Friday, May 7, 2010

பாலங்களால்தண்ணீரும் பயணிக்குமா?



பார்க்குமிடங்களெல்லாம் நெருக்கமாகக் காணப்படும் தென்னை மரங்கள்.... கோடைக் காலத்திலும் வற்றாத ஆறுகளென, கேரளத்தின் சாயலோடு காணப்படும் மலைப் பாங்கான பிரதேசம் மாத்தூராகும். தென் தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்திலே நாகர்கோயிலிருந்து ஏறத்தாழ ஒரு மணித்தியாலம் பயணத் தூரத்திலேயே இந்த சிற்றூர் அமைந்திருக்கிறது.

கன்னியாகுமரியிலிருந்தும் கேரளத்தின் தலைநகரான திருவனந்த புரத்திலிருந்தும் சம தூரத்தில் அமைந்திருக்கும் மாத்தூரிலே ஆசியாவிலேயே மிகவும் நீளமானதும் உயரமானதுமான தொட்டிப் பாலம் அமைந்திருக்கிறது.

தொட்டிப் பாலமெனப்படுவது இரண்டு உயரமான இடங்களுக்கிடையிலே காணப்படும் பள்ளத்தாக்கை ஒட்டி அமைக்கப்பட்ட வாய்க்காலுடனான பாலமாகும். நீரைக் கொண்டு செல்லும் நோக்குடன் அமைக்கப்பட்ட பாலத்தையே தொட்டிப் பாலம் அல்லது ஏதண்டமென அழைப்பர். சில வேளைகளில் கப்பல் போக்குவரத்துக்காகவும் தொண்டிப் பாலம் அமைக்கப்படுகிறது.

மாத்தூரிலே அமைக்கப்பட்ட தொட்டிப் பாலமும் அத்தகையதே. ஒரு காலத்தில் மலைப்பாங்கான காடுகளாகவிருந்த கணியான் பாறையென்ற மலையையும் கூட்டு வாயுப் பாறையென்ற மலையையும் இணைத்து, பறளியாற்று நீரைக் கொண்டு செல்வதற்காக அவ்விரு மலைகளுக்கும் நடுவே இப்பாலம் அமைந்துள்ளது.

தரைமட்டத்திலிருந்து ஏறத்தாழ 115 அடி உயரத்திலே நிர்மாணிக்கப்பட்டிருக்கும் இந்தப் பாலத்தின் நீளம் 1204 அடியாகவும் காணப்படுகிறது. 40 அடி இடைத்தூரத்தில் அமைக்கப்பட்ட 28 இராட்சதத் தூண்கள் இந்தப் பாலத்தைத் தாங்குகின்றன.

பறளியாற்றின் நீரானது 7 அடி உயரமும் 7 அடி அகலமுமுடைய பெரிய தொட்டிகளாகக் தொடுக்கப்பட்ட பகுதியால் கொண்டு செல்லப்படுகிறது. இரு மலைகளுக்கு நடுவில் தொட்டில் போன்ற அமைப்புடன் காணப்படுவதால் தொட்டில் பாலமெனவும் இப்பாலம் அழைக்கப்படுகிறது.


சக்கர நாற்காலியொன்று செல்லக்கூடிய அகலத்தை மட்டுமேயுடைய ஒடுங்கிய மேற்பகுதியினூடாக பாலத்தின் ஒரு அந்தத்திலிருந்து மறு அந்தத்திற்குச் செல்லமுடியும். இரு மலைகளுக்குமிடையே அடர்ந்து காணப்படும் தென்னை, இறப்பர் மரங்கள், நீல வானம், சலசலத்து ஓடிக்கொண்டிருக்கும் ஆறு என இயற்கை அன்னையின் அருட்கொடைகள் யாவும் ஒருங்கே தெரியும் காட்சியை விபரிக்க எவரிடமும் வார்த்தைகளிருக்காது.

பாலத்தின் மேற்பகுதியில் நடப்போரின் பாதுகாப்புக் கருதி, நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டாலும் நில மட்டத்திலிருந்து நாம் நிற்கும் உயரத்தைக் கற்பனை செய்தால், எமது கட்டுப்பாடின்றியே கால்கள் உதறத் தொடங்குவதைத் தடுக்க முடியாமல் போவதையும் கையிலிருக்கும் பொருட்கள் விழுந்துவிடுமோ என கை தன்பாட்டிலேயே அவற்றை இறுகப் பற்றிப் பிடிப்பதையும் உணரலாம். அனுபவித்த எவரும் அதை மறுக்கமாட்டார்கள்.

வெளியான இடமொன்றில் 115 அடி உயரத்திலிருந்து இயற்கையை ரசிப்பது கூட ஒரு சுகமான வித்தியாசமான அனுபவம் தான்.

