Sunday, August 1, 2010

கல்லிலே கண்ட கலைவண்ணம்


‘உலகிலே கோவில் கட்டும் துறையில் தமிழினம் தான் உயர்ந்து விளங்கியது. இந்தியாவில் இதுவரை கட்டப்பட்ட கோவில்களிலே தஞ்சை பெருங்கோவில் தான் மிகப் பெரியது’ என பிரித்தானிக்கா தகவல் களஞ்சியம் குறிப்பிடுகிறது.

ஆட்சி நிலை, ஆடம்பரமான மாட மாளிகைகள், கோட்டைகள் என எங்கும் பிரமாண்டத்தை உருவாக்கிய மன்னர்கள், கோவில்களிலும் பிரமாண்டத்தை விட்டுவைக்கவில்லை. ஆயிரம் வருடங்களுக்கும் மேலாக நின்று நிலைத்து காலத்தால் அழிக்கப் படாத வரலாற்றைப் பறை சாற்றும் தென்னிந்தியக் கோவில்களின் பிரமாண்டம், அவ்வுண்மையைத் தெளிவுபடுத்தும். வட இந்தியாவின் சிறப்பு பிரமாண்டமான கலை நயம் மிக்க கோட்டைகளும் அரண்மனைகளுமென்றால், தென் இந்தியாவின் சிறப்பு, இந்தத் திருக்கோவில்களேயாகும்.

அரண்மனைகளைவிட, கோவில்களைக் கட்டுவதிலே தென்னிந்திய மன்னர்கள் அதிக ஆர்வம் செலுத்தினாரோ என்றும் எண்ணத் தோன்றுகிறது. ஏனெனில், இன்றளவிலும் நிலைத்திருந்து மன்னன் தன் புகழ்பாடும் அரண் மனைகளை விட, கோவில்களின் எண்ணிக்கை மிக அதிகமாகும்.

கோவில் திருப்பணிகளை நன்கு மேற்கொண்டால், அவை காலத்தால் அழிக்கப்படாமல் பேணப்பட்டு, தம்புகழை என்றும் பாடிக் கொண்டிருக்கும் என்று எண்ணினரோ எனவும் தோன்றுகிறது.

அந்த வகையிலே, ஆயிரம் ஆண்டு காலமாக நிலைத்து நின்று எம்முன்னவர்களின் வரலாற்றையும் தொழில் நுட்ப அறிவையும் ஒருங்கே பறைசாற்றும் பெருமை தஞ்சை பெருங்கோயிலைச் சாரும் என்றால் மிகையாகாது.

பல அறிந்த, அறியாத அதிசயங்களையும் புதிர்களையும் தன்னகத்தே தாங்கி இன்றும் வானளாவி நிற்கும் தஞ்சை பெருங்கோயிலைக் காண கண்கோடி வேண்டும் என்றால் மிகையில்லை. தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டியவன் இராஜராஜசோழன் என்று சொல்ல இன்று பலர் காணப்படுகின்றார்கள். அது கடந்த ஒரு நூற்றாண்டு காலமாகத்தான் அவர்களுக்குத் தெரியும் என்றால் ஆச்சரியமாகத் தான் இருக்கிறது.

ஜேர்மனிய அறிஞரான ஹீல்ஷ் என்பவர் 1886 ஆம் ஆண்டு தஞ்சைப் பெருங்கோவிலின் கல்வெட்டுக் களை ஆராய்ந்தார். அவரது ஆய்வுதான், தஞ்சைப் பெருங் கோயிலைக் கட்டியது. இராஜ ராஜ சோழன் என்பதை வெளியுலகுக்கு எடுத்துக் கூறியது.

பிரமிப்பின் உச்சமாகவே தெரியும் தஞ்சை பெருங்கோயிலின் சிறப்புக்களை விரித்தால் பெருகும். தொகுத்தால் எஞ்சும். கோவிலுக்குள் செல்வதற்கு ஒன்றன் பின் ஒன்றாக மூன்று வாயில்கள் காணப்படுகின்றன. அவற்றுள் மூன்றாவது வாயிலை இராஜராஜன் வாயில் என்பர். அவ்வாயிலின் இருபுறமும் அமைக்கப்பட்டிருக்கும் துவார பாலகர்களின் சிலைகள்தான் உலகின் மிகப் பெரிய துவாரபாலகர்களின் சிலைகளாகக் காணப்படுகின்றன.

