Tuesday, January 5, 2010

' முகநூல்' மாய உலகை உருவாக்கி விவசாயத்தில் ஈடுபட வைக்கிறது

அண்மையில் தலைநகரில் நடந்த திருமண வைபவ மொன்றிற்குச் சென்றிருந்த போது, ‘நீ எவ்வளவு அறுவடை செய்தாய்?’, ‘நீ எவ்வளவு சம்பாதித்தாய்?’, ‘தற்போது விவசாயத்தில் எந்த மட்டத்திலுள்ளாய்?’ போன்ற சம்பாஷணைகளை இளைஞர்கள் மத்தியில் அவதானிக்கக்கூடியதாக இருந்தது.
இளைஞர்கள் தலைநகரில் விவசாயம் செய்கிறார்களோ? என்ற சந்தேகத்துடன் வியந்தவர்கள் பலர். அந்த இளைஞர்கள் யாவரும் உண்மையிலேயே மண்ணைக் கொத்தி பண்படுத்திப் பயிரிட்டு அறுவடையை மேற்கொள்பவர்களல்லர்.
இன்று மிகவும் பிரபல்யமாகக் காணப்படும் இணையத் தளமொன்றிலுள்ள விளையாட்டைப் பற்றிய சம்பாஷணையே அதுவாகும். கணினி மற்றும் இணைய வசதியுடைய சகலரும் எந்தவித பேதமுமின்றி இத்தகைய விளையாட்டுக்களில் ஈடுபடுவது அதிகரித்து வருகின்றது.
இன்று இணையமானது சமூக வலைப்பின்னல் எனப்படும் புதிய பரிணாமத்தையும் அடைந்துள்ளது. இணையம் வழங்கும் வசதிகள் பல இன்று சமூக மயப்படுத்தப்பட்டுள்ளன.
இதற்கு உதாரணமாக மின் கற்றலெனப் பட்டிருந்த கல்வி முறையின் போக்கு இன்று சமூகக் கற்றல் முறைமையாக மாற்றப்பட்டமையைக் குறிப்பிடலாம்.
ஒரு தனிப்பட்ட நபரைப் பற்றி அறிய விரும்பினால் அவர் வாழும் கிராமத்தில் அல்லது அவருடைய வீதியில் வாழ்பவர் அல்லது அவரது அயலவர் அல்லது அந்நபரின் நெருங்கிய உறவினர்களிடமோ தொடர்புகொண்டால் தவிர அவரைப் பற்றிய தகவல்களை அறிவது மிகவும் கடினமாயிருந்த காலத்தையெல்லாம் நாம் கடந்து விட்டோம்.
தபால் தொலைத் தொடர்பு அறிமுகமானதன் பின்னர் கடிதத் தொடர்புகள் மூலமும் தொலைபேசி, தொலைநகல் அறிமுகமானதன் பின் கடிதத் தொடர்பைவிடத் துரிதமாகவும் தகவல்களைப் பெற்றனர். இணையத்தின் அறிமுகத்துடன், மின்னஞ்சல் மூலம் ஓரிரு செக்கன்களிலேயே தகவல்கள் பரிமாற்றப்பட்டன.
இவற்றை எல்லாம் தாண்டித் தகவல் பரிமாற்றத்துக்கான மிகவும் இலகுவான, எளிமையான முறையாக சமூக வலைப்பின்னல் முறைமை விளங்குகிறது. இம்முறைமை உலகின் எந்த மூலையிலிருந்தாலும் ஒருவரைப் பற்றி ஒருவர் அறிவதற்கும் தொடர்பாடலை மேற்கொள்வதற்கும் உதவுகிறது.
இந்த சமூக வலைப்பின்னல் முறைமையை அடிப்படையாகக் கொண்டு www.hi5.com,www.ringo.com,www.facebook.com,www.twitter.comபோன்ற பல இணையத்தளங்கள் செயற்படுகின்றன. புதிய பல இணையத் தளங்கள் அறிமுகமாகிய வண்ண மிருக்கின்றன.
கடந்த வருடம் உலகளாவிய ரீதியில் ஏறத்தாழ 350 மில்லியன் பாவனையா ளர்களையுடைய தளமாக, சமூக வலைப்பின்னல் தளங்களில் முன்னணியில் திகழ்வது www.facebook.com இணையத்தளமாகும். இலகு தமிழில் ‘முகநூல்’ என அழைப்பர். இது உலகம் முழுவநிம் ஏறத்தாழ இரண்டு சந்ததி யினரைத் தன் வசப்படுத்தி வைத்திருக் கும் இணையத் தளமாகும்.
