Sunday, August 22, 2010

நல்லை நகரில் உறையும் அலங்காரக் கந்தன்





“பஞ்சம் படை வந்தாலும்
பட்டினி தான் வந்தாலும்
அஞ்சுவமோ நாங்களடி கிளியே,
நல்லூர் கந்தன் தஞ்சமடி”


என்று நல்லைக் கந்தனின் புகழை யோகர் சுவாமிகள் கூறுகிறார். தமிழர்களின் கடவுளாகவும் குறிஞ்சி நிலத்தின் தெய்வமாகவும் போற்றப்படுபவன் முருகன். முருகன் என்றால் அழகன் என்பர். அழகன் என்றால் இலங்கை வாழ் மக்களைப் பொறுத்தவரையில் மனக் கண்ணில் தெரிபவன் நல்லூர்க் கந்தனேயாவான்.

இலங்கையிலே உள்ள பிரபல முருகன் கோவில்கள் ஒவ்வொன் றையும் ஒவ்வொரு பெயர் சொல்லி அழைப்பர். செல்வச் சந்நிதியில் உறையும் இறைவனை அன்னதானக் கந்தன் என்றும், கதிர்காமத்திலே உறையும் இறைவனை காவற் கந்தன் என்றும் அழைப்பர். அதேபோல அலங்காரக்கந்தன் என்று அழைக்கப்படும் முருகன் நல்லூர் பதியிலே உறையும் இறைவனாவான்.

ஒரு காலத்திலே யாழ். மண் சைவத்துக்கும் தமிழுக்கும் பெயர் போனதாய் அமைந்திருந்தது. கந்தபுராணக் கலாசாரத்தை அடியொற்றி, யாழ்ப்பாணக் கலாசாரம் எனத் தனக்கேயுரித்தான கலாசாரப் பாங்கையும் தனித்துவத்தையும் பேணி வந்தது.

மூலைக்கு மூலை, வீதிக்கு வீதி, கிராமத்திற்குக் கிராமம், நகரத்திற்கு நகரம் என எங்கு பார்த்தாலும் சிறியதும் பெரியதுமாக கோயில்களால் நிறைந்து காணப்படும் மண்ணாகக் காணப்பட்டது. இன்றும் காணப்படுகிறது. யாழ். மண்ணின் தொன்மைக்குச் சான்றாக இன்றும் தலைநிமிர்ந்து நிற்கும் ஊர்களுள் நல்லூரும் ஒன்றாகும்.

இலங்கையின் வட பகுதித் தமிழர்களின் இராசதானியாகவும் யாழ்ப்பாண இராச்சியம் அந்நியர் கைகளிலே வீழும் வரை அதன் தலைநகராகவும் நல்லூர் விளங்கியது.

நல்லூர் என்றதுமே யாவரது நினைவுகளையும் நிறைப்பது நல்லூர்க் கந்தசுவாமி கோயிலாகும். யாழ்ப்பாண வைபவ மாலை, கைலாய மாலை போன்ற தொன்மையான நூல்களிலிருந்தும் ஈழத்துடன் தொடர்புடைய இலக்கிய நூல்களிலிருந்தும் வரலாற்றுக் குறிப்புக்களிலிருந்தும் இக்கோயிலின் தொன்மையை அறிய முடியும்.

கி. பி. 12 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து கி. பி. 17 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை யாழ்ப்பாண இராச்சியத்தின் தலைநகரமாக நல்லூர் விளங்கியது. அவ்விராச்சியத்தின் இறுதிக் காலத்தில் நல்லூரிலிருந்த மிகப் பெரிய கோவில் இக்கந்தசுவாமி கோவிலேயென போர்த்துக்கேயரின் வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிப்பதாகக் கூறப்படுகிறது.

இக்கோயிலின் தோற்றம் பற்றிய சரியான தெளிவு இதுவரை காணப்படவில்லை. ஆயினும் யாழ்ப்பாண அரசு அமைந்திருந்த காலப் பகுதியில் இக்கோயில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருந்தது என்பதில் எவரும் ஐயம் தெரிவிக்கவில்லை.

யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்ட ஆரிய சக்கரவர்த்திகளின் வம்சத்தின் முதலாவது அரசனான கூழங்கைச் சக்கரவர்த்தியின் அமைச்சன் புவனேகவாகுவால் இக்கோயில் கட்டுவிக்கப்பட்டதென யாழ்ப்பாண வைபவ மாலையும் கைலாய மாலையும் கூறுவதாகச் சிலர் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

15ஆம் நூற்றாண்டிலே, யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய கோட்டே அரசனான ஸ்ரீ சங்கபோதி புவனேகபாகு எனப்படும் சண்பகப் பெருமாளால் கட்டப்பட்டதாக ஒரு சிலர் கருத்துத் தெரிவிக்கின்றனர். இதற்கு ஆதாரமாக அவர்கள் குறிப்பிடுவது, கோயிலிலே இன்றும் கூறப்பட்டு வரும் கட்டியம் ஆகும். இக்கட்டியம் சமஸ்கிருதத்திலே கூறப்பட்டு வருகிறது.

முன்னர் சிறியதாகவிருந்த கோயிலைத் தனது ஆட்சிக் காலத்தில் புவனேகபாகு பெருப்பித்துக் கட்டியிருக்கக் கூடும் என்று கருத்துத் தெரிவிப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

கிழக்கே வெயிலுகந்த பிள்ளையார் கோயில், தெற்கே கைலாசநாதர் கோயில், மேற்கே வீரமாகாளி அம்மன் கோயில், வடக்கே சட்டநாதர் கோயில் ஆகிய கோயில்களை நாற்றிசைகளிலும் அரணாகக் கொண்டு அமைந்திருக்கிறது நல்லூர்க் கந்தசுவாமி கோயில்!

யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய போர்ததுக்கேயத் தளபதியாகிய பிலிப் டி ஒலிவேரா, 1620 இல் தனது அரசின் தலைநகராக யாழ்ப் பாணத்தை மாற்றினான். அதையடுத்து நல்லூர் கந்தசுவாமி கோயிலை இடித்து தரைமட்டமாக்கும்படி உத்தரவிட்டான்.

அவ்வாறு இடித்துப் பெறப்பட்ட கற்கள் யாழ்ப்பாணத்தில் கோட்டை கட்டுவதற்குப் பயன்படுத் தப்பட்டதாகத் தெரியவருகிறது. அத்துடன் கோயில் இருந்த இடத்திலே போர்த்துக்கேயர் சிறிய கத்தோலிக்க தேவாலயமொன்றை அமைத்திருந்தனர். ஆட்சி ஒல்லாந்தரிடம் கைமாறிய போது அவர்கள் அதனை புரட்டஸ்தாந்த கிறிஸ்தவ தேவாலயமாக மாற்றினர்.

ஒல்லாந்தர் ஆட்சியின் இறுதிக் காலகட்டத்திலே இந்துக் கோயில்கள் பற்றிய இறுக்கமான நிலைப்பாடு தளர்வடைந்தது. நல்லூர்க் கந்தசுவாமி கோவிலும் மீள அமைக்கப்பட்டது. முன்னைய இடத்தில் கிறிஸ்தவ தேவாலயம் இருந்தபடியால் இன்னொரு இடத்தில் கோயிலை அமைத்தனர். அந்தக் கோயிலே இன்று நாம் காணும் நல்லைக் கந்தன் ஆலயம் ஆகும்.

நல்லூரிலே இன்று பாழடைந்து காணப்படும் யமுனாரிக்கு செல்லும் ஒழுங்கையில் அதற்கண்மையில் காணப்படும் கட்டடச் சிதைவுகள் நல்லைக் கந்தனின் பழைய கோயிலின் மதிலுக்குரியவையென கலாநிதி கந்தையா குணராசா குறிப்பிடுகிறார்.

அகத்தியனுக்குத் தமிழைத் தந்தவனாகவும் ஒரு நாவற்பழத்தை வைத்தே ஒளவையாருக்கு ஞானத்தை அருளியவனாகவும் குமரகுருபரருக்கு பேச்சுத்திறனை அளித்தவனாகவும் முத்து சுவாமி தீட்சிதருக்கு பாடும் வல்லமையை அருளியவனாகவும் முருகன் ஒரு தமிழ்க் கடவுளாகவே சித்தரிக்கப்படுகிறான்.



