Sunday, October 16, 2011

சமுதாயத்தில் நற்பிரஜைகள் உருவாக வழிசெய்ய வேண்டும்!

'ஆசிரியர் பிரதீபா பிரபா' விருது பெற்ற கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி அதிபர் திருமதி கோதை நகுலராஜாவுடனான நேர்காணல் - 2


கே:- எதிர்காலத்துக்காக எவ்வாறான திட்டங்களை வைத்துள்ளீர்கள்?
ப:- நிறையத் திட்டங்கள் இருக்கின்றன. ஆரம்பப் பாடசாலையை நன்றாக முன்னேற்ற வேண்டும் என்பதே எனது விருப்பம். ஆரம்பப் பாடசாலை மாணவர்களுக்கு ஒரு செயற்பாட்டு அறையை உருவாக்க முடிவு செய்துள்ளோம். அதற்கு அன்பரொருவர் உதவி செய்வதாகக் கூறியுள்ளார்.
கே:- பாடசாலயில் ஆய்வு கூட வசதிகள் எப்படி இருக்கின்றன?
ப:- வசதியான ஆய்வுகூடம் இல்லை. ஏனைய பாடசாலைகளுடன் ஒப்பிடும் போது கவலையாக இருக்கும். பொது விஞ்ஞான பாட வேளைகளில் பொருட்களை ஆய்வு கூடத்திலிருந்து வகுப்பறைக்கு எடுத்துச் சென்றே கற்பிக்கிறார்கள். இது நிறைவான கற்பித்தலாக இருக்காது. ஆய்வுகூடச்சூழலிலே மாணவர்கள் அவற்றைக் கற்க வேண்டும். ஆய்வு கூட அனுபவங்கள் வகுப்பறைகளில் கிடைக்காது இருந்தும். எமது பாடசாலையிலிருந்து பல பிள்ளைகள் மருத்துவத்துறைக்குத் தெரிவாகி இருக்கிறார்கள்.
கே:- அக்குறையை நிவர்த்தி செய்ய என்ன நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளீர்கள்?
ப:- ஆய்வுகூட வசதியின்மை பற்றி கல்வியமைச்சரின் கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளோம். அதனடிப்படையில், கல்வித் திணைக்களம் சில அனுமான அறிக்கைகளை எமக்கு அனுப்பியுள்ளது. அவற்றிற்கமைய பெளதிகவியல், உயிரியல், இரசாயனவியல், பொது விஞ்ஞான ஆய்வு கூடங்களைத் தனித்தனியாக அமைப்பதற்கான திட்டங்கள் இருக்கின்றன. எமது மூன்று மாடிக் கட்டடத்தின் கட்டுமானப் பணிகள் முடிவடைந்தால், ஆய்வுகூடத் திட்டமும் இலகுவாக நிறைவேறும் என எதிர்பார்க்கலாம்.
கே:- இவற்றிற்கெல்லாம் அடிப்படைப் பிரச்சினை எதுவாக இருக்குமென எண்ணுகிறீர்கள்?
ப:- இடப்பற்றாக்குறை பெரிய பிரச்சினையாக இருக்கிறது. எமக்கு போதியளவான நிலம் கிடைத்தால் பல விடயங்களைச் செய்யலாம். இதற்கு ஆசிரியர்களின் முழு ஒத்துழைப்பையும் பெற முடியும். இங்கு சிறுவர் விளையாடுவதற்குப் பொருத்தமான மைதானம் ஒன்று இல்லாததும் கூட ஒரு பெருங்குறையாகும்.
கே:- தற்போது பாடசாலை அமைந்திருக்கும் நிலம் எவ்வாறு கிடைக்கப் பெற்றது?
ப:- நூற்றாண்டுகளுக்கு முன்னர் இந்தியாவிலிருந்து வர்த்தக நோக்கோடு இலங்கை வந்து குடியேறிய நாட்டுக்கோட்டை நகரத்தார் வழிவந்த செட்டியார் இன பெரியார்கள் இலங்கையில் பாடசாலைகள் மற்றும் ஆலயங்களை அமைத்து சமய, சமூக சேவைகளைச் செய்து வந்துள்ளனர். அந்த வகையிலேயே சமயப் பெரியார் பழனியப்பச் செட்டியார் இந்தக் கல்லூரியை அமைப்பதற்குத் தனது காணியை வழங்கியுள்ளார்.
