Sunday, August 22, 2010

பசுமைப் பொருளாதாரத்தை நோக்கிய பயணத்தின் முதற்காலடி




அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுக்கு மத்தியில் நாம் மீளமுடியாது தத்தளித்துக்கொண்டிருக்கும் இன்றைய கால கட்டத்தில், இயன்றவரை செலவுகளைக் குறைத்து கடனின்றி வாழ்வது பிரம்மப் பிரயத்தனம்தான்.

பணத்தை சுளையாகச் செலுத்த வேண்டிய மின் கட்டணம் போன்ற செலவுகளைக் குறைக்க முயற்சித்தாலே, கடனின்றி வாழ முடியும். எமது மாதாந்த மின் கட்டணத்தின் அரைவாசிக்குப் பொறுப்புக் கூற வேண்டியது எமது அலட்சியப் போக்குத்தான் என்றால் அது மிகையாகாது.

நாம் மாதாந்தம் எவ்வளவு மின்னலகுகளைப் பாவிக்கின்றோம் என்பதை அறிந்து, பாவனையைக் குறைக்க முயற்சி செய்யலாம். அதேபோல, நாம் பாவிக்கும் ஒவ்வொரு மின்சாதனத்தின் வலு அளவுகளைத் தெரிந்து வைத்திருக்கவும் வேண்டும்.

உயர் வலு அளவுகளையுடைய மின்சாதனங்களின் பாவனையை இயன்றவரை குறைக்க முயற்சி செய்ய வேண்டும்.

பாவனையில் இல்லாதபோது, ஆளியுடனான மின்சாதனங்களின் இணைப்பைத் துண்டித்துவிட வேண்டும். அதேபோல மின் சாதனங்கள் ஏதாவது பழுதடைந்திருந்தால், அவற்றை உடனேயே பழுதுபார்த்து வைத்து விடுங்கள். ஏனெனில் பழுதடைந்த மின் சாதனங்கள் இயங்குவதற்குத் தேவையான மின்சக்தியின் அளவு சாதாரண அளவை விட அதிகமாகும்.

தேவையற்ற நேரங்களில் மின்சாதனங்கள் பாவிக்கப்படுவதைத் தவிர்ப்பதன் மூலமே பெருமளவு மின் அலகுகளைச் சேமிக்க முடியும். மின் கட்டணப் பற்றுச்சீட்டு பற்றிய தெளிவின்மையும் எம்மத்தியில் காணப்படுகிறது.

மின் அலகுகளின் பாவனையைக் கணிப்பதற்கு வரும் மின்சார சபை ஊழியர்கள் கிரமமாக 30 நாட்களுக்கு ஒருமுறை வருவது மிகவும் அரிது என்ற முறைப்பாடும் பலர் மத்தியில் காணப்படுகிறது.

சில மாதங்களுக்கான மின் கட்டணம் 30க்கும் குறைவான நாட்களுக்குக் கணிக்கப்படும். அதேவேளை சில மாதங்களுக்கான மின் கட்டணம் 30க்கும் அதிகமான நாட்களுக்குக் கணிக்கப்படுகிறது.

எமது நாட்டிலே நடைமுறையிலிருக்கும் மின்கட்டண முறைமையின்படி, ஒருவரின் மின் பாவனை மாதாந்தம் குறிப்பிட்ட மின் அலகுகளை விட அதிகமாக இருந்தால் ஒரு அலகுக்கான மின் கட்டணம் அதிகரிக்கும். மாதாந்த மின் கட்டணம் 30க்கும் அதிகமான நாட்களுக்குக் கணிக்கப்படுகையில் பெரியளவிலான தொகையைக் கட்டணமாகச் செலுத்த வேண்டிய தேவை ஏற்படுகிறது.

இத்தகைய பிரச்சினைகள் ஏற்படும் பட்சத்தில் அவற்றை உடனேயே இனங்கண்டு, சம்பந்தப்பட்ட மின்சார சபை ஊழியர்கள் முன்னிலையில் தெளிவுபடுத்திக் கொள்வதே சிறந்த வழியாகும். இல்லாவிட்டால் பணத்தை வீணாகச்செலவழிக்க வேண்டியதாகிவிடும்.

