Tuesday, February 23, 2010

காலநிலை மாற்றப் பரிசோதனையில் நீங்களும் பங்களிக்கலாம்!

எமது கலாசார முறைமைகள் சூழலையும் இயற்கையையும் அனுசரித்துப் போகக்கூடிய வகையில் அமைக்கப்பட்டவை

பூகோள வெப்பத்தை மூட்டிவிட்டது
சூரிய கதிர்களா?
பச்சையில்ல விளைவை ஆக்கும்
கரிப்புகை வாயுக்களா?
ஓசோன் குடைதனில்
விழும் ஓட்டைகளா?
வாயு மண்டலத்தில் முகில் மந்தை
உண்டாக்கும அண்டக்கதிர்களா?
அல்லது பம்பரமாய் சுற்றிவரும் பூமியின்
அச்சாணி சரிந்து போனமையா?
அல்லது எரிமலை கக்கிடும்
கரிப்புகை மண்டலமா?
ஆண்டுதோறும் காடுகள் எரிந்து
மூட்டும் புகையா?
பனியுகமும் கனல்யுகமும்
மீளும் நியதியை
குழப்பும் மனிதனா?
என்கிறது இணையத்தில் கண்ட வசனக் கவிதையொன்று!

மனிதன் கண்டமகத்தான விஞ்ஞான வளர்ச்சி கண்டு கதிகலங்கி நிற்கிறது அவன் அன்னை பூமி. பின்விளைவுகள் பற்றிய சிந்தனையின்றி விஞ்ஞானம் கண்ட அதீத வளர்ச்சி எதிர் விளைவுகளும் துரிதமாக உருவாகத் தலைப்பட்டதால், இன்று மட்டு ப்படுத்தப்பட்டுள்ளது.
காலம் கடந்து மனிதன் பெற்றிருக்கும் சுடலை ஞானம், இன்று அவனைப் பேண்தகு வழிமுறைகள் தொடர்பாகச் சிந்திக்கவைத்துள்ளது. இன்று முழு உலகுமே அவதானித்துக் கொண்டும் அவதானத் துடனும் இருக்கும் மிக முக்கியமான சூழற் பிரச்சினையாக காலநிலை மாற்றம் கருதப்படுகிறது.

எழுதும் போதோ அல்லது சொல்லும் போதோ ‘காலநிலை மாற்றம்’ எனும் பதம் மிகவும் எளிய பதமாகத் தென்பட்டாலும், அதனை விளக்குதல், மிகவும் சிக்கலானது. காலநிலை மாற்றத்தில் தெரிந்த பல காரணிகளும் தெரியாத பல காரணிகளும் செல்வாக்குச் செலுத்துகின்றன.

துருவப் பகுதிகளிலிருந்து அயனமண்டலப் பகுதிகள் வரை பல நாடுகளையும் சேர்ந்த விஞ்ஞானிகள் ஆய்வு நிலையங்களை நிறுவி ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இத்தகைய ஆய்வுகள் ஒரு சில நாட் களுடனோ அல்லது ஒரு சில மாதங் களுடனோ முடிந்து விடுபவை அல்ல. பல வருடங்களாக, ஏன் சில தசாப் தங்களாகக்கூட ஒரே ஆய்வுகள் நடந்தபடி இருக்கின்றன. இத்தகைய ஆய்வுகள் முடிவடைந்து அவற்றின் முடிவுகள் அங்கீகரிக்கப்பட்டுப்பின் விஞ்ஞான சஞ்சிகைகளில் வெளியிடப்பட மிகவும் நீண்ட காலம் எடுக்கும். அத்துடன் விஞ்ஞான சஞ்சிகைகள் ஒரு குறிப்பிட்ட படித்தவர்க்கத்தினரை மட்டுமே சென்றடைகின்றன.

