Sunday, June 6, 2010

யானைக்கும் மனிதனுக்கும் இடையிலான போர்

‘எறிவெடிகள் வைக்கப் பட்ட பூசனிக்காய்களை யானைப் பாதையில் போட்டு வைத்தனர் கிராமவாசிகள். அதை உண்ட யானை ஒரு நாள் முழுவதும் அவதிப்பட்டு மறு நாள் இறந்தது. பயிர்களைத் துவம்சம் செய்யும் யானைகள் கிராமவாசிகளை தூக்கி வீசி, மிதித்து கொல்கிறது. இந்த யுத்தம் தொடரும் அதேசமயம் யானைகளற்ற இலங்கையை கற்பனை செய்யவும் முடியாது. எனவே இரு பிரிவினருக்கும் இடையே எங்கேயாவது ஓரிடத்தில் சமரசம் ஆரம்பிக்கப்பட வேண்டும்’‘ஊட்டுவதால் தாயாகும்

உதவுவதால் நண்பனாகும்.

காப்பதனால் காவலனாகும்

யானைகள் நம்

சூழலின் தோழனாகும்.’

என்கிறது சிறுவர்களுக்கான கவிதையொன்று! இன்று அதைச் சிறுவர்கள் வாசிக்கிறார்களோ இல்லையோ பெரியவர்களாகிய நாம் வாசித்து உணர வேண்டிய நிலையில் இருக்கிறோம்.

யானைகள் குடியிருப்புகளையும் தோட்டங்களையும் நாசம் செய்வவதையும் அதைத்தொடர்ந்து அவை கொல்லப்படுவதையும் செய்திகளாக தினம் தினம் பார்க்கிறோம்; கேட்கிறோம்; வாசிக்கிறோம்.

என்ன நடந்தாலும் பழியை அடுத்தவர் மீது போட்டு விடும் விந்தைமிக்க குணம் நம்முடையது. தப்பிக்கும் மனப்பான்மை.

ஆதிகாலத்திலிருந்து மனிதனுக்கும் விலங்குகளுக்குமிடையே ஏதோ ஒருவகையில் தொடர்பு இருந்து வருகிறது. விலங்குகள் அவற்றின் தன்மைகளுக்கும் இயல்புகளுக்குமேற்ப வெவ்வேறு தேவைகளுக்காக மனிதனால் பயன்படுத்தப்படுகின்றன. அவ்வகையிலேயே யானைகளும் அதிகாலத்தில் இருந்து மனித வாழ்வுடன் பின்னிப்பிணைந்து காணப்படுகின்றன. அடிப்படையில் யானைகள் இரு இனங்களைச் சார்ந்தவை. ஒன்று ஆபிரிக்க யானை இனம். இரண்டாவது ஆசிய யானை இனம். ஆசியாவின் வரலாற்றுடனும் கலாசாரத்துடனும் ஒன்றித்துக் காணப்படும் விலங்குகளுள் யானையும் ஒன்றாகும். பாரமான பொருட்களைத் தூக்குவதற்கும், பயணிப்பதற்கும், யுத்த முனைகளிலும் யானைகள் பயன்படுத்தப்படுகின்றன. யானைகளின் தந்தமும் மயிரும் விலையுயர்ந்த பொருட்களாக வர்த்தக ரீதியில் முக்கியத்துவம் பெறுகின்றன. யானைகள், அவை செறிந்து வாழும் சில நாடுகளின் அடையாளமாகவும் வணக்கத்துக்குரிய விலங்காகவும் இருக்கின்றன.

