Tuesday, June 15, 2010

காற்றும் இனிமேல் காசுதான்!காற்றே பந்தல் கயிறுகளை அசைக்கின்றான். அவற்றில் உயிர் பெறுகிறான். காற்றே நீரில் சூறாவளி காட்டி, வானத்தில் மின்னேற்றி, நீரை நெருப்பாக்கி, நெருப்பை நீராக்கி நீரைத் தூளாக்கித் தூளை நீராக்கிச் சண்ட மாருதம் செய்கின்றான். காற்றே முடிவு செய்கின்றான் காற்றே காக்கின்றான் அவன் நம்மைக் காத்திடுக!

என்றான் புரட்சிக் கவிஞன் பாரதி.

‘கடவுளை காற்றோடு ஒப்பிடுவார் கள் ஆத்திகர்கள். இரண்டையும் பார்க்க முடியாது, ஆனால் அதன் சக்தியை உணர முடியும் என்பதுதான் அந்தத் தத்துவம். அது உண்மையும் கூட. காற்று மகத்தான சக்தியைக் கொண்டது. அது இல்லாவிட்டால் நம்மால் மட்டுமல்ல, எந்த உயிரினத் தாலும் உயிர் வாழவே முடியாது. நம் கண்ணுக்குப் புலப்படாத அந்த காற்று பல வகைப்பட்டது.

அதில் தென்றலும் உண்டு புயலும் உணடு. பல பெயர் களில் அழைக்கப்படும் சூறாவளிகளும் உலகில் உண்டு. தான் தாக்கும் பகுதிகளை துவம்சம் செய்யக்கூடிய பெரும் சக்தி கொண்டது காற்று! “சாது மிரண்டால் காடு கொள்ளாது” என்கிற பழமொழிக்கு சரியான உதாரணம் காற்றுதான். சாதுவாக இருக்கும் தென்றல் மிரண்டு புயலாக மாறினால் அதன் வேகத்தை எம்மால் தாக்குப் பிடிக்க முடியாது.

காற்று, இறைவன் நமக்கு அளித்திருக்கும் பெரும் சக்தி! அந்த சக்திக்குள் நமக்கான பல ரகசியங்கள் புதைந்து கிடக்கின்றன. காற்றுச் சக்தியை மின்சார சக்தியாக மாற்றும் தொழில் நுட்பமும் உலகில் வேகமாக வளர்ந்து வருகிறது. எந்த அளவுக்கு நம்மால் காற்று சக்தியைப் பயன்படுத்த முடியும் என்று யோசித்துப் பாருங்கள்!’


என்று இளைஞர்களை ஊக்கப்படுத்தினார் விஞ்ஞானி அப்துல் கலாம். இத்துணை வலிமை மிக்க காற்றினது சக்தியின் எதிர்காலம் பிரகாசமாகவே தெரிகிறது.

கடந்த 2009 ஆம் ஆண்டிலிருந்து உலக காற்று தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. காற்றுச் சக்தியின் நன்மை தொடர்பாக உலக மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஊட்டும் நோக்குடனேயே இத்தினம் கொண்டாடப்படுகிறது. காற்றுச் சக்தித் தொழில்நுட்பத்தை பாரியளவில் அபிவிருத்தி செய்யவேண்டிய தேவையொன்று காணப்படுகிறது. ஏனெனில் மீள உருவாக்கப்படக் கூடிய சக்தி வளங்களுள் அதுவும் ஒன்றாகும்.

ஐரோப்பிய காற்றுச்சக்தி ஒன்றியமும் உலகளாவிய காற்றுச்சக்தி கவுன்சிலும் இணைந்து ஜூன் மாதம் 15ஆம் திகதியை உலக காற்றுத் தினமாகப் பிரகடனப்படுத்தியுள்ளன.

இன்றைய காலகட்டத்திலே பூதாகரமாகியிருக்கும் சூழல் பிரச்சினைகள் பொருளாதார ரீதியாகப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதோடு மட்டுமன்றி மக்களின் ஆரோக்கியமான வாழ்வையும் கேள்விக்குறியாக்கி யுள்ளன. அதனால் மீள உருவாக்கப் படக்கூடிய சக்தி வளங்களின் தேவையும் அதிகரித்தது. அவ்வழியிலேயே காற்றுச் சக்திக்கான சந்தை வாய்ப்பும் பல காரணிகளால் உருவாக்கப்பட்டது.

