Friday, July 16, 2010

மருத்துவமனை கழிவுகளுக்கு என்ன நடக்கிறது?




கடந்த ஞாயிறன்று, உலக சனத்தொகை தினம் கொண்டாடப்பட்டது நாம் யாவரும் அறிந்த விடயமேயாகும். உலக சனத்தொகையானது காலத்துடன் அதிகரித்து வருவதும், 2050 ஆம் ஆண்டு சனத்தொகையின் பருமனில் இந்தியா சீனாவை விஞ்சப் போவது தொடர்பான எதிர்வுகூறல்களும் கூட நாம் அறிந்த விடயங்களே!

இவ்வாறு சனத்தொகை வளர்ச்சியடைந்து வருவதற்கான காரணங்களுள் மேம்பட்ட சுகாதார நிலைமைகளும் அடங்கிவிடுகின்றன. நோய்த் தொற்றைத் தடுப்பதற்கான வழிமுறைகளும் உடனடி மருத்துவ வசதிகளும் நல்ல கழிவகற்றல் வசதிகளும் சராசரி மனிதனின் ஆயுட் காலத்தையும் அதிகரிப்பதில் துணைபுரிகின்றன. அதுமட்டுமன்றி சிசு மரண வீதத்தையும் குறைக்கின்றன.

நாடொன்றைப் பொறுத்த வரையிலே அரச வைத்திய சாலைகளைத் தவிர்த்து மூலை முடுக்குகளெங்கும் தனியார் வைத்தியசாலைகள் முளைத்து வருகின்றன. இத்தகைய நிலைமையை அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளிலே பரவலாகக் காண முடிகிறது.

பொது இடங்களில் கொட்டப்படும் வீட்டுக் கழிவுகள் பற்றியும் குப்பைகள் பற்றியும் அதிக கரிசனம் செலுத்தும் நாங்கள் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் தொடர்பான விழிப்புணர்வை குறைந்தளவில் உடையவர்களாகவே காணப்படுகிறோம்.

வைத்தியசாலைகள் உட்பட, சுகாதாரத் துறையுடன் தொடர்புடைய பெரும்பாலான கட்டமைப்புக்களின் மூலம் வெளியேற்றப்படும் கழிவுகள் மிகவும் ஆபத்தானவை என்பது கூட எம்மில் பலருக்குத் தெரிவதில்லை.

சுகாதாரத் துறையுடன் தொடர்புடைய கட்டமைப்புக்களின் அடிப்படை நோக்கம், மக்கள் மத்தியில் சுகாதாரத்தை மேம்படுத்துவதேயாகும்.

ஆதலால், அந்தக் கட்டமைப்புக்களின் மூலம் வெளியேற்றப்படும் கழிவுகள் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துவனவாக அமையக்கூடாது. ஆனால், இன்றைய நிலைமையோ அவ்வாறு அமையவில்லை. உலகளாவிய ரீதியிலே ஒவ்வொரு வருடமும் பல பில்லியன் கிலோகிராம் திணிவுடைய இத்தகைய கழிவுகள் வெளியேற்றப்படுகின்றன.

ஆனால் இக்கழிவுகளுள் 75 – 90 சதவீதமானவை வீட்டுக் கழிவுகளுடன் ஒப்பிடுகையில் ஆபத்து அற்றவை என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவிக் கிறது. ஏனெனில் அவை நிர்வாக, பராமரிப்பு, மற்றும் உள்ளக நிர்வாகச் செயற்பாடுகள் காரணமாக வெளியேற்றப்படுப வையாகும்.

ஆயினும் மிகுதி 10 – 25 சதவீதமான கழிவுகள் நச்சுத் தன்மை மிக்கவையாகக் கருதப்படுகின்றன. அவை சுகாதார ரீதியாக மிகவும் அபாயமானவையாகும்.

எச். ஐ. வி. முதலான சில தொற்றுக்கள் மிகவும் வேகமாகப் பரவியதையடுத்து, ஒரு தடவை பாவிக்கப்பட்ட பின் வீசப்படும் மருத்துவ உபகரணங்களின் பாவனை அதிகரித்தது. அவை மருத்துவமனைக் கழிவுகளைப் பல மடங்காக்கின.

