Sunday, November 13, 2011

கண்ணைக் குளமாக்கிய மண்ணின் வாழ்வியல் -06

நவீன நாடகங்களின் மூலவேர் கூத்து

இன்று திரைப்படங்களிலும் மிக அரிதாக திருவிழாக்களிலுமே நாம் கிராமியக் கலை வடிவங்களைக் காண்கிறோம். ஆனால் ஒரு காலத்திலே அவை அன்றாட வாழ்வியலுடன் பிணைந்திருந்தன. இந்த கிராமியக் கலைகள் கிராமங்களிலே ஓய்வு நேரங்களில் பயிலப்பட்டு வந்தவை. அவை சந்ததி சந்ததியாகக் கடத்தப்பட்டும் வந்தன. இந்தக் கலைகள் கிராமிய வாழ்வின் கலை இலக்கிய வெளிப்பாடாக மட்டும் இருக்கவில்லை. மக்களுக்கு உடற்பயிற்சியை அளித்தன. பொழுது போக்காகவும் அறிவூட்டுவனவாகவும் கூட இருந்தன. மக்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் கருவிகளாகவும் கூட விளங்கின.
ஆனால், உலக மயமாக்கல் அந்த கிராமியக் கலைகள் மீதான மக்களின் நாட்டத்தை குறைத்துக் கொண்டே செல்கின்றது. இதே நிலைமை தொடர்ந்தால், காலப்போக்கிலே அவை அழிந்து போய்விடும் என்பதில் எதுவித ஐயமும் இல்லை. ஒரு தேசத்தின் தனித்துவம் கிராமத்தில் இருக்கும் என்பர் எம்மவர்.
கிராமிய கலை வடிவங்களை ஆராய்ந்தால் அந்த உண்மை புலப்படும், யாழ். மண்ணிலே ஐரோப்பியர் கால் பதிக்க முன்னர், அம் மண்ணின் சமூகக் கட்டமைப்பு தன்னிறைவான கிராமியப் பொருளாதாரப் பண்புகளையும் சாதியத்தின் அடிப்படையில் உருவான தொழிற்பிரிப்புகளையும் கொண்டிருந்தது. அதே அடிப்படையில் தான் கலைப் பாரம்பரியங்களும் நிலை பெற்றிருந்தனவென பேராசிரியர் சபா ஜெயராஜா கூறுகிறார். தவில் போன்ற சில கலை வடிவங்கள் செல்வந்தர்களின் அரவணைப்பிலே வளர்ந்தன.
அதேவேளை கரகாட்டம், காவடியாட்டம் போன்ற கலைகள் சுயாதீன கலைஞர்களின் பராமரிப்பிலே வளர்ந்தன. இவை குடும்பங்களில் பரம்பரை பரம்பரையாகக் கடத்தப்பட்டு ஆற்றுகை செய்யப்பட்டன. யாழ். மண்ணின் பரந்து பட்ட வாழ்க்கை முறைமைக்கும் பன்முகப்படுத்தப்பட்ட பண்பாட்டுக் கோலங்களுக்கும் வலிமையான சான்றாக இருப்பவை இந்த கலை வடிவங்கள் என்பதை நாம் ஒரு போதும் மறுக்க முடியாது.
வட பகுதியெங்கிலும் பரவலாக வழக்கிலிருந்து இந்தக் கலை வடிவங்களை இன்று அங்கொன்றும் இங்கொன்றுமாய் வெகு அரிதாகத்தான் காண முடிகிறது. அதை எவராலும் மறுக்க முடியாது. இந்த கண்காட்சியிலே கிராமியக் கலை வடிவங்களுக்கு தனிக் கூடமே ஒதுக்கப்பட்டிருந்தது.
அந்த அரிய கலைகளுடன் தொடர்புபட்ட பல விடயங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. அவை யாழ். வாழ்வியலின் கலை பண்பாட்டு அம்சங்களைப் பிரதி பலித்தன. கோயில்களிலே இறைவனைக் காவும் வாகனங்களும், பொய்க்கால் குதிரைகளும் கூட காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. திருமணச் சடங்கு போன்ற நிகழ்ச்சிகளிலே பந்தல் போடும் போது பயன்படுத்தப்படும் கலையம்சங்கள், மான் கொம்புகள், கிராமியக் கலையுடன் தொடர்புடைய இசைக் கருவிகள், அலங்காரப் பொருட்கள், உபகரணங்கள், சிறப்பு அணிகலன்கள், கடைகளில் வைக்கப்படும் காசுப்பெட்டிகள், பெட்டகங்கள், சிதிலமடைந்த இறை வாகனங்கள், போன்றனவும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
