைத் தடுக்கும் பாதுகாப்புக் கருவியொன்று பொருத்தப்பட்டிருக்கும். எண்ணெய்க் கசிவு கண்டுபிடிக்கப்படும் பட்சத்தில், அக்கருவி விரைந்து செயற்பட்டு எண்ணெய் கிணற்றைத் தற்காலிகமாக மூடிவிடும்.

மெக்சிக்கோ வளைகுடாவின் எண்ணெய்க் கசிவைப் பொறுத்த வரையிலே, இந்தப் பாதுகாப்புக் கருவி இயங்க மறுத்தது. இதற்கு முகாமையாளர்களின் அலட்சியப் போக்கும் ஒரு காரணமென, இந்த எண்ணெய் கசிவு உயிர்தப்பிய தொழிலாளர் ஒருவர் தெரிவித்திருந்தார்.ஒரு கருவி செயலிழந்தால், அதனுடன் பொருத்தப்பட்டிருக்கும் உப கருவி உடனடியாகத் தொழிற்பட ஆரம்பிக்கும். ஆனால் இங்கோ இரு கருவிகளுமே செயலிழந்திருந்தன. எனவே எண்ணெய் கசிவதும் தவிர்க்க முடியாததாயிற்று.

இந்த எண்ணைக் கசிவானது எண்ணிப் பார்க்க முடியாதளவு விசாலமானது. பாதிப்பை ஏற்படுத்தும் நிகழ்வாகவே ஆய்வாளர்கள் இந்த எண்ணெய் கசிவைக் கருதுகின்றனர். ஆரம்பத்தில் தினமும் 1000 பரல்கள் எண்ணெய் கசிவதாகக் கூறப்பட்டது. பின்னர் இம்மாதத் தொடக்கத்தில் தினமும் 5000 பரல்கள் எண்ணெய் கசிவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். எண்ணெய் கசிவு தொடர்பாக அண்மையில் வெளியிடப்பட்ட ஒளிப்படக் காட்சியின் அடிப்படையில், தினமும் 25,000 – 80,000 பரல்கள் வரையான எண்ணெய் கசிவதாகக் கூறப்படுகிறது.

கசிவு ஏற்படத் தொடங்கி ஒரு மாதம் கடந்துவிட்ட நிலையில் இன்னும் அது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை என்பதே வருத்தத்திற்குரிய விடயமாகும்.

தினமும் 25,000 பரல்களுக்கும் அதிகமாகக் கசிந்து வரும் எண்ணெய் ஏற்படுத்தும், ஏற்படுத்தப் போகும் பாதிப்புக்கள் பாரதூரமானவையாக இருக்கும் என ஆய்வாளர்கள் எதிர்வு கூறுகின்றனர்.

எண்ணெய்க் கசிவு எனப் பொதுவாகக் குறிப்பிடப்பட்டாலும் அக்கசிவினுள் உயிர் வாயு, மசகெண்ணெய், சேறு, நீர் என்பனவும் காணப்படுகின்றன. நீரைவிட அடர்த்தி குறைந்த பதார்த்தங்கள் நீரின் மேற்பரப்பைச் சென்றடைய, நீரைவிட அடர்த்தி கூடிய பதார்த்தங்களோ சமுத்திரங்களின் அடியில் படிந்துவிடுகின்றன.

சமுத்திர நீரோட்டங்களின் காரணமாக இந்த எண்ணெய்க் கசிவு மெக்சிக்கோ வளைகுடாவிலிருந்து அதன் அயற்பகுதிகளுக்கும் பரவி வருகிறது. சாதாரணமாக இச்சமுத்திர நீரோட்டங்கள் ஒரு நாளைக்கு 80 முதல் 160 கி.மீ- வரையான தூரம் பயணிக்க வல்லவை. கசியும் எண்ணெயும் அவற்றுடன் சேர்ந்து பயணிக்கும். முதலில் லூசியானா, அலபாமா, மிசிசிபி மற்றும் புளோரிடா ஆகிய இடங்களின் கடற் பிராந்தியங்கள், கடற்கரைகள், சதுப்பு நிலங்களை அடையும் எண்ணெய்க் கசிவு, பின்னர் ஏனைய பிராந்தியங்களையும் சென்றடையும் என எதிர்வுகூறப்படுகிறது. தற்போது லூசியானாவின் சந்தெலூர் தீவுகளை எண்ணெய்ப் படை அடைந்துள்ளது என சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அண்மையில் தெரிவித்திருந்தனர்.

ஆழ்கடலில், ஏறத்தாள 10 மைல்களுக்கு அப்பால் பரவியிருக்கும் இந்த எண்ணெய் கசிவு கட்டுப்படுத்தப்படாவிடில் சமுத்திர நீரோட்டங்கள் உள்ள பகுதியை வெகு விரைவில் அடைந்துவிடும் எனவும் எதிர்வுகூறப்படுகிறது.

ஏறத்தாள 4000 மைல் ஆழத்தில் உள்ள எண்ணெய்க் கிணற்றிலே ஏற்பட்டுள்ள எண்ணெய்க் கசிவைக் கட்டுப்படுத்துவதொன்றும் இலகுவான காரியமல்ல. தர்க்க ரீதியிலான கொள்கைகளின் அடிப்படையில் பல வழிமுறைகள் கையாளப்பட்டு வருகின்றன. ஆனால் இதுவரை அவை எவையுமே பூரண வெற்றியை அளிக்கவில்லை. பலவித புதிய வழிமுறைகளைப் பாவித்துக் கட்டுப்படுத்தும் சாத்தியக் கூறுகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டு வருகின்றன.

இரண்டு இடங்களில் எண்ணெய்க் கசிவைக் கொண்டிருக்கும் இந்த எண்ணெய்க் கிணற்றில், பெரிய கசிவு உள்ள பகுதியில் சிறிய விட்டமுடைய குழாயை உட்புகுத்தி, கசியும் எண்ணெயை அகற்றும் பணியை மேற்கொண்டனர். வினைத்திறன் மிக்கதாக இது அமையவில்லை. ஏனெனில், கசியும் எண்ணெயில் ஐந்திலொரு பகுதியை மட்டுமே வெளியேற்ற முடிந்தது.

அதேபோல, பாரம்பரிய எண்ணெய்க் கசிவுப் பாதுகாப்பு முறையான பாதுகாப்புக் கிணறுகள் அமைத்தலும் நடைபெற்று வருகின்றது. ஆனால் இதற்குச் சில மாதங்கள் எடுக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.மசகு எண்ணெயைப் பிரிகையடையச் செய்வதற்காக வளைகுடாவிலே ஏறத்தாழ 700,000 கலன்கள் இரசாயனப் பதார்த்தம் விசிறப்பட்டுள்ளது. அதேபோல் கசிவடையும் எண்ணெய்க் கிணற்றினுள்ளும் நேரடியாகச் சேர்க்கப்பட்டுள்ளது. ஐக்கிய அமெரிக்காவிலே எண்ணெயைப் பிரிகையடையச் செய்வதற்காக மிகவும் அதிகளவில் இரசாயனப் பதார்த்தம் பாவிக்கப் பட்ட சம்பவமாக இந்த மெக்சிக்கோ வளைகுடா எண்ணெய் கசிவு கருதப்படுகிறது. அத்துடன் வளைகுடாவின் ஏனைய எண்ணெய் அகழ்வுகளும் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளன.
இப்போது பாவிக்கும் இரசாயனப் பதார்த்தத்தைவிட நச்சுத் தன்மை குறைவாக இருக்கும் இரசாயனப் பதார்த்தத்தைப் பாவிக்குமாறு பெயொன்ட் பெற்றோலியக் கம்பனியை வொஷிங்டனின் சூழல் பாதுகாப்பு எச்சரித்துள்ளது.

இந்த இரசாயனப் பதார்த்தங்கள் நீர் மேற்பரப்புகளில் படிந்துள்ள எண்ணெய்ப் படைகளை அகற்றுவதன் மூலம் கடல் வாழ் உயிரினங்களைப் பாதுகாப்பதுடன் எண்ணெய் கசிவு கரையை அடைந்து விடாமலும் தடுக்கின்றன. ஆனால் மெக்சிக்கோ வளைகுடாவின் எண்ணெய்க் கசிவைப் பொறுத்த வரையில் இந்த முறைமையாலும் எண்ணெய்க் கசிவைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை.

மெல்ல மெல்லக் கரையை அணுகிய மசகெண்ணைய்ப் படிவு கடற்கரைகளையும் கடற்கரைகளையொட்டிய சதுப்பு நிலங்களையும் பாழ்படுத்தத் தொடங்கிவிட்டது.

எண்ணெயையும் நீரையும் பகுத்து எண்ணெயை மட்டும் உறிஞ்சும் வகையிலான பஞ்சு பொருளொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இது களியாலும் பிளாஸ்டிக்காலும் தயாரிக்கப்பட்டது. இந்தப் பதார்த்தம் வளைகுடாவின் எண்ணெய்க் கசிவை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்குப் போதுமானது. ஆனால் எவ்வளவு தூரம் நடைமுறைச் சாத்தியமானதென்பது சந்தேகத்துக்குரிய விடயமே!

சில நுண்ணுயிர்கள், இயற்கையாகவே பெற்றோலியத்தைப் பிரிகையடையச் செய்பவை. மரபுரிமை ரீதியாக வினைத்திறன் மிக்கனவாக மாற்றப்பட்ட இத்தகைய நுண்ணுயிரிகளை உருவாக்குவதில் பல நிறுவனங்கள் போட்டி போடுகின்றன. ஆனால் இத்தகைய உயிரினங்களை சமுத்திரங்களில் பரவ விடும் முறையின் வினைத்திறனும் இதுவரை அறியப்படவில்லை. ஏனெனில் அவை ஆய்வு கூடத்திலே நல்ல ஆரோக்கிய மான, நிறைந்த போசனையுடைய சூழலிலே வளர்க்கப்பட்டவை. சமுத்திரச் சூழலின் உவர்த்தன்மையும் குறை போசனையும் அவற்றை இறக்கச்செய்து விடலாமென எதிர்வுகூறப்படுகிறது.

இரசாயனப் பதார்த்தங்களைச் சேர்த்து கசிவடையும் எண்ணெயை எரிக்கும் செயற்றிட்டம் 1970 களில் ஆரம்பிக்கப்பட்டது. நீர் மேற்பரப்பிலே சேரும் எண்ணெய் கசிவுப்படலம் ஒரு மி.மீ. முதல் 6 மி. மீ. வரை தடிப்பானதாகும். இம்முறைமை மூலம் நீர் மேற்பரப்பிலுள்ள இத்தகைய தடிப்பான எண்ணெய்ப் படையை வினைத்திறன் மிக்க முறையில் அகற்றமுடியுமென நம்பப்படுகிறது.
கசிந்து பெருக்கெடுக்கும்
மசகு எண்ணெய்


அலஸ்கா பகுதியில் 1989 ஆம் ஆண்டு ஒரு எண்ணெய்க் கசிவு ஏற்பட்டது. அங்கு கசிவடைந்த எண்ணெயை அகற்ற ஒருவகை நுண்ணுயிர் பாவிக்கப்பட்டது. ஆனால் அந்த முயற்சி பூரண வெற்றியை அளிக்கவில்லை. ஏனெனில் அலஸ்கா எண்ணெய்க் கசிவு ஏற்பட்ட பகுதி இருண்ட குளிர் வலயமாகும். ஆனால் மெக்சிக்கோ வளைகுடா அத்தகையதல்ல. அது உஷ்ணமான, சூரிய ஒளி நன்கு ஊடுருவக் கூடிய பகுதியாகும். இச்சூழல் அலஸ்காவின் சூழலுடன் ஒப்பிடுகையில், நுண்ணுயிர்கள் வளர்வதற்குச் சாதகமானது. ஆனால் எண்ணெய்க் கசிவு சமுத்திரப் படிவுகளுடன் கலந்துவிடுவதால் அதனை இம்முறையால் நீக்குவது சற்றுக் கடினமானது. ஏனெனில் சமுத்திரப் படிவுகளில் ஒட்சிசன் செறிவு மிகவும் குறைவாகக் காணப்படும். இந்த வகை நுண்ணுயிர்களோ? தாம் நன்கு சுவாசிக்கக் கூடிய சூழல் காணப்பட்டால் மட்டுமே தொழிற்படு நிலையில் இருக்கும். ஆகையால் சமுத்திரப் படிவுகளில் அவை மெதுவாகவே தொழிற்படும்.

கடந்த காலங்களில் வெவ்வேறு பகுதிகளில் ஏற்பட்ட சிறியளவிலான எண்ணெய்க் கசிவுகள், சமுத்திரப் படிவுகளில் 20 அடி ஆழத்திற்கு இன்னும் காணப்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த இயந்திர மேடையில் ஏற்பட்ட கசிவை, புனல் போன்ற அமைப்பு மூலமும் மெதேன் ஐதரைட் பளிங்குகள் மூலமும் கப்பல் ஒன்றிற்குள் சேகரிக்கும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அதுவும் தோல்வியிலேயே முடிந்தது.

இந்த முயற்சிகள் எவையுமே சாதாரணமானவையல்ல. அவற்றை மேற்கொள் வதற்கான செலவும் மிக அதிகமாகும். ஆரம்பத்தில் அமெரிக்க அரசினால் அச்செலவு பொறுப்பெடுக்கப்பட்டிருந்தது. ‘பெயொன்ட் பெட்ரோலியம்’ நிறுவனத்தால் தற்போது பொறுப்பெடுக்கப்பட்டுள்ளது.

எண்ணெய்க் கசிவினால் ஏற்பட்டுள்ள நட்டமே பல பில்லியன் டொலர்களைத் தாண்டியிருக்கும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்த ஏற்படும் செலவுகளும் அதனால் சூழலுக்கு ஏற்படும் பிரச்சினைகளும் கணக்கிடப்பட்டால் இன்னும் பல பில்லியன் டொலர்களாகும் எனவும் தெரிவிக்கப்படுகிறது-

மிகவேகமாகப் பரவி வரும் எண்ணெய்ப் படலத்தால் கடல் வாழ் உயிரினங்கள் பல அழிவடையும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளன. அதுமட்டுமன்றி கடற்கரையோரங்களும் அவற்றையண்டிய சதுப்பு நிலங்களும் பாதிப்பை எதிர்நோக்குகின்றன. சதுப்பு நிலங்களுக்குள் எண்ணெய்க் கசிவு சென்று படியத் தொடங்கினால் மீட்சியே இல்லை என்பது ஆய்வாளர்களின் கருத்தாகும்.

பல கடல்வாழ் உரியங்களின் உறைவிடமாகவிருக்கும் சதுப்பு நிலங்கள் உயிர்களேயற்ற வலயங்களாக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை எனக் கூறப்படுகிறது.

கடல்வாழ் உயிரினங்களான நண்டுகள் முதல் திமிங்கிலங்கள் வரை அச்சுறுத்தலுக் குள்ளாகியுள்ளன. இந்த நீர்ப்பரப்பில் மீன்பிடி தடைசெய்யப்பட்டுள்ளது- உயிரினங்களும் மரங்கள் மற்றும் புற்களும் அழியத் தொடங்க, உயிர்ச்சமநிலை குலைக்கப்படும். அதனால் இயற்கை அனர்த்தங்கள் நிகழ்வதற்கான சாத்தியக் கூறுகளும் அதிகரிக்கின்றது. நிலைமை மேலும் மோசமடைந்தால் கடல் மட்டம் உயரலாம் எனவும் தீவிர புயல்கள் ஏற்படலாமெனவும் ஊகங்கள் தெரிவிக்கப்படுகின்றன.

உலகிலே வர்த்தக ரீதியாகப் பிடிக்கப்படும் மீன்களின் 1/3 பகுதி லூசியானாவின் கடற் பகுதியிலேயே பிடிக்கப்படுகிறது. அத்துடன் இந்தக் கடற் பிராந்தியத்திலே தான் உலகிலேயே அதிகளவான மட்டி உற்பத்தியாகிறது. அத்துடன் மெக்சிக்கோ வளை குடாவும் அதனை ஒட்டிய பகுதிகளும் சுற்றுலாத்துறைக்கும் எண்ணெய் அகழ்வுக்கும் பிரசித்தமானவை.

ஆனால் இன்று யாவுமே ஸ்தம்பித்துப் போயுள்ளன. சுற்றுலாத்துறை, மற்றும் பொருளாதாரத்தில் ஏற்பட்டு வரும் பின்னடைவுகளால் ஏற்படப் போகும் விளைவுகளும் சூழல் தொகுதிகளின் சமநிலைக் குலைவால் ஏற்படப் போகும் விளைவுகளும் கணக்கிடப்பட முடியாதனவாக மாறிவிட்டன

ஆழ்கடல் எண்ணெய்க் கிணறுகளில் கசிவு ஏற்படுவதற்கு மனிதர்களின் கவனயீனமே காரணம்.

இயந்திரங்களில் உருவாகும் சிறிய கோளாறுகளும், விஞ்ஞானிகள் மற்றும் பெயொன்ட் பெட்ரோலியம் நிறுவன உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களின் கவனக் குறைவுமே மெக்சிக்கோ வளைகுடாவின் எண்ணெய்க் கசிவுக்குக் காரணமாகியுள்ளது. கடந்த காலங்களிலும் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டுள்ள போதிலும் இந்தச் சம்பவமே பேரழிவை ஏற்படுத்தும் பாரதூரமான எண்ணெய்க் கசிவாகக் கருதப்படுகிறது.