நல்லூர்க் கந்தசுவாமி கோயிலை இரகுநாத மாப்பாண முதலியார் வம்சத்தினரே பரம்பரை பரம்பரையாக நிர்வகித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ். மண்ணிலே வாழ்பவர்கள் மட்டுமன்றி இலங்கை வாழ் தமிழர்கள் மற்றும் புலம் பெயர் தமிழர்கள் மத்தியிலும் நல்லூர்க் கந்தன் பிரபலமானவன்.

நல்லூர்க் கந்தனை இறைவனாய் வரித்து உயரத்தில் வைத்தாலும் தமது வீட்டு உறுப்பினர்களுள் ஒருவனாய் வரித்து உரிமையுடன் வழிபடும் வழக்கத்தை முருகனடியார்கள் யாவர் மத்தியிலும் காணமுடியும். அவர்கள் முருகன் மீது அளப்பரிய அன்பும், அவ்வன்பை மீறிய பக்தியும் கொண்டு உரிமையுடன் சேவிப்பவர்கள்.

நல்லை முருகனும் ஒன்றும் சளைத்தவனல்லவே. அவன் எவர்க்கும் அடிபணிந்ததில்லை. எவருக்காகவும் தனது வழக்கங்களை மாற்றியதுமில்லை. கோயிலினுள் நுழையும் போது ஆண்கள் மேலாடையைக் கழற்ற வேண்டுமென்பது நல்லூர் முருகன் கோயிலின் சட்டம். எந்த பிரபலமானவர் வந்தாலும் அந்தச் சட்டத்தை மதித்தால் தான் கோயிலினுள் செல்ல முடியும். முருகனையும் தரிசிக்க முடியும்.

உண்மையில் முன்னைய காலங்களிலே இந்தப் பாரம்பரியம் சகல இந்துக் கோயில்களிலும் பேணப்பட்டது. ஆனால் பல கோயில்கள் காலத்துடன் தமது பாரம்பரியங்களையும் மாற்ற, இந்தப் பாரம்பரியமும் இல்லாமல் போய்விட்டது.

ஆயினும் நல்லூர்க் கந்தன் ஆலயம் போன்ற ஒருசில கோயில்கள் மட்டும் இன்னும் பழைய பாரம்பரியங்களைப் பேணி வருகின்றன.

அவை அவ்வாறு பேணப்படாவிட்டால், எதிர்காலச் சந்ததிக்கு அவை பற்றித் தெரியாமலே போய்விடும் என்பது தான் நிதர்சனமான உண்மையாகும்.

இந்துக் கோயில்களிலே மிகவும் அரிதாகக் காணப்படும் வழக்கங்களுள் நேரந்தவறாமையும் ஒன்றாகும். நல்லைக் கந்தன் ஆலயத்தின் பூசைகளாயினும் சரி, திருவிழாவாயினும் சரி, குறித்த நேரத்திலே நடந்தேறும். எவருக்காகவும் முருகன் தனது நேர அட்டவணையை மாற்றமாட்டான். மழையோ வெயிலோ பூஜைகள், வீதியுலா யாவுமே குறித்த நேரத்தில் நடந்தேறும்.

1996 ஆம் ஆண்டு காலப் பகுதியிலே மக்களின் மின் பாவனையைக் குறைப்பதற்காக இலங்கையின் நேரம் மாற்றப்பட்டது. ஆனால், நல்லூர் முருகனின் பூஜை நேரங்கள் எவையும் புதிய நேர மாற்றங்களுக்கமைய மாற்றப்படவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

பணத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வரும் இன்றைய காலத்தின் போக்கு கோயில்களையும் விட்டு வைக்கவில்லை என்பது ஜீரணிக்க முடியாத ஒரு உண்மையாகும். அர்ச்சனைச் சீட்டுக்களிலும் இறை தரிசனத்திலும் பணத்திற்கு முக்கியத்துவம் வழங்குவதாகவே பெரும்பாலான கோயில்கள் இன்று காணப்படுகின்றன.