மின்சாரத்தைச் சேமிப்பதால் செலவு மீதப்படுத்தப்படுவதுடன், சுற்றுச்சூழல் ரீதியாகவும் சுகாதார ரீதியாகவும் பெறப்படும் நன்மைகள் அளப்பரியன.

முழு நாட்டுக்கும் மின்சாரத்தை வழங்குவதற்காக, மின்சாரம் பல வழிகளில் உற்பத்தி செய்யப்படுகிறது. இலங்கையைப் பொறுத்த வரையிலே நீர் மின் உற்பத்தி பிரதான இடத்தை வகிக்கிறது. இரண்டாவது இடத்தை வகிப்பது சுவட்டு எரிபொருட்கள் மூலமான மின் உற்பத்தியாகும்.

சுவட்டு எரிபொருள் பயன்பாட்டின் மூலம் மின் உற்பத்தி செய்யப்படும் போது சூழல் மாசு பெருமளவில் ஏற்படுகிறது. தேவையற்ற மின் பாவனையை ஒவ்வொருவரும் குறைக்க முயன்றால், சூழல் மாசடைதலும் பெருமளவில் தவிர்க்கப்படும்.

அதேபோல, சுற்றுச்சூழல் மாசடைவது குறைக்கப்பட்டால் சுற்றுச் சூழல் மாசால் ஏற்படும் சுகாதாரப் பிரச்சினைகளும் பெருமளவில் தவிர்க்கப்பட முடியும். அத்துடன் வீடுகளிலே மின்சாரத்தைச் சேமிக்கும் செயற்பாடுகளை மேற்கொண்டால் குடும்பச் சூழலும் ஆரோக்கியமானதாக அமையுமென்பதே ஆய்வாளர்களின் வாதமாக இருக்கிறது.

இன்றைய அவசர உலகில், வாழ்க்கை இயந்திரமயப்படுத்தப்பட்டுவிட்டது. நேரத்தை மீதப்படுத்துவதற்காகவும் வேலையைச் சுலபமாக்குவதற்காகவுமென உருவாக்கப்பட்ட மின்சாதனங்கள் ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் இருந்த குடும்பச் சூழலைச் சிதைத்துவிட்டன. ஒரு மனிதனின் உடல், உள ஆரோக்கியமான வாழ்விலே குடும்பச் சூழல் பெரும் பங்கு வகிக்கிறது.

மின்சாதனங்களின் பாவனையைக் கட்டுப்படுத்தவோ அல்லது அவற்றின் தேவையற்ற பாவனையைக் குறைக்கவோ முயன்றால் குடும்பச் சூழலும் முன்னைய காலங்களில் இருந்தது போல மாறிவிடும் சாத்தியக் கூறுகள் இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இரவிலே நேரகாலத்துடன் நித்திரைக்குச்சென்று அதிகாலையிலே எழுந்திருக்கப் பழகுவதன் மூலம் மின்சாதனங்களின் பாவனையைக் குறைக்க முடியும். அவ்வாறு அதிகாலையில் எழுந்தால் நேரமும் மீதமாகும். அதேபோல் உடல் உறுப்புகள் வேலை செய்யும் காலம் அதிகரிக்கப்பட, கொழுப்பு போன்ற உணவுகள் தேவைக்கு அதிகமாக உடலில் படிவதும் தவிர்க்கப்படும்.

குளிர் தேசங்களில், குளிரின் தாக்கத்தைக் குறைப்பதற்காக வெப்பத்தை ஏற்படுத்தும் சாதனங்கள் பாவிக்கப்படுகின்றன.

அவற்றின் பாவனையைக் குறைத்தாலே, வளிமண்டலத்துக்கு வெளியேற்றப்படும் காபனீரொட்சைட்டின் அளவைக் குறைக்கலாமெனவும் அதன் மூலம் மக்களின் சுகாதார நிலைமையை மேம்படுத்தலாமெனவும் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் இலங்கையைப் பொறுத்த வரையிலே அத்தகைய உபகரணங்களின் பாவனை மிகவும் அரிதாகவே காணப்படுகிறது.

