Tuesday, February 9, 2010

உலகின் மீன் வளம் இன்னும் நாற்பது வருடங்கள் தானா?

மீனுணவென்றால் என்னவென்று வினவப் போகிறது எதிர்கால சந்ததி

இன்று சாதாரண மக்களும் உணரக்கூடிய பிரச்சினைகளான பருவகால மாற்றங்கள் கடலரிப்பு, சூழல் வெப்பநிலை உயர்வு, போன்ற சூழல் பிரச்சினைகள், மக்கள் மத்தியில் தாம் வாழும் சூழலின் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுவதற்குக் காரணமாகிவிட்டன.

காலநிலை மாற்றம், புவி வெப்ப நிலையுயர்வு, அயன மண்டலக் காடுகளின் அழிப்பு போன்ற சூழல் பிரச்சினைகளின் வரிசையில் இன்று பலராலும் பேசப்படும் மிக முக்கியமான பிரச்சினையாக மிகை மீன்பிடி கருதப்படுகிறது.

தொன்று தொட்டு நடைமுறையிலிருந்து வந்த மீன்பிடிக் கைத்தொழில் வர்த் தகமயப்பட்டு வந்ததனால் உருவாகிய விளைவே இந்த மிகை மீன் பிடியாகும்.

இதன் காரணமாக 2050 ஆம் ஆண்டளவில் உலகின் மீன் வளம் தீர்ந்துபோகுமென எதிர்பார்க்கப்படுகிறது.

மீன்பிடிக் கைத்தொழில் வர்த்தக ரீதியாக விஸ்வரூபம் எடுப்பதற்கு 1950 களின் பின்னர் உருவான காலப் பகுதி வழிவகுத்தது. துரித வளர்ச்சி கண்ட தொழில்நுட்பமும் இயந்திரமயமாக மாற்றப்பட்டு வந்த வாழ்க்கை முறைமையும் மீன்களைப் பதப்படுத்தும் தொழிற்றுறைக்கான சந்தை வாய்ப்பை உறுதிசெய்தன. இதனால் சிறுகைத் தொழிலாக இருந்து வந்த மீன்பிடித்துறை இலாபமீட்டும் தொழிற்றுறையாக மாற்றம் பெற்றது.

கடலுக்கடியில் நடக்கும் மாற்றங்கள் வெளியில் தெரியாதவை. ஆகையால் அவை செய்திகளாக வெளிப்படுத்தப் படுவதில்லை.

ஏனைய சூழற் பிரச்சினைகள் தொடர்பான கரிசனைகள் ஏற்படுத்தப்பட்டு பல ஆண்டுகளின் பின்னரே கடல் தொடர்பான பிரச்சினைகள் கண்ட றியப்பட்டன.

உலகளாவிய ரீதியில் பணம் படைத்த அரசாங்கங்கள் மீன் வளத்தை அதிகரிக்கும் முயற்சியில் அதிக முதலீட்டை மேற்கொள்கின்றன. 1950 களிலிருந்த மீன்வளம் இன்று 90 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளமையே அதற்கான காரணமாகுமென விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

மீன்பிடியானது தொன்றுதொட்டு மனித நாகரிகத்துடன் பின்னிப் பிணைந்த செயற்பாடாகவே காணப்படுகிறது. எமது உணவின் பெரும்பகுதி விவசா யத்தால் பெறப்பட்ட போதிலும், மீனு ணவும் பெரும் பங்கை வகிக்கிறது. மீன்க ளும் வரையறுக்கப்பட்ட குடித்தொகையை யுடைய விலங்கினங்களே என்பதை நாம் ஒருபோதும் உணர்வதில்லை.

அதேநேரம் மிகவும் அதிகளவில் பெறப்படும் உணவு மூலமாகவும் மீன்களே காணப்படுகின்றன. நாம் எமக்குத் தேவையான அளவு மீன்களைப் பெற வேண்டுமாயின், எமது தேவையை ஈடுசெய்யக்கூடிய வகையில் மீன்களின் குடித் தொகையும் பெருக வேண்டும்.

