Friday, June 11, 2010

ஐந்நூறு ஆண்டுகள் பழைமையான கோபுரம் தரைமட்டமானது ஏன்? - ஒரு தொகுப்பு




ஏறத்தாழ 1600 வருடங்கள் பழைமை யான காளஹஸ்தி கோவிலின் 500 வருடங்கள் பழைமையான ராஜகோபுரம் அண்மையில் இடிந்து விழுந்தமையானது இந்துக்கள் மட்டுமன்றி தொல்லியல் துறையிலே ஆர்வமுடைய சகலரது மன திலும் சங்கடத்தை ஏற்படுத்தியிருந்தது.

பஞ்ச பூதங்களான நீர். நெருப்பு, நிலம், காற்று, ஆகாயம் ஆகியவற்றுக்கென ஐந்து சிவத்தலங்கள் தென்னிந்தியாவிலே காணப்படுகின்றன.

வாயுவுக்குரிய தல மான ஸ்ரீகாளஹஸ்தி தற்போதைய ஆந் திர மாநிலத்திலும் நீருக்குரிய தலமான திருவானைக்காவல், நெருப்புக்குரிய தல மாகிய அண்ணாமலையார் கோவில்- திருவண்ணாமலை ஆகாயத்துக்குரிய தல மாகிய சிதம்பரம், நிலத்துக்குரிய தலமா கிய ஏகாம்பரநாதர் கோயில் காஞ்சிபுரம் ஆகியன தமிழ் நாட்டிலும் காணப்படு கின்றன.

ஆந்திர மாநிலம் என்றதும் யாவரது நினைவுக்கும் வரும் திருத்தலம் திருப் பதியாகும். திருப்பதிபற்றித் தெரிந்து வைத்திருப்பவர்கள் ஸ்ரீகாளஹஸ்தி பற்றியும் அறிந்து வைத்திருப்பர்.

ஆந்திர மாநிலத்திலே சித்தூர் மாவட் டத்திலே திருக்காளஹஸ்தி எனும் ஊரில் இத்திருத்தலம் அமைந்திருக்கிறது. திருக் களாஹஸ்தி திருப்பதியிலிருந்து 36 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ளது.

இத் திருத்தலத்திலே உறையும் இறை வனை ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் என்றும் இறைவியை ஞானபிரசுனாம்பிகையென் றும் அழைப்பர். மூலஸ்தானத்திலே இறைவனின் உருவச்சிலை காணப்படாது. சிவபெருமான் தனது அருவுருவ மூர்த்த மாகிய சிவலிங்கமாகவே மூலஸ்தானத் தில் காணப்படுகிறார். இந்த லிங்கம் சுயம்பு லிங்கமாகும். அத்துடன் வாயு லிங்கமென அழைக்கப்படுகிறது.

இந்தக் திருக்கோயிலின் அமைப்பு, காண்போரைக் கவரும் வகையிலேயே காணப்படுகிறது. இரு புனிதமான மலை களுக்கு நடுவே, மிகவும் பிரமாண்டமான முறையிலே அமைந்திருக்கிறது. வடக்கு நோக்கிப்பாயும் சுவர்ணமுகி நதி, இக் கோயிலின் மேற்குச் சுவரை உரசியபடி பாய்கிறது. பசுமையான மலைகளும் கரை புரண்டோடும் ஆறும் மனதுக்கு அமைதி தருனவாக இருக்குமென்பர்.

இக்கோயில் ஏறத்தாழ 1600 வருடங் கள் பழைமையானது. கண்ணப்பநாயனா ரின் பக்தியைச் சோதிக்க இறைவன் மேற் கொண்ட திருவிளையாடல்களோடு இத் திருத்தலத்தின் வரலாறு தொடங்குகிற தென்பர். கோயிலின் உட்பகுதியில் காணப் படும் கல்வெட்டுக்கள் இராஜராஜ சோழ னின் காலத்துக்கும் அதற்குப் பிற்பட்ட காலத்துக்குமுரியவை.

