Tuesday, January 12, 2010

மனிதம் இருந்தால் மட்டுமே மனதை ஒருமைப்படுத்த முடியும்

சுவாமி விவேகானந்தரின் 147 ஆவது ஜனன தினம் இன்று

நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னைப் பலவீனன் என நினைத்தால் பலவீனனாகவே ஆகிவிடுவாய். நீ உன்னை வலி மையுடையவன் என நினைத்தால் வலிமை படைத்தவனாகவே ஆகிவிடுவாய்’ என ஒரு வீரத்துறவி, அறியாமை இருளில் மூழ்கிக் கிடந்த பாரதத்தைத் தட்டியெழுப்பினார்.
மேலைத்தேய நாடுகளின் ஆதிக்கம் பல வழிகளிலும் மேலோங்கியிருந்த ஒரு காலப் பகுதியில், அமெரிக்காவின் சிக்காக்கோ நகரில், பல்லாயிரக் கணக்கான பார்வையாளர்களின் மத்தியில் ‘அமெரிக்க நாட்டுச் சகோதர சகோதரிகளே!’ என விளித்து, அவர்களனைவரையும் தம்பக்கமிழுத்து, இந்து சமயக் கொள்கைகளும் தத்துவங்களும் முழு உலகுக்குமே பரவுவதற்கு அதே துறவியே வழிவகுத்தார்.
வங்கதேசம் பெற்றெடுத்த முத்துக்களுள் ஒன்றாகத் திகழும் சுவாமி விவேகானந்தரே அந்த வீரத்துறவியாவார்.
தன்னுடைய போதனை, சிந் தனை, செயல் யாவற்றையுமே இந்து சமயமென்ற குறுகிய வட் டத்துக்குள் அடக்காமல் இந்து, கிறிஸ்தவம், இஸ்லாம், பெளத் தம் என்று எம்மதத்தைத் தழுவி யோரும் ஏற்றுப் பின்பற்றக்கூடிய வகையில், மனிதப் பிறவியெடுத்த எவருக்கும் பொருந்தக் கூடியதாக அமைந்திருந்தார்.
அவரது சொல்லும் செயலும் மனித குலத்தின் மேம்பாட் டையே குறிக்கோளாகக் கொண் டிருந்தன. தான், தனது இனம், தனது மொழி, தனது நாடு என்ற குறுகிய மனப்பாங்கை விடுத்து உலகம் முழுவதிலுமுள்ள மக்கள் அறியாமை இருளிலிருந்து மீண்டு உய்ய வேண்டுமென்ற நோக் கோடு தொழிற்பட்டார்.
கற்றோரால் மட்டுமே அறியக் கூடியதாகவும் பயன்பெறக் கூடிய தாகவுமிருந்த இந்துசமயக் கொள்கைகளையும் தத்துவங்க ளையும் பாமரரும் உணர்ந்து விளங்கிக் கொள்ளக்கூடிய வகையில் எளிமைப்படுத்தி விளக்கிய பெருமையும் விவேகானந்தரையே சாரும்.
கல்கத்தா நகரில் மிகவும் பிர பலமான சட்டத்தரணியாகவிருந்த விசுவநாத தத்தருக்கும் அவரது மனைவியான புவனேஸ்வரி தேவிக்கும் மகனாக 1863ஆம் ஆண்டு ஜனவரி 12 ஆம் திகதி குழந்தையொன்று அவதரித்தது. அக்குழந்தைக்கு ‘நரேந்திரன்’ எனப் பெயரிட்டு வளர்த்தனர்.
கங்கை ஆறு பெருக்கெடுத் தோடும் புனித நகரான கல்கத்தா விலே, காளி அன்னையை வழிப டும் ஒரு குடும்பத்திலே அவதரி த்த நரேந்திரன் மிகவும் துடிதுடிப் பான சிறுவனாக வளர்ந்தான்.
சிறுவனுக்கேயுரிய குறும்புத் தனங்கள் அவனிடம் சற்று அதிக மாகவே காணப்பட்ட போதும் இறைநாமத்தை உச்சாடனம் செய்து தியானத்தில் ஈடுபடுவதில் இயற்கையாகவே அவனுக்கு அதிக ஆர்வம் காணப்பட்டது. அனைவரும் அவனை ‘நரேன்’ எனச் செல்லமாக அழைப்பர்.
நரேன் கல்வி கற்கச் செல்லவில் லையெனினும் கல்வி அவனைத் தேடி வந்து அவனைச் சரணாகதி யடைந்ததென்றே கூற முடியும். புத்தகத்தை ஒருமுறை புரட்டிப் பார்த்தாலே அதிலுள்ள விடயங்களை மனதில் பதிக்கும் ஆற்றல் அவனுக்கு இருந்தது.
