Tuesday, March 8, 2011

எண்ணெயின்றி அமையுமோ உலகு?


நைல்நதியினை அண்டிய ஒரு ஒடுங்கிய நிலப்பரப்பைத் தவிர மிகுதியாவுமே பாலைவனத்தை ஒத்தவை என்று கூறப்படக்கூடிய நாடு எகிப்து. ஏறத்தாழ 80 மில்லியனை அண்டிய குடிசனத் தொகையுடைய ஒரு நாட்டிலே விவசாயம் செய்யக்கூடிய நிலப்பகுதி 3% சதவீதம் மட்டுமே என்பது வெளிப்படை உண்மையாகும். எகிப்தின் வருடாந்த மழை வீழ்ச்சி 2 அங்குலத்திலும் குறைவானதாகும்.
1960 களிலே 27 மில்லியனாக இருந்த சனத்தொகை தற்போது கிட்டத்தட்ட 3 மடங்காகியுள்ளது. இதேநிலை தொடர்ந்தால் 2050 அளவிலே எகிப்தின் சனத்தொகை இரட்டித்து 160 மில்லியனாகும் என எதிர்வு கூறப்படுகிறது.
தனது உணவு விநியோகத்தில் 40 சதவீதத்தையும் தானியத்தேவையின் 60 சதவீதத்தையும் இறக்குமதியிலேயே நம்பியிருக்கச் செய்கிறது எகிப்து. கொடூர ஆட்சியாளர் என வர்ணிக்கப்பட்ட எகிப்திய முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக்கின் ஆட்சிக் காலத்திலே எகிப்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7 சதவீதம் உணவு மற்றும் எரிசக்தி மானியங்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது.
அதேவேளை 1996 இலே உச்சத்தைத் தொட்டிருந்த எகிப்தின் எண்ணெய் உற்பத்தி தற்போது 30 சதவீதத்தாலும் எண்ணெய் ஏற்றுமதி 50 சதவீதத்தாலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
இது எகிப்தினுடைய நிலையாக இருந்தாலும் பெரும்பாலான வளைகுடா நாடுகள் இதே நிலையைத்தான் எதிர்நோக்குகின்றன.
ஒரு மாதத்துக்கு முன்னர் 96 அமெரிக்க டொலர்களாக விருந்த மசகெண்ணெய் பரல் ஒன்றின்விலை எகிப்தில் மக்கள் போராட்டம் வெடித்து ஹொஸ்னி முபாரக்கின் ஆட்சி கவிழ்க்கப்பட்டதுடன் 115 அமெரிக்க டொலர்களாக உயர்ந்தது.
எகிப்தில் தொடங்கிய மக்கள் போராட்டம் வளைகுடா மற்றும் வட ஆபிரிக்க நாடுகளிலும் தொடர்கிறது. லிபியா, பஹ்றெயின், யெமன், ஈரான், அல்ஜீரியா என அந்தநாடுகளின் பட்டியல் நீளுகிறது. உலகளாவிய எண்ணெய் உற்பத்தியில் 10 சதவீதத்திற்கு இந்த நாடுகள் பங்களிக்கின்றன.
ஏலவே 1973 இல் ஈரானியப் புரட்சியின் போது உருவாகிய நிலையொன்றைத் தற்போதும் எதிர்பார்க்கமுடியுமென ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஷியா முஸ்லிம் சமூகத்தவர் மேற்கொண்டுவரும் அரச எதிர்ப்புப் போராட்டம் தனது நாட்டுக்கும் பரவிவிடுமோ என சவுதி அச்சம் கொண்டிருக்கிறது. ஏனெனில் ஷியா முஸ்லிம்கள் வசிப்பதும் பிரதான எண்ணெய்க்கிணறுகள் காணப்படுவதும் சவுதி அரேபியாவின் கிழக்கு மாகாணங்களிலேயே ஆகும்.
பஹ்றெயின், எண்ணெய் உற்பத்தியிலே குறைந்தளவான பங்களிப்பைச் செலுத்தும் சிறிய தீவாயினும் பாரசீக வளை குடாவிலே அதன் நிலையம் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் வளைகுடாநாடுகளின் 18 சதவீத எண்ணெய்க்கிணறுகள் பஹ்றெயினை ஒட்டிய கடற்பகுதியிலே காணப்படுகின்றன. அமெரிக்காவின் 5வது கப்பற் தொகுதியும் பஹ்றெயினில் தளம் அமைத்திருக்கிறது.
