Friday, December 18, 2009

மாற்றம் பெறும் வைரஸ் கிருமிகள்


டெங்கு, எய்ட்ஸ், மூளைக் காய்ச்சல், பறவைக் காய்ச்சல், மஞ்சள்காமாலை பன்றிக்காய்ச்சல் என்றெல்லாம் பட்டியல் நீளுகிறதுமனிதனின் ஆயுட் காலத்தை அதிகரிக்கச் சளைக்காது முயன்றுவரும் மருத்துவ விஞ்ஞானத்துக்கு மாபெரும் சவாலாக அமைகின்ற காரணிகளுள் முன்னணியில் திகழ்வது ‘வைரஸ்’ எனப்படும் நுண்ணுயிராகும். மிகச் சாதாரணமான தொற்றாகக் கருதப்படும் தடிமனிலிருந்து சற்றுப்பாரதூரமான அம்மை நோய் தொட்டு மிகவும் கொடிய எய்ட்ஸ் நோய் வரை எண்ணிலடங்கா நோய்கள் பல்வேறுபட்ட வைரஸ்களினால் பரப்பப்படுகின்றன.
பங்கசு (பூஞ்சணம்) பக்aரியா போன்ற நுண்ணுயிர்களைவிட வைரஸ்கள் பருமனில் சிறியன. வித்தியாசமான குணவியல்புகளையுடையன. இவை பொதுவாகக் குறித்த ஒரு வகைக் கலங்களையே தொற்றுக்குள்ளாக்கும் தன்மையுடையன.
உலகில் பல வகையான வைரஸ்கள் காணப்படுகின்ற போதிலும் குறிப்பிட்ட வைரஸ்கள் குறித்த சில வகைத் தாவரங்களையோ, விலங்குகளையோ மட்டுமே தாக்கும் வல்லமை படைத்தவை.
மிகச் சாதாரணமான நுண்ணுயிர்களாகக் கருதப்படும் இவ்வைரஸ்கள் நடைமுறையில் ஒவ்வொரு மனிதனையும் தொற்றுக்குள்ளாக்கக் கூடியன. எனினும் பொதுவாகக் குழந்தைகளையும் சிறுவர்களையுமே அதிகளவில் பாதிக்கக் கூடியன. அதேசமயம் ஒருசில வைரஸ்கள் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் ஆற்றல் மிக்கவை.
எமது உடல் வைரஸ்களுக்கெதிராகத் தொழிற்படும் வகையில் பல தடுப்புக்களைக் கொண்டுள்ளது. மேற்றோலானது வைரஸ்கள் உடலினுட் செல்லாவண்ணம் தடுக்கிறது. உடலின் நீர்ப்பீடனத் தொகுதி வைரஸ்களுக்கு எதிராகத் தொழிற்படும்.
காற்று, தொடுகை, நுளம்பு போன்ற காவிகளுட்பட பல வழிகளால் வைரஸ் பரப்பப்படலாம். சாதாரணமாக வைரஸ் தொற்றுக்கள் மூக்கு, தொண்டை, சுவாசப் பாதைகளில் ஏற்படும்.
உயிர்க்கலமொன்றைத் தாக்கும் வைரஸானது, பதார்த்தமொன்றை வெளியிடும். அப்பதார்த்தம் தொற்றுக்குள்ளாக்கப்பட்ட கலத்தைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்து வைரஸின் எண்ணிக்கை மடங்குகளாகப் பெருகுவதற்கு வழிவகுக்கும்.
பொதுவாக வைரஸானது உயிர்க் கலத்தின் சாதாரண தொழிற் பாடுகளைத் தடுப்பதால் அவ்வுயிர்க்கலம் இறக்க நேரிடும். அவ்விறந்த கலம் வெளிப்படுத்தும் புதிய வைரஸ்கள் ஏனைய உயிர்க்கலங்களையும் தொற்றுக்குள்ளாக்கும்.
சில வைரஸ்கள் தொற்றுக்குள்ளான கலங்களின் சாதாரண செயற்பாடுகளை மாற்றியமைக்கும். இதனால் இக்கலங்கள் புற்றுநோய்க் கலங்களாக உருவெடுக்கும் ஆபத்தும் காணப்படும்.
