Sunday, July 13, 2014

நீர் உயர?

(இரணை மடுக்குளம் பற்றிய ஆவணத்தொகுப்புக்காக குளத்தின் பங்காளி என்ற உரிமையுடன் 2014 இல் நான் எழுதிய கட்டுரை. தயவு செய்து அனுமதியின்றி அச்சு ஊடகத்தில் மீள் பிரசுரம் செய்யாதீர்கள்...)




“உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து.”- 1032
பல்வேறு தொழில் புரிகின்ற மக்களின் பசி போக்கிடும் தொழிலாக உழவுத் தொழில் இருப்பதால் அதுவே உலகத்தாரைத் தாங்கி நிற்கும் அச்சாணி எனப்படும் என உணவுப் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே மிகவும் எளிமையாகக் கூறியிருக்கிறார் திருவள்ளுவர்.
ஆசிய நாடுகளின் உணவுப் பாதுகாப்பு எனக் கருதும் போது அரிசிக்கு மிகப் பிரதானமான இடம் இருக்கிறது. அதற்கு இலங்கை ஒன்றும் விதி விலக்கல்ல. இலங்கையிலே கிளிநொச்சியை வடக்கின் நெற் களஞ்சியம் என்பர் விபரந்தெரிந்தோர்.
 வீதியின் இருமருங்கிலும் பச்சைப் பசேலென்று வயல் வெளிகள்... ஏறத்தாழ வருடத்தின்  முக்கால்வாசி நாட்களும்  நீர் சலசலத்துக்கொண்டிருக்கும் வாய்க்கால்கள்... இடையிடையே விஸ்வரூபமாய் நிழல் பரப்பி நிற்கும் மருத மரங்கள்….. வீதிகளில் செல்கையில்  வாய்க்கால்களைக் கடந்து மோதிச் செல்லும் இளந்தென்றல்… ஆங்காங்கே ஐதாக வீடுகள்… இவை கிளிநொச்சிக்கேயுரித்தான தனி அடையாளங்கள்.  காலம் இவ்வடையாளங்களை அழித்து விட்டிருந்த போதும் இந்த பசுமையான நினைவுகள் மட்டும் நீங்காமல் நிற்கின்றன என்றால் அந்தப் பெருமை முழுவதும் இங்குள்ள குளங்களையே சாரும். கிளிநொச்சியின் வரப்புகள் உயர்வதில் பெருந்துணை புரிபவை இரணைமடு, கல்மடு, அக்கராயன், புதுமுறிப்பு போன்ற பாரிய நீர்ப்பாசனக் குளங்களும் ஏனைய பல நடுத்தர மற்றும் சிறிய ரகக் குளங்களுமாவன.
கிளிநொச்சி என்றால் தனிக்காடு என்று இருந்த நிலையை மாற்றி  அதை பச்சைப் பசேலென ஒரு விவசாயப் பிரதேசமாக  மாற்றியதன்  பின்னணியில் இரணைமடு நீர்ப்பாசனத் திட்டம் அமைந்திருப்பதை எவராலும் மறுக்கமுடியாது. 1866 ஆம் ஆண்டு பிரித்தானிய காலனித்துவ ஆட்சியின் கீழ் கடமையாற்றிய நீர்ப்பாசனப் பொறியியலாளர் ஹென்றி பாக்கர் என்பரினால் இரணைமடு நீர்ப்பாசனத்திட்டம் திட்டமிடப்பட்டது. ஏறத்தாழ 1902 ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட  இத்திட்டம் பல படிகளாக நடைமுறைப்படுத் தப்பட்டது.
இரணைமடுக் குளத்துக்கு நீர் வழங்கும் ஒரே மூலம்  கனகராயன் ஆற்றுப்படுக்கையா கும். இத்திட்டம் கிளிநொச்சி மாவட்டத்தின் 40% விவசாய நீர்ப்பாசனத் தேவைகளுக்குப் போதுமானதாக இருக்கிறது. விவசாயத்தின் பிரதான பயிராக நெல் இருக்கின்ற போதும், உழுந்து, பயறு, கெளப்பி, மற்றும் மரக்கறி வகைகளும் பயிரிடப்படுகின்றன.
கிளிநொச்சி மாவட்டத்தின் பெரும்பாலான விவசாய நிலங்கள் இரணைமடு நீர்ப்பாசனத்திட்டத்தால் வளம் பெறுகின்றன எனலாம். ஆயினும் அந்த நீர்  கூட போதியளவு கிடைக்காமல் அல்லலுறும் விவசாயிகள் பலர் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் வசிக்கின்றனர் என்பதை யாவரும் அறிவர்.
இத்தகையதோர் நிலையில்  மிலேனியம் ஆண்டின் முதலாவது தசாப்தத்தில் முன்னெடுக்கப்பட்டு பல தடங்கல்ளைக் கடந்து  இரண்டாவது தசாப்தத்தின் ஆரம்பத்தில் ஒரு திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. யாழ் மக்களின் குடி நீர்த்தேவையைப் பூர்த்தி செய்வதற்காக இரணைமடுக் குளத்து நீரை குழாய்கள் மூலமாக யாழ் குடா நாட்டுக்குக் கொண்டு செல்வதே அத்திட்டமாகும். இத்திட்டம் பற்றி பலரும் போதியளவு அலசி ஆராய்ந்திருக்கிறார்கள். ஆதலால் அது பற்றி விபரமாக இங்கு சொல்ல விழையவில்லை.
யாழ் நகர் மற்றும் நகரையண்டிய பகுதிகள், சாவகச்சேரி, நாவற்குழி, கோப்பாய், அச்சுவேலி, சண்டிலிப்பாய், கட்டுடை, நவாலி, சங்கானை, மூளாய், அராலி, வட்டுக்கோட்டை, காரை நகர், ஊர்காவற்றுறை, அனலை தீவு, புங்குடுதீவு, வேலணை, மண்டைதீவு, பூநகரி, பளை ஆகிய பிரதேசங்களுக்கு குடி நீரை வழங்குவதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும். அதே வேளை தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின்  நிலைப்பை நிதி ரீதியாகவும் நிறுவன ரீதியாகவும் அதிகரிப்பதோடு உள்ளூராட்சி சபைகளை வலுப்படுத்துவதிலும் இத்திட்டம் பங்களிக்கும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் செயற்றிட்ட இணையத்தளம் தெரிவிக்கிறது. இத்திட்டமானது 4 பகுதிகளைக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு பகுதியின் கீழும் பல்வேறு செயற்றிட்டங்கள் திட்டமிடப்பட்டிருக்கின்றன. அவை எவை என அறிதலானது இத்திட்டம் தொடர்பில் நடு நிலையாக ஆராய வழிவகுக்கும் எனலாம்.

அவையாவன,
1.   நீர் விநியோகத்தை மேம்படுத்தல், கழிவு நீர், வடிகாலமைப்பு உட்கட்டமைப்பு
நீர் விநியோகத்தை மேம்படுத்தல் எனக் கருதும் போது பின்வரும் பகுதிகள் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன.
a.   இரணைமடுக் குளத்தை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டங்கள் மூலம் நீர்வளத்தை கூட்டி குள வினைத்திறன் மட்டத்தை அதிகரித்தல்
b.   நீரை எடுப்பதற்கான கட்டமைப்பு,  நீரை சுத்திகரிக்கும் கட்டமைப்பு, சுத்திகரித்த நீரை வெளியேற்றும் நிலையம் ஆகியவற்றை அமைத்தல்
c.   சுத்திகரித்த நீரை யாழ் மா நகரசபை எல்லைக்குள் கொண்டு செல்வதற்கான கட்டமைப்பை மேற்கொள்ளல்
d.   உரிய உள்ளூராட்சி சபை எல்லைகளுக்குள் நீர் இணைப்பை வழங்குதல்
கழிவு நீர் , வடிகாலமைப்பு எனும் போது பின்வரும் விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன.
e.   கழிவு நீர் சேகரிப்பு தொகுதியை அமைத்தல்
f.    கழிவு நீர் சுத்திகரிப்பு கட்டமைப்பை அமைத்தல்
g.   வெளிச்செல்லும் நீரை கடலுடன் கலக்கச்செய்யும் வாய்க்கால் தொகுதியமைத்தல்
h.   பராமரிப்பு உபகரணங்களை வழங்கல்

