Thursday, July 30, 2020

மரங்களை அரிமரமாய்ப் பார்க்கும் கண்களெல்லாம் குருடாகிப் போக!

அது வன்னிப்பெரு நிலப்பரப்பின் நுழைவாயில். களம் பல கண்ட தேசம். ஒரு காலத்தில் அடர்வனமாய் இருந்தது. காலத்தின் கட்டாயம்.. அடர் வனத்திலிருந்த பெரு மரங்களெல்லாம் மனித நோக்கங்களின் முன்னே தோற்றுப்போயின. அவை தோற்றதன் விளைவாய் படித்த நடுத்தர வர்க்கத்துக்கான புதிய கிராமமொன்று தோற்றம் பெற்றது.  வீதிகளும் வீடுகளுமாய் குடியிருப்புகள் நிலை பெற்றன. ஆனாலும் அடர்வனத்தின் சாட்சிகளாய் வெட்ட வெட்டத் தழைத்து காய்த்துக் குலுங்கும் அத்தி மரங்களும் அங்கொன்றும் இங்கொன்றுமாய்த் தலைகளைக் காட்டும் பாலை மரங்களும்  கீச்சிட்டுத் திரியும் பலவினப் பறவைகளும் தம் பரம்பரையின் கதைகள் சொல்ல எமக்காய் இன்னும் காத்திருக்கின்றன.  அக்கிராமத்துக்குச் செல்லும் எவராலும் இதை இலகுவில் காண முடியும். 

அன்றொரு நாள் காலை 9 மணியிருக்கும். புல் வெட்டும் இயந்திரத்தின் சத்தம் விட்டு விட்டு விட்டுக் கேட்டபடியே இருந்தது. வீட்டிலிருந்த எல்லோரும் ஏதோ அயலில் புல் வெட்டப்படுவதாக தமக்குள் கதைத்துக் கொண்டார்கள். பின்வாசலால் எட்டிப் பார்த்தேன்.  எதிர் வளவிலே கம்பீரமாய் நின்றது அந்த ஒற்றைப் பாலை மரம்.   திடீரெனெ மைனாக்களும் கிளிகளும் கிளிகளும் ஆர்ப்பரித்தன. அந்தரப்பட்டன. அங்குமிங்குமாய்ப் பறந்தன. பாதி தறித்த பாலைமரக்கிளை முறிந்து கீழே விழுந்தது.  அல்லோலகல்லோலப்படும் குருவிகளைப் பார்த்தபோது  வீட்டை விட்டுத் திடீரெனக் கிளம்பி வந்து மீண்டும் வீடு செல்ல முடியாது  என உணரும் போதெல்லாம்  மனதில் ஏற்பட்ட வலியும்  பின்னர்  கையில் திறப்புடன் மீண்டபோது அத்திவாரமாய்க் கிடந்த வீட்டைப் பார்க்கும் போது ஏற்பட்ட உணர்வும் அடிக்கடி எட்டிப் பார்த்துச் சென்றன.  சங்கிலி அரிவாளின் சத்தம் அதன் அருகில் தான் கேட்டது. 

ஒருவரால் கட்டிப் பிடிக்க இயலாத  மார்பளவு விட்டம் கொண்ட நேர்த்தியான அந்த மரத்தில், உயரத்திலிருந்து  மஞ்சள் சரக்கொன்றைப் பூக்கள்  தொங்கிக் கொண்டிருந்தன.  பாலையை அண்டி சரக்கொன்றை வளர்ந்திருக்கிறது போலும். மரத்தின் கிளைகளில் வடக்கயிறு கட்டப்பட்டிருந்தது. கீழே சங்கிலி அரிவாள் எனப்படும் சாதனம் தன் கடமையைச் செவ்வனே செய்ய பகீரதப்பிரயத்தனப்பட்டுக்கொண்டிருந்தது.  என் பரம்பரையின் கதை சொல்ல நானாவது எஞ்சியிருக்கிறேனே என்ற அடங்கா மிடுக்குடன் நிமிர்ந்து நின்ற அந்தப் பாலை மரம்  தன் நிலைப்பையும் இருப்பையும் உறுதி செய்வதற்காய் சங்கிலி அரிவாளுடன்  போராடிக்கொண்டிருந்தது.  நேரமும் கடந்தது. 

