Friday, June 4, 2010

வெள்ளத்தைத் தடுக்க என்னதான் தீர்வு?

சில நாட்கள் தொடர்ந்து பெய்த அடை மழையால் உருவாகிய வெள்ளம் இன்னும் முற்றாக வடிந்தோடவில்லை. பல இலட்சம் மக்கள் இடம்பயெர்ந்திருந்தனர். பல தோல்வியாதிகள் பரவின. சுத்தமான நீரைக் கூடப் பெற முடியாத சூழ்நிலையும் காணப்பட்டது.

கழிவு வாய்க்காலும் ஆறுகளும் மழையின் உக்கிரத்தைத் தாங்க முடியாமல் பெருக்கெடுத்தன. நகர்களும் நகர்களை அண்டிய பகுதிகளுமே அதிகளவில் பாதிக்கப்படடன. இவையெல்லாம் நடந்தது ஏதோ ஒரு நாட்டிலல்ல. இலங்கையிலேயே!

வெள்ள நீர் வடிந்தோடாமைக்கான அடிப்படைக் காரணம், வடிகாலமைப்பு முறைகளிலேயான குறைபாடேயாகும். கொழும்பு, கம்பஹா மாவட்டங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டமைக்கு வடிகாலமைப்பு முறைமைகளிலுள்ள குறைபாடுகளுட்படப் பல காரணங்கள் தெரிவிக்கப்படுகின்றன.

கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் மட்டும் தான் கழிவு நீர் வடிகாலமைப்புத் தொகுதி காணப்படுகிறது. ஏனைய பகுதிகளில் மழை நீர் வடிகால்களே காணப்படுகின்றன. இவற்றில் பல பிரித்தானிய காலனித்துவ ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்டவை. ஏறத்தாழ 100 ஆண்டுகள் பழைமையானவை. தற்போதைய சூழல் நிலைமைகளுக்கு அவை பூரண ஒத்துழைப்பை வழங்க முடியாதனவாகவே காணப்படுகின்றன.

இரண்டாவது விடயம், தாழ்நிலப் பகுதிகளில் காணப்படும் சட்டவிரோதக் குடியிருப்புகளாகும். மேல் மாகாணத்தில் தாழ்நிலப் பகுதிகள் வெள்ள அபாயம் மிக்கனவாகும். இப்பகுதிகளில் மக்கள் பலர் சட்டவிரோதக் குடியிருப்புக்களை அமைத்து பல காலமாக வாழ்ந்து வருகின்றனர். வெள்ளம் வீடுகளுக்குள் வந்த போதும் கூட தமது வீடுகள் பறிக்கப்பட்டுவிடும் என்ற பயத்தினால் இடம்பெயராமல் வெள்ளத்துக்குள் அவதிப்பட்ட மக்களும் இருக்கின்றார்கள்.

மூன்றாவது காரணமாகக் கூறப்படுவது கழிவுநீர் மற்றும் மழை நீர் வடிகால்களினுள் கொட்டப்படும் குப்பைகளாகும். தமது வாழிடச் சூழல் சுத்தமாக இருக்க வேண்டும் என நினைக்கும் மக்கள் அவ்வாழிடத்தின் புறச் சூழல் பற்றிச் சிந்திப்பதில்லை. குப்பைகள், பொலித்தீன், பிளாஸ்டிக் கழிவுகளை வடிகால்களுக்குள் கொட்ட விழைகின்றார்கள்.


நீர் செல்வதற்காக அமைக்கப்பட்ட வடிகால்களில் இந்தத் திண்மக் கழிவுகள் நிறைகின்றன. விளைவாக வெள்ள நீர் கால்வாய்களூடு செல்லாமல் பெருக்கெடுக்கிறது. வெள்ளப் பெருக்கின் பாதிப்புக்களை உணர்த்தவர்கள், அனுபவித்தவர்கள் கூட குப்பைகளை ஒழுங்காக அப்புறப்படுத்தாமையின் விளைவுகளை உணர்ந்து திருந்துவதாக இல்லை என்பதே வருத்தத்துக்குரிய விடயமாகும்.

அடைமழை பெய்வதை நாமே நினைத்தாலும் தடுக்க முடியாது. எம்மால் முடிந்தது. அடை மழையினால் ஏற்படும் வெள்ளத்தை எதிர்கொள்ளக்கூடியவாறான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது மட்டுமே!

மழையென்பது நீர்ச்சமநிலையைப் பேணுவதற்கான இயற்கையின் தொழிற்பாடு ஆகும். நகரப் பகுதிகளை சீமெந்துக் கட்டடங்களும் தார்ப்பாதைகளும் அதிகளவில் ஆக்கிரமிக்கத் தொடங்கியதால் மழை நீர் வடிந்தோடமுடியாத நிலையொன்று ஏற்பட்டிருக்கின்றது.

அதைச் சரிசெய்யும் வகையில் பாதைகளின் சாய்வுகளும் நகர்ப்புற வடிகாலமைப்புத் தொகுதிகளும் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால் அவை ஒழுங்காகப் பேணப்படாததால் வெள்ளம் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகிவிட்டது.

இதற்காக அரசாங்கத்தையோ இல்லை மாநகர, நகர சபைகளையோ குறைகூறுவதால் எந்தப் பயனும் இல்லை. இதற்கான பொறுப்பை முதலில் ஏற்க வேண்டியவர்கள் பொதுமக்களாகிய நாங்களே!

இத்தகைய இயற்கை அனர்த்தங்களால் உருவாகும் பாதிப்புக்களுக்கான அடிப்படைத் தீர்வாக ‘சூழல் நகர வடிவமைப்பு’ காணப்படுகிறது.

சட்டவிரோதக் குடியிருப்புக்கள் உருவாவதற்கு அடிப்படையாக அமையும் சமுதாய ஏற்றத் தாழ்வுகள் இம்முறைமையால் இல்லாதொழிக்கப்படுவதுடன் சிறந்த வடிகால் முகாமைத்துவமும் மேற்கொள்ளப்பட முடியும்.

நாளைய தினம் உலக சுற்றுச் சூழல் தினமாக அனுசரிக்கப்படவிருக்கும் நிலையிலும் இன்று நாம் எதிர்நோக்கி வரும் வெள்ள அபாயம் தொடர்பான பிரச்சினைகள் அதிகரித்துள்ள நிலையிலும் திட்டமிடப்பட்ட பேண்தகு நகரங்கள், அவற்றின் அமைப்பு முறைகள் பற்றிய அறிவும் அவசியமாகிறது.முன்னைய காலங்களில் நகர அமைப்பு திட்டமிடப்படும் போது அதிகரிக்கப் போகும் சனத்தொகை கருத்தில் கொள்ளப்படவில்லை. சனத்தொகை அதிகரிக்க, தேவைகளும் அதிகரித்தன. திட்டமிடப்படாத நகரங்கள் பல உருவாகின. இதனால் நகரங்களையும் அவற்றை அண்டிய பகுதிகளிலும் வெள்ளம் போன்ற பல இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்படும் சாத்தியக் கூறுகளும் அதிகரித்தன. சம்பந்தப்பட்ட சகல தரப்பினரும் ஒருங்கிணைந்தாலன்றி வேறெந்த வகையிலும் திட்டமிடப்பட்ட நகரங்களை உருவாக்க முடியாது.

அறிவைப் பகிர்தலென்பது சற்றுச் சிக்கலான காரியமாகும். சிறந்த நடைமுறைகளைப் பின்பற்றி பேண்தகு நகரங்களாய் வெற்றிகரமாகச் செயற்படும் நகரங்களின் நடைமுறைகளை இன்னும் பேண்தகு நகரங்களாக மாறும் எண்ணமற்ற நகரங்கள் பின்பற்ற வேண்டும்.

இனிமேல் நகர வாழ்வை நோக்கிய எமது நகர்வானது சக்தியின் வினைத்திறன் மிக்க பயன்பாடு, தாவர, விலங்குகளின் வாழ்வு மீளாக்கம் போன்றவற்றிற்கு வேண்டும். அப்போது மட்டுமே மனித வாழ்வு நிலைக்கும். இல்லையேல் இயற்கை அனர்த்தங்கள் அன்றாட நிகழ்வுகளாகிவிடும்.

பேண்தகு நகரங்கள் அல்லது சூழல் நகரங்கள் எனப்படுபவை சூழலியல் தொடர்பான தாக்கங்களைக் கருத்தில் கொண்டு அமைக்கப்பட்டவை. அத்தகைய நகரங்களிலே சக்தி, உணவு, நீர்த் தேவைகளுக்கான உள்Zடுகள் இழிவளவாக்கப்பட்டிருக்கும். வெப்பம், வளி மாசு, நீர் மாசு போன்றவற்றின் வெளியீடுகளும் இழிவாளவாக்கப்பட்டவை.

சூழல் நகரம் என்ற சொற்பதமானது 1987 ஆம் ஆண்டு முதன்முதலாக ‘ஆரோக்கியமான வாழ்வுக்காக நகரங்களைக் கட்டமைத்தல்’ எனும் புத்தகத்தில் பிரயோகிக்கப்பட்டிருந்தது.

சூழல் நகரங்கள், தன்னிறைவானதாக இருக்கும். அத்துடன் அவை மிகவும் குறைந்தளவிலான சூழல் மாசையும் ஏற்படுத்துகின்றன. அங்கே நிலப்பாவனை முறைமைகள் வினைத்திறன் மிக்க வகையில் பயன்படுத்தப்பட்டிருக்கும். பாவிக்கப்பட்ட பொருட்கள் மீள்பாவனைக்காக பயன்படுத்தப்படும்.

இயலாவிடின் மீள் சுழற்சி செய்யப்படும். அதுவும் இயலாதெனின் அவற்றின் பாவனை மட்டுப்படுத்தப்படும். கழிவுகள் சக்தியாக மாற்றப்பட்டும் மீள் பாவனைக்குட்படுத்தப்படும். அந்நகரங்கள் உலகளாவிய காலநிலை மாற்றத்துக்குப் பங்களிக்கும் வீதமும் இழிவளவாக்கப்படும்.

உலக சனத்தொகையில் 50 சதவீதமான மக்கள் நகரங்களிலும் மாநகரங்களிலுமே வசிக்கின்றனர். இதனால் சூழல் நகரங்களின் உருவாக்கம், அவற்றையொட்டிய கட்டட வடிவமைப்புகள், மக்களின் வாழ்க்கை முறைமைகள் யாவுமே பேண்தகு வழிமுறைகளுக்கமைய மாறினால் மட்டுமே மனிதரின் எதிர்காலமும் சிறக்கும் எனலாம்.

சூழல் நகரங்கள் பலவகைகளில் தமது இலக்கை அடைய முயல்கின்றன. அடைவதில் வெற்றியும் கண்டிருக்கின்றன. அவை ஒரே நகரத்திலே பல்வேறு விவசாய முறைமைகளைக் கொண்டிருக்கும். அதாவது நகரொன்றின் மையப் பகுதியிலோ அல்லது புறநகர்ப் பகுதிகளிலோ நகர்ச் சூழலின் தேவைக்கமைய விவசாய உற்பத்திகள் மேற்கொள்ளப்படும்.

இதனால் சாதாரணமாக விளை நிலத்திலிருந்து நகர்ப்பகுதிகளுக்கு விவசாய உற்பத்திகளைக் கொண்டு செல்வதற்கான தூரம் குறைக்கப்படும். பாரிய நிலப்பரப்பில் ஒரேயடியாக மேற்கொள்ளப்படுவதானது நடைமுறைக்குச் சாத்தியமல்லாததாகையால் சிறிய சிறிய நிலப்பரப்புக்களிலே பரந்தளவில் விவசாயம் மேற்கொள்ளப்பட்டு நகரச் சூழலின் தேவைகள் பூர்த்தி செய்யப்படும்.மீள உருவாக்கப்படக்கூடிய சக்தி மூலங்களின் பயன்பாடு உச்சமாக இருக்கும். அதாவது காற்றாடிகள், சூரிய படல்கள் அல்லது கழிவு நீர் கால்வாய்களிலே உற்பத்தி செய்யும் உயிர்வாயு போன்றவையே இத்தகைய நகரங்களின் பிரதான சக்திமூலங்களாகத் தொழிற்படும்.

குளிரூட்டிகளுக்கான பயன்பாட்டின் தேவையானது இயன்றளவில் குறைக்கப்பட்டிருக்கும். ஏனெனில் சாதாரண நகர்ப்பகுதிகளின் பிரதான சக்தித் தேவைகளுள் குளிரூட்டலும் ஒன்றாகும். மரங்களை நடுவதாலும் கட்டடங்களுக்கு இள வர்ணங்களைத் தீட்டுவதாலும் இயற்கையான காற்றோட்டத்தை அதிகரிக்கச் செய்வதாலும் குளிரூட்டல் வசதிகளுக்கான தேவை குறைக்கப்பட்டிக்கும். நகரங்களின் நில மேற்பரப்பில் ஆகக் குறைந்தது 20 சதவீதமாவது பசுமையாக்கப்பட்டிருக்கும்

பொதுப் போக்குவரத்துச் சேவைகள் நன்கு அபிவிருத்தி செய்யப்பட்டிருக்கும். கார்களினால் வெளியேற்றப்படும் புகையின் அளவைக் குறைப்பதற்காக நடைப்போக்குவரத்து ஊக்குவிக்கப்படும். கைத்தொழில், வர்த்தக, குடியிருப்பு வலயங்கள் ஒருங்கே உருவாக்கப்பட்டிருக்கும். இதனால் சூழலை மாசுபடுத்தும் போக்குவரத்துச் சேவைகளின் பயன்பாடு குறைக்கப்பட்டிருக்கும். வாகனங்களை ஓட்டக் கடினமாக இருக்கும் வகையில் பாதைகள் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

கட்டடங்களின் அடர்த்தி பொதுப் போக்குவரத்தை அதிகரிக்கும் வகையிலும் ஆனால் நகர் வெப்பமடைதலைக் குறைக்கும் வகையிலும் அமைந்திருக்கும்.

இத்தகைய நகரங்களின் மக்கள் தாம் தொழில் செய்யும் இடங்களுக்கு அருகிலேயே குடியிருப்பார்கள். வீடுகளின் கூரைகள் பசுமைக் கூரைகளாக இருக்கும். அதாவது வீட்டுக்குத் தேவையான தாவரங்கள் கூரைகளிலே வளர்க்கப்பட்டிருக்கும். மீள உருவாக்கப்பட முடியாத சக்தி வளங்களின் பாவனையுடைய கட்டடங்களும் சூழலை மாசுபடுத்தும் வாகனங்களின் பாவனையும் மிகவும் குறைவாகவே காணப்பட்டிருக்கும்.

நகர்ப்புற வடிகாலமைப்பு முறைகள் பேண்தகு வழியிலே அமைக்கப்பட்டிருக்கும். சக்தியைப் பேணக்கூடிய உபகரணங்கள் மற்றும் கருவிகளின் பாவனை அதிகரிக்கப்பட்டிருக்கும்.

தொழில் வாய்ப்புகள் கல்வி மற்றும் திறமையை அடிப்படையாகக் கொண்டு அமைந்திருக்கும். இயற்கை நீரியல் தொகுதிகளும் அவற்றின் பாவனையும் பொருத்தமான முறையிலே பாதுகாக்கப்பட்டிருக்கும். கழிவுகள் இழிவளவாக்கப்பட்டிருக்கும்.

இந்தச் சூழல் நகரங்களால் பல நன்மைகள் கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. அதிகரிக்கும் மனிதத் தேவைகள் பூர்த்தி செய்யப்படும். அதேவேளை, இயற்கை அனர்த்தங்களின் பாதிப்பும் குறைவடையும். இயற்கை வளங்களும் சூழலும் தம் சமநிலை குலையாவண்ணம் செவ்வனே பேணப்படும். மக்களின் வாழ்க்கைத்தரம் பாரபட்சமின்றி உயர, சுபிட்சமான எதிர்காலம் தானே உருவாகும்.

சூழல் நகரங்களை உருவாக்குதலொன்றும் இலகுவான காரியமல்ல. ஆனால் எல்லாத் தடைகளையும் தாண்டி சூழல் நகரங்களை உருவாக்கத் தொடங்கினால் அதைவிடப் பெரிய வெற்றி வேறெதுவுமே இல்லை.

சூழல் நகரங்கள் உருவாவதற்குப் பல காரணிகள் தடையாக உள்ளன.

சூழல் பிரச்சினைகள் தொடர்பான அடிப்படை விளக்கங்களைக் கூடப் பலர் அறிந்திருப்பதில்லை. இதனால் சூழல் பிரச்சினைகளுக்கான தீர்வாகப் பேண்தகு / சூழல் நகரங்களை உருவாக்குவது சற்றுச் சிக்கலானதாகவே இருக்கும். அத்துடன் இத்தகைய சூழல் நகரங்கள் உருவாக்கப்படும் பொறிமுறைகளைப் பொறுத்து வெற்றியின் நிச்சயமற்ற தன்மையும் அமைந்திருக்கும்

மக்களின் பெளதீக ஏற்பாடுகளான கட்டடங்கள், தெருக்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் யாவுமே உடனடியாகவோ சடுதியாகவோ மாற்றப்பட முடியாதவை. ஆனால் அவை யாவுமே குறுகிய காலத்திலோ அல்லது எதிர்காலத்திலோ மாற்றியமைக்கப்பட வேண்டியவை. பேண்தகு கொள்கைகளையுடைய சமுதாயமொன்று ஒரே இரவில் யாவற்றையும் மாற்றியமைக்கும் எண்ணத்தைக் கொண்டிருக்காது. ஏனெனில் அதற்காக சமூக, மற்றும் நிதி ரீதியாகக் கொடுக்க வேண்டிய விலை மிக அதிகமாகும்.
சிறுதுளி பெருவெள்ளமென்பர். நாம் சிறுகச் சிறுக, மெதுமெதுவாக பேண்தகு வழிமுறைகளைக் கைக்கொள்வதன் மூலம் மட்டுமே சூழல் நகரங்களை உருவாக்கமுடியும். ஏனெனில் நகர்வாழ் மக்களின் அடிப்படை மனப்பாங்கில் மாற்றம் ஏற்படாத பட்சத்தில் சூழல் நகரங்கள் உருவாவதற்கான சாத்தியக் கூறுகள் மிகமிகக் குறைவாகும். சூழல் நகரங்களின் வெற்றி அவற்றின் மக்களின் கையிலேயே தங்கியிருக்கிறது.

சூழல் நகரங்களின் சிறப்பியல்புகளின் அடிப்படையில் தேசிய ரீதியிலான கொள்கைகளும் சட்டங்களும் உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

இவையாவுமே சுமுகமாக நடைபெற்றால் பேண்தகு நகரங்களாகிய சூழல் நகரங்களும் இலகுவில் உருவாகிவிடும்.

பேண்தகு நகரங்கள் ஒன்றும் எட்டாக் கனிகள் அல்ல. உலகின் பல நாடுகளும் இந்தச் சூழல் நகரங்களை உருவாக்கி வெற்றி கண்டிருக்கின்றன. அவுஸ்திரேலியா, பிறேசில், கனடா, சீனா, டென்மார்க், இந்தியா, கென்யா, கொரியா, நியூசிலாந்து, அயர்லாந்து, சுவீடன், ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளில் சில நகரங்கள் சூழல் நகரங்களாகும் முயற்சியில் வெற்றி கண்டிருக்கின்றன.

சில நகரங்கள் காபன் நடுநிலையான நகரங்களாகவும் சில, கார்களே அற்ற நகரங்களாகவும் அமைந்திருக்கின்றன. சில கழிவகற்றல் முறைமைகள், கழிவு நீர் வடிகால் திட்டங்கள், குடிநீர் கிடைக்கும் தன்மை, குறைந்தளவிலான வளிமாசு, சிறந்த வாழ்க்கைத்தரம் போன்றவற்றிலே மிகச் சிறந்த மட்டத்தை அடைந்திருக்கின்றன. சில சூரிய சக்தியின் பாவனையை உச்சமாக்கியுள்ளன.

சில சூழலுடன் நட்புறவான கைத்தொழில் பேட்டைகளை அமைத்து வெற்றி கண்டிருக்கின்றன. சில நகரங்கள் சூழலுடன் நட்புறவான குடியிருப்புத் தொகுதியை உருவாக்கியிருக்கின்றன. சில நகரங்கள் நன்கு திட்டமிடப்பட்டு, கடல் நீர் மூலமான விவசாயம், விஸ்தரிக்கப்பட்ட நடைபாதைகள் மற்றும் துவிச்சக்கர வண்டிப் பாதைகள், மழை நீர் சேகரிப்பு மற்றும் நிலக் கீழ்நீர் பேணல் திட்டங்கள், உருவாக்கப்படும் கழிவுகளை மீள் சுழற்சி செய்யும் திட்டங்கள் எனச் சூழல் நகரங்களுக்குரிய சிறப்பியல்புகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன.

உலகின் முதலாவது காபன் நடுநிலையான நகரமாக இங்கிலாந்தின் மிகச் சிறிய நகரமாகிய சென் டேவிட்ஸ் திகழ்கிறது. அதேபோல் முதலாவது சூழல் நகரமாக லிசெஸ்டர் நகரமும் திகழ்கிறது.

பேண்தகு அபிவிருத்தியானது விஞ்ஞானம், வர்த்தக, வணிக விருத்தி, ஆகியவற்றிற்கு அப்பால் சென்று மனித அபிவிருத்திக்கு வழிவகுக்கிறது. பேண்தகு அபிவிருத்தி மூலம் பால் சமத்துவம், கல்வியியல் சமத்துவம், சுகாதார வசதிகளில் சமத்துவம் எனச் சகல வழிகளிலும் சமத்துவத்தை அடைய முடியும்.

இலங்கையைப் பொறுத்தவரையிலே, மழைநீர் மற்றும் கழிவு நீர் வடிகாலமைப்பு மேம்படுத்தப்படுவதுடன் கழிவகற்றல் முறைமைகள் செவ்வனே நிர்வகிக்கப்பட்டால் இலங்கையின் நகரங்களைச் சூழல் நகரங்களாக மாற்றுவதற்கான முதல் அடி எடுத்து வைக்கப்பட்டு விட்டதெனலாம்.

இது தென் பகுதிக்கு மட்டுமன்றி முழு இலங்கைக்குமே பொருத்தமானது. தென்பகுதியில் சனத்தொகை அடர்த்தி அதிகமாதலால் வெள்ளத்தின் பாதிப்பும் அதிகமாகக் காணப்பட்டது. காலப் போக்கில் ஏனைய பகுதிகளிலும் சனத்தொகை அடர்த்தி அதிகரிக்க பாதிப்பு மேலும் அதிகமாகி விடுவதற்கான சாத்தியக்கூறுகளே காணப்படுகின்றன. நகர சபை, மாநகர சபைகளுடன் இணைந்து அரசும் பொதுமக்களும் ஏனைய பங்குதாரர்களும் செயற்படக்கூடிய ஒருங்கிணைப்பு முறைமைகள் வரையறுக்கப்பட்டு உருவாக்கப்பட வேண்டும்.

செலவு குறைந்த, இலகுவாகப் பராமரிக்கக் கூடிய முறைமைகள் உருவாக்கப்பட வேண்டும். அதற்கு எமது அறிவு வளமும் மனித வளமும் புலம்பெயருதல் மட்டுப்படுத்தப்பட வேண்டும். மக்களின் பங்கு முதன்மைப்படுத்தப்பட்டால் முடியாத விடயம் எதுவுமே இல்லை.

நகர சபைத் தொழிலாளர்கள் எமது வீடுகளின் திண்மக் கழிவுகளை அகற்ற ஒரு நாள் வரத் தவறினால் உருவாகும் அசெளகரியங்களை நகர வாசிகளாக, எம்மில் பலர் அனுபவித்திருப்போம்.

கழிவுகள் கொட்டப்படும் பகுதிகளில் எழும் பிரச்சினைகளையும் அன்றாடம் பார்த்து உணர்ந்திருப்போம். இந்தப் பகுதிகளெல்லாம். மிகவும் சுத்தமாக, நிழல் தரு மரங்கள் நிறைந்தனவாகவும் பூத்துக் குலுங்கும் செடிகளைக் கொண்டனவாகவும் காணப்பட்டால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்! அந்தக் கற்பனை எத்தகைய மனமகிழ்வை உருவாக்குகிறது?

கற்பனையே அப்படி இருக்கும் போது அவை உண்மையாக இருந்தால் எப்படி இருக்கும்? எவ்வளவு இதமான சூழலை உருவாக்கித் தரும்? என்றெல்லாம் எண்ணக்கூடியதாக இருக்கிறதா?

நாம் நினைத்தால் சூழல் நகரங்களையும் உருவாக்கலாம். ஈஸ்டர் தீவுகளையும் உருவாக்கலாம். முயன்றுதான் பார்ப்போமே?

No comments:

Post a Comment