2.   யாழ்ப்பாணத்தின் நீர் வள முகாமைத்துவத்தை வலுப்படுத்தல்
யாழ் நீர்வள முகாமைத்துவக்குழுவுக்கு  ஒருங்கிணனித நீர் வளமுகாமைத்துவம் தொடர்பிலான கொள்கைகளை உருவாக்க நீர்வளமுகாமைத்துவத்திட்டம் தொடர்பிலான கற்கைக்கு நிதியுதவியளித்தல்

1.   தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கு நிலக்கீழ்  நீர் வளத்தின் அளவையும் தரத்தையும் கண்காணிக்கும் தொகுதியை விருத்தி செய்ய உதவுதல். உள்ளூராட்சி சபைகள் நிலக்கீழ் நீர் வளத்தை மேம்படுத்துவதற்காக சட்டதிட்டங்கள், நடைமுறைகளை உருவாக்க உதவுதல்
2.   பொது நீர் வளக்காப்பு, சுற்றாடல் பாதுகாப்பு, சுகாதாரம் தொடர்பிலான விழிப்புணர்வு செயற்றிட்டங்களை நடாத்துதலும் சமூக கண்காணிப்பு தொடர்பிலான  நிகழ்ச்சித்திட்டமும்

3.   தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் திறனை வலுப்படுத்துவதன் மூலம் வடபிராந்திய ஒத்துழைப்பு நிலையத்தின் தாபனம், மேம்பாடு, திறன் காப்பை உறுதி செய்தல்
இவை தவிர இவற்றுடன் உள்ளடக்கப்படக்கூடிய சிறியளவிலான விடயங்களும் இச்செயற்றிட்டத்தால் மேற்கொள்ளப்படும்.
இரணைமடு நீர்த்தேக்கம் தொடர்பிலே , தற்போது சராசரியாக 28 அடி  உயரத்துக்கு அதில் நீர் தேக்கி வைக்கப்படுகிறது. ஆயினும் 32 அடி வரை தேக்கி வைக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. அணைக்கட்டை 36 அடியாக உயர்த்துவதன் மூலம் கிடைக்கும் மேலதிக நீரை யாழ் குடி நீர் விநியோகத்துக்கு பயன்படுத்தலாம் என்பதே அடிப்படையாக இருக்கிறது. இந்த விநியோகத்துக்கு தேவைப்படும் நீரின் கனவளவு ஏறத்தாழ 10,000 ஏக்கர் அடி எனலாம்.
ஆனால் எதிர்பாராத கால நிலை மாற்றம் காரணமாக போதியளவு பருவமழை கிடைக்காமல் போகும் பட்சத்தில் உரியளவு நீர் குளத்தில் தேக்கப்படாமல் போனால் குடிநீர் விநியோகத்துக்கு என்ன நிகழும் என்பது இன்னும் கேள்விக்குறியாகவே இருக்கிறது. இவ்விடயம் தொடர்பில் வெளிப்படையான கொள்கைகள் எவையும் பேணப்படவில்லை என்று கூடக் கூற முடியும்.
உரியளவு நீர் இக்குளத்தில் தேக்கப்படாது போனால் குடி நீரா? விவசாயமா? என்ற விவாதம் உருவாகும் என்பது  நிச்சயம். மக்கள் குழாய் வழி குடி நீரில் தங்கியிருக்கப் பழகுவார்களேயானால் குடி நீர் தான் அவசியம் என முடிவாகும் என்பது தெளிவு. ஏனெனில் அரிசி இறக்குமதிக்குப் பழகி விட்ட எம்மவர் இன்னும் குடி நீர் இறக்குமதிக்குப் பழகவில்லை.  
சிறு போக நெற்செய்கை அற்றுப்போக இங்கு வடமாகாணத்தின் உணவுப்பாதுகாப்பு கேள்விக்குறியாகும். வேறுபகுதிகளிலிருந்து அரிசியைக் கொள்வனவு செய்ய வேண்டிய நிலைப்பாடு  உருவாகும். உள்ளூர் உற்பத்திக்கான விலையை விட அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்படும். அதே வேளை வன்னியைப் பொறுத்த வரையிலே பெரும்பகுதியினர் விவசாயிகள். அவர்களது வாழ்வாதாரம் குலைந்து போக இது வழிவகுக்கலாம்.
வருமானம் இல்லாத நிலையில் அதிக விலையில் அரிசியை கொள்வனவு செய்தல் சாத்தியமற்றதோர்  விடயமாகும். விவசாயிகள் மாற்றுத்தொழில் தேடிச் செல்ல விழைய காலப்போக்கில்  விவசாயம் அற்றே போகலாம். பரம்பரை  பரம்பரையாக விவசாயம் செய்து தம்மை மட்டுமன்றி தேசத்தையே வளப்படுத்திய இந்த விவசாய முதலாளிகள் கூலிகளாக மாறும் நிலை ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.   இவையெல்லாம் உடனடியாகத்தெரியும் மாற்றங்கள் அல்ல. காலத்துடன் மெதுவாகத்தொடர்ந்து ஓரிரு தசாப்தங்களின் பின் வெளிப்படையாகத் தெரியப்போகின்றவை.
கடந்த காலங்களில் எண்ணற்ற இடப்பெயர்வுகளையும் தொடர் அழிவுகளையும் சந்தித்த இம்மக்கள் சாம்பலில் இருந்து  மீண்டெழும் போனிக்ஸ் பறவையாய் இன்றும் உயிர்த்திருப்பதன் காரணமே இரணைமடுக்குளமும் அதனோடண்டிய வயல் நிலங்களும் இவர்களது விடாமுயற்சியும் தான்.
சிறுபோகத்துக்கு அதிக நீர் தேவைப்படும் நெல்லுக்குப் பதிலாக அப்போகத்தில் பணப்பயிர்களைப் பயிரிடலாம் என்ற கருத்தும் பரவலாகக் கூறப்படுகிறது. பணப்பயிர்களுக்கு ஏதுவான தரை அமைப்பு , மண் ஆகியன இரணைமடுக்குளத்தால் வளம் பெறும் நிலங்களுக்கு பொருத்தமானவையாக இருக்குமா என்பது ஆராயப்பட வேண்டிய விடயமாகும். பணப்பயிர்கள் எங்ஙனம் உணவுப்பாதுகாப்பைப் பேண உதவும் என்பதில் போதிய தெளிவு இல்லாத நிலையே காணப்படுகிறது.
அடுத்த முக்கியமான விடயம், குடி நீர் விநியோகத்துக்காக நீரை வெளியேற்றும் அமைப்பை குளத்தினுள் அமைப்பதால் நீர் விநியோகத்தை கட்டுப்படுத்துவது கடினமாக இருக்கும் என்பது பொதுவான அபிப்பிராயமாகும்.
இவை அப்படியிருக்க இத்திட்டத்தினூடாக விழையவிருக்கும் அனுகூலங்கள் தொடர்பிலும் பார்க்க வேண்டிய தேவை இங்குள்ளது. இரணைமடுவை ஒத்த பாரிய பழம்பெருங்குளங்கள் போதியளவு புனரமைக்கப்படாவிடில் அவற்றின் உச்ச கொள்ளளவளவு நீரைத்தேக்கும் போது குளக்கட்டுகள் உடைய நேரிடலாம். இரணைமடுக்குளமானது காலத்துக்குக் காலம் நிகழ்ந்த அவலங்களுக்கெல்லாம் சாட்சியாக நிற்கிறது. அந்த அவலங்களுக்கு மத்தியில் அதன் புனரமைப்பு பெரியளவில் கவனத்தில் கொள்ளப்படவில்லை.,அதேவேளை குளத்தொகுதியின் கட்டமைப்பு தொடர்ந்தும் பாதிப்புக்குள்ளாகி வந்தது. தற்போதிருக்கும் நிலையில் தன் உச்சக்கொள்ளளவு நீரைத் தேக்கி வைத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் குளக்கட்டு உடைப்பெடுக்கும் நிலை கூட ஏற்படலாம் என்பது நிபுணர்களின் ஊகம். ஆதலால் இக்குடி நீர் விநியோகத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதேவேளை குளத்தின் இருப்பையும் உறுதி செய்து விடலாம் என்பது ஒரு தரப்பின் வாதமாக இருக்கிறது.
பருவமழை பெய்யும் காலங்களில் இரணைமடு வான் பாயும் போது உரிய வாய்க்கால் தொகுதிகள் வினைத்திறனாக இயங்குவதில்லை. அவையும் கடந்த கால அசம்பாவிதங்களில் சிதைந்து போய்விட்டன. இதனால் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சில பிரதேசங்கள் வெள்ளத்தால் மூடப்படும் அபாயம் காணப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் இவ்வாய்க்கால் தொகுதி புனரமைக்கப்படுகிறது, இதன் மூலம் இரணைமடுக்குளம் வான் பாய்வதால் ஏற்படும் வெள்ள அழிவுகள் தவிர்க்கப்படலாம்.
இதுவரைகாலமும் கைவிடப்பட்டிருந்த திருவையாறு இடது கரை நீர்ப்பாசனத் திட்டம் மீள உயிர்பெறும் சாத்தியக்கூறுகள் அதிகமாக இருக்கின்றன.
யாழ்ப்பாணத்தை பொறுத்தவரையிலே அதன் கலாசாரம் பழம்பெருமை வாய்ந்தது. இயற்கையோடு ஒன்றியது. யாழ் மக்கள் உழைப்புக்கும் முயற்சிக்கும் அறிவுக்கும் பெயர்போனவர்கள்.
அதனால் தான்
“ஆறு பிறந்து திரிந்து வயல்கள் அடைந்து
பயிர்கள் விளைந்திட
ஏறி உயர்ந்த மலைகள் இல்லையாயினும் என்ன
இருந்தன தோள்கள் என்று
கூறி உழைத்துப் பின் ஆறிக் கலைகளில்
ஊறிச் சிறந்தது யாழ்ப்பாணம்.” என்கிறார் மகாகவி உருத்திர மூர்த்தி.

