Sunday, November 13, 2011

கண்ணைக் குளமாக்கிய மண்ணின் வாழ்வியல் -06

நவீன நாடகங்களின் மூலவேர் கூத்து

இன்று திரைப்படங்களிலும் மிக அரிதாக திருவிழாக்களிலுமே நாம் கிராமியக் கலை வடிவங்களைக் காண்கிறோம். ஆனால் ஒரு காலத்திலே அவை அன்றாட வாழ்வியலுடன் பிணைந்திருந்தன. இந்த கிராமியக் கலைகள் கிராமங்களிலே ஓய்வு நேரங்களில் பயிலப்பட்டு வந்தவை. அவை சந்ததி சந்ததியாகக் கடத்தப்பட்டும் வந்தன. இந்தக் கலைகள் கிராமிய வாழ்வின் கலை இலக்கிய வெளிப்பாடாக மட்டும் இருக்கவில்லை. மக்களுக்கு உடற்பயிற்சியை அளித்தன. பொழுது போக்காகவும் அறிவூட்டுவனவாகவும் கூட இருந்தன. மக்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் கருவிகளாகவும் கூட விளங்கின.
ஆனால், உலக மயமாக்கல் அந்த கிராமியக் கலைகள் மீதான மக்களின் நாட்டத்தை குறைத்துக் கொண்டே செல்கின்றது. இதே நிலைமை தொடர்ந்தால், காலப்போக்கிலே அவை அழிந்து போய்விடும் என்பதில் எதுவித ஐயமும் இல்லை. ஒரு தேசத்தின் தனித்துவம் கிராமத்தில் இருக்கும் என்பர் எம்மவர்.
கிராமிய கலை வடிவங்களை ஆராய்ந்தால் அந்த உண்மை புலப்படும், யாழ். மண்ணிலே ஐரோப்பியர் கால் பதிக்க முன்னர், அம் மண்ணின் சமூகக் கட்டமைப்பு தன்னிறைவான கிராமியப் பொருளாதாரப் பண்புகளையும் சாதியத்தின் அடிப்படையில் உருவான தொழிற்பிரிப்புகளையும் கொண்டிருந்தது. அதே அடிப்படையில் தான் கலைப் பாரம்பரியங்களும் நிலை பெற்றிருந்தனவென பேராசிரியர் சபா ஜெயராஜா கூறுகிறார். தவில் போன்ற சில கலை வடிவங்கள் செல்வந்தர்களின் அரவணைப்பிலே வளர்ந்தன.
அதேவேளை கரகாட்டம், காவடியாட்டம் போன்ற கலைகள் சுயாதீன கலைஞர்களின் பராமரிப்பிலே வளர்ந்தன. இவை குடும்பங்களில் பரம்பரை பரம்பரையாகக் கடத்தப்பட்டு ஆற்றுகை செய்யப்பட்டன. யாழ். மண்ணின் பரந்து பட்ட வாழ்க்கை முறைமைக்கும் பன்முகப்படுத்தப்பட்ட பண்பாட்டுக் கோலங்களுக்கும் வலிமையான சான்றாக இருப்பவை இந்த கலை வடிவங்கள் என்பதை நாம் ஒரு போதும் மறுக்க முடியாது.
வட பகுதியெங்கிலும் பரவலாக வழக்கிலிருந்து இந்தக் கலை வடிவங்களை இன்று அங்கொன்றும் இங்கொன்றுமாய் வெகு அரிதாகத்தான் காண முடிகிறது. அதை எவராலும் மறுக்க முடியாது. இந்த கண்காட்சியிலே கிராமியக் கலை வடிவங்களுக்கு தனிக் கூடமே ஒதுக்கப்பட்டிருந்தது.
அந்த அரிய கலைகளுடன் தொடர்புபட்ட பல விடயங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. அவை யாழ். வாழ்வியலின் கலை பண்பாட்டு அம்சங்களைப் பிரதி பலித்தன. கோயில்களிலே இறைவனைக் காவும் வாகனங்களும், பொய்க்கால் குதிரைகளும் கூட காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. திருமணச் சடங்கு போன்ற நிகழ்ச்சிகளிலே பந்தல் போடும் போது பயன்படுத்தப்படும் கலையம்சங்கள், மான் கொம்புகள், கிராமியக் கலையுடன் தொடர்புடைய இசைக் கருவிகள், அலங்காரப் பொருட்கள், உபகரணங்கள், சிறப்பு அணிகலன்கள், கடைகளில் வைக்கப்படும் காசுப்பெட்டிகள், பெட்டகங்கள், சிதிலமடைந்த இறை வாகனங்கள், போன்றனவும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
பொய்க்கால் குதிரையாட்டமானது இணுவில், அளவெட்டி, சித்தன்கேணி போன்ற பகுதிகளில் வெகு பிரபலமாக இருந்தது. யாழ்ப்பாணத்தை ஐரோப்பியர் ஆட்சி செய்த காலத்திலே மாட்டு வண்டிகளும் குதிரை வண்டிகளும் பயன்பாட்டில் இருந்தன. குதிரையானது அந்தஸ்தின் சின்னமாகக் கருதப்பட்டது.
அரசாங்கத்தில் உயர் பதவி வகித்தவர்கள் குதிரை வண்டிகளிலே பயணித்தனர். இதன் விரிவாக்கமே திருவிழாக்களில் நடத்தப்படும் குதிரையாட்டம் ஆகும். அவ்வாறு நடாத்துதல் உயர் அந்தஸ்தை அளிப்பதாகக் கருதப்பட்டது. ஆடுவதற்குப் பயன்படுத்தப்பட்ட குதிரைகள் மென்மையான மரங்களைக் குடைந்து தயாரிக்கப்பட்டன.
முன்னர் வீடுகளிலே அலங்காரப் பொருட்களாக மான் கொம்புகள் வைக்கப்பட்டிருந்தன. அத்துடன் அவற்றை வைத்திருந்தால் செல்வம் கொழிக்கும் என்ற நம்பிக்கையும் ஆரம்ப கால மக்களிடத்தே காணப்பட்டது. மாடுகளின் முகங்களைப் போன்ற உருவமைப்புகளை வீட்டு வாசலில் வைப்பதும் கூட வழக்கமாக இருந்தது.