இவை ஒவ்வொன்றும் தலா 18 அடி உயரமானவை. இந்த வாயிலின் கோபுரத்திலே, இறைவன் முப்புரங்களை எரித்த கதையும் சண்டேசுரருக்கு அருள் புரிந்த கதையும் அழகிய சிற்பங்களால் வடிக்கப்பட்டுள்ளன. அவைமட்டுமன்றி கண்ணப்பநாயனார் சரிதம், முருகன் - வள்ளி திருமணம் மார்க்கண்டேயருக்குக் கிடைத்த சிவதரிசனம் போன்ற பல புராணக் கதைகளும் சிற்பங்களாக நிலைத்திருக்கின்றன.

இராஜராஜன் வாயிலை அடுத்து வருவது திருச்சுற்று மாளிகையாகும். திருச்சுற்று மாளிகையையடுத்து இருப்பது கர்ப்பக்கிரகமும் அதற்கு மேலே காணப்படும் விமானமுமாகும். திருச்சுற்று மாளிகையிலே இராஜராஜனின் பின் காலத்துக்குக் காலம் ஆட்சி செய்த மன்னர்களால் கட்டப்பட்ட சிறிய கோவில்களும் காணப்படுகின்றன.


இக்கோவிலின் கட்டட அமைப்பையும் அதன் நுட்பத்தையும் பார்த்து நவீன பொறியியலாளர்கள் வியந்து நிற்கின்றனர். அந்த ஆற்றல் மிகு கட்டடக் கலைத் தொழில்நுட்பம் இன்னும் கூட ஆய்வாளர்களால் துல்லியமாகக் கண்டறியப்படவில்லை என்பதே உண்மையாகும்.

இந்தக் கோவிலின் விமானம் மட்டுமே, 216 அடி உயரமானது. இன்றைய கோவிலின் நுழைவாயில்கள், கர்ப்பக்கிரகம், அதனையொட்டிய விமானம் திருச்சுற்று மாளிகையிலுள்ள சண்டேசுவரர் ஆலயம் ஆகியன மட்டுமே இராஜராஜனின் காலத்திலே கட்டடப்பட்டவையாகும்.

இக்கோவில் முழுவதுமே கருங்கற்களால் கட்டப்பட்டது. அதற்காகப் பயன்படுத்தப்பட்ட கற்களின் நிறை, ஏறத்தாழ 1 இலட்சத்து 40 ஆயிரம் தொன்கள் எனக்கணக்கிடப்படுகிறது. இங்குள்ள அதிசயம் என்னவெனில், தஞ்சை நகரின் சுற்றுச் சூழலிலே, கருங்கற்களையுடைய பகுதிகள் எவையும் காணப்படவில்லை என்பதாகும்.

அவை ஆகக் குறைந்தது 75 கிலோ மீற்றர் தூரத்திலிருந்தாவது கொண்டு வரப்பட்டிருக்க வேண்டும் என ஆய்வாளர்கள் தெரிவிக் கின்றனர். ஒரு லட்சத் துக்கும் மேற் பட்ட தொன் கற்களை இன்றைய தொழில்நுட்ப வசதிகள் எவையுமே இல்லாத ஒரு காலத்தில் எப்படி அவ்வளவு தூரம் நகர்த்தி 216 அடி உயரத் துக்கு ஏற்றியிருக்க முடியுமெனப் பலரும் வியக்கிறார்கள்.

சிலரோ வெவ்வேறு ஊகங்களின் அடிப் படையில் முயற்சி செய்தும் பார்த்தனர். ஆனால் இராஜராஜன் கற்களை நகர்த்திய உண்மைத் தொழில் நுட்பம் துல்லியமாகக் கண்டு பிடிக்கப்படவிலலை. ஊகங்கள் மட்டுமே தெரிவிக்கப்படுகின்றன.

இராஜராஜன், இக்கோவிலின் கட்டுமானத்துக்குப் பயன்படுத்திய வையாவுமே பிரமாண்டமான கற்களாகும். பல தூண்கள் ஒரே கல்லால் ஆனவை. சிலவோ, ஏறத்தாழ 40 அடி உயரமானவை. அவற்றையெல்லாம் ராஜராஜன் எப்படி தஞ்சைக்குக் கொண்டு வந்து சேர்த்தான் என்பது எம்மைப் பொறுத்தவரையிலே பிரமிப்பாகத்தான் இருக்கிறது.

டிஸ்கவரி தொலைக்காட்சியிலே, தஞ்சை பெருங்கோவில் தொடர்பான ஆவணப் படம் ஒன்று காட்டப்பட்டது. அங்கு ஆய்வாளர்கள், ராஜராஜன் எப்படி இக் கற்களை, தஞ்சைக்குக் கொண்டுவந்திருப்பான் என ஊகித்து முயற்சி செய்து பார்த்தனர்.

