Showing posts with label எய்ட்ஸ். Show all posts
Showing posts with label எய்ட்ஸ். Show all posts

Wednesday, December 1, 2010

எச்.ஐ.வி/எய்ட்ஸ் - ஐயமும் தெளிவும்..

எய்ட்ஸ் (AIDS) எனப்படுவது யாது?


AIDS  என்ற சொல் Acquired Immune Deficiency Syndrome  என விளக்கப்படுகிறது.
AIDS   என்பது ஒரு மருத்துவ நிலை என்று கூடக் கூறலாம்.  AIDS இனங்காணப்பட்ட நோயாளி ஒருவரின் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் நலிவடைந்ததாக இருக்கும். இதனால், பாரதூரமற்ற நோய்த்தொற்றுக்கள் கூட அவரை இலகுவில் பாதிப்புக்குள்ளாக்கும்.
1980 களின் முற்பகுதியிலே, எய்ட்ஸ் தொற்று முதன்முதலாக இனங்காணப்பட்டபோது வெகு சிலரே பாதிக்கப்பட்டிருந்தனர். ஆனால் தற்போது உலகளாவிய ரீதியிலே 33.3 மில்லியன் மக்கள் எய்ட்ஸ் மற்றும் எச்.ஐ.வி. தொற்றுடன் இனங்காணப்பட்டுள்ளனர்.


எய்ட்ஸ் என்ற நிலைக்கு பரிகாரம் இருக்கிறதா?


பலர் அவ்வாறு பரிகாரம் இருப்பதாகவே எண்ணுகிறார்கள். எய்ட்ஸ் என்ற நிலைக்கு ஆளானவர்களை அந்த எண்ணம் தான் தாம் பாதுகாப்புடன் இருப்பதாக உணரச் செய்கிறது.
ஆனால் உண்மையில் எய்ட்ஸ் என்ற நிலைக்கு எந்த ஒரு பரிகாரமும் இல்லை. வந்த பின் காப்பதை விட வருமுன் காத்தலே சிறந்ததாகக் கருதப்படுகிறது.







எய்ட்ஸ் என்ற நிலைக்கான

அறிகுறிகள் யாவை?


நோய் எதிர்ப்புக்கலங்களான CD4 கலங்களின் எண்ணிக்கை குருதியிலே குறித்த மட்டத்தை விடக் குறைவடையும் போது எய்ட்ஸ் என்ற நிலை உருவாகியிருப்பதாகக் கணிக்கப்படும்.
ஆரம்பத்திலே ஃபுளூ வை ஒத்த அறிகுறிகளான காய்ச்சல், தலையிடி, களைப்பு போன்றன தோன்றும். இதனை அறிகுறிகள் வெளிப்படாத காலப்பகுதி என்பர். ஆயினும் இந்தக் காலகட்டத்தில் உடலின் நோய் எதிர்ப்புத் தொகுதி வெகுவாக நலிவடையத் தொடங்கும்.
ஏனெனில் H I V  வைரஸ் ஆனது நோயெதிர்ப்புக் கலங்களான CD4 கலங்களைச் சேதமடையச் செய்யும். அடிப்படையில் இக்கலங்கள் பிறபொருள் எதிரிகளுக்கெதிராகத் தொழிற்படுவன ஆகும்.
களைப்பு, நிறை குறைவடைதல், அடிக்கடி காய்ச்சல் ஏற்படுதல், வியர்த்தல், சரும வியாதிகள் மற்றும் ஏனைய தொற்றுக்கள், தற்காலிக ஞாபக மறதி போன்ற அறிகுறிகளும் காணப்படலாம்.
காலப்போக்கிலே, உடலின் ஒவ்வொரு தொகுதியாகப் பாதிப்படையத் தொடங்கும்.

எச். ஐ. வி. சோதனையில் எச். ஐ. வி. (+) மற்றும்

எச். ஐ. வி. (-) முடிவுகள் வெளிப்படுத்துவது என்ன?