ஆரம்பகாலக் கல்வியை வீட்டி லேயே கற்று பின்னர் கல்கத்தா வில் பிரபலமான கல்லூரியொன் றில் கலைமாணிப் பட்டம் பெற் றான். நரேனிடம் இயற்கையா கவே மனித நேயம் குடிகொண்டி ருந்ததை அவனது வாழ்வில் நட ந்த சம்பவங்கள் சித்தரிக்கின்றன.
இளம் வயதிலேயே ஆன்மீகத்தில் அதிக நாட்டமிருந்தமையால், கடவுளை நேரில் காண வேண்டுமென்ற பேரார்வம் அவனிடம் இருந்தது.
பல ஞானிகளையும் மேதைக ளையும் அறிஞர்களையும் வினவி னான். அவனது கேள்விக்கு எவ ருமே விடையளிக்கவில்லை. கட வுளைக் காண முடியாத மதம் தனக்குத் தேவையில்லையென நரேன் எண்ணியவேளை, இராம கிருஷ்ண பரமஹம்சரைச் சந்தித் தான். ‘கடவுளைக் காண முடி யுமா?’ என்ற அவனது கேள்வி க்கும் விடை கிடைத்தது. ஐயம் தெளிந்தான்.
மீண்டும் மீண்டும் காளி அன்னையின் அருட் புனலி னால் ஆட்கொள்ளப்பட்டான். நரேந்திரனாகப் பரமஹம்சரிடம் வந்தவன் விவேகானந்தராகப் பரி ணமித்தான். ராமகிருஷ்ண பரமஹம்சரால் நேரடியாகப் பயிற்றுவிக்கப்பட்ட இளைஞர்க ளுள் நரேனில் ஞான ஒளி அதிக மாகவே ஒளிர்ந்தது. ராமகிருஷ் ணர் ஒரு தடவை, ‘நரேன்! என்னிடம் உள்ளதையெல்லாம் உன்னிடம் கொடுத்துவிட்டு ஏழையாகிவிட்டேன்’ என்று உரைத்திருக்கின்றார்.
1886ம் ஆண்டு ஸ்ரீராமகிருஷ் ணர், அன்னை காளியுடன் இரண் டறக் கலந்த பின்னர் விவேகானந்தரின் பொறுப்புக்கள் அதிகரித்தன.
ஒரு பரிவிராஜக சந்நியாசியாக இமயம் முதல் குமரிவரை இந் தியா முழுவதும் பயணித்தார். பல யோகிகளையும் சாதுக்களை யும் சந்தித்தார். அவர்களது அரு ளையும் புதுப்புது அனுபவங்களை யும் பெற்றார். ஆன்மீகத்தால் மேன் மேலும் மெருகூட்டப்பட்டார்.
1893இல் அமெரிக்காவின் சிக் காகோ நகரில் நடைபெற்ற மா நாட்டில் உரையாற்றி முழு உல கையுமே தன் பக்கம் திருப்பினார்.
அவரது கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட பலரும் சீடர்களாக மாறி, அவர் காட்டிய பாதையில் நடை பயின்றனர். சுவாமிஜியின் ஆன்மீகப் பணியும் ஆரம்பித்தது. துறவிகள் என்றால் தவம் செய்பவர்களென்ற எண்ணத்தை மாற்றியமைத்து மடங்களைத் தாபித்து படித்த இளைஞர்களை மடத்துறவிகளாக்கி மக்களிடையே கலக்கச் செய்தார்.
அதன் மூலம் அவர்களது அறிவு, அன்பு, ஆன்மிக அனுபவம் ஆகியன யாவும் சாதாரண மக்களை எளிதாகச் சென்றடைந்தன. சுவாமிஜியின் மேலைத் தேயச்சீடர்களால் அவரது பணிகளை முழு உலகுமே அறியத்தலைப்பட்டது.
நாடொன்றின் எதிர்காலம் இளைஞர்களின் கைகளிலே தங்கியிருப்பதை உணர்ந்து இளைஞர்களுக்கு அறைகூவல் விடுத்ததோடல்லாமல் அவர்களுக்கு முன்னோடியாகவும் திகழ்ந்தார்.
இளைஞர்களே நாட்டின் ஜீவ நாடியெனவும் உற்சாகமும் துடிப்பும் கொண்ட இருநூறு ஆண்களையும் பெண்களையும் தன்னிடம் ஒப்படைத்தால், நாட்டை வானோர்கள் வதியும் தேசமாக, இன்பப் பூஞ்சோலையாக மாற்றமுடியுமென்றார். 1902, ஜுலை மாதம் தனது 39ஆவது வயதில் மகா சமாதியடைந்தார்.