துரிதமாக அதிகரிக்கும் தேவைகளைப் போல மீன்களின் குடித்தொகையும் வேகமாகப் பெருகுமென எதிர்பார்க்க முடியாது. அதிகரிக்க ஆரம்பித்த மீன்பிடி வர்த்தகத்தினால், 17ஆம் நூற்றாண்டளவிலே பல அரிய மீனினங்கள் அழியும் நிலை க்குத் தள்ளப்பட்டன.


அத்திலாந்திக் சமுத்திரம் தொடர்பான தகவல்களும் தரவுகளும் 17ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்திலிருந்து சேகரிக்கப்பட்டு வருகின்றன. 17ஆம் நூற்றாண்டின் ஆரம்பகால கட்டத்தில் ஏறத்தாழ 600 மில்லியன் பச்சை ஆமைகளும் கணக்கிட முடியாதளவு கடற்சிங்கங்களும் திமிங்கிலங்களும் காணப்பட்டதாக அத் தரவுகள் தெரி விக்கின்றன.

மீனெண்ணெய்க் குளிகைகள் தயாரிக்கப் பயன்படும் மீன்களான ‘கொட்’ இன மீன் வகைகள் ஒரு காலத்தில் அத்திலாந்திக் சமுத்திரத்தில் பரவலாகக் காணப்பட்டன. கூடையொன்றினால் அள்ளக்கூடிய அளவிற்கு அவற்றின் குடித்தொகை பரம்பிக் காணப்பட்டது. ஆனால் இன்றோ அவை பெரும் அச்சுறுத்தலுக் குள்ளாகியுள்ளன.

இன்று தகரத்தில் அடைக்கப்படும் மீனினங்களுள் அதிக கேள்வியையுடைய மீனினமாகக் கருதப்படும் ‘சமன்’ மீனினமும் இதே நிலையையே எதிர்நோக்குகின்றது.

மிகை மீன்பிடியானது,

1. உயர் பயனைத் தரமுடியாத/ வளர்ச்சியடையாத மீன்களை மிகையாகப் பிடித்தல்

2. வளர்ச்சியடைந்த மீன்களை மிகையாகப் பிடித்தல்.

3. சூழல் தொகுதியிலுள்ள மீன்களல் லாத வேறு இனங்களைப் பிடி த்தலும் மிகை மீன்பிடி காரணமாக கடல் சூழல் தொகுதியின் சமநிலை குலைக்கப்படுதலும்

என 3 வகைகளாகப் பிரிக்கப்படுகிறது. வளர்ச்சியடையாத மீன்களை மிகையாகப் பிடித்தலானது மீன்கள் வளர்வதற்கான கால எல்லை அதிகரிக்கப்பட ஏதுவாகிறது. அதேசமயம் வளர்ந்த மீன்களை மிகை யாகப் பிடித்தலானது மீன்களின் குடித் தொகை பெருக்கப்படாமல் இருப்பதற்கே வழிவகுக்கும்.

இவற்றுள் மீனினங்கள் தவிர்ந்த வேறு கடல் வாழ் உயிரினங்களும் சேர்த்துப் பிடிக்கப்படுகையில் சூழல் தொகுதியின் சமநிலை குலைக்கப்படுவது டன் தேவையின்றிப் பல உயிரினங்கள் அழிவதற்கும் வழிவகுக்கும்.

இவ்வாறு அதிக கேள்வியுடைய மீனினங்கள் அருகி வருவதால், ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் போன்ற அபிவிருத்தியடைந்த நாடுகள் வர்த்தக ரீதியாகப் பெறுமதி வாய்ந்த மீனினங்க ளைச் சர்வதேசக் கடற்பரப்பிலே தேடுவ தற்கு ஆரம்பித்துள்ளன. இச்செயற்பாடானது வளர்முக நாடுகளின் உணவுப் பாதுகாப் புக்கு மாபெரும் அச்சுறுத்தலாக அமை கிறது.

தொழில் நுட்பத்தின் உயர் பிரயோகத் தையுடைய காலகட்டத்தில் வாழும் இன் றைய மனிதன் ரேடார், செய்மதித் தொழில் நுட்பங்களாலும் நவீனமயப்படுத்தப்பட்ட கப்பல் போன்ற கடற்கலங்களின் உதவியுடனும் மீன் வளத்தை இலகுவாக எடுத்துச் செல்கின்றான். கடலானது இன்றும் எம் மனக்கண்ணில் மீன்வளம் நிறைந்த பகுதியாகவே தென்படுகிறது.

ஆனால் அத்தகையதொரு காலத்தைக் கடந்து நாம் நெடுந்தூரம் பயணித்து விட்டோமென்பதே மறுக்கப்பட முடியாத உண்மை. தற்போது மனிதன் மீன் வளத்தை எடு த்துச் செல்லும் மட்டம் எதிர்காலத் திலும் தொடர்ந் தால் மீனுணவை சுவைத்தறியாத தோர் எதிர்கால சந்ததியினரையே எம்மால் உருவா க்க முடியுமென விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

வர்த்தக ரீதியி லான மீன்பிடித் தொழிலில் பயன்படும் பாரிய ட்ரோலர் கப்பல் களின் வலைகள் மிகவும் பெரியவை. அவை ஏறத்தாழ 60 மைல் நீளத்திற்கு கொழுக்கிகளால் இணைக்கப்பட்டிருக்கும். இத்தகைய செயற்பாட்டினால் பல கடல்வாழ் உயிரினங்கள் அழிந்து போகின்றன.

அத்துடன் பிடிக்கப்படும் இனங்களுள் 50 சதவீதத்திற்கு மேற்பட்டவை தேவையற்றனவாகையால் மீண்டும் கடலினுள்ளே வீசப்படுகின்றன. இவ்வாறு கடலினுள் வீசப்படும் இனங்களுள் கடற்பறவைகள், ஆமைகள் மற்றும் சுறா மீன்களும் கூட அடங்குகின்றன.

அபிவிருத்தியடைந்த நாடுகள் வறிய நாடுகளுடன் கடற்றொழில் ரீதியான பல ஒப்பந்தங்களை மேற்கொள்கின்றன. இவ்வொப்பந்தங்கள் அவ்வறிய நாடுகளின் கடல் வளத்தைச் சுரண்டும் தன்மையனவாகவே காணப்படுகின்றன.

மேற்கு ஐரோப்பிய நாடுகள் சோமாலியா போன்ற வறிய ஆபிரிக்க நாடுகளின் கடல் எல்லைகளில் மீன்பிடித்தலில் ஈடுபடுதலானது அத்தகையதோர் ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே ஆகும்.

வறிய சோமாலிய மீனவர்களால் இத்தகைய வர்த்தக ரீதியான முயற்சி களுடன் ஈடுகொடுக்க முடியாதிருக்கிறது. இதனால் அவர்கள் பட்டினியையும் இடம்பெயர்வுகளையும் எதிர் நோக்குகின்றனர்.

மீன் வளமானது சகல கடற்பரப்புகளிலும் ஒரேயளவாகப் பரம்பிக் காணப்படுவதி ல்லை. ஐரோப்பிய மீன் சந்தைகளிலே விற்பனை செய்யப்படும் மீன் வகைகளில் பெரும்பாலானவை சர்வதேசக் கடற் பரப்பில் பிடிக்கப்பட்டவையே.

