Thursday, February 4, 2010

உலகின் மின்சாரத் தேவையை பூர்த்தி செய்ய சமுத்திரத்தில் சக்திவளம்

அபிவிருத்திக்கான பாதையில் அடியெடுத்து வைத்துள்ள இலங்கையின் எதிர்காலத்தைக் கருத்தில் கொள்கையில், மீள உருவாக்கப்படக்கூடிய சக்தி வளங்களின் உபயோகம் தொடர்பான சிந்தனைகளும் ஆராய்ச்சிகளும் காலத்தின் தேவைகளாகக் கருதப்படுகின்றன.

இயற்கை அன்னை தந்த அருங்கொடைகளை ஒருங்கே பெற்ற ஒரு சில தேசங்களுள் இலங்கையும் ஒன்றாகும். அது சங்கத்தமிழ் கூறும் ஐவகை நிலங்களுள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய நான்கையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

உலக வரைப்படத்தில் ஒரு புள்ளியாகத் தெரிந்தாலும் எத்தனையோ பெரிய நாடுகளுக்கு கிடைக்காத இயற்கை அன்னையின் அருள் இலங்கைக்கு கிடைத்துள்ளது.

‘நான்’ என்ற சிறிய உலகத்தினுள்ளேயே சஞ்சரித்து, எம்மைப்பபற்றி மட்டுமே சிந்திக்கப் பழகியதால் இவை தொடர்பான விடயங்கள் எம்மை அணுகுவதற்குக்கூட இடமளிக்கத் தவறிவிடுகிறோம்.

பூமியில் ஏறத்தாழ 75 சதவீதமான பகுதி சமுத்திரங்களால் சூடிப்பட்டிருக்கிறது.

சமுத்திரங்களின் நீர், நீர்மேற்பரப்பிலுள்ள வளி, சமுத்திரங்களின் அடியிலுள்ள நிலம் ஆகியன எண்ணிலடங்காத சக்திவளங்களைக் கொண்டுள்ளன.

அச்சக்தி வளங்களுள் மீள உருவாக்கப்படமுடியாத சக்தி வளங்களாகிய பெற்றோலிய எண்ணெய் போன்றனவும் மீள உருவாக்கப்படக்கூடிய சக்தி வளங்களாகிய அலைவீச்ச சக்தி, சமுத்திர நீரோட்ட சக்தி, சமுத்திரவெப்பசக்தி போன்றனவும் அடங்கும்.

பல இடங்களில் கடலுக்கடியில் பெற்றோலியம் மற்றும் இயற்கை வாயு ஆகிய பாரிய படிவுகளாகக் காணப்படுகின்றன. அண்மைக்காலங்களில் சம்பிரதாய பூர்வமான சக்தி மூலங்களாகக் கருதப்படும் மீள உருவாக்கப்பட முடியாத சக்தி வளங்களாகிய நிலக்கரி, பெற்றோலியம் போன்றவற்றின் விலை எதிர்பாராதவிதத்தில் அதிகரித்து வருகின்றமையானது புதிய சக்தி மூலங்களைத் தேடும் பணிக்கு வித்திட்டது. அத்துடன் இன்று நாம் எதிர்நோக்கி வரும் சூழல் மாசடைதல் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான பிரச்சினைகளிலும் அதிகளவில் செல்வாக்குச் செலுத்தும் காரணியாக, மீள உருவாக்கப்பட முடியாத சக்தி வளங்களின் பயன்பாடு அமைகிறது. இதன் காரணமாக, இந்த சூழல் மாசடைதல் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான தேடலும் அதிகரித்தது.


சமுத்திரநீரானது சூரியனின் வெப்பம் காரணமாக வெப்பசக்தியையும் அலைகள் மற்றும் நீரோட்டங்கள் காரணமாக இயக்கச் சக்தியையும் பிறப்பிக்கவல்லது.

உலகின் மிகப் பெரிய சூரிய சக்தி சேமிப்பான்களாக சமுத்திரங்கள் கருதப்படுகின்றன. சமுத்திரங்களின் ஆழப்பகுதிகளை விட நீர்மேற்பரப்பானது சூரிய வெப்பத்தால் அதிகளவில் சூடாகும். இதன் காரணமாக சமுத்திரத்தின் மேற்பரப்புக்கும் இடையில் வெப்பநிலை வித்தியாசம் ஒன்று உருவாகும்.