எண்ணெய் கசிவுச் சம்பவங்களைப் பொறுத்தவரையில், உருவாக்கப்பட்ட விளைவுகளிலிருந்து சூழலைப் பாதுகாப்பதை விட எண்ணெய்க் கசிவைக் கட்டுப்படுத் துவதே சிறந்த பொறிமுறையாகக் கருதப்படுகிறது. மெக்சிக்கோ வளைகுடா, எண்ணெய்க் கசிவைப் பொறுத்தவரையிலேயே, என்ன நடக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

நாம் இலங்கையில் வசிப்பதால் அது எமக்குத் தேவையற்றவிடயம் என அலட்சியப்படுத்தவும் முடியாது. ஏனெனில், மெக்சிக்கோ வளைகுடா எண்ணெய்க் கசிவு ஏற்படுத்தப் போகும் உலகளாவிய மாற்றங்களில் நாங்களும் பாதிக்கப்படப் போவது உறுதி!

Friday, May 28, 2010

கறுப்புப் பெட்டிக்குள் என்ன இருக்கும்?

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் மங்களூர் விமான நிலையத்துக்கு அருகிலே வெடித்துச் சிதறிய ‘எயார் இந்தியா எக்ஸ்பிரஸ்’ விமானம் பற்றிய செய்திகளை தினம் தினம் அறிந்து வருகிறோம். ஆரம்பத்தில் ‘கறுப்புப்பெட்டியைத் தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன’ என செய்திகள் வந்தன. பின்னர் ‘விமானத்தின் கறுப்புப்பெட்டி கண்டுபிடிப்பு’ என செய்திகள் வந்தன.

கறுப்புப்பெட்டி உண்மையில் கறுப்பாகவா இருக்கும்? என்ற கேள்வியே அந்தச் செய்திகளைக் கேட்பவர்கள் மற்றும் பார்ப்பவர்கள் மனதிலே முதலில் தோன்றுவதாக இருக்கும். அடுத்ததாக எழும் கேள்வி கறுப்புப்பெட்டிக்குள் என்ன இருக்கும்? என்பதாகும். இங்கு தான் இன்று பலருடைய நாவும் உச்சரித்துக் கொண்டிருக்கும் ‘கறுப்புப்பெட்டி’ தொடர்பான தெளிவுபடுத்தல்களும் அவசியமாகின்றன.

விஞ்ஞானத்தையும் பொறியியலையும் பொறுத்தவரையிலே உள்Zடும் வெளியீடும் மட்டும் வெளியில் தெரியக்கூடிய அல்லது அறியக் கூடியவாறும் உள்ளே நிகழும் செயற்பாடுகள் வெளியே அறியப்படாத வகையிலும் அமைக்கப்பட்ட கருவிகளைக் ‘கறுப்புப்பெட்டிகள்’ என்பர். அத்தகைய முறைமைகள் ‘கறுப்புப் பெட்டி முறைமைகள்’ எனப்படுகின்றன. ‘கறுப்புப்பெட்டி’ என்ற கருப்பொருளுக்கு நேரெதிரான கருப்பொருளை ‘வெள்ளைப்பெட்டி’ என்பர்.

இத்தகைய ‘வெள்ளைப்பெட்டி’ என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்ட கருவிகளிலோ முறைமைகளிலோ உள்Zடுகள் மற்றும் வெளியீடுகளை மட்டுமன்றி உள்Zடு எங்கனம் வெளியீடாக மாற்றப்படுகிறது என்ற செயற்பாட்டையும் அறியமுடியும்.

திரான்சிஸ்டர் எனப்படும் மூவாயி, மனித மூளை போன்றனவெல்லாம் ‘கறுப்புப்பெட்டி’ என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டவை. திறந்த மூல மென்பொருட்கள் போன்றவை ‘வெள்ளைப்பெட்டி’ என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டவை.

விமானங்களின் கறுப்புப் பெட்டிகளும் ஏலவே குறிப்பிட்ட அந்த ‘கறுப்புப்பெட்டி’ என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டவை. ஆகாய விமானமொன்று விபத்துக்குள்ளான பின் விடை காணமுடியாத வினாக்கள் பல எழுவதென்பது வழக்கமாக நடைபெறும் விடயமே! அத்தகைய வினாக்களில் பலவற்றுக்கான விடைகள் இந்தக் கறுப்புப்பெட்டியில் காணப் படுகின்றன. அதனால் தான், விமானமொன்று விபத்துக்குள்ளா னதும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீட்புப் பணிகளுக்கு மத்தியிலும் கறுப்புப்பெட்டியைத் தேடும் பணியைத் தீவிரமாக மேற்கொள்வர்.

1953 ஆம் ஆண்டளவிலே பல ஜெட் விமானங்கள் விபத்துக் குள்ளாயின. விமானப்போக்கு வரத்தின் எதிர்காலமே கேள்விக் குறியாகியது. ஒருவருடத்தின் பின்னர் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த விமானவியல் விஞ்ஞானியாகிய கலாநிதி டேவிட் வொரன் என்பவர் விமான ஒலிப்பதி கருவியொன்றை முன்மொழிந்தார். தான் முன்மொழிந்த கருவையொட்டிய மாதிரியொன்றை 1958 ஆம் ஆண்டு தயாரித்தார்.

அதன் அளவானது, ஒரு வளர்ந்தவரின் கையை விடச் சற்றப் பெரியதாகும். விமானத்தில் இருக்கும் கருவிகள் சிலவற்றின் வாசிப்பையும் 4 மணித்தியாலத்திற்குரிய விமானிகளின் தொடர்பாடலையும் அது தன்னகத்தே பதிந்து வைக்கக்கூடியதாகவிருந்தது. ஆனால் விமானப்போக்குவரத்துறை அதிகாரிகள் முதலில் அந்தக் கருவியை நிராகரித்தனர். ஏனெனில் இக்கருவி தம்மை உளவு பார்ப்பதாக அமைந்திருப்பதால் விமானத்தில் அக்கருவியைப் பொருத்துவதற்கு ஆட்சேபனை தெரிவித்திருந்தனர்.

அதன் பின்னர் இந்தக் கருவியை எடுத்துக் கொண்டு லண்டன் மாநகரைச் சென்றடைந்த கலாநிதி வொரனுக்கு அங்கே பெரும் ஆதரவு கிடைத்தது. இக்கருவி தொடர்பாக பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஒலிபரப்பிய நிகழ்ச்சியைத் தொடர்ந்து இத்திட்டத்தை முன்னெடுக்க உற்பத்தியாளர்களும் முன்வந்தனர். 1960 ஆம் ஆண்டளவில் விமானங்களில் இக்கருவி பொருத்தப்பட வேண்டியது கட்டாயமாக்கப்பட்டது.

கணினியின் வருகை காந்தப்பதியிகளை வழக்கொழிந்து போகச்செய்தது போல புதிய விமானக் கறுப்புப்பெட்டிகளின் வருகையும், பழையனவற்றை வழக்கொழிந்து போகச் செய்தது.

தற்போது பாவனையிலிருக்கும் விமானக் கறுப்புப்பெட்டிகள் விமானங்களிலே விமானத்தரவுப்பதி கருவி, கொக்பிட் ஒலிப்பதி கருவி என இரண்டாகப் பொருத்தப்பட்டிருக்கும். இவை இரண்டுமே விமான விபத்துக்களின் பின்னணியை அறிவதற்குப் பயன்படும் மிக முக்கியமான கருவிகளாகும்.விமானங்களிலே உணரிகள் பொருத்தப்பட்டிருக்கும். அந்த உணரிகள் விமானம் தொடர்பான தரவுகளான ஆர்முடுகல் வளிவேகம், நிலத்திலிருந்தான உயரம், வெளி வெப்பநிலை, அமுக்கம், உள் வெப்பநிலை, இயந்திரத்தின் செயற்பாடு போன்ற பலவற்றைச் சேகரிகரிக்கும். முன்னைய காந்தவியல் பதிகருவிகளுடன் இணைக்கப்பட்ட உணரிகள் ஏறத்தாழ 100 பரமானங்களையே சேகரிக்கும் வல்லமை படைத்தவை. ஆனால் இன்று பாவனையிலிருப்பவையோ (பெரிய விமானங்களில்) ஏறத்தாழ 700 பரமானங்களைச் சேகரிக்கக் கூடியவை.

இவ்வாறு சேகரிக்கப்பட்ட தரவுகள் விமானத்தின் முன்பகுதியிலுள்ள பிளிதிஸி (பிlight - னீata aquisition unit) என்ற பகுதிக்கு அனுப்பப்படும். தரவுகளைப் பதியும் செயற்பாட்டின் இடைத்தரகர் போல பிளிதிஸி பகுதி செயற்படும் எனக் கூறலாம். இப்பகுதியே உணரிகளிடமிருந்து தரவுகளைப்பெற்று பின்னர் தகவல்களை கறுப்புப்பெட்டிகளுக்கு அனுப்பிவைக்கிறது.

விமானத்தின் இயந்திரத்திலிருந்தே விமானத்தில் பொருத்தப் பட்டுள்ள இரு கறுப்புப் பெட்டிகளும் இயங்குவதற்கான சக்தி பெறப்படுகிறது. அதாவது கறுப்புப் பெட்டிகளுடன் இரு மின்பிறப் பாக்கிகள் பொருத்தப் பட்டிருக்கும். மின்பிறப்பாக்கிகள் இயங்குவதற்குத்தேவையான சக்தி விமானத்தின் இயந்திரத்திலிருந்து பெறப்படுகிறது. இரண்டு கறுப்புப்பெட்டிகளுக்கும் ஒரு மின்பிறப்பாக்கியே சக்தியை வழங்கும். அது செயலிழக்கும் பட்சத்தில் மற்றையது சக்தியை வழங்கும்.

கொக்பிட் ஒலிக்கருவியானது விமானத்தில் பொருத்தப்பட்டுள்ள நுணுக்குப் பன்னிகள் உணரும் சத்தங்களைச் சேகரித்து இன்னொரு பகுதிக்கு அனுப்பும். அப்பகுதியில் சத்தங்கள் டிஜிட்டல் சமிக்ஞைகளாக மாற்றப்பட்டு சேமிக்கப்படும்.

விமானியின் செவிப்பன்னி, துணை விமானியின் செவிப்பன்னி, மூன்றாம் விமானப் பணியாளரின் செவிப்பன்னி, கொக்பிட்டின் நடுப்பகுதி ஆகியவற்றிலேயே நுணுக்குப் பன்னிகள் பொருத்தப்பட்டிருக்கும்.

இந்த ஒலிப்பதிகருவிகள் 2 மணித்தியாலத்துக்குரிய ஒலிச்சமிக்ஞைகளைச் சேமித்து வைக்கும் ஆற்றல் படைத்தவை. பழைய தரவுகளின் மேல் புதிய தரவுகள் பதியப்படுவதால் கடைசி 2 மணித்தியாலத்துக்குரிய தரவுகள் சேமிக்கப்பட்டிருக்கும்.

விமான விபத்துக்களுக்குரிய முக்கியமான ஊகங்களை இந்த ஒலிப்பதி கருவிகளே வெளிப்படுத்துகின்றன. கடைசி நேரத்தில் விமானியின் உரையாடல் உட்படப் பல விடயங்கள் இங்கே பதியப்பட்டிருக்கும்.

அதேபோல் விமானத்தின் தரவுப்பதி கருவியானது விமானத்தின் தொகுதிகள் தொடர்பான தரவுகளைப் பெற்றுக்கொள்ள உதவுகிறது. உணரிகள் கம்பி இணைப்பு மூலம் விமானத்தின் பல தொகுதிகளுக்கும் இணைக்கப்பட்டிருக்கும். அத்தொகுதிகளுக்கான ஆளி திறக்கப்படும் போதும் மூடப்படும் போதும் தரவுகள் உணரிகளால் சேகரிக்கப்படும்.இந்தத் தொழில்நுட்பத்தின் முன்னோடிகளாகவும் ரைட் சகோதரர்களே திகழ்கின்றார்கள். அவர்கள் விமானத்தின் சுழற்சி தொடர்பான தரவுகளைப் பதிவதற்குக் கருவியொன்றைப் பயன்படுத்தினார்கள். அக்கருவியிலே படிப்படியான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு தற்போதைய கருவி கண்டுபிடிக்கப்பட்டது.

இக்கருவியின் நினைவகப் பகுதி மூன்று படைகளைக் கொண்டது. அதாவது இக்கருவியிலுள்ள நினைவுப் பலகையானது மெல்லிய அலுமினியத்தால் சுற்றப்பட்டிருக்கும். பின்னர் 2.5 செ.மீ தடிப்பான உலர் சிலிக்கா பதார்த்தத்தினால் சுற்றப்பட்டிருக்கும் இது மிகவும் உயர்ந்த வெப்பநிலைகளிலும் பாதுகாப்புக்கவசமாகத் தொழிற்படும். இதனால் தான் விபத்தின் பின்னர் விமானப்பகுதிகள் பற்றி எரிந்தாலும் கறுப்புப்பெட்டி பாதுகாப்பாக இருக்கிறது. இந்த சிலிக்காக்கவசத்தை 0.5 செ.மீ. தடிப்புடைய கறையில் உருக்காலான ஓடு பாதுகாக்கும். சில சந்தர்ப்பங்களில் இவ்வோடு டைட்டானிய உலோகத்தினாலும் ஆக்கப்பட்டிருக்கும்.

பயங்கரமான பல விமான விபத்துக்களில், பாதுகாப்பாக இருப்பன இந்தக் கறுப்புப்பெட்டிகளிலுள்ள நினைவகப் பகுதிகள் மட்டுமே! இந்த நினைவகப் பகுதிகள் ஒரு உருளையினுள் வைக்கப்பட்டிருக்கும். இதனால் மிகையான வெப்பம், கொடூரமான மோதல்கள், பல தொன்கள் அமுக்கம் போன்ற எந்தக் காரணிகளாலும் அவை பாதிக்கப்படாமல் இருக்கும்.

கறுப்புப்பெட்டிகள் இரண்டையும் விமானத்துக்குள் பொருத்த முதல், அவற்றைப் பல பரிசோதனைகளுக்கு உட்படுத்தி அவற்றின் திறனை ஆய்வு செய்வார்கள். ஆய்வு முடிவுகள் திருப்திகரமானதாக அமைந்த கறுப்புப்பெட்டிகள் மட்டுமே விற்பனை செய்யப்படும். அத்துடன் இவை முகவர்கள் மூலம் விற்பனை செய்யப்படுவதில்லை. உற்பத்தியாளர்களே நேரடியாக அவற்றை விற்பனை செய்வதுடன் அவர்களே விமானத்தில் பொருத்தியும் விடுகின்றனர்.

பொதுவாக விமானத்தின் பின்பகுதியான வால் பகுதியிலேயே கறுப்புப்பெட்டிகள் பொருத்தப்படுகின்றன. ஏனெனில் அப்பகுதியே விபத்தொன்றின்போது கடைசியாகவும் குறைவாகவும் பாதிக்கப்படும் பகுதியாகும்.

இப்பெட்டிகள் ‘கறுப்புப்பெட்டிகள்’ என அழைக்கப்பட்டாலும் உண்மையில் அவை பிரகாசமான செம்மஞ்சள் நிறப்பெட்டிகளாகும். அத்துடன் வெளிப்பகுதியில் “FLIGHTER RECORDER DO NOT OPEN” என்ற வாசகம் பெரிய எழுத்துக்களில் பொறிக்கப்பட்டிருக்கும்.

இவற்றின் நிறம் தான், விபத்தொன்றின் போது இவற்றைக் கண்டுபிடிக்க உதவுகிறது. அத்துடன் இன்னொரு துணைக்கருவியும் கறுப்புப்பெட்டியுடன் இணைக்கப்பட்டிருக்கும். அது உருளை வடிவினதாக இருக்கும். நீர்ப்பரப்பிலே விமானமொன்று விபத்துக்குள்ளானால், இந்த உருளையானது ஒலித்துடிப் பொன்றை வெளிப்படுத்தும்.

அந்த ஒலி மனிதனின் கேள்தகவு எல்லைக்குட்படாததால் மனிதக் காதுகளுக்குக் கேட்காது. இந்த உருளையிலே இணைக்கப்பட்டுள்ள உணரியிலே நீர்பட்டதும் அது ஒலிச் சமிக்ஞையை வெளிவிடத்தொடங்கும். இந்த உருளையிலுள்ள மின்கலம் சக்திவாய்ந்தது. ஆகையால் தொடர்ந்து ஆறு வருடங்களுக்கு உருளை தொழிற்படும் நிலையிலேயே இருக்கும். அத்துடன் இது செக்கனுக்கு ஒரு துடிப்பென, 30 நாளைகளுக்கு 37.5 கிலோ ஹேட்ஸ் துடிப்பை 14,000 அடி ஆழத்துக்கு வெளிவிடும் வல்லமை வாய்ந்தாகும்.

விமான விபத்தொன்றின் போது கண்டுபிடிக்கப்படும் கறுப்புப்பெட்டிகள் மிகவும் பாதுகாப்பான முறையிலே ஆய்வு கூடத்துக்கும் கொண்டு செல்லப்பட வேண்டும். இதனால் கறுப்புப்பெட்டிகளுக்கு ஏற்படும் மேலதிக பாதிப்புகள் தவிர்க்கப்படும். எத்தகைய சூழலில் கறுப்புப்பெட்டி கண்டுபிடிக்கப்பட்டதோ, அது ஆய்வுகூடத்துக்குக் கொண்டு செல்லப்படும் வரை அதே சூழலிலேயே பேணப்பட வேண்டும்.உதாரணமாக நீருக்குள்ளிருந்து எடுக்கப்பட்ட கறுப்புப்பெட்டியானது நீருக்குள் வைத்துப் பேணப்பட்ட படியே ஆய்வுகூடத்துக்குக் கொண்டு செல்லப்படும்.

ஆய்வுகூடத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட பின் அவற்றில் பதியப்பட்டிருந்த தரவுகள் மீளப் பெறப்படும். இச் செயற்பாடொன்றும் இலகுவானதல்ல. சிலவேளைகளில் இதற்குப் பல மாதங்களும் எடுக்கலாம்.

