An effort to bring back the memories of the hidden treasures of our rich culture and to change the way we live in...
Friday, June 25, 2010
எய்தவனிருக்க அம்பை நோவானேன்?
ஒரு நாட்டின் அரசாங்கம் நிலைத்திருப்பதற்கும், தனது சேவைகளை நாட்டுக்கு வழங்குவதற்கும் வருமானத்தின் தேவை அவசியமாகிறது. அந்த வருமானத்தைப் பெறுவதற்காக விதிக்கப்பட்ட வரைமுறைகளே வரிகளாகும்.
ஜனநாயக அரசாகவோ மக்கள் பிரதிநிதிகளாகவோ சர்வாதிகாரிகளாகவோ சமவுடைமை அரசாகவோ ஏன் இராணுவ அரசாகவோ யார் ஆட்சிபீடம் ஏறினாலும் வரி வசூலிப்பு மட்டும் நிறுத்தப்படுவதில்லை.
முடியாட்சியின் வரலாற்றிலே வரி வசூலிக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் பல காணப்படுகின்றன. முன்னைய காலங்களில் வியாபாரிகளிடம், சுங்கம் எனும் பெயரிலே வரி வசூலிக்கப்பட்டது. வாணிப நோக்கிலே நாட்டிற்குள் நுழையும் பொருட்கள் மீது சுங்கம் வசூலிக்கப்பட்டதைச் சங்ககால இலக்கியங்களிலே காண்கிறோம்.
அந்த நடைமுறைகள் இன்றும் தொடர்ந்து வருகின்றன. நாம் அறிந்து செலுத்தும் வரிகள் மிகச்சிலவாகும். நாம் அறியாமல் செலுத்தும் வரிகள் பல வகையானவை.
நாம் நுகரும் பொருட்கள், சேவைகளின் பெறுமதியுடன் பலவரிகள் சேர்க்கப்பட்டுள்ளன. அவை தொடர்பான பற்றுச்சீட்டில் வரிகளின் விபரங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தாலும் அவற்றை நாம் கவனிப்பதில்லை. எதற்காகச் செலுத்துகிறோம் என்பது தெரியாமலேயே வரியைச் செலுத்துபவர்களாகி விடுகிறோம்.
எமது நாட்டின் அரசாங்கத்தால் எமக்கு வழங்கப்படும் சேவைகள் இலவசமாகவே வழங்கப்படவேண்டுமென நாம் எதிர்பார்க்கிறோம். அவற்றைப்பணம் செலுத்திப்பெறவேண்டிய தேவையொன்று ஏற்படுகையில் அத்தீர்மானங்களைப் பகிஷ்கரிக்க முயல்கிறோம்.
காலத்துடன் அதிகரித்துவரும் சூழல் பிரச்சினைகளை நோக்குகையிலும் அத்தகையதோர் நிலைமையே உருவாகிறது. வீதிகளில் எழுந்தமானமாகக் குப்பைகளை எறிகிறோம். துப்புகிறோம். ஆனால் அவற்றைச் சுத்தப்படுத்துவதற்கான பணத்தை அறவிடும் திட்டங்களை ஏற்க மறுக்கிறோம். நாம் வாழும் சூழல் மாசுறுகிறதே என்ற சிந்தனை அறவே உருவாவதில்லை. அதே சமயம் அவை சுத்தமாக்கப்படாவிட்டால், அரசாங்கத்தையும் மாநகரசபைகளையும் திட்டித்தீர்த்து விடுகிறோம்.
பொது மக்களின் இத்தகைய மனப்பாங்கு அவர்களே நினைத்தாலன்றி வேறு எந்த வகையிலும் மாற்றப்பட முடியாதது. ஆகையால் தான் மாசுபடுத்துவோரே அதற்கான ஈட்டையும் பணமாகச் செலுத்தும் தத்துவமொன்று 1972ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இத்தத்துவத்தை Polluter Pays Principle(PPP)என ஆங்கிலத்தில் குறிப்பிடுவர். அண்மைக்காலத்திலேயே இத்தத்துவம் மிகவும் பிரபலமடைந்திருக்கிறது.
‘யாராவது விளைவை அறிந்துகொண்டே வீம்புக்காக நீரை மாசுபடுத்தினால், ஏற்படும் பாதிப்புகளுக்கான செலவையும் அவரே ஏற்க வேண்டும். அது மட்டுமன்றி அவர் மாசுபடுத்திய நீர் நிலையைச் சுத்திகரிப்பதற்கான செலவையும் அவரே ஏற்க வேண்டும்’
என பண்டைய கிரேக்க தத்துவஞானி பிளேட்டோ குறிப்பிட்டிருந்தார். பிளேட்டோவின் காலத்திலேயே இந்தத் தத்துவத்திற்கான (PPP) அடிக்கல் நாட்டப்பட்டுவிட்டது எனக்குறிப்பிடலாம்.