இதனால் மிகவும் முக்கியமான, யாவராலும் அறியப்பட வேண்டிய பல விடயங்கள் சாதாரண பொதுமக்களைச் சென்றடைவதில்லை. அதற்கு பலரும் பலவிதமான நியாயப் பாடுகளை முன்வைக்கின்றனர். விஞ் ஞானமெனப்படுவது யாவருக்கும் பொதுவான விடயமாகக் கருதப்பட்டாலும் விஞ்ஞான மொழியைத் தெரிந்தவர்களால் மட்டுமே அதனைத் தெளிவாகப் புரிந்து கொள்ளக்கூடியதான ஒரு நிலையே இன்று காணப்படுகிறது.

விஞ்ஞானத்தால் கண்டுபிடிக்கப்படும், எதிர் கூறப்படும் விடயங்களின் பயனாளிகள் சாதாரண பொதுமக்களேயாகையால், விஞ்ஞானம் கூறும் விடயங்கள் எளிமைப்படுத்தப்பட்டு தொடர்பாடல் ஊடகங்கள் மூலம் பொதுமக்களைச் சென்றடைய வேண்டும். இதையே தொடர்பாடல் விஞ்ஞானம் என்பர்.

‘வெப்பமடையும் கோளில் தொடர்பாடல் விஞ்ஞானம்’ எனும் தலைப்பில் வள வாளர்களுடனான கலந்துரையாடலொன்றை கொழும்பு பிரிட்டிஷ் கவுன்சில் அண்மையில் ஏற்பாடு செய்திருந்தது. பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சூழல் தொடர்பான நிகழ்ச்சியொன்றின் தொகுப்பாளரும் பேச்சாளருமான காலநிதி, போல் ரோஸின் உரை நிகழ்ச்சி நிரலில் முன்னுரிமை வகித்தது. நிகழ்வின் பிரதம அதிதியாக விஞ்ஞான, தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண கலந்து கொண்டார்.

ஹிVரி ஆசியா பசுபிக்கின் இயக்குனரும் விஞ்ஞான எழுத்தாளருமான நாளக குணவர்தன கலந்துரையாடலுக்குத் தலைமை வகித்தார். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர் பேராசிரியர் எம்.டி.எம். ஜிப்ரி, இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஜயந்த வட்டவிதானகே மற்றும் கலாநிதி போல்ரோஸ் ஆகியோர் கலந்துரையாடலின் வளவாளர்களாகச் செயற்பட்டனர்.

இக் கலந்துரையாடலுக்கு ஊடகவிய லாளர்கள், விரிவுரையாளர்கள், சூழல் மற்றும் விஞ்ஞான அமைப்புக்களின் தலைவர்கள், மற்றும் சூழல் ஆர்வலர்கள் போன்ற பல்வேறுபட்ட தரப்பினரும் வருகைதந்திருந்தனர். கலாநிதி போல் ரோஸ், அந்தாட்டிக்காவில் காலநிலை மாற்றம் தொடர்பான ஆய்வொன்றில் ஈடுபட்டிருந்த விஞ்ஞானிகளுடன் இணைந்து பணியாற்றிருப்பின் இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.

ஆவணப்படங்கள் மற்றும் ஏனைய தொடர்பாடல் முறைமைகள் மூலம் அந்த ஆய்வு தொடர்பான விடயங்களை சமூகத்துக்கு எடுத்தியம்புவதே இவ்வாய்வில் இவரது பணியாகும். அது இலகுவானதல்ல. ஆய்வாளர்களுடன் துருவப்பகுதியான அந்தாட்டிக்காவியிலேயே தங்கி தனது தொடர்பாடல் முறைமைக்குத் தேவையான தரவுகளையும் தகவலையும் சேகரித்துப் பின் ஒழுங்கமைத்து பாமரருக்கும் விளங்கக்கூடிய வகையிலே வெளிப்படுத்த வேண்டும். இந்த ஆய்வு புராதன கால மெதேன் வாயு பற்றியதாகும்.

காலநிலை மாற்றத்தில் பெரும்பங்கை வகிக்கும் காரணிகளுள் வளிமண்டலத்தில் வெளியேற்றப்படும் மெதேன் வாயுவின் அளவும் ஒன்றாகும். இன்றைய காலகட்டங்களில் பல்வேறு மனித செயற்பாடுகளாலும் வழக்கமான இயற்கைச் செயற்பாடுகளாலும் மெதேன் வாயு சுழலுக்கு வெளிவிடப்படுகிறது.