கறுப்புப்பெட்டிகளின் வெளிப்பகுதிகள் சிதையாவண்ணம் இருந்தால் அவை கணினியுடன் நேரடியாக இணைக்கப்பட்டு பதியப்பட்ட தகவல்கள் பெறப்படும். மாறாக வெளிப்பகுதிகள் சிதைந்திருந்தால் அவற்றின் நினைவுப்பலகைகள் கழற்றப்பட்டு புதிய கறுப்புப்பெட்டிகளில் பொருத்தப்பட்டு கணினியுடன் இணைக்கப்படும்.

பின்னர் அதில் பதியப்பட்டுள்ள தரவுகள் தரவிறக்கப்படும். இவ்வாறு பெறப்படும் தரவுகளே விமான விபத்துக்கள் தொடர்பான விசாரணைகளுக்குப் பயன்படும் முக்கிய ஆதாரங்களாகும்.

இதுவரைகாலமும் விமானங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்டுவந்த இந்த கறுப்புப்பெட்டி பதிகருவித் தொழில்நுட்பம் தற்போது ஏனைய வாகனங்களிலும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

கார் போன்ற சில வாகனங்களில் தற்போது பொருத்தப்படும் இத்தகைய கறுப்புப்பெட்டிகள், விபத்து ஏற்படும் பட்சத்தில் விபத்துக்கான காரணத்தைக் கண்டறியப் பெரிதும் உதவுகின்றன.

காலப்போக்கில் இத்தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட உணர் கருவிகளை மனிதர்கள் தம்முடன் எடுத்துச் சென்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

Monday, May 24, 2010

உயிர்கள் வாழா சூனியமாகுமா மெக்சிகோ வளைகுடா பிரதேசம்?
சூழல் தொகுதியொன்று நிலைத்திருக்க வேண்டுமாயின், உயிர்ப்பல்வகைமை பாதிக்கப்படாமல், இழக்கப்படாமல் இருக்க வேண்டுமென நாம் ஏற்கனவே அறிந்திருக்கிறோம்.

உயிர்ப்பல்வகைமையின் அழிவுக்கான அடிப்படைக் காரணி மனிதனாவான். மனிதனின் இன்றைய போக்கு, பாரிய அழிவுகள் ஏற்பட்டுவிடுமோ என அஞ்சுமளவிற்கு வளர்ச்சியடைந்து செல்கிறது.

இந்த நூற்றாண்டிலே உயிர்ப்பல்வகைமை அழிவடையும் விதமானது அதன் அடி வீதத்தின் 1000 மடங்காகும். இதேபோக்கு தொடர்ந்தால் அடுத்த நூற்றாண்டில் அது 10,000 மடங்காக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகின் உயிர்ப்பல்வகைமையில் 10% - 30% மான இனங்கள் மனித நடவடிக்கைகளால் அழிவடையும் அச்சுறுத்தலுக்குள்ளாகியிருப்பதாக 2005 இல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்று தெரிவிக்கிறது.

இயற்கையைப் பாதுகாப்பதற்கான சர்வதேச ஒன்றியம் வெளியிட்ட அறிக்கை ஒன்றிலே உலகிலுள்ள பின்வரும் இனங்கள் எவ்வாறான அச்சுறுத்தலை எதிர்நோக்குகின்றன எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி,

* எட்டிலொரு பறவை

* நான்கிலொரு முலையூட்டி

* நான்கிலொரு மரம்

* மூன்றிலொரு ஈரூடகவாழி

* ஏழில் ஆறு கடலாமைகள்

அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளன அத்துடன்,

* 75% மான மரபு ரீதியான விவசாயப் பயிர்கள்

* 75% மான மீன் வளம்

ஆகியன அழிந்து போய்விட்டன.

அவை மட்டுமன்றி,

* முருகைக் கற்பாறைகளை உருவாக்கும் கடல் வாழ் உயிரினங்களில் மூன்றிலொரு உயிரினம் அச்சுறுத்தலை எதிர்நோக்குகிறது.

* ஒரு கால்பந்து மைதானத்தின் பரப்பளவிலான மழைக்காடு ஒவ்வொரு வருடமும் அழிந்து வருகின்றது.

எனவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது. அதிகரிக்கும் தேவைகளும் அவற்றை ஈடுசெய்யும் வசதி வாய்ப்புக்களும் இத்தகையதோர் விளைவைத்தானா எதிர்பார்த்தன? என்ற கேள்வி பலரது மனதில் எழத் தொடங்கிவிட்டது.

உயிர்ப்பல்வகைமை அழிவதானது மெதுவாக நடைபெற்றால், சூழல் தொகுதிகள் புதிய பொறிமுறைகளை உருவாக்கி, தமக்கிடையிலான சமநிலையைப் பேணிக்கொள்ளும் துரிதமாக அழிவடையும் வீதத்தின் கழிவு என்ன என்பதை எவராலும் கூறமுடியாது.

ஊகங்களை மட்டுமே தெரிவிக்க முடியும். உயிர்ப்பல்வகைமையின் இழப்பால் பாரியளவிலான விவசாயப் பிரச்சினைகள் உருவாகலாமென எதிர்பார்க்கப்படுகிறது. பலநூறு மில்லியன் மக்கள் பட்டினியால் அவதிப்படத் தலைப்படுவர். இந்த ஊகங்கள் பூகோளம் வெப்ப மயமாதலைக் கருத்தில் கொள்ளவில்லை என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.

வர்த்தகமயமாக்கப்பட்ட பல மீனினங்கள் அழிந்து போவதற்கு மீன்பிடித் தொழில் காரணமாகிவிட்டது. மிகை மீன்பிடியைத் தடுப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் எவையுமே வெற்றியளிக்கவில்லை.

கடந்த 50 வருடங்களுள் சமுத்திரங்களில் உள்ள பெரிய மீனினங்களில் 90 சதவீதமானவை மறைந்துவிட்டன என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இன்னும் 20 வருடங்களுக்குள் அவை முற்றாக அழிந்துவிடுமென எதிர்வுகூறப்படுகிறது.

பவளப் பாறைகள் தோன்றி நிலைக்க 1000 வருடங்களுக்கு மேல் எடுக்கும். அவை சில தசாப்தங்களுக்குள்ளேயே அழிக்கப்பட்டதாலும் வாழிடம் இழந்து மீனினங்கள் அழிந்து போகின்றன.

ஈரூடக வாழிகள், காட்டி உயிரினங்களாகக் கருதப்படுபவையாகும். உயிர்ப்பல்வகைமையின் ஆரோக்கியத்தை இந்த ஈரூடக வாழிகளின் ஆரோக்கியத்தை வைத்து மதிப்பிடமுடியும். ஆனால் துரதிஷ்டவசமாக இன்று இந்த ஈரூடக வாழிகளும் வெகுவாக அருகிவரும் உயிரினங்களாக மாறிவருகின்றன. அதனை உயிர்ப்பல்வகைமையின் எதிர்காலம் தொடர்பாக எச்சரிக்கும் ஓர் செயற்பாடாகவே கருதமுடியும்.

அண்மையில் இரு முக்கியமான சம்பவங்கள் இடம்பெற்றன. முதலாவது மெக்சிக்கோ வளைகுடாவில் கடலுக்கடியில் ஏற்பட்ட மசகு எண்ணைக் கசிவாகும். மற்றையது ஐஸ்லாந்தில் இடம்பெற்ற எரிமலை வெடிப்பாகும்.

மெக்சிக்கோ வளைகுடாவில் ஏற்பட்ட எண்ணெய்க் கசிவு வடக்கு நோக்கி நகர்ந்து வருகிறது. அதனை இன்னும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை. அதனால் பல உயிரினங்கள் பாதிப்புக்குள்ளாகியிருக்கின்றன.

அதேபோல ஐஸ்லாந்தின் எரிமலை வெடிப்பால், கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இவ்விரு உதாரணங்களும் நடைமுறையில் இயற்கையாலோ அல்லது மனிதனாலோ மனிதன் தவிர்ந்த ஏனைய உயிரினங்கள் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன என்பதற்குச் சிறந்த உதாரணங்களாகும். தன்னைப் பற்றி மட்டுமே சிந்திக்கப் பழகிய மனிதனுக்கு இவை தெரிந்திருக்க நியாயமில்லையோ என்றே எண்ணத் தோன்றுகிறது.

Thursday, May 20, 2010

ஈஸ்டர் தீவு குடிகள் வேருடன் அழிந்த கதை
2010ம் ஆண்டு, உயிர்ப் பல்வகைமைக்கான ஆண்டாகப் பிரகடனப்படுத்தப்பட்ட செய்தியைக்கூட எம்மில் பலர் அறிந்திருக்கமாட்டோம். அதேபோல வருடாந்தம் மே மாதம் 22ஆம் திகதி உயிர்ப்பல்வகைமை தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

உயிர்ப் பல்வகைமையும் ஆரோக்கியமான சூழல் தொகுதிகளும் மிகவும் அத்தியாவசியமானவை. அவையின்றிச் சிறந்ததோர் எதிர்காலம் அமையாது. இந்த எண்ணம் சுயநலமானதுதான். ஆனால் மறுக்கப்பட முடியாதது. உயிர்ப்பல்வகைமை எனப்படுவது நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்ற பஞ்ச பூதங்களையும் எமக்குத் தருவதாகும்.

மனிதனால் ஆக்கப்பட்டதாகவோ இல்லை காடுகளாகவோ இருக்கின்ற போதிலும், பூமியும் வளமான மண்ணுமே, உணவு உற்பத்திக்கான அடிப்படையாகும். நீரின்றி உலகு அமையாது. நீர் தான் உயிரின் வாழ்வு எனக் கூறுமளவிற்கு உயிரின் நிலைப்பு நீரின்றி அமையாது. வளி தான் புவிக்கோளத்திலுள்ள வாயுக்களுக்கிடையிலான சமநிலையைப் பேணி, தான் உணவோடும் நீரோடும் இணைவதன் மூலம் உயிர்களை வாழவைக்கிறது. இயற்கை மனிதனுக்குத் தரும் சக்தியின் அடிப்படை வடிவம் நெருப்பாகும். சுவட்டு எரிபொருளாக, உயிர்த்திணிவாக, இன்னும் பல மீள உருவாக்கப்படக்கூடிய சக்தி வளங்களாக இயற்கை நெருப்பை வழங்குகிறது.

என்று மனிதன் கற்களை உரோஞ்சி நெருப்பைக் கண்டுபிடித்தானோ, அன்றே இயற்கையின் அழிவுப் பாதைக்கான வாயிலைத் திறந்துவிட்டான் என்றே கூறமுடியும்.

இந்த நிலமும் நீரும் வளியும் தீயும் உயிர்ப்பல்வகைமை எமக்கு வழங்கும் சேவைகளை எடுத்தியம்புகின்றன. உயிர்ப்பல்வகைமையை இழத்தலானது இந்தச் சேவைகளை இழத்தலையே குறிக்கிறது. சேவைகளை இழப்பதால் ஏற்படும் பொருளாதர ரீதியிலான பின்னடைவு மதிப்பிடப்பட முடியாதது. ஐரோப்பிய ஆணைக் குழுவும் ஜேர்மனிய அரசும் இணைந்து உயிர்ப்பல்வகைமையின் அழிவு தொடர்பான ஆய்வை மேற்கொண்டிருந்தன.

அந்த ஆய்வின் முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன. அவற்றின்படி உயிர்ப் பல்வகைமையின் இழப்பானது தொடர்ந்து கணக்கெடுக்கப்படாது விடப்பட்டால், 2050 ஆம் ஆண்டளவில் ஏற்படும் பொருளாதார வீழ்ச்சியானது, உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 7 சதவீதமாகவிருக்குமென கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால் ஆரோக்கியமான சூழல் தொகுதியோ உயிர்ப்பல்வகைமையோ இல்லாவிடில் நீண்டகால நோக்கில், பொருளாதாரம் நிலைகுலைவது உறுதியாகிவிடும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

உயிர்ப்பல்வகைமையானது பொருளாதார ரீதியாக மட்டுமன்றி ஆன்மீக ரீதியாகவும் பெறுமதி வாய்ந்தது. எமது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திசெய்வதால் மட்டுமே உளத் திருப்தி ஏற்பட்டுவிடாது. அதற்கு ஆன்மீகத் தேவைகளும் பூர்த்தி செய்யப்பட வேண்டும். இங்குதான் உயிர்ப்பல்வகைமை அவசியமாகிறது- எம்மைச் சூழ்ந்திருக்கும் சூழலின் அழகும் அதனால் ஏற்படும் மகிழ்வும் உளத்திருப்திக்குக் காரணமாய் அமைகின்றன. அந்த அழகிய சூழலுக்கான மூலமாக உயிர்ப்பல்வகைமை காணப்படுகிறது. முன்னைய காலங்களில் மனிதனுக்கும் சூழலுக்குமிடையே இத்தகைய இறுக்கமான பிணைப்பொன்று காணப்பட்டமையை எமது கலை, கலாசார, சமயப் பாரம்பரியங்கள் இன்றும் பறைசாற்றி நிற்கின்றன.ஆனால் நாம் உயிர்ப்பல்வகையைப் பேணமுயலாது தொடர்ந்தும் அழிய விட்டால் முழு உலகுமே அழிந்து போகும் நிலைக்குத் தள்ளப்படுமென்பது வெளிப்படையான உண்மையாகும்.

இந்த உண்மையை விளக்கும் சிறந்ததோர் உதாரணமாகவே ஈஸ்டர் தீவு தெரிகிறது. எம்மொவ்வொருவருக்கும் ஈஸ்டர் தீவு ஒரு பெரிய பாடத்தைக் கற்றுத் தந்திருக்கிறது.

ஈஸ்டர் தீவென்பது, சிலித்தீவுக்கு அண்மையில் உள்ள முக்கோண வடிவிலான சிறிய தீவாகும். 1722 ஆம் ஆண்டு டச்சுப் பயணியான ஜேக்கப் ரகவீனென்பவர் முதன் முதல் இத்தீவிலே வந்திறங்கினார். அவர் கிறிஸ்து உயிர்த்த ஞாயிறாகிய ஈஸ்டர் தினத்தன்று இத்தீவிலே வந்திறங்கியமையால் ‘ஈஸ்டர் தீவு’ எனப் பெயரிட்டார்.

ஒரு காலத்திலே இந்தத் தீவு அடர்ந்து காடுகளைக் கொண்டிருந்தது. அங்கே வசித்து வந்தவர்கள் மிகவும் முன்னேற்றமடைந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். ஆனால் அற்பக் காரணங்களுக்காக காடுகளை அழிக்கத் தொடங்கினர். காடுகள் அழிக்கப்பட, இத்தீவும் பாலைவனமாக மாறியது. பறவைகள், மிருகங்கள், பூச்சி, புழுக்கள், தாவரங்களென ஏராளமான உயிரினங்கள் அழிந்தன.

இத்தீவில் நாகரிகம் உச்சமாக இருந்த கால கட்டத்திலே தீவு வாசிகள் பிரமாண்டமான கற்சிலைகளை நிறுவினர். மரங்களை அழித்துப் பெறப்பட்ட மரக்கட்டைகள் மூலம் சிலைகளைத் தூக்கி நிறுத்தினர். விளைவாக மரங்கள் அழிக்கப்பட்டன. அந்தக் கற்சிலைகள் இன்றும் காணப்படுகின்றன. இன்று இத்தீவு முற்றிலும் மனிதனால் அழிக்கப்பட்ட தீவு என எமக்கெல்லாம் சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது-

மேற்கு ஐரோப்பாவிலே உரோம சாம்ராஜ்யம் வீழ்ச்சியடைந்த கி. பி. 5ஆம் நூற்றாண்டளவில் பொலினீசியர்கள் தென்கிழக்காசியாவிலிருந்து வந்து, இத்தீவிலே குடியேறினர். பொலினீசியர்களால் முதன் முதலிலே இந்த ஈஸ்டர் தீவு கண்டுபிடிக்கப்பட்ட போது அது மிகவும் குறைந்தளவிலான வளங்களையுடைய சிறிய உலகமாகவே இருந்தது. ஆனால் அழிவடைந்த 3 எரிமலைகளைக் கொண்டிருந்தது. வெப்பநிலையும் ஈரப்பதனும் மிக உயர்வாக இருந்தன. போதியளவு மண் காணப்பட்டபோதும் நீரை ஊடுபுகவிடும் தன்மை அந்த மண்ணிலே குறைவாகக் காணப்பட்டது. வருடம் முழுவதும் நீரிருக்கக் கூடிய நீரோடைகள் எவையுமே அங்கு காணப்படவில்லை. அழிவடைந்த எரிமலைகளுக்குள் காணப்படும் ஏரிகளுக்குள் மட்டுமே நன்னீர் காணப்பட்டது. இத்தகையதோடு அசாதாரண சூழ்நிலை காரணமாக, மிகவும் குறைந்தளவிலான தாவர, விலங்கினங்களே காணப்பட்டன.

ஏறத்தாழ 30 வகை சுதேச தாவரங்களும் சில பூச்சிகளும் இரண்டு வகைப் பல்லிகளும் மட்டுமே காணப்பட்டன. முலையூட்டிகள் எவையுமே காணப்படவில்லை. தீவைச் சுற்றியுள்ள நீர்ப்பரப்பிலே, மிகவும் குறைந்தளவிலான மீன்களே காணப்பட்டன.

பொலினீசியர்கள் அத்தீவுக்கு வரும் போது கோழிகளையும் எலிகளையும் கொண்டுவந்தார்கள். உருளைக் கிழங்கும் கோழி இறைச்சியும் அவர்களது பிரதான உணவாக இருந்தது. உருளைக் கிழங்குப் பயிர்ச்செய்கை இலகுவானதாக இருந்தமையால் அம்மக்களுக்கு வேறு செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கான நேரம் போதியளவு இருந்தது.