ஸ்ரீகாளஹஸ்தி கோயில் ஏறத்தாழ 5 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகவும் கோயிலின் பிரதான பகுதி இராஜேந்திர சோழனால் 11ஆம் நூற்றாண்டளவில் கட்டப்பட்டதாகவும் வரலாறு கூறுகிறது.

கோயிலின் வெளிச்சுவரும் அதனை யொட்டிய 4 கோபுரங்களும் ஸ்ரீவீர நரசிம்மராயனால் கட்டப்பட்டவை. ராஜ கோபுரம், நூறுகால் மண்டபம் என்பன விஜயநகரப் பேரரசின் மன்னராகிய கிருஷ்ணதேவராயருடைய காலத்திலே கட்டப்பட்டவை.

இத் திருக்கோயிலிலே சோழர்களுடைய கல்வெட்டுக்கள் மட்டுமன்றி, பாண்டியர் கள், பல்லவர்கள், விஜயநகர மன்னர்களது கல்வெட்டுக்களும் காணப்படுகின்றன. சோழர்களதும் பாண்டியர்களதும் கல் வெட்டுக்கள் தமிழிலே காணப்படும் அதே வேளை, விஜய நகர மன்னர்களின் கல் வெட்டுக்கள் தெலுங்கிலே காணப்படுகின் றன.

சோழ மன்னர்களும் பாண்டிய மன் னர்களும் இக்கோவிலுக்காகத் தாம் செய்த தானங்களையும் கூடக் கல்வெட் டுக்களிலே பொறித்து வைத்திருக்கிறார்கள்.

சோழப் பேரரசு பரந்து விரிந்திருந்த காலப் பகுதியிலே, ஜெயம்கொண்ட சோழ மண்டலத்தின் ஒரு பகுதியான திரு வேங்கட கோட்டத்தின் ஒரு சிறு பிரி வுக்குள் காளஹஸ்தி திருத்தலமும் அடங்கியிருந்தது.

இராஜராஜசோழனுக்கு இந்த காளஹஸ்தி திருத்தலத்திலே ஒரு தனிப்பட்ட கரிசனை இருந்ததாக ஆய் வாளர்கள் குறிப்பிடுகின்றனர். அவன் காளஹஸ்திக்கு அருகிலே மும்முடிச் சோழபுரம் என்ற வர்த்தக நிலையத்தைத் தாபித்திருந்தான் எனவும் கி. பி. 1600 களில் விஜயநகரப் பேரரசு வீழ்ச்சியடை யும் வரை இந்த வர்த்தக நிலையம் இயங்கி வந்ததாகவும் வரலாறு கூறுகிறது.

கோயிலின் பிரமாண்டமான அமைப் பின் மூல கர்த்தாக்களாக சோழ மன் னர்களே கருதப்படுகின்றனர்.

கிருஷ்ண தேவராயரால் கட்டப்பட்ட ராஜகோபுரம் 120 அடி உயரமானது. செங் கற்கள், களி மற்றும் சுண்ணச்சாந்தினால் கட்டப்பட்டது. இன்று காணப்படும் கோயிலின் கட்டமைப்பு தேவ கோட் டையைச் சேர்ந்த நாட்டுக்கோட்டைச் செட்டியார்களால் ஏறத்தாழ 1 மில்லியன் டொலர் செலவில் புனரமைக்கப்பட்டது.

கோவிலின் மூலவராகிய லிங்கத்தை எந்த ஒரு காரணத்துக்காகவும் மனிதக் கைகள் தொட மாட்டாது. கோயிலில் பூசை செய்யும் பிராமணர் கூடத் தொட மாட்டார். அபிஷேகம் கூட, உற்சவமூர்த் திக்குத்தான் நடைபெறுமே தவிர மூலஸ் தானத்தில் இருக்கும் வாயு லிங்கத்துக்கல்ல.

ஸ்ரீகாளஹஸ்தி என்ற பெயர் இத் தலத்திற்கு வருவதற்குக் காரணமானவை ‘ஸ்ரீ’ எனப்படும் சிலந்தி, ‘காளா’ எனப்படும் பாம்பு, ‘ஹஸ்தி’ எனப்படும் யானை ஆகியனவாகும்.