காற்றுச் சக்திக்கான கேள்வியும், கேள்விக்கேற்ற விநியோகமும் பரந்த எல்லைகளைக் கொண்டனவாக அமைந்திருக்கின்றன. காலநிலை மாற்றம் போன்ற சூழல் பிரச்சினைகள் அலட்சியப்படுத்த முடியாதவையாக மாறிவிட்டிருக்கின்றன. அவை மட்டுமன்றி காற்றுச் சக்தியைப் பெற்றுக்கொள்ளும் தொழில் நுட்பமும் அபரிமித வளர்ச்சி கண்டு வருகின்றது. இந்தக் காரணிகள் எல்லாம் சேர்ந்து காற்றுச் சக்திப் பயன்பாட்டின் எதிர்காலத்தை மிகவும் பிரகாசமானதாக மாற்றியிருக்கின்றன.

காற்றுச் சக்தித் தொழில்துறை அபிவிருத்தியை உலகின் பிராந்தியங்கள் யாவும் ஒன்றிணைந்து ஊக்குவிப்பதற்கும் ஏலவே குறிப்பிட்ட காரணிகளே அடிப்படையாய் அமைந்தன.

சக்திக்கான உலகளாவிய கேள்வி, காலத்துடன் வேகமாக அதிகரித்து வருகின்றது. அதனால் புதிய வகைச் சக்திப் பிறப்பாக்கத் திட்டங்களின் மீதான முதலீடு அதிகரித்து வருகிறது.

காற்றானது ஒரு சுதேச சக்தி மூலமாகவும் கருதப்படுகிறது.

காற்றுச் சக்தியின் உற்பத்திக்கு எந்தவித எரிபொருளும் தேவையில்லை. அது அரசியல் ரீதியிலான அச்சுறுத்தலற்றது. வேறு விநியோகங்கள், இறக்குமதிகளில் தங்கியிருக்காதது.

காற்றுச் சக்தியின் பாவனை பொருளாதார ரீதியாக நன்மை பயக்குமெனக் கணிக்கப்படுகிறது. ஏனைய சக்திப் பிறப்பாக்க மூலங்களுடன் ஒப்பிடுகையில் காற்றாலை ஒன்றை அதன் வாழ்நாள் முழுவதும் இயக்குவதற்குத் தேவையான எரிபொருளின் அளவு பூச்சியமாகும். இது, முதலீட்டாளருக்கு மிகவும் வாய்ப்பாக அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது.

பல தளங்களிலேயே, காற்றுச் சக்தியின் மூலம் மின்சாரத்தைப் பெறும் வழிமுறைகள் தினமும் புதிய தொழில்நுட்ப நுணுக்கங்களுடன் வளர்ச்சியடைந்து வரும் போட்டிமிகு துறைகளாக மாறி வருகின்றன. சில சந்தர்ப்பங்களில் அவை மிகவும் மலிவானவை யாகவும் தென்படுகின்றன.

காபனுக்காக நாம் கொடுக்கும் விலையைக் கருத்தில் கொள்கையில் காற்றுச் சக்தி மூலமான மின் பிறப்பாக்கம் ஆக்கபூர்வமானதாகவே அமைகிறது.

இந்தத் தொழிற்றுறை புதிய தொழில் வாய்ப்புக்களை உருவாக்குவதுடன் பிராந்திய ரீதியிலான பொருளாதாரத்துக்கும் வழிவகுக்குமென நம்பப்படுகிறது.

மின் பிறப்பாக்கத் திட்டமொன்று அமுல்படுத்தப்படும் போது செலவுக்கடுத்ததாகக் கருத்திற்கொள்ளப்படுவது அத்திட்டத்தினால் சூழலுக்கு ஏற்படும் பாதிப்புக்களாகும். காற்றுச் சக்தியினாலான மின் பிறப்பாக்கம் மிகவும் சுத்தமானது.