காத்தவராயன் கூத்து, சங்கிலியன் நாடகம் போன்ற பல கலைகளிலே பயன்படுத்தப்படும் வாள்களும் கூட அங்கு வைக்கப்பட்டிருந்தன. காவடி, கரகாட்டம் போன்ற கலைகள் எம் இந்து சமயப் பண்பாட்டின் முக்கிய அம்சங்களாகக் காணப்படுகின்றன. அத்தகைய கரகங்கள், காவடிகளையும் கூட அங்கு காண முடிந்தது. கரகத்தை காவடியுடன் இணைத்துக் கரகக் காவடி என்றொரு நடன வடிவம் யாழ்ப்பாணத்தில் இருந்ததாக த. சண்முக சுந்தரம் குறிப்பிடுகிறார்.
கிராமியக் கலைகளிலே பயன்படுத்தப்பட்ட முடிகளும் கோயில்களில் சிறப்பு நிகழ்வுகள், பொம்மலாட்டங்களின் போது பயன்படுத்தப்படும் முக மூடிகளும் கூட காணப்பட்டன. யாழ்ப்பாணம் என்ற பெயர் உருவாகக் காரணம், பாணன் யாழ் வாசித்தமை என்று கூறுவர். அந்த யாழ் என்ற இசைக்கருவியை கண்களால் கண்டவர்கள் வெகுசிலர் என்று தான் கூற வேண்டும். யாழின் பரிணாமமே வீணை என்றும் கூறுவர். அந்த யாழின் மாதிரியும் மரத்தால் செய்து வைக்கப்பட்டிருந்தது.
அத்துடன், பாவனைக்குகந்ததல்லாத ஹார்மோனியப் பெட்டிகளும் வைக்கப்பட்டிருந்தன. வீட்டு யன்னல்களை அலங்கரித்த மர வேலைப்பாடுகளின் சிதிலங்களும் கூட காணப்பட்டன.
எம்மவர் சடங்கு சம்பிரதாயங்களிலே பூ மாலைக்கு மிக முக்கிய இடம் வழங்கப்பட்டிருந்தது. ஒரு குழந்தை பிறப்பதிலிருந்து அது முதிர்வடைந்து இறப்பது வரை ஒவ்வொரு தேவைக்கும் ஒவ்வொரு வகைப் பூமாலை பயன்பட்டது. கொண்டை மாலை, மொட்டு மாலை, சரம், கதம்பச் சரம், கழுத்து மாலை, கரவாரம் என எத்தனை வகைகள் தெரியுமா? அவை எல்லாம் இன்று காணாமலே போய் விட்டன என்று தான் கூறவேண்டும.
அதைவிட அவை, தத்ரூபமாக வடிவமைக்கப்பட்ட பிளாஸ்டிக் மாலைகளால் பிரதி செய்யப்பட்டு விட்டன என்று கூறுதல் தகும். இங்கு வருந்த வேண்டிய விடயம் யாதெனில் கொழும்பு போன்ற கட்டடங்கள் நிறைந்த நகரப் பகுதிகளை விட யாழ்ப்பாணம், வவுனியா போன்ற பிரதேசங்களில் இந்த பிளாஸ்டிக் துணி பூமாலைகளின் பாவனை அதிகமாக இருப்பதைக் காண முடிகிறது. அதை உணர்ந்திருப்பவர்கள் வெகு சிலரே. ஆக இந்த வாழ்வியல் அம்சங்கள் தொலைந்து போவதற்கான பிரதான காரணம் எம் அலட்சியமே எனலாம். கிராமியக் கலை வடிவங்கள் எனப்படுபவை ஆதி மனிதனுக்கு ஏற்பட்ட உணர்வுகளின் வெளிப்பாடாக உருவான வை.
அந்த வெளிப்பாடு பல்வேறு விதமாகப் பரிணமித்தமை யைத் தான் இக் கலை வடிவங்களாகக் காண்கிறோம். இன்று நாம் நவீனம் என்று பற்றி நிற்கும் கலை வடிவங்களு க்கு மூலமாக இருந்தவை இந்த கிராமியக் கலைகளே! இன்றைய நாடகங்கள் அன்றைய கூத்தின்படி முறை வளர்ச்சியால் உருவானவை. இந்த அரிய கலை வடிவங் களைக் கவனிக்காது விடுதல் என்பது பிள்ளைகள் தம் பெற்றோரை அலட்சியப்படுத்துவதற்குச் சமனானது.
இந்தக் கலை வடிவங்கள் அற்றுப் போய்விடக்கூடாது என்பதனாலோ என்னவோ, யாழ்ப்பாண வாழ்வியல் கண்காட்சியின் ஆரம்ப நாள் நிகழ்விலே அதிதிகளை வரவேற்கும் போது கூட அவை வெளிப்படுத்த ப்பட்டன. இந்தக் கலை வடிவங்கள் ஊக்குவிக்கப்படாமல், அலட்சியப்படுத்தப்படுவதால், கலைஞர்களும் பெரும் பாதிப்புக்குள்ளாகிறார்கள். இந்த கலைகளையே தொழிலாகக் கொண்டு வாழ்ந்தவர்களின் வாழ்க்கை இன்று கேள்விக்குறியாகி விட்டது.
அதேவேளை இந்தக் கலைகளைப் பயின்று அதை அடுத்த சந்ததிக்குக் கொண்டு போகத் தயாராக இருக்கும் இளஞ்சந்ததியர் வெகு சிலரே பணத்தை மட்டுமே மதிக்கும் உலகில் அதிக வருமானம் ஈட்டும் தொழில்கள் மீதான நாட்டம் தவிர்க்க முடியாததல்லவா? அவர்களையும் பிழை சொல்ல முடியாது. எத்தனையோ பிரபலமான கூத்துக் கலைஞர்களை எல்லாம் எம் மண் உருவாக்கியிருக்கிறது. அதை அறிய வேண்டும் என்றால் கூட நூலகத்துக்குச் சென்று புத்தகங்களைத் தான் வாசிக்க வேண்டும்.
இதுவே இன்றைய யதார்த்தம். அந்த கலைஞர்கள் உருவாக வேண்டும்; அவர்களுடன் சேர்ந்து இந்தக் கலை வடிவங்களும் வாழ வேண்டும் என்றால், நாம் அக்கலைகளை மதித்து ஊக்குவிக்க வேண்டும். வீண் நியாயங்க ளைச் சொல்லி காலத்தை வீணடிப்ப தென்பது தேவையற்ற ஒரு விடயம், என்று தான் கூற வேண்டும். (தொடரும்)

