Friday, December 18, 2009

மலிவு விலையில் சூரியசக்தி கிடைக்கும் காலம் வெகு தொலைவில் இல்லைவளிமண்டலத்தை மாசுபடுத்தும் எரிபொருள் பாவனையைப் பூமி இனிமேலும் தாங்குமா?

விண்டுரைக்க அரிய அரிதாய், விரிந்த வான வெளியென நின்றனை! அண்ட கோடிகள் வானில் அமைத்தனை! பரிதி என்னும் பொருளிடை ஓய்ந்தனை! பரவும் வெய்ய கதிரெனக் காய்நதனை! வாயுவாகி வெளியை அளந்தனை! விண்ணை அளக்கும் விரிவே சக்தி!’
என்றான் மகாகவி பாரதி அவன் ‘சக்தியே முதற்பொருள்! தோற்றம் பல, சக்தி ஒன்றே! வடிவம் மாறினும் சக்தி மாறுவதில்லை! எனத்தன் வசனக் கவிதையில் பாடிய கொள்கையை உலகமே போற்றும் விஞ்ஞான மேதை ஜன்ஸ்டீன் கணிதம் மூலம் நிறுவிக் காட்டினார்.
இன்று நாம் பாவிக்கும் சக்தி வளங்கள் யாவற்றினதும் தோற்றுவாயகச் சூரியனும் பிரபஞ்சமுமே கருதப்படுகின்றன.
சூரிய சக்தியை முதலாகக் கொண்டு உணவைத் தயாரிக்கும் தாவரங்களும் உணவுச் சங்கிலியிலுள்ள ஏனைய உயிரினங்களும் அழிவடைந்து உக்கிப் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகள் நிலத்தினடியில் படிவுகளாக மாற்றப்பட்டு இன்று சுவட்டு எரிபொருளாக அகழ்ந்தெடுக்கப்படுகின்றன. எமது பிரதான சக்தி மூலமான பெற்றோலிய எரிபொருளும் ஒரு சுவட்டு எரிபொருளேயாகும்.
சூரிய சக்தியெனப்படுவது, புவியிலிருந்து பல்லாயிரம் மைல்களுக்குப்பால் எரிந்துகொண்டிருக்கும் பந்து போன்ற சூரியனிலிருந்து வெளிப்படும் கதிர்கள் கொண்டிருக்கும் சக்தியைக் குறிக்கும்.
சூரிய சக்தியை வெப்ப சக்தி மற்றும் ஒளிச் சக்தியென இரண்டாக வகைப்படுத்தலாம். இயந்திரங்களையும் ஆலைகளையும் இயக்கும் நீர் போன்ற திரவங்களை வெப்பமாக்க வெப்பசக்தியும் சூரிய கலங்களில் ஒளி அழுத்தமாகச் சேமிக்கப்பட்டு மின் முதலாக ஒளிச்சக்தியும் பயன்படுகின்றன.
சூரிய கதிர்கள் பல படை மண்டலங்களைக் கடந்து புவியை வந்தடைகையில் அவற்றின் சக்தியில் பெரும் பகுதி இழக்கப்பட்டு விடுகிறதெனினும் புவியை வந்தடையும் சூரிய கதிர்களின் மொத்த சக்தியின் அளவானது, புவியிலுள்ள மக்களின் மொத்த சக்தித் தேவையின் பல மடங்கெனக் கணிப்பிடப்படுகிறது.
வளிமண்டலத்தில் காணப்படும் வளிமூலக் கூறுகள், நீராவி, முகில்கள், தூசு துணிக்கைகள் மற்றும் மாசுக்கள் போன்ற சூரியனிலிருந்து வரும் பெரும்பாலான ஒளிக்கதிர்களைப் பரவலடையச் செய்கின்றன. இச்செயற்பாட்டால் ஒளிக்கதிர்களின் செறிவு குறைக்கப்படுகிறது.