2004 ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஹவார்ட் பல்கலைக்கழக மாணவனான மார்க் சக்கர்பேக் என்ற இளைஞன் பல்கலைக்கழக மாணவர்களிடையே தொடர்பை ஏற்படுத்து முகமாக இணையத் தளமொன்றைப் பொழுது போக்காக ஆரம்பித்தார். காலப்போக்கில் ஏனைய மாணவர்களும் பங்குபெறும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுப் பின்னர் 2006 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் முதல் 13 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் பங்குகொள்ளக்கூடிய இணையத்தளமாக மாறியது.
இவ்விணையத்தளம், செய்திகள் புகைப்பட மற்றும் வீடியோத் தொகுப்புகள் குறிப்புகள், இணைப்புகள், அவை யாவற்றிற்குமான கருத்துக்கள், உடனடி அரட்டை, பல்வேறு விளையாட்டுக்கள், கேள்வி பதில்கள், எதிர்வு கூறல்களென எண்ணிலடங்காத சேவைகளைத் தன் பாவனையாளர்களுக்கு வழங்கி வருகிறது.
இச்சேவைகள் ஒருவருடனொருவர் தொடர்புகொள்வதை அடிப்படை நோக்கமாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள போதிலும் பாவனையாளர்களை ஒருமயமான கற்பனை உலகிற்குள் அழைத்துச் செல்கின்றன என்பதைப் பலர் உணர்வதில்லை.
இவ்விணையத்தளத்தில் தமது தகவல்களையும் கடவுச் சொல்லையும் பதிந்து எவரும் அங்கத்தவராகலாம். அங்கத்துவம் முற்றிலும் இலவசமானது. அங்கத்தவர்கள் ஒவ்வொருவருக்குமுரிய தனித்துவமான இணையப் பக்கங்கள் உருவாக்கப்படும். அங்கத்தவர்கள் தமது பெயர், மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி இலக்கம் முதல் தமது பொழுது போக்குகள், தமக்கு விருப்பமான புத்தகங்கள் வரை தம்மைப் பற்றிய சகல தகவல்களையும் இணைக்கலாம்.
குற்றங்களைத் தவிர்ப்பதற்காக மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைபேசி இலக்கம் போன்றவை பார்வைக்குரியனவாக மட்டுமே காணப்படும்.
எமக்குத் தெரிந்த நபர்களையும் தெரியாதவர்களையும் நண்பர்களாக இணைக்க முடியும். ஒருவரை நண்பராக இணைக்கும்படி ஏனைய நண்பர்களுக்கும் பிரேரிக்க முடியும்.
அங்கத்தவர்கள், தமது அடையாளப் புகைப்படங்களையும் ஒளிப்படங்கள் மற்றும் புகைப்படங்களின் தொகுப் புக்களையும் பதிவேற்றக்கூடிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அத்துடன் அப்புகைப் படங்களுக்கான தலைப்புக்களையும் விபரங்களையும் எழுத முடியும்.
புகைப்படத்தில் உள்ளவர்களைக் குறிப்பிட முடியும். அதேசமயம் மற்றவர்களால் குறியிடப்பட்ட தமது புகைப்படங்களையும் பார்வையிட முடியும். புகைப்படம் தொடர்பான தமது கருத்துக்களை நண்பர்களும் எழுதுவதற்கும் இடம ளிக்கப்பட்டுள்து.
நண்பர்கள் எவராவது நேரிணையத்தில் இருந்தால் அவர்களுடன் நேரடியாக எழுத்து மூலம் உரையாட முடியும். ஒவ்வொருவருடைய முகப்புப் பக்கத்திலும் நேரடிச் செய்தி இணைப்புக்கான தேர்வு காணப்படும். இதன் மூலம் ஏனைய நண்பர்கள் என்ன செய்கின்றார்கள் என்பதையும் உடனுக்குடன் அறியலாம்.


ஒவ்வொருவருக்கும் தனித்துவமான சுவரொன்று காணப்படும். அதில் உரிமையாளரோ அல்லது அவரது நண்பர்களோ எழுத முடியும். புகைப்படங்கள் உட்படப் பல விடயங்களை இணைக்க முடியும். தொடர்பாடலுக்குரிய நவீன வழியாக இது தென்படுகிறது.