காலப் போக்கில் சனத்தொகை அதிகரிக்க, சமுதாயக் கட்டமைப்புக்கள் உருவாகின. மக்கள் கூட்டுக் குடும்பங்களாக, தமக்குரிய நிலத்தில் விவசாயம் செய்யத் தலைப்பட்டனர். சிறு குழுக்களாகப் பிரிந்து குழுத் தலைவர்களுக்குக் கீழே ஏனையோர் செயற்பட்டனர்.

நேரம் மீதமிருந்தமையால் வேறு நிகழ்ச்சிகளிலும் கவனம் செலுத்துமாறு தலைவர்களால் மக்கள் வழிகாட்டப்பட்டனர். அவர்கள் மத்தியில் இருந்த வரையறுக்கப்பட்ட வளங்களைக் கொண்டு அவர்கள் உருவாக்கிய கல்லாலான நினைவுச் சின்னங்கள் தான் இன்றும் அவர்களின் திறனை உலகறியச் செய்தபடி இருக்கின்றன. கடற்கரையையொட்டிய பிரதேசங்களில் பெரிய பெரிய கற்சிலைகள், பல காணப்படுகின்றன. அவற்றுள் சிலவற்றின் அமைவிடங்கள் வானியல் ரீதியில் முக்கியத்துவம் பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.

இன்று எஞ்சியிருக்கும் அத்தகைய 15 சிலைகள் தான் இன்றும் ஈஸ்டர் தீவின் பெயர் நிலைத்திருப்பதற்குக் காரணமாகவிருக்கின்றன. நவநாகரிகமான ஆணின் தலையையுடைய அச் சிலைகள் பொலினீசியச் சமுதாயம் அடைந்திருந்த முன்னேற்றத்தையெண்ணி வியக்கவைக்கின்றன. அவர்களது நாகரிகம் உச்சத்திலிருந்த காலமொன்றிலே 600க்கும் மேற்பட்ட பாரிய கற்சிலைகள் வடிக்கப்பட்டன. ஆனால் அந்த நாகரிகம் சடுதியாக நிலைகுலைந்து அழிந்து போனது. அழிவுக்கான காரணம் காடழிப்பினால் உருவாகிய சூழல் பிச்சினைகளே எனத் தெரிவிக்கப்படுகிறது.

அந்தச் சிலைகள் ஒவ்வொன்றினதும் மேற்பகுதி மட்டுமே 10 தொன் எடையுடையது. அச்சிலைகளைச் செதுக்குவதொன்றும் சிக்கலான காரியமல்ல. ஆனால் செதுக்குவதற்கு எடுக்கப்பட்ட நேரம் கணக்கிடப்பட முடியாதது. சிலைகளைச் செதுக்கி முடிந்த பொலினீசியர்களுக்கு அவற்றை நகர்த்துவதென்பது பெரிய சவாலாக அமைந்தது. சில சிலைகள் 20 அடி உயரமானவை. பல தொன்கள் நிறையுடையவை. இந்தப் பாரிய சிலைகளை நகர்த்துவதற்கு அத்தீவுவாசிகள் பாவித்த உத்தி அவர்களுக்கே வினையாக அமைந்து அவர்களது விதியைத் தீர்மானித்தது.

1550 ஆம் ஆண்டளவிலேயே அத்தீவு வாசிகளின் நாகரிகம் மிகவும் உச்சக் கட்டத்திலிருந்தது எனலாம். இச்சிலைகளை நகர்த்துவதற்கு மரங்களைத் தறித்துப் பெறப்பட்ட மரக்கட்டைகளைப் பயன்படுத்தினார்கள். குழுக்களிடையே காணப்பட்ட போட்டி காரணமாக சிலைகளை விரைவாக நகர்த்தும் நோக்கில் கணக்கின்றி மரங்கள் தறிக்கப்பட்டன. விளைவாக, சூழல் தரமிழந்தது. நாகரிகம் நிலைகுலைந்தது.

18ஆம் நூற்றாண்டளவிலே ஐரோப்பியர்கள் இத்தீவைக் கண்டுபிடித்த போது இத்தீவிலே மரங்கள் எவையும் காணப்படவில்லை. ஆனால் இந்த நாகரிகம் தொடங்கிய காலகட்டங்களில் ஈஸ்டர் தீவு முழுவதும் அடர்ந்த காடுகளும் மரங்களும் காணப்பட்டதாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட விஞ்ஞான ஆய்வுகள் தெரிவிக்கின்றன. காலத்துடன் சனத்தொகை அதிகரிக்க விவசாயம், எரிபொருள், கட்டடத் தேவைகள், வீட்டுத் தேவைகள், மீன்பிடி போன்ற பல காரணங்களுக்காக மரங்கள் தறிக்கப்படத் தொடங்கின. அம்மக்களுக்கு, தாம் செதுக்கிய சிலைகளை தீவிலுள்ள பொருத்தமான இடங்களுக்கு அனுப்ப வேண்டிய தேவையும் இருந்தது.

அவற்றைக் கட்டி இழுத்துச் செல்லும் வல்லமை படைத்த விலங்குகள் அங்கு காணப்படவில்லை. அதனால் பலர் ஒன்று சேர்ந்து மரக்குற்றிகளை பயன்படுத்தி சிலைகளை நகர்த்தலானார்கள். இச் செயற்பாட்டிற்குப் பெருமளவிலான மரக்குற்றிகள் தேவைப்பட்டன. விளைவாக 1600 ஆம் ஆண்டளவிலே அத் தீவிலிருந்த மரங்கள் முற்றாக அழிக்கப்பட்டுவிட்டன. அதனால் சிலைகளை நர்த்தும் செயற்பாடும் பூரணமாகாமலேயே நிறுத்தப்பட்டது.

இது அந்த மக்களின் சமூக வாழ்வை மட்டுமன்றி அன்றாட வாழ்வையும் பாதிக்கத் தொடங்கியது- 1500 களில் மரங்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கவே, மர வீடுகளில் வசித்து வந்த மக்கள், வீடமைக்கப் போதிய மரங்களின்றி அவதிப்பட்டார்கள். அதனால் தமது வாழ்விடத்தைக் குகைகளாக மாற்றிக் கொண்டார்கள். ஒரு நூற்றாண்டின் பின்னர் மரங்கள் முற்றாக அழிந்தன. எஞ்சிய பொருட்களை மட்டுமே பாவிக்கும் நிர்ப்பந்தம் அவர்களுக்கு ஏற்பட்டது.

குகைகளுக்குள் தஞ்சமடைய முடியாதவர்கள், ஏரிக் கரைகளில் வளர்ந்திருந்த புற்களைக்கொண்டு குடிசைகளை அமைத்தனர். அவர்களது பிரதான உணவு மூலமாக இருந்த மீன்களைப் பிடிப்பதற்கான வலைகளுக்கும் புற்களாலான படகுகளுக்கும் தட்டுப்பாடு நிலவியது. ஏனெனில் மீன்பிடி வலைகள் ஒரு வகை மர இழைகளால் உற்பத்தி செய்யப்பட்டன. அம்மரங்கள் அழிக்கப்பட, ஏரியில் சென்று மீன் பிடிக்க முடியாது போனது.

மரங்கள் அழிக்கப்பட்டதால் மண் வளம் பெரிதும் பாதிக்கப்பட்டது. அத்துடன் மண்ணரிப்பின் வீதம் அதிகரிக்க மண்ணிலிருந்த எஞ்சிய கனிப்பொருட்களும் அடித்துச் செல்லப்பட்டன. விளைவாக, சிறிய தாவரங்களினதும் பயிர்களினதும் விளைச்சல் குறைவடையத் தொடங்கியது- மற்றொரு பிரதான உணவு மூலமான கோழிகள் மட்டும் இந்தப் பிரச்சினைகளால் பாதிக்கப்படவில்லை. கோழி இறைச்சிக்குப் பெரும் போட்டி நிலவியதால் கோழிகளைக் களவிலிருந்து பாதுகாக்க வேண்டிய தேவையொன்றும் ஏற்பட்டது.

மறைந்து போய்க்கொண்டிருந்த வளங்களைக் கொண்டு 7000 பேரின் வாழ்வாதாரத் தேவைகளைப் பூர்த்திசெய்தலென்பது இயலாத காரணமாகியது. விளைவாக தீவு வாசிகளின் குடித் தொகையின் எண்ணிக்கை மெல்ல மெல்லக் குறையத் தொடங்கியது.

மட்டுப்படுத்தப்பட்டிருந்த வளங்களுக்காக குழுக்களுக்கிடையிலான சண்டைகள் அதிகரித்தன. வெற்றி கொண்ட குழு, தோற்ற குழுவை அடிமையாகப் பாவித்தது. எதிரிக் குழுக்களுக்குரிய கற்சிலைகள் அழிக்கப்பட்டன. சேதமாக்கப்பட்டன.

ஈஸ்டர் தீவு வாசிகள் மரங்களை அழித்ததால் முதலில் இயற்கைச் சூழலிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டனர். இறுதியில் அழிந்தே போயினர்.

ஒரு காலத்தில் உச்ச கட்டத்தில் இருந்த நாகரிகம், இயற்கையைச் சீண்டிப் பார்த்ததால் இன்று சுவடுகள் தெரியாமலேயே அழிந்து போய்விட்டது.

இன்று புரியாத புதிராகவும் தர்க்கரீதியான விளக்கங்கள் எவையுமற்றதாகக் காணப்படும் ஈஸ்டர் தீவிலே எஞ்சியிருக்கும் கற்சிலைகள், காடழிப்பின் கொடூரத்தைச் சான்று பகரும் நடைமுறை உதாரணங்களாகவே காணப்படுகின்றன. காடழிப்பினால் ஏற்படும் சமூக கலாசாரப் பாதிப்புக்களையும் ஈஸ்டர் தீவு எம் கண்முன் நிறுத்தத் தவறவில்லை.

இலங்கை வனவளம் நிறைந்த சிறிய தீவாகும். ஒரு காலத்தில் தாராளமாகக் கிடைத்த இயற்கை வளங்கள் இன்று அரிதாகவே கிடைப்பதை நாம் ஒவ்வொருவரும் எமது வாழ்க்கைக் காலத்தில் கண்டிருப்போம். இதேநிலை மேலும் தொடருமாயின் ஏற்படக் போகும் விளைவுகளை எதிர்நோக்கவும் நாம் தயாராக வேண்டும். நீர் பற்றாக்குறையை எதிர்நோக்கும் நாடுகளுக்கான அளவுகோலின் எல்லையை இலங்கை தொட்டுள்ளது. அதாவது இன்னும் 20 – 30 ஆண்டுகளில் இலங்கையில் நீர்ப்பற்றாக்குறை பெரிய பிரச்சினையாக உருவெடுக்கும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இத்தகையதோர் நிலையையே வனவளமும் எதிர்நோக்குகிறது. இயற்கை வளங்கள் ஒன்றுடனொன்று தொடர்புடையவை. அவற்றுக் கிடையிலான சமநிலை பேணப்பட் டால்தான் உயிர்ப்பல்வகைமை பேணப்படும். அப்போதுதான் பூமியில் உயிரினம் நிலைக்கும்.

இலங்கையைப் பொறுத்தவரையிலே, உயிர்ப்பல் வகைமையானது வேகமாக அதிகரித்து வரும் சனத்தொகை, கடுமையான வறுமை, வேலையின்மை, ஜீவனோபாயத்தொழிலாக விவசாயத்தையே நம்பியிருத்தல் போன்ற சமூகக் காரணிகளால் பெரும் நெருக்கடிக்குள்ளாகிறது.

சேனைப் பயிர்ச் செய்கை எனும் பெயரிலே காடுகள் அழிக்கப்படுதல், நிலத்தின் செழிப்பு குன்றுதல், தேசிய வளங்களின் மிகையான சுரண்டல், இரத்தினக்கல், முருகைக்கல் அகழ்வு போன்ற பல பிரச்சினைகள் இந்த சமூகக் காரணிகளின் வெளிப்பாடாகக் காணப்படுகின்றன.

இலங்கை ஒரு விவசாயநாடு, இலங்கையின் பொருளாதாரம் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டது. பொருளாதாரம் செழிக்க வேண்டுமாயின் விவசாயம் செழிக்க வேண்டும். விவசாயம் செழிப்பதற்கோ, உயிர்ப்பல் வகைமை பேணப்பட வேண்டும். இலங்கையின் தாவர இனங்களுள் மூன்றிலொரு பகுதி மருத்துவத் தேவைக்காக பயன்படுத்தப்படுகிறது. அவற்றின் வாழிடம் அழிக்கப்படுவதாலும், அவை தேவைக்கு அதிகமாக சேகரிக்கப்படுவதாலும் அழிந்து போகின்றன. அவற்றில் பல, சுதேச தாவரங்கள் இவை பிரதிநிதிப்படுத்தும் பரம்பரையலகுத் தொகுதிகள், தாவரங்களின் பிறப்பியல் மேம்படுத்தலுக்கு மிகவும் அவசியமானவை யாதலால், அத்தாவரங்கள் இலங்கையின் சொத்தாக விளங்குகின்றன.

எமது கடல் வளம் தான், மக்களின் 70 சதவீதப் புரதத்தேவையைப் பூர்த்தி செய்வதுடன் ஏறத்தாழ 500,000 மக்களுக்கு தொழில் வாய்ப்பை வழங்குகிறது. இலங்கையின் தேசிய வனப்பூங்காக்களும் ஏனைய பாதுகாக்கப்பட்ட சூழல் தொகுதிகளும் உயிர்ப் பல்வகைமையைப் பேணுவதுடன் மட்டுமன்றி உல்லாசப் பயணத்துறையை விருத்தி செய்யும் புதிய மார்க்கங்களாகவே இருக்கின்றன.

இலங்கையின் தென்மேற்கு பகுதியானது, உலகிலுள்ள 18 உயிர்ப் பல்வகைமைச் செறிவான பிரதேசங்களுள் ஒன்றாகப் பெயரிடப்பட்டுள்ளது. இத்தனை சிறப்புக்களைக்கொண்ட இந்த அழகியதீவை இன்னும் சில நூற்றாண்டுகளில் இன்று வெறிச்சோடிப் போயிருக்கும் ஈஸ்டர் தீவைப்போல மாற்றவேண்டுமா?

இளஞ்சந்ததியினரான நாங்களே சிந்திக்க வேண்டியவர்களாவர்!

Wednesday, May 19, 2010

எம் இன்னுயிர் பறிக்க மின்னலுக்கு கண நேரம் கூடத் தேவையில்லை

முன்னொருபொழுதும் கேட்டறிந்திருக்காத வகையிலே இடி மின்னல் தாக்கியதால் ஏற்பட்ட மரணங்கள் தொடர்பாக செய்தி ஊடகங்கள் அறிக்கையிட்டுக் கொண்டிருக்கின்றன. மனிதன் தினையென விதைத்த வினையின் பயனை அறுக்கத் தொடங்கிவிட்டானோ எனச் சூழலியலாளர்கள் ஆய்வில் இறங்கிவிட்டனர். எவர் சந்தித்தாலும் இடியையும் மின்னலையும் பற்றித்தான் உரையாடுகிறார்கள்.

முன்னைய காலங்களில் பெரிய சத்தத்துடனான இடிமுழக்கமும் பிரகாசமான மின்னலொளியும் மிகவும் அரிதாகவே கேட்டது; கண்ணில் தெரிந்தது. ஆனால் அத்தகைய இடியும் மின்னலும் இன்று சகஜமாகிவிட்டன. அவற்றால் நிகழும் உயிரிழப்புகளும் பொருட் சேதங்களும் கூட இன்னும் சில நாட்களில் சகஜமாகப் போய்விடுமோ என்ற அச்சமும் பலர் மனதில் நிலவிவருகிறது. இத்தகையதோர் சூழ்நிலையில் தான் இடி முழக்கம், மின்னல் தொடர்பான தெளிவுபடுத்தல்களும் அவசியமாகின்றன.

அடிப்படையில், இந்த இயற்கை நிகழ்வுகளுக்குப் பின்னாலிருக்கும் தத்துவம் நிலை மின் கவர்ச்சியுடன் தொடர்புடையது. வளிமண்டலத்திலுள்ள உஷ்ணமான, ஈரப்பற்றுள்ள வளி வேகமாக மேலெழுந்து முகிலாக மாறும். அம்முகில்களிலுள்ள வளியும் நீரும் ஒன்றுடனொன்று உரசத்தலைப்படும். இச் செயற்பாடு நிலத்துக்கும் முகில்களுக்குமிடையே நேர், எதிரேற்றங்களால் மின்சாரத்தை உருவாக்கும். இவ்விளைவு எமது கண்ணுக்கு மின்னலாகத் தெரிகிறது.

மின்னல் தொடர்பான அடிப்படை விடயங்கள் எவையுமே இன்றுவரை உறுதியாகக் கூறப்படவில்லை. ஆகையால் இடியும் மின்னலும் விவாதத்துக்குரிய கருப்பொருட்களாகவே இன்னும் காணப்படுகின்றன. மின்னலெனப்படுவது நிலை மின்னின் இயற்கையான வெளிப்பாடாகும். மின் கடத்து திறன் குறைந்த பகுதிகளில் சேர்ந்திருக்கும் ஏற்றங்கள் சுயாதீனமாக இயங்கும் தன்மையன.

வளியிலுள்ள நடுநிலையான அணுக்களும் மூலக்கூறுகளும் நேரேற்றங்களையும் மறையேற்றங்களையும் உருவாக்கி, சுயாதீனமாக இயங்கும் ஏற்றங்களை நடுநிலையாக்கும். இந்த நேர், மறையேற்றங்கள் எதிரெதிர்த்திசைகளில் பயணிக்க, மின்னோட்டம் உருவாகி சேர்ந்திருந்த ஏற்றங்கள் நடுநிலையாகும். இந்தச் செயற்பாட்டின் ஆகக்குறைந்த அழுத்த வித்தியாசம் 10,000 வோல்ற்/சென்றி மீற்றராகும்.