‘ஹஸ்தி’ என்ற யானை சுவர்ணமுகி நதியிலிருந்து தனது துதிக்கையால் நீரை எடுத்து வந்து சுயம்புவாகத் தோன்றி யிருந்த வாயு லிங்கத்துக்கு அபிஷேகம் செய்தது. அத்துடன் வில்வம் இலைக ளால் அர்ச்சித்தும் வந்தது. அதேபோல் ‘ஸ்ரீ’ என்ற சிலந்தி சிவலிங்கத்துக்கு மேலே தனது வலையைப் பின்னி சிவ லிங்கத்துக்குப் பாதுகாப்பளித்து வந்தது. ‘காளா’ என்று பாம்போ, தனக்குக் கிடைக்கும் நவரத்தினங்களை அந்தச் சிவலிங்கத்துக்குக் காணிக்கையாக்கி வந்தது.

இவ்வழிகளிலே அவை மூன்றும் ஒன்றுக்கொன்று தெரியாமல் ரி!ஹி லிங்கத்தை வழிபட்டுவந்தன. சிலந்தி ஒரு தடவை பெரிய, மொத்தமான வலையைப் பின்னி, சிவலிங்கத்தை தூசுகளிலிருந்தும் கால நிலையிலிருந்தும் பாதுகாத்தது. பாம்பும் நவரத்தினத்தை அர்ப்பணிக்க வந்திருந்தது. இதை அறிந்திராத யானையோ, அவை சிவலிங்கத்தை அவதூறு செய்வ தாக எண்ணி, துதிக்கையால் தண்ணீரை விசிறி அவற்றின் காணிக்கைகளைச் சுத் தம் செய்தது.

இதனால் சிலந்தியும் பாம் பும் கோபமடைந்தன. அவை மூன்றுக் குமிடையே சண்டைமூண்டது. யானையின் துதிக்கைக்குள் நுழைந்த பாம்பு விஷத் தைக் கக்கி இறந்தது. இதனால் அந்தரித்த யானை, தனது தலையைச் சிவலிங்கத்தில் மோதியது. அதன்போது சிலந்தியும் நசுங்கி இறந்தது. பின்னர் பாம்பின் விஷம் காரணமாக யானையும் இறந்தது. இறைவன் அவற்றின் தன்னலமற்ற பக் தியை மெச்சி அவற்றிற்கு மோட்சமளித் தார்.

சிலந்தி அரசனாக மறுபிறவியெ டுக்க, யானையும் பாம்பும் அவற்றின் கர்மவினை மீதமாக இல்லாமையால் சொர்க்கத்தை அடைந்தன என்று கூறப் படுகிறது. சிலந்தியின் மறுபிறவியாகிய அவ்வரசன் காளஹஸ்திக் கோவிலின் முதற்கட்டமைப்பு உட்படப்பல கோவில்க ளைக் கட்டினானெனவும் கூறப்படுகிறது. அவன் கட்டிய கோயில்கள் யாவுமே இரு ஒற்றுமைகளை உடையன எனவும் கூறப்படுகிறது.

முதலாவது மூலஸ்தானத் தில் உள்ள மூர்த்தம், பல தொன்கள் நிறையுடைய கற்கூரைகளால் பாதுகாக்கப் பட்டிருக்கும். இரண்டாவது மூலஸ்தானத்தை எந்த ஒரு வழியிலும் யானையின் துதிக்கை கூட நெருங்காத வண்ணம் அமைக்கப்பட்டிருக்கும்.

காளஹஸ்தி கோயிலின் மூலஸ்தானத் திற்குச் செல்லும் வழியும் மிகவும் குறுகி யது. யானையின் துதிக்கைகூட மூலஸ் தானத்திற்குள் செல்ல முடியாத வகையில் அது அமைக்கப்பட்டுள்ளது.