ஆனால் அன்றிலிருந்து இன்று வரை நல்லூர் முருகன் ஆலயத்திலே அர்ச்சனைச்சிட்டையின் பெறுமதி ஒரு ரூபா மட்டுமே. அத்துடன் நீங்கள் எவ்வளவு பணம் கொடுத்தாலும் அவ்வளவு பெறுமதிக்கும் அர்ச்சனைச்சிட்டைகள் தான் கிடைக்குமே தவிர மீதிப்பணம் கிடைக்காது.

பணமிருந்தால் தான் சுவாமி தரிசனம் என்ற இன்றைய காலத்திலும் ஏழையென்ன பணக்காரன் என்ன யாவரும் என்னடியில் சமன் என உணர்த்தி நிற்கிறான் நல்லூர்க் கந்தன்.

கடும் யுத்தம் மற்றும் இடப்பெயர்வுக் காலங்களைத் தவிர இக்கோயிலின் நித்திய நைமித்தியங்கள் நேரம் தவறாமல் இடையறாது நடைபெறுகின்றன. உற்சவங்களும் அவ்வாறே!

ஆடி அமாவாசையிலிருந்து ஆறாம் நாள் கொடியேறி 25 நாட்கள் இக்கோயிலின் மகோற்சவம் நடைபெறும்.

எங்கிருந்தாலும் இந்த உற்சவ காலத்திலாவது நல்லைக்கந்தன் அடியார்கள் ஊருக்கு வந்துவிடுவர். வரமுடியாதவர்கள் கூட விரதமிருந்து பயபக்தியோடு முருகனை வழிபடுவர்.

கொடியேற்றத்துடன் ஆரம்பித்து மஞ்சம், கார்த்திகை, கைலாய வாகனபவனி, தங்கரத பவனி, மாம்பழத்திருவிழா, சப்பைரதம், தேர்த்திருவிழா, தீர்த்தம், பூங்காவனம் ஆகிய முக்கிய திருவிழாக்களையடுத்து வைரவர்மடையுடன் உற்சவம் நிறைவுறும். ஒவ்வொரு திருவிழாவின் போதும் ஒவ்வொரு புதுவித அலங்காரத்துடன் ஐயன் முருகன் ஆடிவரும் அழகை வார்த்தைகளால் விபரிக்க முடியாது.

இதற்காகத்தானோ அவனை ‘அலங்காரக் கந்தன்’ என அழைக்கிறார்கள் என எண்ணத்தோன்றும். முக்கிய திருவிழாக்களின் போது முத்துக்குமாரசுவாமியும் ஏனைய நாட்களில் மூலவராகிய வேலும் வீதியுலா வருவர். உற்சவ காலத்திலே காலையும் மதியமும் உள்வீதியை வலம் வரும் மூர்த்தி மாலையிலே வெளி வீதியை வலம் வருகிறார்.




சிறுவர் முதல் பெரியவர்கள் வருடாந்தம் நல்லூரானின் உற்சவத்தை எதிர்பார்த்துக் காத்திருப்பர் என்றால் மிகையாகாது. உற்சவ காலங்களிலே கோயில் மட்டுமன்றி முழு ஊருமே களைகட்டி இருக்கும்.

கோயில் வீதிகளில் சனத்திரளின் மத்தியிலே முருகன் அசைந்து அசைந்து வரும் காட்சியைக் காணக் கண் கோடி வேண்டும். அங்கப் பிரதட்சனை செய்பவர்கள், அடி அழிப்பவர்கள், கற்பூரச்சட்டி எடுப்பவர்கள், காவடி எடுப்பவர்கள் அருள் வந்து ஆடுபவர்கள் என தம்மால் இயன்ற வழியில் நேர்த்திக்கடன் செலுத்தும் அடியவர்களும் வீதியில் நிறைந்திருப்பர்.

எவ்வளவு துன்பங்கள், கவலைகள், இழப்புகளைச் சந்தித்த போதும் ‘உன்னையல்லால் துணை எவரும் உண்டோ?’ என முருகனைத் தேடி லட்சக்கணக்கில் திரண்டிருக்கும் பக்தர்களைக் காண மெய்சிலிர்க்கும்.