இதன் காரணமாக இலங்கையுட்படப் பல நாடுகள் மீன் வளப் பற்றாகுறையை எதிர்நோக்குகின்றன. மேற்கத்தைய நாடுகளில் சூரைவகை மீன்களுக்கு இருக்கும் உயர் கேள்வியையடுத்து இலங்கையின் மஞ்சள் சூரை இன மீன்களை ஏற்றுமதி செய்கிறது.

தேயிலை, இறப்பர் பயிர்களுக்கு வயதாகும் போது அவை வேறு புதிய பயிர்களால் பிரதியீடு செய்யப்படுகின்றன. அதேபோல மீன்வளத்தைப் பயன் படுத்துகையில் அது பிரதியீடு செய்யப்பட வேண்டுமென்ற சிந்தனை பயனாளர்களுக்குத் தோன்றுவதில்லை. எல்லாம் இயற்கையின் செயலென எண்ணி, பயன்படுத்துவதில் மட்டுமே குறியாகவிருப்பவர்கள் பலர்.


சிறியளவிலான பயன்பாடுகளின் போது அத்தகைய மனப்பாங்கு ஓரளவு ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவிருப்பினும் வர்த்தக ரீதியான முயற்சிகளின் போது மீனினங்கள் முற்றாக அழிந்துவிடும் சாத்தியக் கூறுகளே அதிகளவில் காணப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அத்துடன் சுறா மீன், வாளை மீன், சூரை மீன் போன்ற பெரிய மீன் வகைகளும் பாதிப்புக்குள்ளாகுமெனக் கணிப்பிடப்படுகிறது.


கடல் வளமானது மீனுணவை மட்டடும் கொண்டதல்ல. கடல் வாழ் உயிரினங்கள் சமுத்திரங்களின் அடியிலுள்ள வாழ்வியலின் அழகை வெளிப்படுத்தும் ஆவணப்படுங்கள் மக்கள் மத்தியில் வரவேற்கப்படுகின்றன.

மீனுணவிலே அதிக விருப்புடைய அதே மனிதன் தான் இந்த உயிரிகளின் இயற்கை வாழ்வை ரசிப்பதிலும் ஆர்வம் காட்டுகிறான். ஆயிரக் கணக்கில் பணத்தைச் செலவளித்து அவற்றைப் பார்க்க விரும்புகின்றனர்.

திமிங்கிலங்களை நேரடியாகக் கடலினுள் சென்று அவதானிக்கக் கூடிய வகையிலான ஆயத்தங்களும் நடைமுறையிலுள்ளன. இலங்கையிலும் அத்தகைய ஏற்பாடுகள் அபிவிருத்தியடைந்து வருகின்றன.

சுறா மீன்கள் எப்பொழுதும் மனிதனுக்கு ஆபத்தை விளைவிப்பனவாகவே சித் தரிக்கப்படுகின்றன. ஆனால் உண்மையில் அவை அத்தகையனவல்ல. மாறாக மனி தனே தனது உணவுத் தேவைகளுக்காகவும் பணத் தேவைகளுக்காகவும் அவற்றைக் கொல்கிறான்.

ஆனால் அவற்றை அழிப்பதன் மூலம் கிடைக்கும் பணத் தினளவை விட அவற்றைப் பாதுகாப்பதன் மூலம் கிடைக்கும் பணத்தின் அளவு அதிகம் என்ற உண்மையை அழிப்பவர்கள் விளங்கிக் கொள்வதில்லை.

தென்னாபிரிக்கா, அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து, மற்றும் பசுபிக் தீவுகள் போன்ற நாடுகளின் கடலெல்லைகளுள் பாதுகாக்கப்பட்ட கடற் பகுதிகளை உருவாக்க அந்நாட்டு அரசாங்கங்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் மீன் பிடித்தல் தடைசெய்யப்பட்டிருக்கும்.