Sunday, November 6, 2011

கண்ணைக் குளமாக்கிய மண்ணின் வாழ்வியல்-5


உணராவிட்டால் உய்வில்லை

பணமிருந்தால் சாதிக்கலாம் என்ற கொள்கை எம்மவரிடத்தே பரவ லாகக் காணப்படும் போது, இயற்கையோடு இயைந்த, சுற்றுச்சூழலு டன் நட்புறவான வாழ்வியலைப் பற்றி யார் சிந்திப்பார்கள்? ஏதோ ஒரு போதைக்குள் அருண்டு போயிருக்கும் எம் சமூகத்தை யாழ்ப்பாண வாழ்வியல் கண்காட்சி சிந்திக்க வைத்திருக்கிறது. ஆர்வலர்களுக்குக் கிடைத்திருக்கும் உன்னத வாய்ப்பு இது.
இதையே தக்க தருணமாகக் கொண்டு மக்கள் மத்தியில் பனம் பொருட்களின் பாவனை பற்றி விளக்க அவர்கள் முன்வர வேண்டும். அவற்றின் பாவனையை அதிகப் படுத்தவேண்டும்.
இது பனம் பொருள் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும். அவர்களது வாழ்க்கைத்தரம் மேம்பட வழிவகுக்கும். அதே வேளை எமக்கே உரித்தான கலையாகக் கருதப்படும் பனம் பொருள் உற்பத்தி தொடர்பான நுணுக்கங்கள் அடுத்த சந்ததிக்கு கடத்தப்படும். எமது சுற்றுச்சூழலும் பாதிக்கப்படாது. சம்பந்தப்பட்ட அதிகாரத்தரப்பு இவற்றை எல்லாம் பற்றிச் சிந்திக்க வேண்டும்.
எந்த மேற்குலகு பொலித்தீன், பிளாஸ்டிக் பாவனைகளை கீழைத்தேய நாடுகளில் அறிமுகப்படுத்தியதோ, அதே மேற்குலகு தான் இன்று பசுமை வாழ்வியலைக் கடைப்பிடிக்கிறது. ஆனால் மாறாக பரம்பரை பரம்பரையாகக் கைக் கொண்டு வந்த பசுமை வாழ்வியலை நாம் கை கழுவி விட்டிருக்கிறோம். அதேவேளை, மேற்குலகு கழித்து விட்ட வாழ்வியலைப் பெருமையாகப் பின் பற்றுகிறோம். அதே மேற்குலகு இன்று எல்லாத் துறைகளிலும் பசுமையை அறிமுகப்படுத்தியிருக்கிறது.
ஏதோ புதிய துறைகள் போலும் என எண்ணி நாமும் அவற்றை நாடுகிறோம். சுற்றுச் சூழல் கெடாமல் இருப்பதற்காக புதிய தர நிர்ணயங்கள் உருவாகிவிட்டன. அவற்றைப் பின்பற்ற அல்லாடுகிறோம். அப்போதும் கூட அந்த அடிப்படை உண்மை எமக்கு விளங்குவதாகத் தெரியவில்லை. நாம் கை விட்ட வாழ்வியல் வர்த்தக நோக்குடன் எம் மீது திணிக்கப்படுகிறது.
அது எமக்கே உரித்தான வாழ்வியல் பாங்கு என்று தெரியாமல் அதைப் பின்பற்ற நாம் படும்பாடு சொல்லிலடங்கா ஏனெனில், அந்த வாழ்வியல் எப்போதோ எம்மை விட்டு வெகு தொலைவுக்குச் சென்று விட்டது. இலகு வழிகளையும் பணத்தையும் மட்டுமே நோக்கி நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம். இதை நாமாக உணர்ந்து மீளாவிட்டால் உய்வே இல்லை எனலாம்.
பட்டை, பிழா, தொப்பி, தட்டுவம், வெங்காயக் கூடை, உறி, பெட்டி, மூடு பெட்டி, கொட்டைப் பெட்டி, கூடை, கடகம், பாய் என வகை வகையாகக் காட்சிப்படுத்தப்பட்டிருந்த அந்த பனை உற்பத்திப் பொருட்கள் எம்மை வெட்கித் தலை குனிய வைத்தன என்று தான் கூற வேண்டும். எத்தனை உன்னதமான வாழ்வைத் தொலைத்து விட்டிருக்கிறோம் என உள்ளூணர்வு உறுத்தியமையும் கூட தவிர்க்க முடியாததாகியது.
அந்தக் காட்சி அரங்கைக் கடந்து சென்ற போது அமைக்கப்பட்டிருந்த அரங்கிலே யாழ்ப்பாணத்தின் பாரம்பரிய வாழ்க்கை முறையை வெளிப்படுத்தும் பலதரப்பட்ட பொருட்களும் புகைப்படங்களும் வைக்கப்பட்டிருந்தன. யாழ்ப்பாணத்திலே புழக்கத்திலிருந்த நிறுத்தலளவைகள் எல்லாம் மெள்ள மெள்ள வழக்கொழிந்து போய்க் கொண்டிருக்கின்றன. நாழி, கால்படி, அரைப்படி என அரிசி அளப்பதில் தொடங்கி அன்றாட சமையல் பொருட்களை அளப்பதுவரை பயன்படுத்தப்பட்ட அளவைகள் பல அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
வெற்றிலையும் பாக்கும் எம்மவர் மத்தியில் வெகு சகஜமான புழக்கத்திலிருந்தன என்று கூறலாம். அதை இக்கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த பாக்குவெட்டிகள், பாக்கு இடிக்கும் உரல், சுண்ணாம்பு கிண்ணம் போன்ற உபகரணங்கள் தெளிவாகக் கூறின. அவ்வுபகரணங்கள் சிறியனவாயினும் எத்தனை நுட்பங்களுக்கமைவாக, எத்துணை சிறப்பான உத்திகளுடன் கலை நயமாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன என்று எண்ணிப் பார்த்தால் வியப்பு மட்டுமே மிஞ்சும்.
அந்த உபரகணங்கள் எம்மவர்களுக்கு எவ்வளவு முக்கியமானவையாக இருந்தன என்பதை அவை வடிவமைக்கப்பட்டிருக்கும் பாங்கு எடுத்தியம்பும். ஒவ்வொன்றிலும் பல வடிவமைப்புகள் என்று கூறுதல் தகும். புகைத்தல் தட்டங்களும் கூட வைக்கப்பட்டிருந்தன. அவற்றில் பெரும்பாலானவை பித்தளை, இரும்பு போன்ற உலோகங்களால் ஆனவை. உலோகக் கத்திகள், கொக்கை சத்தகம், காம்புச் சத்தகம், உலோகக் கரண்டிகள், பால் வடிகள் என எண்ணற்ற பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
காலனித்துவ ஆட்சிக் காலத்திலே அறிமுகமாகிய வெண்களி, கண்ணாடிச் சாடிகள் பலவும் அவற்றுள் அடங்கும். அதே காலத்தில் தான் சோடியம் செலோலைட் நீர் வடிகட்டியும் அறிமுகப்படுத்தப்பட்டது. வெண்களியினாலான அந்த குடி நீர் வடி கட்டியைப் பார்த்த போது பால்ய கால நினைவலைகள் உள்ளக்கரையைத் தொட்டுச் சென்றன.
மூங்கில் பிட்டுக் குழல், அதில் அவிக்கும் பிட்டின் சுவையை எண்ணி வாயூற வைத்தது. வடக்கிலே மின்சாரத்தை நினைத்துப் பார்க்க முடியாத காலம் ஒன்று இருந்தது. அப்போதெல்லாம் ஆடைகளை அழுத்துவதற்குக் கைகொடுத்தவை சிரட்டைக் கரி அழுத்திகள் தான். வார இறுதி நாட்களில் சிரட்டை எரித்து பாடசாலைச் சீருடைகளை அழுத்துவது ஒரு தனி வேலை. அரங்கிலே வைக்கப்பட்டிருந்த கரி அழுத்திகளைக் கண்டபோது மனம் பள்ளி நினைவுகளை மீட்டது.
வட இலங்கைக் கடற் சூழல் தொகுதி இன்றும் கூட உயிர்ப்பல்வகைமை செறிந்ததாகக் காணப்படுகிறது. கடல் வாழ் உயிரினங்களின் வெளியோடுகளை, அழகுக்காக மட்டுமன்றி வேறுபல தேவைகளுக்காகவும் எம்மவர்கள் பயன்படுத்தினர். அத்தகைய அபூர்வ சங்குகள் கூட காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. மரம், உலோகத்தாலான பாதரட்சைகள் சிலவற்றையும் காணமுடிந்தது. பாதரட்சை என்றால் முனிவர்கள் மட்டும் தான் அணிவார்கள் என்ற எண்ணப்பாடுகளைக் கொண்டிருந்த இன்றைய இளஞ்சந்ததியர் அவற்றைப் புதினமாகப் பார்த்தமையையும் காண முடிந்தது.
நூற்றாண்டு பழைமையான ஏடுகளைக் கட்டுக் கட்டாகக் காண முடிந்தது. அவை எல்லாம் எம் வரலாற்றின் தொன்மையை எடுத்தியம்பின எனலாம். ஏடுகளைப் பாதுகாப்பாக வைப்பதற்குரிய பெட்டி வியக்க வைத்தது.
ரங்குப் பெட்டிகள் என அன்றாடப் பேச்சு வழக்கில் அழைக்கப்படும் ட்ரங்க் பெட்டிளும் பெட்டகமும் கூட வைக்கப்பட்டிருந்தன. 100 வருடங்கள் பழைமையான மண்ணெண்ணெயும் கண்ணாடிச் சாடியும் பார்வையாளர்களைக் கவர்ந்தன. சென்ற நூற்றாண்டிலே பாவனையிலிருந்த புடவைகள் பொம்மைகளுக்கு உடுத்தப்பட்டிருந்தன.
இந்த கண்காட்சி அரங்கிலே வைக்கப்பட்டிருந்த பொருட்களில் பெரும்பாலானவை தற்போது யாழ்ப்பாணத்திலே வசித்து வரும் பொது மக்களிடமிருந்து பெறப்பட்டவை.
இத்தனை இடப்பெயர்வுகள், அழிவுகளைக் கடந்து வந்திருக்கும் அம்மக்களிடமிருந்து இவ்வளவு பொருட்கள் பெறப்பட்டிருக்கின்றன. எனில் நாம் சில விடயங்கள் பற்றி சிந்தித்தேயாக வேண்டும்.
காலங்காலமாக, ஊர் விட்டு ஊர் ஓடி, அழிவுகளுக்கும் திருட்டுகளுக்கும் முகங் கொடுத்த தற்போது தான் ஒரு அமைதி நிலையை அடைந்திருக்கின்றனர் எம் மக்கள். அப்படியாயின் இவற்றை ஒத்த எத்தனை பொருட்கள் அன்று அவர்களிடம் இருந்திருக்கும் என எண்ணியாவது பார்க்க முடிகிறதா? இவ்வளவு துன்பங்களின் பின்னரும் பணத்தாசைக்கு விலை போகாமல் மூதாதையர்கள் தமக்காக விட்டுச் சென்ற சொத்துக்களை பேணி வைத்திருக்கும் இம் மக்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள்.
அந்த ஒரு சிலரிடம் காணப்பட்ட விழிப்புணர்வும் பொறுப்பும் மற்றவர்கள் கற்றுக் கொள்ள வேண்டியவை.

Saturday, October 29, 2011

கண்ணைக் குளமாக்கிய மண்ணின் வாழ்வியல்-4

யாழ்ப்பாணத்து மண்ணுடன் பனை பின்னிப் பிணைந்தது!

அந்தக் கண்காட்சி அரங்கைக் கடந்த போது, பொறிமுறை உபகரணங்கள் வைக்கப்பட்டிருந்த ஆறாவது அரங்குக்குச் செல்ல முடிந்தது. இன்றைய இளஞ்சந்ததி கண்டறியாத பொறிமுறை உபகரணங்கள் பல வைக்கப்பட்டிருந்தன. கடந்த ஒன்றரை நூற்றாண்டு காலத்திலே யாழ்ப்பாணத்தில் புழக்கத்தில் இருந்த பொறிமுறை உபகரணங்களான வானொலிப் பெட்டி, கிராமபோன், கையால் இயக்கும் சிறிய தையல் இயந்திரம் போன்ற பல அவற்றுள் அடங்கும். அவற்றைக் கண்டவுடன் மூத்த சந்ததியர் தம் பழைய நினைவுகளை மீட்கத் தொடங்கி
யிருந்தமையையும், தம்மோடு வந்திருந்த இளஞ்சந்ததியினருக்கு, அந்தக் காலத்து நினைவுகளை விளக்கியதையும் காணாக்கூடியதாக இருந்தது. அவற்றைப் பற்றிய விளக்கங்களை வழிகாட்டியாய் நின்றிருந்த
மாணவர்கள் அளித்திருந்தால் அந்த அரங்கில் கிடைத்த அனுபவம் மேலும் சிறப்பாக அமைந்திருக்கும்.

யாழ்ப்பாண வாழ்வியலுடன் பனை வளம் பின்னிப் பிணைந்தது. தெற்கிலிருந்து பயணிக்கும் போது யாழ்ப்பாணத்தை அண்மிக்கிறோம் என்பதன் அடையாளமாக
அந்தப் பனை மரங்கள் இருந்தன. இன்றும் வழி நெடுகிலும் தலையிழந்து காட்சி தருகின்றன. கடந்த காலத்தின் கொடூர யுத்தம் அவற்றை அப்படி மாற்றியிருக்கிறது. பனையைக் கற்பக தரு என்பர். கட்டும் வீட்டிலிருந்து படுக்கும் பாய் வரை பனை எம் நடை முறை வாழ்வுடன் இயைந்ததாய் இருந்தது. ஆனால் நவீனம் அந்த வாழ்வியலைக் கைவிட வைத்து விட்டது எனலாம். அதனால் இன்றைய இளஞ்சந்ததியினருக்கு பனையின் அருமை தெரியவில்லை. அதைத் தெரிந்துகொள்ளவும் அவர்கள் ஆர்வப்பட்டதாகத் தெரியவில்லை. இந்தக் கண்காட்சி நிச்சயம் அவர்கள் மத்தியில் நிச்சயம் ஒரு விழிப்புணர்வைத் தோற்றுவித்திருக்கும் என நம்பலாம்.
யாழ் குடாநாட்டு பழங்குடி மக்கள் பனை ஓலைகளால் வேயப்பட்ட வீடுகளிலேயே வாழ்ந்தார்கள். அது தவிர புதிதாக வீடு கட்டுவதற்கும் பனை மரங்களில் இருந்து பெறப்பட்ட மரக்குற்றிகள், சிலாகைகள், வளைவுகள் என்பவற்றை அவர்கள் பயன்படுத்தினார்கள். பனை மரம் மூலம் பெறப்பட்ட பொருட்களின் இருந்து கட்டப்பட்ட வீடுகள் வெயில் காலத்தில் குளிர்ச்சியையும் மழைகாலத்தில் இதமான வெப்பத்தையும் கொடுத்தது. இதனால் வருடம் முழுவதும் சிறந்த சுவாத்தியத்துடன் அவர்கள் ஆரோக்கியமாகவும் மனநிறைவோடும் வாழ்ந்தார்கள்.
பாய், சுளகு, கொட்டைப் பெட்டி , பெட்டி, மூடு பெட்டி, கடகம், உறி, திருகணை , கூடை, பட்டை, பிளா, குடுவை , தட்டுவம், தொப்பி, நீத்துப்பெட்டி என வைக்கப்பட்டிருந்த எண்ணற்ற பனை உற்பத்திப்பொருட்கள் பிரமிக்க வைத்தன. எம் வாழ்வியல் எவ்வளவு தூரம் இயற்கையுடன் பின்னிப் பிணைந்திருந்தது என்பதற்கு அவை ஒவ்வொன்றும் சான்று பகர்ந்தன.
மின்சாரத்தைக் காணாத காலம் அது. குளிர்சாதனப்பெட்டிகள் இல்லை. ஆனால் இரவு ஓலைப்பெட்டியில் போட்டு மூடி வைத்த பிட்டு, காலையிலும் அப்போது தான் புதிதாக அவித்தது போல் இருப்பதன் இரகசியம் தான் என்ன? அது தான் பனை சொல்லும் வாழ்வு.
பனை ஒலைகளால் பொருட்களைப் பின்னுவதென்பது ஒரு அழகான கலை. ஒவ்வொரு பொருளைப் பின்னுவதற்கும் ஒவ்வொரு நுட்பம் இருக்கும். அவை எல்லாம் இன்று காணாமல் போய்க்கொண்டிருக்கின்றன என்பது தான் கசப்பான உண்மை. மூத்த சந்ததிக்குத்தான் அந்த நுட்பங்கள் தெரிந்திருக்கிறது. இடையிலே ஒரு பெரிய சந்ததி இடைவெளியை யுத்தம் ஏற்படுத்தி விட்டது. இளஞ்சந்ததி சற்று ஆர்வமாகத்தான் இருக்கிறது. இங்கு சந்ததி இடைவெளிகள் நிரப்பப்படுவதும் அவசியமாகிறது. அதே வேளை மூத்த சந்ததி மறைய முதல் , மூன்றாவது சந்ததிக்காவது அந்தக் கலை நுட்பங்கள் கடத்தப்பட வேண்டும். அவை எல்லாம் எமது கைகளில் தான் இருக்கின்றன. பாடசாலைக் காலங்களில் வடலிக் குருத்தோலைகளில் செய்யக் கற்றுக்கொண்ட கைப்பணிகள் எல்லாம் மனக்கண்ணில் ஒருகணம் வந்து போயின. இடப்பெயர்வுகளுக்குமப்பால் நவீனம் நோக்கிய எமது பயணமானது, எம் பாரம்பரிய வாழ்வியலிலிருந்து எம்மை எவ்வளவு தூரம் தனிமைப் படுத்தி விட்டது உணர முடிந்தது.
ஏறத்தாழ 15 வருடங்களுக்கு முன்பு, வடக்கிலே மின்சாரமில்லை. தொலைக்காட்சி , கணினி முதலாய நவீன பொழுது போக்குகள் இல்லை. வீட்டிலிருக்கும் முதியவர்கள் பாடசாலை விடுமுறை நாட்களிலே, இந்த அருங்கலைகளை சிறார்களுக்கும் கற்றுத்தருவார்கள். அதை விட ஓய்வு நேரங்களில் பனையோலைப் பொருட்களைப் பின்னுவதே அவர்களது வேலையாக இருக்கும். தாம் தயாரித்த பொருட்களை வீட்டுத்தேவைகளுக்கு மட்டுமன்றி, அயலவர்களுக்கும் கூட அன்பளிப்பாகத் தருவார்கள். எங்காவது பயணம் போகும் போதும் கொண்டு சென்று கொடுப்பார்கள். அவற்றைப் பெற்றுக்கொண்டவர்கள் " இது ஊரிலிருந்து ஆச்சி/அப்பு கொண்டுவந்தது"என்று பெருமையாகக் கூறுவதை நாம் கண்டிருப்போம். அந்த அழகிய வாழ்வு இன்று எங்கே போய் விட்டது?
இங்கு வருத்தத்துக்குரிய விடயம் யாதெனில், இக்காலத்தில் இந்தப் பொருட்களையெல்லாம் பிளாஸ்டிக், கறையில் உருக்குப் பொருட்கள் பிரதியீடு செய்து விட்டன. நீண்டகாலப் பாவனையையும் இலகு தன்மையையும் கருத்தில் கொண்டு நாம் பனம்பொருட்களைக் கைவிட்டு விட்டோம்.
ஆனால் அந்த நீண்ட காலத்துக்கு நிலைக்கும் என எண்ணும் பிளாஸ்டிக் பாவனைப் பொருட்களால் எவ்வளவு தூரம் எம் சுற்றுச்சூழல் மாசடைகிறது என்பது பற்றி நாம் சிந்திப்பதில்லை. அவற்றால் எத்தனை கொடிய விளைவுகள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன? ஏற்படப்போகின்றன என்பது பற்றியும் கவலைப்படுவதில்லை. நாம் கொண்டிருக்கும் இத்தகைய அலட்சியப்போக்கானது, எம் எதிர்காலச் சந்ததிக்கு ஒரு சுகாதாரமற்ற சூழலைத் தான் விட்டுவைக்கும். இது எமது உலகின் நிலை. ஏனெனில் யுத்தம் எம்மை ஒரு குறுகிய வட்டத்திற்குள் முடக்கி விட்டது.
யுத்தம் நிலவிய கடின சூழலில் அந்த நிலைமை தவிர்க்க முடியாததாகவும் இருந்தது. வெளி உலகில் என்ன நடக்கிறது என அறியும் ஆர்வம் எம்மக்களிடம் காணப்படவில்லை. ஏனெனில் தத்தமது பாடுகளைப் பார்ப்பதே அவர்களுக்குக் கடினமாக இருந்தது. ஆனால் யுத்தம் ஓய்ந்த இன்றைய சூழலில், நிலைமே வேறுபக்கமாகத் திரும்பியது. ஒரு காலம், தேடலுக்காகவே தன்னை அர்ப்பணித்த சமூகம், இன்று பணத்தின் காலடியில் விழுந்து கிடக்கிறதோ எனவும் எண்ணத்தோன்றும். பணத்துக்கு அத்துணை மரியாதை. இப்போதும் தேடல் காணாமல் போய் விட்டது. வெளியுலகத்தைப் பார்க்கும் ஆர்வம் அதிகரிக்கவில்லை. பணமிருந்தால் எதையும் சாதிக்கலாம் என்ற கொள்கை வேகமாகப் பரவி வருகிறது எனலாம்.

Friday, October 28, 2011

சீன வெடி இல்லாத தீபாவளி!

தீபாவளி மூன்று தசாப்தங்களுக்கு முந்திய காலம் வரை அது ஒரு மகிழ்ச்சியான பண்டிகை. ஊரே இணைந்து கொண்டாடிய பண்டிகை. உள் நாட்டு யுத்தம் என்று வெடித்ததோ, அன்றோடு எம் பண்டிகைகளும்தம் தனித்துவத்தை இழக்கத்தொடங்கின என்று தான் கூற வேண்டும். அமைந்தியாய் இருந்த வாழ்வியல்பின்னர் இடப்பெயர்வு எப்போ என எதிர்பார்த்து, எப்போதும் தயாராக இருக்கும் வாழ்வியலாய்ப் பரிணமித்தது.  அக்காலப்பகுதிகளிலே ஜனித்த குழந்தைகள் தான் இன்றைய இளஞ்சந்ததியர். நாளை புதியதொரு சந்ததியை வழி நடத்தப் போகிறவர்கள். அவர்கள் உலகை அறியத்தொடங்கியிருந்த காலம் மிகவும் கொடியது என்றுதான் கூற வேண்டும். காலம் காலமாக சம்பிரதாய பூர்வமாகக் கொண்டாடப்பட்டு வந்த பண்டிகைகள் எல்லாம் அக்காலத்தில் செயலிழந்து போயின. ஆதலினால் எம்பண்டிகைகள் காவி வந்த தார்ப்பரியங்களும் மெல்ல மெல்ல மறைந்து போயின. ஆனால் பண்டிகைகள் மட்டும் நிலைத்திருந்து புதிய பல தார்ப்பரியங்கள் முளை விட வழிவகுத்து விட்டன என்றே கூற வேண்டும்.

இன்று இருந்த இடம் என்னவென்றே தெரியாமல் மறைந்துபோய்க்கொண்டிருக்கும் தார்ப்பரியங்களை எம் மூத்தவர்களிடமிருந்து நாம் அறிந்து கொள்ள வேண்டும். இல்லையெனில் எம்மால் அவற்றை அடுத்த சந்ததிக்கு க் கடத்த முடியாமல் போய்விடும். 80 களுக்கு முற்பட்ட காலங்களிலே தீபாவளி எப்படி களை கட்டியிருந்தது என்று பேராசிரியர் சிவச்சந்திரன் யாழ். தினகரனுடன் பகிர்ந்து கொண்டார்.
   இலங்கையிலே இந்தியாவைப்போல வெகு கோலாகலமாக தீபாவளிப்பண்டிகை கொண்டாடப் படுவதில்லை. தீபாவளியை ஒட்டிய முரண்பாட்டுக் கொள்கைகளை திராவிட முன்னேற்றக் கழகம் கொண்டிருந்தது. அதனால் தீபாவளியை ஒரு ஆரியப் பண்டிகையாகவும் ஆரியனாகிய கிருஷ்ண பரமாத்மா, திராவிடனாகிய நரகாசுரனை வதம் செய்த திருநாளாகையால் திராவிடர்களாகிய தமிழர்கள் தீபாவளியைக் கொண்டாடுவதென்பது ஆரோக்கியமானதல்ல என்ற கொள்கையொன்று தமிழ் நாட்டில் எழுந்தது. எது எப்படி இருந்தாலும், எவ்வளவு கடன் தான் இருந்தாலும் தீபாவளியை விமரிசையாகக் கொண்டாட தமிழக மக்கள் பின்னிற்பதில்லை. இது இந்தியாவின் நிலைமை.

 ஆனால் இலங்கையிலோ நிலைமை சற்று மாறுபட்டது. தீபாவளியென்றால் கோயில்களை நோக்கிப் படையெடுத்து, சன நெரிசலில் மிதந்து அர்ச்சனை செய்து வீடும் திரும்பும் இன்றைய சம்பிரதாயம் அன்று காணப்படவில்லை. அது புதிதாக முளைத்தது என்று தான் கூற வேண்டும். முன்னர் தீபாவளி என்றால் கிராமங்கள் களை கட்டிப் போய் இருக்கும். மக்கள் நிச்சயம் ஆட்டிறைச்சி பங்கு போடுவார்கள். கள்ளின் பாவனை சற்றுத்தாராளமாகவே இருக்கும்.

  விடுமுறை தினமாகையால் வெளியூரில் இருப்பவர்கள் எல்லாம் தம் கிராமங்களுக்குச் செல்வார்கள். அதிலும் மணமாகி, கணவன் வீட்டுக்குச் சென்ற பெண்கள் குடும்பத்துடன் தாய்வீடு வருவர். விருந்தும் புத்தாடையும் இல்லாத தீபாவளி கொண்டாடப்பட்டதே இல்லை எனலாம். விருந்துகளில் இறைச்சிக்கு அதிக முக்கியத்துவம் இருந்தமையால், கோயில்களுக்குச் சென்று வழிபடும் வழக்கம் குறைவாகவே இருந்தது.
  சீனவெடிக்கு பெரும் முக்கியத்துவம் இருந்தது. வெடியின் மூலம் சீனா. முன்னைய காலங்களிலே சீனாவிலிருந்து வெடி பெறப்பட்டமையால் சீன வெடி என்ற பெயர் நிலைத்து விட்டது. தீபாவளிப் பண்டிகையின் போது வெடி கொழுத்தும் வழக்கம் யுத்தம் தொடங்கிய பின்னர் தான் அற்றுப்போனதெனலாம்
  தலைத்தீபாவளி கொண்டாடும் வழக்கமும் எம்மவரிடத்தே இருக்கிறது. ஆனால் தமிழகத்தைப்போல இங்கு சீர் செய்து பிரமாண்டமாக எவரும் கொண்டாடுவதில்லை. ஆனாலும் புதுமணத்தம்பதியரின் மனம் மகிழ அவர்களுக்கு புத்தாடை, பரிசுப்பொருட்களை வழங்குவார்கள்.

   முக்கியமாக, அனைவரும் ஒன்று கூடும் திரு நாளாக இந்த தீபாவளி இருக்கும். கிராமங்களிலே விளையாட்டுப்போட்டிகள் நடக்கும். எப்பொழுதும் களைகட்டும் நிகழ்ச்சியாக இருந்த தினகரன் மாட்டுச் சவாரி கூட நடந்தேறியிருக்கிறது. கூத்துகள், நாடகங்கள் கூட அரங்கேறும்.
 மொத்தத்தில் அன்றைய சமூக நல்லிணக்கத்துக்கு , கிராமிய ஒற்றுமைக்கு வழிகோலும் பண்டிகையாக தீபாவளியும் அமைந்திருந்தது எனலாம்.
யுத்தம் துடைத்தெறிந்திருந்த இந்த இனிய நினைவுகளை மீட்பதிலும் கூட ஒரு தனி சுகம் இருக்கத்தான் செய்கிறது. யுத்த காலத்தில், வெடிகள் தடை செய்யப்பட்டிருந்தன. பல வேளைகளில் கொண்டிருக்கும் பதற்ற மன நிலையில் தீபாவளிப்பண்டிகை மறக்கப்பட்ட சந்தர்ப்பங்களும் இருக்கத்தான் செய்கின்றன.

  இன்று சமாதானம் தலை தூக்கி விட்டது. ஆனால், எம்மவர் போக்கு எதிர்த்திசையிலே பயணிக்கிறதோ என்ற அச்சமும் சேர்ந்தே நிலவுகிறது. நாம் கைக்கொண்டு வந்த தார்ப்பரியங்கள் மறக்கடிக்கப்பட்டமையால், அர்த்தமே இல்லாத புதிய தார்ப்பரியங்கள் முளைக்கத் தொடங்கி விட்டன. அத்துடன் கூடவே தொலைக்காட்சிக் கலாசாரம் தொடர்கிறது . விசேட தினங்களிலே குடும்பத்திலுள்ள சகலரையும் வீட்டுக்குள்ளே முடக்கி வைப்பதில் அலை வரிசைகள் போட்டி போடுகின்றன. அப்போது, தீபாவளி மட்டும் என்னவிதி விலக்கா? ஒரு குறுகிய கற்பனை எல்லைக்குள் மனிதனை முடக்கும் தொலைக்காட்சி என்ற அரக்கனையாவது இன்று தவிர்த்துப் பார்ப்போமே?

நடந்து முடிந்த இந்த யுத்தம் எத்தனையோ பேரை ஒரு கணப்பொழுதில் ஆதரவற்றோர் ஆக்கியிருக்கிறது. இன்றைய நன்னாளில் அவர்களில் எவருக்காவது உதவ முயலாலாமே?முடியாது! சாத்தியமே இல்லை என்கிறீர்களா? மனம் இருந்தால், நிச்சயம் இடமும் இருக்கும். நாம் நினைத்தால் எதையும் சாதிக்கலாம். இன்றே எழுவோம்! களத்தில் இறங்குவோம்!