மனிதனானவன் அன்று தொட்டு இன்றுவரை தனது சக்தித் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலேயே சூரியனைப் பயன்படுத்தி வருகின்றான்.
வேட்டை யுகத்தில் தான் வேட்டையாடிய மிருகங்களின் இறைச்சியைச் சூரிய வெப்பத்தில் காயவிட்டுப் பதப்படுதுதியதும் சூரிய வெப்பத்தால் சூடாகும் கற்களின் மேல் பாத்திரங்களை வைத்துச் சமைத்ததுமு நாம் யாவருமறிந்த விடயங்களே!
பல வழிபாடுகள் இயற்கைக்கு முக்கியத்துவம் வழங்கின. இன்றும் வழங்கி வருகின்றன. சுதேச அமெரிக்கர்களிலிருந்து பண்டைய இந்துக்கள், உரோமர்கள், கிரேக்கர்கள், பாரசீகர்கள், எகிப்தியர்கள் மற்றும் பபிலோனியர்கள் வரை தமது வாழ்வியலில் சூரிய வழிபாட்டுக்கு முக்கியத்துவம் வழங்கியிருந்தார்கள்.
ஆதிநாகரிகங்கள் சூரியன் ஒரு சக்தி மூலமென உணர்ந்திருந்தன. பண்டைய கிரேக்கர்கள் ஹீலியோஸ், மற்றும் அப்பலோ போன்ற சூரியக் கடவுளர்களுக்குப் பல கோவில்களைக் கட்டியிருந்தனர். வெப்ப சக்தியையும் ஒளிச் சக்தியையும் பயன்படுத்தும் விதமாக வீடுகளை அமைத்திருந்தனர்.
சுதேச அமெரிக்கர்கள், இயற்கையாகவே பகலில் சூரிய வெப்பத்தை உள்வாங்கி இரவில் வெளிவிடும் மலைச்சரிவுகளில் வீடுகளை அமைத்துச் சூரிய சக்தியின் பயனைப் பெற்றனர்.
உரோமர்கள் உலகிலேயே முதன் முதலாகக் கண்ணாடி யன்னல்களை அமைத்துச் சூரிய வெப்பத்தைச் சிறைப்படுத்தி வீடுகளின் உட்புறத்தைக் கதகதப்பாகப் பேணினர்.
அத்துடன் பரந்து காணப்பட்ட இராச்சியத்திலுள்ள பிரதேசங்களிலிருந்து கொண்டுவரப்படும் தாவரங்களையும் விதைகளையும் பேணி வளர்க்கக் கண்ணாடி வீடுகளை அமைத்துச் சூரிய வெப்பத்தைச் சிறைப்படுதுதி அத்தாவரங்கள் வளர்வதற்கான சூழலை ஏற்படுத்தித் கொடுத்திருந்தனர்.
இந்துக்கள் சூரிய வழிபாட்டின் மூலம் சூரிய சக்தி உள்வாங்கப்படுமெனும் தத்துவத்தில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கின்றனர். இருக்கு வேதம் சூரிய வழிபாட்டை விபரிக்கிறது. இந்துக்களின் புனித மந்திரங்களில் ஒன்றாகக் கருதப்படும் காயத்ரி மந்திரமும் யோகம் சொல்லும் சூரிய நமஸ்காரமும் சூரியனை வணங்கி அவனது சக்தியை உள்வாங்கு முகமாக இன்றும் வழக்கிலிருந்து வரும் விடயங்களாகும்.
சகல திறன்களும் படைத்தவனாய்ச் சித்தரிக்கப்படும் கர்ணன், குந்திதேவி சூரிய பகவானைப் பிரார்த்தித்தால் கிடைத்த பிள்ளையென மகாபாரதம் கூறுகிறது- புராதன இந்துக் கோவில்கள் சூரியசக்தி தாராளமாகக் கிடைக்கக் கூடிய வகையில் கட்டப்பட்டன என்பதற்கு வரலாறு சான்று பகர்கின்றது.