இன்றைய இளைஞர்கள் மத்தியில் ஆன்மிகம் எனப்படுவது வேடிக்கைக்கும் நகைச்சுவைக்குமுரிய விடயமாகக் காணப்படுகிறது. ஆன்மீகத்தால் ஈர்க்கப்படும் இளைஞர்களின் எண்ணிக்கை மிகக் குறைவானது.
ஆன்மிகம் தொடர்பான புரிதலின்மையே இந்நிலைக்கான அடிப்படைக் காரணியாகும். ஆன்மிகமானது எந்தவொரு எல்லைக்குள்ளும் உள்ளடக்கப்படாதது. மதங்கள் யாவற்றையும் கடந்து பரம்பொருளை அடைவதற்கான மார்க்கத்தை ஏற்படுத்தும் நிலையே ஆன்மிகம் ஆகும்.
அதற்கு ஆதியோ அந்தமோ அல்லது அதை அடக்கி ஆட்சி செய்ய மனிதரோ இல்லை. ஆன்மிகம் தொடர்பான சரியான வழிகாட்டல்களும் கருத்துக்களும் கிடைக்காததால் தான் இளைஞர்கள் ஆன்மிகத்தை நாடுவதில்லையோ என்றும் எண்ணத்தோன்றுகிறது.
தானங்களுள் உயர்ந்தது ஆத்மதானம். அதை அடுத்தது எழுத்தறிவிக்கும் வித்தியாதானம். அதை அடுத்தது உயிரைக் காப்பாற்றும் ஜீவதானம். இறுதியானதே அன்னதானம் என்கிறார் விவேகானந்தர்.

சமயம் என்பது ஒரு சமுதாய ஏற்பாடு மட்டுமே. உண்மை ஒன்றாக இருக்கின்ற போதிலும் மக்கள் தத்தமது மனப்பக்குவ நிலைகளுக்கேற்ப அதனைப் பலவாறாகப் பார்க்கின்றனர். இவ்வுண்மை எம்மில் பலருக்கு விளங்குவதில்லை.
காலையில் உதிக்கும் சூரியனின் கதிர்கள் எங்கும் வியாபித்திருப்பது போல ஆன்மிகமும் எங்கும், எல்லா உயிர்களிடத்திலும் வியாபித்துக் காணப்படுகின்றது. ஆனால் எல்லோரும் அதனை வெளிப்படுத்துவதில்லை. ஆன்மிகத்தில் ஈடுபடுதல் என்பது கோயிலுக்குச் செல்வதோ அல்லது குறிப்பிட்ட குரு ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவரிடம் பயில்வதோ அல்லது புத்தகங்கள் வாசிப்பதோ அல்ல.
உண்மையில் ஆன்மிகம் மனம் சார்ந்தது. எந்த மனிதன் மனிதத் தன்மையை அதிகமாகக் கொண்டிருக்கின்றானோ அவனே உண்மையான ஆன்மிகவாதியாகக் கருதப்படுகின்றான். அதையே விவேகானந்தரும் சமய சமரசத்தின் அடிநாதம் மனித நேயம் என்று கூறுகிறார்.
இன்று மத பேதங்களாலும் சுயநலத்தாலும் மனித நேயம் சிதைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. மனிதம் இருந்தால் மட்டுமே மனதை ஒரு நிலைப்படுத்த முடியும். குடும்பத்திலுள்ளோரை ஒன்று சேர்ப்பதற்காகவே வீடுகளில் சுவாமியறை இருப்பதாகவும் அதேபோல ஊர் மக்களை ஒன்றுமையுடன் வாழ வைக்கவே கோயில்கள் இருப்பதாகவும் மகாகவி பாரதியார் கூறினார்.
‘ஒற்றுமையாக இன்பதுன்பங்களைப் பகிர்ந்து வாழுமிடமே கோவில்’ என்ற பாரதியாரின் கூற்று, மனிதத்தைக் கடைப்பிடித்து மக்களை ஒன்றிணைக்குமிடமே கோவிலென்ற உண்மையை எடுத்துரைக்கின்றது.
சுவாமி விவேகானந்தர் ‘என் அமெரிக்கச் சகோதர சகோதரிகளே!’ என்று ஆரம்பித்து மனிதத்தின் வெளிப்பாடாகத் தன் சொற்பொழிவை ஆற்றினார். அந்த இயல்பினாலேயே மிகவும் இளைய வயதில்கூட அவரால் செயற்கரிய செயல்களைச் செய்ய முடிந்தது.