ஈழத்துச்சித்தர் பரம்பரைக்கு களமாக அமைந்ததும் நல்லூர் தேரடி என்றால், எவராலும் மறுக்கமுடியாது... இதே நல்லூரின் வீதி தான், பல யாகங்களுக்கும் களமாய் அமைத்ததை எந்த ஒரு தமிழனும் மறக்க மாட்டான்..

நல்லூர்க்கந்தசுவாமி கோயிலின் உற்சவகாலங்களிலே கடை வீதிகளும் களைகட்டிப்போயிருக்கும். யாழ்ப்பாணத்தின் பிரபலமான ஐஸ்கிaம் கடைகள் எல்லாம் பெரிய பந்தல் அமைத்திருக்கும். உற்சவகாலங்களிலே அவற்றின் விற்பனையும் அமோகமாக இருக்கும். கடலைக்கடைகளும் சுண்டல்கடைகளும் தண்ணீர்ப்பந்தல்களும் வீதியெங்கிலும் நிறைந்து காணப்படும். இவை தவிர பலதரப்பட்ட வயதினரையும் கவரும் வகையிலே கடை வீதிகளை கட்டிக்காணப்படும்.

ஏறத்தாழ 15 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற நல்லூர்த் திருவிழாவிலே அமைக்கப்பட்ட கண்காட்சி அரங்குகளும் பொய்க்கால்க்குதிரை ஆட்டமும் தஞ்சாவூர் பொம்மைகளும் இன்றும் மனக்கண்ணில் பசுமையாய் நிழலாடுகின்றன. திருவிழாவிலே சுவாமி தரிசனத்தைப் பகுதிநேர வேலையாய் வைத்துக்கொண்டு கடலையைக் கொறித்து ஐஸ்கிaமைச் சுவைத்து அரட்டை அடிப்பதற்காகவே காத்திருக்கும் இளம்பருவத்தினரையும் இங்கு குறிப்பிடவேண்டும்.

அவையெல்லாம் அந்தந்தப் பருவத்திலே அனுபவிக்க வேண்டியவை. நல்லூர்த்திருவிழாக் காலத்தை அனுபவித்த ஒவ்வொருவருக்கும் அந்த நினைவுகள் பசுமையானவைதான். அதற்கு மதம் ஒரு தடையாக இருந்தல்ல என்பதையும் இங்கு குறிப்பிடவேண்டும்.

இம்முறை உற்சவ காலத்திலே வழக்கத்திற்கு மாறாக, சகல இனத்தவரும் கலந்துகொள்வதாலும், நவீன நாகரீகத்தை எளிதாகப் பற்றிக்கொள்ளும் இளஞ்சந்ததியினர் அதிகளவில் கலந்துகொள்வர் என எதிர்பார்க்கப்படுவதாலும் கோவிலுக்குள் செல்லும் போது உடுத்தியிருக்க வேண்டிய உடை தொடர்பாகக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக்கிறது.



இது வரவேற்கப்படத்தக்க விடயமாகும். கோயில் குளங்களோடும் இறைவழிபாட்டோடும் ஒன்றிப்போன வழங்கங்களை உடைய உயரிய பண்பாடு எங்கள் பண்பாடு.

வைகறைப்பொழுதிலே ‘முருகா’ எனக் கூவியழைத்து பெருவீதி மணலிலே உடல்புரண்டு பிரதட்டை செய்யும் எம்மவரின் பக்திமழையைக் காண்கையில் எங்கள் இனம்; எங்கள் மொழி; எங்கள் முருகன்; எங்கள் இறை நம்பிக்கை; இவற்றுக்கெல்லாம் ஏதுகுறையென இவ்வளவு காலமும் மார்தட்டிவந்தோம். இனியும் அப்படியே இருக்க வேண்டும் என்பதுதான் எம் யாவரது அவாவும் கூட. அது வேறு எவர்கையிலும் இல்லை. எமது கைகளிலேயே இருக்கிறது. முயன்றுதான் பார்ப்போமே?

No comments:

Post a Comment