மறுமலர்ச்சிக்கால அறிஞரான லியானடோ டாவின்சி சூரிய சக்தியின் கைத்தொழிலாக்கத்தைக் கி. பி. 1441 இல் எதிர்வு கூறியிருந்தார். சூரிய சக்தியைச் சேமிப்பதற்கான முதல் முயற்சி சுவிஸ் நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானியொருவரால் 1767 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு தொடர்ந்த முயற்சிகள் சூரிய சக்தி தொடர்பான ஒளிமின் விளைவு, ஒளி அழுத்தக் கலங்கள் போன்ற பல கண்டுபிடிப்புக்களுக்கு வித்திட்டன.
1921இல் விஞ்ஞானி ஐன்ஸ்டீன் பெளதீகவியலுக்கான நோபல் பரிசை, ஒளிமின் விளைவு தொடர்பான தனது ஆய்வுக்குப் பெற்றிருந்தார். 1958 இல் அமெரிக்கா செய்மதியொன்றைச் சூரிய கலம் மூலம் சக்தியைப் பெறக்கூடிய வகையில் வடிவமைத்தது.
1960 களில் ஏற்பட்ட பெற்றோலிய எண்ணெய் விலை அதிகரிப்பு, தரம் குறைந்த பெற்றோலிய எண்ணெய் குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட வழிவகுத்தது. இதனால் சூரிய சக்தித் தொழில் நுட்பத்தின் முன்னேற்றம் தடைப்பட்டது. பின்னர் காலப் போக்கில் ஏற்பட்ட சூழல் மாசடைதல் பிரச்சினைகளால் சூரியசக்தித் தொழில் நுட்ப முன்னேற்றம் மீண்டும் தலைதூக்கியது.
முழு உலகுமே எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் சூழல் மாசடைதல் மற்றும் அருகிவரும் இயற்கைவளங்கள் தொடர்பான பிரச்சினைகள் மீள் உருவாக்கப்படக் கூடிய சக்தி வளங்களான சூரிய ஒளி, சூரிய வெப்பம், மற்றும் சூரியனில் தங்கியிருக்கும் வளங்களான காற்று, நீர் மின்னியல் மற்றும் உயிரியல் தொகுதி ஆகியனவும் கருதப்படுகின்றன.
வர்த்தக மற்றும் கைத்தொழிற்றுறைகள் இச்சக்தி வவளங்களைப் பயன்படுத்தித் தமது சக்தி மூலங்களை விரிவாக்குவ துடன் பணத்தைச் சேமிக்கும் வழிவகைகளையும் கையாள ஆரம்பித்துள்ளன.
புவி கோள வடிவமாகவிருப்பதால் சூரியக் கதிர்கள் மத்திய கோட்டுப் பிரதேசங்களில் செங்குத்தாகவும் முனைவுப் பிரதேசங்களில் சாய்வாகவும் வந்தடைகின்றன. இதனால் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது மத்திய கோட்டை அண்டிய நாடுகளில் படும் சூரிய கதிர்களின் செறிவு அதிகமாகவிருக்கும்.
சூரிய சக்தியின் பாவனை அது பாவிக்கப்படும் பிரதேசத்தின் புவியியல் அமைவு, பாவிக்கப்படும் நேரம், பருவ காலம், கால நிலை போன்ற காரணிகளில் தங்கியுள்ளது- சூரிய சக்தியின் பாவைனயில் சூரிய கதிர்களின் செறிவு ஆதிக்கம் செலுத்துவதால் வருடத்தின் 360 நாட்களும் சூரிய ஒளி கிடைக்கப்பெறும் இலங்கை போன்ற நாடுகளுக்கே சூரியனைச் சக்தி மூலமாகப் பபயன்படுத்துவது இலகுவான விடயமெனலாம்.
