Friday, October 1, 2010

தேவையும் விருப்பமும் இருந்தால்...




“நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி

இந்த நாடே இருக்குது தம்பி

சின்னஞ்சிறு கைகளை நம்பி

ஒரு சரித்திரம் இருக்குது தம்பி”
என்கிறது 70 களில் வெளிவந்த தமிழ்த் திரைப்படப் பாடலொன்று. சிறுவர்கள் தாம் வாழும் சூழலையும் தமக்குக் கிடைக்கும் அனுபவங்களையும் உள்வாங்கி அவற்றிற்கமைய இயற்கையாகவே தம்மை மாற்றியமைத்துக் கொள்கிறார்கள்.
‘இளமையில் கல்வி சிலையில் எழுத்து’ என்பதும் ‘தொட்டிலிற் பழக்கம் சுடுகாடு வரைக்கும்’ என்பதும் கூட அதே கருத்தையே பிரதிபலிக்கின்றன. அதனால்தான் மனித வாழிவின் மிக முக்கியமான பராயமாக சிறுவர் பராயம் நோக்கப்படுகிறது.
அப்பராயத்திலே சிறுவர்களுக்குச் சரியான வழிகாட்டலும் போதிய பாதுகாப்பும் மிக அவசியமாகும். அப்போது தான் நாட்டின் சிறந்த பிரஜைகளாக அவர்களை உருவாக்க முடியும்.
விஞ்ஞானமாகட்டும், வியாபாரம் ஆகட்டும்... எந்தத் துறையாயினும் அந்த வல்லுநர்கள் சிறுவயதிலே தமது மனதில் விதைத்த கனவுகளும் சிந்தித்த சிந்தனைகளும் உழைத்த உழைப்பும் தான் பெரிய மாற்றங்களை உருவாக்கி இன்றும் அவர்களது பெயரை உச்சரிக்கச் செய்திருக்கின்றன. அதைத்தான் ‘வளரும் பயிரை முளையிலே தெரியும்’ எனச் சுருங்கக் கூறினர் எம் ஆன்றோர்.
சிறுபராயத்தை கவிஞர் கண்ணதாசன் ‘கற்பூர பருவம்’ என்கிறார். கற்பூரம் சட்டெனப் பற்றுவது போல் அப்பருவத்தில் எவையுமே விரைவாக உள்வாங்கப்பட்டுவிடும் என்ற கருத்திலேயே அவர் அவ்வாறு குறிப்பிடுகிறார். இப்பருவத்தில் சிறார்கள் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே அவர்களது எதிர்காலமும் அமையும்.
அவ்வாறு அவர்களின் எதிர்காலத்தை அமைத்துக் கொடுக்கும் காரணிகளுள் முக்கிய இடத்தைப் பிடிப்பது குடும்பச் சூழல் ஆகும். குடும்பச் சூழலின் அடிப்படை அலகுகளாக இருப்பவர்கள் பெற்றோராவர். குடும்பச்சூழல் இனியதாக அமைவதற்கும் அதுவே சிறார்களின் எதிர்காலத்திற்கு உலை வைப்பதாய் மாறுவதற்கும் பெற்றோரே அடிப்படைக் காரணமாகிவிடுகின்றனர்.
இலங்கையைப் பொறுத்தவரையிலே பல சின்னஞ்சிறார்கள் தம் எதிர்காலத்தைத் தொலைத்துவிட்டவர்களாகவே காணப்படுகின்றனர்.
தாயையோ தந்தையையோ அல்லது இருவரையுமோ இழந்து தவிக்கும் சிறார்கள் கணிசமான அளவிலே காணப்படுகின்றனர். தாயும் தந்தையும் இருக்கின்றபோதும் அவர்களுக்குமிடையிலான உறவிலே ஏற்பட்ட விரிசல், முரண்பாடுகள் காரணமாக எதிர்காலம் இருண்ட சிறார்களும் காணப்படத்தான் செய்கிறார்கள்.
உலகளாவிய ரீதியிலே தினமும் 5760 சிறார்கள் அனாதைகளாக்கப்படுகிறார்கள். முன்னைய காலங்களிலே, பல சமுதாய அமைப்புகளில் திருமண வயது குறைவாக இருந்தது. அதன் காரணமாக ஒரு குடும்பத்தில் சராசரியாக இருக்கும் சிறார்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. அதேசமயம் வயது வந்தவர்களின் இறப்பு வீதமும் அதிகமாக இருந்தது.
ஆதலால் பல சிறார்கள் தாம் பராய வயதை அடைய முன்னரே தம் பெற்றோரில் ஒருவரையாவது இழந்து விட்டிருந்தனர். அதேபோல ஆதரவற்ற சிறார்களின் இறப்பு வீதம் ஏனைய சிறார்களுடன் ஒப்பிடுகையில் சற்று அதிகமாகவே இருந்தது.

