Sunday, September 18, 2011

மணிப்பூரின் இரும்புப் பெண்ணை நீதி தேவதை திரும்பிப் பாரப்பாளா?



 அன்னா ஹஸாரே....முழு இந்தியாவையுமே தன் பின்னால் அணிவகுக்க வைத்தவர்... கடந்த சில காலமாக பத்திரிகைகள் எங்கும் அடிபட்ட பெயர்... தலைப்புச் செய்தியாகிய பெயர்....வெள்ளைக்குல்லா... ஒரு மூக்குக் கண்ணாடி...வெள்ளை ஆடை ... ஒரு தாத்தாவின் தோற்றம்.... காந்திய வாதி என்றால் ஹசாரே தான் ஞாபகம் வருவார்... மிகக் குறுகிய காலத்துக்குள்ளேயே அத்துணை பிரபலமானவர்... உண்ணாவிரதம் தான் அவரைப் பிரபலமாக்கிய மூல கர்த்தா.... இலஞ்ச ஊழலை எதிர்த்து பாராளுமன்றத்தில் லோக்பால் என்ற பிரேரணையை நிறைவேற்றக் கோரி அவர் மேற்கொண்ட சாத்விக வழிப் போராட்டத்துக்கு (சாத்விக வழியாயினும், வன்முறையில் முடிந்த சம்பவங்களும் உள) ஊடகங்கள் பெரும் முக்கியத்துவம் கொடுத்தன. அவர் உலகளாவிய ரீதியிலே பிரபலமானார்.
 அதே இந்தியாவில் தான் இரோம் சானு ஷர்மிளா வும் வசிக்கிறார்... முப்பத்தொன்பதே வயதான பெண் கவிஞர்....மணிப்பூரின் இரும்புப் பெண் என வர்ணிக்கப்படுபவர்.... சுருண்ட தலை முடி..வெளிறிய முகம்...கொஞ்சம் நலிந்த உடல் வாகு.. தனிமைப்படுத்தப்பட்ட, வைத்திய சாலை வாழ்க்கை... மூக்கினூடாக ச் செல்லும் உணவு அனுப்பும் குழாய்.. அவர் வாயினால் உணவை உட்கொண்டு 11 வருடங்களுக்கு மேல் ஆகி விட்டன. அதாவது, தன் வழக்கமான வாழ்வியலைத் தொலைத்து பதினொரு வருடங்களாகிவிட்டன. ஷர்மிளா கொண்டிருக்கும் உண்ணா நோன்புக்கு என்ன காரணம் தெரியுமா? அதுவும் ஒரு பொது நோக்குக்காகத் தான். ஷர்மிளாவினுடையது யாதெனில், இந்தியாவின் தென் மேற்கு மூலையான மணிப்பூரிலே இராணுவத்துக்குக் கொடுக்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரங்களை அகற்றிடக் கோரும் அகிம்சை வழிப் போராட்டமாகும்.
 அண்மையிலே 12 நாட்கள் உண்ணாவிரதமிருந்த ஹஸாரே முழு இந்தியாவையும் உலுக்கியெடுத்தார். அவர் பின்னால் எந்த வேற்றுமைகளுமின்றி மக்கள் படை திரளத்தொடங்கியது. அதைக்கண்ட இந்திய மத்திய அரசாங்கம் அச்சமடைந்தது. ஹசாரே விடயம் தொடர்பில் உயர் நீதி மன்றம் கூட மத்திய அரசாங்கத்தை எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. கடைசியில் பாராளுமன்றத்தில் லோக் பால் பிரேரணை தாக்கல் செய்யப்பட்டு ,உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.
காந்தி என்ற மகாத்மாவைப் பிரசவித்த தேசம் இந்தியா. உலகமே அதிசயித்த அஹிம்சா வழிப்போராட்டத்தால் பிரித்தானியரைத் துரத்திய தேசம். தம் தாய் மண் மீதான பற்றை ஆழமாகக் கொண்டிருக்கும் மக்கள் வாழும் தேசம். அதே இந்தியாவில் தான் சாதிகள், கட்சிகள், மதங்களின் பெயரால் தொடரும் வன்முறைகள் அதிகரிக்கும் போக்கைக் கொண்டிருக்கும் காலம் இது. அப்படியிருந்தாலும் அந்த அஹிம்சைப் போராட்டங்கள் முற்றாக அழிந்து போய்விட வில்லை. காந்தியக் கொள்கைகளும் மறக்கப்பட்டு விடவில்லை. வன்முறைகள் தான் தீர்வு என்ற கருத்து மிகுந்துவிட்டதான ஒரு காலப்பகுதியிலும் ஆங்காங்கே அஹிம்சை வழிப்போராட்டங்கள் நடைபெறத்தான் செய்கின்றன. அத்தகையதொரு போராட்டமாகவே ஹசாரேயின் போராட்டமும் கருதப்படுகிறது. அதற்கு ஊடகங்கள் கொடுத்த முக்கியத்துவத்தால், முழு உலகும் ஹசாரே யின் போராட்டத்தைப் பற்றி அறிந்திருந்தது. அவர் பிரபலமாக 12 நாட்களே போதுமானதாக இருந்தது.

 ஆனால் இரோம் ஷர்மிளா 11 வருடங்களாக உண்ணாவிரதமிருக்கிறார். ஹசாரே பற்றித் தெரிந்தவர்களுக்கு ஷர்மிளா பற்றித் தெரியவில்லை. ஏனெனில் அவரை ஊடகங்கள் பிரபல்யப்படுத்தவில்லை. அவருக்கு அரசியல் வாதிகளின் பக்க பலம் இருக்கவில்லை.
 பொலிசார் புடை சூழ அம்புலன்ஸ் வண்டியிலே நீதிமன்றத்துக்குச் செல்கிறார். மூக்கினூடு செல்கிறது உணவைக் காவும் குழாய். நீதிமன்றத்தினுள்ளே செல்கிறார்.. நீதி பதியின் முன் நிறுத்தப்படுகிறார். இது கடந்த பதினொரு வருடங்களாக இரு வாரங்களுக்கொரு முறை ஷர்மிளா கைக்கொள்ளும் சம்பிரதாயம். உண்ணாவிரதத்தை இனியாவது முடிப்பாரா? என்றால் , தானே இல்லை என்று பதிலளிக்கிறார் ஷர்மிளா. " நான் உறுதியாக இருக்கிறேன். கடவுளின் நியாயமான தீர்ப்புக்காகக் காத்திருக்கிறேன்" என்று தளர்வின்றிக் கூறுகிறார் ஷர்மிளா.
 இப்போது இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கிடம் ஷர்மிளா ஒரு கோரிக்கையை முன் வைத்திருக்கிறார். " என்னையும் ஹசாரேயைப் போலவே பாருங்கள் ! அன்னா ஹசாரேக்குக் கொடுத்த மரியாதையை எனக்கும் கொடுங்கள்! " என்பதே அவரது கோரிக்கையாக இருக்கிறது.

 இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 60 ஆண்டுகளாக அமுலில் இருந்து வரும் சிறப்பு இராணுவச் சட்டத்தை நீக்கக் கோரியே இரோம் ஷர்மிளா இந்த உயிர்ப் போராட்டத்தை செய்கிறார் . இந்த சட்டத்தைக் கையில் வைத்துக் கொண்டு இராணுவம் நிகழ்த்தி வரும் கொடுமைகள், பாலியில் வன்முறைகள், காரணமே இல்லாத கொலைகள், கடத்தல்கள், சித்திரவதைகள் போன்றவற்றை எதிர்த்து இப்போராட்டத்தைத் தொடங்கினார் ஷர்மிளா.
11 ஆண்டுகளுக்கு முன்பு சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஷர்மிளா தொடங்கினார். இதையடுத்து அவரைக் கைது செய்து ஒரு வருடம் சிறையில் அடைத்தனர்.அங்கும் அவர் சாப்பிடவில்லை. அதனால் வலுக் கட்டாயமாக திரவ சத்துணவை குழாய் மூலம் ஏற்றினார்கள். அப்படியும் ஷர்மிளா போராட்டத்தை விடவில்லை . தன்னை விடுதலை செய்த பின்னரும் கூட உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தார். இதையடுத்து அவரை இம்பாலில் உள்ள ஜவஹர்லால் நேரு மருத்துவமனையில் ஒரு அறையில் நிரந்தரமாகச் சேர்த்து அங்கு குழாய் மூலம் ஊட்டச்சத்துக்களின் கலவையான திரவ உணவை அவருக்குக் கொடுத்து வருகிறார்கள்.

அவரால் தான் விரும்பிய எதையுமே செய்ய முடியாது. தன் கையால் சாப்பிட முடியாது. தன் புலன் களின் உணர்வுகளைப் பூர்த்தி செய்ய முடியாது. வழக்கமான சாப்பாட்டு முறையைத் தொடரவோ அல்லது அதைத் தன் கட்டுப்பாட்டில் வைக்கவோ, விரும்பியதை உண்ணவோ, வேண்டும் போது உண்ணவோ முடியாது.பற்களை கூட துலக்க முடியாது. பதினோரு வருட இந்த தீவிர உண்ணாவிரத போரட்டத்தால் அவருடைய மாத விடாய் சுழற்சி நின்று விட்டது. கொள்கைக்காக காதலையே தள்ளி வைத்திருக்கிறார்..இவையெலாம் எமக்கு சாதாரணமாகத் தெரியலாம். ஆனால் அவை மரண வேதனையைத் தருபவை.. தன் மக்கள் வாழ்வில் ஒளியேற்றுவதற்காக தன்னையே உருக்கிக்கொண்டிருப்பவர் ஷர்மிளா.
  அவர் ஒரு கைதி. ஆனால் தனக்கு என்ன நடக்கிறது என்பது பற்றி அவர் அதிகம் ஆர்ப்பாட்டம் செய்வதில்லை. சிறை அதிகாரிகள் வற்புறுத்து குழாயை மூக்கில் புகுத்தும் போதும் அவர் எதிர்க்கவில்லை. ஆனால் தன் நிலை குறித்து விபரிக்கும் போது "நான் செய்வது மனநிறைவைத் தருகிறது. அது என் செயல் குறித்துக் கர்வம் கொள்ள வைக்கிறது. என்னால் சாப்பிடவோ, அருந்தவோ முடியவில்லை என்றாலும் என் கண்கள் நான் நினைப்பதைப் பார்க்கவில்லை என்றாலும் நான் செய்வதில் உள்ள நிறைவு அவற்றையெல்லாம் ஒன்றுமற்றவையாக்கி விடுகிறது." என்கிறார் அந்த வீரப்பெண்.
 ஷர்மிளாவின் வீரப் போராட்டத்தின் பக்க பலமாக ஊடகங்கள், அரசியல் வாதிகள் இருக்கவில்லை. அதனால் ஹசாரேக்குக் கிடைத்த பிரபல்யம் ஷர்மிளாவுக்குக் கிடைக்காமல் போய் விட்டது.

டில்லி ராம் லீலா மைதானத்தில் நடைபெற்ற அன்னா ஹசாரேயின் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்குபற்றுமாறு அவரது குழுவினர் ஷர்மிளாவுக்கு அழைப்பு விடுத்தனர். ஷர்மிளா ஒரு கைதியாக இருப்பதால் அவரால் அந்த நிகழ்வில் பங்கு பற்ற முடியவில்லை.

மணிப்பூர் மாநிலப் பெண்களின் நலனுக்காகவும், இராணுவக் கொடுமைகளுக்கு எதிராகவும் ஹஸாரே போராட வர வேண்டும் என்று ஷர்மிளா கோரிக்கை விடுத்திருந்தார். இதற்கு ஹசாரேயிடமிருந்தோ அவரது குழுவினரிடமிருந்தோ எந்தப் பதிலும் கிடைக்கவில்லை.

 மணிப்பூர் மக்களுக்காக ஹசாரே போராடுவார் எனத் தான் நம்புவதாகவும் அதற்காக ஹசாரேயை தான் கட்டாயப்படுத்தப்போவதில்லை என்றும் கூடக் கூறியிருக்கிறார் அந்த வீரப்பெண்.

மற்றவர்களைப் போல ஷர்மிளாவுக்கும் ஆசைகள் , கனவுகள், இலட்சியங்கள் இருக்காதா என்ன? அவரின் மன் உறுதி வியக்க வைக்கிறது. மற்றவர்களைப்போல இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதையே தானும் விரும்புவதாகக் கூறும் ஷர்மிளா, தனது போராட்டம் முடியும் வரை தன் இலட்சியங்கள் , கனவுகளை நினைத்துப் பார்க்கக் கூடப் போவதில்லை என உறுதி படக் கூறுகிறார்.

 ஹசாரேயின் 12 நாள் உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்கு வர எந்த மத்திய அரசு காரணமாக இருந்ததோ, அதே மத்திய அரசு தான் ஷர்மிளாவின் போராட்டம் நீடிக்கவும் காரணமாகியது. ஷர்மிளா காண்பதோ சிறை வாசம். அவரால் டில்லிக்கோ அல்லது பொது இடங்களுக்கோ சென்று போராட முடியாது.

அத்துடன் அரசியல்வாதிகளை நம்புவதற்கும் ஷர்மிளா தயாராகவில்லை. உண்ணாவிரதத்தைக் கைவிடுங்கள். விவாதம் நடத்துகிறோம் என்று வெறும்  வார்த்தைகளிலே உறுதி மொழிகளைக் கூறி விட்டு விடயத்தை கிடப்பிலே போட்டு விடும் கபட நாடகங்களை நம்பி ஏமாற ஷர்மிளா விரும்பவில்லை. ஆனால் செயலில் காட்டுவதற்கு உறுதி தந்தால் போராட்டத்தை நிறுத்துவது பற்றிக் கருத்தில் எடுக்க முடியும் என் கிறார் ஷர்மிளா.

