Wednesday, December 29, 2010

மருத்துவமனைக் கழிவுகள் புற்றுநோயையும் உருவாக்கும்!

அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளின் சுகாதார நிலைமையில் சூழல் காரணிகள் பெரும் ஆதிக்கத்தைச் செலுத்துகின்றன. அந்நாடுகளின் குடிமக்கள் மத்தியிலே ஏற்படும் நோய்த்தாக்கங்கள், மரணங்கள், ஊனங்கள் போன்றவற்றிற்கு சுற்றுச் சூழலும் ஒரு முக்கிய காரணமாகிவிடுகிறது.
தாம் வேலை செய்யும் இடத்தினதோ வீட்டினதோ அல்லது வாழும் சூழலினதோ தாக்கத்தால் அவர்கள் அடையும் பாதிப்புகள் எண்ணற்றவை.
இத்தகையதோர் நிலையிலே, சுகாதார நிலைமையை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட வைத்தியசாலைகளின் கழிவுகளால் உருவாகும் அச்சுறுத்தல் என்பது ஜீரணிக்கப்பட முடியாததாகவே இருக்கிறது.
வைத்தியசாலை போன்ற சுகாதாரத் துறை அமைப்புகளினால் வெளியேற்றப்படும் கழிவுகள் எந்த வகையில் அகற்றப்பட வேண்டும் என்ற கோட்பாடுகள் உலகளாவிய ரீதியிலே வரையறுக்கப்பட்டிருக்கின்றன. அத்துடன் ஒவ்வொரு நாடும் கூட தனக்கு ஏற்றபடி, உலகளாவிய கோட்பாடுகளுக்கு அமைவாகச் சட்ட திட்டங்களை அமைத்திருக்கிறது.
ஆனால் அச்சட்ட திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போதுதான் பல சிக்கல்கள் உருவாயின. சுகாதாரத் துறைக் கழிவுகளை அப்புறப்படுத்துதல் ஒன்றும் இலகுவானதல்ல. ஏனெனில், அவற்றுள் பல ஆபத்தானவை.
அதேசமயம் அவற்றைப் பாதுகாப்பாக அகற்றும் நடைமுறைகள் செலவு மிக்கவை. அச்செலவு அபிவிருத்தியடைந்த நாடுகளைப் பொறுத்த வரையிலே, ஈடுசெய்யப்பட முடியாததாகவே இருக்கிறது.
தென்னாசியாவைப் பொறுத்தவரையிலே மருத்துவமனைக் கழிவுகளுள் சில வகைகள் உயர் வெப்பநிலையிலே எரிக்கப்படுகின்றன. சில வகைகள் தொற்று நீக்கம், நுண்ணுயிரழிவாக்கம் செய்யப்பட்டு பரிகரிக்கப்படுகின்றன. அல்லது மீள் சுழற்சி செய்யப்படுகின்றன.
தொற்றுக்களையுடைய கழிவுகளும் பரம்பரை அலகுகளிலே பிறழ்வுகளை ஏற்படுத்தக் கூடியவையும் உயர் வெப்பநிலையிலே எரிக்கப்படுகின்றன. அவ்வுயர் வெப்ப நிலையைத் தாக்குப் பிடிக்கக் கூடியவை மிக உயர் வெப்பநிலையிலே பிரிகையடையச் செய்யப்படுகின்றன.
திரவ நிலையிலுள்ள கழிவுகள், இரசாயனப் பதார்த்தங்கள் மூலம் தொற்று நீக்கப்படுகின்றன. நீராவியால் நுண்ணுயிரழிவாக்கம், நுண்ணலைகள் மூலம் கழிவுகளின் ஈரப்பற்றுக்களை அகற்றுதல் போன்ற செயற்பாடுகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
பிளாஸ்மா ஆக் என்ற நவீன தொழில்நுட்பம் மின்வாய்கள் மூலம் கழிவுகள் சுத்திகரிக்கப்பட வழிவகுக்கிறது. இத்தொழில்நுட்பத்தின் அடிப்படையில் கழிவுகள் பரிகரிக்கப்பட்டால் சாம்பல்கூட மீதமாகாது.