வீட்டிலேயே முடங்கிக் கிடக்காமல், வெளியே சென்று வருவதன் மூலம் மின்சாரத்தைச் சேமிக்க முடியுமெனவும் எது ஆரோக்கியமானதெனவும் கருதப்படுகிறது. ஏனெனில் மனித உடல், இயற்கை ஒளியை விட்டமின்களாகவும் கனியுப்புக்களாகவும் தொகுக்கும் வல்லமையுடையது.

அத்துடன், வீட்டுக்குள் இருக்கும் போதுதான் மின்சாதனங்களின் பாவனைக்கான தேவையும் அதிகமாகக் காணப்படுகிறது.

ஒரு மாடியாயினும் மாடிப் படிகளில் எறி இறங்குவதற்கு பலர் மின்னுயர்த்திகளையே பயன்படுத்துகின்றனர். படிகளில் ஏறமுடியாதோர் தவிர ஏனையோர் மாடிப் படிகளில் ஏறி இறங்குவதை வழக்கமாகக் கொள்ளலாம். இது மின்சாரத்தைப் பெருமளவில் சேமிக்க உதவுவதோடு இருதய நோய்களின் தாக்கத்தையும் குறைக்கும். அதுமட்டுமன்றி, மின் தூக்கிகளில் பலருடன் பயணிக்கும் போது ஏற்படும் நோய்த்தொற்று அபாயமும் இருக்காது.

தொலைக்காட்சி, விளையாட்டுகளும் கணனி விளையாட்டுகளும் கூட இன்று பரவலாக அதிகரித்துக் காணப்படுகின்றன. அவை முன்னைய காலங்களில் வழக்கிலிருந்த பலகை விளையாட்டுக்களை வழக்கொழிந்து போகச் செய்துவிட்டன.

அவையெல்லாம் அறிவையும் மூளையையும் விருத்திசெய்யும் ஆரோக்கியமான விளையாட்டுக்களாகும். அத்துடன் குடும்பத்திலுள்ள அனைவரும் இணைந்து விளையாடக் கூடியவை. கரம், சதுரங்கம், பல்லாங்குழி போன்ற பல விளையாட்டுக்கள் அத்தகையனவேயாகும்.

விளையாடுவதற்கு மின்சாரத்தை நம்பியிருக்காத இத்தகைய விளையாட்டுக்களை மீள ஆரம்பிப்பதன் மூலமும் எமது மின் கட்டணத்தைக் குறைக்க முயலலாம். இவையெல்லாம் குடும்ப உறவுகளைப் பலப்படுத்தும் சாதனங்களே!

சுவட்டு எரிபொருள் மூலமான மின் உற்பத்தி ஏனைய வழிமுறைகளுடன் ஒப்பிடுகையில் இலகுவானதும் ஆரம்பச் செலவு குறைந்ததுமாக இருக்கிறது. இதனால் கைத்தொழில் புரட்சியை அடுத்து அத்தகைய எரிபொருள் மூலமான மின் உற்பத்தி வேகமாக வளர்ச்சியடைந்தது.

காலப் போக்கில் அந்த வளர்ச்சி சூழல் மாசடைதலை உருவாக்கியது. சூழல் மாசடைதல் பிரச்சினைகள் வளர்ச்சியின் போக்கைவிட வேகமாக அதிகரித்தன. இதன் விளைவாக பசுமை மின்சார உற்பத்திக் கொள்கைகள் வலுப்பெற்றன.

பசுமை மின்சாரம் எனப்படுவது, மீள உருவாக்கப்படக்கூடிய வளங்களின் முலம் இயன்றவரை சூழலுக்குத் தீங்கு விளைவிக்கப்படாத வகையிலே பிறப்பிக்கப்படும் மின்சாரத்தைக் குறிக்கிறது.

காற்று, சூரியன் மற்றும் அதன் ஒளி - அழுத்த சக்தி, நீர் வளம் போன்றவையே அந்த மீள உருவாக்கப்படக் கூடிய வளங்களாகும்.

இன்றைய காலங்களில் ‘பசுமை’என்ற பதம் மிகவும் பிரபலம் வாய்ந்ததாக காணப்படுகிறது. எந்தத் துறையாயினும் சரி பொருளாயினும் சரி ‘பசுமை’ என்ற அடைமொழியுடனேயே பெயரிடப்படுகிறது. சூழலுக்குத் தீங்கை விளைவிக்காதது என்ற கருத்தையே ‘பசுமை’ என்ற பதம் விளக்குகிறது.

