Monday, October 10, 2011

மூன்று தசாப்த கால முயற்சியின் வெற்றியிது!

ஆசிரியர் பிரதீபா பிரபா விருது பெற்ற கொழும்பு இராம நாதன் இந்து மகளிர் கல்லூரி அதிபர் திருமதி. கோதை நகுலராஜாவுடனான நேர்காணல் (பாகம்-1 )

நேர்கண்டவர்
: சாரதா மனோகரன்

 
 தரிசாய் கிடந்த மாணவன் மனதில் தானியமாய் கல்வியை விதைத்து உலகமே விளங்க விளைச்சல் பெருக்கும் உத்தமர்கள் ஆசிரியர்கள்
. கைமாறு எதிர்பாராத அந்த சேவையாளர்களை கௌரவிக்குமுகமாக ஆசிரியர் தினக் கொண்டாட்டம் அலரி மாளிகையிலே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது.

குரு பிரதிபா பிரபா என்ற தொனிப் பொருளில் நடைபெற்ற அந்த விழாவில் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் பங்கு பற்றியிருந்தனர். அகில இலங்கை ரீதியில் தெரிவு செய்யப்பட்ட சிறந்த அதிபர்கள், சிறந்த ஆசிரியர்கள், பிரதி அதிபர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன. அந்த வகையிலே கொழும்பு மாவட்டத்தில் மூன்று பாடசாலைகளைச் சேர்ந்த அதிபர்கள் ஆசிரியர் பிரதீபா பிரபா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர். மகிந்த சிந்தனை தேசிய புனர்வாழ்வு வேலைத் திட்டத்துக்கமையவே இவ்விருதுகள் வழங்கப்பட்டன.

 எதிர்கால சவால்களை எதிர்கொள்ளக் கூடிய வகையிலே எம் நாட்டின் பிள்ளைகளை நற்பிரஜையாக்கும் உன்னத பணிக்கான தலைமைத்துவத்தை வழங்கி பாடசாலையை வெற்றியின் பால் இட்டுச் செல்கின்றமைக்காகவே இந்த அதிபர்கள் 'ஆசிரியர் பிரதீபா பிரபா ' விருதைப் பெற்றுக்கொண்டனர். இலங்கையிலே முதன்மையான பாடசாலையான றோயல் கல்லூரியுடன், இராம நாதன் இந்து மகளிர் கல்லூரி, கணபதி இந்து மகளிர் கல்லூரி ஆகிய பாடசாலை அதிபர்களே கொழும்பு மாவட்டத்தில் அந்த விருதைப் பெற்றுக்கொண்டவர்களாவர்.

இந்த விருது கிடைத்தமை தொடர்பான விடயங்களை இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி அதிபர் திருமதி. கோதை நகுலராஜா தினகரன் வாரமஞ்சரியுடன் பகிர்ந்து கொண்டார். செந்தளித்த முகத்துடன் வரவேற்ற அதிபர் எமது கேள்விகள் ஒவ்வொன்றுக்கும் விளக்கமான, தெளிவான பதில்களை அளித்திருந்தார். விருது கிடைத்தமைக்காக அவரை வாழ்த்தி நேர்காணலைத் தொடர்ந்தோம்.
 
கே: உங்களுக்கு இந்த கிடைத்த விருது கிடைத்தமை பற்றி கூறுங்கள்?

: இது பாடசாலையை நன்றாகச் செய்த அதிபர்களுக்கான விருது. கொழும்பு றோயல் கல்லூரியுடன் எமது பாடசாலைக்கும் இந்த விருது கிடைத்தமையை இட்டு நான் பெருமைப்படுகிறேன். எமது பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு 30 ஆவது வருடம் கடந்து கொண்டிருக்கிறது. அந்த நிலையிலே இந்த விருது கிடைத்தமையை இட்டு நாம் பெரு மகிழ்ச்சி கொள்கிறோம்.