இவ்வாயுவின் அளவில் ஏற்பட்ட சடுதியான அதிகரிப்பு பூமியின் வெப்பநிலையை அதிகரிப்பதில் பங்களிக்கிறது. பூமியின் வெப்பநிலை அதிகரிப்பும் அதனால் ஏற்படும் இதர விளைவுகளும் காலநிலை மாற்றத்தைத் தோற்றுவிக்க ஆரம்பித்துள்ளன. சிக்கலான இந்த காலநிலை மாற்றத்தில் முக்காலங்களிலும் மெதேனின் பங்களிப்பு எப்படி இருந்தது? எப்படி இருக்கிறது? எப்படியிருக்கும்? என ஆராய்வதே இவ்வாய்வின் நோக்கமாகும்.

பனியானது காலம் காலமாக ஒரு படையின் மேல் ஒரு படையாக படிந்தபடி செல்லும். புறக்காரணிகளால் பனி உருகுவதாயின், மேலுள்ள படைகளே முதலில் உருகத்தொடங்கும். பனியுடன் சேர்ந்து மெதேன்வாயுவும் உறை நிலையில் காணப்படும். துளை கருவிகள் மூலம் பனிப்போர்வைகளில் சிறிய ஆனால் ஆழமான துளைகளைவிட்டு பெறப்படும் உருளை வடிவான பனிக்கட்டி மாதிரிகளைச் சேமித்து ஆய்வுக்குட்படுத்துவர்.

அந்தாட்டிக்கா கண்டத்திற்கான மின்சார விநியோகத்திலிருந்து சகல வசிதிகளின் விநியோகமும் ஏனைய கண்டங்களிலிருந்தே பெறப்பட வேண்டும். ஆகையால் உயர் சக்தித் தேவையையுடைய இயந்திரங்களை இப்பகுதியில் பயன்படுத்துவது சற்றுக் கடினமானது.


இதன் காரணமாக துளை கருவிகளை ஆய்வாளர்களே இயக்குவர். இயலாத பட்சத்தில் மட்டும் சிறியளவிலான இயந்திங்களைப் பயன்படுத்தித் துளையிடுவர். இந்தத்துளையிடும் கருவிகள் இத்துளை கருவிகள் வெவ்வேறு பனிப்படைகள் கொண்டிருக்கும் பனிக்கட்டி மாதிரிகளை இலகுவாகப் பெற்றுக்கொள் வதற்குத் துணைபுரிகின்றன.

இவ்வாறு பெறப்பட்ட பனிக்கட்டி மாதிரிகள் பெயரிடப்பட்டு பனிக்குகைகளினுள் சேமிக்கப்பட்டுப் பின்னர் ஆய்வுக்காக ஆய்வு நிறுவனத்தின் தலைமையகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.

இம்மாதிரிகள் சாதாரண ஆய்வுகூடப் பரிசோதனை மாதிரிகள் போல சிறிதளவானவையல்ல. ஒரு மாதிரியே பல தொன்கள் நிறையுடையதாக இருக்கும். ஆய்வுப் பிரதே சத்தில் வைத்தே இப் பனிக்கட்டி மாத்தி ரியை உருக்கி புராதன மெதேனைப் பிரித் தெடுக்கும் செயற்பாட் டிலும் ஆய்வாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

பல தொன்கள் நிறை யுடைய பனிக்கட்டி மாதிரியை உருக்கி னால் ஒரு சீனிப் பருக்கையின் ஒன்றில் மூன்று பங்களவான மெதேன் பெறப்படும். இந்தமெதேன் மாதிரியை ஆய்வுக்குட்படுத்திப் பெறப்படும் முடிவுகளினடிப்படையில் புராதன காலத்தின் காலநிலை தொடர்பான முடிவுகளையோ அல்லது ஊகங்க ளையோ பெறமுடியுமென எதிர்பார்க்கப் படுகிறது.