பொய்க்கால் குதிரையாட்டமானது இணுவில், அளவெட்டி, சித்தன்கேணி போன்ற பகுதிகளில் வெகு பிரபலமாக இருந்தது. யாழ்ப்பாணத்தை ஐரோப்பியர் ஆட்சி செய்த காலத்திலே மாட்டு வண்டிகளும் குதிரை வண்டிகளும் பயன்பாட்டில் இருந்தன. குதிரையானது அந்தஸ்தின் சின்னமாகக் கருதப்பட்டது.
அரசாங்கத்தில் உயர் பதவி வகித்தவர்கள் குதிரை வண்டிகளிலே பயணித்தனர். இதன் விரிவாக்கமே திருவிழாக்களில் நடத்தப்படும் குதிரையாட்டம் ஆகும். அவ்வாறு நடாத்துதல் உயர் அந்தஸ்தை அளிப்பதாகக் கருதப்பட்டது. ஆடுவதற்குப் பயன்படுத்தப்பட்ட குதிரைகள் மென்மையான மரங்களைக் குடைந்து தயாரிக்கப்பட்டன.
முன்னர் வீடுகளிலே அலங்காரப் பொருட்களாக மான் கொம்புகள் வைக்கப்பட்டிருந்தன. அத்துடன் அவற்றை வைத்திருந்தால் செல்வம் கொழிக்கும் என்ற நம்பிக்கையும் ஆரம்ப கால மக்களிடத்தே காணப்பட்டது. மாடுகளின் முகங்களைப் போன்ற உருவமைப்புகளை வீட்டு வாசலில் வைப்பதும் கூட வழக்கமாக இருந்தது.
காத்தவராயன் கூத்து, சங்கிலியன் நாடகம் போன்ற பல கலைகளிலே பயன்படுத்தப்படும் வாள்களும் கூட அங்கு வைக்கப்பட்டிருந்தன. காவடி, கரகாட்டம் போன்ற கலைகள் எம் இந்து சமயப் பண்பாட்டின் முக்கிய அம்சங்களாகக் காணப்படுகின்றன. அத்தகைய கரகங்கள், காவடிகளையும் கூட அங்கு காண முடிந்தது. கரகத்தை காவடியுடன் இணைத்துக் கரகக் காவடி என்றொரு நடன வடிவம் யாழ்ப்பாணத்தில் இருந்ததாக த. சண்முக சுந்தரம் குறிப்பிடுகிறார்.
கிராமியக் கலைகளிலே பயன்படுத்தப்பட்ட முடிகளும் கோயில்களில் சிறப்பு நிகழ்வுகள், பொம்மலாட்டங்களின் போது பயன்படுத்தப்படும் முக மூடிகளும் கூட காணப்பட்டன. யாழ்ப்பாணம் என்ற பெயர் உருவாகக் காரணம், பாணன் யாழ் வாசித்தமை என்று கூறுவர். அந்த யாழ் என்ற இசைக்கருவியை கண்களால் கண்டவர்கள் வெகுசிலர் என்று தான் கூற வேண்டும். யாழின் பரிணாமமே வீணை என்றும் கூறுவர். அந்த யாழின் மாதிரியும் மரத்தால் செய்து வைக்கப்பட்டிருந்தது.
அத்துடன், பாவனைக்குகந்ததல்லாத ஹார்மோனியப் பெட்டிகளும் வைக்கப்பட்டிருந்தன. வீட்டு யன்னல்களை அலங்கரித்த மர வேலைப்பாடுகளின் சிதிலங்களும் கூட காணப்பட்டன.
எம்மவர் சடங்கு சம்பிரதாயங்களிலே பூ மாலைக்கு மிக முக்கிய இடம் வழங்கப்பட்டிருந்தது. ஒரு குழந்தை பிறப்பதிலிருந்து அது முதிர்வடைந்து இறப்பது வரை ஒவ்வொரு தேவைக்கும் ஒவ்வொரு வகைப் பூமாலை பயன்பட்டது. கொண்டை மாலை, மொட்டு மாலை, சரம், கதம்பச் சரம், கழுத்து மாலை, கரவாரம் என எத்தனை வகைகள் தெரியுமா? அவை எல்லாம் இன்று காணாமலே போய் விட்டன என்று தான் கூறவேண்டும.