 முடிவு மத்திய அரசின் கையிலே தான் இருக்கிறது. எல்லையோரப் பாதுகாப்பை மட்டுமே கருத்தில் கொண்ட 53 வருடகால சட்டத்தால் அப்பாவி பொது மக்கள் படும் அவலத்தை மத்திய அரசு உணர்ந்து கொள்ளவில்லை போலும். நாட்டின் பாதுகாப்பின் முன்னே அப்பாவிகளின் துன்பம் பெரிதாகத் தெரிய வில்லையோ என்னவோ? ஆனால், அந்த இன்னல்களால் வட கிழக்கு இந்தியப் பிராந்தியம் மெல்ல மெல்ல அழிவடைந்து வருகிறது என்பது எவருக்கும் விளங்கவில்லை. மத்திய அரசு அப்பிராந்தியத்தை அலட்சியப்படுத்துகிறது. அத்தகையதோர் நிலைமை இந்தியாவின் கலாசாரப் பல்வகைமைக்கு ஏற்படப்போகும் பேரிழப்பாகும். அந்தப் பேரிழப்பால் ஏற்படப்போகும் அரசியல், சமூக ரீதியிலான தாக்கங்கள் பெரும் பின்னடைவுகளைத் தோற்றுவிக்கும் என்பதே நிதர்சனம் .

 இத்தகைய மக்கள் நலன் சார் போராட்டங்களிலே ஊடகங்களுக்கு இருக்கும் முக்கியத்துவம் அளப்பரியது. அகில இந்திய ரீதியிலே ஹசாரேக்கு ஆதரவாகத் திரண்ட மக்கள் பேரணியின் பின்னணியில் வெகுசனத் தொடர்பு ஊடகங்களே இருக்கின்றன. அவை அந்தப் போராட்டத்துக்கு கொடுத்த முக்கியத்துவம் தான், ஊடகங்களுக்கு மத்திய அரசு புதிய கட்டுப் பாடுகளை விதிக்கவும் காரணமாகியது. ஏனெனில் அந்த ஊடகங்கள் மத்திய அரசை ஒரு கணம் ஆட்டங்காண வைத்தன என்று கூறினாலும் மிகையில்லை.

 ஆனால் அந்த வெகுசனத்தொடர்பு ஊடகங்கள் ஹசாரேக்கு வழங்கிய முக்கியத்துவத்தை ஷர்மிளாவுக்கு வழங்கியவில்லை. அவ்வாறு வழங்கியிருந்தால் , இந்தியாவின் வடகிழக்குப் பிராந்தியத்துக்கு என்றோ விடிவு கிடைத்திருக்கும். ஆனாலும், தற்போது தான் கால ஓட்டம் வெகுசனத் தொடர்பு ஊடகங்களை ஷர்மிளாவின் பக்கம் திருப்பியுள்ளது. அந்த வீரப்பெண்ணின் உண்ணாவிரதம் வெகு விரைவில் கூட முடிவுக்கு வரலாம். ஆயினும், உலகில் மிக நீண்ட காலம் உண்ணாவிரதம் இருக்கும்/இருந்த நபர் என்ற பெருமை ஷர்மிளாவிடமே நிலைத்திருக்கும் எனலாம். ஏனெனில் அத்தகைய ஒரு மன உறுதி எல்லாருக்கும் கிடைத்து விடாது. நீதி தேவதை தன் பார்வையை எப்போது ஷர்மிளாவின் பக்கம் திருப்பப் போகிறாள் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


வடகிழக்கு பிராந்தியத்தின் பிரச்சினை

வட கிழக்கு மாநிலங்கள்

  • மணிப்பூர்
  • அசாம்
  • அருணாச்சல பிரதேசம்
  • மெகாலயா
  • மிசோரம்
  • நாகலாந்து
  • திரிபுரா

என அடையாளம் காணப்படும்.  
இந்தியா விலே ஊடகங்கள் கூட கைவிட்ட ஒரு சூனிய பூமி இப்பிராந்தியம்.இந்த மாநில மக்கள் மொங்கோலியர்களை போன்ற முக தோற்றம் கொண்ட இப்பிராந்திய என்றுமே தங்களை இந்தியர்களாக உணர்ந்ததில்லை. உணர்வதற்கான எந்த வித அடிப்படை காரணிகளும் அவர்களிடம் இல்லை.மொழியாலும் சரி,வாழ்க்கை நடைமுறைகளாலும் சரி உணவு பழக்க வழக்கத்தாலும் சரி,மத அடிப்படயாலும் சரி,அவர்களை இந்தியர்கள் என கூறுவதற்கு எந்த அடிப்படையும் இல்லை.இந்த மாநிலங்களுக்குத் தனித்துவமான மொழிகளின் எண்ணிக்கை அளப்பரியது.இந்த மாநிலத்தவர்களின் ஒற்றை கோரிக்கை எங்களை தனியே விடுங்கள் என்பதாகும்.சுருங்க கூறின் இந்தியாவின் வட கிழக்கு மாநில மக்கள் தங்களை இந்தியர்கள் என கூறுவதற்கு சங்கடப்படுகிறார்கள்.

இந்தமாநிலங்களில் தனி நாடு கேட்டு போராடும் அமைப்புகளின் எண் ணிக்கை மிக அதிகம் . மணிப்பூரில் மாத்திரம் தனிநாடு கேட்டு போராடும் அமைப்புகளின் எண்ணிக்கை சுமார் 40 .  
அத்தகையோரை ஒடுக்க வல்ல சட்டம் தான் Armed Forces Special Powers Act (1958) என அறியப்படுகிறது. இச்சட்டத்தின் கீழ் இராணுவத்துக்கு பல அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆணையின்றி எவரையும் கைது செய்ய முடியும். சந்தேகத்தின் பெயரில் சுட முடியும். 5 பேருக்கு மேல் கூட்டமாகக் கூடினால் இராணுவ பலத்தை உபயோகித்து அக்கூட்டத்தைக் கலைக்க முடியும்.

ஆனால் துரதிஷ்டவசமாக அப்பிராந்தியத்தில் கடந்த சில தசாப்தங்களாக இடம்பெறும் துஷ்பிரயோகங்களுக்கு இச்சட்டம் காரணமாகி விட்டது. 1000க்கும் மேற்பட்டோர் கொலை செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டனர். சித்திரவதை செய்யப்பட்டனர். பெண்கள் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு ஆளாக்கப்பட்டனர். இத்தகையதோர் நிலைமை தான் சாத்விகப் போராட்டத்தை முன்னெடுக்க ஷர்மிளாவைத் தூண்டியது.

Sunday, September 11, 2011

தினையென நினைத்து விதைத்த வினை

அது மத்திய காலம். அப்போது திருச்சபை சொல்வது தான் வேத வாக்கு என்று கண்மூடித்தனமாக நம்பியிருந்த மேற்குலகம் மெல்ல மெல்ல விழித்தெழத் தொடங்கியிருந்தது.சகல துறைகளிலும் ஐரோப்பா முழுவதும் மறுமலர்ச்சி ஒன்று உருவாகத் தொடங்கியிருந்த காலம் அது. இன்றைய கண்டுபிடிப்புக்களுக்கு மூலாதாரமாய் இருக்கும் கொள்கைகளும் கண்டுபிடிப்புகளும் உருவாகிய காலம்..... இன்று நாம் அறிந்திருக்கும் பிரபல விஞ்ஞானிகள் பலர் தம் சிந்தனைகளுக்கு வித்திட்ட காலம்.... புதிய கருத்துக்களை தர்க்க ரீதியாக வெளியிட்டமைக்காக, தர்க்க ரீதியாகச் சிந்தித்தமைக்காக பல அறிஞர்கள் திருச்சபையால் கொடூரமாகக் கொல்லப்பட்ட காலம்.....

அப்போது தான் பிரெஞ்சு தேசத்திலே நொஸ்ட்ராடமஸ் என்ற அறிஞரும் வாழ்ந்தார் (1503-1506). அடிப்படையில் ஒரு மருத்துவரான நொஸ்ட் ராடமஸ் உலகின் பிரபலமான கணிப்புக் களுக்குச் சொந்தக் காரர். Les Propheties என்ற பெயரில் அவர் எழுதிய புத்தகம் பல நூற்றாண்டுகளுக்குரிய முக்கிய நிகழ்வுகளை எல்லாம் எதிர்வு கூறியிருந்தது. ஒவ்வொரு எதிர்வு கூறலும் 4 வரிக் கவிதையாக இருக்கும்.

அத்தகைய ஒரு கவிதையிலே,

'கடவுளின் நகரில் பெரும் இடி ஒன்று தாக்கும்


இரட்டைச் சகோதர்கள் பிரிக்கப் படுவர். கோட்டை நிலை குலையும்


பெருந்தலைவர் நிலை குலைவார்


ஒரு பெரிய நகரம் எரியும் போது மூன்றாவது மகா யுத்தம் ஆரம்பமாகும்'
என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

எதிர்வுகூறல் ஒன்றைப் பொறுத்த வரையிலே அது நடக்க முன்னர், இப்படித் தான் நடக்கப்போகிறது என்பதைத் நிச்சயமாகக் கூற முடியாது. இதுவோ? அதுவோ ? என்ற நிச்சயமற்ற தன்மை ஒன்று காணப்படும். ஆனால் சம்பவம் ஒன்று நடந்து முடிந்த பின் அதை எதிர்வு கூறலுடன் ஒப்பிட்டால் தத்ரூபமாகப் பொருந்தும்.

ஜோதிடத்தில் நம்பிக்கையுடைய பலர் இந்த உண்மையை அடிக்கடி உணர்ந்திருப்பர். நொஸ்ட் ராடமஸின் எதிர்வு கூறலில் உண்மை இருக்கலாம் என்பதை உறுதிப் படுத்தும் வகையிலே ஒரு சம்பவம் இடம்பெற்றது. அது நடந்ததோ 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ஆம் திகதி. அமெரிக்காவின் உலக வர்த்தக மைய இரட்டைக் கோபுரங்கள் மீது விமானம் மோதியது. அமெரிக்காவின் நியூயோர்க் நகரிலே தலை நிமிர்ந்து நின்ற வானளாவிய கட்டடங்கள் இடிந்து விழுந்தன. அதை அமெரிக்கா மட்டுமன்றி முழு உலகுமே தொலைக்காட்சியில் பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தது. எவருமே எதிர்பார்த்திராத நிகழ்வு அது.

உலகளாவிய பயங்கரவாதத்தின் உச்சகட்டம் என வர்ணிக்கப்பட்டது. அமெரிக்கா வளர்த்த கடாவே மார்பில் பாய்ந்தது என்றனர் அரசியல் ஆய்வாளர்கள். பயங்கரவாதத்தின் மீதான போருக்கு வழி வகுத்தது. ஆப்கானிஸ்தான், ஈராக் என்று தொடங்கி பாகிஸ்தானில் 9-11 தாக்குதலின் சூத்திரதாரியாகக் கருதப்பட்ட ஒசாமா கொல்லப்பட்டது தொட்டு இன்றும் பல யுத்தங்களைத் தொடர வைக்கிறது.

தன்னை எவரும் அசைக்க முடியாது என்றிருந்த அமெரிக்காவை ஆடவைத்த இந்த தாக்குதலால் பௌதிக ரீதியாகவும் உள ரீதியாகவும் ஏற்பட்ட பாதிப்புகள் விபரிக்க முடியாதவை. வரலாற்றாய்வாளர்கள் இத்தாக்குதலை நியூயோர்க் நகரின் வரலாற்றின் கறை படிந்த அத்தியாயம் என்பர்.

இந்தப் பேரனர்த்தத்தால் ஏற்பட்ட பௌதிக ரீதியான, அளவிடக்கூடிய சேதங்கள் தான் பலராலும் பேசப்பட்டன. ஆனால், அளவிடமுடியாத மறைமுகமான பாதிப்புக்கள் அளவிடக் கூடியவற்றிலும் அதிகமாகும். அத்துடன் இவை மிக நீண்டகாலத்துக்கு தாக்கம் செலுத்தக் கூடியவை.

உலக வர்த்தகமையக் கட்டடங்கள் இடிந்து விழுந்தமையால் ஏற்பட்ட புகை, தூசுகள், சாம்பல் துகள்கள் ஆகியன நியூயோர்க் நகரச் சூழல் மாசடைவதில் பெரும்பங்காற்றின எனலாம்.

இத் தாக்குதலால் சுற்றுச்சூழல் இரு வழிகளிலே பாதிக்கப்பட்டது. ஒன்று கட்டட இடிபாடுகளால் ஏற்பட்ட தூசு முகில். மற்றையது கட்டடம், அதனுடன் இணைந்த பொருட்களின் குறை தகனத்தால் வளிமண்டலத்தில் சேர்ந்த புகை. ஏனெனில் தாக்குதல் நடந்து 3-5 மாதங்களின் பின்னரே தீயை முற்றாக அணைக்க முடிந்தது. இடிபாடுகள் அகற்றப்பட்ட பாதைகளெங்கும் மாசாக்கிகள் படிந்து கிடந்தன. சம்பவ இடத்திலிருந்து ஒரு மைல் தொலைவிலுள்ள பகுதிக்கு மேலே இருக்கும் வளிமண்டலத்தில் கூட மாசாக்கிகள் கண்டறியப்பட்டன.