இத்தகைய மீள் உருவாக்கப்படக் கூடிய சக்தி வவளங்களைச் சேமித்துத் தேவைகளுக்கேற்ப பாவிக்கக் கூடிய வழிவகைகளை நவீன தொழில்நுட்பம் உருவாக்கியிருக்கிறது- சூரிய கதிர்கள் துணிகளை நேரடியாக உலர்த்தவும் நீரைக் கதகதப்பாகப் பேணவும், வாகனங்களின் சசக்தி மூலமாகவும், கணிப்பொறி போன்ற கருவிகளை இயக்கவும் ஒளியூட்டல் செயற்பாடுகளுக்கும் உதவுவது நாம் யாவருமறிந்ததே. இலகுவில் உருவாக்கப்படக் கூடிய சூரியசக்தி அடுப்புகள் மிகவும் பாதுகாப்பான, சிக்கனமான முறையில் உணவைச் சமைக்க வழிவகுக்கின்றன.
அமெரிக்கர்களால் வடிவமைக்கப்பட்ட சூரிய சக்தியால் இயங்கக்கூடிய விமானம் 1990ஆம் ஆண்டில் எந்தவித எரிபொருளுமின்றி வானில் 4060 றிசீ தூரம் பறந்து உலக சாதனை படைத்தது.
பெரும்பாலான மின் சாதனங்கள் சூரிய சக்தியாலும் இயக்கப்படக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. இன்று பலராலும் பேசப்படும் செய்மதித் தொழில் நுட்பத்தின் அடிப்படையாகிய செய்மதிகளின் இயக்கத்திற்குத் தேவையான சக்தியை அவற்றில் பொருத்தப்பட்டிருக்கும் சூரிய கலங்களே வழங்குகின்றன.
மீள உருவாக்கக்கூடிய சக்தி வளங்களின் பாவனையில் ஐஸ்லாந்து நாடு முன்னணியில் வகிப்பதுடன் உலக நாடுகளுக்கு மிகச் சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்கிறது. அந்நாட்டின் 99 சதவீதமான சக்தித் தேவை இத்தகைய சக்தி வளங்களாலேயே பூர்த்தி செய்யப்படுகிறது. எதிர்வரும் 2010 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெறவிருக்கும் பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டிக்கென, புதிய விளையாட்டரங்கொன்று புதுடெல்லியில் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது.
தியாகராஜ் விளையாட்டரங்கெனப் பெயரிடப்பட்டுள்ள இவ்விளையாட்டரங்கு சூரிய சக்தியையே சக்தி முதலாகக் கொண்டு சிறந்த சூழல் முகாமைத்துவத்துடன் கூடிய உயர்தர வசதிகளையுடையதாக வடிவமைக்கப்பட்டு வருகிறது. ஒளி அழுத்த விளைவையடிப்படையாகக் கொண்டு, விளையாட்டரங்கின் சகல தேவைகளுககும் சூரியனே சக்தி முதலாக அமைவது, ஏனைய நிர்மாணப் பணிகளுக்கும் சிறந்ததோர் எடுத்துக் காட்டாகும்.
சூரிய சக்தியின் வினைத்திறன் மிகக் பயன்பாடானது, பல துறைகளிலும் ஆதிக்கம் செலுத்துவதுடன் நாடுகளின் விரைவான அபிவிருத்திக்கும் வழிவகுக்கும்.
சூழல் மாசடைதல் தொடர்பான சகல சூழல் பிரச்சினைகளையும் கட்டுப்படுத்துவதற்குச் சூரிய சக்தியின் பயன்பாடு ஒரு சிறந்த வழிமுறையாக அமையும். பெற்றோலிய எரிபொருட்களின் தகனக்தால் உருவாகும் விளை பொருட்கள் வளியை மாசடையச் செய்கின்றன.
இப்பெற்றோலிய எரிபொருட்கள் சூரிய சக்தியால் பிரதியீடு செய்யப்படுவதால் வளிமாசடைதல் குறைக்கப்படுகிறது. அத்துடன் பச்சை இல்ல வாயுக்கள் வெளிவிடப்படுவதில்லையாதலால் சூரிய சக்தியின் பயன்பாடு பச்சை இல்ல விளைவுக்கு எந்தவித பங்களிப்பையும் மேற்கொள்ளாது.