அதே சமயம் அவற்றினடிப்ப டையிலும் காலநிலையின் தற்போதைய போக்கினடிப்படையிலும் எதிர்காலத்தின் காலநிலையை ஓரளவு துல்லியமாக எதிர்வு கூற முடியுமென விஞ்ஞானிகள் எதிர்ப்பார்க்கின்றனர். ஒவ்வொருவருடமும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு முடிவுகளின் போக்கு அவதானிக்கப்படும்.

இன்று சர்ச்சைக்குரிய விடயமாகி விட்ட ‘காலநிலை மாற்றம்’ தொடர்பான பரந்த அறிவைப்பெறவும், அதை ஏற்ப டுத்தும் நேடியான மற்றும் மறைமுகமான மனித செயற்பாடுகளை இனங்கண்டு அவற்றை எதிர்காலத்தில் தவிர்ப்பதற்கும் பெருந்துணை புரிகின்றன.

இச்செயற்பாடுகளின் முக்கிய பங்காளி களான சாதாரண மனிதர்களை விஞ்ஞான ஆய்வுகள் சென்றடைவதற்கு வெகுசனத் தொடர்பு ஊடகங்களின் அர்ப்பணிப்பும் ஆர்வமும் மிகவும் முக்கியமானதாகும்.

எல்லா விஞ்ஞா னிகளிடமும் சிக்கலான விடயங்களை பாமரருக்கும் விளங்கக்கூடிய வகையிலே வெளிப்படுத்தும் திறன் காணப்படாது. அதேசமயம் சில சிறந்த ஊடகவியலா ளர்களால் கூட விஞ்ஞானம் தொடர்பான விடயங்களைத் தமது ஊடகங்களில் தெளிவாக வெளிப்படுத்த முடியாமல் போகும். இந்நிலையில் தான், சிக்கலான விடயங்களையும் தெளிவாக விளக்கக்கூடிய விஞ்ஞான ஆர்வலர்களின் தேவை அவசியமாகிறது. கலாநிதி போல் ரோஸ் போன்றோரும் அத்தகையவர்களே.

இலங்கையிலே அத்தகைய சிக்கல்களைத் தவிர்ப்பதற்காக ஆர்வமுள்ள விஞ்ஞானிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனர். விஞ்ஞானம் தொடர்பான விடயங்களை மக்களுக்கு இலகுவாக விளக்குவதற்குத் தேவையான திறன்களை அவர்களிடம் விருத்திசெய்யும் வகையில் பயிற்சிப் பட்டறைகள் நடத்தப்பட்டு வருகின்றன. தேசிய விஞ்ஞான மன்றம் இவற்றிற்கான ஏற்பாடுகளை மேற்கொணடு வருவதாக கலாநிதி ஜயந்த வட்டவிதானகே தெரிவித்தார்.

பெரியளவிலான பொருட் செலவுடன் பல வருடங்களாகத் தொடர்ந்து மேற் கொள்ளப்பட்ட பல விஞ்ஞான ஆய்வுகள் கூட விஞ்ஞான சஞ்சிகைகளில் வெளி யிடப்பட்ட பின்னர் பெட்டிகளுக்குள்ளும் நூலகங்களிலும் முடங்கிப்போவது இன்று நாம் கண்கூடாகப் பார்க்கின்ற விடயமாகும். இத்தகைய ஆய்வுகள் பொதுமக்களைச் சென்றடைவதிலும் பல நடைமுறைச் சிக்கல்கள் காணப் படுவதாக வளவாளர்கள் தெரிவித்தனர்.