இவ்வாறு பரிகரிக்கப்பட்ட கழிவுகள் யாவுமே, சூழலுக்குப் பாரிய பாதிப்பை ஏற்படுத்தமாட்டா எனக் கருதப்படுமிடத்து, கழிவகற்றலுக்காக அமைக்கப்பட்ட கிடங்குகளுக்குள் நிரப்பப்பட்டு கிடங்குகள் மூடப்படுகின்றன.
ஆனால் தெற்காசிய நாடுகளின் சகல சுகாதாரத் துறை அமைப்புகளும் இந்த முறைமைகளைத்தான் பின்பற்றுகின்றனவென ஒருபோதும் கூறமுடியாது. ஏனெனில் இந்த முறைகள் கூட பெருஞ் செலவு மிக்கவை.
ஆனால் பெரும்பாலான வைத்தியசாலைகளில் கழிவுகளை உயர் வெப்பநிலையிலே எரிக்கும் வசதிகள் காணப்படுகின்றன. அவ்வாறு எரிக்கப்படுவன தவிர ஏனையவை யாவும் நகர சபைக் கழிவுகளுடன் கலக்கப்பட்டு அகற்றப்படுகின்றன. இல்லையேல், மருத்துவமனைச் சூழலிலேயே நிலத்தினுள் புதைக்கப்படுகின்றன.
பல நாடுகளில் நகர சபைக் கழிவுகள் சன சந்தடியில்லாத வெளிகளிலே கொட்டப்படுகின்றன. சில நாடுகளில் ஆறுகளுடன் கலக்கவிடப்படுகின்றன.
இத்தகைய செயற்பாடுகளுக்கெல்லாம் சம்பந்தப்பட்ட நாடுகளின் பொருளாதார நிலையும், சம்பந்தப்பட்ட துறைகளின் அலட்சியப் போக்கும் பொது மக்களிடையேயான விழிப்பணர்வுக் குறைவும் காரணமாக அமைந்துவிடுகின்றன.
ஆரம்பத்தில் அவ்வாறு பாதுகாப்பாற்ற முறையிலே அகற்றப்படும் சுகாதாரத் துறைக் கழிவுகள் பற்றி எவரும் பெரிதாகச் சிந்திக்க முனையவுமில்லை. ஆனால் அத்தகைய கழிவுகளால் உருவாக்கப்படும் சுகாதார சீர்கேடுகள் விஸ்வரூபம் எடுத்த பின்னர் தான் அவற்றைப் பாதுகாப்பாக அகற்ற வேண்டியதன் முக்கியத்துவமும் உணரப்பட்டது.
உயர் வெப்பநிலையிலே கழிவுகளை எரிக்கும் போது கூட வாயுக்கள் வெளியேற்றப்படும். அவை, குறித்த அளவுக்கு மேலதிகமாக வெளியேற்றப்பட்டால், வளி மண்டலம் மாசடைவது தவிர்க்கப்பட முடியாததாகும்.
வளிமண்டலம் மட்டுமன்றி நிலமும் நீர்நிலைகளும் கூட மாசடையும். மனிதனாலும் ஏனைய உயிரினங்களாலும் அப்புகை நேரடியாகச் சுவாசிக்கப்படலாம். இது உயிருக்கே அச்சுறுத்தலாகக் கூட அமைந்துவிடலாம்.
வளிமண்டலத்திலே பரவும் இப்புகை நீர் நிலைகளில் கூட படிவதற்கு வாய்ப்புண்டு. இது நீர் நிலைகளில் இருந்து நீரை நேரடியாகப் பெரும் உயிரினங்களுக்கு அச்சுறுத்தலாக அமையும். அந்நீர் நிலைகளில் வாழும் மீன்களின் உடலினுள்ளும் படியத் தலைப்படும். இதனால் மீன்களை உணவாக உட்கொள்வோரும் பாதிக்கப்படுவர்.
இப்புகை விவசாய நிலங்களிலும் பயிர்களிலும் கூடப் படிவதற்கு வாய்ப்புண்டு. அப்பயிர்களை உணவாக்கும் உயிரினங்களும் பாதிப்புக்குள்ளாகும்.
நிலத்திலே ஊறிய இப்புகை, மீண்டும் பயிர்களால் மண்ணிலிருந்து அகத்துறிஞ்சப்படும். ஆதலால் புகையில் உள்ள பாதிப்பை ஏற்படுத்தும் மூலகங்களின் செறிவு பயிர்களின் விளைபொருட்களிலும் அதிகளவில் காணப்பட வாய்ப்பு உண்டு.
உயர் வெப்பநிலையின் போது சாம்பல் மீதமாகும். இந்தச் சாம்பலாலும் நிலமும் நீர் நிலைகளும் மேற்கூறிய வழிகளிலேயே மாசடையும்.
சுகாதாரத் துறையிலே கூரிய உபகரணங்களின் பாவனை மிக அதிகமாகும். கடந்த காலங்களில் எயிட்ஸ், ஹெப்படைட்டிஸ் கி, வி போன்ற வைரஸ் தொறறுக்கள் மிக வேகமாகப் பரவின. இதனால் ஒரு தடவை பாவித்தபின் எறியும் உபகரணங்களின் பாவனை அதிகரித்தது. அவற்றுள் பெரும்பாலானவை ஊசி, கத்தி, பிளேட் போன்ற கூரான உபகரணங்களாகும்.
அவை காயங்களை ஏற்படுத்தவல்லவை. அவ்வாறான சந்தர்ப்பங்களிலே அந்த உபகரணங்களில் உள்ள தொற்றுக்கள் காயங்களினூடு பரவும் வாய்ப்பு மிக அதிகமாகும்.
வைத்தியசாலை ஊழியர்கள் தொட்டு கழிவுகளைத் தெரிந்தோ தெரியாமலோ கையாள்பவர்கள் வரை இத்தகைய காயங்களுக்கு உள்ளாகிறார்கள்.
இத்தகைய உபகரணங்கள் வைத்தியசாலைகளிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு, வேறு தரப்பினரால் தனியாருக்கு விற்கப்படுவதாகத் தகவல்களும் ஆய்வுகளும் தெரிவிக்கின்றன. இச் செயற்பாடானது மறைமுகமாகப் பல சுகாதாரப் பிரச்சினைகளை உருவாக்குகின்றது.
இவை தவிர தொற்றுள்ள உடற்பாகங்கள் மற்றும் கழிவுகள் காரணமாக நேரடியான தொற்றுக்கள் ஏற்படும் வாய்ப்புகளும் மிக அதிகமாகும். அத்துடன் அவை காரணமாக மாசடையும் நிலம், நீர் நிலைகள் காரணமாக ஏலவே குறிப்பிட்டபடி பல மறைமுகமான சுகாதாரப் பிரச்சினைகள் உருவாகும் வாய்ப்பு மிக அதிகமாகும்.
சுகாதாரத் துறையிலே பாதரசத்தின் பாவனை மிக அதிகமாகும். வெப்ப மானிகள், குருதி அமுக்கத்தை அளவிடும் கருவிகள் போன்ற பல உபகரணங்களிலும் ஆய்வுகூடங்களிலும் இன்னும் பாதரசம் பாவனையில் உள்ளது.
இந்த உபகரணங்கள் உடைந்தால் அவற்றில் இருக்கும் பாதரசம் வெளியே சிதறும். அவ்வாறு சிதறிய பாதரசத்தை அப்புறப்படுத்துவதற்கான பிரத்தியேக நடைமுறைகள் எவையும் பின்பற்றப்படுவதில்லை. அது ஒன்றில் குப்பைத் தொட்டியினுள் போடப்படும். இல்லையேல், உயர் வெப்பநிலையில் எரிக்கப்படும்.
பாதரசம் பார உலோகங்களில் ஒன்றாகும். நச்சுத்தன்மை மிக்கது. உணவுச் சங்கிலியினூடு அது கடத்தப்படுவதனால், பல நோய்கள் உருவாகி உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகியது.
பாதரசம் கலக்கப்படுவதால் நிலமும் நீரும் நச்சுத்தன்மையடையும். பாதரசம் பல்வேறு நிலைகளில் சுற்றுச் சூழலுடன் கலக்கிறது. அந்நிலைகளில் சில நச்சுத்தன்மை அதிகமானவை. பலவிதமான நோய்களுக்கும் நரம்பியல் பாதிப்புகளுக்கும் பாதரசம் காரணமாகிவிடுகிறது.
ஜப்பானின் மினமாட்டா அனர்த்தம் கூட இத்தகைய பாதரசத்தினால் உருவானதே.
பாதரசமானது உணவினூடாகவோ அல்லது சுவாசத்தினூடாகவோ அல்லது தோலினூடாகவோ உறிஞ்சப்பட்டு மனித உடலினுள் உள்ளெடுக்கப்படுகிறது.
பார உலோகங்கள் தவிர சுகாதாரத் துறையிலே பயன்படுத்தப்படும் ஏனைய மருந்துகள், இரசாயனப் பதார்த்தங்கள் மற்றும் கதிர்த்தொழிற்பாட்டு மூலகங்கள் கூட பல சுகாதாரப் பாதிப்புகளை ஏற்படுத்தவல்லன.
வளிமண்டலத்திலே கலந்திருக்கும் சுகாதாரக் கழிவு மாசுக்களால் சுவாச நோய்கள் பல ஏற்படுகின்றன. ஆஸ்துமா ஏற்படும் வாய்ப்புகளும் மிக அதிகமாகும்.
பார உலோகங்களின் படிவாலும் ஏனைய பல இரசாயனப் பதார்த்தங்களுடனான தொடர்பாலும் பலவிதமான புற்று நோய்கள் ஏற்படக்கூடிய வாய்ப்பு காணப்படுகிறது.
காபன் பதார்த்தங்களை எரிக்கும் போது தேவையானளவு சக்தி கிடைக்காத பட்சத்தில் அவை குறை தகனத்துக்கு ஆட்படும். அதன் காரணமாக காபன் மொனொக்சைட் வாயு வெளிவிடப்படும். இது நச்சுத்தன்மையானது. மரணத்தைக்கூட ஏற்படுத்த வல்லது. சுற்றுச் சூழலில் அகற்றப்படும் கதிர்த் தொழிற்பாட்டுப் பதார்த்தங்களும் புற்றுநோயை ஏற்படுத்தவல்லவை.
நீரிலே கலக்கப்படும் சுகாதாரக் கழிவுகள் நீரை மாசடையச் செய்து அதன் தரத்தைக் குறைக்கின்றன. இதனால் நீரால் பரவும் சகல நோய்களும் பரவும் வாய்ப்புகள் மிக அதிகமாக இருக்கும்.
அதேபோல, கழிவகற்றல் இடங்குகளுக்குள் கொட்டப்படாமல் வெளியான நிலங்களிலே கொட்டப்படும் கழிவுகளால் நிலம், நீர் நிலைகள் மட்டுமன்றி நிலக்கீழ் நீரும் மாசுபடும். இதனாலும் ஏலவே குறிப்பிட்ட நோய்கள் பரவ வாய்ப்புண்டு.
இதுவரை காலமும் சுகாதாரத் துறைக் கழிவுகள் இத்துணை ஆபத்தானவையா என எண்ணிக்கூடப் பார்த்திருக்கமாட்டோம்.
எப்பொழுதும் நோய்கள் வந்தபின் பரிகரிப்பதைவிட வருமுன் காத்தலே சிறந்ததாகும்.
ஆதலால் இக்கழிவுகளைப் பாதுகாப்பான முறையில் அகற்றும் செயற்றிட்டங்கள் மூலைமுடுக்குகளிலெல்லாம் ஆரம்பிக்கப்பட வேண்டும். அத்துடன் எங்கு கழிவுகளை கையாள்கின்ற போதும் அவற்றுக்குரிய பாதுகாப்பு நடைமுறைகளைக் கைக்கொள்ள வேண்டும். சுகாதாரத் துறை ஊழியர்கள் மட்டுமன்றி பொதுமக்கள் மத்தியிலும் இக்கழிவுகள் பற்றிய விழிப்புணர்வு ஊட்டப்பட வேண்டும்.
இவையாவும் சமகாலத்திலே மேற்கொள்ளப்பட வேண்டும். இல்லாவிடில் எந்த ஒரு முன்னேற்றமுமின்றிய பின்னடைவான நிலையையே யாவரும் எதிர்நோக்க வேண்டியிருக்கும் என்பது நிதர்சனம்.

No comments:

Post a Comment