கிராமிய மட்டங்களிலிருந்து தேசிய மட்டம் வரை சக்தியைச் சேமிக்கும் மிகச் சிறந்த வழியாகச் சூரிய சக்தியின் பாவனை கருதப்படுகிறது. இது காலப்போக்கில் உலர் மின்கலங்களின் பாவனையைக் குறைப்பதுடன் பாவனை முடிந்து அவற்றை வீசுவதால் ஏற்படும் எற்படும் நில மற்றும் நீர்மாசுக்களையும் குறைவடையச் செய்யும்.
அருகிவரும் இயற்கை வளங்களின் பாவனையும் காடழிப்பும் குறைக்கப்படுவதுடன் மண்ணரிப்புத் தடுக்கப்பட்டு தரமிழந்த நிலங்கள் புதுப்பிக்கப்படவும் வழிவகுக்கும். இவைதவிர மக்களின் சமூக பொருளாதார அபிவிருத்திக்கும் வாழ்க்கைத்தரத்தின் உயர்வுக்கும் சூரிய சக்தியின் பபயன்பாடு இன்றியமையாததாகும்.
இதனால் பாரிய மின்பிறப்பாக்கி நிலையங்களின் தேவை குறைவடைவதுடன் எரிபொருள் விநியோகத்துக்காக ஒரு நிறுவனத்தையே நம்பியிருக்க வேண்டிய தேவை குறைவடைகிறது. எரிபொருள் விநியோகத்துக்காக ஒரு நிறுவனத்தையே நம்பியிருக்க வேண்டிய அவசியமில்லாமற் போய்விடும்.
அணு உலைகளின் உருவாக்கத்துக்கான முக்கியத்துவம் குறைக்கப்படும். மின்சார வசதியற்ற பின்தங்கிய கிராமங்கள் யாவும் ஒளியூட்டப்படும். இது கிராமியக் கைத்தொழில்களை ஊக்குவிப்பதுடன் கிராமங்களின் கல்வி மட்டம் மற்றும் சுகாதார மட்டங்களை உயர்த்தும்.
கிராமங்களுக்கான தொலைத்தொடர்பு வசதிகள் மேம்படும். மக்கள் கிராமங்களிலிருந்து நகரங்களை நோக்கி இடம்பெயரும் நிலை தவிர்க்கப்படும். மக்களின் வாழ்க்கைத்தரம் அதிகரிக்கப்படும். பெற்றோலிய எரிபொருளுக்கான செலவைக் குறைத்து அந்நியச் செலாவணியை மீதப்படுத்தலாம்.
இலங்கையின் தற்போதைய பொருளாதார அபிவிருத்திக் கொள்கையானது பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தியில் தனியார் துறை மற்றும் அரச துறையின் ஒருமித்த பங்களிப்பை வலியுறுத்துவதாகவே அமைந்துள்ளது. இவ்விலக்கினை அடைவதற்காகப் பல செயற்றிட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
மின்வலு சக்தி அமைச்சு பேண்தரு சக்தி அதிகார சபையின் மூலம் மீள உருவாக்கக்கூடிய சக்தி வளத்தையுடைய தீவாக இலங்கையை மாற்றும் நோக்குடன் பல திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது. இச்செயற்றிட்டத்தின் முதற்கட்டமாக, விவசாய மற்றும் உணவு உற்பத்தியை அபிவிருத்தி செய்யும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
யு. எஸ். எய்ட் நிதி உதவியுடன் கொழும்பில் அமைக்கப்பட்டடுள்ள பிராந்தியநிலையம் மூலம் வினைத்திறன் மிக்க வகையில் கிராமங்கள் தோறும் சூரிய சக்தியைப் பயன்படுத்தி மின்சாரம் வழங்கப்படுகிறது. இது எதிர்காலத்தில் பெற்றோலிய எரிபொருளில் தங்கியிருக்காத நாடுகளில் ஒன்றாக இலங்கையையும் மாற்றும் என்பதில் எதுவித ஐயமுமமில்லை.