சிறு வயதிலிருந்தோ அல்லது சந்ததி சந்ததியாகவோ மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருபவர்கள் கடலில் மீன் வளம் குறைவடைந்திருப்பதைத் தாம் உணர்ந்துள்ளதாகத் தெரிவிக்கின்றனர். பேண்தகு வழி முறைகளினாலான மீன்பிடித்தலை மேற்கொள்வதும் மீன் வளத்தை முற்றாக அழிந்துபோக விடாமல் பாதுகாக்கக் கூடிய சிறந்த வழியாகக் கருதப்படுகிறது.

இலங்கையின் தென் பகுதியில் காண ப்படும் பாரம்பரிய மீன்பிடி முறைமை இதற்கு மிகச் சிறந்த உதாரணமாகும். ஒற்றைத் தூண்டிலால் இவ்வாறு மீன்களைப் பிடிக்கும் போது தேவையற்ற உயிரினங்களையும் பிடித்து மீண்டும் கடலினுள் எறியும் சந்தர்ப்பங்கள் தவிர்க்கப்படுகின்றன.

மாலைதீவுகளில் வர்த்தக நோக்கிலான மீன் பிடி வலைகளைக் கொண்டு மீன்பிடித்தல் தடை செய்யப்பட்டுள்ளதுடன் தூண்டிலால் மீன்பிடித்தல் ஊக்குவிக்கப்படுகிறது.

பாதுகாக்கப்பட்ட கடற்பகுதிகள் இலங்கையிலும் ஒருநாள் உருவாகுமென மறைந்த விஞ்ஞானியும் புனைகதை எழுத்தாளருமான ஆதர் சி. கிளார்க் எதிர்வு கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இத்தகைய பாதுகாக்கப்பட்ட கடற் பகுதியானது உல்லாசப் பயணிகளும் சூழல் ஆர்வலர்களும் கடல் வாழ் உயிரினங்களைப் பார்க்கவும் அவை தொடர்பான விடயங்களைக் கண்டறியவும் வழி சமைக்கும். அதேசமயம் கடல்வாழ் உயிரினங்களுக்கான பாதுகாப்பான வாழிடமாகவும் அமையும்.

அத்துடன் மனிதரின் நடமாட்டத்தால் கடல்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படாத வண்ணம் நடைமுறைகள் மேற்கொள்ளப்படும். சுழியோடுதல், கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் பவளப் பாறைகளைப் பார்வையிடுதல் போன்ற பொழுதுபோக்குச் செயற்பாடுகள் தற்போது மிகவும் பிரபலமடைந்து வருகின்றன.

மீன் வளம் குறைவடைவதால் உள்நாடுகளிலும் கூட மீனுணுவின் விலை அதிகரிக்கும். இதன் காரணமாக, குறைந்த வருமானமுடைய நுகர்வோரால் மீனுணவை நுகர முடியாமலே போய்விடும்.

அத்துடன் குறைவடைந்து வரும் மீன்வளம் காரணமாகவும் ஒழுங்கற்ற முகாமைத்துவத்தினாலும் மீன்பிடித்துறை வருடாந்தம் 50 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானத்தை இழந்து வருகின்றதென உலக வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.

நாட்டின் ஒவ்வொரு மீன் பிடி இறங்கு துறைக்கும் அதனூடு செல்லும் மீனவர்கள் பிடிக்கக்கூடிய மீன்களின் அளவு வரையறுக்கப்பட வேண்டும். குறித்த எல்லையினுள்ளேயுள்ள மீன்களின் குடித்தொகைக் கணிப்பீட்டின் படியே இந்த ஒதுக்கீடு மேற்கொள்ளப்படும்.

தினமும் பெறப்படும் மீன்களின் தொகை கண்காணிக்கப்பட வேண்டும். இது நடைமுறைச் சாத்தியம் குறைவான ஒரு விடயமாக இருந்தாலும் எதிர்காலத்தைக் கருத்தில் கொள்கையில் சிறந்த செயன்முறையாகவே கருதப்படுகிறது.

அத்துடன் வருடத்தில் குறித்த ஒரு பருவத்தில் குறித்த பிரதேசத்தில் மீன்பிடித்தலைத் தடைசெய்தலும் மீன் வளம் பெருக வழி செய்யும்.

இந்நடைமுறை, தென் சீனக் கடற் பரப்பில் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

மீன்வளம் குறைவடையும் விடயங்கள் தொடர்பாகவும் அவற்றைத் தடுக்க மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் தொடர்பாகவும் மீனவர்கள் விழிப்புணர்வூட் டப்பட வேண்டும். ஏனெனில் மீன் வளம் குறைவடைவதால் பாதிக்கப்படும் ஒரு தரப்பினராக அவர்கள் இருப்பதுடன் அவர்களது ஒத்துழைப்பின்றி எந்த ஒரு செயற்றிட்டமும் வெற்றியளிக்காது என்பதே நிதர்சனமான உண்மையுமாகும்.

ஆழ்கடல் மீன்பிடித் துறைக்கு வழங்கப்படும் மானியங்களை நிறுத்துதலும் நுகர்வோர் மத்தியில் விழிப்புணர்வை உருவாக்குதலும் நன்னீர் மீன் வளர்ப்பை ஊக்குவித்தலும் கூட மீன் வளத்தைப் பெருக்கும் நடவடிக்கைகளாகவே கருதப்படுகின்றன.

இலங்கையில் வருடாந்தம் 31,9120 மெற்றிக் தொன் மீன்கள் பிடிக்கப்படுகின்றன. அவற்றுள் 86 சதவீதமானவை கடலிலிருந்தே பெறப்படுகின்றன. அதே சமயம் வருடாந்தம் ஏறத்தாழ 4000 மில்லியன் ரூபாவை தகரத்தில் அடைக்கப்பட்ட மீன்களின் இறக்குமதிக்காக இலங்கை செலவழிக்கிறது.

இலங்கையைப் பொறுத்தவரையில் மனிதனால் உருவாக்கப்பட்ட 12,000 சிறியளவிலான நீர்த் தேக்கங்கள் காணப்படுகின்றன. அவற்றில் பெரும்பாலானவை புராதன இலங்கையின் அடையாளங்களாக இன்னும் காணப்படுபவையாகும்.

அத்தகைய நீர்த் தேக்கங்களை உபயோகித்து நன்னீர் மீன் வளர்ப்பை ஊக்குவிக்க முடியும். அதே சமயம் மீன் வளர்ப்பில் பாரம்பரிய மற்றும் நவீன முறைமைகள் ஒன்றிணைந்த பயிற்சிகளையும் கைக்கொள்ள முடியும். இந்நீர்த் தேக்கங்களின் மொத்தப் பரப்பளவு ஏறத்தாழ 40,000 ஹெக் டயர்களாகையால் வருடாந்தம் ஆகக் குறைந்தது 10,000 ஹெக்டயர் பரப்பையாவது இவ்வாறு பயன்படுத்தும் ஏற்பாடுகள் அரசினால் மேற்கொள் ளப்பட்டு வருகின்றன.

எமது மீன் வளத்தை அதிகரிக்கும் வகையிலான இத்தகைய நடவடிக் கைகளையும் மேற் கொள்வதன் மூலம் இறக்குமதிச் செலவை குறைக்கலாம்.

மீன் வளம் நிறைந்த எங்கள் நாட்டில் மீன் பிடித் துறையில் தன்னிறைவு காண்பதோடு மட்டுமன்றி மீனுணவைப் பற்றி மட்டுமே நாம் சிந்திக்காமல் மீன்களின் எதிர்காலம் பற்றியும் சிந்திக்கத் தலைப்பட வேண்டும். பேண்தகு வழி முறைகளால் மீன் வளத்தைப் பெருக்க ஒன்றிணை வோமாக!

No comments:

Post a Comment