அதாவது காற்றாலைகள் மூலம் சூழலுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடிய எந்தவொரு பதார்த்தங்களும் வெளிவிடப்படுவதில்லை. ஏனைய மீள உருவாக்கப்படக்கூடிய சக்தி வளங்களைப் போலவே, காற்றுச் சக்தியும் இயற்கையிலிருந்து பெறப்படுவதால் சுவட்டு எரிபொருட்கள் போல, சூழலை மாசுபடுத்தும் இயல்பு அதற்கு இல்லை.காற்றுச் சக்தியின் பாவனையானது, மின்வலுவைப் பிறப்பிப்பதற்கான செயற்பாடு மாத்திரமன்றி காபனீரொட்சைட்டின் வெளியேற்றத்தில் பாரிய குறைவை ஏற்படுத்துமென எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று பலராலும் பேசப்படும் உலகளாவிய காலநிலை மாற்றத்திற்கான மூலகாரணமாக இருப்பது கானீரொட்சைட்டு ஆகும். காபனீரொட்சைட்டின் வெளியேற்றம் குறைக்கப்படுதலானது, காலநிலை மாற்றத்திலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துமெனக் கூறப்படுகிறது. காற்றாலைக்குத் தேவையான உபகரணங்களை உற்பத்தி செய்யும் போது மட்டும் மிகவும் குறைந்தளவிலான காபனீரொட்சைட்டு வெளிவிடப்படுகிறது.

சுவட்டு எரிபொருட்களின் பாவனையின் போது வெளிவிடப்படும் காபனீரொட்சைட்டுடன் ஒப்பிடுகையில் இந்த காபனீரொட்சைட்டு மிக மிகக் குறைவானதாகும். காலநிலை மாற்றத்திற்கு எதிரான யுத்தத்திற்கான அடிப்படைத் தீர்வாகக் காற்றுச் சக்தியின் பாவனை கருதப்படுகிறது. காற்றுச் சக்தியின் பாவனை அதிகரிக்கப்பட்டால் 2020 ஆம் ஆண்டளவிலே ஏறத்தாழ 10 பில்லியன் தொன் நிறையுடைய காபனீரொட்சைட்டு சேமிக்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய காலத்தில் நாம் சுவாசிக்கும் வளி, மாசு நிறைந்ததாகவே காணப்படுகிறது. சுவட்டு எரிபொருட்களின் பாவனையால் கந்தகவீரொட்சைட்டு, நைதரசனீரொட்சைட்டு போன்ற அமிலத்தன்மையான வாயுக்களும் வெளிவிடப்படுகின்றன.

வளி மாசடைதலுக்கான மிக முக்கிய காரணங்களாக இந்த இரு வாயுக்களும் காணப்படுகின்றன. அமில மழை காரணமாக காடுகள் அழிவதற்கும் நீர்நிலைகள் மாசடைவதற்கும் கல்லாலான கட்டமைப்புக்கள் அரிப்படைவதற்கும், சுகாதார சீர்கேடுகளுக்கும் கூட இந்த வாயுக்களே காரணமாய் அமைந்துவிடுகின்றன.

இன்றைய உலகம் எதிர்நோக்கும் மிக முக்கியமான பிரச்சினைகளுள் நீர்ப்பற்றாக்குறையும் ஒன்றாகும். நீர்ப்பாற்றாக்குறைக்கான அடிப்படைக் காரணம், நீர் வளத்தின் மிகைபாவனையாகும். மிகைபாவனைக்கான முதல் பொறுப்பை ஏற்க வேண்டியவர்கள் கைத்தொழில் துறையினரேயாவர்.

காற்றுச் சக்தியின் பயன்பாட்டிற்கு எந்த ஒரு வகையிலும் நீர் தேவையில்வை.

ஆயினும் காற்றாலைகள் ஏனையவற்றுடன் ஒப்பிடுகையில் சிறிய அளவிலே சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தத்தான் செய்கின்றன. காற்றாலைகள் மிகவும் பிரமாண்டமானவை. ஆதலால் அவை சூழலுக்கு அழகைத் தரமாட்டாதென என்றொரு கருத்தும் நிலவி வருகிறது. பசுமை என்ற கருப்பொருளை நோக்கிப் பயணித்துவரும் இக்கால கட்டத்திலே மக்கள் பலரும் சூழல் மாசற்ற எதிர்காலத்தின் சின்னங்களாகவே காற்றாலைகளைக் கருதுகின்றனர்.

ஏனைய சக்தி உலைகள் மற்றும் ஆலைகளின் சத்தத்துடன் ஒப்பிடுகையில் காற்றாலைகள் அமைதியானவை. அவை பொதுவாக பின்புல ஒலி குறைந்த கிராமப் பகுதிகளிலேயே நிறுவப்படுகின்றன.

காற்றாலை ஒன்று வெளிப்படுத்தும் ஒலியின் அளவு ஏறத்தாழ 35-45 டெசிபல்களாகும். அத்துடன் இவ்வொலி காற்றாலை அமைந்திருக் கும் இடத்திலிருந்து 350சீ தொலை விற்கும் கேட்கக் கூடியதாகவும் இருக்கும். அமைதியான கிராமச் சூழலைப் பொறுத்தவரையிலே இந்த ஒலி பெரிதாகத் தெரிகின்ற போதிலும் அதன் செறிவானது நகர்ப்புறச் சூழ லிலுள்ள வீடொன்றில் வெளிப்படும் சத்தத்தின் செறிவை ஒத்ததாகும்.

நீண்டகால அடிப்படையிலே, காலநிலை மாற்றமும் மனித செயற்பாடுகளும் தான் பறவைகள் மற்றும் ஏனைய உயிரினங்கள் அருகிவருவதற்குக் காரணமாக இருந்திருக்கின்றன. காற்றாலைகளின் பயன்பாட்டால் பறவைகள் அழிவடைந்து போகும் என்பதற்கான ஆதாரங்கள் எவையும் இதுவரை நிரூபிக்கப்படவில்லை.

கடற்கரைப் பகுதிகளில் காற்றாலைகளை நிறுவுவோர், கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் கடலுடன் தொடர்புடைய சூழல்தொகுதிகள் பாதிக்கப்படாமல் அவற்றை நிறுவ வேண்டுமெனக் குறிப்பிடப்படுகிறது.

காற்றுச் சக்தியொன்றும் புதிதாகக் கண்டு பிடிக்கப்பட்டதல்ல. மனித நாகரிகம் தொடங்கிய காலத்திலேயே காற்றுச் சக்தியும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. கி. மு. 5000 ஆம் ஆண்டளவிலே, நைல் நதியிலே காற்றுச் சக்தியைப் பயன்படுத்திப் படகையோட்டியிருக்கின்றார்கள்.

கி. மு. 200 ஆம் ஆண்டளவிலே சீனாவில் எளிய காற்றாலைகள் மூலம் நீர் இறைக்கப்பட்டு வந்திருக்கிறது. அதே சமயம் காற்றாலைகளுடனான பாய்மரப் படகுகளில் பாரசீகம் மற்றும் மத்திய கிழக்குப் பகுதிகளில் போக்கு வரத்து மேற்கொள்ளப் பட்டதாகவும் வரலாறு கூறுகிறது. இந்தப் பாய்மரங்கள் தான் காற்றுச் சக்தியின் முதற் பிரயோகங்களாகக் காணப்பட்டன.

அவையே மறுமலர்ச்சிக்கால நாடுகாண் பயணங்களுக்கான அடிப்படையாகவும் அமைந்தன. பின்னர் தானியங்களை அரைப்பதற்கும் நீரை இறைப்பதற்குமென காற்றாடிகள் பயன்பட்டன. இம்முறைமைகளை கி. பி. 500 - 900 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் பாரசீகர்கள் பயன்படுத்தி வந்தனர். ஆனால், அம்முறைமைகள் தொடர்பான தகவல்கள் ஆவணப்படுத்தப்பட்டிருக்கவில்லை.
தானியங்களை அரைத்தல் தொடர்பான ஆவணமே, காற்றாலைகளின் பிரயோகம் தொடர்பாக கண்டுபிடிக்கப்பட்ட முதல் ஆவணமாகக் கருதப்படுகிறது. நிலைக்குத்தான காற்றாலைகளுடன் இணைக்கப்பட்ட திருக்கைகள் தானியங்களை அரைக்கப் பயன்பட்டன.

19ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியிலே காற்றாலைகளின் தொழில்நுட்பம் உலகின் பல பாகங்களுக்கும் பரவியது. பண்ணைகளுக்கு நீரை இறைப்பதற்கும், பின்னர் வீட்டுத் தேவை மற்றும் கைத்தொழில் தேவைகளுக்காக மின்சாரத்தைப் பிறப்பிக்கவும் காற்றாலைகள் பயன்பட்டன.

ஆயினும் ஐரோப்பாவிலும் பின்னர் அமெரிக்காவிலும் உருவாகிய கைத்தொழில் புரட்சியின் விளைவாகக் காற்றாலைகளின் பயன்பாடும் அருகி வரத் தொடங்கியது. காற்றாலைகளை நீராவி இயந்திரங்கள் பிரதியீடு செய்தன.