பிரமாண்டமான கருங்கல் ஒன்றிலே கயிற்றைக்கட்டி, அதனை ஒன்றின் பின் ஒன்றாக அடுக்கப்பட்டிருந்த மரக்குற்றிகளின் மேல் வைத்தனர். யானையொன்று கல் கட்டப்பட்ட கயிற்றினை இழுக்க, உருளும் மரக்கட்டைகளின் மீது கல் மெதுவாக அசையத் தொடங்கியது. முயற்சி வெற்றி பெற்ற போதும், ராஜராஜனின் படைத்திறனும் வினைத்திறனும் மெய்சிலிர்க்க வைத்ததென்பதேயுண்மையாகும்.

இந்த பிரமாண்டமான கோவிலின் அத்திவாரமோ வெறும் 5 அடி மட்டுமே என்று கூறப்படுகிறது. கோவிலின் தள அமைப்புக்களும் மண்டபங்களும் கூட வைத்த கண்ணை அசைக்க விடுவனவாகத் தெரியவில்லை.

13 நிலைகளையுடைய 216 அடி உயரமான விமானம், கற்களால் அமைக்கப்பட்ட திண்ம வடிவமல்ல. ஒரு கூம்பு கவிழ்க்கப்பட்டால் எப்படி இருக்குமோ, அது போலவே அந்த விமானமும் அமைக்கப்பட்டிருக்கிறது.

தஞ்சைப் பெருங்கோவில் தொடர்பான பல தகவல்களை, கல்வெட்டுக்களாகப் பதிவு செய்த ராஜராஜன், அக்கட்டடக் கலைநுட்பத்தை மட்டும் எங்குமே பதிவு செய்யவில்லை என்பது வியப்பான விடயமாகும்.

தஞ்சைப் பெருங்கோவிலின் விமானத்தின் நிழல் தரையில் விழுவதில்லை என்றும் விமானத்தின் உச்சி, ஒரேகல்லினால் ஆனது என்றும் கூடக் கூறப்படுகிறது.

பஞ்ச பூதத் தலங்கள், தென்னிந்தியாவிலே தனித்தனியாகக் காணப்படுகின்றன. மாறாக, ராஜராஜேஸ்வரம் எனும் தஞ்சை பெருங்கோவிலிலே, பஞ்ச பூதங்களும் ஒரே இடத்தில் உருவகப்படுத்தப்பட்டுள்ளன.

இக்கோவில் ‘10 விரல் அளவு’ என்ற விகிதாசாரத்தை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். சோழர்களின் கணிப்புப்படி ‘10 விரல் அளவு’ என்பது 33 ணீசீ ஆகும். கோவிலின் சகல அளவீடுகளும் 33 ணீசீ இன் விகிதங்களாகவே காணப்படும் உண்மை அதிசயிக்க வைக்கிறது. ‘ஒரு விரல்’ எனப்படுவது 8 நெல் மணிகளை வரிசையாக அடுக்கினால் பெறப்படும் அளவு ஆகும்.

இவ்வாறு கணித ரீதியாக மிகவும் துல்லியமாகக் கட்டப்பட்டிருக்கும் இவ்வாலயத்தில் எந்த ஒரு கல்லும் வெறுமையாக விடப்படவில்லை. மிகவும் நுணுக்கமான கலை நயம் மிக்க சிற்பங்களும் அலங்காரங்களும் ஓவியங்களும் வகை தொகையின்றிக் காணப்படுகின்றன. கல்லாலான சங்கிலிகளும் நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகளும் பிரமிக்க வைக்கின்றன.

தற்போது கர்ப்பக்கிரகத்திற்கு முன்னே காணப்படும் பிரமாண்ட மான நந்தியும் அதன் மண்டபமும் நாயக்கர் காலத்தவையாகும். நந்தி ஒரே கல்லிலே செதுக்கப்பட்டதென்பதும் குறிப்பிடத்தக்கது.

அந்நியப்படையெடுப்புக்களால் இலங்கையிலே அழிக்கப்பட்ட கோவில்கள் பற்றிக்கற்ற எமக்கு, தென்னிந்தியாவின் தொன்மைவாய்ந்த கோவில்கள் மட்டும் இன்னும் எப்படி நிலைத்திருக்கின்றன என்ற கேள்வி மனதிலே எழலாம்.

இலங்கையிலும் அதிகமாக இந்தியா பல உள்நாட்டு மற்றும் அந்நியப் படையெடுப்புக்களைச் சந்தித்தது. அவற்றையெல்லாம் தாண்டி இக்கோவில்கள் இன்றும் நிலைத்து நிற்கின்றனவெனில் அவற்றை என்னவென்று சொல்வது?