முன்னொரு காலத்தில் அவுஸ்திரேலியா, மற்றும் சில தீவுகள் தவிர்ந்த ஏனைய நாடுகளெல்லாம் பரவியிருந்த யானைகள் இன்று ஆசியாவிலும் ஆபிரிக்காவிலும் மட்டுமே காணப்படுகின்றன. கைத்தொழில் புரட்சியுடன் ஆரம்பித்த புதிய யுகம் மனிதனைப் பொறுத்த வரையில் அபிவிருத்திக்கான யுகமாகக் கருதப்பட்டது. ஆனால் யானைகளைப் பொறுத்தவரையிலோ அவற்றின் அழிவுக்கான யுகமாக இந் நூற்றாண்டு மாறியிருக்கிறது. உலகின் சனத்தொகையும் அபிவிருத்தித் தேவையும் அதிகரிக்க, வனப்பகுதிகள் அழிக்கப்பட்டு அந்த நிலம் விவசாயத்துக்கும் குடியேற்றங்களுக்கும் உட்கட்டமைப்பு வசதிகளின் அபிவிருத்திக்கும் பயன்படுத்தப்படுகின்றன. இத்தகைய செயற்பாடுகளால் மனித இனம் பயன்பெற்று உயர்வடைந்தாலும், காடுகளே தஞ்சமென இருந்த வனஜீவராசிகள் பெரும் பாதிப்புக்குள்ளாயின. யானைகளும் அத்தகைய பாதிப்புக்களை அனுபவிக்க ஆரம்பித்துள்ளன.


வனஜீவராசிகளைப் பொறுத்தவரையிலே உணவு, வாழ்விடம் தமது இருப்பை நிலைக்கச் செய்வதற்கான சுய பாதுகாப்பு ஆகியனவே அடிப்படைத் தேவைகளாகக் கருதப்படுகின்றன. வனப்பிரதேசங்கள் அழிக்கப்படுவதால் தமக்குத் தேவையான உணவு, வாழ்விடம் பாதுகாப்பு ஆகியன கிடைக்காதபட்சத்தில் அவற்றைத் தேடிச் செல்லத் தலைப்படுகின்றன. யானைகள் சமூக விலங்கினத்தைச் சேர்ந்தவை. அதாவது அவை கூட்டம் கூட்டமாக வாழும். ஒரு இடத்தில் உணவும் நீரும் குறைவடையும் சந்தர்ப்பத்தில் அவை இருக்குமிடத்தைத் தேடி இலகுவில் உணவைப் பெற்றுக்கொள்ளவும் யானைகள் தயங்குவதில்லை.

இத்தகையதோர் நிலையில் தான் மனிதனுக்கும் யானைகளுக்குமிடையில் முரண்பாடு தோன்றத் தொடங்கியது. அது காலப்போக்கில் பாரிய சமூகப் பிரச்சினையாக ஒருவெடுத்தது. இன்று இலங்கையும் இந்தப்பிரச்சினையை எதிர்நோக்கும் நாடுகளுள் ஒன்றாக மாறிவிட்டது. இப்பிரச்சினையின் எதிரொலியாகவே எம்மை அன்றாடம் எட்டும் யானை - மனிதன் முரண்பாடு தொடர்பான செய்திகள் வெளிவருகின்றன.

பிரித்தானியரின் ஆட்சிக் காலத்திலே 1840 களின் பின்னரான காலப்பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட கோப்பிப் பயிர்ச் செய்கைக் காரணமாக மலைப்பாங்கான பிரதேசங்களிலுள்ள காடுகள் அழிக்கப்பட அங்கு வாழ்ந்த யானைகளின் வாழ்விடத்தின் அளவு குறைவடைந்தது. இதையடுத்து மனிதனை விட்டு விலகிய யானைகள் உணவுத் தேவைக்காக தமது பழைய வாழ்விடத்துக்கு வந்த போது விவசாயிகளால் துரத்தப்பட்டன. துப்பாக்கிகளால் சுடப்பட்டன. விளைவு முரண்பாடாய் மாறியது. யானையும் மனிதர்களைக் கொல்லத் தொடங்கியது.

யானைகள் இல்லாத இலங்கையைக் கற்பனை செய்து பார்ப்பது கூடச் சற்றுக் கடினமானதே. இலங்கையின் ஞாபகச் சின்னங்களின் யானை முக்கியமான இடத்தை வகிக்கிறது. அத்தகையதோர் நாட்டில் யானையென்ற இனம் முற்றாகவே அழிந்து போய்விடுதல் என்பது மிகவும் வருத்தத்திற்குரியது. கடந்த 50 வருட காலத்துக்குள் 1500 முதல் 3000 யானைகள் வரையில் கொல்லப்பட்டி ருப்பதாக வனவிலங்குத் திணைக்களத்தின் ஆய்வறிக்கையொன்று தெரிவிக்கிறது.