எமது உடலின் நிர்ப்பீடனத் தொகுதி இயற்கையாகவே பிறபொருளெதிரிகளைத் தோற்றுவிக்கக் கூடியது. ஒரு குழந்தை பிறக்கும் போதே பலவிதமான வைரஸ்களை எதிர்க்கக் கூடிய ஆற்றலுடனேயே பிறக்கின்றது.
தாய்ப்பாலானது, பக்aரியா, வைரஸ் உட்படப் பல பிறபொருட்களின் எதிரியாகத் தொழிற்படக் கூடியதென்பதும் குறிப்பிடத்தக்கது. எமது உடலின் நோயெதிர்ப்பு சக்தியே வைரஸ் தொற்றின் தீவிரத்தைத் தீர்மானிப்பதில் முன்னிலை வகிக்கிறது.
வைரஸ் தொற்றின் பொதுவான அறிகுறிகளாக, இருமல், தும்மல், தடிமன், உடல் வெப்ப நிலையுயர்வு அல்லது காய்ச்சல், உடற் பலவீனம், வெளிறிய முகம், உடற்பாகங்களில் வலி அல்லது உளைச்சல் போன்றன கருதப்படுகின்றன. எமது உடலானது தன்னைத் தாக்கும் பிறபொருளொன்றை எதிர்க்குமுகமாகவே மேற்குறிப்பிட்ட அறிகுறிகளைத் தோற்றுவிக்கும்.
இவை வைரஸ் தொற்றினாலேற்பட்ட நேரடிப்பாதிப்புகளல்ல என்பதையும், வைரஸ் தொற்றினை எதிர்க்குமுகமாக நீர்ப்பீடனத் தொகுதியால் வெளிப்படுத்தப்படும் எதிர்ப்பினால் ஏற்பட்ட விளைவுகளே என்பதையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.
உடலின் வெப்ப நிலை 98.6 எப் இலிருந்து 102எப் வரை அதிகரிக்கும். குருதியிலுள்ள வெண்குருதிச் சிறுதுணிக்கைகள் வைரஸ் தொற்றை எதிர்த்துப் போராடியதால் உருவாகிய இறந்த பதார்த்தங்களையும் கழிவுகளையும் உடலிலிருந்து வெளியேற்றுமுகமாகத் தடிமன், இருமலுடன் தும்மலும் ஏற்படலாம். வைரஸ் தொற்றை எதிர்க்க உடல் கடினமாகப் போராடுவதால் சக்தி இழப்பு அதிகமாக நிகழும். இதனால் பலவீனமாக இருப்பது போன்ற உணர்வேற்படும். உடலின் நீரும் இழக்கப்படுவதால் உடல் முழுவதும் வலியோ அல்லது உளைச்சலோ உணரப்படலாம்.
வைரஸ்கள் தாம் ஒன்றிலொன்று வேறுபட்டிருப்பதைப் போல, தாம் தாக்கும் மனிதர்களிலும் வெவ்வேறு அறிகுறிகளைக் காட்ட வல்லன. இவற்றின் இத்தன்மை காரணமாக, வைரஸ் தொற்றின் குணங்குறிகளைத் திட்டவட்டமாகக் கூற முடியாது.
அத்துடன் சில வைரஸ் தொற்றுக்கள், வேறு நோய்களின் உருவாக்கத்துக்கும் வித்திடக் கூடியவை. மஞ்சள் காமாலை நோயை ஏற்படுத்தவல்ல ஹைப்பட்டைடிஸ் பி, சி வைரஸ்கள் பிற்காலங்களில் ஈரல் புற்று நோயை ஏற்படுத்த வல்லவை என அறியப்படுகிறது.
நோயின் அறிகுறிகள், குருதிப் பரிசோதனை மற்றும் பாதிக்கப்பட்ட இழையங்களின் பரிசோதனை போன்ற பல வகைப்பட்ட சோதனைகள் மூலம் வைரஸின் தாக்கம் மற்றும் தன்மை போன்ற இயல்புகள் இனங்காணப்படலாம்.
வைரஸ் தொற்றானது பொதுவாகக் குழந்தைகள் மற்றும் சிறுவர்களையும் நோயெதிர்ப்பு சக்தி குறைந்தவர்களையுமே அதிகளவில் பாதிக்கின்றது.
அத்துடன், வேறு பல நோய்த் தொற்றுடையவர்களையும் பாதிக்கின்றது. இதன் காரணமாகவே எச்.ஐ.வி தொற்றுடையவர்களுக்கு மிகச் சாதாரணமான தடிமன் ஏற்பட்டால் கூட மரணம் சம்பவிக்கும் ஆபத்து இருப்பதாகக் கூறப்படுகிறது.
சுகதேகியாகவுள்ள ஒருவரால் வைரஸ் தொற்றின் அச்சுறுத்தலை எந்தவித வைரஸ் கொல்லி மருந்துகளுமின்றி சாதாரண நடைமுறைகளால் குறைக்க முடியும். எமது உடலானது வைரஸ் மற்றும் பக்aரியாத்தொற்றுக்களை எதிர்க்குமுகமாகத் தனது வெப்ப நிலையையுயர்த்தும். அத்துடன் உடற் சக்தியும் உடற் திராவகங்களும் விரயமாகும். இவற்றை ஈடு செய்யுமுகமாக நீராகாரங்களை உள்ளெடுக்க வேண்டும்.
இயன்றவரை ஆரோக்கியமாக இருக்க முயற்சிக்க வேண்டும். ஊட்டச்சத்துக்கள் மற்றும் கனிப்பொருட்கள் நிறைந்த உணவை உட்கொள்வதன் மூலம் எமது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும். இவை தவிரக் கைகளை அடிக்கடி சவர்க்காரமிட்டுக் கழுவ வேண்டும்.
உணவை உண்ணமுதலும் வெளியில் சென்று வந்த பின்னரும் கைகளை நன்கு கழுவ வேண்டியது அவசியமாகும். பிறருக்குப் பாதிப்பு ஏற்படா வண்ணம் இருமல், மற்றும் தும்மலின் போது வாயையும் மூக்கையும் கைக்குட்டையால் மூடப்பழக வேண்டும்.
உடலில் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதெனச் சந்தேகித்தால், பாடசாலை, அலுவலகம் மற்றும் ஏனைய பொது இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். இயலாவிடின் முகமூடியணிந்து செல்லுதல் விரும்பத்தக்கது.
சில வைரஸ் தொற்றுக்களுக்குத் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வைரஸ் கிருமிகளாலேற்படும் நோய்களுக்கான தடுப்பு மருந்தை முதலில் கண்டுபிடித்தவர் லூயி பாஸ்டராவார். குறிப்பாக விசர் நாய்க் கடியினால் ஏற்படக் கூடிய நீர் வெறுப்பு நோய், மற்றும் அம்மை நோய் போன்றவற்றுக்கான தடுப்பு மருந்துகளையே இவர் கண்டுபிடித்தார்.
உடலில் வைரஸ்கள் தொடர்பான எதிர்ப்பு சக்தி இயற்கையாகவே இல்லாத விடத்து, இறந்த வைரஸின் பதார்த்தம் தடுப்பூசி மூலம் உடலினுள் செலுத்தப்பட்டு எமது உடலை இயற்கையாகவே, அவ்வைரஸிற்கு எதிரான பிறபொருளெதிரியைத் தோற்றுவித்து தொழிற்படவைக்கும்.
அல்லது உயிர் வைரஸ் உடலைத் தாக்குமிடத்து, இயற்கையாகவே சில நாட்களின் பின்னர் உடல் அவ்வைரஸிற்கெதிராகத் தொழிற்பட ஆரம்பிக்கும். எனினும் பொதுவாகப் பாரதூரமான விளைவுகளேற்பட முன்னரே உடலில் பிறபொருளெதிரி தோற்றுவிக்கப்பட்டுவிடும்.
தடுப்பு மருந்துகளைப் போன்றே வைரஸ் நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகளும் சில வைரஸ் தொற்றுக்களுக்கு மட்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை பொதுவாக வாயினாலேயே உள்ளெடுக்கப்படுகின்றன. எனினும் ஊசி மூலம் களிம்புகளாகவும், துகள்களாக முக்கின் மூலம் உள்ளெடுக்கப்படும் மருநதுகளும் காணப்படுகின்றன.
இவை பொதுவாக நோய் எதிர்ப்புச் சக்தி குறைவானவர்கள், முதியவர்கள், மற்றும் சிறுவர்களுக்கே பரிந்துரைக்கப்படுகின்றன. இவை அடிப்படையில் குறிப்பிட்ட வைரஸ் உடலினுள் பல மடங்குகளாகப் பெருகுவதைத் தடுக்கின்றன. சில வைரஸ் நுண்ணுயிர்க்கொல்லிகள் உடலின் நிர்ப்பீடன சக்தியை வலுப்படுத்தி இயற்கையாகவே நிர்ப்பீடனத் தொகுதியை வைரஸ்களுக்கெதிராகத் தொழிற்பட வைக்கின்றன.
பக்ரீரியாக்களைக் கொல்லும் நுண்ணுயிர் கொல்லி மருந்துகள் வைரஸ் தொற்றை இல்லாதொழிக்கப் பயன்படமாட்டா. ஆனால் இவ்விடயம் தொடர்பாக போதிய அறிவின்மையால், மருத்துவ ஆலோசனைகளின்றி வைரஸ் தொற்றுக்குப் பரிகாரமாக பக்aரியாக்களைக் கொல்லும் நுண்ணுயிர் கொல்லி மருந்துகளை சிலர் உள்ளெடுக்கின்றனர்.
இவ்வாறு அவற்றைத் தேவையின்றி உள்ளெடுக்கும் போது உடலிலுள்ள பக்aரியாக்கள் அம்மருந்துகளை எதிர்க்கக்கூடிய வீரியம் மிக்கனவாகவும் மாறிவிடுகின்றன. இதனால் அம்மருந்துகளின் வீரியம் குறைக்கப்படுவதுடன் சில சந்தர்ப்பங்களில் தேவைக்கு அதிகமான அளவுகளிலும் உட்கொள்ள வேண்டியிருக்கும். ஆனால் வைரஸ் தொற்றுடன் பக்aரியாத் தொற்றும் இருக்கும் பட்சத்தில் மட்டுமே பகaரியா நுண்ணுயிர் கொல்லி மருந்துகள் உள்ளெடுக்கப்படலாம்.
பக்aரியா நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகளுடன் ஒப்பிடுகையில் வைரஸ் நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகளை உற்பத்தி செய்தல் சற்றுக் கடினமானது.
அத்துடன் இவ்வைரஸ் நுண்ணுயிர் கொல்லி மருந்துகள் உடற் கலங்களில் நச்சுத் தன்மை மிக்கவையாக மாறும் சாத்தியம் இருப்பதாக அறியப்படுகிறது.
இன்று பரவலாகப் பேசப்படும் பன்றிக் காய்ச்சலும் வைரஸால் பரப்பப்படும் ஒரு நோயேயாகும். இன்புளுவென்ஸா எனப்படும் வைரஸ்கள் மனிதன், பன்றியுட்பட்ட முலையூட்டிகளைப் பாதிக்கக் கூடியனவாகக் காணப்பட்டன.
2009 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலங்களில் பன்றிக் காய்ச்சலுக்குரிய இன்புளுவென்ஸா வைரஸானது பன்றிகளிலிருந்து மனிதனுக்கு இலகுவில் பரப்பப்பட முடியாததாகவே காணப்பட்டது. அத்துடன் ஒரு மனிதனிலிருந்து இன்னொரு மனிதனுக்குத தொற்றும் ஆற்றலும் குறைவானதாகக் காணப்பட்டது. பண்ணைகளில் பன்றிகள் மத்தியில் வேலை செய்பவர்கள் மத்தியில் மட்டுமே இனங்காணப்பட்டது.
1918 ஆம் ஆண்டு பன்றிகளில் இனங்காணப்பட்ட இவ்வைரஸ் பல தசாப்தங்களாக எவ்வித மாற்றங்களுக்குமுட்படாது 1990களில் பல்வகைமையடைந்தது. ஆனால், இதற்கான காரணங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. இன்புளுவென்ஸா வைரஸ் தொடர்ந்து மாற்றமடையக் கூடியது. இதன் ஒரு குறிப்பிட்ட வகை உருவாக்கும் தொற்றே பன்றிக் காய்ச்சலாகும்.
இவ்வாறு அடிக்கடி மாற்றம் பெறும் வைரஸ்கள் மனிதர் மத்தியில் தொற்று நோயாகப் பரவும் சந்தர்ப்பத்தில் அவற்றிலிருந்து தப்பித்தல் சற்றுக் கடினமான விடயமேயாகும்.
2009 ஆம் ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் மெக்சிகோவில் நூற்றுக்குமேற்பட்ட சுவாச நோயாளர்கள் இனங்காணப்பட்டதையடுத்து அவர்களுக்குப் பன்றிக் காய்ச்சல் தொற்று இருக்கலாமெனச் சந்தேகிக்கப்பட்டது. பின்னர் ஐக்கிய அமெரிக்காவின் பல மாநிலங்களுக்கும் வேகமாகப் பரவிய இப்பன்றிக் காய்ச்சலை உலக சுகாதார ஸ்தாபனம் கொள்ளை நோயாக அறிவித்தது. 2009 ஆகஸ்ட் மாதத்தில் 170க்கு மேற்பட்ட நாடுகளில் இப்பன்றிக் காய்ச்சல் பரவியது.
இவ்வைரஸின் வெளிமேற்பரப்பில் காணப்படும் புரதங்களின் பெயரையடிப்படையாகக் கொண்டு அதுசி1 னி1 வைரஸ் எனப் பெயரிடப்பட்டது.
இப்பன்றிக் காய்ச்சல் மனிதனிலிருந்து மனிதனுக்குத் தொற்றக் கூடியது. பொதுவாக இது ஒரு சுவாசத்தொற்றாகவே கருதப்படுகிறது. காற்றினாலும் தொடுகையினாலுமே பரப்பப்படுகிறது. வீட்டில் ஒருவருக்கு இத்தொற்று ஏற்பட்டால் வீட்டின் 8 - 19 சதவீதமான பகுதிகளிலோ அல்லது அங்கத்தவர்களிலோ இத்தொற்று காணப்படுமென ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இத்தொற்றுள்ளவர்களிடம் காய்ச்சல், இருமல், தொண்டை நோவு, தடிமன், வாந்தி, வயிற்றோட்டம் போன்ற அறிகுறிகள் அறியப்பட்டுள்ளன. சிறுவர்கள் மத்தியில் காய்ச்சல் காணப்படாமல் சுவாசப் பிரச்சினைகள் மட்டும் கூடக் காணப்படலாம். இத்தொற்றினால் 24 வயதுக்குக் கீழ்ப்பட்டவர்களே அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்.
பன்றிக் காய்ச்சல் தொற்று, சுகதேகியொருவரில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தாதென எதிர்பார்க்கப்படுகின்ற போதிலும் சிலருக்குக் கடுமையான சுவாச நோய்கள், நியூமோனியா போன்றவை ஏற்படக் காரணமாகிச் சில வேளைகளில் மரணத்துக்கும் வழிவகுக்கும். கர்ப்பிணித் தாய்மார் அதிகளவில் பாதிப்படைவரெனக் கூறப்படுகிறது.
ஆஸ்துமா, சுவாச நோய், இருதய நோய், நீரிழிவு, சிறுநீரகப் பாதிப்பு போன்றவற்றையுடைய நோயாளிகள் மற்றும் புற்று நோயாளர்கள் மத்தியில் பாரதூரமான விளைவுகளைத் தோற்றுவிக்கவல்லது. சிறுவர்கள் மற்றும் நோயெதிர்ப்பு சக்தி குறைந்த வளர்ந்தோர் மத்தியில் இத்தொற்று 10 நாட்களுக்கும் அதிகமாக நீடிக்கும்.
65 வயதிற்கு மேற்பட்டோர். இக்காய்ச்சலால் பாதிக்கப்படும் சந்தர்ப்பம் குறைவாகவே காணப்படுகின்றதெனவும், அவர்கள் பாதிக்கப்பட்டால் பாதிப்பு மிகவும் அதிகமாகவிருக்குமெனவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
சிறிதளவிலான சுவாசப்பிரச்சினைகளோ அல்லது காய்ச்சலோ உணரப்படும் பட்சத்திலும் இக்காய்ச்சலுக்கான வேறு அறிகுறிகள் தென்படும் பட்சத்திலும் அவற்றை அலட்சியம் செய்யாது உடனடியாக வைத்தியரை நாட வேண்டியது அவசியமாகிறது.
தமது பிள்ளைகளிடம் இத்தகைய அறிகுறிகள் காணப்படுகின்றனவா எனப் பெற்றோர் அவதானிக்க வேண்டும். இத்தொற்று ஏற்பட்டால்,
இருமும் போதும் தும்மும் போதும் கைக்குட்டைகளை உபயோகிக்க வேண்டும். அத்துடன் அக்கைக்குட்டைகள் பாவனையின் பின்னர் நன்றாக சலவை செய்யப்பட வேண்டும்.
அடிக்கடி சவர்க்காரம் அல்லது வேறு தொற்று நீக்கிகளைப் பயன்படுத்தித் கைகளைக் கழுவ வேண்டும். கைகளைக் கழுவாமல் மூக்கு, கண்கள், வாய் என்பவற்றைத் தொடுவதைத் தவிர்க்க வேண்டும். இயன்றவரை பொது இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். செல்ல வேண்டிய தேவையேற்படின், முகமூடி அணிந்து செல்லுதல் நன்று.
தொற்று ஏற்படாவிடினும், தொற்றுக்குள்ளானவரின் அருகில் செல்லுதல் தவிர்க்கப்பட வேண்டும். தேவையேற்படின் அவரிலிருந்து 4 அடிதூரம் தள்ளி நின்று கதைத்தலே சிறந்தது. நுண்ணங்கிகள், தொற்றக் கூடிய பாத்திரங்கள், குவளைகள், தண்ணீர்ப் போத்தல்கள் போன்றவற்றைப் பகிரக்கூடாது.
நோயுற்ற ஒருவர் தும்மும் போது காற்றின் மூலம் நோய்க் கிருமிகள் பரவத்தலைப்படுவதால் மேசை, விசைப் பலகை, தொலைபேசி, கதவுக் கைப்பிடிகள், ரூபா நோட்டுக்கள் போன்றவற்றைக் கையாண்ட பின்னர் கைகளைக் கழுவுதல் சிறந்தது.
பன்றிக் காய்ச்சலுக்கான தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள போதிலும் மிகவும் வரையறுக்கப்பட்ட அளவிலேயே காணப்படுவதால் அவற்றை வழங்குவதில் கர்ப்பிணித் தாய்மார்கள், குழந்தைப் பராமரிப்பாளர்கள், சுகாதாரப் பணிப்பாளர்கள், சிறு குழந்தைகள் தொடக்கம் 24 வயதுக்குட்பட்டோர் வேறு நோய்களையுடைய 25 வயது தொடக்கம் 64 வயது வரையான வளர்ந்தோர். ஆகியோருக்கே முன்னுரிமை வழங்கப்படுகிறது. இன்புளுவென்ஸா தடுப்பு மருந்துகளுக்கு ஒவ்வாமையுடையவர்கள் இத்தடுப்பு மருந்தை உள்ளெடுத்தலாகாது.
இலங்கையில் பன்றிக் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட முதலாவது நபர் 2009, ஜுன் மாதம் இனங்காணப்பட்டார். ஒக்டோபர் 15ம் திகதியளவில் ஏறத்தாழ 140 பேர் இந்நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதாக அறியப்பட்டது.
நவம்பர் 14ம் திகதி இந்நோயின் தொற்றுக் காரணமாக மாணவரொருவர் உயிரிழந்தார். 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஏறத்தாழ 258 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையிலும் இந்நோயால் மரணம் சம்பவிக்க ஆரம்பித்து விட்டதாகையால், நாமொவ்வொருவரும் இந்நோய் தொடர்பாக விழிப்புணர்வுடனிருப்பது அவசியமாகிறது.
சகல வெகுசனத் தொடர்பு ஊடகங்களும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த ஒன்றிணைய வேண்டுமென்பதே காலத்தின் தேவையாகும்.

No comments:

Post a Comment