இந்த சக்தியின் வெளிப்பாடு சூழவுள்ள வளியை வெப்பமாக்கும். அதன் விளைவே மின்னலாகும். அத்துடன் இச்சக்தி வெளிவிடும் அதிர்வலைகளைத்தான் இடி முழக்கம் என்கிறோம். மின்னல் செக்கனுக்கு 60,000 மீற்றர் வேகத்தில் பயணிக்கும். அவ்வாறு பயணிக்கையில் அது அடையும் வெப்பநிலை 30,000ணீ ஆகும். மின்னல் மிகவும் அபாயகரமானது.

மரங்களை மட்டுமன்றி மனிதரையும் நேரடியாகத் தாக்கும் வல்லமைமிக்கது. நெருப்பையும் உருவாக்கும்; உயிரையும் கொல்லும். மின்னலானது ஒரு இலக்கைத் தாக்கிய பின்னரும் கூட 8 கி. மீ தூரம் பயணிக்கக்கூடியது. அதன் வெப்பநிலை, 28000 ணீவரை உயரக்கூடியது.

மின்னலும் இடியும் ஏறத்தாழ ஒரே நேரத்திலேயே நிகழ்கின்றன. வளியில் ஒளியின் வேகம், ஒலியின் வேகத்தை விட மிக அதிகமாகையால் மின்னல் தெரிந்து சில செக்கன்களின் பின்னரே இடி முழக்கம் கேட்கும்.

மின்னலிலும் பல வகைகள் காணப்படுகின்றன. முகில்களுக்கிடையே நடைபெறுவது, முகிலுக்கும் நிலத்துக்குமிடையே நடைபெறுவது ஆகியன முக்கியமானவையாகும்.

புவியிலுள்ள மிகப்பழைமையான இயற்கையின் தோற்றப்பாடு மின்னலாகுமென ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். வானிலிருந்து செய்மதிகளினூடு அவதானிக்கும் ஆய்வாளர்கள் பூமியிலே தினமும் 3 மில்லியன் மின்னல் ஒளிக்கீற்றுக்கள் தோற்றம் பெறுவதாகத் தெரிவிக்கின்றனர்.

இடி முழங்கும் இடத்திலிருந்து நாம் நிற்கும் தூரத்தைப் பொறுத்தே இடியால் ஏற்படும் ஆபத்தின் தன்மை அமையும். அதாவது இடியின் சத்தத்தின் தன்மையைப் பொறுத்து காதுகள் பாதிக்கப்படும். இடியும் மின்னலும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டவையாயினும் இரண்டும் வெவ்வேறானவை. மின்னலானது மின்சாரத்தின் வெளிப்பாடாகையால் மிகவும் ஆபத்தானது. இடியென்பது ஒலிமட்டுமே. அதன் சத்தம் அதிகமாக இருக்கையில் காதுகளை மட்டும் பாதிக்கும்.

உயர்ந்த கட்டடங்களும் கோபுரங்களும் ஏன் மரங்களும் கூட முகில்களிலிருந்து ஏற்றங்களைப் பூமிக்கு விரைவாகக் கடத்த முயல்கின்றன. இதனாலேயே மரங்கள் பாதிக்கப்படுகின்றன. (மரங்களின்) உட்பகுதிகள் மரத்தின் பட்டைகளை விட விரைவாகக் கடத்த விழைகையில் மின்னலின் உயர் வெப்பம் காரணமாக பட்டைகள் எரிகின்றன. இதனால் மரங்கள் பாறி விழுவதுடன் கருகவும் செய்கின்றன.மின்னலானது இயற்கையின் தோற்றப்பாடாகும். அதைக் கட்டுப்படுத்தவோ இல்லாமல் செய்யவோ மனிதனால் முடியாது. மின்னலினால் பாதிக்கப்பட முடியாதவாறு அல்லது ஏற்படும் பாதிப்பைக் குறைக்கும் வகையிலான நடைமுறைகளைக் கையாளவேண்டும். இல்லையேல் உருவாகும் இழப்புக்கள் தவிர்க்க முடியாதனவாகிவிடும்.

மின்னல் ஒருவரைத் தாக்கும்போது அவர் உயர் செறிவுடைய மின்னதிர்ச்சிக்கு முகம் கொடுக்கிறார். மின்னல் தாக்கியவர்களில் 10 வீதமானோர் உயிரிழக்கின்றனர். அவர்கள் உயிரிழப்பதற்கான அடிப்படைக் காரணம் அவர்களது இதயத்துடிப்பும் சுவாசமும் தடைப்படுவதே பொருட்களைத் தாக்கவல்லது.

ஒருவெட்ட வெளியான இடத்தில் மனிதன் கூட உயரமான பொருள்தான். உலோகப் பொருட்களும் நீரும் மின்னலை ஈர்ப்பதில்லை. ஆனால் அவை மின் கடத்திகளாதலால் மின்னல் தாக்கியதும் உருவாக்கப்படும் மின்சாரத்தை இலகுவாக நிலத்துக்குக் கடத்துகின்றன. இதே அடிப்படையில்தான், மின்னல் தாக்குகையில் தொலைபேசிக் கம்பிகளூடும் மின்சாதனங்களூடும் மின்சாரம் கடத்தப்படுகிறது.

மின்னலானது மனிதனை நேரடியாகத் தாக்கவல்லது. அதே சமயம் மின்னல் தாக்கிய பொருளொன்றுக்கு அருகில் மனிதன் நிற்கும் போதோ அல்லது அப்பொருளைத் தொடும்போதோ அப்பொருளூடு கடத்தப்பட்டுக்கொண்டிருக்கும் மின்சாரம் மனிதனைத் தாக்கலாம். நிலத்தினால் கூட மின்சாரம் மனிதனுக்குக் கடத்தப்படலாம். இவ்வாறு கணநேரத்தில் ஏற்படுத்தப்படும் அதிர்ச்சி மனிதனைத் தூக்கி வீசும் சக்தி வாய்ந்தது. இந்நிகழ்வு காரணமாக ஊமைக்காயங்களும் மனிதனுக்கு ஏற்படலாம்.

ஒருவர் மின்னலால் தாக்கப்பட்டால் அவரது இதயத்துடிப்பு நின்றுபோகலாம். அல்லது இதயம் விட்டுவிட்டுத் துடிக்கலாம். அத்துடன் சுவாசமும் தடைப்பட்டுவிடும். சற்றுப்பின் இதயம் தானாகவே மீளத்துடிக்க ஆரம்பிக்கும். ஆனால் சுவாசம் சீராக நடைபெறாவிடில், உடலுக்குத் தேவையான ஒட்சிசனின் அளவு குறைவடைய நரம்புத் தொகுதி பாதிக்கப்படும். விளைவாக இருதயம் துடிப்பது மீண்டும் தடைப்படும். மூளை பாதிக்கப்பட்டால் சுய நினைவு இழக்கப்படும்.


மின்னல் ஒருவரைத் தாக்குவதை நேரடியாக அவதானிக்க முடியும். இடி முழக்கம் அல்லது மின்னலின் பின்னர், வெளியே ஒருவர் நினைவிழந்து காணப்பட்டால் அவர் மின்னல் தாக்குதலுக்குள்ளாகியிருப்பார் என ஊகிக்கலாம். உடனடியாக அவசர உதவியை நாடுதலே சிறந்தது.

மின்னலால் தாக்குண்டவர்களது இதயத துடிப்பும் சுவாச வீதமும் மீளாத பட்சத்திலேயே மரணம் சம்பவிக்கிறது. ஆகையால் இடி மின்னல் காலங்களில் இயன்றவரை வெளி வேலைகளில் திரிவதைத் தவிர்க்க வேண்டுட். வீட்டுக்குள் இருக்கும்போது மின் சுற்றுக்களுடனான தொடுகையை தவிர்த்தல் நன்று. தொலைபேசியில் கதைத்தல், கணினியில் வேலை செய்தல், தந்திக்கம்பியுடன் இணைக்கப்பட்ட செவிப்பன்னியைப் பாவித்தல் போன்ற செயற்பாடுகள் தவிர்க்கப்படவேண்டும். யன்னல் மற்றும் கதவுகளை விட்டுத் தள்ளி இருப்பது உகந்தது.

கைத்தொலைபேசி மின்னலைக் கவருவதில்லை. ஆனால் கைத்தொலைபேசியில் கதைக்கும்போது உருவாகும் மின்காந்த அலைகள் மின்சாரத்தைக் கடத்தும் இயல்புடையவையாதலால் கைத்தொலைபேசியில் கதைத்தலும் ஆபத்தானதாகும்.

இன்றைய காலத்தில், மின்னல் தொடர்பான பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கைக்கொள்வதோடு மட்டும் நின்றுவிடாது இடி, மின்னல் தொடர்பாக நாம் அறிந்து வைத்திருக்கும் தவறான விடயங்களையும் தெளிவுபடுத்திக்கொள்வோமேயானால் எம்மை நாமே பாதுகாத்துக்கொள்ள முடியும்.

உண்மையா?

1 நிலத்துக்குக் கீழே அமைக்கப்பட்டுள்ள மின் சுற்றுக்கள் பாதுகாப்பானவை.

விளக்கம்: நிலத்தைத் தாக்கும் மின்னல் நிலத்திற்குள் காணப்படும் உலோகங்களில் நாட்டமுடையது. நிலத்துக்குக் கீழே உள்ள மின், தொலைபேசி, தரவுத் தந்திக் கம்பிகளை மின்னல் தாக்கும் சாத்தியக்கூறுகளும் உள்ளன. ஆகையால் நிலத்துக்கு கீழே உள்ள கம்பிகள் மேலே உள்ள கம்பிகளை விடப்பாதுகாப்பானவை என்று கூற முடியாது என அண்மைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

2 மின்னல் ஒரு தடவைக்கு மேல் ஒரு இடத்தில் தாக்காது.

விளக்கம்: இது முற்றிலும் தவறான கருத்தாகும். ஒரு இடத்தில் பல தடவைகள் மின்னல் தாக்கிய சந்தர்ப்பங்கள் பல உள்ளன.


3 மின்னல் உயரமான பொருட்களையே எப்போதும் தாக்கும்.

விளக்கம்: அடிப்படையில் உயரமான கட்டமைப்புக்களை மின்னல் தாக்கும் சாத்தியக்கூறுகள் அதிகமாகும். ஆனால் இந்த விடயம் மின்னலினால் உருவாக்கப்படும் அழுத்த வித்தியாசத்திலும் தங்கியுள்ளது.

4 இறப்பர் சப்பாத்துக்களை அணிவதன் மூலம் மின்னல் தாக்குதலிலிருந்து தப்பலாம்.

விளக்கம்: சிறிதளவே உயரமான இறப்பர் எந்த விதத்திலும் மின்னல் பாதுகாப்புக்கவசமாக இருக்காது.

5* இறப்பர் சக்கரங்கள் இருப்பதனால் உலோக வாகனங்கள் மின்னல் தாக்குதலின்போது பாதுகாப்பானவை.

விளக்கம்: மின்னலின்போது கார்போன்ற உலோக வாகனங்களினுள் இருப்பது பாதுகாப்பானவை. ஏனெனில் அவற்றில் உலோக மேற்பரப்பு மின்னலைத் தன்னூடாக நிலத்துக்குக் கடத்திவிடும். சிறந்த பாதுகாப்பைப்பெற வேண்டுமாயின் வாகனத்தின் நடுப்பகுதியினுள் இருக்க வேண்டும். வாகனத்தின் யன்னல்களை மூடுவதுடன் எந்த ஒரு உலோகப் பகுதியையும் தொடாமல் இருப்பது நல்லது. வாகனத்தின் வானொலியை நிறுத்தி வைக்கவேண்டும். மின்னல் வாகனத்தின் மேற்பரப்பினூடாக உலோக சில்லுகளை அடைந்து இறப்பர் சில்லைக் கடந்து நிலத்தை அடைவதால் இறப்பர் சில்லு எந்த விதத்திலும் பாதுகாப்புக்கவசமாக இருக்காது.

6 உலோகம் போன்ற கடத்திகளையே மின்னல் தாக்கும்.

விளக்கம்: மின்னலைப் பொறுத்த வரையில் யாவுமே கடத்திகளாகும். ஆனால் உலோகங்கள் எளிதில் கடத்திகளாக இருக்கும். மின்னலால் வெளிவிடப்படும் சக்தியின் மீடிறன் வானொலி அலைகளின் மீடிறன் எல்லைக்குள் இருப்பதால் அவை எந்த மேற்பரப்பினூடும் பயணிக்கும். உலோகங்கள் இல்லாத பட்சத்தில் அரிதிற்கடத்திகளினூடாகக் கூட மின்னல் தரையை அடையும்.


7 உலோகத்தினாலான நகைகள், சப்பாத்துக்களை மின்னல் தாக்கும் வேலைகளில் அணிதல் உகந்ததல்ல.

விளக்கம்: இது மிகவும் அவதானமாகச் சிந்திக்கப்படவேண்டிய விடயமாகும். உலோகப் பொருட்களை அணிவதால் அவை மின்னலைத் தம்பக்கம் ஈர்க்கும் என்ற கருத்து தவறானது.ஆனால் மின்னல் தாக்கிய ஒருவர் அத்தகைய பொருட்களை அணிந்திருந்தால் அவை மின்னல் தாக்கத்தால் விரைவில் வெப்பமடைந்து பாரதூரமான எரிகாயங்களை உடலில் தோற்றுவிக்கும்..

Friday, May 14, 2010

கன்னியாகுமரியில் வரலாற்று இமயங்களின் நினைவுச் சின்னங்கள்வானளாவிய வள்ளுவன் சிலையென்றால் உடனே யாவரது ஞாபகத்துக்கும் வருவது கன்னியா குமரிக் கடலாகும். ‘வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட நாடு தமிழ்நாடு’ என்பர்.

அப்புகழாரத்துக்கு மேலும் அணி சேர்க்கும் வகையிலே கன்னியாகுமரிக் கடலில் அமைந்துள்ள பாறையொன்றிலே திருக்குறளின் அதிகாரங்களின் எண்ணிக்கையான 133ஐ வகைக்குறிக்கக் கூடியதாக, 133 அடி உயரத்திலான வள்ளுவர் சிலை அமைக்கப்பட்டிருக்கிறது.

இந்த வள்ளுவர் சிலையின் உருவம், இவ்வருடம் நடக்கவிருக்கும் செம்மொழி மாநாட்டின் இலச்சினையாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மிகவும் பழையான நூலாகக் கருதப்படும் தொல்காப்பியத்திற்கு முன்னுரை வழங்கியிருந்த அதங்கோட்டாசான் என்பவர் வடவேங்கடம் முதல் தென் குமரி வரையுள்ள பகுதி, தமிழ் கூறும் நல்லுலகம் எனக் குறிப்பிட்டதாக வரலாறு கூறுகிறது.

சேர, சோழ, பாண்டியர்கள் முதல் நாயக்கர்கள், முகாலயர்கள் தொட்டு ஆங்கிலேயர் வரை வெவ்வேறு காலப் பகுதிகளில் அந்தந்தக் காலத்துக்குரிய ஆட்சியாளர்களால் கன்னியாகுமரி ஆளப்பட்டு வந்ததை இன்று விடுபட்டிருக்கும் எச்சங்கள் பல தெளிவாகக் கூறுகின்றன.


இந்தியத் துணைக் கண்டத்தின் தென் கோடியில் அமைந்திருக்கும் இந்தக் கன்னியா குமரிப் பிரதேசத்துக்கு அப்பெயர் வரக்காரணமாக இரண்டு விடயங்களை அறிஞர்கள் ஊகங்களாகக் குறிப்பிடுகின்றனர்.

சிவபெருமானை அடைய வேண்டுமென்பதற்காக கன்னியான பார்வதிதேவி இந்த முனையிலே நின்று தவம் செய்தமையால் ‘கன்னியாகுமரி’ என்ற பெயர் வழங்கப்பட்டு வருவதாகவும், குமரிக் கண்டம் அழிந்த பிறகு, அங்கிருந்து வந்த பெண் தனது நாயகனுக்காகக் காத்திருந்த இடம் என்ற கருத்துடன் இந்தப் பெயர் வந்திருக்கலாமெனவும் அறிஞர்கள் கூறுகின்றனர்.

முதலாவது கரத்தின் பின்னணியிலிருக்கும் புராணக்கதை மிகவும் சுவாரசியமானது. முன்னொரு காலத்திலே, அசுரர்கள், தேவர்களை அடக்கியாண்டனர். தர்மம் அழிந்து அதர்மம் தலைதூக்கியது.

அசுர குலத்தலைவனாக விளங்கிய பாணாசுரன் மூவுலகையும் தனக்குக் கீழே கொண்டுவர எண்ணினான். விண்ணவருக்கும் முனிவர்களுக்கும் பூவுலக மாந்தருக்கும் பல்வேறு வழிகளில் தொல்லை கொடுத்தான்.

பாணாசுரனின் கொட்டத்தைத் தாங்க முடியாத பூமாதேவி திருமாலை வேண்டி நின்றாள். அவளது வேண்டுகோளுக்குச் செவிசாய்த்த திருமாலோ, பராசக்தியை அணுகும்படி கூறினார்.

அதன்படி தேவர்கள் பராசக்தியை வேண்டி, பெரிய யாகமொன்றை மேற்கொண்டனர். யாகத்தின் முடிவில் வெளிப்பட்ட பராசக்திதேவி பாணாசுரனின் கொட்டத்தை அடக்கி உலகில் அறமும் ஒழுங்கும் நிலைபெற வழிசெய்வதாக உறுதியளித்தாள்.