மாசுபடுத்துவோரே ஈட்டையும் பணமாகச்செலுத்தும் தத்துவமானது தவறைச்சுட்டிக்காட்டும் ஒரு முறைமை மட்டுமன்றி, சுற்றுச்சூழலின் நலன் கருதி, மாசுபடுத்தப்பட்ட சூழலைச் சீர்படுத்த வழிவகுக்கும் முறைமையுமாகும். சர்வதேச சுற்றுச்சூழல் சட்டத்தின் ஒரு அங்கமாக இத்தத்துவம் காணப்படுகிறது.
ஒரு நாட்டின் சுற்றுச்சூழல் கொள்கைக்கும் சமூக பொருளாதாரக் கொள்கைக்குமிடையே எப்போதும் தொடர்பிருக்கும். இத் தத்துவத்தின் படி, சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகளைச் சீர்செய்வது அரசாங்கத்தின் கடமையல்ல என்பது தெளிவாகும். அதுமட்டுமன்றி சூழலைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதும் அரசாங்கத்தின் கடமையல்ல. சூழல் பிரச்சினைகளால் ஏற்படும் நிதி ரீதியிலான சுமையை அப்பிரச்சினைகளை உருவாக்கும் தரப்பினரே தாங்கும் வகையிலே சுற்றுச்சூழல் வரி முறைமைகள் அமைக்கப்பட்டுள்ளன.
அத்துடன் அரசாங்கத்தின் மீது சுமத்தப்படும் சுமைகளும் குறைவடையும் என்பதுடன் இத்தத்துவம் நடைமுறைப்படுத்தப்படுகையில் சூழல் மாசடைதல் குறைக்கப்படுகிறது என்ற உண்மையும் தெளிவாகியது. ஆயினும் கைத்தொழில் செயற்பாடுகளால் ஏற்படும் சூழல் மாசுக்கே இத்தத்துவம் மிகவும் பொருத்தமாக அமைகிறது.
அபிவிருத்தியடைந்த நாடுகளைப் பொறுத்த வரையிலே சில சந்தர்ப்பங்களில் இது பொருத்தமற்றதாக அமைந்துவிடுகிறது. ‘சூழலை மாசுபடுத்துவர் யார்? என்பதைத் தீர்மானித்தல் மிகவும் கடினமானதோர் விடயமாகும்.
யாராவது சூழலை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாதிக்கும் வகையிலான செயற்பாடுகளை மேற்கொண்டால், அவர் ‘சூழலை மாசுபடுத்துபவர்’ எனச் சட்டம் வரையறுக்கிறது.
இந்த வரைவிலக்கணமானது, சில சந்தர்ப்பங்களில் நடைமுறைக்கு ஏற்றதாக அமைவதில்லை. பல வறிய குடும்பங்களாலும், விவசாயிகளாலும் தமது சக்கித் தேவையைப் பூர்த்தி செய்வதற்கும் கழிவுகளை அகற்றுவதற்கும் மேலதிக பணத்தைச் செலவிட முடியாத நிலைமையொன்று காணப்படுகிறது. சிறிய நடுத்தர வர்க்க கைத்தொழில் மற்றும் உற்பத்தி நிறுவனங்களும் அதே பிரச்சினையையே எதிர்நோக்குகின்றன.
ஏற்றுமதியாளர்களால் இந்தச் செலவை வெளிநாட்டவர்களின் தலையில் சுமத்தமுடியாத நிலை காணப்படுவதால் அவர்கள் மத்தியிலும் இத் தத்துவத்தை நடைமுறைப்படுத்த முடியாதுள்ளது.
இலங்கை போன்ற அபிவிருத்தியடைந்த நாடுகளைப் பொறுத்தவரையிலே, சூழல் மாசடைதலானது இயற்கை வளங்களை மிகையாக நுகர்வதனாலேயே அந்தளவில் ஏற்படுகிறது. இந்தத் தத்துவத்தை அபிவிருத்தியடைந்த நாடுகளில் பரந்தளவில் பிரயோகிக்க முயலும் போது, வளங்களின் சமமற்ற பங்கீடு என்றதோர் நிலை உருவாகுமென நம்பப்படுகிறது.