கே:உங்களுடைய கல்விப் பின்புலம் பற்றி கூறுங்களேன்?
: ஆரம்பக் கல்வியை எனது ஊர்ப்பாடசாலையான சரசாலை ஸ்ரீ கணேச வித்தியாலயத்திலும் பின்னர் தரம் 10 வரை சாவகச்சேரி இந்துக் கல்லூரியிலும் உயர் தரக் கல்வியை பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலையிலும் கற்றேன். பின்னர் யாழ் பல்கலைக்கழகத்துக்குத் தெரிவாகி பொருளியலில் சிறப்புப் பட்டம் பெற்றேன். அதே பல்கலைக்கழகத்திலேயே கல்வியியலில் பட்டப்பின் கல்வி டிப்ளோமாவையும் முடித்தேன். அதன் பின்னர் தேசிய கல்வி நிறுவகத்தால் மீப்பேயில் நடாத்தப்பட்ட பட்டப்பின் கல்வி டிப்ளோமா பாட நெறியை முகாமைத்துவத் துறையில் கற்றேன். பின்னர் திறந்த பல்கலைக்கழகத்திலே ஆசிரியர் கல்விக்கான முதுமானிக் கற்கை நெறியையும் பூர்த்தி செய்தேன். தற்போது கொழும்பு பல்கலைக்கழகத்திலே ஆங்கில டிப்ளோமா பாட நெறியைப் பயின்று வருகிறேன். அவற்றை விட, நான் ஒரு கல்வி நிர்வாக சேவை அதிகாரி என்பதும் குறிப்பிடத்தக்கது.

கே: உங்களுடைய கற்பித்தல் பின் புலம் பற்றி கூறுங்களேன்?
: 1993 ஆம் ஆண்டு எனக்கு ஆசிரிய நியமனம் கிடைத்தது. சாவகச்சேரி, நுணாவில் அமிர்தாம்பிகை வித்தியாலயத்திலே கற்பிக்க ஆரம்பித்தேன். பின் 1997 இலே யாழ். இந்து மகளிர் கல்லூரியில் கற்பிக்கத் தொடங்கினேன். பின் 2000 ஆம் ஆண்டிலிருந்து யாழ். பலாலி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியிலே உப அதிபராகவும் விரிவுரையாளராகவும் கடமையாற்றினேன். பின் 2007 இலிருந்து கொழும்பு இராம நாதன் இந்து மகளிர் கல்லூரியிலே அதிபராகக் கடமையாற்றி வருகிறேன்.

கே: நீங்கள் இப்பாடசாலையில் அதிபராகப் பொறுப்பேற்ற பின்னர் எத்தகைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன?
 :இந்தக் கேள்விக்கான பதிலை நான் சொல்வதை விட சமூகம் சொன்னால் நன்றாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.

திருமதி கோதை நகுலராஜா அதிபராகப் பொறுப்பேற்ற பின்னர் பாடசாலையில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திகள் தொடர்பான கருத்துக்களை கல்லூரியின் பிரதி அதிபர் எம்முடன் பகிர்ந்துகொண்டார்.

 பாடசாலையின் பௌதிக வளங்கள் விருத்தி செய்யப்பட்டுள்ளன. புதிய கட்டடங்கள் கட்டப்பட்டன. பழையன புனரமைக்கப்பட்டன. புதிய பல் மருத்துவ சிகிச்சை நிலையம் அமைக்கப்பட்டது. சிற்றுண்டிச்சாலை புனரமைக்கப்பட்டது. இப்படியாகப் பல பௌதிக வளங்கள் அதிகரிக்கப்பட்டன.

மனித வளத்தைப் பொறுத்த வரையிலே , ஆசிரியர்களுக்கான அபிவிருத்திச் செயற்பாடுகள், ஆசிரியர் நலன் புரி மேம்பாடு போன்றனவும் மேற்கொள்ளப்பட்டன. மாணவர்களுடைய திறன் வெளிப்பாடு ஏறத்தாழ 20-30 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. பாடசாலை மட்டத்திலே மர நடுகை போன்ற பலவகையான செயற்றிட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.

சிறுவர் உரிமை தொடர்பான மா நாடு ஒன்றிலே கலந்து கொள்வதற்காக திருமதி கோதை நகுலராஜா வெளி நாடு ஒன்றிற்கும் சென்று வந்தார். சிறுவர் உரிமை தொடர்பான விடயங்களை எமது பாடசாலையிலே நடைமுறைப்படுத்தப்படுகின்றன. அடிக்கடி அதனுடன் தொடர்பான கலந்துரையாடல்கள் நடைபெறுகின்றன. மாணவர்கள் புறக்கிருத்திய தொழிற்பாடுகளுக்கான கழங்களுடன் இணைந்த விடயங்கள் மிகவும் முனைப்புடன் செயற்படுத்தப்படுகின்றன. இந்த விருதுக்கும் அந்தச் செயற்பாடுகளின் முன்னேற்றம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டது.

பல விளையாட்டு அணிகள் உருவாக்கப்பட்டுள்ளன. மாணவர்களின் மன நலன் விருத்திக்காக, உள வளத் துணையாளர் கோகிலா மகேந்திரன் போன்றவர்களின் துணையுடன் மாணவர்களுக்கான ஆலோசனை, வழிகாட்டல் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்விருதுக்கான பரிந்துரையின் போது உள நல செயற்றிட்டங்களின் அறிக்கைகள் கூடப் பார்வையிடப்பட்டன.

 திருமதி கோதை நகுலராஜா எமது பாடசாலைக்கு வந்த பின்னர், கல்வித்துறையில் மாணவர்களின் திறன் வெளிப்பாடு அதிகரித்துள்ளது. இவ்வருடம் 6 பேர் மருத்துவத்துறைக்குத் தெரிவாகியிருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் க.பொ.சாதாரண தரத்தில் கணித பாடத்தில் சித்தியடையும் மாணவர்களின் தொகை அதிகரித்துள்ளது. அதற்காக அதிபரின் வழிகாட்டலுடன் ஒரு சிறப்பு செயற்றிட்டம் மேற்கொள்ளப்பட்டது. மெல்லக்கற்கும் மாணவர்கள் அனைவரும் தனி வகுப்பொன்றில் சேர்க்கப்பட்டு அவர்கள் விசேட கற்பித்தல் முறைகளுக்கு அமைவாகக் கற்பிக்கப்பட்டனர். சில ஆசிரியர்கள் அவ்வகுப்புகளுக்குப் பொறுப்பாக இருந்து அத்திட்டத்தைச் செயற்படுத்தினர். முன்னர் கணிதபாட சித்தி சதவீதம் 60-70 சதவீதமாக இருந்தது. இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னர் 90 சதவீதமாக உயர்ந்து விட்டது.

விருதுக்கான பரிந்துரையின் போது மாணவர்கள் சித்தியடையும் சதவீதங்கள் முன்னையவற்றுடன் ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டன. அப்போது யாவுமே அதிகரித்துக் காணப்பட்டமை அவதானிக்கப்பட்டுள்ளது.

கவின் நிலைச் சூழல் ஒன்று பாடசாலையில் ஏற்படுத்தப்பட்டது. அதாவது பாடசாலை முன்றலிலே சரஸ்வதி சிலை அமைக்கப்பட்டு, அதைச் சுற்றி பூந்தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் மட்டுமன்றி ஆசிரியர்கள் பாடசாலைக்குள் நுழையும் போதும் இது அமைதியான , மகிழ்ச்சியான மன நிலையை ஏற்படுத்தும்.

இத்தகைய விடயங்கள் யாவற்றையும் அவதானித்து அந்த அவதானத்தின் அடிப்படையிலேயே அவருக்கு இந்த விருது கிடைத்துள்ளது. இராமநாதன் இந்து மகளிர் கல்லூரியைப் பொறுத்த வரையிலே அதிபருக்குக் கிடைத்த இத்தகைய முதல் விருது ஆசிரியர் பிரதீபா பிரபா விருதாகும்.


இந்த விருதிலே உள்ள திருவுருவம் குருளு கோமி என்பவருடையதாகும். 13 ஆம்நூற்றாண்டைச் சேர்ந்த பௌத்த துறவியான இவர் சிங்கள இலக்கியத்தின் முன்னோடியாவார். சிங்கள இலக்கியத்திலே இவரது பங்களிப்பு பிரதானமானது. தூய சிங்கள மொழியை அதிகளவில் பிரயோகித்து பிற மொழிகளின் பாவனையைக் குறைத்தவரும் இவரே.

Add caption




No comments:

Post a Comment