மருத்துவ ரீதியான ஆய்வுகளைப் பொறுத்தவரையில், முதலில் எலிகளிலேயே கருதுகோள்கள் பரிசோதிக்கப்படும். பரிசோதனை முடிவுகள் மேலதிக ஆய்வுக்காக விடப்படும். இத்தகையதொரு நிலையில் இவ்விடயங்கள் தொடர்பான செய்திகளோ அல்லது நிகழ்ச்சிகளோ பொதுமக்களைச் சென்றடைந்தால் அவை பிழையான எண்ணக்கருக்களை அவர்கள் மத்தியில் தோற்றுவிப்பதோடு சில வேளைகளில் விபரீதமான விளைவுகளையும் எற்படுத்தலாமெனக் கருதப்படுவதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

அதேபோல விஞ்ஞான ஆய்வுகளை பொதுமக்களுக்கு வெளிப்படுத்துகையில், அறிவைப் பெறும் ஒவ்வொருவரும் தமது நிலைகளுக்கமைய ஒவ்வொருவிதமாக விளங்கிக் கொள்வர். அவர்கள் தவறாக விளங்கிக்கொள்ளும் பட்சத்தில் பாரதூரமான எதிர்விளைவு ஏற்படுவதைத் தவிர்க்க முடியாமல் போகும். அத்துடன் அவர்கள் மத்தியில் அவ்விடயம் தொடர்பான குழப்பம் ஏற்பட வழிவகுக்கும்.

இன்று வாதத்திற்கெடுக்கப்படும் ‘தேங்காயெண் ணைய், உடல் நலத்துக்கு உகந்ததா? ‘8னிவிளைவிப்பதா?’ எனும் சந்தேகத்தை உதாரணமாகக் கூறலாம். இத்தகைய சந்தேகங்களுக்கான முடிவுகள் ஆய்வுகளின டிப்படையிலேயே பெறப்படுகின்றன. இன்று உண்மையெனக் கூறப்படும் விடயமொன்று நாளை பொய்யென நிருபிக்கப்படலாம்.

விஞ்ஞானம் அத்த கையது. அதன் எல்லைகள் வரையறுக் கப்படவில்லை. எனவும் வளவாளர்கள் தெரிவித்தனர். இந்த உண்மையை உண ரும் பக்குவம் பாமரருக்கு ஊட்டப்பட வேண்டும். அதற்கு விஞ்ஞானிகளுடன் கைகோர்த்து நிற்க வேண்டியது வெகுசனத் தொடர்பு ஊடகங்களின் கடமையாகும்.

விஞ்ஞான விடயங்களையும் சூழல் தொடர்பான பிரச்சினைகளையும் மக்கள் விளங்கிக் கொள்வதில் அவர்களது மனப் பாங்குடன் சமூக கலாசார நடைமுறைகளும் செல்வாக்குச் செலுத்துகின்றன. சிறு வயது முதலே அவர்களின் மனப்பாங்கில் மாற்றத்தை ஏற்படுத்துதல் மூலமே விஞ் ஞான ஆய்வுகள் மக்களைச் சென்றடைய வழிவகுக்கப்படும். அப்போதுதான் பாமரரிலிருந்து சகலரும் ஒன்றிணைந்து காலநிலை மாற்றத்தின் போக்கைப் பின் நோக்கித் திருப்பமுடியும்.

தற்போது பொதுமக்களின் பாவனைக்காகத் திறந்து விடப்பட்டுள்ள காலிமுகத்திடல் தினமும் அதிகாலையில் காட்சியளிக்கும் கோலம் மிகவும் வருந்துதற்குரியது. பச்சைதிடலெங்கும் பொலித்தீன் குப்பைகள் நிறைந்து காணப்படும். அவற்றைக் கருத்தில் கொள்ளாமல் புற்றரைக்கு நீர் பாய்ச்சப்படும் போது பொலித்தீன் குப்பைகளுடன் சேர்ந்து காணப்படும் கரையக்கூடிய மாசுக்கள் இலகுவில் தரைக்குள் ஊடுருவிவிடும்.

மதிய வேளைக்குள் சூழல் சேவைகள் பிரிவினரால் குப்பை கூளங்கள் அகற்றப்படுகின்ற போதிலும் நாட்கள் நகர, தலை நகரின் பொழுது போக்கிடங்களிளொன்றான காலி முகத்திடலும் மாசுற்ற பகுதியாக மாறி விடுமோ என்றே எண்ணத்தோன்றுகிறது. இந்நிலைக்கான பொறுப்பையேற்க வேண்டியவர்களும் நாங்களே.