ஆன்மிகத்தின் ஆணிவேர் மனிதமும் அன்பும் மட்டுமே என்ற விவேகானந்தரின் கொள்கை தான் இன்று இராமகிருஷ்ண மடங்களும், விவேகானந்த கேந்திரங்களும், சாரதா சேவாச்சிரமங்களும் உலகெங்கும் வியாபித்து மக்களுக்கு சேவை புரியக் காரணமாகியது.
39 வயதிற்குள், ஒரு இளைஞனால், தன்னம்பிக்கையையும் தன் ஆன்ம பலத்தையும் இறை நம்பிக்கையையும் மட்டுமே துணையாகக் கொண்டு, மூடநம்பிக்கைகளாலும் சாதி வேறுபாடுகளாலும் கட்டுண்டு உறங்கிக் கிடந்த பாரதத்தைத் தட்டியெழுப்பி இளைஞர்களை ஒன்றிணைக்க முடிந்ததென்பது, இளைஞர்களின் சக்தியை எடுத்தியம்புகிறது.
அந்த இளைஞன் சாதித்ததில் 10 சத வீதத்தையேனும் எம் ஒவ்வொருவராலும் சாதிக்க முடிந்தால் அதைவிடப் பெருவெற்றி வேறொன்றுமில்லை. இளைஞர்களாகிய நாமே இந்த நாட்டின் முதுகெலும்பு. எம்மால் முடியாதது எதுவுமில்ல.
ஆனால் எம்மில் பலர், சோர்ந்து போய், செயலற்று, அறியாமை நிலையாகிய தாமத குணத்தில் ஆழ்ந்திருக்கிறோம். இவ்வாறு விரயமாகிக் கொண்டிருக்கின்ற வாழ்க்கை அர்த்தமற்றதாக, சுவையும் உயிர்ப்புமற்றதாகச் செல்ல இனியும் அனுமதிப்பானேன்? இந்த அறியாமை இருளிலிருந்து விழித்தெழுவோம்! புதியதோர் உலகம் சமைப்போம்!
அதன் முதற்படியாக, உன்னதமான இலட்சியம் அல்லது குறிக்கோள் ஒன்றை வகுத்துக்கொள்வோம். அதையே கனவுகண்டு, அதனையொட்டியே வாழ்ந்து வர முயற்சிப்போம். இதுவே வெற்றிக்கான வழியாகும்.
நிறைந்த விடா முயற்சியையும் பெரும் மன உறுதியையும் கொண்டு கடுமையாய் உழைப் போம். எம் எவரையும் இறை வன் வீணாகப் படைக்கவில்லை. ஒவ்வொருவருடைய வாழ்க் கையும் அர்த்தமுள்ளதாக அமைய வேண்டுமென்பதே இறைவனின் விருப்பமாகும்.
அதற்குரிய ஆற்ற லையும் அவனே வழங்கியி ருக்கின்றான். எம் ஒவ்வொ ருவருள்ளும் புதைந்திருக்கும் ஆற்றல் என்னவென்பதை நாம் முதலில் கண்டுபிடிக்க வேண்டும். எம்மை என்றுமே தாழ்த்திக்கொள்ளக் கூடாது.
ஒரு அடி பின்வாங்குவதால் எந்தவொரு துரதிஷ்டத்தையும் தவிர்த்துக்கொள்ள முடியாது. உல கிலுள்ள கடவுளர்களை எல்லாம் கூவியழைத்தால் கூட துன்பம் விலகிவிடப் போவதில்லை. நாம் எதிர்த்து நின்றால் அது தானே விலகிவிடும்.
உலக இன்பங்களில் உழன்று, மயங்கி, வெறும் கோழைகளாக மாறாமல் துன்பங்களை எதிர்த்து நிற்போம். பிறரின் உதவியை எதிர்பாராது இறைவனை நம்பி நேர் வழியில் நடப்போம். தனி மரம் என்றுமே தோப்பாவதி ல்லை. நாமொவ்வொருவரும் சிதறுண்டு நிற்கும் எம் எண்ண ங்கள் ஒருமைப்பட, நேரத்தை நன்றே முகாமைப்படுத்தி, காலத்தின் தேவையை உணர்ந்து எம் திறமையை அர்ப்பணிக்க முன்வரவேண்டும்.
உயிரே போவதானாலும் கூட எம்பணி நேர்மையானதாக அமை யட்டும்! எம்மிடம் உள்ளதைப் பிறருக்கும் வழங்கும் சீரிய பணியை மேற்கொள்வோம். தோழர்களே, முயன்றுதான் பார்ப்போமே! விவேகானந்தர், இப்பூவுலகிலே ஜனித்த இன்றைய நாள் எங்கள் வாழ்விலும் ஒரு திருப்புமுனை யாக அமையட்டும்!

No comments:

Post a Comment