அதற்காக அவள் கன்னிப் பெண்ணாக மாறி பாரதத்தின் தென் கோடிக்கு வந்து தவம் செய்யலானாள். கன்னிதேவி மணப்பருவத்தை அடைந்ததும், சுசீந்திரத்திலிருக்கும் இறைவானாகிய சிவபெருமான் கன்னியாகிய தேவி மீது காதல் கொண்டார். அவருக்கு தேவியைத் திருமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்தன.

பிரம்மதேவனோ, அசுரர்களின் தலைவனாகிய பாணாசுரனின் மரணம் ஒரு கன்னியாலேயே நிகழ வேண்டுமென விதித்திருந்தான். இந்தத் திருமணம் நிகழ்ந்தால், பாணாசுரனின் மரணம் சம்பவிக்காமலே போய்விடுமென உணர்ந்த நாரதரோ, திருமணத்தை எப்படி நிறுத்தலாமெனச் சிந்திக்கத் தொடங்கினார்.

கலகங்கள் விளைவிப்பதில் நாரதரைவிடச் சிறந்தவர் எவருமில்லை என்பது யாவரும் அறிந்ததோர் விடயமே! ஆனால் நாரதர் கலகம் எப்போதும் நன்மையிலேயே முடிந்திருக்கிறது.

புதிய வியூகத்தால் தேவி – சிவபெருமான் திருமணத்தை நிறுத்த முயன்ற நாரதர் அவர்கள் இருவரையும் அணுகி, குறித்த ஓர்நாள், நள்ளிரவிலான நல்வேளையொன்றில் திருமணம் நிகழ வேண்டுமெனவும், அதற்கு ஆயத்தமாக இருக்கும்படியும் கூறினார். அதன்படி குறித்த நாளன்றிரவு சிவபெருமான் சுசீந்திரத்திலிருந்து தேவியின் இடத்தை நோக்கிப் புறப்பட்டார்.

நல்ல நேரம் தவறிவிடக் கூடாதென்பதே அவரது குறிக்கோளாக இருந்தது. போகும் வழியிலே வழுக்கம் பாறையென்ற இடத்தில் நாரதர் ஒரு சேவலாக உருக்கொண்டு உரக்கக் கூவினார்.

சேவலின் கூவலைக் கேட்ட சிவபெருமானோ பொழுந்து புலர்ந்து விட்டது. நல்ல நேரம் தவறிவிட்டது என எண்ணி மிகுந்த வருத்தத்துடன் சுசீந்திரம் திரும்பினார்.

சிவபெருமானுக்காகக் காத்திருந்த தேவி, அவர் வராததால் என்றும் கன்னியாகவே இருப்பதாக உறுதிபூண்டு மீண்டும் தவம் செய்யத் தொடங்கினாள்.

தேவியின் அழகைப்பற்றிக் கேள்வியுற்ற பாணாசுரனோ, கடுத்தவமிருக்கும் தேவியைக் காண வந்து, அவளை மணம் செய்யும் தனது விருப்பத்தைத் தெரிவித்தான். தேவியோ மறுத்துவிட, பாணாசுரன் தன் உடல் வலிமையால் அவளைக் கவர்ந்து செல்ல எண்ணித் தன் உடைவாளை உருவினான்.

இந்தத் தருணத்தை எதிர்பார்த்திருந்த தேவியும் தன் போர் வாளை வீசிப்பல நாட்கள் போர் புரிந்தாள். இறுதியில் தன் சக்கராயுதத்தால் பாணாசுரனைக் கொன்றாள். தேவர்களும் மனிதர்களும் தேவிக்கு நன்றி செலுத்தினர்.

அவர்களை வாழ்த்திய தேவி தன் தவத்தை மீண்டும் தொடர்ந்தாள். தேவி பாதம் பதித்துத் தவம் செய்த பாறை இன்னும் காணப்படுகிறது என கூறுவர். தெளிவான ஆதாரங்கள் இல்லாத போதிலும் காலம் காலமாக இந்தக் கதை கூறப்பட்டு வருகிறது.

கன்னியா குமரிக் கடற்கரையை அடைந்தவுடனேயே, அது ஒரு பிரபலமான சுற்றுலாத்தலம் என்ற எண்ணம் பற்றிக் கொள்ளும். வீதிகளெங்கிலும் இன, மத, மொழி பேதங்களின்றிய சனத்திரள்... கடைகள் எங்கிலும் உள்ள கலைநயம் மிக்க கைவினைப்பொருட்கள் கண்களை வேறு திசையில் செல்லவிடாது.

புற்பாய்களில் வரையப்பட்ட ஓவியங்கள், மரங்கள், சங்குகள், கற்களில் வடிக்கப்பட்ட சிற்பங்கள் இன்னும் வார்த்தைகளால் விபரிக்க படமுடியாத பல கைவினைப் பொருட்கள் சிறுவர் முதல் பெரியவர் வரை யாவரையும் தம் பக்கமிழுக்கும் வல்லமை படைத்தவை.


கடை வீதியைக் கடந்து செல்கையில் தெரிவதோ பகவதி அம்மன் கோவில்! குமரிமுனையில் தவம் செய்த தேவி கொண்ட கோயிலாக பகவதி அம்மன் கோயில் கருதப்படுகிறது.

அக்கோயிலிலே எழுந்தருளியிருக்கும் பகவதி அம்மன் சக்தி வாய்ந்த அம்மனாகக் கருதப்படுகிறாள். இந்த அம்மனின் மூக்குத்தி மிகவும் பிரபலமானது. நாகமணி பதிக்கப்பட்டிருக்கும். அந்த மூக்குத்தி வீசும் ஒளியைக் கலங்கரை விளக்கமெனக் கருதிய கப்பல்கள் திசைமாறிப் பயணிக்கத் தொடங்கினவாம். இதையடுத்து, பகவதி அம்மன் கோயிலின் கிழக்கு வாசல் கதவு மூடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடற் கரையோரத்திலேயே அமைந்திருக்கும் கோயிலுக்கு அருகிலேயே கடலரிப்புக்கான பாதுகாப்புச் சுவர் அமைக்கப்பட்டிருக்கிறது. அரபிக் கடல், வங்கக் கடல், மற்றும் இந்து சமுத்திரம் ஆகிய முக்கடல்களும் ஒருங்கே சங்கமிக்கும் அழகு காண்போரைப் பரவசப்படுத்தும்.

வங்கக் கடலிலே மேலெழுந்து அரபிக் கடலேயே அஸ்தமிக்கும் சூரியனின் அழகைக் காண்பதற்காகவே சுற்றுலாப் பயணிகள் கன்னியாகுமரிக் கடற்கரையில் கூடுகின்றனர். சித்திராப் பெளர்ணமியன்று அரபிக் கடலிலே சூரியன் மறையும் அதே சமயம் அங்கிருந்து சந்திரன் மேலெழும் அற்புதமான காட்சி, இயற்கையின் வனப்பை எண்ணி மெய்சிலிர்க்க வைக்கும்.

கரையிலிருந்து கடலைப் பார்த்தால் தெரியும் பாறையில் விவேகானந்த மண்டபமும் வானுயர்ந்த வள்ளுவர் சிலையும் வியக்க வைக்கின்றன. அதிகாலையிலிருந்து மாலை 4.00 மணி வரை கரையிலிருந்து இப்பாறைக்கு படகுச் சேவை நடத்தப்படுகிறது. இப்பாறை, சிவபெருமானின் திருக்கரங்களைப் பற்றுவதற்காக தேவி கால்பதித்த பாறையாதலால், ஆரம்ப காலங்களில் ‘ஸ்ரீபாதப் பாறை’ என அழைக்கப்பட்டது.

இன்று பாறையின் ஒரு பகுதி தேவியின் காலடித் தடம்பட்ட பகுதியாக வணங்கப்படுகிறது. 1892 ஆம் ஆண்டு தனது யாத்திரையின் போது கன்னியாகுமரி வந்த விவேகானந்தர் அம்மனைத் தொழுத பின் இப்பாறையில் அமர்ந்து தியானம் செய்தார்.

தனது கம்பீரப் பேச்சால் உலகையே தன் பக்கம் திருப்பிய அந்த வீரத் துறைவியின் நினைவாக விவேகானந்தர் நினைவு, மண்டபம் கட்டப்பட்டுள்ளது. அத்துடன் நினைவுச் சின்னமாக விவேகானந்தரின் சிலையொன்று அமைக்கப்பட்டுள்ளது. அச்சிலையின் கண்கள் தேவியின் ஸ்ரீபாதச் சுவட்டைப் பார்க்குமாறு அமைக்கப்பட்டுள்ளமையே அச்சிலையின் சிறப்பாகும்.

விவேகானந்தர் சிலையும் மணி மண்டபமும் அமைந்திருக்கும் பாறைக்குத் தென் மேற்கேயுள்ள பாறையில் 133 அடியுயரத்திலான திருவள்ளுவர் சிலையொன்று நிறுவப்பட்டுள்ளது.

வள்ளுவனின் புகழ் காலத்துக்கும் நிலைத்திருக்க வழி செய்திருக்கும் திருக்குறளுக்கு அணி சேர்க்கும் வகையிலே, இச்சிலை அமைக்கப்பட்டுள்ளது எனலாம். கடற்கரையிலே பகவதியம்மன் கோவிலை அடுத்து விவேகானந்தருக்கான சிறுகோயில் ஒன்றும் காணப்படுகிறது.

அக்கோயிலை அடுத்து நடுவிலே கதர் நூல் நூற்கும் தறியின் உருவம் செதுக்கப்பட்டு அகிம்சை, சத்தியம், சமாதானம் என்ற மூன்று பதங்களையும் தாங்கி நிற்கும் மூன்று கோபுரங்களுடன் மண்டபமொன்று நிமிர்ந்து நிற்கிறது.

இவை எல்லாம் கண்களில் பட்ட உடனேயே, அம்மண்டபம் மகாத்மா காந்தியுடன் தொடர்புபட்டது என விளங்கிவிடும். காந்தி நினைவு மண்டபம் எனப் பெயர் பொறிக்கப்பட்டு, அமைதியான நிறங்களால் வர்ணம் பூசப்பட்ட அந்த மண்டபத்தினுள் நுழையும் போதே மனதில் அமைதி குடிகொள்ளத் தொடங்கும்.


அஹிம்சையாலும் எளிமையாலும் எதையுமே சாதிக்க முடியும் என உலகுக்கு உணர்த்திய மகாத்மா காந்தியின் நினைவாக இந்த மண்டபம் கட்டப்பட்டது. 1948 ஆம் ஆண்டு மாசி மாதம் 12 ஆம் திகதி, மகாத்மா காந்தியின் அஸ்தி கன்னியாகுமரி கடலிலே கரைக்கப்பட்டது.

அஸ்தி வைக்கப்பட்ட இடத்திலே 1956 ஆம் ஆண்டு இந்த நினைவு மண்டபம் கட்டி முடிக்கப்பட்டது. காந்தி தான் வாழும் காலத்தில் 1925 ஆம் ஆண்டு 1937 ஆம் ஆண்டு என இரு தடவைகள கன்னியாக்குமரிக்கு விஜயம் செய்திருந்தார். அவரது மறைவின் பின்னர் கன்னியாகுமரிக்குக் கொண்டு வரப்பட்ட அவரது அஸ்தி பொதுமக்களின் அஞ்சலிக்காக கடற்கரை மைதானத்திலே வைக்கப்பட்ட பின்னரே கடலில் கரைக்கப்பட்டது.

இந்த நினைவு மண்டபத்தின் நடுப்பகுதியின் உயரம் 79 அடிகளாகும். காந்தி என்ற மகாத்மா இந்தப் பூவுலகில் வாழ்ந்த 79 வருடங்களை நினைவூட்டும் வகையிலேயே இவ்வாறு கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. மண்டபத்தின் உட்சுவர்களில் மகாத்மா காந்தியின் வாழ்க்கையில் நடந்த முக்கியமான சம்பவங்கள் புகைப்படங்களாகத் தொங்கி மண்டபம் கட்டப்பட்டதன் நோக்கத்தை நிறைவு செய்ய விழைகின்றன. மண்டபத்தின் மத்தியிலே மகாத்மாவின் அஸ்தி வைக்கப்பட்ட இடத்திலே, நினைவுக் கல்லொன்று அமைக்கப்பட்டுள்ளது.


மகாத்மா காந்தி என்ற எளிமையான பெருமனிதனின் அஸ்தி வைக்கப்பட்ட இடத்தைக் காண்பதே மாபெரும் பாக்கியம் எனத் தோன்றியது. நினைவுக் கல்லோ, அஹிம்சையின் சாதனையை எண்ணி மெய்சிலிர்க்கச் செய்தது.

நினைவுக் கல்லுக்கு நேரெதிரே காந்தியின் கறுப்பு - வெள்ளை ஓவியமொன்று வரையப்பட்டுள்ளது. தூரத்திலிருந்து பார்த்தால் கூட ‘பளிச்’ என்று தெரியும். அந்த ஓவியத்தின் அருகில் சென்று பார்த்த போதுதான், அது கருங்கல்லில் வடிக்கப்பட்ட சித்திரம் என்பது புரிந்தது.

வர்த்தக ரீதியாகப் பட்டை தீட்டப்படும் கருங்கல் வகையைச் சேர்ந்த கறுப்பு, வெள்ளைக்கற்களால் செவ்வனே வடிவமைக்கப்பட்ட கலைநயம் மிக்க அந்த ஓவியத்துக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் தொழில்நுட்பம் வியக்கவைத்தது.

இந்த மண்டபத்தின் கட்டட அமைப்பு விஞ்ஞான ரீதியாகவும் பிரபல்யமானது. காந்தி ஜெயந்தியாகிய ஐப்பசி 2 ஆம் திகதியன்று காந்தியின் அஸ்தி வைக்கப்பட்டிருந்த இடத்திலுள்ள நினைவுக்கல்லை, ஆதவனின் கதிர்களும் வீழ்ந்து வணங்கும் வகையில் இம் மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த நாளில் மட்டும் சூரியக் கதிர்கள் மண்டபத்துள் ஊடுருவும். மண்டபத்தின் கரையிலுள்ள சுழல்படிகளால் 1 வது மாடிக்குச் செல்ல முடியும். இந்த 1 வது மாடி குமரிக் கடல் காற்று தாலாட்ட, குமரிமுனையின் அழகை இரசிப்பதற்கு மிகவும் பொருத்தமான இடமாகும்.

கடலையும், வீசும் தென்றலையும் திருவள்ளுவர் பாறையையும் விவேகானந்தர் பாறையையும் ஆதவனின் திகழொளியையும் இரசித்தபடி இயற்கையில் லயிக்கத்தொடங்கிய சில நிமிடங்களிலேயே எண்ணங்கள் புறந்தள்ளப்பட்டு மனம் ஒருங்குவதை உணரமுடியும். மீண்டு வருகையில், பரபரப்பு மிகுந்த தெருக்களில் கூட மனம் அமைதியுடன் பயணிப்பதையும் அவதானிக்கலாம்.

தொன்மைமிக்க வரலாற்றையுடைய பகவதியம்மன் கோவில் மற்றும் முக்கடல்களும் சங்கமிக்கும் குமரிக்கடல் ஆகியவற்றுக்கப்பால் பாரத தேசத்தில் பிறந்து முழு உலகையுமே தம்பக்கம் திருப்பிய மூன்று பெருமகான்களுக்கான நினைவுச் சின்னங்களைத் தன்னகத்தே கொண்டு காலத்தால் அழியாத வரலாற்றை உருவாக்கிய மண்ணாகவே கன்னியாகுமரி மண் தெரிந்தது.

இளம் வயதிலேயே தன் பேச்சுத்திறத்தாலும் ஆன்ம வலிமையாலும் இளைஞர்களுக்கு அறைகூவல் விடுத்தவர் சுவாமி விவேகானந்தராவார். அறியாமை இருளிலே மூழ்கிக் கிடந்த பாரதத்தைத் தட்டியெழுப்பி, இந்து மதத்தின் விலை மதிக்கமுடியாத தத்துவங்களை உலகறியச் செய்தவரும் அவரே.

எந்தவித மதச்சார்புகளுமின்றி மனிதவாழ்வுக்குத் தேவையான அறக்கருத்துக்களை ஒவ்வொன்றும் இரண்டே வரிகளையுடைய 1330 குறட்பாக்களுக்குள் அடக்கிய பெருமை திருவள்ளவரைச்சாரும். திருக்குறள் 2000 வருடங்கள் பழைமை வாய்ந்தது. எந்தக் காலத்துக்கும் பொருத்தமானது. அதனால்தான் இதை உலகப் பொதுமறை என்பர்.

ஆங்கிலேய ஏகாதிபத்தியத்துக்கு எதிராக அஹிம்சை வழியில் போராடி வென்றவர் மகாத்மாகாந்தி. கத்தியின்றி யுத்தமின்றி அஹம்சையால் சாதித்துக்காட்டியவரும், இன்று இந்தியா பலதுறைகளில் தன்னிறைவு காண்பதற்கு வழிகோலிய வரும் கூட அவரே.

மூன்று வெவ்வேறு காலகட்டங்களில் தாம் சந்தித்த தடைகளையெல்லாம் தகர்த்தெறிந்து, கொண்ட கொள்கை வழி நின்று சாதித்த மூன்று இமயங்களுக்கான நினைவுச் சின்னத்தை ஒரே இடத்தில் காண வேண்டுமாயின் கன்னியா குமரியில் மட்டுமே காண முடியும்.

சூரியோதயத்தை கன்னியா குமரியில் பார்ப்பதற்காகவே சுற்றுலாப் பயணிகள் அங்கு வருகிறார்கள். சூரியனின் உதயம் மட்டுமன்றி அஸ்தமனமும் கூட கன்னியாகுமரியில் அழகாய்த்தான் தெரிந்தது.