‘சிறு துளி பெருவெள்ளம்’ என்ற முதுமொழி சொல்ல விளையும் கருத்து சூழலை மாசுபடுத்துவதற்கும் பொருந்தும். தலைநகரின் வனப்பைக் கூறும் காலிமுகத்திடலில் சிறியது தானே என நினைத்து நாமொவ்வொருவரும் போடும் குப்பைகள் தான், அதிகாலையில் இயற் கையை இரசிக்க வேண்டிய காலி முகத்திடலைநோக்கி முகத்தைச் சுழிக்கவைக்கிறது. இங்கு எம் ஒவ் வொருவரையும் தவிர வேறு எவரையும் குறைகூற முடியாது. இந்நிலையில் தான், எமது மனப்பாங்குகள் மாற்றப்பட வேண்டியது அவசியமாகிறது.

கீழைத்தேயக் கலாசார முறைகள் சூழலையும் இயற்கையும் அனுசரித்துப் போகக்கூடிய வகையில் அமைக்கப்பட்டவை. இன்று நாம் எமது கீர்த்தி மிகு கலாசா ரத்தைத் தொலைத்துவிட்ட அதேநேரம் மேலைத்தேயக் கலாசாரத்துக்கும் ஈடுகொடுக்கமுடியாமல் தத்தளிக்கிறோம். சட்டதிட்டங்களுக்கு அடிபணிய மறுக்கின்ற அலட்சியப்போக்கு எம்மத்தியில் இல்லா தொழிக்கப்பட வேண்டும்.

சமூகத்தின் வெவ்வேறு பிரிவுகள், விடயங்களை வெவ்வேறுவிதமாக ஏற்றுக்கொள்கின்றனர். அத்தகையதொரு நிலைமாற்றப்பட வேண்டும். எமது கல்வித் திட்டம் குரு மையக் கல்வி முறைமையிலிருந்து மாணவர் மையக் கல்வித் திட்டமாக மாற்றப்பட்டமை கூட தேவைப்படும் மனப்பாங்கு மாற்றத்திற்கான முதலடியாகக் கருதப்படலாம்.

அண்மையில் ஆய்வொன்றிற்காக சிங்கராஜவனத்தின் எல்லையோரக் கிரா மங்களுக்குச் சென்ற போது, சட்டவிரோதமாக மரங்களை வெட்டுதல் தொடர்பாக அக்கிராமவாசிகளிடம் வினவினோம். அதற்கு வனத்திலுள்ள மரங்களைச் சட்டவிரோதமாக வெட்டுதல் சூழலுக்குத் தீங்கை ஏற்படத்து மெனத் தமது பிள்ளைகள் கூறுவதால் தற்போது தாம் அத்தகைய நடவடிக்கைகளின் ஈடுபடுவதில்லையெனத் தெரிவித்தனர். அவர்களது கூற்றின் உண்மைத்தன்மை உறுதிப்படுத்தப்படாத போதிலும், இச் சம்பவத்தை கல்வித்திட்டத்தால் ஏற்பட்ட மனப்பாங்கு மாற்றமாகக் கருதலாம்.இவ்வாறு மக்களின் மனப்பாங்குகளில் மாற்றத்தையேற்படுத்துவது தனிநபருடன் சமூகமும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய கடப்பாடாகக் கருதப்படுகிறது. ஒரு ஆய்வை முடித்து வெளியிடப் பல வருடங்கள் எடுத்த காலம் போய் இன்று சகலனவும் விரைவாக வெளியிடப்படுகின் றன. இணையத் தொழில்நுட்பமும் பெருந்துணைபுரிகிறது. ஆய்வு முடிவுகளின் துல்லியம் முன்னைய காலங்களைவிடத் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. அதற்கு துரித வளர்ச்சி காணும் தகவல் தொழில்நுட்பம் உதவி புரிகிறது.

பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், காலநிலை மாற்றப் பரிசோதனையொன்றை றடைமுறைப்படுத்தி வருகிறது. ‘சுப்பர் கணனி’ எனப்படும் உயர் வினைத்திற னுடைய கணனிகளைக் கூட்டாகப் பயன்படுத்துவதைவிட தகவல் தொழில் நுட்பத்தையும் இணையத்தொழில் நுட்ப த்தையும் ஒன்றிணைத்து உலகமெங்கும் பரம்பிய கணனிகளைத் தோற்றுவிப்பதன் மூலம் இப்பரிசோதனையை மேற்கொ ள்கிறது.

இப்பரிசோதனைத் திட்டத்தில் கணனியை உடைய எவரும் இணைந்து தமது கணனியின் நினைவகத்தில் பாவிக்கப்படாமல் இருக்கும் பகுதியை இத்திட்டத்திற்குப் பயன்படுத்தலாம். பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்ட மென்பொருளொன்றை தரவிறக்கி எமது கணனியிலும் இயங்கவிடலாம். அம்மென்பொருள் உலகிலுள்ள ஏனைய அம்மென் பொருட்களுடன் இணையத் தொழில்நுட்பத்தால் இணையும். காலநிலை மாற்றம் தொடர்பாக விஞ் ஞானிகளால் பெறப்பட்ட தரவுகளை இணைந்த இம்மென்பொருள் கூட்டு ஆய்வு செய்யும்.

மிகவும் செலவு குறைந்த ஆனால் வினைத்திறன் மிக்க இந்தத் திட்டம் கூட தொடர்பாடல் விஞ்ஞானத்தின் பயனேயாகும். உலகில் கணனியும் இணைய வசதியுமுள்ள எவரும் இத்திட்டத்தில் பங்கெடுக்கலாமென்பது காலநிலை மாற்றம் தொடர்பான விழிப்புணர்வை சகலரிடமும் ஏற்படுத்த வழிவகுக்கிறது.

ஆய்வு முடிவுகள் தொடர்பான விளக்கப்படங்களை www.bbc.co.uk என்னும் இணைய முகவரியில் பார்வையிடலாம். நீங்களும் உங்கள் பங்களிப்பைச் செலுத்தலாம். அதற்கான பாதை www.bbc.co.uk > BBC > science & Nature > Climate Change Experiment . இவ்வாறு வடிவமைக்கப்பட்ட பரிசோதனைகள் கடந்தகாலங்களுக்கான முடிவுகளைப் பிழையாகத்தந்தால் அவை நிராகரிக்கப்படும். சரியாகத்தந்தால் அவ்வடிவமைப்பு எதிர்காலத்துக்குப் பாவிக்கப்படுமென கலாநிதி போல் ரோஸ் குறிப்பிட்டார்.

சமூகத்தின் மனப்பாங்கை மாற்ற சமய அமைப்புக்களினால் தான் முடியுமெனில், அவற்றினூடு மாற்றத் துக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். கொள்கை வகுப்பாளர்களும் அரசுகளும் இணைந்து, அரசியலுக்கு மட்டுமே முக்கியத்துவத்தை வழங்காமல் சூழலுக்கும் இயற்கைக்கும் சேர்த்து முக்கியத்துவத்தை வழங்கினால் வெற்றி, மனித இனத்துக்கு மட்டுமல்ல! சகல ஜீவராசிகளுக்குமே!


2 comments:

ARV Loshan said...

அருமையான விளக்கங்கள். அழகான தமிழில்.
சூழல் பற்றிய உங்கள் நுணுக்கமான பார்வையும் ஆர்வமும் இயற்கையின் மீதான உங்கள் அக்கறையும் பெருமிதம் தருகின்றது.
இன்று தான் உங்கள் தளம் பற்றி அறிந்தேன். தொடர்ந்தும் வாசிக்கிறேன்.
வாழ்த்துக்கள்.

என்றும் அன்புடன், சாரதாஞ்சலி-ம said...

நன்றி அண்ணா..:-)

Post a Comment