ஆனால் கடந்த கால அவலங்களால் இன்றைய மக்கள் அக்கலாசார விழுமியங்களை மறந்து போய்விட்டார்கள்.
எல்லாவற்றிற்கும் முதல் யாழ்ப்பாணத்தின் நீர்வளம் தொடர்பில் இங்கு சற்று ஆராய்ந்தறிய வேண்டி இருக்கிறது. முப்புறமும் கடலால் சூழப்பட்ட யாழ் குடா நாடு , அதனையண்டிய தீவுகளிலே மயோசின் காலச் சுண்ணக்கற்பாறைகள் காணப்படுகின்றன.  இவை கடல் மட்டத்தின் கீழ் பரந்து காணப்படுகின்றன. பருவப்பெயர்ச்சி மழை காரணமாக  நீரானது நிலத்தை ஊடுருவி இப்பாறைகளில் உள்ள குழிகளைச் சென்றடையும். அங்கு ஏற்கெனவே இருக்கும் உவர் நீரின் மேல் அடர்த்தி வித்தியாசம் காரணமாக நன்னீர் ஒரு வில்லை போல படர்ந்திருக்கும். ஆழம் அதிகரிக்க அதிகரிக்க நன்னீரின் உவர்த்தன்மையும் அதிகரிக்கும். இந்த நன்னீர் படையானது குடா நாட்டின் மையப்பகுதியில் மிகையாகக் காணப்படும். அதன் அளவு கரையோரப் பகுதிகளை அண்மிக்க அண்மிக்க குறைவடைந்து செல்லும்.
மகாகவி கூறியிருப்பது போல யாழ் மண்ணிலே மலைகளில் இருந்து உற்பத்தியாகும் ஆறுகள் எவையும் இல்லை.  இம்மண் முற்று முழுதாகத் தங்கியிருப்பது  நிலக்கீழ்  நீரில் மட்டுமே. இதைத் தெளிவாக உணர்ந்தமையால் தாம் நம் முன்னோர்கள் வயல்வெளிகள் தோறும் துரவுகளையும் கிராமங்கள் தோறும் குளங்களையும் கோயில்கள் தோறும் கேணிகளையும் அமைத்திருந்தார்கள்.
துரவு என்றால் என்ன என்று இன்றைய இளஞ்சந்ததியினர் அதிசயமாய்க் கேட்கின்றனர். யாழ்ப்பாணத்தில் இன்னும் உயிர்ப்பாக இருக்கும் துரவுகளை விரல் விட்டு எண்ண முடியும். பல துரவுகள் தம்  நிலையிழந்து குப்பை போடும் இடங்களாக மாறிவிட்டமை தான் யதார்த்தமான உண்மை.
இந் நிலைக்கு குளங்கள் ஒன்றும் விதிவிலக்கல்லவே! கிராமம் நகரமயப்படும் போது நடக்கும் மாற்றங்களுள் மிகப் பிரதானமானது குளங்களை ஆக்கிரமித்து மண் இட்டு நிரவுதலாகும். இது இலங்கை எங்கிலும் பரவலாக நடைபெற்றிருக்கிறது. யாழ் நகரப்பகுதிகளில் காணப்பட்ட சில குளங்கள் இன்று இருந்த இடமே தெரியாமல் போய்விட்டன. அவற்றின் பெயர்களும் கூட.
எஞ்சியிருக்கும் குளங்களும் குப்பை கொட்டும் கிடங்குகளாகவும் கழிவு நீரைக் கலக்கவிடும் இடங்களாகவுமே மாறியிருக்கின்றன. இன்றைய யாழ்ப்பாணத்திலே  மாசின்றிய குளமொன்றைக் காண்பது மிக அரிதாகி விட்டது. கோயில்கள் தோறும் அமைக்கப்பட்டிருக்கும் கேணிகளுக்கும் இதே  நிலை தான்.
அதே சமயம்  ஏதோ ஒரு காரணத்தை கூறி இருக்கும் மரங்களை எல்லாம் தறிக்கும் மனப்பாங்கு எம்மவரிடையே அதிகரித்து விட்டது எனலாம்.
ஆக மொத்தத்தில்  மழை நீரைச் சேமித்து நிலக்கீழ் நீரைப் பேணுவதற்காய் எம் முன்னோர்கள் வகுத்த கட்டமைப்பின் பெரும் பகுதி செயலிழந்து விட்டது எனலாம்.
இன்னும் பல குளங்கள் நீரைத் தேக்கி வைக்கின்றனவே எப்படி அவை செயலிழந்து போகலாம் என்று  நீங்கள் சிந்திக்கலாம். மாசுள்ள நீரைத் தேக்கி வைத்து நிலக்கீழ் நீருடன் கலக்கவிடும் குளங்கள் இருந்தென்ன ? இல்லாவிட்டாலென்ன?
  நிலக்கீழ் நீரைப்பேணுவதற்கான பொறிமுறை செயலிழந்துவிட்டது என்பதற்காக  அந் நீரை எவரும் பயன்படுத்தாமல் இருக்கவில்லை. பல்வேறு தேவைகளுக்காக   நிலக்கீழ் நீர் மிகையாகப் பயன்படுத்தப்படலானது  நன்னீர் முடிந்து உவர் நீர் உள்ளெடுக்கப்பட வாய்ப்பாகும். யாழ்ப்பாணத்தி இப்படி உவராகிப் போன கிணறுகள் ஏராளம்.
அதைவிடக் கொடுமையான விடயம் யாதெனில் உவராகிப் போன கிணறுகள் கைவிடப்பட்டு பின்னர் அவை குப்பைக் கிடங்குகளாக மாறியமை தான்.
தத்தமது பிரதேச எல்லைகளுக்குள் இருக்கும் இயற்கை வளங்களைப் பாதுகாக்க வேண்டிய கடப்பாட்டையும் பொறுப்பையும் கொண்டிருக்கும் உள்ளூராட்சி சபைகளே நீர் நிலைகளுக்கு அருகாமையில் தம் பிரதேசக் கழிவுகளைக் கொட்டுவது மிகவும் வேடிக்கையானது.
 நிலக்கீழ் நீரைப்பேணும் பொறிமுறைகள் கைவிடப்பட்ட நிலையில் விவசாயத்தில் மிகையாகப் பாவிக்கும் உரம் மற்றும் கிருமி நாசினிகளால் அது தொடர்ந்தும் மாசுபட்டு வருகிறது. புற்று நோய் முதலாய நோய்த்தாக்கங்கள் அதிகரிக்க இதுவும் ஒரு காரணமாகும். இதை ஆய்வுகளும் உறுதிப்படுத்தியிருக்கின்றன.
அதிகரிக்கும் சனத்தொகை காரணமாக காணிகள் துண்டாடப்பட மலசல கூடத்துக்கும் கிணற்றுக்குமிடையிலான தூரம் 15 மீற்றராக வேண்டும் என்ற நியமத்தைப் பேண இயலாது விடுகிறது. விளைவு நிலக்கீழ் நீரிலே ஈ கோலை என்ற பக்டீரியா தொற்று ஏற்பட ஏதுவாகிறது. இதனால் தொற்று நோய்கள் விரைவாகப் பெருகுகின்றன.  யாழ் மாநகர சபை எல்லைக்குள் இத்தகைய அச்சுறுத்தல்கள் அதிகமாக இருக்கின்றன.
அதுமட்டுமன்றி கொழும்பில் எம்மவர்கள் மத்தியில் வெகு பிரபலமான தொடர்மாடிக் கலாசாரம் தற்போது யாழ் நகரையும் ஊடுருவத்தொடங்கி விட்டது. இதனால் ஒரு குடும்ப அலகு வசித்த இடத்தில் 10 க்கும் மேற்பட்ட குடும்ப அலகுகள் வசிக்கத்தலைப்படும்.  காலப்போக்கில் உரிய நிலக்கீழ் நீர் மிகையாகப் பாவிக்கப்படும்.
யுத்த சத்தங்கள் ஓய்ந்து அமைதி நிலவ ஆரம்பித்திருக்கும் இன்றைய கால கட்டத்தில் யாழ் மாவட்டத்திலும் கைத்தொழிற்றுறை மேம்பட ஆரம்பித்திருக்கிறது. இவ்வாறு தொழிற்சாலைகள் அதிகரிக்க நிலக்கீழ் நீர்ப்பாவனையும் அதிகரிக்கும் என்பதில் எதுவித ஐயமும் இல்லை.இவை  யாழ் மண்ணின் நிலக் கீழ் நீர் தொடர்பிலான யதார்த்தங்கள்.
இவற்றின் சாத்தியப்பாடுகள், அவற்றால் உருவாகப்போகும் சமூக கலாசார மாற்றங்கள் தொடர்பிலே ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு ஆராயப்பட வேண்டும்.
 நடந்தவை நடந்தவையாகவே இருக்க மேற்கொண்டு என்ன செய்யலாம் என்பது தொடர்பில் கலந்துரையாடவேண்டிய தேவையும் இருக்கத்தான் செய்கிறது.
யாழ்ப்பாணத்துக்கான குடி நீர் விநியோகத்திட்டம் தொடர்பில் நூறு சதவீத வெளிப்படைத்தன்மை பேணப்படுதல் மிக அவசியமாகும். இத்திட்டம் தொடர்பிலே ஆர்வமுடைய சகலருக்கும் (Interest Persons) இத்திட்டம் தொடர்பிலான சகல விடயங்களும் இலகு மொழியிலே தெரியப்படுத்தப்பட வேண்டும்.
இத்திட்டம் , அதனுடன் தொடர்புடைய விடயங்கள் பற்றி மேற்கொள்ளப்பட்ட கற்கை அறிக்கைகள், ஆய்வறிக்கைகள், யாவுமே இலகு மொழி நடையில் பகிரங்கப் படுத்தப்பட வேண்டும்.