வெப்பநிலை வித்தியாசங்களே வெப்பசக்தியை ஒருவாக்குகின்றன. இவ்வாறு உருவாக்கப்படும் சமுத்திர வெப்பசக்தியானது மின்சார உற்பத்தி போன்ற பலவகைகளிலும் பாவிக்கப்படக்கூடியது.

ஆனால் ஆழ்கடல் அல்லது ஆழமான சமுத்திரப்பகுதிகளிலேயே இவ்வாறு மின்சாரத்தை உற்பத்தி செய்யலாம். சூரிய வெப்பத்தால் உருவாகும் இந்த சமுத்திரவெப்பசக்தியும் காற்றுமே சமுத்திர நீரோட்டங்களை உருவாக்குகின்றன.

காற்று, நீரின் உவர்த்தன்மை, வெப்பநிலை மற்றும் புவிச்சுழற்சியாகிய காரணிகளே சமுத்திர நீரோட்டங்களின் சிக்கலான தோற்றப்பாட்டைப் பாதிக்கின்றன அத்துடன் சமுத்திர நீரோட்டங்கள் சார்பளவில் மாறாதவை. அத்துடன் சமுத்திர நீரின் தொடர் நகர்வுக்கேற்ப அவை ஒரே திசையில் நகரும் தன்மையன. கலிபோர்னியா நீரோட்டம், புளோரிடா நீரிணை நீரோட்டம் போன்றவற்றை உதாரணமாகக் கூறலாம்.

காற்றின் வேகத்துடன் ஒப்பிடுகையில் சமுத்திர நீரோட்டங்களின் வேகம் குறைவானது. ஆனால் நீரின் அடர்த்தி காரணமாக, அவை பாரியளவிலான சக்தியைக்காவுகின்றன.

வளியின் அடர்த்தியுடன் ஒப்பிடுகையில் நீரின் அடர்த்தியானது 800 மடங்குகள் அதிகமானது. ஆகையால் ஒரே மேற்பரப்பளவில், மணித்தியாலயத்துக்கு 19.2 கிலோமீற்றர் வேகத்தில் நகரும் நீர்காவும் சக்தியானது, ஒரு மணித்தியாலத்துக்கு 110 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்கும் காற்றுகாவும் சக்திக்கு நிகரானது.

இத்தகைய பாரியளவிலான சக்தி மனிதனால் பாவிக்கக்கூடிய வழியில் மாற்றியமைக்கப்படலாம்.

ஜப்பான், சீனா, ஐக்கிய அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் தற்போது இந்து சமுத்திர நீரோட்டங்கள் காவும் சக்தியை உபயோகிக்கக்கூடிய வழிவகைகள் தொடர்பாக ஆர்வம் கொண்டு செயற்பட்டு வருகின்றன.

இயந்திரங்கள் இணைக்கப்பட்டு இன்னும் வர்த்தக ரீதியாக இச்சக்தி உபயோகிக்கப்படா விடினும் சிறியளவிலான பரீட்சார்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட வண்ணம் தான் இருக்கின்றன. அலை நீரோட்டங்கள் கரைகளுக்கு அண்மையாகக் காணப்படும்.

சமுத்திரங்களுக்கடியில் ஒன்றுடனொன்று இணைக்கப்பட்ட நீர்ச்சுழலி இயந்திரங்களைச் சுழல விடுவதன் மூலம் நீரோட்டங்கள் காவும் சக்தியை மின்சக்தியாக மாற்ற முடியும்.

இத்தகைய நீர்ச்சுலி இயந்திரங்களை ஒரு குழுமமாக அமைப்பதன் மூலம் கடல் நீரோட்டப் பண்ணையை அமைத்து வினைத்திறன் மிக்கவகையில் மின்சாரத்தைப் பெற முடியும்.

எந்தவித எரிபொருட் செலவுமின்றி, உலகின் சக்தித் தேவையைப் பூர்த்தி செய்யத் தேவையான மின்சாரத்தை விட ஐந்து மடங்கு மின்சாரத்தை பெற முடியும்.