அத்துடன் பாடசாலையில் ஒவ்வொரு கட்ட வளர்ச்சியிலும் அவர் பங்களிப்பைச் செய்துள்ளார். தற்போது ஆலய முன்றலிலுள்ள விநாயகர் ஆலயத்தையும் அவரே கட்டிக்கொடுத்தார். இன்றும் அவரை நான் மனதார நினைக்கின்றேன். வாழ்த்துகின்றேன். அன்று அவர் இந்த நிலத்தைக் கொடுத்தபடியால் தான் இன்று 2000 பிள்ளைகள் கல்வி கற்கும் தமிழ்ப் பாடசாலையாக இருக்கிறது. வருடாந்தம் எவ்வளவோ பிள்ளைகள் கல்வி கற்று வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். பழனியப்பச் செட்டியாரை மகான் என்று தான் கூற வேண்டும்.
கே:- இந்த இடப்பிரச்சினையை எப்படித் தீர்க்கலாம் என எண்ணுகிaர்கள்?
ப:- அதற்கு பெருந்தகை செட்டியாரின் குடும்ப அங்கத்தவர்கள்தான் உதவி செய்ய வேண்டும்.
கே:- கல்வி கற்க இடம் கேட்டு வரும் சகல பிள்ளைகளையும் உள்ளெடுக்கிறீர்களா?
ப:- இடப் பற்றாக்குறை காரணமாக எல்லோரையும் உள்ளெடுக்க முடியவில்லை. தினமும் விண்ணப்பங்கள் வருகின்றன. உள்ளெடுப்பதற்குத் தான் வழி தெரியவில்லை.
கே:- வேறு என்ன திட்டங்களை மேற்கொள்ளலாமென எண்ணுகிaர்கள்?
ப:- இடம் இருந்தால் ஒரு விடுதி கட்டும் திட்டமும் இருக்கிறது. அதன் மூலம் வெளிமாவட்டப் பிள்ளைகள் வந்து கல்வி கற்கலாம். மாலை வேளைகளிலும் ஓய்வு நேரங்களிலும் அவர்கள் வேறு கலைகளைப் பயிலலாம். . பொறியியலும் மருத்துவமும் தான் கல்வி என்றில்லை. தம் சொந்தக் காலில் நிற்கக் கூடிய வகையிலே அவர்களைத் தயார்படுத்துவது தான் எமது நோக்கமாகும்.
கே:- உங்கள் பாடசாலையில் வெளிமாவட்ட மாணவர்களும் கல்வி கற்கிறார்களா?
ப:- ஆம் பதுளை, பண்டாரவளை, இறக்குவானை, இரத்தினபுரி, அவிசாவளை போன்ற பிரதேசங்களிலிருந்தெல்லாம் பிள்ளைகள் எமது பாடசாலைக்கு வருகிறார்கள்.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த பின், விண்ணப்பம் மூலம் அனுமதி பெற்று வந்த கிழக்கு மாகாண மாணவர்களும் இருக்கிறார்கள். எமது பாடசாலையில் விடுதி வசதிகள் இல்லை. குறிப்பிட்ட அளவே அனுமதி வழங்கப்படுகிறது. விடுதி வசதி இருந்திருந்தால் அத்தகைய நிலைமைகளை நாம் தவிர்த்திருக்கலாம்.
கே:- இவை தவிர வேறு திட்டங்களை வைத்திருக்கீறீர்கள்?
ப:- பாடசாலை நேரத்தை இரண்டாகப் பிரித்து நடாத்தும் திட்டங்கள் காணப்படுகின்றன.
கே:- 1000 பாடசாலைகளுக்குள் உங்கள் பாடசாலை வரமுடியாமல் போனமைக்கான காரணம் என்ன?
ப:- ஏனெனில் அதில் முதல் 1000 பாடசாலைகளில் கற்கும் பிள்ளைகளுடன் ஒப்பிடும் போது எமது பிள்ளைகளின் ஆளுமைத்திறன் குறைவாகவே இருக்கிறது. உண்மையைச் சொல்ல வேண்டுமாயின் அவர்கள் புத்தகப் பூச்சிகளாகவே இருக்கிறார்கள். புத்தகத்தைப் படிப்பதும் பரீட்சையில் கக்குவதும் பரீட்சையில் சித்தியடைந்து அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வதும் தான் மாணவர்களின் குறிக்கோள்.
ஆளுமை விருத்தி, விட்டுக்கொடுக்கும் மனப்பாங்கு, பிறருக்கு உதவும் மனப்பாங்கு, அன்பு, கருணை, பெரியவர்கள், ஆசிரியர்களை மதிக்க வேண்டும் என்ற பண்பு போன்றன எல்லாம் அருகிக் கொண்டு வருகின்றன. மாணவர்கள் மத்தியில் இருக்கும் கல்வியடிப்படையிலான போட்டி, சுய நல மனப் பாங்குகளே இவற்றிற்கான அடிப்படைக் காரணங் களாகும். முதல் 1000 பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களைப் பொறுத்த வரையில் புத்தகக் கல்வி பாதி, புறக்கிருத்திய நடவடிக்கைகள் பாதி என்றவாறு அமைக்கப்பட்டுள்ளது.
கே:- பாடசாலை நேரத்தை இரண்டாகப் பிரிப்பது என்றால் என்ன?
ப:- வழக்கமான பாடசாலை நேரம் முடித்த பின் மதிய உணவு இடைவேளை விடப்படும். அதன் பின்னர் பி. ப. 2.00 இலிருந்து பி.ப. 3.30 வரை புறக்கிருத்திய நடவடிக்கைகளுக்கான வகுப்புகள் பயிற்சிகள் வழங்கப்படும்.
கே:- அவ்வாறு செய்வதால் மாணவர்களுக்கு என்ன நன்மை கிட்டும் என எதிர்பார்க்கிறீர்கள்?
ப:- இதனால் பிள்ளைகளுக்கு மத்தியில் விட்டுக்கொடுத்தல், வெற்றி தோல்விகளைச் சமாளித்தல், சமூகத்தோடு செவ்வனே உறவாடுதல் போன்ற பல நல்ல மனப்பாங்குகள் வளரும். பாடசாலையில் விளையாட்டுக்களில் ஈடுபட்டால் வெற்றி தோல்விகளைச் சமமாகப் பார்க்கும் மனப்பாங்கு தானே வளரும்.
கே:- புறக்கிருத்திய நடவடிக்கைகளைப் பொறுத்தவரையில் பெற்றோரின் மனப்பாங்கு மாற வேண்டும் என்ற கருத்து பொதுவாக நிலவி வருகிறது. ஏனெனில் பிள்ளைகள் புத்தகப்பூச்சிகளாவதற்கு பெற்றோரின் அழுத்தமே காரணமாக இருக்கிறது. அது உண்மையா?
ப:- ஆம் பெற்றோருடைய மன நிலையை மாற்றுவதென்பது வெகு கடினமான காரியம் அத்துடன் பிள்ளைகள் புத்தகப் பூச்சிகளாவதற்கு பெற்றோரே காரணம் என்பது 100க்கு 100 சதவீதம் உண்மை. அது புலமைப் பரிசில் பரீட்சையிலேயே உங்களுக்கு, விளங்கியிருக்கும் நாமும் பெற்றோரின் மன நிலையை இங்கு அவதானித்துக் கொண்டேதான் இருக்கிறோம். தரம் 5 புலமைப் பரிசில், பெற்றோர்களுக்குரிய பரீட்சையாக மாறிவிட்டது. பெற்றோர், பிள்ளைகளை படி படி என வதைக்கிறார்கள் என்றுதான் நான் கூறுவேன்.
கே:- இந்த இரட்டை நேரத்திட்டத்தில் இரண்டாவது நேர காலத்தில் எந்தெந்த விடயங்களை நடைமுறைப்படுத்த விரும்புகிறீர்கள்?
ப:- விளையாட்டையும் இணைப்பாட விதான செயற்பாடுகளையும் மேற்கொள்ள இருக்கிறோம். வயலின், மிருதங்கம், வீணை, நடனம் போன்ற கலைகளுடன் விளையாட்டைப் பொறுத்தவரையிலே வலைப்பந்து, எறிபந்து, சதுரங்கம், கரம், ஸ்க்ரபிள் போன்ற பல விளையாட்டுக்களுக்கான பயிற்சிகளை நடைமுறைப்படுத்த இருக்கிறேன். ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு குழுக்கள் அமைத்து பொறுப்பான ஆசிரியர்களை நியமிக்கவிருக்கிறேன். காலப்போக்கில் ஆசிரியர்கள், மாணவர்கள் எல்லோருமே அந்த விடயத்துக்கு பழக்கப்பட்டு விடுவார்கள்.
கே:- அரச பாடசாலையாதலால் நிர்ப்பந்தங்கள் இருப்பதாகக் கருதுகிறீர்களா?
ப:- அப்படி இல்லை. தற்போதைய கல்வியமைச்சர் மிகவும் நல்லவர். ஒரு ஆசிரியராக இருந்தவர். ஒரு யதார்த்தவாதி. பிரச்சினைகளை யதார்த்தமாக அணுகக் கூடியவர். கடந்த ஜூன் மாதம் பொதுக் கல்விச் சட்டம் தொடர்பாக பாராளுமன்றத்தில் நடந்த கலந்துரையாடலிலே நானும் பங்குபற்றியிருந்தேன். அப்போது தான் எம்மால் முதல் 1000 பாடசாலைகளுக்குள் வர முடியவில்லை என்று நாம் மிகுந்த வருத்தப்படுவதாகவும் கூட அவரிடம் கூறியிருந்தேன்.
கே:- இரண்டாவது நேர காலத்தில் ஏலவே கூறியவற்றை விட வேறு திட்டங்களை வைத்திருக்கிறீர்களா?
ப:- மாலை வேளைகளில் சிங்கள மொழியைக் கற்பிக்கும் திட்டங்களும் காணப்படுகின்றன. மொழி தெரியாமல் இருப்பது தான் பல பிரச்சினைகளுக்குக் காரணமாக அமைந்திருக்கிறது. நாம் இன்னொரு மொழியை விளங்கிக் கொண்டோமானால் எமக்குப் பிரச்சினைகளே இருக்காது. ஆனால் அதற்கான ஆசிரியர்களைப் பெற்றுக் கொள்வது பிரச்சினையாகத்தான் இருக்கிறது.
கே: உங்கள் பாடசாலையில் சிங்கள ஆசிரியர்கள் இருக்கிறார்களா?
ப:- ஆம். அவர்கள் இரு மொழிகள் மூலமான கற்பித்தலை மேற்கொள்கிறார்கள். அதாவது ஆங்கில மொழி மூல வகுப்புக்களுக்குக் கற்பிக்கும் அதேவேளை மற்ற வகுப்புகளுக்கு இரண்டாம் மொழியாகச் சிங்களத்தையும் கற்பிக்கிறார்கள். சிங்களம், ஆங்கில மொழிகள் தெரிந்திருந்தால், யாவரோடும் மனம் விட்டுக் கதைக்கலாம். எனக்கு சிங்களம் நன்றாகத் தெரியும். ஆதலால் சிங்கள ஆசிரியர்களுடனும் நல்லுறவைப் பேண முடிகிறது. எங்களுடைய பிள்ளைகளும் அப்படி வளர்ந்தார் களானால், சமத்துவம் பேணும் சமுதாயம் ஒன்று நிச்சயம் உருவாகும் எமக்குக் கல்வி அமைச்சும் பூரண ஒத்துழைப்பை வழங்குகிறது.
கே: தற்போது உயர்தரத்தில் கலைப்பிரிவு மாணவர்களுக்காக வன் தொழில் நுட்பம் என்ற புதிய பாட நெறி அறிமுகப்படுத்த ப்பட்டுள்ளதே? உங்கள் பாடசாலையில் அதற்கான வரவேற்பு எப்படி இருக்கிறது?
ப:- ஆரம்பத்தில் பிள்ளைகள் விரும்பவில்லை. கடந்த முறை நான் அவர்களை வற்புறுத்தி கற்க வைத்தேன். இம்முறை பலர் தாமாகவே முன் வந்து கற்கிறார்கள். அக்கற்பித்தலைப் பரீட்சிக்க கல்வி ஆணைக்குழுவிலிருந்தும் ஒரு குழு வரவிருக்கிறது. அப்பாட நெறிக்கான உபகரணங்களை கல்வி அமைச்சு வழங்கியிருக்கிறது. அவற்றில் பெரும்பாலானவை பாரமான பொறிகளும் இயந்திரங்களுமாகும். இவற்றை ஒரு வகுப்பறையிலே தான் ஒழுங்குபடுத்தி வைத்துள்ளோம்.
கே:- அந்தப் பாடத்தைக் கற்பதில் மாணவர்கள் ஆர்வமாக இருக்கிறார்களா?
ப:- ஆம். வெகு ஆர்வமாக இருக்கிறார்கள். அந்தப் பாட நெறியைத் தெரிவு செய்பவர்கள் பல்கலைக்கழகத்திலும் சில விசேட கற்கை நெறிகளைக் கற்க முடியும்.
கே:- விஞ்ஞானத்துறையில் கற்றால் தான் செழிக்க முடியும் என்ற மனப்பாங்கு எம்மில் பலர் மத்தியில் இருக்கிறதல்லவா? அதை இந்த வன் தொழில் நுட்பப் பாட நெறி மாற்றும் என நம்புகிறீர்களா?
ப:- நான் கூட ஒரு கலைப்பட்டதாரிதான் இன்று உயர் பதவிகளில் இருப்பவர்களைப் பாருங்கள். அவர்களுள் பெரும்பாலானோர் கலைப்பட்டதாரிகளாகத்தான் இருப்பார்கள். இது வெளிப்படை உண்மை. கலைத்துறையிலே கற்றவர்கள். சமூகத்துடன் ஒத்துப்போகக் கூடியவர்களாக இருப்பார்கள்.
அதேவேளை சிலர் விதிவிலக்காக இருக்கக் கூடும் என்பதையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
கே:- இவ்வருடம் கலைப்பிரிவுக்கு, எத்தனை பேர் சேர்ந்திருக்கிறார்கள்?
ப:- 54 பேர் இருக்கிறார்கள். இரு வகுப்புகளாகப் பிரித்துள்ளோம். ஒரு காலமும் கலைப்பிரிவில் இவ்வளவு பேர் தேர்ந்தெடுப்பதில்லை. நாம் கலைப்பிரிவுக்கு அதிக முக்கியத்துவத்தை வழங்குகிறோம். அதனால் இம்முறை அதிக மாணவர்கள் கலைப்பிரிவைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.
கே:- கலைப்பிரிவைப் பொறுத்த வரையிலே பல பாடத் தெரிவுகளை மேற்கொள்ளலாம். உங்கள் பாடசாலையில் பாடத்தெரிவுகள் எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன?
ப:- இங்கு பல தெரிவுகள் இருக்கின்றன. பரத நாட்டியம், சங்கீதம், சித்திரம், பொருளியல், புவியியல், வன் தொழில் நுட்பவியல், தமிழ், இந்து நாகரிகம், இந்து சமயம், தர்க்கவியலும் விஞ்ஞான முறையும் போன்ற பல பாடத்தெரிவுகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பிள்ளைகள் தான் விரும்பியதைக் கற்று பல்கலைக்கழக அனுமதியைப் பெற வேண்டுமென்பதே எனது விருப்பம்.
கே:- கட்டாய பாடங்கள் என்று எவையேனும் இருக்கின்றனவா?
ப:- தமிழை நாம் கட்டாய பாடமாக்கியுள்ளோம். தமிழ் கற்காமல், கலைத்துறையில் எப்படி செழிக்க முடியும்? ஆனால் இந்த வருடம் நிலைமை சற்று மாற்றியிருக்கிறது. வன் தொழில்நுட்பப்பாட நெறியைப் பயிலும் மாணவர்களுக்கு தமிழ் கட்டாயப்படாமாக்கப்படவில்லை.
கே:- உங்களுக்குக் கிடைத்த இந்த விருது பாடசாலையின் வளர்ச்சிக்கு எவ்வாறு உதவும் என எண்ணுகிறீர்கள்?
ப:- உயர் கல்லூரிக்குச் சமமாக எமக்கும் இந்த விருது கிடைத்திருக்கிறது. நாம் அனைவரும் பெருமையடைகிறோம். எமக்கு ஒரு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. இவ்விருது எமது எதிர்கால இலக்குகளை அடையத் துணை புரியும் என நான் எண்ணுகிறேன.
கே:- உங்கள் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு 30 ஆவது வருடம் நடைபெற்று வருகிறது என்று கூறினீர்கள் அதற்கான சிறப்புத் திட்டங்கள் ஏதும் இருக்கின்றனவா?
ப:- 30 ஆம் வது வருட நிறைவு விழாவை முத்தமிழ் விழாவாக 2012 தை மாதம் கொண்டாடவி ருக்கிறோம். இதற்கான ஒழுங்குகளை ஆசிரியர்கள் மேற்கொள்கிறார்கள்.
இப்போட்டிக்கு களம் அமைத்துத் தந்த தினகரன் வாரமஞ்சரி ஆசிரியருக்கு நன்றியை தெரிவிப்பதுடன் இவவாண்டு நாம் விஜயதசமி அன்று பாடசாலைக்கான இணையதளமொன்று ஆரம்பித்துள்ளமையினால் அதில் எமது பாடசாலை மேலதிக தகவல்களைப் பெறலாம். இணையத்தள முகவரி www.rhlc.school.lk ஆகும்.