மீள உருவாக்கப்படக்கூடிய வளங்களின் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்தால் சூழலை மாசுபடுத்தும் வாயுக்களின் வெளியேற்றம் தடுக்கப்படும். அதாவது, காபனீரொட்சைட், நைதரசன் சேர்வை வாயுக்கள், கந்தகவீரொட்சைட்டு, காபன் துணிக்கைகள் போன்ற நிலத்திலோ நீரிலோ அல்லது வளி மண்டலத்திலோ வெளிவிடப்படமாட்டாது.

இப்பதார்த்தங்கள் பொதுவாக ஏற்படுத்தும் விளைவுகளான காலநிலை மாற்றம், பார உலோகங்களின் படிவு, அமிலமழை போன்றன தவிர்க்கப்படலாம்.

அத்துடன், எரிபொருள் தேவைக்காக கனிய வளங்களை அகழ்ந்தெடுப்பதால் நிலப் பகுதிக்கு ஏற்படும் பாதிப்புகள் தவிர்க்கப்படும்.

இயற்கைச் சூழலை எந்தவிதமாசுக்களுமின்றி எமது எதிர்காலச் சந்ததிக்கு வழங்குவதற்கான முதலடியாக, மீள உருவாக்கப்பட முடியாத சக்தி வளங்களின் மூலமான மின் உற்பத்தி கருதப்படுகிறது.

பொருளாதார ரீதியாகவும் நன்மை பயக்கும் இச் செயற்பாடு வேலைவாய்ப்புக்களை அதிகரிப்பதுடன் பின்தங்கிய பிரதேசங்களின் அபிவிருத்திக்கும் வழிவகுக்கிறது.

இலங்கையில் எதிர்வரும் 2011 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவிருக்கும் புதிய மின் கட்டண முறைமை பற்றிப் பலரும் பலவிதமாக விமர்சித்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் இத்தகைய மின் கட்டணக் கொள்கைகள் எல்லாம் மின்சாதனங்களின் அவசியமற்ற பாவனையைக் கட்டுப்படுத்துவதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளன. நாம் அதற்கு இயைந்த வகையில் செயற்பட்டால் அக்கட்டண முறைமையின் உச்ச பயனைப் பெறப்போகின்றவர்களும் நாங்களே!

அவ்வாறு செயற்பட இயலாவிடில், ‘பசுமை’ மின்சாரத்தின் பாவனைக்கு நாம் மாறவேண்டும் என்பதே, இப் புதிய மின் கட்டண முறைமையின் பின்னாலிருக்கும் கொள்கையாகத் தெரிகிறது.

இலங்கையிலே காற்றாலைகள் மூலமான மின் உற்பத்தியும் சூரிய சக்தி மூலமான மின் உற்பத்தியும் அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறைக்கும் வந்துவிட்டன.

சூரிய சக்தியின் பயன்பாடு கிராமங்களையும் ஆக்கிரமித்துவிட்டது. இருளிலே மூழ்கிக்கிடந்த கிராமங்களெல்லாம் சூரிய சக்தியின் பயன்பாட்டால் ஒளியூட்டப்பட்டு வருகின்றன.

இலங்கையின் மேற்கு மற்றும் தென் பகுதியில் காற்றாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. வெகு விரைவில் காற்றுச் சக்திப் பண்ணையொன்று புத்தளத்தில் அமைக்கப்படவிருக்கிறது.

இவற்றையெல்லாம் பசுமைப் பொருளாதாரத்தை நோக்கி இலங்கையைப் பயணிக்கச் செய்யும் செயற்றிட்டங்களாகவே கருதமுடியும்.

பொதுமக்கள் மத்தியில் இவை தொடர்பான விழிப்புணர்வு ஊட்டப்பட்டால் மட்டுமே அவை 100 சதவீத வெற்றியைத் தரும் எனலாம். ஆகையால் வெகுசனத் தொடர்பு ஊடகங்கள் யாவும் ஒன்றிணைந்து அவ் விழிப்புணர்வை ஊட்ட வேண்டுமென்பதே காலத்தின் தேவையாக இருக்கிறது.

No comments:

Post a Comment