உலகின் வருடாந்த சக்தித் தேவையினடிப்படையில் சராசரியாக 14,000 டெரா வற் மணித்தியாலங்கள் மின்சாரம் பாவிக்கப்படுகிறது. ஆனால் சமுத்திர நீரோட்டங்களின் சக்தியால் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் அளவு 80,000 டெராவற் மணித்தியாலங்களையும் தாண்டுமெனக் குறிப்பிடப்படுகிறது.

இவ்வழியில் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான முதலீட்டுச் செலவு மிகவும் அதிகமென எதிர்பார்க்கப்படுகிறது. இது போன்றே ஒரு காலத்தில் முதலீட்டுச் செலவு மிகவும் உயர்வாகவிருந்த சூரிய கலங்கள் மற்றும் சூரியப்படல்களில் முதலீட்டுச் செலவானது நனோ தொழில்நுட்பம் உட்பட்ட புதிய கண்டு பிடிப்புகளால் குறைவடைந்து வருவதும் நாமறிந்ததேயாகும்.

சூரியன் சமுத்திரங்களில் தாக்கத்தைச் செலுத்தினாலும் அலைகளின் உயர்வும் தாழ்வும் சந்திரனின் ஈர்ப்புச் சக்தி காரணமாகவே ஏற்படுகிறது. அத்துடன் அலைகள் காற்றினால் ஏற்படுகின்றன. இச்சக்தியிலிருந்து மின்சார சக்தியைப் பெறுவதற்கு இயங்கு பொறிகளையுடைய கருவிகளும் அவசியமாகின்றன.


அலைவீச்ச வலுவானது நீரின் அடர்த்தி, நீரோட்டத்தின் வேகம், சுழலியின் ஆரை ஆகிவற்றில் தங்கியுள்ள சார்பாகவே கருதப்படுகிறது. அலைவீச்சத்தில் தேக்கப்பட்டிருக்கும் சக்தியையும் மின்சக்தியாக மாற்றுவதற்கான பொறிமுறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

நவீன தொழில்நுட்பத்தை வர்த்தக மயமாக்கும் செற்பாடுகளில் இத்தகைய மீள உருவாக்கப்படக்கூடிய சக்திவளங்களின் தேவை இன்றியமையாததாகி விட்டது.

சூரிய சக்தி மற்றும் காற்றுச் சக்தி தொடர்பான தொழில்நுட்ப முறைமைகள் வர்த்தக மயப்படுத்தப்பட்ட அளவுக்கு சமுத்திரங்களில் தேக்கப்பட்டுள்ள சக்திவளங்களின் பிரயோகங்கள் வர்த்தகமயப்படுத்தப்படவில்லை.

பல பகுதிகளில் பரீட்சார்த்தச் செயன்முறைகளாக இச்சக்தி வளங்களின் மூலம் மின்சார உற்பத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அபிவிருத்தியடைந்த நாடுகளே இன்று முழு உலகும் எதிர்நோக்கும் சூழற் பிரச்சினைகளுக்கான அடிப்படைக் காரணகார்த்தாக்களாகக் கருதப்படுகின்றன.

இன்றும் அதிகளவிலான காபனைச் சூழலுக்கு வெளிவிடும் நாடுகளாகவே அவை காணப்படுகின்றன. அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் சூழல் மாசடைதலுக்குத்து தாம் பங்களிக்கும் சதவீதத்தை விட அதிகளவான சதவீத விளைவுகளை அநுபவிக்கின்றன.

இந்நிலையில், இத்தகைய அபிவிருத்தியடைந்த நாடுகள், அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் மீள உருவாக்கப்பட முடியாத சக்திவளங்களின் பாவனையை ஊக்குவிக்கும் செயற்றிட்டங்களை மேற்கொள்கின்றன. ஆனால் தாமோ மீள உருவாக்கப்படக்கூடிய சக்திவளங்களின் பிரயோகத்துக்கு மாறுவதுடன், அவை தொடர்பான ஆய்வுகளுக்கும் பெருந்தொகையான பணத்தை முதலீடு செய்கின்றன. ஆய்வார்களால், இது வளர்முக நாடுகளைப்படு குழிக்குள் தள்ளும் ஒரு முயற்சியாகவே கருதப்படுகிறது.