** பிரசுரிக்கப்படாடதவை

கே:-வேறு என்ன தேவைகள் இருக்கின்றன?ப:-எமது அலுவலக பணிகளை மேற்கொள்ள எழுது வினை ஞர்கள் இல்லை. பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் துணையுடன் தான் எழுது வினை ஞர் ஒருவரைப் பணிக்கு அமர்த்தியுள்ளேன். அரச நியமனத்தின் கீழான முகாமைத்துவ உதவியாளர்கள் எவருமே எமது பாடசாலைக்கு அனுப்பப்படவில்லை. நிரப்பப்படாத பணி வெற்றிடங்கள் குறித்து நாம் விளக்கியுள்ளோம். விரைவில் தீர்வு கிடைக்குமென நம்புகிறேன்.

எல்லாப்பாடசாலைகளையும் போலவே , எமது பாடசாலையிலும் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகிறது. மாகாண சபைகளுக்குக் கீழுள்ள ஆசிரியர்கள் தேசிய பாடசாலைக்கு வருவதை விரும்புகிறார்கள் . ஆனால் அவர்களுக்கு அனுமதி கிடைப்பதில்லை. அதே போல, தேசிய பாடசாலைகளிலேயே மிக நீண்ட காலமாகப் பணி புரியும் ஆசிரியர்களும் இருக்கிறார்கள்.