1000 பாகை செல்சியஸ் வரை தீப்பற்றி எரிந்த கோபுரங்களால் சூடாகிய புகையுடன் கூடிய வளி முகிலாகப் பரந்து நின்றது. வளி மண்டலத்துக்கு இருக்க வேண்டிய தரம் குறைவடைந்தது.விளைவாக ஓசோன் தரம் 60 ppm (மில்லியனில் ஒரு பங்கு) ஆகக் குறைக்கப்பட்டது. 9/11 தாக்குதலுக்கு முன்னர் ஓசோன் தரம் 60 ppm ஆக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

உயர் வெப்ப நிலையிலே உருகிய கட்டடப் பொருட்கள் விஞ் ஞானிகள் கூட ஏதிர்பார்த்திராத புதிய சேர்வைகளையும் கலவைகளையும் உருவாக்கின. அங்கு நிலவிய உயரமுக்கம் தளங்களை நிலை குலையச் செய்தது.

மருத்துவ ரீதியாக, உளவியல் ரீதியாக ஏற்பட்ட பாதிப்புகள் சொல்லிலடங்கா.. 40,000 -90,000 தன்னார்வத்தொண்டர்கள் மீட்புப்பணியில் ஈடுபட்டார்கள் என்றால் ஏற்பட்ட சேதம் எத்தகையது என்று கற்பனை பண்ணிப் பார்க்க முடிகிறதல்லவா? அப்பகுதியில் காணப்பட்ட தூசால் அந்தத் தன்னார்வத்தொண்டர்கள் நிச்சயம் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்று மருத்துவ வல்லு நர்கள் கூறுகின்றனர்.

அடித்தளத்திலே வேலை செய்த தன்னார்வத் தொண்டர்கள் பெருங்காயங்களுக்கும் சுகயீனங்களுக்கும் உள்ளானார்கள். ஏறத்தாழ 16 ஏக்கர் நிலப்பரப்பில் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மீட்பு நடவடிக்கைகளை முன்னெடுத்த 90 அரச முகவர் நிறுவனங்களின் மீதும் தனியார் கம்பனிகள் மீதும் வழக்குகள் தொடரப்பட்டன. காரணம் யாதெனில் அவை ஒழுங்கான முற்பாதுகாப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறியமையே யாகும். அந்த வழக்குகளின் விளைவாக மீட்பு நடவடிக்கைகளின் பின்னர் ஏற்பட்ட சுகயீனங்களைக் குணப்படுத்த, மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்யவென 7.4 பில்லியன் டொலர் பெறுமதியான நிதியமொன்று உருவாக்கப்பட்டது.

9/11தாக்குதலின் மீட்புப் பணியாளர்கள் இன்றும் ஒரு சிறப்பு சுகாதாரக் காப்புறுதிக்கு உரித்துடையவர்களாக இருக்கிறார்கள். அப்படியொரு வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருக்கிறதாயின் அந்த 9/11 தாக்குதல் அத்தகைய பாரிய சுகாதார விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது என விளங்கிக் கொள்ள முடியும்.

கட்டடங்கள் இடிந்து விழுந்தபோது எழுந்த தூசுப்படலமும் புகை மூட்டமும் அங்கு உருவாகிய நச்சுத் தன்மையான சூழலும் புற்று நோயைத் தோற்றுவிக்கும் காரணிகளாக மாறியமை குறித்தும் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஆனால் அவை 100 சதவீதம் உறுதி செய்யப்படவில்லை. அதிலும் அடித்தளத்தில் பணி புரிந்த மீட்புப் பணியாளர்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.

அடித்தளத்திலே பணியாற்றிய மீட்புப் பணியாளர்களுள் புற்று நோயால் இறப்பவர்கள் தொடர்பில் பல ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.பல ஆய்வு நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும் தனி யார் குழுக்களும் அக்கருதுகோள் தொடர்பிலான ஆய்வுகளை முன்னின்று மேற்கொள்கின்றன.

அடித்தளத்தில் பணியாற்றிய தன்னார்வத்தொண்டர்கள் மத்தியில் புற்று நோயின் தாக்கம் மட்டும் அதிகரித்துக் காணப்படவில்லை. ஆஸ்துமா மட்டுமன்றி பல சுவாச நோய்களின் தாக்கமும் காணப்படுகிறது. தீயணைப்புப் படைவீரர்களின் சுவாசப்பைகளின் வினைத்திறன் குறைவடைந்து செல்வதும் அவதானிக்கப்பட்டது.

உலக வர்த்தக மையக் கட்டடப்பகுதியில் காணப்பட்ட கண்ணாடி இழைகள், ஈயம். பல் சக்கர அரோமட்டிக் ஐதரோ காபன் கள், சீமெந்து, டையொக்சின்கள் போன்றவையெல்லாம் உயர் வெப்ப நிலையில் ஆவியாக மாறின. அவற்றை வளியுடன் சேர்த்து சுவாசிக்க வேண்டிய நிர்ப்பந்தம் மீட்புப் பணியாளர்களுக்கு ஏற்பட்டது. இடிபாடுகளை அகற்றுவதற்குப் பாவிக்கப்பட்ட இயந்திரங்களும் பெருமளவில் புகையை வெளியிட்டன. இத்தகைய சூழல் சுவாச நோய்கள் உருவாகக் காரணமாயிற்று. ஆனால் அந்த மீட்புப்பணியாளர்கள் எவருக்குமே 9-11 தாக்குதலுக்கு முன்னர் சுவாச நோய்க்கான அறிகுறிகள் காணப்படவில்லை.

மீட்புப் பணியாளர்களுள் 37 சதவீதமானோருக்கு உளரீதியான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தாக்குதல் நடந்த முதலிரு நாட்களில் மீட்புப் பணியில் ஈடுபட்டவர்களே அதிகளவில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஆவியாகிய அஸ்பெஸ்டஸ், ஈயம், பாதரசம் டையொக்சின் கள் போன்றவற்றால் மீட்புப் பணியாளர்கள் மட்டும் பாதிக்கப்படவில்லை. ஆயிரக்கணக்கான பொதுமக்களும் தொழிலாளர்களும் கூடப் பாதிக்கப்பட்டனர். ஏனெனில் அவை பரவியது சனத்தொகை அடர்த்தி மிகவும் கூடிய நியூயோர்க் நகரப்பகுதியாகும்.

இந்த தாக்குதலில் இறந்தவர்கள் என 2753 பேருக்கு நியூயோர்க் மா நிலம் மரணச் சான்றிதழ்களை வழங்கியுள்ளது. அவர்களுள் 342 தீயணைப்புப் படைவீரர்களும் 60 பொலிஸ் வீரர்களும் அடங்குவர். நியோர்க் மா நிலத்தின் சனத்தொகையில் குறிப்பிடத்தகு வீழ்ச்சியொன்று ஏற்படவும் இந்த 9/11 தாக்குதல் காரணமாகியது. ஏறத்தாழ ஒரு வருடத்துக்கும் அதிகமான காலம் 19,000 குடும்பங்கள் இடம்பெயர்ந்து இருக்க வேண்டிய சூழ் நிலை உருவாகியது.

யுத்தமோ தாக்குதலோ எதுவாயினும், அது ஏற்படுத்தும் நேரடிப் பாதிப்புகள் பாரதூரமானவைதான். ஆனால் சில காலங்களின் பின்னர் அல்லது ஒரு சந்ததி கடந்த பின்னர் அவற்றின் வடுக்களைக் காணமுடியாமல் போய்விடும். ஆனால் அந்தத் தாக்குதல்களும் யுத்தமும் ஏற்படுத்தும் மறைமுகமான பாதிப்புகள் ஆரம்பத்தில் சிறியனவாகத் தெரிந்தாலும் மிகவும் ஆபத்தானவை. அந்தப்பாதிப்புகள் மிக நீண்ட காலத்துக்குத் தொடரும். ஆனால் எந்த வடிவில் தொடரும் என்பதை மட்டும் எதிர்வு கூற முடியாது.

ஏறத்தாழ மூன்றரை தசாப்தங்களுக்கு முன்னர் நடந்த வியட் நாம் யுத்தத்தையும் அரை நூற்றாண்டுக்கு முன் ஜப்பான் மீது நடத்தப்பட்ட அணுகுண்டுத்தாக்குதல்களையும் கூட இங்கு உதாரணமாகக் கொள்ளலாம். இரண்டுக்குமே பொறுப்பேற்க வேண்டியது அமெரிக்காவாகும்.

வியட் நாம் யுத்தத்திலே அமெரிக்கா பாவித்த நச்சு ஆயுதங்களும் நச்சுக்குண்டுகளும் இன்னும் அம்மண்ணிலே புதைந்து கிடக்கின்றன. அவற்றின் அன்றைய பிரயோகத்தின் விளைவால் வியட் நாமில் இன்றும் குணப்படுத்தமுடியாத ஊனங்களுடன் பிள்ளைகள் பிறக்கின்றன. ஜப்பானிலும் அதே நிலைமை தான் தொடர்கிறது.

இன்று இரு சந்ததிகள் கடந்த பின்னர் கூட ஜப்பானும் வியட் நாமும் கொடுத்துக்கொண்டிருக்கும் விலையை இன்னும் ஒரு தசாப்தத்தில் அமெரிக்கா கொடுக்க வேண்டி வரும் என்கின்றனர் ஆய்வாளர்கள். தானே வினையை விதைத்ததால் அதை அறுவடை செய்யவும் அமெரிக்கா தயாராக இருக்குமோ என்னவோ? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Sunday, September 4, 2011

துரும்புச் சீட்டான தூக்குத் தண்டனை?

சாந்தன், முருகன், பேரறிவாளன்..... கிட்டத்தட்ட 20 வருடங்களை சிறைக்கம்பிகளுக்குப் பின்னாலேயே கழித்தவர்கள் இவர்கள். இந்தியாவின் பிரதமராகவிருந்த ராஜிவ் காந்தியின் கொலை வழக்கிலே குற்றம் சாட்டப்பட்டு தூக்குக்கயிற்றை எதிர்பார்த்துக் காத்திருந்தவர்கள்,....



அவர்களால் என்றோ இந்திய ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டு பல ஆண்டுகளாகக் கிடப்பிலே போடப்பட்டிருந்த கருணை மனு நிராகரிக்கப்பட்டு  இம்மாதம் 9 ஆம் திகதி தூக்குத்தண்டனை என நிர்ணயம் செய்யப்பட்டது. வேலூர் மூவரையும் தூக்கிலிடுவதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டன. அவை ஒருபுறம் நடைபெற, மறுபுறம் தூக்குத்தண்டனையை எதிர்த்து உண்ணாவிரதங்களும் தீக்குளிப்புகளும் போராட்டங்களும் தீவிரமாக நடைபெற்றன. தமிழகம் முழுவதிலும் ஒரு கொந்தளிப்பு நிலை காணப்பட்டது.

அதற்கிடையில் அறிக்கையிடுதலில் ஆரம்பித்திருந்த தி.மு.க - அ.தி.மு.க கட்சிகளுக்கிடையிலான பனிப்போர் இந்த ராஜிவ் கொலைக் குற்றவாளிகள் மீதான தூக்குத் தண்டனையை பிரதான ஆயுதமாகத் தூக்கியது. .

ஒரு மா நிலத்தின் முதல்வராக அத் தீர்ப்பை பிற்போடும் அதிகாரம் ஜெயலலிதாவுக்கு இருக்கிறது என கருணா நிதி கூறினார். தனக்கு அத்துணை அதிகாரம் இல்லை என ஜெயலலிதா பதிலறிக்கை வெளியிட்டார். இது தமிழகத்தில் ஒரு எதிர்ப்பலையைக் கிளப்பியது. அத்துடன் ஜெயலலிதாவுக்கான ஆதரவில் சிறு சரிவும் ஏற்பட்டது.

அதற்கிடையில் மூவர் மீதான தூக்குத்தண்டனையை இரத்து செய்யக் கோரி அவர்கள் சார்பில் சென்னை உச்ச நீதி மன்றிலே ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கொன்று நிலுவையில் இருக்கும் போது அவர்களை தூக்கில் போடுவது சாத்தியமாகாது. அத்துடன் அவசர தேவை கருதி அந்த மனு உடனே விசாரணைக்கு எடுக்கப்பட்டது. தூக்குத்தண்டனையை நிறைவேற்ற 8 வாரங்கள் இடைக்காலத்தடையும் விதிக்கப்பட்டது. கருணை மனு நிராகரிப்பில் ஏற்பட்ட தாமதமே அந்த இடைக்காலத்தடை விதிக்கப்படக் காரணமாக அமைந்தது.

கருணை மனுக்களை மறுபரிசீலனை செய்து, அவர்களின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, தடை உத்தரவு கிடைத்த அன்றே தமிழக சட்டசபையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. அதிக பெரும்பான்மையைக் கொண்டிருக்கும் மாநில அரசொன்றினால் நிறைவேற்றப்பட்டிருக்கும் தீர்மானத்தை அலட்சியப்படுத்த முடியாத நிலைமை மத்திய அரசுக்கு இருக்கிறது. இந்திய மத்திய அரசு தமிழீழ விடுதலைப்புலிகளைத் தடைசெய்வதற்குக் காரணமாக அமைந்ததும் ஜெயலலிதா அரசினால் தமிழக சட்டப்பேரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானமே என்பதை இங்கு கருத்தில் கொள்ள வேண்டும்.

தமிழர்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கும் வகையில், தமிழக அரசின் சார்பில் ராஜிவ் கொலைக்குற்றவாளிகள் தொடர்பிலான தீர்மானத்தை முன்மொழிவதாக ஜெயலலிதா கூறியிருந்தார். வாக்குப்பதிவையடுத்து தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் இத் தீர்மானம் எவரையும் கட்டுப்படுத்தாது என மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். மேல் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் ஆகிய இரண்டும் இந்த விடயத்தில் இறுதி முடிவு எடுக்கும் வரை, நாங்கள் பதில் ஏதும் கூற விரும்பவில்லை.எனினும் ராஜிவ் கொலையாளிகள் விடயத்தில் ஜனாதிபதியின் முடிவைத் தான் நாங்கள் கருத்தில் கொண்டுள்ளோம். தமிழக சட்டசபையில் இயற்றப்பட்டுள்ள தீர்மானம் மற்றும் மேல் நீதி மன்றின் இடைக்கால தீர்ப்பு குறித்து, மத்திய அரசு தனது தரப்பில் நடவடிக்கை மேற்கொள்ளும் என்றார் சல்மான் குர்ஷித்.

தமிழ் நாட்டில் கடந்த சட்டசபைத் தேர்தலிலே காங்கிரஸ் கட்சிக்குக் கிடைத்த பெருந்தோல்வி அதன் வரலாற்றில் கறை படிந்த மைல் கல்லாகும். காங்கிரஸ் மட்டுமன்றி அதனுடன் கூட்டணி வைத்துக் கொண்ட தி.மு.கவுக்கு கிடைத்ததும் அதிரடித் தோல்வி தான். தமிழரை அலட்சியப்படுத்தியமை, 2ஜி அலைக்கற்றை ஊழல் உட்பட தன் மீது படிந்திருக்கும் பல கறைகளைத் துடைத்தெறிந்தால் தான் தமிழகத்தில் தன் இருப்பை உறுதி செய்ய முடியும் என்பது காங்கிரஸ் கட்சிக்குத் தெரியும்.

தேர்தல் காலங்களில் தி.மு.க வுடனான கூட்டணி தொடர்பில் இருதலைக் கொள்ளியெறும்பின் நிலையையே காங்கிரஸ் கட்சி கடைப்பிடித்து வந்தது. அக்காலத்தில் காங்கிரஸ்-தி.மு.க கூட்டணிக்கிடையில் இடம்பெற்ற தொடர் பேச்சுவார்த்தைகளும் இரு தரப்பும் வெளியிட்ட அறிக்கைகளும் அந் நிலையைத் தெளிவாகக் காட்டும். தான் சேர்ந்து கொண்ட கூட்டணி, தனக்கே வினையாகப் போகிறது என்பதை காங்கிரஸ் ஓரளவு உணர்ந்திருந்தது என்பதும் உண்மை தான். தமிழகத்தைப் பொறுத்தவரையிலே, தி.மு.க வும் அ.தி.மு . க வும் தான் இரு பெரும் கட்சிகள். அங்கு தனித்துப் போட்டியிட்டு பெரும்பான்மை ஆசனங்களை வெல்வதென்பது காங்கிரஸ் கட்சிக்கு இயலாத காரியம் . ஆனால் தி.மு.க கூட்டணியை உடைத்துக் கொண்டு அ.தி.மு.க வுடன் கை கோர்ப்பதும் இயலாமல் இருந்தது. அப்படி நடந்திருந்தால் தமிழ் மக்கள் அ.தி. மு.க வை ப் புறக்கணித்திருப்பார்கள். காங்கிரஸ்-தி.மு.க கூட்டணிக்கு கடைசியில் கிடைத்தது ம் பெருந்தோல்வி தான்.

இவை இப்படி இருக்க காங்கிரசுடன் இணைந்தால் தான் தான் மத்திய அரசில் இடம் பிடிக்கலாமென்பது ஜெயலலிதாவுக்கும் தெரியும். இரு தரப்பினருக்குமே நேரடியாக இணைய முடியாத நிலவரம் தான் தமிழகத்தில் காணப்படுகிறது. இப்போதும் காங்கிரசுடன் ஜெயலலிதா பகிரங்கமாகக் கை கோர்த்தால் தமிழக மக்களின் எதிர்ப்பை அவர் சம்பாதிக்க நேரிடும் என்பது கண்கூடு.

அதே வேளை பதினொன்றரை வருடங்களாகக் கிடப்பில் போடப்பட்டிருந்த ராஜிவ் கொலைக் குற்றவாளிகளின் கருணை மனுவை ஜனாதிபதி பிரதிபா பட்டேல் இப்போது எதற்காக நிராகரிக்க வேண்டும் என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. குற்றவாளிகளின் கருணை மனுவை அவர் எந்த அடிப்படையில் நிராகரித்தார் என்பதும் தமிழக சட்டசபைத் தீர்மானத்தை எந்த அடிப்படையில் நோக்கப் போகிறார் என்பதும் சிந்திக்கப்பட வேண்டிய விடயங்கள்.

இவை இப்படியிருக்க , ஓரிரு நாட்களுக்கு முன்னர் தமிழகத்தின் முன்னணி பத்திரிகையான தினமலர், தகுந்த ஆதாரங்களுடனான செய்தியொன்றை வெளியிட்டிருந்தது. அதாவது, 1999 ஆம் ஆண்டு ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட இம்மூவரது கருணை மனுக்களும் 2005 ஆம் ஆண்டு தான் ஜனாதிபதிக்குக் கிடைத்திருக்கின்றன. தமிழகத்திலிருந்து டெல்லிக்கு அவை ஊர்ந்து சென்றனவா அல்லது வேண்டுமென்றே தாமதாகக் கிடைக்கச் செய்யப்பட்டனவா என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன. தினமலர் இணையத்தில் வெளியாகிச் சில மணி நேரங்களுக்குள்ளேயே அச் செய்தி நீக்கப்பட்டிருந்தது. இதுவும் பல சந்தேகங்களையே தோற்று வித்துள்ளது.

அதற்கிடையில் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவருக்கும், தூக்குத் தண்டனையை நிறைவேற்றாமல் 11 ஆண்டு காலம் கடத்தியதற்கு தி.மு.க.தான் காரணம் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். அதிலும் ஏதாவது திருவிளையாடல்கள் இருக்கலாமோ என்று எண்ண வைக்கிறது.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் ஜனாதிபதியின் தீர்மானத்தையும் மேல் நீதிமன்றம் கேள்வி கேட்க முடியுமா என்ற கேள்வியும் இங்கு எழுகிறது.

இதற்கிடையில் அன்னா ஹஸாரே என்ற காந்தியவாதியின் ஊழல் எதிர்ப்புப் போராட்டம் மத்திய அரசை உலுக்கிப்போட்டிருந்தது. ஹஸாரேக்கு ஆதரவாக இந்தியா முழுவது மக்கள் அலை திரண்டது. மக்களுடைய கவனத்தை திசை திருப்புவதற்காக ஒவ்வொரு மா நிலங்களிலும் திட்டமிடப்பட்ட பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவற்றுள் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டது தான் இந்த ராஜிவ் கொலைக் குற்ற வாளிகளின் தூக்குத்தண்டனை விவகாரம் எனவும் கூட ஆய்வாளர்கள் கருத்துக் கூறு கின்றனர். அதற்குச் சான்று பகரும் விதத்திலே இந்த மூவரது கருணை மனு நிராகரிப்பு விடயம் ஏற்கெனவே திட்டமிடப்பட்டது தான் என ஆதாரபூர்வமாக நிரூபிக்கிறது ஜூனியர் விகடன் சஞ்சிகை.

"உங்கள் வழிமுறைகளைத் திருத்திக் கொள்ளாவிட்டால் உங்களுக்கு மக்கள் தான் பாடம் கற்பிப்பார்கள்" என உச்ச நீதிமன்றம் மத்திய அரசை எச்சரித்துள்ளது. அதற்கு ஹஸாரே தான் உதாரணமாகக் கொள்ளப்பட்டுள்ளார்.

எது எப்படியோஜெயலலிதாவுக்கான ஆதரவலை தமிழகத்தில் இப்போது வலுவடையத் தொடங்கி விட்டது. ஒரு வேளை தூக்குத்தண்டனை இரத்தானால் அது அ.தி.மு.க வை தமிழகத்தில் அசைக்க முடியாத சக்தியாக மாற்றி விடும் என்பதில் ஐயமில்லை. அத்துடன் காங்கிரஸ் மீது வடுவாகப் படிந்திருக்கும் கறைகள் சிறிதளவிலாவது மறக்கச் செய்யப்படும் என்பது கண்கூடு. அப்படி நடந்தால், அது காங்கிரஸ்-அ.தி.மு.க கூட்டணி உருவாவதற்கு நிச்சயம் வழி வகுக்கும். அதே வேளை தூக்குத்தண்டனை உறுதியாகியிருந்தால் தமிழகத்தை மறக்க வேண்டிய நிலை தான் காங்கிரசுக்கு ஏற்பட்டிருக்கும். அங்கு அத்துணை எதிர்ப்பலை காணப்பட்டதை எவரும் மறுக்க முடியாது.

மொத்தத்தில் ராஜீவ் கொலைக்குற்றவாளின் மரண தண்டனை விவகாரம் என்பது காங்கிரஸ் தனது அரசியல் இருப்பை நிலை நிறுத்துவதற்காகப் பயன்படுத்தும் துரும்புச் சீட்டாகவே தெரிகிறது.




உணர்வுகள்:

  • நளினியின் தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்படலாமெனில் ஏன் பேரறிவாளனுக்கு மட்டும் தூக்குத்தண்டனை என்று கேட்கிறார் தாய் அற்புதம்மாள். ஸ்தலத்தில் இருந்த படியால் நளினி முதலாவது குற்றவாளி என்பதும் பேரறிவாளன் 18 ஆவது குற்றவாளி என்பதும் குறிப்பிடத்தக்கது.


  • ராகுலும் பிரியங்காவும் அவர்களுக்கு கிடைத்த வலியைத் தனக்கும் தரமாட்டார்கள் என உறுதியாக நம்புவதாகக் கண்ணீர் மல்கினார் ஹரித்ரா. நளினி-முருகன் தம்பதியின் மகளாகிய ஹரித்ரா இலண்டனில் மருத்துவப்பட்டப்படிப்பை மேற்கொண்டு வருகிறார்.

  • தூக்குத்தண்டனையை இரத்துச் செய்யக்கோரி காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பூங்கொடி என்ற இளம் பெண் தீக்குளித்து உயிரை மாய்த்தார் .



  • சென்னையில் மூன்று சட்டத்தரணி சகோதரிகள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டனர்.



உதாரண வழக்குகள்

உச்சநீதிமன்றத்தில் தூக்கு தண்டனை உறுதி என்று தீர்ப்பு வந்ததும் 99 ஆம் ஆண்டே ஜனாதிபதிக்குக் கருணை மனு அனுப்பியுள்ளனர். இந்தக் கருணை மனு 11ஆண்டுகளுக்குப் பிறகு தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. இதைக் காரணமாக வைத்தே இவர்களின் தூக்கு தண்டனையை ஆயுளாகக் குறைக்க முடியும்.
  • கூத்தாநல்லூரில் 73-ம் ஆண்டு காஜாமொய்தீன் என்பவர் விஷ ஊசி போட்டு பல பேரைக் கொன்று நகை,பணத்தைக் கொள்ளையடித்தார் என்பது வழக்கு. இவருக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனை மீதான கருணை மனு கால தாமதத்தைக் காரணமாக சுட்டிக்காட்டி நீதிபதிகள் ராமலிங்கம், அருணாச்சலம் ஆகியோரைக் கொண்ட உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் தண்டனைக் குறைப்பு செய்தது.
  • செங்கல்பட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது பேரைக் கொன்ற வழக்கில் ஜெயப்பிரகாஷ் என்பருக்குத் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இவருக்கும் கருணை மனு காலதாமதத்தைக் காரணம் காட்டி ஆயுள் தண்டனையாகக் குறைத்தார்கள்.
  • மூன்று முறை தூக்குக் கயிற்றின் முன் சென்று, மேல்முறையீடு, கருணை மனு அனைத்தும் நிராகரிக்கப்பட்ட நிலையில், 24 மணிநேரத்தில் உயிர் காப்பாற்றப்பட்ட கட் டபொம்மனின் நேரடி வாரிசான குருசாமி இப்போது ஒரு நம்பிக்கையளிக்கும் உதாரணம்.தூக்குத் தண்டனையை நிறைவேற்ற இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தாமதம் ஆனது. ஆனால்,அதுவே தண்டனைதான் என்று ஏற்கெனவே வழங்கப்பட்ட தீர்ப்பையும் குருசாமி வழக்கில் நீதிபதிகள் சுட்டிக்காட்டினார்கள்..


ராஜிவ் கொலையில் இவர்களின் பங்கு

பேரறிவாளன்: ராஜிவ் காந்தியைக் கொல்லப் பயன்படுத்திய வெடிகுண்டுக்கு 9 வோல்ற் கொண்ட இரண்டு மின்கலங்களை வாங்கிக் கொடுத்தார்

முருகன்: இவர் யாழ்ப்பாணத்திலிருந்து ரொபர்ட் பயஸ், ஜெயக்குமார் என்கிற இரு இளைஞர்களை சதி வேலைகளுக்காக சென்னைக்கு அனுப்பி வைத்தார். சதிக்காக 91 மார்ச் மாதம் முருகனும் சென்னை சென்றார்.எல்லா சதிச்செயலும் முரு கனுக்குத் தெரிந்தே நடந்தது. ஆனால் தாம் கொல்லப்போவது ராஜிவை என்று அவருக்குத் தெரியாது.

சாந்தன்:விடுதலைப் புலிகளின் உளவுப்பிரிவு பொறுப்பாளராக சாந்தன் இருந்தார். ராஜிவ் கொலை வழக்கில் சிவராசனுக்கு உதவி செய்வதற்காக சாந்தன் அனுப்பி வைக்கப்பட்டார். ராஜிவ் கொலையானதும், கோடியக்கரை வழியாக இலங்கைக்கு தப்பிச்செல்ல திட்டமிட்டார். அப்போது பின் தொடரப் பட்டு கைது செய்யப்பட்டார்.

**சிவராசன், தனு, சுபா மூவரைத் தவிர வேறு யாருக்கும் ராஜிவ் கொலை பற்றித் தெரியாது.இதை நீதிபதி வாத்வா தனது தீர்ப்பில் சுட்டிக் காட்டியிருக்கிறார்.