அதைவிட அவை, தத்ரூபமாக வடிவமைக்கப்பட்ட பிளாஸ்டிக் மாலைகளால் பிரதி செய்யப்பட்டு விட்டன என்று கூறுதல் தகும். இங்கு வருந்த வேண்டிய விடயம் யாதெனில் கொழும்பு போன்ற கட்டடங்கள் நிறைந்த நகரப் பகுதிகளை விட யாழ்ப்பாணம், வவுனியா போன்ற பிரதேசங்களில் இந்த பிளாஸ்டிக் துணி பூமாலைகளின் பாவனை அதிகமாக இருப்பதைக் காண முடிகிறது. அதை உணர்ந்திருப்பவர்கள் வெகு சிலரே. ஆக இந்த வாழ்வியல் அம்சங்கள் தொலைந்து போவதற்கான பிரதான காரணம் எம் அலட்சியமே எனலாம். கிராமியக் கலை வடிவங்கள் எனப்படுபவை ஆதி மனிதனுக்கு ஏற்பட்ட உணர்வுகளின் வெளிப்பாடாக உருவான வை.
அந்த வெளிப்பாடு பல்வேறு விதமாகப் பரிணமித்தமை யைத் தான் இக் கலை வடிவங்களாகக் காண்கிறோம். இன்று நாம் நவீனம் என்று பற்றி நிற்கும் கலை வடிவங்களு க்கு மூலமாக இருந்தவை இந்த கிராமியக் கலைகளே! இன்றைய நாடகங்கள் அன்றைய கூத்தின்படி முறை வளர்ச்சியால் உருவானவை. இந்த அரிய கலை வடிவங் களைக் கவனிக்காது விடுதல் என்பது பிள்ளைகள் தம் பெற்றோரை அலட்சியப்படுத்துவதற்குச் சமனானது.
இந்தக் கலை வடிவங்கள் அற்றுப் போய்விடக்கூடாது என்பதனாலோ என்னவோ, யாழ்ப்பாண வாழ்வியல் கண்காட்சியின் ஆரம்ப நாள் நிகழ்விலே அதிதிகளை வரவேற்கும் போது கூட அவை வெளிப்படுத்த ப்பட்டன. இந்தக் கலை வடிவங்கள் ஊக்குவிக்கப்படாமல், அலட்சியப்படுத்தப்படுவதால், கலைஞர்களும் பெரும் பாதிப்புக்குள்ளாகிறார்கள். இந்த கலைகளையே தொழிலாகக் கொண்டு வாழ்ந்தவர்களின் வாழ்க்கை இன்று கேள்விக்குறியாகி விட்டது.
அதேவேளை இந்தக் கலைகளைப் பயின்று அதை அடுத்த சந்ததிக்குக் கொண்டு போகத் தயாராக இருக்கும் இளஞ்சந்ததியர் வெகு சிலரே பணத்தை மட்டுமே மதிக்கும் உலகில் அதிக வருமானம் ஈட்டும் தொழில்கள் மீதான நாட்டம் தவிர்க்க முடியாததல்லவா? அவர்களையும் பிழை சொல்ல முடியாது. எத்தனையோ பிரபலமான கூத்துக் கலைஞர்களை எல்லாம் எம் மண் உருவாக்கியிருக்கிறது. அதை அறிய வேண்டும் என்றால் கூட நூலகத்துக்குச் சென்று புத்தகங்களைத் தான் வாசிக்க வேண்டும்.
இதுவே இன்றைய யதார்த்தம். அந்த கலைஞர்கள் உருவாக வேண்டும்; அவர்களுடன் சேர்ந்து இந்தக் கலை வடிவங்களும் வாழ வேண்டும் என்றால், நாம் அக்கலைகளை மதித்து ஊக்குவிக்க வேண்டும். வீண் நியாயங்க ளைச் சொல்லி காலத்தை வீணடிப்ப தென்பது தேவையற்ற ஒரு விடயம், என்று தான் கூற வேண்டும். (தொடரும்)

1 comment:

Anonymous said...

பொதுவான தகவல்கள் அடிப்படையில் தரவுகளின்றி கட்டுரைகள் எழுதுவதைத் தவிர்க்கவும். ஏனெனில் தங்கள் கட்டுரையில், சித்தன்கேணியில் பொய்க்கால் குதிரையாட்டம் இருந்ததாக குறிப்பிட்டுள்ளீர்கள் ஆனால் அப்படியொரு கலை அவ்விடத்தில் காணப்படவில்லை ஆனபொழுதிலும் சிந்துபுரம் என்ற இடத்தில் இக்கலைகள் துடிப்பாக வாழ்ந்து கொண்டிருப்பதை நீங்கள் குறிப்பிடவில்லை அல்லது நீங்கள் அறிந்திருக்கவில்லை. இது தொடர்பான மேலதிக விபரங்களிற்கு www.sinthupuram.com தொடர்பு கொள்ளவும்.

Post a Comment