இராஜராஜசோழனின் காலத்துக்கு முன்னரே சோழநாடு வளமிக்கதாகவே இருந்தது. அங்கே விவசாயம் செழித்தது. பொன்னும் பொருளும் கொழித்தன. அரபு நாடுகளுடனும் கிழக்காசிய நாடுகளுடனும் மன்னன் ராஜராஜன் மேற்கொண்ட வாணிபத்தால் அவனது திறைசேரி நிரம்பி வழிந்தது.

அச்செல்வத்தின் பெரும் பகுதியை மன்னன் தஞ்சைப் பெருங்கோவிலுக்குக் காணிக்கையாகச் செலுத்தியிருந்தான்.

கோவிலின் செயற்பாடுகள் நீண்டகாலத்துக்கு தங்கு தடையின்றி நடைபெறுவதற்கான முதலீடாக மன்னன் அவற்றை மேற்கொண்டிருந்தான். அதைப்போல பல கிலோ எடையுடைய தங்கம், வெள்ளிப் பொருட்கள், செப்புச் சிலைகள் எனப் பலவற்றை கோவிலுக்கு வழங்கியிருந்தான்.

அவை ஒவ்வொன்றின் விபரத்தையும் தவறவிடாது கல்வெட்டில் பதித்திருந்தான். காலத்துக்குக்காலம் உருவாகிய ஆக்கிரமிப்பாளர்களால் அவை யாவுமே கொள்ளையடித்துச் செல்லப்பட்டுவிட்டன. ஆனால் அக் கல்வெட்டுக்கள் மட்டும் சோழ நாட்டின் செல்வச் செழிப்பை உலகுக்குப் பறைசாற்றி நிற்கின்றன.

இன்னும் நாம் அறிந்த, அறியாத ரகசியங்கல் பல இக்கோவிலிலேயே நிறைந்து காணப்படுகின்றன என்பதை எவராலும் மறுக்க முடியாது.

சோழ நாட்டின் வளமும் செல்வச் செழிப்பும் அந்நிய நாட்டின் ஆக்கிரமிப்பாளர்களை அப்பூமியிலே ஊழித்தாண்டவம் ஆடவைத்தன.

செல்வத்தை அள்ளிச் செல்லும் ஆர்வம் மிகுந்த ஆக்கிரமிப்பாளர்கள், கோவிலை அழிக்க முயலவில்லை.

ஏன் கோவிலை உடைத்து அக்கற்களைக் கொண்டு அணைக்கட்ட எண்ணிய வெள்ளையர்கள் கூட, பின்னர் ஏனோ அவ்வெண்ணத்தைக் கைவிட்டு விட்டனர்.

இப்படி எல்லா அழிவுகளையும் கண்டு, தற்போது யுனெஸ்கோ நிறுவனத்தால் பாதுகாக்கப்பட வேண்டிய கலாசாரச் சின்னமாகப் பேணப்படுகிறது. இந்த வருடம், தனது 1000 ஆவது வருடத்தைப் பூர்த்தி செய்யும் கலைக்கோவிலாக ராஜராஜேஸ்வரம் திகழ்கிறது.

தமிழனாய்ப் பிறந்த ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய கோவில் இப்பெருங் கோவில். ஆத்திகவாதியோ நாத்திகவாதியோ எவராயினும் இக்கோவிலைத் தம் வாழ்வில் ஒரு தடவையாவது சென்று பார்க்க வேண்டும்.

அக்கோவிலின் பிரமாண்டமும் சிற்பக்கலையின் நுட்பமும் எம் முன்னோரின் அறிவுத் திறத்தை எமக்கு எடுத்துக் காட்டும். சோழன் கல்லிலே கண்ட கலை வண்ணத்தை, நாம் நேரிலேனும் தரிசிக்காவிடில், இணையத்தினூடாக முப்பரிமாண, 360 சுழற்சியிலே கண்டு இன்புறலாம். அது நேரேயே சென்று தரிசிப்பது போன்ற மாய உணர்வை ஏற்படுத்தும். அவ்வுணர்வு நேரிலே சென்று தரிசிக்கும் ஆர்வத்தை நிச்சயம் ஏற்படுத்தும்.இங்கு குறிப்பிடப்பட்டவை எல்லாம் வெறும் கைமண்ணளவு தான். குறிப்பிடப்படாதவை உலகளவானவை. இவையெல்லாம், தமிழரின் தொன்மையையும் அறிவுத் திறத்தையும் வெளிப்படுத்தும், காலச் சருகு மறைக்காத சுவடுகளாகவே தெரிகின்றன.

No comments:

Post a Comment