தன்னலமற்ற பக்தர்களின் பெயர்களை இணைத்து இறைவன் ஸ்ரீ காளஹஸ்திஸ் வரர் எனத் தன்பெயரைச் சூடிக்கொண் டார் எனக் கூறப்படுகிறது.

ஸ்ரீகாளஹஸ்தி தலம் ‘தட்சிணகைலா யம்’ என அழைக்கப்படுகிறது. அதனைத் தென்னகத்தின் கைலாயம் என்பர். சுவர்ணமுகி நதியை, தென்னகத்தின் கங்கை என்பர்.

பார்வதிதேவி சுவர்ணமுகி நதியில் நீராடி சாப விமோசனம் பெற்றதாகவும், மார்க்கண்டேயருக்கு, மும்மூர்த்திகளும் தானேயென சிவபெருமான் ஞானம் அருளிய தலமாகவும் ஸ்ரீகாளஹஸ்தி திருத்தலம் விளங்குகிறது.

திண்ணனார் எனும் இயற்பெயர் கொண்ட கண்ணப்பநாயனாரின் வாழ்க்கையுடன் இந்தத் திருத்தலம் தொடர்புடையது. அவரது பக்தியைச் சோதிப்பதற்காக இறைவன் பல திருவிளையாடல்களை இத்தலத்திலேயே மேற்கொண்டிருந்தான்.

மூலவரின் மேற்கூரையை இடிந்து விழச்செய்தும், லிங்கத்தின் கண்களிலி ருந்து இரத்தத்தை பெருக்கெடுக்கச் செய் தும் திண்ணனாரின் பக்தியைச் சோதித்து அவரை இறைவன் தடுத்தாட்கொண்டது இத்தலத்திலேயேயாகும்.

அடிப்படையில் திண்ணனார் ஒரு வேடுவர் ஆவார். 63 நாயன்மார்கள் தொடர்பாக சுவாமி சிவானந்தர் எழுதிய நூலிலே, அர்ஜுனன் பாசுபதாஸ்திரத்தை வேண்டி சிவபெருமானை நோக்கித் தவமிருக்கையிலே வேடுவனாக வேடம் பூண்டு வந்த இறைவனை அடையாளம் காணவில்லையெனவும் அவன் வேடுவ னாக மறுபிறவியெடுத்த இறைவனை அடைந்ததாகவும் சைவ சம்பிரதாயங்க ளில் கூறப்படுவதாகக் குறிப்பிடுகிறார். அர்ஜுனனின் மறுபிறவியே கண்ணப்ப நாயனார் என நம்பப்படுவதாகவும் குறிப்பிடுகிறார்.

அப்பர், சம்பந்தர், சுத்தரர் ஆகிய சமய குரவர்களால் பாடல் பெற்ற தலங்களுள் காளஹஸ்தியும் ஒன்றாகும். ராகு- கேது தோஷம் நீக்கப்பெறுதலும் இத்தலத்தின் சிறப்பு என்பது ஐதீகம்.

இத்தனை சிறப்புக்களையுடைய இத் திருத்தலத்தின் ராஜகோபுரத்திலே 1988 ஆம் ஆண்டு விரிசல் ஏற்பட்டது. அத னைக் கண்டுணர்ந்த கோயில் தேவஸ் தானத்தினர் உடனேயே சீரமைத்தனர். ஏறத்தாழ 20 வருடங்களின் பின்னர் கடந்த மாதம் இக்கோபுரத்திலே மீண்டும் விரிசல் ஏற்பட்டது. ஆரம்பத்திலேயே கண்டுணரப்படாமையினாலோ என்னவோ, இந்தவிரிசல் கோபுரத்தின் உச்சிவரை காணப்பட்டது.