இவை தவிர ஒவ்வொரு அங்கத்தவரும் குறித்த கணத்தில் தமது நிலையென்ன என்பதைத் தெரிவிக்கலாம். அதனை ஏனைய நண்பர்களும் பார்க்கலாம்.
தான் என்ன செய்கிறேன். அல்லது தனது நிலையென்ன என்பதை மற்றவர்களுக்குத் தெரிவிக்கும் ஒரு செயற்பாடாகவே இது காணப்படுகிறது.
எந்த விடயம் தொடர்பான குறிப் புக்களையும் படத்துடன் இணைக்க முடியும். அக்குறிப்புகளில், தேவையான வர்களைக் குறியிட முடியும். நண் பர்களுடைய பக்கங்களைப் பார்வையிடலாம். அவர்களுடைய நண்பர்களில் யாரையாவது எமது நண்பர்களாக இணைக்க விரும்பினால் விருப்பத்தை அவர்களிடம் தெரிவிக்கலாம்.
அவர்களும் விரும்பினால், இரு தரப்பினரும் நண்பர்களாகலாம். முகநூலில் நண்பர்களை இணைத்தலென்பது இரு தரப்பும் விரும்பினால் மட்டுமே நடைபெறும் ஒரு செயற்பாடாகும்.
நண்பர்களின் பக்கங்களில் பிடித்த விடயங்களை எமது பக்கத்துக்கு அஞ்சலிடலாம். முகநூலின் எந்தவொரு பகுதியையும் நாம் விரும்பினால் ‘நான் இதை விரும்புகிறேன்’ எனத் தெரிவிக்கலாம். அதேநேரம் அப்பகுதி தொடர்பான எமது கருத்துக்களை எழுதலாம். மற்றவர்கள் எழுதிய கருத்துக்களுக்கும் பதிலளிக்கலாம்.
குழுக்களை உருவாக்குவதன் மூலம் ஒத்த ஆர்வமுடையவர்கள் ஒன்றிணையலாம். தமக்கிடையே கருத்துக்கள், விமர்சனங்கள், புகைப்படங்கள் மற்றும் ஒளிப்படங்களைப் பரிமாறலாம்.
வினா விடைப் போட்டிகள், விளையாட்டுக்கள், வாழ்த்து மடல்கள், பரிசுகள் அனுப்புதல் போன்ற பல செயற்பாடுகளை பிரயோகம் எனும் பகுதியினூடு மேற்கொள்ளலாம். அங்கத்தவர்களால் பாதிக்கப்பட்ட இத்தகைய விடயங்களையும் இணை க்கலாம்.
நவநாகரிக மோகத்தினால் விட்டுச் செல்லப்பட்ட பல விடயங்களை, மாய உலகொன்றைத் தோற்றுவித்து, விளையாட்டுக்களின் மூலம் கண்முன்னே கொண்டு வருவதில் முகநூல் முன்னணியில் திகழ்கிறது. அறிவை விருத்தி செய்யக்கூடிய பல விளையாட்டுக்களையும் முகநூல் கொண்டுள்ளதென்பது மறுக்க முடியாத உண்மையாகும். வெகு தொலைவிலிருந்தால் கூட அவர்களுடன் இணைந்து போட்டியாக விளையாடக் கூடிய வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
உலகளாவிய ரீதியில் பெற்றோர் முதல் பிள்ளைகள் வரை குடும்பம் குடும்பமாக விளையாடும் விளை யாட்டுக்களாக விவசாயம் தொடர்பான விளையாட்டுக்கள் காணப்படுகின்றன.
இவ்விளையாட்டுக்கள் மிகவும் சுவாரசியமான விதத்தில் உருவாக்கப் பட்டுள்ளன என்பதை அவற்றை விளையாடும் எவராலும் மறுக்க முடியாது. இவ்விளையாட்டில் சேர்ந்தவுடன், ஒவ்வொருவருக்கும் சிறிதளவு சில்லறைகளும் ஒரு மாய உலகில் சிறிய நிலமொன்றும் வழங்கப்படும். விவசாயமொன்றை மேற்கொள்வதற்கான செயற்பாடுகள் பொத்தான்களின் வடிவில் காணப்படும்.
உரியதை அழுத்துவதன் மூலம் நிலத்தைப் பண்படுத்தலாம். விதைக்கலாம், நீர் பாய்ச்சலாம். அத்துமீறி உள்நுழையும் விலங்குகளைத் துரத்தலாம். நிலக்கு வேலியிடலாம். அறுவடை செய்யலாம். விளைச்சலை விற்று வருமானமீட்டலாம். ஈட்டிய வருமானத்தைக் கொண்டு நிலத்தை மேலும் விஸ்தரிக்கலாம்.
வசதிகளை மேம்படுத்தலாம். இவ்வாறான பல செயற்பாடுகளைச் செய்யலாம். இவ்விளையாட்டில் பல படிநிலைகள் காணப்படும். குறித்த படிநிலையின் இலக்கையடைந்தால் அடுத்த படிநிலைக்கு முன்னேறலாம்.
ஒவ்வொரு பயிரையும் விதைத்த பின் அறுவடை செய்வதற்கான நேரம் குறிக்கப்பட்டிருக்கும். குறித்த நேரத்தில் அறுவடை செய்யப்படாவின் அயலிலுள்ள நண்பர்கள் விளைச்சலைத் திருடிவிடுவர். எமது நிலத்துக்கு அயலில் உள்ள நிலங்களில் விவசாயத்தை மேற்கொள்ளுமாறு நண்பர்களுக்கும் அழைப்பை விடுக்கலாம். அவர்கள் அவ்வழைப்பை ஏற்றுக் கொண்டால், எமது புள்ளிகள் அதிகரிக்கப்படும்.
இவை மட்டுமன்றி இன்னும் எண்ணிலடங்காத செயற் பாடுகளை மேற்கொள்ள முடியும். தமது விவசாய நிலங்களை அழகுபடுத்தலாம். புகைப்படங்கள் எடுத்து நண்பர்களுடன் பகிரலாம். இதுபோன்ற பல விளையாட்டுக்கள் இன்று முகநூல் பாவனையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமாகக் காணப்படுகின்றன.
இந்த மாய உலகில், செல்லப் பிராணிகளைத் தத்தெடுத்து உணவூட்டி வளர்க்கும் விளையாட்டுக்களும், மிருகக் காட்சிச் சாலைகளை உருவாக்கிப் பராமரிக்கும் விளையாட்டுக்களும் இன்னும் பல புதுவித விளையாட்டுக்களும் காணப்படுகின்றன.
இணையக் குற்றங்கள் அதிகரித்துள்ள இன்றைய காலகட்டத்தில் அக்குற்றங்களை இயன்ற வரையில் தவிர்க்கும் வகையில் ஒவ்வொரு செயற்பாட்டையும் அங்கத்தவர்களின் விருப்பத்துக்கேற்ப கட்டுப்படுத்தக்கூடிய வகையிலேயே முகநூல் அமைக் கப்பட்டுள்ளது.
ஆனால் பல அங்கத்தவர்கள் அவற்றைப் புரிந்து செயற்படுவதில்லை. இதன் காரணமாகப் பல அசம்பாவிதங்கள் நடைபெறுவதும் தவிர்க்க முடியாததாகிவிடுகிறது.
ஏறத்தாழ ஐந்து வருடங்களாக, பல மில்லியன் பாவனையாளர்களுடன் ஒரு சமூக வலைப்பின்னல் தளம் நிலைத்து நிற்பதென்பது மிகப் பெரிய விடயம். செக்கனுக்கு செக்கன் அபிவிருத்தியடைந்து வரும் கணினித் தொழில்நுட்பத்திற்கு ஈடுகொடுப்பதே இவ்விணையத்தளத்தின் வெற்றிக்கு மிகப் பிரதான காரணியாக அமைகிறது.
அவசர உலகிலே, அதிகரித்துவரும் நேரப் பற்றாக்குறைக்கு மத்தியில் உறவுகளுடனான தொடர்பைச் சீராகப் பேணுதலென்பது சற்றுக் கடினமான விடயமேயாகும். இத்தகைய சந்தர்ப்பத்தில் உறவுகளைப் பேணுவதற்கான சிறந்த ஊடகமாக முகநூல் காணப்படுகின்றது.