சிறிய காற்றாலைகளின் பயன்பாட்டை அருகச் செய்த கைத்தொழில் புரட்சிதான் பெரியளவிலான காற்றாலைகள் மூலம் பாரியளவில் மின் உற்பத்தி செய்யப்படவும் வழிவகுத்தது. காற்றுச் சுழலிகள் கண்டுபிடிக்கப்படவும் காரணமாகியது.

19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதிகளில் டென்மார்க்கில் இந்தக் காற்றுச் சுழலிகள் காணப்பட்டன. இரண்டாம் உலக மகா யுத்தத்தின் போது இந்தக் காற்றுச் சுழலிகள் மூலமும் மின்சக்தி பெறப்பட்டது. காற்றாலைகள், காற்றுச் சுழலிகளின் பாவனை, சுவட்டு எரிபொருள் விலையின் தளம்பலுடன் கூடிக் குறைந்தது.

இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின்னர் சுவட்டு எரிபொருளின் விலை குறைவடைய காற்றுச் சுழலிகள் மீதான மக்களின் ஆர்வமும் குறைவடைந்தது. ஆயினும் 1970 களின் பின்னர் மசகெண்ணெயின் விலை அதிகரிக்க உலகளாவிய ரீதியிலே காற்றுச் சுழலிகளும் பிரபலமடையத் தொடங்கின.

பிற்காலத்தில் உருவாகிய சூழல் மாசடைதல் தொடர்பான பிரச்சினைகள் பெருக, காற்றுச் சக்தியை வெவ்வேறு சக்திகளாக மாற்றிப் பயன்படுத்தும் முறைகள் பல கண்டுபிடிக்கப்பட்டன. இன்று உலகில் வேகமாக வளர்ந்துவரும் சக்தித் துறையாகக் காற்றுச் சக்தித்துறை இருந்து வருகிறது. ஆயினும் கைத்தொழில், வர்த்தகத்துறைகளையும் வீடுகளையும் மீள உருவாக்கப்படக் கூடிய சக்தி வளமாகிய காற்றுச் சக்தியால் மின்மயப்படுத்த இன்னும் பல காலங்கள் ஆகுமெனக் கருதப்படுகிறது.

ஏனைய சக்தித் தொழில்நுட்பங்களுடன் ஒப்பிடுகையில் காற்றுச் சக்தியைப் பயனுள்ளதாக்கும் தொழில்நுட்பம் இன்னும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் காணவில்லை என்றே தெரிவிக்கப்படுகிறது. ஆயினும் பல நாடுகளில் பிரதான சக்திப் பிறப்பாக்கிகளுள் ஒன்றாகக் காற்றுச் சுழலிப் பண்ணைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. உலகிலேயே காற்றுச் சுழலிகள் மற்றும் காற்றாலைகளின் பிரயோகத்தால் மின்சாரத்தை உற்பத்தி செய்வதில் ஜேர்மனி முன்னணி வகிக்கிறது. இரண்டாம் இடத்தை அமெரிக்காவும் ஸ்பெயினும் வகிக்கின்றன.

நான்காமிடத்தை எமது அயல்நாடாகிய இந்தியா வகிக்கிறது. இத்தரவுகள் 2007 ஆம் ஆண்டிற்குரியனவென ஐரோப்பிய காற்றுச் சக்தி ஒன்றியம் வெளியிட்டிருக்கிறது.

அதே அமைப்பு 2004 ஆம் ஆண்டு வெளியிட்ட தரவின் அடிப்படையில் ஜேர்மனி முதலாமிடத்தையும் ஸ்பெயின் இரண்டாமிடத்தையும் அமெரிக்கா மூன்றாமிடத்தையும் இந்தியா 5ஆம் இடத்தையும் வகித்திருந்தது. 3 வருடங்களுக்குள் இந்தியாவும் அமெரிக்காவும் உலகளாவிய ரீதியிலே ஒரு படி முன்னேறியிருக்கின்றன என்பது மிகவும் நல்லதோர் சமிக்ஞையாகும்.

இந்தியாவின் தமிழ் நாட்டிலே, கயத்தாறில் ஆரம்பித்து கன்னியாகுமரி வரை பெருந்தெருவின் இருமருங்கிலும் காற்றுச் சுழலிகளைக் காணமுடியும். அவை காணப்படுவது மேற்குத் தொடர்ச்சி மலைகளின் அடிவாரத்திலாகும்.