ஆயினும் இயலுமான பல வழிகளிலே இத்தத்துவம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இலங்கையின் சனத்தொகையில் ஏறத்தாழ 60 சதவீதமானோர் கைத்தொலைபேசிகளைப் பாவித்து வருகின்றனர். கடந்த 2008 ஆம் ஆண்டின் பிற்பகுதியிலே கைத்தொலைபேசி பாவனையாளர்கள் சுற்றுச்சூழல் வரியையும் கட்டவேண்டுமென்ற நடைமுறை அமுலுக்கு வந்தது. 1994 ஆம் ஆண்டளவில் 75,000 ரூபாவிலிருந்த கைத்தொலைபேசி ஒன்றின் அடிப்படைவிலை இன்று 3500 இலும் குறைவாகக் காணப்படுகிறது. அவ்வாறு குறைவடைந்தமையானது. சுற்றுச்சூழலின் நன்மை கருதிய நோக்கிலே, கைத்தொலைபேசிகளின் ஆயுட்காலம் குறைவடைந்துள்ளமையையும் பழுதடைந்த பின் கழிவாக வீசப்படும் கைத்தொலைபேசிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையையுமே சுட்டுகிறது.
சுற்றுச்சூழலைப் பொறுத்தவரையிலே இது நன்மை பயக்கும் விடயமல்ல. சிங்கப்பூர், இந்தியா போன்ற நாடுகளில் காணப்படும் கைத்தொலைபேசி மீள் சுழற்சி உலைகள் இலங்கையில் காணப்படுவதில்லை.
வாழ்க்கைச்செலவு காலத்துடன் துரிதமாக அதிகரிக்கும் போக்கைக் கொண்டிருக்கிறது. மாறாக கைத்தொலை பேசியின் அழைப்புக் கட்டணங்களோ வெகுவாகக் குறைவடைந்து செல்லும் போக்கைக் கொண்டிருக்கின்றன. கைத்தொலைபேசி இணைப்புக்களின் மாதாந்தக் கட்டணத்தின் 2 சதவீதமான பகுதி சுற்றுச்சூழல் வரியாக அறவிடப்படுகிறது. கைத்தொலைபேசிகளின் பாவனையால் உருவாக்கப்படும் மின்காந்த அலைகள் வளிமாசுக்குக் காரணமாய் அமைந்துவிடுகின்றன.
இலங்கையிலே சுற்றுச்சூழல் வரியானது கைத்தொலைபேசிப் பாவனையாளர்களிடம் மட்டும் அறவிடப்படுவதில்லை. மோட்டார் வாகனங்களின் பாவனையாளர்களிடமும் தொலைபேசி இணைப்புக்களை வழங்கும் நிறுவனங்களிடமும் கூட அறிவிடப்படுகிறது. இலங்கையைப் பொறுத்தவரையிலே, வளிமண்டலம் மாசமடையும் வீதம் மிகவும் அதிகமாகும். ஆதலால் வளிமண்டலம் மாசடைவதைக் குறைக்குமுகமாக மோட்டார் வாகனப் பாவனையாளர்களிடம் சுற்றுச்சூழல் வரி அறிவிடப்படுகிறது. அந்த வரியின் பெறுமயானது குறித்த மோட்டார் வாகனத்தால் உருவாக்கப்படும் மாசுக்கு நேர்விகித சமனாக இருக்குமென குறிப்பிடப்படுகிறது. மின் சாரத்தில் இயங்கும் மோட்டார் வாகனங்களுக்கு இவ்வரி அறவிடப்படுவதில்லை. பேருந்துகள், பாரஊர்திகள் மற்றும் முச்சக்கரவண்டிகளுக்கும் வாழ்க்கைச் செலவைக் கருத்தில் கொணடு இவ்வரி அறவிடப்படுவதில்லை.
தொலைபேசி இணைப்புக்களை வழங்கும் நிறுவனங்களிடம் தொலைதொடர்புக் கோபுரவரி எனும் பெயரிலே அவை நிறுவியிருக்கும் தொலை தொடர்புக் கோபுரங்களின் எண்ணிக்கைக்கமைய வரி அறவிடப்படுகிறது.
தொலைத்தொடர்புக் கோபுரங்களைப் பகிர்ந்து பாவிக்க தொலைபேசி இணைப்பு நிறுவனங்களைத் தூண்டும் நோக்கிலேயே இவ்வரி முறைமை அமுல்படுத்தப்படுகிறது.