இன்று சூரிய சக்தி தொடர்பான வணிகங்கள் இலாபமீட்டும் வணிகங்களாக மாறி வருகின்றன. இலங்கையில் ஏறத்தாழ சூரிய சக்தியைப் பயன்படுத்தும் 130,000 வீட்டுத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. சூரிய சக்தி தொடர்பான துறைகளின் அபிவிருத்தியினதும் விரிவாக்கலினதும் அவசியம் தவிர்க்கமுடியாததாகிவிட்டது.
இவை இளைஞர்களுக்கான வேலைவாய்பபை அதிகரிக்கும். இலங்கையைப் பொறுத்தவரையில் பதின்மூன்று நிறுவனங்கள் இத்துறையில் ஈடுபட்டு வருகின்றன.
மேலும் பல நிறுவனங்கள் இத்துறையில் ஈடுபட முன்வந்தால் இன்னும் நான்கு வருடங்களில் முழு இலங்கையுமே மின்சார வசதியைப் பெறக் கூடியதாக இருப்பதுடன் தெருவிளக்குகள், வாகனத் தரிப்பிடப் பற்றுச் சீட்டை வழங்கும் இயந்திரங்கள், வீதிச் சமிக்ஞை விளக்குகள் போன்றவையும் சூரிய சக்தியைப் பயன்படுத்தி இயக்கப்படலாம்.
இலங்கையின் சனத்தொகையில் 80 சதவீதமானோர் கிராமங்களிலேயே வசிபப்தால் சூரிய சக்தியின் அறிமுகம் கிராமியப் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதில் பெரும்பங்கை வகிக்கும் பல, சிறியளவிலான திட்டங்களை நடைமுறைப்படுத்துதல் மேலும் நன்மை பயக்கும்.
இதனடிப்படையில் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்ட நீர்ப்பாசனத் திட்டமானது உலகிலேயே சூரிய சக்தியைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் மிகப் பெரிய சொட்டு நீர்ப்பாசனத் திட்டமாகக் கருதப்படுகிறது. இத்திட்டம் சிறந்த விளைச்சலைப் பெற்றுத்தருவதுடன் விவசாயிகளின் வருமானத்தையும் உயர்த்துவதாக அறியப்பட்டது.
எனினும் இத்திட்டத்தின் பல முறைமைகள் இன்றும் பாவிக்கப்படாமலிருப்பதாக 2008 ஆம் ஆண்டு பல்கலைக்கழக மாணவர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்று தெரிவிக்கிறது. இத்திட்டம் வெற்றியடைய வேண்டுமாயின் அரச துறையிலிருந்து விவசாயிகள் வரை இத்திட்டத்துடன் தொடர்புடைய சகல தரப்பினரும் விழிப்புணர்வு, அக்கறை மற்றும் அர்ப்பணிப்புடன் செயற்படுதல் அவசியமாகிறது.
இத்திட்டம் ஒழுங்கான முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டால், கைவிடப்பட்ட விவசாயக் கிராமங்களின் மக்கள் மீண்டும் அன்றாடச் செயற்பாடுகளைத் தமது கிராமங்களிலேயே மேற்கொண்டு விரைவான பயனைப் பெறக் கைகொடுக்குமென்பது கண்கூடு.
தகவல் தொழில்நுட்ப வசதிகள் இலங்கையின் பல கிராமியப் பாடசாலைகளைச் சென்றடைவதற்குப் பெரும் தடையாக அமையும் காரணி மின்சார வசதியாகும். பாடசாலைகளுக்கெனத் தனித்தனி சூரிய கலங்களை வழங்கிக் கணனிகளின் பாவனையுட்பட சகல தகவல் தொழில்நுட்ப வசதிகளையும் செயற்படுத்தும் திட்டம் தற்போது நடைமுறையில் உள்ளது.