பல வளைகுடா நாடுகளில் தொடரும் அமைதியற்ற நிலைமை சவுதியிலும் தொடரலாமென அஞ்சியதாலோ என்னவோ ஏறத்தாழ 36 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான சலுகைகளையும் நன்மைகளையும் சவுதி அரசர் தன் நாட்டு மக்களுக்கு அறிவித்திருந்தார்.
“எண்ணெய் விலை தற்போது மூன்றிலக்கங்களாக அதிகரித்திருப்பதானது எண்ணெய் உற்பத்தி செய்யும் வளைகுடா நாடுகள் பெறும் வருமானத்தை அதிகரிக்கத்தானே வேண்டும்? மாறாக அமைதியின்மையல்லவா ஏற்பட்டிருக்கிறது!” என்ற சந்தேகம் பலர் மனதில் எழுத்தான் செய்கிறது.
ஏனெனில் சக்தி உள்Zடுகளுக்கும் உணவுப் பொருட்களின் விலைக்குமிடையே நேரடித் தொடர்பு உள்ளது. எண்ணெய் விலை அதிகரிக்க, உணவுப் பொருட்களின் விலையும் அதிகரிக்கிறது. எண்ணெய் விலை அதிகரித்தாலும் மத்திய கிழக்கு நாடுகளில் எண்ணெய்க்கு மானியங்கள் இருக்கின்றன. ஆனால் தானிய மற்றும் உணவுப் பொருள் விலை அதிகரிக்கும் போது, ஏற்றுமதி செய்யும் பிரதான நாடுகளான கனடா, ரஷ்யா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளிலே மானியங்கள் வழங்கப்படுவதில்லை.
அத்துடன் விவசாயத்துக்குப் பயன்படும் உழவு இயந்திரங்களும் நீர்இறைக்கும் இயந்திரங்களும் கூட எரிபொருளை அடிப்படையாகக் கொண்டவை. இந்த நாடுகள் எல்லாம் நவீன நீர்ப்பாசன முறைமைகளைப் பயன்படுத்துபவை. நவீன நீர்ப்பாசன முறைமையும் எரிபொருள் பயன்பாடும் ஒன்றுடனொன்று பின்னிப்பிணைந்தவை இதனாலேயே மசகெண்ணெயின் விலை உயர்வு உணவுப் பொருள் விலையில் நேரடியாகத் தாக்கம் செலுத்துகிறது எனலாம்.
உலகிலேயே உணவுப் பொருட்களை அதிகளவில் இறக்குமதி செய்யும் பிராந்தியமாக மத்திய கிழக்குப் பிராந்தியம் காணப்படுகிறது. எண்ணெய் விலை அதிகரிக்க இறக்குமதிசெய்யும் உணவுப் பொருட்களின் விலையும் அதிகரிக்கிறது. விளைவைச் சமாளிக்க முடியாத பொதுமக்கள் வீதியில் இறங்கிப் போராடுகிறார்கள். இந்த நாடுகளின் வரிசையில் அடுத்ததாக சவுதி அரேபியா இருக்குமோ என்ற சந்தேகமும் வலுப்பெற்றுவருவதும் உண்மையே. எண்ணெய் உற்பத்தியில் சவுதி அரேபியாவையே முழு உலகும் நம்பியிருக்கிறது. எண்ணெய் வள நாடுகளில் ஏற்பட்டிருக்கும் அமைதியின்மை சவுதி அரேபியாவின் எண்ணெய் உற்பத்தி மீது பாரிய அழுத்தத்தைப் பிரயோகிக்கிறது. ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேலதிகமாக சவூதி அரேபியாவால் எண்ணெயை ஏற்றுமதி செய்ய முடியாத நிலையே ஏற்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.