அந்த இரண்டு பரப்புக் காணிக்குள் இருந்த ஒற்றை மரமது. அக்காணிக்குள் புதிதாய்க் கட்டப்பட்டு வரும் வீட்டுக்கோ அயலுக்கோ அம்மரம் இடையூறாய் இருப்பதாகவும் தெரியவில்லை. கூடி நின்ற  நபர்களைப் பார்த்தால், உரிமையாளர் மரத்தைத் தீர்த்திருப்பாரோ என்றே எண்ணத் தோன்றியது.  ஏறத்தாழ 6 மணி நேரப் பெரு முயற்சியின் பின்னர் தோற்ற பல மரங்களைப் போல் அந்தப் பாலை மரமும் தோற்றுப்போனது. மைனாக்களும் குருவிகளும் சலசலத்துக் களைத்து ஓய்ந்து போயின. 

உணவு வலையின் ஆரம்பப் படி நிலையின் அங்கங்கள் சில சமாதியாக்கப்பட்டிருந்தன.  அழிக்கப்பட்ட காட்டில் இருந்திருக்கக் கூடிய மரங்களையும் அவற்றையே புகலிடமாகக் கொண்டிருந்த உயிரினங்களையும் எண்ணிப்பார்க்கிறேன்.  இன்னும் தம் எதிர்த்தெறியும் திறன் காரணமாக மீண்டெழுந்து காய்த்து நிற்கும் பெருமரக்கன்றுகளையும் அப்ப்ழங்களை நாடி வரும் சின்னஞ்சிறு வண்ணக்குருவிகளையும் கூட எண்ணிப்பார்க்கிறேன். இயற்கையும் அதன் தன்னலமற்ற தன்மையும்  மனிதனுக்கு அப்பாற்பட்டடு எல்லாவற்றையும் இயக்கும் அந்த சக்தியையும் என்னால் வியக்கத் தான் முடிகிறது. 

சுய நலமிக்க என் சக மனிதனின் மனப்பாங்கை எண்ணித் தலை குணிகிறேன். மீண்டும் என் எண்ண அலைகள் அவன் சார்ந்து விரிந்து செல்கின்றன.  அத்துணை நேர்த்தியான பருத்த மரம். எதற்காகத் தறிக்கிறான்?  அவனது கண்ணுக்கு அரி மரம் மட்டும் தானே தெரிந்திருக்கும். எனக்கு நானே பல வினாக்களைத் தொடுத்து விடைகளைத் தேடத் தொடங்குகிறேன். அந்த மரத்தை நம்பி வாழும் உயிர்களும்  மானிடக் கண்களுக்குத் தெரியாமல் அந்த மரம்  வழங்கும் இன்னோரன்ன சேவைகளும் தறிக்க நினைத்தவனுக்கோ தறிப்பவனுக்கோ  தெரிந்திருக்காது தானே?   எப்படி அனுமதி எடுத்திருப்பான்? தான் வளர்த்த மரம் என்றிருப்பானா? அந்த மரத்துக்கு தனது பாட்டன், முப்பாட்டனை எல்லாம் பார்த்திருக்கக் கூடிய வயதிருக்கும் என எண்ணித்தான் இருப்பானா? தனது காணிக்குள் நிற்கும் மரம் என்றிருப்பானா? அது வீட்டிற்கு இடைஞ்சல் என்றிருப்பானா? அம்மரத்தில் பொந்து வைத்து விட்டதால் மழைக் காலத்தில் முறிந்து விழுந்து விடும்  அல்லது வேரெல்லாம் உக்கி விட்டது என்று நொண்டிச் சாட்டுகள் சொல்லியிருப்பானா? தறிக்கும் மரத்துக்கு பதிலாக ஏதேனும் மரக்கன்றுகளை நாட்டித்தான் இருப்பானா?  அனுமதி வழங்கியவர்கள் அப்படியேதெனும் சிபாரிசு தான்  செய்திருப்பார்களா?  இவையாவும் இன்றும் விடைகாணா வினாக்களாக  மனதில் வந்து மோதிச் செல்கின்றன. 