Entrance
 அத்துடன் ஆதரவற்ற சிறார்களின் வாழ்வு சுமுகமானதாகவும் இருக்கவில்லை. ஆதலால் ஆரம்பத்தில் தொண்டு நிறுவனங்களும் காலப் போக்கில் அரச, தனியார் அமைப்புகளும் ஆதரவற்ற சிறார்களைப் பாதுகாக்கத் தொடங்கின.
அத்தகையதோர் செயற்பாட்டின் நோக்கம் ஆதரவற்ற சிறார்களின் வாழ்வியல் நிலைமைகளை வளமுறச் செய்வதுடன் அவர்கள் சமூகத்துடன் இயைந்து வாழ வழி சமைத்துக் கொடுப்பதுமாகும்.
இலங்கையைப் பொறுத்தவரையிலே சிறார்கள், ஆதரவற்றோராக மாற்றப்படுவதற்கு கடந்த காலங்களில் நடந்தேறிய யுத்தம் காரணமாய் அமைந்தது. பல சிறார்கள் பெற்றோரை இழந்தும் பிரிந்தும் ஆதரவற்றோராயினர்.
அதுபோல இலங்கையின் கிராமப்புறங்களிலே அதிகளவில் பரந்து காணப்படும் பழக்கம் குடிப்பழக்கம் ஆகும். தந்தையின் குடிப் பழக்கம் குடும்ப உறவிலே விரிசலை உருவாக்கி சிறார்களை ஆதரவற்றோராக மாற்றி விடுகிறது.
தகாத உறவினால் உருவாகிப் பிறந்த குழந்தைகளும் ஆதரவற்றோராக நிர்க்கதிக்குள்ளாகின்றனர்.
இப்படிச் சிறார்கள் ஆதரவற்றோராக்கப்படுவதால் அவர்களது எதிர்காலம் கேள்விக்குறிக்குள்ளாக்கப்படுகிறது. அவர்களுக்கான உரிமைகள் பறிக்கப்படுகின்றன.
இத்தகைய நிலைமைகள் காலப்போக்கிலே நாட்டின் பொருளாதாரத்தை அடியோடு பாதிப்புறச் செய்யும் தன்மையன. அத்துடன் சிறார்கள் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாவதும் இந்த ஆதரவற்ற நிலைமையினாலேயாகும்.
பல அரச, தனியார் தொண்டு நிறுவனங்கள் இந்த ஆதரவற்ற சிறார்களை ஆதரித்து அவர்களை வழிப்படுத்தி அவர்களின் எதிர்காலத்தை ஒளிமயமாக்குவதில் பெருந்துணை புரிகின்றன.
அந்த வகையிலே தான், இராமகிருஷ்ண மிஷனின் இணை அமைப்பான சாரதா மிஷனும் ஆதரவற்ற சிறார்களை ஆதரித்து அவர்களுக்கு வழிகாட்டி அவர்களை நல்லதோர் வாழ்விலே நிலைபெறச் செய்வதில் பெருந்துணை புரிகிறது.
இந்தியாவின் தVணேஸ்வரத்தில் தலைமையகத்தைக் கொண்டிருக்கும் சாரதா மிஷனானது மாதாஜிகள் என அழைக்கப்படும் பெண் துறவியரின் தலைமையிலே இயங்குகிறது. சாரதா பாலிகா மந்திர் என்ற பெண் சிறார்களுக்கான இல்லம் சாரதா சமிதி என்ற அமைப்பினால் ஆரம்பிக்கப்பட்டு மாதாஜிகளிடம் ஒப்படைக்கப்பட்டு நன்கு இயங்கி வருகிறது.
சாரதா பாலிகா மந்திரின் ஸ்தாபகர்களுள் ஒருவரான கணபதிப்பிள்ளை அம்மா சாரதா பாலிகா மந்திர் தொடர்பான விடயங்களை எம்முடன் பகிர்ந்து கொண்டார்.
கொழும்பு நகரின் சனத்தொகை அடர்த்தி கூடிய பகுதிகளுள் ஒன்றாகக் கணிக்கப்படும் வெள்ளவத்தையிலேயே சாரதா மிஷனும் சாரதா பாலிகா மந்திரும் அமைந்திருக்கின்றன. தற்போது 36 சிறுமிகள் சாரதா பாலிகா மந்திரால் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். அச்சிறுமியருள் பெரும்பாலானோர் பெற்றோரில் ஒருவரையே அல்லது இருவரையுமோ ஏதோ ஒரு காரணத்தால் இழந்தவர்களாகவோ அல்லது பிரிந்தவர்களாகவோ காணப்படுகின்றனர்.
சந்தோஷமாக வாழ்வதற்கு ஏற்ற சூழல் அமையாமையினால் உறவுகளது உதவியுடன் அன்னை சாரதையின் அருள் வெள்ளத்தில் நிறைந்திருக்கும் சாரதா பாலிகா மந்திரிலே சேர்க்கப்பட்டனர். இங்கு ஒரு இந்துப் பாரம்பரியத்தின் பின்னணியிலே தமது வாழ்வை மகிழ்ச்சியாக முன்னெடுத்துச் செல்கின்றனர்.
சாரதா பாலிகா மந்திர் ஆரம்பிக்கப்பட்ட காலங்களிலே தெரிந்தவர்கள் மூலமும் திருகோணமலையின் சண்முகா இல்லம், தபோவனம் போன்ற வேறு ஆதரவற்றோர் இல்லங்களிலிருந்தும் சிறுமியர் சேர்க்கப்பட்டனர்.
அவர்கள் வடக்கு, கிழக்கு, மற்றும் மலையகப் பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். ‘சமயசமரசம்’ என்ற உன்னதமான கொள்கைக்கமைய வாழ்ந்து காட்டியவர் பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர்.
ஆயினும் இந்து மதப் பின்னணியையுடைய சிறுமிகளே சாரதா பாலிகா மந்திரில் இணைக்கப்படும் நிலையொன்று காணப்படுகிறது. ஏனைய மதங்களைப் போதித்து அவற்றின்படி சிறுமியரை வழிநடத்திச் செல்வதற்கான போதிய வளங்கள் அங்கு காணப்படாமையே அதற்கான ஒரே காரணமாகும்.