தொடர்பற்றுப் போன உறவுகளுடனும் சிறுவயது நண்பர்களுடனும் தொடர்பை ஏற்படுத்துவதற்கு முகநூல் உதவுகிறது. ஒரு பொழுது போக்குக்காகவும் இயந்திரமயப்படுத்தப்பட்ட வாழ்க்கையில் ஏற்படுத்தப்படும் மனச் சோர்வைப் போக்கவும் முகநூல் பயன்படுகிறது. கைத்தொலைபேசிகளினூடாகவும் இத்தளத்தைப் பார்வையிட முடிவதுடன் பதிவுகளையேற்றவும் முடிகிறது.
புகைப்படங்கள் மற்றும் ஒளிப்படங்களைப் பகிரவும், சேமிக்கவும் சிறந்த தளமாக முகநூல் அமைகிறது. உலகின் எந்த அந்தத்திலிருந்தாலும் ஒருவர் தொடர்பான விடயங்களை உடனுக்குடன் அறியவும் தொடர்புகளை மேற்கொள்ளவும் உதவுகிறது. இத்தளம் உலகில் பிரபலமான பல மொழிகளிலே காணப்படுவதால், இத்தளத்தை உபயோகிக்க ஆங்கில மொழியறிவு அவசியமில்லை. இணைய அறிவு மட்டுமே போதுமானது.
பிடித்த விடயங்களை மற்றவர்களுடன் பகிரவும் முகநூல் உதவுகிறது. எல்லா உறவுகளையும் ஒருபக்கத்தினுள்ளேயே அடக்குவதன் உலகம் எவ்வளவு சிறியதென்பதை உணர்த்துகிறது. பெயரை மட்டும் வைத்தே உறவுகளைத் தேடிக் கண்டுபிடிக்க முடியும். பல விடயங்களைச் மிகக் குறுகிய நேரத்திற்குள்ளேயே அறிந்துகொள்ள உதவுகிறது.
இன்றைய கல்வி முறைமை புத்தகம் சாராது தேடல் சார்ந்ததாகவே காணப்படுகிறது. ஆகையால் பல்வேறுபட்டோருடன் தகவல்களைப் பரிமாறுவதற்கு மிகச் சிறந்த ஊடகமாகக் காணப்படுகிறது. வர்த்தக ரீதியான செயற்பாடுகளுக்கும் விளம்பரங்களுக்கும் கூட முகநூல் உதவி செய்கிறது. முகநூலை நடத்தத் தேவையான பணம் விளம்பரங்கள் மூலமே பெறப்படுகிறது.
பொழுதைப் போக்குவதற்கான இலகுவழியாகவும் முகநூல் தென்படுகிறது. பாவனையாளரை ஒரு மாய உலகினுள்ளே சஞ்சரிக்க வைத்து அவர்களின் கற்பனைத் திறனைக் குறைக்கிறது. அதிகாலை எப்படியிருக்குமென்று தெரியாதவர்களைக் கூட அதிகாலையில் எழுப்பி அறுவடை செய்யவைக்கிறது. அவசர உலகைக் கருத்தில் கொள்கையில் இது நேரத்தை விரயமாக்குமொரு செயற்பாடாகவும் கருதப்படுகிறது.
பாடசாலை செல்வோரின் கட்டுப்பாடின்றி முகநூல் பாவனையானது அவர்களின் கல்வி, மற்றும் நடத்தைக் கோலங்களில் பாதிப்பை ஏற்படுத்துவதுடன் தற்கொலைகளின் எண்ணிக்கையையும் அதிகரித்துள்ளது.
பொதுவாக வேலைத் தளங்களில் முகநூலின் பாவனை, உற்பத்தித் திறனையும் பணியாளர்களின் வினைத் திறனையும் குறைப்பதாகக் கணிப்பிடப்படுவதால் உலகளாவிய ரீதியில் பல வேலைத் தளங்கள் முகநூலின் பாவனையைத் தடை செய்துள்ளன. ஆனால் வெளிநாடுகளில் வேலைக்குச் சேரும் நபரொருவரின் அடிப்படைத் தகைமைகளுள் ஒன்றாக முகநூல் கணக்கும் கருதப்படுகிறது.