எண்ணெய்க்கான கேள்வி அதிகரித்துள்ள நிலையில் எண்ணெய்ச் சந்தையைப் பொறுத்த வரையிலே இறுக்கமான தன்மையொன்றே காணப்படுகிறது. லிபிய எண்ணெயை சவுதி எண்ணெய் பிரதியீடு செய்யப்பட வேண்டிய நிலையிலுள்ளது. ஆனால் லிபிய எண்ணெயுடன் ஒப்பிடும்போது சவுதி எண்ணெயின் செறிவும் கந்தகக் கலப்பும் அதிகமாகும். ஐரோப்பிய நாடுகளில் இருக்கும் பழைய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் கந்தகக் கலப்பு அதிகமுள்ள செறிவான எண்ணெயைச் சுத்திகரிக்க முடியாதவை.
ஆகையால் சவுதியின் எண்ணெயை ஆசிய நாடுகளுக்கே அனுப்பவேண்டி உள்ளது. ஏனெனில் அந்த நாடுகளில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் புதியவை. பல்வேறு தரங்களை உடைய எண்ணெயையும் சுத்திகரிக்கக் கூடியவை.
ஆசியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மேற்கு ஆபிரிக்க எண்ணெய் லிபிய எண்ணெயை ஒத்தது. ஆதலால் அந்த எண்ணெயை ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்யவேண்டிய நிலை உள்ளது.
இத்தகையதோர் நிலையானது எண்ணெயின் கேள்விக்கும் விநியோகத்துக்குமிடையே ஒரு சமநிலையை ஒருபோதும தோற்றுவிக்காது. அத்துடன் இந்தப் பிரதியீட்டு முயற்சிகளுக்கிடையிலான விலை வித்தியாசம் கிட்டதட்ட 15 அமெரிக்க டொலர்களாகும். இது இப்படியே தொடர்ந்தால் 1978 இலே எண்ணெய் சந்தை வீழ்ச்சி கண்டதை ஒத்த நிலைமை மீண்டும் உருவாகலாமென நம்பப்படுகிறது.
கடந்த பெப்ரவரி 26ம் திகதி தீவிரவாதத் தாக்குதலொன்றை யடுத்து ஈரானின் பிரதான எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை முற்றாக மூடப்பட்டது. விளைவு உலகின் நாளாந்த எண்ணெய் உற்பத்தியில் 500,000 பரல்கள் கேள்விக் குறியாயின.
இந்த சமிக்ஞைகள் எல்லாம் உலக பொருளாதாரத்தை ஒரு இருண்ட யுகத்தை நோக்கி அழைத்துச் செல்கின்றனவோ என்றும் எண்ணத் தோன்றுகிறது. இதனால் பாதிக்கப்படப்போவது மூன்றாம் உலக நாடுகளே. ஏனெனில் அபிவிருத்தியடைந்த நாடுகளில் தலா வெளியீட்டுக்கான எண்ணெய் பாவனை 3ம் உலக நாடுகளுடன் ஒப்பிடும் போது மிகவும் குறைவாகும்.
அமெரிக்காவின் பொருளாதாரம் சீனாவுடன் ஒப்பிடுகையில் 3 மடங்கு பெரியது. ஆனால் சீனாவின் எண்ணெய்ப் பாவனையில் இரண்டு மடங்கே அமெரிக்காவின் எண்ணெய்ப் பாவனையாக இருக்கிறது.
அபிவிருத்தியடைந்த நாடுகளிலே அதிகளவில் பாதிக்கப்படப்போகும் நாடாக அமெரிக்கா இருக்கிறது. ஏனெனில் அதன் பொருளாதாரம் எண்ணெயை அடிப்படையாகக் கொண்டது. அமெரிக்காவில் எண்ணெய் விலையில் ஏற்படும் 10 சதவீத அதிகரிப்பானது அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியை 0.2 சதவீதத்தால் குறைக்குமென அறியப்பட்டுள்ளது.
அதேபோல ஆசிய நாடுகளும் மிகச் சிக்கலான தொரு நிலையையே எதிர்நோக்குகின்றன. விளைவு அச்சத்தை ஏற்படுத்துவதாகவே இருக்கின்றபோது எதிர்காலம் என்ன சொல்லப்போகிறது என்பதைப் பொறுத்திருந்தே பார்க்கவேண்டும்.

No comments:

Post a Comment