இலங்கையைப் பொறுத்தவரையிலும், சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய, மீள உருவாக்கப்பட முடியாத சக்திவளங்களைக் கொண்டு சக்தி பிறப்பாக்க நடவடிக்கைகள் புதிதாக ஆரம்பிக்கப்படுவதை விட, மீள உருவாக்கப்படக்கூடிய சக்தி வளங்களின் பாவனை அவை தொடர்பான ஆய்வுகள் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும். சமுத்திரங்களில் தேக்கப்பட்டிருக்கும் இத்தகைய சக்தி வளங்களைப் பெற்றுக் கொள்வதற்கு இலங்கையின் யாழ்- தீவகம், திருகோணமலை, காலி, அம்பாந்தோட்டை, மன்னார் வளைகுடா ஆகிய பிரதேசங்களில் சாதகமான நிலைமைகள் காணப்படுவதாக உள்நாட்டு மற்றும் சர்வதேச மட்டத்திலான ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மொறட்டுவ பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடமும் இத்தகைய ஆய்வுகளை மேற்கொண்டு சாதகமான முடிவுகளைக் கண்டிருக்கிறது.

சமுத்திர வெப்பசக்தி, அலைவீச்ச சக்தி, நீரோட்டசக்தி ஆகியவற்றைக் கொண்டு மின்சாரசக்தியைப் பெறும் போது சூழலுக்குத் தீங்கை விளைவிக்கக்கூடிய எந்தவொரு விளைபொருளும் வெளிவிடப்பட மாட்டாது.

இந்தக் காரணிதான் இத்தகைய சக்தி வளங்களைப் பற்றி மேலும் சிந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆரம்ப முதலீட்டைத் தவிர மின்னை உற்பத்தி செய்வதற்கான நாளாந்தச் செலவுகள் எவையும் உருவாகாது.

அத்துடன் இலங்கையைப் பொறுத்தவரையில், இலங்கையின் புவியியல் அமைப்பு இச்சக்தி வளங்களின் பாவனைக்குச் சாதகமானதோர் நிலைமையையே தோற்றுவித்துள்ளது.

அத்துடன் மீள உருவாக்கப்படகூடிய இந்த சக்தி வளங்களைப் பயன்படுத்த மிகப்பெரும் மூலதனத்தைப் பாவிக்க வேண்டிய அவசியமில்லை. அத்துடன் முதலீட்டை ஒரேயடியாக இடாமல் கட்டம் கட்டமாக இட்டு அபிவிருத்தி செய்யலாம்.

இவ்வியந்திரத் தொகுதியில் சேமிப்பான்களையும் இணைப்பதன் மூலம் தொடர்ச்சியாக மின்சாரத்தைப் பெற்றுக் கொள்ளக்கூடிய வழிவகைகள் செய்யப்படலாம்.

இவ்வளங்கள் தீர்ந்து போகும் என்பதற்கு மாறாக, மீண்டும் மீண்டும் புதுப்பிக்கப்படும் வளங்களாகும். இயந்திரங்களைத் தொடக்கி வைப்பதற்குக் கூட ஐதரோகபான் எரிபொருட்களைப் பாவிக்க வேண்டியதில்லை.

அத்துடன் இச்சக்திவளங்களிலிருந்து மின்னைச் சேகரிக்கும் பொறிமுறையானது,

1. அதிகளவிலான மின்னைச் சேமிக்கும் வல்லமை

2. இடிப்பு குறைக்கப்பட்ட சேமிப்பு

3. நீடித்த ஆயுட்காலம் (பாவனைக்காலம்)

4. குறைந்த செலவு

5. சூழலை மாசுபடுத்தாத தன்மை

ஆகிய குணவியல்புகளைக் கொண்டிருத்தல் அவசியமானது. ஏனெனில் இங்கு குறிப்பிடப்படும் மின்சக்தி ஒருவாகனத்தை இயக்குவதற்குத் தேவையான மின்சகத்தி அல்ல. ஒரு நாட்டின் அல்லது உலகத்தின் மின்சக்தித் தேவையைப் பூர்த்தி செய்யக்கூடிய அளவிலான மின்சக்தியாகும்.