இயற்கையின் அருள் மழையில் நனைந்தபடியே பாலத்தின் மறு அந்தத்தையடைந்தால் பார்க்குமிடங்களில் எல்லாம் இறப்பர் தோட்டங்கள் மட்டுமே தெரியும். தோட்டங்களில் உள்ள இறப்பர் மரங்களினிடையே சிறிய பெட்டிகள் காணப்பட்டன.

விசாரித்துப் பார்த்த போது தான் இறப்பர்த் தோட்டங்களிலேயே சிறுகைத்தொழில் முயற்சியாக, தேனீ வளர்ப்பும் இடம்பெறுவது தெரிந்தது. இறப்பர் மரங்களின் பூக்கும் காலத்தை ஆதாரமாகக் கொண்டே இந்தக் கைத்தொழில் முயற்சி நடைபெறுகிறது.

அதற்கான தேனீ வளர்ப்புப் பெட்டிகளே இறப்பர் மரங்களின் இடையே காணப்பட்ட பெட்டிகளாகும். ஆரம்பித்த இடத்துக்கு மீண்டும் வர இரு வழிகள் இருக்கின்றன. வந்த பாதையினாலே அதாவது தொட்டிப் பாலத்தின் மேற் பகுதியாலேயே திரும்பி வரலாம். அல்லாவிடின், பாலத்தின் அருகிலேயுள்ள படிக்கட்டுக்களால் திரும்பி வரலாம். பாலம் முடிவடையுமிடத்திலே தொடங்கும் படிக்கட்டுக்களின் வழியே குறிப்பிட்ட ஆழம் வரை இயங்கிப் பின் அங்கே அமைக்கப்பட்டுள்ள சுழல் படிக்கட்டுக்களின் வழியே ஆரம்பித்த இடத்தைச் சென்றடையலாம்.


சூழலின் வழி நெடுகிலும் பூந்தோட்டங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அழகுள்ள மலர்களைப் பறிக்கத் துறுதுறுக்கும் கைகளுக்காகவே பல இடங்களிலும் அறிவித்தல் பலகைகள் தொங்குகின்றன. ‘இங்குள்ள மலர்களைப் பறித்தால் 50 ரூபா அபராதம்!’ என்பதே அப்பலகைகள் தாங்கி நிற்கும் செய்தியாகும். ஆனால், பாலத்தைப் பார்வையிட, கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுவதில்லை.

இந்தப் பாலம் 1966 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. ஒரு காலத்திலே கன்னியாகுமாரி மாவட்டத்தின் விளவன்கோடு, கல்குளம் ஆகிய பகுதிகள் மிகவும் வறண்ட பிரதேசங்களாக மாறியிருந்தன.

அப்பகுதிகளுக்கான நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்தினால் விவசாயம் செழித்து வளங்கொழிக்கும் பிரதேசங்களாக அப்பிரதேசங்கள் மாறுமென எண்ணிய பெருந்தலைவர் காமராஜரின் முயற்சியால் உருவானதே இந்த மாத்தூர் தொட்டிப் பாலமாகும். அவரது பதவிக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம் அக்காலம் முடிவடைந்த பின்னரும் தொடரப்பட்டு பூர்த்தி செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

படிக்காத மேதை எனப் போற்றப்படும் காமராஜன் போன்ற நாட்டு நலனில் அக்கறையுள்ள பெருந் தலைவர்கள் ஒவ்வொரு நாட்டிலும் இருந்தால், உலக நாடுகள் யாவும் இன்று ஒரே நிலையில் இருந்திருக்கும்.

மாத்தூர் தொட்டிப் பாலத்தின் பயனாக பல ஹெக்டயர் விவசாய நிலங்கள் பயன் பெறத் தொடங்கின. தரிசு நிலங்கள் பல விவசாய நிலங்களாகின. கன்னியாகுமரி மாவட்டம் விவசாயத்தில் தன்னிறைவு கண்டது.

மாத்தூரில் உள்ள பாலம் மட்டும்தான் தொட்டிப் பாலமல்ல. உலகின் பல நாடுகளிலும் வெவ்வேறுபட்ட தொட்டிப் பாலங்கள் காணப்படுகின்றன.

தொட்டிப் பாலத்திற்குப் பின்னால் இருக்கும் தத்துவம் மிகவும் புராதனமானது. வரலாற்றிலே விவசாயத்தைத் தமது வாழ்வாதாரமாகக் கொண்ட சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் பயிர்களுக்கு நீரைப் பாய்ச்சுவதற்குத் தொட்டிப் பாலங்களைப் பயன்படுத்தினர். உரோம சாம்ராஜ்யத்தின் போது கட்டப்பட்ட தொட்டிப் பாலங்களுள் சில இன்னும் பாவனையில் இருக்கின்றன. பயிர்களுக்கு நீரைபாய்ச்சுவதற்கு மட்டுமன்றி பெரிய நகர்களுக்கு குடிநீரை வழங்குவதற்கும் இந்த உரோம தொட்டிப் பாலங்கள் பயன்பட்டிருக்கின்றன. இன்னும் பயன்பட்டுக்கொண்டிருக்கின்றன.