அடிப்படையில் மருத்துவமனைக் கழிவுகள் தொற்றுக்களையுடைய கழிவுகள், உடற்பாகங்களாலான கழிவுகள், கூரான கழிவுப் பொருட்கள், மருந்துக் கழிவுகள், பரம்பரை அலகுகளில் பிறழ்வை ஏற்படுத்தும் கழிவுகள், இரசாயனக் கழிவுகள், கதிர்த்தொழிற்பாடுகளுடைய கழிவுகள், பார உலோகக் கழிவுகள் எனப் பலவாறு வகைப்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு வகையிலும் திடக் கழிவுகளும் காணப்படலாம். திரவக் கழிவுகளும் காணப்படலாம். ஏன் வாயுக்கழிவுகள் கூடக் காணப்படலாம்.


பக்aரியா, வைரஸ், பங்கசு மற்றும் ஏனைய ஒட்டுணிகளின் தொற்று இருக்கலாமெனக் கருதப்படும் கழிவுகள் யாவுமே தொற்றை ஏற்படுத்தக் கூடிய கழிவுகளாகும்.

தொற்றுள்ள ஆய்வுகூடக் கழிவுகள், சத்திரசிகிச்சைகளின் பின் வெளியேற்றப்படும் கழிவுகள், தொற்றுக்குள்ளாகியதால் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் நோயாளிகளின் கழிவுகள், ஆய்வுகூடங்களிலுள்ள தொற்றுக்குள்ளான மிருகங்கள் போன்ற யாவுமே இத்தகைய கழிவுகளுக்குள் அடங்குகின்றன.

அவை மட்டுமன்றி தொற்றுக்குள்ளான மனிதர்களுடனோ விலங்குகளுடனோ ஏதோ ஒரு வகையில் தொடுகைக்குள்ளான உபகரணங்களும் தொற்றுக்குள்ளானவையாகக் கருதப்படும். தொற்றுக்குள்ளான கூரிய உபகரணக் கழிவுகளும் தொற்றை ஏற்படுத்தும் கழிவுகளாகவே கருதப்படுகின்றன.

மருத்துவ மனைகளிலே கழிவுகளாக வெளியேற்றப்படும் உடற் பாகங்கள், உடற் திராவகங்கள், குருதி, போன்றன யாவுமே உடற் பாகங்களின் கழிவுகளாகக் கருதப்படுகின்றன.

வெட்டுக்காயம் உட்பட காயங்களை ஏற்படுத்தக் கூடிய உபகரணங்களான ஊசிகள், உடைந்த கண்ணாடித் துண்டுகள், சத்திர சிகிச்சைக் கத்திகள், ஆணிகள் போன்றன யாவுமே கூரிய உபகரணக் கழிவுகளாகக் கருதப்படுகின்றன. இவை தொற்றை உடையனவாகவோ அல்லது தொற்றற்றனவாகவோ எப்படியிருந்தாலும் மிகவும் ஆபத்தானவையாகவே கருதப்படுகின்றன.

மருந்துக் கழிவுகளுள், காலாவதியான, பாவிக்கப்படாத, பழுதடைந்த, மற்றும் வீணாக்கப்பட்ட மருந்துகள், தடுப்பு மருந்துகள் யாவுமே அடங்கிவிடுகின்றன. மருந்துகளைக் கையாளும் போது பாவிக்கப்படும் பொருட்களும் இக்கழிவுகளுள் அடக்கப்படுகின்றன.

பரம்பரை அலகுகளில் பிறழ்வுகளை ஏற்படுத்தும் கழிவுகளாகச் சில இரசாயனப் பதார்த்தங்களும் கதிர்த் தொழிற்பாட்டுப் பதார்த்தங்களும் கருதப்படுகின்றன. இக்கழிவுகள் மிகவும் ஆபத்தானவையாகவே கருதப்படுகின்றன. ஏனெனில் புற்று நோயைத் தோற்றுவிக்கவும் பரம்பரை அலகுகளில் மாற்றங்களை ஏற்படுத்தவும் இவை காரணமாகிவிடுகின்றன.

இரசாயனக் கழிவுகள், திண்மம், திரவம், வாயு ஆகிய மூவகை நிலைகளிலும் வெளியேற்றப்படுகின்றன. அவற்றில் சில ஆபத்தானவை. சிலவோ ஆபத்தற்றவை.

பார உலோகங்களான பாதரசம் போன்றவற்றைக் கொண்டுள்ள கழிவுகளும் வெளியேற்றப் படுகின்றன. அவை மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தவையாகக் கருதப்படுகின்றன உடைந்த வெப்பமானிகள், குருதியமுக்க மானிகள் போன்ற உணர் கருவிகள் பாதரசம் வெளியே சிந்தக் காரணமாகின்றன.

வீசப்படும் உலர் கலங்களால் கட்மியமானது கழிவுகளுடன் கலக்கிறது. இவை தவிர கதிர்த் தொழிற்பாட்டுடன் தொடர்புடைய கருவிகளும் வாயு உருளைகளும் கூட பார உலோகங்களைக் கழிவுகளுடன் கலக்கச் செய்கின்றன.

இன்று சிறிய மருத்துவமனைகளிலும் கூட கீ கதிர் மற்றும் ஸ்கானிங் தொழில்நுட்பங்கள் நடைமுறைக்கு வந்துவிட்டன. ஆனால் அத்தகைய கதிர்த்தொழிற்பாடுகளுக்குப் பாவிக்கப்படும் பதார்த்தங்கள் கழிவுகளாக வெளியேற்றப்படும் போது ஏற்படுத்தும் பாதிப்புகள் மிகவும் பாரதூரமானவை.

பொதுவாக அப்பதார்த்தங்கள் ஒழுங்கான கொள்கலன்களினுள் அடைக்கப்பட்டு பாதுகாப்பாக வெளியேற்றப்படும். ஆயினும் அவை எங்கே, எப்படி வெளியேற்றப்படுகின்றனவென எவரும் அறிய முனைவதில்லை.

ஒரு வைத்தியசாலையிலே இவ்வளவு கழிவுகளும் வெளியேற்றப்படுகின்றன என்று கூட இதுவரை காலமும் நாம் சிந்தித்திருக்க மாட்டோம்.

ஒரு வைத்தியசாலையில் வெளியேற்றப்படும் கழிவுகளின் அளவு, அவ் வைத்தியசாலையின் தன்மையைப் பொறுத்துமாறுபடும். நடுத்தர அளவு, குறைந்தளவு வருமானம் பெறும் நாடுகளுடன் ஒப்பிடுகையில் கூடிய வருமானம் பெறும் நாடுகளால் வெளியேற்றப்படும் கழிவுகள் மிகவும் அதிகமாகும்.

அதேபோல அணு உலைகளினால் வெளியேற்றப்படும் கதிர்த் தொழிற்பாடுடைய கழிவுகளுடன் ஒப்பிடுகையில், வைத்தியசாலைகளில் வெளியேற்றப்படும் இத்தகைய கழிவுகளின் அளவும் குறைவாகும்.

வைத்தியசாலைகளில் கழிவுகள் வெளியேற்றப்படுபவதைத் தவிர்க்க முடியாது. ஆனால் அக்கழிவுகளை செவ்வனே முகாமைப்படுத்தினால், அவற்றினால் ஏற்படும் பாதிப்புக்களிலிருந்து சுற்றுச் சூழலையும் மனிதர்களையும் பாதுகாக்க முடியும்.

மருத்துவமனைகள் போன்ற சுகாதார அமைப்புக்களின் நச்சுக் கழிவுகள் ஒருபோதும் நகரக் கழிவுகளுடன் கலக்கவிடப்படலாகாது. ஆனால் பல அபிவிருத்தியடைந்த நாடுகளில் அவை நகரக் கழிவுகளுடன் கலக்கப்பட்டு அப்புறப்படுத்தப்படுகின்றன.