பல பாடசாலைகளும் பல்கலைக் கழகங்களும் கூடத் தமது எல்லைக்குள் முகநூலின் பாவனையைத் தடை செய்துள்ளன. விவசாயம், செல்லப் பிராணிகள், மிருகக் காட்சிச் சாலை போன்ற விளையாட்டுக்கள் தினமும் முகநூலைப் பார்வையிடத் தூண்டுவதுடன், கிட்டத்தட்டப் பாவனையாளரை முகநூலுக்கு அடிமையாக்கி விடுகின்றன. இத்தகைய விளையாட்டுக்களிலிருந்து மீள முடியாமல் கடனட்டை மூலம் பணம் செலுத்தி விளையாடுபவர்களும் காணப்படுகின்றனர். காலம் கடந்த ஞானத்தைப் பெற்றவர்களும் இருக்கின்றார்கள்.
முகநூலில் நடைபெறும் விடயங்களை உடனுக்குடன் குறுஞ் செய்திச் சேவைகள் மூலம் கைத்தொலைபேசியில் பார்க்கக் கூடியதாகவிருப்பது பாவனையாளர்களை மேலும் முகநூலுக்கு அடிமையாக்குகிறது.
இத்தகைய இணையத்தளங்களின் பாவனையானது கூரிய கத்தியைப் போன்றது. கத்தி வைத்தியரிடமா அல்லது கொலைகாரனிடமா இருக்கிறது என்பதைப் பொறுத்து அதன் பாவனை வேறுபடும். ஒருவரை ஒருவர் உளவு பார்க்கவும் இத்தகைய சமுக வலைப்பின்னல் தளங்களே காரணமாகின்றன.
நெருங்கிய உறவுகள் கூட முக நூலின் வரவால், முகநூலினூடு மட்டுமே தொடர்புகொண்டு தூரச் செல்லும் சந்தர்ப்பங்களும் காணப்படுகின்றன.
நண்பர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் பெருமைகொள்வோர் தாமாகவே ஆபத்தை விலைக்கு வாங்கிக்கொள்கின்றனர். முகநூல் நட்புக்குப் புதியதோர் வரைவிலக்கணத்தை வழங்கிவிடுமோ என்றதோர் அச்சமும் நிலவி வருகிறது.
முகநூலினூடாகப் பாவனையாளர்கள் அரசாங்கத்திற்கு எதிரான பிரசாரங்களை மேற்கொண்டமைக்காக முகநூல் பாவனையைத் தடைசெய்த நாடுகளுமுள்ளன. சிரியா, பர்மா, பூட்டான், ஈரான், வியட்நாம் போன்ற நாடுகளே இவ்வாறு தடைசெய்துள்ளன.
முகநூல் தளம், தானே பலவகையான கட்டுப்பாடுகளை விதிப்பதன் மூலம் துஷ்பிரயோகங்களை இயன்றவரை தவிர்த்து வருகிறது. ஒவ்வொரு பெற்றோரும் தனது பிள்ளை எவ்வளவு தூரம் முகநூல் பாவனையிலீடுபடுகின்றதென்பதை அவதானிக்க வேண்டும். பாவனையாளர் ஒவ்வொருவரும் பகுத்தறிவுடன் செயற்பட வேண்டும்.
மதுவுக்கடிமை, போதைப்பொருளுக்கு அடிமை என்ற காலங்கள் கடந்து முகநூலுக்கடிமை என்றொரு காலம் வெகு விரைவில் உருவாகுமோ என்றும் எண்ணத் தோன்றுகிறது. மாய உலகில் சஞ்சரிப்பது இன்பமாகத் தோன்றினாலும் உள ரீதியான ஆரோக்கியத்துக்கு அது ஒரு போதும் நன்மை பயக்காது.
கற்காலம், வெண்கலக்காலம் என்றெல்லாம் காலங்கள் வரை யறுக்கப்படுகின்ற போது இணையக் காலமொன்று வரையறுக்கப்படுகையில் அதன் உப பிரிவுகளிலொன்றாக முகநூல் காலமும் இருக்குமென்பதில் எதுவித ஐயமுமில்லை.
‘கனியிருப்பக்காய் கவர்ந்தற்று’ என்ற முதுமொழியின் அர்த்தத்தை ஆழ உணர்ந்து முகநூலைப் பாவி ப்பதுடன் அதன் ஆதிக்கத்தை ஓங்க விடாது, அதை எமது கட்டுப் பாட்டுக்குள் வைத்திருந்தால், அதி கம் நன்மை பயக்கும் தளமாகவே முக நூலுமிருக்கும்.

No comments:

Post a Comment