இத்தகைய சுற்றுச்சூழல் வரிகளால் சேகரிக்கப்படும் பணத்தின் பெறுமதி பிரத்தியேகமான சுற்றுச்சூழல் நிதியமொன்றில் வரவு வைக்கப்படும். நிதி அமைச்சரும் சுற்றுச்சூழல் அமைச்சரும் இணைந்து இந்நிதியத்தின் அறிக்கையை வருடாந்தம் பாராளுமன்றத்திலே சமர்ப்பிப்பார்கள். இந் நிதியம் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பைத்தடுக்கும் அல்லது குறைக்கும் நடவடிக்கைகளுக்கு மட்டுமே நிதி உதவியை வழங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இத்தகையதோர் நிலையிலேயே அண்மையில் மின்சக்தி, எரிவலு அமைச்சர் பத்திரிகையாளர் மாநாடொன்றிலே குறிப்பிட்டிருந்த விடயங்களும் முக்கியத்துவம் பெறுகின்றன.
அவை 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து நடைமுறைக்கு வரவிருக்கும் புதிய மின்கட்டண முறைமையுடன் தொடர்புடையவை. இந்த மின்கட்டண முறைமை நடைமுறைப்படுத்தப்படுவதற்காக மின்பாவனையை அளவிடும் புதிய கருவிகளும் பொருத்தப்படுமெனக் குறிப்பிடப்படுகிறது.
இந்தக் கட்டண முறைமையின்படி, மாலை 6.30 மணியிலிருந்து இரவு 9.30 மணி வரையான காலம் மின்பாவனையின் உச்ச நேரமாகக் கணிக்கப்படுகிறது. இம்முறைமை இலங்கையிலே முதன் முறையாக நடைமுறைப்படுத்தப்படவிருக்கிறது. அத்துடன் இத்திட்டத்தால் பயன்பெற இருப்பவர்கள் இரவு 9.30 மணியிலிருந்து அதிகாலை 4.30 மணிவரை மின்சாரத்தைப் பாவிப்பவர்களேயாவர்.
பாரியளவில் மின்சக்தியை நுகரும் நீர்விநியோகம் மற்றும் வடிகாலமைப்புச்சபை, பனிக்கட்டி உற்பத்தியாளர்கள், அச்சிடும் நிறுவனங்கள், வெதுப்பகங்கள், மத்திய குளிரூட்டிகளையுடைய ஹோட்டல்கள் போன்றவற்றின் சுமைகூடிய உச்ச நேரத்தை இரவு 9.30 மணியிலிருந்து அதிகாலை 4.30 மணிவரையான காலப்பகுதிக்கு மாற்றுமாறும் ஆலோசனை தெரிவிக்கப்படுகிறது. உச்ச நேரத்தில் மிகையாக மின்சாரத்தைப் பாவித்தால் அதற்கான கட்டணத்தைச் செலுத்தவும் தயாராக இருக்க வேண்டுமென்பதே இப்புதிய கொள்கையின் குறிக்கோளாகும்.
இக்கொள்கை சிறந்த முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டால் மின்சக்திவிரயம் தடுக்கப்படுவதோடு சில வழிகளில் சூழல் மாசடைதலும் கட்டுப்படுத்தப்படுமெனத் தெரிவிக்கப்படுகிறது.
மாசுபடுத்துபவரே அதற்கான கட்டணத்தையும் செலுத்த வேண்டுமென்ற அடிப்படையிலேயே இக்கொள்கையும் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
நவீன தொழில் நுட்பமும் இலத்திரனியல் கருவிகளும் இன்று இலங்கையின் கிராமங்களை ஆக்கிரமிக்கத் தொடங்கிவிட்டன. முக்கியமாக கைத்தொலைபேசி, கணனிகள் போன்ற சில கருவிகள், சூழல் மாசை அதிகரிக்கின்றன. தென்கொரியாவிலே அக்கருவிகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்களிடம் அதிகளவிலான வரியும் நுகரும் வாடிக்கையாளர்களிடம் குறைந்தளவிலான வரியும் அறிவிடப்படுகிறது. அத்தகைய நடைமுறை இலங்கையில் இல்லை.
ஒரு காலத்தில் தனித்தனித்துறைகளாக இருந்த சுற்றுச்சூழல் துறையும் சமூக பொருளாதாரத்துறையும் உலகமயமாதலால் ஒன்றுடனொன்று பின்னிப்பிணைந்துவிட்டன. சுற்றுச்சூழல் காப்பின்றி பொருளாதார முன்னேற்றமில்லையென்ற நிலை உருவாகிவிட்டது. சுற்றுச்சுழலை மாசுபடுத்துபவரே அதற்கான கட்டணத்தையும் செலுத்த வேண்டும் என்ற கொள்கை சகலதுறைகளிலும் நடைமுறைப்படுத்தப்படுகிறதோ இல்லையோ, சூழலை மாசுபடுத்தாத புதிய நடைமுறைகளின் கண்டுபிடிப்பு ஊக்குவிக்கப்பட்டால் பொருளாதார முன்னேற்றம் தானாகவே நிகழும்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment