Sunday, December 5, 2010

தூரிகையில் கண்ட உயிர் வண்ணம்


“மலரினில் நீல வானில்
மாதரர் முகத்தில் எல்லாம்
இலகிய அழகை ஈசன்
இயற்றினான், ஈசன் இந்த
உலகினில் எங்கும் வீசி
ஓங்கிய இரவி வர்மன்
அலகிலா அறிவுக்கண்ணால்
அனைத்தையும் நுகருமாறே”
என்கிறது மகாகவி பாரதி பாடிய இரங்கற்கவிதையொன்று ஓவியக்கலையிலே, இந்தியப்பாணிக்குள் மேலைத்தேயப் பாணியைப்புகுத்தினான் கேரள ஓவியன் ஒருவன். எத்தனை தடவைகள் திரும்பத்திரும்பப் பார்த்தாலும் மனதை லயிக்கச் செய்யும் அவ்வோவியங்களை வெறும் சொற்களால் விபரிக்க முடியாது.
இந்திய ஓவியப்பாணிக்கு புதுப்பரிமாணத்தை வழங்கி இன்று தன் ஓவியங்களால் வாழ்ந்து வரும் ஓவியன்தான் ராஜா ரவிவர்மா. அவரது இறந்த போது மகாகவி பாரதியார் பாடிய இரங்கற்கவிதையே மேலே குறிப்பிடப்பட்டிருக்கிறது.
உலக்கப்புகழ்பெற்ற ஓவியர்களுள் ஒருவரான ராஜா ரவிவர்மா கேரள மாநிலத்தின் திருவாங்கூர் சமஸ்தானத்தைச் சேர்ந்தவர்.
இன்றைய கேரள மாநிலத்தின் தலை நகராகிய திருவனந்த புரத்திலிருந்து 40 கிலோ மீற்றர் தூரத்திலே கிளிமனூர் அமைந்திருக்கிறது. அங்குள்ள அரண்மனையிலே திருவாங்கூர் சமஸ்தான அரச குடும்பத்துக் குழந்தையாக 1848 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் திகதி ரவிவர்மா பிறந்தார்.
இயற்கையிலேயே அவருக்கு ஓவிக்கலையில் நாட்டமிருந்தது. சிறு வயதிலேயே தான் வாழ்ந்த அரண்மனைச் சுவர்களிலெல்லாம் பல வகையான மிருகங்களையும் தான் அன்றாடம் காணும் காட்சிகளையும் வரைவார்.
அரண்மனையிலேயே சமஸ்கிருதம், மலையாளம் ஆகிய மொழிகளைக் கற்றிருந்தார். அவரது நெருங்கிய உறவினரான ராஜாராஜ வர்மா, ரவிவர்மாவின் ஓவியத்திறனைக் கண்டுணர்ந்தார். தான் அறிந்திருந்த ஓவியக்கலை நுட்பங்களை ரவிவர்மாவுக்குப் புகட்டினார்.
ராஜாராஜ வர்மா தான் ரவிவர்மாவின் முதல் ஓவியகுரு ஆவார். ரவிவர்மாவின் 13 வது வயதிலே ஒரு சம்பவம் நிகழ்ந்தது. அவர் கிளிமனூர் அரண்மனையிலிருந்து திருவாங்கூர் அரண்மனைக்கு சுயம்வரம் ஒன்றுக்காக அழைத்துச் செல்லப்பட்டார். அக்கால அரசகுல வழக்கப்படி, சுயம்வரத்தின் மூலமே மணமகளுக்குரிய மணமகன் தேர்ந்தெடுக்கப்படுவான்.
சுயம் வரத்தில் பங்கேற்கும் ஒவ்வொரு இளைஞனைப் பற்றியும் சிறிய அறிமுகம் ஒன்று நடைபெறும். அதனடிப்படையில் ரவிவர்மாவும் அறிமுகம் செய்யப்பட்டார். சமஸ்கிருதம் மற்றும் மலையாளத்திலே காவியங்கள் பற்றிய தேர்ச்சியும், கதகளி, சங்கீதம் ஆகிய கலைகள் மட்டுமன்றி ஓவியக்கலையிலும் சிறந்த தேர்ச்சியுடையவராக அறிமுகம் செய்யப்பட்டார்.
ஆயினும் திருவாங்கூர் மகாராஜா அவர் கறுப்பாக இருப்பதாகக் கூறி அவரை நிராகரித்தார். அந்தச்சம்பவம் கூட ரவிவர்மாவின் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்ததோ என்றே எண்ணத்தோன்றுகிறது. ஏனெனில் பின்னொரு காலத்திலே, இச்சம்பவம் பற்றிய நினைவுகளை ரவிவர்மா மீட்டிருந்தார். அப்போது ‘நான் அரண்மனை, அந்தப் புரங்களின் வாசியாக மாறி அரசவம்சத்தின் மாப்பிள்ளை என்ற ஆடம்பர வாழ்விலே அடைபட்டிருந்தால், என்னை இந்த உலகம் அறிந்திருக்குமா? எனக்கூறியிருந்தார்.
ரவிவர்மாவின் எதிர்காலம் ஓவியக்கலையுடன் சிறக்க வழிவகுத்தவர் ராஜா ராஜவர்மா என்றால் மிகையாகாது. அக்காலத்திலே திருவாங்கூர் மன்னராக இருந்த ஆயிலியம் திருநாள் மகாராஜாவிடம் ரவிவர்மாவை ராஜவர்மா அறிமுகப்படுத்தினார். ஆயிலியம் திருநாள் மகாராஜாவின் ஆதரவு ரவிவர்மாவுக்கு அவரது 14 வயதிலேயே கிடைத்தது.
திருவாங்கூர் அரண்மனையின் ஆஸ்தான ஓவியரான ராமசாமி நாயுடு என்ற நாயக்கர் எண்ணெய் வண்ண ஓவியக்கலையில் வல்லவராக இருந்தார். அக்காலத்தில் இந்தியாவிலே எண்ணெய் வண்ண ஓவியக்கலை பெரியளவில் பிரபலமடைந்திருக்க வில்லை. ஆனால் மேலை நாடுகளில் மிகவும் பிரபலம் வாய்ந்து காணப்பட்டது. ரவிவர்மாவின் ஓவியத்திறமையைக் கண்ட ராமசாமி நாயுடு எண்ணெய் வண்ண ஓவியக்கலை நுட்பங்களை ரவிவர்மாவுக்குச் சொல்லிக் கொடுக்க விரும்பவில்லை. ஏனெனில் ரவிவர்மா தனக்குப் போட்டியாக உருவாகிவிடுவாரோ என்ற பயம் அவருக்கு இருந்தது.
அது ரவி வர்மாவை வெகுவாகப் பாதித்தது. ஆனால் மகாராஜா ஆயிலியம் திருநாளால் பல இத்தாலிய ஓவியர்களின் அறிமுகம் அவருக்குக்கிடைத்தது. துல்லியமான எண்ணெய் வண்ண நுட்பங்களைக் கற்க முடியாவிடினும் இத்தாலிய ஓவியர்களின் ஓவியங்களைப் பரிச்சயப்படுத்திக் கொண்டார். கண்பார்க்க, கை வரையும் கொடை இயற்கையாகவே ரவிவர்மாவுக்குக் கிடைத்திருந்தது. அக்கொடையை மனம் பார்க்க கைவரையும் திறனாக வளப்படுத்திக் கொண்டார்.
இந்நிலையில் ராமசாமி நாயுடுவின் மாணவராகிய ஆறுமுகம் பிள்ளையின் அறிமுகம் அவருக்குக்கிடைத்தது. ஆனால் எண்ணெய் வண்ண ஓவியக்கலையை ரவிவர்மாவுக்குக் கற்பிக்க தன் குருவின் அனுமதியைப் பெற அவர் தயங்கினார்.
ஆதலால் இரவு நேரங்களில் யாரும் அறியாமல் இரகசியமாக ரவிவர்மாவின் அரண்மனைக்குச் சென்று தமக்குத்தெரிந்த எண்ணெய்வர்ண ஓவியக்கலை நுட்பங்களைப் பகிர்ந்து கொண்டார். 1868 ஆம் ஆண்டு ரவிவர்மாவின் வாழ்வில் ஓர் திருப்புமுனையாக அமைந்தது. ஆயிலியம் திருநாள் மகாராஜாவைச் சந்திக்க வந்த ஐரோப்பிய ஓவியரான தியோடோர் ஜென்சனின் அறிமுகம் ரவிவர்மாவுக்குக் கிட்டியது.
ஆயிலியம் திருநாள் மகாராஜா, மற்றும் மகாராணியை ஜென்சன் ஓவியமாக வரைந்தார். அதேநேரம் ரவிவர்மாவும் அவர்களை வரைந்தார். அவரது ஓவியத்தின் முன்னே ஜென்சனின் ஓவியம் எடுபடவில்லை.
ஏற்கனவே ஜென்சனின் உத்திகளை ரவிவர்மா இலகுவில் புரிந்து கொண்டார். ரவிவர்மா தன்னை விஞ்சிவிடுவாரோ என்ற பயம் ஜென்சனுக்கும் இருந்தது. ஆதலால் எண்ணெய் வண்ண ஓவியக்கலையை ரவிவர்மாவுக்குக் கற்றுக்கொடுக்க அவர் விரும்பவில்லை. ஆனால் தான் வரையும் போது உடனிருந்து பார்க்க அனுமதித்தார். அதுவே ரவிவர்மாவுக்கு எண்ணெய்வர்ண ஓவியக்கலையின் நுட்பத்தை அறியப்போதுமாக இருந்தது.
எண்ணெய்வண்ணம் இந்தியாவுக்குப் புதியதாகையால் அதன் தயாரிப்பு பற்றியும் பெரிதாக எவரும் அறிந்திருக்கவில்லை. அதுவரை காலமும் இலைகள் மரப்பட்டைகள், மலர்கள், மண் ஆகியவற்றிலிருந்து சுதேசமுறையிலே வண்ணங்கள் தயார் செய்யப்பட்டன.
ரவிவர்மாவுக்குத் தேவையான எண்ணெய் வண்ணங்களை ராஜா ராஜவர்மாதானே தயார் செய்து கொடுத்தார்.
மூகாம்பிகை கோயிலிலே அமர்ந்து தியானம் செய்யும் வழக்கத்தையும் ரவிவர்மா உருவாக்கிக் கொண்டார். நீதிபதி ஒருவரின் திருவுருவத்தை வரைந்து அதற்கான கட்டணத்தையும் பெற்றுக்கொண்டார்.
அரச குடும்பத்தவர் ஒருவர் ஓவியக்கூலி பெறுவதில்லை என்ற மரபை உடைத்த பெருமையும் ரவிவர்மாவையே சாரும்.
இவர் மிகவும் வித்தியாசமானவர். விடியும் போதே தூரிகைகளைக் கையில் எடுத்துக்கொள்வார். பழம்பெரும் வித்துவான்களின் இசையை விரும்பிக் கேட்பார். கதகளி நாட்டியத்தை இரசிப்பார். அரச வம்சத்தவர்களாலும் ஏனையோர்களாலும் காலங்காலமாகப் பேணப்பட்ட ஓலைச் சுவடிகளை எடுத்துவைத்து ஆராய்வார். பழைய நாடக நூல்களை வாசிப்பார். கிட்டத்தட்ட ஒரு ராஜயோகியாக வாழ்ந்தார். அன்னை மூகாம்பிகையின் அருளால் ஓவியக்கலையில் பல புதிய பரிணாமங்களை வகுத்தார் என்றால் கூட மிகையாகாது.
ஆயிலியம் திருநாள் மகாராஜா தன்னை அற்புதமாக வரைந்ததற்காக ‘வீரஸ்ருங்கலா’ என்ற உயரிய விருதை ரவிவர்மாவுக்கு அளித்து கெளரவித்தார்.
உலகளாவிய ரீதியிலே பல ஓவியக் கண்காட்சிகளில் ரவிவர்மாவின் ஓவியங்கள் விருதுகளையும், பதக்கங்களையும், சான்றிதழ்களையும் பெற்றன. பிற்காலத்தில் அவர் ஹிந்தி, குஜராத்தி, ஆங்கிலம், ஜேர்மன் ஆகிய மொழிகளிலே பாண்டித்தியமும் பெற்றார். உலகின் மூலை முடுக்குகளிலிருந்தெல்லாம் அவருக்குப் பாராட்டுக் கடிதங்கள் வந்து குவிந்தன. கிளிமனூரிலேயே அவர் தங்கியிருந்து ஓவியங்களை வரைந்தார். அவருக்காகவே கிளிமனூரில் அஞ்சலகத்தைத் திறக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இவரது ஓவியங்கள் எனைய இந்திய ஓவியங்களுடன் ஒப்பிடும் போது தனித்துவமானவை. அவற்றில் முக்கிய கதா பாத்திரங்களாக பெண்களே இருந்தனர். திருவாங்கூர் அரண்மனைகளில் இருந்த பெண்கள், ஆடவர்கள் ஆகியோரை மாதிரியாக நிறுத்தி ஓவியங்களை வரைந்திருக்கிறார். அரண்மனையில் இருந்தோர் அணிந்திருந்த ஆடை அணிகலன்களையே தமது ஓவியக்கதாபாத்திரங்களுக்கும் அணிவித்து அழகு பார்த்தார் ரவிவர்மா. சுகுணாபாய் என்ற மகாராஷ்டிரப் பெண்மணி தான் ரவிவர்மா வரைந்த லக்ஷ்மி, சரஸ்வதி ஓவியங்களுக்கு மாதிரியாக இருந்தவர்.
19 ஆம் நூற்றாண்டின் கடைப்பகுதியிலே இந்தியா முழுவதும் சுற்றுப்பயணமொன்றை மேற்கொண்டார். அங்கு தான் கண்டவற்றை ஓவியங்களிலே பிரதிபலித்தார்.
அவரது ஓவியங்களிலே கட்டடங்கள், தரைத்தோற்றங்கள் திருவிழாக்கள் போன்றவற்றை பெரியளவில் காணமுடியாது. ஆனால் பல கற்பனை ஓவியங்களையும் அவர் வரைந்திருக்கிறார். அவருடைய ஓவியங்களில் பெண்களுக்கு முன்னுரிமையளிக்கப்பட்டிருந்தது. இந்திய இதிகாசங்கள், புராணங்கள் காவியங்களிலிருந்து கருப்பொருட்களை எடுத்து ஓவியங்களை வரைந்திருக்கிறார். இந்தியக் கருப்பொருளுக்கு அவர் கொடுத்த மேற்கத்தேய உயிரோட்டம் தான் அவரது ஓவியங்களை தனித்துவம் மிக்கனவாகக் காட்டியிருக்கிறது.
சாகுந்தலம், நளசரித்திரம், அரிச்சந்திரன் கதை, மகாபாரதம், பகீரதன் தவம், சத்தியவான் சாவித்திரி கதை, ராதா கிருஷ்ணா, கிருஷ்ணாயசோதா¡, லக்ஷ்மி, சரஸ்வதி என இவரது ஓவியங்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்.
ஷேக்ஸ்பியர் போன்றோரின் காவியங்களையே அறிந்திருந்த மேலை நாட்டவருக்கு இந்தியாவிலும் அழகிய காவியங்கள் உள்ளன என உணர்த்திய ரவிவர்மாவின் ஓவியங்கள், அத்தனை உயிரோட்டமானவை. பெண் தெய்வங்களை, சாதாரண மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையிலே அழகான சேலைகளையும் நகைகளையும் கொண்டு அலங்கரித்தவர் ரவிவர்மா என்றால் மிகையாகாது.
இந்தியாவில் மட்டுமன்றி உலகின் வெவ்வேறு நாடுகளின் அரச பரம்பரையினரை ரவிவர்மா ஓவியமாக வரைந்தார். அவர்களுடன் நல்லுறவைப் பேணினார். தனது ஓவியத்திறமைக்குக்கிடைத்த பணத்தைக் கொண்டு லிதோ கிராஃபிக் அச்சகமொன்றைத் தாபித்தார். இதன் மூலம் பணம் படைத்தவர்கள் மட்டுமன்றி சாதாரண மக்களுக்கும் அவரது ஓவியப் பிரதிகள் கிடைத்தன.
ஓவியத்துறையில் புதியதோர் கலாசாரமே உருவாகியது. ‘கலண்டர் ஓவியர்’ என ரவிவர்மாவை எள்ளி நகையாடியவர்களும் இருக்கிறார்கள். ‘ஓவிய மரபைச் சிதைக்கிறார்’ எனத் தூற்றியவர்களும் இருக்கிறார்கள். ஆனால் இன்று நாம் காணும் இந்துக் கடவுளர்களின் உருவப்படங்கள் உருவாகக் காரணமாக இருந்தவரே ஓவியர் ரவிவர்மா தான்.
மரபுக்கு விரோதமாகவும் அவர் சில ஓவியங்களைப் படைத்திருந்தார். மீசைக்காரப் பரமசிவன் தலையை விரித்தபடி இருக்கும் சரஸ்வதி, லக்ஷ்மி போன்ற ஓவியங்களைக் கூற முடியும். ஆனால் பிற்காலத்தில் அவையே பிரபலமாகி விட்டன.
இவர் ஓவியம் வரைவது கூட தனித்துவமானதாகத்தான் இருக்கும். விடியும் முன்னரே எழுந்து விடியும் வரை காத்திருந்து ஓவியம் வரைய ஆரம்பிப்பார். எப்போதும் இளந்தளிர் வெற்றிலைகளை வாசனைச் சரக்குகளுடன் சேர்த்து மென்றபடிதான் ஓவியம் வரைவார். ஓவியம் வரைவதற்கு முன் விசேடமாகத் தயாரிக்கப்பட்ட மூக்குப் பொடியில் ஒரு சிட்டிகையை இழுத்து அனுபவிப்பார். பின் ஏதோ ஒரு உலகிலே சஞ்சரித்தபடி கனவுகாணும் தன்மையுடன் வரையத் தொடங்குவார். அவரது கைகளும் தூரிகைகளும் திரையில் நர்த்தனமாகும்.
அக்காலத்தில் சமுதாயத்தின் வெவ்வேறு நிலைகளில் இருந்த மக்கள் கூட்டத்தினர் அவர் ஓவியம் வரைய ஓவியக்கூடத்திலே நின்று பார்த்துக் கொண்டிருப்பர். ஓவியம் வரைந்தபடியே அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் பதிலளிப்பார். யாராவது ஓவியம் தொடர்பாக ஆக்கபூர்வமான யோசனைகளை முன்வைத்தால் அவற்றை ஏற்று மாறுதல்களையும் செய்வார்.
அவருடைய ஓவியங்கள் சில ஆபாசமானவை என இந்துக்கள் சிலர் வழக்குத் தொடர்ந்திருந்தனர். தானே சுயமாக வழக்காடி வழக்கில் வெற்றியீட்டினார்.
1906 ஆம் ஆண்டு நீரிழிவு நோயால் வெகுவாகப் பாதிக்கப்பட்டார். அவ்வாண்டு ஒக்டோபர் 2 ஆம் திகதி இப்பூவுலகை நீங்கினார்.
அவர் ஏறத்தாழ 700 க்கும் மேற்பட்ட ஓவியங்களை வரைந்திருந்தார் எனக்குறிப்பிடப்படு கிறது. சில மங்கி, அழிந்துவிட்டன. சில பல இலட்சம் ரூபாவுக்கு அண்மையில் ஏலம் போயின.
அவரது மரணத்தின் பின்னர், பல ஓவியங்கள் திருவனந்த புரம் ஓவியக்கூடத்திலே வைக்கப்பட்டிருந்தன. அவற்றுள் 75 ஓவியங்கள் 1940 இல் கிளிமனூர் அரண்மனை ஓவியக்கூடத்தில் வைப்பதற்காகக் கொண்டு செல்லப்பட்டன.
அவற்றுள் சில ஓவியங்களைக் காணவில்லையென அண்மையில் ரவிவர்மாவின் பேத்தி கேரள நீதிமன்றில் வழக்குத் தொடுத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. யாதாயினும் யாவரும் அக்கறையுடனும் விழிப்புடனும் இருந்திருந்தால் ரவிவர்மாவின் தொலைந்து போன ஓவியங்கள் உட்பட இந்தியாவின் அரிய பல பொக்கிஷங்கள் காப்பாற்றப்பட்டிருக் கும் என்பது தெளிவு.
இந்த உயிரோட்டமான ஓவியங்களில் ரவிவர்மாவும் அவரது பாத்திரங்களும் மட்டும் வாழவில்லை. எமது புராண இதிகாசங்களின் கதாபாத்திரங்களுடன், ரவிவர்மா காலத்து ஆடையணிகளும் சேர்ந்தே வாழ்கின்றன என்பது கண்கூடு. அந்த அற்புதமான கலைஞனின் கைகளும் தூரிகையும் இணைந்த நர்த்தனத்தில் உருவான இவ்வுயிர் வண்ணங்கள் காலத்தால் அழியாமல் நிலைத்து நிற்குமென்பதில் எதுவித ஐயமுமில்லை.

No comments:

Post a Comment