தொட்டிப் பாலங்கள் உரோம சாம்ராஜ்யத்துடன் தொடர்புபட்டவை என வரலாறு குறிப்பிட்டாலும் அவற்றின் அடிப்படைத் தத்துவத்தின் பின்னணியில் சிறந்த நீர்ப்பாசன முறைமைகளைப் பயன்படுத்திய எகிப்திய, ஹரப்பா நாகரிக மக்களும் காணப்படுகின்றனர்.




உரோம சாம்ராஜ்யம் பரவியிருந்த இன்றைய ஜேர்மனி முதல் ஆபிரிக்கா வரையான பல நாடுகளிலும் குறிப்பாக ரோம் நகரிலும் பல தொட்டிப் பாலங்கள் காணப்படுகின்றன.

இந்தியத் துணை கண்டத்திலும் பல புராதன தொட்டிப் பாலங்கள் காணப்படுகின்றன. துங்க பத்ரா நதிக் கரையோரம் அமைக்கப்பட்டிருந்த தொட்டிப்பாலம் 24 கி.மீ. நீளமாக இருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.

புராதன பாரசீகத்திலே, தொட்டிப் பாலத்தின் தத்துவத்தையொட்டிய அமைப்பு நிலத்துக்குக் கீழ் அமைக்கப்பட்டது. கோடைக்காலங்களில் நீரைப் பாய்ச்சுவதற்கு இந்த முறைமை வினைத்திறன் மிக்கதாகவிருந்தது. நிலத்திற்குக் கீழாக நீரைக்கொண்டு செல்வதால், வெப்பம் காரணமாக இழக்கப்படும் நீர் இழிவளவாகக்கப்பட்டிருந்தது.

தென்னமெரிக்காவின் பெரு நாட்டிலே இன்றும் பாவனையில் இருக்கும் தொட்டிப் பாலங்கள் ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை.

புராதன இலங்கையிலும் கூட தொட்டிப் பாலங்களின் பாவனை காணப்பட்டதாக வரலாறு கூறுகிறது.

இன்றைய நவீன யுகத்திலே, ஐக்கிய அமெரிக்கா தனது நகரங்களுக்கு நீரைக்கொண்டு செல்வதற்காக பாரிய தொட்டிப் பாலங்களைப் பயன்படுத்துகிறது. அவை ஒவ்வொன்றும் பலநூறு கிலோ மீற்றர்கள் நீளமானவை. கொட்டிப் பாலத்தின் புதிய பரிமாணமாகவே குழாய் வழிப் பாலங்கள் காணப்படுகின்றன.

கைத்தொழில் புரட்சியுடன் உருவாகிய கால்வாய்கள் தொட்டிப் பாலங்களின் ஒரு பகுதியாகவே அமைக்கப்பட்டன.

முன்னைய காலங்களில் அமைக்கப்பட்ட தொட்டிப் பாலங்கள் நீரை ஊடுபுகவிடக் கூடிய பதார்த்தங்களால் அமைக்கப்பட்டன. ஆகையால் நீரைக் கொண்டு செல்கையில் குறிப்பிடத்தக்களவு நீர் இழக்கப்படுவதும் தவிர்க்க முடியாததாகியது. பிற்காலங்களில் நீரை ஊடுபுகவிடாத கொங்கிaற் பல் பகுதியங்கள் மற்றும் நீரைக் கசியவிடாத மண் போன்ற பதார்த்தங்களால் கட்டப்பட்டன.

பாலங்கள் நீரைக் காவுமென்பது எம்மில் பலரும் கேள்விப்பட்டிராத ஒரு விடயமே. ஆனால் தொட்டிப் பாலங்களின் பின்னணியிலிருக்கும் வரலாற்றை ஆழ நோக்குகையில் நாம் எந்தக் காலத்தில் இருக்கிறோம் என்பதும் புரிய வேண்டும். 2000 வருடங்களுக்கு முன்னரே இந்தத் தொழில்நுட்பங்கள் பாவனையில் இருந்திருக்கின்றன. அத்தகையதோர் சமூகத்தில் வழித்தோன்றிய நாங்கள் அதே வழியில் புதியதோர் உலகொன்றை உருவாக்க முயல வேண்டும்.

அதுமட்டுமன்றி எமது முன்னோரின் தொழிநுட்ப அறிவினை மேன்மேலும் ஆராய்ந்து அவ்விடயங்களை ஆவணப்படுத்தி எதிர்காலச் சந்ததியும் பயன்பெற வகை செய்ய வேண்டும். இல்லையேல் எதையுமே அறியாத, அறியும் ஆர்வமில்லாத எதிர்காலச் சந்ததியொன்று உருவாக நாமே காரணமாகிவிடுவோம். இவையாவும் எமது முயற்சியில் மட்டுமே தங்கியுள்ளன ஆகையால் இத்தகைய விடயங்களுக்கான தேடலை இன்றே ஆரம்பிப்போமாக!

No comments:

Post a Comment