இத்திட்டத்துக்காக  குளத்து நீரை வெளியேற்றும் அமைப்பை குளத்துக்கு வெளியில் நிர்மாணிப்பதானது அதன் மீதான கட்டுப்பாட்டை இலகுவாக்குவதுடன் வெளிப்படைத்தன்மையையும் அதிகரிக்கும். நீர் வெளியேறும் அளவை அளவிடும் மானியை அதில் பொருத்துவதன் மூலம் எவரும் அந்த அளவை பார்வையிட வழி கிடைக்கும். இது வெளிப்படைத்தன்மையை மேன் மேலும் உறுதி செய்வதோடு விவசாயிகளின் நன்மதிப்பைப் பெறவும் வழி வகுக்கும்.
நீர் வழங்கலுடன் தொடர்புடைய உபதிட்டங்கள் யாவற்றையும் உரிய விவசாயிகளின் பங்களிப்புடன் மேற்கொள்வதே சாலச் சிறந்தது.
பருவமழைக் காலங்களில் மேலதிகமான நீரை வெளியேற்றும் போது அப்பாதையின் போக்கில் ஒன்றுக்கு மேற்பட்ட சிறிய குளங்களை அமைத்தல் சிறந்தது. அவ்வாறாயின் மேலதிக நீர் வீணே கடலுடன் கலப்பது குறைக்கப்படும். அத்துடன்  இரணைமடுக் குளத்து நீரினால் வளம் பெற முடியாத விவசாய நிலங்கள் வளம் பெற வழியும் கிடைக்கும்.
இந்த நீர் வழங்கல் திட்டத்தால் விவசாயிகளுக்கு சிறுபோகத்தின் போது  பயிர் செய்ய முடியாது போனால் அவர்களுக்கான முறையான நட்ட ஈடு வழங்கப்பட வேண்டும். அதனைத் தொடர்ச்சியாக வழங்க வேண்டிய நிலைமை கூட ஏற்படலாம் எனும் பட்சத்தில் விவசாயிகள் பாதுகாப்பு நிதியம் ஒன்றை தாபித்து இந்த நீர் விநியோகத்தால் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கு கிடைக்கு இலாபத்தின் ஒரு பகுதியை அந்த நிதியத்தில் வைப்பிலிடலாம். தேவையேற்படும் காலகட்டங்களில் அதிலிருத்து உரிய  நியாயமான நட்ட ஈட்டை வழங்கலாம்.
இத்திட்டத்துடன் ஓய்வு பெற்ற எந்திரி ஆறுமுகத்தின் ‘யாழ்ப்பாண ஆறு’ என்ற திட்டத்தின் முன்மொழிவை ஒப்பிட்டு இரண்டினதும் சாத்தியப்பாட்டு கற்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும். ‘யாழ்ப்பாண ஆறு’  என்ற திட்ட முன்மொழிவு பயனுறுதி மிக்கதாகும் என முடிவெடுக்கும் பட்சத்தில் அதை தொடர்வதோடு  இரணைமடுக்குளத்தை பலப்படுத்துவதற்கான  நிதி உதவியை இயன்ற வரை விரைவாகப் பெற வேண்டும்.
எடுக்கப்படும் முடிவுகள் எவையாயினும் விவசாயிகளுடன் கலந்தாலோசித்து அவர்களது எண்ணப்பாடுகளையும் கருத்தில் கொண்டே எடுக்க வேண்டும். மக்களுடைய பங்களிப்பின்றிய அபிவிருத்தியானது ஒருபோதும் வெற்றியளித்ததில்லை என்பது உலகறிந்த உண்மையாகும்.
யாழ்ப்பாணம் தொடர்பிலே பல உறுதியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதை நாம் உறுதி செய்ய  வேண்டும். இல்லையேல் இந்த நீர் வழங்கல் திட்டமானது அதன் நோக்கத்தை பூர்த்தி செய்யாது போய்விடும்.  உறுதி செய்வதில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கு பாரிய பொறுப்பு இருக்கிறது.
இத்திட்டத்தின் மூலம் வழங்கப்படும் நீரானது வர்த்தகத்தேவைகளுக்காகவோ அல்லது கைத்தொழில் தேவைகளுக்காகவோ பயன்படுத்தப்படுவது முற்றாகத் தடை செய்யப்பட வேண்டும்.
சராசரியாக சாதாரண வீட்டுத்தேவைக்குப் பயன்படுத்தும் நீரை விட மிகையாக நுகர்வோரிடம் அதிக தண்டம் அறவிடப்பட வேண்டும். இதன் மூலம் இந்நீர் சிக்கனமாகப் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்ய முடியும்.
யாழ்ப்பாணத்தின் நிலக்கீழ் நீரைப் பேணும் பொறிமுறைகளை மீண்டும் நெறிப்படுத்தி இயங்கச்செய்வதற்கான செயற்றிட்டங்கள் கால அட்டவணையுடன் தீர்மானிக்கப்பட்டு இரணைமடுக்குள அபிவிருத்தி திட்டத்துக்கு சமாந்தரமாகவே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.   நிதி ஒதுக்கீடு எனும் போது இச்செயற்றிட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டியதும் மிக அவசியமாகிறது.
உள்ளூராட்சி சபைகள் தத்தமது எல்லைகளுக்குள் சேரும் கழிவுகளை முகாமை செய்து சூழலுக்கும் மக்களுக்கும் பாதகமின்றி வெளியேற்றுவதற்கான வழிமுறைகளை உடனடியாகவே திட்டமிட்டு ஆரம்பிக்க வேண்டும்.
யாழ் மக்கள் தமது குப்பைகளை தாமே முகாமை செய்த காலம் இன்று மலையேறிப்போய்விட்டது. மீளப்பாவிக்கும் கொள்கையிலிருந்து பாவித்த பின் தூக்கி வீசும் கலாசாரத்துக்குள் அவர்கள் தள்ளப்பட்டு விட்டார்கள். அதிகரிக்கும் சனத்தொகை, அதனால் அதிகரிக்கும் தேவைகள், குறைந்து போய்க்கொண்டிருக்கும் நிலக்கீழ் நீர் வளம், இவற்றின் மத்தியில் யாழ் மண்ணின் எதிர்காலம் ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளும் போது திண்மக்கழிவுகள், மருத்துவமனைக்கழிவுகளின் முகாமைத்துவம் அத்தியாவசியமாகிறது.
விவசாயத்தின் போதான மிகை நீர்ப் பாவனை, மிகை உரப்பாவனை, மிகை கிருமி நாசினிப் பாவனை ஆகியன கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு சூழலுக்கு இழிவளவான பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய அல்லது பாதிப்பையே ஏற்படுத்தாத நடைமுறைகள் ஏற்புடையதாக வேண்டும். இங்கு கட்டாயப்படுத்தல் அவசியமாகிறது.
சட்ட திட்டங்களை உருவாக்கி நடைமுறைப்படுத்த மாகாண சபை இல்லை என்று இது வரை காலமும் கூறி வந்த காரணம் இப்போது செல்லாக்காசாகி விட்டது. உரிய சட்டங்களை ஆக்கி தண்டங்களை அமுல் படுத்துவதோடு நிதி ஒதுக்கீட்டில் முன்னுரிமை வழங்கி சூழல் பாதிப்பை இழிவளவாக்கும் பாரிய பொறுப்பு வட மாகாண சபைக்கு இருக்கிறது.
கிளிநொச்சி விவசாயிகளாகட்டும்.. யாழ் மக்களாகட்டும்..எம்மவர் எண்ணப்பாடுகளில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களை சீர் செய்து இயற்கை வளங்களை வீண்விரயம் செய்யாது வினைத்திறன் மிக்க வகையிலே பயன்படுத்தச் செய்யும் கடப்பாடு அதிகாரத்தரப்பிலிருக்கும் சகலருக்கும் இருக்கிறது.
இத்திட்டம் தொடர்பிலான ஒவ்வொரு சிறிய விடயத்தையும் உடன்படிக்கையில் உள்ளடக்கி சகல தரப்பினரும் ஒருமித்து அதில் கைச்சாத்திட வேண்டியது மிக அவசியம்.  அத்துடன் அது செல்லுபடியாகும் காலம், பின்னூட்டல்கள் தொடர்பான தெளிவும் அவசியமாகும்.
“ வரப்புயர  நீர் உயரும்
நீர் உயர நெல் உயரும்
நெல் உயர குடி உயரும்
குடி உயர கோல் உயரும்
கோல் உயர கோன் உயர்வான்”
என்ற ஒளவையாரின் பாடல் இக்கட்டுரையின் நோக்கத்தைத் தெளிவுபடுத்தும் என்பதில் எதுவித ஐயமும் இல்லை.