மனிதனதும் யானைகளினதும் குடியடர்த்தி அதிகரிக்க அவ்விரு இனங்களுக்குமிடையிலான முரண்பாடுகளும் அதிகரிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மனிதனின் குடியடர்த்தி குறைவாகவிருக்கும் பிரதேசங்களிலே மரங்களடர்ந்த வனச்சூழல் நிலவுமென்பது வெளிப்படையான உண்மை. அங்கு மனிதர்களிடம் சகிப்புத்தன்மை அதிகமாகக் காணப்படும் அதேவேளை, யானைகளும் தமக்கான வாழ்விடத்தில் சுதந்திரமாக வாழ முடியும். அத்தகைய சூழலில் யானை - மனிதன் முரண்பாட்டுக்கான சாத்தியக் கூறுகளும் குறைவாகவே காணப்படுகின்றன.

இலங்கையைப் பொறுத்தவரையிலே மனிதன் : யானை என்ற விகிதம் 5430:1 எனக் காணப்படுகிறது. இது முரண்பாட்டுக்கு வழிவகுப்பதானதோர் நிலைமையாகும். வனப்பிரதேசங்களின் எல்லைகளிலுள் நிலப்பாவனை முறைமையாக விவசாயம் ஆதிக்கம் செலுத்துகின்ற சூழலில் யானை - மனிதன் முரண்பாடு அதிகளவில் காணப்படுகிறது. விவசாயிகள் பல மாதங்கள் வியர்வை சிந்தி உழைத்து வளர்க்கும் பயிர்களை ஒரிரவிலேயே யானைகள் அழித்துவிடும். அவ்வாறு பயிர்கள் அழிக்கப்படுவதால் ஏற்படும் சேதத்தின் பெறுமதி பல இலட்சங்களைத் தாண்டும். சில சந்தர்ப்பங்களில் மூர்க்கத்தனம் மிக்கவையாக மாறும். ஆண் யானைகள் வீடுகளைச் சேதப்படுத்துவதுடன் மட்டும் நின்றுவிடாது மனிதர்களையும் தாக்குகின்றன.

நகர வாசிகளைப் பொறுத்தவரையில் யானையானது பெறுமதிமிக்க, விருப்புக்குரிய விலங்காகக் கருதப்படுகிறது. காடுகளின் எல்லையோரக் கிராமங்களில் வசிக்கும் விவசாயிகளுக்கோ, அழிவை ஏற்படுத்தும் நாசகார, கொடிய விலங்காகத் தென்படுகிறது. எங்கெங்கோ எல்லாம் பட்ட கடனை முழுவதுமாகவே பயிரில் முதலீடு செய்யும் விவசாயி தனது பொறுமையையும் சகிப்புத்தன்மையும் இழந்து விடுகிறான்.

ஒவ்வொரு வருடமும் கொல்லப்படும் யானைகளின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டால், பாதிக்கப்படும் விவசாயிகளின் சகிப்புத்தன்மை குறைவடையும் வீதமும் தெளிவாகத் தெரியும். யானைகளோடு நிலத்தைப் பங்கிடும் வறிய கிராமவாசிகளுக்கு யானைகளால் ஏற்படுத்தப்படும் பொருட் சேதமும் உயிர்ச்சேதமும் மட்டுமே தெரியும். அவர்கள் யானைகளின் பொருளாதார ரீதியிலான, வர்த்தக ரீதியிலான பெறுமதியை உணர்வதற்கான வாய்ப்பு மிகவும் குறைவானதாகும். அவ்வாறு உணர்ந்தாலும், யானைகளால் அவர்களுக்கு ஏற்படும் சேதத்திற்கும் இழப்பிற்கும் முன்னே யானைகளின் பொருளாதார ரீதியிலான பெறுமதி பெரிதாகத் தெரிவதில்லை.