கடற்கரையிலுள்ள கருங்கல் மண்டபத்தில் தூண்களிற்கிடையே பிரகாசமாய்த் தெரியும் சூரியனின் அழகை வர்ணிக்க வார்த்தைகளில்லை.

கண்ணியாகுமரி செல்லும் ஒவ்வொருவரும் இயற்கையின் அற்புதத்தை வியந்தபடி பகவதி அம்மனின் அருளையும் வரலாற்று நாயகர்கள் மூவரை நேரிலே கண்ட நிறைவையும் ஒருங்கே பெற்ற திருப்தியுடன் மீளமுடியும்.

Saturday, May 8, 2010

கேரளத்தின் பெருமை பேசும் பத்மநாபபுர அரண்மனை


முக்கடல்களாகிய அரபிக் கடல், இந்து சமுத்திரம், வங்களா விரிகுடா ஆகிய மூன்றும் ஒன்றாகச் சங்கமிக்கும் கன்னியா குமரிக் கடற்கரை பற்றி அறிந்திருப்பீர்கள். இந்தியத் துணைக்கண்டத்தின் தென்கோடி மாவட்டமே கன்னியாகுமரியாகும்.

அது கேரள தமிழக மாநிலங்களின் எல்லை மாவட்டங்களிலும் ஒன்று. தமிழகத்திற்கே உரித்தானது. மிகவும் தொன்மையான வரலாற்றையுடையது. தமிழகத்தின் அடையாளமான வெம்மையின் ஆதிக்கம் கூட, சென்னை போன்ற மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் இங்கு குறைவாகவே இருக்கும்.

எங்கு பார்த்தாலும் குளிர்ச்சிதரும் தென்னை, இறப்பர் தோட்டங்களைக் கொண்டிருக்கும். பசுமையான நாகர்கோவில் பிரதேசமும் கன்னியாகுமரி மாவட்டத்திலேயே அமைந்திருக்கிறது.

யாழ்ப்பாணத் தமிழின் பாணியையும், மட்டக்களப்புத் தமிழின் பேச்சுத் தொனியையும் நாகர்கோவில் மக்கள் பேசும் தமிழில் தெளிவாக உணரலாம். தமிழகத்தைப் பொறுத்த வரையில் அவர்கள் பேசுவது மலையாளப் பாணியாகவே தெரியும். நாகர் கோவில், கேரள மாநிலத்தின் எல்லையில் இருப்பதால் மொழிவழக்கில் மலையாளத்தின் பாதிப்பு இருப்பது தவிர்க்க முடியாததே.

யாழ்ப்பாணப் பேச்சு வழக்கில் அடிக்கடி பிரயோகிக்கப்படும் ‘பின்ன’ போன்ற பல சொற்பதங்கள் அவற்றிற்கேயுரித்தான தொனி களுடன் பயன்பாட்டில் இருப்பது வியக்கவைக்கிறது. ஒன்றாய் இருந்த நிலம், கடலன்னை கொண்ட சீற்றத்தால் பிரிந்து தனித்தனியான தோ என்று பலர் ஊகங்களைத் தெரிவிக்கின்ற போதிலும், அவற்றை எல்லாம் வலுப்படுத்து கின்ற ஆதாரமாகவே நாகர்கோவில் மக்களின் கலாசாரம் தெரிந்தது.

நகர்கோவிலிலிருந்து கேரள மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரம் செல்லும் வழியிலே, தக்கலை எனும் இடத்தில் பத்மநாபபுரம் என்ற ஊர் இருக்கிறது.

கேரளத்து திருவாங்கூர் சமஸ்தானத்தின் கடைசித் தலைநகராக பத்மநாபபுரம் விளங்கியமைக்கு கம்பீரமாய் நின்று அழகு மிளிர வசீகரிக்கும் பத்மநாபபுரம் கோட்டையும் அரண்மனையும் சான்றுகளாய் அமைகின்றன.

எந்தவித ஆடம்பரங்களுமின்றிய இந்த அரண்மனை முழுவதையும் ஆக்கிரமித்திருக்கும் மரவேலைப் பாடுகளை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.

இந்த அரண்மனை 17 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் கட்டப்பட்டது. பின்னர், காலத்துக்குக் காலம் ஆட்சி புரிந்த மன்னர்களால் விஸ்தரிக்கப்பட்டது.

நவீன திருவாங்கூர் சமஸ்தானத்தின் மூலகர்த்தாவாக மன்னர் மாத்தாண்ட வர்மா கருதப்படுகிறார். இவரது ஆட்சிக் காலம் கி.பி. 1729 - 1758 வரையான காலப் பகுதியாகும். இக் காலப்பகுதியில் தான் திருவாங்கூர் சமஸ்தானத்தில் பல மறுமலர்ச்சிகள் ஏற்பட்டன.

மாளிகைத் தொகுதியின் பல பகுதிகள் இம்மன்னனின் காலத்திலேயே கட்டப்பட்டன. திருவாங்கூர் சமஸ்தானம் பலம்பொருந்திய சமஸ்தானமாக மாறியதும் கூட மன்னன் மார்த்தாண்ட வர்மாவின் காலத்திலேயே!

அரண்மனையில் வைக்கப்பட்டிருக்கும் வரலாற்று நிகழ்வுகள் தொடர்பான ஓவியங்களும் மன்னர் மார்த்தாண்ட வர்மாவுடனேயே தொடர்புபட்டவை. இந்த சமஸ்தானத்தின் கடைசி மன்னராக சிறி சித்திரதிருநல் பாவவர்மா (1931 - 1949) கருதப்படுகிறார்.

பிரித்தானியருடைய ஆட்சிக் காலத்திலும் இந்த சமஸ்தானம் சுதந்திரமாகவே இயங்கி வந்தது. சில கூரைகள் ஒரே மரத்திலே கடைந்தெடுக்கப்பட்ட வேலைப்பாடுகளையுடையவை.

அரண்மனையாகக் கருதுகையில் கேரளக்கட்டடக் கலை யின் பாணி ஆதிக்கம் செலுத்தினாலும் சில பகுதிகள் விஜயநகரப் பாணியையும், சில பகுதிகள் மேற்கத்தையப் பாணியையும் ஒட்டி அமைக்கப்பட்டிருக்கின் றன. ஏறத்தாழ 127 அறைகளையுடைய இவ்வரண்மனையில் பல அறைகள் இன்னும் பூட்டப்பட்டே காணப்படுகின்றன.

பத்மநாபபுர அரண்மனையின் படிகளும் வாயில்களும் ஒடுக்கமானவை. எதிரி களின் அச்சுறுத்தல் களிலிருந்து அரச குடும்பம் இலகுவாகத் தப்புவதற்கு ஏற்றவகையில் தான் அவை அவ்வாறு அமைக்கப்பட்டுள்ளனவோ என்று எழும் சந்தேகத்தை அரண்மனையில் காணப்படும் சுரங்கப் பாதை உறுதி செய்கிறது.

ஆறரை ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் அரண்மனை வளாகத்திலுள்ளே அருங்காட்சியகமொன்றும் அமைந்துள்ளது. தென்னிந்தியாவிலுள்ள அருங்காட்சியகங்களில், கல்வெட்டுக்களுக்கான மிகப் பெரிய அருங்காட்சியகம் இந்த பத்மநாபபுரம் அருங்காட்சியகமேயாகும்.

பத்மநாபபுரம் அரண்மனைக்குள் செல்லும் வாசலின் இடப்புறத்திலே, அரண்மனை கட்டப்பட்ட அதே பாணியிலேயே இந்த அருங்காட்சியகமும் அமைக்கப்பட்டுள்ளது. இக்கட்டடத் தொகுதியின் நிர்மாணப்பணிகள் 1962 இலே ஆரம்பிக்கப்பட்டு, அரண்மனையை ஒத்த பாணியுடனும் கட்டமைப்புடனும் 1993 இலே முடிவடைந்தது.

இங்கே வைக்கப்பட்டுள்ள பொருட்கள் விலை மதிக்க முடியாதவை. முன்னோர்களின் செல்வச் செழிப்பை உணர்த்தும் அவை, பார்வையாளர்களைப் பிரமிக்க வைக்கும் தன்மையன. அப்பொருட்களுக்குள் மரச்சிற்பங்கள், கருங்கற் சிலைகள், கல்வெட்டுக்கள், செப்பேடுகள், பழங்கால நாணயங்கள், முன்னைய காலங்களில் பாவிக்கப்பட்ட ஆயுதங்கள், வாள்கள், கேடயங்கள், அரண்மனையின் உப்பரிகை மாளிகையில் வைக்கப்பட்டிருக்கும் ஓவியப் பிரதிகள், திருவாங்கூர் சமஸ்தானத்தின் நிகழ்வுகளை விளக்கும் முப்பரிமாண விளக்கப் படங்கள் போன்றவற்றால் அருங்காட்சியகம் நிறைந்து காணப்படுகிறது.


பொருட்கள் யாவுமே மிகவும் நேர்த்தியாகவும் ஒழுங்காகவும் பேணப்படுகின்றன. நூதனசாலையில் செயற்கை வெளிச்சத்தின் பயன்பாடு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் பகலிலும் கூட இருள் சூழ்ந்த தன்மையொன்றைக் காணக் கூடியதாகவிருக்கிறது. இந்த அருங்காட்சியகமும் நாற்சார் வீடமைப்பை உடையது. இங்குள்ள பொருட்கள், முன்னைய காலங்களிலே பயன்படுத்தப்பட்ட போர் உத்திகளையும் தென் கேரளத்தின் சமூகக் கட்டமைப்புக்களையும் நன்கு விளங்குகின்றன.

இந்த அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள சிற்பங்கள், சிலைகள் மற்றும் கல்வெட்டுக்கள் யாவும் 9ம் நூற்றாண்டிலிருந்து 18ம் நூற்றாண்டு வரையிலான காலத்திற்குட்பட்டவை. 10 ஆம் நூற்றாண்டின் குபேரன் சிலையும், சப்த கன்னியர்களின் சிலையும், சிற்பக்கலையின் தாற்பரியத்தை எடுத்தியம்புகின்றன.

இங்கு காணப்படும் மரச்சிலைகளில் பெரும்பாலானவை பத்மநாபபுரத்திலுள்ள பழம்பெரும் கோயிலாகிய நீலகண்ட சுவாமி கோயிலின் பழைய தேரிலே காணப்பட்டவையாகும். இந்த மரச்சிலைகள் உலோகச் சிலைகளோ? என எண்ணுமளவிற்கு பளபளத்துக் கொண்டிருந்தன.

ஏறத்தாழ 300 வருடங்கள் பழைமையான சிலைகள் கூட, நேற்றுத்தான் செதுக்கி முடித்த புதிய சிலைகள் போல காணப்படுகின்றன.

மரச்சிலைகள், 17ம் நூற்றாண்டையும் அதற்குப்பிற்பட்ட காலத்தையும் சேர்ந்தவை. 17 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட காலத்துச் சிலைகள் யாவுமே கருங்கற்களால் ஆனவை. ஆனால் கலைநயகத்தைப் பொறுத்த வரையிலே மரச்சிலைகளும் கருங்கற் சிலைகளும் ஒன்றுக்கொன்று சளைத்தவையல்ல.

சிலைகளின் வடிவமைப்பிலுள்ள பரிமாணத் தொடர்புகளும் முகங்களில் காணப்படும் சிலைகளுக்கு உயிரோட் டத்தை வழங்குகின்றன. ஒவ்வொரு சிலையையும் செதுக்கி முடிக்க எத்தனை ஆண்டுகள் ஆகியிருக்குமோ? எத்தனை பேர் உழைத்திருப்பார்களோ? என்ற ஆச்சரியம் கலந்த வினாக்கள் அவற்றை பார்வையிடுவோர் மனதில் நிச்சயம் எழும். சிலைகள் வைக்கப்பட்ட மண்டபத்தைத் தாண்டிச் செல்ல, அடுத்து மண்டபத்தில் முன்னைய காலங்களிலே பாவிக்கப்பட்ட ஆயுதங்களுடன் வாள்கள், கத்திகள், கேடயங்கள், கைவிலங்குகள், கால்விலங்குகள் போன்றனவும் தூக்கிவிடுவதற்குப் பயன்பட்ட இரும்புக் கூண்டும் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. குற்றம் செய்வோருக்கும் துரோகிகளுக்கும் வழங்கப்பட்ட தண்டனையின் கொடூரத்தை தூக்கிலிடும் இரும்புக்கூடு தெளிவாக விளங்குகிறது.

ஆரம்ப காலங்களில், குற்றங்களுடன் தொடர்புடைய வர்களை இந்தக் கூட்டில் அடைத்து, திறந்த வெளிகளிலுள்ள மரங்களில் தொடங்கவிடுவார்களாம். தூக்கிலிடப்பட்டுள் மனிதனின் மாமிசத்தைக் கழுகுகள் உணவாகக் கொள்ளத் தொடங்க, அவன் மிகவும் கொடூரமான மரணத்தை மெல்ல மெல்ல எதிர்கொள்வானெனக் கூறப்படுகிறது.

அடிப்படை மனித உரிமைகளுக்கப்பாற்பட்ட இத்தகைய கொடூரமான தண்டனைகள் திருவாங்கூர் சமஸ்தானத்திலே நிலவிவந்தமை மறுக்கப்பட முடியாத உண்மையாகத்தான் இருக்கிறது.

இங்கே, திருவாங்கூர் சமஸ்தானத்தின் மன்னர்களும் தளபதிகளும் பாவித்த உடைவாள்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மன்னன் மார்த்தாண்டவர்மா, தளபதி டிலானாய் போன்றோரின் வாள்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை.

திருவாங்கூர் சமஸ்தானத்தின் பொற்காலமாக, மன்னன் மார்த்தாண்ட வர்மாவின் காலம் (கி. பி. 1729 - 1758) கருதப்படுகிறது. தளபதி டிலானாய் ஒரு ஒல்லாந்தராவார். அவரது திறமை கண்டு, மன்னர் அவரைத் தமது படைத் தளபதியாக்கினார். டிலானாயின் முயற்சியில் மன்னனின் சேனைகள் ஆயுதப் பயிற்சிகளைப் பெற்று மேலும் விஸ்தரிக்கப்பட்டன. மண்கோட்டைகள் எல்லாம் கருங்கல் கோட்டைகளாக விஸ்வரூபமெடுத்தன.

திருவாங்கூர் சமஸ்தானத்தின் வரலாற்றில் நடந்த முக்கியமான நிகழ்வு கள் முப்பரிமாண விளக்கப்படங்களாக வைக்கப்பட்டுள்ளன.

அவை மன்னன் மார்த்தாண்ட வர்மா வின் ஆட்சியையும், அவரைக் கொல்ல எட்டு வீட்டுப் பிள்ளைமார் செய்த சதிச் செயல்களையும் பிரமிக் கத்தக்க வகையிலே வெளிப்படுத்துகின்றன.

ஒருமுறை மன்னன், இறைவனைத் தரிசிக்கும் பொருட்டு கோயிலுக்குத தனியே சென்றிருந்தானாம். இதை அறிந்து கொண்ட எதிரிகள் மன்னனைக் கொல்லும் பொருட்டு, கோவிலின் வாசலிலே வாள்களுடன் காத்திருந்தனராம். கோவிலிலுள்ள மன்னனும் பூசாரியும் மட்டுமே இருந்தனராம். மன்னன் வெளியே வந்தால் மரணம் நிச்சயம் என்பதை உணர்ந்த பூசாரி, மன்னனைப் பணிந்து மன்னனது ஆடையை அணிந்து வெளியே வந்து எதிரிகளின் வாள் வீச்சுக்கு இரையாகினானாம். மன்னனோ பூசாரியின் உடையுடன் வெளியே வந்து தப்பிச் சென்றானாம்.

இது போன்ற பல சம்பவங்கள் முப்பரிமாண விளக்கப்படங்களாக உயிரோட்டத்துடன் உலாவருகின்றன.

அவற்றுடன் திருவாங்கூர் சமஸ்தானத்திலேயே பாவிக்கப்பட்ட நாணயங்களும் தனியாக வடிவமைக்கப்பட்ட பெட்டிகளில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.

இந்த சமஸ்தானம், வல்லமை படைத்த செழிப்பானதோர் அரசாக விளங்கிய காலங்களிலிருந்து பிரித்தானியரின் ஆட்சிக் காலத்திலும்கூட, திருவாங்கூர் சமஸ்தானத்தின் நாணயங்களும், தபால் தலைகளும் புழக்கத்திலிருந்திருக்கின்றன.

பொதுவாக திருவாங்கூர் சமஸ்தான நாணயங்களில், மகா விஷ்ணுவின் உருவங்களே அதிகளவில் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த சமஸ்தானத்தின் மன்னர்கள் யாவரும் தம்மை மகா விஷ்ணுவாகிய ஸ்ரீபத்மநாபனின் தாசர்களாகக் கருதி, அவன் பிரதிநிதிகளாக நல்லாட்சி புரிந்து வந்தனர். அதனாலேயே நமது சமஸ்தானத்தின் தலைநகருக்கு, பத்மநாபபுரம் எனப்பெயர் சூட்டி நாணயங்களிலும் மகா விஷ்ணுவின் உருவத்தைப் பொறித்தனர்.


நாணயங்கள் வைக்கப்பட்டிருக்கும் மண்டபத்தையடுத்து வருவது படிங்காலக் கல்வெட்டுக்கள் வைக்கப்பட்டுள்ள கூடமாகும். இந்தக் கூடமே தென்னிந்தியாவிலுள்ள, கல்வெட்டுக்களுக்கான மிகப் பெரிய காட்சிக் கூடமாகக் கருதப்படுகிறது. இங்கே, எண்ணற்ற கல்வெட்டுக்கள் கிரமமாக அடுக்கப்பட்டு, விபரங்கள் மலையாளம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் குறிக்கப்பட்டுள்ளன.