இது உயிரின் தொடர்ச்சி மட்டுமல்ல..... குழலியும் தொடர்கிறாள்...

இலங்கை நிர்வாக சேவையில் கால் பதித்து இற்றைக்கு இரண்டரை ஆண்டுகள் கடந்து விட்டன.. அதனோடு என் வலைப்பூவும் பொலிவிழந்து போய்விட்டதாய் மனதில் ஒரு சலனம்... வலைப்பூவில் பதிவேற்றுவதற்காய் விசைப்பலகையில் கை வைக்க முயன்று தோற்றுப்போன தருணங்கள் பற்பல.. எதேச்சையாய் திறந்து பார்த்தால் ஒரு மின்னஞ்சல்..

தேன் கூடு என்ற இந்திய வலைத்தளம் என்னை "இங்கு சாரதாஞ்சலி இடுகையிட்டிருக்கும் அனைத்துக் கட்டுரைகளும் அவரால் எழுதப்பட்டு ஏற்கனவே பத்திரிகைகளில் வெளியானவை. கண்ணைக் குளமாக்கிய மண்ணின் வாழ்வியல்-5, கற்பனை வளத்தை பெருக்கும் வாசிப்புத்திறன், இவ்விரண்டு கட்டுரைகளும் என்னைக் கவர்ந்தன. 'குழலி தொடர்வாள்' என்னும் ஒரு குறிப்போடு தொடராமல் நிற்கிறது வலைப்பூ." என எளிமையாய் அறிமுகப்படுத்தியிருந்தது.

அந்த அறிமுகத்தின் கடைசி வரிகள் வலைப்பூவுக்காய் என் கைகளை  விசைப்பலகையில் மீண்டும் பதிக்கச் செய்து விட்டன. என் பாதை உங்களில் பலர் பயணிக்க எண்ணியிராத பாதை. ஆயினும் அதில் நான் கண்டு பிரமிக்கும் விடயங்களை இந்த வலைப்பூவினூடாக உங்களுடன் பகிர எண்ணுகிறேன்.
குழலியின் பெயரால் சாரதாஞ்சலி மனோகரன்  மீண்டும் உயிர்க்கிறாள்...

இது உயிரின் தொடர்ச்சி மட்டுமல்ல.. என் வலைப்பூவின் உயிர்ப்பும் கூட...

Friday, January 27, 2012

குழலி தொடர்வாள்

தவிர்க்க முடியாத சில காரணங்களால், 2012 இலிருந்து எனது வலைப்பதிவுகளை சக தோழி குழலி தொடர்வாள். இனியும் குழலியோடு இணைந்திருங்கள்.