சாதாரணமாக எமது உடலிலே தொற்று ஒன்று ஏற்பட்டால், நோய் எதிர்ப்புக்கலங்கள் பிறபொருள் எதிரியைத் தோற்றுவித்து தொற்றுக்களுடன் போரிடும்.
எச். ஐ. வி. தொற்றின் போதும் இதுவே நடைபெறுகிறது. எச். ஐ. வி. வைரசிற்குரிய பிறபொருளெதிரிகள் ஒருவரிடம் அடையாளம் காணப்பட்டால் அவர் எச். ஐ. வி. தொற்றுக்குள்ளானவராகக் கருதப்படுவார். எச். ஐ. வி. சோதனையில் அவருக்கு (+) முடிவு கிடைக்கும். அவ்வாறான பிறபொருளெதிரிகள் எவையும் அடையாளங் காணப்படாவிடில் அவருக்கு (-) முடிவு கிடைக்கும்.
ஆனால் முக்கியமான விடயம் யாதெனில், எச். ஐ. வி. தொற்று ஏற்பட்டு ஆறு வாரங்கள் ஆகும் போதே உடலில் பிறபொருளெதிரிகள் தோற்றுவிக்கப்படும். எச். ஐ. வி. சோதனையில் (-) முடிவு கிடைத்த ஒருவருக்கு அத்தொற்று இல்லை என்றும் கருதமுடியும். அதேசமயம், அத்தொற்று ஏற்பட்டு 6 வாரங்கள் ஆகவில்லை என்றும் கூடக் கருதமுடியும்.
ஒவ்வொருவரும் எச். ஐ. வி. தொடர்பான தமது நிலை என்ன? தமது கணவன்/மனைவியின் நிலை என்ன என்பதைத் தெளிவாக அறிந்துவைத்திருத்தல் ஆரோக்கியமானது என வலியுறுத்தப்படுகிறது. எச். ஐ. வி. சோதனையும் சாதாரண குருதிச் சோதனையை ஒத்ததாகும். எச். ஐ. வி. சோதனையில் (+) முடிவு கிடைத்ததால் அதை உறுதிசெய்ய மேலும் இரண்டு சோதனைகள் செய்யப்படும். அவற்றின் பின்னரே முடிவுகள் மேற்கொள்ளப்படும்.

எச். ஐ. வி. வைரஸ் மனித உடலுக்கு வெளியே

எவ்வளவு காலம் உயிர் வாழும்?



எச். ஐ. வி. தொற்றுடைய ஒரு பொருளைத் தொடுவதால் அவ்வைரஸ் தொற்றுக்குள்ளாக முடியுமா என்ற சந்தேகம் பலருடைய உள்ளத்திலே எழத்தான் செய்கிறது. ஆனால் அதிஷ்டவசமாக எச். ஐ. வி. தொற்று அவ்வாறு ஏற்படுவதில்லை.
இவ்வைரஸ் உடலை விட்டு வெளியே, ஒரு புறச் சூழலில் அதிக காலம் உயிர் வாழ்வதில்லை என்பதை ஆய்வுகள் நிரூபித்திருக்கின்றன. புறச்சூழலில் உள்ள எச். ஐ. வி. வைரஸ் தொற்றுள்ள கலங்களின் எண்ணிக்கையானது சில மணித்தியாலங்களுக்குள் 99 சதவீதத்தால் குறை வடைந்து விடுகிறது.
குருதியிலோ அல்லது ஏனைய உடற்திராவகங்களிலோ இருக்கும் எச். ஐ. வி. தொற்றின் செறிவு மிகக் குறைவாகும். புறச்சூழலில் இருக்கும் குருதியிலோ அல்லது உடற்திராவகங்களிலோ இருக்கும் எச். ஐ. வி. தொற்று பூச்சியம் எனக் கொள்ளலாம். ஆயினும் அவற்றில் ஹெப்படைடிஸ் -B, C தொற்றுக்கள் கூட இருக்கக் கூடுமா கையால் அவற்றை மிகவும் அவதானமாகக் கையாளவேண்டும்.