1988 ஆம் ஆண்டிலே ஏற்பட்ட விரிச லின் போது சில கோபுரச்சிற்பங்கள் இடிந்த விழுந்திருந்தன. சில ஆண்டுக ளுக்கு முன்பும் கோபுரத்திலுள்ள கல் ஒன்று பெயர்ந்து விழுந்ததால் சுற்றுலாப் பயணி ஒருவர் பலியானார். சில மாதங்க ளுக்கு முன்பும் இந்த ராஜகோபுரத்தில் ஏற்பட்ட சிறிய விரிசல் காரணமாகச் சிற்பங்கள் உடைந்து விழுந்தன. ஆனால் அந்த விரிசல் சரிசெய்யப்படாமல் அலட் சியம் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்ப டுகிறது.

இத்தகையதோர் நிலையில் அண்மை யில் வீசிய லைலா புயல்காரணமாக இந்த ஆலயம் பெருமளவில் பாதிக்கப்பட்டது. ஏற்கனவே ஏற்பட்டிருந்த சிறிய விரிசல் பெரிதாகி கோபுரத்தின் உச்சி வரை சென்றது. கோபுரம் இரண்டாகப் பிளந்தது போல் காட்சியளித்தது.

இந்த கோபுரம் 7 அடுக்குகளை உடையது. முதல் இரண்டு அடுக்குகளும் கற்களால் கட்டப்பட்டவை. ஏனைய 5 அடுக்குகளும் மண்ணால் கட்டப்பட் டவை. கோபுரத்தின் 7 அடுக்கு வரை செல்வதற்கு அதன் உட்பகுதியில் படிக் கட்டுக்கள் அமைந்துள்ளன.

கோபுரத்தின் விரிசல் பெரிதானதைத் தொடர்ந்து சென்னை இந்திய தொழில் நுட்ப நிறுவகத்திலிருந்து வல்லுநர் ஒரு வர் வரவழைக்கப்பட்டார். கோபுரத்தின் படிக்கட்டுக்கள் வழியே இரண்டாவது அடுக்கு வரை ஏறிய வல்லுநருக்கு அதற்கு மேல் ஏறமுடியவில்லை. கோபு ரத்தின் உட்புறம் சிதைவடைந்து படிக ளில் கல்லும் மண்ணும் நிறைந்து காணப் பட்டன. தொடர்ந்து மேலே செல்லமுடிய வில்லை. இனியும் கோபுரத்தைக் காப் பாற்ற முடியாது என உணர்ந்தார் வல்லுநர். கோபுரம் இடிந்து தரைமட்டமாகிப் போவது உறுதியாயிற்று.



கடந்த மே மாதம் 25 ஆம் திகதி இந்தப் பிளவைக் கண் டுணர்ந்த தொல்வியல்துறை அதிகாரிகள் கோவிலைச் சுற்றி 150 மீற்றர் வரையான பிரதேசத்தை அபாய வலயமாகப் பிரக டனப்படுத்தினர். அப்பகுதிகளில் வசித்த வந்த பொதுமக்கள் வேறு பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்தனர். கோவில் வளாகம் உட்பட அந்த அபாய வலயத் திற்குள் மனித நடமாட்டம் தடை செய் யப்பட்டது.

26 ஆம் திகதி இரவு 8.00 மணியளவில் பயங்கர சத்ததுடன் இடிந்து விழுந்த ராஜகோபுரம் தரைமட்டமானது.

500 ஆண்டுகளுக்கு முன்னர், எத்த னையோ சிற்பிகள் மற்றும் தொழிலாளர்க ளின் பெருமுயற்சியினால் கட்டப்பட்ட கோபுரம் மனிதர்களின் அசமந்தப் போக்கால் ஒரு நிமிடத்துக்குள் இடிந்து விழுந்தது. சிவ பக்தர்கள் மட்டுமின்றி அந்த அசம்பாவிதம் பற்றிக் கேள்விப் பட்ட யாவரது மனதிலும் சங்கடத்தை ஏற்படுத்துவதாக அமைந்தது.

கோபுரத்தில் விரிசல் ஏற்பட்டமைக்கு லைலா புயல் உட்படப் பல அடிப்படைக் காரணங்கள் கூறப்படுகின்றன. சில நாட்க ளாகத் தொடர்ந்து பெய்த அடைமழை மற்றும் ஏற்பட்ட இடிமின்னல் தாக்கங்க ளும் விரிசல் பெரிதாவதற்குக் காரணமா யிருக்கலாமெனவும் கருதப்படுகிறது.

கோயிற் சூழலில் ஆழ்த்துளைக் கிணறு தோண்டுவதற்கான முயற்சிகள் அண்மையில் நடைபெற்றதாகவும் 500- 600 அடி ஆழமுடைய அக்கிணற்றைத் தோண்டும் போது ஏற்பட்ட அதிர்வுகள் கோபுரத்தைப் பாதித்து விரிசலை அதிகப் படுத்தியிருக்கலாமெனவும் ஒருசாரார் கருத்துத் தெரிவிக்கின்றனர். சுவர்ணமுகி நதிக்கரையில் கோயிலின் மேற்குச்சுவர் காணப்படுகிறது. நதி நீரினால் மண் ணரிப்பு ஏற்பட கோவிலின் வெளிக் கட் டமைப்பில் சிதைவுகள் ஏற்பட்டு சுண் ணாம்புச்சாந்து உலர்ந்தமையும் ஒரு கார ணமாக இருக்கலாமெனத் தெரிவிக்கப் படுகிறது.

மண், மற்றும் சுண்ணச் சாந்தினால் கட்டப்பட்ட கோபுரத்தில் ஏற்பட்ட விரி சல் சில ஆண்டுகளுக்கு முன்பு சிமெந்து கொண்டு சரி செய்யப்பட்டமை கூட விரிசல் பெரிதாகக் காரணமாகியிருக்கலா மெனப் பொறியியலாளர் ஒருவர் தெரிவித்திருக்கிறார். பழைய காலங்களில் கட்டப்பட்ட கட்டுமானங்களை அவை கட்டப்பட்ட முறைமையின் அடிப்படை யிலேயே புனரமைக்க வேண்டுமெனவும், நவீன முறைமையில் புனரமைக்க முயலு தல், முழுக்கட்டுமானத்தையுமே பாதிக்கும் எனவும் அவர் மேலும் குறிப்பிடுகிறார்.

இவை அடிப்படைக்காரணங்களாக இருக்கின்ற போதிலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தமது அலட்சிப் போக்கி னைத் தவிர்த்து உடன் நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்றே எண்ணத் தோன்றுகிறது.

இந்த அசம்பாவிதத்தை சிலர் அப சகுணமாகவும் கருதுகின்றனர். ஆனால் அதனை எந்த ஒரு வகையிலும் ஆதா ரம் காட்டி நிரூபிக்க முடியாது. அசைக்க முடியாத இந்த நம்பிக்கைகளுக்கு அப் பால் ஸ்ரீகாளஹஸ்தி கோபுரம் எமக்கு ஒரு முன்னெச்சரிக்கையை விடுத்துச் சென்றுள்ளதை எவருமே மறுக்கமுடியாது.

இயற்கை அனர்த்தங்கள் தவிர்க்க முடியாதவை. கோவில்களும் தொல்லியல் சின்னங்களும் பல நூற்றாண்டுகளாக நிலைத்து நிற்பதற்கான முக்கிய காரணம் அவற்றின் உறுதியும் அதன் பின்ன ணியிலிருக்கும் தொழில் நுட்பமுமாகும். அவை இயற்கை அனர்த்தங்களுக்குத் தாக்குப் பிடிக்கக் கூடிய வகையிலேயே அமைக்கப்பட்டிருக்கின்றன.

ஆனால் கடந்த சில காலங்களாக இயற்கை அனர்த்தங்களின் பாதிப்புக்களும் வழ மையை விடச் சற்று அதிகமாகவே காணப்படுகின்றன. அத்துடன் மனித செயற்பாடுகள் இயற்கை அனர்த்தங் களைத் தூண்டுவதாக அமைவதுடன், எம் முன்னோர்கள் ஏற்படுத்தியிருந்த இயற்கை அனர்த்தங்களிலிருந்தான பாது காப்பு ஏற்பாடுகளையும் சிதைத்துவிடுவ தாகவே அமைந்துவிடுகிறது. விளைவா கப் பாதிக்கப்படுவது நாம் மட்டுமல்ல. காலத்தால் அழியாத வகையில் அமைக் கப்பட்டிருக்கும் வரலாற்றுச் சின்னங் களும்தான்!

ஸ்ரீரங்கப்பட்டிணத்திலுள்ள ஸ்ரீரங்கம் கோயிலின் கோபுரத்தின் அடிப்பாகத்தி லும் விரிசல் ஏற்பட்டுள்ளதாகச் செய்தி யொன்று அண்மையில் பிரசுரிக்கப்பட்டி ருந்தது. ஏற்கனவே இத்தகைய சிறு விரிசல்கள் உருவாகியதாகவும் அவற்றுக் கிடையில் கண்ணாடித்துண்டுகள் வைத்து ஒட்டப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக் கின்றன. இன்னும் விரிசல் ஏற்படும் பட்சத்தில் கண்ணாடித்துண்டுகள் உடை ந்து விரிசலைக் காட்டிக்கொடுக்கும் என வும் நம்பப்படுகிறது.

தற்போது விரிசல் சிறிதளவில் அதிகரித்துள்ளமையும் அறி யப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம் கோயிலின் கோபுரத்தின் வரலாறு 9ஆம் நூற் றாண்டிலிருந்து ஆரம்பிக்கிறது. ஸ்ரீரங்கம் போன்ற பல பழைமைவாய்ந்த கோயில் களின் கட்டமைப்பிலே விரிசல்களும் சேதங்களும் உருவாவதற்கான சாத்தியங் கள் காணப்படத்தான் செய்கின்றன. பல வற்றை நாம் அறிந்து கண்டுகொள்ளாமல் இருப்போம்.

சிலவற்றை நாம் அறியாமல் இருப்போம். எமது முன்னோர் நன்றே பாதுகாத்து இந்த வரலாற்றுச்சின்னங்களை எமக்காக வழங்கியிருக்கின்றனர். அவ ற்றை எமது எதிர்காலச் சந்ததியினருக்கு அப்படியே வழங்கவேண்டிய கடப்பாடு எமக்கு இருக்கிறது என்பதை நாம் உணர்ந்து செயற்பட வேண்டும்.

கோயிலாகவோ விகாரையாவோ, பள்ளிவாசலாகவோ, தேவாலயமாகவோ இல்லை ஏதோ ஒரு வரலாற்றுச் சின்ன மாகவோ இருக்கட்டும். மதம், கடவுள், ஆன்மீகம் இவையாவற்றிற்கும் அப்பால் இந்த வரலாற்றுச் சின்னங்கள் எமது வரலாற்றின் தொன்மையையும் பெருமை யையும் உலகுக்கு எடுத்தியம்புகின்றன. அவற்றின் தொன்மை மாறாது அவை பேணிப்பாதுகாக்கப்பட வேண்டும்.

இந்த வரலாற்றுச்சின்னங்களும் தலங்க ளும் சிறந்த சுற்றுலாத் தலங்களாகக் காணப்படுகின்றன. தினமும் ஆயிரக் கணக்கிலான மக்கள் தரிசித்துச் செல்லும் இடங்களாகவே அவை காணப்படுகின்றன.

ஸ்ரீகாளஹஸ்தி கோயிலில் நடந்த அசம்பாவிதம் போல் திடீரென எங்கா வது நடந்தால் ஏற்படும் உயிரிழப்புகளும் கணக்கிடப்பட முடியாதவையாகிவிடும். காளஹஸ்தி அசம்பாவிதத்தைப் பொறுத்த வரையிலே முன்னெச்சரிக்கை விடுக்கப் பட்டதால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க் கப்பட்டது. ஆயினும் கோயிலின் காவ லாளி இடிபாடுகளுக்குள் சிக்கி இறந்தார். கோபுரத்திலே வாழ்ந்து வந்த குரங்குக் கூட்டடங்கள் அடியோடு அழிந்து போயி ருக்கலாமென நம்பப்படுகிறது.

கோயில் நிர்வாகத்தின் அலட்சியப் போக்காலேயே கோபுரம் இடிந்துவிட்ட தெனப்பொது மக்கள் ஆவேசமடைந்து கோயிலின் முன் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர். புதிய ராஜகோபுரம் கட்டிமுடிக்கப்பட்ட பின்னரே பழைய ராஜகோபுரத்தின் இடிபாடுகள் அகற்றப் பட வேண்டுமெனவும் கோஷமிட்டனர்.

இதற்கிடையில் கோபுரம் தரைமட்டமான தைத் தொடர்ந்து அங்கு தங்கப்புதையல் இருக்கலாமென்ற தகவலும் மக்கள் மத்தியல் பரவிவருகிறது. ஏற்கனவே ராஜகோபுரத்திற்கு அருகிலே மடம் ஒன்று இருந்த பகுதியில் தோண்டிய போது, சிறிய குடமொன்றில் அதிக எண்ணிக்கையிலான தங்கக் காசுகள் கண்டுபிடிக்கப்பட்டன. தற்போது கோவில் அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் கோபுரத்தின் இடிபாடுகளையும் மண் மேடுகளையும் அகற்றி பூமியைத் தோண் டும் பணி தொடர்ந்த நடைபெற்றுவருவ தாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஆந்திர மாநில அரசு, நிபுணர்குழு ஒன்றை நியமித்து கோபுரம் தரைமட்ட மானதற்கான காரணத்தைக் கண்டறியுமாறு பணித்திருக்கிறது. அத்துடன் சைவ ஆகம சாஸ்திரங்களின் அடிப்படையில் புதிய கோபுரம் நிர்மாணிக்கப்படுமென வும் கூறப்படுகிறது.

ஸ்ரீ காளஹஸ்தி திருத்தலம் விடுத்த எச்சரிக்கையைக் கருத்தில் கொண்டு அத்தகைய அசம்பாவிதங்கள் இனியும் நிகழாமல் வரலாற்றுச் சின்னங்களைப் பேண வேண்டியது அரசாங்கத்தின் கடமை மட்டுமன்றி எம் ஒவ்வொருவரதும் கடமையாகும்.

2 comments:

தங்க முகுந்தன் said...

மிகவும் கவலையான மனதை வேதனைப் படுத்தும் செய்தி.
படங்களுடன் விபரமாக செய்தியைத் தெரிவித்தமைக்கு நன்றிகள்!
புராதனமான ஆலயத்தின் கோபுரம் பெரிய வெடிப்பாக இருப்பதை படம் பிடித்தபொழுதே உடன் நடவடிக்கை எடுத்திருப்பின் தடுத்திருக்கலாம் என்பது எனது கருத்து.
எமது யாழ்ப்பாண வண்ணார்பண்ணைச் சிவன் ஆலய கோபுரத்தில் இலங்கை இராணுவத் தாக்குதலின்போது இதுபோன்றதொரு வெடிப்பு ஏற்பட்டபோதே அதைத் திருத்தியமைத்திருக்கிறார்கள் - அதனால் குறிப்பிட்டேன். காளத்தி மாத்திரமல்ல இந்தியாவிலுள்ள அனைத்து ஆலயங்களிலும் துப்பரவு என்பதும் பரிபாலனம் என்பதும் துளியளவேனும் இல்லை.
பெயரளவில் இயங்கும் அறநிலையத்துறை மற்றும் பரிபாலன சபைகள் இனிமேலாவது கொஞ்சம் அக்கறை எடுத்து பாரம்பரிய கலை பொக்கிஷங்களைப் பேணிப் பாதுகாக்க முன்வரவேண்டும்.

என்றும் அன்புடன், சாரதாஞ்சலி-ம said...

உங்கள் பின்னூட்டலுக்கும் நன்றி ..
பல விடயங்கள் கையை மீறிப்போய் விட்டனவோ என்று தான் தோன்றுகிறது... பார்ப்போம்...

Post a Comment