கிரந்தத் தமிழ், வட்டெழுத்துக் களில் எழுதப்பட்டுள்ள சமஸ்கிருதத் தமிழ், தமிழ், மற்றும் மலையாளம் கல்வெட்டுக்கள் பலவும் இங்கே காணப்படுகின்றன. அவற்றில் பெரும்பாலானவை 9ம் நூற்றாண்டுக்குப் பிற்பட்ட காலத்தைச் சேர்ந்தவை. வேணாடு, சோடி, பாண்டிய மன்னர்களின் கல்வெட்டுக்களும் காணப்படுகின்றன.

மன்னர்கள் கோயில்களுக்கு வழங்கிய நிலத்தானங்கள் மற்றும் பொருட் தானங்கள் தொடர்பான விடயங்கள் கருங்கற்களிலே கல்வெட்டுக்களாகப் பொறிக்கப்பட்டுள்ளன.

இவை தவிர, கோவில்களின் பூஜை முறைகளை ஒழுங்குபடுத்தியமை, கோயில்களின் சொத்துரிமை போன்ற பல தகவல்கள், காலத்துக்கும் அழியாத விதத்திலே ஆவணப்படுத்தப் பட்டுள்ளன. தென்குமரியில் உள்ள கோயிலொன்றுக்கு -விஜாதி இராஜசோழன் வழங்கிய நிலம் தொடர்பான செய்தி யைக் கூறும் கல்வெட்டு, சோழப் பேரரசு தென் குமரி வரை பரந்திருந்ததைத் தெள்ளத் தெளிவாக எடுத்தியம்புகிறது.

போரில் வீழ்ந்த வீரர்களுக்காக அமைக்கப்படும் நடுகற்கள் இரண்டும் இங்கே காணப்படுகின்றன. இந்த நடுகற்கள் 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. அரசர்கள், தமது நன்மையையும் கருதி கோவில்களுக்கு உப்பளங்களையும் நிலங்களையும் கோயில்களுக்குத் தானமாக வழங்கியதை 1 ஆம் குலோத்துங்க சோழனின் கல்வெட்டொன்று உணர்த்துகிறது.

பஞ்சம் நிலவுகின்ற காலங்களில் மன்னர்களால் வழங்கப்பட்ட வரிவிலக்கு பற்றிய குறிப்புக்களும் வீதிகளின் பெயர் மாற்றங்கள் மற்றும் குடியேற்றங்கள் தொடர்பான குறிப்புக்களும் கூடக் காணப்படுகின்றன. இந்த அருங்காட்சியகத்திலே வைக்கப்பட்டிருக்கும் செப்பேடுகளும் கூட அத்தகைய பல குறிப்புக்களைக் கொண்டுள்ளன.


தொல்லியல் துறையில் ஆர்வமுடைய புதியவர்களைப் பிரமிக்க வைத்து, மேலும் ஆர்வத்தைத் தூண்டும் அதிசயங்களாகவே இந்தக் கல்வெட்டுக்கள் தென்படுகின்றன. தேவையான இடங்களிலெல்லாம் சலிக்காமல் விளக்கமளிக்க பயிற்றப்பட்ட உதவியாளர்களும் இருக்கிறார்கள்.

மொத்தத்தில் வரலாறுகளின் மடியில் புரண்டோடி வருகின்ற காலத்தை, வரலாற்றின் துணையுடன் அசை போடும் சுகமான அனுபவத்தை பத்மநாபபுரம் அரண்மனையும் அருங்காட்சியகமும் தருகின்றனவென்றால் மிகையாகாது.

Friday, May 7, 2010

பாலங்களால்தண்ணீரும் பயணிக்குமா?பார்க்குமிடங்களெல்லாம் நெருக்கமாகக் காணப்படும் தென்னை மரங்கள்.... கோடைக் காலத்திலும் வற்றாத ஆறுகளென, கேரளத்தின் சாயலோடு காணப்படும் மலைப் பாங்கான பிரதேசம் மாத்தூராகும். தென் தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்திலே நாகர்கோயிலிருந்து ஏறத்தாழ ஒரு மணித்தியாலம் பயணத் தூரத்திலேயே இந்த சிற்றூர் அமைந்திருக்கிறது.

கன்னியாகுமரியிலிருந்தும் கேரளத்தின் தலைநகரான திருவனந்த புரத்திலிருந்தும் சம தூரத்தில் அமைந்திருக்கும் மாத்தூரிலே ஆசியாவிலேயே மிகவும் நீளமானதும் உயரமானதுமான தொட்டிப் பாலம் அமைந்திருக்கிறது.

தொட்டிப் பாலமெனப்படுவது இரண்டு உயரமான இடங்களுக்கிடையிலே காணப்படும் பள்ளத்தாக்கை ஒட்டி அமைக்கப்பட்ட வாய்க்காலுடனான பாலமாகும். நீரைக் கொண்டு செல்லும் நோக்குடன் அமைக்கப்பட்ட பாலத்தையே தொட்டிப் பாலம் அல்லது ஏதண்டமென அழைப்பர். சில வேளைகளில் கப்பல் போக்குவரத்துக்காகவும் தொண்டிப் பாலம் அமைக்கப்படுகிறது.

மாத்தூரிலே அமைக்கப்பட்ட தொட்டிப் பாலமும் அத்தகையதே. ஒரு காலத்தில் மலைப்பாங்கான காடுகளாகவிருந்த கணியான் பாறையென்ற மலையையும் கூட்டு வாயுப் பாறையென்ற மலையையும் இணைத்து, பறளியாற்று நீரைக் கொண்டு செல்வதற்காக அவ்விரு மலைகளுக்கும் நடுவே இப்பாலம் அமைந்துள்ளது.

தரைமட்டத்திலிருந்து ஏறத்தாழ 115 அடி உயரத்திலே நிர்மாணிக்கப்பட்டிருக்கும் இந்தப் பாலத்தின் நீளம் 1204 அடியாகவும் காணப்படுகிறது. 40 அடி இடைத்தூரத்தில் அமைக்கப்பட்ட 28 இராட்சதத் தூண்கள் இந்தப் பாலத்தைத் தாங்குகின்றன.

பறளியாற்றின் நீரானது 7 அடி உயரமும் 7 அடி அகலமுமுடைய பெரிய தொட்டிகளாகக் தொடுக்கப்பட்ட பகுதியால் கொண்டு செல்லப்படுகிறது. இரு மலைகளுக்கு நடுவில் தொட்டில் போன்ற அமைப்புடன் காணப்படுவதால் தொட்டில் பாலமெனவும் இப்பாலம் அழைக்கப்படுகிறது.


சக்கர நாற்காலியொன்று செல்லக்கூடிய அகலத்தை மட்டுமேயுடைய ஒடுங்கிய மேற்பகுதியினூடாக பாலத்தின் ஒரு அந்தத்திலிருந்து மறு அந்தத்திற்குச் செல்லமுடியும். இரு மலைகளுக்குமிடையே அடர்ந்து காணப்படும் தென்னை, இறப்பர் மரங்கள், நீல வானம், சலசலத்து ஓடிக்கொண்டிருக்கும் ஆறு என இயற்கை அன்னையின் அருட்கொடைகள் யாவும் ஒருங்கே தெரியும் காட்சியை விபரிக்க எவரிடமும் வார்த்தைகளிருக்காது.

பாலத்தின் மேற்பகுதியில் நடப்போரின் பாதுகாப்புக் கருதி, நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டாலும் நில மட்டத்திலிருந்து நாம் நிற்கும் உயரத்தைக் கற்பனை செய்தால், எமது கட்டுப்பாடின்றியே கால்கள் உதறத் தொடங்குவதைத் தடுக்க முடியாமல் போவதையும் கையிலிருக்கும் பொருட்கள் விழுந்துவிடுமோ என கை தன்பாட்டிலேயே அவற்றை இறுகப் பற்றிப் பிடிப்பதையும் உணரலாம். அனுபவித்த எவரும் அதை மறுக்கமாட்டார்கள்.

வெளியான இடமொன்றில் 115 அடி உயரத்திலிருந்து இயற்கையை ரசிப்பது கூட ஒரு சுகமான வித்தியாசமான அனுபவம் தான்.

இயற்கையின் அருள் மழையில் நனைந்தபடியே பாலத்தின் மறு அந்தத்தையடைந்தால் பார்க்குமிடங்களில் எல்லாம் இறப்பர் தோட்டங்கள் மட்டுமே தெரியும். தோட்டங்களில் உள்ள இறப்பர் மரங்களினிடையே சிறிய பெட்டிகள் காணப்பட்டன.

விசாரித்துப் பார்த்த போது தான் இறப்பர்த் தோட்டங்களிலேயே சிறுகைத்தொழில் முயற்சியாக, தேனீ வளர்ப்பும் இடம்பெறுவது தெரிந்தது. இறப்பர் மரங்களின் பூக்கும் காலத்தை ஆதாரமாகக் கொண்டே இந்தக் கைத்தொழில் முயற்சி நடைபெறுகிறது.

அதற்கான தேனீ வளர்ப்புப் பெட்டிகளே இறப்பர் மரங்களின் இடையே காணப்பட்ட பெட்டிகளாகும். ஆரம்பித்த இடத்துக்கு மீண்டும் வர இரு வழிகள் இருக்கின்றன. வந்த பாதையினாலே அதாவது தொட்டிப் பாலத்தின் மேற் பகுதியாலேயே திரும்பி வரலாம். அல்லாவிடின், பாலத்தின் அருகிலேயுள்ள படிக்கட்டுக்களால் திரும்பி வரலாம். பாலம் முடிவடையுமிடத்திலே தொடங்கும் படிக்கட்டுக்களின் வழியே குறிப்பிட்ட ஆழம் வரை இயங்கிப் பின் அங்கே அமைக்கப்பட்டுள்ள சுழல் படிக்கட்டுக்களின் வழியே ஆரம்பித்த இடத்தைச் சென்றடையலாம்.


சூழலின் வழி நெடுகிலும் பூந்தோட்டங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அழகுள்ள மலர்களைப் பறிக்கத் துறுதுறுக்கும் கைகளுக்காகவே பல இடங்களிலும் அறிவித்தல் பலகைகள் தொங்குகின்றன. ‘இங்குள்ள மலர்களைப் பறித்தால் 50 ரூபா அபராதம்!’ என்பதே அப்பலகைகள் தாங்கி நிற்கும் செய்தியாகும். ஆனால், பாலத்தைப் பார்வையிட, கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுவதில்லை.

இந்தப் பாலம் 1966 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. ஒரு காலத்திலே கன்னியாகுமாரி மாவட்டத்தின் விளவன்கோடு, கல்குளம் ஆகிய பகுதிகள் மிகவும் வறண்ட பிரதேசங்களாக மாறியிருந்தன.

அப்பகுதிகளுக்கான நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்தினால் விவசாயம் செழித்து வளங்கொழிக்கும் பிரதேசங்களாக அப்பிரதேசங்கள் மாறுமென எண்ணிய பெருந்தலைவர் காமராஜரின் முயற்சியால் உருவானதே இந்த மாத்தூர் தொட்டிப் பாலமாகும். அவரது பதவிக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம் அக்காலம் முடிவடைந்த பின்னரும் தொடரப்பட்டு பூர்த்தி செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

படிக்காத மேதை எனப் போற்றப்படும் காமராஜன் போன்ற நாட்டு நலனில் அக்கறையுள்ள பெருந் தலைவர்கள் ஒவ்வொரு நாட்டிலும் இருந்தால், உலக நாடுகள் யாவும் இன்று ஒரே நிலையில் இருந்திருக்கும்.

மாத்தூர் தொட்டிப் பாலத்தின் பயனாக பல ஹெக்டயர் விவசாய நிலங்கள் பயன் பெறத் தொடங்கின. தரிசு நிலங்கள் பல விவசாய நிலங்களாகின. கன்னியாகுமரி மாவட்டம் விவசாயத்தில் தன்னிறைவு கண்டது.

மாத்தூரில் உள்ள பாலம் மட்டும்தான் தொட்டிப் பாலமல்ல. உலகின் பல நாடுகளிலும் வெவ்வேறுபட்ட தொட்டிப் பாலங்கள் காணப்படுகின்றன.

தொட்டிப் பாலத்திற்குப் பின்னால் இருக்கும் தத்துவம் மிகவும் புராதனமானது. வரலாற்றிலே விவசாயத்தைத் தமது வாழ்வாதாரமாகக் கொண்ட சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் பயிர்களுக்கு நீரைப் பாய்ச்சுவதற்குத் தொட்டிப் பாலங்களைப் பயன்படுத்தினர். உரோம சாம்ராஜ்யத்தின் போது கட்டப்பட்ட தொட்டிப் பாலங்களுள் சில இன்னும் பாவனையில் இருக்கின்றன. பயிர்களுக்கு நீரைபாய்ச்சுவதற்கு மட்டுமன்றி பெரிய நகர்களுக்கு குடிநீரை வழங்குவதற்கும் இந்த உரோம தொட்டிப் பாலங்கள் பயன்பட்டிருக்கின்றன. இன்னும் பயன்பட்டுக்கொண்டிருக்கின்றன.

தொட்டிப் பாலங்கள் உரோம சாம்ராஜ்யத்துடன் தொடர்புபட்டவை என வரலாறு குறிப்பிட்டாலும் அவற்றின் அடிப்படைத் தத்துவத்தின் பின்னணியில் சிறந்த நீர்ப்பாசன முறைமைகளைப் பயன்படுத்திய எகிப்திய, ஹரப்பா நாகரிக மக்களும் காணப்படுகின்றனர்.
உரோம சாம்ராஜ்யம் பரவியிருந்த இன்றைய ஜேர்மனி முதல் ஆபிரிக்கா வரையான பல நாடுகளிலும் குறிப்பாக ரோம் நகரிலும் பல தொட்டிப் பாலங்கள் காணப்படுகின்றன.

இந்தியத் துணை கண்டத்திலும் பல புராதன தொட்டிப் பாலங்கள் காணப்படுகின்றன. துங்க பத்ரா நதிக் கரையோரம் அமைக்கப்பட்டிருந்த தொட்டிப்பாலம் 24 கி.மீ. நீளமாக இருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.

புராதன பாரசீகத்திலே, தொட்டிப் பாலத்தின் தத்துவத்தையொட்டிய அமைப்பு நிலத்துக்குக் கீழ் அமைக்கப்பட்டது. கோடைக்காலங்களில் நீரைப் பாய்ச்சுவதற்கு இந்த முறைமை வினைத்திறன் மிக்கதாகவிருந்தது. நிலத்திற்குக் கீழாக நீரைக்கொண்டு செல்வதால், வெப்பம் காரணமாக இழக்கப்படும் நீர் இழிவளவாகக்கப்பட்டிருந்தது.

தென்னமெரிக்காவின் பெரு நாட்டிலே இன்றும் பாவனையில் இருக்கும் தொட்டிப் பாலங்கள் ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை.

புராதன இலங்கையிலும் கூட தொட்டிப் பாலங்களின் பாவனை காணப்பட்டதாக வரலாறு கூறுகிறது.

இன்றைய நவீன யுகத்திலே, ஐக்கிய அமெரிக்கா தனது நகரங்களுக்கு நீரைக்கொண்டு செல்வதற்காக பாரிய தொட்டிப் பாலங்களைப் பயன்படுத்துகிறது. அவை ஒவ்வொன்றும் பலநூறு கிலோ மீற்றர்கள் நீளமானவை. கொட்டிப் பாலத்தின் புதிய பரிமாணமாகவே குழாய் வழிப் பாலங்கள் காணப்படுகின்றன.

கைத்தொழில் புரட்சியுடன் உருவாகிய கால்வாய்கள் தொட்டிப் பாலங்களின் ஒரு பகுதியாகவே அமைக்கப்பட்டன.

முன்னைய காலங்களில் அமைக்கப்பட்ட தொட்டிப் பாலங்கள் நீரை ஊடுபுகவிடக் கூடிய பதார்த்தங்களால் அமைக்கப்பட்டன. ஆகையால் நீரைக் கொண்டு செல்கையில் குறிப்பிடத்தக்களவு நீர் இழக்கப்படுவதும் தவிர்க்க முடியாததாகியது. பிற்காலங்களில் நீரை ஊடுபுகவிடாத கொங்கிaற் பல் பகுதியங்கள் மற்றும் நீரைக் கசியவிடாத மண் போன்ற பதார்த்தங்களால் கட்டப்பட்டன.

பாலங்கள் நீரைக் காவுமென்பது எம்மில் பலரும் கேள்விப்பட்டிராத ஒரு விடயமே. ஆனால் தொட்டிப் பாலங்களின் பின்னணியிலிருக்கும் வரலாற்றை ஆழ நோக்குகையில் நாம் எந்தக் காலத்தில் இருக்கிறோம் என்பதும் புரிய வேண்டும். 2000 வருடங்களுக்கு முன்னரே இந்தத் தொழில்நுட்பங்கள் பாவனையில் இருந்திருக்கின்றன. அத்தகையதோர் சமூகத்தில் வழித்தோன்றிய நாங்கள் அதே வழியில் புதியதோர் உலகொன்றை உருவாக்க முயல வேண்டும்.

அதுமட்டுமன்றி எமது முன்னோரின் தொழிநுட்ப அறிவினை மேன்மேலும் ஆராய்ந்து அவ்விடயங்களை ஆவணப்படுத்தி எதிர்காலச் சந்ததியும் பயன்பெற வகை செய்ய வேண்டும். இல்லையேல் எதையுமே அறியாத, அறியும் ஆர்வமில்லாத எதிர்காலச் சந்ததியொன்று உருவாக நாமே காரணமாகிவிடுவோம். இவையாவும் எமது முயற்சியில் மட்டுமே தங்கியுள்ளன ஆகையால் இத்தகைய விடயங்களுக்கான தேடலை இன்றே ஆரம்பிப்போமாக!