சூரிய சக்தியால் கிராமங்கள் தோறும் தொலைத் தொடர்பு வசதிகள் மேம்படுத்தப்படும். மண்ணெண்ணெய் விளக்குகளால் ஏற்படும் சுகாதாரப் பிரச்சினைகள் உயிராபத்துகள், மற்றும் பராமரிப்புச் சிக்கல்கள் இல்லாதொழிக்கப்படும்.
கிராமிய மக்களின் கல்வி அறிவு மட்டம் அதிகரிக்கப்படுவதோடு தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில் நுட்பத்தையே அடிப்படையாகக் கொண்ட இன்றைய உலகைக் கிராமிய மட்டத்திலிருந்து சகல இலங்கையருமே வெற்றிகரமாக எதிர்கொள்ளச் சூரிய சக்தியின் பாவனை வழிவகுக்கும்.
சூரிய சக்தியால் மிகவும் பாதுகாப்பான மற்றும் சிக்கனமான முறையில் உணவைச் சமைக்கு வழிமுறைகளும் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சூரிய சக்தியின் பயன்பாட்டில் மிகப் பெரிய பின்னடைவாக அமைவது, திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான ஆரம்பச் செலவாகும். ஆனால் எதிர்காலத்தில் பாவனைக்கு வரவிருக்கும் நனோ சூரியத் தொழில் நுட்பத்தின் அறிமுகம், இச்செலவைப் பாரிய அளவில் குறைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
இது மிகக் குறைந்த செலவில் பாரியளவிலான சூரிய கலங்கள் மற்றும் உபகரணங்களின் உற்பத்தியை ஊக்குவிப்பதுடன் சூரிய சக்தியை வியத்தகு வகையில் வினைத்திறன் மிகக் வேறு சக்திகளாக மாற்றவும் வழிவகுக்கிறது. உலகிலேயே முதன்முறையாக நிலக்கரியைவிட மலிவான விலையில் சூரிய சக்தி கிடைக்கவிருக்கும் காலம் வெகு தொலைவிலில்லை எனலாம்.
கடன் திட்டங்களையும் மானிய முறைகளையும் அறிமுகப்படுத்திச் சூரிய சக்தியின் பாவனை மக்கள் மத்தியில் ஊக்குவிக்கப்படலாம்.
வெகு சனத்தொடர்பு ஊடகங்கள் சூரிய சக்தியின் பாவனை தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வை ஊட்டுவதிலும் பெரும் பங்கை வகிக்க வேண்டும். பொறுப்புள்ள மானிடராய் நாம் ஒவ்வொருவரும் சிந்திக்கத் தலைப்பட வேண்டும்.
சக்தி விரயத்தைத் தவிர்க்கும் வழி வகைகளைக் கையாள்வதுடன் நின்றுவிடாது எமது வசதிக்கேற்ற வகையில் சூரிய சக்தியின் பாவனையை அதிகரிக்க முயல வேண்டும்.
புதிதாக இல்லமொன்றையோ அல்லது கட்டடமொன்றையோ நிரமாணிக்கவிருக்கும் சந்தர்ப்பத்தில் சூரிய சக்தியின் உச்ச பாவனையைக் கருத்தில் கொண்டு திட்டமிடல் வேண்டும். இத்தகைய சிந்தையுடன் நாம் ஒவ்வொருவரும் நடந்தால் சுபீட்சமான இலங்கையை எமது எதிர்காலச் சந்ததியினரிடம் கையளிக்கமுடியுமென்பதே நிதர்சனமான உண்மை

1 comment:

Gnana said...

மிகவும் நல்ல முயற்சி எனது solar Blog படித்தால் சூரிய சக்தி பற்றி மேலும் அறியலாம்

Post a Comment