அவை யாவுமே தனியார் மயப்படுத்தப்பட்டவை. அந்தந்த நிலத்தின் உரிமையாளர்கள் தமது நிலத்தில் காற்றுச் சுழலிகளை அமைத்து அவற்றில் சேகரிக்கப்படும் மின்சாரத்தை அரசுக்கு வழங்கலாம். அவர்களது பொது மின்பாவனைக் கட்டணத்திலிருந்து அவர்கள் அரசுக்கு வழங்கிய மின்சாரத்தின் பெறுமதி கழிக்கப்படும். இங்குள்ள பல காற்றுச் சுழலிகள் இந்தியாவின் பிரபல வர்த்தக நிறுவனங்களுக்குச் சொந்தமானவை.

ஒரு காலத்தில் எதற்குமே பயனற்ற தரிசு நிலமாகக் காணப்பட்ட பகுதி இன்று காற்றுச் சுழலிகளால் நிறைந்து காணப்படுகிறது. இந்த மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்திலுள்ள காணிகளை இலவசமாகக் கொடுத்தால் கூட எவரும் வாங்காதிருந்த காலமும் இருக்கிறது. ஆனால் மாறாக இன்றோ அவற்றின் பெறுமதி, நகரக் காணிகளின் பெறுமதியை விட அதிகமாகக் காணப்படுகிறது- அப்பகுதியில் நிலத்தை வாங்கிக் காற்றுச் சுழலிகளில் முதலீட்டை மேற்கொள்ள முன்னணி நிறுவனங்கள் மட்டுமன்றி தனி நபர்களும் போட்டிபோடுகின்றார்கள்.

விளைவாக, தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மின்வெட்டின் கால அளவு குறைக்கப்பட்டிருக்கின்றது. இலங்கையும் இந்தியாவும் வெவ்வேறு நாடுகளாக இருப்பினும் தாய்நாட்டின் உணர்வையே தரும் தமிழகம் அடைந்து வரும் வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது.

தமிழகத்தில் காணப்படும் தலா இயற்கை வளத்தின் அளவு இலங்கையில் காணப்படும் தலா இயற்கை வளத்தின் அளவை விட மிகமிகக் குறைவாகும். அப்படியிருந்தும் கூட, பல அடிப்படை விடயங்களில் தமிழகத்தால் தன்னிறைவு காண முடியுமெனின் இலங்கையால் எவ்வளவோ சாதிக்க முடியும். ஆனால், இலங்கையர்களான நாம் மிகவும் சொற்ப அளவிலான முயற்சிகளையே மேற்கொள்கிறோம்.

இலங்கையின் மேற்குக் கடற்கரையில் வீசும் காற்றின் வேகம் மிகவும் அதிகமாகும் என அறியப்படுகிறது.

கற்பிட்டிக்கு அருகிலேயுள்ள மாம்புரிப் பகுதியிலேயே காற்றுச் சக்திப் பண்ணை அமைக்கப்பட்டு மின்சக்தி பிறப்பிக்கப்படுகிறது. இவை தவிர, இன்னும் பல காற்றாலைகள் அமைக்கப்படவிருக்கின்றன.

காற்றுச் சக்தியைப் பெற்றுக் கொள்வதற்கான முதலீட்டுத் தொகை மிக அதிகமாதலால் இலங்கையைப் பொறுத்தவரையில் நுகர்வோராகிய பொதுமக்கள் மிகவும் அதிகமான விலையைச் செலுத்த வேண்டியிருக்கும்.

அரசாங்கத்தால் மானியங்கள் வழங்கப்படும் பட்சத்தில் முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் ஈடுபடுவர் என எதிர்பார்க்கலாம். இலங்கையைப் பொறுத்தவரையிலே, சுவட்டு எரிபொருளுக்கான தடயங்கள் எவையுமே கண்டுபிடிக்கப்படவில்லை. இத்தகையதோர் நிலையில், சுதேச சக்தி வளங்களாகிய காற்றுச் சக்தி, சூரிய சக்தி மற்றும் நீரின் அழுத்த சக்தி ஆகியவற்றின் உச்சப் பயன்பாட்டைப் பெறுவதே சுபிட்சம் மிக்க எதிர்காலத்துக்கான பாதையாக அமையும்.

No comments:

Post a Comment