 ஒருவர் தொடர்ந்து ஒரே பாடசாலையிலேயே கடமையாற்றும் நிலை முற்று முழுதாக மாற்றப்பட வேண்டும். அப்போது இப்பிரச்சினை தீரும் என நம்புகிறேன்.


கே:பாடசாலையின் அயற்சூழலிலே சில உயரமான கட்டடங்களைப் பார்க்க முடிகிறது. இவை பாடசாலைக்குப் பிரச்சினையாக இருக்குமென எண்ணுகிறீர்களா?
: ஆம். அது கொஞ்சம் சிக்கலான நிலைமை தான். அயலிலே எட்டு மாடிக் கட்டட்டம் ஒன்று உள்ளது. அதற்கு அருகிலுள்ள பாடசாலைக் கட்டடத்தில் உள்ள பிள்ளைகளுக்கு போதியளவு வெளிச்சம் கிடைப்பதில்லை. காற்றோட்டம் இல்லை. கல்வி கற்பிப்பது மிகவும் கடினமாக இருக்கிறது. முதலிலே அக்கட்டடத்தில் உயர்தர வகுப்புகள் தான் காணப்பட்டன. அயற்காணியில் புதிய கட்டடம் கட்டத் தொடங்கியபோது பல நடைமுறைச்சிக்கல்கள் உருவாகின. ஆதலால் அந்த வகுப்புகளில் தரம் 4, 5 மானவர்களை அமர்த்தினோம். பார்த்தால் அப்பிள்ளைகளுக்கு பல சுகாதரப் பிரச் சினைகள் ஏற்படுகின்றன. தலைச்சுற்று, சத்தி, ஆஸ்துமா மன அழுத்தம் போன்ற பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. எந்த நேரம் பார்த்தாலும் ஏன் சண்டை பிடிக்கிறார்கள் என்று ஆராயப்போன போது தான் விடயம் விளங்கியது. மின்விசிறிகள் போடப்பட்டுள்ளன. ஆனாலும் நிலைமை மோசமாகவே உள்ளது.


கே: 1000 பாடசாலைகளுக்குள் உங்கள் பாடசாலை வரமுடியாமல் போனமைக்கான காரணம் எடுவாக இருக்கலாமென எண்ணுகிறீர்கள்?
: ஏனெனில் அந்த முதல் 1000 பாடசாலைகளில் கற்கும் பிள்ளைகளுடன் ஒப்பிடும் போது எமது பிள்ளைகளின் ஆளுமைத்திறன் குறைவாகவே இருக்கிறது. உண்மையைச் சொல்லவேண்டுமாயின், அவர்கள் புத்தகப் பூச்சிகளாகவே இருக்கிறார்கள். புத்தகத்தைப் படிப்பதும் பரீட்சையில் கக்குவதும் பரீட்சையில் சித்தியடைந்து அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வதும் தான் அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. ஆளுமை விருத்தி, விட்டுக்கொடுக்கும் மனப்பாங்கு, பிறருக்கு உதவும் மனப்பாங்கு, அன்பு, கருணை, பெரியவர்கள், ஆசிரியர்களை மதிக்க வேண்டும் என்ற பண்பு போன்றன எல்லாம் அருகிக் கொண்டு வருகின்றன. மாணவர்கள் மத்தியில் இருக்கும் கல்வியடிப்படையிலான போட்டி, சுய நல மனப்பாங்கு களே இவற்றிற்கான அடிப்படைக் காரணங்களாகும். முதல் 1000 பாடசாலைகலைச் சேர்ந்த மாணவர்களைப் பொறுத்த வரையிலே புத்தகக் கல்வி பாதி, புறக்கிருத்திய நடவடிக்கைகள் பாதி என்றவாறு அமைக்கப்பட்டுள்ளது.

கேபாடசாலை நேரத்தை இரண்டாகப் பிரித்தால்  மாணவர்களுக்கு என்ன நன்மை கிட்டும் என எதிர்பார்க்கிறீர்கள்?

: இதனால் பிள்ளைகளுக்கு மத்தியில் விட்டுக்கொடுத்தல், வெற்றி தோல்விகளைச் சமாளித்தல், சமூகத்தோடு செவ்வனே உறவாடுதல் போன்ற பல நல்ல மனப்பாங்குகள் வளரும். பத்திரிகைகளை எடுத்துப்பாருங்கள். பல சிறுவர்களும் இளை ஞர்களும் தற்கொலை செய்கிறார்கள். அதிக அழுத்தங்களுக்கு ஈடு கொடுக்க அவர்களால் முடியவில்லை என்பதே பெரும்பாலான தற்கொலைகளுக்குக் காரணம். . பாடசாலையில் விளையாட்டுக்களில் ஈடுபட்டால், வெற்றி தோல்விகளைச் சமமாகப் பார்க்கும் மனப்பாங்கு தானே வலரும். அப்போது இந்தத் தற்கொலைகளுக்கு இடமிருக்குமா சொல்லுங்கள்? ஒரு உயிரின் மதிப்பு எத்தகையது என்று பிள்ளைகள் பலர் யோசிக்கிறார்களில்லை. கற்றவர்கள் கூட இதற்கு விதி விலக்கல்ல. ஆசிரியர்களாகட்டும்.. மாணவர்களாகட்டும். ..சுற்றுலாக்களுக்குச் செல்ல வேண்டும். விளையாட்டுக்களிலே ஈடுபட வேண்டும். ஆசிரியர்கள் களமிறங்கினால், மாணவர்கள் பின் தொடர்வார்கள்.

கே: ஆசிரியர்களும் விளையாட்டிலே ஈடுபடும் சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றனவா?

: ஒரு சிறிய உதாரணத்தைக் கூற விரும்புகிறேன். அன்று எமது பாடசாலையில் ஆசிரியர் தினக் கொண்டாட்டங்கள் நடைபெற்றன. மாணவத்தலைவர்களுக்கும் ஆசிரியர்களுக்குமிடையிலே வலைப்பந்தாட்டப்போட்டி நடைபெற்றது. ஆசிரியர்களின் அணியிலே நானும் களமிறங்கினேன். அதிபர் விளையாடுகிறார் என்பது மாணவர்களுக்குப் பெரும் ஊக்கமாக இருந்தது. போட்டி முடிந்து கூட்டம் கலைந்த பின், பிள்ளைகள் பந்தெடுத்து விளையாடியதைக் காண முடிந்தது. மறு நாள் தேர்தல் காரணமாக பாடசாலை மூடப்பட்டிருந்தது. அது பற்றி அறிந்திராத மாணவர்கள் சிலர் பாடசாலைக்குச் சமூகமளித்திருந்தனர். அவர்கள் கூட பந்தெடுத்து விளையாடியதைக் கண்டோம்.

கே: இந்த இரட்டை நேரத் திட்டத்துக்கு பெற்றோர், ஆசிரியர்களின் ஒத்துழைப்பு கிடைக்குமென நம்புகிறீர்களா?

ப: கல்வி அமைச்சு அனுமதி தந்தாலும் , அவர்களுடைய ஒத்துழைப்பு மிக மிக அவசியம். அவர்கள் ஒத்துழைப்பு தருவார்கள் என நம்புகிறோம். பாடசாலை முடிவடையும் நேரத்துக்கு, தம் பிள்ளைகளுக்கான போக்கு வரத்து வசதிகளை ஒழுங்கு செய்தார்கள் என்றால் போதுமானது. ஆதலால் எனக்கு அதில் பிரச்சினைகள் இருக்க மாட்டா என நினைக்கிறேன்.
 




1 comment:

baleno said...

பயனுள்ள நேர்காணல்.
இப்போ தான் உங்களது மற்றய பதிவுகள் சில படித்தேன். அருமையான பதிவுகள்.

Post a Comment