இல்லையேல் சுத்திகரிக்கப்படாமல் நீர் நிலைகளிலோ அல்லது நிலத்தினுள் புதைக்கப்பட்டோ அப்புறப்படுத்தப்படுகின்றன.



ஏனெனில் மருத்துவமனைக் கழிவுகளை முகாமைப்படுத்துவதொன்றும் எளிதான காரியமல்ல. அதற்கான செலவை ஈடுசெய்ய அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் பொருளாதார நிலை இடம் கொடுப்பதில்லை.

அத்துடன் செலவுகளைக் கணித்து அவற்றின் அடிப்படையில் வேறு உத்திகளைக் கையாளும் நிலையிலும் அந்த நாடுகள் இல்லை என்றே கூற வேண்டும்.

இந்த மருத்துவமனைக்கழிவுகளால் உருவாக்கப்படும் சுற்றுச் சூழல், சுகாதாரப் பிரச்சினைகள் தான் அவற்றை அப்புறப்படுத்துவதில் இருக்கவேண்டிய அக்கறையை மேன் மேலும் தெளிவுபடுத்துகின்றன.

சுற்றுச் சூழலின் ஆரோக்கியத்துக்கும் வாழும் மக்களின் ஆரோக்கியத்துக்குமிடையில் இடைத்தொடர்பு காணப்படுகிறது என்பதை எவராலும் மறுக்க முடியாது. சுற்றுச் சூழல் ஒழுங்காகப் பேணப்பட்டால், அங்கு வாழும் மக்களின் ஆரோக்கியமும் தானே அமைந்துவிடும். நாம் சூழலுக்கு வெளியேற்றும் கழிவுகளின் நச்சுத்தன்மை குறைக்கப்பட்டாலே, அக்கழிவுகளால் ஏற்படும் சூழல் மாசும் பல மடங்குகள் குறைவடையும்.

மருத்துவமனைக் கழிவுகளைப் பொறுத்தவரையிலே, அவற்றை மீள் சுழற்சி செய்தலும் அப்புறப்படுத்தலும் ஒழுங்குபடுத்தப்பட்ட கட்டமைப்பினடிப்படையிலே பாதுகாப்பாக மேற்கொள்ளப்படவேண்டும்.

தெற்காசிய நாடுகளில், மருத்துவமனைக் கழிவுகளின் சில வகைகள் உயர் வெப்ப நிலையிலே எரிக்கப்படுவதாகவும் சில வகைகள் தொற்று நீக்கம், நுண்ணுயிரழிவாக்கம் செய்யப்பட்டுப் பின் பரிகரிக்கப்படுவதாகவும் தாய்லாந்திலுள்ள ஆசிய தொழில்நுட்ப நிறுவகத்தின் ஆய்வொன்று தெரிவிக்கிறது.

தொற்றுக்களையுடைய கழிவுகளும் பரம்பரை அலகுகளில் பிறழ்வுகளை ஏற்படுத்த வல்ல கழிவுகளும் மிக உயர் வெப்பநிலையிலே எரிக்கப்படுகின்றன. அவற்றுள், வெப்பத்தைத் தாக்குப்பிடிக்கக் கூடியவை சில, மிக உயர் வெப்பநிலையிலே பிரிகையடையச் செய்யப்படுகின்றன.

பொதுவாக, திரவ நிலையிலுள்ள கழிவுகள் இரசாயனப் பதார்த்தங்கள் மூலம் தொற்று நீக்கப்படுகின்றன. அதேபோல, திண்ம நிலையிலுள்ள கழிவுகள் உயர் வெப்பம் வழங்கப்பட்டு தொற்று நீக்கப்படுகின்றன. கழிவுகள் நீராவியால் நுண்ணுயிரழிவாக்கம் செய்யப்படுகின்றன. நுண்ணலைகள் மூலம் கழிவுகளின் ஈரப்பற்று அகற்றப்படுகிறது.

‘பிளாஸ்மா ஆக்’ எனப்படும் நவீன தொழில்நுட்பமானது மின்வாய்கள் மூலம் கழிவுகளைச் சுத்திகரிக்கிறது. இத்தொழில் நுட்பத்தின் படி கழிவுகள் எரிக்கப்படவோ அல்லது சாம்பலாக்கப்படவோ மாட்டாது.

இறுதியாக சூழலுக்கு இவை பாரிய தீங்கை விளைவிக்கமாட்டாது எனக் கருதும் நிலையில் கழிவகற்றலுக்காக அமைக்கப்பட்ட கிடங்குகளுள் இட்டு நிரப்பப்படுகின்றன.

ஆனால் நடைமுறையிலே, பல வைத்தியசாலைகளில் இவை முறையாக நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. நகரக்கழிவுகளுடனே சேர்க்கப்படுகின்றன. சில வைத்தியசாலைகள் திறந்த வெளியிலே கழிவுகளைக் கொட்டி எரிக்கின்றன. அல்லது புதைக்கப்படுகின்றன.

நகரக் குப்பைகளைச் சேகரிக்கும் சாதாரண தொழிலாளர்கள் சில இறப்பர் மற்றும் பிளாஸ்டிக்கினால் செய்த மருததுவமனைக்கழிவுகளை மீள் சுழற்சி செய்து பாவனைக்குட்படுத்துகின்றன. இவை எவ்வளவு தூரம் ஆரோக்கியமானவை என்ற விடயம் கேள்விக்குறியாகவே இருக்கிறது.

பூட்டானிலே பாவித்தபின் எறியும் கூரான வைத்தியசாலை உபகரணங்கள் சுத்திகரிக்கவோ அல்லது நுண்ணுயிரழிக்கப்படவோ செய்யாமல் மீளப் பாவிக்கப்படுவதும் ஆசிய தொழில்நுட்ப நிறுவகத்தின் ஆய்விலே தெரியவந்திருக்கிறது.

இந்தியாவிலே, ஒரே குப்பை வண்டியில் சகல வகையான கழிவுகளும் அப்புறப்படுத்தப்படுவதும், சகல கழிவுகளும் ஒருங்கே கலக்கப்படுவதும் கூடக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவின் புனித நதிகள் என்றால் மனக்கண்ணில் முதலில் தெரிவது கங்கை நதியாகும். காலத்தால் தொன்மைவாய்ந்தது மட்டுமன்றி வருடம் முழுவதும் நீர் சல சலவென ஓடிக்கொண்டிருக்கும் நதியாகவும் கங்கை நதி காணப்படுகிறது. கங்கையிலே மூழ்கி எழுந்தால் செய்த பாவங்கள் கரைக்கப்பட்டுவிடும் என்பது ஐதீகம்.

ஆனால் இன்றைய நிலையில் கங்கையில் மூழ்கி எழுந்தால் புதிய நோய்களையும் சேர்த்துக் காவிக்கொண்டு வந்து விடுவோமோ என்ற அச்சம்தான் எழுகிறது. தொழிற்சாலைக் கழிவுகளும், மருத்துவமனைக்கழிவுகளும் கங்கை நதியிலே கலக்கப்படுகின்றன.

டையொக்சின் எனப்படும் நச்சு இரசாயனத்தின் செறிவு கங்கை நதி நீரில் அதிகமாக இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அதற்கான அடிப்படைக் காரணம் உயர் வெப்ப நிலையிலே எரிக்கப்பட்ட வைத்தியசாலைக்கழிவுகளின் மீதிகள் கங்கை நதி நீருடன் கலக்கப்படுதலேயாகும்.

வவுனியாவின் வைத்தியசாலைக் கழிவுகள் சுத்திகரிக்கப்படாமல் வவுனியாக் குளத்திலே கலக்கப்பட்டதால் அக்குளம் முற்றாக மாசடைந்து காணப்படுவதாக, ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழக, பட்டப்பின் கல்வி ஆய்வறிக்கையொன்று தெரிவிக்கிறது.

விவசாயத்துக்காக அமைக்கப்பட்ட இந்தக் குளம் இன்று மாசடைந்து போயுள்ளது. இந்த நீர் விவசாயத்துக்காகப் பயன்படுகையில், அதனால் உருவாகப் போகும் சுற்றுச் சூழல் மற்றும் சுகாதாரப் பிரச்சினைகள் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் எனக் கற்பனை செய்யவே முடியவில்லை. குறுகிய காலத்திலே எந்த ஒரு விளைவும் கண்ணுக்குத் தெரிவதில்லை. ஆனால் நீண்ட கால நோக்கிலே அவற்றை கண்டறியும் போது அவற்றைக் கட்டுப்படுத்த முயல்தலானது எமது கையை மீறிய செயற்பாடாகவே இருக்கும்.

வவுனியா வைத்தியசாலை மட்டுமன்றி இன்னும் பல வைத்தியசாலைகளிலும் இதனை ஒத்த செயற்பாடுகள் நடைபெற்றிருக்கலாம். ஆனால், அவை வெளிக்கொணரப்படுவதில்லை. இங்குதான் ஆய்வாளர்களது தேவை அவசியமாகிறது.

ஆய்வாளர்களும் ஆய்வு நிறுவனங்களும் இணைந்து இத்தகைய ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். ஆய்வு முடிவுகளை விஞ்ஞானச் சஞ்சிகைகளிலும் புத்தகங்களிலும் உறங்க வைக்காமல், அவற்றை எளிமைப்படுத்த வேண்டும். அவை வெகுசனத் தொடர்பு ஊடகங்கள் மூலம் பொதுமக்களைச் சென்றடைய வழி செய்ய வேண்டும். அப்போதுதான் பொதுமக்கள் விழிப்படைவார்கள்.

அவர்கள் விழிப்படைந்தால், மருத்துவமனை நிர்வாகம் தனது எண்ணப்படி இக்கழிவுகளை அகற்றிவிட முடியாது. இதனால் கிடைக்கும் வெற்றி எம் யாவருக்குமுரியதே.

மருத்துவமனை நிர்வாகத்தையோ, அல்லது ஒரு நாட்டையோ அல்லது ஒரு கருதுகையில், இக்கழிவுகளை அப்புறப்படுத்துவதற்காகக் கொடுக்கும் விலை, விளைவுகளுடன் ஒப்பிடுகையில் இலாபகரமானதில்லை என்ற கருத்தொன்றும் நிலவி வருகிறது.

எங்கு பார்த்தாலும் பணரீதியான பெறுமதிக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் இன்றைய உலகைப் பொறுத்த வரையிலே பலருக்கு இக்கருத்து நியாயமாகவும் தெரிகிறது. இயற்கையும் உயிர்களும் விலைமதிப்பற்றவை. அவற்றிற்கு தீங்கு விளைவிக்கப்படும் எந்த ஒரு செயற்பாட்டிற்கான செலவும் நட்டமாகக் கருதப்பட முடியாதது என்பதை நாம் உணர வேண்டும். அங்கும் ஆய்வுகள் தான் அவசியமாகின்றன. ஏனெனில் எந்த ஒரு விடயமும் தர்க்கபூர்வமாக நிரூபிக்கப்பட வேண்டுமென இன்றைய உலகம் விரும்புகிறது.

நாம் ஒவ்வொருவரும், இந்தக் கழிவுகளுக்கெல்லாம் என்ன நடக்கிறது எனத் துருவ முற்பட்டால் சகல கழிவுச் சுத்திகரிப்புச் செயற்பாடுகளும் ஒழுங்காக நடக்கும் என்பதே நிதர்சனமான உண்மையாகும்.

2 comments:

Sivamoorthy Kishokumar said...

நல்ல முயற்சி, ஆக்கபூர்வமான படைப்புக்கள்.வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் சேவை.

என்றும் அன்புடன், சாரதாஞ்சலி-ம said...

நன்றி சகோதரரே ..

Post a Comment