இலங்கையிலே யானைகள் தந்தத்திற்காகவோ இல்லை அவற்றின் மயிர்களுக்காகவோ கொல்லப்படுவதில்லை. மாறாக மனித யானை முரண்பாடு, விவசாய நிலங்களில் யானைகளின் தலையீடு காரணாமாகவே அதிகளவில் கொல்லப்படுகின்றன. தந்தத்தையுடைய யானைகள் இலங்கையில் மிகவும் குறைந்தளவிலேயே காணப்படுகின்றன. இலங்கையர் யானையின் மாமிசத்தையும் உண்பதில்லை. ஆகையால் மாமிசத்துக்காகவோ அல்லது தந்தத்துக்காகவோ யானைகள் கொல்லப்படுவதில்லை.

பெண் யானைகளுடன் ஒப்பிடுகையில், ஆண் யானைகளே பயிர்களைச் சேதப்படுத்துவதில் முனைப்புடன் செயற்படுகின்றன. இரவு நேரங்களில் எல்லையோரக் கிராமங்களின் விவசாய நிலங்களுக்குள் நுழையும் யானைகள் முதலில் தமது உணவை இனங்காணத் தொடங்கும். பயிர்களின் பூந்துணர் பாகங்கள் அவற்றிற்குப் பிடித்தமான உணவாகும். வாழை மரங்களைப் பிளந்து அவற்றின் தண்டை உணவாகக் கொள்கின்றன. தென்னை மரங்களை முறித்து அவற்றின் குருத்தையும் கரும்பு மரங்களையும் பலாப் பழங்களை குலுக்கி விழுத்திப்பின் காலால் மிதித்தும் உணவாகக் கொள்கின்றன. அதிகாலையில் தனது நிலத்தைப் பார்க்கும் விவசாயிக்கு சின்னாபின்னமாக் கப்பட்ட பயிர்கள் மட்டுமே எஞ்சியிருக்கும்.
சில காலத்துக்கு முன்னர் மேற்கொண்ட கணக்கெடுப்பின் படி, இலங்கையின் வனப்பகுதியில் ஏறத்தாழ 3500 யானைகள் வசிப்பதாகத் தெரியவந்தது. ஆனால் அவை வசிக்கும் நிலப்பரப்பினளவோ 8200 சதுர கிலோமீற்றர் ஆகும். ஒரு யானை சுதந்திரமாக, இயற்கையின் சமநிலையைக் குழப்பாமல் நடமாடித்திரிய 5 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பு தேவை. ஆகவே 3500 யானைகளுக்கும் தேவையான நிலப்பரப்பின் ஆகக்குறைந்த அளவு 17,500 சதுர கிலோமீற்றர் ஆகும்.

1640 யானைகள் மட்டுமே சுதந்திரமாக வாழக்கூடிய நிலத்தில் அதன் இரண்டு மடங்கிலும் அதிகமானளவு யானைகள் வசிப்பதென்பது இயற்கை நியதிக்கு மாறானது. அவ்வாறு வாழ்வதை விரும்பாத யானைகள் தமது நிலப்பரப்பின் எல்லையை விரிவுபடுத்தவே விரும்புகின்றன.

காட்டு நிலங்கள் வளமானவை. காடுகளை அழித்து அந்த நிலங்களில் விவசாயத்தை மேற்கொள்ளும் போது கிடைக்கும் முதல் விளைச்சல் வழக்கமாக விவசாயம் செய்யும் நிலங்களில் கிடைக்கும். விளைச்சலை விட மிகவும் அதிகமாகும். எனினும் இரண்டு, மூன்று போகங்களின் பின்னர் நிலத்தின் வளம் குன்றத் தொடங்கும் அந்நிலையில் அவை கைவிடப்பட்டு வேறு வனப்பிரதேசங்கள் அழிக்கப்படும்.

அத்துடன் வேறு பல காரணங்களுக்காகவும் வனங்கள் அழிக்கப்பட்டு குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அதனால் ஏற்படும் யானை - மனிதன் முரண்பாடுகள் அதிகரிக்க குடியேற்றவாசிகளுக்கு வேறு பகுதிகளில் நிலம் வழங்கப்பட்டது. ஆனால் நல்ல விளைச்சல் தரும் புதிய நிலத்தை விட்டு வேறு நிலத்துக்கு இடம்பெயர அவர்கள் விரும்புவதில்லை. முடிவில் அனைவர் கவனமும் யானைகள் மீதே திரும்புகிறது.

இதனைத் தடுக்க அரசாங்கத்தின் சார்பாகப் பல்வேறு திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

பயிர்களைச் சேதமாகும் யானைகளைப் பிடித்து வசதியான வாழ்விடங்களுக்கு அனுப்புதல் உயர் அழுத்த மின்சார வேலியை அமைத்தல் போன்ற பல செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. கிராமவாசிகள் யானைகளை கத்திச்சத்தம் போட்டுக் கலைத்தல், ஒளியைப்பாய்ச்சிக் கலைத்தல், வெடிகளைக் கொளுத்துதல் போன்ற பாரம்பரிய முறைகளைப் பயன்படுத்தி யானைகளை விரட்டினர். ஆனால் காலம் மாறவே அம்முறைகளின் வினைத்திறன் குறையத் தொடங்கியது.

மட்டுப்படுத்தப்பட்ட வளங்களாகிய நீருக்கும் நிலத்துக்கும் ஏற்பட்ட போட்டியால் கிராமவாசிகளும் மூர்கத்தனமாக மாறிவிட்டனரோ என எண்ணுமளவிற்கு மிகவும் கொடூரமான முறைகளால் யானைகளை அவர்கள் கொல்கின்றனர்.

அண்மையில் மட்டக்களப்பின் படுவான்கரைப் பிரதேசத்திலேயுள்ள மயிலவட்டவான் பகுதியில் நடந்த சம்பவம் மேற்கூறிய மூர்க்கத்தனத்துக்குச் சான்று பகர்வதாகவே தெரிந்தது.

எறிவெடிகள் சிலவற்றைப் பூசனிக்காய்க்குள் வைத்த கிராமவாசிகள் பூசனிக்காயை யானை வரும் பாதையில் வைத்தனர். விடயத்தை உணர்ந்திராத யானை, பூசனிக்காயை உண்டது. வெடிமருந்து சமிபாட்டுத் தொகுதியில் பாதிப்பை ஏற்படுத்த, அது அடுத்த நாள் முழுவதும் தவித்து, அல்லாடிப்பின் இறந்தது. இறந்த யானையை மண்குவியலால் மூடிவைத்திருந்தனர் கிராமவாசிகள்.

இத்தகைய பல சம்பவங்கள் அன்றாடம் நடந்த வண்ணம் தான் இருக்கின்றன. யானையும் ஒரு உயிரெனக் கருதுமிடத்து, அதற்கு உயிர்வாழும் உரிமை இல்லையா? என்ற கேள்வி மனிதர்களின் மனதில் எழுவதில்லை. அதேபோல அடுத்த உயிரைப் பறிக்கும் உரிமை மனிதனுக்கு வழங்கப்பட்டிருக்கிறதா? என்ற கேள்வி பற்றிச் சிந்திப்பது கூட இல்லை.

அரசாங்கத்தின் தயவுடன் உயரழுத்த மின்சார வேலிகளை அமைத்தலானது யானைகளின் அட்டகாசத்தை ஒரளவு கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுகிறது. யானைகள் இந்த வேலியைத் தாண்ட எத்தனித்தால் குறுகிய நேரத்துக்கு, உயிராபத்தைத் தோற்றுவிக்காத சிறிய மின்னதிர்ச்சியை இந்த வேலி கொடுக்கும். இந்த மின்னதிர்ச்சியை யானைகள் நினைவில் வைத்திருப்பதால் அவை மீண்டும் மின்வேலியைத் தாண்ட எத்தனிக்க மாட்டாது.
விவசாய நிலங்களின் எல்லைகளில் செங்குத்தான குழிகள் வெட்டப்பட்டும் யானைகள் விவசாய நிலங்களுக்கு வராமல் தடுக்கப்பட்டுள்ளன.

இன்றைய நிலையில், யானைகளின் பொருளாதாரப் பெறுமதியை எல்லைக்கிராமவாசிகளும் உணரத் தலைப்பட்டாலன்றி வேறு எந்த வகையிலும் யானைகள் கொல்லப்படுவதைத் தடுக்க முடியாது.

பின்னவலை யானைகள் சரணாலயச் சூழலில் வாழும் கிராமவாசிகள் அந்த யானைகள் ஒரு பொருளாதார வளமென கருதத் தொடங்கியுள்ளனர். சுற்றுலாத்தலமாகிய அந்த யானைகள் சரணாலயத்தால் அப்பிரதேச மக்களின் தொழில் வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளன.

அந்த யானைகள் சரணாலயம் அகற்றப்பட வேண்டிய தேவையொன்று ஏற்பட்டாலும் அதற்குக் கிராமவாசிகள் ஒப்புதலளிக்கமாட்டார்கள்.

இத்தகையதோர் மனப்பாங்கு இலங்கை முழுவதும் ஏற்பட வேண்டும். அதற்கு யானைகளால் ஏற்படும் உயிர், பொருட் சேதங்களை இல்லாதொழிப்பதற்கான வழிமுறைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். எல்லையோரக் கிராமங்களில் மேற்கொள்ளப்படும் பயிர்ச் செய்கைகள் யானைகளால் அழிக்கப்பட முடியாதனவாக இருக்க வேண்டும். அல்லது எல்லையோரக் கிராம விவசாயிகளை அதேயளவு விளைச்சலைத்தரக்கூடிய வேறு நிலங்களுக்கு இடம்பெயரச் செய்ய வேண்டும்.

யானைகளுக்கான பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள் உருவாக்கப்பட்டு அவை விவசாய நிலமாக்கப்படுதல் தடுக்கப்படவேண்டும்.

சூரிய சக்தியாலான மின்வேலிகளை அமைத்தல், பயிரின் அறுவடைக்காலத்தில் சிறு மாற்றத்தை ஏற்படுத்துதல், யானைகள் நடமாடித்திரியும் இடங்களை மனிதக் குடியிருப்புக்களுக்கு அப்பாலேயே மட்டுப்படுத்துதல் போன்ற செயற்பாடுகளை வினைத்திறன்மிக்க வழியில் கையாள்வதன் மூலம் வினைத்திறன்மிக்க நிலப்பாவனை, வறுமை ஒழிப்பு, பால் சமத்துவம் ஆகிய விடயங்களில் முன்னேற்றத்தை ஏற்படுத்தலாம்.

இவையாவற்றிக்குமப்பால், ஆறறிவுடைய மனிதர்களாக நாம் சற்றுச் சிந்திக்க வேண்டும். அப்பாவி உயிர்களைக் கொடூரமாகக் கொல்வதைத் தவிர்க்க வேண்டும். ஒரு யானை இறந்த பின்னர், அந்த யானை சார்ந்திருந்த கூட்டத்திலிருக்கும் யானைகளின் தவிப்பையும் கதறலையும் அவதானித்த ஒருவர் மீண்டும் ஒரு யானையைக் கொல்லமாட்டார். யானைகளுக்கும் எம்மைப்போலவே உணர்வுகள் இருக்கின்றன. மனிதர்களைப் போலவே, யானைகள் மத்தியிலும் ஒரு உயிரின் இழப்பு பெரிய பாதிப்பைத்தான் ஏற்படுத்துகிறது. இதை நாம் ஒவ்வொருவரும் புரிந்து நடந்தால், யானைகள் அநியாயமாகக் கொல்லபடுவது எதிர்காலத்தில் நிச்சயம் குறைவடையுமென்வது நிதர்சனம்.

No comments:

Post a Comment