Monday, December 5, 2011

SLAAS Awards for the popularization of Science - 2011


கண்ணைக் குளமாக்கிய மண்ணின் வாழ்வியல் - 09


பராமரிப்பும் கவனிப்பும் இல்லாமல்
 அழிந்து போன வீடுகள் அதிகம்



யாழ்ப்பாணத்தின் வேலி மாதிரிகள், கடந்த கால நினைவுகளை மீட்க உதவின என்றால் மிகையில்லை. அடுத்த தொகுதி புகைப்படங்களைக் கொண்ட ஆவணக் காப்பகமாக அமைந்திருந்தது. யாழ்ப்பாணத்திலே தொட்டக் காலத்திலிருந்து வெளிவந்த பத்திரிகைகளின் மின் பிரதிகள் அச்சிடப்பட்டு பதாகைகளாக வைக்கப்பட்டிருந்தன. இந்து சாதனம் தொட்டு எண்ணற்ற பத்திரிகைப் பிரதிகளைக் காண ஆச்சரியமாகத் தான் இருந்தது.
இது ஊடகத்துறை மாணவர்களுக்கு மிகவும் பயனுடையதாய் அமைந்திருக்கும் என்பதில் எதுவித ஐயமும் இல்லை. இன்று கணினி இருப்பதால் உள்ளத்தில் நினைப்பதைத் தத் ரூபமாக வடிவமைக்க முடியும். பத்திரிகையின் பக்கம் தயாராகி விடும். தேவையானால் சேர்க்கலாம். வேண்டாவிட்டால் நீக்கலாம். ஆனால் அச்சுக்கலை தொடக்கப்பட்ட காலம் தொட்டு அத்துறையில் கணினிகள் அறிமுகமாகும் வரை நினைத்தபடி மாற்றும் வடிவமைப்புகள் சாத்தியம் குறைந்தனவாகவே இருந்தன.
அத்தகைய காலங்களிலும் கூட உடனடிச் செய்திகளைத் தாங்கி வெளிவந்த அந்தப் பத்திரிகைகளைப் பார்க்க கிடைத்ததே ஒரு கொடுப்பினை என்று தான் கூற வேண்டும். அந்தந்தக் காலத்து மொழி நடை, பக்க வடிவமைப்பு நுட்பங்கள், செய்திகளின் தன்மைகள் என அவற்றிலிருந்து நாம் கற்க வேண்டிய விடயங்கள் எத்தனையோ இருக்கின்றன. அவை தாங்கிய செய்திகள் எம் கடந்த கால வரலாற்றைக் கூறுகின்றனவோ இல்லையோ, அச் செய்திகளின் தன்மை நாம் கடந்து அந்த வரலாற்றின் அடிப்படையைக் கூறும்.
அதேபோல மற்றொரு பகுதியிலே யாழ்ப்பாணத்து பெரியார்களின் உருவப்படங்கள் பெயரிடப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. எங்கு தேடியும் கிடைக்காத அந்த அரிய படங்களைக் காட்சிப்படுத்தியிருந்தமையானது உண்மையில் ஒரு சிறந்த முயற்சி என்றே கூற வேண்டும்.
அதேபோல பழைமையான யாழ்ப்பாணத்து பாடசாலைகளின் முகப்புகளின் தோற்றங்களும் புகைப்படங்களாக ஆவணப்படுத்தப்பட்டிருந்தன. யாழ். மண்ணிலே ஒல்லாந்தர், ஆங்கிலேயர் ஆட்சி புரிந்தமையால் பல துறைகளிலும் அவர்களின் செல்வாக்கு காணப்பட்டது.
அவர்களது என்பதை விட அவர்களது நாட்டின் செல்வாக்கு என்று கூறுதல் சாலப் பொருந்தும். யாழ்ப்பாணத்து நாற்சார் வீடுகள் மிகப் பிரபலமானவை. அவற்றைப் பற்றி விபரிக்க முயன்றால் இந்த பக்கம் போதுமா எனத் தெரியவில்லை. ஆரம்பகாலங்களில் திண்ணைக் கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்ட வீடுகள் பின்னர் காலனித்துவ ஆட்சிக்காரரின் பாரம்பரியங்களையும் உள்வாங்கி மெல்ல மெல்ல பரிணமித்தன என்று கூறலாம்.

மிகவும் தொன்மையான வரலாறுடைய யாழ்ப்பாணக் கோட்டையைச் சூழவுள்ள பகுதிகளில் ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட கட்டடங்கள் இன்றும் நிலைத்து நிற்பதைக் காணமுடியும். கோட்டையைச் சூழவுள்ள பிரதேசம் முழுவதும் வரலாற்று மணம் வீசுவதற்கு இந்த ஒல்லாந்து காலக் கட்டடங்கள், வீடுகளும், ஒரு காரணம் எனலாம். அப்பகுதியில் மட்டுமன்றி பல பகுதிகளிலும் அத்தகைய காலனித்துவ காலக் கட்டடங்கள் காணப்படுகின்றன. நல்லூர், ஆனைக் கோட்டை போன்ற பிரதேசங்கள் அவற்றுள் சிலவாகும். சில ஊர்களுக்குச் சென்றால் பெரும்பாலான கட்டடங்கள் காலனித்துவ காலத்தவையாகவே இருக்கின்றன. இந்த கட்டடங்களையெல்லாம் புகைப்படம் எடுத்து ஆவணப்படுத்தியிருந்த யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் முயற்சி பாராட்டுதற்குரியது.
இக் கட்டடங்கள் பிரமாண்டமானவை. இவற்றின் ஒரு தளமானது நவீன கட்டடமொன்றின் இரு தளங்களின் உயரமுடையதாக இருக்கும். வீடுகளின் அறைகள், விறாந்தைகள் எல்லாம் மிகவும் விசாலமானவை, மக்கள் முன்னைய காலங்களிலே கூட்டுக் குடும்பங்களாக வாழ்ந்தார்கள். பெரிய வீடும் அவசியமாக இருந்தது. வீட்டிலே நிறைய அங்கத்தவர்கள் இருந்தமையால் பராமரிப்பும் கடினமாகத் தெரியவில்லை.

ஆனால், இன்றைய நிலைமையோ தலை கீழானது. கூட்டுக் குடும்பங்கள் காணாமல் போய்விட்டன. தனிக் குடும்பங்களிலும் ஒரு சில அங்கத்தவர்களே யாழில் வாழ்கிறார்கள். அவர்களுள் பெரும்பாலானோரின் பார்வையிலே இந்த பழைமையான வீடுகள் பெருஞ்சுமைகளாகவே தெரிகின்றன.
போரினால் சிதைந்த வீடுகளை விட, கவனிப்பாரின்றி, போதிய பராமரிப்பின்றி சிதைந்து போன வீடுகளே அதிகம் எனலாம். அவற்றைப் பராமரிப்பதொன்றும் இலகுவான காரியமுமல்ல. இரு நவீன வீடுகளைப் பராமரிப்பதற்கு ஆகும் செலவை விட இந்த காலனித்துவ கால வீடுகளைப் பராமரிப்பதற்கான செலவு அதிகமாகும். அத்துடன் நவீன மோகத்தின் இந்த பழைமையான வீடுகள் செயலிழந்து செல்லாக்காசாகி விடுகின்றன என்பது தான் பொதுவான உண்மை. ஆயினும் கூட, காலனித்து காலத்துவ வீடுகளின் மதிப்பை உணர்ந்து அவற்றைப் பேணிப் பாதுகாத்து வருபவர்களும் இல்லாமல் இல்லை. இளஞ் சந்ததியினருக்கு அந்த வீடுகளின் அருமையைத் தெரிய வைத்தாலன்றி வேறு எந்த வகையிலும் அவற்றை அழிவிலிருந்து காப்பாற்ற முடியாதென்பது நிதர்சனம்.
அந்த உன்னதமான பணியை இந்த யாழ்ப்பாண வாழ்வியல் கண்காட்சி செய்திருக்கிறது என்று தான் கூறவேண்டும். நாற்சார வீட்டில் வசிப்பதன் சுகம் அறிந்தவர்களுக்கு மட்டுமே புரியும். சுகமான அனுபவம் என்று கூறுதல் தகும்.
இவை தவிர தொல்லியல் திணைக்களத்தின் துணையுடன் வட மாகாணத்திலே மேற்கொள்ளப்பட்டு வரும் தொல்லியல் ஆய்வுகள்,அவற்றிலே கண்டெடுக்கப்பட்ட சான்றுகள் போன்றனவும் கூட ஆவணப் பதாகைகளாகக் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
இதுவரை நாம் பார்த்தவை யாழ். கண்காட்சி பற்றிய ஒரு மேலோட்டமான பார்வையே! கண்காட்சியில் இருந்த பல விடயங்கள் இங்கு தவற விடப்பட்டும் இருக்கலாம். ஆயினும் இக்கட்டுரைத் தொடர் ஒரு பொதுவான எண்ணப்பாட்டை வழங்கியிருக்கும் என்ற நம்பிக்கையிருக்கிறது.
இம்முறை கண்காட்சியைத் தவற விட்டவர்கள் எதிர்வரும் காலங்களிலும் தவறவிட்டு விடக் கூடாதே என்ற நல்லெண்ணமும் எம்மவரின் தொன்மை மிகு வாழ்வியலை இளஞ்சந்ததி உணர வேண்டும் என்பதுவுமே இக்கட்டுரை வரையப்பட்டதன் நோக்கமாகும்.
கண்காட்சி நடைபெற்ற அதேவேளை ஆய்வரங்கும் நடைபெற்றிருந்தது. தமிழ், ஆங்கில மொழிகளிலான ஆய்வுக்கட்டுரைகள் பலவும் சமர்ப்பிக்கப்பட்டன. அவை விரைவில் புத்தகமாக வெளியிடப்படும் என பேராசிரியர் புஷ்பரட்ணம் குறிப்பிட்டிருந்தார். வரலாற்று ஆய்வு என்ற எல்லைக்குள் இன, மத, மொழி பேதம் இல்லை என்ற உண்மை ஆய்வரங்கில் தெளிவானது.
ஆனைக்கோட்டை முத்திரை உட்பட, யாழ்ப்பாணத்து தொல்லியல் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்ட சகோதர இனத்தவர்களையும் இங்கு குறிப்பிடவேண்டும். கடந்த மூன்று தசாப்த காலமாகத் தொடர்ந்த யுத்தமானது எம்மவரை ஒரு குறுகிய வட்டத்துக்குள் முடக்கி விட்டது என்று தான் கூற வேண்டும். கண்காட்சியில் கண்ட சில விடயங்கள் அதைப் பிரதி பலித்தன. யாழ். பல்கலைக்கழக பெரும்பான்மைச் சமூகத்தின் மொழியாற்றல் தமிழுக்குள் மட்டும் முடக்கப்பட்டு விடக் கூடாது என்பது பலரின் அவாவாக இருக்கிறது. ஆங்கிலத்துக்கும் சமமான முக்கியத்துவம் வழங்கப்பட்டால் தொடர்பாடல் திறன் விருத்தியும் சிறப்பாக இருக்கும். அதேவேளை வெளிப் பல்கலைக்கழகங்களுடனான தொடர்பு மேம்படுத்தப்பட வேண்டும். மாணவர் பரிமாற்ற செயற்றிட்டங்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும்.
உலக வரைபடத்தைப் பொறுத்த வரையிலே இலங்கை ஒரு சிறு புள்ளி, அதிலே ஒரு சிறிய பகுதி தான் வட மாகாணம். நாம் எவ்வளவுக்கு எவ்வளவு எமது எல்லையைக் குறுக்குகிறோமோ, அவ்வளவுக்கவ்வளவு வெளி உலகிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டு விடுவோம். அந்த உண்மையை இக் கண்காட்சியின்போது காணக்கூடியதாக இருந்தது.
எம்மவரின் அடிப்படை மனப்பாங்கு மாற வேண்டும். அதற்கு கால அவகாசம் தேவை தான். ஆனால் அதற்குள் வெளியுலகு எம்மைப் புறந்தள்ளி ஒதுக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
ஆய்வு முடிவுகளை வெளிப்படுத்தும் திறன், அம்முடிவுகள் கணினி மென்பொருள் மூலம் வெளிப்படுத்தப்படும்போது அவை எவ்வாறு வடிவமைக்கப்பட வேண்டும் போன்ற பல விடயங்கள் தொடர்பிலே நவீன விடயங்கள் அறியப்படவேண்டும். பல செயற்றிட்டங்கள், விரிவுரைகள் நடாத்தப்பட்டு அவை தொடர்பிலான பயிற்சி பல்கலைக்கழக சமூகத்துக்கு வழங்கப்படுதலும் அவசியமாகிறது.
எம்மவரிடம் இருக்கும் திறமைகள் மழுங்கடிக்கப்படாமல் வெளியுலகுக்குத் தெரியப்படுத்தப்பட இவை நிச்சயம் தேவை. குறிப்பாக தலைநகரில் இருக்கும் பல்கலைக்கழகங்களுக்கு வெளித்தொடர்புகள் அதிகம் இருக்கும். ஆதலால் அப்பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் மாணவர்கள் வெளியுலகை முகம் கொடுக்கும் விதம் ஏனைய பல்கலைக்கழக மாணவர்களிடமிருந்து மாறுபட்டுக் காணப்படும்.
எம்மவர் தான் உலகெங்கும் வாழ்கிறார்களே! ஆதலால் எல்லோரையும் விட எமக்குத் தான் சர்வதேசத் தொடர்புகள் மிக அதிகம் இருக்கும். ஏனெனில் உலகின் பிரபல பல்கலைக்கழகங்களில் எல்லாம் இலங்கைத் தமிழர்கள் முக்கிய பதவிகளை வகிக்கிறார்கள். விரிவுரையாளர்களாகக் கடமையாற்றுகிறார்கள். பல்வேறுபட்ட ஆய்வுகளை மேற்கொள்கிறார்கள். யாழ். பல்கலைக்கழகத்துடனான அறிவுப் பகிர்வை, அனுபவப் பகிர்வை மேற்கொள்ள அவர்கள் முன்வரவேண்டும். அதற்கு பல்கலைக்கழகமும் ஒத்துழைக்க வேண்டும். பல்கலைக்கழக சமூகம் முன்னிலையடைய அது நிச்சயம் வழி வகுக்கும்.
யாழ்ப்பாணத்திலே இருக்கும் பாரம்பரிய வீடுகள், சொத்துகள் பல புலம் பெயர் தமிழர்களுக்குச் சொந்தமானவை. யாழ்ப்பாண வாழ்வியல் கண்காட்சி தொடர்பில் பொருட்களைச் சேகரிக்கச் சென்ற பல்கலைக்கழக குழுவினர் சில சிக்கல்களை எதிர்நோக்கினர். புலம் பெயர்ந்தவர்களுக்குச் சொந்தமானவற்றை பாதுகாவலர்கள் அவர்களிடம் வழங்க மறுத்து விட்டனர். ஆக புலம் பெயர் தமிழர்கள், தாம் அவற்றால் பயனடைய மாட்டோம் என நம்பும் பட்சத்தில் அவற்றைப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறையிடம் ஒப்படைக்க முடியும். எம்மவர் வாழ்வியலை ஆவணப்படுத்தும் முயற்சிகளுக்கு அது பேருதவியாக இருக்கும்.
சில குடும்பங்கள் தம்மிடம் இருக்கும் பழைமையான ஏடுகள், செப்பேடுகளை வழங்க மறுத்திருக்கின்றன. அசையாச் சொத்துகள் மீது தமக்கிருக்கும் உரிமை பறிபோய் விடுமோ என்ற அச்சம் கூட அவர்கள் அவ்வாறு நடக்கக் காரணமாகிறது என்கிறார் பேராசிரியர் புஷ்பரட்ணம்.
யுத்தம் என்ற அரக்கன் துரத்தத் துரத்த நாம் ஊர் ஊராய் ஓடியதால் எம்மை அறியாமலே இழந்து விட்டிருந்த தனித்துவத்தை இக்கண்காட்சி புடம் போட்டு காட்டியதுடன், நாம் மீள நினைத்துக் கூடப் பார்த்திராத நினைவுகளை எல்லாம் மீட்டு அந்த பசுமையான வாழ்விலே இன்னொரு முறை எம்மைச் சஞ்சரிக்க வைத்து கண்களைப் பனிக்கச் செய்தது எனலாம்.

Friday, December 2, 2011

கை வழி நயனம் செல்ல...