எங்கள்  நிலமும் வீடும் சந்ததியும் சிதைக்கப்பட்டால் தான் கொடுமையா? அந்த மைனாக்களும் கிளிகளும் என்ன பாவம் செய்தன? இழப்பின் வலிகளை உணர்ந்த நாமே இந்தக் கொடூரங்களின் மூலகர்த்தாக்களாக மாறலாமா?  நாம் விதைக்கும் வினைகளை நாமும் எமது சந்ததியும் அறுக்கும் காலம் வந்தால் கூட நாமெல்லாம் திருந்தப் போவதோ இல்லை என்பது மட்டும் கண்கூடு. நாம் செய்த பாவங்களுக்கு  இன்றே பிராயச்சித்தம் தேடாவிட்டால்  வரண்ட பாலைவனங்களை மட்டும் தான் எமது சந்ததிக்கு நாம் விட்டுச் செல்லப் போகிறோம்  என்பது திண்ணம். 

அந்தரித்த குருவிகளின் அழுகுரல் மாத்திரம் இன்னும் என் காதுகளில் எதிரொலித்தபடி என் மீளக்குடியமர்வு நினைவுகளையும் மீட்க வைத்தன.  அது 2010 ஆம் ஆண்டு. ஒவ்வொரு வார இறுதி நாட்களும் பரவிப்பாஞ்சானிலேயே கழிந்தன. எத்தனை துன்பங்களைச் சந்தித்தும் தம் கூரைகளை மட்டுமே தொலைத்து நிமிர்ந்து நின்ற வீட்டுச் சுவர்களைப் பார்த்துப் பெருமிதம் கொண்டிருக்கிறேன். சில வாரங்கள் கடந்தன. மீண்டும் வார இறுதியின்று வந்தது. நிமிர்ந்து  நின்ற சுவர்களையும் காணவில்லை. அயலவர் எவருக்கும் தெரியவில்லை. அதிகாரம் இருந்தால் கட்டிய வீட்டை இடித்துக் கற்களை ஏற்றி புதிதாகக் கட்டும் வீட்டுக்கு அத்திவாரம் போடலாம் எனப் பின்னர் தான் அறிந்து கொண்டேன். அதிகாரம் எம் வீட்டு சுவர்களை மாத்திரம் விட்டு வைக்கவில்லை. 

உயர்ந்து வளர்ந்திருந்த பயன் தரு மரங்கள் பல அரி மரத்துக்காய் காணாமல் ஆக்கப்பட்டன.  சிலவேளைகளில் காலையில் செல்லும் போது மரம் தறித்து விழுத்தப்பட்டிருக்கும். மாலையில் சென்றால் காணியில் மரம் இருக்காது.  அக்காலத்தில் அதிகாரத்தரப்புக்கு மட்டுமே அது சாத்தியமானதாக இருக்கும்.  காவல் துறையில் முறைப்பாடு கூட மேற்கொள்ள முடியாது.  எமது கொடுப்பினைகளை எண்ணி நாமே  நொந்து கொண்டது மட்டும் தான்  நடந்தது. 

எம்மில் பலருக்கு மரங்களை உயிர்களாகப் பார்க்கத்தெரிவதில்லை.  நாம் சுவாசிக்கும் ஒட்சிசன் தொட்டு நாம் குடிக்கும் சுத்தமான குடி நீர் வரை எம் வாழ்வு இவ்வுலகில் நிலைப்பதற்கு ஆதாரமான யாவற்றிலும் ஆதிக்கம் செலுத்தும் மரங்களின் வகிபாகம் புரிவதில்லை. மரங்கள் வழங்கும் சேவைகளின் பெறுமதி விலைமதிப்பிட முடியாது என்பதை நாங்கள் அறிய எத்தனிப்பதில்லை.  அத்தகைய சில சேவைகளை மனித முயற்சியால் பிரதியீடு செய்யக் கூட முடியாது என்பதையும் நாம் அறிய வாய்ப்பில்லை. மரங்களைப் பணம் ஈட்டும் மூலமாக மட்டுமே பார்க்கும்  மனிதப்பேய்கள் ஒழியும் வரை உயிரினங்களின் அலறலும் எதிரொலித்தபடியேதான் இருக்கும் என்பது திண்ணம். 

No comments:

Post a Comment