இச்சக்திவளங்களின் பிரயோகம் பல்வேறு சவால்களையும் எதிர்நோக்க வேண்டியிருக்கிறது. இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் துருப்பிடித்தலானது, இத்துறை எதிர்நோக்கும் முக்கிய சவாலாகும். சமுத்திர நீரின் உவர்த்தன்மை, துருப்பிடித்தலைத் தூண்டும் தன்மையது.

ஆகையால் துருப்பிடித்தல் காப்பு முறைகளை, உச்ச வினைத்திறனுடன் நடைமுறைப்படுத்தல் அவசியமாகிறது. சுழலிகளின் இயக்கத்தாலும் சத்தத்தாலும் கடல் வாழ் உயிரினங்களின் பாதுகாப்பும் வாழ்வும் கேள்விக்குறியாகிறதென்பது மறுக்கமுடியாத உண்மையாகும்.

அத்துடன் சமுத்திர நீரோட்டங்ளிலிருந்து சக்தியைப் பெற்றுக் கொள்ளும் போது அவற்றின் வேகம் குறைக்கப்படுவதால் ஏற்படவிருக்கும் விளைவுகள் எதிர்வு கூறப்பட முடியாதவை. சமுத்திரத்திலிருந்து சக்தியைப் பெறும் போது சமுத்திரத்தின் வெப்பநிலை மற்றும் உவர்த்தன்மை போன்ற பெளதிக இயல்புகள் மாற்றமடைய விளைவதால் கடல் வாழ் உயிரினங்கள் பாதிப்பை எதிர்நோக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.


இவ்வாறு உயிரினங்களுக்கு ஏற்படும் பாதிப்பை, இயந்திரங்களை இயக்கும் போது ஏற்படும் பாதிப்பு, இயந்திரங்களைப் பொருத்தும் போது ஏற்படும் பாதிப்பு என இருவகைப்படுத்தலாம். ஏலவே குறிப்பிட்ட இத்தகைய

இயந்திரங்களைப் பொருத்தும் போது இயக்கும் போதும் சத்தங்கள் ஏற்படாத வண்ணம் தொழிற்படவும், பொருத்தும் போது உருவாக்கும் கழிவுப் பொருட்களைச் சமுத்திரத்தினுள் கலக்கவிடாமல் செய்யவும், கடல்வாழ் உயிரினங்களின் இடப்பெயர்வு, முட்டையிடும் காலங்களைக் குழப்பாத வகையிலும் கடல்வாழ் மூலையூட்டிகள் பாதிக்கப்படாத வகையிலும் தொழில் நுட்பங்கள் விருத்தி செய்யப்பட்டுள்ளன.

கடல்வாழ் உயிரினங்கள், தற்செயலாக இந்த இயந்திரத் தொகுதிக்குள் அகப்பட்டால், அவை வெளியேறுவதற்கான திறந்த வாயில்களும் காணப்படும் வகையில் இயந்திரத் தொகுதிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆயினும் மிதக்கும் உயிரினங்களான ஜெலி மீன்கள் போன்ற மினினங்கள் பாதிக்கப்படுவது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. மீடிறனும் வீச்சமும் குறைந்த ஒலியைப் பிறப்பிக்கக் கூடிய வகையிலும் பிறப்பாக்கிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

முடிவாக, அதிகரித்துவரும் சனத் தொகையுடன் அதிகரிக்கும் சக்தித் தேவையையும் புதிது புதிதாக உருவாக்கிவரும் சூழற் பிரச்சினைகளையும் கருத்தில் கொள்கையில் சூழலுக்கு ஒரு சதவீத பாதிப்பையேனும் ஏற்படுத்தாக வகையில் இத்தகைய மீள உருவாக்கப்படக்கூடிய சக்திவளங்களின் பாவனை பற்றிச்சிந்தித்து அவற்றைச் செயற்படுத்துவதில் தவறேதுமில்லையென்றே தோன்றுகிறது.

No comments:

Post a Comment