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒரு சனிக்கிழமை நூபுர நாதத்திலே கொழும்பு கதிரேசன் மண்டபம் லயித்துப் போயிருந்தது. கொஞ்சும் மழலையர் தொட்டு அழகு நங்கையர் வரை சகல வயதினரதும் நாட்டியத்தில் முழு அரங்கமுமே சொக்கிப் போயிருந்ததெனலாம். இலங்கையில் மட்டுமன்றி உலகிலும் தனக்கெனத் தனி முத்திரை பதித்திருக்கும் நாட்டிய கலா மந்திரின் மாணவியர் தான் அதற்குக் காரணமானவர்கள் என்பதில் மிகையேதுமில்லை.
“கை வழி நயனம் செல்ல, கண் வழி மனமும் செல்ல, ஐய நுண் இடையார் ஆடும் ஆடக அரங்கு”
என்ற கம்பராமாயண வரிகள் தான் நினைவுக்கு வந்தன. ஏறத்தாழ மூன்று தசாப்தங்களாக தனக்கே உரித்தான தனித்துவத்துடன் தலை நகரில் நிமிர்ந்து நிற்கும் கட்புல அரங்காற்றுகை மையம் தான் நாட்டிய கலா மந்திர். அதன் பின்னணியில் ஒரு பெரும் கலைப்பாரம்பரியம் மட்டும் காணப்படவில்லை. மூன்று சந்ததிகளின் உழைப்பு, ஆர்வம், ஊக்கம், ஒத்துழைப்பு, நம்பிக்கை என சகலதையும் இணைத்து கலாசூரி வாசுகி ஜெகதீஸ்வரன் நாட்டிய கலாமந்திரை வழி நடத்துகிறார். அவரது நெறியாள்கையிலே மாணவிகள் வழங்கிய நடனப்பிரசாதம் தான் நூபுர நாதம்.
நூபுரம் என்றால் சிலம்பு சலங்கை என்று பொருள் படும். பெயருக்கேற்ப சலங்கைகளின் நாதம் காதில் ஒலித்த படியே தான் இருந்தது.
பல்வேறு படி நிலைகளில் நடனக்கலையைப் பயிலும் நாட்டிய கலாமந்திர் கனிஷ்ட, சிரேஷ்ட மாணவர்கள் இணைந்து தம் திறன்களை மிக அருகாமையாக வெளிப்படுத்தியிருந்தார். கண்ணைக்கவரும் வகையிலே வடிவமைக்கப்பட்டிருந்த நேர்த்தியான ஆடை ஆபரணங்களும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த பயிற்சியும் நாட்டிய கலா மந்திரின் தனித்துவத்தை மீண்டும் ஒரு முறை நிலை நாட்டியிருந்தன எனலாம்.
சிவ கணேச வந்தனத்தில் ஆரம்பித்து ஐதீஸ்வரம் திருவாசகம் தொட்டு பாரதியார் பாடல், திருக்குறள் பரதம், வர்ணம், ஷக்தி கூத்து, எனக் கடந்து தில்லானா, தோல் என்ற பல்சுவை நடனத்துடன் நிறைவுற்ற நூபுர நாதம் இன்னும் எம் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
நாட்டிய கலாமந்திரின் மூன்றரை தசாப்த கால கலைப் பாரம்பரியத்திலே இந்த நூபுர நாதம் ஒரு மைல் கல் ஆகும். கலைக்காகவே தம் வாழ்வை அர்ப்பணித்த பெற்றோரான சண்முகம் பிள்ளை - விஜயலக்ஷ்மி தம்பதியிடமிருந்து தான் பெற்ற இந்த அரிய கலைச் செல்வத்தை அடுத்த சந்ததிக்கும் வழங்கிக் கொண்டிருக்கிறார் வாசுகி. அவரது சிரேஷ்ட மாணவியருள் இருவரான மங்களா கெளதம், வைத்தியக் கலாநிதி அஞ்சனா பால ரட்ணராஜா இருவர் தமது கணவர்கள் சகிதம் கெளரவ விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்தனர். நூபுர நாதத்தின் ஒரு அங்கமாக, தம் குரு வாசுகியுடனும், நாட்டிய கலா மந்திருடனுமான தமது அனுபவங்கைளப் பகிர்ந்தமை நிகழ்ச்சியின் சிறப்பம்சம் ஆகும்.
நாட்டிய கலாமந்திர் மாணவியராக இருந்த காலத்தில் தமக்குக் கிடைத்த அரிய சந்தர்ப்பங்களான, சிதம்பரம் நாட்டியோற்சவம், பிரசாந்தி நிலையத்தில் சாயிபாபாவின் முன்னிலையில் அரங்கேற்றிய நாட்டியம். தஞ்சை பெருங்கோவிலின் ஆயிரமானவது ஆண் விழாவில் ஆடிய ஆயிரம் கலைஞர்களுடன் இணைந்து பங்கேற்ற நடனம் போன்ற சந்தர்ப்பங்களில் தமக்குக் கிடைத்த அனுபங்கள், தம் மன உணர்வுகள், பரதம் கொண்டிருந்த தெய்வீகம் எனப் பல விடயங்களைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களது அனுபவங்கள் அரங்கத்தை மெய் சிலிர்க்க வைத்தது. பரதக் கலையின் உன்னதத்தை உணர வைத்தது. அத்துடன் வளர்ந்து வரும் கலைஞர்களுக்கு ஊக்கமளிப்பதாகவும் இருந்தது. பரதம் கற்பதாயின் பணச் செலவு மிக அதிகம் என்பது ஒரு சாராரின் கருத்து. அதில் உண்மை இல்லாமல இல்லை. ஆனால் பணத்துக்கு அப்பால் பரதக்கலையின் பின்னணியில் பல விடங்கள் இருக்கின்றன. மனிதப் பிறப்பின் உன்னத குறிக்கோளான தெய்வீகத்தை அடைய இக்கலை வழி வகுக்கும் என மங்களா கெளதம் அழகாக கூறியிருந்தார். பரதம் என்பது கலை மட்டுமல்ல. அதுவே கணிதம், அதுவே விஞ்ஞானமும் கூட என்று கலாக்ஷேத்ரா நாட்டியப் பள்ளியின் நிறுவுநர் தனஞ்சயன் ஐயா ஒருமுறை குறிப்பிட்டிருந்தார். அது லயம், தாளம் பிறழாமல், ஆழ்ந்த அவதானிப்புடன் ஆடவேண்டிய கலையாகும். அங்கு நுண்கணித அறிவு வளர்கிறது. எதை அபி நயிக்கவேண்டுமாயினும், முதலில் அதன் பின்னணியிலிருக்கும் விஞ்ஞானத்தைப் புரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது. என்று தனஞ்சயன் ஐயா அழகாக விளக்கியிருந்தார். அவரது கூற்றிலே எத்துனை பெரிய உண்மை இருக்கிறது என்பதை நூபுர நாதம் உணர்த்தியது.
அவை மட்டுமன்றி இந்த அரங்காற்றுகைகள் மாணவர்கள் மத்தியில் பரவலாகக் காணப்படும் மேடைக்கூச்சம், மனப்பயம் போன்றவற்றை தூர விலக்கி விடும் வல்லமை வாய்ந்தவை. அதேவேளை, அவர்கள் மத்தியில் தன்னம்பிக்கை வேரூன்றவும் வழி வகுக்கின்றன. வாழ்க்கையில் தன்னம்பிக்கையின்றி எதையுமே சாதிக்க முடியாதென்பது கண்கூடு. எந்த வித பயமுமின்றி, பிழை விட்ட போது கூட நயமாகத் திருத்தி ஆடிய பிஞ்சுப் பாதங்கள் அந்த உண்மையை அழகாக உணர்த்தின. கண்டிப்பான ஆசிரியை எனப் பெயர் பெற்ற போதும் தன் மாணவச் செல்வங்களின் நூபுர நாதத்தை அரங்கிலிருந்து பார்த்த குரு வாசுகியின் முகம் கொண்டிருந்த பெருமிதமும் அரங்கத்தை நிறைத்திருந்த மக்கள் கூட்டமும் வெற்றிச் சங்கை முழங்காமல் முழங்கின எனலாம்.
அவசர உலகில், மனதுக்கு இனிமை தர இப்படியான நூபுர நாதங்கள் நிச்சயம் தேவை தான்!