பாமரனைப் பண்புள்ளவனாகவும் பண்புள்ளவனை தெய்வமாகவும் மாற்றும் உன்னத சமயம் இந்து சமயம். இச்சிறுமியர் அந்தச் சமயப் பின்னணியிலே மாதாஜிகளின் வழிகாட்டலுடன் இனிதே வளர்க்கப்படுகின்றனர்.
சிறுமி ஒருவரை இவ்வில்லத்திலே இணைக்க முன்னர் அவரது சமய, குடும்பப் பின்னணி, வயது, சுகாதார நிலை போன்ற பல விடயங்கள் ஆராயப்படுன்றன. அவை சாரதா பாலிகா மந்திரின் வரையறைகளுக்குட்பட்டவையாக இருக்கும் பட்சத்தில் அச்சிறுமியும் அவ்வில்லத்தில் ஒருவராக இணைக்கப்படுகிறார்.
ஆரம்பத்திலே 6 – 12 வயது வரையிலான சிறுமியர் சேர்க்கப்பட்டனர். ஆயினும் பராமரிப்பு தொடர்பான நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக கீழ் வயதெல்லை 7 ஆக உயர்த்தப்பட்டது. தவிர்க்க முடியாத சில சந்தர்ப்பங்களில் வயதெல்லை உறுதியாகக் கடைப்பிடிக்கப்படுவதில்லை.
இங்கு இணையும் சிறுமியர் மாணவப் பருவத்திலேயே இணைகின்றனர். அடிப்படை வசதிகளுடன் தேவையான ஏனைய வசதிகளும் சாரதா மிஷனினால் இச் சிறுமியருக்கு வழங்கப்படுகின்றன. இங்கிருந்தே யாவரும் பாடசாலைக்குச் சென்று வருகின்றனர்.
வெள்ளவத்தை விவேகானந்தா வீதியில் இல. 52 இலே அமைந்திருக்கும் சாரதா பாலிகா மந்திரானது ஒரு பெரிய மாடி வீட்டிலே இயங்கி வருகிறது.
சிறியதும் பெரியதுமான அழகிய மரங்களுடன் கூடிய குளிர்மையான சூழலிலே இவ்வில்லம் அமைந்திருக்கிறது. உள்ளேயே, சாரதா அன்னைக்கென ஒரு ஆலயம் அமைந்திருக்கிறது. அன்னையைப் போன்றே அமைதி குடிகொண்டிருக்கும் அவ்வாலயத்தினுள் நுழைந்தவுடனேயே மனம் ஒடுங்கி அக அமைதியொன்று உருவாவதை எவராலும் உணரமுடியும்.
பாடசாலைக் கல்வியோடு மட்டும் நின்று விடாமல் அவர்களது ஒழுக்கம், பண்பாடு, கலை, கலாசாரம், ஆன்மீகம் ஆகியவற்றின் வளர்ச்சியிலும் கவனம் செலுத்தப்படுகிறது.
சிறுமியருக்குத் தியானப் பயிற்சி வழங்கப்படுகிறது. தகுதியானவர்கள் தீட்சையும் பெற்றுள்ளனர். பெளர்ணமி தினங்களிலே திருவிளக்குப் பூசை செய்கின்றனர். பூமாலை கட்டுதல் போன்ற ஆலயத் தொண்டுகளிலே தம்மை இணைத்துக் கொள்கின்றனர்.
பஜனை பாடுகின்றனர். மந்திர உச்சாடனம் செய்கின்றனர். நவராத்திரிக் காலங்களிலே சிறப்பாக அலங்காரங்கள் செய்து சக்தியை வழிபடுகின்றனர்.
எந்த ஒரு குழப்பமான சூழலிலிருந்து வந்த பிள்ளையாயினும் இத்தகைய இனிய அமைதியான சரன்மீகச் சூழலிலே வளரும் போது தன் பழைய மனநிலையிலிருந்து விடுபட்டு புத்தூக்கம் பெறும் என்பதில் எதுவித ஐயமுமில்லை.
அமைதியான படிக்கும் மண்டபத்துடன் சகல அடிப்படை வசதிகளையும் உள்ளடக்கியதாக அமைந்திருக்கிறது சாரதா பாலிகா மந்திர்.
இங்கிருந்து 3 மாணவியர், கடந்த 2009ம் ஆண்டு நடைபெற்ற உயர்தரப்பரீட்சையிலே சிறந்த பெறுபேறுகளை பெற்று சங்கீதத்துறைக்குத் தெரிவாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. ஒருவர் கிழக்குப் பல்கலைக்கழகத்திலும் மற்றைய இருவரும் எதிர்வரும் யாழ் பல்கலைக்கழகத்தின் இராமநாதன் நுண்கலைப்பீடத்திலும் தமது உயர்கல்வியைத் தொடரவிருக்கின்றனர்.
கல்வித்துறையிலே பிரகாசிக்க முடியாத மாணவியருக்கு, வாழ்க்கைத்திறன் கற்கை நெறிகளில் பிரகாசிப்பதற்கான வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. உயர்தரக் கல்வியை பூர்த்தி செய்து, பல்கலைக் கழகத்துக்குத் தெரிவாக முடியாதவர்கள் உயர்கல்விக் கற்கை நெறிகளை தனியார் நிறுவனங்களிலும் கற்கின்றனர்.
நல்லுள்ளம் படைத்த அன்பர்களின் உதவியுடன் மாலை நேரங்களிலும் விடுமுறைக் காலங்களிலும் கல்வி வழிகாட்டல் வகுப்புக்கள் நடைபெறுகின்றன.

கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் நடாத்தும் அறநெறிப் பாடசாலைகளிலும் இவர்கள் கற்கிறார்கள், கற்பிக்கவும் செய்கிறார்கள். கலைநிகழ்வுகளிலும் பங்கேற்கிறார்கள்.
சாரதா பாலிகா மந்திர் சிறார்கள், பராமரிப்பாளர்கள், உதவியாளர்கள் யாவரும் ஸ்ரீராமக்கிரஷ்ணர், சாரதா தேவியார், விவேகானந்தா ஆகியயமூவரின் அருளொளியின் கீழ் ஒரு குடும்பமாக வாழ்கின்றனர். இங்கு இருக்கும் சிறுமியொருவர் பருவ வயதை எட்டும் போது அதற்கான சடங்குகள், சம்பிரதாயங்களைக் கூட சாரதாமிஷன் அடியார்கள் தாமே முன்னின்று நடத்துவதைக் கேட்டபோது உள்ளம் நெகிழ்ந்தது.
இச் சிறுமியர் மட்டுப்படுத்தப்பட்டுள்ள வளங்களின் உச்சப் பயனைப் பெற்று அன்பையும் ஆதரவையும் அள்ளிவழங்கும் அன்பர்களால் எந்தவித எதிர்பார்ப்புமின்றி இவ்வில்லத்திலே பராமரிக்கப்படுகிறார்கள். அவர்களைப் பராமரிப்பதற்குத் தேவையான நிதியுதவி உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருக்கும் இராமகிருஷ்ண பக்தர்கள், அன்பர்கள் மற்றும் நண்பர்களின் மூலம் கிடைக்கப்பெறுகிறது.
பாடசாலைக் காலம் முடிவடைந்த உடனேயே நட்டாற்றில் இப்பெண்பிள்ளைகள் கைவிடப்படுவதில்லை. ஒருசிலர் உயர்கல்வி, தொழில் வாய்ப்புகளைப் பெற்றுச் சென்று விடுகின்றனர். அல்லது இல்லற வாழ்வினுள்ளே காலடி பதித்து விடுகின்றனர். சில வேளைகளில் தமது பெற்றோரிடமோ உறவினரிடமோ மீளச் சென்று விடுகின்றனர்.
இன்றைய காலகட்டத்திலே சாரதா பாலிகா மந்திர் போன்ற இல்லங்களின் தேவை மிகவும் அவசியமாகிவிட்டது. இந்த இல்லம் ஒரு சிறு துளிதான். உதவி செய்யும் மனமுள்ள உள்ளங்கள் இணைந்து செயற்படும் போது அச்சிறு துணி பெருவெள்ளமாகும் என்பது நிதர்சனம்.
சாரதா பாலிகா மந்திரின் சிறுமியரைப் பொறுத்தவரையிலே, மனமுள்ள அன்பர்கள் தாம் பெற்ற கல்விச் செல்வத்தை அவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். அது அச்சிறுமியரின் கல்வி ரீதியான எதிர்காலத்தை மேலும் வளப்படுத்தும்.
சிறிய சுற்றுலாக்களை ஒழுங்குபடுத்தி அவர்களை அழைத்துச் செல்லலாம். இத்தகைய சிறு உதவிகள் கூட அச்சிறுமியரின் எதிர்காலத்தை வளப்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கும்.
இத்தகைய உதவிகளை இங்கு மட்டுமல்ல, எங்கு வேண்டுமானாலும் செய்யலாம். எத்தனையோ சிறார்கள் குடும்பச் சூழல் காரணமாக கல்வி என்ற அடிப்படைத் தேவையப் பூர்த்தி செய்ய முடியாமல் தவிக்கிறார்கள்.
அண்¨மையிலே வன்னிப் பகுதியில் சிறுமியொருவர் நஞ்சருந்தித் தற்கொலைக்கு முயற்சித்துப் பின் வைத்தியர்களால் காப்பாற்றப்பட்டார். அச்சிறுமியுடன் ஆறுதலாக அளவளாவிய போது அறியப்பட்ட அவரது தற்கொலை முயற்சிக்கான காரணம் வைத்தியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

பிரத்தியேக வகுப்புகளுக்குச் செல்வதற்காக ஆடை வேண்டித் தரும்படி அச்சிறுமி பெற்றோரிடம் கேட்டிருக்கிறார். ஆனால் புத்தாடை வேண்டிக் கொடுக்குமளவிற்கு அவர்களது குடும்பச் சூழல் இடம்கொடுக்க வில்லை. விளைவு தற்கொலை முயற்சியில் முடிந்தது.

இன்றைய சூழல்நிலைக்கு இச்சம்பவம் ஒரு சிறு உதாரணம். அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு பின் மேலதிக தேவைகளுக்காக நாம் செலவழிக்கும் பணத்தின் ஒரு பகுதியையாவது இத்தகைய சிறார்களுக்கு உதவும் வகையில் பயன்படுத்தலாம்.

பணத்தைச் செலவழிக்க இயலாதவர்கள் தமக்குக் கிடைக்கும் மேலதிக பொருட்களைக் கொடுத்துதவலாம். அது கூட இயலாவிடில், தாம் பெற்ற கல்விச் செல்வத்தையாவது அவர்களுடன் பகிரலாம். எம்மால் முடியாதது எதுவுமே இல்லை. தேவையும் விருப்பமும் இருந்தால் எந்தக் காரியமும் எளிதே நடந்தேறும்.

சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கும் ஏனைய பிரச்சினைகளுக்கும் அப்பால், நாம் அன்றாடம் காணும் ஆதரவற்ற சிறார்களில் ஒருவருடைய வாழ்விலாவது ஒளியூட்ட முயன்றால் ஆதரவற்ற சிறார்களே இல்லாத ஒரு சமுதாயம் வெகு தொலைவில் இருப்பதாகவே தெரியாது. இதுவே இன்றைய காலத்தின் தேவையாகவும் இருக்கிறது.



No comments:

Post a Comment